Saturday, May 07, 2022

அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள்

 

"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது" என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லெனின் எழுதிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசும் இனங்கள், ஆயிரம் தேசங்களாக பிரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதைப் போன்று பிதற்றுகிறார்கள். முதலில் உலகில் இவ்வாறு ஆயிரம் மொழிவாரி தேசங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

லெனின் வாழ்ந்த ரஷ்யாவில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளைப் பேசும் வேற்றின மக்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் லெனின் எதற்காக ரஷ்யாவை நூறு துண்டுகளாக உடைத்து தனித்தனி தேசங்களாக பிரித்து விடவில்லை? எல்லாவற்றையும் இணைத்து சோவியத் யூனியன் என்ற ஒரே நாடாக்க வேண்டும்? சோவியத் குடியரசுகளுக்குள் தனித்தனி பாஸ்போர்ட் நடைமுறை இருந்தது வேறு விடயம். அதைக் கொண்டு யாரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாது. அதற்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட USSR பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

அது போகட்டும். லெனின் தமிழீழம் பிரிவதையும் ஆதரித்திருப்பார் என்றால், அதற்கு என்ன ஆதாரம்? இதற்கு தமிழ்த்தேசியம் பேசும் புலி விசுவாசிகள் அவர்களது தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்த ஒரு கூற்றை கொண்டு வந்து காட்டினார்கள். அதில் அவர் லெனின் சொன்னதாக ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

//"எந்தவொரு ஒடுக்கும் தேசத்தையும் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய (பிரிவதற்கான) உரிமையை அங்கீகரிக்காமல், அதற்காக போராடாமல் இருப்பாரேயானால் அவர் ஒரு பேரினவாதியாக இருக்கலாமே தவிர ஒரு சோஷலிஸ்டாக இருக்க முடியாது."//

லெனின் இதை எந்த நூலில் எந்த இடத்தில் கூறியுள்ளார்? ஆதாரம் என்ன? அதற்கு அவர்கள் கொடுத்த ஆதாரத்தை இங்கே இணைத்துள்ளேன். லெனின் எழுதிய சமாதானம் குறித்து என்ற தலைப்பிலான கட்டுரை. (The Question of Peace, V.I. Lenin, July-August 1915) இது 1915ல் எழுதப்பட்ட காலனிய நாடுகளின் விடுதலை பற்றிய கட்டுரை. மிகத் தெளிவாக இருக்கிறது.

லெனின் இதை எழுதிய காலத்தில், 1ம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்றுள்ள மாதிரியான வரைபடத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அன்று உருவாகி இருக்கவில்லை. ஐரோப்பா, வட அமெரிக்கா தவிர உலகின் பிற நாடுகள் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டின் காலனிகளாக இருந்தன. ஐரோப்பாவிலேயே பல நாடுகள் ஏதாவதொரு சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன. இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் லெனின் அந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் போன்ற ஏகாதிபத்தியங்கள் தமக்குள் நிலவிய முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முதலாம் உலகப்போரில் ஈடுபட்டன. இந்த ஏகாதிபத்திய நாடு ஒவ்வொன்றும், தனக்குள்ளே பல நாடுகளை கொண்டிருந்தன. இவற்றை தான் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் லெனின் வரையறுக்கிறார். (கட்டுரையை பார்க்கவும்.)

முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் அவை தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு செர்பியா தவிர்ந்த முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசுகள், மற்றும் செக்(மற்றும் ஸ்லாவாக்கியா) ஆகியன அந்தக் காலத்தில் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. போலந்து ஜெர்மனிக்குள் இருந்தது.

பிரான்ஸ் ஆப்பிரிக்காவில் பல காலனிகளை வைத்திருந்தது. பிரித்தானியா ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனிகளை வைத்திருந்தது. பிரிட்டன், பிரான்சினால் காலனிப் படுத்தப்பட்ட நாடுகளும் (உதாரணம்: இந்தியா) விடுதலைக்காக அல்லது சுயநிர்ணயத்திற்காக அல்லது பிரிவதற்காக போராடிக் கொண்டிருந்தன. இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கவும். இது போன்று காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதைத் தான் லெனின் ஆதரித்து எழுதி இருக்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம், அன்டன் பாலசிங்கம் மேற்கோள் காட்டிய கூற்றில் உள்ள "சோஷலிஸ்ட்" என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளை அல்லது மார்க்சியவாதிகளை குறிப்பிடவில்லை. அது சமூக ஜனநாயகவாதிகளை குறிப்பிடுகிறது. உதாரணமாக பிரிட்டனில் தொழிற் கட்சி, பிரான்சில் சோஷலிஸ்ட் கட்சி, ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி. இவற்றைத் தான் லெனின் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

அன்று லெனின் "பேரினவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இப்போதும் பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவை முற்றுமுழுதாக முதலாளிகளை ஆதரிக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. வழமையான முதலாளித்துவக் கட்சிகள். அவை எதுவும் இன்று மார்க்சியம் பேசுவதுமில்லை.

பாலசிங்கம் குறிப்பிடும் ஒடுக்கும் தேசங்களாக, உதாரணத்திற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஒடுக்கப்பட்ட தேசங்களாக போலந்து, ஸ்லோவேனியா, குரோவேசியா ஆகிய பல ஐரோப்பிய நாடுகள் இருந்தன. இவை அப்போது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்யங்களின் மாகாணங்கள். அவற்றின் விடுதலைக்கு ஜெர்மனி, ஆஸ்திரியாவை சேர்ந்த சோஷலிச அல்லது சமூக ஜனநாயக (Social Democratic) கட்சிகள் ஆதரிக்கவில்லை.

சோஷலிஸ்டுகள் அல்லது சமூக ஜனநாயகவாதிகள், முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன்/பிரிட்டிஷ்/ஆஸ்திரிய அரசுக்களை ஆதரித்தார்கள். அதைத்தான் "ஒடுக்கப்பட்ட தேசங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்தை ஆதரிக்காத சோஷலிஸ்டுகள் பேரினவாதிகள்" என்று லெனின் சாடினார். லெனின் எழுதியதை அன்டன் பாலசிங்கம் பிழையாக திரித்துள்ளார். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட புலி விசுவாசிகள் அரசியல் அறிவற்ற தற்குறிகள். அவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்பது அன்டன் பாலசிங்கத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

1915 ல் லெனின் எழுதிய மாதிரி, அன்று காலனிகளாக ஒடுக்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும், ஒடுக்கிய பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து விட்டன. இது நடந்தது 1947ல். அப்போது லெனின் உயிரோடு இல்லை. இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்து காலனிய தேசங்கள் சுதந்திரம் பெறப்போகின்றன என்ற விடயம், 1924 ம் ஆண்டு காலமான லெனினுக்கு எப்படித் தெரியும்? ஞானக் கண்ணால் பார்த்தாரா? அல்லது இறந்த பிறகு அவரது ஆவி எழுதியதா?

வரலாறு தெரியாத பாஸிஸ்ட்கள் தமிழ்தேசியம் பேசக் கூடாது. இப்படித் தான் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.