Monday, September 24, 2012

சண்முகதாசனும், தமிழரின் சுய நிர்ணய உரிமையும் - சில குறிப்புகள்

எங்கள் ஊரில் எனது குடும்பம், ஒரு "தமிழ் தேசியக் குடும்பம்". தமிழ் தேசிய ஆதரவு என்பதை, முதலாளித்துவ ஆதரவு என்றும் வாசிக்க வேண்டும். அன்று எமது ஊரில் பல கட்சிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவர்களது அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தான் எப்போதும் ஓட்டுப் போடுவார்கள்.  எமது குடும்பம் மட்டுமல்ல, அயலில் வாழ்ந்த எமது உறவினர்களின் குடும்பங்களும் அப்படித் தான். இது ஒரு வகையில் அவர்களது  வர்க்க நிலைப்பாட்டையும் பிரதிபலித்தது. அவர்கள் தமது முதலாளித்துவ விசுவாசம் காரணமாக தமிழ் தேசியத்தை ஆதரித்தார்களா, அல்லது தமிழ் தேசிய உணர்வு காரணமாக முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா என்றெல்லாம் பகுத்தாராய்வது கடினமானது. கோழியில் இருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா, என்பது போல சிக்கலானது. 

நான் பருவமடையாத சிறுவனாக இருந்த காலங்களில், வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் அரசியல் பேசுவார்கள். அடிக்கடி எமது வீட்டில், அரசியல் ஆய்வுகள், கலந்துரையாடல்கள் நடக்கும். அடிக்கடி அவர்களது பேச்சில், கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் பெயர் அடிபடும். அன்று இலங்கை முழுவதுமிருந்த தேசியக் கட்சிகளை விமர்சிக்கும் பொழுது, சண்முகதாசன் என்ற பெயரையும் குறிப்பிடுவார்கள். தமிழர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்ட, தமிழ் வாக்காளர்களின் ஓட்டுகளை மட்டுமே நம்பியிருந்த, தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விடுவோம். அதைத் தவிர, அனைத்து தேசியக் கட்சிகளின் தலைவர்களாக சிங்களவர்களே இருந்தனர்/இருக்கின்றனர். விதிவிலக்காக சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சண்முகதாசன் என்ற ஒரு தமிழ் பெயர் அடிபடுவதை என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்களாக, அவர் "தமிழ்ப்பெயர் கொண்ட சிங்களவர்" என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ("சிங்கள-தமிழ் இனவாதிகள்" ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், இன்றைக்கும் பல சிங்களவர்களுக்கு தமிழ் பெயர்களும், பல ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பெயர்களும் உள்ளன. வீரவாகு, ஜெயக்கொடி போன்ற சிங்களப் பெயர்களை கொண்ட தமிழர்கள், எமது ஊரிலேயே இருந்தனர்.)

ஓரளவேனும் அரசியலை புரிந்து கொள்ளும் பக்கும் ஏற்பட்ட பின்னர் தான், சண்முகதாசன் ஒரு தமிழர் என்பது தெரிய வந்தது. இலங்கை முழுவதும் பிரதிநிதித்துவப் படுத்தும், சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி ஒன்றில், ஒரு தமிழர் தலைவராக இருந்தார் என்பதை, இன்றைக்கும் பலர் நம்புவார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த அதிசயம் நிஜத்தில் நிகழ்ந்திருந்தது. ஒரு வேளை, கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் தான் அது சாத்தியமானதா? பிற முதலாளித்துவக் கட்சியைப் போன்று, தமிழ் வாக்குகளை கவரும் தந்திரத்திற்காக, ஒரு தமிழரை தலைவராக்கியதாக கருத முடியாது. எமது ஊரிலேயே, சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு மிக மிகக் குறைவாக இருந்தது. வழக்கமாக தேர்தல் நடந்தால், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முதலிடமும், சுதந்திரக் கட்சி, ஐக்கிய  தேசியக் கட்சி போன்ற சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு  அடுத்தடுத்த இடங்களும் கிடைக்கும். கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகளுக்கு எமது தொகுதியில் வாக்குகள் குறையாகவே கிடைத்து வந்தது. இந்தளவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப் படுத்த விரும்பிய, ஏழை விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், எமது தொகுதியில் தாராளமாகவே இருந்தனர். சாதி  ஒடுக்குமுறையும், அதற்கெதிரான சாதிய விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது. எண்பதுகளில், நானே நேரடியாக கலந்து கொண்ட, எமது ஊரில் நடந்த போராட்டத்திற்கு, அறவழிப் போராட்டக் குழு என்ற என்.ஜி.ஒ. மட்டுமே வந்திருந்தது. அவர்களின் தயவில், சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அறிவிக்கப் பட்டது. 

தோழர் சண்முகதாசன் பற்றிய கட்டுரையில், மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தேவையற்றவையாக தோன்றலாம். தமிழ் தேசிய எழுச்சி அலைக்குப் பின்னர், இன்று ஒரு பாலர் பாடசாலை மாணவன் கூட, தோழர் சண்முகதாசன், அல்லது அவர் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் "தவறுகள்" குறித்து விமர்சிக்கும் நிலைமை காணப்படுகின்றது. பெரும்பாலானோர் அதனை மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்காமல், எதிர்ப்புரட்சி நடவடிக்கையாகவே செய்து வருகின்றனர். ஈழப் பிரச்சினையில், கம்யூனிஸ்டுகளின் தவறை விமர்சிக்கும் பலர், "தமிழ் தேசிய அரசியல் மட்டும் புனிதமானது" என்று வாதாடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.  அன்றைய ஈழத்து சமூகத்தை, வர்க்க நிலைப்பாட்டை ஆராயாமல், எழுந்தமானமாக கம்யூனிஸ்டுகள் மீது சேறள்ளிப் பூசுவது அபத்தமானது.  "குட்டி முதலாளிய வர்க்கப் பின்னணி கொண்ட, ஜே.வி.பி., புலிகள் போன்ற இயக்கங்கள் சாதித்துக் காட்டிய ஒன்றை, கம்யூனிஸ்டுகள் தவற விட்டிருந்தனர். இலங்கை முழுவதும், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆயுதப் போராட்டம் நடந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்." இவ்வாறு சில கம்யூனிஸ்ட் அனுதாபிகளே குற்றஞ் சாட்டுகின்றனர். ஆயுதப் போராட்டம், எப்போது, எப்படி நடத்தப் பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு சார்ந்த விடயம். ஆயுதப் போராட்டம் நடத்த சாதகமான சூழ்நிலை, பின்னைடைவுகள் இவற்றை எல்லாம் சரியாகக் கணிக்காமல், வீணாக உயிர்களை பலி கொடுக்க முடியாது. 

தோழர் சண்முகதாசன் இன்றைக்கும் சர்வதேச மட்டத்தில் போற்றப்படும் ஒரு தலைவராக இருக்கிறார். அவரது எழுத்துக்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, இன்றைக்கும் வாசிக்கப் படுகின்றன. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம், அல்லது மூன்றாம் அகிலம் பற்றிய வரலாற்றில், தோழர்  சன்முகதாசனுக்கும் முக்கிய இடம் உண்டு. இருபதாம் நூற்றாண்டு உலக சரித்திரத்தில், ஒரு தமிழனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றால், அது சண்முகதாசனின் பெயராக இருக்கும். செஞ்சீனா சென்று மாவோவை சந்தித்த முதலாவது தமிழரும் அவரே. அப்படிப்பட்ட தமிழரை நினைத்து தமிழ் தேசியவாதிகள் யாரும் பெருமைப் படுவதில்லை. அதற்குக் காரணம், சண்முகதாசன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது மட்டுமே. இதுவே ஒரு தமிழ்த் தலைவர், அமெரிக்கா சென்று கென்னடியை சந்தித்திருந்தால், அவரின் புகழ் இன்றைக்கும் பரப்பப் பட்டிருக்கும். (நேதாஜி ஹிட்லரை சந்தித்ததை நினைவுகூர்ந்து மகிழும் தமிழர்கள் பலரை நீங்களும் கண்டிருப்பீர்கள்.) 

இலங்கை வரலாற்றில், தமிழ்த் தேசியம், இரு மொழிக் கொள்கை போன்றவற்றை பற்றி முதன் முதலாக பேசத் தொடங்கியவர்கள் இடதுசாரிகள் தான். அப்போதெல்லாம், தமிழ் பூர்ஷுவாக் கட்சிகளுக்கு அந்த சிந்தனையே கிடையாது. தமிழ் பூர்ஷுவா வர்க்கம் கொழும்பு நகரில் உறுதியாக கால் பதித்து நின்ற காலத்தில், தமிழீழம் என்ற கோட்பாடு,  அவர்களின் இருப்பிற்கே உலை வைத்திருக்கும். பூதாகரமாக வளர்ந்து கொண்டிருந்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கம், பூர்வீகத் தமிழர்களை வட-கிழக்கு மாகாண எல்லைகளுக்குள் முடங்கப் பண்ணியது. அதற்குப் பிறகு தான், அதாவது சிங்கள பேரினவாதம் ஒதுக்கித் தந்த பிரதேசங்களை முன் வைத்து, தமிழீழக் கோரிக்கை பிறந்தது. அதே போல, மொழிப்பிரச்சினை தோன்றிய காலத்தில், தமிழ் பூர்ஷுவா வர்க்கம் "ஆங்கில மொழியின் உரிமை" பற்றி பேசிக் கொண்டிருந்தது. இடதுசாரிகள் மட்டுமே, சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் உத்தியோகபூர்வ மொழிகளாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.

தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய, இனவாரியான தரப்படுத்தல், தமிழீழ ஆயுதபோராட்டத்திற்கு வழிவகுத்தது. அதனால், இன ரீதியான தரப்படுத்தலே, இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்பது போன்று, இன்றைக்கும் தமிழ் மத்திய தர வர்க்கம் பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. உள்ளூர் முதலாளிகளும், அரச முதலாளிகளும் சேர்ந்து அரசமைத்த சிறிமாவோவின் அரசாங்கத்தில், கம்யூனிச, சோஷலிச கட்சிகளும் அங்கம் வகித்தன. அதனால், "இடதுசாரிகளும் பேரினவாதத்திற்கு துணை போனார்கள்" என்பது ஒரு பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு. அநேகமாக, கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தே, அனைத்து இடதுசாரிகளையும் ஓரங்கட்டும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் நடத்தப் படுகின்றன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ் தேசியக் கட்சிகளும், பேரினவாத அரசாங்கத்திற்கு துணை போயுள்ளன. அதே நேரம், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் போன்ற, மார்க்சிய லெனினிசத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட இயக்கங்கள், ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடத்தியுள்ளன. ஆகவே, "இடதுசாரிகள் எல்லோரும் பேரினவாத அரசை ஆதரித்தார்கள்"  என்பது போல நடத்தப் படும் பரப்புரை உள்நோக்கம் கொண்டது. கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரங்களில் பிரதானமானது.

தோழர் சண்முகதாசன் பற்றியும், உட்கட்சி ஜனநாயகம் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அதிலே தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் ஒன்று. தமிழரை ஒரு தேசிய இனமாக வரையறுத்து, சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட பிரிவினர், இப்பொழுதும் தனிக் கம்யூனிஸ்ட் கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இது பற்றிப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது, இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்று, தமிழ் பூர்ஷுவா வர்க்கம் முதன்மைப் படுத்தும், தரப்படுத்தல் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்வோம். 1971 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சியுடன் அந்தப் பிரச்சினை ஆரம்பமாகியது. சிங்கள இளைஞர்களின் எழுச்சியும், அதன் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும் பிற்காலத்திய தமிழீழப் போராட்டத்திற்கு வித்திட்டது. 

அதாவது, ஒரு நோயை குணப்படுத்துவதற்காக கொடுத்த மருந்து, பக்க விளைவாக இன்னொரு நோயை ஏற்படுத்தி உள்ளது. ஒரு முதலாளித்துவ அரசினால், சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப் பட்டு, பிரிந்து சென்ற ரோகன விஜேவீர தலைமையிலான குழுவினர் ஒரு கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்தி இருந்தனர் என்றால், அதற்கான சமூக அடித்தளம் அங்கே இருந்திருக்க வேண்டும். சிங்கள மொழியில் கல்வி கற்று, அதனால் வேலை வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்ட இளைஞர்கள், ஜேவிபியின் புரட்சிக்கான அறைகூவலுக்கு செவி மடுத்ததில் வியப்பில்லை. ஜேவிபி மார்க்சிய லெனினிசம் பேசினாலும், அது விவசாயிகள், தொழிலாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ஆனால், குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட, குறைந்தது பத்தாம் வகுப்பை பூர்த்தி செய்திருந்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. 

ஸ்ரீலங்கா அரசு, தனது இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக, சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. அதற்காக இரண்டு தீர்வுத் திட்டங்களை முன்மொழிந்தது. ஒன்று, பல்கலைக்கழக நுழைவுக்கான தேர்வில் இனவாரியான தரப்படுத்தல். போட்டி நிறைந்த முதலாளித்துவ உலகில், உயர் கல்வி வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப் பட்டிருக்கும். அரசு தரப்படுத்தல் மூலம், பெருமளவு சிங்கள இளைஞர்கள் உயர் கல்வி பெறவும், அதனால் தொழிற் சந்தையில் இலகுவாக நுழையவும் வழியேற்படுத்திக் கொடுத்தது. சிங்கள குட்டி முதலாளித்துவ வர்க்கம், இதனை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. ஆனால் அரசு, சிறுபான்மை இனமான தமிழ் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை பகைத்துக் கொண்டது. அவர்களது எதிர்ப்புணர்வு வளர்ச்சி அடைந்து, தனிநாடு கோரும் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. 

எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பது போல, அரசு இரண்டாவது தீர்வுத் திட்டத்தை கொண்டு வந்தது. பாதுகாப்புப் படைகளில் பெருமளவு சிங்கள வாலிபர்களை சேர்க்கத் தொடங்கியது. இதனால் இராணுவம் சிங்கள மயமாகியது. சிங்கள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது ஒரு நோக்கமாக இருந்தாலும், வருங்கால கிளர்ச்சியை நசுக்குவதற்கான முன்னேற்பாடாகவும் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. மறு பக்கத்தில், தேசிய இனப்பிரச்சினை வளர்ச்சியடைந்த காலத்தில், சிங்கள இராணுவத்தை கொண்டு தமிழர்களை ஒடுக்குவது இலகுவாக இருந்தது. இந்தக் கட்டத்தில், சன்முகதாசனோ, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியோ எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்? தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்க வேண்டுமா? அல்லது இலங்கை முழுவதற்குமான வர்க்கப் போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டுமா?

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் தேசியவாத போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லை. அப்படியே நடத்தி இருந்தாலும், தமிழ் தேசியத்திற்குப் பின்னால் அணிதிரண்ட அளவிற்கு மக்கள் வந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிய விடுதலைப் போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு காரணமாக, உயர்சாதியை சேர்ந்த பலர் அந்தக் கட்சி மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். குறிப்பிட்டளவு ஏழை விவசாயிகள் ஆதரித்த போதிலும், "ஆண்ட பரம்பரை நாம்"  என்ற இனப் பெருமிதம், அவர்களை தமிழ் தேசியக் கட்சிகளின் பின்னால் அணி சேர்த்தது. இலங்கையில், பெரும்பான்மையான தமிழர்கள் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அந்தப் பிரதேசத்தில், உயர் சாதியான வெள்ளாளர்கள், 40% - 50% பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். அப்படியான சமுதாயத்தில், அவர்களின் சாதிய, வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி அல்லது இயக்கம் பிரபல்யம் அடைவதில் வியப்பில்லை. தமிழ் சமூகம் பற்றி குறைந்த பட்ச ஆய்வு எதையும் செய்யாமல், "தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிகள் எதையும் செய்து கிழிக்கவில்லை"  என்று வெற்றுக் கூச்சல் போடுவதால் பயனேதும் இல்லை.  

தோழர் சண்முகதாசன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த காலத்தில், அவர் தமிழரை ஒரு தனியான தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் சுய நிர்ணய உரிமை, அவரைப் பொறுத்த வரையில் ஒரு பேசுபொருளாக இருக்கவில்லை. (பிற்காலத்தில், காலவோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.) இதனை சண்முகதாசன் என்ற தனி மனிதனின் குறைபாடாக கருதலாமே தவிர, கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது. ஏனெனில், தமிழரை தேசிய இனமாக வரையறுத்து, சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட தமிழ் உறுப்பினர்கள், கட்சியில் இருந்து பிரிந்து சென்றார்கள். அதுவும் 1978 ம் ஆண்டே அந்தப் பிளவு ஏற்பட்டது. ஆரம்பத்தில், சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி-இடது என்ற பெயரில் இயங்கி, பின்னர் புதிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது. தற்பொழுது புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி என்று இயங்கி வருகின்றது. அந்தக் கட்சியில் முழுக்க முழுக்க தமிழர்களே உறுப்பினர்களாக இருப்பது மட்டுமல்ல, தமிழ் பிரதேசங்களில் மட்டுமே செயற்பாடுகளை கொண்டுள்ளது. 

ஒரு நாட்டில்  இனப்பிரச்சினை கூர்மையடையும் பொழுது, முற்போக்காளர்களும், புத்திஜீவிகளும் கூட பிரிந்து செல்கின்றனர். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இதிலே வேடிக்கை என்னவென்றால், சண்முகதாசன் என்ற தமிழரை தலைவராக ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவு, இன்று சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று, சிங்கள உறுப்பினர்களை மட்டுமே கொண்ட, சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி, தமிழரின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் அமைப்பாகாமல் உதிரிகளாக இருக்கும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர், அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.   

சண்முகதாசன் இறுதிக் காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து எழுதியதாகவும், ஒரு கட்டத்தில் புலிகளின் பங்களிப்பை கூட பாராட்டியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  தோழர் சண் அவர்களின் எழுத்துக்களில் இருந்து, சில மேற்கோள்களை எடுத்துக் காட்டலாம். தேசிய இனப்பிரச்சினை, ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் பூர்ஷுவாக்களின் முரண்பாடாக உருவான போதிலும், இன்று அது அனைத்துப் பிரஜைகளையும் பாதிக்கின்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர், பிரதேச வாரியாக பிரிந்திருந்த தமிழர்களை, தமிழ் தேசியம் ஒன்று சேர்த்திருப்பதை மறுக்க முடியாது. மலையக, கொழும்புத் தமிழர்களை புலிகள் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. (அதாவது அவர்களது வாழ்விடம் தமிழீழத்திற்குள் அடங்கவில்லை.) இருந்தாலும், அந்த மக்கள் புலிகளையும், தமிழ் தேசிய ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றனர். (வன்னியில் வாழும் மலையகத் தமிழர்கள் புலி உறுப்பினர்களாக இருந்துள்ளமை வேறு விடயம். அவர்களை வன்னி மக்களாக கருதப்பட வேண்டும்.)

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு, அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டதும், சொத்தழிவு ஏற்பட்டதும் 1983 கலவரத்தின் போது தான். 83 கலவரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக, தமிழ் தேசியப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. சிங்கள பேரினவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்த, கேள்விப்பட்ட மக்கள், ஈழத்தை ஆதரித்ததில் வியப்பில்லை. எனது அரசியல் வாழ்வு கூட, தமிழ் தேசியத்துடன் தான் ஆரம்பித்தது. கொழும்பு நகரில், 83 கலவரத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடத்தில் தான் எமது வீடும் இருந்தது. தோழர் சன்முகதாசனும், 83 கலவரத்தை நேரில் பார்த்திருந்ததால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நிபந்தனையுடன் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்திருந்தார்.

குறிப்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு தான், தோழர் சண்முகதாசன் தேசியவாதப் புலிகளை ஆதரித்து எழுதியுள்ளார். அதனை மேற்கோள் காட்டும் தமிழ் தேசியவாதிகள் சிலர், சண்முகதாசன் நிபந்தனையின்றி புலிகளை ஆதரித்தது போல திரித்துக் கூறுகின்றனர். ரவி வைதீஸ்பரா எழுதிய ஆய்வுக் கட்டுரை, சண்முகதாசனின் தமிழ் தேசியம் பற்றிய நிலைப்பாட்டை விரிவாக ஆராய்ந்துள்ளது. (Sanmugathasan, the Unrepentant Left and the Ethnic Crisis in Sri Lanka,  by Ravi Vaitheespara)  அந்தக் கட்டுரையாளரும், சண்முகதாசனின் மன மாற்றத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றார். நான் முன்னர் குறிப்பிட்ட படி, "தமிழர் ஒரு தேசிய இனம், சுய நிர்ணய உரிமை" போன்றவற்றில் சண்முகதாசனின் நிலைப்பாடு மாறியிருக்கின்றதா என்பதே முக்கியமானது. 

இன்றைக்கும் பல சர்வதேச நாடுகளின் இடதுசாரிக் கட்சிகள், புலிகளை ஆதரிக்கின்றன. அதற்காக, புலிகள் செயல்களை எல்லாம் நிபந்தனை இன்றி ஆதரித்தார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. தோழர் சன்முகதாசனும், அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து தான் எழுதியுள்ளார். இலங்கைப் பிரச்சினைகளில் இந்தியா தலையிடுவதையும், மேலாண்மை செலுத்துவதையும், அவர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வந்ததுடன், அதற்கு ஆதரவாக நடந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  "இலங்கையின் திரிபுவாதிகள் போன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது மட்டுமல்ல, அதனை கடுமையாக அமுல்படுத்தக் கோருகின்றன. சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த தமிழ் மக்களின் நெருக்கடி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட அட்டூழியத்தை கண்டிக்கவுமில்லை." (இலங்கைப் பிரச்சினையும், இந்திய கம்யூனிஸ்டுகளும், பக்கம் 5 -6 )  

இந்திய இராணுவத்திற்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டம் நடத்தியதை, தோழர் சண்முகதாசன் வரவேற்றுள்ளார். அதே நேரம், ஈபிஆர்எல்எப், ஈஎன்டீஎல்எப் போன்ற இயக்கங்கள் இந்திய இராணுவத்தின் கூலிப்படையாக செயற்படுவதை கடுமையாக சாடி உள்ளார். சண்முகதாசன், "இடதுசாரி ஈபிஆர்எல்எப்" பினை நிராகரித்து, "தேசியவாத புலிகளை" தெரிவு செய்ததை, ஒரு ஆச்சரியத்திற்குரிய விடயமாகப் பார்க்கின்றனர். (புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளும் அதனை மேற்கோள் காட்டுகின்றனர்.) ஈபிஆர்எல்எப் போன்ற, சில "இடதுசாரி" ஈழ விடுதலை இயக்கங்கள், மார்க்சியத்தை உதட்டளவில் பேசிக் கொண்டிருந்த குறுந்தேசியவாத இயக்கங்கள் என்பதை, தோழர் சண்முகதாசன் சரியாகக் கணித்து வைத்திருந்தார். (ஈஎன்டீஎல்எப்  க்கும் இடதுசாரியத்திற்கும் சம்பந்தமே கிடையாது.)

ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் தயவில் தங்கி இருந்த இயக்கங்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக மாறியதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. "நீங்கள் யார் கொடுத்த ரொட்டியை சாப்பிடுகிறீர்களோ, அவர்களது வார்த்தைகளை பேசுவீர்கள்"  என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி. ஆகவே, "இடதுசாரி ஈழ விடுதலை இயக்கங்கள்", மார்க்ஸியம் பேசுவதாலேயே அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேதைமை. அதே நேரம், புலிகள் தேசியவாதம் பேசினாலும், இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடும் பொழுது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றனர். இந்தியாவின் வல்லாதிக்கத்தை எதிர்ப்பதும், புலிகளின் போராட்டத்தை ஆதரிப்பதும், இரண்டும் ஒன்று தான். யாழ்ப்பாணத்தில் சாட்டர்டே ரிவியூ என்ற ஆங்கில வார இதழை நடத்திக் கொண்டிருந்த, சிங்கள இடதுசாரி பத்திரிகையாளர் காமினி நவரட்ன கூட, புலிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து எழுதி வந்தார். உலகம் முழுவதும், கம்யூனிச கட்சிகள் இஸ்லாமியவாத ஹமாசின் போராட்டத்தை ஆதரிக்கின்றன. அதற்காக, கம்யூனிசக் கட்சிகள் இஸ்லாமியவாதத்தை அங்கீகரித்து விட்டன என்று வாதிட முடியாது. 

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய இயக்கங்கள், முழுமையான விடுதலை இயக்கங்களாக மாற வேண்டுமென்ற அவாவை, தோழர் சண்முகதாசன் வெளிப்படுத்தி உள்ளார். "விடுதலை இயக்கங்கள்  ஆயுதம் தூக்கிய பின்னர் தான், மார்க்சியத்தை தேடிக் கற்றுக் கொண்டன." என்று தனது விமர்சனத்தை தொடங்குகிறார். "இந்தியாவின் உதவியில் தங்கியிருந்து போராடத் தொடங்குவது, இறுதியில் விடுதலை இயக்கங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இந்தியா இலங்கையை சீரழித்து, அங்கு தனது மேலாண்மையை நிறுவத் துடிக்கின்றது." என்று தோழர் சண்முகதாசன் தீர்க்கதரிசனத்துடன் கூறிய வார்த்தைகளை, காலம் சரியென மெய்ப்பித்தது.

ஈழ விடுதலை இயக்கங்களின் தந்திரோபாய தவறுகள் குறித்து, சண்முகதாசன் தெரிவித்த கருத்துக்கள் : "ஆரம்பத்தில் இருந்தே ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள்  தந்திரோபாய தவறுகளை விட்டனர். முதலில் அவர்கள் ஐக்கியப் பட்டிருக்கவில்லை. ஐந்து பிரதானமான குழுக்கள் முளைத்ததுடன், அவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இவர்களுக்கு இடையிலான ஐக்கியமின்மை காரணமாக, இந்தியப் புலனாய்வுத் துறை (RAW ) அவர்கள் மீது செல்வாக்கு செலுத்த முடிந்தது. ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தி, எல்லாக் குழுக்களையும் பலவீனப் படுத்த முடிந்தது. இரண்டாவதாக, மக்கள் யுத்தம் எவ்வாறு நடத்தப் பட வேணுமென்று மாவோ போதித்த பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களையும் மக்கள் யுத்தத்தில் பங்கு பெற வைக்கவில்லை. ஒரு சிலர் வாயளவில் மார்க்சிய சுலோகங்களை உச்சரித்த போதிலும், போராளிகளின் அரசியல் அறிவு மிகவும் தாழ்வாக இருந்தது. துப்பாக்கி கட்சியை வழிநடாத்த அனுமதிக்கக் கூடாது. கட்சி எப்போதும் துப்பாக்கியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மாவோவின் கூற்றை எதிர்மாறாக செயற்படுத்தினார்கள்." (N Sanmugathasan, ‘Get the Indian Troops Out of India! Recognise the Right of Self Determination of the Tamil People’, unpublished essay, pp 4-6.)

உழைக்கும் மக்களை சுரண்டும் போரானது, இறுதியில் சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களின் இணைவுக்கு வழிவகுக்கும் என்று தோழர் சண்முகதாசன் எதிர்வு கூறுகின்றார். ஏனென்றால், "கோடிக் கணக்கான பணத்தை வாரியிறைத்து, மக்களுக்கு எதிராக நடத்தப் படும் போருக்கான செலவு, ஜேஆரின், அல்லது லலித் அத்துலத்முதலியின் பாக்கெட்டில் இருந்து செலவிடப் படவில்லை. சிங்கள, தமிழ் உழைக்கும் மக்கள், போருக்கான விலையை செலுத்துகிறார்கள். இன்றுள்ள நவ-காலனிய ஆளும் கட்சிகளினால் ஒரு தீர்வைக் கொண்டு வர முடியாது. சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர்ப்பதன் மூலமே, இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை, சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டால், தனி நாடு பிரிவதற்கான தேவை இல்லாமல் போகும்."  சுய நிர்ணய உரிமைக்கான அங்கீகாரம், ஜனநாயகப் புரட்சியின் ஓரங்கமாக இருக்க வேண்டும். அதற்காக சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களையும், புத்திஜீவிகளையும் வென்றெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார். 

இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசிய லெனின், ஸ்டாலின் ஆகிய மார்க்சிய ஆசான்கள் கூட, பாட்டாளிவர்க்க தலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்தி வந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக, உலகம் முழுவதும் மீண்டும் இடதுசாரி அலை வீசுவதால், தமிழ் மக்கள் மத்தியிலும் மார்க்ஸியம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது. இந்த தருணத்தில், தமிழ் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள், மார்க்சியத்தை தமது வர்க்க நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நவ காலனிய ஆளும் கட்சிகளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று, தோழர் சண் கூறினார். அதே போல, சிங்கள-தமிழ் பூர்ஷுவாக்களும்  பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை என்பதை, நாம் கடந்த கால அனுபவங்களின் ஊடாக கண்டுள்ளோம். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, ஈழத் தமிழ் உழைக்கும் வர்க்கம் தலைமை தாங்கி நடத்த வேண்டும். அப்பொழுது, சிங்கள உழைக்கும் வர்க்கமும் அவர்களின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 


(இந்தக் கட்டுரை எழுதத் தூண்டிய தோழர் பாலனுக்கும், தேவைப்பட்ட தகவல்களை தந்துதவிய தோழர் செந்தில்வேலுக்கும் எனது நன்றிகள்.)

Wednesday, September 19, 2012

சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(மூன்றாம் பாகம்)

அப்பாவி  சிங்களவர்களுக்கு அடித்ததை நியாயப் படுத்தி, அதை நினைத்து பெருமைப் படுபவர்கள், உண்மையில் தாங்கள்  பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும், தமிழ் மக்களை  தனிமைப் படுத்துகின்றனர் என்பதை உணர்வதில்லை. இந்த அறியாமையை எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும் எமது தவறுகளை, எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அபாயகரமானது. ஏற்கனவே, நாங்கள்  இதனை ஈழத்தில் பார்த்து விட்டோம். 

புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில்  கொல்லப் பட்ட சிங்கள மக்கள் பற்றி, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து தான், சிறிலங்கா அரசு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை திரட்டியது. சர்வதேச சமூகத்திற்கும் அதனை முதன்மைப் படுத்தி  பிரச்சாரம் செய்ததன்  மூலம், புலிகள் இயக்கத்தை  பயங்கரவாத இயக்கங்களில் பட்டியலில் சேர்க்க வழி வகுத்தது. புலிகளும், தமிழர்களும் எத்தனை வகையான நியாயமான காரணங்களை அடுக்கிய போதிலும், சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சிங்கள பொது மக்கள் கொலை செய்யப்பட்ட தாக்குதல்களுக்கு, புலிகள் உரிமை கோரவில்லை. ஆனால், சர்வதேச சமூகம் அதை  நம்பத் தயாராக இருக்கவில்லை. மறுபக்கத்தில், புலி ஆதரவு தமிழ் ஊடகங்களில், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் படுவதையும், சர்வதேச சமூகம் அவதானித்து வந்தது.  இருப்பினும், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் தமது போக்கை மாற்றிக் கொண்டால், மன்னித்து விட தயாராக இருந்தன. அதாவது, சிங்களப் பொது மக்கள் தாக்கப் பட மாட்டார்கள் என்று உறுதிமொழி கொடுத்திருந்தால், புலிகளின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டிருக்கும். (E.U. may decide to list LTTE as ‘terrorist’ by Friday, May 17th, 2006,        http://transcurrents.com/tamiliana/archives/169)  

சர்வதேச சமூகத்திற்கு புலிகள் எந்த உறுதிமொழியையும் கொடுக்காத சந்தர்ப்பத்தை, சிறிலங்கா அரசு சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது.  தமிழகத்து தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான சதிவலையும், அவ்வாறே பின்னப் படுகின்றது. தமிழினவாதிகளின் சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை சரியென்று, நியாயப் படுத்தி பேசுகிறவர்கள் யார்? தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆதரிக்கலாம். ஈழத்திலும் ஒரு சிறு தொகையினர் ஆதரிக்கலாம். சிங்களவர்களை விட்டு விடுவோம். இந்தியாவில் பிற மாநில மக்கள் ஆதரிப்பார்களா? பிற நாடுகளின் மக்கள் ஆதரிப்பார்களா? ஆக மொத்தம், குறிப்பிட்டளவு தமிழினவாத ஆதரவாளர்களைத் தவிர, வேறெங்கும் அனுதாபத்தை பெற முடியாத தாக்குதல்கள், இறுதியில் சிங்கள அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே உதவப் போகின்றது. பூண்டி மாதா கோயிலில் சிங்கள யாத்திரீகர்கள் விரட்டப்பட்ட செய்தியானது, வட இந்தியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது, வாஷிங்டன் போஸ்ட்டில் கூட பிரசுரமானது.  ஆனால், எந்தவொரு அந்நிய ஊடகமும், அந்தச் செயலை நியாயப் படுத்தி எழுதவில்லை. (Sri Lankan Tamils protest attack on pilgrims in southern Indian state of Tamil Nadu,  http://www.washingtonpost.com/world/asia_pacific/sri-lankan-tamils-protest-attack-on-pilgrims-in-southern-indian-state-of-tamil-nadu/2012/09/06/27208a8a-f813-11e1-a93b-7185e3f88849_story.html)  


"மூன்றில் இரண்டு பங்கு சிங்களவர்கள் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டுள்ளதால், சிங்கள மக்களை தாக்குவதில் தப்பில்லை," என்பது தமிழினவாதிகளின் வாதம். இவர்களது இலங்கை அரசியல் பற்றிய சிறுபிள்ளைத் தனமான அறிவு நகைப்பிற்கிடமானது. ராஜபக்சவுக்கு தமிழ்ப் பிரதேசங்களிலும் ஓட்டுக்கள் போடப் பட்டன.  அதே நேரம், சில சிங்கள மாவட்டங்களில், ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகள் கிடைத்துள்ளன.  ஜனாதிபதித் தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்கா விட்டால், இன்று  ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் ஜனாதிபதியாகி இருப்பார். இன்றைய தமிழினவாதிகள் கூறும் நியாயம், இனக்கலவரங்களின் போது   தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை கொல்வதற்கு,  சிங்கள இனவாதிகள் கூறிய  நியாயத்தை ஒத்திருக்கிறது. வட -கிழக்கு தமிழர்கள், தமிழீழம் கோரும் கூட்டணிக்கு வாக்களித்ததை சுட்டிக் காட்டி, தென்னிலங்கை வாழ் தமிழர்களை அடித்து விரட்டினார்கள்.  குறிப்பாக 1977 ம்  ஆண்டு  கலவரம் வெடிப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. அன்று கூட்டணிக் கட்சி, தமிழீழப் பிரகடனத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டிருந்தது.

பலவீனமான இலக்குகளான, இஸ்ரேலிய பொது மக்களை தற்கொலைக் குண்டு வைத்து தாக்கும் பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ் என்ன கூறுகின்றது? "பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலிய அரசு, ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தான் தெரிவு செய்யப் பட்டது. இதன் மூலம், இஸ்ரேலிய மக்களும் அரசின் குற்றத்தில் பங்குபெறுகின்றனர். ஆகையினால், இஸ்ரேலிய மக்களைக் கொல்வதும்   நியாயமானது தான்."  அமெரிக்கர்கள் மேலான தாக்குதல்களுக்கு,  அல் கைதா கூறும் நியாயமும் அது தான். அதாவது, "அமெரிக்க அரசை மக்கள் ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்கின்றனர். ஆகையினால், அரசின் செயல்களில் அவர்களுக்கும் பங்குண்டு." ஜனநாயகத் தேர்தல் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதும், ஓட்டுப் போடும் மக்களிடம் அதிகாரம் இல்லை என்பதும் இனவாதிகளுக்கு புரிவதில்லை.  அதற்காக, இஸ்ரேல், அமெரிக்கா, சிறிலங்கா அரசுகள் செய்தது எல்லாம் நியாயம் என்று அர்த்தப் படுத்த முடியாது. இந்த மூன்று அரசுகளும் இனப்படுகொலை செய்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. இந்த மூன்று நாடுகளிலும், ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் அடிப்படை  ஒற்றுமை ஒன்றுண்டு.   மூன்றுமே மேற்கத்திய நலன் சார்ந்த நாடுகள். சந்தைப் பொருளாதாரத்தை கை விடாத நாடுகள். ஜனநாயக தேர்தல் விளையாட்டை, நன்றாக  ஆடத் தெரிந்த நாடுகள். சிங்களவர்கள் எல்லோரும், தமிழர்களை அழிக்கும் நோக்குடன் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டதாக நினைப்பது, எமது அறியாமையைத் தான் காட்டுகின்றது. இனவாதம் மட்டுமே தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருந்தால், பெரும்பான்மை மக்கள் ஜாதிக  ஹெல உறுமய (JHU)  கட்சிக்கு தான் வாக்களித்திருக்க வேண்டும். இனப் பற்றை விட, நாட்டில்  வேறு பிரச்சினைகளும் மக்களுக்கு  இருக்கின்றன என்பதை, இனவாதிகள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் உழைக்கும் வர்க்கம், அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேரம்,  தமிழினவாதிகள் யாரும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். சிங்கள இனவாதிகளும் அவ்வாறு தான், சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதில்லை. 

முப்பது வருடங்களாக, இலங்கை அரசு, தேசப் பாதுகாப்பை காரணமாக காட்டி சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. போர் நடந்த காலத்தில், அத்தியாவசிய பாவனைப் பொருட்களின்  வரி உயர்த்தப் பட்டாலும், யாரும் முணுமுணுக்கவில்லை. போர் முடிந்த பின்னர், சிங்கள மக்களின் கவனம் திசை திரும்புகின்றது. மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதுகின்றனர். எரிபொருள் விலையேற்றம், கல்வியை தனியார்மயமாக்கல், போன்றவற்றுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர். இதனால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு ஆதரவு குறைந்து வருகின்றது. முன்னரைப் போல, "புலி வரும்" என்று பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது. அதனால், அரசு போராடும் மக்களை அடக்குவதற்காக, பொலிஸ் அடக்குமுறைக் கருவியை ஏவி விடுகின்றது. சிங்கள மக்களுக்கும், சிங்கள காவல் துறைக்கும் இடையில் மோதல்கள் வெடிக்கின்றன. ராஜபக்சவின் சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, சாதாரண சிங்கள மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்குகின்றனர். அரபு நாடுகளில் நடந்ததைப் போல, மக்கள் எழுச்சி ஏற்படுமோ என்று அரசே அஞ்சுகின்றது.

இப்படியான நெருக்கடியான தருணத்தில், ராஜபக்சவை தூக்கி நிறுத்துவது யார் என்று நினைக்கிறீர்கள்? உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள்) ராஜபக்சவின் கூட்டாளிகளான தமிழகத் தமிழினவாதிகள், சந்தர்ப்பம் பார்த்து, அப்பாவி சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இந்த செய்தி சிங்கள தேசமெங்கும் பரவும். ஒட்டு மொத்த தமிழர்களும், ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மீது வன்மம் கொண்டிருப்பதாக, சாதாரண சிங்கள மக்கள் நம்புவார்கள். போதாக்குறைக்கு, தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் புலிகளே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக அரசு அறிவிக்கும். இதனால், சிங்கள மக்கள் தமது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக ராஜபக்சவை ஆதரிப்பார்கள். ராஜபக்சவுக்கு ஆதரவு தேடிக் கொடுப்பது தான் தமது நோக்கம் என்றால், தமிழினவாதிகள் அதனை வெளிப்படையாக கூற வேண்டும்.

ஒரு பேச்சுக்கு, ராஜபக்சவுக்கும், தமிழினவாதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று வைத்துக் கொள்வோம். சிங்கள மக்கள் ராஜபக்ச அரசை எதிர்த்து போராடும் நேரத்தில் எல்லாம், தமிழ்நாட்டில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் படுகின்றனர். அது எப்படி? ஒரு தடவை நடந்தால் தற்செயல். இரண்டு, மூன்று தடவை நடந்தால் திட்டமிட்ட செயல். இலங்கையின் இன்றைய நிலவரம் என்னவென்று, இந்த தமிழின வாதிகளுக்கு தெரியுமா? சிங்கள அறிவுஜீவிகள், சிங்கள மக்களின் எழுச்சி ஏற்பட்டு, எந்த நேரமும் அரசாங்கம் கவிழலாம் என்று,  ராஜபக்ச அரசு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. (The strike of university academics is an indirect plot to engineer a regime change. It is similar to what happened in Indonesia where the Suharto’s government was ousted, State Intelligence Service reports said. http://www.dailynews.lk/2012/09/17/news02.asp) 

2011, ஜனவரி முதல் மே மாதம் வரையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றும் சிங்களத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு தொழிலாளி கொல்லப் பட்டார். இதனால், சிங்கள உழைக்கும் மக்கள் ராஜபக்ச அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர். 2011 ஜூலை மாதம், சிங்கள ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள்.   அதே நேரம், தமிழ்நாட்டில் என்ன நடந்தது? 2011, ஜனவரி, சென்னை மகாபோதி தாக்கி உடைக்கப் பட்டது. அங்கிருந்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். 2011, ஆகஸ்ட் மாதம், சென்னையில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர்.  இந்த வருடமும், ஒரே மாதிரியான நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது.  ஸ்ரீ லங்காவில், அரசு கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக,   மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  ஆசிரியர் , மாணவர் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியான தருணத்தில், ராஜபக்ச அரசு கவிழ விடாது  தூக்கி நிறுத்துவது, சீமான், வைகோ போன்ற தமிழக நண்பர்களின் கடமை அல்லவா? 2012, செப்டம்பர்  முதல் வாரம்,  தமிழ்நாட்டில் பூண்டி மாதாவை தரிசிக்க சென்ற சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர். இந்த தாக்குதல் நடந்து, ஓரிரு தினங்களில், மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை திறப்பதாக அரசு அறிவித்தது. 

The Sunday Times பத்திரிகையில் நகைச்சுவையாக எழுதப்பட்ட பத்தி ஒன்றிலிருந்து:
Do you know who else you are helping, Jayalalithaa? Now, don’t be surprised about this but the other person you are helping by indulging in your anti-Sri Lanka antics is of course Mahinda maama himself!
What you don’t realise is that Mahinda maama has found it hard to sail the ship of state smoothly in recent months. Students are protesting about exams, workers are protesting about salaries, motorists are protesting about fuel, and everyone else is protesting about power cuts. 
(Mahinda Jai Ho, Jaya hoo-hoohttp://www.sundaytimes.lk/120909/columns/mahinda-jai-ho-jaya-hoo-hoo-11678.html)

ராஜபக்சவுக்கும், சீமான், வைகோ போன்ற தமிழினவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை, இன்னமும் நம்ப மறுப்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கவும்.  தமிழ்நாடு வரும் "சிங்களவர்கள்", எப்போது வருகிறார்கள்? எந்த இடத்திற்கு வருகிறார்கள்?  இது போன்ற தகவல்களை யார் கொடுக்கிறார்கள்? உண்மையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான  சிங்களவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த தகவலைப் பெற, நீங்கள் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சென்னையில், திருச்சியில் உள்ள சுற்றுலா முகவர்கள், வர்த்தகர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பூண்டிமாதா தேவாலயத்திற்கு வழிபட சென்ற யாத்திரீகர்களில் பெரும்பான்மையானோர், நீர்கொழும்பை சேர்ந்த கிறிஸ்தவ தமிழர்கள். அவர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டில்  இருந்து சென்று குடியேறிவர்கள். சிலர் இப்போதும், தமிழ் நாட்டில் உள்ள உறவினருடன் தொடர்பு வைத்துள்ளனர்.  அவர்களைத் தான், அதாவது தமது தொப்புள்கொடி உறவுகளைத் தான், நமது தமிழினவாதிகள் வீராவேசமாக தாக்கி இருக்கிறார்கள். 

கிறிஸ்தவ யாத்திரீகர்கள் வருவதற்கு, சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர், 150 சிங்கள புத்த பிக்குகள், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். யாருக்காவது தெரியுமா? அந்த புத்த பிக்குகள், எந்த வித பிரச்சினையுமின்றி, சென்னையில் உள்ள மகாபோதி விகாரைக்கு சென்றனர். அவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வரையில், வழியில் ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை. இலங்கையில் புத்த பிக்குகளின், தமிழர்களுக்கு எதிரான இனவெறி உலகறிந்த விடயம் ஆயிற்றே. தமிழினக் காவலர்கள் யாரை தாக்கியிருக்க வேண்டுமோ, அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு, கிறிஸ்தவ-தமிழ்  யாத்திரீகர்களை தாக்கியதன்  உள்நோக்கத்தை  உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? 
After the ethnic Eelam war came to an end, the Trichy-Colombo sector was patronized by the Sinhala public more than ever. The entry of Christian pilgrims was only a recent phenomenon. For instance, just a week prior to the Christian pilgrims' attack, around 150 Buddhist monks landed in Trichy and proceeded to Chennai in three hired buses. Usually, these monks make it a point to visit the Sri Lanka Maha Bodhi Centre at Kenneth Lane opposite Egmore railway station before going to Buddhist shrines such as Gaya and Sarnath. These pilgrims prefer Trichy, for it offers them an opportunity to visit other pilgrim centres in the region such as Sri Rangam Sri Renganathar temple, Thanjavur Big Temple and Samayapuram Maha Mariamman temple. The immigration officer said these people would continue to visit India for there was no hurdle in the issuance of visas, but they would rather prefer Trivandrum rather than Trichy.
(Attack on Lankans proves costly for airlines, http://m.timesofindia.com/city/madurai/Attack-on-Lankans-proves-costly-for-airlines/articleshow/16377060.cms)
எதிர்கால பொருளாதார திட்டங்களை அமுல் படுத்தவும், ராஜபக்ச அரசுக்கு தமிழினவாத கூட்டாளிகளின் உதவி தேவைப் படுகின்றது. இலங்கையில் தற்பொழுது, சீனாவின் முதலீடுகள்  அதிகரித்து வருகின்றன. முன்னர் என்றுமில்லாதவாறு, சீன அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். அவர்கள் ஒன்றும் சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை. குறைந்தது பத்து பொருளாதார ஒப்பந்தங்களிலாவது கையெழுத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். 
(Chinese Defence Minister arrives in Sri Lanka, http://www.colombopage.com/archive_12A/Aug29_1346245150CH.php)
(Cherishing China!http://www.ft.lk/2012/09/12/cherishing-china/
இலங்கைப் பொருளாதாரத்தில் இதுவரை காலமும் நிலவி வந்த, இந்திய, சீன சமன்பாடு இதனால் மாறுபடலாம். இந்திய முதலீடுகள்  குறைந்து கொண்டே சென்றால், இந்தியாவின் பிடி தளர்ந்து கொண்டே போகும். அதனை இந்தியா ஒருக்காலும் விரும்பப் போவதில்லை. சீனாவின் முதலீட்டை நிராகரிக்க முடியாது, அதே நேரம் அயலவனான இந்தியாவையும் பகைத்துக் கொள்ள முடியாது. அதற்கு என்ன வழி? இனவாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தமிழினவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இந்திய-இலங்கை பொருளாதார உறவை பாதிக்கும். உறவு முழுமையாக துண்டிக்கப் பட்டாலும், ராஜபக்ச அரசுக்கு கவலையில்லை.  இப்படி எல்லாம் நடக்கும் என்று, இந்திய மத்திய அரசுக்கும் தெரியும். அதனால், இந்திய அரசு  ஒரு கட்டத்திற்கு மேல் தமிழினவாதிகளுக்கு சுதந்திரம் கொடுக்க மாட்டாது. 

ராஜபக்ச அரசு, சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல, தமிழ் மக்களின் உரிமைகளையும் கொடுக்கப் போவதில்லை. போர் முடிந்து மூன்றாண்டுகளாகியும், ஈழத் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றது.  இந்திய அரசு வலியுறுத்தும், 13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கூட, இலங்கை அரசு மறுத்து வருகின்றது. அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் கட்சிகளும், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதையும் செய்ய முடியவில்லை. இந்த தருணத்தில், இந்தியா மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வழியில் இந்திய அனுசரணையைக் கோருகின்றது. இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில், சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தால், ஈழத் தமிழரின் தீர்வு எட்டாக்கனியாகி விடும். எந்தவொரு தீர்வையும், "சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்ற ஒரு காரணத்தை கூறி , சிறிலங்கா அரசு  நிராகரித்து விடும். (ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தம் புலிகளுக்கு சார்பானது என்று கூறி, சிங்கள இனவாத சக்திகள் காட்டிய கடுமையான எதிர்ப்பு இங்கே நினைவு கூறத் தக்கது.) ஆகவே, ராஜபக்சவின் கரத்தை பலப்படுத்துவது மட்டுமல்ல, ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வெதுவும் கிடைக்க விடாமல் தடுப்பதும், தமிழினவாதிகளின் நோக்கமாக உள்ளது.  இதனை இந்தியாவின்  எகானமிக்  டைம்ஸ் பத்திரிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. (Minority rights in Sri Lanka aren’t helped by targeting its visiting civilians,  http://economictimes.indiatimes.com/opinion/editorial/minority-rights-in-sri-lanka-arent-helped-by-targeting-its-visiting-civilians/articleshow/16274681.cms)

இந்தியாவின் பொருளாதார பலத்துக்கு முன்னால், இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். இரு நாட்டு வர்த்தகத்தைப் பொறுத்த வரையில், இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகம். இதனால், இலங்கை வணிகர்களை விட, இந்திய வணிகர்களே அதிக இலாபம் சம்பாதிக்கின்றனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாவதை விட, பத்து மடங்கு அதிகமான பொருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன. இது பற்றி, தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் (NCCI) மிகவும் தெளிவாக கூறுகின்றது:
"இந்தியா- இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெருகி வருகிறது. சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இருவழி வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பை விட 8 மடங்கு அதிகமாக இந்தியாவில் இருந்து சரக்குகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அத்துடன் இலங்கையில் இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்து நான்காம் இடத்தில் உள்ளது.
இந்த வணிகம் முதலீட்டில் தமிழகத்தின் பங்கு அபரிமிதமானது. தமிழகத்தின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையுடனான இந்த தொடர்பு மிக அவசியமானது." (இலங்கை பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும்,    http://tnchamber.in/2012/09/ceylone-people/)

இந்தியாவின் முதலீட்டில் கணிசமான பங்கு தமிழகத்தில் இருந்து போகின்றது. உதாரணத்திற்கு, நல்லி சில்க்ஸ் தயாரிக்கும் உடுபிடவைகள், சாரம், சட்டைகளை சிங்களவர்களும் அணிகின்றனர். ஒரு பொருளை இரண்டு மில்லியன் மக்களுக்கு (ஈழத் தமிழர்கள்) விற்பனை செய்வதால் அதிக பணம் கிடைக்குமா? அல்லது பத்து மில்லியன் மக்களுக்கு (சிங்களவர்கள்) விற்பதால் அதிக இலாபம் கிடைக்குமா? தமிழ்நாட்டு முதலாளிகள் எதை விரும்புவார்கள்? (Jaya’s Sri Lanka moves are powerful, but shortsighted, http://www.firstpost.com/politics/jayas-sri-lanka-moves-are-powerful-but-shortsighted-442999.html)
யாத்திரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த, கொழும்புத் தமிழ் வணிகர்கள் பற்றிய செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் கூட, தமது வர்த்தகம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அந்தச் செய்தியை, எந்தவொரு தமிழ் ஊடகமும் (இணையத் தளம் உட்பட) வெளியிடவில்லை.

"தயவு செய்து, இலங்கையர் யாரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா போக வேண்டாம், என்ற அறிவித்தலை,   வாபஸ் பெற வேண்டுமென்று," தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் ராஜபக்ச அரசிடம் கெஞ்சியுள்ளனர். சிங்கள யாத்திரீகர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என்றும், இனிமேல் இந்த மாதிரியான அசம்பாவிதம்  நிகழ விடாது தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும்  வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தச் செய்தி எந்தவொரு தமிழ் ஊடகத்திலாவது வந்திருக்கிறதா? இதெல்லாம் வராது. அதற்குப் பிறகு, தமிழினவாதிகளின் சாயம் வெளுத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டு தமிழ் முதலாளிகளிடம் வாலாட்ட மாட்டார்கள். தமிழினவாதிகளின் சிங்கள எதிர்ப்புப் போராட்டம் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகர முடியாது. இந்திய மூலதனத்திற்கு பங்கம் விளைந்தால், தமிழினவாதிகள் தமிழ் நாட்டில் இருந்தே விரட்டப் பட்டு விடுவார்கள். அதற்குப் பிறகு, கடல்கடந்து இலங்கை சென்று, ராஜபக்சவிடம் அடைக்கலம் கோர வேண்டியிருக்கும். என்ன இருந்தாலும், ராஜபக்ச தமிழினவாதிகளிடம் நிறையவே நன்றிக் கடன் பட்டுள்ளார். தமிழினவாதக் கூட்டாளிகளின் உதவி கிட்டியிரா விட்டால், பிரமாண்டமான இந்திய மூலதனத்தை அசைக்க முடிந்திருக்குமா? 

(முற்றும்) 

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!
2.இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள் 

Tuesday, September 18, 2012

இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(இரண்டாம் பாகம்)

"சீமான், வைகோ ஆகிய தமிழினக் காவலர்கள், ராஜபக்சவின் தீவிர எதிரிகள். இவர்களுக்கு இடையில் தொடர்பு ஏற்பட வாய்ப்பேயில்லை. அதனை நாங்கள் நம்ப மாட்டோம்." என்று பலர் பிடிவாதமாக மறுக்கலாம். இப்படி மறுப்பவர்கள், பாஸிசத்தின் தனித் தன்மையை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டினதும் பாஸிச சக்திகள், ஒன்றை மற்றது எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும். ஏனெனில் இது அடிப்படையில் தேசியவாதங்களுக்கு இடையிலான முரண்பாடு ஆகும். ஆனால், சந்தர்ப்பம் வாய்த்தால், அனைத்து நாடுகளிலும் உள்ள பாஸிச சக்திகள் ஒன்று சேர்ந்து விடும். இதற்கு சிறந்த உதாரணம், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஐரோப்பா. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையில் நடந்த நூறாண்டு கால போரின் விளைவாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் வெறுப்புணர்வு உச்சத்தில் இருந்தது. இருப்பினும், பிரான்ஸ் நாசிகளினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர், தென் பிரான்ஸில் "வீஷி அரசு", நாஜிச நட்பு நாடாக இயங்கவில்லையா? 

இன்று சில தீவிர வலதுசாரி தமிழர்கள், ஹிட்லரை ஆராதிப்பதுடன், நாஜி கொள்கைகளை நியாயப் படுத்தி வருகின்றனர்.  அதே நேரம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள வெள்ளையின நவ-நாஜி இயக்கங்கள், தமது நாடுகளில் வாழும் தமிழர்களை விரட்டியடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. இந்த உண்மை நமது தமிழ் நாஜிகளுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டும், ஏன் நாஜிசத்தை ஆதரிக்கிறார்கள்? அங்கே தான் நாம் உணர மறுக்கும், பன்னாட்டு பாஸிச சக்திகளுக்கு இடையிலான தொடர்பு மறைந்திருக்கிறது. அதாவது, இந்த பாஸிச சக்திகள், தமது நாட்டில், தம்மின மக்களை  தாமே ஆள விரும்புகின்றன. தமது இனத்தை சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதியாக அடித்து விரட்டப் பட்டால், அது அவர்களது தேசிய அரசு கொள்கைக்கு உரம் சேர்க்கும். 19 ம் நூற்றாண்டில், போலந்திலும், ரஷ்யாவிலும் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினம் இனப்படுகொலைகளுக்காளாகி அடித்து விரட்டப் பட்டனர். ஜெர்மனியில் அந்தப் பேரவலம் பற்றி இடையறாது பிரச்சாரம் செய்து வந்த நாசிக் கட்சி, 20 ம் நூற்றாண்டில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா?  ஒவ்வொரு மொழி பேசும் இனத்தையும், அதற்கென்று ஒதுக்கப் பட்ட நாடுகளில் வாழ வைப்பது, தீவிர தேசியவாதிகளின்  அடிப்படை தத்துவம் என்பதை நாம் மறந்து விடலாகாது. 

சீமான், வைகோ போன்றவர்களைக் கண்டு, ராஜபக்ச அன் பிரதர்ஸ் லிமிட்டட் அஞ்சுவதாக, தமிழ் நாட்டில் ஒரு மாயையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ, சிங்கள ஊடகங்களோ, இவர்களை கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை. சீமான், வைகோ கோஷ்டியினரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதனை ஒரு அச்சுறுத்தலாக கணக்கெடுப்பதில்லை. ஆனால், முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தால், உடனே சிங்கள அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வரிந்து கட்டிக்  கொண்டு எதிர்க்கத் கிளம்பி விடுவார்கள். அவர்கள் சீமான், வைகோ வகையறாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணம் என்ன? இலங்கையில் ஆளும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும், தமிழகத்தின் பாஸிச சக்திகளுக்கும் இடையிலான நுண்ணரசியல், எமது கண்ணுக்குப் புலப்படாது.  தமக்கு உண்மையான நண்பர்கள் யார், உண்மையான எதிரிகள் யார் என்பதில், அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். 

தமிழ் நாட்டில் மட்டுமே அதிகளவு சினிமாக்காரர்கள் அரசியலில் குதிக்கின்றனர். இதனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. நாம் அடிக்கடி திட்டிக் கொண்டிருக்கும், "மொக்கு  சிங்களவர்கள்"  கூட, அரசியலில் நுழைந்த சினிமாக் காரர்களை, தேர்தலில்  வெல்ல வைக்கவில்லை.  தமிழகத்தில், சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து முதலமைச்சராக இருந்துள்ளனர். 21 ம் நூற்றாண்டு தமிழ் தேசிய இயக்கத்திற்கும், சினிமாத் துறையை சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று யாராவது நினைத்திருக்கலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு சீமான் கிடைத்தார். ஒரு காலத்தில் பெரியாரிசம், நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த சீமான், 180 பாகை கோணத்தில் திரும்பி தமிழ் தேசியத்திற்குள் குதித்தார்.  அப்போதெல்லாம் சீமானின் தலைகீழான கொள்கை மாற்றம் குறித்து, யாரும் கேள்வி எழுப்பவில்லை.

தமிழீழத் தேசியத்தில், "பெரியாரிசம் அல்லது நாஸ்திகம்  சிறிதளவு தாக்கத்தைக் கூட செலுத்தவில்லை," என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சீமான், பெரியாரிசத்தில் இருந்து தமிழ் தேசியத்தில் குதித்தவர். நாளைக்கே இந்துத்துவா இயக்கத்தில் குதிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இறுதியில் அது தான் நடந்தது. மும்பை சென்று, இந்து மதவெறி பாசிஸ்டுகளான சிவ சேனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னால், "நாடு கடந்த தமிழீழ அரசு" க்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், அமெரிக்காவில் சி.ஐ.ஏ.யின்  கண்காணிப்பின் கீழ் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், தனக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தினார். மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியும், சிறிலங்கா அரசின் புனர்வாழ்வுத் திட்டத்தின் அறங்காவலருமான கே.பி. உருவாக்கியது தான், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை பலர் மறந்து விட்டனர். புலிகள் இயக்கத்தில், தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, சர்வதேச தொடர்பாளரான கே.பி.,  2007 ம் ஆண்டளவில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.('KP arrested' in Thailand, http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070911_kp_arrested.shtml) ஆனால், பின்னர் கைது செய்யப்படவில்லை என்ற அறிவிப்பும் வந்தது. ஒன்றுக்குப் பின் முரணான தகவல்கள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன.  அன்றிலிருந்து சி.ஐ.ஏ., மற்றும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் உளவாளியாக செயற்பட்டு வந்திருக்க வேண்டும். 

வைகோ, சீமான் ஆகியோருக்கும், சிறிலங்கா அரசுக்கும் தொடர்பிருப்பதாக, எந்தவொரு தமிழ் உணர்வாளரும் கற்பனை பண்ணக் கூட  மாட்டார். ஆனால், மேற்குறிப்பிட்ட தரவுகள், அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை தெரிவிக்கின்றன. தமிழகத்தில், ஈழத் தமிழர் பெயரால் அரசியல் நடத்தும் எந்தவொரு தலைவரும், இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்கவில்லை. மாறாக, இனவாதக்  கருத்துகளை பரப்புவதிலும்,  இனவெறி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களவர்களை விரட்டி அடிப்பதை, இன மானம் காத்த வீரச் செயலாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். ஏற்கனவே, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள், தமிழர்களை கொன்ற கொடியவர்கள்." என்பன போன்ற கருத்துக்கள் வெகுஜன ஊடகங்களாலேயே பரப்பப் பட்டு வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவம், புலிகளையும், தமிழ் மக்களையும் வேறு படுத்தி பாராமல் கொன்று குவித்தது.  தமிழினவாதிகளும், "சிங்கள இராணுவத்தையும், சிங்கள மக்களையும் தம்மால் வேறு படுத்தி பார்க்க முடியாது," என்று வாதாடுகின்றனர்.   தனது வாழ்நாளில் ஒரு சிங்களவனைக் கூட கண்ணால் கண்டிராத தமிழக மக்களை, தம் பக்கம் இழுப்பது சுலபம் என்று தமிழினவாதிகள் நம்புகின்றனர். அந்த வகையில், சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக அவதானத்தைப் பெறுவதுடன், நிறைய ஆதரவாளர்களையும் தேடித் தரும் என்று கணக்குப் போட்டுள்ளனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், சிங்கள இனவாதிகளும் இதே மாதிரியான அரசியலை கடைப்பிடித்தனர். சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை தாக்கும் இனவாத அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணினார்கள். ஆனால், தமிழகத்தில் இனவாதிகள் ஆட்சிக்கு வருவது, இன்றைய நிலையில் நடக்க முடியாத ஒன்று. அதனால், பாஜக போன்ற இந்து பேரினவாதிகளுடன் கூட்டுச் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் அகில இந்திய பாஸிச அரசு அமைப்பதற்கு துணை போகலாம். 

ஏற்கனவே சிறிலங்காவில் பாஸிச ஆட்சி நடத்தும் ராஜபக்சவுக்கும், இந்தியாவில் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை ஒன்று, பல தசாப்தங்களாக கொழும்பு நகரில் இயங்கி வருகின்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் தூதுவர்கள், சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும், ஒரே இந்துத்துவா கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளனர். பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள், சைவ சமயத்தை பின்பற்றும் இந்துக்களாக இருப்பதால், புலிகளை ஒரு இந்து விடுதலை இயக்கமாக மாற்ற முயன்றுள்ளனர். மறு பக்கத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான புத்த பிக்குகளின் "புனிதப் போருக்கும்" ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பில் கிறிஸ்தவ சபை, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால், இந்துத்துவா வாதிகளின் கரங்களும் மறைந்திருக்க வாய்ப்புண்டு.
The VHP, an affiliate of the Rashtriya Swayamsewak Sangh (RSS), India's most influential Hindu group, has already opened about a dozen units across Sri Lanka in a bid to build up unity among the country's Tamil-speaking Hindu minority....  Vigyananand, 38, dressed in giveaway saffron robes like a wandering monk, attended the April 10 press conference of LTTE leader Velupillai Prabhakaran as an accredited representative of a VHP publication. Although he has been to Sri Lanka 10 times since 1999, this was the first time he went to LTTE-held areas....   Vigyananand, who knows only Hindi and English, seemed to have no objection to Buddhism and sought to emphasise that Buddhism was also facing threats from the clergy. "I advised Buddhist monks to go to villages to spread their religion and to counter Christianity like we have done in India," he said. "As a religion nobody is suppressing Hinduism in Sri Lanka. But with the exodus of Tamils and Christian influence growing, Hindus here face problems." He also accused the clergy of playing a major role in fuelling the Tamil separatist conflict that has claimed around 60,000 lives in Sri Lanka since 1983 and blamed it for causing a military showdown between the Tigers and India in 1987-90. 
(VHP now building up Hindu unity in Sri Lanka, http://india.indymedia.org/en/2002/04/1069.shtml)  

பத்து வருடங்களுக்கு முன்னர், இந்துத்துவா நிதியில், மலையகத்தில் ஒரு இராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கே பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும் கட்டப்பட்டது. சீதையை இராவணன் சிறை வைத்திருந்த  இடத்தை அனுமான் வந்து பார்த்த கதையை நினைவு கூறுகிறார்கள் போலும்.  அண்மைக் காலமாக, இலட்சக் கணக்கான வட இந்திய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் எவரும், இராமாயணக் கதை நடந்த இடத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு சுற்றுலா நிறுவனங்கள், இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றன. வருங்காலத்தில், அகண்ட இந்து சாம்ராஜ்யம் உருவாவதற்கு, இந்த சுற்றுலாத் திட்டம் உதவலாம். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் நடந்தால், அதனால் இரண்டு தரப்பும் இலாபமடைய வேண்டாமா? இலங்கையும் தனது பிரஜைகளை இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது, இந்துத்துவா வாதிகளின் அன்பான வேண்டுகோள்.

முன்பெல்லாம் எண்ணிக்கையில் குறைந்த சிங்களவர்கள் தான் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களும், வட இந்தியாவில் புத்த மதம் சம்பந்தமான இடங்களைத் தான் பார்வையிட்டு திரும்புவது வழக்கம். தமிழ் நாட்டுக்கும் சிங்களவர்கள் வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும், மாணவர்களாக அல்லது வர்த்தக நோக்கோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு இது வரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.  புலிகளை இழிவுபடுத்தும், "பிரபாகரன்" என்ற சிங்களத் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளருக்கு அடித்த சம்பவத்தை தவிர, வேறெந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 2012, செப்டம்பர் மாதம், பூண்டி மாதா கோயிலுக்கு விஜயம் செய்த யாத்திரீர்கள் கூட, தாம் கடந்த 15 வருடங்களாக வந்து செல்வதாக கூறினார்கள். இந்த விபரம் எல்லாம், தமிழகத் தமிழினவாதிகளுக்கு தெரியாது என்று கூற முடியாது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று, "சிங்களவர்கள் எப்போது, எங்கே வருகிறார்கள்?"  என்பன போன்ற விபரங்களை கொடுக்கின்றது. சிங்கள யாத்திரீகர்கள் மேல் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுகிறது.

(இன்னும் வரும்)

மூன்றாம் பாகம்:
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

இந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!

Monday, September 17, 2012

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

"வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ஓரினம், அதே வரலாற்றை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளது." 

தமிழகத்திற்கு செல்லும் சிங்களவர்கள் தாக்கப்படுவது, கடந்த மூன்று வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் நாட்டில் தோற்றுவித்த எதிர்வினைகளின் பலனாக, தமிழ் தேசிய எழுச்சி அலை உருவாகி இருந்தது. வழமையான தமிழ் தேசியவாத கட்சிகள், குழுக்கள் மட்டுமல்லாது, இடதுசாரிக் கட்சிகளும் அந்த எழுச்சிக்கு ஆதரவளித்தன.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை ஆரம்பித்த அமைப்பில் இருந்தது. மார்க்சிச - லெனினிச இயக்கங்களும் முன்னிலையில் கலந்து கொண்டன.  இடது, வலது பேதமற்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு, சிறிலங்கா அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர்,  மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆளும் கட்சியான திமுக கூட போராட்டத்தில் குதிக்க வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் புலி எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார். 

 ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், தமிழகத்தில் குறைந்திருந்த புலி ஆதரவும் அப்போது சூடு பிடித்தது. பொதுவாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்தில் பிறந்திருக்காத புதிய தலைமுறை காலத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகளை, தமது ஆதர்ச நாயகர்களாக வரித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. தமிழ் இன உணர்வு, தமிழகத்திற்குப் புதிதல்ல. ஐம்பதுகளில், அறுபதுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் உருவேற்றப் பட்ட அரசியல் அது. அன்றைய தமிழ் தேசியத் தலைவர் இன்று, இன்று தமிழ் தேசியத்தின் துரோகியாகியது தனிக் கதை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது மாதிரி, திமுக தமிழ் உணர்வு ஊட்டி வளர்த்த குழந்தைகள், இன்று வளர்த்தவர்களையே எதிர்த்துக் கொண்டிருக்கிறனர். இது தமிழ் தேசிய சித்தாந்தத்தின் நச்சுச் சுழற்சியா என்பது தெரியவில்லை. 

ஏற்கனவே, ஈழத்திலும்  இதே மாதிரியான வரலாறு நிகழ்ந்துள்ளது. திமுக வின் சகோதரக் கட்சி என்று கருதப் படக் கூடிய, தமிழர் விடுதலைக் கூட்டணி ஊட்டி வளர்த்த குழந்தைகளான புலிகள், ஆயுத பலத்தில் வளர்ந்த பின்னர், கூட்டணிக்  கட்சியை தடை செய்து, அதன்  தலைவர்களையும் அழித்திருந்தார்கள். தீவிரவாதிகளான புதிய தலைமுறையினர், பழைய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப் படுத்தி வருகின்றனர். இது ஈழத்திலும், தமிழகத்திலும் பொதுவான வரலாறாக இருக்கிறது. எதிர்காலத்தில் மூன்றாந் தலைமுறை தமிழ் தேசியவாத இளைஞர்கள், இப்போதுள்ள வைகோ, சீமான், நெடுமாறன்  போன்றோரை இனத் துரோகிகளாக முத்திரை குத்தினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. 

வன்னியில் நடந்து கொண்டிருந்த படுகொலைகள் பற்றிய செய்திகளும், அவை ஏற்படுத்திய அதிர்வலைகளும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. 83 கலவரத்தின் போதும் இதே மாதிரியான எழுச்சி காணப்பட்டது. ஆனால், அன்றிருந்த உலகம் வேறு, இன்றுள்ள உலகம் வேறு. 83 கலவரச் செய்திகள் , வாய் வழித் தகவல்களாக மட்டுமே பத்திரிகைகள், வானொலிகளில் அறிவிக்கப் பட்டது. ஆனால், இன்று ஒரு தனிநபர் கூட காட்சிகளை பதிவு செய்து அனுப்பி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் காண்பிக்க முடியும். இது பல இலட்சம் மக்களை நேரடியாக சென்றடைகின்றது. உலக தகவல் தொடர்பு புரட்சியினால் விளைந்த பயன் அது.

தமிழ் ஊடகத் துறை, முழுக்க முழுக்க புலிகளின் தகவல் தொடர்பில் தங்கியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் செயற்பட்ட தமிழ் ஊடகங்கள், போரில் பலியாகும், காயமடையும் ஈழத் தமிழரின் அவலங்களை காட்சிப் படுத்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இன்றைய தகலவல் தொடர்பு சமுதாயத்தில் வாழும் தமிழர்களும், ஊடகங்களால் வழிநடத்தப் பட்டனர். ஊடகங்கள், மக்களை உணர்ச்சிவசப் படுத்திய அளவுக்கு, ஈழப் பிரச்சினை பற்றிய அறிவூட்டவில்லை. இதனால் யுத்தம் முடிந்த பின்னர், இனப்படுகொலைக்கு பழிவாங்கும் அரசியலாக பரிணமித்தது. 

முத்துக்குமார் தீக்குளித்த சம்பவம், தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகத் தனத்தை தோலுரித்துக் காட்டியது. மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கு பற்றிய எழுச்சியானது, வெகு விரைவில் தமிழக, இந்திய அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக திரும்பும் சூழல் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம், உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது. சில தீவிரவாத இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் குண்டுகள்  வைக்குமளவிற்கு சென்றமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்காது என்று, யார் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், மத்திய அரசு நம்பியிருக்கப் போவதில்லை.

புலிகளை அழிப்பதற்கும், ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்கும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவி வருகிறது என்ற தகவலும் தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிரான எதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. ஒரு எல்லை தாண்டியிருந்தால், ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம், இந்திய அரச நிறுவனங்களை அடித்து நொறுக்கி இருக்கும். மக்கள் எழுச்சி அடக்கப் பட்டால்,  இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலும் குதித்திருப்பார்கள். அது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்துள்ளன.

உதாரணத்திற்கு, கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மாசிடோனியா அல்பேனியர்கள் எழுச்சி அடைந்தனர். விரைவில் அங்கேயும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடித்தது. ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இன உணர்வு காரணமாக நெருக்கமானவர்கள். இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தமிழர்கள், இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார்களா? நாங்கள் நினைக்கிறோமோ இல்லையோ, இந்திய மத்திய அரசில் உள்ளவர்கள் அப்படித் தான் சிந்தித்து இருப்பார்கள். ஆனால், நிலைமை அந்தளவு தூரம் தீவிரமடைய விடாமல் தடுத்த சக்தி எது? 

இந்த தருணத்தில் தான், இந்திய மத்திய அரசு, தமிழக  மாநில அரசு, RAW  என்பன விழித்துக் கொண்டன. தமிழ் தேசிய எழுச்சிக்குள் உளவாளிகளை ஊடுருவ வைத்து, போராட்டத்தை திசை திருப்பி, நீர்த்துப் போக வைக்க திட்டம் தீட்டின.  யாராலும் ஊடுருவ முடியாத, மிகவும் இரகசியமான, கட்டுக்கோப்பான இயக்கம்  என்று பெயரெடுத்த புலிகள் அமைப்புக்குள்ளேயே அரச உளவாளிகள் ஊடுருவி இருந்தனர். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குப் பின்னர், ஊடகத் தொடர்பாளராக இருந்த இளந்திரையன் ஒரு அரச உளவாளி என்ற உண்மை, கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் தான் தெரிய வந்தது. அப்படியாயின், அரசாங்கம்  ஒரு வெகுஜன அமைப்பிற்குள் உளவாளிகளை அனுப்புவது மிகவும்  இலகுவான விடயம். அதற்காக, நாங்கள்  ஆதாரமின்றி யாரையும் கை காட்ட முடியாது. அதே நேரம், அப்படி நடக்காது  என்று மறுக்கவும் முடியாது.

உளவாளிகளை வெளியில் இருந்து அனுப்பத் தேவையில்லை. உள்ளிருப்பவர்களை விலைக்கு வாங்கலாம். பேச்சுவார்த்தைக் காலங்களில், புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. அப்பொழுது விடுவிக்கப் பட்டு, வன்னிக்கு அனுப்பப் பட்ட புலி உறுப்பினர்கள் பலர், அரச உளவாளிகளாக மாறியிருந்ததை யாரும் சந்தேகிக்கவில்லை. இது எல்லா நாட்டுப் போர்களிலும் நடக்க முடியும். எதிரிகளினால் சிறையில் அடைக்கப் பட்டவர்கள், அங்கு வைத்து மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பார்கள். அதனால் தான், ஸ்டாலின் காலத்தில், நாஜிகளின் சிறைகளில் இருந்து விடுவிக்கப் பட்ட முன்னாள் செம்படை வீரர்களை புதிய சிறைகளில் அடைத்து வைத்தனர். 

வைகோ சட்டவிரோதமாக இலங்கை சென்று, பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பி வந்தவர். (இந்தியாவில் தடை செய்யப்பட்ட) புலிகளோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலேயே, தடா சட்டத்தில் கைது செய்யப் பட்டவர். அப்படிப் பட்ட ஒருவர், "ஐந்தாம் கட்ட ஈழப் போர்" அறிவித்த பின்னரும், எந்தப் பிரச்சினையுமின்றி சுதந்திரமாக உலாவ முடிகின்றது. இந்த குறுகிய காலத்திற்குள், இந்திய அரசு திருந்தி விடவில்லை. மாவோயிஸ்ட், ஜிகாத் போராட்டங்களுடன் தொடர்பான நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களில் பலருக்கு மீள முடியாத சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. விடுதலை செய்யப் பட்டாலும் பழைய அரசியலை தொடர முடியாது. அந்தளவு தூரம் போகத் தேவையில்லை. இறுதிப்போரில் தப்பி, தமிழ்நாட்டில் அகதியாக அடைக்கலம் கோரிய புலிகளையும், அவர்களது உறவினர்களையும் தனிமைச் சிறையில் போட்டு வருத்துகின்றது.

வைகோ மட்டும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" அறிவித்து விட்டு தைரியமாக உலாவ முடிகின்றது.  பாஜக, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற, இந்து மதவெறி பாசிச  சக்திகளுடன் வைகோ கை கோர்த்துள்ள விடயம், ஒன்றும் இரகசியமானதல்ல.  குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த, நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதை எல்லாம், அவரே பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இந்துத்துவ வாதிகளுடன் கூட்டுச் சேர்வதென்றால், அவர்களது அகண்ட பாரதக் கனவுக்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்து பாசிஸ்டுகளின் அகண்ட இந்து பாரதம், "சீதையை சிறை வைத்திருந்த சிங்களவர்களின் சிறிலங்காவையும்" உள்ளடக்கியது.

வைகோ நடத்தப் போகும் ஈழப் போர், தமிழர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அவரது இந்துக் கூட்டாளிகளை நோக்கத்திற்கு முரணானது ? அண்மையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில அரசு, யாத்திரீகர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம், மற்றும் பல இராமாயண ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் பயணக் கட்டணத்தில் அரைவாசியை அரசு கொடுக்கிறது. ('Hindutva behind subsidy to visit Hindu temples', http://zeenews.india.com/news/madhya-pradesh/hindutva-behind-subsidy-to-visit-hindu-temples_768557.html) ஏற்கனவே, இந்து மதம் புத்தரையும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறுகின்றது.  ஆகவே, "இந்துக்கள்" என்ற ஒரே குடையின் கீழ் சிங்களவர்களையும்  இணைத்துக் கொள்வதில், இந்து பாசிஸ்டுகளுக்கு தடையேதும் கிடையாது. இந்து பேரினவாதிகளின் எதிர்காலத் திட்டங்கள் எமக்குத் தெரிந்தளவுக்கு, வைகோ, சீமானுக்குத் தெரியுமா? எல்லாம் தெரிந்து கொண்டு தான் ஒத்துழைகிறார்களா? 

இலங்கைக்கு, இந்திய சுற்றுலாப்பயணிகள் செல்வதை ஊக்குவிக்கும் பாஜக, சிங்கள யாத்திரீகள் இந்தியா வருவதையும் ஊக்குவித்திருக்காதா? மகிந்த ராஜபக்ச பயணம் செய்யவிருக்கும் சாஞ்சியும், மத்திய பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. வைகோ இது தொடர்பாக, பாஜக விடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். உண்மை தான். ஆனால், அதையும் மீறி ராஜபக்ச வந்தால், வைகோ, பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொள்வாரா? வைகோவின் பாஜகவுடனான உறவு, வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஈழத் தமிழருக்கு கொடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளை, சிங்கள இராணுவம் சுற்றி வளைத்திருந்தது. தமிழ் மக்களின் போராட்டம், சர்வதேச மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, இந்திய அரசு இறங்கி வந்தது. யுத்த நிறுத்தம் ஒன்றிற்காக, சிறிலங்கா அரசுடனும் புலிகளுடனும் பேசியது.

யுத்தத்தை முடித்து விட்டு சரணடைய புலிகள் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், தமது நம்பிக்கைக்கு உரிய வைகோவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அன்று வைகோ கூறிய பதில், புலிகளின் அழிவுக்கு தேதி குறித்தது. "சரணடையும் முடிவெதையும் இப்போது எடுக்க வேண்டாம். இதெல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம். தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த நாளே நிலைமை தலைகீழாக மாறிவிடும். பாஜகவினர் புலிகளை மீட்டெடுப்பார்கள்."   நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்த தகவல்.
“Indian Home Minister Chidambaram contacts Prabhakaran and suggests the LTTE agrees to a pre-drafted statement that they will lay down their weapons,” the report says, but without giving citations the report continues, “The document leaks to Vaiko, a radical but marginal Eelamist politician in Tamil Nadu, who rejects it as a Congress trick and assures the LTTE that BJP will win the ongoing Indian elections and come to the Tigers’ rescue.”...  I observed the change in Indian intelligence - Erik Solheim, (http://www.norwaynews.com/en/~view.php?72U7b54XOb4826z285Klk844SP3889S976HDp353P4d8)
வைகோவின் இன்றைய ஈழ ஆதரவு வாய்ச் சவடால்கள் எல்லாம், கடந்த கால துரோகத்தை மறைப்பதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றது. இதனை அவரது தொண்டர்களும், ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ளாத வரையில், வைகோவின் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கும். 

புலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், காங்கிரசின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.  

Jaswant Singh indicated to the all-party meeting on Monday that the Clinton administration had informed New Delhi that the US would support “whatever India does”. The Hindu newspaper quoted the US official sources as saying: “Washington takes India's views on Sri Lanka very seriously and would not want to do anything that might go against India's interests.” (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது. புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற  தனிநாட்டின் சாத்தியம் குறித்து,  ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும். 

The BJP government has committed itself only to “humanitarian assistance”. But according to Indian Defence Minister Fernandes, the country's armed forces have been prepared to meet any eventuality. Media reports indicate that substantial supplies have been moved to the Trivandrum in the southern state of Kerala. The Indian Air Force's Southern Air Command has been put on the alert to provide aid to Jaffna. Air Force helicopters and heavy transport aircraft have also been moved south. Communication links have been established with hot-line facilities to the Indian High Commission in Colombo, military headquarters in New Delhi and the air command in Trivandrum. (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

அதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.

Last Saturday Karunanidhi moderated his stance after a 90-minute meeting with Vajpayee. “Seri (OK),” he said to the national government's request to keep out of the conflict in Sri Lanka. “Our party will not tie the hands of the central government... It is the centre's prerogative to take any approach in the interest of the nation... we do not want to interfere with that”.....
The MDMK leader Kopalaswamy also toned down his position after a meeting with NDA leaders. “I am happy about the government sending humanitarian aid to Jaffna,” he said. Significantly he appeared to have gained some assurances that India would do nothing to assist the Sri Lankan military....
(New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

 ஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, "புலிகளை அழிக்கும்  நோக்குடன்  இராணுவத்தை அனுப்பத் துடித்த" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார். (Opposition blasts govt over Fernandes, Vaiko meet, http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota)

இதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா? இந்திய தேசியக் கட்டமைப்புக்கு பல முகங்கள் உண்டு. சோனியா மாதிரி, கருணாநிதி மாதிரி, வைகோ மாதிரி, சீமான் மாதிரி, என்று பல வகையான முகங்கள். இந்த நால்வரும், இந்திய தேசியப் பிரம்மாவின் நான்கு முகங்கள். அந்த நான்கு முகங்களும் ஒன்று சேர்ந்து தான், ஈழத் தமிழரின் தலைவிதியை எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதை, நாம் இன்றைக்கும் புரிந்து கொள்ளவில்லை. 

(இன்னும் வரும்)


Sunday, September 16, 2012

ஏழைகளை அழிக்கும் இனவாதிகளின் மரபணுக் கோட்பாடு

1 . மரபணுவில் ஏற்பட்ட  கோளாறு  காரணமாகவே ஒருவர் ஏழையாக இருக்கிறார், என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏழைகளை அழித்தொழிக்கும் திட்டம் எந்த நாட்டில் நடைமுறைப் படுத்தப் பட்டது? 
2 . சொந்த நாட்டு பிரஜைகள் மீது, இனவாத நோக்கில் மரபணு சோதனை நடத்தி, "பலவீனமான மனிதர்களை" அழித்தொழிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தது யார்? 
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக, நாங்கள் ஹிட்லரையும், நாஜி ஜெர்மனியையும் தான் நினைத்துக் கொள்வோம். அது தவறு! அமெரிக்கா என்பது தான் சரியான விடை!
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட, "ஏழைகளை இனவழிப்பு செய்யும் நடவடிக்கை", அன்று பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மரணமடைந்த பின்னரும், அடுத்து வந்த மூன்று தசாப்தங்களுக்கு அந்த சட்டம் நீடித்தது. அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் அந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.  அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட  இனவாத கோட்பாட்டைத் தான், ஹிட்லர் தனது "மைன் கம்ப்" (எனது போராட்டம்) நூலில் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அன்றைய உலகில், சோவியத் ஒன்றியத்தில் மட்டுமே, இனவாத மரபணு சோதனை தடை செய்யப் பட்டிருந்தது. 

அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநிலத்தில், ஏழை வெள்ளையர்கள், கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கருத்தடை செய்யப் பட்டனர். அமெரிக்கா முழுவதும், கட்டாய கருத்தடை நடைமுறைப் படுத்தப் பட்டாலும், வெர்ஜீனியா மாநிலத்தில் மட்டுமே பல ஆயிரங்களை தொட்டு சாதனை படைத்திருந்தது. செவ்விந்தியர்கள், கறுப்பின மக்களை இனவழிப்பு செய்யும் நோக்கம் அமெரிக்க அரசுக்கிருந்தது. ஆனால், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்து குடியேறிய வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகளும், அந்த இனவழிப்புத் திட்டத்திற்கு தப்பவில்லை. செவ்விந்தியர்கள், கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் தரம் தாழ்ந்த மரபணுவால் உருவாக்கப் பட்டவர்கள் என்பது அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. மதுவுக்கு அடிமையாதல், குற்றச் செயலில் ஈடுபடுதல் என்பன கூட, மனிதர்களின் மரபணுவில் தங்கியுள்ளது என்று நம்பினார்கள். இவ்வாறு தரம் தாழ்ந்த மரபணுக் கொண்ட மனிதர்களை பெருக விடாமல் தடுப்பதற்கு ஒரே வழி, அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்வது. 

தாவர மரபணு நிபுணர் Harry Hamilton Laughlin என்ற அமெரிக்கர் தான், இந்த இனவாத விஞ்ஞானத்தின் தந்தை. அவருக்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில், பிரிட்டனை சேர்ந்த Francis Galton இந்த ஆலோசனையை முன்வைத்திருந்தார். ஆனால், Laughlin தான் அதனை நடைமுறைப் படுத்த அரச அங்கீகாரம் பெற்றிருந்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் அதிக விளைச்சலைத் தருவதைப் போன்று, மனிதர்களிலும் மேன் மக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பினார். அரச நிதியுதவி கிடைத்ததும், தனது ஆராய்ச்சியாளர்களை சிறைச்சாலைகளுக்கும், மனநோயாளர் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார். அங்கிருந்த கைதிகளையும், நோயாளிகளையும் ஆராய்ந்து,  "குற்றப் பரம்பரையை விஞ்ஞான பூர்வமாக" நிறுவ முயன்றார். இந்த இனவாத விஞ்ஞானம், செவ்வியந்தியரையும், கருப்பரையும் மட்டும் தாழ்ந்த இனங்களாகவும், குற்றப் பரம்பரையினராகவும் வரையறுக்கவில்லை. ஸ்கண்டிநேவிய ஐரோப்பியரை மேன்மையான இனமாகவும், இத்தாலியர்கள் போன்ற தென் ஐரோப்பிய மக்களை தாழ்வான இனமாகவும் கருத வைத்தது. 1911 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையானது, "தாழ்ந்த இனங்களை அழித்தொழிக்க வேண்டிய அவசியத்தை" எடுத்துரைத்தது. அதாவது, அவர்களது சந்ததி பெருகா வண்ணம், கட்டாய கருத்தடை செய்யப் பட வேண்டும். அறுபதுகளில் இந்த இனவாத சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், குறைந்தது அறுபதாயிரம் பேர் பலவந்தமாக கருத்தடை செய்யப் பட்டனர். 

மரபணுவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ விஞ்ஞானம், "Eugenics" என்று அழைக்கப் படுகின்றது.  கிரேக்க மொழியில், eu என்றால் நல்லது, genes என்றால் பிறப்பு என்று அர்த்தம். அதாவது தமிழில் "நற்பிறப்பு" என்று மொழிபெயர்க்கலாம். பண்டைய கிரேக்க நாடான ஸ்பார்ட்டாவில், இராணுவ பயிற்சிக்கு தகுதியற்ற பலவீனமானவை என்று கருதப்படும் குழந்தைகளை ஆற்றிலே வீசியெறிந்து கொல்வார்கள். அல்லது சாகும் வரை அனலாக தகிக்கும் வெயிலில் கிடத்தி விடுவார்கள். இந்தியாவிலும், "நற்குடிப் பிறப்பாளர்கள்" பற்றி மனு எழுதிய கோட்பாடுகள், சாதி ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்த உதவியது. இன்றைக்கும் உயர்சாதியை சேர்ந்த, மேட்டுக்குடியை சேர்ந்த தமிழர்கள் "நற்குடிப் பிறப்பு" பற்றி உபதேசிப்பதைக் காணலாம்.  இந்தியாவின் சாதி அமைப்பும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு, இந்த உதாரணம் போதும். அமெரிக்காவில் இனத் தூய்மை பேணும் வெள்ளையின தம்பதியினர் புத்திசாலிப் பிள்ளைகளைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப் பட்டனர்.  சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் இனத் தூய்மை பேணுவது பற்றிய பிரச்சாரம் நடைபெற்றது. 

இன்று அமெரிக்காவுக்கோ, அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ சென்று குடியேற விரும்புவோர், அந்தந்த நாட்டு மொழிப் பரீட்சைகளில் தேற வேண்டும் என்ற நிபந்தனை வந்து விட்டது. இது கூட இனவாதம் என்பதை பலர் உணர்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவும், கனடாவும் புதிய குடியேறிகளை தேர்ந்தெடுப்பதற்காக மொழிப் பரீட்சை வைத்தன. ஆனால், அன்றைய மொழிப் பரீட்சை, "குடியேறிகள் தமது  தாய் மொழியில் ஒரு பந்தியை வாசித்துக் காட்ட வேண்டும்" என்றிருந்தது. "இதென்ன பிரமாதம், மிக இலகு." என்று நீங்கள் நினைக்கலாம். பெரும்பான்மையான ஐரோப்பிய ஏழை மக்கள், எழுதப் படிக்க தெரியாமலிருந்த காலத்தில், அந்தப் பரீட்சை பலருக்கு கஷ்டமாக இருந்திருக்கும். அன்றும் இன்றும், மொழிப் பரீட்சை நடத்துவதன் நோக்கம் ஒன்று தான். "எமது நாடுகளுக்கு புத்திசாலியான, வசதி படைத்த மக்கள் மட்டுமே தேவை. கல்வியறிவற்ற, ஏழை மக்கள் எமது நாடுகளுக்குள் நுழைய முடியாது."  

இன்று நாங்கள் I .Q. பரீட்சையில் சித்தி பெற்றவுடன் மார் தட்டிக் கொண்டு திரிகிறோம். அன்றைய அமெரிக்காவில் ஐ.கியூ. பரீட்சை கூட, இன, வர்க்க ஒடுக்குமுறையைக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கு புதிய இராணுவ வீரர்களை சேர்ப்பதற்காக, ஐ.கியூ. பரீட்சை நடத்தப் பட்டது. ஆங்கிலம் எழுத வாசிக்க தெரியாதவர்கள், வரைபடங்களை பார்த்து, தவறைக் கண்டு பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வலை இருக்காது. அந்தப் படத்தில் என்ன குறை, என்ற கேள்வி கேட்கப் பட்டிருக்கும். கிராமங்களில் வாழ்ந்த வெள்ளையின ஏழைகளும், புறநகர் சேரிகளில் வாழ்ந்த கறுப்பின மக்களும், ஒரு டென்னிஸ் மைதானத்தை வாழ்க்கையில் கண்டறியாதவர்கள். அதனால் அவர்கள் பரீட்சையில் தோற்பது நிச்சயம். இந்த ஐ.கியூ. கேள்விகள் எல்லாம், நகர்ப்புறங்களை சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்களை தெரிவு செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது. தேர்வின் இறுதியில், 47 % வெள்ளையினத்தவரும், 89 % கருப்பினத்தவரும் சித்தியடையவில்லை என்று அறிவிக்கப் பட்டது. "கறுப்பர்களின் மூளை வளர்ச்சி அடையவில்லை" என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்கு சான்றாக அந்த தரவுகளை பயன்படுத்தினார்கள். முதலாம் உலகப்போரில், பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் மடிந்த பின்னர் தான், அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. 

மரபணு கோளாறு காரணமாக கட்டாய கருத்தடை செய்யும் சட்டம், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமுல் படுத்தப் பட்டது. ஜெர்மனியில் ஹட்லர் ஆட்சிக்கு வர முன்னரே, 1923 ம் ஆண்டில் இருந்து கட்டாயக் கருத்தடை நாள்தோறும் நடந்து கொண்டிருந்தது.  சுவீடனில் மன நிலை பிறழ்வான நபர்கள் கருத்தடை செய்யப் பட்டனர். டென்மார்க்கில் "சமூகத்தில் பலவீனமான மனிதர்களை" கருத்தடை செய்யும் சட்டம், 1912 ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அந்த நாட்டில் ஏழைகளை இனவழிப்பு செய்யும் திட்டத்திற்கு, அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் பவுண்டேஷன் நிதியுதவி வழங்கியது. 1967 ம் ஆண்டு சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், 6000 டேனிஷ் மக்கள் கட்டாயக் கருத்தடை செய்யப் பட்டனர். சுவிட்சர்லாந்தில், அளவுக்கு மிஞ்சிய பாலியல் நாட்டம் கொண்ட பெண்கள் கருத்தடை செய்யப் பட்டனர். அன்று வாழ்ந்த சுவிஸ்காரரைப் பொறுத்த வரையில், பெண்கள் அளவுக்கதிகமாக பாலியலில் ஈடுபடுவதும் மரபணுக் கோளாறு காரணமாகத் தான். ஜெர்மனியில் Alfred Ploetz என்ற மருத்துவர், "சமூகத்தில் ஒரு தொகுதி மக்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள்" என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். Euthanasie குறித்த அவரது கருத்துக்கள், பிற்காலத்தில் ஹிட்லரால் உள்வாங்கப் பட்டன. ஹிட்லரின் மைன் கம்ப் நூல், 1925 ம் ஆண்டு வெளியானது. அந்த நூலில், Laughlin மற்றும் பல அமெரிக்க மரபணு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை புகழ்ந்து எழுதியுள்ளார்.  

ஹிட்லரினால் மதிக்கப் பட்டாலும், அல்பிரெட் யூதர்கள் தொடர்பான ஹிட்லரின் கொள்கையுடன் முரண்பட்டார். அவரைப் பொறுத்த வரையில், (ஜெர்மன்) யூதர்களும் தூய ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்தக் காலத்தில், ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சென்று குடியேறிய யூத விஞ்ஞானிகள் சிலர் கூட, "மரபணு இனவாதக் கோட்பாட்டில்" நம்பிக்கை வைத்திருந்தனர். அன்றைய உலகில், ஒரேயொரு நாட்டில் மட்டுமே மரபணு அடிப்படையில் இனங்களை பிரிக்கும் கோட்பாடு தடை செய்யப் பட்டிருந்தது. "பிறப்பால் ஏற்றத் தாழ்வு வருவதில்லை. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள்." என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் ஒன்றியத்தின் பல்கலைக்கழகங்களில் மரபணு ஆராய்ச்சிக்கு வரவேற்பு இருக்கவில்லை. 1941 ம் ஆண்டிலிருந்து, 1945 வரையில், ஹிட்லர் கோடிக்கணக்கான மக்களை நச்சுவாயு செலுத்தி இனப்படுகொலை செய்த பின்னர் தான் உலகம் விழித்துக் கொண்டது. அந்த இனப்படுகொலையில், யூதர்கள் மட்டும் பலியாகவில்லை. ஓரினச் சேர்க்கையாளர்கள், ஜிப்சிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரும், ஹிட்லரின் பார்வையில் மரபணுக் கோளாறு கொண்ட மக்களாக கருதப் பட்டு, அழித்தொழிக்கப் பட்டனர். 

மேலதிக தகவல்களுக்கு: 
1.War against the Weak, Eugenics and America's Campaign to Create a Master Race, by Edwin Black
2.The Unfit, A History of a Bad Idea, by Elof Axel Carlson
3.www.eugenicsarchive.org