Sunday, May 02, 2010

அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் மூன்றாம் பகுதி)

பனிப்போரானது, மேற்கே முதலாளித்துவ முகாம், கிழக்கே சோஷலிச முகாம் என்று ஐரோப்பாவை இரண்டாகப் பிரித்து விட்டிருந்தது. இரண்டுக்கும் நடுவே இரும்புத்திரை இருப்பதாக சொல்லப்பட்டது. மேற்கு ஐரோப்பா தன்னை "சுதந்திர ஜனநாயக நாடுகள்" என்று அழைத்துக் கொண்டது. அதற்கு மாறாக கிழக்கு ஐரோப்பாவில், அதாவது இரும்புத்திரைக்கு அப்பால், கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் மக்கள் அடிமைகளாக வாழ்வதாக பிரச்சாரம் செய்தது. அதை அப்படியே தானும் நம்பியது. நீண்ட காலமாக ஒன்றோடொன்று வர்த்தக, கலாச்சார தொடர்பு வைத்திருந்த ஐரோப்பிய நாடுகள், சிந்தாந்த ரீதியாக இரண்டாக பிரிந்தன. காலப்போக்கில் எதிரெதிரான கோட்பாடுகளை கொண்ட நாடுகள், தமது அரசியலோடு ஒத்துப் போனவர்களுடன் மட்டுமே நட்பாக இருக்க விரும்பினர். ஐரோப்பிய மக்களை அரசியல் இரண்டாகப் பிரித்தது.

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் தொண்ணூறு வீதமான மேற்கு ஐரோப்பிய மக்களை நம்ப வைப்பதில் வெற்றி கண்டுள்ளது. அதற்கு காரணம்: அனைத்து தொழில்களுக்கும் அதிக சம்பளம், வேலையற்றவர்களுக்கு உபகாரச் சம்பளம், உயர்தர வாழ்க்கை வசதி, வருடத்தில் ஒரு மாதம் விடுமுறையில் வெளிநாடுகளிலும் உல்லாசமாகப் பொழுது போக்க வசதி.... இன்னபிறவற்றை தாராளமாக வழங்கியது. இந்த வசதிகள் யாவும் மேற்குலக மக்களை அரசின் பின்னால் அணி திரள வைத்தது. மறுபக்கத்தில் இந்த வசதிகள் ஓரளவிற்கேனும் சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கும் கிடைத்து வந்தன. ஆனால் அது பற்றி மேற்குலக மக்களுக்கு எதுவுமே தெரியாது. தமது அரசுகள் சோஷலிசத்தை "நலன்புரி அரசு" என்ற மாற்றுப் பெயருடன் நடைமுறைப் படுத்துவதைக் கூட அவர்கள் அறியவில்லை.

அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை வசதி என்னும் போது, அதற்கென செலவும் இருக்குமல்லவா? அந்த செலவை எப்படி ஈடுகட்டினார்கள்? உதாரணத்திற்கு தொழிலாளியின் சம்பளம் அதிகரித்தால், உற்பத்திப் பொருளின் விளையும் அதிகரிக்குமல்லவா? அதனை யார் வாங்குவார்கள்? ஆமாம், வசதியான வாழ்க்கை சாதாரண தொழிலாளிக்கும் கிடைக்கச் செய்ய வேண்டி இருந்தது. ஆலைத் தொழிலாளியின் சம்பளம் பல மடங்கு அதிகரித்தது. இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பொருளின் விலையும் ஏறியது. இவையனைத்தும் அரசு வழங்கிய மானியத்தால் சாத்தியமானது. அரசுக்கு அமெரிக்கா கடன் கொடுத்தது. அமெரிக்கா கடனை நீண்ட கால தவணையில் திருப்பி செலுத்தலாம், என சலுகை செய்தது. மேலும் அதிக விலையுள்ள ஐரோப்பிய உற்பத்திப் பொருட்களை அமெரிக்காவே வாங்கியது. இதைவிட முன்னாள் காலனிய நாடுகளைச் சுரண்டி, தனது மக்களுக்கு கொடுத்த கதையை விரிவாக பிறிதொரு தருணத்தில் பார்ப்போம். ஏனெனில் அது மூன்றாம் உலக அகதிகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயம்.

சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு, மேற்குறிப்பிட்ட விஷயம் எதுவும் தெரியாது. தினசரி மேற்கில் இருந்து ஒலிபரப்படும் "சுதந்திர ஐரோப்பா வானொலி" மேற்குலகைப் பற்றிய வசீகரமான கதைகளை சொல்லிக் கொண்டிருந்தன. போலிஷ், செக், ஹங்கேரியன், ரஷ்யன் என்று அனைத்து கிழக்கு ஐரோப்பிய மொழிகளுக்கும் தனித்தனி சேவைகளை அந்த பிரச்சார வானொலி நடத்திக் கொண்டிருந்தது. இதைவிட "வாய்ஸ் ஒப் அமெரிக்கா" , பி.பி.சி. போன்ற "பொறுப்புள்ள" வானொலிகளும் கிழக்கு ஐரோப்பிய நேயர்களை குறிவைத்து ஒலிபரப்பிக் கொண்டிருந்தன.

"கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உணவுத்தட்டுப்பாடு, மேற்கு ஐரோப்பாவில் அளவுக்கு மிஞ்சிய உணவு கிடைக்கிறது." "கிழக்கில் வாய் திறந்து பேச முடியாதளவு அடக்குமுறை, மேற்கில் ஜனாதிபதியையே போக்கிரி என்று சொல்லுமளவிற்கு சுதந்திரம்." "கிழக்கில் வண்டி வாங்குவதென்றால் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும், மேற்கில் வருடத்திற்கு ஒரு வண்டி மாற்றுகிறார்கள்." "கிழக்கில் பணம் சேர்த்து வைத்திருக்க முடியாது, மேற்கில் வியாபாரம் செய்து ஒரு சில மாதங்களிலேயே லட்சாதிபதியாகிறார்கள்.".... இவையெல்லாம் வானொலிகளில் செய்யப்பட்ட பிரச்சாரங்களில் சில.

சோஷலிச நாடுகளில் அரசின் தடையையும் மீறி மக்கள் இந்த பிரச்சார வனொலிகளை செவிமடுத்தார்கள். அவற்றைக் கேட்டு விட்டு மேற்குலக சொர்க்கம் பற்றிய கனவுகளில் மூழ்கியிருந்தார்கள். 1956 ம் ஆண்டு ஹங்கேரியில் சோஷலிச அரசுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது. சோவியத் படைகளால் ஹங்கேரிய கிளர்ச்சி நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கில் ஹங்கேரியர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். கிளர்ச்சியில் பங்குபற்றியவர்கள், அவர்களது குடும்பங்கள் தவிர, பொருளாதாரக் காரணங்களுக்காக புலம்பெயர்ந்த எல்லோரையும் கம்யூனிச எதிர்ப்பு போராளிகளாக மேற்கு வரவேற்றது. முதலில் எல்லையில் இருக்கும் அயல்நாடான ஆஸ்திரியாவிற்கு தான் ஹங்கேரிய அகதிகள் சென்றார்கள். அங்கிருந்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் தம் பங்கிற்கு பெருமளவு அகதிகளை பெற்றுக் கொண்டனர்.

நெதர்லாந்து தன்னை மிகத்தீவிரமான கம்யூனிச எதிர்ப்பு நாடாக காட்டிக் கொண்டது. ஹங்கேரிய கிளர்ச்சி அடக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டவுடன், ஒழுங்குபடுத்தப்பட்ட நெதர்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உள்நாட்டு கம்யூனிஸ்டுகள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் அலுவலகங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. "உண்மை" என்ற கட்சிப்பத்திரிகை தீக்கிரையானது. ஹங்கேரிய அகதிகளை ஏற்றிவந்த ரயில்களை, அனுதாபம் கொண்ட மக்கள் திரள் குழுமி நின்று வரவேற்றனர். நெதர்லாந்து இராணி கூட தனது மாளிகையின் ஒரு பகுதியில், அகதிகளை தற்காலிகமாக தங்கவைத்தார். ஹங்கேரிய அகதிகள் எல்லோருக்கும் விரைவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. பல இளைஞர்கள் நெதர்லாந்து பெண்களை மணந்து கொண்டு உள்ளூர்வாசிகளாகி விட்டனர். இன்று ஹங்கேரிய சமூகம் உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. பிரான்ஸின் இன்றைய ஜனாதிபதி சார்கோசி ஒரு முன்னாள் ஹங்கேரிய அகதி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த முன்னாள் அகதி இந்நாள் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருவது ஒரு வரலாற்றின் முரண்நகை.

1968 ம் ஆண்டு, செக்கொஸ்லோவாக்கியாவில் கம்யூனிச எதிர்ப்பு கிளர்ச்சி வெடித்தது. அந்த வருடமும் மிகப்பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மேற்கு ஐரோப்பாவை நோக்கி படையெடுத்தனர். அவர்களையும் விசேஷமாக கவனித்து, காலப்போக்கில் தமது பிரசைகளாக்கி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 1961 ம் ஆண்டு பெர்லின் மதில் கட்டப்பட்ட போதும், அகதிகள் வரத்தொடங்கினார்கள். இது பற்றி விரிவாக பார்க்கப்பட வேண்டும். மேற்குலக சரித்திர ஆசிரியர்கள் இன்றும் பெரிதாக மதிக்கும் அகதிகள் இவர்கள். இரண்டாம் உலகப்போர் முடிந்து பத்து வருடங்களாகியும் பெர்லின் மாநகரத்தினுள்ளே சுதந்திரமான போக்குவரத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் சாதாரண மக்கள் மத்தியில் சோஷலிசம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? என்று பெரிதாக அக்கறை இருக்கவில்லை. யுத்தம் முடிந்தது. நாம் நிம்மதியாக வாழ்கிறோம் என்று மட்டுமே கருதினார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு பெர்லின் பகுதியை தன்னிடம் ஒப்படைக்கும் படி சோஷலிச கிழக்கு ஜெர்மனி கோரி வந்தது. அமெரிக்காவோ, பிரிட்டனோ கோரிக்கையை அலட்சியமாக புறக்கணித்ததுடன் மட்டும் நில்லாது, உளவாளிகளை கிழக்கு பெர்லினுள் அனுப்பி சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இதனால் கிழக்கு ஜெர்மனி, மேற்கு பெர்லினை சுற்றி மதில் கட்ட ஆரம்பித்தது. மேற்கு பெர்லின் மீது அழுத்தம் கொடுப்பதே அதன் காரணம். மதில் கட்ட தொடங்கிய உடனேயே மேற்கின் பிரச்சார இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்தது. மதிலுக்கு அப்பால் இருந்த மக்கள் வெளியேறும் படி தூண்டப்பட்டனர். அதனை படம்பிடித்து உலகத்திற்கு காட்டினர். மேற்கு ஜெர்மனியால் தூண்டுவிக்கப்பட்ட மக்கள் பலர், மேற்கை தரிசிக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வெளியேறினர். மதில் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே பலர் வெளியேறிக் கொண்டிருந்தனர். மதிலில் எல்லைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சிலரை சுட்டுக் கொன்றால், அதுவும் மேற்குலக நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகியது.

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

1 comment:

Anonymous said...

you are making BS stories. I lived in Poland for several months. Polish suffered alot. please do not make false statement in your blog
Thanks