Friday, September 27, 2019

அரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் "இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்"?

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.


இபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். "ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், "அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே முற்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.

யேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், "படித்தவர்கள்" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

"மனிதன் ஒரு அரசியல் மிருகம்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாகக் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வாதிடுகிறார்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த "முதலாளிகள்", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

"அசாபியா" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் "தேசியம்" அல்லது "தேசிய இனம்" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

இபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.

மனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.

Tuesday, September 17, 2019

பெண் ஆணுக்கு கட்டிய தாலி! - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி


பெண் ஆணுக்கு கட்டிய தாலி! - சில விளக்கங்கள்:


சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் தமது "தமிழ்ப் பண்பாட்டின் படி" ஒருவருக்கொருவர் தாலி கட்டிக்கொண்ட திருமணம் பலத்த சர்ச்சையை உண்டாக்கி விட்டுள்ளது. குறிப்பாக "பழமைவாதிகளும், இந்து மத அடிப்படைவாதிகளும்" குய்யோ முறையோ என்று தலையில் அடித்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஒரு சிறு விளக்கம்.

சில தினங்களுக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு மண்டபத்தில் (கோயிலில் அல்ல) நடந்த மேற்படி திருமண நிகழ்வுக்கு பலர் சமூகமளித்து இருந்தனர். மாப்பிள்ளை சுவிஸ் புலிகளின் இளையோர் அமைப்பை சேர்ந்தவர் என்பதால், நிறையப் பேருக்கு அவரைத் தெரியும். இருப்பினும் "மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டும்" படம் சமூக வலைத்தளங்களில் பரவிய பின்னர் தான், அது அனைத்துலக தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்தது.

முதலில் மணமகன், மணப்பெண் ஆகியோரின் வாழ்க்கைச் சூழல், அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இருவரும் குழந்தைப் பராயத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தில் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த ஈழத் தமிழர்கள். புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர விசுவாசிகள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், புலிகளின் பெயரிலான அடையாள அரசியல் பற்றி எந்தக் குறையும் கூறுவதில்லை. அந்தளவு புரிந்துணர்வு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் பெற்றோர் புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால், பிள்ளைகள் தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள். அதற்குக் காரணம் அடையாள அரசியல். வெள்ளையரின் நாடொன்றில் தமிழ் இளையோர் தமக்கான அடையாளத்தை தேடுகின்றனர்.

தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ்ப் பண்பாட்டையும் உள்ளடக்கியது தான். இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர் அதற்கு எதிரானவர்களும் அல்ல. மாறாக, பலர் சுயவிருப்பின் பேரில் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகையினால், அவர்களுக்கு தெரிந்த "தமிழ்ப் பண்பாட்டை" பின்பற்றி, தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. இங்கே பெண் ஆணுக்குத் தாலி கட்டியது தான் பழமைவாதிகளின் கண்களை உறுத்துகிறது.

புலம்பெயர் நாடொன்றில் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் சந்திக்கும் கலாச்சார அதிர்ச்சியை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு பாடசாலை ஒன்றில் படிக்கும் தமிழ்ச் சிறுமி தனக்கு நடந்த சாமத்திய சடங்கு (மஞ்சள் நீராட்டு) பற்றி பள்ளி மாணவர்களுக்கு எப்படி விளக்குவாள்? இதிலுள்ள சங்கடங்கள் பற்றி ஏற்கனவே பலர் பேசி விட்டனர். அதே போன்ற சங்கடம் தான் தாலி கட்டுவதில் உள்ள பிரச்சினை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் வாழும் மக்கள் மத்தியில் பலதரப் பட்ட கலாச்சாரங்கள் பற்றிய அறிவும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு துருக்கி திருமண விழாவில் மணமக்களை ஏற்றிச் செல்லும் வாகனத் தொடரணி தெருவில் ஹாரன் அடித்துக் கொண்டே செல்லும். இந்நாடுகளில் ஹாரன் அடிக்கத் தடை இருந்தாலும், அது துருக்கியரின் பண்பாட்டு நிகழ்வு என்பதற்காக அனுமதிக்கிறார்கள். இந்த விடயம் இந்நாடுகளில் வாழும் அனைவருக்கும் தெரியும். பலர் அதைப் பார்த்து இரசிக்கிறார்கள். அந்தளவு ஐரோப்பிய கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாக மாறி விட்டது.

இப்போது தாலி கட்டும் விடயத்திற்கு வருவோம். தமிழர்களின் திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டுவது எமக்கு வேண்டுமானால் சர்வசாதாரணமாகத் தெரியலாம். ஆனால், வேற்றின மக்களுக்கு அது விசித்திரமாக இருக்கும். நான் வேற்றின நண்பர்களுக்கு தமிழரின் திருமண சடங்கு பற்றி விளக்கம் கொடுக்கும் நேரம், "ஆணும், பெண்ணும் மாறி மாறி தாலி கட்டிக் கொள்வார்கள் தானே?" என்று சர்வசாதாரணமாகக் கேட்பார்கள். நான் அப்படி அல்ல என்று சொன்னால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதனை "ஆணுக்கு பாரபட்சம் காட்டும் விடயமாக" எடுத்துக் கொள்வார்கள்.

எனக்கு நேர்ந்த இந்த அனுபவம் ஏனையோருக்கும் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் தாலி கட்டிக் கொண்ட மணமக்களின் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம். ஏனெனில் அவர்களும் சுவிஸ் சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்கிறார்கள். அவர்களது பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஆகியோர் பெரும்பாலும் சுவிஸ்காரர்கள், அல்லது பல்வேறு ஐரோப்பிய மற்றும் பல உலக நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இங்கு வாழும் தமிழர்கள் குறைந்தது பத்து வேறுபட்ட இனத்தவருடன் நட்பாக இருப்பது சர்வசாதாரணமான விடயம். அவ்வாறான சூழலில் வாழும் மணமக்கள் தமது திருமண சடங்கை பார்ப்பதற்கு பல்லின நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பார்கள். வழமையான திருமணங்களில் நடப்பதைப் போன்று "ஆண் பெண்ணுக்கு தாலி கட்டினால்..." அது தான் இங்கே தவறான விடயமாகக் கருதப் படும்! அதை விட ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொண்டால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள்.

பண்பாடு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்ட பழக்க வழக்கம். அது காலத்திற்கு ஏற்றவாறு மாறக் கூடியது. ஒரு காலத்தில் மஞ்சள் கயிறில் தாலி கட்டியவர்கள் தங்கத்தால் தாலி செய்து போடவில்லையா? இதெல்லாம் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரு பண்பாட்டுப் பிறழ்வாக தெரியாதது அதிசயம்!

இன்றைக்கும் தமிழகத்தில், நீலகிரி மலைகளில் வாழும் இருளர் பழங்குடி இன மக்கள் மத்தியில் நடக்கும் திருமணச் சடங்கில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தாலி கட்டுகிறார்கள். உண்மையிலேயே ஒரு காலத்தில் இந்தப் பழக்கம் பரவலாக இருந்திருக்கும். ஆனால் ஆணாதிக்க சமுதாயம் வளர்ச்சி அடைந்த "நாகரிக" காலகட்டத்தில், தாலி பெண்ணுக்குரியதாக மட்டும் குறுக்கப் பட்டிருக்கலாம். சுவிஸ் மணமக்கள் அந்தப் பிழையை சரியாக்கிக் காட்டி இருக்கிறார்கள்.

பழமைவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலாக ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டிய மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, September 11, 2019

செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி

செனோத்டெல் (Zhenotdel): சோவிய‌த் யூனிய‌னில் இய‌ங்கிய‌ ஒரு க‌ம்யூனிஸ்ட் - பெண்ணிய‌க் க‌ட்சி. அது பற்றிய சில குறிப்புகள்.


1917 அக்டோப‌ர் சோஷலிச‌ப் புர‌ட்சியின் நோக்க‌ங்க‌ளில் ஒன்றாக‌ பெண்க‌ளின் விடுத‌லையும் அட‌ங்கி இருந்த‌து. சார் ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில் பெரும்பால‌ன‌ பெண்க‌ள் எழுத்த‌றிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மேல் த‌ட்டு வ‌ர்க்க‌ப் பெண்க‌ள் ம‌ட்டுமே க‌ல்விய‌றிவு பெற்றிருந்த‌ன‌ர். ஆக‌வே பெண்க‌ளை வீட்டு வேலைக‌ளில் இருந்து விடுத‌லையாக்கி, க‌ல்வி க‌ற்க‌ வைத்து, வேலைக்கும் அனுப்புவ‌தே புர‌ட்சியை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருந்த‌து.

இத‌ற்காக‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைமைப் பொறுப்புக‌ளில் இருந்த‌ (லெனினின் ம‌னைவி) ந‌டாஷா குருப்ஸ்க‌யா, இனேசா ஆர்ம‌ன்ட், ம‌ற்றும் அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை ஆகியோர் இணைந்து பெண்க‌ளுக்கான‌ க‌ட்சியை உருவாக்கினார்க‌ள். செனோத்டெல் என்ற‌ அந்த‌ இய‌க்க‌ம் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் அமைப்பு வ‌டிவ‌ம் கொண்டிருந்த‌து. ஆனால், கட்சிக்கு வெளியே சுத‌ந்திர‌மாக‌ இய‌ங்கிய‌து. சுருக்க‌மாக‌, அது முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளுக்காக‌ பெண்க‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சி.

சோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌வதும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அது ம‌ட்டும‌ல்லாது அர‌ச‌ செல‌வில் பிள்ளை ப‌ராம‌ரிப்பு, க‌ர்ப்பிணிப் பெண் தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய‌ விடுமுறை போன்ற‌ ப‌ல‌ உரிமைக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து.

அன்றைய‌ மேற்கைரோப்பாவில் வாழ்ந்த‌ பெண்க‌ள் இதையெல்லாம் நினைத்துக் கூட‌ பார்க்க‌ முடியாத நிலைமை இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பெண்ணிய‌ வ‌ர‌லாற்றில் செனோத்டெல் இய‌க்க‌ம் வ‌கித்த‌ ப‌ங்க‌ளிப்பு (க‌ம்யூனிச‌) எதிரிக‌ளாலும் இன்று வ‌ரை போற்ற‌ப் ப‌டுகின்ற‌து.

ப‌தினொரு வ‌ருட‌ங்க‌ளாக‌ இய‌ங்கிய‌ செனோத்டெல் அமைப்பு, 1930 ம் ஆண்டு ஸ்டாலினால் க‌லைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் நோக்க‌ங்க‌ள் பூர்த்திய‌டைந்து விட்ட‌ன‌ என‌ அப்போது அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து. ஆனால் ஏற்க‌ன‌வே அமைப்பின் உள்ளே விரிச‌ல்க‌ள் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌.

அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை முன்மொழிந்த‌ குடும்ப‌ங்க‌ளை ம‌றுசீரமைக்கும் கொள்கைக்கு பெரும‌ள‌வு ஆத‌ர‌வு கிடைக்க‌வில்லை. பெரும்பாலான‌ பெண்க‌ள் க‌ல்வி க‌ற்ப‌தையும், வேலைக்கு போவ‌தையும் த‌ம‌து உரிமைக‌ளாக‌ க‌ருதினாலும் பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌க் க‌ட‌மைக‌ளை மாற்றிக் கொள்ள‌ ம‌றுத்த‌னர்.

அதாவ‌து புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுத‌ந்திர‌ம் கிடைத்தாலும் பெண்களால் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஒரே நாளில் மாற்ற‌ முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. இத‌ற்கு க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌. மேலும் மதப் ப‌ழ‌மைவாத‌த்தில் ஊறிய‌ ம‌த்திய‌ ஆசியப் பகுதிகளில் ப‌ல‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. குறிப்பாக‌, பொது இட‌ங்க‌ளில் பூர்காவை க‌ழ‌ற்றி வீசிய‌ முஸ்லிம் பெண்க‌ளுக்கு ப‌ழ‌மைவாதிக‌ளால் உயிர‌ச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்ட‌து. சில‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

செனோத்டெல் பெண்ணிய‌த்தை ம‌ட்டும‌ல்லாது, க‌ம்யூனிச‌த்தையும் உய‌ர்த்திப் பிடித்த‌து. பெண்க‌ளே மாற்ற‌த்திற்கான‌ உந்து ச‌க்தி என்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லை மூல‌மே உண்மையான‌ சோஷ‌லிச‌ ச‌முதாய‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும் என‌ ந‌ம்பிய‌து. சோவிய‌த் யூனிய‌ன் மீது ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும் அது அனைத்துல‌க‌ பெண்க‌ளின் விடுத‌லைக்கு முன்னோடியாக‌ இருந்த‌து என்ற‌ உண்மையை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.