Tuesday, January 30, 2018

வேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்

வேலைக்காரன் திரைப்படம்: ஒரு நிகழ்கால அரசியல்- பொருளாதாரக் கண்ணோட்டம்


"எங்களோட இந்த முயற்சியே ஒரு மார்க்கெட்டிங் தான். நல்லது ஜெயிக்கும் என்று sample காட்ட..."

படத்தின் முடிவில் வரும் இந்த வசனம் தான், இதன் "மார்க்கெட்டிங் வெற்றி" எனலாம். மார்க்ஸிய சொல்லாடலான "உழைக்கும் வர்க்கம்" என்பதை, இந்தத் திரைப்படத்தில் "வேலைக்காரர்கள்" என்று மக்களின் பேச்சு மொழியில் பயன்படுத்துகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். அதாவது, கம்யூனிசத்தை உழைக்கும் மக்களின் மொழியில் புரிய வைப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். அது நிறைவேறியுள்ளது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இந்திய மத்தியதர வர்க்கத்தினர் கார்பரேட் நிறுவனங்களை கைநீட்டி வரவேற்றனர். துரித உணவுகளை Junk food என்றும் பாராமல் உண்டு களித்தனர். அன்று அது "நாகரிகமாக" கருதப் பட்டது. மேலைநாட்டு கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெறித்தனத்துடன் பின்பற்றுவதில் பெருமைப் பட்டனர்.

ஆனால், காலப்போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், துரித உணவுகளில் கலந்துள்ள இரசாயன நஞ்சு போன்ற விடயங்கள் வெளித் தெரியவாரம்பித்தன. அதன் எதிரொலி தான் வேலைக்காரன் திரைப்படம். இது "முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுகின்றது" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் "படிப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்கள்" என்று இறுமாந்திருந்தனர். தற்போது தாமும் உழைக்கும் வர்க்கம் தான் என்பதையும், முதலாளிகள் ஈவிரக்கமின்றி தமது உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள். இவர்கள் நவீன பாட்டாளிவர்க்கமாக மாறியுள்ளனர். 

அத்தகைய சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் வேலைக்காரன் படக் கதாநாயகன். இவன் போன்ற குட்டி முதலாளிய இளைஞர்கள், ஆரம்பத்தில் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சமூக விழிப்புணர்வு பெற்று, பாட்டாளி வர்க்க நலன்களுக்காக வென்றெடுக்கப் படுவார்கள். இது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் கூறியது. வர்க்க சிந்தனையில் ஏற்படும் பண்பு மாற்றத்தை வேலைக்காரன் திரைப்படம் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்,விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேரும் கதாநாயகன் அறிவு, முதலாளிக்கு விசுவாசமாக பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட அறிவு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை பெரிதாக எண்ணுகிறான். தனது குப்பத்து இளைஞர்களை அடியாட்களாக பயன்படுத்தி, கூலிக்கு கொலை செய்யும் தாதாவான காசியை வெறுக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் காசி தனது நண்பனை கொல்லும் போது உண்மை தெரிய வருகின்றது.

காசி போன்ற பேட்டை ரவுடிகளையும் காரப்பேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போது ஓர் உண்மை உரைக்கிறது. முதலாளிகளின் அடியாட்களாக கூலிக்கு கொலை செய்யும் ரவுடிக் கும்பலுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டு மனச்சாட்சியை அடைவு வைத்து விட்டு வேலை செய்யும் மத்தியதர வர்க்க அடியாட்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு தரப்பினரும் முதலாளிய நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையாகின்றனர்.

தமக்கு எதிரானவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற "சட்டவிரோத  செயல்களை" கூலிக்கு மாரடிக்கும் அடியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, தமது கை சுத்தம் என்று மேட்டுக்குடி கனவான்களாக நடந்து கொள்வது தான் கார்ப்பரேட் கலாச்சாரம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் இது தான்  நடக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை வள நாடான நைஜீரியாவில், எண்ணைக் கழிவால் மக்களின் வாழ்விடம் மாசடைவதை எதிர்த்துப் போராடிய, ஒரு பிரபல சூழலியல்வாதி (Ken Saro-Wiwa) கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்குப் பின்னால் ஷெல் நிறுவனம் இருந்தது. அது அப்போது உலகச் செய்தியாகி ஷெல் நிறுவனத்திற்கு அவமானத்தை தேடித் தந்தது.

நெதர்லாந்தில் ஒரு தடவை, "உங்களுக்குப் பிடிக்காத விடயம் எது?" என்று ஒரு கார்ப்பரேட் நிர்வாகியிடம் கேட்ட நேரம், "எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள்" என்று பதில் கூறினார். அவர் சுட்டிக் காட்டிய "எல்லாம் தெரிந்தவர்கள்" இடதுசாரி சமூக ஆர்வலர்கள் தான். உண்மை தெரிந்தவர்கள், அதை மக்களுக்கு சொல்லி விடக் கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனம், எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது? அவற்றின் சட்டவிரோத செயல்கள், நிதி மோசடிகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற பல விபரங்களை தேடி அறியும், மேற்கத்திய இடதுசாரி அமைப்புகள், அந்த அறிவை மக்களிடம் பரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. வேலைக்காரன் திரைப்படத்தில் மேற்படி இடதுசாரி செயற்பாட்டாளர்களின் மொத்த உருவமாக கதாநாயகன் அறிவு காட்டப் படுகின்றான். இங்கே அறிவு என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சமூக உணர்வாளர்களின் பொது வடிவம்.

மேற்குலக நாடுகளில் உழைக்கும் வர்க்கம் உரிமைக்காக போராடும் ஒவ்வொரு தடவையும், முதலாளிய வர்க்கம் அதைக் கடுமையாக எதிர்த்து நிற்கும். ஆனால், ஒரு தடவை தொழிலாளர்கள் (அல்லது நுகர்வோர்) தமது நியாயமான உரிமைகளை வென்று விட்டால், அந்த வெற்றிக்கு முதலாளிகளும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேற்கைரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் "நாகரிக வளர்ச்சி" கண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் அங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள் தான். ஆனால், அயோக்கியத்தனமாக அந்த உண்மையை மறைக்கும் மேற்கத்திய முதலாளிய வர்க்கம், அதை தானே செய்ததாக தம்பட்டம் அடிக்கும். இந்த அயோக்கியத்தனம், வேலைக்காரன் திரைப்படத்தில் ஆதி என்ற பாத்திரம் மூலம் காட்டப் படுகின்றது.

திரைப்படத்தில் தான் வேலை செய்யும் கம்பனி தயாரிக்கும் பொருட்களில் இரசாயன நஞ்சு கலந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அறிவு, இரண்டு நாட்களுக்கு தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு வேலை செய்யும் திட்டத்தை கொண்டு வருகிறான். அறிவின் மேலாளரும், போட்டி நிறுவன முதலாளியின் மகனுமான ஆதி, தந்திரமாக அதற்கு உடன்படுகிறான்.

அதற்குப் பின்னால், போட்டி நிறுவனத்தை கழுத்தறுக்கும் முதலாளிகளின் சுயநலம் ஒளிந்துள்ளது. அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆதி தானே தொழிலாளர்களின் பாதுகாவலன் என்றும் காட்டிக் கொள்வான். நிஜ வாழ்வில், இந்த விடயங்கள் பல்வேறு கம்பனிகளில் பல வருட கால இடைவெளிகளுக்குள் நடந்துள்ளன. 

அவற்றை கோர்வையாக்கி, ஒரே கதையாக கூறத் தெரிந்த டைரக்டரின் திறமையை பாராட்ட வேண்டும். பெரும்பாலும் படித்தவர்களும் கவனம் செலுத்தாத, கார்ப்பரேட் ஊழல்களை, பொருளாதார நுணுக்கங்களை, மிகவும் எளிமையாக பாமர மக்களுக்கும் புரிய வகையில் கூறியிருக்கும் டைரக்டரை மெச்சலாம்.

இரண்டு மணிநேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது உண்மை தான். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் எளிதான விடயம் அல்ல. இருட்டைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதைத் தான் வேலைக்காரன் திரைப்படம் கூற முனைகின்றது. 

உலகில் எதுவும் போராடாமல் கிடைப்பதில்லை. அதை புதிய சிந்தனைகளுடன் வடிவமைப்பதும் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, வேலைநிறுத்தம் செய்வது மட்டும் போராட்டம் அல்ல. "வேலை செய்வதும்" ஒரு போராட்ட வடிவம் தான்.

அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்ளிருந்து வேலை செய்து கொண்டு போராடிய சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது) அதாவது, வழமை போல முதலாளிக்கு விசுவாசமாக உற்பத்தி செய்யாமல், சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் போராட்டம்.

ஒரு தொழிலகம், சமூகத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட முடிவுப் பொருட்களை அந்த சமூகத்திற்கே விற்கிறது. (இது முதலாளித்துவ மார்க்கெட்டிங் பாடநூலில் எழுதப் பட்டுள்ளது.) அதன் அர்த்தம், தொழிலாளர்கள் சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான நஷ்டஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். எதற்காக முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை வேலைக்காரன் திரைப்படம் எழுப்புகின்றது.

தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியான அறிவுக்கும், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான ஆதிக்கும் இடையில் நடக்கும் விட்டுக்கொடுக்காத போராட்டமே படத்தின் பின்பாதிக் கதை. அறிவின் யோசனைப் படி, தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் தரக் கட்டுப்பாடுடன் தயாரித்த பொருட்களை, ஆதி எரித்துக் கொளுத்தி நாசமாக்கி விடுகிறான். இதனால் தரமான பொருள் சந்தைக்கு வருவது தடுக்கப் படுகின்றது. 

இறுதியில், தொழிலாளர்கள் நேர்மையாக வேலை செய்யும் விழிப்புணர்வு பெற்றதே வெற்றி தான் என்பது அறிவின் வாதம். அது இன்னொரு கட்டத்திற்கு நகர வேண்டும். தொழிலாளர்கள் தாமே நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். குறைந்த பட்சம், கம்பனி நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள வற்புறுத்த வேண்டும்.

Saturday, January 20, 2018

பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்த வெள்ளையர்கள், தமிழர்கள் அல்ல!


"பல்லவன்" (Pahlavan) என்றால் பண்டைய ஈரானிய மொழியில் நாயகர்கள் என்று அர்த்தம். தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், உண்மையில் ஈரானில் இருந்து வந்த வெள்ளையினத்தவரே! தமிழர் என்பது இனக்கலப்படைந்த சமுதாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் என்ற "சரித்திர" நாவலில் பல்லவ மன்னர்களை தமிழர்களாக சித்தரித்து எழுதி இருப்பார். இன்றைக்கும் பெருமளவில் விற்பனையாகும் கல்கியின் நாவல்கள், ஒரு வகையில் தமிழினவாத அரசியலை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 

கல்கியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தால், "பல்லவர்கள் தமிழர்களே" என்று நம்புவோர் பலருண்டு. அவ்வாறான கற்பிதத்தை உருவாக்குவதில், ஒரு பிராமணரான கல்கிக்கு அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம். இன்றைய தமிழகப் பிராமணர்களில் ஒரு பிரிவினர் ஈரானில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். அந்த உண்மையை மூடி மறைத்து, பிராமணர்களும் தமிழர்களே என்று உறுதிப் படுத்துவதற்கு கல்கி போன்ற அறிவுஜீவிகள் பாடுபட்டுள்ளனர்.

பல்லவர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டாலும், அவர்களது ராஜ்ஜியத்தின் உத்தியோகபூர்வ மொழி சமஸ்கிருதமாக இருந்தது. பல்லவ மன்னர்கள் தமது பெயர்களுக்குப் பின்னால் சூட்டிக் கொண்ட "வர்மன்" என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம் பாதுகாவலன். 

வர்மன் என்ற பெயரைக் கண்டதும், பலர் அறியாமை காரணமாக, "பல்லவர்கள் தமிழ் மன்னர்கள்" என்று நினைக்கிறார்கள். வர்மன் என்ற பெயர் கொண்டிருந்த படியால், கம்போடியாவை ஆண்ட மன்னர்களும் தமிழர்களே என்று தவறாக நினைப்பவர்கள் பலருண்டு. இது ஒரு தப்பெண்ணம். அதில் எந்த உண்மையும் இல்லை.  அந்த கம்போடிய அரச பரம்பரையினரும் பல்லவர்களில் இருந்து வந்தவர்களே. ஆனால், தமிழர்கள் அல்ல.

யார் இந்தப் பல்லவர்கள்? எவ்வாறு தமிழகத்திற்கு வந்தார்கள்? தமிழர் என்றால் யார்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். தமிழில் பல்லவர்கள் பற்றிய வரலாற்று நூல்களை எழுதிய சரித்திர ஆசியர்கள் "பல்லவர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியவில்லை" என்று எழுதியுள்ளனர். அது உண்மை அல்ல. அவர்களுக்கு பல்லவர்கள் யார் என்பது தெரியும். அவர்களது பூர்வீகம் ஈரான் என்பதும் தெரிந்த விடயம் தான்.ஆனால் சொல்லத் தயங்குகிறார்கள்.

அந்த உண்மையை சொல்ல விடாமல் சரித்திர ஆசிரியர்களை தடுப்பது எது? இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட தமிழ்த் தேசியக் கோட்பாடு அதைக் கூற விடாமல் தடுக்கிறது. அதற்கு முன்னர் தமிழர் என்ற இன உணர்வு யாரிடமும் இருக்கவில்லை. "தமிழர்கள் ஒரே மாதிரியான, கலப்படையாத, தூய்மையான இனம்" என்பது ஒரு கற்பிதம். உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், இது போன்ற கற்பனையான வரலாற்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். 

பல்லவர்களின் வரலாறு என்ன?

பண்டைய ஈரானை ஆண்ட அரச வம்சங்களில் ஒன்று "பஹ்லவி". இந்தியாவில் அவர்களை பல்லவன் என்று அழைத்தனர். பஹ்லவி அரச வம்சத்தினர் பார்த்திய இனத்தை சேர்ந்தவர்கள். வட மேற்கு ஈரானில் வாழ்ந்த பார்த்தியர்கள், ஒரு காலத்தில் ஈரானில் பெரியதொரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்கள். 

ஈரானில் இன்னொரு மூலையில் வாழ்ந்த பார்சியர்கள் என்பது வேறு இனம். ஆனால், இனக்கலப்பு காரணமாக காலப்போக்கில் பார்த்திய, பார்சிய மொழிகள் ஒன்றாகி, பின்னர் அது அரபிச் சொற்களை உள்வாங்கி நவீன பார்சி மொழி உருவானது. இருப்பினும் அது ஒரு ஆரிய மொழி என்பதால், சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதனால், ஈரானிய பார்த்திய வம்சாவளியினரான பல்லவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் சமஸ்கிருதம் பேசியதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

ஈரானியர்களும், இந்திய ஆரியர்களும் பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்து சென்ற கிளைகள் தான். இன்றைக்கும் ஈரான் என்ற பெயரின் பொருள் "ஆரியர்களின் நாடு" என்பது தான். இந்திய - ஈரானிய ஆரியர்களின் மூதாதையர் குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் கவ்காசியா அல்லது சைபீரியாவில் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமானது) இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். 

காலப்போக்கில் அவர்களுக்குள் பல மொழிகள், இனங்கள் தோன்றியுள்ளன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டாலும், அந்நிய படையெடுப்புகளால் புலம்பெயர்ந்து புதிய இனமாகவும் மாறியுள்ளன. ஈரானிலிருந்து தென்னிந்தியா வரையிலான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சி காரணமாக பல்லவர்கள் இந்தியத் தன்மை கொண்ட புதிய இனமாக உருமாறி இருந்தனர்.

உலகை வெல்ல நினைத்த கிரேக்க அலெக்சாண்டர் இந்தியா வரையில் வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், அலெக்சாண்டர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரம் வரலாற்று நூல்களில் காண்பதரிது. குறிப்பாக தமிழில் உள்ள சரித்திர நூல்களில் அதைப் பற்றி ஒரு குறிப்புக் கூட காணக் கிடைக்காது. சிலநேரம், வேண்டுமென்றே இப்படியான இருட்டடிப்புகள் செய்யப் படுவதாக தோன்றுகிறது.

சங்ககால தமிழ் இலக்கியத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், யவனர்கள் கடலோடிகளாக கப்பலில் வந்த வணிகர்கள் என்று தான் பலர் கருதுகிறார்கள். அது ஒரு பக்கச் சார்பான உண்மை மட்டுமே. அவர்களுக்கு மறுபக்க வரலாறு தெரியாது. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து தரைவழியாக வந்து தமிழ்நாட்டில் குடியேறிய யவனர்களும் இருந்தனர். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அலெக்சாண்டர் மறைவுக்குப் பின்னர் அவர் கைப்பற்றி இருந்த அகண்ட நிலப்பரப்பு பல துண்டுகளாக பிரிக்கப் பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகள் ஒரு குடையின் கீழ் தனியான ராஜ்ஜியமானது. அதற்கு அலெக்சாண்டரின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். 

பக்டீரியா என அழைக்கப்பட்ட அந்த ராஜ்ஜியம், "சத்ரபதிகள்" என்ற கிரேக்க மொழி பேசும் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் உள்நாட்டு (இந்திய) கலாச்சாரங்களை பின்பற்றினார்கள். பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். கிரேக்க, ஈரானிய, இந்திய கலாச்சாரங்கள் ஒன்று கலந்து, தனித்துவமான புதியதொரு கலாச்சாரம் உண்டானது. அது இன்று வரைக்கும் நாம் காணும் "இந்திய கலாச்சாரத்தின்" ஒரு பகுதியாக உள்ளது.

இதற்கிடையே அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் தலையெடுத்த ஈரானிய பார்த்தியர்களும் (பல்லவர்கள்), கிரேக்க சத்ரபதிகளும் போரிட்டுக் கொண்டனர். பண்டைய காலத்து யுத்தங்கள் எதுவுமே இனம், மொழி சார்ந்து நடக்கவில்லை. யாராவதொரு மன்னரின் ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக போர்கள் நடந்திருக்கும். அந்த வகையில் நாம் இதை கிரேக்க - ஈரானிய போராக கருத முடியாது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யாருக்கும் மொழி, இன உணர்வுகள் இருக்கவில்லை.

கிரேக்க, பார்த்திய ராஜ்ஜியங்களுக்கு வடக்கில் இருந்து ஆபத்து வந்தது. ஷாகா என்ற இன்னொரு ஆரிய இனம், வடக்கே இருந்து படையெடுத்து வந்தது. இன்றைய உஸ்பெகிஸ்தான் பிராந்தியத்தில் இருந்து வந்த ஷாகா இனத்தவர்கள், ஈரானில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தனர். அதுவரை காலமும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த பார்த்தியரும், கிரேக்கரும் பின்வாங்கி இந்தியாவுக்கு சென்றனர். இன்றைய இந்தியாவின் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் புதிய ராசதானிகளை அமைத்துக் கொண்டனர்.

இதே நேரம், சீனாவில் சீனப் பெருஞ்சுவர் கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அது மேற்கு நோக்கி விரிவாக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் அரசாண்ட யுயே சி என்ற இனம், சீனர்களால் தெற்கு நோக்கி அடித்து விரட்டப் பட்டது. சீனர்களால் யுயே சி அல்லது இந்தியர்களால் குஷான் என அழைக்கப் பட்ட இனத்தவர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிராந்தியத்தில் புதிய ராஜ்ஜியத்தை அமைத்தனர். இதனால் அங்கு வாழ்ந்த ஷாகா இனத்தவர் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்தனர்.

கி. பி. முதலாம் நூற்றாண்டில், மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் உருவான பல்லவ ராஜ்ஜியத்தில், கிரேக்க, பார்த்திய, ஷாகா ஆகிய ஆரிய இனத்தவர்கள் ஒன்று கலந்து, புதியதொரு வெள்ளையினம் உருவாகி இருந்தது. அவர்களே தமிழகத்து பல்லவர்களின் மூதாதையர். குஜராத்தில் கால்பதித்திருந்த பல்லவர்கள்,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா நோக்கி படையெடுத்து சென்றனர். வட தமிழகத்தில் உள்ள தொண்டை மண்டலத்தை கைப்பற்றி, அங்கு மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ ராஜ்ஜியத்தை அமைத்தனர்.

மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டை ஆண்ட மன்னர்களும், படையினரும் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் வெள்ளையர்கள். அதாவது, பார்த்திய, ஷாகா, கிரேக்கர்களும் கலந்த வெள்ளையினம். அவர்கள் எப்படி தமிழர் ஆனார்கள்? பிற்காலத்தில், அந்நிய படையெடுப்புகள் காரணமாக பல்லவ ராஜ்ஜியம் அழிந்து போனாலும், பல்லவர்களின் வழித்தோன்றல்கள் தமிழ்நாட்டில் தங்கி விட்டிருப்பார்கள். அவர்கள் காலப்போக்கில் தமிழ் பேசி தமிழர்களாக மாறி விட்டனர்.

மேலே குறிப்பிடப் பட்ட வரலாற்று நிகழ்வுகளும், இனக்கலப்புகளும் நடப்பதற்கு ஐநூறு வருடங்கள் எடுத்திருக்கலாம். நமது கால அளவீட்டின் படி கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைபட்ட காலத்திற்குள் நடந்த மாற்றங்கள் இவை. அந்தக் காலங்களில் யார் என்ன மொழி பேசுகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவலைப் படவில்லை. "இனம்" என்ற கருதுகோள் அப்போது இருக்கவில்லை. அது காலனிய காலத்தில் உருவான நவீன அரசியல் கோட்பாடு.

குஜராத்தில் ராஜ்ஜியம் அமைத்த பல்லவர்களுக்கு, கிழக்கே இருந்து ஆபத்து வந்தது. அப்போது வட இந்தியாவில் குப்தர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. நீண்டதொரு போருக்குப் பின்னர், குப்தர்கள் குஜராத் பல்லவர்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்கள். கி.பி. 375 ம் ஆண்டு, குப்தர்களின் சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விரிவடைந்தது. தொண்டை மண்டலத்தில் இருந்த பல்லவ நாடும் குப்தர்களிடம் வீழ்ந்தது. அப்போது பல்லவ அரச வம்சத்தினர் (மட்டும்) கப்பல்களில் தப்பிச் சென்று, தூர கிழக்காசிய நாடுகளை சென்றடைந்தனர். அவர்களே கம்போடியாவில் புதியதொரு அரச வம்சத்தை உருவாக்கினார்கள்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், குப்த சாம்ராஜ்யம் பலவீனமடைந்த காலத்தில், பல்லவர்கள் மீண்டும் தலையெடுத்தனர். காஞ்சிபுரத்தில் மீண்டும் ஒரு பல்லவ நாடு தோன்றியது. த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து, ஏழாம் நூற்றாண்டு வரையில் "பல்லவர்களின் பொற்காலம்" எனலாம். அந்தக் காலத்தில், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற தூர கிழக்காசிய நாடுகளில் தோன்றிய பல்லவர்களின் ராஜ்ஜியங்களுக்கும், தமிழகத்து பல்லவ நாட்டிற்கும் இடையில் கப்பல் போக்குவரத்து இருந்தது. அதன் விளைவாக சர்வதேச வாணிபம் வளர்ச்சி கண்டது.

தமிழகத்து பல்லவ நாட்டின் ஆட்சியாளர்களில் சிலர் அப்போதும் கிரேக்க மொழி பேசுவோராக இருந்திருக்கலாம். ஆகையினால், ஐரோப்பிய கிரேக்கர்களுடனும் வணிகத் தொடர்பு ஏற்பட்டது. உண்மையில், இன்றைய சர்வதேச வணிகம் எப்படி நடக்கிறதோ, அப்படித் தான் அன்றைய வணிகப் போக்குவரத்தும் அமைந்திருந்தது. அதாவது, ஐரோப்பிய கிரேக்கர்களின் வணிகக் கப்பல்கள் தமிழ்நாட்டு சந்தையில் தமது பொருட்களை விற்றனர், அல்லது வாங்கினர்.

அதே மாதிரி தூர கிழக்காசிய வணிகர்ளும் தமிழகத்திற்கு வந்து சென்றனர். இந்த வணிகத் தொடர்பு பண வருமானத்தை மட்டும் கொண்டு வரவில்லை. அறிவியலும் வளர்ந்திருக்கும். அதே நேரம், அந்நிய நாடுகளை சேர்ந்தவர்கள் தமிழர்களுடன் ஒன்று கலந்திருப்பார்கள். உலகில் இனக் கலப்பில்லாத எந்த இனமும் நாகரிகம் அடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, தமிழர்களும் இனக்கலப்பு காரணமாகத் தான் நாகரிக வளர்ச்சி கண்டனர். அது இயற்கையானது.


பிற்குறிப்பு: 
- இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஆதாரங்களை பின்வரும் நூலில் இருந்து எடுத்துள்ளேன்: Early Kingdoms of the Indonesian Archipelago and Malay Peninsula, Paul Michel Munoz

- மேலே உள்ள படமும் அந்த நூலில் இருந்து எடுக்கப் பட்டதே.



இதனுடன் தொடர்புடைய முனைய பதிவு:

Wednesday, January 17, 2018

முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் சோஷலிசக் கரு தோன்றும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்
 (பாகம் - மூன்று) 

முதலாளித்துவ அரசை தூக்கி எறிவதற்கு ஓர் ஆயுதப் புரட்சி அவசியமா? பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கிய ஆயுதமேந்திய மக்கள் எழுச்சி எந்தக் காலகட்டத்தில் தோன்றும்? அதன் அரசியல் சமூகப் பின்னணி என்ன? நட்பு சக்திகள் எவை? பகைச் சக்திகள் எவை? ஏகபோக முதலாளித்துவ அரசின் குணங்குறிகள்...

இந்தக் கட்டத்தில், உழைக்கும் வர்க்கமும் அதன் நட்பு சக்திகளும் முன்னரங்கிற்கு வந்து போராடுகின்றன. அந்தப் போராட்டத்தை எந்தளவு வன்முறை பிரயோகித்தும் அடக்கி விட முடியாது. உழைக்கும் வர்க்கம் தனது தற்காப்புக்காக ஆயுதமேந்தி இருக்கும். மிகப் பெரிய அளவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் காரணமாக மோதல்கள் இடம்பெறும். முதலாளித்துவ அரசுக்கெதிரான அதிகாரத்திற்கான ஆயுத மோதல்கள் ஓர் உள்நாட்டுப் போராக காணப்படும். கம்யூனிசக் கருத்துக்கள் பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களினால் உள்வாங்கப் பட்டு, இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

முதலாளிய வர்க்கம் தப்ப வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும். ஏகபோக முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வந்த கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டிருக்கும். அரசு இயந்திரம் இயங்க இயலாமல் போய் விடும். அறிவுஜீவிகளான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தினால் வென்றெடுக்கப் பட்டிருப்பார்கள், அல்லது நடுநிலை வகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருப்பார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நேரடி செயற்பாட்டுக்கான கோஷங்களின் மூலம் ஆயுதப் போராட்டக் களத்தில் குதிக்கும். அது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாக கருதப்படும். இந்த போராட்ட வடிவத்தில் உத்திகளும், தந்திரோபாயங்களும் மாறுபடும். கட்சியும், உழைக்கும் வர்க்கம், இந்தக் கட்டத்தில் ஏற்படும் அனுபவ பாடங்களில் இருந்து புதிய படிப்பினைகளை பெற வேண்டி இருக்கும்.

வர்க்கப் போராட்டமானது, எவருடைய விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் தூண்டப் படுகின்றது. உழைக்கும் வர்க்கம் தீர்மானகரமான முடிவெடுக்க வைக்கும் காலகட்டம் எவ்வாறு உருவாகின்றது என்பதை இப்போது பார்ப்போம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் சுதந்திரமான போட்டியை ஆராய்ந்து எழுதியுள்ளனர். இருப்பினும், முதலாளித்துவமானது சுதந்திர வர்த்தகப் போட்டி என்ற காலகட்டத்துடன் நின்று விடவில்லை. அதற்கும் அப்பால் வளர்ச்சி அடைந்தது. அது ஏகபோக முதலாளித்துவம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. அது பின்னர் ஏகபோக முதலாளித்துவ அரசாக பரிணமித்தது.

"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" நூலில் லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 
//போட்டியானது ஏகபோகமாக மாற்றப் பட்டது. அதன் விளைவாக உற்பத்தி பெருமளவில் சமூகமயமாக்கப் பட்டது. விசேடமாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும், அதன் வளர்ச்சியும் சமூகமயமாக்குவதற்கு உதவின. இது ஏதோ ஒரு வகையில் சுதந்திரமாக போட்டியிடும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாறுபடுகின்றது. அவர்கள் ஒருவரை மற்றவர் அறியாமல் பரவி இருந்ததுடன், வெளித்தெரியாத சந்தை ஒன்றுக்காக உற்பத்தி செய்தனர்..... ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்த முதலாளித்துவமானது உற்பத்தியை சமூகமயமக்கும் கட்டத்திற்கு நேரடியாக வழிநடத்திச் செல்கின்றது. அதன் அர்த்தம், எல்லா முதலாளிகளையும், அவர்களது விருப்பத்திற்கு மாறாக, புதியதொரு சமூக ஒழுங்கமைப்பை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. அது முழுமையான சுதந்திர (வர்த்தகப்) போட்டியில் இருந்து முழுமையான சமூகமயமாக்கும் கட்டத்திற்கு மாற்றமடைகின்றது.// - லெனின்

லெனினின் கூற்றை நாம் இலங்கை, இந்திய நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த நாடுகள் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்த காலத்திற்குப் பிறகு, சுதந்திரமாக போட்டியிடும் முதலாளித்துவ நடைமுறையை கொண்டிருந்தது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த மாதிரியான காலகட்டம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டில் மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான பொருட்கள் உற்பத்தியாகி சந்தைக்கு வந்தன.

அது மட்டுமல்லாது, மேற்குலகில் சந்தைக்கு வந்த புதிய தொழில்நுட்பமானது, இலங்கை, இந்தியாவில் பாவனைக்கு வருவதற்கு பல வருடங்கள் எடுத்தன. ஆனால், இப்போது நிலைமை அப்படி அல்ல. கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, அனைத்து புதிய தொழில்நுட்பக் கருவிகளும் உடனுக்குடன் வாங்கக் கூடியதாக உள்ளது.

அதன் அர்த்தம், ஏகபோக முதலாளித்துவம் மேலாதிக்கம் செலுத்துவதால் உற்பத்தி உலகமயமாகியுள்ளது. முதலாளிகள் விரும்பியோ, விரும்பாமலோ, உற்பத்தி சமூகமயமாகி விட்டது. அதாவது, உற்பத்தி சமூகமயமாகும் போதே சோஷலிசத்தின் கரு உருவாகி விட்டது.

முதலாளித்துவத்தின் இந்த வளர்ச்சிக் கட்டம் இன்றியமையாதது. இது சமூகத்திற்கான உற்பத்திக்கும், தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கிறது. இத்தகைய புதிய சமுதாய மாற்றம் ஏற்படும் நேரத்தில், முதலாளித்துவத்தின் உள்ளே சோஷலிசம் என்ற புதிய சமுதாய அமைப்பு தோன்றுகின்றது.

இந்த வளர்ச்சிக் கட்டத்தில், சோஷலிசம் முற்றிலும் புதியதொரு பாத்திரத்தை ஏற்கிறது. அரசு என்பதன் மூன்று வகை வளர்ச்சிக் கட்டங்கள்: 
  1. சுதந்திர வர்த்தகப் போட்டி கொண்ட முதலாளித்துவ காலகட்டத்தில், அரசு முதலாளிய வர்க்கம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தியது. 
  2. முதலாளிய வர்க்கத்தில் ஒரு பிரிவினர் ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். அத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலத்தில், வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் அரசை தமக்கு அடிபணிய வைத்தன. 
  3. ஏகபோக அரசு அமையும் காலத்தில், அரசு முற்றுமுழுதாக ஏகபோக மேலாண்மை பெற்ற நிறுவனங்களின் கருவி ஆகின்றது.

இன்னும் விரிவாக, "ஏகபோக முதலாளித்துவ அரசு" என்றால் என்ன?

ஏகபோக முதலாளிய அதிகாரம், அரச கட்டமைப்புடன் ஒன்று சேரும். அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும், ஏகபோக பொருளாதார - அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும். அந்த வகையில், இன்று பல மேற்கத்திய நாடுகளில் ஏகபோக முதலாளித்துவ அதிகாரக் கட்டமைப்பே உள்ளது. அது சிறு வணிகர்களையும், சிறு முதலாளிகளையும் அடக்கியொடுக்கி அழித்து விட்டது.

உதாரணத்திற்கு, எந்த மேற்கத்திய நாட்டிலும் பெட்டிக் கடைகள், தனியார் மரக்கறிக் கடைகள் போன்றவற்றை காண்பதரிது. ஏகபோக முதலாளிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகள் அந்த இடத்தை பிடித்து விட்டன. பெட்டிக் கடைகள் கூட நாடளாவிய பெரிய நிறுவனம் ஒன்றின் கிளைகளாக மாறி விட்டன. இந்த மாற்றம் தற்போது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஏகபோக முதலாளித்துவ அரசு என்ற கட்டத்தை அடைவது, முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் இறுதிக் கட்டம் ஆகும். இதை லெனின் ஏற்கனவே கண்டறிந்ததுடன், அதை வர்க்கப் போராட்டத்திற்கான தீர்மானமாகவும் எடுத்துரைத்தார்.

//முதலாளித்துவமானது ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது ஏகபோக முதலாளித்துவம். (உலகப்)போரின் விளைவாக ஏகபோக முதலாளித்துவ அரசு உருவானது. நாங்கள் தற்போது சோஷலிசத்திற்கான படிக்கட்டை கொண்ட உலகப் பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில் நிற்கிறோம்.// - லெனின்

ஆகையினால், இன்றுள்ள ஏகபோக முதலாளித்துவ அரசு கட்டமைப்பை, சோஷலிசத்திற்கு செல்வதற்கான படிக்கட்டாக நாம் கருத வேண்டும். அதன் குணங்குறிகளை நாம் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

  • தொழிநுட்ப வளர்ச்சியானது இன்று பலமடங்கு விரிவடைந்துள்ளது. கணணி மயமாக்களில் இருந்து மிகச் சிறிய இலத்திரனியல் கருவிகள் பாவிக்கும் அளவிற்கு வந்து விட்டது. அதாவது, மிகத் தீவிரமாக உற்பத்திகள் சமூகமயமாக்கப் பட்டுள்ளன. உதாரணத்திற்கு, இன்று ஸ்மார்ட் போன் பாவனை உலகம் முழுவதும் கிராமங்களில் கூட நுழைந்து விட்டது. புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகும் அடுத்த நாளே, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கின்றன. இது எந்தளவு தூரம் உற்பத்தி சமூக மயமாகியுள்ளது என்ற உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இதன் அடுத்த படியாக, உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்கும் கட்டத்தை (சோஷலிசம்) நோக்கி நகர வேண்டும்.

  • புதிய தொழில்நுட்ப வசதிகள் ஆவன, மிகப் பெரிய, உறுதியாக வளரக் கூடிய நிறுவனங்களில் தங்கியுள்ளன. அது கார்பரேட் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதெல்லாம் திட்டமிட்ட பொருளாதார செயற்பாட்டை கொண்டுள்ளன. முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த திட்டமிட்ட பொருளாதாரத்தை பார்த்து கேலி பேசியவர்கள், இன்று கார்பரேட் நிறுவனங்களின் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஆதரிக்கும் முரண்நகையை காணலாம். இரண்டு இடங்களிலும் திட்டமிடல் பொருளாதாரம் என்பது ஒரே விடயமாக இருந்த போதிலும், கார்பரேட் நிறுவனங்களால் செயற்படுத்தப் படும் பொழுது அது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே, நாம் இனி வருங்காலத்தில் சுரண்டலற்ற திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை வருகின்றது. ஏகபோக முதலாளித்துவ அரசு, தானாக பதவி விலகி அதிகாரத்தை கைவிட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது. பாட்டாளிவர்க்கம் கேட்டவுடன் ஏகபோக முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்து விடும் என்று யாராவது நம்பினால், அவர் கனவு காண்பவராக இருப்பார். இந்தக் கட்டத்தில் வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோளானது, அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.


(பிற்குறிப்பு: ஒரு மார்க்ஸிய வகுப்பிற்காக தயார் படுத்திய குறிப்புகளைக் கொண்டு எழுதிய  கட்டுரை. Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. மேலதிக விளக்கம் தேவைப் படுவோர் அந்த நூலை வாசிக்கலாம்.)



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: