Tuesday, November 26, 2013

அனைவருக்கும் சம்பளம் : சுவிஸ் மக்களின் சோஷலிசப் புரட்சி

சுவிட்சர்லாந்து நாட்டில், ஒரு அமைதியான சோஷலிசப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறதா? சுவிட்சர்லாந்தை "முதலாளிகளின் சொர்க்கபுரி" என்று அழைக்கலாம். அங்கு அகதியாக சென்று, கொஞ்சம் பணத்தை சேர்த்து, வசதியாக வாழும் தமிழர்கள் கூட, முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

பூர்வீக சுவிஸ் மக்களை விட, குறைவாக சம்பாதிக்கும் தமிழ் தொழிலாளர் வர்க்கம், தங்களை விட இருநூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்கும், முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசுவது வெட்கக் கேடு. உலகில் இதைவிட மோசமான பாமரத்தனம் இருக்க முடியாது.

"கம்யூனிச நாடு" என்றால், "கிறிஸ்தவ நாடு, முஸ்லிம் நாடு என்பது போல", "ஒரு மதம் சம்பந்தப் பட்ட விடயம்" என்று, சிலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்பட்ட முன்னாள் சோஷலிச நாடுகளில் மட்டும் தான், சோஷலிச பொருளாதாரம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டுமென்பதில்லை. அது ஒரு மேற்கத்திய முதலாளித்துவ நாட்டிலும் நடக்கலாம். அதை அவர்கள் வேறு பெயர்களில் அழைக்கலாம். விஷயம் ஒன்று தான். ஆனால், ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழும் மக்கள் கூட, சோஷலிச பொருளாதாரத்தை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கடந்த நூறு வருடங்களாகவே, சுவிட்சர்லாந்து மக்களில் ஒரு பிரிவினர் தீவிர இடதுசாரிகள் ஆக இருந்து வந்துள்ளனர். சுவிஸ் ஜனநாயக அமைப்பினுள், அவர்களின் பங்களிப்பையும் நிராகரிக்க முடியாது. சுவிஸ் அரசும் தனது ஜனநாயகத் தன்மையை பேணுவதற்காக அவர்களை அங்கீகரித்து வருகின்றது. இல்லாவிட்டால், லெனின் போன்ற ரஷ்ய கம்யூனிஸ்டு அகதிகளுக்கு சுவிட்சர்லாந்து அடைக்கலம் கொடுத்திருக்குமா?

2008 ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியினால், UBS என்ற மிகப்பெரிய சுவிஸ் வங்கி திவாலானது. அதனை மீட்பதற்கு சுவிஸ் அரசு, பெருமளவு நிதி வழங்கியது. அதே நேரம், திவாலான வங்கியின் நிர்வாகிகள் பெருந்தொகை பணத்தை போனசாக எடுத்துக் கொள்ளத் தயங்கவில்லை. அந்த சம்பவங்கள், சுவிஸ் மக்கள் மத்தியில் வங்கி முதலாளிகளுக்கு எதிரான வெறுப்புணர்வை உண்டாக்கின. 

சுவிஸ் மக்களை, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக, வலதுசாரிக் கட்சிகள் "இஸ்லாமிய எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு, மசூதிப் பிரச்சினை, கிரிமினல் வெளிநாட்டவர்கள்..." என்பன போன்ற பிரச்சனைகளை பற்றி பேசி வந்துள்ளன. அந்தக் கட்சிகளுக்கு பின்னால் பெரும் முதலாளிகளின் கரம் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், அண்மைக் காலமாக, வலதுசாரிகளின் விஷமத்தனமான பிரச்சாரங்களையும் மீறி, இடதுசாரிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகின்றது.

சுவிட்சர்லாந்தில் வேலை செய்வோர், வேலையில்லாதவர் அனைவருக்கும், ஒரு குறிப்பிட்ட அடிப்படை சம்பளம் கிடைக்க வேண்டும் என்று, இடதுசாரிகள் வைத்த கோரிக்கை, அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்த வருடம் அதற்கான தேர்தல் நடைபெறும். பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நடைமுறைக்கு வரும். இந்த வருடம் வேறு இரண்டு முக்கியமான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கும் நிர்வாகிகளின் போனஸ், மற்றும் சம்பளங்களை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை. அதற்கும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

24.11.2013 அன்று, அதற்காக சுவிட்சர்லாந்து முழுவதும் வாக்கெடுப்பு நடந்தது. நிறுவனங்களின், உயர் அதிகாரிகள், நிர்வாகிகளின் சம்பளங்களை குறைப்பது தொடர்பான தேர்தல் அது. கடந்த முப்பதாண்டு காலமாக, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும், சாதாரண சுவிஸ் உழைப்பாளிக்கும், தலைமை நிர்வாகிக்கும் இடையிலான சம்பள விகிதம் அதிகரித்து வந்துள்ளது. சில நிறுவனங்களில், இருநூறு மடங்கு அதிகமாக சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

பொதுவான கணிப்பின் படி, தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு 1:12 என்ற விகிதாசாரத்தில் உள்ளது. அந்த வேறுபாட்டை குறைப்பதற்கான தேர்தல் தான், 24.11.2013 அன்று நடைபெற்றது. தேர்தலில் போதுமான அளவு மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனாலும், சுவிஸ் அரசுக்கும், சுவிஸ் முதலாளிகளுக்கும் ஒரு செய்தியைக கடுமையான தொனியில் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒரு அமைதியான புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. சுவிஸ் மக்கள் சோஷலிசத்தை விரும்புகின்றனர்.

***************

தனியொரு மனிதனுக்கு பணமில்லையெனில் சட்டத்தை மாற்றிடுவோம்! 
வாக்கெடுப்புக்கு தயாராகும் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வருமானத்தைக் கோரும் வாக்கெடுப்பில், சுவிஸ் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த நாட்டில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை ஈடுகட்டி, ஒரு தனிநபர் வளமாக வாழ்வதற்கு மாதாந்தம் 2.500 சுவிஸ் பிராங்குகள் ($2,800, 2.030 euro) தேவைப் படுகின்றது. தொழில் செய்பவர்கள் மட்டுமல்லாது, வேலை வாய்ப்பற்றவர்களும் அந்தத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு உரிமை உடையவர்கள். இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தன்னார்வ நிறுவனம் ஒன்று பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தியது. சுவிஸ் சட்டப் படி, ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினால், அதற்கான வாக்கெடுப்பை கோர முடியும்.

"சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடென்பதால், மக்கள் சொகுசாக வாழ நினைக்கிறார்கள்" என்று யாரும் தவறாக எண்ணி விடக் கூடாது. உலக நாடுகளை பாதித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு சுவிட்சர்லாந்தும் தப்பவில்லை. அந்த நாட்டிலும், ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்க மக்கள் தான், அடிப்படை வருமானக் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர். சுவிஸ் சமூகத்தில் ஒரு தனி நபரின் உழைப்பிற்கு கிடைக்கும் விலை, அதற்கு ஈடான வாழ்க்கைச் செலவினம், இவற்றை சீர்தூக்கிப் பார்த்து விட்டே, அடிப்படை வருமானம் குறித்த தொகையை தீர்மானித்ததாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும், வேலை செய்கிறாரோ இல்லையோ, 2.500 சுவிஸ் பிராங்குகள் மாத வருமானமாக பெறுவதற்கு தகுதியுடையவர் என்று சட்டம் இயற்றப்படும். இதனால் மக்களிடையே சோம்பேறித்தனம் அதிகரிக்கும், வேலை தேட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் எதிர்த்து வருகின்றனர். அது உண்மையா? மேற்குலகில் வேறெங்காவது இது போன்ற சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளதா?

1974 ம் ஆண்டு, கனடாவில், Dauphin என்ற நகரத்தில், இது போன்ற பரிசோதனை முயற்சி ஒன்று நடந்துள்ளது. அந்த நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும், வறுமைக் கோட்டுக்கு மேலே வருமானம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். "Mincome" என்ற பெயரிலான அந்தத் திட்டம், நான்கு வருடங்கள் நீடித்தது. அதன் மொத்த செலவு 17 மில்லியன் டாலர்கள். பல வருடங்களுக்குப் பின்னர், Manitoba பல்கலைக்கழக பேராசிரியர் Evelyn Forget அது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையின் முடிவுகளைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள். "Mincome" திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்ட காலத்தில், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது. எல்லோரும் ஒழுங்காக வேலைக்குப் போய் வந்தார்கள். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருந்தது. எல்லா மாணவர்களும் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளித்தார்கள். யாருமே படிப்பை இடைநடுவில் நிறுத்தி விட்டு விலகவில்லை. இது எல்லாவற்றையும் விட, அந்த நகரத்தில் மிக மிகக் குறைந்தளவு குற்றச் செயல்களே பதிவு செய்யப் பட்டன.

இதனை நம்பாதவர்கள், அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளவும். (THE TOWN WITH NO POVERTY; http://www.livableincome.org/rMM-EForget08.pdf) எதற்காக, உலகம் முழுவதும் வாழும் மக்கள், சோஷலிசப் பொருளாதார கொள்கையை சிறந்ததாக எண்ணுகின்றனர் என்பது, இப்போது ஓரளவு புரிந்திருக்கும்.


சுவிட்சர்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:
2.சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"
3.சுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு
4.சுவிட்சர்லாந்து ஈழத்தமிழரின் காலனியாகிறதா?
5.சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்

Thursday, November 21, 2013

தமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு !


இன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட ஒரு மன்னன், புலிக் கொடி ஏந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்தி, அவர்களை தோல்வியடைய வைத்த வரலாறு, தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா? 

திப்பு சுல்தான், மைசூரை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினாலும், இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்தன. இன்றைய சென்னை நகர்ப் பகுதியை மட்டும் பிடித்து வைத்திருந்த ஆங்கிலேயர்கள், தமிழ் நாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக நீண்ட காலம் போரிட்டார்கள். சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட பிரிட்டிஷார், தமிழ்நாட்டில் நடந்த காலனிய ஆக்கிரமிப்புப் போரில் அவமானகரமான தோல்வியை தழுவி இருந்தனர். 

அன்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட திப்புவின் படையில், ஏராளமான தமிழ் வீரர்கள் இருந்தனர். தென்னிந்தியாவை ஆண்ட கடைசி இந்திய மன்னன், திப்புவின் நாட்டில், பல்லின மக்கள் வாழ்ந்தனர். ஆங்கிலேயர்கள் தமது சரித்திர நூல்களில் புளுகி இருப்பதைப் போல, அன்றைய இந்தியர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினார்கள். சில சமயம், அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்புகளை மிஞ்சி இருந்தன. உதாரணத்திற்கு, போரில் பயன்படுத்தப் பட்ட நவீன ஆயுதங்களை பற்றிக் குறிப்பிடலாம். (வேறு சில நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் ஆங்கிலேயர்கள் திருடிச் சென்று விட்டார்கள். இன்று வரையில் அவற்றைப் பற்றிய தகவல்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.)

ஆங்கிலேயர்களின் காலனிய கால வெற்றிகளுக்கு காரணம், அவர்களிடம் இருந்த துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்கள் என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடந்த போரில், திப்புவின் படையில் இருந்த தமிழ் வீரர்கள்  நவீன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். அதனால் தான், ஆங்கிலேயப் படைகள் தோற்றோடின. இது தமிழர்களுக்கு பெருமை இல்லையா? எதற்காக, தமிழ் தேசியவாதிகள் இந்த வரலாற்று உண்மையை புறக்கணிக்கிறார்கள்? 

உலகிலேயே முதல் தடவையாக, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக நடந்த போரில் தான், ரொக்கட் ஏவுகணைகள் பயன்படுத்தப் பட்டன. இன்று நவீன இராணுவங்களில் பாவிக்கப்படும், ரொக்கட் தொழில்நுட்பம் அல்லது ஏவுகணை வீசும் பீரங்கி, திப்புவின் பொறியியலாளர்களின் கண்டுபிடிப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?முதல்முறையாக திப்புவின் படைகளிடம் கைப்பற்றிய ஏவுகணை தொழில்நுட்பத்தை வைத்து தான், பின்னாளில் ஆங்கிலேயர்கள் நவீன ராக்கெட் கருவிகளை உருவாக்கினார்கள்.  அனேகமாக, சீனாவுடனான தொடர்பினால் கிடைத்த தொழில்நுட்ப அறிவை அடிப்படையாக கொண்டு, மைசூரில் அந்த நவீன ஆயுதம் தயாரிக்கப் பட்டிருந்தது. 

ஆங்கிலேயருடனான போரில், ஏவுகணைகள் வீசப் பட்ட பொழுது, ஆங்கிலப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. போர்க்களத்தில் நின்ற வெள்ளையர்கள், வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்றெண்ணி, அஞ்சி நடுங்கினார்கள். திப்புவின் ஏவுகணைகள், நூறு மீட்டர் தூரம் மட்டுமே செல்லக் கூடியவை. இருந்த போதிலும், ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் கண்டிராத, கேள்விப் பட்டிராத நவீன ஆயுதம் ஒன்றின் பயன்பாடு, போரில் வெற்றியை தேடித் தந்தது. அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் அம்பு, வில்லுகளுடன் போரிட்ட பூர்வகுடிகளை, துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பெருமைக்குரிய ஆங்கிலேய காலனியப் படைகள், தென்னிந்தியாவில் புறமுதுகிட்டு ஓடின. அன்று தமிழ்நாட்டில் நடந்த போரில், ஆங்கிலேய படைகளுக்கு, பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டது.

மைசூரை கைப்பற்றுவதற்காக நான்கு போர்கள் நடந்துள்ளன. ஆங்கிலேயர்களுக்கு இறுதி வெற்றி கிடைத்தற்கு காரணம், அவர்களது ஆயுத, அல்லது ஆட் பலம் அல்ல. வெள்ளையர்கள் எப்போதும் சூழ்ச்சியில் வல்லவர்கள். திப்பு சுல்த்தான் ஒரு முஸ்லிம் மன்னன். அவனது ஆட்சியில், இஸ்லாம் அரச மதமாக இருந்தது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், பிற மதத்தவர்கள் பாரபட்சமாக நடத்தப் படவில்லை. திப்புவின் ஆலோசகர்களாக பிராமணர்கள் இருந்துள்ளனர். திப்புவின் படையில், முஸ்லிம், இந்து வீரர்கள் கலந்திருந்தனர். அன்றைய இந்தியாவில் வாழ்ந்த மக்கள் மனதில், முஸ்லிம், இந்து என்ற குரோதம் இருக்கவில்லை. 

ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து, முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்தார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்தார்கள். அதன் பிறகு தான், அவர்களால் மைசூர் ராஜ்யத்தை கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேயர்களினால் அன்று விதைக்கப் பட்ட மதவெறி எனும் நச்சு விதைகள், இன்று பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளன. ஆங்கிலேயர்கள் அதைத் தான், இலங்கையிலும் செய்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் தமிழனாக இருந்த காரணத்தினால், அவனுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டி விட்டார்கள். அன்று விதைக்கப் பட்ட இனவெறி எனும் நஞ்சு, நமது காலத்தில் ஈழப்போர் எனும் பேரழிவில் வந்து முடிந்தது. 

ஈழப்போரில் நடந்த பேரழிவுகள், இனப்படுகொலைகள் குறித்து, ஆங்கிலேய கனவான்கள் அக மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால், இன/மத குரோதங்களை தூண்டி விட்டு, மக்களை பிரித்தாள்வதன் மூலம் தான், மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிலை நிறுத்தப் பட்டது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு, அரசியலுக்குப் பின்னால், இன்னொரு காரணமும் உள்ளது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர், "இந்தியாவில், இலங்கையில் சிறந்த தொழில் நுட்ப அறிவும், நாகரிக வளர்ச்சியும் இருந்தது" என்ற உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் கணிசமான வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு திப்பு சுல்த்தான் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்பதே, காலனிய கால மூளைச்சலவையின் விளைவு தான். 


Wednesday, November 20, 2013

சிறிலங்காவில் பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

இலங்கையில், 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிந்த அடுத்த வருடம், அரசு ஒரு முக்கியமான சட்டத்தை பிறப்பித்திருந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், சுமார் 2600 இளம் பிக்குகளை சேர்ப்பதற்கான தீர்மானம் அது. அந்த ஆட்சேர்ப்பு பல இடங்களில் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. புலிகள் சிறுவர்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்து, மூளைச் சலவை செய்வதாக குற்றஞ் சாட்டி வந்த ஸ்ரீலங்கா அரசு, ஏறக்குறைய அதே மாதிரியான நடவடிக்கை ஒன்றை எடுத்திருந்தது. இலங்கையில் பௌத்த மடாலயங்களில் சிறுவர்களை சேர்க்கும் வழக்கம், பண்டைய காலம் தொட்டு நிலவி வருகின்றது. ஆனால், இன்றைய இலங்கையில் அது சமூகப் பிரச்சினைகளின் வடிகாலாக பயன்படுத்தப் படுகின்றது என்பதே வித்தியாசம்.

"சிங்கள-பௌத்த இனவாதம்" பற்றி, நிறையத் தமிழர்கள் நாட் கணக்காக பேசத் தெரிந்திருக்கிறார்கள். ஆனால், அதன் உட் பரிமாணங்களை, சமூகப் பின்புலங்களை அலசுவோர் மிகக் குறைவு. தமிழ் எழுத்தாளர்களும், ஊடகங்களும், அது குறித்து ஆழமாக ஆராய வேண்டுமென்று அக்கறை காட்டுவதில்லை. "எல்லா சிங்களவர்களும் இனவாதிகள் தான்" என்று மேலெழுந்தவாரியாக கூறி விட்டுச் செல்வார்கள். "சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற அரசியல் கொள்கை," அரசினாலும், சில பௌத்த சங்கங்களினாலும் திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. அது சரி. ஆனால், என்ன நோக்கத்திற்காக? 

"எங்கள் ஊரில் தறுதலையாக திரியும் பையன்களை திருத்த முடியாத பெற்றோர், புத்த மடாலயம் ஒன்றில் பிக்குவாக சேர்த்து விடுவார்கள்." என்று பல சிங்கள நண்பர்கள் கூறியிருப்பார்கள். தறுதலையாக ஊர் சுற்றும் பிள்ளைகள் மட்டும், எதிர்காலத்தில் புத்த பிக்குகளாக வருவதில்லை. வறுமையில் வாடும் குடும்பங்களும், பிள்ளைகளை வளர்க்க முடியாமல் புத்த கோயில்களில் சேர்த்து விடுவது வழக்கம். இந்த தடவையும், 2600 புதிய இளம் துறவிகளை சேர்க்கும் அரசின் திட்டம், ஏழைகளை மட்டுமே குறி வைக்கின்றது. இது வரை காலத்தில், எந்தவொரு பணக்கார குடும்பமும் தனது பிள்ளைகளை புத்த பிக்குவாக சேர்த்து விட்டதாக தகவல் இல்லை. (எங்காவது விதிவிலக்காக நடந்திருக்கலாம்.) சுருக்கமாக, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளே, அதிகளவில் புத்த பிக்குகள் ஆகிறார்கள். 

இலங்கை ஒரு "பௌத்த - சிங்கள தேசம்" என்று அரசு அடிக்கடி கூறிக் கொள்கின்றது. பௌத்த மதம் அரச மதமாக உள்ளது. பௌத்த மடாலயங்கள் அரசின் உதவியை தாராளமாக பெற்று வருகின்றன. பௌத்த மத மேம்பாட்டுக்காக அரசு பெருமளவு நிதியை ஒதுக்கி வருகின்றது. எதற்காக? "மதம் மக்களின் அபின்", என்றார் கார்ல் மார்க்ஸ். பௌத்த மத நிறுவனங்களை பலப் படுத்துவதன் மூலம், அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துகின்றது.

இலங்கையில் பௌத்த மத நிறுவனங்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியை பரப்பி வருவது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், சிங்களப் பாட்டாளிகளின் வர்க்க உணர்வுகளை மழுங்கடித்து, அவர்கள் மனதில் மதவாத, இனவாத சிந்தனைகளை திணிப்பதும், அவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தக் கூற்று தவறென்றால், எதற்காக ஏழைச் சிங்கள சிறார்கள் மட்டுமே பிக்குகள் ஆகிறார்கள்? எதற்காக, சிங்கள மேட்டுக் குடியினர், தங்களது பிள்ளைகளை புத்த பிக்குகளாக்க விரும்புவதில்லை? 

பத்து வயதிலேயே, சிங்கள ஏழைச் சிறுவர்கள், புத்த துறவிகளாக சேர்த்து விடப் படுகின்றனர். ஆனால், அதெல்லாம் பெற்றோரின் ஒப்புதலின் பெயரில் தான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. சிறுவர்களை துறவிகளாக சேர்ப்பதற்கு எதிராக, சிங்களப் பிரதேசங்களில் பலர் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர். சில தன்னார்வ தொண்டர்கள்,  தம்மாலான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சிங்களப் பொது மக்கள் மத்தியில் இந்தளவு எதிர்ப்புணர்வு நிலவுவதற்கு காரணம், பௌத்த மடாலயங்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள். 

புத்த கோயில்களில், தலைமைப் பிக்குகளுக்கு பணிவிடை செய்வதற்காக, இளம் கிராமப்புற சிறுவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பிக்குகள், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். பௌத்த பிக்குகள் இல்லற வாழ்வை துறந்தவர்களாக வாழ வேண்டியவர்கள். ஆனால், பல இடங்களில் பருவ வயது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த அப்பாவி சிறுவர்கள், சிறுமிகள், துஷ்பிரயோகம் செய்யப் படுவதற்கு எதிராக, அவர்களது பெற்றோரே குரல் கொடுக்க முடியாதுள்ளது. அதற்குக் காரணம் தலைமைப் பிக்குகளின் அரசியல் செல்வாக்கு மட்டுமல்ல. இலங்கையில் எந்தவொரு ஊடகமும், அந்தக் குற்றச் சாட்டுகளை கண்டு கொள்வதில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது ஒரு பழமொழி. 

இலங்கை அரசின், குழந்தைகள் நலன் பேணும் அரசு நிறுவனமான, National Child Protection Authority (NCPA)  பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் பல பிக்குகளை கைது செய்தது. ஆனால், இன்று வரையில் மூன்று பேருக்கு எதிராக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிக்கு ஒருவர், வழக்கை எதிர்கொள்ளப் பயந்து நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர், "குற்றம் நிரூபிக்கப் படாமல்" விடுதலை செய்யப் பட்டார். இலங்கை அரசின் நீதி வழங்கும் நடைமுறை அந்தளவு மோசமாக உள்ளது. ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை மட்டும் பாரபட்சமாக நடத்தவில்லை. ஏழைச் சிங்களவர்களும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. 

***************
மேலதிக விபரங்களுக்கு:

1.Sri Lanka's hidden scourge of religious child abuse
2.Sri Lankan activists oppose plan to train boys as monks
3.Child-abuser monk commits suicide

இலங்கையில் புத்த கோயில் ஒன்றில் நடந்த சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய வீடியோ:

Tuesday, November 19, 2013

மனித மாமிசம் உண்ட சிலுவைப் படை வீரர்கள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] (பாகம் : 6)


மனித மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள்

அந்தியோக்கியாவை அடுத்திருந்த மாறா என்ற ஊரில் இடம்பெற்ற சம்பவம் எமது இரத்தத்தை உறைய வைக்கும். நீண்ட கால முற்றுகைப் போராட்டத்தினால், பட்டினி நிலைக்கு தள்ளப்பட்ட சிலுவைப் படையினருக்கு உணவு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கைப்பற்றிய இடங்களிலும் உணவுப் பற்றாக்குறை. அப்படியான தருணத்தில் மாறா மீது படையெடுத்த சிலுவைப் படையினர், "சரசேனர்களின் (முஸ்லிம்கள்) இறைச்சியை புசிக்க வேண்டும்..." என்று வெறியோடு வந்தார்கள். படுகொலைக்கு ஆளாகி இறந்தவர்களின் உடல்களை ஆளுயர பானைகளுக்குள் போட்டு கொதிக்க வைத்து உண்டார்கள்! குழந்தைகளை ஈட்டியில் செருகி நெருப்பில் வாட்டி ருசித்து ருசித்து சாப்பிட்டார்கள்!! நரமாமிசம் உண்ட ஐரோப்பிய காட்டுமிராண்டிகளின் கதை உண்மையா?

சிலுவைப்படையினரின் கொடூரத்தை, அந்தப் பிரதேச மக்கள் இப்போதும் நினைவு கூறுகின்றார்கள். அரபு சரித்திர ஆசிரியர்கள் மட்டும் இதனை பதிவு செய்யவில்லை. அன்று சிலுவைப் படையினரின் முன்னேற்றத்தை பாப்பரசருக்கு அறிவித்துக் கொண்டிருந்தவர்களும் எழுதியுள்ளனர். சிலுவைப் படையினர் பட்டினி கிடக்கும் தருவாயில் "வேறு வழியின்றி" மனித இறைச்சி உண்டதாக, பாப்பரசருக்கு வந்த ஓலையில் எழுதப் பட்டிருந்தது.
(These events were also chronicled by Fulcher of Chartres, who wrote: "I shudder to tell that many of our people, harassed by the madness of excessive hunger, cut pieces from the buttocks of the Saracens already dead there, which they cooked, but when it was not yet roasted enough by the fire, they devoured it with savage mouth." )

ஜெருசலேம் நோக்கி புறப்பட்ட சிலுவைப்படையினரை எதிர்க்க அன்று யாரும் இருக்கவில்லை. இன்று லெபனான் இருக்கும் இடத்தில் இருந்த குட்டி தேசங்களின் எமிர்கள் எல்லோரும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதற்காக நிறைய பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்கள். சிலுவைப் படைகள் ஜெருசலேம் மதில் சுவரை வந்தடைந்தனர். தற்போது இன்னொரு ராஜதந்திர நெருக்கடி உருவானது. அன்று ஜெருசலேம் எகிப்தை ஆண்ட கலீபாவின் கீழ் இருந்தது.

"பாத்திமி" என்று அழைக்கப் பட்ட அரசவம்சம் ஷியா முஸ்லிம்களின் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தது. சுன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் ஒருவரை மற்றவர் பார்க்க விரும்பாத பகைவர்களாக இருந்தனர். வடக்கே சுன்னி-முஸ்லிம் சாம்ராஜ்ய அதிபதிகளான செல்ஜுக் துருக்கியரை பாத்திமி வம்சத்தினர் எதிரிகளாக கருதினார்கள். அதனால் கிரேக்க-கிறிஸ்தவ சக்கரவர்த்தியுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தனர். சிலுவை படையின் முன்னேற்றத்தையும், அவர்கள் அன்று தமக்கு சார்பான அரசியல் மாற்றமாக கருதியிருப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்தவர்களுக்கு, பிராந்திய நல்லுறவு பற்றிய அக்கறை இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஜெருசலேமில் ஒரு ஐரோப்பிய காலனியை நிறுவுவது.

ஜெருசலேம் ஐரோப்பியரின் காலனியாகிறது

ஜெருசலேமை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றிய போது நடந்த சம்பவம் ஒன்றினை இவ்விடத்தில் நினைவுகூருவது பொருத்தமானது. அன்றைய இஸ்லாமியப் படைகளின் தளபதி உமார், ஜெருசலேமில் உள்ள இயேசுவின் தேவாலயத்திற்கு (இயேசு மரித்த, உயிர்த்தெழுந்த இடமாக கருதப்படுகின்றது) விஜயம் செய்தார். அப்போது தொழுகைக்கான நேரமாகி விட்டதால் தனது பாயை விரிக்க ஒரு இடம் கேட்டார். அப்போது தலைமை பாதிரியார் தேவாலயத்தின் உள்ளே ஒரு இடத்தில் தொழுகை நடத்துமாறு கூறினார். உமார் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து தேவாலயத்தின் வெளியே ஓரிடத்தை தெரிவு செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம்: "பின்னர் ஒரு காலத்தில், இது தான் உமார் தொழுத இடம் என்று முஸ்லிம்கள் உரிமை கோரக்கூடாது." அவ்வாறு பிற மதத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பக்குவம் சிலுவைப் படைகளுக்கு இருக்கவில்லை. ஜெருசலேமை கைப்பற்றிய சிலுவைப் படைகள் முதலில் அங்கிருந்த யூதர்களை அவர்களது ஆலயத்தோடு சேர்த்து கொளுத்தினார்கள். பின்னர் அல் அக்சா மசூதியில் தஞ்சமடைந்த முஸ்லிம்களை வெட்டிக் கொன்றார்கள்.

வழிபாட்டுத்தலத்தில் இனப்படுகொலை செய்ததற்காக சிலுவைப் படையினர் யாரும் வருந்தவில்லை. மாறாக இரத்தக் கறை படிந்த கைகளோடு நேராக இயேசுவின் தேவாலயம் சென்று, அமைதியாக பிரார்த்தனை செய்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை (கிறிஸ்தவர்கள் அல்லாத) மனிதர்களைக் கொல்வது ஒரு மதக்கடமை. அங்கு நடந்த சம்பவங்களை எழுதி வைத்த Fulcher இன் வார்த்தைகள் இவை: "இந்த நாளுக்காக எம்மவர்கள் ஏங்கிக் கிடந்தனர். நாட்களிலேயே மகிமை பொருந்திய நாள் இதுவே. செயல்களிலே அரும் பெறும் செயல் இதுவே!"
(Fulcher of Chartres, A History of the Expedition to Jerusalem, 1095-1127) 

அவர்கள் ஜெருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் சும்மா விட்டு வைகக்கவில்லை. ஜகொபிய, மறோனிய, ஆர்மேனிய, எகிப்திய கிறிஸ்தவ பிரிவுகளை சேர்ந்த அனைவரையும் வெளியேற்றினார்கள். இயேசுவை அறைந்த சிலுவையின் துண்டு ஒன்று ஜெருசலேமில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு சிலுவைப் படையினர் நெருக்கினார்கள். ஜெருசலேம் கிறிஸ்தவர்கள் யாரும் அந்த இடத்தை காட்டிக் கொடுக்காததால் சித்திரவதைக்கு உள்ளானார்கள். இதனால் ஜெருசலேம் கிறிஸ்தவர்கள், ஐரோப்பிய கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தனர்.

ஜெருசலேம் மண்ணின் மக்கள் அனைவரும், ஒன்றில் கொல்லப்பட்டனர், அல்லது விரட்டியடிக்கப் பட்டனர். அதன் பிறகு அங்கே "புனித ஜெருசலேம் ராஜ்ஜியம்" என்ற பெயரில் ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலை நாட்டப்பட்டது. அதனோடு சேர்த்து தற்போது மத்திய கிழக்கில் மூன்று ஐரோப்பிய காலனிகள் உருவாக்கி விட்டன. எடேசா, அந்தியோகியா, ஜெருசலேம் ஆகிய புதிதாக உருவான தேசங்களில் தற்போது வெள்ளையின ஐரோப்பியர்கள் குடும்பங்களோடு வந்து குடியேறி இருந்தனர். அடுத்த நூறாண்டுகளாவது நிலைத்து நிற்கப் போகும் நாடுகளில், அங்கேயே பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையும் உருவாகியது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் மத்திய கிழக்கை தமது தாயகமாக கருதினார்கள். ஆனால்... இன்னும் எத்தனை காலத்திற்கு அந்த ஐரோப்பிய காலனிகள் நிலைத்து நிற்கப் போகின்றன?

தம்மை மீள ஒருங்கமைத்துக் கொண்ட இஸ்லாமியப் படைகள், ஐரோப்பியரிடம் பறிகொடுத்த மண்ணை மீட்டெடுக்க புனிதப்போரை அறிவித்தனர். கொள்கைப்பற்றுள்ள தளபதிகள் தலைமையில் ஜிகாத் என்று அழைக்கப்பட்ட மண்மீட்புப் போர் ஆரம்பமாகியது. ஐரோப்பியர்களை போஸ்னியா வரை விரட்டிச் சென்றார்கள். அன்று ஓடிய ஐரோப்பியர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் தான் மீண்டும் காலடி எடுத்து வைத்தார்கள்.

(முற்றும்)

(இந்தத் தொடரை நூலுருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் " கருப்பு பிரதிகள்"  பதிப்பகத்தினால் வெளியிடப்படும்.)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி
5.கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

Saturday, November 16, 2013

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு, யாருக்காக?
" எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் குருவே! இலங்காபுரி என்றென்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சிற்றரசாக தொடர்ந்திருக்கும். கென்யா, மலேசியா, இந்த வரிசையில் இலங்கையிலும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி, நாட்டை மறுகாலனியாக்க வந்திருக்கும் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மகாராஜாவே, வருக... வருக... "

 ______________________________________________________________________________________


டேவிட் கமெரூனும், சம்பந்தரும், விக்னேஸ்வரனும் யாழ் நூலக மேல் மாடத்தில் (பால்கனி) நின்று கொண்டே, கீழே காணாமல்போன உறவுகளைத் தேடி அழும் தாய் மாரை கண்டு உருகும் காட்சி. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் வாகனம், காணாமல்போன சொந்தங்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்தவர்களால் வழிமறிக்கப் பட்டது. வாகனத்தை சூழ்ந்து கொண்டு, மேலே செல்ல விடாது தடுத்த தமிழ் மக்களை, பொலிஸ் பலவந்தமாக வெளியேற்றியது.

டேவிட் கமெரூன், தன் கண்முன்னே கண்ட ஸ்ரீலங்கா பொலிசாரின் அடக்குமுறையை தடுக்காமல், சூழ்ந்து நின்ற பொது மக்களிடம் குறைகளை கேட்டறியாமல், யாழ் நூலகத்திற்கு விரைந்து சென்றார். TNA தலைவர் சம்பந்தரும், வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனும், அங்கே அவருக்காக காத்திருந்தார்கள். No Comment. 
______________________________________________________________________________________

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ் கூறு நல்லுலகு எங்கும் அது குறித்து, மயிர் பிளக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து, ஒரு ஆப்பிரிக்க நாடு விலகிக் கொண்டுள்ளது. அந்தத் தகவல், அமைப்பினுள் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கிய போதிலும், ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. 

கொழும்பு நகரில் பொதுநலவாய நாட்களின் மகாநாடு நடக்கவிருக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க நாடான காம்பியா அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில், காம்பியாவின் சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள் குறித்து, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தது. இருப்பினும், அந்த நாடு விலகிக் கொண்டதை, பிரிட்டனாலும், அந்நாட்டு ஊடகங்களாலும் "புரிந்து கொள்ள முடியவில்லையாம்." "இது பைத்தியக்காரத் தனமான முடிவு" என்று காம்பியா மீது தமது காழ்ப்புணர்வை காட்டி வருகின்றன. 

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் இருந்து விலகியதற்கு, காம்பியா கூறும் காரணங்கள் என்ன? "இது ஒரு காலனிய அமைப்பு. பொதுநலவாய நாடுகள் என்ற பெயரில், பிரிட்டன் தனது நவ காலனிய கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது. அது ஒரு ஜனநாயக நிறுவனம் அல்ல. அங்கே சர்வாதிகாரம் நிலவுகின்றது. அனைத்து முடிவுகளையும் பிரிட்டனே எடுக்கின்றது." பொதுநலவாய நாடுகள் விமர்சிக்கப் படுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, அதிலிருந்து விலகிய சிம்பாப்வே ஏறக்குறைய அதே காரணங்களை கூறியிருந்தது. உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், இந்தியா நினைத்தால் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை நடத்த விடாமல் தடுக்கலாம் என்று சில தமிழர்கள் நினைக்கின்றனர். அவர்கள் யாரும் பிரிட்டனை நோக்கி சுட்டு விரலை நீட்டுவதில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

 ********************

"வட அயர்லாந்து பிரச்சினையில் நடந்ததைப் போன்று, இலங்கையிலும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப் பட வேண்டும். இது ஒரு நீண்ட கால செயற்திட்டம். இனங்களுக்கு, மதங்களுக்கு இடையில் நல்லுறவுப் பாலம் கட்டுவதை, இளைஞர்கள் சிறப்பாக செய்து காட்ட முடியும்." - பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு செயலாளர் வில்லியம் ஹேக்.

கொழும்பில் நடக்கும் பொதுநலவாய மகாநாட்டிற்கு வந்திருந்த வில்லியம் ஹேக், மாத்தறை நகரில் "இன நல்லிணக்க நிலையம்" ஒன்றை திறந்து வைத்துள்ளார். அந்த நிலையத்தை "ஸ்ரீலங்கா யுனைட்" என்ற அரசு சாரா நிறுவனம் நிர்வகிக்கின்றது. அந்த NGO வுக்கு நிதி வழங்குவதும், பிரிட்டன் தான். அந்த நல்லிணக்க நிறுவனம், நாடு முழுவதும் மூவினங்களை சேர்ந்த 15,000 பாடசாலை மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. "போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை நடந்தால், சர்வதேச சமூகம் தமிழீழத்தை தங்கத் தட்டில் வைத்துத் தரும்" என்று, தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது பிரிட்டிஷ் எஜமான், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்.

ஐக்கிய இலங்கை, இணக்க அரசியல் போன்றன, ராஜபக்சவின் "மகிந்த சிந்தனை" மட்டுமல்ல. அவையெல்லாம், தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கும், பிரிட்டிஷ் எஜமானர்களுக்கும் பிடித்த விஷயங்கள் தான். "ஆங்கிலேய அரசு ஐரிஷ் மக்களை அடக்கி ஒடுக்கியது போல, சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது" என்ற கழிவிரக்கம் காரணமாக இருக்கலாம்.

 ******************

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சிமகாநாடு, முக்கியமாக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நடைபெறுவதை, பிரிட்டிஷ் அமைச்சர்களே நேரடியாக கூறியுள்ளனர். குறிப்பாக, உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான பிரிட்டனுக்கு இலங்கையில் கிடைக்கும் ஆதாயங்கள் எவை? உலக சுற்றுலா நிறுவனங்களால் சொர்க்கபுரி என புகழப்படும் இலங்கைத் தீவு, உல்லாசப் பயணிகளை சுண்டியிழுக்கும் நீளமான தங்க மணல் கடற்கரைகளை கொண்டது. மேற்கத்திய நாட்டு பயணிகளை கவரும், மலிவு விலை, ஆங்கிலம் பேசக் கூடிய மக்கள், போன்ற கூடுதல் தகுதிகளைக் கொண்டது. ஆனால், முப்பதாண்டு கால ஈழப்போர், பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை வர விடாமல் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தற்போது அந்தப் பிரச்சினை இல்லை. புலிகளின் அழிவில், சர்வதேச முதலாளிகளின் எழுச்சி அலை ஒன்று உருவாகி உள்ளது. பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கோடீஸ்வரர் ஒருவர், ஆடம்பர விடுதிகளையும், ரிசோட்களையும் கட்டுவதற்கு அனுமதி கேட்டு வந்துள்ளார். உலகம் முழுவதும் விடுமுறைகளை கழிக்கச் செல்லும் ஐரோப்பிய நாட்டவரில், பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களை இலங்கைக்கு இழுத்து வருவதும், சுற்றுலாத் துறை நிறுவனங்களின் நீண்ட கால திட்டமாகும்.

எல்லாம் சுபமாக நடந்தால், தாய்லாந்து போன்று, இலங்கையும் மேலைத்தேய உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியலாம். ஆனால், சுற்றுலாத் துறையில் கிடைக்கும் இலாபத்தில் பெரும்பகுதி, அதில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களிடம் போய்ச் சேரும்.

*****************

Monday, November 11, 2013

தமிழ் தேசியவாதிகளும் இடதுசாரிகள் ஆகலாம்

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன.

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர், இடதுசாரி எதிர்ப்பை தமது நாளாந்த கடமையாக கொண்டுள்ளனர். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் அல்ல. அப்படிப் பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் யாருமே ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழர்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலர், ஒன்றில் அந்த நாடுகளின் குடியுரிமை, அல்லது வதிவிட உரிமை வைத்திருப்பதால், அந்த நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் ஓட்டுப் போடும் வாக்குரிமை பெற்றிருக்கின்றனர். 

அன்றும், இன்றும் பெரும்பான்மையான புலம்பெயர்ந்த தமிழ் வாக்காளர்கள், தேர்தல் வந்தால், எப்போதும் இடதுசாரிக் கட்சிகளுக்கே ஓட்டுப் போடுவது வழக்கம். "தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த", தமிழ் நகரசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட, இடதுசாரிக் கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வென்றவர்கள் தான். இன்னொருவிதமாக சொன்னால், தமிழ் இடதுசாரி அரசியல்வாதிகள் தான், தமிழினத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்கள்.

இணையத்தில் இடதுசாரி எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்பவர்கள் கூட, தனிப்பட்ட வாழ்வில் இடதுசாரிகளை ஆதரிக்கின்றனர். அதாவது, தேர்தல் காலங்களில், அவர்களும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதுடன், இடதுசாரிக் கட்சி சார்பாக போட்டியிடும் (தமிழ்) வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே, பல்லினக் கலாச்சாரத்தை ஆதரிக்கின்றன. வலதுசாரிக் கட்சிகள் எப்போதும் அதனை வெறுப்புடன் நோக்குகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையில் வலதுசாரிகளை ஆதரிக்காதவர்கள், இணையத்தில் மட்டும் இடதுசாரிகளை எதிர்த்துப் பேசுவது வேடிக்கையானது. அது அதிசயம் மட்டுமல்ல, ஆபத்தானது. அரசியலில் அதற்குப் பெயர் கருங்காலித்தனம்.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: http://www.youtube.com/watch?v=Cvf_YDTst_I) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

Thursday, November 07, 2013

ஈழத்தின் சுயநிர்ணய உரிமையும், NGO குழுக்களின் ஊடுருவலும்

(இந்தக் கட்டுரை,  ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ், ஈழத் தமிழரின் தலைவிதியை தீர்மானிக்கக் கிளம்பி இருக்கும், NGO குழுக்களின் நிகழ்ச்சிநிரலை ஆராய்கின்றது. இதனை, ஒரு நண்பர், எனது  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இருந்தார். ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு உண்மையை உரைக்க வேண்டிய அவசியம் கருதி, கலையகத்தில் பிரசுரிக்கப் படுகின்றது. ) 
​​​​​​​​​​​​​​ _________________________________________________________________________________

கடந்த மாதம், செப்டம்பர் 23ம் திகதி அன்று, Brussel நகரில், யூரோப்பியன் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள, போல்கென்றி ஸ்பாக் கட்டிடத்தில் (7வது BLOCK; C) அறை எண் 50-ல், IBON International என்ற,  (பிலிப்பைன்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட)  சர்வதேசிய NGO அமைப்பினரால், "ஜனநாயகம் சுயநிர்ணயம் மற்றும் மக்கள் விடுதலை" என்ற தலைப்பில் ஒரு அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு அரசு சார நிறுவனங்களும் (NGO) இந்நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கிய அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தன. IBON அமைப்பே அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் தொகுத்திருந்தது.

இந்த NGO அமைப்பான IBON-ன் செயற்பாடுகளில் தனது பிரதான இலக்காக:
  1. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் இவற்றுடன் உலகம் முழுவதுமுள்ள மக்கள் இயக்கங்களின் திறனை மேம்படுத்துவது.
  2. கொள்கை கூட்டு அடிப்படையில், சிவில் சமூகம், அரசாங்கம் மற்றும் நிதி உதவி வழங்கி ஒத்துழைப்பவர்கள் மத்தியில், மூலோபாய வேலை உறவுகளை கட்டியெழுப்புவது
இவையையே தனது அடிப்படை இலட்சியமாக கொண்டிருப்பதாக IBON அமைப்பு அறிவித்திருக்கிறது.

மேலும், சர்வதேசிய ரீதியில், பல்வேறு NGO-க்களுடன் கூட்டிணைந்து, பல்வேறு வேலைத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று வருகிறது. சுற்றுபுறச் சூழல், உணவு பாதுகாப்பு, சிவில் சமூகங்களை செயல்பட வைப்பது என்பதுடன் தேசிய அரசியல் நீரோட்டத்தில் “ஜனநாயக” முறையில் தேர்தல்களை நடத்தி “வாக்குரிமை” உரிமையை மக்களிற்கு வழங்க செய்வதில் “உறுதிப்படுத்தல்” என்பனவற்றில் ஈடுபாடு செலுத்தி வருகிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் வாக்காளர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ள செய்தல் என்பனவற்றில் கருத்துருவாக்கத்தை உருவாக்கி வருகின்றது. தனது, IBON International மூலமாக பல்வேறு வெளியீடுகளை கொண்டுவந்துள்ளது. 

பிலிப்பைன்ஸில் நடக்கும் உள்நாட்டு சண்டையில், பிலிப்பைன்ஸ் ஜனநாயக முன்னணி அமைப்புக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அணுசரணையாளராக நார்வே அரசை சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டதற்கும் IBON பின்னணியாக இருந்துள்ளது. இதனால் பிலிப்பைன்ஸில் மக்கள் அமைப்புக்களிற்குள் மற்றும் சர்வதேசியத்தில் ஏற்பட்ட பிளவுகளை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

ஜநா மன்றத்தில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், 4 ஜீலை 1976 முதல் பொதுவாக அழைக்கப்படும் “அல்ஜீரிய பிரகடனத்தின்” சமகால பொருத்தப்பாடும் அதன் போதாமையை வலியுறுத்துவது மானதாகவே இந்த ஜனநாயகம் சுயநிர்ணயம் மற்றும் மக்கள் விடுதலை என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. 

IBON அமைப்பின்  துணை சர்வதேச இயக்குனர் அமி. வி. படில்லா தனது அறிக்கையில் கூட்டத்தின் நோக்கம் என்பது, கூட்டு உரிமைகள் சுயநிர்ணய மற்றும் விடுதலை, பொருளாதார ஜனநாயகம் பெண்கள் விடுதலை மற்றும் அமைப்பு மாற்றம், அரசானது மக்களின் கூட்டு உரிமைகள் மற்றும் மக்களின் எதிர்ப்பு உரிமைகளை சட்டரீதியாக பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்றைய சூழலில் புதிய உத்திகள் மற்றும் ஆய்வுமுறை புதிய பொருளாதார சூழலில் அரசியல் இராணுவம் இவற்றின் வளர்ச்சியால் மக்களின் உரிமைக்கு எதிரான சித்தாந்த தாக்குதலுக்கு எதிராக எவ்வாறு பொருளாதார மற்றும் சுயநிர்ணய மற்றும் விடுதலை அரசியலின் பார்வையை உருவாக்குவது வளர்த்தெடுப்பது என்பதாகவே இந்த கூட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

ஜநா பொதுச்சபை தீர்மானம், 1514 “அல்ஜீரிய பிரகடனமானது” மனித உரிமைகளையும், மக்களின் இருப்பை உள்ளடக்கியதாக, உள்ள அரசியல் பொருளாதார, கலாச்சார, மற்றும் சுற்றுச்சூழல் சுதந்திரத்தையும்,சிறுபான்மையின மக்களின் உரிமையை, அந்த நாட்டிற்குள்ளேயே பெறக்கூடியதாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

மேலும் அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமை சுதந்திரமாக தனது அரசியல் நிலைமையை தீர்மானிக்க மற்றும் சுதந்திரமாக தமது பொருளாதார சமூக கலாச்சார வளர்ச்சியை தொடர வேண்டும் என்றும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளின் மத்தியில் ஒரே நேரத்தில் நம்பிக்கையுடன் மற்றும் ஆழமான அவநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்… 

அதே நேரத்தில் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியானது உலக மக்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேசிய கூட்டமைப்புகளுக்கு எதிராகவும் காலனித்துவ அமைப்பின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் உலக மக்கள் விழிப்படைந்து வெற்றி பெற்ற போதும்…

புதிய வடிவங்களில் ஏகாதிபத்தியம் உலக மக்களை அடக்கு முறைகள் மூலம் ஏவியும் சுரண்டியும் வருகிறது. உலக மக்கள் மத்தியில் வெறுப்பையும் தோல்வியையும் ஏற்படுத்துகிறது…

உலக மக்கள் அனைவரும் எந்த வெளிநாட்டு தலையீட்டில் இருந்தும் தங்களை விடுவித்து தங்களின் சம உரிமைகளை சுதந்திரம் மற்றும் தங்களுக்கான சொந்த அரசை உருவாக்கி கொள்வது…

என விரிந்து செல்லும் ஐ.நா வின் “அல்ஜீரிய பிரகடனத்தின்” போதாமையை இன்றைய சூழலில் எவ்வாறு மாற்றியமைப்பது அல்லது திருத்தங்களை கொண்டுவருவது என்பதை ஒட்டிய விவாதமாகவே IBON- னும்  அதனுடைய நிகழ்ச்சி, NGO களின் நோக்கமாக இருந்தது.

IBON அமைப்பிற்கு நிதியுதவியும் ஆதரவும் அளித்துவரும் ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் (GUE/NGL) மனித உரிமை இ பெண்உரிமை சுற்றுப்புறச்சூழல் பால்வேறுபாடு போன்றவற்றிற்கு குரல் கொடுத்து வருகிறார்கள். தங்களுடன் இணைந்து கொள்பவர்களை வைத்து ஒரு அமைப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். (இது ஒரு கதம்பமான வானவில் கூட்டணி) NGO க்களுடன் இணைந்து எவ்வாறு மக்கள் இயக்கங்களை கடத்தி செல்வது என்பதை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். (விரிவான கட்டுரை விரைவில் வெளிவரும். “போலியான எதிர்ப்பை உருவாக்கும் தந்திரங்கள்”. ஆங்கிலத்தில் உடன் வாசிக்க (Manufacturing Dissent”: The Anti – Globalization movement is funded by the corporate Elities – Prof Michel Chossudovsky)

IBON அமைப்பின் துணை அமைப்பான ரியாலிட்டி ஒப் எய்ட் அமைப்பிற்கு, Ford Foundation இடமிருந்து பத்து ஆண்டுகளிற்கு மேலாக நிதி வந்துள்ளது. IBON நடத்திய  நிகழ்வை அதிர்வு இணையமும், தமிழ்நெட் இணையமும் செய்திகளாகவும் அறிக்கைகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் வெளியிட்டு இருந்தன. NGO  அமைப்பான IBON நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் கலந்து கொண்டவர்களில், (உரை நிகழ்த்தியவர்கள்) ஜக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த "இனியொரு.காம்" ஆசிரியர் சபா. நாவலன் என வெளியிட்டிருந்தது. ஆத்துடன் NGO அமைப்பில், திரு சபா நாவலன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவத்தையும் பிரசுரித்திருந்தது.

முற்றுமொரு NGO இணைய தளத்தில் IBON நிகழ்ச்சி அறிக்கையில், " திரு. சபாரத்தினம் நாவலன், தமிழர் நடுவர் மனித உரிமையகம், ஜக்கிய ராஜ்ஜியம்." என குறிப்பிட்டுள்ளது.     
              
"தமிழர் நடுவர் மனித உரிமையகம்", தாம் ஒரு மனித உரிமையமைப்பு எனவும், அது சர்வதேசிய NGO க்களுடன் நெருங்கிய உறவை பேணிவருவதாகவும், மற்றும் ஜநா நிறுவனங்களுடனும், குறிப்பாக மனித உரிமைக்கு எதிராக செயல்படும், இலங்கை அரசின் செயல்பாடுகளை வெளிக்கொணர்வதில் ஒன்றிணைந்துள்ளது எனவும் கூறுகிறது.

அழைப்பிதழ் பெயர் குழப்படியினால், “நான் அவனில்லை” என, பிரச்சனை வராமல் புகைப்படத்தை வெளியிட்டு, தமிழ் மக்களின் துயரத்தை நீக்கி விட்டது அதிர்வு இணையமும், தமிழ்நெட் இணையமும். 

திரு சபா. நாவலன் NGO அரங்கில் வாசித்த அறிக்கையின் சுருக்கம்: 

இந்த குரல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதும், சுயநிர்ணய உரிமைக்காக போராடியவர்களுக்குமானது என தொடங்குகிறார்.

வெளிநாட்டு உதவிகளை  எதிர்பார்த்து, வன்னியில் விடுதலைப் புலிகள் உட்பட மூன்று லட்சம் மக்கள் முடக்கப்பட்டிருந்ததையும், இன்று வன்னி சர்வதேச பயங்கரவாதத்தின் விளைநிலமாக மாறிவிட்டதையும், ஜ.நா.வின் அறிக்கையின் படி, 70000 மக்கள் ஒருசில நாட்களில், மே-2009-ல் சிங்கள பேரினவாத இனப்படுகொலையாளர்களால் இனசுத்திகரிப்பு செய்ததையும், பயங்கரவாதத்தை துடைத்து விட்டதாக வெளியுலகிற்கு தெரிவித்து வருவதையும் குறிப்பிடுகிறார். 

சிங்களம், இந்த நாட்டில் புத்த அரசின் மேலாதிக்கத்தை குறிக்கின்றது. பெரும்பான்மை சிங்கள அரசு, அடக்குமுறைக்கு எதிரான 30 ஆண்டு கால தேசிய இனப்போராட்டத்தை, இனப்படுகொலை மூலம் துடைத்தெறிந்து விட்டது எனவும் குறிப்பிடுகின்றார்.

இனப்படுகொலை வெற்றியானது, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என கொண்டாடப்படுவதையும் சுயநிர்ணயத்திற்க்கான ஆயுத போராட்டத்தை, ஒருபுறம் இந்தியா தனது விரிவாக்கத்திற்காகவும், மறுபுறம் தமிழ் மக்கள் மீது, அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகள், தமது அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கி வந்தன. விடுதலைப்புலிகள், மற்றும் பிற தமிழ் அமைப்புக்கள் இந்த நாடுகளை நம்பின. இந்திய உளவு அமைப்பு, மற்றும் மேற்கு நாடுகள், இலங்கை அரசிற்கு எதிராக, இவர்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்து வந்தன எனவும் குறிப்பிடுகிறார்.

அடிப்படையில், உலகமயமாக்கலுக்கு முந்தைய தேசியவாத சகாப்தம் பற்றி கேள்வி எழவேண்டும் என்கிறார்.

வரலாற்று ரீதியில் சுயநிர்ணயம் உருவானதை பற்றியும், ஜரோப்பாவில் தேசிய உருவாக்கம், குறிப்பாக பிரான்சு, இத்தாலியில், எவ்வாறு பல மொழிகள் ஒழிந்து, ஒரே மொழியாக்கப்பட்டதன் வரலாற்றைப் பற்றியும், பிரிட்டனில் தேசிய பொருளாதாரம் எதுவும் இல்லை எனவும்; தேசிய சுயநிர்ணய உரிமை, மற்றும் தேசியம், ஜரோப்பாவில் கடந்து விட்டவையாகும் எனவும்; முதலாளித்துவ பிறப்பு அமைத்த, இன தேசியம் இப்போது இல்லாமல் போய்விட்டது எனவும் குறிப்பிடுகின்றார்.

ஜரோப்பாவில் தேசியவாதம், ஒரு சமூக விரோத கருத்தாக மாறியதுடன், தேசியவாதம் ஒரு பாசிச போக்காக காணப்படுவதாகவும், அடிப்படையில் இந்த தேசியவாதம், நாஜி எண்ணங்களையும், அதன் வேர்களையும் கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிடுகின்றார்.

மேலும், உயர் நடுத்தர வர்க்கத்தில் மேலெழும் சக்திகள், எவ்வாறு தேசிய இனப் போராட்டத்தை கையில் எடுக்கின்றன என்பதையும்; இவை பெரும்பாலும் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளாகவே இருக்கின்றன எனவும்  குறிப்பிட்டு; எனவே தேசியப் போராட்டத்தில் சிலகட்டத்தில், ஒரு சமூக விரோத இயக்கமாக மாறிவிடுகின்றது எனவும்; இந்த இயக்கங்கள் ஒரு பாசிசத் தன்மையை பெறச்  செய்துள்ளது எனவும் விவரிக்கின்றார்.

இந்த பின்னணியிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள், எவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே, பாசிச மற்றும் மக்கள் விரோத அமைப்பாக மாறியது என்பதையும், இளம் உயிர்கள் ஆயிரக்கணக்கில் இழந்தும், 30 ஆண்டு கால போராட்டத்தில், பெரும் எண்ணிக்கையில் மக்களை இழந்திருக்கின்றோம், என்பதையும் குறிப்பிடுகின்றார். (புலிகள் குறித்த இந்த பகுதி தமிழ்நெட் இணையத்தில் நீக்கப்பட்டுள்ளது)

மேலும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களை, மக்களை மையப்படுத்தி எவ்வாறு தொடரப் போகிறோம் , என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சபா. நாவலன்  NGO கருத்தரங்கில் பங்குபற்றி, மேற்குறித்தவாறு உரை நிகழ்த்தி இருப்பினும், இனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பை பற்றி விவரிக்காமலே கடந்து செல்வதும், தேசிய இனப்போராட்டத்தின் கருத்துருவாக்கத்திற்கு எதிரான கருத்தாக்கங்களை, NGO அமைப்புக்கள் எவ்வாறு கட்டமைக்கின்றன, என்பதை பற்றி குறிப்பிடாமலேயே கடந்து செல்வது வியப்பளிக்கின்றது! (NGO அரங்கில் “எல்லா”வற்றையும் பேசிவிட முடியாது தானே?) 

மேலும் திரு சபா நாவலனின் “தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி” என்ற நூலின் முன்னுரையில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் “நாவலனின் கருத்துப்படி முறையான சந்தை வளர்ச்சி மட்டும் இலங்கையில் உருவாகியிருந்தால் இன்று அங்கே தேசிய முரண்கள் இருந்திருக்காது என்பது மட்டுமல்ல இலங்கை முழுவதும் ஒரே மொழி பேசுகிற ஒரே தேசிய இனமாகவும் கூட இருந்திருக்கும்” என கூறியுள்ளார்.

தற்போது, இதே பிரச்சனையை, பிரான்சு, இத்தாலி பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளார். NGO அரங்கில் அவர் வாசித்த முழு அறிக்கை, தமிழ் சூழலில் வெளிவரும் என எதிர்பார்ப்போம்?

"NGO எதிர்ப்பாளர்களாக" தங்களை முதன்மை படுத்திய நபர்கள், இன்று NGO க்களின் நிகழ்ச்சி நிரலில் இருப்பது என்பது, இவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு வியப்பளிப்பதாக இருக்காது. இந்திய அரசின் “நாச்சியப்பன்” வகையறாக்களும், ஜரோப்பிய ஒன்றிய NGO க்களினதும், புறங்கையை NGO களிடம் நக்கிக் கொண்டே மக்கள் போராட்டங்களை ஒடுக்கி NGO சாயம் பூசும் பாசிச ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரல்களில் உள்ள ஒற்றுமையும் மூலோபாயமும் ஒன்றானதே!!


- யோகேந்திரன்உசாத்துணை :
4)    “Manufacturing Dissent”: The Anti-globalization Movement is Funded by the Corporate Elites

The People's Movement has been Hijacked
   6)
  7)
Conference on Democracy, Self-Determination and Liberation of Peoples
September 23, 2013, Brussels, Belgium - See more at:
http://www.iboninternational.org/page/whats_new/236#sthash.IRalVdgs.dpuf

 8)
 9)
 10)

21st Century Movements for Self-Determination: The Sri Lankan Case Study
Savaratnam Navalan
Tamil Center for Human Rights
23 September 2013
This voice is raised on behalf of a people who were discriminated against, fighting for their rights to self-determination.

11)"Human rights and humanitarian law have acquired a special significance for the Tamil people. The Tamils are a Fourth World nation - a nation without a state. Existing states do not readily surrender control of territory which they claim as their own - in addition, they often find common cause in securing each other's territorial boundaries. Unsurprisingly, the Tamil people, like many other peoples of the Fourth World, have often turned to the growing body of international human rights law and humanitarian law, and to non governmental organisations for support for their struggle against alien rule and for recognition as a people with the right to freely determine their political status."


15)

Struggle for Collective Rights
Amy V. Padilla
Deputy International Director, IBON International
Conference on Democracy, Self-Determination and Liberation of Peoples
European Parliament, Brussels, Belgium
        By working in co-operation with all human rights bodies such as the UN Commission on Human Rights and the Sub~Commission on Promotion and Protection of Human Rights, Treaty bodies, the OHCHR and NGOs.
For 10 years the Reality of Aid network has
benefited from generous grants from the Ford
Foundation, as well as smaller contributions
from a number of CSOs. Members of the
network make substantial in-kind contributions.
But the Ford Foundation has indicated that no
further funding is possible

VIII
The
Reality
of Aid 2002
The
Reality of Aid
is written by authors from NGOs worldwide whose research draws on knowledge and expertise from
aid agencies, academia, community-based organisations and governments. We would like to thank those who have
generously contributed their knowledge and advice.
The editors would particularly like to thank the staff at the Statistics Department of the Development Cooperation
Directorate of the OECD, and especially Brian Hammond, Simon Scott and Rudolphe Petras, for their help in
understanding data on Official Development Assistance. However responsibility for any errors of fact or interpretation
lies with the Reality of Aid.
Reality of Aid is funded primarily by the Ford Foundation and the participating NGOs. It is also most grateful to
have received support from UNDP and the Danish Ministry of Foreign Affairs.
18)A


19)http://www.realityofaid.org/

20)
தேசிய இன பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி-சபா.நாவலன்
(
பக்கம் 3)

Sunday, November 03, 2013

வெளிநாடு செல்லும் தமிழ் தொழிலாளர்கள் வசதியாக வாழ்வது எப்படி?

மேலைத்தேய பணக்கார நாடொன்றில், கையில் காசில்லாமல் புதிதாக வரும் ஒருவர், உணவு விடுதியில் சுத்திகரிப்பு வேலை செய்து சம்பாதித்து, வசதியாக வாழ முடிகிறது. போதுமான பணம் சம்பாதித்து, ஒரு சில வருடங்களில், சொந்த வீடு, கார் என்று வாங்க முடிகின்றது. ஆனால், இலங்கையில், அல்லது இந்தியாவில், அதே வேலையை வாழ் நாள் முழுவதும் செய்தாலும், ஒரு சைக்கிள் கூட வாங்க முடியாமல் இருக்கிறார். அவர் தனது வீட்டு வாடகையை கூட, ஒழுங்காக கட்ட முடியாத நிலைமைக்கு என்ன காரணம்? 

இருவரும் ஒரே தொழிலைத் தானே செய்கின்றனர்? இருவரும் ஒரே உழைப்பைத் தானே செலுத்துகின்றனர்? ஒவ்வொரு நாட்டிலும், ஒரு தொழிலாளியின் ஒரு மணிநேர உழைப்புக்கு, நிர்ணயிக்கப் படும் விலை மாறுபடுகின்றது. அதனால் தான், தமது உழைப்புக்கு அதிக விலை கிடைக்கும் நாட்டை நோக்கி, பலர் புலம்பெயர்ந்து செல்கின்றனர். உலகப் பொருளாதாரத்தை ஒரே சர்வதேச சந்தை தீர்மானிக்கும் காலத்தில், தொழிலாளர்களின் வெளிநாடுகளை நோக்கிய இடப்பெயர்வும் தடுக்க முடியாதது.

பணக்கார நாடுகளில், தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூலி அதிகம் என்பதால், பொருளின் உற்பத்திச் செலவும் அதிகமாகின்றது. அதனால், அந்தப் பொருளை, சந்தையில் அதிக விலைக்குத் தான் விற்க வேண்டும். அவற்றை நுகர்வதற்கு தகுதியான மக்களும் அந்த நாட்டில் இருக்க வேண்டியது அவசியம். தொழிலாளர்களும், இன்னொரு இடத்தில் நுகர்வோர் தான். அதனால், சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கும் தகுதியும், ஒரு தொழிலாளிக்கு இருக்க வேண்டும். அதற்காகத் தான், அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். 

மேலைத்தேய நாடுகளில், வேலை வாய்ப்பில்லாதவர்களை "உழைக்காத சோம்பேறிகளாக" கருதுவதில்லை. மாறாக, "வாயுள்ள ஜீவன்களாக" கருதப் படுகின்றனர். அதன் அர்த்தம், அவர்களும் நுகர்வோர் தான். ஆகவே, அரசு "சும்மா இருப்பவர்களுக்கு" உதவிப் பணம் கொடுத்து, அவர்களை நுகர வைக்கின்றது. மேற்கத்திய நாடுகளுக்கு வெறுங்கையுடன் வரும் அகதிகளுக்கும், அதனால் தான் பெருமளவு உதவிப் பணம் கிடைக்கின்றது. அவர்களுக்கு கிடைக்கும் தொகை மட்டுப் படுத்தப் பட்டது என்பதால், தமக்கு கிடைக்கும் பணத்தை அந்த நாட்டிலேயே செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கின்றனர்.

"பணக்கார நாடுகளில்", பொருளின் விலைக்கும், தொழிலாளியின் கூலிக்கும் இடையில் சிறிதளவே வித்தியாசம் இருப்பதால், மேலதிக இலாபத்திற்காக சர்வதேச சந்தையை பிடித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. மேலைத்தேய பன்னாட்டு நிறுவனங்கள், உலகம் முழுவதும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி, தமது பொருட்களை அதே விலைக்கு விற்கின்றன. "வெளிநாட்டுப் பொருள் என்றால் தரமானதாக இருக்கும்"  என்று நம்பும் மக்கள் வாழும் இலங்கை, இந்தியா போன்ற வறிய நாடுகளிலும், அந்தப் பொருட்கள், அதே விலைக்கு சந்தையில் கிடைக்கின்றது. வறிய நாடுகளில் வாழும் செல்வந்தர்கள், அவற்றை வாங்கி அனுபவிக்கிறார்கள். அதே நேரம், மேலைத்தேய நாடுகளில், தங்கி வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்த, அடிமட்ட தொழிலாளர்களும், அதே விலையை கொடுத்து அனுபவிக்க முடிகின்றது. அதனால் தான், பணக்கார நாடுகளில் வாழும் தமிழர்கள், "தாம் வசதியானவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்."

"உலகமயமாக்கல், சுதந்திர வர்த்தகம்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், வறிய நாடுகள் தமது பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு வர முடியாமல் திணறுகின்றன. இது வரை காலமும், சர்வதேச தரம் வாய்ந்த "பிராண்ட்" பொருள் எதையும் அவை சந்தைப் படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம், மூலதனம் குவித்து வைத்திருக்கும் நாடுகளின் அசுர பலம், சர்வதேச சந்தையை கட்டுப்படுத்துகின்றது. ஏதாவது ஒரு நாடு, தனது தரமான பொருளை, கஷ்டப் பட்டு சந்தைக்கு கொண்டு வந்தாலும், அது பின்னர் மேலைத்தேய மூலதனத்தால் வாங்கப் படுகின்றது. உதாரணத்திற்கு, மெக்சிகோவின் கொரோனா பியர் உலகம் முழுவதும் பிரபலமானதும், அமெரிக்க மூலதனத்தால் வாங்கப் பட்டது. "Hotmail மின்னஞ்சலை ஒரு தமிழன் கண்டுபிடித்தான்" என்று நாங்கள் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அது கடைசியில் அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப் பட்டது. 

சந்தையில் நிலவும் "சுதந்திரமான போட்டி", செல்வந்த நாடுகளுக்கு சாதகமாகவும், வறிய நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. "சுதந்திரமான போட்டி" ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே, வறிய நாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியம் உயர வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, சீனா தனது உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பதற்காக கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், உலக வர்த்தக மையத்தினுள் அனுமதி மறுக்கப் பட்டது. சீனா சுதந்திரமான போட்டியை கட்டுப் படுத்தியதால், அந்நாட்டு தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது. ஜப்பானியர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, சீனர்களும் உலக நாடுகளை சுற்றிப் பார்க்குமளவிற்கு, அந்நாட்டில் ஊழியர்களின் சம்பள விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது பிரேசிலும் அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  

ஒரு சிக்கலான பொருளாதார கட்டமைப்பினை புரிந்து கொள்ள முடியாத, மேலைத்தேய நாட்டு பாட்டாளி வர்க்கம், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவாக, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்வதாக, தன்னைத் தானே நினைத்துக் கொள்கின்றது. அந்த நாடுகளில் வாழும், தமிழ் தொழிலாளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த தோற்றப்பாடு, ஐரோப்பிய சமூகத்திற்கு புதிய விடயமல்ல. 

"பாட்டாளி வர்க்கத்தில் மேட்டுக்குடியின் உருவாக்கம்" (labour aristocracy) பற்றி, கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்கிறார். தமது சமூக அந்தஸ்து குறித்து பெருமைப்படும், மேலைத்தேய தமிழ் பாட்டாளி வர்க்கமும், மார்க்ஸ் எழுதியவற்றை ஒரு தடவை வாசித்துப் பார்ப்பது நல்லது.

***********************************

எனது ஜெர்மன் நண்பர் ஒருவர், கணனியின் பாகங்களை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு, பின்னர் பொருத்தி முழுமையான கணணியாக்குவது எப்படி என்று காட்டித் தந்தார். அவர் முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை சேர்ந்தவர். பெர்லின் மதில் விழும் பொழுது, அவருக்கு பத்து வயதாக இருந்திருக்கலாம். அந்த நண்பர், தனது செயலை ஒரு உதாரணம் மூலம் புரிய வைத்தார். 

ஒரு முதலாளியவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான். மக்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், அறியாமையில் வைத்திருந்தால் தான், முதலாளி கோடி கோடியாக இலாபம் சம்பாதிக்க முடியும். 

"நமது தமிழ் மக்களுக்கு கம்யூனிசம் தேவையில்லை. இன்று யாருமே அதை பொருட் படுத்துவதில்லை. மக்கள் இடதுசாரிகளை வெறுக்கிறார்கள்..." என்றெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கூட உளறித் திரிகின்றார்கள். அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் அச்சம் தான், இந்த உளறலுக்கு காரணம். அவர்களிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அறிவியல், அனைத்து மக்களையும் போய்ச் சேர்ந்து விட்டால், யார் அவர்களை மதிப்பார்கள்? அதற்குப் பின், கை நிறைய சம்பளம் வாங்கி, வாய் நிறைய உண்ண முடியுமா? 

எதற்காக, பெரும்பாலான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள், கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்பதற்கு, இதை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஐயோ பாவம். அவர்கள் தாங்கள் மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

 *************************************