Wednesday, May 05, 2010

காலனிய காலத்தில் வாழும் தமிழ் அகதிகள்


(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - இறுதிப் பகுதி)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கோ, அல்லது மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கோ, மேற்குறிப்பிட்ட அகதி அரசியல் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் யாவும் பணக்கார நாடுகள் என அறிந்திருந்தனர். அங்கே மக்கள் அனைத்து வசதிகளுடனும் வாழ்வதாக அறிந்திருந்தனர். சுருக்கமாக சொன்னால், "தேனும் பாலும் ஆறாக ஓடும் நாடுகளைப்" பற்றி கேள்விப்பட்டிருந்தனர். நான் ஒரு முறை இந்தியா சென்றிருந்த போது, நெதர்லாந்தில் உறவினர்களைக் கொண்ட ஒருவர் கேட்டார்: "அந்த நாட்டில் மாடுகள் போவதற்கு என்று தனியாக பாதை போட்டிருக்கிறார்கலாமே?" வெளிநாடுகளில் வாழும் பலர் தமது தாயக உறவுகளுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர். இங்கிலாந்தில் சாதாரண துப்பரவுப் பணியாளர் கூட கோட்,சூட் அணிந்து செல்வார் என்பது போல கற்பனை செய்துகொள்வார்கள். இந்த புனைகதைகள் பின்னர் பிற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைக் குறித்தும் பரவியது.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் அனைவருமே சொந்தமாக வீடு, கார் வைத்திருப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் சந்தித்த குடும்பத் தலைவி ஒருவர் சொன்னார்: "நானும் நெதர்லாந்தில் வசித்தால் மாதம் ஒரு தங்க நகை வாங்குவேன்." பலருக்கு இந்த ஆடம்பரங்களுக்கு அப்பால் வேறெதுவும் தெரியாது. அவர்களது மட்டுப்படுத்தப்பட்ட அறிவை, அன்றைய சோஷலிச நாடுகளில் இருந்து சென்ற அகதிகளின் அறிவுடன் ஒப்பிடலாம். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி பெரும் பணச் செலவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் அப்படி எந்தப் பிரச்சாரமும் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. அனேகமாக அனைத்து நாடுகளும் எதோ ஒரு ஐரோப்பிய வல்லரசின் காலனியாக இருந்தவை தாம். ஐரோப்பிய எஜமானர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறை அந்தப் பணியை ஏற்கனவே செவ்வனே செய்திருந்தது.

ஒரு காலத்தில் இலங்கையில் வெளிநாடு போவதென்றால் இங்கிலாந்து பலரின் நினைவுக்கு வரும். லண்டனில் படித்தவர்கள், அல்லது ஆங்கிலம் பேசுபவர்கள என்றால் மதிப்பு உயரும். இதனால் வெளிநாடுகளில் எல்லாம் ஆங்கில மொழியே பேசப்படுவதாக பலர் அப்பாவித்தனமாக நம்பினார்கள். பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் கூட அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இலங்கையில் செயலாளராக பணியாற்றும் பெண்ணொருவருக்கு, (நெதர்லாந்தில்) எமது நிறுவனத்தின் வருடாந்த கூட்டம் டச்சு மொழியில் நடைபெற்றது என்ற செய்தியை நம்பமுடியவில்லை. "ரஷ்யா சென்றிருந்த போது ஆங்கிலத்தில் தானே பேசியிருப்பேன்." என்று ஒரு கேள்வியைப் போட்டார். "ரஷ்யர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அங்கே ரஷ்ய மொழி தெரியாவிட்டால், சைகை காட்டித்தான் புரிய வைக்க வேண்டும்" என்ற உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

காலனிய வரலாற்றுத் தொடர்பு காரணமாக, பிரிட்டிஷ் அரசு தனது சொந்த மக்களுக்கு அடுத்ததாக தம் மீது நன்மதிப்பு வைத்திருப்பதாக, பல தமிழர்கள் நம்பினார்கள். இங்கிலாந்து சென்றால், சொந்தப் பிள்ளை போல உபசரிப்பார்கள், என்று நினைத்துக் கொண்டனர். உலகில் தாங்கள் மட்டுமே இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் தமக்கு விசேஷ கவனிப்பு இருக்கும் என்ற நினைப்பில் விமானமேறியவர்கள் பலர். நான் பின்னர் பிற நாட்டினருடன் உரையாடிய போது, அவர்களுக்கும் அதே சிந்தனை இருந்ததை அவதானித்தேன்.

ஈராக்கை சேர்ந்த அகதி ஒருவர், தான் எந்தவொரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றாலும், அங்கே ஈராக்கியர்கள் மட்டுமே அகதிகளாக தஞ்சம் கோரி இருப்பார்கள் என்று நினைத்ததாக தெரிவித்தார். தனது தோல் நிறம் வெள்ளையாக இருப்பதால், ஐரோப்பியர்கள் சகோதர பாசத்துடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து சென்றால், தம்மை சொந்தப் பிள்ளை போல வரவேற்பார்கள் என்று நம்பியதாக சொன்னார். ஆனால் இங்கு வந்து சேர்ந்த பின்னர் தான், உலகின் பல பாகங்களில் இருந்தும் அகதிகள் வந்து சேருவதை புரிந்து கொண்டதாக கூறினார். அதே நேரம் தனது கறுப்புத் தலைமுடி காரணமாக பாகுபாடு காட்டும் யதார்த்தை ஐரோப்பாவில் தரிசிக்க நேர்ந்த அவலத்தையும் சொன்னார்.

அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களில் பலர், தாமே உண்மையான அகதிகள் என்றும், மற்றவர்கள் அனைவரும் வேறு காரணங்களுக்காக வருவதாகவும் கருதிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் வெள்ளைக்காரனுக்கு சூது,வாதற்ற வெள்ளை மனசு என்று கருதி வந்தார்கள். இது போன்ற மனப்பான்மைக்கு, ஆங்கிலேய காலனிய ஆட்சி ஒரு காரணம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. உள்ளூர் சமூகத்தில் இருந்து ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி, அதைக் கொண்டு முழு இலங்கையையும் நிர்வகித்து வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இதற்கென யாழ்ப்பாணத் தமிழர்களை (அதிலும் உயர்சாதி வெள்ளாளர்கள்) விசேஷமாக தெரிவு செய்தார்கள். சிறுபான்மை மொழி பேசும், நிலவுடமைச் சமுதாயம் ஆங்கிலேயரின் கடைக்கண் பார்வைக்கு உட்பட்டத்தில் வியப்பில்லை. பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இலங்கையர்கள் பலியானார்கள். காலனிய ஆட்சிக்கு சேவை செய்வதன் பரிகாரமாக, சைவ வெள்ளாளர்கள் தமது பிரதேசத்தில் மத அனுஷ்டானங்களையும், சாதிய பாகுபாட்டையும், நிலப்பிரபுவத்தையும் ஆங்கிலேயர்கள் தடுக்கவில்லை. இதனால் காலனிய அடக்குமுறையை கண்டு, கேட்டிராத சமூகம் ஒன்று அன்று ஆங்கிலேய பிரபுக்கள் மீதும், இன்று மேற்குலக கனவான்கள் மீதும் பெரு மதிப்பு வைத்திருப்பது வியப்புக்குரியதல்ல. இந்த அளவு கடந்த மதிப்பானது, வெள்ளையினத்தவரின் கபடத்தனத்தை இனங்காணத் தவறிவிட்டது. ஐரோப்பியர் பற்றிய தப்பெண்ணம் இறுதியில் ஈழத்தமிழரின் தேசிய அரசியல் தோல்விகளுக்கும் காரணமாக அமைந்தது.

(முற்றும்)

3 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hai said...

நல்ல பதிவுகள்.

நீங்கள் எழுதிய விவரம் பற்றி அதிகம் வாசக அனுபவம் இல்லை. ஆனால் அடிப்படை புரிந்துணர்வு அவசியம் அதை விரிவாக அறிந்துகொள்ள உதவியது உங்கள் பதிவுகள்.


எந்த நாட்டிற்கும் அவர்களது இன மத மொழி ஒருமைப்பாடுடையவர்கள் சித்தாந்தத்துடன் உடன்பட்டவர்கள் இவர்கள் அகதிகளாகும் நிலையில் அவர்களை வரவேற்க ஒரு முகாந்திரம் இருக்கவே செய்கிறது. இது இயல்பே.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஒரே நாளில் தோற்றவர்கள் உலக அழிவுக்காக போரிட்டதாகவும் மற்றவர்கள் உலகை அழிவிலிருந்து காத்ததாகவும் உருப்பெற்றனர். இதில் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளுடன் விட்டு விட்டீர்கள் இந்த ஐரோப்பியர்களின் குடியேற்றமாகி பின்னர் தனி நாடுகளான அமெரிக்கா கனடா மற்றும் ஆஸ்திரேய நாடுகளைப் பற்றி குறிப்பிடவில்லை.

இன்னும் இங்கும் மக்கள் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டில் செல்லும்போது தென்னிந்தியாவிலிருந்து வருகிறேன் என்றால் தனிமரியாதையாம்.

bbc போன்ற ஊடகங்கள் வல்லரசுகளின் கொள்கையை பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டு பேணப்பட்டு வருகின்றன என்பது உண்மையே.

யூதர்களைப் பற்றி எழுதுகையில் அவர்கள் வரலாற்றில் பெற்ற அனுபவம் மிக அதிகம் அவர்கள நவீன வரலாற்றில் முதன்முதலாக இன அடையாளத்திற்காக பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள். இன்று அதை அவர்களது பலமாக அமைத்துக்கொண்டார்கள். என்னைப் பொருத்தவரையில் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு கண்டிக்கப்படுகிறார்களோ அதே அளவுக்கு அவர்களது தேசத்தின் கட்டமைப்பிற்கு இன உணர்வு அடிப்படையில் ஒருமைப்பாட்டிற்கான தேவை அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது. நீங்களே யூத இனவாதம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒரு சாதரண இந்திய உதாரணம் சல்மான் ருஸ்டியை தனது நாட்டைச் சேர்ந்தவராய் காட்டிக்கொள்ளும் இந்தியா தனது வரைபடத்தில் மட்டும் இருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த மக்களை கட்டுப்பாடுகளின்றி அனுமதித்து விடுமா என்ன?

Kalaiyarasan said...

விரிவான விமர்சனத்திற்கு நன்றி அரைகிறுக்கன்