Friday, September 27, 2013

தமிழருக்கு எதிரான நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் யார்?

திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. இனப்படுகொலைச் சகோதரர்களான மோடியையும், ராஜபக்சவையும் ஒப்பிடுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கூடப் பரவாயில்லை. 

மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?

2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.

ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

 //பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//

இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. 

மோடிக்கான ஆதரவு, இந்து பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அது, இலங்கையில் சிங்கள பெரும்பான்மை வாக்காளர்கள் ராஜபக்ஷவை ஆதரிப்பதைப் போன்றது. மோடியை ஆதரிக்கும் தமிழர், தென்னிலங்கையில் பிறந்திருந்தால், ராஜபக்ஷவை ஆதரித்திருப்பார். ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்களவர், இந்தியாவில் பிறந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார். இவர்கள் பேசும் மொழி மட்டுமே வேறு. கொள்கை ஒன்று தான்.

புலிகளின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

Wednesday, September 25, 2013

மெட்ராஸ் கபே : இந்திய பிராந்திய நலன்களின் விஸ்வரூபம்

ரோஜா படத்தில் காஷ்மீர் போராளிகளை வில்லன்களாக சித்தரித்தார்கள். விஸ்வரூபம் படத்தில் இந்தியர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாத தாலிபான் போராளிகள் வில்லன்களாக காட்டப் பட்டார்கள். அந்த அரசியல் பிரச்சாரப் படங்களை பார்த்துப் பாராட்டிய தமிழர்கள், மெட்ராஸ் கபே படம் வந்த பின்னர் தான் விழித்துக் கொண்டார்கள். ரோஜா, விஸ்வரூபம், மெட்ராஸ் கபே ஆகிய மூன்று படங்களும், இந்திய மத்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமைய எடுக்கப் பட்டவை.


மேற்குறிப்பிட்ட சினிமாப் படங்களை தயாரித்தவர்கள், காஷ்மீர் போராளிகள், தாலிபான்கள், புலிகள் ஆகிய இயக்கங்களை வேறு படுத்திப் பார்க்கத் தெரியாதவர்கள். மணிரத்தினம்(ரோஜா), கமலஹாசன்(விஸ்வரூபம்), ஷூஜித் சிர்கார் (மெட்ராஸ் கபே) ஆகிய தயாரிப்பாளர்கள், இந்திய மத்திய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை அனுசரித்து தான் தமது திரைப்படங்களை தயாரித்துள்ளனர். அதனைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கு மாத்திரம் எதிர்ப்புக் காட்டுவதன் மூலம், இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையில் மயிரளவு மாற்றத்தை கூட உண்டாக்க முடியாது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெளியான பொழுதே, அது விடுதலைப் புலிகளையும் கொச்சைப் படுத்துகின்றது என்று எழுதினேன். (விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்; http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html) அப்போது அதனை அலட்சியப் படுத்திய தமிழ் இன உணர்வாளர்கள், மெட்ராஸ் கபே வெளியான பின்னராவது புரிந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. அதுவே இந்திய மத்திய அரசின் பலமாகும். நமது தமிழ் இன உணர்வாளர்கள் போன்ற, சிறுபான்மையின அரசியல் ஆர்வலர்களின் அலட்சிய மனோபாவமே, மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களை தயாரிக்க ஊக்குவிக்கின்றது.

மெட்ராஸ் கபே படத்தை பற்றி, இதுவரையில் நிறைய விமர்சனங்கள் வந்து விட்டன. ஆனால், அந்த விமர்சனங்களில் எல்லாம், படத்தின் கதைக்கருவின் ஒரு பகுதி (வேண்டுமென்றே) இருட்டடிப்பு செய்யப் படுகின்றது. மெட்ராஸ் கபேக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும், ஏற்கனவே படத்தை பார்த்து விட்ட தமிழ் தேசிய இன உணர்வாளர்களும் கூட, அதைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து செல்கின்றனர். அவர்களது வழமையான மேலைத்தேய விசுவாசம், வாயையும், கையையும் கட்டிப் போட்டிருக்கலாம்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம், யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவப் பிரசன்னம், புலிகளின் போர், ராஜீவ் காந்தியின் கொலை, போன்ற சரித்திர சம்பவங்களை வைத்து திரைக்கதை புனையப் பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை, இன்றைய தலைமுறையினருக்கு கூற வேண்டிய தேவை என்ன? அதுவும், புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்பு, அது தொடர்பான அச்சம் அகன்ற பின்னர், இதைப் போன்ற படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மெட்ராஸ் கபே, "புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கெட்டவர்களாக காண்பிக்கின்றது" என்பது, புலி ஆதரவாளர்களின் வாதம். அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே திரைக்கதையின் மையக் கரு அல்ல. தமிழில் அர்ஜுன், விஜயகாந்த் நடித்த "தேசபக்தி படங்களில்" காஷ்மீர் அல்லது இஸ்லாமியவாத தீவிரவாதிகளை கொடூரமானவர்களாக சித்தரிப்பதைப் போன்றது தான் இதுவும். வட இந்தியர்களைப் பொறுத்தவரையில், மெட்ராஸ் கபே "தேசபக்தி படங்கள்" எனும் வகையறாவை சேர்ந்தது. தமிழர்களுக்கு காஷ்மீர் போராட்டத்தின் நியாயத்தன்மை எதுவும் தெரியாதது போன்று, வட இந்தியர்களுக்கும் (ஈழத்) தமிழரின் போராட்டத்தின் நியாயம் குறித்து அக்கறை கிடையாது.

படத்தின் தொடக்கத்திலேயே, சில ஆயுதமேந்திய இளைஞர்கள் பேரூந்து வண்டி ஒன்றை மறித்து, (தமிழர்களை பிரித்தெடுத்து விட்டு) அதில் வந்த சிங்களப் பயணிகளை சுட்டுக் கொல்கின்றனர். புலிகளைப் பற்றிய எதிர்மறையான சித்திரம் ஒன்றை பார்வையாளர் மனதில் பதிய வைக்கும் உத்தி இது. "புலிகள் ஒருபோதும் சிங்களப் பொதுமக்களை கொல்லவில்லையா?" என்று படத் தயாரிப்பாளர்கள் கேட்கலாம்.  (தமிழினவாதிகளைப் பொறுத்தவரையில், சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது ஒரு நியாயமான எதிர்வினை.) ஆனால், படம் முழுக்க வரும் இந்திய இராணுவமும், ஓரிரு காட்சிகளில் மட்டும் தலைகாட்டும் ஸ்ரீலங்கா படையினரும், "சாதாரண பொதுமகனுக்கு எந்தவொரு தீங்கும் இளைக்காதவர்கள் " போன்று காட்டுவது தான், மெட்ராஸ் கபேயின் பக்கச்சார்புத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. 

ஈழப்போர் வரலாற்றில் நடந்த உண்மைக் கதைகள் பல திரைப்படத்தில் கூறப் பட்டுள்ளன. சில பெயர்களை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். புலிகளைக் குறிக்கும் எல்.டி.டி.ஈ.(LTTE) என்பதை, எல்.டி.எப். (LTF) என்று மாற்றி இருக்கிறார்கள். அது போன்று பிரபாகரன் என்பதை பாஸ்கரன் என்று மாற்றினாலும், இந்தப் பெயர்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்வது பார்வையாளர்களுக்கு கடினமானதல்ல. 

"இந்திய உளவுப் பிரிவான RAW, இன்னும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், ராஜீவ் காந்தி கொலையை தவிர்த்திருக்கலாம்" என்ற கோணத்தில் இருந்து கதை சொல்லப் படுகின்றது. படம் முழுக்க முழுக்க இந்திய அரசின் பிராந்திய நலன் சார்ந்து எடுக்கப் பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "இந்திய இராணுவம், ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை சென்றதாகவும், புலிகள் அதனை குழப்பியதாகவும்" காட்டப் படுகின்றது. இது ஏற்கனவே பல தடவைகள் கேட்டுக் கேட்டு புளித்துப் போன இந்திய அரசின் பிரச்சாரம் தான். 

ஈழப்போர் தொடங்கிய 1983, 1984 காலப்பகுதியில், இந்தியா தனது படைகளை அனுப்பி பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை, ஈழத் தமிழர்களிடம் இருந்தது உண்மை தான். இன்றைக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் போன்றவர்கள் மத்தியில் இன்னமும் இந்தியா மீதான நம்பிக்கை போகவில்லை. ஆனால், முப்பது வருட காலத்திற்குள் பல திருப்புமுனைகள் ஏற்பட்ட பின்னரும், ஈழத் தமிழர்கள் இன்னமும் எண்பதுகளில் வாழ்வதாக நினைத்துக் கொள்வது தான் அபத்தமானது. அது தான் மெட்ராஸ் கபே திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை. 


வட இலங்கையில், யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் தொடங்கும் கதை, ராஜீவ் காந்தி கொலையுடன் முடிவடைகின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னர், புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக போக்கு காட்டி விட்டு, இந்திய இராணுவத்துடன் யுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர். அப்போது இரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் படும் RAW அதிகாரி விக்ரம் (John Abraham) தான் படத்தின் கதாநாயகன். 

விக்ரமுக்கு கிடைத்த பணிகள் மிகவும் கடினமானவை. அந்த RAW அதிகாரி யாழ்ப்பாணம் சென்ற நோக்கம் நிறைவேறி இருந்தால், ராஜீவ் கொலை நடந்திருக்காது என்பது மெட்ராஸ் கபே முன்வைக்கும் வாதம். அது சரி, RAW நிறைவேற்ற விரும்பிய இரகசிய (சதித்) திட்டம் என்ன? 

  1. LTF தலைவர் பாஸ்கரனை ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. அவர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் போரை நடத்துகின்றார். அதனால், LTF க்கு போட்டியாக உள்ள ஸ்ரீ (வரதராஜப் பெருமாள்?) குழுவை பலப் படுத்த வேண்டும். அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் கொடுத்து புலிகளுடன் மோத விட வேண்டும்.
  2. LTF இயக்கத்தின் உள்ளே பிரிவினையை உண்டாக்க வேண்டும். இந்தியாவுக்கு விசுவாசமான இரண்டாம் மட்டத் தலைவரான மல்லையா (மாத்தையா?) தலைமைப் பொறுப்பை ஏற்றால், அந்த இயக்கத்தை வழிக்கு கொண்டு வருவது இலகு. 


மேற்குறிப்பிட்ட இரண்டும், ஏற்கனவே RAW வினால் நிறைவேற்றப் பட்டு தோல்வியுற்ற சதித் திட்டங்கள் ஆகும். அனால், அது குறித்த சுய விமர்சனம் எதையும் முன்வைக்காமல், "மேற்குலகின் ஊடுருவல், எதிரிக்கு தகவல் கொடுக்கும் RAW உளவாளி" என்று கதை வேறு திசையில் தாவுகின்றது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் கூட, ENDLF, EPRLF போன்ற இயக்கங்கள் ஆயுதங்களை வைத்திருந்தன. அந்த துணைப் படையினர், தமிழக அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருந்தனர். இந்திய இராணுவத்துடன் கூட்டி வரப் பட்டனர். ஆகவே, புலிகள் யுத்தத்தை தொடங்கிய பின்னர் தான், இந்தியா எதிர்க் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க முன்வந்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பாகும்.

இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிரான தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதங்களையும், பாதுகாப்பையும் வழங்கி இருந்தது. அப்படி இருந்தும் புலிகளை அழிக்க முடியாமல் போனது. புலிகளின் புதிய நண்பர்களான, பிரேமதாச அரசு, மற்றும் மேற்குலகின் தொடர்பு மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவை எல்லாவற்றையும் விட, புலிகளுக்கு இருந்த தமிழ் மக்களின் ஆதரவு, மற்ற இயக்கங்களுக்கு இருக்கவில்லை என்பதும் உண்மை தான். அந்தக் குறையை நிவர்த்தி செய்யாமல், ஆயுதங்களை மட்டும் கொடுத்து விட்டு, இந்தியாவின் நலன்களை காப்பாற்றி இருக்க முடியுமா?

இதுவரை காலமும், வதந்தி வடிவில் பேசப்பட்ட  மாத்தையா பற்றிய கதைகளை, மெட்ராஸ் கபே உண்மை என்று நிரூபித்துள்ளது. பிரபாகரனும், மாத்தையாவும் வன்னிக் காடுகளுக்குள் இரண்டு படையணிகளுடன் மறைந்திருந்தனர். இந்தியப் படையினரின் சுற்றிவளைப்புகளால் இரண்டு தலைவர்கள் மத்தியில் தொடர்பில்லாமல் இருந்தது. இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய படை நடவடிக்கை ஒன்றில், பிரபாகரன் கொல்லப் பட்டதாக அன்று நம்பப் பட்டது. அந்தத் தகவலுடன், மாத்தையா தலைவரான தகவலும் இந்திய அரசினால் பரப்பப் பட்டது. அது வெறும் வதந்தி என்று சொல்வதை விட, தோல்வியடைந்த சதித் திட்டத்தின் பெறுபேறு என்று கூறுவதே தகும். மெட்ராஸ் கபே படமும் அதனை உறுதிப் படுத்துகின்றது.

இதுவரை காலமும் பேசப் படாத முக்கியமான உண்மை ஒன்று, மெட்ராஸ் கபே படத்தில் வலியுறுத்திக் கூறப் படுகின்றது. மெட்ராஸ் கபே திரைப்படம் அழுத்திக் கூறும் செய்தி இது தான்: "இலங்கை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நாடு. ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வரவும், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் கொடுக்கவும் இந்தியாவால் முடிந்திருக்கும்..... ஆனால்...ஆனால்... மேற்கத்திய நாடுகள் அதனை விரும்பவில்லை." இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடர வேண்டும் என்று அவை விரும்பின. இலங்கையில் போர் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். அதனால் சிங்கப்பூரில் உள்ள முகவர் ஒருவர் (KP?) மூலம், மேற்கத்திய நாடொன்று புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகின்றது.

ராஜீவ் காந்தி போரை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார். அதனால் அவரின் கதையை முடித்து விட வேண்டும் என்று தீர்மானிக்கப் படுகின்றது. ராஜீவை கொலை செய்வதற்கான சதித் திட்டம், மேற்கத்திய நாடொன்றினால் தீட்டப் படுகின்றது. ராஜீவ் இலங்கையில் சமாதானத்தை கொண்டு வந்து விட்டால் (?), சர்வதேச ஆயுத விற்பனை படுத்து விடும் என்ற அச்சம் காரணம். பல மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், பன்னாட்டு ஆயுத நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு இரகசியமானதல்ல. 


ராஜீவை கொலை செய்யும் சதித் திட்டத்திற்காக, பெருமளவு பணம் கைமாறுகின்றது. (ஏற்கனவே CIA உளவாளியாக அறியப்பட்ட) RAW மேலதிகாரி ஒருவர், அந்த சதிக்கு உடந்தை ஆகிறார். மேலைத்தேய உளவு நிறுவனம் ஒன்று, அந்த அதிகாரியை பெண் தொடர்பு ஒன்றின் மூலம் சிக்க வைத்து, தனது காரியங்களை சாதித்துக் கொள்கின்றது. மெட்ராஸ் கபே பற்றிய விமர்சனம் எழுதிய தமிழினவாதிகள் சிலர், இந்தப் படத்தில் "மலையாளிகளை நல்லவர்களாகவும், தமிழர்களை கெட்டவர்களாகவும்" காட்டி இருப்பதாக எழுதியுள்ளனர். அது ஒரு தவறான கருத்து. 

உதாரணத்திற்கு, பாலகிருஷ்ணன் என்ற RAW மேலதிகாரி, படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரம் ஆவார். அவரை ஒரு மலையாளியாகத் தான் காட்டுகின்றனர். திரைப்படத்தில், "பாலா என்ற மலையாளி" புலிகளின் நெருக்கமான நண்பராக காட்டப் படுகின்றார். ஸ்ரீ குழுவிற்கு ஆயுத விநியோகம் செய்யப் படும் தகவலை கசிய விடுகின்றார். கடற்கரையில் வந்திறங்கும் வெளிநாட்டு ஆயுதங்கள், புலிகள் கையில் போய்ச் சேர்வதற்கு உதவுகிறார். தனது வழியில் குறுக்கே வரும் கதாநாயகனை கடத்திச் செல்லுமாறு புலிகளுக்கு காட்டிக் கொடுக்கிறார். கதாநாயகனின் மனைவி கொலை செய்யப்படுவதற்கும் காரணமாகின்றார். இறுதியில் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை அழிக்கிறார்.   

ராஜீவ் கொலை போன்ற அரசியல் படுகொலைகளை நிறைவேற்றுவதற்காக, உலகில் எங்கோ ஒரு மூலையில் திடீரென முளைக்கும் வங்கி ஒன்று, அதன் தேவை முடிந்ததும் கலைக்கப் படுகின்றது. அதனால், சதியில் சம்பந்தப் பட்ட நபர்கள், பணப் பரிமாற்றம் சம்பந்தமான தகவல்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற சம்பவம் ஒன்றுக்காகவே, புலிகளின் ஆயுத முகவர் கேபி யை தன்னிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், ராஜீவ் காந்தி கொலையில், இஸ்ரேலிய மொசாட் சம்பந்தப் பட்டிருந்தமை கூட ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.

நீண்ட காலமாகவே, "இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து ஆபத்து வருகின்றது" என்று தமிழினவாதிகள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கருதுகோளுக்கு மாறாக, "இந்திய நலன்களுக்கு எதிரான ஆபத்து மேற்குலகில் இருந்தே வருகின்றது." என்பதை மெட்ராஸ் கபே அழுத்திக் கூறுகின்றது. ஈழத் தமிழரின் பிரச்சினையானது, இந்திய, சர்வதேச நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினையை கையாள்வதில் இந்தியா விட்ட நடைமுறைத் தவறுகளை எல்லாம், புலிகள் அல்லது மேற்கத்திய நாடுகளின் தலையில் சுமத்தி விட்டு தப்ப முடியாது. இந்திரா காந்தியின் அரசியல் சாணக்கியம், ராஜீவ் காந்தியிடம் இருக்கவில்லை என்று அவரது ஆட்சிக் காலத்திலேயே விமர்சிக்கப் பட்டார். ராஜீவ் காந்தியின் அதிரடித் தீர்வு அரைவேக்காட்டுத் தனமாக அமைந்தது மட்டுமின்றி, அதுவே இலங்கையில் அமெரிக்க வல்லூறு காலூன்றவும் காரணமாகியது.


சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:
5.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்

Monday, September 23, 2013

தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வுஇலங்கையில் நடந்த முதலாவது வட மாகாண சபைக்கான தேர்தல், எதிர்பார்த்த படியே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், 13 ம் திருத்தச் சட்டம் மூலம் நடைபெற்று வரும் மாகாண சபைகளினால், இன்று வரையில் வடக்கு-கிழக்கை தவிர்ந்த பகுதிகளை சேர்ந்த மக்களே இலாபமடைந்துள்ளனர்.

எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவம் குவிக்கப் பட்டிருந்தும், அன்று வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த மாகாண சபைக்கு, வட மாகாணத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை. "ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவால் முடியாத காரியத்தை தான் சாதித்துக் காட்டி விட்டதாகவும், ஜனநாயகத்தை மீட்டு விட்டதாகவும்," ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனிமேல் பீற்றிக் கொள்ளலாம். உண்மையில் இந்தியாவும் இந்த தேர்தலை நடத்துவதில் தன்னாலான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

ஈழப்போர் முடிந்த பின்னர், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டு தடவைகள் நடத்தப் பட்டாலும், வட மாகாண சபைக்கான தேர்தல் காலவரையறை இன்றி பின்போடப் பட்டு வந்தது. இறுதியில் இந்தியா, மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக தேர்தல் நடத்தப் பட்டது. ஜனாதிபதியும், ஆளும் சுதந்திரக் கட்சியும் எந்தக் காரணத்திற்காக தேர்தலை பின்போட்டார்களோ, அது நடந்து விட்டது. இன்று தமிழ் தேசியத்தையும், புலிகளுக்கு பின்னான அரசியலையும் முன்னெடுப்பதாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, "அபிவிருத்திப் பணிகள்" என்ற மாயமானைக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்து மண் கவ்வியுள்ளது. மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள், தேர்தலை ஒட்டியே பூர்த்தி செய்யப் பட்டன. தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், புனரமைக்கப்பட்ட A - 9 சாலை திறந்து விடப் பட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருப்பதைப் போல, "கார்பெட் சாலை" அமைக்கப் பட்டதினால் போக்குவரத்து இலகுவானது. அதே போன்று, கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, தொண்டமானாறு பாலம் என்பனவும் பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்தன என்பதை மறுப்பதற்கில்லை. 

வட மாகாண சபை தேர்தல் நடப்பதற்கு முன்னர், சில தினங்களுக்கு முன்னர், யாழ்தேவி புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது. அதற்காக கிளிநொச்சி வந்து திறந்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அப்போது நடந்த பொதுக் கூட்டத்தை, தேர்தல் பிரச்சார மேடையாக பாவித்தார். இதே போன்று, தொண்டமானாறு பாலம் திறப்புவிழாவும் தேர்தல் பிரச்சார உத்தியாகவே நடந்தது. A - 9 பாதையில் செல்லும் வாகனங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிரமாண்டமான எரிபொருள் நிரப்பு நிலையம் கட்டப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ச அதனை திறந்து வைத்தார். 

மேற்குறிப்பிட்ட "அபிவிருத்திப் பணிகள்" மூலம், ஐ.ம.சு.கூ. வுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கலாம் என்று ஆளும் கட்சியினர் கனவு கண்டிருக்கலாம். ஆனால், இது போன்ற தேர்தல் கால தந்திரம் எதுவும், தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. அபிவிருத்தி பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத, திரும்பத் திரும்ப தமிழர் உரிமைப் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசும், த.தே.கூ. வுக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். த.தே.கூ. தலைவர்கள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிக்கத் தயங்கவில்லை. "கார்பெட் வீதி போட்டிருக்கிறார்கள். யாருக்காக? எமக்காகவா? இல்லை. தென்னிலங்கை முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், எமது வளங்களை சுரண்டிச் செல்வதற்காக போட்டார்கள்." என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேடை தோறும் முழங்கினார். அதிலே உண்மையில்லாமலில்லை. எங்கேயும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்காகவே நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன.

நெடுஞ்சாலைகளும், வேறு சில அபிவிருத்திப் பணிகளும் வாக்குகளை அறுவடை செய்யாதற்கு காரணங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையான A - 9 பாதையினால் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பலனேதும் ஏற்படவில்லை. வசதியுள்ள மத்தியதர வர்க்கத் தமிழர்கள் அந்த அபிவிருத்தியால் பயனடைந்துள்ளனர். ஆனால், அவர்களது வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் த.தே.கூ. க்கு மட்டுமே வாக்களிப்பார்கள். A - 9 பாதையில் மாட்டு வண்டில்கள், டிராக்டர்கள் செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் அதிருப்தியை பெருமளவு சம்பாதித்துள்ளது. அன்றாடம் சைக்கிள்களில் வேலைக்கு சென்று வரும் உழைக்கும் மக்களும், கார்ப்பெட் சாலைகளை கூடுமான அளவு தவிர்த்துக் கொள்கின்றனர். 

பிரதானமான சாலைகளை தவிர, உள்வீதிகள் எல்லாம் குண்டும், குழியுமாக காணப் படுகின்றன. அவற்றை செப்பனிட யாரும் இல்லை. இதைத் தவிர, கிராமங்களை இணைக்கும் பாதைகளும் புழுதி மணலும், கற்களும் நிறைந்ததாக உள்ளன. சில கிராமங்கள் ஐம்பது, நூறு வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ, அவ்வாறே இன்றும் உள்ளன. விவசாயம், வெளிநாட்டுப் பணம் போன்ற பொருளாதார வசதிகளால் தமது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்கள் கிராமங்களில் உள்ளனர். ஆனால், அவர்களும் தமது கிராமத்தின் அபிவிருத்தியை விட, தமிழர் உரிமை முக்கியமானதாக கருதுகின்றனர். 

ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், கிராமிய மட்டத்தில் சில அபிவிருத்திகளை மேற்கொண்டாலும், அவை எல்லாம் தம்மை ஏமாற்றுவதற்காக தேர்தலை முன்னிட்டு நடக்கின்றன என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தென்மராட்சியை சேர்ந்த, சுதந்திரக் கட்சியின் பிரதான வேட்பாளராக நிறுத்தப் பட்ட சர்வா, தனது தொகுதி மக்களுக்காக அவசர அவசரமாக மின் கம்பங்களை கொண்டு வந்து நாட்டினார்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தனது தொகுதி மக்கள் மின்சாரம் இன்றி வாழ்கின்றனர் என்பது, தேர்தல் நேரம் தான் அந்த வேட்பாளருக்கு ஞாபகம் வந்தது. (அவர் முந்திய தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வென்று, சுதந்திரக் கட்சிக்கு மாறியவர்.) அந்தக் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏழைகளாக இருந்தாலும் புத்திசாலிகள். அதனால், அதிரடி அரசியல்வாதி சர்வாவை தேர்தலில் தோற்கடித்தார்கள். தேர்தல் முடிந்த பின்னர், மின் கம்பங்களை திரும்பக் கொண்டு சென்று விடுவார்கள் என்று மக்கள் நேரடியாகேவே பேசிக் கொண்டனர்.

யாழ் குடாநாட்டில் இனப்பிரச்சினையின் தாக்கமானது, ஈழப்போருக்கு முன்பிருந்ததை விட, இன்று அதிகமாகவே உணரப் படுகின்றது. காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் படையினரின் பிரசன்னம் ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். புலிகளை முற்றாக அழித்து விட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீலங்கா படையினர், தற்போது பொது மக்களை துன்புறுத்துவதில்லை. (அரசியல் பழிவாங்கல்கள் வேறு.) ஆனால், பொது மக்களின் காணிகளை அடாவடித் தனமாக பறித்து, அங்கே முகாம்களை அமைத்துள்ளனர். 

சில இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள், முன்பு "புலிகளின் சொத்துக்களாக" இருந்தவை. அவை அனைத்தும், புலிகளுக்குப் பின்னர் தனக்கே சொந்தமாகும் என்று, ஸ்ரீலங்கா இராணுவம்  உரிமை கோருகின்றது. ஆனால், முகாம்களை விரிவுபடுத்துவதற்காக அருகில் உள்ள பொதுமக்களின் காணிகளை கூட அபகரிக்கிறார்கள். சில இடங்களில், முன்பு குடியிருந்த பொது மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டு, வேலிகள் அகற்றப் பட்டுள்ளதால், நிலத்திற்கு உரிமை கோருவது கடினமாக்கப் பட்டுள்ளது.

இன்றைக்கும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது நிலங்களை திருப்பித் தருமாறு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் வாடகைப் பணம் தருவதாக சொல்லியும், அதை மறுத்து தமக்கு நிலம் மட்டுமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த காலத்தில் இருந்த முகாம்கள் பல இன்று அகற்றப் பட்டு விட்டாலும், பல இடங்களில் இன்றைக்கும் நிலப்பிரச்சினை தொடர்கின்றது. நாவற்குழியில் அமைந்துள்ள சிங்களக் குடியேற்றம் காரணமாகவும், அங்கு வாழும் தமிழர்கள் பாதிக்கப் பட்டனர். அந்தப் பிரச்சினை தனியாக அலசப் பட வேண்டும். 

கிராமங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் கூட, உயர்கல்வி கற்ற பின்னர் நகரங்களை நோக்கிச் செல்வது வழமை. இது ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து, கீழ் மத்தியதர வர்க்கத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் காலகட்டம் ஆகும். நகரங்களை நோக்கிச் செல்லும் படித்த தமிழ் இளைஞர்கள், அங்கே ஒரே தகைமை கொண்ட சிங்கள இளைஞர்களுடன் போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த இடத்தில், "சிங்கள இனத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கிடைப்பதாக" உணர்கின்றனர். அந்த உணர்வு பின்னர், "தமிழ் தேசிய உரிமைப் போராட்டமாக" மாறுகின்றது. த.தே.கூ. ஆல், இளைஞர்களின் ஏமாற்றத்தினை, தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய முடிகின்றது.


ஈழத் தமிழ் சமூகத்தை புரிந்து கொள்வது இலகுவானதல்ல. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, தமிழக அரசியல்வாதிகளும் அந்த விஷயத்தில் பலவீனமாக உள்ளனர். இனம், வர்க்கம், சாதி போன்ற அம்சங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து அரசியல் களத்தை சிக்கலாக்குகின்றன. முன்பு நடந்த தேர்தல்களில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் முக்கியமாக கவனிக்கப் பட்டாலும், கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் அவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, இன்றைக்கும் தன்னை யாழ் சைவ - வேளாளர் மையவாத கட்சியாகவே தன்னைக் காட்டிக் கொள்கின்றது. ஆனால், பெரும்பாலான தமிழர்கள் அதனை அலட்சியப் படுத்தி வந்துள்ளனர்.

கூட்டமைப்பில் சில விதிவிலக்குகளை தவிர, அனேகமாக எல்லா வேட்பாளர்களும் உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் என்பது தற்செயலாக இருக்க முடியாது. மறுபக்கத்தில், ஆளும்கட்சியுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபி, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு தாராளமாக இடமளித்து வந்துள்ளது. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக கூட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். ஐ.ம.சு.கூ. ல் போட்டியிட்டு வென்ற, ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலிற்கு மட்டும் அதிகப்படியான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. அவர் ஒரு தலித் சமூகத்தவர் என்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓட்டுக்கள் விழுந்திருக்க வாய்ப்புண்டு. அதுவும் சாதி அபிமானம் காரணமாக விழுந்த வாக்குகள் என்று கருத முடியாது. ஏனெனில், ஐ.ம.சு.கூ. ல் இன்னொரு தலித் வேட்பாளர், தனது சாதியை பகிரங்கமாக வெளிப்படுத்தி பரப்புரை செய்து வந்தார். தேர்தலில் அவர் படு தோல்வி அடைந்தார்.

உலகமயமாக்கல் என்ற சூறாவளியினால் தாம் ஒதுக்கப் பட்டு விடுவோமோ என்ற அச்சம், நிறையத் தமிழர்கள் மத்தியில் காணப் படுகின்றது. உலகமயமாக்கலால், எதிர்காலம் பற்றிய கனவுகள் சிதைவதையும்,வாழ்க்கை குறித்த அவநம்பிக்கையையும், இலங்கைத் தீவுக்குள் தோற்றுப்போன சமுதாயமாக ஓரங்கட்டப் படுவதையும் உணர்கின்றனர். இதனை அவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் வெளிப்படுத்துகின்றனர். "தென்னிலங்கையில் இருந்து படையெடுக்கும் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவதாக," அதனைப் புரிந்து கொள்கின்றனர். மேலாதிக்கம் செலுத்தும் சிங்களவர்கள், உலகமயமாக்கலின் தூதுவர்களாக வருகை தருகின்றனர், என்பதை யாரும் உணரவில்லை. 

இதனால் என்ன நடக்கிறது என்றால், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மேலாண்மை குறித்த அச்சத்தை பயன்படுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகின்றது. வென்ற பின்னர், கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிங்கள மேலாண்மைக்கு அடிபணிந்தது நடக்கின்றனர். இதற்கு முன்னர் நடந்த, பாராளுமன்ற, பிரதேச சபைத் தேர்தல்களில் இருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம். வட மாகாணத்தில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோரும், அனேகமாக கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தமது தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, அரசு நிதி ஒதுக்குவது வழமை. ஆனால், அரசு ததேகூ உறுப்பினர்களுக்கு கொடுக்கும் நிதியின் அளவு மிகக் குறைவு என்பதை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆளும் சுதந்திரக் கட்சி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றது. ஆனால், கிடைக்கும் சொற்ப நிதியைக் கூட ததேகூ உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால், தொகுதி மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக அரச தரப்பினரை நாட வேண்டியுள்ளது.

சுதந்திரக் கட்சி, ஈபிடிபி அமைப்பாளர்கள் தேர்தலில் தெரிவாகாமல் தோல்வியடைந்து இருக்கலாம். ஆனால், அவர்கள் கைகளில் தான் அதிகாரம் உள்ளது. வட மாகாணத்தில், படையினர் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவது இரகசியமல்ல. ஊரில் நடக்கும் பகிரங்க ஒன்றுகூடல் எது என்றாலும், இராணுவத்திற்கு அறிவிக்காமல் நடத்த முடியாது. ததேகூ மாகாண சபையை பொறுப்பெடுத்த பின்னர், அந்த நிலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மாறாக, ததேகூ வின் மாகாண சபை அரசாங்கம், இராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி போன்று செயற்பட வாய்ப்புண்டு. 

வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தியதன் மூலம் "ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டதாக"(?) ராஜபக்ஷ அரசு பீற்றிக் கொள்ளும். அடுத்து நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மகாநாட்டிலும் அது எதிரொலிக்கும். ஆனால், கூட்டமைப்புக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம், அரசின் மீது அதிருப்தியுற்ற தமிழ் மக்களின் எதிர்ப்பு வாக்குகள் என்பதை, கொழும்பு புரிந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறி தான்.

தெற்கில் ஏற்கனவே, மாகாண சபை தேர்தல் முடிவுகளுக்கு எதிரான, கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளின் இயக்கம் ஆரம்பித்து விட்டது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான நாளில் இருந்து, அதனை "பிரிவினைவாதம், இனவாதம்" என்று முத்திரை குத்தி பரப்புரை செய்து வருகின்றனர். தங்களது பிரிவினைவாத பரப்புரை  "மெய்ப்பிக்கப் பட்டு விட்டதாக" அவர்கள் இனி வாதாடலாம். வட மாகாண சபையை இயங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம்.

ஈழத்தமிழரின் அரசியல் நிலவரம், 77 ம் ஆண்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் சுட்டிக் காட்டுகின்றது. வடக்கில் எழுந்த தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும், அதற்கு எதிர்வினையாக தெற்கில் எழுந்த பிரிவினை குறித்த அச்சமும் மீண்டும் எதிரொலிக்கின்றது. ஆனால், இந்த முறுகல் நிலை மீண்டும் ஒரு ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு மிகைப் படுத்தப் பட்ட கூற்றாகும். 

ஒரு பக்கம் சிங்கள இனவாதிகளும், மறுபக்கம் தமிழ் இனவாதிகளும் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை உருவாக வேண்டுமென்று விரும்பலாம். ஆனால், வெளியில் இருந்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் வல்லமை பொருந்திய சக்திகளான, இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, சர்வதேச அழுத்தம் காரணமாக, ராஜபக்ஷ அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வாய்ப்புண்டு. இந்தத் தேர்தலிலும், வழமையாக தமிழ் மக்கள் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.   


வட மாகாண சபைத் தேர்தல் குறித்த முன்னைய பதிவுகள்:

2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Thursday, September 19, 2013

மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்

வட மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. ஆங்காங்கே நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில், வழமை போல தமிழ் தேசியம் முக்கியமான கருப் பொருளாக மாறியுள்ளது. ஒரு வேட்பாளர், தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். இன்னொரு வேட்பாளர் தமிழ் தேசியக் கோட்பாடு புலிகளால் உருவாக்கப் பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் போடுகிறார். இவர்கள் யார் என்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். மகிந்த ராஜபக்சவின் பொதுசன ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தான் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். 

"மகிந்த அரசின் உலகமயமாக்கலின் கீழ் தமிழராக ஒன்று சேருமாறு" சொல்வதில் இருந்தே இவர்கள் எங்கே செல்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இன்றைய ஈழத்து அரசியலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு, வர வர சுருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் வேட்பாளர்கள் கட்சி மாறுவதும் அதிகரிக்கின்றது. உலகமயமாக்கல் தீவிரமடையும் காலத்தில், கட்சிகளும், அரசியல்வாதிகளும் வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இங்கே எதிர்க்கட்சி எதுவும் கிடையாது. எல்லோராலும் ஏமாற்றப் பட்ட மக்கள் தான், நிறுவனமயப் படுத்தப் படாத எதிர்க்கட்சியினராக உள்ளனர். அவர்கள் யாரும் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஓட்டுப் போட்டு விட்டு ஒதுங்கி விடுகின்றனர்.

*******

வட மாகாண சபைத் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு. (தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டங்களில் விநியோகிக்கப் பட்டது.) தேர்தலில் வாக்களிப்பது பற்றிய தெளிவின்மை மக்களிடையே நிலவுகின்றது. வாக்குச் சீட்டில், முதலில் கட்சிக்கு நேரே ஒரு புள்ளடியும், பின்னர் தமக்கு விரும்பிய வேட்பாளர்கள் இருவருக்கு புள்ளடி போடுமாறு, கூட்டமைப்பினரின் தேர்தல் பிரச்சாரங்களில் கூறி வருகின்றனர். 

இந்த விருப்பு வாக்குகளில், "முதலமைச்சர்" விக்னேஸ்வரனுக்கு ஒன்றும், பின்னர் அந்தப் பிரதேச வேட்பாளருக்கு ஒன்றும் போடுமாறு கூறுகின்றனர். ஆனால், ஒருவர் அதிக பட்சம் ஒரு விருப்பு வாக்கு மட்டுமே போடலாம் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. இந்தக் குழப்பத்தால், நடைபெறவிருக்கும் தேர்தலில் பெருமளவு வாக்குகள் செல்லுபடியாகாமல் போக வாய்ப்புண்டு. 

இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. வழமை போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லுமென்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஆயினும், வாக்காளர்கள் தமக்கு அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று, கூட்டமைப்பினரின் பிரச்சாரக் கூட்டங்களில் கேட்டுக் கொள்கின்றனர். அப்போது தான் "சர்வதேச சமூகம் கவனமெடுக்கும்" என்று அதற்கு காரணம் கூறுகின்றனர். புலிகள் ஆயுதப்போராட்டம் நடத்திய காலத்தில் கூட, இந்தளவு சர்வதேசக் கவனம் குவிந்திருக்கவில்லை என்று கூறுகின்றனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக தீர்மானங்களை அதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். 

சர்வதேச கவனத்தை மென்மேலும் குவிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக நியமித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் கூட்டங்களில் தெரிவித்து வருகின்றார். ஆகவே, தேர்தலில் 30 ஆசனங்களை வென்று, அறுதிப் பெரும்பான்மை பெற்றால், சர்வதேச சமூகம் (ஈழத்) தமிழர்கள் பக்கம் பெருமளவு கவனத்தைக் குவிக்கும் என்று நம்புகின்றனர். இந்தப் பிரச்சாரங்கள், எழுபதுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பிரச்சாரங்களை பெரிதும் ஒத்துள்ளது. 

"சர்வதேச சமூகம்" என்று குறிப்பிடப்படும் மேற்கத்திய நாடுகள், தேர்தல்கள் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என்று கூறி வருகின்றது. இலங்கை அரசும் சமர்த்துப் பிள்ளை போன்று, தேர்தல்களை நடத்தி விட்டு மேற்கத்திய நாடுகளிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்கின்றது. வட மாகாணத் தேர்தலில் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இறுதியில் இலங்கை அரசுக்கு தான் ஆதாயம். அதனால் தமிழ் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் கட்சிகள், இந்தத் தேர்தல்களை பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு. இல்லாவிட்டால், இலங்கை அரசும், அதன் எஜமானான சர்வதேச சமூகமும் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக மாறி விடுவார்கள்.
******

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், "மாவீரர் தினம் நினைவுகூரலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக" கிளிநொச்சியில் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பாக போட்டியிடும் கீதாஞ்சலி என்ற வேட்பாளர் தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் இலங்கை அரச ஆதரவாளர்கள் பலர் புலி ஆதரவு வேஷம் போட்டு வருகின்றனர். இணையத்திலும், முகநூலிலும் அப்படியான பலர் உலாவுகின்றனர். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொதுசன ஐக்கிய முன்னை வேட்பாளர்கள், மேடைகளில் தமிழ் தேசியம், தமிழ் இன ஒற்றுமை பற்றி பேசி வருகின்றனர். 

கீதாஞ்சலியின் பேச்சுக்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலளித்த ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், "மாவீரர் தினத்தை மக்கள் தமது வீடுகளில் நினைவுகூருகின்றனர். உங்களால் முடிந்தால் மாவீரர் துயிலும் இல்லத்தை மீண்டும் கட்டித் தாருங்கள்." என்று சவால் விடுத்தார். அதற்கு கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது. யாழ் குடாநாட்டில் முன்னர் ஒரு காலத்தில் புலிகளின் ஆட்சி நடந்தது என்பதற்கான தடயங்கள் எல்லாம் அழிக்கப் பட்டு விட்டன. ஆயினும் ஆயுதமேந்தாத தமிழ் தேசியத்தால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதால், அதை ஆதரிப்பதில் தவறில்லை என்று ஸ்ரீலங்கா அரசு நினைக்கின்றது.

*******

2009 ம் ஆண்டுக்குப் பின்னர், ஈழத்தில் புதியதொரு தமிழ் தேசிய சக்தியை உருவாக்க இந்தியா முயற்சித்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. "முன்னாள் புலி ஆதரவாளர்களில் ஒரு பிரிவும், முன்னாள் புலி எதிப்பாளர்களில் ஒரு பிரிவும்" கூட்டணி அமைத்துள்ளமை, பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அந்த அதிசயம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன. இன்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட, இந்திய அழுத்தத்தினால் மறு சீரமைக்கப் பட்ட புதிய கூட்டணி தான்.

****** 

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளரான விக்னேஸ்வரன், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மேட்டுக்குடி பெருமை பற்றி பேசி வருகின்றார். "யாழ்ப்பாணத் தமிழர்கள் உலகில் சிறந்த கல்விமான்கள். (பிரிட்டிஷ் காலனிய காலத்தில்) முதலாவது பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பட்டன. உயர்கல்வி கற்ற தமிழர்கள் வெளிநாடு சென்றும் இனத்திற்கு பெருமை தேடித் தந்தார்கள்." இது போன்று பேசி வருகின்றார். மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது, "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற பழம்பெருமையை மீட்டுத் தரும் என்பது அவரது வாதம். 

ஆங்கிலேயர்கள் தமது காலனிய நிர்வாகத்தை நடத்துவதற்கு விசுவாசமான தமிழ் மேட்டுக்குடியை உருவாக்கினார்கள். விக்னேஸ்வரனும் அவர்களில் ஒருவர் தான். விக்னேஸ்வரனின் உரையை கேட்பவர்கள், (யாழ்ப்பாணத்) தமிழர்கள் எல்லோரும் மெத்தப் படித்த மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்வார்கள். வறுமை காரணமாக, ஐந்தாம் வகுப்பை கூட பூர்த்தி செய்யாத, யாழ்ப்பாணத் தமிழ் உழைக்கும் வர்க்கத்தினருக்கு சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அனைவரும் தமது பெயர்களுக்கு பின்னால் பட்டங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். 

முன்னர் ஒரு காலத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி "சட்டத்தரணிகளின் கட்சி" என்று அழைக்கப் பட்டது. இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அது பொருந்தும் போலிருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீண்டும் எழுபதுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதை தற்போது நடக்கும் தேர்தல் பரப்புரைகள் எடுத்துக் காட்டுகின்றன. கூட்டணியின் மேட்டுக்குடி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் தேசியத்தை மீட்டெடுத்த பெருமை, புலிகளையும், பிற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்களையும் சாரும். இன்று அவை முற்றாக அழித்தொழிக்கப் பட்ட நிலையில், மேட்டுக்குடி அரசியல் மீண்டும் கோலோச்சுகின்றது. 

****** 

வட மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் மட்டுமே போட்டி நடைபெறுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசில் ஆளும் கட்சியான ஐ.ம.சு.கூட்டமைப்பிற்குள்ளும் கடுமையான போட்டி நடக்கின்றது. 

உண்மையில் மகிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சியின் தற்போதைய நோக்கம், த.தே.கூ. வின் வாக்கு வங்கியை சிதைப்பதல்ல. (அது ஒரு நீண்ட காலத்திட்டம்) மாறாக, ஈ.பி.டி.பி. யின் ஆதரவுத் தளத்தை சிதைப்பதே நிகழ்கால திட்டம் என்று, யாழ்ப்பாண வாக்காளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஏனெனில், அரசுடன் சேர்ந்தியங்கினாலும், ஈபிடிபி ஒரு தமிழ் தேசிய பாரம்பரியத்தில் வந்த கட்சி. ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், ஈபிடிபி தனியாக வீணைச் சின்னத்தில் போட்டியிட முடியாதவாறு தடுக்கப் பட்டது. 

தற்போது, ஈபிடிபி க்கு போட்டியாக சுதந்திரக் கட்சியின் தமிழ் வேட்பாளர்கள், நேரடியாக களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளனர். அங்கஜன், சர்வா போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் அங்கஜன் அணி, சர்வா அணி என்ற பிரிவுகள் ஏற்பட்டு விட்டன. அவை ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் நிலையில் உள்ளன. 

அதன் உச்சகட்டமாக சாவகச்சேரியில் அங்கஜனும், சர்வாவும் துப்பாக்கி எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டார்கள். தென்மராட்சியை சேர்ந்த சர்வா, தனது தொகுதியில் அங்கஜனின் ஆட்கள் பிரச்சாரம் செய்வதை விரும்பவில்லை என்று தெரிகின்றது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பின்னர், சர்வா அணியினரின் பிரச்சார வேலைகளுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து ஆபத்து வரும் என்று, அதே கட்சியை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேடிக்கையை வேறெங்கும் காண முடியாது. 

***** 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு பிரிவினைவாத முத்திரையும், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு புலி முத்திரையும் குத்தும் போக்கு, தென்னிலங்கையில் தீவிரமாகி வருகின்றது. ஜனாதிபதி மகிந்தவும், அரசு சார்பு ஊடகங்களும் அது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை எதிர்பார்த்து தயாரிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சமஷ்டி என்ற வார்த்தைக்காக அதனை பிரிவினைவாதம் என்றும், இனவாதம் என்றும் விமர்சிப்பது அபத்தமானது. இந்தப் போக்கு தமிழர்களை மட்டுமல்லாது, சிங்கள முற்போக்குச் சக்திகளையும் கடுமையாக எரிச்சலூட்டியுள்ளது. 

அமைச்சர் நிமால் ஸ்ரீ பாத சில்வா மட்டுமே, உணர்ச்சி வசப்படாமல் பக்குவான முறையில் கருத்துக் கூறியுள்ளார். "எல்லா அரசியல் கட்சிகளையும் போன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஓட்டுக்களைப் பெறுவதற்காக, பிரச்சார நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் வேறு, உறுதிமொழிகளை நடைமுறைப் படுத்துவது வேறு. பிரிவினைவாதம் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை. அதனை அரசு தகுந்த முறையில் எதிர்கொள்ளும்..." என்று தெரிவித்துள்ளார். 

இருப்பினும், தென்னிலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரம் இன்னமும் குறையவில்லை. கூட்டமைப்பினரை "இனவாதிகள்" என்று திட்டிக் கொண்டிருந்த அரசு சார்பு ஊடகங்கள், அண்மையில் "சாதிவாதிகள்" என்றும் கூறத் தொடங்கியுள்ளன. முல்லைத்தீவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் எழுவர், சுதந்திரக் கட்சியில் சேர்ந்துள்ளனர். வட மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் இரண்டு சதவீத வேட்பாளர்களை கூட ஒதுக்கவில்லை என்று குற்றஞ் சாட்டியுள்ளனர்.

****** 

"பிரபாகரன் மாவீரன் தான். மஹிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் விக்னேஸ்வரன் பேசியிருந்தார். புலிகளை பயங்கரவாதிகள் அல்ல என்று, முன்பு பதவியில் இருந்த காலத்தில் பல பயங்கரவாத சந்தேகநபர்கள் தண்டிக்கக் காரணமாக இருந்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை கூட்டத்தில், விக்னேஸ்வரன் புலிகளை புகழும் உரையானது, முழுமையாக "உதயன்" பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரமானது. தமிழ் தேசியவாதிகள் மத்தியில் பிரபலமான உதயன், யாழ் குடாநாட்டில் அதிகளவில் விற்பனையாகும் நாளேடு ஆகும். 

சில நாட்களுக்கு பின்னர், தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பு ஆதரவாளர்கள், "வீடு" என்ற பெயரில் கட்சியின் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தார்கள். எட்டுப் பக்கங்களில் ஒரு பத்திரிகை போன்று வடிவமைக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் உள்ளே, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக அச்சிடப் பட்டிருந்தது. ஆனால், முன்பக்கத்தில் "பிரபாகரன் மாவீரன் தான், மகிந்தவுக்கும் அது தெரியும்" என்ற தலைப்பில் விக்னேஸ்வரன் ஆற்றிய முழுமையான உரை பிரசுரமாகி இருந்தது. முன்பக்கத்தில், பிரபாகரனின் மிகப் பெரிய படம் ஒன்றும் அச்சாகி இருந்தது. 

தேர்தல் பிரச்சாரம் நடத்தும் சாட்டில், புலிகளுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரம் விநியோகிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், கண்ணில் விளக்கெண்ணை இட்டுக் கொண்டு திரிந்த இராணுவத்தினர் கைகளுக்கு கூட்டமைப்பின் பத்திரிகை சென்றது. உடனே கொடிகாமம் பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர், பிரச்சார வேலையில் ஈடுபட்ட கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நால்வரை கைது செய்து தடுத்து வைத்தனர். அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. 

தேர்தல் விதிமுறைகளை மீறும் இராணுவ அத்துமீறல் கண்டிக்கத் தக்கது. இந்த செய்தியை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள், அந்த துண்டுப்பிரசுரத்தில் என்ன எழுதியிருந்தது என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டன. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியதென்னவெனில், கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில் இருந்த "விக்னேஸ்வரனின் வல்வெட்டித்துறை உரை" மட்டுமே கைதுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதைத் தவிர வேறெந்த "புலி ஆதரவு வாசகமும்" அந்த பிரசுரத்தில் இருக்கவில்லை.

"விக்னேஸ்வரனின் புலி ஆதரவு உரையை, துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தது" மட்டுமே கூட்டமைப்பு ஆதரவாளர்கள் செய்த தவறு. அப்படியானால், ஏற்கனவே அதே உரையை உதயன் பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியிட்ட நிறுவனத்தின் மேல் எந்தத் தவறும் இல்லையா? வல்வெட்டித்துறையில் "புலி ஆதரவு உரையாற்றிய" விக்னேஸ்வரன் மேல் எந்தத் தவறும் இல்லையா? 

சாதாரண கூட்டமைப்பு ஆதரவாளர்களை கைது செய்த இராணுவம், கூட்டமைப்பு தலைவர்களையும், உதயன் பத்திரிகை முதலாளிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியும் எடுக்கப் போவதுமில்லை. எக்காரணம் கொண்டும் இராணுவம் தங்களை கைது செய்யாது என்பது, விக்னேஸ்வரனுக்கும், உதயன் முதலாளிக்கும் தெரியும். ஏனெனில், அது தான் இலங்கையின் வர்க்க நீதி.

******* 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்