Saturday, September 30, 2017

பாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுகம்

அமெரிக்காவில் பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்து கௌரவித்த  முதலாளிய வர்க்கம்.

"பாசிசம் என்பது ஒரு மதம். அது சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால் சோஷலிசம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது."  

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், முசோலினி எழுதிய பாசிச கொள்கை விளக்கத்தில் இருந்து சில பகுதிகள்:

//பாசிசம் என்பது ஒரு மதக் கோட்பாடு. அது ஒரு தனி மனிதனை உன்னதமான ஆன்மீக சமுதாயத்தின் உறுப்பினராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாசிசம் என்பது அரசு மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை முறையும் தான். தேசம் என்பதற்கு அப்பால், எந்தவொரு அரசியல் கட்சிகளோ, குழுக்களோ, வர்க்கங்களோ இருக்க முடியாது.

பாசிசம் சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால், சோஷலிசம், வரலாற்றுப் போக்கை வர்க்கப் போராட்டமாக வரையறை செய்கின்றது. வர்க்க ஐக்கியம் மூலம் கட்டப்படும் ஒரே முனைப்பான பொருளாதார, தார்மீக அரசமைப்பதை, அது புறக்கணிக்கின்றது./
- முசோலினி (The Doctrine of Fascism, 1932)

பாசிசக் கொள்கை, "ரோமர்களின் பொற்காலத்திற்கு திரும்பும் இத்தாலிய தேசியவாதம்" ஆக முசோலினியால் அதிகாரத்திற்கு வந்தது. அதனை, "பணக்கார மேல்தட்டு வர்க்கம் (Patricians), பெரும்பான்மை ஏழை மக்களை (Plebs) அடக்கி ஆளும் சர்வாதிகார ஆட்சி" என்றும் சொல்லலாம். (ரோமர்கள் காலத்தில் மேட்டுக் குடியினர் Patricians என அழைக்கப் பட்டனர். ஏழைகள் Plebs என அழைக்கப்பட்டனர்.)

இல்லாவிட்டால் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சிஞ்சினாத்தி (Cincinnati) நகரில் பாசிசத்திற்கு சிலை வைப்பார்களா? அமெரிக்கப் புரட்சியின் போது, இங்கிலாந்து மன்னரிடமிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரத்தை, அமெரிக்க முதலாளிய வர்க்கம் கைப்பற்றி இருந்தது. முதலாளிய வர்க்கத்தினர் தமது வெற்றியின் அடையாளமாக பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்தார்கள்.

ரோமர்கள் காலத்தில், அவசர கால நடைமுறையாக மன்னரின் இடத்தில் இருந்து இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரியின் பெயர் Cincinnatus. (அமெரிக்க Cincinnati என்ற ஊரின் பெயர் அதை நினைவுபடுத்துகிறது.) அவரது கையில் சட்டத்தை நிலைநாட்டும் ஆயுதமாக "பாசெஸ்" (Fasces) என்ற ஒரு வகை கோடரி இருந்தது. (படத்தை பார்க்கவும்)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியின் கட்சியின் பெயர் பாசிசக் கட்சி. பண்டைய பாசெஸ் ஆயுதத்தில் இருந்து தான் பாசிசம்(Fascism) என்ற சொல் உருவானது.

முசோலினி அந்த சொல்லை தெரிவு செய்வதற்கு காரணம் இருந்தது. பாசிசம் என்பது மன்னராட்சிக்கு எதிரான மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. அது மட்டுமல்ல, "பண்டைய கால பழம் பெருமை பேசும் தேசியவாதம்" பாசிசத்தின் அடிநாதமாக இருந்தது.

"ரோமர்கள் காலத்தில் எம்மவர்கள் (இத்தாலியர்கள்) உலகை ஆண்டார்கள். லத்தீன் மொழியில் இருந்து தான் பிற மொழிகள் வந்த படியால், உலகில் தோன்றிய மூத்தகுடி லத்தீன் பேசினார்கள். அத்தகைய பெருமைக்குரிய இத்தாலி இனம் மீண்டும் தலைநிமிர வேண்டும்....." இவ்வாறான தீவிர தேசியவாதக் கருத்துக்கள், முசோலினியாலும், பாசிசக் கட்சியினராலும் இத்தாலி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் பட்டன.

பாசிசம் தனது சொந்த இன மக்களின் நலன்களை கூடப் பேணப் போவதில்லை. இன்றுள்ள அதே முதலாளித்துவ சுரண்டல் சமுதாயத்தை தொடர்ந்தும் வைத்திருக்கும். அதற்கு உலகின் முதலாவது பாசிச அரசு அமைந்த இத்தாலியின் உதாரணத்தை பார்ப்போம்.

இத்தாலியில் முசோலினி வாழ்ந்த காலத்திலும், மார்க்சிய, சோஷலிச அமைப்புகள் வளர்ந்து கொண்டிருந்தன. தொழிலாளர்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வந்தன. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர், அதுவும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் ஊடாடும் ஒருவர், மார்க்சியத்தை பற்றி அறியாமல் விட்டிருக்க முடியாது.

சோஷலிஸ்டுகள் நடத்திய பத்திரிகை ஒன்றில், ஊடகவியலாளராக பணியாற்றிய முசோலினி, ஆரம்பத்தில் தன்னையும் ஒரு சோஷலிஸ்ட் மாதிரி காட்டிக் கொண்டார். இல்லாவிட்டால் அந்த வேலை கிடைத்திருக்காது. ஆனால், அவரது எழுத்துக்கள் இத்தாலி இனப் பெருமை பேசுவதாகவும், அரசின் போர்வெறியை ஆதரிப்பதாகவும் இருந்தன. அவரது தேசியவெறி நிலைப்பாடு காரணமாக பத்திரிகையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

முசோலினி பாசிசக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்கி, "இத்தாலியர்களின் இழந்த இனப்பெருமையை மீட்டுத் தருவதாக" பிரச்சாரம் செய்தார். இனப்பற்று, மொழிப்பற்று, தேசியம் என்று வலதுசாரியம் பேசிக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களை கவர்வதற்காக கொஞ்சம் இடதுசாரியம் பேசினார். அதனால் தான் பொதுத் தேர்தலில் பாசிசக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இத்தாலி மன்னர் இம்மானுவேல் அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அளவிற்கு முசோலினி ஆளும் வர்க்கத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

முசோலினியின் பாசிச ஆட்சிக் காலத்தில் ரயில்கள் நேரம் தவறாமல் ஓடியதாக சொல்வார்கள். அது மட்டுமல்ல, ரயில் டிக்கட் விலையும் குறைக்கப் பட்டது. இதனால், பொதுவாக தமது ஊரை விட்டு வெளியே சென்றிராத உழைக்கும் வர்க்க மக்கள், தூர இடத்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வர முடிந்தது.

பாசிச காலகட்டத்தில் தான் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைத்து என்பதை மறுக்க முடியாது. அதனால் ஓய்வு நேர பொழுதுபோக்குகளும் அதிகரித்தன. சினிமாத் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பது, உதைபந்தாட்ட விளையாட்டுகளை கண்டுகளிப்பது என்று, பொது மக்கள் ஒன்று கூடி பொழுது போக்கினார்கள்.

இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிக்கட்டுமானம் பாசிச ஆட்சியில் போடப் பட்டு விட்டது. நாங்கள் இன்றைக்கும் ஒரு நவ பாசிச கலாச்சாரத்திற்குள் வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. நாங்கள் யாரோ ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்து எடுக்கும் சம்பளத்தை, ஓய்வு நேர பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்னொரு முதலாளிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மேம்போக்காக பார்த்தால், பாசிசம் மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்ததாக தெரியும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. 1921 ம் ஆண்டு பாசிசம் ஆட்சிக்கு வந்தது. 1939 ம் ஆண்டு முசோலினியின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பளத் தொகை வீழ்ச்சி கண்டது. ஒன்றில் சம்பளம் குறைந்தது அல்லது வாங்குதிறன் குறைந்தது. சம்பளம் மாறாமல் அப்படியே இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.

உழைக்கும் வர்க்க மக்கள் சோளம் மாவில் செய்த உணவை மட்டுமே உட்கொண்டார்கள். இறைச்சி அரிதாகக் கிடைத்தது. ஒரு நல்ல சைக்கிள் வாங்குவதென்றால் கூட மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டும். அத்தகைய அவல வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளர்கள், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிச் சென்றதில் வியப்பில்லை.

பாசிச ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டிருந்தது. இருப்பினும், தலைமறைவாக இயங்கி வந்தனர். இரகசிய கெரில்லாக் குழுக்களும் இயங்கின. கம்யூனிச கெரில்லாக்கள் பாசிச அரச நிலைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, தொழிற்சாலைகளில் ஊடுருவி இருந்த கம்யூனிஸ்டுகள், வேலைநிறுத்தப் போராட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இத்தாலியில் முசோலினியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. வடக்கு இத்தாலியில் பல இடங்கள் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வந்து விட்டன. அத்தகைய குழப்பகரமான சூழ்நிலையில், மீண்டும் மன்னர் இமானுவேல் "இத்தாலியை காப்பாற்றும் பொறுப்பை" கையில் எடுத்தார்.

1943 ம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் முசோலினி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போதே இத்தாலி பாதுகாப்புப் படைகளில் பிளவு உண்டாகி விட்டது. முசோலினிக்கு விசுவாசமான பாசிசப் படையும், மன்னருக்கு விசுவாசமான படையும் மோதிக் கொண்டன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் ஜெர்மன் நாஸி இராணுவம் படையெடுத்தது. தெற்கு இத்தாலி மட்டும் மன்னரின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் நேச நாட்டுப் படைகளும் வந்திறங்கின.

ஜெர்மன் படைகள் முசோலினியை சிறையில் இருந்து விடுவித்து, தமக்குக் கீழே ஒரு பொம்மை அரசை வைத்திருந்தன. இருப்பினும், பெரிய நகரங்களான மிலான், தூரின் போன்றன கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த படியால், முசோலினியால் அங்கு செல்ல முடியவில்லை. ஒதுக்குப் புறமான அல்ப்ஸ் மலையடிவார சிறிய நகரம் ஒன்றில், புதிய பாசிச அரசு அமைந்தது.

அப்போதே இத்தாலி முதலாளிகள் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டனர். கார் தயாரிக்கும் இத்தாலி பன்னாட்டு நிறுவனமான FIAT கம்பனிக்கு தூரின் நகரில் தொழிற்சாலை இருந்தது. FIAT தலைமை நிர்வாகி சுவிட்சர்லாந்து சென்று, அமெரிக்க பிரதிநிதியை சந்தித்தார். "இத்தாலியில் அமெரிக்கா முதலிட வேண்டுமென்றும், அங்கு தொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவு என்றும்" பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவுடனான இத்தாலி முதலாளிகளின் இரகசிய உறவு, ஓரளவு பயனைத் தந்தது எனலாம். 1945 ம் ஆண்டு, போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் சம்பந்தப் பட்ட FIAT நிர்வாகியை கைது செய்ய தேடி வந்தனர். அங்கே எதிர்பாராத விதமாக அமெரிக்க நிர்வாகி ஒருவரைக் கண்டு ஆச்சரியப் பட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேச நாடுகளின் அணியில் இருந்தன. ஆகையினால், கம்யூனிஸ்டுகள், இத்தாலியை கைப்பற்றிய அமெரிக்கப் படையினருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா மிகவும் தந்திரமாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இத்தாலியை தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் கொண்டு வந்தது. பாசிச ஆட்சிக் காலத்தில் ஒத்துழைத்த இத்தாலி முதலாளிய வர்க்கத்தினர், போர் முடிந்த பின்னர் அமெரிக்கர்களுடன் ஒத்துழைத்தனர். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது.
1945 ம் ஆண்டு, இத்தாலியின் தென் பகுதியில் நேச நாடுகளின் படையணிகள் வந்திறங்கி இருந்தன. கிழக்கே யூகோஸ்லேவிய பிரதேசங்களை, மார்ஷல் டிட்டோவின் கெரில்லா இராணுவம் கைப்பற்றி இருந்தது. இத்தாலியின் பெரும்பான்மையான இடங்களை, இத்தாலி கம்யூனிச கெரில்லாக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

தோல்வியின் விளிம்பில் நின்ற முசோலினி, தனக்கு விசுவாசமான பத்துப் படையினரைக் கூட திரட்ட முடியாமல், நாஸி ஜெர்மன் படையினரின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை நோக்கி தப்பியோடினார். ஜெர்மன் படையினரின் டிரக் வண்டியொன்றில், ஜெர்மன் இராணுவ சீருடையில் மாறுவேடம் பூண்டிருந்த முசோலினி, கம்யூனிச கெரில்லாக்களின் சோதனைச் சாவடி ஒன்றில் அடையாளம் காணப் பட்டார். 

முசோலினியும், அவரது காதலியும், விசுவாசமான நண்பர்களும், பிடிபட்ட ஒரு சில தினங்களிலேயே சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களது இறந்த உடல்கள் மிலானோ நகர மத்தியில் தலை கீழாக கட்டித் தொங்க விடப் பட்டன. 28 ஏப்ரல் 1945 அன்று இந்த மரண தண்டனை விதிக்கப் பட்டது.

¡No pasarán! Fascism shall not pass. பாஸிசம் எம்மைக் கடந்து செல்ல முடியாது.


Wednesday, September 27, 2017

"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்கள்": ஈழத்தின் சாதிய- நிறப் பாகுபாடு


அருளினியனும், அவர் எழுதிய கேரள டயரீஸ் நூலும் பற்றி சில குறிப்புகள்....

எனக்கும், அருளியனுக்கும் இடையில் நிறைய கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இருவரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. கடந்த காலத்தில் அது தொடர்பாக வாதங்கள் செய்துள்ளோம். என்னைப் பொறுத்தவரையில், அவர் ஒரு லிபரல் ஜனநாயகவாதி. அதனால், கொள்கை ரீதியாக எதிராளி என்றாலும், தனிப்பட்ட ரீதியாக நட்புடன் பழகுவார். இந்தளவு புரிந்துணர்வு பலரிடம் காணக் கிடைப்பதில்லை.

அவர் "வேர்களைத் தேடி" என்ற பெயரில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அனுபவங்களை, ஆரம்பித்தில் தனது முகநூலில் பதிவிட்டு வந்தார். பின்னர் நூல் வடிவில் கொண்டு வர விரும்பினார். ஒரு ஈழத் தமிழராக, ஈழத்திற்கும் கேரளாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்துள்ளார். அயல் மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கூட அறிந்திராத பல உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இது வருங்கால சந்ததிக்கும் உதவும்.

அருளினியன் முகநூலில் எழுதிய பதிவுகளில், யாழ்ப்பாண வெள்ளாளர் பற்றிய கட்டுரை, அன்று பலரால் பாராட்டப் பட்டது. அப்போதே நானும் அது குறித்த விமர்சனத்தையும் வைத்திருந்தேன்.

யாழ்ப்பாண சாதி அமைப்பின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. தகவல்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், சாதியத்தை அழிப்பது எப்படி என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. சாதியக் கட்டமைப்பு இன்று வரைக்கும் நிலைத்திருப்பது எப்படி என்பதற்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. "புலிகளின் காலம் பொற்காலம். பிராபாகரன் இன்றிருந்தால் சாதியம் மறைந்திருக்கும்..." என்பது போன்ற மேலோட்டாமான பார்வையை கொண்டிருந்தார்.

சுருக்கமாக: யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினராக கருதப்படும் வெள்ளாளர்களின் போலிக் கெளரவம், சாதி அபிமானம், பழமைவாதம் போன்றவற்றை தான் அருளினியன் விமர்சித்துள்ளார். உள்ளதை உள்ள படியே போட்டு உடைத்துள்ளார்.

வெள்ளாள ஆதிக்க சாதியினர் மீதான மென்மையான விமர்சனத்தைக் கூட, ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிவெறி தாண்டவமாடுகின்றது. பலர் என்ன தான் வாய் கிழிய தமிழ்த் தேசியம் பேசினாலும், சந்தர்ப்பம் வரும் போது தாங்களும் சாதிமான்களே என்பதை நிரூபிக்கின்றனர்.

அருளினியன் தனது நூலை வெளியிட தேர்ந்தெடுத்த இடமும் குறிப்பிடத் தக்கது. அவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராக இருப்பதால், தனது முதல் நூலை அங்கே வெளியிட விரும்பியதில் தவறில்லை. இருப்பினும், யாழ் இந்துக் கல்லூரி ஒரு காலத்தில் சாதிவெறியர்களின் கூடாரமாக இருந்ததை மறக்கக் கூடாது, மறுக்கவும் முடியாது.

முன்னொரு காலத்தில், யாழ் இந்துக் கல்லூரியில் வெள்ளாளர்கள் மட்டுமே படிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதிலும் இந்து மாணவர்கள் மட்டுமே படிக்கலாம். அப்போது அது தனியார் பாடசாலை. அதனால் (சைவ-வெள்ளாள) முதலாளிகள் வைத்ததே சட்டமாக இருந்தது. அது பின்னர் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசுடைமை ஆக்கப் பட்டது.

அதன் பிறகு அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டனர். அப்போதும் பழைய சாதிய சின்னங்கள் அகற்றப் படவில்லை. இப்போதும் அங்கே ஆறுமுக நாவலருக்கு சிலை உள்ளது. அத்துடன் தீய வழியில் பிரபலமான சாதிவெறியன் காசிப்பிள்ளை என்பவரின் பெயரில் இல்லமும் உள்ளது.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்துக் கல்லூரியின் பெயரைச் சொல்லித் தான் அருளினியன் மீது சேறடிக்கப் பட்டது! அருளினியனையும், அவரது நூலையும் எதிர்த்தவர்கள் 90% சாதி அபிமானிகள் தான். அதற்காக, எதிர்த்தவர்கள் எல்லோரும் வெள்ளாளர்கள் என்று அர்த்தம் அல்ல.

இந்தியாவில் பார்ப்பனீயம் போன்று, யாழ்ப்பாணத்தில் வெள்ளாளீயம் உள்ளது. அதன் அர்த்தம், பிற சாதிகளை சேர்ந்தவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும், அதே மனப்பான்மையுடன் இருப்பார்கள். இன்னொருவிதமாக சொன்னால், இது அடிப்படையில் பழமைவாதம் பேணுவோரின் நவீன அரசியல் அவதாரம்.

ஏற்கனவே ஈழத்து தமிழ்த் தேசியம் பழமைவாத பிற்போக்குத் தனங்களின் மீதே கட்டப் பட்டது. உலகில் உள்ள பிற தேசியங்கள் மாதிரி, தமிழ்த் தேசியமும் தனக்கென சில புனிதங்களை கட்டமைத்து வைத்துள்ளது. மூவாயிரம் வருடங்களாக, ஈழத் தமிழினம் ஒரு DNA கூட மாறாமல் அப்படியே "ஒரே" இனமாக இருந்து வருகின்றது என்று நம்புகிறார்கள். அல்லது நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இது தான் அவர்களது கொந்தளிப்புக்கு காரணம். காலங்காலமாக நம்பப் பட்டு வரும் புராணக் கதைகள் பொய்யாக்கப் படுமென்றால், பழமைவாதிகளுக்கு கோபம் வராதா? அருளினியனின் கேரள டைரீஸ் நூலில் தேசியத்தின் பெயரால் புனையப் பட்ட கற்பிதம் உடைகிறது. இதை அருளினியன் தனது தாராளவாத (லிபரல்) அரசியல் நிலைப்பாட்டில் இருந்து எழுதி இருக்கிறார்.

ஈழத் தமிழர் மத்தியில், ஒருவரது அரசியல் கொள்கைக்கும், கருத்துக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் இன்னமும் வரவில்லை. தனக்குப் பிடிக்காது என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு மதம் என்றால், தமிழருக்கு இனம் இருக்கிறது. இரண்டு சமூகங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்டுக்கதைகளை ஒன்று சேர்த்து கோட்பாடாக்கி வைத்திருக்கிறார்கள். அதன் அத்திவாரமே ஆட்டம் காணுகிறது என்றால் சும்மா இருப்பார்களா?

ஈழத்தின் ஆதிக்க சாதியாக உள்ள வெள்ளாளர்கள், ஒரு உள்நோக்கிய சிந்தனை (introvert) கொண்ட சமூகம். அவர்களுக்கென்று சில இரகசியங்கள் இருக்கும். அதை வெளியில் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒன்றில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் அல்லது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

அந்த இரகசியங்களை தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் சொல்ல மாட்டார்கள். இலக்கியங்களில் எழுத மாட்டார்கள். சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த விடயத்தில் சாதிக்குள்ளே இருக்கும் தீவிரவாதிகள், மிதவாதிகள், பழமைவாதிகள், நவநாகரிகவாதிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள்.

ஈழத்து சாதிய சிந்தனைகளில் ஒன்று தோலின் நிறம். சிவப்பாக இருந்தால் வெள்ளாளர்கள், கறுப்பாக இருந்தால் தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம். சமூக விஞ்ஞானப் படி அது உண்மையல்ல. எல்லா வகையான நிறத்தவர்களும், எல்லா சாதிகளிலும் கலந்துள்ளனர். ஆனால், "வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்" என்று நம்பும் பொதுப் புத்தி அந்த சாதியை சேர்ந்த பலரிடம் காணப் படுகின்றது.

இந்த கறுப்பு, வெள்ளை வேறுபாட்டை சிலர் "அறிவியல்" பூர்வமாக நிரூபிக்கக் கிளம்புவார்கள். அதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்பாடு "கேரளா தொடர்பு"! ஏனென்றால், "பொதுவாக மலையாளிகள் சிவப்பானாவர்கள்" என்ற பொதுப் புத்தியும் நிலவுகின்றது. தாம் மலையாளிகளின் வம்சாவளியினர் என்பதாலேயே சிவப்பாக இருப்பதாக பல வெள்ளாளர்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகளே மன்னியுங்கள்.

இங்கே இதை மறுப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மைகள். தனிப்பட்ட முறையில் பலரிடம் அவதானித்த விடயம். கேரளா வம்சாவழித் தமிழர்கள் என்பதை தாமாகவே நேரடியாக தெரிவித்தவர்களும் உண்டு. எனது அனுபவத்தில் கண்ட ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்.

எனக்குத் தெரிந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கிறார். அவருக்கு மலையகத்திலும் உறவினர்கள் உண்டு. "எங்கள் ஊர் மலையகம் என்று சொன்னால், எல்லோரும் குறைந்த சாதியினர் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்..." என்று என்னிடம் சொல்லிக் குறைப்பட்டார்.

"கறுப்பர்களின் தேசத்தில் வாழ்வதற்காக வெட்கப்படும்", சிவந்த தோல் நிறம் கொண்ட அந்தப் பெண்மணி, தனது உயர்சாதிப் பெருமிதத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அந்த அரபு நாட்டில் தன்னுடன் கூட வேலை செய்த கேரளாக் காரரை பிடித்து மலையாளம் பேசக் கற்றுக் கொண்டார். அவர் மலையாளத்தில் சம்சாரிக்கும் பொழுது அடையும் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இப்படி மலையாள மோகம் கொண்ட பலரை என் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முகநூலில் அறிமுகமான, வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், இந்த "கேரளா தொடர்பை" பற்றி ஆராய வெளிக்கிட்டார். அவர் அரசியலில் குதிப்பதற்கு முந்திய முகநூல் பதிவுகளிலும் கேரளா தொடர்பு பற்றிய பிரமிப்புகள் இருக்கும்.

அது குறித்து என்னுடனும் உரையாடினார். முடிந்தால் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதச் சொன்னார். இப்போது அந்த நண்பர் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதி. வலதுசாரி தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர். ஆகையினால், ஒரு காலத்தில் தன் மனதில் அப்படியான எண்ணம் இருந்தது என்பதையே மறுப்பார்.

நான் ஆரம்பத்தில் கூறிய மாதிரி, இந்த கேரளா கதையாடல் வெள்ளாளர் சமூகத்தினுள் ஆழமாக வேரூன்றி இருக்கும் நம்பிக்கை. அது உண்மையா, பொய்யா என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், சிவப்பு நிறத் தோல் என்ற தொன்மத்தை (Myth) நிறுவுவதற்கு, அவர்களுக்கு கேரளாவை விட்டால் வேறு வழியும் தெரியாது.

உண்மையில் நானும் அந்தக் கதைகளுக்கு ஆதாரம் இல்லையென்று தான் நம்பினேன். நூலகத்தில் இருந்த இலங்கையின் பழைய ஆவணங்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம், அந்தத் தகவல் தற்செயலாக தென்பட்டது. ஒரு காலத்தில், யாழ் குடா நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. எழுபதுகளில், சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் தான் அந்தத் தொடர்பு அறுந்தது. அதாவது, இலங்கை அப்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடைவிதித்து சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்தது.

யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை வலிகாமம் என்று அழைப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் தான் புகையிலை தோட்டங்களும் அதிகம். புகையிலை உற்பத்தியாளர்களில் 90% வெள்ளாள விவசாயிகள் தான். இது ஒன்றும் இரகசியம் அல்ல. அந்தப் பிரதேசத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்கும் யாழ் குடாநாட்டின் பெருமளவு விவசாய நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமானவை.

நீண்ட காலமாக கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த புகையிலை விவசாயிகள், இலங்கை அரசின் தேசியமயமாக்கல் காலகட்டத்தின் பின்னர், தென்னிலங்கையில் மட்டுமே சந்தைப் படுத்த முடிந்தது. அனேகமாக இதற்குப் பின்னர் தான், கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த மலையாளிகளும், தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சாதாரணமான சமுதாய மாற்றம்.

இப்போது எழும் பிரச்சினை என்னவென்றால், ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள், இனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உருவாக்கி, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். "சிங்களவர்கள் எல்லோரும் ஓரினம், தமிழர்கள் எல்லோரும் ஓரினம். இரண்டும் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இனத் தூய்மை பேணி வருகின்றன." என்ற கற்பனையை போதித்து வந்தார்கள்.

இப்போது யாராவது வந்து, "சிங்களவர், தமிழர் தனித் தனி இனங்கள் அல்ல. இரண்டுமே கலப்பினங்கள் தான்" என்று உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது. தாங்கள் இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த பொய் அம்பலமாகிறது என்ற ஆத்திரத்தில் துள்ள மாட்டார்களா?

நிச்சயமாக. அதை மறைப்பதற்காக, "ஈழத் தமிழரை பிரிக்க சதி நடக்கிறது" என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால், "சிவப்பு, கறுப்பு நிற வேறுபாடு" பார்க்கும் கதைகளை, தொடர்ந்தும் தமது சாதிக்குள்ளே மட்டும் இரகசியமாக வைத்திருப்பார்கள்.

Sunday, September 24, 2017

25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?


25 செப்டம்பர், திங்கட்கிழமை நடக்கவுள்ள, சுதந்திர குர்திஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு பற்றிய சில குறிப்புகள்.

ஈராக்கில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் "ஆம்" என்று வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது பல தசாப்த கால குர்திய தேசியவாதிகளின் கனவு. இன்று நனவாகப் போகிறது. உண்மையிலேயே குர்திஸ்தான் தனி நாடாக இருக்க முடியுமா? அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

கடந்த இருபதாண்டுகளாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்து வருகின்றது. சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்திருந்தது.

அமெரிக்க இராணுவமும் குர்திஸ்தானில் தரையிறங்கிய பின்னர் தான், சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக் மீது படையெடுத்தது. அதற்கான "நன்றிக் கடனாக", அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் பெஷ்மேர்கா படையணிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குர்திஸ்தான் பிராந்தியம் ஏறக்குறைய தனி நாடு போன்றே நிர்வகிக்கப் பட்டது. இருப்பினும், அது ஈராக்கின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருந்தது.

குர்திஸ்தான் பெயரில் தனிக்கொடி, தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாகி இருந்தன. அதற்கென தனியாக "குர்திஷ் தேசிய இராணுவம்" கூட இருந்தது. இருந்தாலும் அதை யாரும் தனிநாடாக கருதவில்லை, அல்லது அங்கீகரிக்கவில்லை. அங்கேயும் ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும். குர்திஷ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பாக்தாத்தில் இருந்தனர். வெளிவிவகார கொள்கை உட்பட பல விடயங்களில் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசு மேலாண்மை செலுத்தியது.

குர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு தேசியவாதிகளின் இறுதி இலக்கு என்றே பரப்புரை செய்யப் படுகின்றது. இருப்பினும் அதற்குமப்பால் சில விடயங்கள் உள்ளன. கிர்குக் எண்ணைக் கிணறுகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை நீண்ட காலமாக தீர்க்கப் படவில்லை. ஈராக்கில் பெருமளவு எண்ணை எடுக்கப் படும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.

இன்று வரைக்கும், ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் சுதந்திரத்திற்காக வாக்களித்தால், அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி? வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா? ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா? சுதந்திர குர்திஸ்தானை ஏனைய நாடுகள் அங்கீகரிக்குமா?

குர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், அது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய விடயம், ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதே. இரண்டொரு வருடங்களுக்கு முன்பிருந்த ஈராக் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தது. 

2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறி இருந்தது. குறிப்பாக, சுன்னி-முஸ்லிம் பிரிவை சேர்ந்த அரேபிய சமூகத்தவரின் "ஏக பிரதிநிதி" என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்., ஈராக்கில் ஒரு தனிநாட்டை உருவாக்கி வைத்திருந்தது.

ஐ.எஸ். முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பின்வாங்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த ஈராக் இராணுவம் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்தது. ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற ஈராக் இராணுவம், தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது. இதிலே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.

ஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளின் உதவியின்றி ஈராக் இராணுவம் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த துணைப்படைகள் ஈராக் அரசுக்கு கட்டுப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இலட்சிய வெறியுடன் போரிடுவார்கள். ஆகவே, குர்திஸ்தான் மீது படையெடுப்பு நடந்தால்,குர்தியர்கள் ஒரு பலமான எதிரியை சந்திக்க வேண்டி இருக்கும். அண்மைக்கால போரியல் அனுபவம் மிக்க ஈராக்கி இராணுவத்தை மட்டுமல்லாது, ஷியா துணைப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்களுக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்வது மட்டுமல்லாது, அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே ஈராக்கில் குர்திஸ்தான் தனிநாடானால், தமது நாட்டுக்குள்ளும் பிரச்சினை உண்டாகும் என்று அஞ்சுகின்றனர். அவற்றை விட "சர்வதேச சமூகம்" எனக் கருதப் படும் அமெரிக்காவும், பிரான்சும் கூட அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குர்திஸ்தானின் ஒரேயொரு நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் குர்திய படையணிகளுக்கு பயிற்சியளிப்பது இரகசியம் அல்ல. அது நீண்ட காலமாக நடக்கிறது. குர்திஸ்தான் தேசியவாதிகளும், குர்திஷ் மக்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுப் பேசுவதும் புதிய விடயம் அல்ல. 

"யூதர்களுக்கும், குர்தியருக்கும் பொது எதிரிகளாக அரேபியர் இருப்பதாக" அரசியல் பேசுவது சகஜமானது. குர்தியர்கள் மத்தியில் யூத மதத்தை பின்பற்றுவோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன தான் இருந்தாலும், இஸ்ரேலின் நட்புறவு குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு எந்தளவு உதவும் என்பது கேள்விக்குறி தான்.

அமெரிக்கா தனது வழமையான இரட்டை வேடத்தை இங்கும் அரங்கேற்றுகிறது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மாதிரி நடந்து கொள்கிறது. ஒரு பக்கம் குர்திஸ்தான் தேசியத்தை ஆதரிப்பது போன்று நடந்து கொள்ளும். அதே நேரம், ஈராக் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பதிலீடு செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்போது ஏற்பட்ட காலனிய குடியரசுகளின் எல்லைகளை மாற்ற விரும்பவில்லை. இதை அமெரிக்க அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ஈராக்- குர்திஸ்தான் தனி நாடானால், அங்கு சிறுபான்மை மொழி பேசும் இனங்களாக உள்ள அரேபியரும், துருக்கியரும் எதிர்காலம் குறித்து அச்சப் படுவது இயல்பு. அதே நேரம், மொழியால் குர்தியர் ஆனாலும் மதத்தால் மாறுபட்ட யேசிடி மக்களும் சுதந்திரத்திற்கு எதிராகவுள்ளனர். அனேகமாக பொது வாக்கெடுப்பில் விழும் எதிர் வாக்குகள் அவர்களுடையவையாக இருக்கும். குர்திஸ்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குர்தியர்களும் பொது வாக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆட்சியாளர்கள் தமது ஊழலை மறைப்பதற்காக தேசிய வெறியை தூண்டி விடுகிறார்கள் என்பதே.

ஏற்கனவே, குர்து மொழி பேசும் மக்களுக்குள் பல உள்ளக முரண்பாடுகள் உள்ளன. தேசியவாதப் போர்வை முரண்பாடுகளை மூடி மறைப்பதால், அவை வெளியே தெரிய வருவதில்லை. அங்கேயும் பிரதேசவாதம் இருக்கிறது. சமூகப் பிரிவுகள் உள்ளன. இனக்குழு அரசியலும் நடக்கிறது. குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, செல்வாக்கு மிக்க பர்சானி குலப் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது "இனத்தவருக்கு" மட்டும் பதவிகள் கொடுப்பதாக முறைப்பாடுகள் உள்ளன. 

இருபது வருடங்களுக்கு முன்னர், பர்சானி KDP என்ற இயக்கத்தின் தலைவர். அப்போது, KDP க்கும் அதற்கு அடுத்த பலமான இயக்கமான PUK க்கும் இடையில் சகோதர யுத்தம் நடந்தது. பின்னர் ஒரு மாதிரியாக சமரசம் செய்து கொண்ட பின்னர் தான், இன்றுள்ள குர்திஸ்தான் அரசு உருவானது. அப்போதும் இப்போதும் KDP இன் ஆதரவுத் தளம் பெரியது. குறிப்பாக, பழமைவாதிகள் அதை ஆதரிக்கிறார்கள். சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், பர்சானி சில விட்டுக் கொடுப்புகள் செய்து, ஈராக் அரசுடன் ஒத்துழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தேசியவாதிகளின் உணர்ச்சி அரசியல் காரணமாக, அங்கு யாரும் குர்திஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ முடியாத நிலைமை உள்ளது. ஹலாப்ஜா இனப்படுகொலையை சொல்லியே பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்டப் படுகின்றது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், 1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும் ஹலாப்ஜா படுகொலைகள் நினைவுகூரப் படுவதுண்டு. அன்று இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுகின்றது. ஆனால், பொது வாக்கெடுப்பின் முடிவில் குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாகும் என்பது நிச்சயமில்லை. சிலநேரம், பாக்தாத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதாகவும் அமையலாம்.

Thursday, September 21, 2017

யேசிடி : சாதியம் பேணும் "ஈராக்கின் இந்துக்கள்", அழிந்து வரும் புராதன மதம்!

ஆர்மேனியாவில் உள்ள யேசிடி ஆலயம்
ஈராக்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களுக்கு காலத்தால் முந்திய யேசிடி மதத்தை பின்பற்றும் மக்களைப் பற்றி, நீண்ட காலமாக உலகம் அறிந்திருக்கவில்லை. ஏன், மத்திய கிழக்கிலும், அந்த மக்களின் தேசமான ஈராக்கிலும் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 2014 ம் ஆண்டு, ஐ.எஸ். அல்லது ISIS என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து யேசிடிக்களை படுகொலை செய்த பின்னர் தான், உலகின் கவனம் அவர்கள் மேல் திரும்பியது.

யார் இந்த யேசிடிக்கள்?

வட ஈராக்கில் வாழும், குர்திய மொழி பேசும் இந்தோ - ஆரிய இன மக்கள். அவர்கள் பின்பற்றும் யேசிடி மதம் இஸ்லாத்திற்கு முந்தியது. அரேபியப் படையெடுப்புகள் காரணமாக, இன்றைய ஈராக் முழுவதும் இஸ்லாமிய மயமாகிய போதிலும், யேசிடி மக்கள் புராதன மத நம்பிக்கைகளை கைவிடவில்லை. பெரும்பாலான குர்தியர்கள் காலப்போக்கில் இஸ்லாமியராக மதம் மாறிய போதிலும், இவர்கள் மட்டும் தமது பழைய மதத்தை பின்பற்றினார்கள். 

உதாரணத்திற்கு இப்படி ஒன்றைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக, அல்லது இஸ்லாமியராக மாறி விட்ட பின்னர், சில ஆயிரம் பேர் மட்டும் இந்துக்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் ஈராக்கி - குர்திஸ்தானில் உள்ளது. இதுவே அண்மைக் காலத்தில் அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளின் அடித்தளமும் ஆகும்.

பொதுவாக, ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், யேசிடிகள் பற்றிய அறியாமை நிலவுகின்றது. அவர்கள் பேய், பிசாசை வழிபடுவதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. யேசிடி மதத்தில் பிசாசு, அல்லது சாத்தான் என்ற ஒன்று கிடையாது. அதை ஓரளவுக்கு இந்து மத நம்பிக்கையுடன் ஒப்பிடலாம். "இந்து" என்பது கூட, இந்தியாவில் இருந்த புராதன மதங்களுக்கான பொதுப் பெயர் தான். ஆகவே, யேசிடியையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

யேசிடிக்கள் தினந்தோறும் சூரிய வணக்கம் செய்ய வேண்டும். ஆகையினால், அவர்களை "ஒளியின் குழந்தைகள்" என்றும் அழைப்பார்கள். அதே நேரம், ஏழு அல்லது எட்டு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். மயில் தெய்வம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு புராணக் கதையும் உள்ளது. இறைவன் ஆதாம் என்ற முதல் மனிதனை படைத்து விட்டு, அனைத்து ஜீவராசிகளையும் வணங்குமாறு சொன்னாராம். ஆனால், மயில் மட்டும் மறுத்து விட்டதாம். அந்தக் கதை கூட பிற்காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதாவது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பரம்பலுக்கு எதிர்வினையாக உருவாகி இருக்கலாம். ஏனென்றால், "ஆதாமுக்கு அடிபணியாத மயில் தேவதைக் கதை" இன்றைக்கும் யேசிடிகளின் மதப் பெருமிதங்களில் ஒன்று.

ஆச்சரியப் படத் தக்கவாறு, யேசிடிக்கள் இன்று வரைக்கும் சாதியக் கட்டமைப்பை பேணி வருகின்றனர். இதுவும், அவர்களுக்கு இந்திய இந்துக்களுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. திகைக்காதீர்கள்! நான் சரியாகத் தான் எழுதி இருக்கிறேன். அது சாதி அமைப்பு தான். குறிப்பாக மூன்று வகையான பெரிய சாதிப் பிரிவுகள் உள்ளன. பூசாரிகள் சாதி. இந்தியாவில் பிராமணர்கள் மாதிரி, யேசிடிகள் மத்தியிலும் பூசாரிகள் சாதியில் பிறந்த ஒருவர் மட்டுமே கோயில் பூசாரி ஆகலாம். அதற்கு அடுத்த படியாக கோயில்களுக்கான பல்வேறு பணிவிடைகள் செய்வோர் தனியான சாதியாக உள்ளனர். மூன்றாவது சாதியாக உடல் உழைப்பாளிகள் உள்ளனர்.

சாதிகளுக்குள் உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் பிராமணர்களுக்கு இடையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்றெல்லாம் கோத்திரங்கள் இருப்பதைப் போன்றது. இவற்றை விட, வர்க்க வேறுபாடுகள் தனியானவை. அது எல்லா சாதிகளிலும் ஊடுருவி உள்ளது. வர்க்கப் பிரிவினையானது நவீன காலத்திற்கு உரியது என்பதால், ஒவ்வொரு சாதியிலும் இரண்டு வர்க்கங்கள் இருக்கலாம். 

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம்: திருமணம். யேசிடிகள் தத்தமது சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குள்ளும் குலம், கோத்திரம், வர்க்க வேறுபாடுகளை பார்ப்பதுண்டு. மேலும் ஒருவர் யேசிடி தாய், தந்தையருக்கு பிறப்பதால் மட்டுமே அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். யாரும் மதம் மாறி வர முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட தகவல்களை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அண்மைக் கால அசம்பாவிதங்கள், எவ்வாறு யேசிடி சமூகத்தை பாழ்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். மிகக் கடுமையான சமூக- மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றிய யேசிடிகள், யுத்த அனர்த்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டனர். அண்மைய யுத்தமானது தீராத வடுக்களை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தில் சமூக சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஈராக்கில் யேசிடிகளின் வாழ்விடமான சின்ஜார் மலைப் பிரதேசம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வடக்கே இஸ்லாமிய குர்தியர்கள், தெற்கே இஸ்லாமிய அரேபியர்கள். இரண்டுக்கும் நடுவில் தனித் தன்மை பேணும் யேசிடிக்கள். இது எவ்வளவு கடினமான விடயம் என்று சொல்லத் தேவையில்லை. யேசிடிகள் மொழி அடிப்படையில் குர்தியர்கள். ஆகையினால், குர்திஸ்தான் பாதுகாப்புப் படையான பெஷ்மேர்கா வீரர்கள் தமது பிரதேசத்தை காவல் காப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அதே நேரம், யேசிடி பிரதேசத்தில் கணிசமான அளவு அரேபியர்கள் வாழ்ந்தனர். அவர்களது வீடுகளும் அருகருகே இருந்தன. யேசிடிகளும், அரேபியரும் ஒரே பள்ளிக்கூடங்களில் படித்தார்கள். ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்தார்கள். மற்றைய சமூக வணிகர்களின் கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு சகோதர உணர்வுடன், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2014 ம் ஆண்டு நடந்த ஐ.எஸ். படையெடுப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

அப்போது ஐ.எஸ். இயக்கம் ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குர்திய பெஷ்மேர்கா காவல் காப்பதால், தமது பிரதேசத்திற்கு ஐ.எஸ். வர மாட்டாது என்று யேசிடி மக்கள் நம்பினார்கள். ஆனால், நடந்ததோ வேறு. ஒரு நாள் இரவோடு இரவாக ஐ.எஸ். போராளிகள் யேசிடி கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். காலையில் எழுந்து பார்த்தால், காவல் கடமையில் இருந்த பெஷ்மேர்கா வீரர்களை காணவில்லை. தமது சொந்த இனத்தவர்களே தமக்கு துரோகம் செய்து விட்டனர் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.

ஐ.எஸ்., யேசிடி கிராமங்கள், நகரங்களை கைப்பற்றியதும், சிலர் தற்காப்பு நடவடிக்கையாக தம்மிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டனர். இந்த சண்டைகள் நடந்து கொண்டிருந்த குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏராளமானோர் சின்ஜார் மலைகளின் மேல் ஓடித் தப்பினார்கள். அங்கு உணவு, தண்ணீர் இன்றி பலர் உயிரிழந்தனர். நாட்கணக்காக எந்தவொரு உதவியும் வரவில்லை. பழமைவாதிகளின் குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியில், சிரியாவில் இருந்த PKK/YPG குர்திய படையணிகள் வந்து தான் காப்பாற்றினார்கள். அவர்கள் ஒரு பாதை அமைத்து, அதன் வழியாக யேசிடி மக்களை சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈராக்கி குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஈராக்கி குர்திஸ்தான் அரசியல் தலைமையானது பழமைவாத- தேசியவாதிகளின் கைகளில் உள்ளது. ஆகவே, ஒரு  பிற்போக்கான- பழைமைவாத அரசாங்கம், "வேற்றினமாக நடத்தப்பட்ட" யேசிடிகளுக்கு உதவ மறுத்ததில் வியப்பில்லை.

சின்ஜார் மலையில் PKK/YPG போராளிகள்
ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையில் மத வெறுப்புணர்வும் இருந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய குர்தியர்கள் யேசிடி குர்தியர்களை வெறுத்தனர். குர்தியர்கள் என்றால் இஸ்லாமியர் மட்டுமே என்பதும், ஒரே மொழி பேசினாலும் யேசிடிகள் வேறு இனம் என்பது போலவும் நடந்து கொண்டனர். இது ஈழத்தில் தமிழர் - முஸ்லிம் வெறுப்புணர்வு போன்றது.

அதற்கு மாறாக, PKK/YPG இயக்கத்தினர், மதச்சார்பற்ற சோஷலிசவாதிகள். அதனால் தான் தக்க சமயத்தில் வந்து உதவினார்கள். (பார்க்க: அமெரிக்காவின் "மனிதாபிமான வான் தாக்குதல்" - அம்பலமாகும் பொய்கள் ) இன்றைக்கும் சின்ஜார் மலைப் பகுதி, PKK போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால், யேசிடிகளின் பிரதேசம், எதிர்கால அரசியல் உரிமை கோரல்களுக்கு காரணமாக வாய்ப்புண்டு.

ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளுடன் இருந்த திருமணமான பெண்களும் பண வசதி படைத்த ஐ.எஸ். முக்கியஸ்தர்களால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். அவர்கள் பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலையாட்களாகவும் கொடுமைப் படுத்தப் பட்டனர்.

அந்த வீடுகளில் இருந்த அரேபியப் பெண்களும் யேசிடி பெண்கள் மீது இரக்கப் படவில்லை. அவர்கள் உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல், இன்னும் அதிகமாக கொடுமைப் படுத்தினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமது கணவன் பாலியல் அடிமையை வைத்திருப்பதால் ஏற்பட்ட பொறாமை. இரண்டு, யேசிடிகள் மனிதர்களே அல்ல என்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வு. 

தற்போது யுத்தம் முடிந்து, ஐ.எஸ். வசம் இருந்த பிரதேசங்களை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. அதனால், ஆயிரக் கணக்கான யேசிடி பெண்களுக்கு விடுதலை கிடைத்தது. இருப்பினும் இன்னும் சிலர், குறைந்தது ஆயிரம் பேராவது, சிரியாவில் சுருங்கி வரும் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கலாம். சிலர் அடிமைகளாக சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாம்.

ஐ.எஸ். எதற்காக யேசிடிகளை அடிமைகளாக்கியது? அதற்கு அவர்கள் பின்பற்றிய கடும்போக்கு மதவாதம் முக்கியமான காரணம். ஒரு  இஸ்லாமிய தேசத்தினுள், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மட்டுமே சிறுபான்மை மதத்தவராக அங்கீகரிக்கப் படலாம். அதற்காக அவர்கள் ஒரு வரியை கட்டி வந்தால் போதும் என்று குரான் சொல்கிறது. ஆனால், யேசிடி போன்ற "குரானுக்கு அப்பாற்பட்ட மதத்தவர்களை" என்ன செய்வது என்று சொல்லப் படவில்லை. 

இது குறித்து ஐ.எஸ். தனது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டது. அவர்கள், இஸ்லாமிய மதம் தோன்றிய காலத்தில், புராதன மதங்களை பின்பற்றிய மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது, "அவர்கள் ஒன்றில் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும், அல்லது கொல்லப் படலாம், அடிமைகளாக விற்கப் படலாம்." 1500 வருடங்களுக்கு முந்திய அரேபியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, ஐ.எஸ். நவீன உலகத்தின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டியது.

தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ள யேசிடி பெண்கள், ஈராக்கி குர்திஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பலர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மறு திருமணம் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மிகவும் பழைமைவாத கட்டுப்பாடுகளை கொண்ட யேசிடி சமூகத்தில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.

ஏனெனில், சிறுவயது முதலே கற்பை வலியுறுத்தி வரும் சமூகம் அது. திருமணம் செய்யும் வரையில் ஒரு பெண் (ஆணும் தான்) கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் மணமுறிவு பெறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறான பழைமைவாத சமுதாயத்தில், ஐ.எஸ். கொடூரர்களால் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப் படுத்தப் பட்ட பெண்களை என்ன செய்வது?

இது தொடர்பாக உள்ளூரிலும், வெளிநாடுகளில் இருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டது. இறுதியில் தலைமை மதகுருவானவர் பாதிக்கப் பட்ட பெண்களை மீண்டும் மதத்தில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். அதற்காக புனித நீர் தெளித்து தூய்மைப் படுத்தும் சடங்கு நடைபெற்றது. இது அந்த மதத்தைப் பொறுத்தவரையில், ஒரு நவீன தோற்றப்பாடு எனலாம். ஏனெனில், வழமையாக வேறு மதத்திற்கு மாறியவர்களை கூட மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

ஒரு தடவை, 2007 ம் ஆண்டு, ஒரு பருவ வயது யேசிடி இளம்பெண், இஸ்லாமிய குர்திய இளைஞனுடன் காதல் வசப் பட்டு கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள். சில மாதங்களின் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரிந்து வந்துள்ளாள். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினரே மறுத்து விட்டனர். அவளது மைத்துனர்களால், பட்டப் பகலில், பலர் கூடிப் பார்த்திருக்க, கல்லால் அடித்து கௌரவக் கொலை செய்யப் பட்டாள்.

ஐ.எஸ். பிரதேசத்தில், பாலியல் அடிமைகளாக சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பெண்களில் சிலர், தாமாகவே முன்வந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்குக் காரணம், இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் அவர்கள் அடிமைகளாக நடத்தப் படவில்லை. சாதாரண "இஸ்லாமிய தேசப் பிரஜையாக" வாழ முடிந்தது. 

இருப்பினும், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு, தப்பியோட முனையக் கூடாது என்றும், அவர்களுக்கு பொறுப்பான முல்லா சுட்டிக்காட்டும் ஒருவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு இருந்தது. இன்று இஸ்லாமியராக மதம் மாறிய யேசிடி பெண்கள், திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சிலநேரம், அவர்களது பிள்ளைகளே "யேசிடிகள் பிசாசை வணங்குவோர்" என்று சொல்கின்றன.

யேசிடி சமூகத்தினரின் இன்னொரு பிரச்சினை, அது தற்போது விரைவாக அழிந்து கொண்டிருக்கும் மதமாக உள்ளது. கனடா உட்பட, பல மேற்கத்திய நாடுகள் ஆயிரக் கணக்கான யேசிடிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துச் சென்றுள்ளன. ஏற்கனவே, ஜெர்மனியில் மிகப்பெரியதொரு புலம்பெயர்ந்த யேசிடிகள் சமூகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து சென்று குடியேறியவர்கள். அண்மைக் காலம் வரையில் ஈராக்கில் மட்டுமே குறிப்பிடத் தக்க யேசிடி சமூகம் பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளது. சிரியா, துருக்கி, ஆர்மேனியா, ஜோர்ஜியாவில், இன்னமும் யேசிடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

யேசிடிகள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணம், அந்தப் பிரதேசத்தில் யாரையும் நம்ப முடியாது என்பது தான். "ஒரே மொழி பேசும்", "சொந்த இனமான" (இஸ்லாமிய) குர்தியர்களைக் கூட நம்பத் தயாராக இல்லை. பெஷ்மேர்கா வீரர்கள் காட்டிக் கொடுத்த துரோகம் காரணமாகத் தான், அவர்களது பிரதேசத்தை ஐ.எஸ். ஆக்கிரமிக்க முடிந்தது. அதே காலத்தில், இன்னொரு அதிர்ச்சியையும் சந்தித்தனர். 

நேற்று வரையில் சகோதரர்கள் போன்று பழகிய அயலவர்களான அரேபியர்கள், ஐ.எஸ். வந்தவுடன் அவர்களுக்கு பின்னால் திரிந்தார்கள். ஒரு சில அரேபியர்கள் பாதுகாப்பு வழங்கியதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையானோர் ஐ.எஸ்.க்கு காட்டிக் கொடுத்ததுடன், சொத்துக்களையும் சூறையாடினார்கள். அந்தப் பிரதேசத்தில், இனப் பிரச்சினை எந்தளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால், எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணரும் யேசிடிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதே பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புள்ள முன்னைய பதிவுகள்: