Monday, December 30, 2013

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தமிழ் மேட்டுக் குடி குழந்தைகள்

காளை மாடு, சிவப்பு நிறத் துண்டைக் கண்டால் மிரளுவதைப் போல, படிப்பால் உயர்ந்து, பதவியைப் பிடித்த, நடுத்தர வர்க்க ஈழத் தமிழ் இளைஞர்களும், சிவப்பு வர்ணத்தை எங்கே கண்டாலும் மிரளுகிறார்கள். "ஈழத்தில் எந்தவொரு வறுமைப் பட்ட இளைஞனும், இன்று சிவப்புத் தத்துவம் பேசிக் கொண்டிருக்கவில்லை. தங்களைப் போன்று நடுத்தர வர்க்கப் பிரதிநிதியாகி, கைநிறைய சம்பாதிக்க எண்ணுகிறார்கள்..." என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், "எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்" என்று சொல்வார்கள். இதுவரையில் எந்தவொரு உலக நாட்டிலும், அனைத்து பிரஜைகளும் முதலாளிகளாக வர முடியவில்லை. ஒரு காலத்தில், ஈழத்து வறுமைப்பட்ட இளைஞர்கள், கஷ்டப் பட்டு படித்து முன்னேற முடிந்தது. இலங்கையில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப் பட்ட காலத்தில் அதெல்லாம் சாத்தியமானது. இலங்கையில் வசதி வாய்ப்புக் கொண்ட நடுத்தர வர்க்கம் பல்கிப் பெருகுவதற்கு இலவசக் கல்வி வழி வகுத்தது. இலவசக் கல்வி மட்டுமல்ல, இலவச மருத்துவ வசதியும் வறுமைப் பட்ட இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவியது.

இன்று சிவப்பு நிறத்தைக் கண்டு மிரளும் இளைஞர்களுக்கு, தாங்கள் அனுபவித்த இலவச கல்வி/மருத்துவம் என்பன "சிவப்புத் தத்துவம்" என்பது தெரியாது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இடதுசாரிக் கட்சிகள் பலமாக இருந்ததால், ஒரு முதலாளித்துவ அரசு தவிர்க்கவியலாது சோஷலிச சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தி இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறை அந்த சலுகைகளை இழந்து கொண்டிருக்கிறது. கல்வி தனியார் மயமாகின்றது. மருத்துவமும் அதைத் தொடரலாம்.

உயர்கல்வி கற்று வாழ்க்கை வசதியை உயர்த்திக் கொள்ளலாம் என்று கனவு கண்ட, வறுமைப் பட்ட இளைஞர்கள் தலையில் இடி இறங்கி உள்ளது. முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு, இலங்கைப் பொருளாதாரத்தில் தாராள மயம் புகுத்தப் படுகின்றது. வெள்ளைப் போர்வை (White- collar workers) போர்த்திக் கொண்ட, நடுத்தர வர்க்க ஈழத் தமிழ் இளைஞர்கள், பொழுதுபோக்காக தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, இலங்கை அரசின் தாராள பொருளாதாரக் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கில் உள்ள வறுமைப் பட்ட இளைஞர்களை மட்டுமல்ல, தெற்கில் உள்ள வறுமைப் பட்ட இளைஞர்களையும், இவர்கள் பூச்சாண்டி காட்டும் "சிவப்புத் தத்துவப்" பக்கம் செல்ல விடாமல் தடுப்பது தான், ஸ்ரீலங்கா அரசின் நோக்கமும். அந்த நோக்கத்திற்காக தேசியவாதம், இனவாதம் போன்ற தத்துவங்களை போதிக்கிறார்கள். ஸ்ரீலங்கா முதலாளித்துவ அரசு, தேசியவாதம் அல்லது இனவாதத்தை, சிங்கள-தமிழ் இளைஞர்களுக்கு ஒரு போதைவஸ்து போன்று ஊட்டிக் கொண்டிருக்கிறது. தெற்கில் அரசு என்ன செய்கிறதோ, அதைத் தான் வடக்கு, கிழக்கில் தமிழ் மேட்டுக்குடியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். "சிவப்பு தத்துவம்" ஸ்ரீலங்கா அரசினதும், தமிழ் மேட்டுக்குடியினதும் பொது எதிரியாக உள்ளது. அதற்காக அவர்கள் எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேர்வார்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் வறுமைப் பட்ட இளைஞர்கள், தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் "சிவப்பு தத்துவத்தினால்" ஆகர்ஷிக்கப் பட்டிருந்தார்கள். "சிவப்பு தத்துவம்" வடக்கு, கிழக்கில் எந்தளவு பிரபலமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். 1977 ம் ஆண்டு, வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி "சோஷலிசத் தமிழீழம், சோஷலிச பொருளாதாரம்" வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது.

இடதுசாரி ஈழ விடுதலை இயக்கங்கள், மார்க்சிய லெனினிச தத்துவத்தை பின்பற்றுவதாகக் கூறித் தான், புதிய உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் சேர்த்துக் கொண்டன. மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டால், குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஈழத் தமிழ் இளைஞர்கள் "சிவப்புத் தத்துவத்தால்" ஈர்க்கப் பட்டிருந்தனர். அந்தக் காலங்களில், புலிகள் கூட சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகத் தான் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், முப்பதாண்டு கால ஈழப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. மேலைத்தேய ஏகாதிபத்திய நாடுகளின் ஆசியுடன் ஸ்ரீலங்கா அரசும், இந்திய அரசும் கூட்டுச் சேர்ந்து, "சிவப்பு தத்துவத்தை" மக்கள் மனதில் இருந்து அகற்றுவதற்கு பல வழிகளிலும் முயற்சித்தன. அதற்காக பல சூழ்ச்சிகள் பின்னப் பட்டன. அதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இன்று வென்றவர்கள் வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள். முப்பதாண்டு கால ஈழப் போரில் நடந்தது, தமிழின அழிப்பு மட்டுமல்ல, இடதுசாரி தத்துவ அழிப்பும் தான். அதற்கு பல உதாரணங்களை காட்டலாம்.

ஒரு காலத்தில், தெற்கில் ஜேவிபியும், வடக்கில் புலிகளும் ஒன்று சேர்ந்து, இலங்கை அரசை கவிழ்த்து விடுவார்கள் என்று, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன பயந்து கொண்டிருந்தார். "நல்ல வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று சிங்கள மேட்டுக்குடியும், தமிழ் மேட்டுக்குடியும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இலங்கையில் யுத்தம் நடக்க வேண்டும். ஆனால், இலங்கை அரசு கவிழக் கூடாது என்பது, சிங்கள-தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஜேவிபி, புலிகள் ஆகிய இரண்டு இயக்கங்களையும் "மார்க்சிஸ்டுகள்" என்று குற்றஞ்சாட்டி வந்தார். (உண்மையில், அவை இரண்டும் குட்டி முதலாளிய தேசியவாத இயக்கங்கள் ஆகும்.) ஆனால், "இலங்கையில் கம்யூனிச அபாயம்" பற்றி பயமுறுத்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உதவியை பெற்றுக் கொண்டார். ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு, வடக்கு-தெற்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் பயிற்சி அளிப்பதற்காக, பிரிட்டிஷ் SAS கூலிப்படை தருவிக்கப் பட்டது. அவர்கள் உருவாக்கிய STF எனும் கொலைப்படை, போரில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தது. ஏற்கனவே, 1971 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு, பிரிட்டிஷ் அரசு உதவியிருந்தது.

இலங்கையில், முதலாவது ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்த்தன, ஒரு சிங்கள-பௌத்த பேரினவாதி மட்டுமல்ல. தெற்காசியாவிலேயே முதன் முதலாக நவ-தாராளாவாத பொருளாதாரக் கொள்கையை (Neo- Liberalism) அறிமுகப் படுத்தியவர் அவர் தான். அது என்ன நவ-தாராளவாதம் என்று சிலர் அப்பாவித் தனமாக கேட்கலாம். அது தான் இன்றைக்கு உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றது.

இன்று, "சிவப்புத் தத்துவம் வேண்டாம்" என்று கொக்கரிக்கும் மத்தியதர வர்க்க தமிழ் இளைஞர்கள், நவ தாராளவாத பொருளாதாரத்தின் தாசர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர். அதனால் தான் இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, கை நிறையப் பணம் சம்பாதிக்க முடிகிறது. பீட்சா, பேர்கர், என்று அமெரிக்கக் கலாச்சாரத்தை ஒரு கை பார்க்க முடிகிறது. ஒரு பெரிய வீட்டில், சொகுசான வாழ்க்கை வசதிகளை அனுபவித்துக் கொண்டே, கார், அல்லது மோட்டார் சைக்கிளில் பவனி வர முடிகின்றது. சந்தர்ப்பம் வாய்த்தால், வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிகிறது.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிற்று? 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கையில் தாராளவாத பொருளாதாரத்தை புகுத்தியிரா விட்டால், இதெல்லாம் சாத்தியப் பட்டிருக்குமா? இந்தியாவில், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், அங்கு தாராளவாத பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. சோவியத் ஒன்றியம், மற்றும் பல சோஷலிச நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்த பின்னர், உலகில் நவ- தாராளவாத பொருளாதாரத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.

இலங்கை மட்டுமல்ல, இந்தியா கூட, இன்று நவ தாராளவாத பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றன. ஆனால், அப்படியான நிலைமை, நமது தமிழ் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு உவப்பான விடயம் தான். அவர்கள் பெரிதும் இதனை விரும்பி வரவேற்பார்கள். இன்றைக்குள்ள புதிய தலைமுறை ஈழத் தமிழ் இளைஞர்கள், பெரும்பாலும் எழுபதுகளுக்கு பின்னர், அதாவது ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தின் பின்னர் பிறந்தவர்கள்.  இலங்கையில், நவ தாராளவாதத்தை ஆதரிக்கும் இளைஞர்களை "ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் குழந்தைகள்" என்று அழைப்பதில் என்ன தவறு?

Friday, December 27, 2013

தென்னாபிரிக்காவில் கறுப்பின விடுதலைக்கு போராடிய வெள்ளையினத் தலைவர்

தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில், நெல்சன் மண்டேலாவை தவிர பிறரை உலகம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அதிலும், "வெள்ளையினத்தில் பிறந்த ஒருவர், கறுப்பின மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடினார்" என்று சொன்னால், இன்று கூட யாரும் நம்ப மாட்டார்கள். அவர் பெயர் "ஜோ ஸ்லோவோ"! (Joe Slovo; http://en.wikipedia.org/wiki/Joe_Slovo) லிதுவேனியாவில் இருந்து வந்து, தென்னாபிரிக்காவில் குடியேறிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர். மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் பற்றுக் கொண்டவர். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர உறுப்பினர்.

தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் தேசியவாத இயக்கமாக இருந்த, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ANC) தலைமைப் பொறுப்பை நெல்சன் மண்டேலா ஏற்ற பின்னர், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. கறுப்பின தேசியவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ANC "ஐரோப்பியர் அல்லாத அனைத்து இன மக்களினதும்" விடுதலைக்கான இயக்கமானது. "கருப்பர்கள் வெள்ளையர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. இந்தியர்களை நம்ப முடியாது" என்பன போன்ற பிற்போக்கான இனவாதக் கருத்துக்கள் களையப் பட்டன. இந்தியர்களின் அமைப்புகளுடனும், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஐக்கிய முன்னணி அமைப்பது மூலமே, கறுப்பின மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை, நெலசன் மண்டேலா உணர்ந்து கொண்டார்.

"தோழர் நெல்சன் மண்டேலா, தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார்!" நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் தான், அந்தத் தகவல் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) தானாகவே அந்த உண்மையை பகிரங்கப் படுத்தி இருந்தது. (SACP confirms Nelson Mandela was a member; http://www.bdlive.co.za/national/politics/2013/12/06/sacp-confirms-nelson-mandela-was-a-member) மண்டேலா கைது செய்யப் படும் வரையில் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். ஆயினும், அன்றைய நிறவெறி அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாக, அந்த உண்மையை மறைக்க வேண்டியேற்பட்டது. அன்றைய தென்னாபிரிக்காவில், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வெள்ளையர்களை மட்டுமல்லாது, கறுப்பர்களையும் உறுப்பினர்களாக கொண்டிருந்த ஒரேயொரு கட்சி ஆகும். நிறவெறி அரசு தடை செய்த முதலாவது அரசியல் கட்சியும் அதுவாகும்.

தென்னாபிரிக்க விடுதலைக்காக காந்தீய வழியில் போராடுவதை கைவிட்டு விட்டு, ஆயுதப் போராட்டத்தில் மண்டேலா நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்காக எத்தியோப்பியா சென்று துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று திரும்பி வந்தார். தென்னாபிரிக்காவில் தலைமறைவாக வாழ்ந்த நெல்சன் மண்டேலா, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக் குறைவாக இருந்ததினால், நிறவெறி அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். எனினும், அவர் உருவாக்கிய கெரில்லா இராணுவம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. "உம்கொந்தோ வே சிஸ்வே" (Umkhonto we Sizwe) என்ற பெயரிலான கெரில்லா இராணுவத்திற்கு மண்டேலாவுடன், ஜோ ஸ்லோவோவும் தலைமை தாங்கினார்.

நிறவெறி அரசினால், "கம்யூனிச பயங்கரவாதி" என்று அறிவிக்கப்பட்டு தேடப் பட்ட ஜோ ஸ்லோவோ,  தென்னாபிரிக்காவில் வாழ முடியாமல் புலம்பெயர்ந்து சென்றார். அவர் வெளிநாட்டில் வாழ்ந்த காலத்தில், அவரது குடும்பத்தினர் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகினார்கள். நிறவெறி அரசு, ஜோ ஸ்லோவோவின் மனைவி Ruth First னை பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது. ஜோ ஸ்லோவோ மாதிரி, அவரது மனைவி ரூத் பெர்ஸ்ட்டும் ஒரு யூதர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். ரூத் பெர்ஸ்ட்டும், அவரது 13 வயது பருவ மகளும், நிறவெறி ஆட்சியின் கீழ் பட்ட துன்பங்களை, "A World Apart" (http://www.imdb.com/title/tt0096464/)  என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில், வெள்ளையின கம்யூனிஸ்டுகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அந்தத் திரைப்படத்தை பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

உம்கொந்தோ வே சிஸ்வே நடத்திய இராணுவ தாக்குதல்கள், குறிப்பிடத் தக்களவு வெற்றி பெறவில்லை. ஆனால், நிலைமை எல்லை மீறிப் போவதை உணர்ந்த "சர்வதேச சமூகம்", மண்டேலாவை "அஹிம்சா வழியில் போராடிய காந்தீய வாதி" போன்று பிரச்சாரம் செய்து, நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர விரும்பியது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில், சோஷலிச நாடுகள் தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்திற்கு வேண்டிய உதவிகள் செய்ய முன்வந்தன. ஜோ ஸ்லோவோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவர் பிரிட்டன், சாம்பியா, அங்கோலா, மொசாம்பிக் போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் ஆதரவை திரட்டினார்.

ஒரு இடதுசாரி கெரில்லாப் படையான உம்கொந்தோ வே சிஸ்வே, "அப்பாவி வெள்ளையின மக்கள் மீது இனவாத தாக்குதல்கள் நடத்தியதாக"  வெள்ளையின நிறவெறி அரசும், அதன் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்து வந்தனர். வெள்ளையர்களினால் அடிமைப் படுத்தப் பட்டிருந்த தென்னாபிரிக்காவில்,  ANC மட்டும் கறுப்பின மக்களின்  விடுதலைக்காக போராடவில்லை. வேறு சில அமைப்புகளும் இருந்தன.  உதாரணத்திற்கு, ANC யில் இருந்து பிரிந்து சென்ற, Pan Africanist Congress (PAC) மிகத் தீவிரமான கறுப்பின தேசியவாத அமைப்பாக இயங்கியது. அது போன்ற பல குறுந் தேசியவாத இயக்கங்கள், வெள்ளையின பொது மக்கள் மேல் இனவாத தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கும் எல்லா நாடுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம்.

உம்கொந்தோ வே சிஸ்வே பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால்,அந்தத் தாக்குதல்கள் கம்யூனிச கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தன. முடிந்த அளவு உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலேயே குண்டுகள் வெடிக்க வைக்கப் பட்டன. அநேகமாக, இரவு நேரங்களில், அரசாங்க கட்டிடங்களே தாக்குதல் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப் பட்டன. "உம்கொந்தோ வே சிஸ்வே" மொசாம்பிக், அங்கோலா போன்ற சோஷலிச நாடுகளில் முகாம்களையும், அலுவலகங்களையும் அமைத்திருந்தது. அதன் போராளிகள், அங்கோலா, மொசாம்பிக் நாடுகளில் நடந்த யுத்தங்களில் பங்கெடுத்து நேரடி கள அனுபவம் பெற்றனர். அங்கோலாவில் MPLA, மொசாம்பிக்கில் FRELIMO ஆகிய மார்க்சிய-லெனினிச கட்சிகளுடன் அவர்கள் நல்லுறவை பேணி வந்தனர்.

தென்னாபிரிக்கா விடுதலை அடைந்த பின்னர், ஜோ ஸ்லோவோ தாயகம் திரும்பி வந்தார். அப்போது சோவியத் ஒன்றியமும், பிற சோஷலிச நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து கொண்டிருந்தன. அந்த தருணத்திலும், ஜோ ஸ்லோவோ கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் பற்றுக் கொண்டிருந்தார். (பார்க்க: Has Socialism Failed?; http://www.marxists.org/subject/africa/slovo/1989/socialism-failed.htm) தென்னாபிரிக்க வரலாற்றில் நடந்த முதலாவது ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்ட, ஜோ ஸ்லோவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடன் கூட்டரசாங்கம் அமைத்தது. ஜோ ஸ்லோவோ, 6-1-1995 அன்று புற்று நோயால் மரணமடைந்தார். அவர் இன்றளவும், தென்னாபிரிக்காவின் தேசியத் தலைவர்களில் ஒருவராக, எல்லா இன மக்களாலும் நினைவு கூரப் படுகின்றார்.


***************

நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி, பிபிசி தமிழோசை  "போராட்ட ஒப்பீடு: தென்னாபிரிக்கா - இலங்கை." (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131215_mandela_and_tamilstruggle.shtml) என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இரண்டு விடுதலைப் போராட்டங்களில் இருந்த குறை நிறைகளை ஒப்பிடுமாறு, பேராசிரியர் மு.திருநாவுக்கரசுவிடம் பேட்டி காணப் பட்டது. அந்த பிபிசி தமிழோசை பேட்டியில், பேராசிரியர் மு.திருநாவுக்கரசு சொல்லத் தவறிய உண்மைகள்: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்ஸின் போராட்டத்தை, அன்று உலகில் இருந்த அனைத்து சோஷலிச நாடுகளும் பகிரங்கமாக ஆதரித்தன. சோவியத் யூனியனின் முயற்சியினால், ஐ.நா. மன்றத்தில் பல தடவைகள் தென்னாபிரிக்க நிறவெறி அரசைக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டு வரப் பட்டன.

ஒரு இடதுசாரி தேசியவாதக் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தோழமைக் கட்சியாக இருந்ததால், சர்வதேச கம்யூனிஸ்டுகளின் ஆதரவை பெற்றுக் கொடுத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இடதுசாரி அமைப்புகள் தமது அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த தென்னாபிரிக்க கருப்பின மக்களும், "சர்வதேச கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் எமது நண்பர்கள்" என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப் படவில்லை. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம்மைக் காப்பாற்றும் என்று நம்பி இருக்கவில்லை. (அந்த நாட்டில், வலதுசாரி தேசியவாதக் கட்சி ஒன்றும் கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடியது. இன்று அதைப் பற்றி பேசுவதற்கு கூட ஒருவரும் இல்லை. நமது தமிழ் வலதுசாரிகள் கூட, இடதுசாரி மண்டேலாவை தானே தூக்கிப் பிடிக்கிறார்கள்?)

அது பனிப்போர் நிஜப் போராக மாறிய காலகட்டம். சோவியத் யூனியனும், அமெரிக்காவும் தெற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதிலிப் போரில் ஈடுபட்டன. அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து, கியூபப் படைகள் நேரடி யுத்தம் செய்தன. அந்த யுத்தத்தில் தென்னாபிரிக்கப் படைகள் தோல்வியடைந்தன. மண்டேலா விடுதலையாகி, கருப்பின மக்களும் கலந்து கொள்ளும் ஜனநாயக தேர்தல்கள் நடைபெறுமென உறுதிமொழி கிடைக்கும் வரையில், கியூபப் படைகள் வெளியேறவில்லை. (கியூபப் படைகளை வெளியேற்ற வேண்டுமென்பதற்காகவும், தென்னாபிரிக்காவில் மாற்றத்தை கொண்டு வர அமெரிக்கா சம்மதித்தது.)

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெள்ளையின மக்கள் மீது நிறவெறித் தாக்குதல் எதையும் நடத்தவில்லை. கருப்பின மக்கள் மத்தியில் நிலவிய, வெள்ளையருக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை கடுமையாக எதிர்த்துப் போராடியது. விடுதலைப் போராட்ட காலத்தில், வெள்ளையின மக்கள் மீது இனவாத தாக்குதல் நடந்துள்ளன. ஆனால், அவை விதிவிலக்காக நடந்த அசம்பாவிதங்கள். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தோழமைக் கட்சியான தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கூட "வெள்ளையர்களின் கட்சி" தான். இரண்டுக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்தது.

Thursday, December 26, 2013

பின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்


பின்லாந்து நாட்டில், தம்பாரே (Tampere) எனும் நகரில், வரலாறு காணாத கலவரம் ஒன்று நடந்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பின்னிஷ் இளைஞர்கள், முதலாளித்துவத்திற்கும், தேசியவாதத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, கலவரத் தடுப்பு பொலிசார் குவிக்கப் பட்டனர். இதனால் அந்த நகரில் கலவரம் வெடித்தது. நகரில் காணப்பட்ட முதலாளித்துவ சின்னங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பொலிஸ் வாகனங்களும் தாக்கப் பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப் பட்டனர். டிசம்பர் 6, பின்லாந்து நாட்டின் சுதந்திர தினமாகும். அன்று தம்பாரே நகரில் ஐஸ் ஹொக்கி விளையாட்டுப் போட்டி நடந்த மைதானத்தின் அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 


இந்தக் கலவரம் டிசம்பர் 6 ம் தேதி இடம்பெற்ற போதிலும், இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. உலகில் எங்காவது முதலாளித்துவ எதிர்ப்பு கலவரங்கள் நடந்தால், அந்த செய்திகளை தணிக்கை செய்வதை வாடிக்கையாக கொண்ட ஊடகங்கள் இதைப் பற்றி தெரிவிக்காததில் அதிசயமில்லை.

இந்த தகவல் பின்லாந்து ஊடகங்களில் மட்டுமே வெளியாகியது. சர்வதேச ஊடகங்கள் எதுவும் கவனம் செலுத்தவில்லை. கீழே ஒரு வீடியோவை இணைத்துள்ளேன். 

மேலதிக தகவல்களுக்கு:

Alternative Independence Day: Riots and shadow celebrations

Wednesday, December 25, 2013

கலாஷ்னிகோவ் (AK - 47) : ஒடுக்கப் பட்ட உலக மக்களின் பாதுகாப்புக் கருவி

AK - 47 எனும் தானியங்கி துப்பாக்கியை கண்டுபிடித்த மிகையில் கலாஷ்னிகோவ் தனது 94 வது வயதில் காலமானார். ஆயுதத்தை கண்டுபிடித்தவரின் பெயராலும் (கலாஷ்னிகோவ்), கண்டுபிடிக்கப்பட்ட வருடத்தினாலும் (AK 47) உலகம் முழுவதும் அறியப் பட்ட துப்பாக்கி, நூறுக்கும் அதிகமான தேசிய இராணுவங்களாலும், போராளிக் குழுக்களாலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. பாவிப்பதற்கு இலகுவானது என்பதால், கோடிக்கணக்கான துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப் பட்டன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கண்டுபிடிக்கப் பட்டாலும், பிற்காலத்தில் அதன் நட்பு நாடுகளுக்கும் உற்பத்தி இரகசியம் வழங்கப் பட்டது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து விடுதலை இயக்கங்களுக்கும், ஆரம்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட AK - 47 கிடைத்து வந்தது.

மிகையில் கலாஷ்னிகோவ் அந்த ஆயுதத்தை கண்டுபிடித்த அதே வருடம் பிரபலமடைந்தாலும், 1950 ல் திருத்தப் பட்ட வடிவமைப்பு இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. அறுபதுகளில் வியட்நாம் விடுதலைக்காக போராடிய வியட்காங் போராளிகள் தான் அந்த துப்பாக்கியை உலகறியச் செய்தார்கள். அவர்களை எதிர்த்து போரிட்ட அமெரிக்கப் படையினர் வைத்திருந்த, அமெரிக்க தயாரிப்பான M - 16 துப்பாக்கிகள், வியட்நாம் காலநிலைக்கு இயங்க மறுத்தன. அதே நேரம், வியட்காங் போராளிகளின் AK- 47 துப்பாக்கிகள் எந்தப் பிரச்சினையும் கொடுக்காமல் ஒத்துழைத்தன. எதற்கும் பிரயோசனமற்ற M - 16 களை போட்டு விட்டு, புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்த அமெரிக்கப் படையினர், இறுதியில் போராளிகளிடமிருந்து கைப்பற்றிய AK- 47 களை வைத்து போரிட வேண்டி இருந்தது.

சுவீடனில் டைனமைட் கண்டுபிடித்து கோடீஸ்வரனான நோபல், தனது பெயரில் பணப் பரிசில்கள் வழங்கிக் கொண்டிருந்தார். அதே நேரம், உலகப் புகழ் பெற்ற AK- 47 வை கண்டுபிடித்த கலாஷ்னிகோவ், அரசு வழங்கிய வீட்டுடனும், வாகனத்துடனும் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு கிடைத்த ஸ்டாலின் விருது, சோவியத் மக்களின் மரியாதை, இவற்றை தவிர வேறெந்த சொத்துக்களையும் சேர்த்து வைக்கவில்லை. தான் மேற்கத்திய நாடொன்றில் இருந்திருந்தால், கோடீஸ்வரனாக வந்திருக்கலாம் என்பதை தெரிந்து வைத்திருந்தும், வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக ஆசைப் படமால் வாழ்ந்தார். அவர் நினைத்திருந்தால், ரஷ்யா முதலாளித்துவ நாடாக மாறிய 1991 ம் ஆண்டே, AK- 47 க்கான காப்புரிமையை கேட்டுப் பெற்றிருப்பார். அதன் மூலம், ரஷ்யாவில் பெரிய பணக்காரனாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று, சாகும் வரை எளிமையாக வாழ்ந்து வந்தார்.

சோவியத் ஒன்றியம் உடைந்து, ரஷ்யா முதலாளித்துவ நாடாகிய பின்னரும், பழைய சோவியத் அரசுக்கு விசுவாசமானவராக வாழ்ந்து வந்தார். சர்வதேச ஊடகங்களுக்கான பேட்டியின் போது கூட, பழைய சோவியத் விழுமியங்களே சிறந்தவை என்று பாராட்டிப் பேசி வந்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ், எல்சின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் மீது மதிப்பு வைத்திருந்தார். இவ்வளவுக்கும், சிறு வயதில் அவரது குடும்பமும் "ஸ்டாலினிச கொடுங்கோன்மையினால் பாதிக்கப் பட்டது" என்பது குறிப்பிடத் தக்கது. கலாஷ்னிகோவின் தந்தையும், ஒரு சகோதரரும் சைபீரியா சிறை முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். அதற்காக, ஸ்டாலின் மேல் வன்மம் கொண்டு வாழவில்லை. ஏனெனில், வர்க்க எதிரிகள் என இனம் காணப் பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட சோவியத் புரட்சிக் காலகட்டத்தை புரிந்து கொள்ளுமளவிற்கு பக்குவப் பட்டிருந்தார்.

"ஒரு கொலைக் கருவியான கலாஷ்னிகோவ்(Ak-47) துப்பாக்கியை ஆராதிக்க முடியுமா?" என்று பலர் கேட்கின்றனர். அப்படிக் கேட்பவர்கள் எல்லோரும் மனிதநேய வாதிகள் அல்லர். தீவிர புலி ஆதரவாளர்களும் அந்தக் கேள்வியை எழுப்புவது வேடிக்கையாக உள்ளது. (உண்மையில் அவர்கள் "புலி ஆதரவாளர்கள்" அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் தமிழ் மத்தியதர வர்க்க ஆர்வலர்கள்.)

"Ak- 47 துப்பாக்கியை கண்டுபிடித்ததற்காக என்றைக்காவது வருத்தப் பட்டிருக்கிறீர்களா? உலகில் பல கொலைகளுக்கு காரணமாக இருப்பதால், தூக்கம் வராமல் தவித்திருக்கிறீர்களா?" என்று அதைக் கண்டுபிடித்த மிகையில் கலாஷ்னிகோவிடம், பல ஊடகவியலாளர்கள் நேரடியாகவே கேட்டுள்ளனர். அதனால் தனக்கு எந்த வருத்தமும் கிடையாது என்றும், தனது தேசத்தை பாதுகாப்பதற்காகவே அதைக் கண்டுபிடித்ததாகவும் கலாஷ்னிகோவ் பதிலளித்தார்.

உலகில் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆயுதங்களும் கொலைக் கருவிகள் தான். ஆனால், கனரக ஆயுதங்களின் பாவனை பற்றி கவலைப் படாத மேற்கத்திய நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும், AK- 47 போன்ற சிறு ஆயுதங்களை தடை செய்யப் படாத பாடுபடுகின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் படுவதற்கு கனரக ஆயுதங்களே காரணமாக இருந்துள்ளன என்பதை, தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கலாஷ்னிகோவ் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உலகில் பல விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அதை பயன்படுத்திக் கொண்டன. வல்லமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த தேசிய இராணுவங்களை எதிர்த்து, கெரில்லாப் போர் நடத்தி வெற்றி பெற்றன. இலகுவாக கையாளக் கூடியது, மலிவாகக் கிடைப்பது, பாரம் குறைந்தது என்பன அதன் சிறப்பம்சங்கள். 

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், கலாஷ்னிகோவ் தான் கெரில்லாத் தாக்குதல்களுக்கு பெருமளவு பயன்படுத்தப் பட்டது. வேட்டைத் துப்பாக்கிகளும், சிறிய ரக இயந்திரத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ் நிலையங்களை தாக்கி அழிக்க முடிந்தது. ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படைகள் பரவலாக AK- 47 பயன்படுத்துவதற்கு சில வருட காலம் எடுத்தது. அதற்குள், தாராளமான அளவுக்கு AK- 47 பாவித்த ஈழ விடுதலை இயக்கங்கள், கணிசமான அளவு வெற்றிகளை குவித்து விட்டிருந்தன.

பாகிஸ்தானில், ஆப்கானிய முஜாகிதின் குழுக்களிடமிருந்து ரஷ்ய தயாரிப்பு கலாஷ்னிகோவ் வாங்கும் வரையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப் பட்ட AK- 47 தான் ஈழப் போராளிகளின் கைகளில் தவழ்ந்தன. (இந்தியத் தயாரிப்பு தரமற்றது என்றும், விரைவில் சூடாவதாகவும் போராளிகள் குறைப் பட்டனர்.) புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கிய காலத்தில், AK- 47 துப்பாக்கிகளின் பாவனை, புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களுக்கு பேருதவியாக இருந்தது. 

AK- 47 தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்திருக்கும் இந்தியாவே, தனது படையினருக்கு அவற்றை வழங்காமல், SLR (Self-Loading Rifle) போன்ற துப்பாக்கிகளை வழங்கியது ஏன் என்பது ஒரு புரியாத புதிர். பாகிஸ்தான் எல்லைப் போரில் பயன் மிக்கதாக இருந்த SLR, புலிகளின் AK- 47 தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது.

இன்றைக்கும் உலகம் முழுவதும் "கலாஷ்னிகோவ் மாதிரியான சிறிய துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அதைக் களைய வேண்டும் என்றும்." அமெரிக்காவும், மனித உரிமை நிறுவனங்களும் கூறி வருகின்றன. மேம்போக்காக பார்த்தால், மனிதர்கள் கொல்லப் படுகிறார்கள் என்ற அக்கறையில், மனிதநேயத்தோடு சொல்லப் படுவதாக தெரியலாம். இது உலக நாடுகளில் நடக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களை அழிப்பதற்கான மறைமுகமான திட்டம் என்பதை பலரால் உணர முடியாது. 

உலகம் முழுவதும் கலாஷ்னிகோவ்க்களை அழித்து விட்டால், அமெரிக்கா விற்கும் விலை கூடிய ஆயுதங்களை வாங்கும் வசதி பெற்ற தேசிய இராணுவங்களின் ஆதிக்கம் நிலைத்து நிற்கும். உலகில் உள்ள அனைத்து கொலைக் கருவிகளையும் அழித்து விடும் காலம் வந்தால், கலாஷ்கினிகோவ்களையும் அழித்து விடலாம். அது வரையில், உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக் கருவியாக கலாஷ்னிகோவ் தொடர்ந்தும் இருக்கும்.

Tuesday, December 24, 2013

ஈழத் தமிழர்களுக்கு சோஷலிசம் மீது கசப்பான அனுபவம் உள்ளதா?

//தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது.// என்று தமது இடதுசாரி அல்லது கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு பின்வரும் காரணங்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். //டட்லி வயிற்றில் மசாலா வடை என இனவாத கூச்சலிட்டவர்கள், இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். மேலும் சிங்கள மொழிக்கு மட்டும் அந்தஸ்த்து கொடுக்கும் இலங்கை யாப்பை எழுதியவரும் கொல்வின் ஆர் டி சில்வா என்னும் புகழ் பெற்ற கம்யுனிஸ்ட். // (குறிப்பு: கொல்வின் ஆர்.டி. சில்வா ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ட்ராஸ்கிஸ்ட்)


மேற்குறிப்பிட்ட வாதம் வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டிருந்தாலும், வரலாற்றை திரித்து, மறைமுகமாக தமிழ் மக்கள் மனதில் கம்யூனிச எதிர்ப்பு எனும் நஞ்சை ஊட்டும், விஷமத்தனத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.

வலதுசாரிகளோ அல்லது இடதுசாரிகளோ அல்லது லிபரல் வாதிகளோ, எவையாயினும், அவை இறுதியில் தமிழ், சிங்களமென இரண்டாக பிளவுபட்டுச் சென்றுள்ளமையே, இலங்கையின் வரலாறாகக் காண முடிகிறது. இது தனி மனிதரில் இருந்து, கட்சிகள் வரை பொருந்தும்.

1956 ஆம் ஆண்டு ஐ.தே.க.வில் இருந்து தமிழ் அமைச்சர்கள், தமிழ் எம்.பி.க்கள், தமிழ் உறுப்பினர்கள் வெளியேறியது போல, 1976 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தமிழ் தலைவர்கள் பிரிந்து சென்று, "செந்தமிழர் ஆயிடுவோம்" என்ற தமிழ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

இலங்கையில் இடதுசாரி இயக்கங்களை, குறிப்பாக சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பதற்கு, பேரினவாத ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகளையும், இந்த இடத்தில் மறந்து விடக் கூடாது. இலங்கையின் முதலாவது பிரதமரும், மேற்கத்திய சார்பு லிபரல்வாதியுமான டி.எஸ். சேனநாயக்க, "ஐம்பதுக்கு ஐம்பது கோரிய" ஜி.ஜி. பொன்னம்பலத்தை தனது அரசாங்கத்தில் அமைச்சராக சேர்த்துக் கொண்டார். அன்று ஆட்சிக்கு வரக் கூடிய அளவு பலத்துடன் இருந்த இடதுசாரிக் கட்சிகளை தடுப்பதும், இடதுசாரி சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பி விடுவதுமே, டி.எஸ். சேனநாயக்கவின் நோக்கமாக இருந்தது.

சுருக்கமாக சொன்னால்: "இலங்கையில் இடதுசாரியத்திற்கு எதிராக, சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் கூட்டுச் சேர்ந்தது." துரதிர்ஷ்டவசமாக, டி.எஸ்.சேனநாயக்கவின் தீர்க்கதரிசனம் கொண்ட சூழ்ச்சி பலித்து விட்டது. அதன் மூலம், இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாள நினைத்த, சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேறியது. அதே நேரம், ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற தமிழரை அமைச்சராக வைத்துக் கொண்டே, டி.எஸ். சேனநாயக்க மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்தார்.

" 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய  தேசிய கட்சியுடன், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (இலங்கை சமஷ்டிக் கட்சி) பங்கெடுத்து கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டது. 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும் பான்மை எட்டாத நிலையில், ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியுடன் இடது சாரிகளும் தமிழரசுக் கட்சியும் இணைந்த ஒரு கூட்டரசாங்கத்தை உருவாக்க கலாநிதி என்.எம்.பெரேரா முயற்சித்தார். அதற்காக அவர் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடினார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் அப்போது யாழ்ப்பாணத்தில் நின்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன், என்.எம். பெரேரா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கூட்டரசாங்கம் அமைப்பது பற்றிய விடயங்களை கொழும்பில் உள்ள தனது நண்பரான திரு. மு.திருச்செல்வத்துடன் பேசுமாறு செல்வநாயகம் கூறினார். ஆனால் தமிழ் வலதுசாரியான திருச்செல்வம், சிங்கள தரகு முதலாளிய கட்சியான ஐ.தே.க.வுடன் உடன் பாட்டுக்கு வர விரும்பினார். அதனால், என்.எம். பெரேராவுடன் பேசாமலே, திருச்செல்வம் அவரை புறம்தள்ளினார் என்பது உண்மை."   (தகவலுக்கு நன்றி : www.nerudal.com)

இலங்கையின் சிக்கலான இனப் பிரச்சினையை, "சிங்களவர்+தமிழர்=எதிரிகள்" என்று இலகுவாக புரிந்து கொள்வது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சிங்கள வலதுசாரிகள் மட்டுமல்ல, தமிழ் வலதுசாரிகள் கூட ஆரம்பத்தில் இருந்தே, இடதுசாரி சக்திகளை தமது வர்க்க எதிரிகளாக கருதி வந்தனர். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டு தமிழ் தேசியக் கட்சிகளும், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பதை விட, சிங்களப் பேரினவாதிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதையே பெரிதும் விரும்பினார்கள்.

பிரிட்டன் உருவாக்கிய பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பூர்ஷுவா அரசுக் கட்டமைப்பும் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டது. தேர்தல் அரசியல் சாக்கடையில் புரண்டெழும் எந்தப் பன்றியும் சுத்தமாக இருக்க முடியாது. வாக்காளர்களை இலகுவாக கவர முடியும் என்பதால், அனைத்து தேர்தல் கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. சிங்களப் பேரினவாத கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்.

சமசமாஜக் கட்சி போன்ற ட்ராஸ்கிசவாதக் கட்சிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சமூக ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தன. அதாவது, தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதே ட்ராஸ்கிசவாதிகளின் புரட்சிகர தத்துவம் ஆகும்.தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, கம்யூனிஸ்டுகளுக்கும், ட்ராஸ்கிஸ்டுகளுக்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து புரட்சியை நடத்துவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள். ஆனால், ட்ராஸ்கிச கட்சிகள், பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, அரசாங்கத்தை மாற்றி சோஷலிச சீர்திருத்தங்களை (புரட்சி அல்ல) கொண்டு வரலாம் என்று நம்புகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எழுதிய ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரும், முன்னாள் LSSP ட்ராஸ்கிஸ்டுகள் தான் .

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. குருஷேவ் முன்மொழிந்த "சமாதான சகவாழ்வு" கொள்கையின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பூர்ஷுவா அரசாங்கத்தில் பங்கெடுப்பது ஊக்குவிக்கப் பட்டது. ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆயுதேமந்திய புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. குருஷேவ் அதைக் கைவிட்டு விட்டு, அமைதி வழியிலான ஆட்சி மாற்றத்தை முன்மொழிந்தார்.

சர்வதேச கம்யூனிச அகிலத்தில் ஏற்பட்ட கொள்கை மாற்றம், இலங்கை கம்யூனிஸ்ட் அரசியலிலும் எதிரொலித்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களை கவர்வதற்காக இனவாதம் பேசியது.  மே தின ஊர்வத்தில் "தோசை, மசால வடே அப்பிட்ட எபா" கோஷம் எழுப்பப் பட்டது. உண்மையில், அன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே அந்தக் கோஷம் எழுப்பப் பட்டது. ஆனால், அதன் இனவாத உள்ளடக்கம் காரணமாக தமிழ் மக்களை அன்னியப் படுத்தியது.

1972 ம் ஆண்டு, இலங்கை பிரிட்டிஷ் முடியாட்சியை துறந்து குடியரசு ஆனது. ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்த கொல்வின் ஆர்.டி. சில்வா புதிய அரசியல் யாப்பை எழுதுவதற்கு நியமிக்கப் பட்டார். "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, தமிழ் வலதுசாரிகள் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அவர் ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான தமிழ் தேசியவாதிகளுக்கு, ட்ராஸ்கிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் வலதுசாரிகள், அந்த யாப்பு சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்ற உண்மையை காண மறுக்கின்றனர். 

1971 ம் ஆண்டு, ஜேவிபி தலைமையில் நடந்த சிங்கள குட்டி முதலாளிய இளைஞர்களின் எழுச்சி, அந்த யாப்பை எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. அதாவது, சிங்கள குட்டி முதலாளிய வர்க்கத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக, அந்த யாப்பு அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது. இதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மட்டுமல்ல, சிங்கள பாட்டாளி மக்களின் அபிலாஷைகளும் புறக்கணிக்கப் பட்டன. இதன் மூலம், கொல்வின் ஆர்.டி. சில்வா, தனது சோஷலிசக் கொள்கைக்கே துரோகம் இழைத்தார்.

"தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது." என்பது தமிழ் வலதுசாரிகளின் கற்பனையான அனுமானம். தமிழ் மக்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. பாராளுமன்ற அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் தங்களது சொந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளையே நம்பவில்லை. அதனால் தான், எண்பதுகளுக்கு பின்னான காலங்களில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு, புலிகள் போன்ற ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர். அந்தக் காலங்களில், மார்க்சிய லெனினிசக் கொள்கை கொண்ட விடுதலை இயக்கங்கள் கூட தோன்றின. பெருமளவு தமிழ் மக்கள் அவற்றையும் ஆதரித்தனர்.

தமிழ் மக்களுக்கு சோஷலிசத்தின் மேல் ஈர்ப்பு இருந்த காரணத்தால் தான், 1977 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட வட்டுகோட்டை தீர்மானத்தில் "சோஷலிசத் தமிழீழம்" உருவாக்கப் படும் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் கூட தமது பிரசுரங்களில் சோஷலிசத் தமிழீழத்திற்கு போராடுவதாக கூறி வந்தனர். தமிழ் மக்களுக்கு சோசலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவம் இருந்தது உண்மையாக இருந்தால், அன்று யாருமே சோஷலிசத் தமிழீழத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார்கள்.

Monday, December 09, 2013

காஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத தமிழர்களும்


ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்த கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் கை விடப் பட்டு, தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுக்கும், தரகு முதலாளியக் கொள்கை மட்டுமே கோலோச்சுகின்றது. ஒரு சிலர் இதற்கு "தலைமுறை இடைவெளி காரணம்"  என்று சாட்டுப் போக்குச் சொல்லலாம். உண்மையில், பனிப்போர் முடிந்த பின்னர், உலகம் தலைகீழாக மாறி விட்டது. அதற்கு முன்னர், போலி சோஷலிச அரசு நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சமூக - ஜனநாயக கட்சிகளாக மாறி விட்டன. உலகளவில் ஏற்பட்ட இயங்கியல் மாற்றம் ஈழப் போராட்டத்தையும் பாதிக்காமல் விட்டிருக்காது.

இன்றைக்கும் சோவியத் யூனியன் இருந்திருந்தால், மண்டேலா தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழித்திருப்பார். தனது 95 வது வயதில், ரொபின் தீவில் ஒரு கைதியாக இறந்திருப்பார். மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும், மண்டேலாவின் மரணத்தை "ஒரு பயங்கரவாதியின் மறைவாக" கொண்டாடி இருப்பார்கள்.

பனிப் போர் முடிந்த பின்னர் தான், மண்டேலா சிறையில் இருந்து விடுதலையானார். அதற்குப் பின், அவர் தன்னை ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று ஒதுக்கிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் கை கோர்த்தார்.  மண்டேலா கைகோர்த்த மேலைத்தேய நாடுகள், தென்னாபிரிக்காவிலும், நமீபியாவிலும், அங்கோலாவிலும் கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்த நிறவெறி அரசை ஆதரித்து வந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

நெல்சன் மண்டேலா  மகிந்த ராஜபக்சவுடனும் கை கோர்த்திருப்பார். ஆனால், தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மண்டேலா ஆட்சி நடத்திய காலத்தில், மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கவில்லை. அந்தக் காலங்களில், சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் ஜனாதிபதியாக இருந்தார். சந்திரிகாவும் ஈழப் போரில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றவர் தான். மண்டேலா அவருடன் கை கோர்ப்பதற்கு தயங்கவில்லை. "மண்டேலா தன்னை மகளாக கருதுவதாக..." சந்திரிக்கா சொல்லிப் பெருமைப் பட்டார்.

இவ்விடத்தில் எழும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை ஒன்று தான். அமெரிக்க ஏகாதிபத்திய தந்தையின் அரவணைப்பில், அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் பிள்ளைகள் தான். நவ காலனிய அமைப்பை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள் கை கோர்த்துக் கொள்கிறார்கள். மக்களாகிய நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நவ காலனிய தரகு முதலாளிகளை எதிர்க்க வேண்டும்.

இறுதியில் மண்டேலாவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசப் போக்கை பின்பற்றி வந்தார். (இல்லாவிட்டால், அவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.) ஆயினும், அவர் தனது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற கியூபா, பிற கம்யூனிச நாடுகளின் உதவிகளை புகழ்ந்து பாராட்டினார். மண்டேலாவை விடுதலை செய்து, ஜனாதிபதியாக்கிய "நன்றிக் கடனுக்காக", கியூபாவுடனான உறவை துண்டிக்க வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்தியது. மண்டேலா அந்த பயமுறுத்தல்களுக்கு அடி பணிய மறுத்தார். இன்னும் இன்னும் பிடல் காஸ்ட்ரோவையும், கியூபாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மண்டேலா, தென்னாபிரிக்க அரசியலில் பல தவறுகளை விட்டிருக்கலாம். (அவரது மாஜி மனைவி வின்னி கூட கடுமையான விமர்சனங்களை வைத்தார்.) இருந்த போதிலும், சர்வதேச மட்டத்தில் மண்டேலா நேர்மையான அரசியல் தலைவராக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, லிபரல் ஜனநாயகவாதி. ஆனால், கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை, சமநீதிக்கான போராட்டத்தை ஆதரித்து பேசினார். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் உலக கம்யூனிச நாடுகளின் ஆதரவு மட்டும் இருந்திரா விட்டால், "ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ்" (ANC) என்றைக்கோ அழித்தொழிக்கப் பட்டிருக்கும். 

மண்டேலா அதனை பல தடவைகள் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார். "கொடுங்கோல் நிறவெறி அரசினால் நாங்கள் ஒடுக்கப் பட்ட நேரம், கம்யூனிச நாடுகள் தான் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டின. மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள், அடக்குமுறையாளர்களுடன் கூடிக் குலாவின. இன்று அவர்கள் எமது கம்யூனிச நண்பர்களுடனான தொடர்பை முறிக்கச் சொல்கிறார்கள். நாங்கள் அந்தளவு நன்றி மறந்தவர்கள் அல்ல." என்று மண்டேலா விளக்கம் அளித்தார். (பார்க்க:தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்) அப்படிப் பட்ட நேர்மையான மனிதரான மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மீண்டும் கம்யூனிச வெறுப்பை மக்கள் மனதில் விதைக்க எண்ணுகின்றனர். அதைக் காணும் பொழுது, ஆயாசமே எஞ்சுகின்றது. தமிழர்கள் அந்த அளவுக்கு நன்றி மறந்த இனமாக இருப்பது கவலைக்குரியது.

மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி தெரியாத, புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகள் இப்படியான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்: 
//மண்டேலா, மற்றும் பிற போராளிகளுடன், பிடல் காஸ்ரோவை ஒப்பிடமுடியாது. பிடல் அமெரிக்காவின் எதிரியாக மட்டுமே இருக்கிறார். இன விடுதலைக்காக போராடும் மக்களை விட ராஜபக்சேக்களுடனேயே கை கோர்த்துக் கொள்கிறார்...// ஓ ... அப்படியா?

மண்டேலா தன்னை சிறையில் போடுவதற்கு காரணமாக இருந்த, தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசின் ஜனாதிபதி கிளார்க்குடன் கை குலுக்கி, நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர். 2008 வரையில் அமெரிக்கா மண்டேலாவின் பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. மண்டேலா, தன்னை  பயங்கரவாதி என்று இழிவு படுத்திய,  மேற்கத்திய நாட்டுத்  தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டவர். ஆனாலும், அவர் ஒரு காலத்தில் கியூபா செய்த உதவிகளை மறக்கவில்லை. நமது தமிழ் தேசியவாதிகள் மறந்து விட்டார்கள்.

மேற்கத்திய நாடுகள் எல்லாம், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு கொடுத்து உதவிக் கொண்டிருந்த காலத்தில், பிடல் காஸ்ட்ரோ மண்டேலாவின் ANC க்கு உதவினார். தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட நமீபியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவினார். கியூபப் படைகள், அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தை எதிர்த்து போரிட்டன. ஆயிரக் கணக்கான கியூப வீரர்கள், நிறவெறிக்கு எதிரான போரில் வீரச் சாவடைந்தனர். சிறையில் இருந்து விடுதலையடைந்த மண்டேலா, கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய உதவியை பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.

இது ஒரு பொது அறிவு. 1983 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், இந்தியாவிடம் இருந்து பயிற்சியும், நிதியும் கிடைத்தன. 83 ஜூலைக் கலவரத்திற்கு பிறகு தான், மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 1987 ல், அதாவது இந்திய இராணுவத்துடன் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் தான், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து நிதியும், ஆயுதங்களும் வரத் தொடங்கின. 1983 க்கு முன்னர் யார் ஆயுதங்களும், பயிற்சியும் வழங்க முன்வந்திருப்பார்கள்? 

அந்தக் காலத்தில் தான், புலிகள் இயக்கம் சர்வதேச மார்க்சிய இயக்கங்களுடனும், கம்யூனிச நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 1978 ம் ஆண்டு, ஹவானாவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டில் புலிகள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். அதில் இரண்டு பேர் சோவியத் யூனியனில் கல்வி கற்றவர்கள். அப்போது லண்டனில் இருந்த LTTE அமைப்பாளர் கிருஷ்ணர், கம்யூனிச நாடுகளிடம் உதவி கோரும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, கியூபாவிற்கு அனுப்பி வைத்தார். ஹவானா மகாநாட்டில் அவை விநியோகிக்கப் பட்டன.

கியூபா சென்ற புலிகள் பிடல் காஸ்ட்ரோவுடன் கூட பேசி இருக்க முடியும். எழுபதுகளில் சில நேரம், புலிகளுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் தருவதற்கு கியூபா முன்வந்திருக்கலாம். (ஏன் அப்படி நடக்கவில்லை என்பதை பின்னால் பார்ப்போம்.) அருளரின் லங்கா இராணி நாவலில் இது மறைமுகமாக குறிப்பிடப் பட்டுள்ளது. 1977 ம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் அகதிகள், லங்கா ராணி கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். லங்கா ராணி கப்பலில் சென்று கொண்டிருந்த தமிழ் அகதிகள், ஆயுதப் போராட்டத்தின் அவசியம் பற்றி விவாதிக்கின்றனர். அதில் ஒருவர் கியூபாவிடம் இருந்து உதவி பெற முடியும் என்று கூறுகின்றார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி, அந்த நாவல் விபரிக்கவில்லை.

லங்கா ராணி நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிஜமான மனிதர்கள். அவர்களின் உரையாடல்களும் உண்மையில் நடந்தவை. கியூபாவிடம் உதவி பெற்று ஆயுதப் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்தவர்கள், பின்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது பங்களிப்பை வழங்கி இருந்தனர். இன்றைக்கு அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம், அல்லது போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்.

அன்று கியூபாவோ, பிடல் காஸ்ட்ரோவோ, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பை வழங்கியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம், "சிங்கள அரசுடனான நட்புறவல்ல". கியூபா மட்டுமல்ல, லிபியா, சிரியா, தெற்கு யேமன் போன்ற நாடுகள் கூட, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கி வந்தன. அதே நேரம்,இலங்கை அரசுடனும் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தன. ஏனென்றால், அந்தக் காலத்தில் வளர்ந்து வந்த "அணிசேரா நாடுகள்" என்ற சர்வதேச அமைப்பை சீர்குலைக்க விரும்பவில்லை.

கியூபா ஈழப் போராட்டத்திற்கு நேரடியாக உதவாததற்கு, இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. பனிப் போர் காலகட்டத்தில், கியூபா லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மட்டுமே தனது செயற்பாடுகளை கொண்டிருந்தது. சோவியத் யூனியனும் அதையே விரும்பியது. (கேஜிபி யின் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட "The Mitrokhin Archive" நூலில் இது விரிவாக எழுதப் பட்டுள்ளது.) அதற்குப் பதிலாக, தெற்காசிய நாட்டு விடுதலை இயக்கங்களுடனான தொடர்பை, பாலஸ்தீன இயக்கங்கள் பேணி வந்தன.

அதாவது, உலகம் அன்றிருந்த நிலையில், ஒரு ஈழ விடுதலை இயக்கம், கியூபாவிடமோ, அல்லது சோவியத் யூனியனிடமோ உதவி கோரி இருந்தாலும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) தான் அதற்கு பொறுப்பேற்று இருக்கும். இறுதியில் அதுவே நடந்தது. அன்று லண்டனில் இயங்கிய மார்க்சிய-லெனினிச ஈரோஸ் இயக்கத்திற்கும், புலிகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. ஈரோஸும், PLO வும், இலங்கையில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு, லெபனானில் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தன.

லெபனானில் PLO விடம் இராணுவப் பயிற்சிக்கு சென்ற முதல் பிரிவு புலி உறுப்பினர்களில், அதன் தலைவர் உமா மகேஸ்வரனும் ஒருவர். பின்னாளில் உமா மகேஸ்வரன், பிரபாகரனுக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டதும், அதனால் இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டதும் தனிக் கதை. புலிகளிலும், அதிலிருந்து பிரிந்த புளொட்டிலும், ஆரம்பத்தில் லெபனான் பயிற்சி எடுத்தவர்களே பிற உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். 1983 ஜூலைக் கலவரத்திற்கு பின்பு தான், இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தது.

அந்தக் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக தன்னை காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்றது. புலிகளின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தவர்களும் மார்க்சிஸ்டுகள் தான். சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் (உதாரணத்திற்கு: கவிஞர் புதுவை இரத்தினதுரை), ட்ராஸ்கிச கட்சிகளில் இருந்தும் (உதாரணத்திற்கு: அன்டன் பாலசிங்கம்), பல மார்க்சிஸ்டுகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தனர். இந்திய பத்திரிகை ஒன்று, அன்றைய யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை பேட்டி எடுத்தது. அப்போது, "தமிழீழம் கிடைத்தால் எப்படியான அரசியல் - பொருளாதார கொள்கை நடைமுறைப் படுத்தப் படும்?" என்று கேட்ட கேள்விக்கு, கிட்டு கூறிய பதில் "புரட்சிகர கம்யூனிசம்"! (ஆதாரம்: விக்கிலீக்ஸ்)

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், "கம்யூனிசப் புலிகளை" கண்டு அஞ்சியதில் வியப்பில்லை. ஜேவிபி யும், புலிகளும் சேர்ந்து, இலங்கையை கம்யூனிச நாடாக்கி விடுவார்கள் என்று பயந்தார். அவ்வாறே மேலைத்தேய நாடுகளில் பிரச்சாரம் செய்தார். "மார்க்சியப் புலிகளை" அழிப்பதற்கு பிரிட்டனிடம் உதவி கோரினார். கம்யூனிச புலிகளை வளர விடக் கூடாது என்று சூளுரைத்துக் கொண்டு களமிறங்கிய பிரிட்டனின் SAS கூலிப்படையினர், இலங்கையில் விசேட அதிரடிப் படை (STF)என்ற புதிய இராணுவத்தை உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த பல தமிழினப் படுகொலைகளுக்கு STF அத்துமீறல்களே காரணமாக இருந்தன.

அநேகமாக, பனிப்போரின் இறுதிக் காலத்தில், புலிகளின் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இயக்கத்தினுள் இருந்த இடதுசாரிகள் ஓரங் கட்டப் பட்டனர். வலதுசாரிகளின் கை ஓங்கியது. வலதுசாரிகள் புலிகளை அமெரிக்க சார்பு இயக்கமாக வழிநடத்திக் கொண்டு சென்றார்கள். மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு நிறுவனங்கள், போராட்டத்திற்கு நிதியும், ஆயுதங்களும் அனுப்பும் அளவிற்கு பலம் பெற்று விளங்கின. அவை நேரடியாகவே மேற்கத்திய அரசாங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன. 

புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் நிதி, சர்வதேச மூலதனத்தின் ஓரங்கமாக ஐக்கியமாகியது. முரண்நகையாக அதுவே, புலிகளின் அழிவுக்கும் உதவியது. இறுதிப் போர் நடந்த காலத்தில், மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், தமது ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தினார்கள். அமெரிக்காவில் "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" என்ற Lobby group உருவானது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்ட, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் டாலர் நிதி வழங்கினார்கள். இன்றைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு, சிஐஏ  யின் கண்காணிப்பின் கீழ், அமெரிக்காவில் தான் இயங்குகின்றது. 

இதிலே ஒரு வேடிக்கையான முரண்பாட்டை கவனிக்க வேண்டும். வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், ஒரு பக்கத்தில் தங்களை புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டனர். மறு பக்கத்தில், புலிகளை அழிக்கத் துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆதரவளித்தனர். அது எவ்வாறு சாத்தியம் என்பது, அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்கா புலிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது என்ற விடயம், இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே வெளிப்படையாக தெரிந்தது. 

அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்கு முயன்ற சில தமிழர்களை, FBI மடக்கிப் பிடித்தது. இன்று வரையில், அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்து சமுத்திரத்தில், சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அவற்றை ஸ்ரீலங்கா கடற்படை தேடி அழிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. இது எல்லாவற்றையும் விட, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிளேக், புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்:"புலிகள் மீண்டும் போருக்கு செல்லத் துணிந்தால், இலங்கை அரசின் பக்கம் நின்று, புலிகளை அழிப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குப்போம்..." என்று கூறினார்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம், கியூபா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சுட்டிக் காட்டி இருந்தது. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மேற்படி உண்மையை மறைத்துக் கொண்டே,"பிடல் காஸ்ட்ரோ ராஜபக்சேக்களுடன் கை கோர்த்துக் கொண்டதாக" திரிபு படுத்தி பிரச்சாரம் செய்தனர். இன்றைக்கும் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படியான பிரச்சாரத்தை முன்னெடுக்கா விட்டால், தமிழ் மக்கள் மத்தியில் தங்களது இரட்டை வேஷம் கலைந்து விடும் என்று அஞ்சுகின்றனர். புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்த விடயம் அமபலப் பட்டு விடும் என்று அஞ்சுகின்றனர்.

ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கம் எதிர் நிலை வல்லரசுகளையும் சமமாக கருதி இருக்க வேண்டும். முதலாளித்துவம், சோஷலிசம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான இராஜதந்திர அணுகுமுறை இல்லாமல் போனது ஒரு பெரிய குறைபாடு. புலிகளின் அல்லது தமிழர்களின் பலவீனத்தை, ராஜபக்சேக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு, இப்போது புலம்புவதில் அர்த்தமில்லை.

*****************

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்
2.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு
3."மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!

Friday, December 06, 2013

ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே, ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் தமிழினவாதிகள், யதார்த்தத்தை மறந்து சிந்திப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது புதிதாக முளைத்துள்ள போலி இடதுசாரிகள் சிலர், இடதுசாரியம் பேசிக் கொண்டு, புதிய மொந்தையில் பழைய கள்ளை இறக்கித் தருகிறார்கள். கள்ளில் கம்யூனிச வாசனையுடன் தமிழ் தேசியத்தை கலந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற தேசியமும், சோஷலிசமும் கலந்த இயக்கங்கள் முளைப்பது, வரலாற்றில் இதுவே முதல் தடவை அல்ல. இன்று ரஷ்யாவில் உள்ள, "தேசிய போல்ஷெவிக் கட்சி" யுடன் அவர்களை ஒப்பிடலாம். அந்தக் கட்சியின் கொடியிலும் அரிவாளும், சுத்தியலும் சின்னம் இருக்கும். ஆனால், கொள்கை அளவில் மிகத் தீவிரமான ரஷ்ய தேசியவாதிகள். அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களை ஏய்ப்பதற்காக, கம்யூனிஸ்டுகள் போன்று பாவனை செய்கிறார்கள்.

சமரன் குழு என்ற பெயரில், ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்வதாக சொல்லிக் கொண்டு, தாமாகவே கற்பனை செய்து புனைந்த கட்டுக்கதைகளை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார்கள். "புதிய ஜனநாயகம்" இதழில், அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தும் கட்டுரைகள் வந்துள்ளன. முகநூலில் "தமிழ் இனியன்" என்ற பெயரில் இயங்கும் ஒருவர், என்னுடன் ஈழம் பற்றிய விவாதத்திற்கு வந்தார். அதில் அவர் தவறாக புனைந்து கூறிய கருத்துக்களை, நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. 

குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், டெலோ, புலிகள் ஆகிய இயக்கங்களுக்கு இடையில் நிலவிய ஒத்த கருத்துள்ள கொள்கைகள் பற்றிய விவாதம் எழுந்த பொழுது அதை மறுத்துரைத்தார். டெலோ, புலிகள் இவற்றிற்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளாக "இந்திய கைப் பாவைகள்" என்ற அளவுகோலை பயன்படுத்தினார். அதாவது, புலிகளைத் தவிர்ந்த பிற இயக்கங்கள், இந்தியக் கைப் பாவைகளாக இருந்தன என்பது தான், அவரைப் பொறுத்த வரையில் முக்கியமான "கொள்கை வேறுபாடு." அது சரியானதா என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஆகிய இயக்கங்களுக்கு இடையில் காணப்பட்ட, கொள்கை ரீதியான சில ஒற்றுமைகள்


 • இரண்டுமே வலதுசாரி தேசியவாதத்தை கொண்டிருந்தன. உதட்டளவில் கொஞ்சம் இடதுசாரியம் பேசின. இரண்டுமே இராணுவ கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அரசியல் வகுப்புகள் நடத்தப் பட்டாலும், அரசியல் பிரிவு வளர்வதற்கு ஊக்குவிக்கப் படவில்லை. அரசியல் பிரிவு கூட, இராணுவ வெற்றிகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு தான் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. 

 • டெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியமை, அந்தக் காலத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய இராணுவத் தாக்குதல் ஆகும். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில், நாற்பதுக்கும் குறையாத பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. டெலோ அதனை வீடியோ படமாக்கி, அதனை ஊர் ஊராக கொண்டு சென்று காட்டியது. அதன் மூலம், நிறைய புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடிந்தது. இராணுவ வெற்றியால் கவரப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரும் டெலோவுக்கு ஆதரவளித்தனர். 

 • பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். புலிகள் இராணுவ முகாம்களை தாக்கிய போதெல்லாம், வீடியோ படப்பிடிப்பாளர்களும் கூடச் சென்றார்கள். அவர்கள் படமாக்கிய வீடியோக்கள், வெளிநாடுகள் வரையில் பரவின. வீடியோ பிரச்சாரம் மூலம், புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டதுடன், மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கொண்டனர்.

 • இடதுசாரி தன்மை கொண்ட ஈழ விடுதலை இயக்கங்களில், எல்லோரும் அரசியல் பேசுமளவிற்கு பயிற்சியளிக்கப் பட்டது. ஆனால், வலதுசாரி இராணுவவாத இயக்கங்களான டெலோவும், புலிகளும் "அரசியல் ஆலோசகர்" என்ற தனியான பதவியை உருவாக்கினார்கள். டெலோவுக்கு சத்தியேந்திரா அரசியல் ஆலோசகராக இருந்தார். புலிகளுக்கு முன்னர் நித்தியானந்தனும், பின்னர் அன்டன் பாலசிங்கமும் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள்.

டெலோ, புலிகள் இரண்டு இயக்கங்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமைகளை சுட்டிக் காட்டியதும், தமிழ் இனியன் பின்வரும் விளக்கம் ஒன்றை தந்திருந்தார். கீழே, தமிழ் இனியனின் கூற்றை அப்படியே தருகிறேன்:

//இரண்டு இயக்கங்களுமே, ஏன் எல்லா இயக்கங்களுமே, தமிழீழ விடுதலையை முன்வைத்தே தோன்றின. அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. ஆனால், பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப் பாவையாக மாறினார்கள். அப்படி ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. எனவே, புலிகளும், டெலோவும் ஒத்த கருத்தில் இருந்தனர் எனச் சொல்வது அபத்தமானது.//

"எல்லா இயக்கங்களும் "தமிழீழ" விடுதலையை முன்வைத்தே தோன்றின." என்று தொடங்குவதே அவரது அரசியல் பாமரத்தனத்தை காட்டி விடுகின்றது. டெலோ, புலிகள், புளொட் ஆகிய மூன்று இயக்கங்கள் மட்டுமே "தமிழீழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயர்களிலேயே தமிழீழம் இருக்கும். ("தமிழீழ" விடுதலை இயக்கம், "தமிழீழ"விடுதலைப் புலிகள், "தமிழீழ"மக்கள் விடுதலைக் கழகம் )  ஈரோஸ், ஈபிஆர்எல்எப் ஆகியன "ஈழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயரிலேயே ஈழம் இருக்கிறது. ("ஈழப்" புரட்சி அமைப்பு, "ஈழ" மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி )

தமிழீழம், ஈழம் இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இருக்கிறது. அது தான் கொள்கை வேறுபாடு.  முதன்முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தான், தமிழீழம் என்ற சொல்லை பயன்பாட்டில் கொண்டு வந்தது. புத்தளம் முதல் அம்பாறை வரையிலான தமிழீழ வரைபடத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். அந்தக் கோட்பாட்டை, டெலோவும், புலிகளும் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொண்டன. புளொட் பிற்காலத்தில் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் ஆகும். ஆகவே அவர்களும், அதே தமிழீழத்தை ஏற்றுக் கொண்டமை புரிந்து கொள்ளத் தக்கது.

எழுபதுகளில், புலிகள் தோன்றிய சம காலத்திலேயே, ஈரோஸ் தோன்றி இருந்தது. ஈரோஸ் இயக்கத்தினர், தமிழீழம் என்ற சொல்லை நிராகரித்து, அதற்குப் பதிலாக ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அதற்கு ஒரு விசித்திரமான விளக்கம் கொடுத்தார்கள். "பாலஸ்தீனர்கள் அரபு-பாலஸ்தீனம் கோரவில்லை. அவர்களது தாயகம் பாலஸ்தீனம். அதே போல, நாம் தமிழர்களாக இருந்தாலும், எமது தாயகம் ஈழம்" என்றார்கள்.

அதாவது, தமிழீழம் என்ற பெயரில் இனவாத தொனி காணப் படுவதாகவும், ஈழம் என்பதற்குள் முஸ்லிம்களும் அடங்குவார்கள் என்பது அவர்களது கொள்கை. ஈரோஸ், ஈழ தேசத்தின் பிரஜைகளுக்கு  "ஈழவர்கள்" என்று பெயர் சூட்டி இருந்தது. பிற்காலத்தில், ஈரோஸில் இருந்து பிரிந்து சென்ற ஈபிஆர்எல்ப் இயக்கம், "ஈழம்" என்ற பெயரை தானும் சுவீகரித்துக் கொண்டது. (ஈழவருக்கு பதிலாக "ஈழ மக்கள்" என்ற பதத்தை பயன்படுத்தியது.)

தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புலிகள், புளொட் முன்மொழிந்த தமிழீழ வரைபடத்திற்கும், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் முன்மொழிந்த ஈழ வரைபடத்திற்கும் இடையில் வித்தியாசம் இருந்தது. தமிழீழ வரைபடத்தில் புத்தளம் மாவட்டம் சேர்க்கப் பட்டிருந்தது. ஈழ வரைபடத்தில் அது நீக்கப் பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, மலையகத் தமிழர்கள் வாழும் மலைநாட்டுப் பிரதேசம் இணைக்கப் பட்டிருந்தது. ஈரோஸும், ஈபிஆர்எல்ப் உம், மலையகத் தமிழ் மக்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். புலிகளும், டெலோவும் அவர்களை அலட்சியப் படுத்தினார்கள். ஈழப்போரின் பிற்காலத்தில், வன்னியில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் புலிகளில் இணைந்து போரிட்டது வேறு கதை. ஆனால், புளொட் அவர்களை ஏற்கனவே அரசியல் மயப் படுத்தி இருந்தது.

இந்த இடத்தில், இன்னொரு கொள்கை வேறுபாட்டையும் நாம் மறந்து விடலாகாது. உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களிலும், வலதுசாரி, இடதுசாரி வித்தியாசம் இருக்கும். ஈழ விடுதலைப் போராட்டத்திலும் அது நடந்தது. டெலோ, புலிகள் ஆகியன வலதுசாரி இயக்கங்களாக தோற்றம் பெற்றன. அவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலதுசாரி தேசியவாதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டன. ஆனால், இரண்டு இயக்கங்களிலும் தலைமைப் பொறுப்பில் சில இடதுசாரி உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு, சில இடதுசாரி கோஷங்களை முன்வைத்தார்கள். உதாரணத்திற்கு: சோஷலிசத் தமிழீழம். ஏற்கனவே, வட்டுக்கோட்டை மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கையிலும் சோஷலிசத் தமிழீழம் என்றே குறிப்பிடப் பட்டது. இவ்வாறான சில இடதுசாரி கோஷங்களை தவிர, நடைமுறையில் வலதுசாரி அரசியல் தத்துவமே பின்பற்றப் பட்டது.

//அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. // (தமிழ் இனியன்)

அப்படியான பொதுமைப் படுத்தலே தவறானது. ஈழப் போராட்ட வரலாற்றில் எதையுமே கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. டெலோ, புலிகள் ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு, "வல்வெட்டித்துறை தொடர்பு" ஒரு காரணமாக அமைந்திருந்தது. டெலோ தலைவர்கள் தங்கத்துரை, குட்டிமணி; மற்றும் புலிகளின் தலைவர்கள் பிரபாகரன், மாத்தையா ஆகியோர், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

பல தசாப்தங்களாக, வல்வெட்டித்துறை படகோட்டிகள், அடிக்கடி படகுகளில் தமிழ்நாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகளாக இருந்தாலும், அந்த தொடர்புகள் தலைமறைவு இயக்கங்களுக்கும் பிரயோசனமாக இருந்தன. அவர்கள் இந்தியாவில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து விற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். டெலோவும், புலிகளும், "வல்வெட்டித் துறை தொடர்புகளை", தமிழீழ அரசியலுக்கு பயன்படுத்தி வந்ததால் தான், ஒரு கட்டத்தில் பிரபாகரன் கூட டெலோ இயக்கத்தில் சேர்ந்து செயற்பட முடிந்தது.

தமிழ் இனியன் குறிப்பிடும் "பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும்", புலிகள் - புளொட் உறவில் இருக்கவில்லை. புலிகள் அமைப்பில் இருந்து உமா மகேஸ்வரன், சுந்தரம் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றதும், இரண்டு குழுக்களும் ஒன்றையொன்று எதிரிகளாக கருதிக் கொண்டன. "பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது போல, உமாமகேஸ்வரன் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்தார்." சென்னை, பாண்டி பஜாரில், பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த செய்தி. பிளவின் ஆரம்ப காலங்களில், இரண்டு குழுவினரும், மாறி மாறி எதிர் தரப்பு உறுப்பினர்களை கொலை செய்தார்கள்.

//பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப்பாவையாக மாறினார்கள். // (தமிழ் இனியன்)

ஆரம்பத்தில், இந்திய அரசு அவர்களை புறக்கணித்து வந்தது. ஈழ விடுதலை இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டில் புகலிடம் கோரி இருந்தாலும், அங்கும் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் ஏற்பட்ட தொடர்பு ஓரளவு காப்பாற்றியது. அதுவும் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே சாத்தியமானது.

1983 ம் ஆண்டுக்குப் பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. ஜூலை இனக்கலவரம், அதனால் இந்திய-இலங்கை அரசுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை, போராளிக் குழுக்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய மத்திய அரசு, அனைத்து இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சியளிக்க முன்வந்தது. புலிகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியா ஆயுதமும், பயிற்சியும் கொடுத்த காரணத்தினால், ஐந்து பெரிய இயக்கங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

டெலோவுக்கு கருணாநிதியும், புலிகளுக்கு எம்ஜிஆரும் நிதியுதவி வழங்கினார்கள். ஆனால், இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தெரிந்தே அதனை செய்தார்கள். டெலோ இந்திய மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்தது உண்மை தான். ஆனால், அந்தக் காலத்தில் அதை யாரும் இழிவாகக் கருதவில்லை. மாறாக, அது "பெருமைக்குரிய விடயமாக" கருதப் பட்டது. டெலோவும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் "இந்திய தொடர்பை"  சொல்லிக் காட்டி, அரசியல் பிரச்சாரம் செய்து வந்தது. ஏனென்றால், இந்தியா படையனுப்பி ஈழம் வாங்கித் தரும் என்ற மாயை, அன்றைய தமிழ் மக்கள் மனதில் இருந்தது. பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்தியாவை "தாய் நாடு" போன்று கருதி வந்தனர்.

இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஏதோ ஒரு வழியில் கட்டுப் படுத்தி வந்தது. தமிழ்நாட்டில் அவர்களை சுதந்திரமாக இயங்க விட்டதாக காட்டிக் கொண்டாலும், RAW வுக்கு தகவல் கொடுக்கும் பலரை இயக்க மேல் மட்டங்களில் வைத்திருந்தது. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் RAW ஊடுருவி இருந்தது. புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்.

டெலோ இந்திய மத்திய அரசின் செல்லப் பிள்ளையாக இருந்திருந்தால், எதற்காக புலிகளுடன் மோதல் வெடித்த காலத்தில் அதனை கைவிட்டது? டெலோவை அழித்த புலிகள், பெருந்தொகையான இந்திய ஆயுதங்களை கைப்பற்றியதுடன், "டெலோ இந்தியக் கைப் பாவையாக செயற்பட்டதாக" மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். ஆனால், அப்போதும் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படவில்லை. (பிற்காலத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பொழுது தான், அந்த விரிசல் தோன்றியது.) யாழ்ப்பாணத்தில் டெலோவை தடை செய்த புலிகளை, இந்தியா தனது நாட்டில் தடை செய்யவில்லை. ஆகவே, இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம். பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை, இந்தியா முன்கூட்டியே அனுமானித்திருக்கலாம்.

1987-1990 வரையில், இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டீஎல்எப் ஆகியன இந்தியாவின் கைப் பாவைகளாக மட்டுமல்ல, அதற்கும் மேலே கூலிப்படைகளாக பயன்படுத்தப் பட்டன. ஆனால், இந்திய இராணுவம் வெளியேறும் நேரம், அவர்களை புலிகளின் கரங்களில் ஒப்படைத்து விட்டு ஓடி விட்டது. மேற்படி இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட, ஆயிரக் கணக்கான "தமிழ் தேசிய இராணுவ" இளைஞர்களும் புலிகளால் படுகொலை செய்யப் பட்டார்கள். இந்தியா நினைத்திருந்தால், தனது "கைப் பாவைகளை" காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக புலிகளின் கை ஓங்குவதற்கு அனுமதித்தது.

//(இந்தியாவின் கைப்பாவை ) ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. // (தமிழ் இனியன்)

1987 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், புலிகள் இயக்கம் இந்தியாவுடன் முரண்பட்டது. மிகப் பெரிய இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்வதற்கும் துணிந்தது. அதற்கு முன்னர் இந்தியா புலிகளையும் தனது கைக்குள் வைத்திருந்தது. முதன் முதலாக இந்தியாவிடம் இருந்து விலகியது புலிகள் அல்ல. எழுபதுகளில் இருந்து, ஈரோஸ் PLO வுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பிட்டளவு இளைஞர்களை லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்பியது. அதே மாதிரி, புளொட் PFLP  இடம்  பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டது.

1984 ம் ஆண்டு, புளொட் இந்தியாவை விமர்சிக்கும் "வங்கம் தந்த பாடம்" என்ற சிறு நூலை, தமிழ் மக்கள் மத்தியில் விநியோகித்தது. (பங்களாதேஷ் பிரிவினையில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் அந்த நூலில் விபரிக்கப் பட்டிருந்தன.)   புளொட் இயக்கம், இந்திய அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளில் வாங்கிய ஆயுத தளபாடங்களை, ஒரு கப்பலில் கடத்திக் கொண்டு வர முயற்சித்தது. அந்த விடயம், இந்தியாவுக்கு தெரிய வந்த பின்னர், இந்தியக் கடற்படையினர் புளொட்டின் ஆயுதக் கப்பலை கைப்பற்றினார்கள். ஒரு புளொட் குழுவினர், மாலைத்தீவு வர்த்தகர் ஒருவரின் கூலிப்படையாக சென்று சதிப்புரட்சி மூலம் மாலைத்தீவை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சதிப்புரட்சியை முறியடித்த இந்திய இராணுவம், புளொட் கூலிப் படையினருக்கு கடுமையான தண்டனை வழங்கியது.

இந்தியாவுக்கும் பிற இயக்கங்களுக்கும் இடையிலான உறவு, அப்படி ஒன்றும் சிறப்பாக இருக்கவில்லை. சென்னையில் இருந்த டெலோவின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, இந்தியாவை விட்டு நாடுகடத்தப் பட்டார். யாழ்ப்பாணத்தில், அமெரிக்க அலன் தம்பதிகள் கடத்தலில் ஈடுபட்ட ஈபிஆர்எல்எப் மீது, இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுத்தார்.  (சி.ஐ.ஏ. என்று குற்றஞ்சாட்டி கடத்தப்பட்ட அலன் தம்பதிகள், இந்திரா காந்தியின் பயமுறுத்தலின் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.) இந்தியா இன்னொரு முக்கியமான தடைக் கல்லை போட்டது. இடதுசாரி ஈழ விடுதலை இயக்கம் எதுவும், தமிழ்நாட்டில் இருந்த நக்சல்பாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை, இந்தியா விரும்பவில்லை. அந்த இயக்கங்கள் தன்னிச்சையாக எடுத்த, அவ்வாறான முயற்சிகள் யாவும் தடுக்கப் பட்டன. 

தமிழ் இனியன் ஒரேயடியாக 1987 காலகட்டத்திற்கு தாவுகிறார். ஆனால், அப்போது கூட நிலைமை அவர் நினைப்பது போல இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் போய் இறங்கியதும், ஈழத் தமிழ் மக்கள் அவர்களை இரு கரம் நீட்டி, மகிழ்வுடன் வரவேற்றார்கள். அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் இந்தியப் படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்ததும், மக்கள் அதையும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். இந்தியப் படைகளை, யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் வரவேற்றதற்கு காரணம், அவர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு. நீண்ட காலமாக, இந்தியா படையனுப்பி தங்களை காப்பாற்றும் என்று, தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளின் வருகைக்குப் பின்னர், இரண்டு மாதமாக நிலவிய சமாதானம் குலைந்தது. இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. யுத்த காலத்தில் இந்திய இராணுவம் தனது கோர முகத்தை காட்டியது. இந்தியப் படைகள் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன, புலிகளுக்கு தமிழ்ப் பொது மக்களின் அனுதாபத்தை பெற்றுத் தந்தது. ஒரு காலத்தில் வரவேற்கப்பட்ட இந்திய இராணுவம், அதே தமிழ் மக்களால் வெறுக்கப் பட்டது.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெறுத்தாலும், இந்தியாவை நிராகரிக்கவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் இருந்து அரசியல் தீர்வு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பு போன்ற இன்றைய தமிழ்த் தலைமைகள், தமக்கு இந்திய ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். 

அதிகம் பேசுவானேன், புலிகளின் அழிவுக்கு முன்னர், தமிழகத்தில் நெடுமாறன் , வைகோ போன்ற புலி ஆதரவு அரசியல்வாதிகள், புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள். "தமிழீழம் அமைந்தால், அது ஒருக்காலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படாது." என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள்.  இப்போதும், "இலங்கையில் சீனா கால் பதிக்கிறது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்."என்று இந்தியாவுக்காக கவலைப் படுகிறார்கள்.

தமிழ் இனியன் சொல்வது போல, "புலிகள் இந்திய கைப் பாவை ஆகாமல் இருந்ததால் தான், மக்கள் ஆதரவை பெற முடிந்தது" என்பது உண்மையானால், இன்று தமிழக தமிழினவாதிகள் அனைவரும், ஈழத் தமிழ் மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டிருக்கும். 

Thursday, December 05, 2013

கம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா?


தமிழ் தேசியத்தின் பேரில், முதலாளியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஆதரிக்கும் வலதுசாரிகளின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கான பதில்கள்:
__________________________________________________________________________________________

கேள்வி: இப்போது எங்கே இருக்கிறான், உண்மையான கம்யூனிஸ்டு? ரஷ்யாவிலா, சீனாவிலா, கியூபாவிலா?


 • எதற்காக அவ்வளவு தூரம் போகிறார்கள்? அவர்களின் சுற்றாடலில் உழைக்கும் வர்க்க மக்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், ஏழைகள், அடித்தட்டு மக்கள் யாருமே இல்லையா? குறைந்த பட்சம், அவர்களது குடும்பத்தில் யாருமே பகிர்ந்துண்டு வாழ மாட்டார்களா?கேள்வி: கம்யூனிசம் எமது ஈழப் போராட்டத்துக்கு பின்னடைவாகவே இருந்திருக்கிறது. புளொட், ஈபிஆர்எல்எப்., டெலோ எல்லாம், கம்யூனிச சித்தாந்தங்களை கொண்டவை. இவை எல்லாமே, தமிழ் சிறுபான்மை இனத்திற்கு எதிரான போராட்டத்தில், அரசுடன் இணைந்தே செயற் பட்டு இருக்கிறார்கள். ஈரோஸ் பாலகுமார் மட்டுமே ஒரு "உண்மையான கம்யூனிஸ்ட்"???


 • இது முற்றிலும் தவறான தகவல். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களாக காட்டிக் கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில், சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. புலிகள் கூட சோஷலிசத் தமிழீழம் கேட்பதாக சொல்லித் தான் மக்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "மார்க்சியப் புலிகளை" அடக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரிட்டன் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு பயிற்சி வழங்கியது.

 • டெலோ கம்யூனிசம் பேசவில்லை. அது தீவிர தமிழ் தேசியம் பேசிய, இன்னொரு புலி இயக்கமாக இருந்தது. டெலோவுக்கும், புலிகளுக்கும் இடையில் கொள்கை முரண்பாடு எதுவும் இருக்கவில்லை. பிளாட், ஈபிஆர்எல்ப், ஈரோஸ் ஆகியன மார்க்சியத்தை தங்களது சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால், அடிப்படையில் அவை எல்லாம் தமிழ் தேசியவாத இயக்கங்கள் தான். அவர்களுக்கு தமிழ் தேசியம் முதன்மையானது, கம்யூனிசம் இரண்டாம் பட்சம் தான். மேலே குறிப்பிட்ட இயக்கங்கள், அரசுடன் சேர்ந்து கொண்டதற்கு காரணம், புலிகளுடன் ஏற்பட்ட மோதல். புலிகள் அவர்களை இயங்க விடாமல் தடை செய்த பின்னர் தான் அது நடந்தது. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் புலிகளும் அரசுடன் சேர்ந்து இயங்கினார்கள்.

 • ஈரோஸ் பாலகுமார், புலிகளுடன் சேர்ந்து விட்ட ஒரே ஒரு காரணத்திற்காக, அவரை உண்மையான கம்யூனிஸ்டு என்று போற்றுவது அபத்தமானது. புலிகளுடன் சேர்ந்த பின்னர், அவர் மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக தமிழ் தேசியம் பேசினார்.


கேள்வி : ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா போன்ற "கம்யூனிச நாடுகள்" தானே, ஈழப் போராட்டத்தை நசுக்குவதற்காக, ஸ்ரீலங்கா அரசுக்கு உதவி செய்தன?


 • ரஷ்யாவும், சீனாவும் கம்யூனிச நாடுகள் அல்ல. அவை கம்யூனிசத்தை கைவிட்டு, முதலாளித்துவ நாடுகளாகி இருபது வருடங்கள் கடந்து விட்டன. வியட்நாம், கியூபா கூட முதலாளித்துவ பொருளாதாரத்தை படிப்படியாக ஏற்றுக் கொண்ட நாடுகள் தான். பனிப்போரின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவ-கம்யூனிச கொள்கை முரண்பாடு காலாவதியாகி விட்டது. இன்று எல்லா நாடுகளும், தமது சொந்த நலன்களை மட்டுமே கவனித்துக் கொள்கின்றன. அதே நேரம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய முதலாளித்துவ நாடுகளும், போராட்டத்தை சிதைக்க, புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவிய நாடுகள் என்ற உண்மையை மூடி மறைக்கும் காரணம் என்ன?


கேள்வி: இனிமேலாவது ஒரு கம்யூனிச நாடோ அல்லது கட்சியோ மலர வாய்ப்பிருகின்றதா?


 •  இதனை இப்படியும் புரிந்து கொள்ளலாம். இனிமேலாவது தமிழீழமோ ஆல்லது தமிழீழத்திற்கான கட்சியோ மலர வாய்ப்பிருக்கின்றதா? பிரிட்டிஷ் காலனிய அரசு உருவாக்கிய ஸ்ரீலங்கா என்ற அதிகார அமைப்பை தகர்ப்பதற்கு, அல்லது நாட்டை பிரிப்பதற்கு பிரிட்டிஷ் (அல்லது அமெரிக்க) ஏகாதிபத்தியம் சம்மதிக்கப் போவதில்லை. புலிகளைப் போன்று, கடற்படை, வான்படை வைத்திருக்கும் சர்வ வல்லமை பொருந்திய இயக்கமாக இருந்தாலும், இறுதியில் ஏகாதிபத்தியம் அசுர பலத்தை பாவித்து ஒடுக்கவே செய்யும். (இறுதியில் அதுவே நடந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.) அதனால் தான், புலிகளின் போராட்டத்தை, சர்வதேச இடதுசாரிகள் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக புரிந்து கொண்டார்கள்.

 • புலிகள் ஒரு தேசியவாத இயக்கமாக, தீவிர வலதுசாரிகளாக இருக்கலாம். முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம். இருப்பினும், அதைக் கூட அழிக்க வேண்டுமென விரும்பியவர்கள், ஒரு கம்யூனிச நாட்டை பொறுத்துக் கொள்வார்களா? அதனால் தான், வெற்றி வாய்ப்பு அருகில் இருந்தும், நேபாளத்து மாவோயிஸ்டுகள் கடைசியில் ஏகாதிபத்தியத்துடன் சமரசமாக போகும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

 • பனிப்போர் காலத்தில், உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்திருந்த காலத்தில், ஒரு புதிய கம்யூனிச நாடு உருவாவது இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த நிலைமை இன்று இல்லை. அதற்காக, சோஷலிசத்திற்கான உழைக்கும் வர்க்க மக்கள் தமது போராட்டத்தை கைவிடக் கோருவதும், ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டு விட்டு, இலங்கை பேரினவாத அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதும் ஒன்று தான். வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள்.கேள்வி: அதிகாரத்தை நிராகரிக்கும் கம்யூனிசம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றும் பொழுதே முதல் கோணல் ஏற்படுகின்றது அல்லவா?


 • அது யாருடைய அதிகாரம் என்பது தான் இங்கே எழும் கேள்வி. ஒரு கட்சியின் அதிகாரமா? அல்லது மக்களின் அதிகாரமா? வெறுமனே ஒரு கட்சி, அது தமிழீழக் கட்சியாக இருந்தாலும், கம்யூனிசக் கட்சியாக இருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றினால், முன்பிருந்த அதே அரசு தான் தொடர்ந்தும் இருக்கும். பழைய அதிகாரிகளின் இடத்தில் புதிய அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். அது மட்டுமே வித்தியாசம்.

 • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோஷலிஸ்ட் கட்சிகளின் இரண்டாம் அகிலத்தில் ஒரு முக்கிய பிளவு தோன்றியது. "ஒரு  கட்சி, அரசு  அதிகாரத்தை கைப்பற்றினால் போதும், மாற்றங்களை கொண்டு வந்து விடலாம்" என்று நம்பியவர்கள், சோஷலிசக் கட்சி என்ற பெயரில் பாராளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றினார்கள். அவர்கள் சமூக-ஜனநாயகக் கட்சிகள் என்ற பெயரில் இப்போதும் பல நாடுகளில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்று வரையில், எந்த நாட்டையும், சோஷலிச நாடாக மாற்றிக் காட்டி சாதனை படைக்கவில்லை. அன்றைய கொள்கை வேறுபாடு காரணமாக மூன்றாம் அகிலம் உருவானது. அதில் பங்கு கொண்ட கட்சிகள் தம்மை கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அழைத்துக் கொண்டன.

 • உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல. மாறாக, மக்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது ஆகும். மக்களை அதற்காக தயார் படுத்துவதே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை ஆகும். மக்கள் தம்மைத் தாமே ஆளும் வகையில் ஒரு மக்கள் அரசு அமைப்பார்கள். ரஷ்யாவில் அது சோவியத் என்று அழைக்கப் பட்டது. ரஷ்யாவை தொடர்ந்து, ஜெர்மனி, ஹங்கேரி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் அரசுகள் ஸ்தாபிக்கப் பட்டன. அதற்குக் காரணம், அந்த நாடுகளில் நடந்த மக்கள் புரட்சி.

 • கம்யூனிஸ்ட் கட்சியானது மக்களுக்கான வழிகாட்டியாக முன்னணிப் பாத்திரம் மட்டுமே வகிக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மக்கள் மட்டும் தான். அதை நீங்கள் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்று அழைக்க விரும்பா விட்டால், வேறு பெயர் சூட்டிக் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும், மக்கள் மக்களை ஆள்வது தான் ஒரு கம்யூனிச நாடாகும்.

Monday, December 02, 2013

முன்னிலை சோஷலிசக் கட்சியும், ஒரு வழி தவறிய வெள்ளாடும்

முன்னிலை சோஷலிசக் கட்சியில் இருந்து, பழ ரிச்சார்ட் என்ற தமிழ் உறுப்பினர் வெளியேறியுள்ளார். (அல்லது வெளியேற்றப் பட்டுள்ளார்?) ஒரு பல்கலைக்கழக மாணவராக இருந்த பழ ரிச்சார்ட், மாணவர் அமைப்பு செயற்பாடுகள் மூலம் கட்சிக்குள் இழுக்கப் பட்டவர். மு.சோ.கட்சிக்குள் தகுதி வாய்ந்த தமிழ் உறுப்பினர்கள் பற்றாக்குறையாக இருந்த வாய்ப்பினை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர். தற்போது மு.சோ.கட்சியில் இருந்து வெளியேறியதை நியாயப் படுத்துவதற்காக,பல காரணங்களை கூறி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் ஒரு காலத்தில் முக்கியமான பொறுப்பு வகித்த, தானே முன் நின்று ஸ்தாபித்த கட்சி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவை யாவும் எமது கவனத்திற்குரியன.

நான் முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர் அல்ல. எனக்கும் அந்தக் கட்சிக்கும் இடையில், எந்த விதமான தொடர்பும் கிடையாது. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், சில நண்பர்கள் அந்தக் கட்சி சம்பந்தமான விடயங்களை, தொடர்ந்தும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்தச் சிறு குறிப்பை எழுத வேண்டியுள்ளது.

பழ ரிச்சார்ட் கட்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது வெளியாகி 24 மணி நேரத்திற்குள், சில வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், பழ ரிச்சார்ட்டின் அறிக்கையை தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் அறியத் தருவதில் ஆர்வமாக இருந்தனர். அவர்களது வழமையான பிரச்சாரமான "சிங்கள இடதுசாரிகள் = சிங்கள இனவாதிகள்" என்ற சூத்திரத்திற்கு அமைய இருந்தது, ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், "அப்பாவி" தமிழ் மக்கள் மீதான அவர்களது கரிசனைக்கு நன்றிகள். அவர்கள் மட்டும் இல்லையென்றால், "முட்டாள் தமிழ் ஆடுகள்", "இடதுசாரி போர்வையில் இருக்கும் சிங்கள இனவாத ஓநாய்களை" நம்பிச் சென்று பலியாகி இருப்பார்கள்.

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற கதையைப் போல, "வழி தவறிச் சென்ற வெள்ளாடு" பழ ரிச்சார்ட்டின் அறிக்கையை பரவலாக்கும் அவசரத்தில், அவரது "புகுந்த வீடு" எதுவென்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். "தமிழ் மக்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்காக, முன்னிலை சோஷலிசக் கட்சிக்குள் இருந்தது போல" தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கும் பழ ரிச்சார்ட், எதற்காக ஈரோஸ் (ஈழவர் ஜனநாயக முன்னணி) கட்சியில் சேர்ந்திருக்கிறார்? இலங்கை அரசின் தயவில் இயங்கும் ஈரோஸ், எவ்வாறு அவரது "ஈழம் வாங்கும் கனவை" நிறைவேற்றப் போகிறது என்று தெரியவில்லை.

எண்பதுகளின் இறுதியில், ஈரோஸ் இரண்டாக உடைந்த பின்னர், "RAW உளவாளி" சங்கர் ராஜியினால் தலைமை தாங்கப் பட்ட பிரிவு, தென்னிலங்கையில் தன்னை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து கொண்டது. (தற்போது சங்கர் ராஜியின் மகன் நேசன் கட்சியின் முக்கிய பொறுப்பில் அமர்ந்துள்ளார். அவர் போர் நடந்த காலத்தில், இலங்கை புலனாய்வுத் துறையுடன் தொடர்பைப் பேணி வந்தார்.) ஈரோஸ், அடுத்தடுத்து வந்த பல தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் காணாமல் போயிருந்தது. பல வருடங்களின் பின்னர், மறு சீரமைக்கப் பட்டு கிழக்கு மாகாணத்திலும், கிளிநொச்சியிலும் மட்டும் ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது.

பொதுவான பெயர் ஒன்றைத் தவிர, முன்பிருந்த ஈரோஸ் அமைப்பிற்கும், இப்போதுள்ள கட்சிக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. முந்திய கட்சியின் தொடர்ச்சியாகவும் இதனைப் பார்க்க முடியாது. ஈழத்தை கைவிட்டு விட்டு, மார்க்சியத்தை குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு, இலங்கை அரசின் அதிகார வரம்பிற்குள் கட்டுப்பட்டு நடக்கின்றது. "ஈழம் வாங்குவதற்காக ஈபிடிபி யில் சேர்ந்திருக்கிறேன்..."  என்று ஒருவர் சொல்வது எந்தளவு அபத்தமோ, பழ ரிச்சார்ட்டின் விளக்கமும் அந்தளவு நகைப்பிற்கிடமானது.

முன்னிலை சோஷலிசக் கட்சி உடைந்து சிதறி வருவதாக, "கடலில் தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பலில் இருந்து தப்பி கரை சேர்ந்துள்ள" பழ ரிச்சார்ட் கூறுகின்றார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள சம்பவங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியவை. ஆறு மாதங்களுக்கு முன்னர், சிங்கள ஊடகங்கள் அந்தக் கதைகளை கேள்விப் பட்டு எழுதி இருந்தன. அவற்றில் உள்ள உண்மைத் தன்மை குறித்து எம்மால் எதுவும் கூற முடியாது. தனிப்பட்ட முறையில், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. ஆனால், குமார் குணரத்தினம் அரச படையினரால் கடத்தப் பட்டது சம்பந்தமான பிரச்சினை, கட்சிக்குள் பாரிய எதிர் விளைவுகளை உண்டாக்கி இருந்தது. அந்தக் கட்சிக்குள் சில உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு, அல்லது வெளியேற்றப் படுவதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம்.

மு.சோ.க. தலைவர் குமார் குணரத்தினம், மகளிர் அணித் தலைவர் திமுது ஆட்டிகல ஆகியோருக்கு இடையில் தகாத உறவு இருந்ததாக பழ ரிச்சார்ட்டின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தக் கதையும், ஏற்கனவே சில அரச ஆதரவு ஊடகங்களில் வந்துள்ளதுள்ளது. அதாவது, குமார் குணரத்தினம் கடத்திச் செல்லப்பட்ட பொழுது, திமுது ஆட்டிக்கல கூடவே இருந்துள்ளார். (இருவரும் வெவ்வேறு இடங்களில் கடத்தப் பட்டதாக கட்சி அறிவித்திருந்தது.) உண்மையில், மு.சோ.கட்சிக்குள் பிரச்சினையை கொண்டு வந்த விடயம், இருவருக்கும் இடையிலான தகாத உறவு சம்பந்தமானது அல்ல.

குமார், திமுது கடத்தப் பட்ட நேரம், அவர்கள் மறைந்திருந்த வீடு. 
குமார் குணரத்தினம் மறைந்திருந்த வீடு பற்றிய தகவலை, அவரைக் கடத்திய அரச படையினருக்கு கொடுத்தது யார்? குமார் எந்த இடத்தில், எந்த வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற விபரம், மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. மிக முக்கியமான மூன்று கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே அது தெரியும். அவர்களைத் தவிர்த்து, எவ்வாறு தகவல் வெளியே கசிந்தது? குமார் குணரத்தினத்தின் மறைவிடத்தை பற்றி, அரச படையினருக்கு தகவல் கொடுத்த கறுப்பாடு யார்? குமார் இலங்கை வந்திருந்த விடயமே, பெரும்பாலான கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாது.

குமார், திமுது கடத்தப் பட்டது தொடர்பாக, பல முக்கிய உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்தது. சில நேரம், அது தொடர்பாக கட்சிக்குள் சில களையெடுப்புகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. அதனால், சில முக்கிய உறுப்பினர்கள், கட்சியை விட்டு வெளியேறி இருக்கலாம், அல்லது வெளியேற்றப் பட்டிருக்கலாம் என்று நம்ப முடிகின்றது. மார்லன் என்ற மத்திய குழு உறுப்பினர், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர், கட்சிக்கு துரோகம் இழைத்த குற்றச்சாட்டில் வெளியேற்றப் பட்டுள்ளார்.

முன்னிலை சோஷலிசக் கட்சி, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள தயங்குவது பற்றி, ஏற்கனவே பல தடவைகள் விவாதிக்கப் பட்டு விட்டது. அதைப் பற்றி, மேலும் இங்கே பேசுவதில் அர்த்தமில்லை. மு.சோ.க. உறுப்பினர்கள் முன்பு ஜேவிபி யில் இருந்ததால், அதன் தாக்கம் சிறிதளவேனும் இருக்கவே செய்யும். அதையும் மறுக்க முடியாது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஜேவிபி யின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிந்த விடயம்.

முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி விடுதலைப் புலிகளிடம் கேட்டிருந்தால், என்ன பதில் கிடைத்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. முக்கியமான சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக, புலிகள் பேசுவது போலத் தான், ஜேவிபி யும் பேசி வருகின்றது. அதாவது, "இலங்கை சோஷலிச நாடானால், ஒரே நாளில் தமிழர்களின் இனப் பிரச்சினையும் தீர்ந்து விடும்!" என்று ஜேவிபி இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே போன்று, "தமிழீழம் கிடைத்தால், முஸ்லிம்களின் பிரச்சினை, சாதிப் பிரச்சினை எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விடும்." என்று புலிகள் சொல்லி வந்தனர்.

இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, மு.சோ.க. சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்களுக்கு தயாராக இருந்தது. (புலிகளிடமோ, ஜேவிபி இடமோ, அது பற்றிய பேச்சே எடுக்க முடியாது.) இப்போதும் அந்தக் கட்சிக்குள், கொள்கைகள் வரையறுப்பது சம்பந்தமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை ஒரு வரவேற்கத் தக்க விடயமாக கருத வேண்டும். இலங்கை சோஷலிச நாடானாலும், தமிழீழம் கிடைத்தாலும், எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. அதற்கொரு நீண்ட கால செயற்திட்டம் அவசியம்.

இது எல்லாவற்றையும் விட புரியாத புதிர் ஒன்றுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு, புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள் பலர், அதே ஒடுக்கப் பட்ட மக்களின் இன்னொரு பிரதிநிதிகளான ஜேவிபி/மு.சோ.கட்சிகளை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர். "ஜேவிபி ஒரு சிங்கள இனவாதக் கட்சி, அதிலிருந்து பிரிந்த மு.சோ.கட்சியினரும் இனவாதிகள் தான்." என்று காரணம் கூறுகின்றனர்.

பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் இனவாதம் பேசாமல் எந்தக் கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற முடிவதில்லை. இலங்கையில் மைய நீரோட்ட அரசியல், இனவாத மயப் பட்டுள்ளதை மறுக்க முடியாது. பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் மட்டுமல்ல, சிறுபான்மை தமிழர்களின் அரசியலும் இனவாதத்தை மூலதனமாக வைத்துத் தான் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், நாம் ஒரு விடயத்தை மறந்து விடக் கூடாது. தமிழர்கள் உண்மையிலே அஞ்ச வேண்டிய இனவாத சக்தி ஒன்று சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது.

ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் சிஹல உறுமய என்ற கட்சி உதயமாகியது. "இலங்கைத் தீவில் இருந்து தமிழ், முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்து, நூறு சதவீத பௌத்த - சிங்கள நாடாக மாற்றுவதற்கு" கங்கணம் கட்டியது. இது போன்ற பல தமிழர் விரோத திட்டங்களை, அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டுள்ளது. தற்போது ஜாதிக ஹெல உறுமய என்று பெயர் மாற்றம் செய்துள்ள சிஹல உறுமய, ஐரோப்பிய நவ நாஜிகள், இந்திய ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிடத் தக்கது. ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகள் அந்தக் கட்சி உறுப்பினர் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. குறைந்த பட்சம் கொலைப் பயமுறுத்தல் கூட விடுக்கவில்லை.

நம் மத்தியில் உள்ள வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், ஜேவிபி, முசோக வை இனவாதிகள் என்று நிரூபிக்க படாத பாடு படுகின்றனர். அதற்காக அவர்கள் செலவிடும் நேரத்தில் ஒரு துளியைக் கூட, ஹெல உறுமயவை கண்டிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இரண்டு தரப்பினரும் கொள்கை அளவில் உடன்படுகின்றனர். இடதுசாரி எதிர்ப்புவாதம், வர்க்க ஒற்றுமை, இரண்டு பிரிவினரையும் மொழி கடந்து ஒன்றிணைக்கிறது.

கடந்த மாதம் குறிப்பிடத் தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. இலங்கை அரசால் வளர்க்கப் படும் பாசிச அமைப்பான பொது பல சேனா உறுப்பினர்கள் சிலர், ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட சச்சரவு ஒன்றில் தாக்கப் பட்டனர். ஆனால், அந்த சம்பவத்திற்குப் பிறகு, "பௌத்த-சிங்கள வாக்குகளை இழக்க விரும்பாத" ஐ.தே.க., பொது பல சேனாவிடம் மன்னிப்புக் கேட்டது. அதே நேரம், ஜேவிபி யும், மு.சோ.கட்சியும், பொது பல சேனா போன்ற பாசிச இயக்கங்களை வன்மையாக கண்டித்திருந்தன.

ஜேவிபி, மு.சோ.கட்சி ஆகியன தவறான தலைமைகளினால் வழிநடத்தப் படும், பிழையான கட்சிகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சிங்கள சமூகத்தில் சாதியால், வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதை, நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. அந்த உண்மையை புறக்கணித்து விட்டு, ஒடுக்கப் பட்ட மக்கள் சார்பாக பேசுகிறோம் என்பது வெறும் பித்தலாட்டம்.

சிங்கள மக்கள் மத்தியில் உள்ள வர்க்க, சாதிய ஒடுக்குமுறைகளை மூடி மறைத்துக் கொண்டு, அவர்களை வெறுமனே ஒரே முனைப்பான இனமாக வரையறுப்பதும் இனவாதம் தான். சிங்களவர்களின் இன அடையாளத்தை வலியுறுத்தி, சிங்கள இனவாதிகள் முன்மொழியும் கருத்தொன்றை, தமிழ் இனவாதிகள் வழி மொழிகின்றனர். இரண்டு இனவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழர்கள் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதற்காக, புலிகளை ஆதரிப்பதற்கு, நாங்கள் ஆயிரம் நியாயங்களை கற்பிக்கலாம். புலிகளின் தலைமை தவறாக இருக்கலாம், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் முக்கியம் என்று காரணம் கூறலாம். ஜேவிபி/மு.சோ.க. ஆகியவற்றை ஆதரிப்பவர்களும் அதே நியாயங்களை, அதே காரணங்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் தான் அவற்றை செவி கொடுத்துக் கேட்பதில்லை. ஏனென்றால், நாங்கள் தமிழர்கள் என்பதற்கு அப்பால், "முதலாளித்துவத்தை ஆதரிக்கும் வலதுசாரி பூர்ஷுவா நலன் விரும்பிகள்" என்பது தான் முக்கியமானது. வர்க்க உறவுகள் தான் எமது அரசியல் கருத்துக்களையும் தீர்மானிக்கின்றன.

Tuesday, November 26, 2013

அனைவருக்கும் சம்பளம் : சுவிஸ் மக்களின் சோஷலிசப் புரட்சி

சுவிட்சர்லாந்து நாட்டில், ஒரு அமைதியான சோஷலிசப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறதா? சுவிட்சர்லாந்தை "முதலாளிகளின் சொர்க்கபுரி" என்று அழைக்கலாம். அங்கு அகதியாக சென்று, கொஞ்சம் பணத்தை சேர்த்து, வசதியாக வாழும் தமிழர்கள் கூட, முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

பூர்வீக சுவிஸ் மக்களை விட, குறைவாக சம்பாதிக்கும் தமிழ் தொழிலாளர் வர்க்கம், தங்களை விட இருநூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்கும், முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசுவது வெட்கக் கேடு. உலகில் இதைவிட மோசமான பாமரத்தனம் இருக்க முடியாது.

"கம்யூனிச நாடு" என்றால், "கிறிஸ்தவ நாடு, முஸ்லிம் நாடு என்பது போல", "ஒரு மதம் சம்பந்தப் பட்ட விடயம்" என்று, சிலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்பட்ட முன்னாள் சோஷலிச நாடுகளில் மட்டும் தான், சோஷலிச பொருளாதாரம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டுமென்பதில்லை. அது ஒரு மேற்கத்திய முதலாளித்துவ நாட்டிலும் நடக்கலாம். அதை அவர்கள் வேறு பெயர்களில் அழைக்கலாம். விஷயம் ஒன்று தான். ஆனால், ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழும் மக்கள் கூட, சோஷலிச பொருளாதாரத்தை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கடந்த நூறு வருடங்களாகவே, சுவிட்சர்லாந்து மக்களில் ஒரு பிரிவினர் தீவிர இடதுசாரிகள் ஆக இருந்து வந்துள்ளனர். சுவிஸ் ஜனநாயக அமைப்பினுள், அவர்களின் பங்களிப்பையும் நிராகரிக்க முடியாது. சுவிஸ் அரசும் தனது ஜனநாயகத் தன்மையை பேணுவதற்காக அவர்களை அங்கீகரித்து வருகின்றது. இல்லாவிட்டால், லெனின் போன்ற ரஷ்ய கம்யூனிஸ்டு அகதிகளுக்கு சுவிட்சர்லாந்து அடைக்கலம் கொடுத்திருக்குமா?

2008 ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியினால், UBS என்ற மிகப்பெரிய சுவிஸ் வங்கி திவாலானது. அதனை மீட்பதற்கு சுவிஸ் அரசு, பெருமளவு நிதி வழங்கியது. அதே நேரம், திவாலான வங்கியின் நிர்வாகிகள் பெருந்தொகை பணத்தை போனசாக எடுத்துக் கொள்ளத் தயங்கவில்லை. அந்த சம்பவங்கள், சுவிஸ் மக்கள் மத்தியில் வங்கி முதலாளிகளுக்கு எதிரான வெறுப்புணர்வை உண்டாக்கின. 

சுவிஸ் மக்களை, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக, வலதுசாரிக் கட்சிகள் "இஸ்லாமிய எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு, மசூதிப் பிரச்சினை, கிரிமினல் வெளிநாட்டவர்கள்..." என்பன போன்ற பிரச்சனைகளை பற்றி பேசி வந்துள்ளன. அந்தக் கட்சிகளுக்கு பின்னால் பெரும் முதலாளிகளின் கரம் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், அண்மைக் காலமாக, வலதுசாரிகளின் விஷமத்தனமான பிரச்சாரங்களையும் மீறி, இடதுசாரிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகின்றது.

சுவிட்சர்லாந்தில் வேலை செய்வோர், வேலையில்லாதவர் அனைவருக்கும், ஒரு குறிப்பிட்ட அடிப்படை சம்பளம் கிடைக்க வேண்டும் என்று, இடதுசாரிகள் வைத்த கோரிக்கை, அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்த வருடம் அதற்கான தேர்தல் நடைபெறும். பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நடைமுறைக்கு வரும். இந்த வருடம் வேறு இரண்டு முக்கியமான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கும் நிர்வாகிகளின் போனஸ், மற்றும் சம்பளங்களை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை. அதற்கும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

24.11.2013 அன்று, அதற்காக சுவிட்சர்லாந்து முழுவதும் வாக்கெடுப்பு நடந்தது. நிறுவனங்களின், உயர் அதிகாரிகள், நிர்வாகிகளின் சம்பளங்களை குறைப்பது தொடர்பான தேர்தல் அது. கடந்த முப்பதாண்டு காலமாக, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும், சாதாரண சுவிஸ் உழைப்பாளிக்கும், தலைமை நிர்வாகிக்கும் இடையிலான சம்பள விகிதம் அதிகரித்து வந்துள்ளது. சில நிறுவனங்களில், இருநூறு மடங்கு அதிகமாக சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

பொதுவான கணிப்பின் படி, தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு 1:12 என்ற விகிதாசாரத்தில் உள்ளது. அந்த வேறுபாட்டை குறைப்பதற்கான தேர்தல் தான், 24.11.2013 அன்று நடைபெற்றது. தேர்தலில் போதுமான அளவு மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனாலும், சுவிஸ் அரசுக்கும், சுவிஸ் முதலாளிகளுக்கும் ஒரு செய்தியைக கடுமையான தொனியில் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒரு அமைதியான புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. சுவிஸ் மக்கள் சோஷலிசத்தை விரும்புகின்றனர்.

***************

தனியொரு மனிதனுக்கு பணமில்லையெனில் சட்டத்தை மாற்றிடுவோம்! 
வாக்கெடுப்புக்கு தயாராகும் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வருமானத்தைக் கோரும் வாக்கெடுப்பில், சுவிஸ் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த நாட்டில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை ஈடுகட்டி, ஒரு தனிநபர் வளமாக வாழ்வதற்கு மாதாந்தம் 2.500 சுவிஸ் பிராங்குகள் ($2,800, 2.030 euro) தேவைப் படுகின்றது. தொழில் செய்பவர்கள் மட்டுமல்லாது, வேலை வாய்ப்பற்றவர்களும் அந்தத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு உரிமை உடையவர்கள். இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தன்னார்வ நிறுவனம் ஒன்று பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தியது. சுவிஸ் சட்டப் படி, ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினால், அதற்கான வாக்கெடுப்பை கோர முடியும்.

"சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடென்பதால், மக்கள் சொகுசாக வாழ நினைக்கிறார்கள்" என்று யாரும் தவறாக எண்ணி விடக் கூடாது. உலக நாடுகளை பாதித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு சுவிட்சர்லாந்தும் தப்பவில்லை. அந்த நாட்டிலும், ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்க மக்கள் தான், அடிப்படை வருமானக் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர். சுவிஸ் சமூகத்தில் ஒரு தனி நபரின் உழைப்பிற்கு கிடைக்கும் விலை, அதற்கு ஈடான வாழ்க்கைச் செலவினம், இவற்றை சீர்தூக்கிப் பார்த்து விட்டே, அடிப்படை வருமானம் குறித்த தொகையை தீர்மானித்ததாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும், வேலை செய்கிறாரோ இல்லையோ, 2.500 சுவிஸ் பிராங்குகள் மாத வருமானமாக பெறுவதற்கு தகுதியுடையவர் என்று சட்டம் இயற்றப்படும். இதனால் மக்களிடையே சோம்பேறித்தனம் அதிகரிக்கும், வேலை தேட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் எதிர்த்து வருகின்றனர். அது உண்மையா? மேற்குலகில் வேறெங்காவது இது போன்ற சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளதா?

1974 ம் ஆண்டு, கனடாவில், Dauphin என்ற நகரத்தில், இது போன்ற பரிசோதனை முயற்சி ஒன்று நடந்துள்ளது. அந்த நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும், வறுமைக் கோட்டுக்கு மேலே வருமானம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். "Mincome" என்ற பெயரிலான அந்தத் திட்டம், நான்கு வருடங்கள் நீடித்தது. அதன் மொத்த செலவு 17 மில்லியன் டாலர்கள். பல வருடங்களுக்குப் பின்னர், Manitoba பல்கலைக்கழக பேராசிரியர் Evelyn Forget அது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையின் முடிவுகளைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள். "Mincome" திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்ட காலத்தில், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது. எல்லோரும் ஒழுங்காக வேலைக்குப் போய் வந்தார்கள். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருந்தது. எல்லா மாணவர்களும் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளித்தார்கள். யாருமே படிப்பை இடைநடுவில் நிறுத்தி விட்டு விலகவில்லை. இது எல்லாவற்றையும் விட, அந்த நகரத்தில் மிக மிகக் குறைந்தளவு குற்றச் செயல்களே பதிவு செய்யப் பட்டன.

இதனை நம்பாதவர்கள், அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளவும். (THE TOWN WITH NO POVERTY; http://www.livableincome.org/rMM-EForget08.pdf) எதற்காக, உலகம் முழுவதும் வாழும் மக்கள், சோஷலிசப் பொருளாதார கொள்கையை சிறந்ததாக எண்ணுகின்றனர் என்பது, இப்போது ஓரளவு புரிந்திருக்கும்.


சுவிட்சர்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:
2.சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"
3.சுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு
4.சுவிட்சர்லாந்து ஈழத்தமிழரின் காலனியாகிறதா?
5.சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்