Monday, May 31, 2010

இரண்டாம் உலகப்போரும், முடிவுறாத மொழிப்போரும்

["மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!" - பெல்ஜிய பயணத் தொடரின் 3 ம் பகுதி]
பெல்ஜியத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நகர வீதிகளில் கட்சிகளின் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு என்றே தனியாக இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். பிற ஐரோப்பிய நாடுகளைப் போல, பெல்ஜியத்திலும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். ஆரம்பத்தில் தீவிர இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியான பிலாம்ஸ் ப்ளோக்கும் அன்த்வேர்பன் நகரில் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தன. பின்னர், சோஷலிசக் கட்சி (& V ), கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (& V ) ஆகியனவற்றின் சுவரொட்டிகள் காணப்பட்டன. அது என்ன V ? V என்றால் Vlaanderen என்று அர்த்தம். அதாவது டச்சு பேசும் மக்களின் தாயகம். அதே போல பிரெஞ்சு பேசும் பகுதிகளில் கட்சிகளின் பெயர்களுக்கு பின்னால் W (Wallonie ) என்று குறிப்பிடுவார்கள். பெல்ஜியத்தில் கட்சிகள் எல்லாம் எவ்வாறு தேசியவாத அடிப்படையில் பிரிந்திருக்கின்றன என்பதை இது காட்டுகின்றது. அகதிகளுடனும், குடிவரவாளர்களுடனும் நட்பு பாராட்டும் (கம்யூனிச) தொழிலாளர் கட்சி மட்டும் நாடளாவிய ஒரே கட்சியாக உள்ளது.


பெல்ஜியத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படியே தேர்தல் நடக்கின்றது. நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றால் ஐந்து வீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற வேண்டும். அனேகமாக சிறிய கட்சிகள் ஒரு போதும் ஐந்து வீத வாக்குகளைப் பெறுவதில்லை. தொழிலாளர் கட்சியும் அப்படித் தான். அன்த்வேர்பன் நகரில் அவர்களது காரியாலயத்திற்கு சென்றிருந்த பொழுது கட்சி உறுப்பினர்கள் கையெழுத்துகளை சேகரிக்கும் பணியில் இருந்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு குறைந்த காலத்திற்குள் பத்தாயிரம் கையெழுத்து சேகரிப்பது முடியாத காரியம் என்றனர். அவர்கள் தேர்தலைத் தவிர்ந்த சமூகப் பணிகளில் சிறப்பாக செயற்படுகின்றனர். மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் குறிப்பிடத் தக்கது. 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' பாணியில் இவர்களது சேவை சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வரப்பிரசாதம். குடிவரவாளர்களுடன் நட்புறவை உறுதிப்படுத்த தொழிலாளர் கட்சி ஒரு தடவை, அரபு-இஸ்லாமிய தேசியவாத கட்சியுடன் (AEL) சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. அது எவ்வளவு பெரிய தப்புக் கணக்கு என்பது பின்னர் தெளிவாகியது. Resist என்ற பெயரிலான கூட்டணி தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய் விட்டது. அதற்கு காரணம் ஒன்றோடொன்று முரண்படும் கொள்கை வேறுபாடுகள்.

வெளிநாட்டவர் எதிர்ப்பு என்று வந்து விட்டால், பெரிய கட்சிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசங்கள் மறைந்து விடும். பெல்ஜிய கட்சிகள் தமது மொழி, கலாச்சார உரிமைகளுக்காக, அவற்றை உயிரினிலும் மேலானதாக கருதி, குடுமிப்பிடி சண்டை பிடிக்கின்றனர். ஆனால் அதே நேரம் அந்நிய குடியேறிகள் தமது கலாச்சாரத்தை இறக்குமதி செய்வதை கடுமையாக எதிர்க்கின்றனர். கடைசியாக வீட்டுக்கு போன அமைச்சரவை, கலைக்கப்படுவதற்கு முன்னர் "பூர்க்கா தடை சட்டம்" போட்டு விட்டுத் தான் போனார்கள். சில நூறு பழமைவாத முஸ்லிம் பெண்கள் அணியும் பூர்காவை தடை செய்த இரண்டாவது ஐரோப்பிய நாடு பெல்ஜியம்.

பெல்ஜியத்தில் எப்போதும் கூட்டரசாங்கமே அமையும் என்பது அந்நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பம்சம். பிரதிநிதித்துவ தேர்தல் முறையானது, ஒரு தொகுதியில் இரண்டு வேட்பாளர்களை தெரிவு செய்கின்றது. சிக்கலான தேர்வு முறையின் காரணமாக, எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாது. சில நேரம் "இவ்வளவு பணத்தை விரயம் செய்து எதற்காக தேர்தல் நடத்துகிறார்கள்?" எனக் கேட்கத் தோன்றும். ஏனெனில் எப்போதுமே தேர்தலின் பின்னர் மன்னர் நியமிக்கும் பிரதிநிதிகள் கட்சிகளுக்கு இடையில் பேரம் பேசி அமைச்சரவையை உருவாக்குவார்கள். இதற்காக தொழிற்சங்கங்களையும், தொழிலதிபர் சங்கங்களையும் கலந்தாலோசிப்பார்கள். எப்படியும் புதிய அமைச்சரவையில் டச்சு, பிரெஞ்சு மொழிவாரிக் கட்சிகள் சம பலத்துடன் வருமாறு பார்த்துக் கொள்வார்கள். பெல்ஜியத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கப் போவதில்லை. அதற்கு நாம் வேறு நாடுகளைத் தான் பார்க்க வேண்டும்.

பெல்ஜியம் மொழி வாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட சமஷ்டி அமைப்பைக் கொண்டது. வடக்கே டச்சு மொழி பேசுவோருக்கு என தனியாக மாநில அரசு உள்ளது. அதன் நாடாளுமன்றம் அன்ட்வேர்பனில் கூடுகின்றது. அதே போல தெற்கில் பிரெஞ்சு மொழி பெசுவோருக்கென தனியான அரசும், அதற்கென நாமியூரில் (Namur) ஒரு நாடாளுமன்றத்தையும் கொண்டுள்ளது. இதை விட கிழக்கே (ஜெர்மனி எல்லையோரம்) ஜெர்மன் மொழி பேசும் சிறிய பிரதேசம் உள்ளது. அதற்கென ஒரு மாநில அரசும், எய்பன் (Eupen) என்ற இடத்தில் நாடாளுமன்றத்தை கொண்டுள்ளது. இந்த மொழிவாரி மாநில அரசுகளை "பொதுநல வாயம்" என அழைக்கின்றனர். இவை தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் கல்வி, கலாச்சாரம், ஊடகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் உரிமை கொண்டவை.

இவற்றை விட தலைநகரான புருசல்சும் [Brussel(Dutch),Bruxelles(French)], அதனை அண்டிய பகுதிகளும் தனியான மாநில அரசைக் கொண்டுள்ளன. புருசல்ஸ் நகரம் சட்டப்படி இரு மொழி பேசும் மாநிலம். ஆனால் அங்குள்ள பொது மக்கள் பிரெஞ்சு மட்டுமே பேசுகின்றனர். தபால் அலுவலகம், ரயில் நிலையம் போன்ற பொது மக்களுக்கு சேவை செய்யும் அரச திணைக்களங்களில் இரு மொழிப் புலமை வாய்ந்த ஊழியர்களை அமர்த்துகின்றனர். மற்றும் படி தெருவில் பிரெஞ்சு தெரியாமல் சமாளிக்க முடியாது. புருசல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த பகுதிகள் எப்போதுமே பிரச்சினைக்கு உரியவை. ஏனெனில் புருசல்ஸ் நகரை சுற்றி வர நாற்புறமும் டச்சு பேசும் பகுதிகள் உள்ளன. இவற்றில் புருசல்ஸ் மாவட்ட ஆட்சிக்கு உட்பட்ட இரண்டு ஊர்களில் பிரெஞ்சு மொழியை அலுவலக ஆட்சி மொழியாக இருப்பதை எதிர்த்த பிரச்சினையால் தான் அண்மையில் மத்திய அரசாங்கம் கவிழ்ந்தது.

டச்சு பேசும் பெல்ஜியர்களும், பிரெஞ்சு பேசும் பெல்ஜியர்களும் அற்ப விஷயத்திற்காக எல்லாம் மொழிப் போரில் ஈடுபடுகிறார்கள். ஜேர்மன் பேசும் மக்கள் மட்டும் இந்தப் பிரச்சினைகளுக்குள் மாட்டாமல் தனியே ஒதுங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு என்று தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாம் இருக்கின்றது. அதனோடு திருப்திப் படுகின்றனர். சுற்ற வர பிரெஞ்சு மொழி ஊர்கள் இருப்பதால், பிரெஞ்சை இரண்டாம் மொழியாக பேசுகின்றனர். இந்த ஜேர்மன் மொழி பேசும் பிரதேசம் முதலாம் உலக யுத்த முடிவில் வென்ற பெல்ஜியத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்தில் ஹிட்லர் அதற்கு உரிமை கோரினான். ஜேர்மனியோடு இணைக்க விரும்பினான். ஆனால் ஹிட்லரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத பெல்ஜிய ஜேர்மனியர்கள் அதனை விரும்பவில்லை. பெல்ஜியத்தை நாஜிகள் ஆக்கிரமித்த காலத்திலும், அதற்கு பிறகும் பெல்ஜிய அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

ஐரோப்பாவில் யூதர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் அன்ட்வேர்பன் முக்கியமானது. இன்றைக்கும் நகர மத்திய பகுதியில் வாழும் யூத சமூகத்தினர், 500 வருட பழமை வாய்ந்த கலாச்சாரத்தை பின்பற்றுவதை காணலாம். அன்ட்வெர்பன் நகரம் சர்வதேச வைர வியாபாரத் தலைநகரம் என அழைக்கப் படுகின்றது. நீண்ட காலமாக யூதர்கள் வைர வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். தற்போது (குஜராத்தி) இந்தியர்கள் மலிவு விலை வைரம் கொண்டு வந்து விற்பதால், அவர்களின் பங்களிப்பு குறைந்து வருகின்றது. வைர வியாபாரத்தில் போட்டி போடும் இரு இனத்தவர்களும், "பணக்கார குடியிருப்பு" என அழைக்கப்படும் பகுதியில் அருகருகே வாழ்கின்றனர். ஒரு காலத்தில் ஐரோப்பிய யூதர்களின் மொழியாக இருந்த "யிட்டிஷ்" (ஹீபுரு, ஜெர்மன், ஸ்லாவிய மொழிச் சொற்கள் கலந்த மொழி) இன்றைக்கும் அன்ட்வேர்பன் நகரில் வாழும் 20000 யூதர்களால் பேசப் பட்டு வருகின்றது. நெதர்லாந்தைப் போல, பெல்ஜியமும் வர்த்தகத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த காரணத்தால், பல நூற்றாண்டுகளாக யூதர்களின் புகலிடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஜி ஆக்கிரமிப்பின் போது சுமார் 25000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

நாஜிகள் பெல்ஜியர்களை ஆரிய இன சகோதரர்களாக கருதியதாலோ என்னவோ, கடுமையான அடக்குமுறை இருக்கவில்லை. அந்த காலங்களில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு இருந்ததால் பலர் ஜெர்மனி சென்றனர். அதே நேரம் தீவிர டச்சு தேசியவாதிகளும், தீவிர பிரெஞ்சு தேசியவாதிகளும் நாஜிகளுடன் ஒத்துழைத்தார்கள். இவர்கள் இன்றைக்கும் இனவாத கட்சிகளின் முன்னணி உறுப்பினர்களாக உள்ளனர். பெல்ஜியதை நாஜிகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில் (பெல்ஜிய) கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு கெரில்லா படை ஒன்றை கட்டியது. நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடந்த ஒரேயொரு ஆயுதப் போராட்டம் கம்யூனிஸ்ட்களுடையது.

போர் முடிந்த பின்னர் நடை பெற்ற தேர்தலில், கம்யூனிஸ்ட்கள் பெரும் வெற்றியீட்டி அதிக ஆசனங்களை கைப்பற்றி இருந்தார்கள். ஆயினும் போரின் பின்னால் ஆட்சியில் அமர்ந்த பெல்ஜிய அரசு கம்யூனிச எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றியது. அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவங்கள் பெல்ஜியத்தை விடுதலை செய்ததாக இன்றைக்கும் சரித்திரத்தில் எழுதப் பட்டுள்ளது. இதன் மூலம் கம்யூனிச ஆயுதப் போராட்டம் மறைக்கப்பட்டது. அது மட்டுமல்ல, அன்று இருந்த சோவியத் அதிபர் ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம், பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக பாதித்தது. அரசின் திட்டமிட்ட எதிர்ப்பு வியூகங்களை தாங்க மாட்டாத கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினிஸத்தை நிராகரிப்பதாக அறிவித்தது. இருப்பினும் அது கூட கட்சியை காப்பாற்றவில்லை. இன்று ஒரு சில நூறு பேர்கள் மாத்திரம் கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பெல்ஜிய அரசின் "கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போர்" பெரியண்ணனின் பக்க பலமில்லாமல் நடக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் நாட்டை கட்டி எழுப்புவதற்காக அமெரிக்காவின் நிதியுதவி தேவைப் பட்டது. மாஷல் உதவி என்ற பெயரில் கொட்டப் பட்ட பெருமளவு நிதியைக் கொண்டு நவீன பெல்ஜியம் உருவானது. உள் நாட்டு தொழிலாளர் பற்றாக்குறையினால் மொரோக்கோ, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டனர். இவர்களின் உழைப்பால் பெல்ஜியம் செல்வந்த நாடாகியது. தனது மக்களின் வாழ்கை வசதிகளை குறைவிலாது செய்து கொடுத்தது. இதனால் மக்களை கம்யூனிசத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்க விடாமல் செய்து விட்டதாக அரசு நினைத்துக் கொண்டிருந்தது. 1968 ம் ஆண்டு அரசு முற்றிலும் எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து, திடீரென "கம்யூனிச பூதம்" புறப்பட்டது.

(தொடரும்)


பெல்ஜியம் பயணத் தொடரின் முன்னைய பதிவுகள்:
2.மத்தியில் மன்னராட்சி, மாநிலத்தில் சமஷ்டி
1.மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

Saturday, May 29, 2010

தென் கொரிய கப்பல் தகர்ப்பு மர்மம்

"தென் கொரிய கடற்படைக் கப்பல் ஒன்றை, வட கொரியா ஏவிய "டொர்பெடோ" ஏவுகணை மூழ்கடித்து விட்டது. 46 கடற்படை வீரர்கள் பலி. இந்த சம்பவத்தால் வட-தென் கொரியாக்களுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் உள்ளது." அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் சர்வதேச செய்தி. வட கொரிய ஏவுகணை தான் கப்பலை மூழ்கடித்தது என்பதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார்களா? ஜனநாயகத் தூண்களான சுதந்திர ஊடகங்கள், மறுதரப்பு (வட கொரியா) என்ன சொல்கிறது என்று கேட்டு தெரிவித்தார்களா? இருதரப்பு வாதங்களைக் கேட்டு ஆராய்ந்து முடிவு எடுக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டு விட்டு நடுநிலைமை காத்தார்களா? இந்த விஷயத்தில் நமது தமிழ் ஊடகங்களை விட்டு விடுவோம். பாவம், அவர்களுக்கு சி.என்.என்., பி.பி.சி., ரோய்ட்டர் இவற்றை விட்டால் செய்தி சேகரிக்க வேறு வழி இல்லை. ஊடக சுதந்திரத்திற்கு இலக்கணம் எழுதிய சர்வதேச ஆங்கில ஊடகங்கள் இந்த விடயத்தில் நடுநிலை தவறிவிட்டன. சரியாக ஆராயாமல் வட கொரியா மீது குற்றம் சாட்டும் அரச கைக்கூலிகளாக செயற்படுகின்றனர்.

26 மார்ச் இரவு தென் கொரிய கடற்படைக் கப்பலான Cheonan வெடித்து மூழ்கியது. கப்பலில் இருந்த 104 பேரைக் கொண்ட கடற்படைக் குழுவில் 46 பேர் பலியானார்கள். 58 பேர் காப்பாற்றப் பட்டனர். ஆரம்பத்தில் கப்பல் வெடித்ததற்கான காரணம் அறியப்படவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து, தென் கொரியா, அமெரிக்க, பிரிட்டிஷ் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர், இது வட கொரிய ஏவுகணைத் தாக்குதல் என அறிவித்தனர். அவர்கள் காட்டிய ஆதாரங்களுக்கான நம்பகத் தன்மை இன்னும் உறுதி செய்யப் படவில்லை. அதற்கிடையில் கடலில் அத்துமீறிய வட கொரியா மீது போர் தொடுக்கும் எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. சம்பவம் குறித்து ஆரம்பத்தில் அறிவித்த தென் கொரிய ஊடகங்கள், இதனை வட கொரியாவின் செயலாக பார்க்கவில்லை. அவற்றில் வந்த ஆய்வுகளை இங்கே தொகுத்து தருகிறேன். பல தகவல்கள் சர்வதேச கவனத்தை பெறாதது ஆச்சரியமளிக்கிறது. மேலும் அவற்றை வெளியிட்ட தென் கொரிய ஊடகங்கள், வாயை மூடிக் கொண்டு அரசு சொல்வதை பிரதிபலிக்குமாறு, பின்னர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

முதலில் கப்பல் தகர்ப்பு சம்பவம் நடைபெற்ற புவியியல் அமைவிடம் முக்கியமானது. வட கொரியாவையும், தென் கொரியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக் கோட்டில், அதுவும் வட கொரிய தலைநகர் பியங்கியாங் அருகில் (170 கி.மி.) கப்பல் தகர்க்கப் பட்டது. கப்பல் வெடித்த இடத்தில் இருந்து வட கொரியா வெறும் 20 கி.மி. தூரத்தில் இருந்தது. அந்த இடத்தில் தென் கொரியாவுக்கு சொந்தமான Baengnyeong என்ற தீவு உள்ளது. அந்த தீவில் வசிப்பவர்கள் தென் கொரிய பிரஜைகள். ஆயினும் அந்த தீவு தனக்கு சொந்தம் என்றும், தீவின் தென் பகுதியில் எல்லைக் கோட்டை பிரிக்குமாறு வட கொரியா கோரி வருகின்றது. வட கொரியா தீவுக்கு உரிமை கொண்டாடினாலும், கடல் பகுதியில் தென் கொரிய இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரம் தென் கொரியாவுடனான படகுப் போக்குவரத்திற்கும் தடை ஏதும் கூறவில்லை.

மார்ச் மாதம் 26 ம் திகதி வரை பென்கியோங் தீவுக்கு அருகில் அமெரிக்க- தென் கொரிய கடற்படைக் கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. வட கொரியாவுக்கு மிக அருகில் நடந்த போர் ஒத்திகை, அந் நாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்க இடமுண்டு. கூட்டுப்படைகளின் போர் ஒத்திகை பின்னர் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டது. தகர்க்கப்பட்ட ஷேனன் கடற்படைக் கப்பலும், மார்ச் 26 அன்று ஒத்திகையில் இருந்துள்ளது. இந்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. மேலும் தகர்க்கப்பட கப்பல் போர் ஒத்திகையில் ஈடுபடாமல் தனியாக ரோந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும், பென்கியோங் தீவில் இருந்து 100 கி.மி. தூரத்திலேயே வெடித்ததாகவும் கொரிய அரசு தெரிவிக்கின்றது. கப்பல் வட கொரிய எல்லைக்கு அருகில் (பென்கியோங் தீவு அருகில்) தகர்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தால், வட கொரியா மீதான சந்தேகம் இறுகியிருக்கும். ஆனால் அப்படி சொல்லாமல் மறைக்கும் மர்மம் என்ன?

அமெரிக்க - தென் கொரிய கடற்படைகள் சாதாரண போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கவில்லை. நீர்மூழ்கிக் கப்பல்களையும், கடலினுள் செலுத்தப்படும் Torpedo ஏவுகணைகளையும் கண்டறியும் சக்தி வாய்ந்த நவீன ரேடார்கள் பொருத்தப்பட்ட கப்பல்களே என்று பயிற்சியில் ஈடுபட்டன. தகர்க்கப் பட்ட சேனன் கப்பலிலும் அந்த ரேடார் பொருத்தப் பட்டிருந்தது. அப்படி இருக்கையில் தன்னை நோக்கி வந்த வட கொரிய கப்பலையும், தன் மீது ஏவப்பட்ட ஏவுகணையையும் அந்தக் கப்பல் கண்டுபிடித்து திருப்பித்தாக்க தவறி விட்டமை தெளிவாகின்றது. அப்படியானால் சக்திவாய்ந்த நவீன ரேடார் பல குறைபாடுகளை கொண்டுள்ளதை ஒத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து தென் கொரிய அரச தரப்பில் கூறப்படும் காரணம் "ரேடார் 70 வீதம் கண்டறியும் திறன் கொண்டது." இது பின்னர் வந்த அறிக்கையில் 50 வீதமாக குறைக்கப்பட்டது. (வட கொரியா மீதான குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பதற்காக).

கப்பல் தகர்ப்பு சம்பவம் நடைபெற்ற இடம் உலகிலேயே ஆபத்தான கடல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கொரிய யுத்தம் முடிவடைந்த பின்னரும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையில், கடல் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டன. 1970 ம் ஆண்டளவில், வட கொரிய ஊடுருவல்களை தடுப்பதற்காக தென் கொரிய பாதுகாப்ப்பு படைகள் அந்த கண்ணி வெடிகளை விதைத்திருந்தன. சமாதான பேச்சுவார்த்தைகளின் பின்னர், பத்து வீதமான கண்ணி வெடிகள் மட்டுமே அகற்றப்பட்டன. வெடித்த கப்பல் அவ்வாறான கண்ணி வெடியில் அகப்பட்டிருக்கலாம் என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் தென் கொரியாவில் பெருமளவு பார்வையாளர்களைக் கொண்ட KBS தொலைக்காட்சி முற்றிலும் புதிய தகவல் ஒன்றை தெரிவித்தது. ஷேனன் கப்பல் தகர்க்கப்பட்டு மூழ்கிய அதே தினத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் கூட பென்கியோங் தீவுக்கு மிக அருகாமையில் நடந்துள்ளது. அந்த இடத்தில் அமெரிக்க படையினரின் தேடுதல் வேட்டை இடம்பெற்றதாகவும், இறந்த அமெரிக்க வீரரின் உடல் ஒன்று அமெரிக்க ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்தது.
இது குறித்த விரிவான தகவல்களைத் தரும் வரைபடங்களும், வீடியோவும் கொரிய இணையத்தளத்தில் காணப்படுகின்றன. கடலில் மூழ்கிய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பற்றி, மரணமடைந்த அமெரிக்க வீரர்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

அன்று கொரியக் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையை ஒன்றில் தென் கொரிய அரசு அல்லது அமெரிக்க அரசு தெரிவிக்க வேண்டும். உண்மை தானாகவே வெளிவரும் வரையில் நாம் சில ஊகங்களின் மூலமே புரிந்து கொள்ள முடியும். முதலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிய இடம் சுவாரஸ்யமானது. பென்கியோங் தீவை சுற்றியுள்ள கடற்பரப்பு ஆழம் குறைந்ததும், கற்பாறைகள் நிறைந்ததும் ஆகும். பொதுவாகவே தீவுக்கு அண்மையில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் தரை தட்டி விடும். ஆனால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நின்ற இடம் தீவின் தென் பகுதி. (தீவின் வட பகுதி வட கொரியாவை நோக்கி உள்ளது.) தென் பகுதியில் உயர்ந்த மலைகள் உள்ளன. அவற்றின் அருகிலான கடல் பகுதி மட்டும் ஆழம் மிக்கது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அந்தப் பகுதியில் மாதக் கணக்காக ஒருவருக்கும் தெரியாமல் மறைந்திருக்க முடியும். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலுக்கு அங்கே என்ன வேலை?

பென்கியோங் தீவு வட கொரியாவுக்கு அருகில் இருப்பதையும், அங்கிருந்து வட கொரியத் தலைநகர் பியாங்கியாங் 170 கி.மி. தூரத்தில் இருப்பதையும் மறந்து விடலாகாது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் யுத்தம் மூளும் நேரம், அந்த இடத்தில் இருந்து பியாங்கியாங் மீது இலகுவாக ஏவுகணையை செலுத்த முடியும். தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை போன்று, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரும் ஏவுகணையும் சம வல்லமை பொருந்தியது. அப்படியான ஏவுகணையில் அணுகுண்டு பொருத்தப்பட்டிருக்கும் என்பதை இங்கே கூறத் தேவையில்லை. தென் கொரிய மக்கள் வட கொரியாவில் இருப்பவர்களையும் தமது சகோதரர்களாகவே கருதுகின்றனர். அதனால் "வட கொரியா மீது தாக்குவதற்கு தயாராக, அணுகுண்டு பொருத்திய ஏவுகணையோடு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் காத்திருக்கின்றது" என்ற தகவல் தென் கொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் பிரசன்னம் குறித்து, தென் கொரிய அரசுக்கும் அறிவித்திருக்க மாட்டார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, டீசலில் ஓடுவது. மற்றது, அணு சக்தியை பயன்படுத்துவது. டீசலில் ஓடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி கடலின் மேற்பரப்பிற்கு வந்து போகும் நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் அணு சக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அப்படியல்ல. மாதக் கணக்காக கடலினுள் மறைந்திருக்க முடியும். பெங்கியோங் தீவில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. மார்ச் 26 அன்று, தகர்க்கப்பட்ட தென் கொரியக் கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்திருக்கலாம். (கப்பலில் விஷேச ரேடார் கருவி பொருத்தப் பட்டிருந்ததை நினைவில் கொள்க) அதனை வட கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எனத் தவறாக புரிந்து கொண்டு தாக்கியிருக்கலாம். பதிலுக்கு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலும், தென் கொரியக் கப்பல் மீது தாக்கியிருக்கலாம். இதனால் இரண்டு கப்பல்களும் மூழ்கி இருக்கலாம். மேலும் மிக ரகசியமான திட்டம் என்பதால், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தன்னை நோக்கி வருவது தென் கொரிய கடற்படைக் கப்பல் என்று தெரிந்திருந்தாலும் ரேடியோ தொடர்பு கொண்டிருக்காது.

கப்பல் தகர்ப்பிற்கு காரணம் எதுவாக இருப்பினும், அதனை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. தென் கொரியாவில் வருகிற ஜூன் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. "வட கொரியாவுடன் சமாதானம் இல்லை. போர் தொடுக்க வேண்டும்." எனப் பிரச்சாரம் செய்யும் வலதுசாரி பழமைவாத கட்சி வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது. கப்பல் தகர்ப்பு சம்பவத்தின் பின்னர் வட கொரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று என்பது வீதமான தென் கொரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பென்டகனும் கொரியப் போர் மூள வேண்டுமென்று எதிர்பார்க்கலாம். அதற்கு காரணம் உள்ளது. 2012 ம் ஆண்டு, தென் கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளுக்கு கட்டளையிடும் அதிகாரம், தென் கொரிய அரசின் வசம் செல்கின்றது. அப்படியான காலகட்டம் சீனா தென் கொரியாவை வளைத்துப் போட இலகுவான காலம். தூர கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா பாடுபடுகின்றது. தென் கொரிய கப்பல் தகர்க்கப் பட்ட இடம் சீனாவிற்கு அருகில் உள்ள கடல் பகுதி என்பது குறிப்பிடத் தக்கது.
_________________________

மேலதிக தகவல்களுக்கு:
Analysts question Korea torpedo incident
Photo Gallery: The Wreckage of the Cheonan
The sinking of the Cheonan: Another Gulf of Tonkin incident

Thursday, May 27, 2010

தாலிபானுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி!

ஆப்கானிஸ்தானில் எல்லோரும் நம்பும் ஒரு தகவல்: "அமெரிக்கா தாலிபானுக்கு நிதி வழங்குகின்றது!" சாமானியார்கள் மட்டுமல்லாது, உயர் கல்வி கற்ற அறிஞர்களும் அதனை நம்புகிறார்கள். சர்வதேச ஊடக நிறுவனங்களில், ISAF , USAID போன்ற அமெரிக்க அரசு சார்ந்த நிறுவனங்களில், உயர் பதவி வகிக்கும் ஆப்கானியர்கள் கூட அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களில் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு ஆலோசனை வழங்குபவர்களும் அடக்கம்!

"ஆப்கான் தேசிய இராணுவம் கைப்பற்றிய தாலிபான் முகாம்களில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள். தாலிபான் கட்டுப்பாட்டு பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் நடைபெறும் வழமையான அமெரிக்க ஹெலிகப்டர் விநியோகங்கள். ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மதராஸாக்களுக்கு கிடைக்கும் அமெரிக்க நிதியுதவி. (அரசு சாரா) தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் முகவர்கள். இராணுவம் புக முடியாத பகுதிகளில் உளவுப் பணியில் ஈடுபடுகின்றன."
ஆப்கானிஸ்தானில் அனைவருக்கும் தெரிந்த கதைகள் இவை.

Daniella Peled என்ற பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தானில் பலரிடம் கேட்டு அறிந்தவற்றை Gurdian (Tuesday 25 May 2010 ) பத்திரிகையில் எழுதியுள்ளார். இந்த தகவல்களை உறுதி செய்த அவரது நண்பர் ஒருவர்: "ஆப்கானிஸ்தான் பிரச்சினையை தொடருவதன் மூலம், அமெரிக்கா நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க விரும்புகின்றது. கூட்டுப் படையணிகளுக்கும் தாலிபானுக்கும் இடையில் நடக்கும் முடிவுறாத யுத்தமே அதற்கு சாட்சி." என்றார். காபுல் வானொலி ஊடகவியலாளர் ஒருவரின் கூற்று இது: "(அண்மையில் ஹெல்மன்ட் பிரதேசத்தில் நடந்த யுத்தத்தில்) 15000 சர்வதேச படையணிகளும், ஆப்கான் இராணுவமும் சேர்ந்து சில ஆயிரம் தாலிபானை தோற்கடிக்க முடியாமல் போன காரணம் என்ன?"

அமெரிக்க நலன்களுக்கு காரணம் ஆப்கானிஸ்தான் இயற்கை வளங்களல்ல. அதனுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம். அமெரிக்கா அங்கே ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மீது செல்வாக்கு செலுத்த முனைகிறது. அரபு நாடுகளை பயன்படுத்த அமெரிக்கா இஸ்ரேலை வைத்திருப்பதைப் போல, ஆப்கானிஸ்தானை மாற்ற விரும்புகின்றது. யார் எதிர்காலத்தில் ஆசியாவை கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் உலகத்தையே கட்டுப்படுத்துவார்கள்.

இந்தக் கருதுகோள் வழக்கமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவுவதைப் போன்ற காழ்ப்புணர்ச்சியின் பாற்பட்ட சூழ்ச்சி கோட்பாடாக தெரியவில்லை. நன்கு கட்டமைக்கப்பட்ட ஆய்வு பொதிந்துள்ளது. "தாலிபானை அழித்தொழித்து விட்டால், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருப்பதற்கு வேறு எந்த காரணமும் கிடைக்காது."

செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க இந்த சுட்டியை சொடுக்கவும்:
Afghans believe US is funding Taliban

Wednesday, May 26, 2010

மத்தியில் மன்னராட்சி, மாநிலத்தில் சமஷ்டி

"மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!" - பெல்ஜிய பயணத் தொடரின் இரண்டாம் பகுதி

நெதர்லாந்தையும், பெல்ஜியத்தையும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரித்துப் பார்க்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியம் தோன்றுவதற்கு முன்னரே இவ்விரண்டு நாடுகளும் லக்சம்பெர்கையும் சேர்த்துக் கொண்டு, "BENELUX " என்ற பொருளாதார உடன்பாட்டை எட்டினார்கள். அதன் படி இந்த மூன்று நாடுகளுக்கிடையில் எல்லைப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. நீங்கள் எத்தனை தடவை எல்லை கடந்தாலும், போலிஸ் சோதனை சாவடியை காண முடியாது. விற்பனைப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் பார ஊர்திகள் மட்டும் சுங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தால் போதும்.

நான் முதன் முதலாக நெதர்லாந்து வந்த புதிதில், பெல்ஜிய எல்லைக்கு 15 கி.மி. தூரத்தில் உள்ள Gilze எனுமிடத்தில் தங்க வைக்கப்பட்டேன். Gilze யில் இருந்து பெல்ஜியம் போகும் பாதையில் இருக்கிறது Baarle - Nassau . ஒரு நாள், சில நண்பர்களை சேர்த்துக் கொண்டு, நண்பரின் நண்பருடைய வாகனத்தில் பார்லே - நாசவ் பார்க்கப் போனோம். அப்படி அந்த இடத்தில் என்ன விசேஷம்? நெதர்லாந்து எல்லைக்குள் அமைந்துள்ள பெல்ஜிய கிராமம் அது. நெதர்லாந்து நாணயமான கில்டர் புழக்கத்தில் இருந்த காலத்தில் (இது நடந்தது 1995 ம் ஆண்டு), அந்த கிராமத்தில் மட்டும் பெல்ஜிய நாணயமான பிராங்கும் புழங்கியது. கிராமவாசிகள் பெல்ஜிய பிரஜைகளாக, பெல்ஜியத்திற்கு வரி கட்டிக் கொண்டிருந்தனர். அந்த கிராமத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நெதர்லாந்து தேசத்தை உருவாக்கிய தந்தை என புகழப்படும் "வில்லெம் வன் ஒரான்யே"(Willem van Oranje) யின் சொந்த ஊர். ஒரு காலத்தில் அதை அண்டிய பகுதிகளின் சிற்றரசர், நெதர்லாந்தின் மன்னனாக முடி சூட்டிக் கொள்வார் என்று,அன்று (16 ம் நூற்றாண்டு) யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஸ்பெயினின் ஒரு பகுதியாக இருந்த நெதர்லாந்திலும், பெல்ஜியத்திலும் கத்தோலிக்க மதமே அதிகாரத்தில் இருந்தது. ஸ்பெயினும் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான். ஜெர்மனியில் கிறிஸ்தவ பாதிரியார் லூதரின் கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பிரிவாக அமைப்பு வடிவம் பெற்றது. லூதரின் சீர்திருத்தக் கொள்கைகள் நெதர்லாந்திலும் பரவியது. அன்றைக்கும் நெதர்லாந்து வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்வதில் சிறந்து விளங்கினர். இதனால் செல்வந்த வணிகர் சமூகம் ஒன்று உருவாகி இருந்தது. புரட்டஸ்தாந்து மதத்தின் செல்வாக்கு, ஒல்லாந்து (ஒல்லாந்து என்பது கரையோர மாகாணத்தை குறிக்கும்) வணிகர்களின் பணபலம் என்பன, அவரை ஸ்பெயினுக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்தன. நிலத்தொடர்பு இல்லாத போதிலும், (இடையில் பிரான்ஸ் இருந்தது) ஸ்பெயின் அவ்வளவு சீக்கிரத்தில் நெதர்லாந்தை விட்டுக்கொடுக்கவில்லை. சுமார் என்பது வருடங்கள் போர் நீடித்தது. இறுதியில், பெல்ஜியம் ஸ்பெயினின் பிடிக்குள் தொடர்ந்திருக்க, நெதர்லாந்து சுதந்திர ராஜதானியாகியது. 'வில்லெம் வன் ஒரான்யே'யின் மன்னனாகும் கனவு பலித்தது. அந்த அரச பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் இன்றைக்கும் நெதர்லாந்தை (பெயரளவில்) ஆள்கின்றனர்.

ஒரான்யே அரச வம்சத்தில் வந்த வில்லெம் (இவர் நெதர்லாந்தின் முதலாவது மன்னன் வில்லெம் அல்ல) நெப்போலியனை வாட்டர்லோ யுத்தத்தில் தோற்கடித்ததால், பெல்ஜியம் பரிசாகக் கிடைத்தது. ஒரு புதிய பிரச்சினை எழுந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் தெள்ளத் தெளிவான ஒரு வேறுபாடு இருந்தது. பெல்ஜியத்தில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினர். அதே நேரம் நெதர்லாந்தில் புரட்டஸ்தாந்துக் காரர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இரண்டு பிரிவினருக்கும் இடையில் நீண்ட கால பகை நிலவியது. புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது ஏசு, மாதா சிலைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் சிலை வணக்கத்திற்கு எதிரானவர்கள். இந்த சம்பவங்கள் கத்தோலிக்கர் மனதில் தணலாக தகித்துக் கொண்டிருந்தது.

இன்றைய தென் நெதர்லாந்து மாகாணங்களான லிம்பூர்க், ப்ரபன்ட் ஆகிய இடங்களில் கத்தோலிக்க மதத்தவர்கள் வாழ்கின்றனர். உண்மையில் இந்தப் பிரதேசங்கள் பெல்ஜியத்திடம் இருந்து போரில் வெற்றி கொள்ளப்பட்டன. சிறிது காலம் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளாக நிர்வகிக்கப் பட்டது. பின்னர் நெதர்லாந்தின் 11 வது, 12 வது மாகாணங்களாக இணைக்கப்பட்டன. இன்னொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு மொழி.நெதர்லாந்து முழுவதும் "நேடெர்லன்ட்ஸ்" (டச்சு) மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. அதனை பெல்ஜியத்தின் மீதும் திணித்தார்கள். ஒவ்வொரு மாகாணமும் தனக்கென மொழியைக் கொண்டிருந்த போதிலும், இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. ஆனால் தென் பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். புருசல்ஸ் நகரத்தில் வாழ்ந்த மேட்டுக்குடி பிரெஞ்சு மொழி பேசியது. 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெல்ஜியம் சிறிது காலமேனும் "பகுத்தறிவுவாதி" நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதனால் அங்கே ஒரு தாராளவாத சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கம் தோன்றியிருந்தது. அவர்கள் கத்தோலிக்க மதபீடத்திற்கு எதிராக இருந்தனர், ஆனால் மொழித் திணிப்பை எதிர்த்தார்கள்.

இந்த இடத்தில் பிரெஞ்சு மொழியின் மேன் நிலை குறித்து சில வரிகள் குறிப்பிட வேண்டும். இன்று ஆங்கிலம் முதலாவது சர்வதேச மொழியாக இருப்பது போல, அன்று பிரெஞ்சு மொழி இருந்தது. இன்று சென்னை, அல்லது கொழும்பு போன்ற நகரங்களில், ஆங்கிலம் மட்டும் பேசுவதை உயர்வாகக் கருதும் மேட்டுக்குடியினரை சர்வசாதாரணமாக பார்க்கலாம். அதே போல, அன்று லண்டன் முதல் சென்பீட்டர்ஸ்பேர்க் (ரஷ்யா) வரையிலான நகரங்களில் வாழ்ந்த அரச வம்சமும், மேட்டுக் குடியும் பிரெஞ்சு மட்டுமே பேசினார்கள். பெல்ஜியத்தின் வலோனியா நூறு சதவீதம் பிரெஞ்சு பேசும் பிரதேசமாக மாறியிருந்தது. புருசல்ஸ் ஒரு பிரபுக்களின் நகரம். அதனால் அங்கே வாழ்ந்தவர்களின் தாய் மொழி டச்சாக இருந்த போதிலும், பிரெஞ்சில் உரையாடுவதை பெருமையாக கருதினர். இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் வேறெந்த மொழியையும் கற்பதற்கு முன் வராதது போல, அன்று புருசல்ஸ் மேட்டுக்குடியினர் டச்சு மொழி கற்க மறுத்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் டச்சு பிரெஞ்சை விட தரம் தாழ்ந்த மொழி. (பட்டிக்காட்டான் பேசும் மொழி). பெல்ஜிய கத்தோலிக்க திருச் சபையும், சிற்றரசர்களும், மேட்டுக்குடியினரும், நெதர்லாந்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். உண்மையில் பூர்சுவா வர்க்கத்தின் எழுச்சியானது, "பெல்ஜிய புரட்சி" என்று சரித்திர பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டது. (கவனிக்கவும்: நெதர்லாந்தின் சரித்திர பாட நூல்கள் "பெல்ஜிய பிரிவினை" என்று குறிப்பிடுகின்றன.

1815 ல் உருவான நெதர்லாந்துக்கு எதிரான பெல்ஜிய விடுதலைப் போராட்டம் 1830 ம் ஆண்டு சுதந்திரப் பிரகடனத்தில் முடிந்தது. பெல்ஜியம் என்ற புதிய தேசத்தின் மன்னனாக லெயோபோல்ட் முடி சூடிக் கொண்டாலும், பூர்ஷுவா வர்க்கத்தின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற முறை ஸ்தாபிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள், மன்னன் என்ற ராஜ்யத் தலைவனை தவிர்த்து சிந்திக்கப் பழகவில்லை. அதனால் தான் பெல்ஜியம் இன்றைக்கும் அரசமைப்பு சட்டம், பாராளுமன்றம், மன்னராட்சி என்ற அசாதாரண கலவை கொண்ட நாடாக காட்சியளிக்கின்றது. அரச குடும்பத்திற்கும், பூர்ஷுவா (மேட்டுக்குடி) க்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஒருவரை மற்றவரில் தங்கியிருக்க வைத்துள்ளது. லெயோபோல்ட் மன்னன் ஆப்பிரிக்காவில் காலனிய அபிலாஷைகளுடன் காங்கோவை தனது பின்வீட்டு தோட்டமாக வைத்திருந்த பொழுது, யாரும் எதிர்க்கவில்லை. அரசாங்கம் கவிழும் பொழுது மந்திரி சபை தனது ராஜினாவை மன்னரிடம் கையளிக்கிறது. தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் மன்னர் இடைத்தரகராக செயற்பட்டு மந்திரி சபையை அமைக்கிறார். நடைமுறையில் மன்னர் நியமிக்கும் அமைப்பாளர் அந்தப் பணியைச் செய்வார். 2007 ம் ஆண்டு, புதிய மந்திரி சபை அமைப்பதற்கு 194 நாட்கள் எடுத்தன! அது ஒரு உலக சாதனையாக இருக்க வேண்டும். அவ்வாறு பெல்ஜியத்தில் அரசாங்கம் இல்லாத காலகட்டத்தில் எல்லாம் மன்னரின் பிரசன்னம், தேசத்தை ஒன்று படுத்தி வைத்திருக்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக சமாதான அனுசரணையாளர்கள் எத்தனையோ நாடுகளின் சமஷ்டி முறைகளை ஆராய்ந்தார்கள். அந்தப் பட்டியலில் பெல்ஜியமும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பெல்ஜிய சமஷ்டி அமைப்பு என்ன தான் சிறப்பான அம்சங்களை கொண்டிருந்த போதிலும், அது அந்த நாட்டின் இனப்பிரச்சினையை தீர்த்ததாக தெரியவில்லை. இவ்வளவத்திற்கும் பெல்ஜிய அரசியல் அமைப்பு உலகிலேயே சிக்கலானது. இன்று வரை பல பெல்ஜிய நாட்டவர்களுக்கே புரியாத இடியப்பச் சிக்கல் அது. இருந்தாலும் தேர்தல் ஒன்று வந்தால், ஒவ்வொரு பெல்ஜிய வாக்காளரும் கட்டாயம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 50 யூரோ தண்டப்பணம் கட்ட வேண்டும்! அடுத்த கட்டத்திற்கு போகும் முன்னர், பெல்ஜிய அரசியல் அமைப்பை ஒரு பறவையின் பார்வையில் பார்ப்போம். ஆழமாக ஆராயத் தேவையில்லை. அப்புறம் நமக்குத் தான் மூளை குழம்பி விடும்!

(தொடரும்)

பெல்ஜியம் பயணத் தொடரின் முதலாவது பகுதி:
1.
மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

Tuesday, May 25, 2010

நெதர்லாந்து மே தின ஊர்வலத்தில் போலிஸ் அடக்குமுறை!


(Rotterdam, 1 மே 2010) மே தின ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து கலைத்தது. 16 பேர் கைது செய்யப்பட்டனர். எந்தவொரு வெகுஜன ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை. ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலன், தனிமனித சுதந்திரங்களின் சொர்க்கபுரி, என்றெல்லாம் புகழப்படும் நெதர்லாந்தில் போலிஸ் அடக்குமுறை என்பது நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடி காரணமாக உலகெங்கும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு வரும் காலத்தில், மே தின ஊர்வலம் போன்ற சிறு பொறியை கூட அணைக்க விரும்புகின்றது அதிகார வர்க்கம்.

நெதர்லாந்தின் தொழிற்துறை நகரமான ரொட்டர்டாமில் மட்டுமே மே தின அணிவகுப்பை காணலாம். கடந்த 30 வருடங்களாக "மே தினக் கமிட்டி" என்ற அமைப்பினரே ஊர்வலங்களை ஒழுங்கு செய்து வந்தனர். ரொட்டர்டாம் துறைமுகத்தில் வேலை செய்யும் துருக்கி தொழிலாளர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய அமைப்பு அது. சிறிய துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பு. நெதர்லாந்தில் நலிவடைந்த இடதுசாரி அமைப்புகளும் அதில் பங்குபற்றின. இவர்களின் கூட்டு உழைப்பில் வருடாவருடம் மே தின ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த வருடமும் அவ்வாறு செய்வதற்கு ஏற்கனவே போலிஸ் அனுமதி வாங்கி இருந்தனர்.

ரொட்டர்டாம் மாநகர சபை கட்டிடத்திற்கு முன்னால் ஒன்று கூடிய ஆர்வலர்களை போலிஸ் சுற்றி வளைத்தது. பங்கேற்பாளர்களின் கைகளில் இருந்த செங்கொடிகளையும், சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஒப்படைக்கும் படி கேட்டது. அப்படி ஒப்படைக்கா விட்டால் ஊர்வலத்தை நகர அனுமதிக்க மாட்டோம், என போலிஸ் மிரட்டியது. ஆனால் அதற்குப் பின்னரும் மே தின ஊர்வலம் முன்னோக்கி செல்ல போலிஸ் அனுமதிக்கவில்லை. போலிஸ் நாய்களைக் கொண்டு சுற்றி வளைத்த படியே, கூட்டத்தின் மீது தடியடிப் பிரயோகம் செய்தது. எந்தவித தூண்டுதலும் இன்றி போலிஸ் தானாகவே இந்த அடக்குமுறையை ஏவி விட்டது. குறைந்தது 16 பேர் கைது செய்து இழுத்து செல்லப்பட்டனர். கண்மூடித் தனமான தடியடிப் பிரயோகம் காரணமாக ஊர்வலத்திற்கு வந்தவர்கள் கலைந்து செல்ல வேண்டி நேரிட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட அன்று, மே தினக் கமிட்டி நீதி மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது. அப்போது எடுத்த புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.) அதே நேரம் மே தினக் கமிட்டியினர், போலிஸ் அத்துமீறலுக்கு எதிராக ரொட்டர்டாம் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

(மே தின துண்டுப் பிரசுரத்திலும், நீதிமன்ற ஆர்ப்பாட்ட பதாகையிலும் காணப்படும் சுலோகம்: "WE ARE'T GOING TO PAY THEIR CRISIS! FOR THE SOLIDARITY AND SOCIALISM!")

கீழே Rotterdam மே தின ஊர்வலத்தைக் கலைக்க பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்யும் வீடியோ காட்சி.
நெதர்லாந்தில் நைமேஹன் (Nijmegen) என்ற இடத்தில் நடைபெற்ற, சிறிய அளவிலான மே தின ஊர்வலத்தையும் பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீழே உள்ளது "நைமேஹன் கலவரம்" குறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ.

Monday, May 24, 2010

மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

(பெல்ஜியம் பயணக் கதை - பகுதி 1)

"பிரெஞ்சு பெருச்சாளிகளே! வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுங்கள்." புருசல்ஸ் மாநகரின் அருகில் உள்ள உள்ளூராட்சி சபைக்கு முன்னால் ஒரு கூட்டம் டச்சு மொழியில் கோஷம் போடுகின்றது. முகத்தை மூடிய நபர்கள் அறிவிப்பு பலகைகளில் பிரெஞ்சுப் பெயர்களை தார் பூசி அழிக்கின்றனர். ஒரு உணவுச்சாலையினுள் நுளையும் "மொழிப் பொலிஸ்" எதற்காக டச்சு மொழியில் விளம்பரத் தட்டி இல்லை என்று கேட்கிறது. மொழி உரிமைக்காக போராடும் டச்சு இனவாதிகளையும், பிரெஞ்சு இனவாதிகளையும் சமாளிக்க முடியாமல் பெல்ஜிய அரசாங்கம் இராஜினாமா செய்கின்றது. ஜூன் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப் படுகின்றது.

இனப்பிரச்சினை உச்சத்தில் உள்ள மேற்குலக நாடான பெல்ஜியம் அரசியல் குழப்பத்திற்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக, நானும் ஒரு மாத காலம் பெல்ஜியத்தில் தங்கியிருந்ததால், இந்த அரசியல் சர்க்கஸ் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. முதலில் அந்த சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுத்த பல துறை சார்ந்த நண்பர்களுக்கு எனது நன்றிகள். நெதர்லாந்திற்கும், பிரான்சிற்கும் நடுவில் உள்ள ஒரு சிறிய நாடு பெல்ஜியம்.(இலங்கையை விட சிறியது.) உலகில் அதிக கவனம் எடுக்கப்படாத பிரதேசங்களில் ஒன்று. இன்று மொழிப் பிரச்சினையால், எதிர்காலத்தில் பெல்ஜியம் என்ற நாடு நிலைத்து நிற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெதர்லாந்துக்காரர்கள் இராணியின் பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்த ஏப்ரல் 30 அன்று, நான் பெல்ஜியத்தினுள் பிரவேசித்தேன். அப்பாடா, இராணியின் "பெருங் குடி" மக்களின் தொல்லையில் இருந்து இந்த வருடம் தப்பிவிட்டேன். அடுத்த நாள் மே தினம், உழைப்பாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். ஆனால் நெதர்லாந்தில் மட்டும் விடுமுறை கிடையாது. முதல் நாள் இராணியின் தினத்தை கொண்டாடிய களைப்பில் அயர்ந்து தூங்கி விட்டு அடுத்த நாள் வேலைக்குப் போக வேண்டும். பெல்ஜியத்தில் இராணியின் தினம் கிடையாது. (உன்னுடைய ராணி அழகா? என்னுடைய ராணி அழகா? என்று நெதர்லாந்து, பெல்ஜிய சாமானியர்கள் போடும் சண்டையை பார்த்து ரசித்திருக்கிறேன்.) நான் அன்றைய தினம், ஒரு பலசரக்கு கடை உரிமையாளருடன், அவர் கொள்வனவு செய்யும் கடைக்கு சென்றிருந்தேன். கடை உரிமையாளர் ஒரு பாகிஸ்தானி, அவருக்கு விநியோகம் செய்தவர் பெல்ஜிய நாட்டவர். பொருட்களை விநியோகம் செய்து கொண்டே, "நாளை நாம் கடையை பூட்டியிருப்போம்." என்றார். ஏன் என்று கேட்டதற்கு "நாளை மே தினம். பெல்ஜிய மக்கள் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் வேலை செய்வார்கள்." என்று கிண்டலடித்தார். உழைப்பாளர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறைப்படாத குடிவரவாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அநேகம். அதை அவர்கள் ஒரு குறையாக எடுப்பதில்லை. குறைந்த காலத்தில் கூடிய பணம் சேர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

பிற ஐரோப்பிய நாடுகளைப் போல, பெல்ஜியத்திலும் சிறிய கடைகள் யாவும் வெளிநாட்டு "முதலாளிகளாலேயே" நடத்தப் படுகின்றன. அவை "இரவுக் கடைகளாக" இருக்கும். அதாவது தினசரி மாலை ஆறு மணி முதல், அதிகாலை மூன்று மணி வரை திறந்திருப்பார்கள். அநேகமாக பாகிஸ்தானியர்கள் (சில இடங்களில் இந்தியர்கள், இலங்கையர்கள்) "இரவுக் கடை" வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ஒரு இரவுக் கடை எடுத்து நடத்துவதற்காக தான், எனது நண்பர் என்னை பெல்ஜியம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இரண்டு நாட்கள் அந்தக் கடையில் இருந்து, பழைய கணக்கு நிலுவைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அல்கஹோல் கலந்த குடிவகைகளுக்கு இரண்டு மடங்கு விலை போடப்பட்டிருந்தது. மதிப்புக் கூட்டு வரியில் (VAT) நிறைய குளறுபடிகள். விநியோகஸ்தரிடம் வாங்கிய பொருளின் வரியை திருப்பி எடுக்கும் அதே தருணம், அதை சரியான முறையில் விற்பனை விலையில் காட்டுவதில்லை. இலகுவாக அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார்கள். அதாவது ’பில்’ போடுவதில்லை. இதனால் கறுப்புச் சந்தையில் வாங்கும் பொருட்களை, கற்பனைக்கு எட்டிய வண்ணம் விலை போட்டு விற்க முடிகிறது. இது எல்லாவற்றிற்கும் கடை உரிமையாளர் சொன்ன ஒரே காரணம்: ".... இல்லாவிட்டால் நான் எப்படி லாபம் சம்பாதிப்பது?" வாடிக்கையாளர்களிடம் அறவிடும் வரியை அரசுக்கு கொடுக்காமல், தனது பைக்குள் போடுவதற்கு பெயர் "லாபம்".

தொழிற்துறை புரட்சி உருவாக்கிய நகரங்கள் பல பெல்ஜியத்தில் உண்டு. இதனால் பல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பெயர் போனது. அண்மையில் கூட ஜெர்மனியின் ஒபெல் கார் தொழிற்சாலை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி இருந்தது. அதற்கெதிரான தொழிற்சங்க நடவடிக்கையால் நாடே ஸ்தம்பிதமடைந்திருந்தது. அன்றும் இன்றும் பெல்ஜியத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் சர்வதேச துறைமுகம், அன்த்வேர்பன் (ஆங்கிலத்தில்: Antwerp) நகரில் உள்ளது. அன்த்வேர்பன், ரொட்டர்டாம் (நெதர்லாந்து) ஆகிய துறைமுகங்களில் இறக்கப்படும் சரக்குகள், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளுக்கும் செல்கின்றன. அன்த்வெர்பன் நகரை சுற்றி பல தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது பிரச்சினை என்னவென்றால், நாட்டிற்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் "அன்த்வெர்பன்", டச்சு மொழி (பெல்ஜியத்தில் "பிளாம்ஸ்" என்றழைப்பர்.) பேசும் மாநிலத்தில் உள்ளது. தொழிற்துறை அபிவிருத்தி மட்டுமல்ல, நவீன வர்த்தக தொடர்புகள் காரணமாக மொத்த தனி நபர் வருமானம் பிளான்டரன் (டச்சு பேசும் பிரதேசத்திற்கான பெயர்) மாநிலத்தில் அதிகம். அதனால் அவர்களுக்கு கொஞ்சம் தலைக்கணம். நாம் எதற்காக "வலொனியா" (பிரெஞ்சு பேசும் பிரதேசம்) மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரெஞ்சுக்காரர்கள் எமது பணத்தில் சலுகைகளைப் பெறுகிறார்கள். அவர்களை கழற்றி விட்டு, தனி நாடாக இருப்போம். அல்லது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழும் நெதர்லாந்துடன் சேருவோம். இந்த பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதற்கு புதிய கட்சியும் உருவானது. "பிளாம்ஸ் பெலாங்" என்ற அது, கூடவே முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம், அகதிகளை அகற்றும் கொள்கை என்று இனவாதக் கட்சியாகவும் உள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் வலொனியாவும் மொழிப் போரில் சளைக்கவில்லை. அங்கேயும் வலொனியா பிரிவினை கோரும் அமைப்பு உள்ளது. பிளாம்ஸ் பெலாங் அளவு பிரபலமடையவில்லை. அதற்கு காரணம் பிரெஞ்சு இனவாதிகள் குறைவு என்பதல்ல. வேலயில்லாதோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள வலொனிய மாநிலம், பௌதீக பிரிவினையால் மேலும் பாதிக்கப்படலாம். இன்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். வலொனியா ஒரு காலத்தில் தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக அதிக வருமானம் பெற்று வந்தது. தொழிற்புரட்சியால் முழுமையான வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய பகுதிகளில் வலொனியாவும் ஒன்று. அபிவிருத்தி இன்றி பின்தங்கியிருந்த பிளாம்ஸ் மக்கள் வலொனியாவுக்கு வேலை தேடி சென்றார்கள். அந்தப் பகுதி தொழில் வளர்ச்சிக்கு காரணம், இரும்பு, நிலக்கரி சுரங்கங்கள். லியெஜ் நகருக்கு அண்மையில் பல சுரங்கங்கள் அமைந்திருந்தன. இத்தாலியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் முதலாவது அந்நிய குடிவரவாளர்களான இத்தாலியர்கள் வெள்ளைத்தோல் ஐரோப்பியர் என்பதால், பெல்ஜிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விட்டனர்.

பெல்ஜிய இனப் பிரச்சினைக்கு தெளிவாக தெரியக் கூடிய பொருளாதாரக் காரணிகள் இருந்த போதிலும், சிலர் சரித்திரத்தில் வேர்களைத் தேடுகின்றனர். உலகில் எல்லா தேசியவாதிகளும் வழக்கமாக கற்பிக்கும் நியாயம் தான். அந்நிய படையெடுப்பாளர்கள், (ரோமானிய, ஸ்பானிய, பிரெஞ்சு வல்லரசுகள்) பெல்ஜிய பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில் தங்களை வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டார்கள், எனக் கூறுகின்றனர். வடக்கு நோக்கி படையெடுத்து வந்த ரோமர்கள் ரைன் நதிக் கரையுடன் நின்று விட்டனர். அவர்கள் அந்தப் பிரதேசத்திற்கு பெல்ஜிகா மாகாணம் என்று பெயரிட்டார்கள். ரோமர்களுக்கு பின்னர் பெல்ஜியமும், நெதர்லாந்தும் ஸ்பெயின் அரசாட்சிக்கு உட்பட்ட மாகாணமாக இருந்தது. அவர்கள் அதனை "தாழ் நிலங்கள்" (டச்சு : Nederlanden, பிரெஞ்சு : Pays Bas) பெயர் மாற்றினார்கள். நெதர்லான்தும், பெல்ஜியமும் புவியியல் ரீதியாக கடல்மட்டத்தின் கீழே அமைந்துள்ளன. அதனால் தான் "தாழ் நிலம்" என்ற பெயர் வந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் ஜெர்மானிய பழங்குடி மக்கள். பெல்ஜிகா, வலொனியா எல்லாம் அந்த இனக்குழுக்களை சுட்டும் பெயர்கள் தான்.

ஸ்பானிய அரசின் கீழே இருந்த காலங்களில் என்பது ஆண்டு காலம் சுதந்திரப் போர் நடத்தினார்கள். நெதர்லாந்து என்ற பெயரில் பெல்ஜியமும் சேர்ந்து தான், ஸ்பெயினுக்கு எதிராக போர்கொடி தூக்கினார்கள். அன்று "நெதர்லாந்துகள்" என்பது பெல்ஜியத்தையும் சேர்த்தே குறிப்பிடப்பட்டது. சிறிது காலம் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. உலகப்புகழ் பெற்ற "வாட்டர்லோ" போரில் "வில்லெம்" ன் ஒல்லாந்து படைகள், பிரெஞ்சுப் படைகளை வெற்றி கொண்டன. ஆமாம், நெப்பொலியன் தோற்கடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கும் அதே வாட்டர்லோ தான். (வோட்டர்லூ என்பது ஆங்கில உச்சரிப்பு) பெல்ஜியத்தில் உள்ளது. விடுதலையடைந்த நெதர்லாந்துகளில் புதிய பிரச்சினை காத்திருந்தது. தேசியவாதம் பிரபலமடையாத காலகட்டம் அது. ஆனால் கத்தோலிக்க, புரட்டஸ்தான்து பிரிவினர்கள் தமது மதமே உயர்ந்தது என்று அடித்துக் கொண்டார்கள். பெல்ஜியத்திலும் கத்தோலிக்க மதவெறி (அல்லது மத அடிப்படைவாதம்) உச்சத்தில் இருந்தது. புரட்டஸ்தாந்து மத அடிப்படைவாதிகள் அதிகாரம் செலுத்திய நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் துண்டித்துக் கொள்ள விரும்பியது. மதத்தின் பெயரின் பெல்ஜிய சுதந்திரத்திற்கான போர் ஆரம்பமாகியது. அந்தப் போரில் தேவாலயங்களும், யேசு, மாதா உருவச் சிலைகளும் தப்பவில்லை. எல்லாம் அடித்து நொருக்கப் பட்டன!

(தொடரும்)


Saturday, May 22, 2010

மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!


Enric Duran - Robin Hood of the Banks
இதோ ஒரு நவீன ராபின் ஹூட்! ஸ்பெயினை சேர்ந்த என்றிக் டூரன் (Enric Duran ). பார்செலோனா நகரை சேர்ந்த பிரபல முதலாளித்துவ எதிர்ப்பு போராளி. நாடு முழுவதும் பேசப் படும் அளவு புகழ் பெற அவன் செய்த காரியம் ஒன்றே ஒன்று தான். ஸ்பெயின் வங்கிகளில் பெரிய தொகை கடன்களை எடுத்தான். 39 வங்கிகளில் சுமார் அரை மில்லியன் யூரோக்கள் கடனாக எடுத்த போதிலும், அதை திருப்பிச் செலுத்தும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. தான் எடுத்த பணத்தை ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தான். மிகுதியை முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் அமைப்பிற்கு வழங்கினான். ஒரு வருடம் தலைமறைவாக இருந்து விட்டு நாடு திரும்பிய போது, காவல்துறை கைது செய்தது. ஆனால் மக்கள் ஆதரவு அவன் பக்கம் இருந்தது. நீதிபதிகளும் செயலின் நியாயத் தன்மை கருதி விடுதலை செய்ய நேர்ந்தது. "உண்மையில் வங்கிகள் அன்றாடம் மக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான் மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுத்தேன்." இவ்வாறு கூறுகிறார் Enric Duran.

ஸ்பெயினுக்கு வெளியே ஒரு சிலரே அறிந்த "முதலாளித்துவ எதிர்ப்பு வங்கிக் கொள்ளை" பற்றி சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துள்ளன. உலக மக்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லல் படும் நேரம், ஸ்பெயின் உதாரணத்தை பிறரும் பின்பற்றக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை. இருப்பினும் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்று Enric Duran னை, லட்சக்கணக்கான பார்வையாளர் முன்னிலையில் பேட்டி கண்டது. நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதனை மறு ஒளிப்பரப்பு செய்திருந்தது. என்றிக் டூரன் வழங்கிய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

- நீ வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 5000000 யூரோக்கள். இந்த விபரம் சரியா?
- ஆமாம்
- அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கப் போகிறாயா?
- இல்லை
(பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரகோஷம்!)
- உன்னை ஒரு ராபின் ஹூட் ஆக கருதிக் கொள்கிறாயா?
- இல்லை. நான் நானாகவே இருக்கிறேன்.


Friday, May 21, 2010

அமெரிக்க வறுமையில் செழிக்கும் இந்திய 'கால் சென்டர்'

இந்தியாவில் இருந்து கொண்டே, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காக தொலைபேசியூடாக வேலை செய்யும் கால் சென்டர்கள் புற்றீசல் போல முளைத்துக் கிளம்பியுள்ளன. வெளிநாட்டு தொலைத்தொடர்பை ஒரு நொடிக்குள் தரத்துடன் வழங்கும் நவீன தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இத்தனை காலமும் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருந்த கால் சென்டர்கள் இந்தியாவுக்கு நகர்த்தப்பட்டன. இந்தியாவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய தொழிலாளர் படை இருப்பது அதற்கு அனுகூலமாக இருந்தது.

கால் சென்டர் வேலைக்கு ஒரு அமெரிக்கனுக்கு கொடுக்கும் ஊதியத்தை விட மூன்றில் ஒரு பங்கு இந்தியனுக்கு செலவாகின்றது. இதனால் அமெரிக்க முதலாளிகளும் பெருமளவு அமெரிக்கர்களின் வேலைகளை பறித்து இந்தியர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பணியாளர்கள் இந்தியாவில் இருந்து தொடர்பு கொள்ளும் இந்தியர்கள் என்பதை மறைப்பதற்காக அவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் பேச பயிற்சி கொடுத்தார்கள். கால் சென்டர் துறையால் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் புதிய நடுத்தர வர்க்கம் உருவானது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படும் கால் சென்டர்கள், அங்கே அனைவராலும் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட்டன. ஆனால் இந்தியா "ஒளிரக்" காரணமாக இருக்கும் கால் சென்டர்களுக்கு இருண்ட பக்கம் ஒன்றுண்டு. அமெரிக்காவில் பெருகி வரும் வறுமையால், பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள நாட்டில் ஒரு பகுதி மக்கள் நன்மை அடைகிறார்கள்!

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி. இழுத்து மூடப்படும் தொழிலகங்கள். உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக பணியில் இருந்து நீக்கப்படும் தொழிலாளர்கள். குடும்பத் தலைவன் வேலை இழந்தால், அவன் சம்பாத்தியத்தில் தங்கியிருக்கும் முழுக் குடும்பமும் வறுமையில் வாடுகின்றது. வீடு வாங்கிய கடன், மின்சாரம், தண்ணீர் பில்கள் போன்றவற்றை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். மாதக் கணக்காக கட்டாமல் விடுவதால் வட்டியுடன் ஏறிச் செல்லும் கடன்களை திருப்பி செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. ஆனாலும் இது அமெரிக்கா. தலைக்கு மேலே கடன் இருந்தாலும், அவற்றை திருப்பிச் செலுத்தும் படி வாழ்க்கை முழுவதும் வற்புறுத்திக் கொண்டிருப்பார்கள். அமெரிக்க கடன்காரர்களை விரட்டி விரட்டி கடன் அறவிடும் வேலையை, இந்திய கால் சென்டர் ஊழியர்கள் செய்கின்றனர். கிராமத்தில் இப்படியான தொழில் செய்பவர்களை "கந்து வட்டிக்காரனின் அடியாட்கள்" என அழைப்பார்கள். இன்றைய நாகரீக வளர்ச்சி காரணமாக "கால் சென்டர்" ஆக பரிணமித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "Call India" ஆவணப்படம் எதிரும் புதிருமான இரண்டு வேறு உலகங்களை ஒரு சேர காட்சிப் படுத்துகின்றது. அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களை சந்தித்து அவர்களின் மனக்குறைகளை பதிவு செய்துள்ளது. மறுபக்கம் கால் சென்டர்களின் வரவால் இந்தியாவில் எற்பட்ட செல்வச் செழிப்பை காட்டுகின்றது. "அமெரிக்க ஏழைகளை அமெரிக்க அரசு புறக்கணிக்கின்றது. அமெரிக்கா உலகம் முழுவதும் அள்ளிக் கொடுப்பதால், பிற நாட்டவர்கள் அமெரிக்கர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று கருதுகிறார்கள்." ஏற்றத்தாழ்வை தனது குறுகிய அரசியல் அறிவுடன் புரிந்து கொள்ள முனையும் ஏழை வயோதிபரின் மனக்குமுறல்.

காசுக்கு வழியின்றி அல்லல் படும் நேரம் பார்த்து அழைக்கும் இந்திய கால் சென்டர் ஊழியர்கள் மீது சீறும் அமெரிக்க எழைகள். அவர்களது வசவுகளையும், சில நேரம் இனவாத தூற்றல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கால் சென்டர் பணியாளர்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த படியால் தான், நிர்வாகம் அவர்களுக்கு ஆங்கிலப் புனை பெயர்களை சூட்டுகின்றது. அமெரிக்க ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொடுக்கின்றது. கால் சென்டர் குறித்த மாயைகள் அகல இந்த ஆவணப்படம் உதவும். நெதர்லாந்து தொலைக்காட்சி தயாரிப்பு என்ற போதிலும், உரையாடல்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் அமைந்துள்ளன.

Wednesday, May 19, 2010

முதலாளித்துவ சாத்தானை விரட்டும் அமெரிக்க பாதிரியார்!

அமெரிக்க பாதிரியார் பில்லியின் "Church of Life After Shopping " அமெரிக்காவில் மிகப் பிரபலம். அவர் பிற பாதிரியார்களைப் போல துன்பங்களில் இருந்து விடுதலை பெற கர்த்தரிடம் மன்றாடும் படி வேண்டவில்லை. மக்களின் துன்பங்களுக்கு காரணமான கடன் மட்டை (கிரிடிட் கார்ட்) என்ற பிசாசை விரட்டுவதற்காக பிரசங்கம் செய்கிறார். நுகர்பொருள் கலாச்சாரம் என்ற போதைக்கு அடிமையான மக்களை மீட்பதற்காக போராடுகின்றார். முதலாளித்துவம் என்ற சாத்தானுக்கு எதிராக தனது பாணியில் போராடிக் கொண்டிருக்கும் திருத்தந்தை பில்லி அவர்களை அறிமுகம் செய்கிறேன். அண்மையில் நெதர்லாந்து வந்திருந்த பொழுது வழங்கிய நேர்காணல். Een Vandaag நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அமெரிக்க பாதர் Billy ஆங்கிலத்தில் பேசுவதால் வீடியோவை புரிந்து கொள்வதில் உங்களுக்கு எந்த சிரமும் இருக்காது.


sitestat


What would Jesus buy?

Monday, May 17, 2010

விரைவில்: "கிரேக்க மக்கள் சோஷலிச குடியரசு"?


(Athens, 15-5-2010)"கிரீசில் புதிய அரசியல் நிர்ணயச் சட்டம். நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுவர். தொழிலகங்களும், அலுவலகங்களும் தொழிலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் தலைமை தாங்கப்படும். கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசம். பாடசாலைகளிலும், தொழிலகங்களிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும். வேறு பல திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்." - கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகம் திருமதி பபாரிகாவின் உரையில் இருந்து சில பகுதிகள். KKE அணிவகுப்பும், பபாரிகாவின் உரையும் அடங்கிய வீடியோ இது:

50000 தொடக்கம் 70000 வரையிலான KKE என்ற கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏதென்ஸ் நகரின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தை கூட சுற்றி வளைத்திருந்தனர். கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் உரையானது, லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி முன்மொழிந்த ஏப்ரல் தீர்மானத்தை ஒத்திருந்ததாக பார்வையாளர்கள் கூறினார்கள். போல்ஷெவிக் கட்சியினர், 1917 ம் ஆண்டு, இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை" நிலைநிறுத்த விரும்பினர். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" கோட்பாடு கிரீசில் நடைமுறைப் படுத்தப்படுமா?

Sunday, May 16, 2010

கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

முதலாளித்துவ ஊடகங்கள், செல்வந்த நாடுகள் யாவும் குந்தியிருந்து யோசித்து, கிரீசின் பொருளாதாரப் பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டன. ஒலிம்பிக் போட்டிகளுக்கு கோடிக்கணக்கில் செலவளித்த அரசு, பொதுத்துறையில் "மக்களின் வரிப்பணத்தை விழுங்கி" சொகுசாக வாழும் அரச ஊழியர்கள், அவர்களுக்கு "அநியாயமான முறையில் கிடைக்கும்" இரண்டு மாத போனஸ், "குறைந்த சேவைக் காலத்தில் ஓய்வு பெறுவதால்" அதிகரிக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு.... மொத்தத்தில் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கமும் குற்றவாளிகள்.

கிரேக்க ஊழியர்களின் சராசரி மாத சம்பளம் 800 யூரோக்கள். ஒரு தனியார் வங்கி ஊழியருக்கும் அல்லது அரச அலுவலக பணியாளருக்கும் அது தான் சம்பளம். வேலைக்கு சேரும் புதிதில் 600 யூரோ கொடுப்பதுமுண்டு. தனியார் துறை, பொதுத் துறை எங்கும் இது தான் நிலைமை. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப்போல கிரீசில் சட்டப்படி தீர்மானிக்கப்பட்ட சம்பள அளவீடு எதுவும் கிடையாது. அதே நேரம் மேற்கு ஐரோப்பிய நாட்டில் சராசரி மாத சம்பளம் 1400 யூரோக்கள். தேர்ச்சியடையாத அடிமட்ட தொழிலாளி கூட குறைந்தது 1200 யூரோக்கள் பெறுகிறார். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சராசரி வேலை நேரம் ஒரு வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள். ஆனால் கிரீசில் ஒருவர் வாரத்திற்கு சராசரி 42 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். கிரீசில் ஓய்வூதியம் பெறும் வயது, சராசரி 61,4 (EU: 61,1). கிரீசில் கிடைக்கும் ஓய்வூதியப்பணம் சராசரி 750 யூரோக்கள். (ஸ்பெயினில் 950 ) கிரீசில் உள்ள மொத்த உழைப்பாளிகளில் அரசாங்க ஊழியர்கள் 22 சதவீதம். (நெதர்லாந்தில் 27 %) இந்தத் தரவுகள் எல்லாம் எங்கேயிருந்து கிடைத்தன? பார்க்க: European Commission - Eurostat

சட்டவிரோதமாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகள், இந்தப் பொருளாதாரக் கணக்கெடுப்பினுள் வரவில்லை. கிரீசில் லட்சக்கணக்கான குடிவரவாளர்கள், அகதிகள் எந்தவிதமான பதிவும் இன்றி வேலை செய்கின்றனர். குறிப்பாக வயல்களில் கூலித் தொழிலாளர்களாக, நகரங்களில் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்பவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அல்பேனியா, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். கிரீசில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அரசுக்கு வரி கட்டுவதில்லை. மருத்துவ சலுகைகளை பயன்படுத்துவதில்லை. போனஸ், ஓய்வூதியம் பற்றியெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் மிகக் குறைந்த ஊதியம் (சராசரி மாதம் 300 யூரோ) பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்கள், கிரீஸ் முழுவதும் நுகரப் படுகின்றன. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஹோட்டல்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் (சில நேரம் சட்டவிரோதமாக) பணிபுரிவதால் தான், ஐரோப்பிய உல்லாசப்பிரயாணிகள் குறைந்த செலவில் தங்குகின்றனர்.

கிரீசில் சட்டப்படி ஒப்பந்தம் போட்டு வேலை செய்யும் கிரேக்கர்கள் கூட போதுமான அளவு சம்பாதிப்பதில்லை. விலைவாசியோ மேற்கு ஐரோப்பிய தரத்தில் தான் உள்ளது. ஆனால் சம்பளமோ மேற்கு ஐரோப்பாவில் கிடைப்பதை விட அரைவாசி. இந்த பிச்சை சம்பளத்தை தான் வருகிற மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்காதே, என்று கடன் கொடுத்த IMF, EU உத்தரவு போட்டுள்ளன. அன்றாட செலவுக்கே பத்தாத சம்பளம் பெறும் கிரேக்க ஊழியருக்கு, வருட முடிவில் கிடைத்து வந்த போனஸ் தொகை சிறிய ஆறுதலைக் கொடுத்து வந்தது. அது கூட ஒரு மாத சம்பளம் அளவே இருக்குமென்பதால், 13 வது மாத சம்பளம் என்றும் அழைப்பார்கள். பொதுத்துறையில் மூன்றில் ஒரு பங்கும், தனியார் துறையில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு இந்த போனஸ் எல்லாம் கிடையாது.

உண்மையில் கம்பெனி, ஒரு தொழிலாளிக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதால் மிச்சம் பிடிக்கும் உபரி உழைப்பை தான் "போனஸ்" என்ற பெயரில் கொடுக்கின்றது. அதாவது போனஸ் என்பது அந்த தொழிலாளிக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தின் ஒரு பகுதி. அது கூட கட்டாயம் கொடுக்க வேண்டியதில்லை. நடைமுறையில், தனியார் நிறுவனங்கள் "இந்த முறை லாபம் போதாது" என்று கூறி கொடுப்பதில்லை. அரச நிறுவனங்கள் மட்டுமே ஒழுங்காக கொடுத்து வருகின்றன. இதை விட 14 வது மாத சம்பளம் என்ற "இன்னொரு போனஸ்" உள்ளது. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதனை "விடுமுறைப் பணம்" என அழைப்பார்கள். சம்பளத்தில் இருந்து மாதாமாதம் பிடித்து வைக்கப்பட்ட தொகையை வருடத்தில் ஒரு தடவை மொத்தமாக வழங்குவார்ககள். இதைத் தான் "கிரீஸ் அரசு தனது ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் கொடுத்து திவாலானதாக" வலதுசாரி ஊடக பயங்கரவாதிகள் பீதியை கிளப்புகின்றனர். இந்த "இரண்டு மாத போனஸ்" பெரும்பாலான செல்வந்த நாடுகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வருவது தான். தற்போது ஏதோ கிரீஸ் மட்டும் தான் அப்படியொரு விசித்திரமான செலவினத்தைக் கொண்டிருப்பதாக கதை கட்டி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு கிரேக்க தொழிலாளர் வர்க்கத்தின் மீது பழி போட்டு வன்மத்துடன் தாக்குதல் நடத்தி வரும் முதலாளித்துவ பயங்கரவாதிகள், வருமானவரி கட்டாத பணக்காரர்களை கண்டுகொள்வதில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. கிரீசில் இதுவரை எத்தனை தனியார் கம்பனிகளின் முதலாளிகள் வருமான வரி கட்டாமல் ஏய்த்திருக்கிறார்கள்? தனியாக கிளினிக் நடத்தும் வைத்தியர்கள் பற்றுச்சீட்டு கொடுக்காமல் 3000 - 4000 யூரோ சம்பாதிப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். யார் அதிக வரி ஏய்ப்பது என்பது பணக்கார்களிடையே பிரபலமான விளையாட்டுப் போட்டி. இத்தனைக்கும் கிரீசில் ஐரோப்பாவிலேயே குறைந்த அளவு வருமான வரியே விதிக்கப்படுகின்றது!

ஏதென்ஸ் நகரின் வட பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ளன அழகான பங்களாக்கள். அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோடை கால வெப்பத்தை தணிக்க இதமான குளியலுக்காக நீச்சல் தடாகங்களை கட்டியுள்ளார்கள். அரசாங்கம் நீச்சல் குளம் வைத்திருக்கும் வீடுகளுக்கு பிரத்தியேக வரி அறவிட்டு வருகின்றது. வருமான வரி அதிகாரிகள் கணக்கெடுத்த பொழுது 320 வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே நீச்சல்குளம் வைத்திருப்பதாக எழுதிக் கொடுத்தனர். ஆனால் செய்மதிப் படம் எடுத்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் மட்டும் 16974 நீச்சல் குளங்கள் காணப்பட்டன! (De Tijd, 8 மே 2010 ) முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு கட்டாமல் பதுக்கும் வரித்தொகை வருடமொன்றுக்கு 25 பில்லியன் யூரோக்கள்! இருந்தாலும் ஒழுங்காக வரி கட்டி வந்த உழைக்கும் மக்கள் தான் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க வேண்டுமாம்!!

கடன்கொடுத்த IMF, EU உத்தரவுகளுக்கு அடிபணிந்து உழைக்கும் மக்கள் தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்துக் கொள்கிறார்கள். போனசை, ஊதிய உயர்வை தியாகம் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான காலத்திலும், நாடு திவாலான போதும் பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? தம்மிடம் இருக்கும் பணத்தை சைப்ரஸ் வங்கிகளில் போட்டு முடக்கி வைக்கிறார்கள். அல்லது யூரோக்களாக வீட்டில் பதுக்கி வைக்கிறார்கள். கவனிக்கவும்: IMF, EU பணக்காரர்கள் பதுக்கிய கறுப்புப் பணத்தை அபகரிக்குமாறு கோரவில்லை. கட்டாமல் விட்ட வருமான வரித் தொகையை அறவிடுமாறு அரசுக்கு உத்தரவு போடவில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிக்குமாறு கேட்கவில்லை.

கிரேக்க உழைக்கும் மக்கள் நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க மறுப்பதும், தமது தலையில் கடன் சுமையை இறக்கி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் வியப்பில்லை. "நெருக்கடியால் ஏற்பட்ட செலவை பணக்காரர்கள் கட்ட வேண்டும்" எனக் கோருவது நியாயமானது. ஆனால் IMF, EU ஆகிய கடன் வழங்குனர்கள், நெருக்கடியை பயன்படுத்தி கிரேக்க அரசை மண்டியிட வைக்கின்றனர். நவ- லிபரலிச தாக்குதலை தொடுக்கின்றனர். "அனைத்து தீமைகளுக்கும் அரசே மூல காரணம்" என மந்திரம் ஓதுகின்றனர்.

*******************

கிரீஸ் நெருக்கடி தொடர்பான முன்னைய பதிவுகள் :
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி
ஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி
கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது
கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

Saturday, May 15, 2010

ஏதென்ஸ் நகரில் பாரிய குண்டுவெடிப்பு!

(Thursday, May 13, 2010) ஏதென்ஸ் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை (Korydalos - Central Prison of Athens) மதிலின் அருகில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. ஏதென்ஸ் மாநகரம் முழுவதும் குண்டுவெடிப்பின் சத்தம் கேட்டது. குண்டுவெடிப்பு பற்றிய அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே "Eleftherotypia” என்ற பத்திரிகைக்கும், "Alter TV" என்ற தொலைக்காட்சிக்கும் அனுப்பபட்டிருந்தன. இதனால் ஒரு பெண்மணி மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளானார். சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விபரம் தெரியவில்லை. அண்மையில் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்த சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக் காவலர்கள் கைதிகளை சித்திரவதை செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதற்கிடையே கிரீசின் வடக்கே உள்ள இரண்டாவது பெரிய நகரமான தெஸ்சலோனிக்கியில் உள்ள நீதிமன்றத்தின் அருகிலும் குண்டொன்று வெடித்துள்ளது. (Friday, May 14, 2010) குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து வெகுஜன ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. கிரீஸ் அபாயகரமான நாடாக காட்டப்பட்டால், உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து விடும் என்பதால் அரசும் எந்த அறிக்கையையும் விடுக்கவில்லை.
Bombenexplosion vor griechischem Gefängnis (in German)

மேலதிக விபரங்கள் தொடரும் ....

வீடியோ 1 : ஏதென்ஸ் சிறைச்சாலை குண்டுவெடிப்பு

வீடியோ 2 : தெஸ்சலோனிக்கி நீதிமன்ற குண்டுவெடிப்பு

Friday, May 14, 2010

"ஜாவா இனப்படுகொலை", நெதர்லாந்து அரசின் போர்க்குற்றங்கள்

9 செப்டம்பர் 1947, இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராவகேடே கிராமம். மேஜர் வைனன் (Wynen) தலைமையிலான நெதர்லாந்து படைகள் கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. இந்தோனேசியாவை ஆக்கிரமித்த நெதர்லாந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. விடுதலைப் படைத் தலைவர்களில் ஒருவனான லூகா, ராவகேடே கிராமத்தில் மறைந்திருக்கிறான் என்றொரு வதந்தி. அவனைப் பிடிப்பதற்காக தான் நெதர்லாந்து படையினர் வந்தார்கள். ஆனால் எங்கு தேடியும் லூகா அங்கில்லாதது படையினருக்கு ஏமாற்றமளிக்கின்றது. பலரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஊருக்கு வெளியே வயல் பக்கமாக நிற்க வைத்து அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பிணங்களைத் தூக்கி கிணற்றில் வீசினார்கள். கிராமத்தில் இருந்த பிற ஆண்கள், உயிர் பிழைக்க தப்பியோடியவர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று நெதர்லாந்து படையினரின் வெறியாட்டத்திற்கு 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள். ஐக்கிய நாடுகள் சபை கூட அன்று நடந்த இனப்படுகொலையை கண்டித்திருந்தது.

இந்தோனேசிய இனப்படுகொலைகள் நடந்து அறுபது வருடங்கள் உருண்டோடி விட்டன. போர்க்கால குற்றம் புரிந்த நெதர்லாந்து படையினரில் ஒருவர் கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை. மேஜர் வைனன் உட்பட அனைத்து குற்றவாளிகளும் நெதர்லாந்தில் நலமாக வாழ்ந்தனர். அரசு அவர்களை எந்த விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. அதை விட இன்று வரை போர்க்கால குற்றங்களுக்கான பொறுப்பை நெதர்லாந்து அரசு ஏற்கவில்லை. இனப்படுகொலை விவகாரம் நினைவுபடுத்தப் படும் போதெல்லாம், வருத்தம் தெரிவிப்பதுடன் நின்று கொள்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டஈடாக வழங்கப்படவில்லை.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் Liesbeth Zegveld பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, நெதர்லாந்து அரசு மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்தோனேசியாவில் படுகொலை செய்யப்பட்ட ஆண்களின் விதவைகளையும், பிற உறவினர்களையும் கண்டு பேசி, வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். (கீழே உள்ள வீடியோவில் அவர்களது சாட்சியங்கள் பதிவாகியுள்ளன.) நெதர்லாந்து அரசு மீதான குற்றச்சாட்டு இனப்படுகொலைக்கு பொறுப்பு ஏற்க வைப்பது மட்டுமல்ல. படுகொலைகளை விசாரணை செய்யாமல் புறக்கணித்த குற்றத்திற்குமாகத் தான். "அறுபது வருடங்கள் கடந்து விட்டதால் குற்றங்கள் காலாவதியாகி விட்டன." என்று வாதிடுகின்றது நெதர்லாந்து அரசு. ஆனால் இரண்டாம் உலகப்போர் கால குற்றங்களுக்காக இன்றைக்கும் வழக்குகள் நடைபெறுகின்றன. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்தோனேசியாவில் நெதர்லாந்து படையினரின் போர்க்குற்ற வழக்கு தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ:


Thursday, May 13, 2010

அமெரிக்க மண்ணில் ரகசிய தடுப்பு முகாம்கள்!

அமெரிக்காவில் அகதிகள் அல்லது சட்டவிரோதமாக தங்கியிருப்போர் இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல இடங்களில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறை முகாம்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சிறையில் தாம் மோசமாக நடத்தப் பட்டதாக அங்கிருந்து விடுதலையானவர்கள் தெரிவிக்கின்றனர். Russia Today தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படம்.

Part 1

Part 2அமெரிக்க மாநிலமான அரிசோனா சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டுபிடிப்பதற்காக ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது. புதிய சட்டத்தின் படி தெருவில் காணப்படும் ஒரு நபர் சட்டவிரோத குடியேற்றக்காரர் என்ற சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் போதும். காவலர்கள் அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்கலாம். இதனால் கருப்பு நிறத்தவர்கள், ஊதா நிறத்தவர்கள், அல்லது லத்தீன் அமெரிக்கரைப் போல தோன்றும் எவரும் போலிஸ் சோதனைக்கு உள்ளாக வாய்ப்புண்டு. அரிசோனா மாநிலம் கொண்டு வந்த சட்டம், நிறவாத பாரபட்சம் கொண்டது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். Arizona passes tough illegal immigration law

Wednesday, May 12, 2010

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !

அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது. அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து, மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ் ஆகிய நாடுகளும் சுனாமியின் அகோரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். யார் குற்றவாளி?

துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான். பலமான பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை அடிமையாக்க திட்டம் போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம். ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன் யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின் மொத்த அந்நிய/உள்நாட்டு கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.

கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?

இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது. எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். பெரும்பான்மை கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன் கம்யூனிசக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த தீவுகள் மெருகூட்டப்பட்டன. பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.

கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும் பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும் கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.

பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை. பிற்கால இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கிய ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.

முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.

கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது. கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும். ”லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.

கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.

நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன. அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. ”கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.

சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE ) யினுடையது. ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.

எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம் மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.

கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.

கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.

இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் ”டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள். கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.Monday, May 10, 2010

மே 9: நாஸிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிவிழா

நேசநாடுகளின்(அமெரிக்கா, இங்கிலாந்து) படைகள் பிரான்சு கடற்கரையில் இறங்கிய நிகழ்வை நாசிசத்திற்கு எதிரான வெற்றியாக சரித்திர நூல்கள் எழுதி வருகின்றன. ஆனால் அதற்கு முன்னரே சோவியத் படைகள் ஜேர்மன் நாசிப் படைகளை போரில் வென்றதை வேன்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச கெரில்லாக்கள் விடுதலைக்காக போராடியதையும் எந்தவொரு வரலாறும் குறிப்பிடுவதில்லை.

வீடியோ 1: 9 May 2010 நாசிசத்திற்கு எதிரான வருடாந்த வெற்றி விழா

வீடியோ 2: 1941 ஸ்டாலினின் உரை (ஆங்கில உப தலைப்புகளுடன்)