Wednesday, February 26, 2020

நூல் அறிமுகம்: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி


நூல் அறிமுகம்: "ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி". காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் "ஈழத்து தலித்திய" நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. "சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே..." என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.

இதை எழுதிய ரகுநாதன் ஐம்பதுகள், அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளை தனது அனுபவத்தில் கண்டவற்றை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரே காரணத்திற்காக, வகுப்பறையில் ஆதிக்கசாதி ஆசிரியர்களும், மாணவர்களும் பிரயோகிக்கும் வன்முறைகளை பதிவு செய்துள்ளார். இதுவும் ஒரு வகையில் ராக்கிங் கொடுமை தான்.

தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பெற்றோரின் எழுத்தறிவின்மையை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்த அரச ஊழியர்கள், பிறப்புச் சான்றிதழில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பிள்ளைகளின் பெயரை மாற்றி எழுதும் கொடுமை பற்றி இந்த நூலில் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. பிறப்பு பதிவு செய்யும் கச்சேரியில் பெற்றோர் ஒரு பெயரை சொன்னாலும், அதை எழுதாமல் வேறொரு பெயரை எழுதி விடுகிறார்கள். சாதியப் பாகுபாடு காட்டும் வன்கொடுமைக் குற்றமானது, இனப் பாகுபாட்டுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல.

இந்த நூலின் கதாநாயகன் ரவீந்திரனும் பாடசாலை பதிவுகளில் தனது பெயர் கணபதி என்றிருப்பதை அறிந்து திகைத்துப் போகிறான். வீட்டில் வந்து பெற்றோரை விசாரித்தால் அவர்கள் அந்தப் பெயர் சூட்டவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். அப்போது தான் ஆதிக்க சாதியை சேர்ந்த அரச ஊழியர்கள் பிறப்புச் சான்றிதழ் பதிவில் செய்யும் மோசடி தெரிய வருகின்றது.

ஒரு காலத்தில் அடிமைகளாக வாழ்ந்த சமூகம் எவ்வாறு இலவசக் கல்வியால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியது என்பது இந்த நூலில் தெளிவாக விளக்கப் படுகின்றது. ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சியானது பல வகையான போராட்டங்களின் ஊடாக நடக்கிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம் ஒருபுறம், தொழிலாளர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான போராட்டம் மறுபுறமும் நடக்கிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் போராட்டங்களின் ஊடாக தன்னை உயர்த்திக் கொள்கிறது. இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆதரவு சக்திகளாக இருந்துள்ளனர். உண்மையில் இடதுசாரிகளே தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டங்களை ஒழுங்கு படுத்தினர் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறார்.

அதே நேரம் தமிழ்த்தேசியவாதிகள் ஒடுக்குமுறையாளர்களின் பக்கம் நின்றுள்ளனர். இந்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம் சாதிவெறி கொண்டு திரிந்ததை குறிப்பிடலாம். மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் நந்தி மாதிரி குறுக்கே நின்று தடுத்த சம்பவம், ஒரு கணித மேதையான சுந்தரலிங்கத்தின் இழி குணத்திற்கு சான்று பகர்கின்றது.

சிலநேரம் மதம் மாறச் சொல்லிக் கேட்டாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகள் படித்து முன்னேற வசதி செய்து கொடுத்துள்ளன. எந்தெந்த பாடசாலைகளில் எந்தெந்த மாணவர்களை அனுமதித்தார்கள் என்பதை விபரமாக பதிவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் சைவப் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளாள சாதிவெறியர்களின் கோட்டைகளாக இருந்துள்ளன.

நூலாசிரியர் என்.கே. ரகுநாதன் தான் பிறந்து வளர்ந்த நளவர் சாதிய சமூகம் குறித்தே இந்த நூலில் அதிகம் கவனம் செலுத்தி உள்ளார். பனையேறி கள்ளிறக்கும் தொழில் செய்து வந்த நளவர் சமூகம், எவ்வாறு ஒடுக்கப் பட்டு வந்தது என்பதை நூலின் முன்பாதியில் பதிவு செய்துள்ளார்.

பனஞ் சோலைக் கிராமத்தில் இயற்கையாகக் கிடைக்கும் பொருளாதார வளங்கள், அவற்றை பயன்படுத்தும் தொழில்நுட்பம் போன்றன குறித்து விரிவாக எழுதப் பட்டுள்ளது. பனை மரத்தில் கள் வடிக்க பயன்படுத்தப் படும் கருவிகளின் பெயர் விபரம், மற்றும் தொழில் நுணுக்கங்கள் அற்புதமாக விளக்கப் பட்டுள்ளன. அத்துடன் கள்ளிறக்கும் தொழிலாளர் படும் கஷ்டங்கள், சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள் ஆகியன பற்றிய தகவல்களும் உள்ளன.

நூலின் பின்பாதியில் ரவீந்திரனின் ஆசியர் தொழிலில் கிடைத்த அனுபவங்களுடன், நளவர் சமூகத்தில் படித்து முன்னேறிய தனிநபர்கள் பற்றிய ஆவணப் படுத்தல்கள் அடங்கியுள்ளன. இதனால் நூலின் முன்பாதி சுவையாக, விறுவிறுப்பாக எழுதப் பட்டிருந்தாலும், அது பின்பாதியில் காணாமல் போய் விடுகின்றது. நூலின் பின்னிணைப்பாக நளவர் சமூகத்தின் வரலாறு, அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பன குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கிராமிய மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் பற்றிய வர்ணனைகள், அவற்றை நாம் நேரில் பார்ப்பது போன்று எழுதப் பட்டுள்ளன. ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக விவரித்து எழுதியுள்ள எழுத்தாளரின் திறமை மெச்சத்தக்கது. 22 ம் நூற்றாண்டிலும் இந்த நூலை வாசிப்பவர்கள் அந்தக் காலத்து வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்த நூலை எழுதிய ரகுநாதன் இறுதிக் காலங்களில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அங்கேயே காலமானார். இந்த அற்புதமான புதினத்தை எழுதிய ஒருவரை அவர் வாழும் காலத்தில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவரது பூதவுடல் மறைந்தாலும் காலத்தால் அழியாத எழுத்துக்கள் மூலம் உயிர்வாழ்கிறார்.

கருப்புப் பிரதிகள், உயிர்மெய் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளது. ஈழத்து தலித்திய இலக்கியங்களை வாசிக்க விரும்புவோருக்கு இந்த நூலை பரிந்துரைக்கிறேன்.



Saturday, February 22, 2020

பாரசைட் vs மின்சார கண்ணா: முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!


Parasite vs Minsara kanna : Fuck the Capitalism! Don't worship it!! 
பாரசைட் vs மின்சார கண்ணா : முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!

ஆஸ்கார் விருதுகள் வென்ற தென் கொரிய திரைப்படமான Parasite, முன்பு தமிழகத்தில் வெளியான மின்சார கண்ணா திரைப் படக் கதையை தழுவி எடுக்கப் பட்டதாக, அதன் தயாரிப்பாளர் தேனப்பன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ல் வெளியான மின்சார கண்ணா திரைப்படமும், Bong Joon Ho இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான Parasite திரைப்படமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத மாறுபட்ட கதைகளை கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு சிறிய அலசல்.

- Parasite, மின்சார கண்ணா இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதையமைப்பை கொண்ட திரைப்படங்கள். இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளை விட வேற்றுமைகளே அதிகம். இரண்டும் எதிரெதிரான வர்க்கப் பார்வை கொண்டவை.

- பாரசைட் படக்கதை முழுக்க முழுக்க ஓர் ஏழைக் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா திரைக்கதை ஒரு பணக்காரக் குடும்பத்தின் பார்வையில் இருந்து சொல்லப் படுகிறது. இரண்டும் முற்றிலும் முரண்பாடான வர்க்க அரசியல் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்கள்.

- தமிழகத்திலும், தென் கொரியாவிலும் வர்க்க நிலைப்பாடு ஒன்று தான். பணக்கார வீட்டில் பிறந்த பிள்ளை பணத்தில் புரளுவதும், ஏழை வீட்டில் பிறந்த பிறந்த பிள்ளை வறுமையில் வாடுவதும் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான சமூக யதார்த்தம். அது என்றும் மாறாத முதலாளித்துவ பொருளாதார நியதி. பாரசைட் திரைப்படம் இந்த உண்மையை உள்ளபடியே காட்டுகிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் காட்டுகிறது. "ஏழைகள் கஷ்டப் பட்டு உழைத்தால் பணக்காரர் ஆகலாம்..." என்ற பொய்யை நம்ப வைக்க முயல்கிறது.

- பாரசைட் படத்தில் வரும் ஏழைக் குடும்பத்தினர் அடித்தட்டு வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களது வர்க்கக் குணாம்சம் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களை நம்மால் முடிந்த அளவு சுரண்டுவதில் தவறில்லை என நினைக்கிறார்கள். அவர்கள் பணக்கார குடும்பத்தில் வேலைக்கு சேர்வதற்கு பின்னணியில் உழைக்கும் வர்க்கம் சார்ந்த பழிவாங்கும் குணாம்சம் உள்ளது. இந்த வர்க்கப் போராட்டம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிக்கு போலி விசுவாசம் காட்டுவது, வேலை செய்யாமல் இழுத்தடிப்பது, கம்பனி பொருட்களை திருடுவது... இப்படிப் பலவுண்டு.

- அதற்கு மாறாக மின்சாரக் கண்ணாவில் காட்டப் படுவது உண்மையில் ஓர் ஏழைக் குடும்பம் அல்ல! ஏற்கனவே மேல்தட்டில் இருந்த பணக்காரக் குடும்பம்! படத்தின் கதாநாயகன் விஜய்யின் காதலுக்காக அவனது குடும்பத்தினர் "ஏழைகளாக நடிக்கிறார்கள்"! ஜெர்மனியில் வசதியாக வாழ்ந்த மல்ட்டி மில்லியனர் குடும்ப உறுப்பினர்கள், இந்தியா வந்து கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்கிறார்களாம்! மகனின்/சகோதரனின் காதலுக்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறார்களாம்! இதன் மூலம் "பணக்காரர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?" என்று கதாசிரியர் நமது காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றுகிறார். படத்தில் ஆண்களை வெறுக்கும் பணக்காரியாக வரும் வரும் குஷ்பு ஆரம்பத்தில் ஏழைத் தொழிலாளியாக இருந்து "உழைப்பால் உயர்ந்து" பணக்காரியாக வந்தவர் என்பது அடுத்த பூச்சுற்றல்.

- பாரசைட் திரைப்படத்தின் நோக்கம் இன்றைக்கும் சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுவது. காலங்காலமாக முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்டு வரும் அடித்தட்டு வர்க்கம் திருப்பித் தாக்க வேண்டும் என்பது தான் பாரசைட் படக் கதை. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஆண்- பெண் எனும் பாலின முரண்பாட்டை முன்வைக்கிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஆண்களை வெறுக்கும் ஒரு பணக்காரியின் விசித்திரமான நடத்தை தான் காட்டப் படுகிறது. சமூகத்தில் நிலவும் பிரதானமான வர்க்க முரண்பாடு பற்றிப் பேசாமல், "ஆண்-பெண் பாலின முரண்பாடு" என்று திரிப்பது ஒருவகையில் முதலாளித்துவ அடிவருடி அரசியல்.

- பாரசைட் படத்தின் நோக்கம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அடித்தட்டு ஏழை மக்கள் மீது அனுதாபத்தை உண்டாக்குவது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா பணக்கார வர்க்கத்தினர் மீது அனுதாபத்தை உண்டாக்கும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளது. இது முற்றிலும் முரண்பாடான வர்க்கக் கண்ணோட்டம். இரண்டு திரைப்படங்களையும் எடுத்த டைரக்டர்கள் எதிரெதிரான வர்க்க நிலைப்பாட்டில் உள்ளவர்கள். பாரசைட் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho "முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவோம்!" (Fuck the capitalism!) என்று ஆஸ்கார் விழா மேடையில் முழங்கியவர். மின்சாரக் கண்ணா திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் வாயில் இருந்து முதலாளித்துவம் என்ற சொல் கூட வராது. அவருக்கு அந்தளவு தைரியம் இல்லை. தற்போதும் அவர் இயக்கும் தமிழ்ப் படங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களை கொண்டுள்ளன. இப்படியானவர்கள் ஆஸ்கார் விருது குறித்து கனவு கூட காணமுடியாது.

- பாரசைட் திரைப்படம் மின்சாரக் கண்ணா திரைப்படத்தின் தழுவல் என்பது சுத்த அபத்தமானது. அது ஒரு மலினமான விளம்பர உத்தி. வர்க்க அரசியல் பற்றி தெளிவில்லாத தற்குறிகள் மத்தியில் மட்டுமே இந்த மலினப் பிரச்சாரம் எடுபடும். ஆஸ்கார் விருதுக்கேற்ற தமிழ்ப் படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சமூகப் பிரச்சினைகள் குறித்த அரசியல் அறிவு இருக்க வேண்டும். மின்சாரக் கண்ணா எடுத்தவர்களிடம் அது துளி கூட இருக்கவில்லை. வழக்குப் போடுவதற்கு முன்னர் வர்க்க அரசியல் படியுங்கள்!

Sunday, February 16, 2020

அல்பேனியாவில் விழுந்த அமெரிக்க உளவு விமானம் (அல்பேனிய பயணக்கதை - 4)


(பாகம் : நான்கு)

பண்டைய காலத்தில் அல்பேனியர்கள் தமிழகத்திற்கு வந்திருப்பார்களா? அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்திருக்குமா? தற்காலத்தில் இது ஒரு விசித்திரமான, பைத்தியக்காரத்தனமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய அல்பேனியாவின் தென் கிழக்கு பகுதிகளில் கிரேக்க மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக சாரன்டே(Sarandë), ஜீரோகஸ்டர்(Gjirokaster), கோர்ஷே(Korçë) ஆகிய நகரங்களிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் கிரேக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் அந்தப் பகுதியை இணைப்பதற்கு கிரேக்க குடியரசு கடுமையாக முயற்சித்தது. கிரேக்க பிராந்தியத்திற்கு பிரிவினை கோரும் ஆயுதபாணி இயக்கம் ஒன்றும் இயங்கியது.

பண்டைய காலத்தில் அல்பேனியாவின் தென் கிழக்குப் பிரதேசம், பண்டைய காலத்தில் கிரேக்க மாநிலமான இயோனியாவுடன் சேர்ந்திருந்தது. ஏன் அல்பேனியா முழுவதும் ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்துள்ளது என்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பண்டைய காலத்தில் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த ரோமர்கள் "யவனர்கள்" என அழைக்கப் பட்டனர். அநேகமாக இன்றைய இயோனியா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யவனர்கள் என அழைக்கப் பட்டிருக்கலாம். ஆகவே, யவனர்கள் என்ற பெயரில் ஒரு சில அல்பேனிய வணிகர்களும் தமிழகத்திற்கு வந்திருக்கலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.

தேசிய இன உணர்வு இல்லாதிருந்த அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிடம் பிரதேச உணர்வு இருந்துள்ளது. அதை இன்று நாம் பிரதேசவாதம் என்று அழைத்தாலும், அன்று அது சாதாரணமான விடயம். இதற்கு வரலாற்றில் இன்னொரு உதாரணம் காட்டலாம். டச்சுக்காரர் பிற நாடுகளில் ஹோலந்து நாட்டவர் என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஹோலந்து என்பது இன்றைய நெதர்லாந்து தேசத்தில் ஒரு மாகாணத்தின் பெயர். பண்டைய காலத்து டச்சுக் கடலோடிகள் பெரும்பாலும் ஹோலந்தில் இருந்து சென்ற படியால், அவர்கள் தமது பிரதேசத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு வந்தனர்.

சோஷலிச அல்பேனியாவை நாற்பது வருடங்கள் ஆண்ட கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷா தென் பகுதி கிரேக்க நகரமான ஜீரோகஸ்டரில் பிறந்தவர். அதற்கு அருகில் உள்ள இன்னொரு கிரேக்க நகரமான கோர்ஷேயில் கல்வி கற்றவர். பிற்காலத்தில் உயர்கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் பெற்று பிரான்ஸ் சென்றவர், பொதுவுடைமை அரசியலில் ஈடுபாடு கொண்டு படிப்பைக் குழப்பினார். இருப்பினும் தாயகம் திரும்பிய பின்னர் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது.

இளம் வயது என்வர் ஹோஷா ஆசிரியர் தொழில் செய்த பாடசாலையும் கோர்ஷேயில் தான் இருந்தது. அப்போது அங்கே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்து வந்த வருடங்களில் அல்பேனிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்களில் கோர்ஷே குழுவினரின் பங்களிப்பு முக்கியமானது. 


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அல்பேனியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், ஒரு கம்யூனிச இயக்கம் கட்டி எழுப்புவது இலகுவான காரியம் அல்ல. நாட்டுப்புறங்களில் துருக்கி நிலப்பிரபுக்களான பாஷாக்களின் அதிகாரம் எல்லை கடந்தது. அவர்கள் இயற்கை வளம் குறைந்த அல்பேனியாவை எந்த அபிவிருத்தியும் செய்யாமல் மத்திய காலத்தில் வைத்திருந்தனர். இஸ்லாமியப் பெண்கள் முக்காடு அணிந்து செல்வதும், வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதும் சர்வசாதாரணமான விடயங்கள்.

இன்றைக்கு "கம்யூனிச சர்வாதிகாரம், பலகட்சி ஜனநாயகம்" என்று அரசியல் பேசும் யாரும் அல்பேனியா அன்றிருந்த நிலைமையை எண்ணிப் பார்ப்பதில்லை. பின்தங்கிய நிலப்பிரபுத்துவ- பழமைவாத சமுதாயத்தை நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது இலகுவான காரியம் அல்ல. அந்தக் காலகட்டத்தில் எந்தவொரு பால்கன் பிரதேச நாட்டிலும் பல கட்சித் தேர்தல் நடக்கவில்லை. ஏன் கட்சியே இருக்கவில்லை. அந்த வகையில் அல்பேனியாவில் உருவான முதலாவது அரசியல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான்.

அந்தக் காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகள் மட்டும் இத்தாலி காலனியாதிக்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. Balli Kombëtar (தேசிய முன்னணி) என்ற இன்னொரு இயக்கமும் இருந்தது. ஆனால் அது ஒருபோதும் கட்சியாக பரிணமிக்கவில்லை. பள்ளி கொம்பேட்டர் என்பது உள்ளூர் நிலப்பிரபுக்களின் நிதியில் இயங்கிய ஒரு தேசியவாத இயக்கம். இத்தாலி பாசிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நேரம், சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு ஒப்பந்தம் போட்டிருந்தனர். ஆனால் அந்த ஒற்றுமை அதிக காலம் நீடிக்கவில்லை.

இதற்கிடையே, 1943 ம் ஆண்டளவில், இத்தாலியில் முசோலினி பதவியிறக்கப் பட்ட படியாலும், இத்தாலி தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவும், அல்பேனியாவை ஆக்கிரமித்த இத்தாலிப் படைகள் வெளியேறி விட்டன. அந்த வெற்றிடத்தை ஜெர்மன் நாஸிப் படைகள் நிரப்பின. அப்போது பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தினர் நாஸிகளுடன் கூட்டுச் சேர்ந்து கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். அந்த நேரம் எதிரணியில் இருந்த பிரிட்டிஷ் படையினரும் பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தை ஆதரிந்து வநதனர்.

பள்ளி கொம்பேட்டர் இயக்கம் ஓர் அகண்ட அல்பேனியாவை குறிக்கோளாக கொண்டியங்கியது. அதாவது, அவர்கள் வெறுமனே அல்பேனிய தேசியவாதிகள் மட்டுமல்ல, அல்பேனிய பேரினவாதிகளும் கூட! ஆகையினால் யூகோஸ்லேவியாவில் அல்பேனியரை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலத்திலும் செயற்பட்டு வந்தனர். அங்கு முன்னேறிக் கொண்டிருந்த டிட்டோவின் கம்யூனிசப் படையினரால் தோற்கடிக்கப் பட்டனர். அந்தத் தோல்விக்குப் பின்னர் கொசோவோவில் இருந்து வெளியேறிய பள்ளி கொம்பெட்டர் இயக்க உறுப்பினர்கள் (அல்லது ஆதரவாளர்கள்) அல்பேனியாவுக்குள் நுழைந்தனர்.

ஆனால், அப்போது அல்பேனியா முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டிருந்தது. அவர்களும் அங்குள்ள பள்ளி கொம்பேட்டார் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்று கொண்டிருந்தனர். அதனால் கொசோவோவில் இருந்து தப்பி வந்த அல்பேனிய தேசியவாதிகளை பிடித்து மொன்டிநீக்ரோவில் இருந்த யூகோஸ்லேவிய கம்யூனிசப் படைகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் கொல்லப் பட்டனர்.

அன்று நடந்த வரலாற்று சம்பவத்தை நினைவுகூரும் இன்றைய முதலாளித்துவ ஊடகவியலாளர்கள், அதை இனவாதக் கண்ணோட்டத்துடன் திரித்து சொல்லி வருகின்றனர். அதாவது, கொசோவோ அல்பேனியர்களை யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சி படுகொலை செய்தமைக்கு, அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி உடந்தையாக இருந்தது என்று கூறுகின்றனர். சுருக்கமாக சொன்னால் "இனத்துரோகம்"!

நான் இந்த சம்பவத்தை இங்கே விவரித்துக் கூறக் காரணம் இருக்கிறது. பால்கன் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள் குறித்து வெளியுலகில் உள்ள பலருக்கு சரியான புரிதல் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எந்த மொழி பேசும் தேசியவாதியாக இருந்தாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டுடன் இருந்தனர். ஸ்லோவேனியா முதல் அல்பேனியா வரையில் பால்கன் பிராந்தியம் எங்கும் இது தான் நிலைமை. அதாவது, தேசியவாதிகளின் எதிரிகள் கம்யூனிஸ்டுகள். அதனால் அன்று எல்லா நாடுகளிலும் "சகோதர யுத்தங்கள்" நடந்தன.

அல்பேனியாவில் கம்யூனிஸ்ட் அரசமைந்த பின்னர் ஆயிரக்கணக்கான தேசியவாதிகள் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறுகிய கால நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கணக்கான பள்ளி கொம்பேட்டர் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரினார்கள். குறிப்பாக ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலியில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை சி.ஐ.ஏ. சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களுக்கு இத்தாலியில் இருந்த அமெரிக்க படைத்தளத்தில் இராணுவ பயிற்சி அளிக்கப் பட்டது.

பனிப்போர் காலத்தில் முன்னாள் அல்பேனிய தேசியவாதிகள், அமெரிக்காவின் ஒட்டுக்குழுவாக மாற்றப் பட்டனர். அவர்களை அல்பேனியாவுக்குள் ஊடுருவ வைத்து கம்யூனிச அரசுக்கு எதிரான கிளர்ச்சியை உண்டாக்குவதே அமெரிக்காவின் திட்டம். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்கா அனுப்பிய ஊடுருவல்காரர்கள் எல்லோரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களிடமிருந்த அமெரிக்க நவீன ஆயுதங்களும் பிடிபட்டு விட்டன. நீண்ட காலமாக அமெரிக்கா இந்தத் தகவல்களை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்களை மூடி மறைக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் "கம்யூனிச சர்வாதிகாரத்திற்கு பலியானவர்கள்" என்று பிரச்சாரம் செய்கின்றன. 1944 ம் ஆண்டு, அல்பேனியாவில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததும் முன்னர் தம்மை எதிர்த்து போரிட்ட பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தின் எஞ்சிய உறுப்பினர்களை தேடிப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த விடயம் அத்துடன் முடியவில்லை. சி.ஐ.ஏ. அனுப்பிய ஒட்டுக்குழுவினரும் முன்னாள் பள்ளி கொம்பேட்டார் உறுப்பினர்கள் தானே? ஆகவே உள்நாட்டில் இன்னமும் அதன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவிகள் அல்ல. 


நான் இங்கு கூறிய முன்கதை தான் என்னை ஜீரோகாஸ்டர் நோக்கி பயணம் செய்ய உந்தித் தள்ளியது. அது திரானாவில் இருந்து தெற்கே முன்னூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்வதென்றால் தொலைதூர நகரங்களுக்கு செல்லும் மினிபஸ் பிடிக்க வேண்டும். அதற்கு முதலில் திரானா நகர மத்தியில் இருந்து காமேஸ்(Kamez) எனும் இடத்திற்கு செல்ல வேண்டும். அல்பேனியாவின் பொதுப் போக்குவரத்து வண்டிகளில் இன்னமும் ஒரு கண்டக்டர் டிக்கட் கிழித்துக் கொடுக்கிறார். நகரத்தின் உள்ளே பயணம் செய்வதற்கு பஸ் கட்டணம் மிக மிகக் குறைவு. நாற்பது லெக்(0.30 யூரோ சதம்). திரானாவிலிருந்து ஜீரோகஸ்டர் பயணச்சீட்டு 1000 லெக்(8 யூரோக்கள்).

ஜீரோகஸ்டர் செல்லும் நான்கு அல்லது ஐந்து மணிநேரப் பயணத்தில் வழியில் நிலவமைப்பு மாறுவதைக் காணலாம். முதலில் கடற்கரையோரமாக பயணம் செய்யும் பொழுது ஏராளமான டூரிஸ்ட் ரிசொர்ட்டுகள் இருப்பதையும், புதிதாக பல கட்டப் பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இரண்டு, மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் சனநெருக்கடி மிக்க கரையோரப் பிரதேசம் மறைந்து, மனித நடமாட்டமே இல்லாத மலைப் பகுதிகள் தென்படும். 


ஜீரோகாஸ்டர் ஒரு மலைப் பிரதேசத்தில், கிரீஸ் எல்லைக்கு அருகில் உள்ள சிறிய நகரம். அங்குள்ள மத்திய காலத்து கோட்டை தான் எனது பயணத் திட்டத்தில் அடங்கி இருந்தது. அது நகர மத்தியில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு குன்றின் மீது உள்ளது. booking.com மூலம் தேடிப் பிடித்த ஹொஸ்டல், கோட்டையின் பின்புறத்தில் இருந்தது. அங்கு சென்ற பின்னர் தான் அது ஒரு முட்டாள்தனமான தெரிவு என்று தெரிந்தது. ஏனெனில் நகர மத்தியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மலைக் கிராமத்தில் அந்த ஹொஸ்டல் இருந்தது. 

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளுக்குப் பின்னால் ஏதாவதொரு பயனுள்ள அனுபவம் காத்திருக்கும். அன்று அந்தக் ஹொஸ்டலில் நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி. ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணும், அவரது வயோதிப தாயாரும் அந்த ஹொஸ்டல் நடத்துகிறார்கள். அது அவர்களது வீட்டுக்குப் பின்னால் உள்ளது.

அந்தப் பெண்களுக்கு ஆங்கிலம் ஒரு சொல் கூடத் தெரியாது. இருப்பினும், "டூரிஸ்ட்" என்ற ஒரு சொல் போதுமாக இருந்தது. என்னைக் கூட்டிச் சென்று தங்கும் அறையையும், குளியல் அறையையும் காட்டி விட்டார்கள். மேலதிக விபரங்களுக்கு, அந்தப் பெண்மணி தனது ஆங்கிலம் பேசத் தெரிந்த மகனை தொலைபேசியில் அழைத்து பேச வைத்தார். அடுத்த நாள் காலைச் சாப்பாடு கொடுத்து நன்றாக உபசரித்து அனுப்பினார்கள். அல்பேனிய பாரம்பரிய உணவு கிட்டத்தட்ட ஆடிக் கூழ் மாதிரி இருந்தது. குடிப்பதற்கு சுத்தமான பசும் பாலும், தேனும் தந்தார்கள். எமது ஊரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. உண்மையில் இன்று நாம் இயந்திரமயமாக்கப் பட்ட மேற்கத்திய நகர வாழ்க்கையில் இவற்றின் சுவை கூட தெரியாமல் வாழ்கிறோம்.


நான் அங்கு மதிய வேளை சென்ற படியால் எனது பயணப் பொதியை அறையில் வைத்து கதவை சாத்தி விட்டு வெளியே இடம் பார்க்க சென்றேன். கவனிக்கவும், ஹொஸ்டல் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நம்பகத்தன்மை மிக உயர்வாக இருந்தது. அவர்கள் எனது பாஸ்போர்ட் வாங்கிப் பார்க்கக் கூட இல்லை. என்னைப் பற்றிய எந்த விபரமும் பதிவு செய்யவில்லை. நான் போவதும் வருவதும் கூடத் தெரியாது. அடுத்த நாள் காலையில் நானாகவே அவர்களது வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். இந்த தகவலை எனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட போது நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார். பெரும்பாலான வறிய நாடுகளில் நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் நேர்மையானவர்கள். கள்ளங்கபடம் அற்றவர்கள். அத்துடன் அவர்கள் வெளிநாட்டவர்களை நம்புகிறார்கள். 


நான் தங்கி இருந்த ஹொஸ்டலில் இருந்து ஜீரோகஸ்டர் கோட்டை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது. அப்படி இலகுவாக சொல்லி விடலாம். ஆனால் செல்லும் வழி கரடுமுரடாக இருந்தது. ஒரு மலையில் இருந்து இறங்கி இன்னொரு மலையில் ஏற வேண்டும். இரண்டுக்கும் நடுவில் ஓடும் ஆற்றை ஒரு குட்டிப் பாலத்தில் கடக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல தேகாப்பியாசம் தான். தூய்மையான மலைக் காற்றை சுவாசிப்பது ஒரு சுகமான அனுபவம். மேலும் மலையில் ஏறி இறங்குவதற்கு கருங்கல்லால் கட்டப் பட்ட படிகள் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவை. நாம் தான் மிகவும் அவதானமாக நடந்து செல்ல வேண்டும். அநேகமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டிய படிகள் இப்போதும் பாவனையில் இருப்பதைப் போலிருந்தது. அந்தப் பகுதியில் நடக்கும் பொழுதே காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று பண்டைய காலத்தில் நடமாடுவது போன்ற உணர்வு தோன்றியது. 



ஜீரோகஸ்டர் கோட்டை, ஒரு காலத்தில் அல்பேனியாவை பல்வேறு குறுநில மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப் பட்டது. ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மலைப் பிரதேசங்களில் குட்டி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவை வெளியுலகுடன் தொடர்பு வைக்கவில்லை. குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமே அதிகாரம் செலுத்திய குட்டி ராஜ்ஜியங்களில் தான் அல்பேனியரின் தனித்துவமான கலாச்சாரம் பேணப்பட்டு வந்தது. துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர், அல்பேனியா மீண்டும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் பகுதியாகியது. 


ஜீரோகஸ்டர் கோட்டையை ஓட்டோமான் படைகள் சுற்றி வளைத்து கைப்பற்றுவதற்கு தயாரான நேரம், எதிரிப் படைகளிடம் அகப்பட விரும்பாத இளவரசி தனது குழந்தையுடன் மதிலில் ஏறிக் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், குழந்தை மட்டும் உயிர் தப்பியதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றதாம். இந்தத் தகவல் இளவரசி குதித்ததாக சொல்லப்படும் இடத்தில் உள்ள கோட்டை மதில் பகுதியில் எழுதப் பட்டுள்ளது. தற்போதும் கோட்டையின் மேல் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கட்டையானது. அருகில் செல்லாமல் அவதானமாக இருக்குமாறு அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன. 


அந்தக் கோட்டை மிகப் பிரமாண்டமானது. ஒரு காலத்தில் அதுவே ஒரு சிறிய நகரமாக செயற்பட்டு வந்தது. தற்போது அங்குள்ள மைதானத்தில் வருடம் ஒருமுறை கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அந்தக் கோட்டை ஓட்டோமான் ஆட்சியின் கீழிருந்த நேரம் பயன்பாட்டில் இருந்த ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகம் இன்னமும் உள்ளது. அங்கு தான் படையினருக்கும் உணவு தயாரிக்கப் பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், அந்தக் காலத்தில் பயன்படுத்திய கனரக ஆயுதங்களை கோட்டையில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். ஆர்ட்டிலறி கருவிகள், மோட்டார் குழாய்கள் போன்ற ஆயுதங்களை கிட்ட நின்று பார்த்து இரசிக்கலாம். இத்தாலிப் படையினர் பாவித்த சிறிய ரக தாங்கி ஒன்றும் அங்கே வைக்கப் பட்டுள்ளது.

கோட்டையின் மேல் மாடத்தில் ஒரு சிறிய விமானம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. அது ஓர் அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க விமானம் எவ்வாறு அல்பேனியாவுக்கு வந்தது என்று ஆச்சரியப் படுவோர், நான் இங்கு எழுதிய முன்கதைச் சுருக்கத்தை வாசிக்கவும். அதாவது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் அமெரிக்கா பல்வேறு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இத்தாலியில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தில் கிளம்பும் விமானங்கள் அல்பேனிய வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவி வேவு பார்த்து வந்தன. உளவுத்தகவல்கள் சேகரிப்பது மட்டுமல்லாது, சி.ஐ.ஏ. யால் அனுப்பப் பட்டு அல்பேனியாவினுள் ஊடுருவியுள்ள கம்யூனிச விரோத ஒட்டுக்குழுவினருக்கு ஆயுதங்கள் விநியோகிப்பது, தகவல் பரிமாறுவது போன்ற வேலைகளிலும் அமெரிக்க விமானங்கள் ஈடுபட்டன. அது பனிப்போர் காலம் என்பதால் இந்த நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன. 



அவ்வாறு இரகசிய பறப்பில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் ஒன்று அல்பேனிய இராணுவத்தால் பலவந்தமாக தரையிறக்கப் பட்டது. சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இரகசியமாக வைத்திருந்த அமெரிக்கா சில மாதங்களின் பின்னர் தனது விமானம் ஒன்றைக் காணவில்லை என்று அறிவித்திருந்தது. அல்பேனியர்களும் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னர் இத்தாலியில் உள்ள அமெரிக்கப் படைத் தளத்துடன் தொடர்பு கொண்டு தம்மிடம் பிடிபட்ட அமெரிக்க விமானியை ஒப்படைக்க சம்மதித்தனர். அப்படியே விமானியை மட்டும் திருப்பி அனுப்பி விட்டு, விமானத்தை இந்தக் கோட்டையில் கொண்டு வந்து வைத்து விட்டனர். இந்தத் தகவல் அன்றைய அமெரிக்க தினசரிப் பத்திரிகைகளில் வெளியானது. 

என்வர் ஹோஷா பிறந்த வீடு

ஜீரோகஸ்டர் கோட்டையை பார்த்து முடிந்து வெளியே வந்த பின்னர் தான், அங்கே இன்னும் பல சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்கள் இருப்பது தெரிய வந்தது. அங்கெல்லாம் செல்ல நேரம் இருக்கவில்லை. நேரம் ஐந்து மணியான படியால் பூட்டியிருந்தார்கள். கோட்டையில் இருந்து நகர மத்தியை நோக்கி செல்லும் வழியில் தான் என்வர் ஹோஷா பிறந்த வீடு இருக்கிறது. முன்பு அது ஒரு சிறிய வீடாக இருந்து விபத்தொன்றில் எரிந்து விட்டதாம். பிற்காலத்தில், அதாவது கம்யூனிச ஆட்சிக் காலத்தில் அது பெரிதாக கட்டப்பட்டு என்வர் ஹோஷாவின் அருமை பெருமைகளைக் கூறும் மியூசியமாக இருந்தது. ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு அங்கிருந்த ஹோஷாவின் படங்கள், நினைவுச் சின்னங்களை எல்லாம் அகற்றி விட்டார்கள். தற்போது அது அல்பேனிய இனத்துவ - கலாச்சார அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. 


அது ஒரு நகர்ப் பகுதியாக இருந்த போதிலும் கருங்கல் கற்களால் செதுக்கப்பட்ட பாதைகள் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. சில இடங்களில் செங்குத்தாக இறங்கின. மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டி இருந்தது. ஹொஸ்டல் திரும்பும் வழியில் துரித உணவுக் கடை ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன். அல்பேனிய துரித உணவு கிட்டத்தட்ட கிரேக்க கீரோஸ், அல்லது துருக்கி கெபாப் போன்று இருக்கும். சிறு துண்டுகளாக சீவப்பட்ட இறைச்சித் துண்டுகள், உருளைக்கிழங்கு பொரியல், சலாட்டுடன் சேர்த்து, ஒரு ரொட்டியில் சுற்றித் தருவார்கள். மூன்று யூரோவுக்கு வயிறு நிறைய சாப்பிடலாம்.

அடுத்த நாள் மீண்டும் திரானா திரும்பி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. மீண்டும் திரானா அன்னை தெரேசா சர்வதேச விமான நிலையம். கெடுபிடி இல்லாத அமைதியான விமான நிலையத்தை நான் வேறெங்கும் காணவில்லை. குடிவரவு அதிகாரிகளும் சில நிமிடங்களில் பாஸ்போர்ட் பார்த்து தந்து விடுகிறார்கள். அந்த விமான நிலையத்தில் அல்பா விங்க்ஸ் விமான சேவை விளம்பரங்கள் மட்டுமே கண்ணில் தென்பட்டன. அது அண்மைக் காலத்தில் உருவான தனியார் விமான நிறுவனம். அது பெரும்பாலும் இத்தாலி நகரங்களை நோக்கித் தான் பறக்கின்றது.

முன்பு அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் வான் வழிப் போக்குவரத்து மிக மிகக் குறைவாகவே நடந்து கொண்டிருந்தது. அவ்வப்போது தலைவர்கள் பயணம் செய்வதற்கென சில விமானங்கள் இருந்தன. அவர்களும் சோவியத் யூனியனுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்ட பின்னர் எந்தவொரு நாட்டிற்கும் பயணம் செய்யவில்லை! அந்நேரம் சோவியத் செம்படை செக்கோஸ்லோவாக்கியா கிளர்ச்சியை ஒடுக்கியதை அல்பேனியா கண்டித்திருந்தது. அதன் விளைவாக வார்ஷோ ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலகியது. அந்தத் தருணங்களில் சோவியத் படைகள் அல்பேனியா மீது படையெடுத்து வரலாம் என்றும் அஞ்சினார்கள்.

1960 ம் ஆண்டு தான், அதிபர் என்வர் ஹோஷாவின் கடைசி வெளிநாட்டுப் பயணம் இடம்பெற்றது. அதுவும் சோவியத் யூனியனுக்கு தான். கொமின்தேர்ன் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக மொஸ்கோ சென்றிருந்த என்வர் ஹோஷா, ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக குருஷேவுடன் முரண்பட்ட படியால், அன்றிலிருந்து சோவியத் யூனியனுடனான தொடர்புகள் யாவும் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதன் பின்னர் இரு தசாப்த காலம் மாவோவின் சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தனர். அப்போது அல்பேனியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சீனா பெருமளவு பங்களிப்பை வழங்கி இருந்தது. அந்தக் காலங்களில் சீன விமானங்கள் அடிக்கடி வந்து சென்றன.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் அல்பேனிய மக்கள் மட்டுமல்ல, தலைவர்கள் கூட வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டில் முடங்கிக் கிடந்தனர். அல்பேனியா பல தசாப்த காலமாக எந்தவொரு உலக நாட்டுடனும் சேராமல், முற்றிலும் தனிமைப் பட்டிருந்தது. அயல் நாடுகளுடனான எல்லைகள் யாவும் மூடப் பட்டிருந்தன. ஏன் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது. ஒருவேளை, 1999 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியின் பின்னர் நடந்த சம்பவங்களில் இதற்கான விடை கிடைக்கலாம். 

தொண்ணூறுகளில் முதலாளித்துவம் என்றால் என்னவென்று அறிந்திராத ஒரு சமூகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்தன. அது பிரமிட் மோசடி என்று அழைக்கப் படுகின்றது. சேமிப்புப் பணத்திற்கு ஐம்பது சதவீத வட்டி கிடைக்கும் என்று விளம்பரத்தை நம்பிய அப்பாவி மக்கள் தம்மிடம் இருந்த காணிகளை கூட விற்று பணம் போட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனங்கள் திவாலாகி விட்டதாக அறிவிக்கப் பட்டன. அல்பேனிய மக்கள் அனைவரும் ஒரே நாளில் தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர்.

இந்த பிரமிட் மோசடியில் ஆளும் ஜனநாயகக் கட்சி அரசாங்கமும் உடந்தை என்பதை அறிந்த மக்கள் கிளர்ந்தெழுந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர சபைக் கட்டிடங்கள் எரிக்கப் பட்டன. பொலிஸ், இராணுவம் எதுவும் அரசைக் காப்பாற்ற முன்வரவில்லை. அது மட்டுமல்ல, ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ் நிலையங்களை தாக்கிய நேரம் போலீஸ்காரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து கொண்டனர். இராணுவ முகாம்களிலும் இதே கதை நடந்தது.

முன்பு கம்யூனிச காலகட்டத்தில் நடந்தது மாதிரி, அல்பேனிய இராணுவம் தம்மிடமிருந்த ஆயுதங்களை மக்களிடம் பங்கிட்டுக் கொடுத்தது. சில இடங்களில் மக்கள் ஆயுதக் களஞ்சியங்களை கொள்ளையடித்த நேரம் இராணுவம் தடுக்கவில்லை. அன்று மக்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அரசு நிராயுதபாணியாக இருந்தது. அல்பேனியா ஒரு புரட்சியின் விளிம்பில் நின்றது. இறுதியில் இத்தாலியில் இருந்து நேட்டோ இராணுவம் படையெடுத்தது. அல்பேனிய அரசின் அழைப்பின் பேரில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கிய பின்னர் தான் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தத் தகவல்கள் இப்போது தான் உங்களுக்கு தெரியும் என்றால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. நீங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும், எதை அறிந்து கொள்ளக் கூடாது என்பதை மேற்கத்திய ஊடகங்களே தீர்மானிக்கின்றன.

(முற்றும்) 

Friday, February 14, 2020

என்வர் ஹோஷாவின் மர்ம தேசம்! - அல்பேனிய பயணக்கதை - 3

(பாகம் : மூன்று)


"அல்பேனியர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு!" அல்பேனியர், தமிழர் ஆகிய இரண்டு தேசிய இனங்களும் இரண்டு வேறுபட்ட மதத்தவர்களை ஒன்றிணைத்து மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவானவை. அல்பேனிய மொழி ஐரோப்பாவில் வேறெந்த மொழியுடனும் தொடர்பில்லாத மிகப் பழமையான மொழி. அதனால் அவர்களும் தமிழர்கள் மாதிரி மிகப் பழமையான மொழியை பேசுவதாக பெருமை கொள்கின்றனர்.

தமிழர்கள் போன்று அல்பேனியர்களும், எந்நேரமும் சர்வதேசம் தங்களையே உற்று நோக்குவதாக கருதிக் கொள்கிறார்கள். இது அவர்களது நினைப்பு மட்டுமே. கடந்த பல தசாப்த காலமாக, அல்பேனியா ஏன் தனிமைப் படுத்தப் பட்டிருந்தது என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல. இது அல்பேனிய இனத்தவரின் விசேட குணம்! பெரிதாக எந்த வளமும் இல்லாத சிறிய நாடான அல்பேனியாவை, அயலில் உள்ள வல்லரசு நாடுகள் எதுவும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் எல்லோரும் தங்கள் மீது படையெடுக்க காத்திருக்கிறார்கள் என்பது போல அல்பேனியர்கள் நினைத்துக் கொண்டனர். சில வரலாற்று நிகழ்வுகளும் அவர்களது அச்சத்திற்கு காரணம். 


நாற்பது வருட காலமாக அல்பேனியாவை ஆண்ட என்வர் ஹோஷா ஒரு "ஸ்டாலினிச சர்வாதிகாரி... எந்த நேரமும் பயந்து சாகும் தன்மை கொண்ட சந்தேகப் பேர்வழி.... எந்நேரமும் அந்நிய படையெடுப்பு நடந்து விடும் என்ற அச்சத்தில் நாடு முழுவதும் இலட்சக் கணக்கான பங்கர்கள் கட்டிய கிறுக்குப் பேர்வழி..." இப்படித் தான் மேற்குலக ஊடகங்களால் பரப்புரை செய்யப் பட்டது.

என்னைப் பொறுத்தவரையில் இது அல்பேனியரின் தனிப்பட்ட குணாம்சம். இதற்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்றிருந்த எந்தவொரு சோஷலிச நாட்டுடனும் அல்பேனியா தொடர்பு வைத்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. அயல்நாடுகளான இத்தாலியும், கிறீஸும் முதலாளித்துவ பகை நாடுகள். அத்துடன் நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் பங்காளிகள். யூகோஸ்லேவியாவின் ஆட்சியாளர்கள் சோஷலிசத்திற்கு துரோகம் செய்த திருத்தல்வாதிகள். அதனால் அதுவும் ஒரு பகை நாடு. ஆகவே, அல்பேனியாவின் நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை.

அன்றைய அல்பேனியாவை இன்றைய வட கொரியாவுடன் ஒப்பிடலாம். குறைந்தது இரண்டு தசாப்த காலமாவது அல்பேனியா உலகில் எந்தவொரு நாட்டுடனும் இராஜதந்திர தொடர்பை கொண்டிருக்கவில்லை. சீனாவுடன் இருந்த தொடர்பும் மாவோவின் மரணத்தின் பின்னர் அறுந்து விட்டது. எந்த நாட்டுடனும் குறைந்த பட்ச பொருளாதார தொடர்பு கூட இல்லாமல், அல்பேனியா எவ்வாறு தாக்குப் பிடித்தது என்பது இன்று வரை பலருக்கும் புரியாத புதிர்.

அல்பேனியா கம்யூனிஸ்ட் கட்சியானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூகோஸ்லேவிய கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப் பட்டது. அதற்கு முன்னர் உதிரிகளான கம்யூனிச குழுக்கள் இருந்த போதிலும், ஒரு கட்சியாக நிறுவனமயமாவதற்கு யூகோஸ்லேவியர்கள் உதவி இருந்தனர். அதுவும் கொமிந்தேர்ன் வழிகாட்டலில் தான். யூகோஸ்லேவியாவில் ஒரே மொழி பேசும் கொசோவோ மாகாணத்தை சேர்ந்த அல்பேனியர்கள் யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.


போர் முடிந்து அல்பேனியா விடுதலை அடைந்த ஆரம்ப காலங்களில், யூகோஸ்லேவியாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஒரு கட்டத்தில் அல்பேனியாவை இன்னொரு யூகோஸ்லேவிய குடியரசு ஆக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆரம்பத்தில் அதற்கு விருப்பம் தெரிவித்த என்வர் ஹோஷா, பின்னர் மறுத்து விட்டார். அதற்குக் காரணம் அல்பேனியரின் தீவிரமான தேசிய இன உணர்வு மட்டுமே. அதனால் கொசோவோவுக்கு உரிமை கோருவதையும் விட்டுக் கொடுத்தனர். (இன்று வரை அல்பேனிய தேசியவாதிகள் என்வரின் விட்டுக்கொடுப்பை ஒரு துரோகமாக பார்க்கின்றனர். இன்று கொசோவோ தனிநாடாக பிரிந்திருந்த போதிலும் அல்பேனியாவுடன் ஒன்று சேரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.)

எது எப்படியோ 1949 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவுடனான உறவு முற்றாகத் துண்டிக்கப் பட்டது. அபிவிருத்தித் திட்டங்களில் உதவிய யூகோஸ்லேவிய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டனர். அது மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு யூகோஸ்லேவிய ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்தவர்கள் களையெடுக்கப் பட்டனர். கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்த தலைவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் கோசி சோஷே கூட பதவியிறக்கப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்.

யூகோஸ்லேவியாவுடனான தொடர்புகளை துண்டிப்பதற்கு சொல்லப் பட்ட காரணம், அன்றைய அதிபர் மாஷல் டிட்டோ ஒரு திருத்தல்வாதி என்பது தான். அந்தக் காலகட்டத்தில் டிட்டோவின் யூகோஸ்லேவியா ஸ்டாலின் தலைமையிலான கொமின்தேர்ன் அமைப்பில் இருந்து விலகியிருந்தது. டிட்டோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலின் விளைவு அல்பேனியாவிலும் உணரப்பட்டது. மிகப் பலமான சோஷலிச சகோதர நாடான யூகோஸ்லேவியாவின் தொடர்பை துண்டிப்பதென்பது, மிகச் சிறிய சோஷலிச நாடான அல்பேனியாவுக்கு பெரியதொரு இழப்பு தான். இருப்பினும் கொள்கை முக்கியம் என்று பிடிவாதமாக இருந்தது.


அல்பேனிய- யூகோஸ்லேவிய முரண்பாட்டை காட்டும் வீடியோ ஆவணம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அது திரானா நகர மத்தியில் உள்ள "இலைகளின் வீடு" (House of Leaves) மியூசியத்தில் காண்பிக்கப் படுகின்றது. அந்தக் கட்டிடம் ஒரு காலத்தில் "சிகுரிமி"(Sigurimi) என்ற புலனாய்வுத்துறையினரின் தலைமை அலுவலகமாக இருந்தது. இப்போதும் அந்தக் கட்டிடம் சனநெருக்கடி மிக்க நகர்ப் பகுதியில் இருந்த போதிலும் வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட உணர்வைக் கொடுக்கிறது.

இன்றைய அல்பேனிய ஆட்சியாளர்கள், கம்யூனிச கடந்த காலத்தில் நடந்த கொடுமைகளை காட்டுவதற்கு இது போன்ற மியூசியங்களை அமைத்துள்ளனர். இலைகளின் வீடு மாதிரி "பங்கார்ட்"(Bunk Art) எனும் இன்னொரு மியூசியமும் உள்ளது. அது பற்றி பின்னர் எழுதுகிறேன். அன்றைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைதிகளை சித்திரவதை செய்தனர் என்பது இரண்டு மியூசியங்களிலும் உள்ள பொதுவான விடயம். ஆனால், இலைகளின் வீடு பெரும்பாலும் சிகுரிமியின் வேவு பார்க்கும் நுட்பங்கள் பற்றி விளக்குகிறது. 

அல்பேனியா ஒரு சோஷலிச நாடாக பிரகடனப் படுத்தப் பட்டதும், தேசப் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட அமைப்பு தான் சிகுரிமி. அல்பேனிய மொழியில் பாதுகாப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டது. எதிர்ப்புரட்சியாளர்கள், வர்க்க எதிரிகளை இனங்கண்டு ஒடுக்குவது தான் அதன் தலையாய கடமை. சந்தேகத்திற்கு இடமானவர்கள் பற்றிய உளவுத் தகவல்கள் சேகரிக்கப் பட்டு, தனித்தனி கோப்புகளில் ஆவணப் படுத்தப் பட்டன. வீடுகள், அலுவலகங்களில் நடக்கும் சம்பாஷணைகளை ஒட்டுக் கேட்பதற்கு பயன்படுத்தப் பட்ட டிரான்ஸ்மிட்டர் கருவிகள், அவற்றைப் பொருத்தும் விதம் என்பன மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.



அத்துடன் அந்தக் காலத்தில் பயன்படுத்தப் பட்ட டேப் ரெக்கார்டர்கள், வீடியோ கமெராக்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அந்தக் காலத்து உளவுக் கருவிகளை பார்க்கும் பொழுது இந்தக் காலத்தில் வாழ்பவர்களுக்கு சிறுபிள்ளை விளையாட்டாகத் தோன்றும். இன்று சாட்டலைட், இணையம் மூலம் மிக இலகுவாக உளவறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

மியூசியம் அமைந்துள்ள கட்டிடம் சிறு சிறு அறைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை அந்தக் காலத்தில் கைதிகளை விசாரிக்கும் அறைகளாகவும், பிலிம் ரோல்கள் கழுவும் ஆய்வுக் கூடமாகவும், மேலும் அலுவலகமாகக் கூட பயன்படுத்தப் பட்டிருக்கலாம். "எச்சரிக்கை: இந்த அறையில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டுள்ளது!" என்ற வாசகம் ஒவ்வொரு கதவின் மேலும் எழுதப் பட்டுள்ளது. அதை வாசிக்கும் பொழுது சிரிப்புத் தான் வருகின்றது. நாம் தற்போது அரசு உளவுத்துறை எமது மொபைல் போன்களை ஒட்டுக் கேட்கும் காலத்தில் வாழ்கிறோம் ஐயா! 


அன்றைய காலங்களில் உள்நாட்டவர் மட்டுமல்லாது வெளிநாட்டவர் கூட உளவு பார்க்கப் பட்டனர் என்று ஓர் அறையின் சுவரில் எழுதப் பட்டிருந்தது. மியூசியத்தில் எல்லா இடங்களிலும் அல்பேனிய மொழியில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அறைக்குள் இருந்த சுவரில் முன்பு சிகுரிமி வைத்திருந்த வீடியோ ஆவணப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதில் யூகோஸ்லேவிய தூதுவராலய ஊழியர் ஒருவரை பின்தொடர்ந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் வரும் பெண்மணி, சிறிது தூரம் நடந்து சென்று அடுக்கு மாடி வீடொன்றில் வசிக்கும் இன்னொரு பெண்ணை சந்திக்கிறார். இருவரும் பொருட்களையும், பணத் தாள்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

அந்த வீடியோவில் பின்னணியில் ஒரு குரல் சம்பவங்களை விவரித்துக் கொண்டிருக்கிறது. அதன் சாராம்சம் இது தான். யூகோஸ்லேவிய இராஜதந்திரியான அந்தப் பெண், தனது நாட்டிலிருந்து விசேடமாக கொண்டு வரப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார். அந்தப் பொருட்களை வாங்கும் அல்பேனிய பெண் அவற்றை உள்ளூரில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்று விட்டு பணம் கொடுக்கிறார். இது கறுப்புச் சந்தை வியாபாரம். கடத்தல் தொழில். யூகோஸ்லேவிய போலி சோஷலிஸ்டுகள் இது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அல்பேனிய மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள்..." அன்றைய காலத்தில் அல்பேனியாவுக்கும், யூகோஸ்லேவியாவுக்கும் இடையிலான உறவு எந்தளவு மோசமாக இருந்தது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.

திரானாவில் உள்ள இன்னொரு கம்யூனிச எதிர்ப்பு மியூசியம் "பங்கார்ட்". அதுவும் நகர மத்தியில் பழைய அமைச்சுக் கட்டிடங்களுக்கு அருகாமையில் உள்ளது. என்வர் ஹோஷா ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் ஏராளமான அரைக் கோளம் வடிவிலான பங்கர்கள் கட்டப்பட்டன. வெளியில் சிறிதாக காணப்படும் பங்கர் கீழே சுரங்க அறைகளையும் குண்டு துளைக்க முடியாத கொங்க்ரீத் கதவுகளையும் கொண்டுள்ளது. பங்கர் மியூசியத்தில் உள்ள நிலக்கீழ் சுரங்கப் பாதை ஒன்று உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு செல்கிறது என்று ஓரிடத்தில் எழுதப் பட்டிருந்தது. 


இன்று வரை மேற்குலகில் கிண்டலடிக்கப் படும் பங்கர் கட்டமைப்புகள் அல்பேனியாவுக்கு மட்டுமே விசேடமான ஒரு விடயம் அல்ல. சுவிட்சர்லாந்திலும் நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான பங்கர்கள் கட்டப் பட்டுள்ளன. அவை இன்னமும் சிறந்த முறையில் பராமரிக்கப் படுகின்றன. ஆனால், அல்பேனியர்கள் தமது பங்கர்களை கைவிட்டு விட்டார்கள். அவை தற்போது பாழடைந்து காணப்படுகின்றன.

பங்கார்ட் மியூசியத்தில் அல்பேனிய காவல்துறை பற்றிய வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. 1920 இல் தொடங்கும் வரலாறு 1991 இல் முடிகிறது. அதற்குப் பின்னர் அல்பேனியாவில் காவல்துறை இயங்கவில்லையா என்று கேட்டு விடாதீர்கள். 1991 ம் ஆண்டு வரை அல்பேனிய மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிச சர்வாதிகாரம் முடிவடைந்து, அவர்கள் இப்போது "சுதந்திரமான தேசத்தில்" வாழ்கிறார்கள். தற்போது பொலிஸ் மக்களின் நண்பன்! ஆகவே தற்போது எல்லாம் சுபமே!

இன்றுள்ள "ஜனநாயக காவல்துறை" ஊழல்மயமானது என்றும் அதற்குள் மாபியா கிரிமினல்களால் ஊடுருவி உள்ளதாகவும் அல்பேனிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வருகின்றன. அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் கிரிமினல்கள் என்று சாதாரண பொது மக்கள் பேசிக் கொள்கின்றனர். இன்னமும் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க மறுப்பதற்கு அதிகார மட்டத்தில் நிலவும் அளவுகடந்த ஊழல் ஒரு முக்கிய காரணம்.



மியூசியத்தின் ஓர் அறைக்குள் கைதிகளை விசாரிக்கும் இடம் என்று எழுதப் பட்டுள்ளது. அதற்குள் மின்குமிழ் விட்டு விட்டு எரிகிறது. கதவருகில் உள்ள சுவரில் விசாரணைக் கைதிகளின் விபரங்கள் அடங்கிய கோப்புகள் ஓட்டப் பட்டுள்ளன. இன்னொரு பக்கம் ஓர் ஆள் படுப்பதற்கு மட்டுமே இடமுள்ள சிறைக்கூண்டு. கடுமையான தண்டனைக் கைதிகள் மட்டுமே தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப் பட்டனர். 

பங்கார்ட் மியூசியத்தில் கம்யூனிச ஆட்சிக் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப் பட்டனர் என்ற விளக்கக் குறிப்புகள் எழுதப் பட்டுள்ளன. மின்சாரக் கம்பியால் சதையில் குத்துதல், தலைகீழாக கட்டிவைத்து அடித்தல் இப்படிப் பல. மியூசித்தில் இருந்த சித்திரவதைக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது எனது மனதில் எழுந்த எண்ணம் இது தான். இத்தகைய சித்திரவதைகள் பிற உலக நாடுகளிலும் நடந்துள்ளன. ஏன் இன்று வரையில் இலங்கையிலும், இந்தியாவிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்த கொடூரமான சித்திரவதைகள் பற்றிய தகவல்கள் உலகை உலுக்கின. அந்த நாடுகளிலும் சித்திரவதைக் கதைகளை கூறும் மியூசியம் கட்டினால் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரலாம்.

உண்மையில் அன்றைய சோஷலிச அல்பேனியாவில் நடந்த சித்திரவதைகள், வன்முறைகள் யாவும் அந்நாட்டு அரசமைப்பு சட்டத்திற்கு முரணான மீறல்கள் தான். அதாவது ஒரு கைதியை சித்திரவதை செய்யக்கூடாது என்று சட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், நடைமுறை அதற்கு மாறாக இருந்துள்ளது. எப்படித் தெரியும்? சில நேரம் பெரும் பதவிகளில் இருந்தவர்களும் கைதிகளாக சித்திரவதை அனுபவித்துள்ளனர். அவர்கள் தமக்கு நடந்த சித்திரவதைக் கொடுமைகள் பற்றி அதிபர் என்வர் ஹோஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்த விபரமும் பங்கார்ட் மியூசியத்தில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சித்திரவதைக் குற்றங்களை காட்சிப் படுத்தி தான் "கம்யூனிசம் எத்தனை கொடுமையானது" என்று போதிக்க வேண்டியிருப்பது அவலமானது. உண்மையான கம்யூனிஸ்டுகளும் களையெடுப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப் பட்டு சித்திரவதைகளை அனுபவித்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய அரசு இயந்திரத்திற்கு அவர்களும் பலியானார்கள். இருப்பினும் அவர்கள் சாகும் வரை கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். அந்தத் தகவல்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு மியூசியங்களிலும் உள்ளன.

இலங்கையில் ஈழப்போர் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றிக் கேள்விப் பட்டவர்களுக்கு, இவை ஒன்றும் புதினமாகத் தெரியாது. இந்த ஒப்பீட்டை விரும்பாதவர்கள் ஒரு நொண்டிச் சாட்டுடன் வருவார்கள். இலங்கையில் நடந்த சித்திரவதைகளுக்கு காரணம் அங்கு நிலவிய போர்ச் சூழல். அப்படியானால் அல்பேனியாவிலும் போர் நடந்து கொண்டிருந்ததா?

பனிப்போர் என்ற சொற்பதத்தை பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பனிப்போர் என்பது ஒரு நிழல் யுத்தம். ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதில்லை என்பது உண்மை தான். அதற்குப் பதிலாக வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். எதிர்ப்புரட்சியாளர்கள் என்று சந்தேகப் படுவோரை உளவுபார்த்து, தேவைப்பட்டால் கைது செய்து சிறையில் அடைப்பது, தேசத்துரோகக் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது, இவையெல்லாம் போர் இன்னும் முடியவில்லை என்பதற்கான அறிகுறிகள் தான். மாற்றுக்கருத்தாளர்கள் மட்டுமல்லாது, ஒரே கட்சிக்குள் துரோகிகளாக மாறியவர்கள் என்றும் பலர் இதற்குப் பலியாகலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றை, அதன் செயற்பாடுகளை அறிந்தவர்களுக்கு இதெல்லாம் புதினம் அல்ல. ஈழத்தில் மிகவும் கட்டுக்கோப்பான இயக்கம் என்று பெயரெடுத்த புலிகள் என்ன காரணம் சொல்லி தமது வன்முறைகளை நியாயப் படுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சரியென ஏற்றுக் கொள்ளவும் ஒரு மக்கட் பிரிவினர் இருந்தனர். அதையே தான் அன்று அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சியும் செய்துள்ளது. அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அல்லது ஒரு பொதுவான குறிக்கோளின் பேரில் துரோகிகள் ஒழிப்பு, களையெடுப்பு போன்றவை நடந்துள்ளன. இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால், யதார்த்த அரசியல் இப்படித் தான் உள்ளது என்பது மாக்கியவல்லியின் அரசறிவியல் நூல்களை வாசித்தவர்களுக்கு புரியும்.

பங்கார்ட் மியூசியத்தின் இன்னொரு அறையில் எல்லைக் காவல்துறையின் செயற்பாடுகள் விளக்கப் பட்டுள்ளன. ஆயிரக்கணக்கனோர் நாட்டை விட்டு ஓடியதாகவும் அவர்களில் பலர் எல்லையில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் எழுதப் பட்டுள்ளது. அதற்கென விசேட பயிற்சி அளிக்கப் பட்ட நாய்களுடன் ரோந்து செல்லும் படையினர் பற்றிய தகவல்களும் படங்களுடன் விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.

அல்பேனியர்கள் இப்போதும் அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். (நெதர்லாந்தில் மட்டும் கடந்த சில வருடங்களாக நூற்றுக் கணக்கான அல்பேனிய அகதிகள் பொருளாதார பிரச்சினையை காரணமாகக் காட்டி அகதித் தஞ்சம் கோரினார்கள். ஆனால் திருப்பி அனுப்பப் பட்டனர்.) தொண்ணூறுகளில் அல்பேனியாவின் எல்லைகள் திறக்கப் பட்ட பின்னர், ஆயிரக்கணக்கானோர் கப்பல்களில் ஏறி இத்தாலிக்கு சென்றனர். ஆனால் இத்தாலி அரசு அவர்களை திருப்பி அனுப்பியது. அது மட்டுமல்ல, இத்தாலி கடற்படைக் கப்பல்கள் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகளை முட்டி மோதிய சம்பவங்களில் பல நூறு அல்பேனியர்கள் கொல்லப் பட்டனர்.

அல்பேனியா முதலாளித்துவ நாடாக மாறிய பின்னர், அயலில் உள்ள மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்கவில்லை. மாறாக வேண்டாவிருந்தாளிகளாக பாரபட்சம் காட்டின. அயல் நாடுகளான இத்தாலியும், கிறீஸும் அங்கு வேலை தேடிப் பிழைக்க வந்த அல்பேனியர்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தின. திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகளை அதிகமாகக் கொண்ட சமூகம் என்ற ஒரே காரணத்தை கூறி ஒதுக்கி வைத்தனர். எந்தவித பொருளாதார நடவடிக்கையும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் அல்பேனியாவின் மலைப் பகுதிக் கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி மேற்கைரோப்பிய நாடுகளுக்கு வேலை தேடி புலம்பெயர்வது தான்.

நான் அல்பேனியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னர், நெதர்லாந்தில் என்னோடு சேர்ந்து வேலை செய்த அல்பேனிய தொழிலாளியிடம் என்வர் ஹோஷா பற்றிய கருத்தைக் கேட்டேன். அதற்கு அவர் எதிர்மறையாக பதிலளித்தார். அந்தக் காலத்தில் என்வர் ஹோஷா தனது குடும்பத்திற்கு மட்டும் சொத்துக்களை சேர்த்து பணக்காரனாக இருந்ததாகவும், சாதாரண மக்களுக்கு பணம் சேர்க்கும் சுதந்திரம் இருக்கவில்லை என்றும் குறைப்பட்டார். ஆனால் அது உண்மையல்ல என்பது அங்கு சென்ற பின்னர் தான் தெரிய வந்தது. அநேகமாக சோஷலிச, முதலாளித்துவ பொருளாதார உற்பத்திக்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத சாமானியர்கள் இது போன்ற கதைகள் மூலம் எளிமைப் படுத்த முனைகின்றனர். 


என்வர் ஹோஷாவை எதிர்ப்பவர்கள் அவரை ஒரு சர்வாதிகாரி என்று தூற்றினாலும், தனிப்பட்ட முறையில் சொத்துக்களை சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை. ஆதாரமாக, Blendi Fevziu என்ற அல்பேனிய ஊடகவியலாளர் எழுதிய "Enver Hoxha The iron fist of Albania" என்ற நூலில் கூட அப்படி எந்தத் தகவலும் இல்லை. அது முழுக்க முழுக்க ஹோஷா எதிர்ப்பு பார்வையில் எழுதப்பட்ட நூல். திரானாவில் புளொக்கு (Blloku) என்றொரு பகுதி உள்ளது. அங்கு தான் அன்றைய கம்யூனிச அரசுத் தலைவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர். அந்தக் குடியிருப்புகள் இப்போதும் அங்கே உள்ளன. இன்றைய உயர் மத்தியதர வர்க்கத்தினர் வசிக்கும் குடியிருப்புகள் அவற்றை விட வசதியானவை. (தற்போது அங்கே நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.) 

சுருக்கமாக, "சர்வாதிகாரி" ஹோஷாவின் குடும்பம் ஓர் ஆடம்பர மாளிகையில் வசிக்கவில்லை. மிக எளிமையாக, சாதாரணமான ஒரு நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஒரு வீட்டில் வாழ்ந்தது. என்வர் ஹோஷா சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் புத்தகங்கள் தான். அவர் தனது நூலகத்தில் சேர்த்து வைத்த புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர் எழுதிய அரசியல் கோட்பாட்டு நூல்களும் நிறைய உள்ளன. தன்வரலாறு கூறும் நினைவுக்குறிப்புகள் பத்துக்கும் குறையாத நூல்களாக வெளிவந்தததுடன், பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டன. 


(தொடரும்) 

இந்தத் தொடரின் முன்னைய பகுதிகளை வாசிப்பதற்கு: 
1. "அச்சச்சோ கம்யூனிச பூதம்!' - அல்பேனியா பயணக்கதை 
2. ஐரோப்பாவின் நாஸ்திக - முஸ்லிம் நாடு! அல்பேனியா பயணக்கதை - 2

Wednesday, February 12, 2020

ஐரோப்பாவின் நாஸ்திக - முஸ்லிம் நாடு! அல்பேனியா பயணக்கதை - 2



 (பாகம் - இரண்டு)

ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா! 
உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா! 


இவை அல்பேனியா பற்றி பெரும்பாலானோர் அறிந்திராத தகவல்கள். அந்த நாட்டில் எழுபது சதவீதமானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். குறைந்த பட்சம் பெயரளவிலாவது. ஐரோப்பாவில் பல நாடுகளில் மசூதிகள் இருந்த போதிலும், தொழுகை நேரம் ஒலிபெருக்கியில் குரான் ஓதி அழைப்பு விடுப்பதை அல்பேனியாவில் தான் கண்டேன். ஒவ்வொரு தடவையும் மசூதி ஒலிபெருக்கியின் ஊடாக காற்றில் தவழ்ந்து வரும் அரபி வசனங்களை கேட்கும் பொழுது மத்திய கிழக்கில் உள்ள அரபி- முஸ்லிம் நாடொன்றுக்கு வந்து விட்ட பிரமை உண்டாகிறது.


கவலைப்படாதீர்கள், இது ஐரோப்பா தான். நம்மைப் போலவே, பெரும்பாலான அல்பேனிய முஸ்லிம்களுக்கும் அரபி மொழி தெரியாது. அத்துடன் தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு மசூதிக்கு விரையும் யாரையும் நான் காணவில்லை. பொது இடங்களில் எல்லோரும் தத்தமது வேலைகளில் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர மதக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு மத நம்பிக்கை கொண்டவர்களை காண்பது அரிது.


அல்பேனியா குறைந்தது இரண்டு தசாப்த காலமாக உலகில் ஒரேயொரு நாத்திக நாடாக இருந்தது. கவனிக்கவும்: "ஒரேயொரு". அதாவது உலகில் வேறெந்த நாட்டிலும் மதம் முற்றாகத் தடைசெய்யப் பட்டு, அனைத்து மத வழிபாட்டுஸ்தலங்களும் மூடப்படவில்லை. புரட்சி நடந்த காலங்கள் விதிவிலக்கு. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சி வரையில் மத நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக உண்டான விளைவுகள் வேறு விடயம்.

ஒரு தேசத்தின் அரசாங்கமே அரசமைப்பு சட்டம் மூலம் மதங்களை தடைசெய்தமை அல்பேனியாவில் மட்டுமே நடந்துள்ளது. சீனாவின் கலாச்சாரப் புரட்சி பாணியில் அல்பேனிய இளைஞர்கள் தான் தீவிரமான நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு தாராளமாக சுதந்திரம் வழங்கப் பட்டது. தேவாலயங்கள், மசூதிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. சில இடித்து நொறுக்கப் பட்டன. எஞ்சியவை மியூசியம், ஹோட்டல், ரெஸ்டாரன்ட், இளைஞர் விடுதி, உள்ளரங்க விளையாட்டுத் திடல் என பொது மக்களின் கேளிக்கை நிலையங்களாக மாற்றப் பட்டன. குறிப்பிட்ட அளவு பாதிரிகள், இமாம்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

தொண்ணூறுகளுக்கு பிறகு அல்பேனியாவில் மீண்டும் மதச் சுதந்திரம் உள்ளது. மசூதிகள், தேவாலயங்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. இருப்பினும் மக்கள் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அதற்குக் காரணம், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பொருளாதார குறிக்கோள் மட்டுமே மேலோங்கிக் காணப் படுகின்றது. அதற்குக் காரணம் "என்வர் ஹோஷாவின் சர்வாதிகாரமா அல்லது அல்பேனியர்களின் அலட்சியமா?" என்று பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காலம் மாறி விட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சமுதாயம் இன்று இல்லை. அது காலவோட்டத்தில் பல்வேறு கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்டு விட்டது.

அல்பேனியா ஏன், எவ்வாறு உலகின் ஒரேயொரு நாத்திக நாடானது? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக அறுபதுகளில் குருஷேவின் சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொண்ட அல்பேனியா, மாவோவின் சீனாவை மட்டும் நட்பு நாடாக்கிக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில் சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் அல்பேனியாவில் எதிரொலித்தது. இரண்டாவது காரணம் அன்னை தெரேசா!


உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க பெண் துறவியான தெரேசா மாசிடோனியாவில் பிறந்தவர். ஆனால் அவரது சிறுவயதில் பெற்றோருடன் அல்பேனியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார். தெரேசா கன்னியாஸ்திரியான பின்னர் இந்தியா சென்று தங்கிவிட்ட போதிலும், அவரது தாயாரும் பிற குடும்ப உறுப்பினர்களும் அல்பேனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவரது தாயார் மரணப் படுக்கையில் இருந்த நேரம் தெரேசா விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்தக் காலத்தில் எந்த நாட்டுடனும் சேராமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த அல்பேனியா யாரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அதே போல யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. (விதிவிலக்குகள் இருந்தன.) அதனால் தெரேசா அம்மையாருக்கும் உள்நுழையும் விசா கிடைக்கவில்லை, அவரது அம்மாவுக்கும் வெளியேற அனுமதி கொடுக்கவில்லை.

இருந்தாலும் தெரேசா விவகாரம் என்வர் ஹோஷாவின் கவனத்தை திசைதிருப்பியது. அதுவரை காலமும் தெரேசா என்றால் யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர் ஒரு "மேற்குலக ஏகாதித்திய ஏவலாளி" என்று சந்தேகப் பட வைத்தது. பாரிசில் இருந்த அல்பேனிய தூதரகத்தில் தெரெசாவுக்கு விசா பெற்றுக் கொடுப்பதில் பிரெஞ்சு ஜனாதிபதியின் அழுத்தமும் பிரயோகிக்கப் பட்டது. அதனால்,  மேற்குலக ஏகாதிபத்தியம் தெரேசாவை பகடைக் காயாக பயன்படுத்தி அல்பேனிய உள்விவகாரங்களில் தலையிட முனைவதாக சந்தேகிக்க வைத்தது. 

அன்னை தெரேசா விசா பிரச்சினையின் எதிர்விளைவாக புதிய அரசமைப்பு சட்டம் மூலம் "நாத்திக நாடு" பிரகடனப் படுத்தப் பட்டிருக்கலாம். (சில வருடங்களின் பின்னர் போப்பாண்டவராக தெரிவான போலிஷ்காரர் ஜோன் போல் மூலம் போலந்து கம்யூனிச ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது.) மதம் என்பது மக்களின் உணர்வுபூர்வமான விடயம் தான். அந்தக் காலத்திலும் பெரும்பாலான அல்பேனியர்கள் தீவிர மத நம்பிக்கையாளர்கள் தான். ஆனால், அல்பேனியாவில் குறைந்தது இருபது வருட காலமாவது மதத்தை மக்களிடம் இருந்து பிரித்து வைத்திருந்தமை மிகப் பெரிய சாதனை தான். 


அல்பேனியா ஒரு "முஸ்லிம் நாடு" தான். ஆனால், தற்கால அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக இஸ்ரேலுடனும் நட்புறவு பேணத் தயங்கவில்லை. ஜனவரி(2020) மாதம் நான் அல்பேனியா பயணம் சென்றிருந்த சமயம், ஒரு சர்வதேச இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டிருந்தது. திரானாவில் இருந்த ஈரானிய தூதுவரலாயம் மூடப்பட்டு அதன் தூதுவரும் ஊழியர்களும் நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தனர். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான கெடுபிடிப் போரின் விளைவு என்பது தெளிவானது.

அந்த சம்பவத்தை அடுத்து, அமெரிக்காவுக்கு விசுவாசமான அல்பேனிய அரசு, பிற உலக நாடுகள் எதுவும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்தது. ஈரானுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவான முஜாஹிதீன் கால்க் (MEK) இயக்கம் தளம் அமைப்பதற்கு பூரண ஒத்துழைப்புக் கொடுத்தது. ஆயுதபாணிகளான மூவாயிரம் முஜாஹிதீன் போராளிகள் இரகசிய தளம் ஒன்றில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் முன்பு ஈராக்கில் முகாமிட்டு இருந்தனர். பின்னர் ஈராக் அரசின் நெருக்குவாரம் காரணமாக வெளியேற்றப் பட்டனர். 

அல்பேனிய தேசிய இனம் மொழி அடிப்படையில் உருவானது. ஒரே மொழி (அதிலும் இரண்டு பிரிவுகள்) மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கிறது. அல்பேனியர்களை மத அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை. கிறிஸ்தவர்கள் சிறுபான்மை. ஆனால், கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்கள், (கிரேக்க) ஒர்தொடக்ஸ் என இரண்டாகப் பிரிந்துள்ளனர். துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு முன்னர் அனைத்து அல்பேனியர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் பதவிகள், வசதி வாய்ப்புகள், மற்றும் வரிச்சலுகைகள் காரணமாக பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

ஓட்டோமான் ஆட்சியாளர்கள் மொழியையோ அல்லது இனத்தையோ அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் அல்பேனியாவில் மூன்று இனப் பிரிவுகள் (உண்மையில் மதப் பிரிவுகள்) இருந்தன. துருக்கியர்கள், இலத்தீனியர்கள், கிரேக்கர்கள். உண்மையில் அங்கு மிகச் சிறுபான்மையான துருக்கி மொழி பேசுவோர் இருந்த போதிலும், இஸ்லாமியர் அனைவரும் "துருக்கியர்" என அழைக்கப் பட்டனர். அதே போன்று கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையினர் இன்னமும் அங்கிருந்த போதிலும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவத்தை பின்பற்றிய எல்லோரும் "கிரேக்கர்கள்" என அழைக்கப் பட்டனர். அதே போன்று கத்தோலிக்கர்கள் லத்தீனியர்கள் (அல்லது இத்தாலியர்?) என அழைக்கப் பட்டனர்.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தரவு ஓர் உண்மையை உரைக்கிறது. உண்மையில் இன்றுள்ள தேசிய இனங்கள் யாவும் கலப்பினங்கள் தான். அன்று மதத்தை மட்டும் முக்கியமாகக் கருதிய காலத்தில் இருந்து இன்று மொழியை முக்கியமாகக் கருதும் காலத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், ஒரே மொழி பேசும் அனைவரும் ஒரே இனம் எனும் கோட்பாடு சரியானதா? நிச்சயமாக இல்லை. அல்பேனியா சுதந்திரம் அடைந்த காலத்திலும் துருக்கியர் என்ற சிறுபான்மை இனம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் இனத்தால் துருக்கியர் அல்ல. ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் பட்டம், பதவிகளுக்கு ஆசைப்பட்டு, துருக்கி மொழியை தாய்மொழியாக ஆக்கிக் கொண்ட அல்பேனியர் ஏராளம் பேர் இருந்தனர். தற்காலத்தில் தமிழர்களில் சிலர் ஆங்கிலத்தை முதன் மொழியாக கொண்டிருக்கவில்லையா? அது போலத் தான் இதுவும்.


பயணத்தின் போது நான் நேரில் கண்ட அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஜீரோகாஸ்டர் மாவட்டம் தெற்குப் பகுதியில் கிரேக்க நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது. ஒரு காலத்தில் கிரீஸ் அதற்கு உரிமை கோரியிருந்தது. அங்கு கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையின மக்கள் வசிப்பது உண்மை தான். கிரேக்கர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள். ஆனால் அந்த மத நம்பிக்கை கொண்ட அனைவரும் கிரேக்கர்கள் அல்ல. அல்பேனிய மொழி பேசும் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களும் உண்டு.

நான் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரு குடும்பம் நடத்தும் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி என்பதால் காலை உணவு சாப்பிட அழைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது மகன் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்த படியால், அந்தப் பகுதி மக்களின் இனம், மதம் பற்றி விசாரித்தேன். அந்தக் குடும்பத்தினர் மதத்தால் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள், மொழியால் அல்பேனியர்கள். கிரேக்க மொழி பேசும் மக்களும் அங்கு வாழ்கிறார்களாம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக அல்பேனியாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலமாக சிலர் கிரேக்க பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கிரார்களாம். அதன் மூலம் ஐரோப்பாவுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.

அது சரி, கத்தோலிக்கர்கள் எவ்வாறு இத்தாலியர் (லத்தீனியர்) ஆவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். கத்தோலிக்க மதத்தவர்கள் கரையோரப் பகுதிகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு டூரேஸ் (Durres) பட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது தலைநகர் திரானாவில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பட்டினம். எனது பயணத்தின் கடைசி நாள் அங்கு தங்கியிருந்து தான் விமான நிலையத்திற்கு சென்றேன். 


நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, திரானா இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய நகரம். ஆனால் டூரேஸ் இரண்டாயிரம் வருடங்களாக நகரமாக இருந்து வருகின்றது! இன்றைக்கும் அங்கே ரோமர் காலத்தில் கட்டப்பட்ட  விளையாட்டு மைதானம் (Amphitheatre) உள்ளது. பெருமளவு இடிபாடடைந்து விட்டாலும் அதன் வடிவம் மாறாமல் உள்ளது. அதற்கு எதிர்ப் புறத்தில் பைசாந்தின் கிரேக்கர்கள் (அவர்களும் தம்மை ரோமர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.) கட்டிய Forum எனும் சந்தை மைதானம் உள்ளது. ஒன்றிரண்டு தூண்களும் பளிங்குக்கல் தரையும் இன்னமும் அங்குள்ளன.

இன்னும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் கடற்கரைப் பக்கம் சென்று பாருங்கள். அங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வெனிஸ் நாட்டவர் கட்டிய காவற்கோபுரம் இன்னமும் உருக்குலையாமல் அங்கே உள்ளது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் இத்தாலி என்ற தேசம் இருக்கவில்லை. ஆனால், வெனிஸ் என்ற நாடு இருந்தது. அதனை பிற்காலத்திய ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளின் முன்னோடி எனலாம். மத்தியக் கடல் கரையோரத்தில் பல பகுதிகளில் வெனிஸ் வணிகக் காலனிகள் இருந்தன. ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர் அவை மறைந்து விட்டன. இருப்பினும் பல நூறு வருடங்களாக அங்கு வாழ்ந்த மக்கள் இத்தாலிய(வெனிஸ்) வம்சாவளியினராக அல்லது இத்தாலிய கலப்பாக இருக்கலாம் அல்லவா?


இன்றைய டூரேஸ் நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பங்கினர் இத்தாலியர் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அங்குள்ள ரெஸ்டாரன்ட் வணிகம் பெரும்பாலும் இத்தாலிய பயணிகளை குறிவைத்தே இயங்கி வருகின்றது. காணும் இடமெங்கும் பீட்சா கடைகள். உண்மையில் அங்கே மிகவும் மலிவான, தரமான பீட்சா உணவு கிடைக்கிறது. நான் அங்கு சென்றிருந்த நேரம் கடற்கரையில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. புதிதாக நடைபாதைகள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தன. கடற்கரை மணல் கூட இனிமேல் தான் கொண்டு வந்து தான் கொட்டுவார்கள் போலிருந்தது. அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் அல்ல. அநேகமாக கடற்கரையில் பொழுதுபோக்க வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர் தான். 


டூரேஸ் கடற்கரையோரமாக அல்பேனிய விடுதலைப்போர் தியாகிகளை நினைவுகூரும் சிலை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கட்டியது என்பது வடிவத்தை பார்த்தாலே தெரிகிறது. அல்பேனியாவை தற்போது கம்யூனிச விரோத அரசியல்வாதிகள் ஆண்டு வந்தாலும், இது போன்ற நினைவுச்சின்னங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள். லெனின், ஸ்டாலின், ஹோஷா சிலைகள் ஏற்கனவே அகற்றப் பட்டு விட்டன. அதனால், தற்போது அந்நாட்டுக்கு செல்லும் யாருக்கும் முன்னொரு காலத்தில் அது ஒரு கம்யூனிச நாடாக இருந்தது என்ற எண்ணம் தோன்றாது. ஆனாலும், அல்பேனிய விடுதலைப் போரில் கம்யூனிசப் போராளிகளின் பங்களிப்பை யாராலும் அழிக்க முடியவில்லை. 

(தொடரும்) 



முதலாவது பாகத்தை வாசிப்பதற்கு: