Showing posts with label பொருளாதார நெருக்கடி. Show all posts
Showing posts with label பொருளாதார நெருக்கடி. Show all posts

Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

Thursday, April 09, 2020

பட்டினியால் சூப்பர் மார்க்கெட் சூறையாடும் இத்தாலியர்கள்


இலங்கை, இந்தியாவில் வாழும் மக்களே! இன்று இத்தாலியில் எழுந்துள்ள சமூகப் பிரச்சினை நாளை உங்களுக்கும் வராது என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. நாளை கொரோனா தொற்று இல்லாமல் போனாலும், பொருளாதாரப் பிரச்சினை உங்களை விட்டு போகப் போவதில்லை. இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது. ஆனால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக நிலவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்த மக்களின் சேமிப்பில் இருந்த பணம் கரைந்து விட்டது. வேலையில்லாத காரணத்தால் வருமானமும் இல்லை.  வறுமை அதிகரிக்கிறது. 

குறிப்பாக தெற்கு இத்தாலியில் வாழும் பல குடும்பங்களிடம் அத்திவாசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட  கையில் பணம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். சிலர் தமது கஷ்டங்களை கூறும் வீடியோ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பெட்டிக் கடைகளில் பொருளை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்கின்றனர். பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் சூறையாடப் பட்டுள்ளன. ஒரு சமூகப் புரட்சிக்கான அறைகூவல்கள் கேட்கின்றன.

குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தெற்கு இத்தாலியில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையை நம்பியிருந்த சிறு வணிகர்களின் பொருளாதார செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. உள்ளூர் தொழிலதிபர்கள் அனைத்தையும் இழந்து இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பற்றிய அச்சம் அகன்று, நிலைமை வழமைக்கு திரும்பினாலும் அவர்களால் முன்னரைப் போன்று செயற்பட முடியாது. இதனால் சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் நிலவுகிறது.

இத்தாலி மக்களிடம் உணவு வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால், கடைகளில் சென்று பொருட்களை வாங்கி விட்டு காசில்லை என்று கையை விரிக்கிறார்கள். சிறிய பெட்டிக் கடைகளில் இலவசமாகக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். கடைக்காரர்களும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். இதனால் அவர்களும் கடைகளை மூடி விட்டுச் செல்கின்றனர்.

பெரிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. தள்ளுவண்டிகளில் பொருட்களை நிரப்பிக் கொண்டு, காசாளரிடம் பணம் கொடுக்காமல் ஓடி விடுகிறார்கள். கும்பலாக நுழைந்து சூறையாடுகிறார்கள். கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள். இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்னால் பொலிஸ் காவல் போட்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடி காலத்தில் அரசு இயங்குகிறது என்று காட்டுவதற்காக நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக் குழுவொன்று சூப்பர் மார்க்கெட்டுகளை சூறையாடுமாறு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தளத்தில் ஒரு புரட்சிக்கான அறைகூவல்களும் கேட்கின்றன. காவல்துறையினர் இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கிரிமினல்மயப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பட்டினி கிடக்கும் மக்கள் சூப்பர் மார்க்கெட் சூறையாடும் செயற்பாடுகளில் தன்னெழுச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கிகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்க பணமில்லை என்று கதறும் மக்களின் குரல்கள் கேட்கின்றன. அவர்களை அமைதிப் படுத்தும் பொலிசாரிடம் வீட்டுக்கு வந்து நிலைமையை நேரில் பார்க்குமாறு கூறுகின்றனர். சில இடங்களில் போலீஸ்காரர்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது சாப்பிடக் கொடுக்கிறார்கள். பல இடங்களில் பொலிசாரும் மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும், இன்று வரையில் கைகலப்புகள், வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை. இத்தாலியில் நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.

அனைத்து மக்களுக்கும் உணவிடும் அளவிற்கு அரசிடமும் பணம் இருப்பதாக தெரியவில்லை. இத்தாலி அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியை எதிர்பார்க்கிறது. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு நிதியுதவி வழங்குவதை தடுத்து வருகின்றன. இது சுகாதார நெருக்கடி என்றும், பொருளாதார நெருக்கடி அல்ல என்றும் சாட்டுக் கூறி வருகின்றன.

Lockdown எனப்படும் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்த பலருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. குறிப்பாக பதியாமல் களவாக வேலை செய்தவர்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு முன்னர், தெற்கு இத்தாலியில் நிறையப் பேர் பதிவில்லாமல் (சட்டவிரோதமாக) வேலை செய்து வந்தனர். அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளும் அரசுக்கு வரி கட்டாமல் ஏய்ப்பதற்காக அந்த நடைமுறையை பின்பற்றினார்கள். அதை விட சாதாரணமாக குறைந்த வருமானம் எடுத்து வந்தவர்களிடம் சேமிப்புப் இருக்கவில்லை. அப்படியானவர்கள் தற்போது கையில் பணம் இல்லாமல் உணவுக்கு வழியின்றி கஷ்டப் படுகிறார்கள். அரசு தலையிட்டு அவர்களுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளை வழங்கா விட்டால், விரைவில் இத்தாலியில் ஒரு மக்கள் எழுச்சியை எதிர்பார்க்கலாம். 



Sunday, February 17, 2019

"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை


தி இந்து தமிழ் பத்திரிகையில், "வாழும் போதே நரகமாகும் வெனிசுலா" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் பல உண்மைக்கு புறம்பான தகவல்களை கற்பனையாக புனைந்து எழுதி உள்ளார். அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன. இவற்றை தி இந்து போன்ற தரமான பத்திரிகைகள் கூட பிரசுரிப்பதன் மூலம் அவற்றின் நன்மதிப்பை குறைத்துக் கொள்கின்றன.

ஜெ.சரவணன்: //ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.//

எண்ணை வளம் மிக்க நாடுகள் எல்லாம் "பணம் கொழிக்கும் நாடு" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. வெனிசுவேலா மட்டுமல்ல, அங்கோலா, நைஜீரியா, இந்தோனேசியா, என்று பல எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இன்னமும் ஏழை நாடுகளாக இருக்கின்றன.

எண்ணெய் விற்பனையால் கிடைக்கும் வருமானம் ஒரு சில பணக்காரர்களின் பைகளை மட்டுமே நிரப்புகின்றது. பெரும்பான்மை மக்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி உள்ளதா? குறைந்த பட்சம், அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளையாவது பூர்த்தி செய்துள்ளதா? இதுவே நாம் கேட்க வேண்டிய கேள்வி.

ஒரு காலத்தில் வெனிசுவெலாவிலும் அந்த நிலைமை தான் இருந்தது. அதாவது, எண்ணை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் ஒரு சில பணக்காரக் குடும்பங்களின் சொத்துக்களாக முடங்கிக் கிடந்தது. பெரும்பான்மை மக்கள் எண்ணையால் எந்த நன்மையையும் கிட்டாதவர்களாக வறுமையில் வாடினார்கள். அதனால் தான், எண்ணெய் வருமானம் மக்களுக்கு கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸை பெரும்பான்மை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நேர்மையாக நிறைவேற்றினார். எண்ணெய் விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதி, அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டது. அப்போது தான் பிரச்சினை ஆரம்பமானது.

உண்மையில், வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதியானது. அதே நேரம், அந்தக் கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் அரச கஜானா நிரம்பியதால், சாவேசின் மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினத்திற்கும் இலகுவாக பணம் கிடைத்தது.

இதில் உள்ள ஆபத்துகளை உணராமல், சாவேஸ் உட்பட, வெனிசுவேலா ஆட்சியாளர்கள், அன்றைய பொருளாதார நிலைமையை குறைவாக மதிப்பிட்டமை தான் தவறு. பல தசாப்த காலமாக வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதியை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, ஒரு காலத்தில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் என்ன நடக்கும்? திடீரென வேறு வாடிக்கையாளரை பிடிக்க முடியுமா?

அதே மாதிரி, சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்தால் என்ன நடக்கும்? அதை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சி அடையாதா? இது தான் நடந்தது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு, எல்லாவற்றையும் சாவேஸ், மடூரோ தலையில் தூக்கிப் போடுவது ஒரு பக்கச் சார்பான அரசியல் பிரச்சாரம் அன்றி வேறென்ன?

//2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது.//

ஒரு சில பணக்காரர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருந்த எண்ணை வருமானத்தை கொண்டு, பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவினத்தை ஈடுகட்டும் அரசின் திட்டம் எப்படி "இருண்ட காலம்" ஆகும்? மக்களைப் பொறுத்தவரையில் அது தான் பொற்காலம். ஆனால், தமது பண வருவாய் குறைவதை பொறுக்க முடியாத பணக்காரர்களுக்கு மட்டுமே அது இருண்ட காலம்.

மேலும், "அனைத்தையும் அரசு மயமாக்கியதாக" குறிப்பிடுவது ஒரு தவறான தகவல். இன்று வரையில், வெனிசுவேலா பொருளாதாரத்தின் பெரும் பகுதி தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது. நாட்டிற்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தரும் பெற்றோலிய நிறுவனம் சாவேஸ் காலத்திலேயே அரசு மயமாக்கப் பட்டது. அதைக் கூட செய்யா விட்டால், பெட்ரோல் முதலாளிகள் எப்போதோ வெனிசுவேலா பொருளாதாரத்தை முடக்கி இருப்பார்கள். அவர்கள் தக்க தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

//உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ் திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.//

இந்தக் கட்டுரையாளர், எது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று அழுகிறார்? எத்தனயோ நட்டத்தில் இயங்கிய தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள். அதற்கு அரசும் ஊக்கமளித்தது. இது ஜனநாயகம் இல்லையா?

தனியார் வீட்டுமனை நிறுவனங்கள் வாடகைக்கு விடும் வீடுகளில், குடியிருப்பாளர்கள் மாதக் கணக்காக வாடகை கட்டா விட்டாலும், அவர்களை வெளியேற்றி தெருவில் விட முடியாது. இந்தச் சட்டம் சாவேஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்டது. இது ஜனநாயகம் இல்லையா?

அது சரி, உலகில் எந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன? எந்த நிறுவனத்தில் ஒரு நிர்வாகி அல்லது மானேஜர்கள், ஊழியர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஆனால், வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு கையகப் படுத்திய நிறுவனங்கள் யாவற்றிலும் ஜனநாயக ரீதியான பொது வாக்கெடுப்பு நடந்துள்ளது.

உற்பத்தி நிறுவனங்கள், உணவு உற்பத்தி எல்லாம் இன்றைக்கும் தனியாரிடம் தான் உள்ளன. அதனால் தான், தனியார் துறை முதலாளிகள் உற்பத்தியை குறைத்தும், பொருட்களைப் பதுக்கியும் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க முடிந்தது. இது தனியார் துறையினர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய பொருளாதார நெருக்கடி.

தி ஹிந்து கட்டுரையாளர் குறிப்பிட்ட மாதிரி, சாவேஸ் அனைத்தையும் அரசு மயமாக்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அதைச் செய்யாமல் விட்டது தான் தவறு. எல்லோருக்கும், குறிப்பாக உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தி படைத்த தனியார் துறையினருக்கு சுதந்திரம் கொடுத்ததன் பலனை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கின்றன. ஒரு சிலவற்றை இராணுவ அதிகாரிகள் நிர்வகிப்பதும் உண்மை தான். ஆனால், வெனிசுவேலாவின் மொத்த பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிட்டால் அந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. பத்து சதவீதம் கூட இருக்காது.

//அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.//

இது ஓர் உண்மைக்குப் புறம்பான கூற்று. வெனிசுவேலா நாட்டில் இன்று வரைக்கும் அந்நிய நிறுவனங்கள் முதலிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிரச்சினை அதுவல்ல. பணவீக்கம் அதிகரிப்பதாலும், நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு வர்த்தகம் செய்வதற்கு தயங்குகின்றன. இருப்பினும் தவித்த முயல் அடிப்பது போன்று, இந்த நேரத்திலும் முதலிடும் காரியவாதிகள் இருக்கிறார்கள். அண்மையில் நெதர்லாந்தில் இருந்து சென்ற இளம் வணிகர் ஒருவர், அங்கு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, மிகக் குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு காலத்தில் நிலைமை சீரடைந்தால் அவற்றை நல்ல விலைக்கு விற்று விடுவது தான் திட்டம். (de Volkskrant, 30.01.2019)

தனியார் துறைக்கு சுதந்திரம் இருந்தாலும், வெளிநாட்டு மூலதனத்தை தாராளமாக அனுமதித்தாலும், தேசப் பாதுகாப்பு அல்லது பொது மக்களின் நன்மை கருதி சில அத்தியாவசிய துறைகளில் முதலிட அனுமதிக்கப் படுவதில்லை. உதாரணத்திற்கு, பெற்றோலிய நிறுவனம், துறைமுகம், விமானநிலையம் போன்ற துறைகளில் தனியார் முதலீடு அனுமதிக்கப் படுவதில்லை. மற்றும் படி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலிடலாம், வணிகம் செய்யலாம். 

அதிகம் பேசுவானேன். எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு எங்கிருந்து கிடைக்கிறது? தனியார் நிறுவனங்கள் நூறு சதவீத ஆதரவு வழங்குகின்றன. ஊடகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள் தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும் தடைசெய்யப் படவில்லை. சுதந்திரமாக இயங்க விடப் பட்டுள்ளன.

//வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.// 

பல வருட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதியாக அங்கீகரித்ததுடன் நில்லாது, எண்ணை வாங்கியதற்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் தர மாட்டேன் என அடம் பிடித்தது. அத்துடன் நில்லாது அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலா நாட்டின் அந்நிய செலாவணியும் பறிமுதல் செய்யப் பட்டது. பிரித்தானியாவில், Bank of England இல் வெனிசுவேலா வைத்திருந்த பில்லியன் டாலர் பெறுமதியான தங்கத்தை திருப்பித் தர முடியாது என்று அறிவித்தது.

நீங்கள் உங்களிடமிருந்த பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைக்க, அவர் அதையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணுவது அநீதி இல்லையா? இந்த அடாவடித்தனங்களை கண்டிக்காமல், "வெனிசுவேலாவின் கையில் இருப்பது வெறும் பத்து பில்லியன் டாலர்" என்று நையாண்டி செய்வது நியாயமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது இந்தக் கட்டுரையாளரின் வன்மம் நிறைந்த எழுத்துக்கள்.

//நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.//

ஐயா! அவர்கள் பொருளாதார அகதிகள். பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாட்டில் யுத்தம் நடந்தால் மட்டும் தான் அகதிகள் வெளியேற வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவும் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லலாம். அதிகம் பேசுவானேன். இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாடுகளில் இருந்து வந்தவர்களையும், "பொருளாதார அகதிகள்" என்று தான் மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள்.

வெனிசுவேலாவில் ஏன் பொருளாதார நெருக்கடி வந்தது? சாவேஸ் கொண்டு வந்த சோஷலிச திட்டங்கள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை அடியொற்றி கொண்டு வரப் பட்டன! அதாவது, மேற்கு ஐரோப்பாவில் தனியார் துறை இயங்குவதற்கு தாராளமாக அனுமதிக்கிறார்கள். அதே நேரம், அரசுக்கு கிடைக்கும் வரிப் பணம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் படுகின்றது. அது வீட்டு வாடகை செலவை ஈடுகட்டுதல், உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்று பல வகைப் படும். அதே திட்டங்களை தான் வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு நடைமுறைப் படுத்தியது. அது தான் இங்கே பிரச்சினை.

தனியார் நிறுவனங்கள் வீட்டு வாடகையை உயர்த்த விடாமல் அரசு சட்டம் போட்டு தடுத்தது. அதனால், புதிய வீடுகள் கட்டப் படுவது நின்று விட்டன. குழந்தைகளுக்கான பால்மா போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் கொடுத்தது. அதனால், உணவு உற்பத்தியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்தன. இதற்குள் கடத்தல்காரர்களும் புகுந்து தமது கைவரிசையை காட்டினார்கள். வெனிசுவேலாவில் அரசு மானிய உதவியால் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பால்மா, அயல் நாடான கொலம்பியாவில் அதிக விலைக்கு விற்கப் பட்டது. இது ஓர் உதாரணம் மட்டுமே.

அதன் விளைவு தான் லட்சக்கணக்கானோரின் வெளியேற்றம். தனியார் துறையினரின் திட்டமிட்ட புறக்கணிப்பால், நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக, பிரதானமான ஏற்றுமதிப் பொருளான பெற்றோல் விற்பனையும் வீழ்ச்சி கண்டது. ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்க இவ்வளவும் போதாதா?

ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் முழுவதும் ஒரு மனதாக அரசை ஆதரித்தார்கள். இன்று அவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இருப்பினும், மடூரோ அரசு அம்மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்று கூற முடியாது. இன்றைக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அரச எதிர்ப்பாளர்களாக உள்ளனர். இது ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரின் உளவியல். அது ஒரு வகை சுயநல அரசியல். அவர்கள் தமது சொந்த நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

//குற்றங்கள் அதிகரிக்கின்றன. திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்துவருகின்றனர்.//

ஐயா, பெரியவரே! லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகளவு குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதினம் அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதிகளவு குற்றங்கள் நடப்பதால் தலைநகர் கராகஸ் ஒரு பாதுகாப்பற்ற தலைநகரம் என்ற கெட்ட பெயரைப் பெற்றிருந்தது. அயல்நாடான கொலம்பியாவில் குற்றங்கள், திருடர்கள், தீவிரவாதிகள் மட்டுமல்லாது உலகளவில் போதைவஸ்து கடத்தும் மாபியா கும்பல்களாலும் பாதிக்கப் பட்டுள்ளது. அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா?

//அதிபர் சாவேஸ் மறைந்த பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். அவர் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். கிட்டதட்ட வெனிசுலாவை மீட்பது என்பது, மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். ஆனால், தீவிர இடதுசாரி எனத் தன்னை முன்னிறுத்தும் மதுரோ ஆறு ஆண்டுகளாகியும் வெனிசுலாவை மீட்க எந்த முயற்சியையும் செய்யவில்லை.//

மடூரோ அதிபரான காலத்தில் தான், சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்திருந்தது. அத்துடன், பெருமளவு எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறின. தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.

முன்பு சாவேஸ், பின்னர் மடூரோ ஆகியோர் தம்மை "தீவிர இடதுசாரிகள்" என்று அறிவித்துக் கொண்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திருந்தனர். அந்நிய மூலதனத்தையும் தடுக்கவில்லை. இது ஒரு காலத்தில் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. "எந்த முயற்சியும் செய்யவில்லை." ஆம், பொருளாதாரத்தில் தனியார் துறையினரின் ஆதிக்கத்தை குறைத்து, நிறுவனங்களை அரசுமயமாக்கவில்லை. இது தவறு தான்.

//எதிர்கட்சிகள் இவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றன. மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.// 

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காலத்தில் நடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதனால் ஜனாதிபதி மடூரோ கொண்டு வந்த பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முடக்கி உள்ளனர். மேலும், அண்மையில் தான், கடந்த இரண்டு வருடங்களுக்குள் பொதுத் தேர்தல் நடந்தது. மடூரோ கூட கடும் போட்டிக்கு பின்னர் தான் ஜனாதிபதியாக தெரிவானார். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திற்குள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தக் கோருவது ஜனநாயக விரோதம் அல்லவா?

"மக்கள் புரட்சியில் ஈடுபடுகின்றனர்" என்று, இந்தக் கட்டுரையாளர் எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றார்? எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு சேரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்தா? இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அல்லது தமிழகத்தில் திமுக கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சேரும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்து, "இந்திய மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்." என்று கூற முடியுமா?

//அதிபர் மதுரோ இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார். வெனிசுலாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக்கறையோடுதான் வெளியே வருவார் என்கிறார்.//

ஐயனே! அமெரிக்கா வெனிசுவேலா மீது படையெடுக்கக் காத்திருப்பது தான் இன்றைய பிரச்சினை. உள்விவகாரங்களில் தலையிடுவது காலங்காலமாக நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டுவதை சாதாரணமான விடயமாக கடந்து போக முடியாது. அமெரிக்க இராணுவம் படையெடுத்து வந்தால், வெனிசுவேலா இராணுவம் புளியம்பழம் பறித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தகுந்த பதிலடி கொடுக்க வேண்டாமா?

//ரஷ்யாவும், சீனாவும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டுகின்றன. ஆனால், உண்மையில் வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.//

அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னர் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் எண்ணெய் விற்பதற்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ஆமாம், இந்தியாவும் தான்! அமெரிக்க பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்தியா வெனிசுவேலா எண்ணையை வாங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு எண்ணை விநியோகம் செய்யும் நாடுகளில் வெனிசுவேலா மூன்றாம் இடத்தில் உள்ளது.

ரஷ்யாவுடனான உறவு வித்தியாசமானது. ரஷ்யாவின் பன்னாட்டு எண்ணை நிறுவனமான Rosneft, வெனிசுவேலாவின் பல்வேறு அந்நிய கடன்களை அடைப்பதற்கு பணம் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக அரச எண்ணை நிறுவனமான PDVSA, ரஷ்யாவுக்கு, அதாவது Rosneft கம்பனிக்கு எண்ணெய் விற்க வேண்டும். இதுவும் நவகாலனித்துவம் தான். ஆனால், இன்றைய நிலையில், வெனிசுவேலாவுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

//வெனிசுலாவின் இன்றைய நிலை என்பது எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியதுதான். இன்றைய பணமய பொருளாதாரத்தில் போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.//

கட்டுரையாளரே! நீங்கள் குறிப்பிடும் "பணமய பொருளாதாரம்" என்பதன் உண்மையான பெயர் நவ- லிபரலிச பொருளாதாரம். "போட்டி நாடுகள்" என்பதன் அர்த்தம் (மேற்கத்திய) ஏகாதிபத்திய நாடுகள். இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு எப்படி எல்லாம் மாய்மாலம் செய்கிறீர்கள்?

//இந்தியாவில் தற்போது நுகர்வு என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். இதனால் வேகமான பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.//

இதை நுகர்பொருள் கலாச்சாரம் என்று சொல்வார்கள். இன்றைய நவ- லிபரலிச முதலாளித்துவ அமைப்பு அதன் மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல. உலகம் முழுவதும், ஏன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட ஏற்கனவே பல தசாப்த காலமாக நடைமுறையில் உள்ளது. இதை இன்னொரு விதமாக கிரெடிட் கார்ட் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம். மக்கள் நுகர்வோர்களாக மட்டுமல்லாது, நிரந்தரக் கடன்காரர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இந்தக் கடன்களில் தான் பொருளாதாரம் வளர்கிறது.

//இந்தியா - வெனிசுலா: இந்தியா, தனியார் மய கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. இது நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். இதனால் நாட்டின் வளங்கள் மீதும், மக்களின் மீதும் பெரும் சுரண்டலை நிகழ்த்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் எப்போது எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு கடையை காலி செய்வார்கள் என்று தெரியாது. அப்போது இந்தியாவின் கஜானா காலியாவதும் உறுதி.//

தனியார்மயத்தை தீவிரப் படுத்தும் பொழுதே இந்தியாவின் கஜானா காலியாகி விடும். ஏனெனில், அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை தவிர்ந்த அனைத்தையும் தனியார்மயமாக்குவது தான் நியோ லிபரலிச சித்தாந்தம். அதைத்தான் இந்தியாவுக்கு கடன் கொடுக்கும் நாடுகள், IMF, உலகவங்கி என்பன வலியுறுத்துகின்றன. அத்துடன் வரிகளையும் குறைக்குமாறு வற்புறுத்துகின்றன. 

உதாரணத்திற்கு, இந்தியாவில் முதலிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டப்படி மிகக்குறைந்த வரி கட்டுகின்றன. (அதைக் கூட ஒழுங்காக கட்டுவதில்லை.) இந்திய அரசு அந்த வரித் தொகையை கூட்டுவதற்கு தயங்குகிறது. அப்படி செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வராமல் வேறு நாடுகளை தேடி ஓடி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அப்படியானால் எப்படி இந்திய கஜானா நிரம்பும்?

மேற்கு ஐரோப்பாவில் கார்ப்பரேட் வரித் தொகை மிக அதிகம். அதனால் தான் அந்த நாடுகளில் கஜானா நிரம்புகிறது. அரசு அந்தப் பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றது. வெனிசுவேலாவும் அதைத் தான் பின்பற்ற விரும்பியது. மேற்கு ஐரோப்பிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், நடந்தது என்ன? 

அமெரிக்கப் பொருளாதார தடை. தனியார் துறையினரின் பதுக்கல்கள், உற்பத்திக் குறைப்புகள். அதனால் எழுந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு. அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வெளியேற்றம்....

இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள், வெனிசுவேலாவின் உதாரணத்தை பின்பற்றி தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கனவு கூடக் காணக் கூடாது. மீறினால் வெனிசுவேலா நிலைமை தான் உங்களுக்கும் உண்டாகும். இது அந் நாடுகளுக்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை.

Wednesday, July 08, 2015

கிரேக்க கடன் நெருக்கடி பற்றி ஒரு வலதுசாரியின் பிதற்றல்கள்

கிரீஸ் நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழிருந்த காலத்தில்... 

கிரேக்க நிலவரம் தொடர்பாக, ஏன் இன்னும் எந்தவொரு வலதுசாரியும் எதிர்வினையாற்றவில்லை என்று பலர் நினைத்திருக்கலாம். தமிழ் பேசும் வலதுசாரிகளில் முக்கிய பிரமுகரான பத்ரி சேஷாஸ்திரி, தனக்குப் பிடித்த கட்டுரை ஒன்றை எங்கேயோ தேடி எடுத்துப் போட்டிருக்கிறார்.

நமது தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற காலனிய எஜமான்களின் நாடுகளை விட்டால், ஏனைய நாடுகளைப் பற்றிய அறிவு பூஜ்ஜியமாக இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை கூட, கிரீஸ் பற்றிய தகவல் எதுவும் தமிழ் ஊடகங்களில் இடம்பெறுவதில்லை. 

கிரேக்க நாட்டில், எண்பதுகள் வரையில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இராணுவ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், மக்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் மேற்கத்திய ஊடகங்களிலேயே இருட்டடிப்பு செய்யப்பட்டன. தமிழ் ஊடகங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த விடயங்களை எல்லாம், நானும் ஐரோப்பா வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளில், வெள்ளையும், சொள்ளையுமாக இருப்பவர்கள், பொய் பேசாத அரிச்சந்திரர்கள் என்று தான் தமிழ் வலதுசாரிகள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான், ஊடகவியலாளர் என்ற பெயரில், ஜெர்மன் அரசுக்கு ஆதரவான ஒருவர் எழுதிய அரசியல் பிரச்சாரக் கட்டுரையை பத்ரி சேஷாஸ்திரி எம்முடன் பகிர்ந்திருக்கிறார்.







"Germany Deserved Debt Relief, Greece Doesn't" (http://www.bloombergview.com/articles/2015-01-27/germany-deserved-debt-relief-greece-doesn-t-i5fdca2y) என்ற அந்தக் கட்டுரை, இது வரையில் நான் வாசித்த மகா மொக்கையான பதிவு. Leonid Bershidsky என்ற அதன் எழுத்தாளர், தனது ஒரு பக்கச் சார்பான அரசியலை நிறுவுவதற்காக முட்டாள்தனமான வாதங்களை அடுக்குகிறார்.

"இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கடன்களை தள்ளுபடி செய்தது மாதிரி, தற்போது கிரீஸ் பட்ட கடன்களை தள்ளுபடி செய்தால் என்ன?" என்று கிரேக்க அரசு முன்வைத்த வாதத்தில் இருந்து தொடங்குகிறார். அவரைப் பொறுத்தவரையில், அப்படி ஓர் ஒப்பீட்டை செய்வதே அபத்தமானது என்கிறார். ஏன் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் சிரிப்பை வரவழைக்கின்றன.

"ஜெர்மனி பட்ட கடன்கள் முதலாம் உலகப்போர் முடிந்த காலத்தில் கட்டியிருக்க வேண்டியவை. அதனால் தான் நாஸிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அந்தக் கடன்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும் கட்டி முடிக்கவில்லை. போருக்கு முன்னர் இருந்த நாணய மதிப்புகள் சீர்குலைந்திருந்தன. அதனால் கடன்களின் மதிப்பை கணக்கெடுக்க முடியவில்லை."

இவை அந்த எழுத்தாளர் முன்வைக்கும் வாதங்கள். அவை எவ்வளவு முட்டாள்தனமானவை என்பது ஓரளவு வரலாறு, பொருளாதாரம் பற்றிய அறிவுள்ளவர்களுக்கு தெரியும். முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் கடன்கள் இமய மலை அளவு அதிகரித்திருந்தமையும், அதன் விளைவாக நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றியதும் உண்மை தான். ஆனால், இந்த எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை முற்றாக மறந்து அல்லது மறைத்து விடுகிறார். நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் எப்படி இருந்தது?

நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருந்தது. முழு ஐரோப்பாக் கண்டத்திலும் முன்னேறிய தொழிற்துறை வளர்ச்சி கண்டிருந்தது. நாஸிகள் ஆட்சிக்கு வந்தவுடனே, அமெரிக்கா தனது முந்திய கடன்களை தள்ளுபடி செய்து விட்டிருந்தது. பிரிட்டன் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவை ஜெர்மனியின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அன்றைய நிலவரம் அப்படி இருக்கையில், ஜெர்மனி முதலாம் உலகப்போர் காலத்தில் கட்டியிருக்க வேண்டிய கடன்களை, இரண்டாம் உலகப்போர் வரைக்கும் இழுத்துச் சென்றது என்பது அறியாமை.

இவர் கூறும் அடுத்த அபத்தம், நாணயங்களின் பெறுமதி குறைந்தது காரணமாக, போருக்கு முந்திய கடன்களின் மதிப்பை யாராலும் கணக்கிட முடியவில்லையாம். அன்றைய ஐரோப்பாவில், ஒவ்வொரு நாட்டினதும் நாணய மதிப்பு, போருக்கு முன்னரும், பின்னரும் எப்படி இருந்தது என்பதை வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது ஒன்றும் பெரிய ராக்கட் தொழில்நுட்பம் அல்ல. கறுப்புச் சந்தையில் விசாரித்தால் பணத்தின் உண்மையான மதிப்புத் தெரியும்.

இந்த வலதுசாரி எழுத்தாளர், இன்னொரு "நியாயமான" வாதத்தையும் வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மிக மோசமான அழிவுகளை சந்தித்திருந்தது. அதனால் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து, நாட்டைக் கட்டியெழுப்ப கடன் தள்ளுபடி செய்தல் அவசியமானது என்கிறார். அப்பப்பா! என்னே மனிதநேயம்! நினைத்தால் புல்லரிக்கிறது. ஜெர்மனி பேரழிவை சந்தித்தது உண்மை தான். ஆனால், இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டது ஜெர்மனி மட்டுமல்லவே? சோவியத் யூனியனின் மேற்குப் பகுதிகளில் ஜெர்மன் படைகள் ஏற்படுத்திய அழிவுகள் அதை விட பல மடங்கு அதிகம். அதற்கெல்லாம் எவனிடம் போய் நஷ்டஈடு கேட்பதாம்?

இரண்டாம் உலகப்போரில் கிரீஸ் கூட, ஜெர்மன் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டதும், அவை அங்கே விமானக் குண்டுகளை வீசி பெரும் நாசம் விளைவித்திருந்ததும் வரலாறு. கிரீஸ் நாட்டில் பண்டைய காலத்து நாகரிகங்களின் அழிபாடுகள் மட்டுமே இருக்கின்றன என்று இந்த எழுத்தாளர் கிண்டல் அடிக்கிறார். 

இந்த சிறுபிள்ளைத்தனமான உளறலைக் கேட்டு சிரிப்பு வரவில்லை. அருவருப்பு தான் வருகின்றது. அன்று கிரீஸ், நாஸிகளால் தனக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு, ஜெர்மனியிடம் நஷ்டஈடு கோராதது மட்டுமல்ல, தனக்கு கொடுக்க வேண்டிய கடன்களைக் கூட தள்ளுபடி செய்த பெருந்தன்மையை மெச்ச வேண்டும்.

கிரீஸ் போன்ற நட்பு நாடுகளின் பெருந்தன்மை காரணமாகத் தான், ஐரோப்பாவின் வளர்ச்சி அடைந்த நாடாக மாறியது. அதை இந்தக் கட்டுரையாளரே ஏற்றுக் கொள்கிறார். கிரேக்கம் அன்று செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக, இன்று கஷ்டப்படும் தனது நண்பனுக்கு ஜெர்மனி உதவி செய்தால் என்ன குறைந்து விடும்? 

செய்நன்றி மறப்பது தான் ஜெர்மனியின் கொள்கை என்றால், அதைவிட அயோக்கியத்தனம் உலகில் வேறு இருக்க முடியாது. கட்டுரையாளர் திரிப்பது போல, இது "வெறும் ஒப்பீடு" அல்ல. நன்றி கெட்ட ஜெர்மனியின் சுயநலத்தை தோலுரித்துக் காட்டும் யதார்த்தம்.

"போரில் அழிவை சந்தித்த நாட்டின் கடன்களை தள்ளுபடி செய்வது முறையானது." ஒரு பேச்சுக்கு, அப்படியே வைத்துக் கொள்வோம். கடந்த பல தசாப்த காலங்களாக, உலகில் எத்தனை நாடுகளில் பேரழிவைத் தந்த போர்கள் நடந்துள்ளன? உதாரணத்திற்கு, முன்னாள் பிரெஞ்சுக் காலனியான இந்தோசீனாவில் அமெரிக்கா ஏற்படுத்திய அழிவுகள் எத்தனை? 

இரண்டாம் உலகப்போர் முழுவதும் போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கையை விட, மூன்று மடங்கு அதிகமான குண்டுகள் அங்கே போடப்பட்டதாக சொல்லப் படுகின்றது. அத்தனை அழிவுகளுக்குப் பின்னர் சுதந்திரம் அடைந்த, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய மூன்று நாடுகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டனவா?

இவரது இன்னொரு நகைச்சுவை, ஜெர்மனி இரண்டாகப் பிரிந்தது பற்றியது. கிழக்கு ஜெர்மன் பகுதிகளை சோவியத் இராணுவம் ஆக்கிரமித்த படியால், அங்கிருந்து "பத்து மில்லியன்" அகதிகள் மேற்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரினார்களாம். அதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலம் காரணமாக, மேற்கு ஜெர்மன் அரசு அவர்களையும் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாம். 

இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகியிருக்கும் என்று எம்மையெல்லாம் பரிதாபப்பட வைக்கிறார். இவரது கணக்குப் படி, கிழக்கு ஜெர்மனியில் இருந்து, ஏறக்குறைய அத்தனை மக்களும், ஒருவர் விடாமல் மேற்கு ஜெர்மனிக்குள் ஓடி விட்டார்கள். பெர்லின் மதில் கட்டப்படும் வரையிலும், அந்த நகரத்தில் இரண்டு பக்கமும் மக்களின் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது என்பதை அவர் படிக்கவில்லை போலும்.

கிரீஸின் கடன் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதையும் அவரே கண்டுபிடித்து சொல்லி விடுகிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க பொருளாதார நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்து கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன காரணங்கள் தான். நமது தமிழ் வலதுசாரிகள் அதை தமது சட்டைப் பைக்குள் எப்போதும் கொண்டு திரிவார்கள். வேறென்ன? இந்தப் பாழாப் போன "சோஷலிசம்" தான் காரணம்! "கிரீஸ் என்றைக்கு சோஷலிச நாடாக இருந்தது?" என்று யாரும் குறுக்குக் கேள்வி கேட்டு விடக் கூடாது.

உலகில் எந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை வந்தாலும், அதற்கு அடிப்படைக் காரணம் "சோஷலிசமாகத் தானிருக்கும்"! வலதுசாரிகளின் "கண்டுபிடிப்பு" எப்போதும் அப்படித் தானிருக்கும். ஒரு அரசாங்கம், சாதாரண மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு என்ன செய்தாலும் அது "சோஷலிசம்" தான்! அரசு தனது செலவில், பொது மக்களுக்கான கழிப்பறை கட்டிக் கொடுக்கிறதா? அதுவும் "சோஷலிசம்" தான்! "கண்ட கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதற்கும் என்ன பெயர்? திறந்த சந்தைப் பொருளாதாரமா?" என்று கேட்டு விடாதீர்கள். வலதுசாரிகளுக்கு பிடிக்காது.

கட்டுரைக்கு வருவோம். 1974 ம் ஆண்டு, "இராணுவ சர்வாதிகார ஆட்சி" முடிந்த பின்னர்... என்று ஆரம்பிக்கிறார். அடடே.... இராணுவ சர்வாதிகாரிகள் வலதுசாரிகளின் கூட்டாளிகள் போலிருக்கிறது. அதனால் தான் "இராணுவ ஆட்சியின் முடிவின் பின்னர்..." பார்க்கச் சொல்கிறார். 

அதற்குப் பின்னர் வந்த ஜனநாயக அரசு, பெருந்தொகை ஓய்வூதியம், அனைவருக்கும் மருத்துவ வசதி, அரசு வேலை வாய்ப்பு, என்று அரசு கஜானாவை காலியாக்கி, பொருளாதாரத்தை பாழ் படுத்தி விட்டதாம். ம்ம்ம்...அப்புறம்... பயணிகளில் இல்லாமல் ஓடிய ரயில்களில் வேலை செய்த ஊழியர்கள் அதிகமாம். இதைத் தானே நமது இந்திய வலதுசாரிகளும் "நேரு சோஷலிசம்" என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்?

வலதுசாரி "அறிவாளிகளே"! ஒரு பேச்சுக்கு, நீங்கள் சொல்வது போன்று "சோஷலிசம்" தான் கிரேக்க பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த வரையில், கிரேக்க வயோதிபர்களின் ஓய்வூதியம், என்றைக்குமே ஜெர்மனியில் இன்றிருப்பதை விட அதிகமாக இருந்ததில்லை. பிரிட்டனிலும் அனைவருக்கும் அரசு செலவில் மருத்துவ வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில், பொருளாதாரத்தில் அரசுத் துறை நிறுவனங்களின் பங்கு, கிரீஸில் இருப்பதை விட மிகவும் அதிகம்.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், இன்றைக்கும் அமுல்படுத்தப்படும் "சோஷலிசத்" திட்டங்களை, கிரீசுடன் ஒப்பிடவே முடியாது. அந்த நாடுகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள் பலவற்றை, கிரீசில் உள்ளவர்கள் கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். வலதுசாரி ஆய்வாளர்களின் கணிப்பு சரியாக இருக்குமானால், "சோஷலிச" ஸ்கண்டிநேவிய நாடுகள் தான் முதலில் பொருளாதார வீழ்ச்சி கண்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே?

இப்படியான மொக்கையான கட்டுரைகளுக்கும், முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதில் கூறிக் கொண்டிருப்பதே நேர விரயம். ஆனால், பாவம் வலதுசாரிகள்! காலங்காலமாக மக்களை ஏமாற்றியவர்கள், இப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் கூறத் தெரியாமல் முழிக்கிறார்கள். அதனால், நாளைக்கு தமது இருப்பிற்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தில் ஏதோதோ உளறிக் கொட்டுகிறார்கள். 

பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் இடதுசாரி சீரிசா அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதைக் கண்டு மருண்டு போயுள்ள கிரேக்க மேட்டுக்குடி வர்க்கம், விரைவில் கிரேக்கம் சோவியத் யூனியனாகி விடும் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அதே மாதிரித் தான், நமது வலதுசாரிகளின் பிரபல அரசியல் ஆய்வாளரும் கூறுகின்றார்:  "ஆளும் இடதுசாரிக் கட்சியான சீரிசா தலைமையில், கிரீஸ் கிழக்கு ஜெர்மனி போன்று சோஷலிச நாடாகப் போகின்றது..." என்று இந்த எழுத்தாளர் எம்மை எல்லாம் பயமுறுத்துகிறார். "கிரீஸ் நாட்டில், கம்யூனிச டைனோசர் உயிர் பெற்று வருகின்றது." பால்குடிக் குழந்தைகள் நாங்கள் எல்லாம், அதைக் கேட்டு அப்படியே பயந்து விட்டோம். 


கட்டுரையை வாசிப்பதற்கு:
Germany Deserved Debt Relief, Greece Doesn't 
http://www.bloombergview.com/articles/2015-01-27/germany-deserved-debt-relief-greece-doesn-t-i5fdca2y

Saturday, June 06, 2015

கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்


மிலேச்சத்தனமான முதலாளித்துவ சர்வாதிகாரம் பற்றிய உண்மைகளை உரைப்பவர்கள், "நீர்க்குமிழிக்குள் வாழ்கிறார்கள்" என்று ஒரு நண்பர் விமர்சித்திருந்தார். இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரம், அடிப்படையில் ஒரு நீர்க்குமிழி பொருளாதாரம் என்பதற்கு அடுத்தடுத்து வந்த நெருக்கடிகளே சாட்சியம் கூறுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் வந்த கடன் நெருக்கடி, கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895

Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

Monday, July 07, 2014

மேற்குலகில் ஜிகாத் ஆதரவுக்கு காரணமான பொருளாதார பிரச்சினை

இன்று சிரியா, ஈராக்கில் ஒரு பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS அமைப்பில், மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களும் சேர்ந்திருக்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில், சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு குடியேறிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். 

வறுமையில் வாழும் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் பெருகி வரும் குற்றங்களை குறைப்பது என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகத்தினரை பாகுபாடு காட்டி ஒதுக்கும், அரசு அடக்குமுறை பிரயோகிக்கப் படுகின்றது. போலிஸ் அடக்குமுறை காரணமாக, ஒரு பக்கம் குற்றச் செயல்கள் குறைந்த போதிலும்,  மறு பக்கம் கடும்போக்கு மதவாதம் அதிகரிக்கின்றது. ஜிகாத் போராளிகளின் சமூக- பொருளாதாரக் காரணிகளை இந்தக் கட்டுரை அலசுகின்றது.

நெதர்லாந்தில் டெல்ப்ட் (Delft) நகரத்தில் இருந்து மட்டும், சுமார் 14 இளைஞர்கள், குறிப்பாக மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் வீர மரணம் அடைந்து விட்டனர். எதற்காக டெல்ப்ட் நகரில் இருந்து இத்தனை பேர் ஜிகாத் போராளிகள் ஆனார்கள்? அதனை ஆராய்ந்து உண்மை அறிவதற்காக சென்ற டச்சு ஊடகவியலாளரின் ஆய்வுக் கட்டுரை:

*******

"நாங்கள் அங்கே ஓர் ஆசீர்வதிக்கப் பட்ட நாட்டில் இருந்தோம்"
(Andreas Kouwenhoven)

சொர்க்க வாசல் (Paradijspoort) என்ற பெயர் கொண்ட  கடைவீதி டெல்ப்ட் நகரத்தில் பிரசித்தமானது. பல பெரிய வணிக நிறுவனங்கள் அங்கே கடை போட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்னர், அந்தத் தெருவில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டு திரிந்த காவாலிகளுக்கும் "சொர்க்க வாசல் பையன்கள்" என்ற பட்டப் பெயர் சூட்டப் பட்டிருந்தது. அவர்களில் பலர், பதினாறு வயது மதிக்கத் தக்க, மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கில்லிஸ்பியூர்ட்  (Gillisbuurt) பகுதியில் வசிப்பவர்கள். கில்லிஸ்பியூர்ட், டெல்ப்ட்  நகரில் மிகவும் பின்தங்கிய பகுதி. 

அந்த விடலைப் பையன்கள், கடைத்தெருவில் பிரயோசனமான எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. அவர்கள் எந்த நேரமும் அங்கே தான் நின்று கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதுடன், தெருவில் போகும் இளம் பெண்களை சீண்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்கூட்டர்களில் முறுக்கி சத்தம் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். சொர்க்கவாசல் பையன்களில் நான்கு பேர் இப்போது உயிரோடு இல்லை. சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டு விட்டனர். AIVD (நெதர்லாந்து புலனாய்வுத் துறை) அந்தத் தகவலை அறியத் தந்துள்ளது.

கில்லிஸ்பியூர்ட் பகுதி, "டெல்ப்ட்  நகரின் காசா பிரதேசம்" என்று அழைக்கப் படுகின்றது. அங்கு வசிப்பவர்களில், ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லை. பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்துபவர்கள் அங்கே அதிகம். அந்த இடத்தில் தான் அதிகளவு குற்றங்கள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூட, பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். ஐம்பது பேரளவிலான இளைஞர் குழுக்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. தெருப் பொறுக்கிகளில் பலர் முதலில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலர் திடீரென மனம் திருந்தி, சிரியாவுக்கு போராடச் சென்றார்கள். கில்லிஸ்பியூர்ட் எந்த இடத்தில் தவறிழைத்தது? 

சில வருடங்களுக்கு முன்னர், கலாச்சாரம் பேணும் இளைஞர் மன்றங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எல்லா இளைஞர்களும் அங்கே சமூகம் அளித்தார்கள். மொரோக்கர்கள் மட்டுமல்ல, சுரினாமியர்கள், துருக்கியர்கள், சோமாலியர்கள், இவர்களுடன் டச்சு இளைஞர்களும் அங்கே ஒன்று கூடுவார்கள். பெரும்பாலும் 12 வயது தொடக்கம் 30 வயது வரையிலான இளைஞர்கள். எல்லோரும் ஒன்றாக கால்பந்து விளையாடுவார்கள். ஒன்றாக உணவருந்துவார்கள், வீடியோ கேம் விளையாடுவார்கள். 

அந்த இளைஞர்கள் எல்லோரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது கஷ்டமானது. ஆனால், பொருளாதார பிரச்சினையை காரணமாகக் காட்டி, அரசாங்கம் சமூக சேவைகளுக்கான கொடுப்பனவுகளை குறைத்து விட்டது. அதனால், பல சமூக சேவையாளர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. விளைவு? ஒரு பகுதி இளைஞர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டனர். 

"மகிழ்ச்சியான தருணங்கள்" என்று, அந்தக் கால நினைவுகளை இரைமீட்கும் 25 வயது மொரோக்கோ இளைஞர் ஒருவர், தனது நண்பர்கள் மக்களுக்கு தொந்தரவு செய்ததை ஒத்துக் கொள்கிறார். பருவ வயது இளைஞர்கள், 16 அல்லது 17 வயதை அடையும் காலத்தில், நிஜ உலகை தரிசிக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து தான் எல்லாத் தவறுகளும் ஆரம்பமாகின. 

அந்த வயதில் எல்லோரும் பாடசாலைக் கல்வியை முடித்து விட்டிருப்பார்கள். எங்காவது சென்று தொழில் பயிற்சி பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள். அப்போது தான், "நாங்கள் வேறு விதமானவர்கள்" என்ற உண்மை அவர்களுக்கு உறைக்கும். களியாட்ட விடுதிகளில் அனுமதி மறுக்கப்படும். பகுதி நேர வேலை கூட கிடைக்காது. "பெண்கள் முக்காடு போடக் கூடாது" என்று அறிவுரை கூறுபவர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவை எல்லாம் எங்களது ஆத்திரத்தை தூண்டி விடும். 

"அந்த இளைஞர்கள், சமூகத்தில் இருந்து அந்நியப் படுத்தப் பட்டு வாழ்கின்றனர்." சிரியா போராளிக் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கும் நகரசபை உறுப்பினர் அப்துல் மனாயுய்  கூறுகின்றார். அவரைப் பொருத்தவரையில், பல இளைஞர்கள் தாங்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் படுவதாக உணர்கின்றனர். அவர்களின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓர் ஆதாரத்தைக் காட்டுகின்றார். பெரும்பான்மையாக (வேலை வாய்ப்பற்ற) வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் பூர்வீக டச்சுக் காரர்கள். 

சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு ஆரம்பத்தில் மதத்தின் மேல் பற்று எதுவும் இருக்கவில்லை. கொஞ்சம் வயதான சுக்ரி மட்டும் விதிவிலக்கு. அஸ்ஸுன்னா மசூதியில் நடக்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று வந்தான். கில்லிஸ்பியூர்ட் பகுதியில் சமுதாயத்தை நிராகரிக்கும் போக்கு வளர்ந்து வருகின்றது. "இந்த நாடு நாசமாகப் போக... இது எனது வீடல்ல..." என்று ராப் பாடல் இசைக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னர், இளைஞர்கள் கூடிக் கும்மாளம் அடித்த இடம் பறிபோனது. 2008 ம் ஆண்டு, அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக, நகரசபை அந்த இடத்தை கூறு போட்டது. அதனால், இளைஞர்களின் அட்டகாசம் அந்தப் பிரதேசம் எங்கும் பரவியது. புதுவருடக் கொண்டாடத்தின் போது, அங்கிருந்த வயோதிபர் மடத்தின் ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டன. ஒரு குழு பொலிஸ்காரர்களுடன் மோதியது. அவர்களை நோக்கியும் கற்கள் பறந்தன. இறுதியில், மிலிட்டரி பொலிஸ் வந்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.  

ஒரு வருடத்திற்குப் பிறகு, பத்துக்கும் குறையாத இளைஞர்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதாக நகரசபைக்கு தகவல்கள் கிடைத்தன. போதைவஸ்து வியாபாரம் சூடு பிடித்திருந்தது. அதே நேரம், பொலிஸ் அடக்குமுறைகளும் அதிகரித்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும், அளவுக்கு மிஞ்சிய தண்டப்பணம் அறவிட்டு தண்டித்தார்கள். அடிக்கடி அடையாள அட்டை கேட்டு சோதனை செய்தார்கள். 

அந்த நடவடிக்கைகள் எல்லாம், இளைஞர்களின் கோபாவேசத்தை கூட்டியது. "பொலிஸ் எங்கள் எதிரி" ஓர் இளைஞன் சொன்னான். "அவர்கள் எங்களை ​---- மொரோக்கர்கள் என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் இனவெறியர்கள் தான். எங்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடும்  பொழுது அவர்களுக்கு போதை ஏறுகின்றது."  பொது இடத்தில் சத்தம் போட்டது, கூட்டம் கூடியது, அடையாள அட்டை வைத்திருக்காதது, இப்படியான அற்பக் காரணங்களுக்காக எல்லாம், தண்டப் பணம் செலுத்த வேண்டி இருப்பதாக, இன்னொரு இளைஞன் கூறினான். 

சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்கள் சிலரும், அற்பத்தனமான அத்துமீறல்களுக்காக பொலிசிற்கு தண்டம் கட்டியிருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தினால் அவமதிக்கப் பட்டவர்கள், சிரியாவில் போராடுவதன் மூலம் தமது இழந்த கௌரவத்தை மீட்டுக் கொள்கிறார்கள். சிரியா யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக, உள்ளூர் பள்ளிவாசலில் இறுதிச் சடங்குகள் நடந்த பொழுது, ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். 

"இந்த நாட்டில் செத்தால் எங்களை கிரிமினல்கள் என்று தூற்றுவார்கள், ஆனால் சிரியாவில் செத்தால் எங்களை போராளிகள் என்று மதிப்பார்கள்..." என்று சில இளைஞர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். பல இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதை நிறுத்தி விட்டு, தாடி வளர்க்கத் தொடங்கினார்கள். பலர் சுக்ரியை தமது ஆதர்ச நாயகனாக பின்பற்றத் தொடங்கினார்கள். தந்தையின் திடீர் மரணத்தினால் பாதிக்கப் பட்டிருந்த சுக்ரி, மத மார்க்கத் தேடுதலில் மனதை திசை திருப்பி இருந்தான். 

சுக்ரியின் பாதையை பின்பற்றிய சில இளைஞர்கள், ஒழுங்காக மசூதிக்கு சென்று வந்தனர். ஆனால், கடும்போக்கு மதவாதக் கருத்துக்களை நிராகரித்த பள்ளிவாசல் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி விட்டது. அதற்குப் பின்னர், டெல்ப் நகரில் உள்ள துருக்கி பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அங்கேயும் அதே பிரச்சினை. ஆனால், இம்முறை பள்ளிவாசல் நிர்வாகம் அந்த இளைஞர்கள் பற்றிய தகவலை பொலிசுக்கு  அறிவித்தது. பொலிஸ் அந்த விபரங்களை நகரசபைக்கு அறிவித்தது. இது நடந்தது 2012 ம் ஆண்டு. 

அந்த தகவல்களின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? "ஒன்றுமேயில்லை!" நகர சபை அதிகாரி ஒருவர் பதிலளிக்கும் பொழுது: "நாங்கள் அப்போது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. அந்த இளைஞர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதே எமது பிரதான நோக்கமாக இருந்துள்ளது. மதத் தீவிரவாதிகளாவதை நாங்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை." அன்று தாங்கள் தப்பெண்ணம் கொண்டிருந்ததை அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார். 

(நன்றி : NRC WEEKEND, zaterdag 5 juli & zondag 6 juli 2014)

Thursday, October 24, 2013

பொருளாதார நெருக்கடியால் தோற்றுப் போனவர்களின் குமுறல்கள்

நெதர்லாந்தில் நீடிக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, அடிக்கடி பலருக்கு வேலை பறிபோகின்றது. அதனால் மீண்டும் வேலையிழந்தவர் எண்ணிக்கை (கவனிக்க: "வேலையில்லாதவர்" என்ற சொல் எல்லா சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமானது அல்ல.) அதிகரித்து வருகின்றது. அப்படியான "தோற்றுப் போனவர்கள்" பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது. "தோற்றுப் போனவர்களை" பொறுப்பேற்றுள்ள நகரசபை, வேலையிழந்தவர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒழுங்கு படுத்தியிருந்தது. கடந்த வருடம், அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த அனுபவத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"வேலை தேடும் பயிற்சிக்கு" சமூகமளித்தவர்களில், 90% மானோர் மூன்றாமுலக நாடுகளில் இருந்து வந்த, வந்தேறிகுடிகள் சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். மிகுதியாக உள்ள டச்சு பூர்வீக வெள்ளையினத்தவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் 10 - 30 வருடங்கள் வேலை செய்த பின்னர் பணிநீக்கம் செய்யப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

மேற்கத்திய நாடுகளில் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது, வந்தேறுகுடிகளும், வயதானவர்களும், அங்கவீனர்களும் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகின்றனர். (இந்த உண்மையை பயிற்சியளிக்க வந்த அதிகாரிகளே ஒத்துக் கொள்கின்றனர்.) சில வருடங்களுக்கு முன்னர், இப்படியான பலவீனமான சமூகப் பிரிவினரை பணியில் அமர்த்தும் நிறுவனத்திற்கு, அரசு மானியம் அளித்தது. அதனால், முதலாளிகளும் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். தற்போது அந்த அரசு மானியங்கள் நிறுத்தப் பட்டு விட்டன. அதனால், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் மத்தியில் வேலையற்றவர் எண்ணிக்கை அதிகம். 

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் வேலையிழந்தவர்கள், தம்மை   "தோற்றுப்போனவர்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கும், "வெற்றி பெற்றவர்களின்" மமதையை வெறுக்கின்றனர்.  அரசு, முதலாளிகள் மீதான தார்மீக கோபம் பல தருணங்களில் வெளிப்படுகின்றது. அப்போதெல்லாம், "மரியாதையாக பேசுமாறு" அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். உண்மையில் தம்மிடமும் அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த, பயிற்சியளிக்கும் அதிகாரிகள், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுகின்றனர்.

வேலையிழந்த மக்களுக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகையும், அவர்களின் கோபாவேச உணர்வுகளை ஆற்றுப் படுத்த உதவுகின்றது. இல்லாவிட்டால், இந்த நாடுகளில் எப்போதோ வர்க்கப் புரட்சி வெடித்திருக்கும். மேலும் அந்த உதவித் தொகை, வேலை செய்யும் காலத்தில் நாங்கள் சேமிக்கும் காப்புறுதி பணமாகும். இதனை பெறுவதற்கு, ஒருவர் குறிப்பிட்ட காலம் வேலை செய்திருப்பது அவசியம். உதாரணத்திற்கு, 18 வயதான நபர் படித்து முடித்த பின்னர் வேலையில்லாமல் இருந்தால், அவருக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. அப்படியானவர்கள் பெற்றோருடன் தங்கிக் கொள்கின்றனர். 

மேற்கத்திய நாடுகளில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக, தெற்காசிய நாடுகளில் வசிப்போர் நினைத்துக் கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில், உழைக்கும் வர்க்கம் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் விலை பற்றிய அறிவு பூஜ்ஜியமாக உள்ளது. வணிக நோக்கம் கொண்ட தமிழ் ஊடகங்களும் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. அதனால், மேலைத்தேய நாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், சமூக வலைத் தளங்களில் மட்டுமே, தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகின்றது.

இந்த வருடம் நெதர்லாந்து நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் மந்த நிலையில் உள்ளதாக அறிவிக்கப் படுகின்றது. சாதாரண பொது மக்களும் அதனை உணர்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. மறுபக்கத்தில் அரசு வழங்கி வந்த மானியங்கள் வெட்டப் படுகின்றன. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது.

சாதாரண மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, முதலாளிகளின் வருமானம் உயர்ந்து கொண்டு செல்கின்றது. இன்றைய காலங்களில், பெரிய நிறுவனங்களை தலைமை நிர்வாகிகளை கொண்ட சிறு குழுக்களே நிர்வகிக்கின்றன. இந்த தலைமை நிர்வாகிகளின் சம்பளம் (?), அந்த நிறுவனத்தில் பிற ஊழியர்களுக்கு கிடைப்பதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில், இருபது மடங்கு, அல்லது முப்பது மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

தலைமை நிர்வாகிகளின் வருமானம், வெறும் சம்பளத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அதே நிறுவனத்தில் அவர்களும் பங்குதாரராக இருக்கின்றனர். பங்குகளின் பெறுமதி உயர்வதால் கிடைக்கும் இலாபத் தொகை தனியானது. சாதாரண ஊழியர்களுக்கு அப்படியான வருமானம் எதுவும் கிடையாது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பிற ஊழியர்கள், வேலை போய் விடும் என்ற பயத்தில், குறைந்த சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள்.

"ஐயா, நாம் வேலை செய்யும் நிறுவனம் அதிக இலாபம் சம்பாதிப்பதால், எங்களுடைய சம்பளத்தை கூட்டித் தாருங்கள். அல்லது பெரிய மனது வைத்து, உங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்." இவ்வாறு தலைமை நிர்வாகிகளை பார்த்து கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதனால், இந்த அநியாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நெதர்லாந்து பொருளாதாரம் பற்றி, அந்த நாட்டு பிரஜைகள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பொன்று அண்மையில் எடுக்கப் பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

  • 52% பொருளாதாரம் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 
  • 45% தற்போதுள்ள இதே நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள். 
  •  3% மட்டுமே, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறார்கள். 

கடந்த பல வருடங்களாக ஆட்சியில் அமர்ந்துள்ள, சமூக ஜனநாயக, லிபரல் கட்சிகளின் கூட்டணி, பொருளாதாரத்தை மிகவும் மோசமாக கையாள்வதாக மக்கள் நம்புகின்றனர். மிகப் பெரும்பான்மையான 74% மானோர், இந்த அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது, பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. இதற்குப் பெயர் ஜனநாயகமாம்!

வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம், மோசமடைந்து வருகின்ற உண்மையை யாரும் மறைத்து விட முடியாது. 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து, நெதர்லாந்து இன்னமும் மீளவில்லை. இந்த வருடம், வேலையற்றோர் எண்ணிக்கை 8 சத வீதமாக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்து போன்ற "பணக்கார நாட்டை" பொறுத்தவரையில் இது ஒரு பெரிய தொகை தான். இன்னொருவரில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களும், வாரத்திற்கு குறிப்பிட்டளவு மணிநேரம், பகுதிநேர வேலை செய்பவர்களும் வேலையற்றோர் பதிவேட்டில் பதிவு செய்யப் படுவதில்லை. இதனால், உண்மையான வேலையற்றோர் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கலாம்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Monday, August 27, 2012

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவை நோக்கி...

(குறிப்பு: இந்தக் கட்டுரை நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் அரசியல் - சமூக வார இதழான Vrij Nederland இல், டச்சு மொழியில் பிரசுரமானது.  தமிழ் பேசும் மக்களுக்காக,  அதனை இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பா
 (Een democratisch communistisch Europa)

- இல்யா லெயோனார்ட் பைபர் (Ilja Leonard Pfeijffer)

1989 ம் ஆண்டு, மதில் வீழ்ந்த பொழுது, அது முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாக கொண்டாடப் பட்டது. சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கிய பொழுது, கம்யூனிச அமைப்பு செயற்பட முடியாது என்பதற்கான ஆதாரமாக புரிந்து கொள்ளப் பட்டது. கம்யூனிசத்தின் எதிர்மறை விம்பமான பாஸிசம், நாற்பத்திநான்கு வருடங்களுக்கு முன்னர், பெர்லின் இடிபாடுகளுக்குள் புதைக்கப் பட்டதோடு ஒப்பிட்டு, மிகப்பெரிய அரசியல் சித்தாந்தங்களின் முடிவு காலம் வந்து விட்டது என்று சொன்னார்கள். வெற்றிவாகை சூடிக் கொண்ட, சுதந்திரமான மேற்குலகம் என்று அழைக்கப்படும் நாடுகளின் அரசியல் பொருளாதாரமானது, எந்த வகையான சித்தாந்தந்திற்கும் உட்படாதது என்று கருதப் பட்டது. அது பன்முகத் தன்மை வாய்ந்த பாராளுமன்ற ஜனநாயகத்திலும், பொருளாதார தாராளவாதத்திலும் தங்கியிருந்தது.

மேற்கத்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், சுதந்திர சந்தையின் சட்டங்கள், இயற்கை வகுத்த சட்டங்களுக்கு ஒப்பானது. அவற்றை எதிர்ப்பதோ, அல்லது ஒதுக்குவதோ, பிரயோசனமற்றதும், முட்டாள்தனமானதுமாகும். கம்யூனிசமும், பாசிசமும் திவாலான நிலையில்; இறுதியில், சந்தையின் செயல்முறையே நம்பத் தகுந்ததாக கருதினார்கள். அதுவே முன்னேற்றத்தையும், சுபீட்சத்தையும், நீதியையும் அளிப்பதற்கான உத்தரவாதமாக கருதப் பட்டது. அப்படித் தான் நினைத்துக் கொண்டார்கள். சிலர் இதனை, சரித்திரத்தின் முடிவு என்ற அர்த்தத்தில் பேசினார்கள். உலகம் முழுவதும், தடையற்ற சுதந்திர வர்த்தகத்தின் ஆயிரம் வருட ராஜ்ஜியம் ஆரம்பமாகியது. 

ஆயிரம் வருட கால சாம்ராஜ்யத்தில், நாம் வெறும் இருபது வருடங்களை மட்டுமே அனுபவிக்க முடிந்தது. 2008 ம் ஆண்டிலிருந்து, அடுத்தடுத்து நெருக்கடிகள் எம் தலை மேல் விழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதிய நெருக்கடியும், முன்னையதை விட மோசமானதாக இருக்கின்றது. எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் முடிவு தெரியவில்லை. ஒன்று மட்டுமே உறுதியானது: "மிகவும் மோசமான நெருக்கடி இனிமேல் தான் வரப் போகின்றது." எமது அரசியல்வாதிகளும், பொருளாதார கொள்கை வகுப்பாளர்களும் நல்லதே நடக்கும் என்ற நினைப்பில் சந்தை மீது நம்பிக்கை வைத்துப் பேசுகின்றனர். நுகர்வோரின் நம்பிக்கையை பாதிக்கக் கூடாது என்பதற்காக அப்படி நடந்து கொண்டாலும், இந்த அமைப்பு உள்ளுக்குள் விழுந்து நொறுங்கி கொண்டிருக்கிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை. 

கடந்த மாதங்களாக, இந்த துறை பற்றி பேசிக் கொண்டிருந்த தகமையாளர்கள் அனைவரும் மிகவும் நொடிந்து போயுள்ளனர். கிரேக்க நாடு நெருக்கடியில் இருந்து மீளும் சாத்தியம் எதுவும் இல்லை. கடன் நெருக்கடி ஸ்பெயினுக்கு தாவி விட்டது. அடுத்ததாக பிரான்சும் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன. அதற்குப் பிறகு, யூரோ நாணயத்தின் கதை முடிந்து விடும். அது தெளிவானது. அது இலட்சக் கணக்கான மக்களின் பொருள் இழப்பு, வாழ்க்கைத்தரம் பாதிக்கப் படுவதில் கொண்டு சென்று முடிக்கும். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகள் மட்டுமல்ல, யூரோ நாணயம் பயன்படுத்தும் நாடுகள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படும். 

நெதர்லாந்தில்  நாம், "மூன்று A தராதரம்" என்ற பாதுகாப்பான அணைக்கட்டுக்குப் பின்னால் நின்று கொண்டு, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தேவைப்பட்டால், எமது பழைய, நம்பிக்கைக்குரிய கில்டர் நாணய காலத்திற்கு திரும்பிச் செல்லலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது நாணயம் பற்றிய பிரச்சினை அல்ல. எமது ஓய்வூதிய நிதியம் போன்றவையே பிரச்சினை ஆகும். யூரோவில் கணக்கிட்டாலும், அல்லது கில்டரில் கணக்கிட்டாலும், பெரும்பாலான (ஓய்வூதிய) நிதியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றப் போவதில்லை. எனது கருத்தை மறுதலிக்கும் நிபுணர் யாரையும் நான் காணவில்லை. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன.  அதன் அர்த்தம், எமது வயோதிப காலத்திற்காக நாம் சேமித்த பணம், வட்டியோடு திருப்பிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் காப்புறுதி நிதியத்தில் வைப்பிலிட்ட பணம், இனிமேல் எமக்கு கிடைக்கப் போவதில்லை. 
"மன்னிக்கவும். ஓய்வூதியம் கிடையாது." 
"ஆனால், அது எமது சொந்தப் பணம். அதைத் தானே நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்?" 
துரதிர்ஷ்ட வசமாக, பணம் அங்கே இல்லை. எமது  பணம், எந்த வித பெறுமதியுமற்ற சிக்கலான பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு விட்டது.  

"அப்போ? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? வறுமையில் வாட வேண்டுமா?" துரதிர்ஷ்டவசமாக, எமக்கு வேறெந்த வழியும் இல்லை. ஒரு வேளை, வீட்டை  விற்று விடலாம். ஆனால், வீட்டு மனை சந்தை ஏற்கனவே வீழ்ந்து விட்டது.  யாரும் அதை இப்போது ஒரு சந்தையாகவே கருதுவதில்லை, ஏனென்றால் வீட்டின் விலை குறைந்து கொண்டு செல்கிறது. மறு பக்கத்தில், அடைமான செலவு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அத்தோடு, ஒரு பக்கத்தில் அலுவலக கட்டிடங்கள் வெறுமையாகக் கிடக்கின்றன. அவற்றை வீடுகளாக மாற்றலாம் என்று சிலர் ஆலோசனை கூறுகின்றனர். நாங்கள் வசதியாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு, "எதுக்கும் பிரயோசனமற்ற கிரேக்கர்களை" மீட்டு விட்டோம்.  ஆனால், நாங்கள் விற்கவும் முடியாத, செலவையும் ஈடுகட்ட முடியாத வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஓய்வூதியமும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.  எமது மருத்துவ காப்புறுதித் தொகையும் கட்ட முடியாத அளவு உயர்ந்து விட்டது. சுருங்கி வரும் பொருளாதாரத்தில், எல்லோரிடமும் செலவளிப்பதற்கான பணம் குறைந்து வருகின்றது. அதனால் வேலை வாய்ப்பும் குறைந்து வருகின்றது. அரசாங்கத்தினால் அறவிடப் படக் கூடிய வரியின் அளவு குறைந்து வருவதால், சமூகநல திட்டங்களையும் தொடர்ந்து பேண முடியாது. இந்தப் பிரச்சினை எல்லாம், கிரேக்கர்களாலோ அல்லது யூரோவினாலோ ஏற்படவில்லை. இவையெல்லாம் சந்தையின் கடுமையான சட்டங்கள். சந்தையின் இரும்புக் கரங்களில் இருந்து எம்மை நாமே விடுதலை செய்து கொள்ளா விட்டால், அதனை தடுத்து நிறுத்த முடியாது.

"எது நடந்ததோ, அது நன்றாக நடந்தது" என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு சுயதேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் தீர்க்கதரிசனம். சரிந்து வரும் பங்குகள், பொருள் இழப்பு, நிறுவனங்கள் திவால் ஆதல், இவற்றில் எல்லாம் ஊகவணிகம் செய்யலாம். அதிலே நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்கலாம். ஒரு பொருள் நஷ்டத்தில் ஓடப் போகின்றது என்று எல்லோரும் நினைத்தால், அதிலே ஊகவணிகம் செய்யலாம்.

ஏதாவது ஒரு பொருளில் நஷ்டம் வராது என்று நம்பினால், அது ஊக வணிகர்களின் பொருளாக இருக்கும். அந்தப் பொருளை நஷ்டமடையச் செய்வதற்கு, அவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஏராளமான பணத்தை அதிலே முதலிட்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை ஊக வணிகர்கள் சிந்திக்கிறார்களோ, அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம். அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று நிச்சயப் படுத்தப் பட்டால், இன்னும் அதிகமான ஊக வணிகர்கள் அதைப் பற்றி சிந்திப்பார்கள். இது குறள் வடிவில் அமைந்த முதலாளித்துவம்.  

நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு முன்னேறுவதற்கு, தற்போதைய நெருக்கடி ஒன்றும் தற்காலிகமான வசதிக் குறைபாடல்ல. அது அடுத்த நெருக்கடிக்கான ஊற்றுக்கண். அந்த நெருக்கடி இன்னொரு நெருக்கடியை உருவாக்கும். 2008 ம் ஆண்டில் இருந்து தொடரும், ஒன்றோடொன்று தொடர்பு பட்ட நெருக்கடிகள் யாவும், முதலாளித்துவத்தின் உடன்பிறப்புகள். தவணை முறையில் திருத்திக் கொள்வதற்கு, இவை எல்லாம் சந்தையின் சுயமான ஊசலாட்டங்களல்ல. மாறாக, சந்தைப் பொருளாதார அமைப்பின் அடிப்படைப் பிரச்சினை. இப்பொழுது நடப்பது மாதிரி, எப்போதும் நடக்கப் போவதில்லை என்பதில் எல்லோரும் ஓரளவு ஒரு மனதாக கருதுகின்றனர். நாம் வாரியிறைக்கும் கோடிக்கணக்கான மீட்பு நிதிகள், பிரச்சினையை ஒரு சில மாதங்கள் தள்ளிப் போடலாம். செயற்படக் கூடிய தீர்வுகள் எதுவும் இல்லை. நாம் இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுக வேண்டும். 

ஏற்கனவே எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இன்றைய பொருளாதார நெருக்கடி பற்றி, மயிர் சிலிர்க்க வைக்கும் துல்லியத்துடன் எதிர்வு கூறப் பட்டது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னர். தொழிற்புரட்சிக் காலகட்டத்திற்கு பின்னரான இங்கிலாந்தின் நிலைமைகளை வைத்து, கார்ல் மார்க்ஸ் "அரசிய பொருளாதாரம் மீதான விமர்சனங்களை" எழுதியிருந்தார். முதலாளித்துவ அமைப்பின் குறைபாடுகள் பற்றிய அவரின் ஆய்வுகள், முன்னெப்போதையும் விட இன்று தான் பொருந்திப் போகின்றன.  

மார்க்ஸ் கூறியதன் படி,  சங்கிலித் தொடரான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கும். அவை வர வர தீவிரமடையும், ஒன்றை மற்றொன்று தொடர்ந்து வரும். மிகச் சரியாக, அதனை நாங்கள் இன்று நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மார்க்ஸ் கூறினார்: "இலாபம் ஒருவரின் தனிச் சொத்தாக இருக்கும் அதே நேரத்தில், நஷ்டத்தை பொது மக்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றனர்."  மிகச் சரியாக, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருட காலமாக வங்கியாளர்களுக்கு கிடைத்த இலாபத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம். ஆனால், திவாலானான வங்கிகளை மீட்பதற்கான பொறுப்பு அனைத்து வரி செலுத்துவோரின் தலைகளிலும் விழுகின்றது.  

மார்க்சின் மிகப் பிரபலமான, மூலதனக் குவிப்பு பற்றிய கோட்பாடு ஒன்றுண்டு. அதாவது, முதலாளித்துவ அமைப்பு, மூலதனம் குவிக்கப் படுவதை ஊக்குவிக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகின்றனர். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகின்றனர். "எங்கேயோ போகும் கோடிக் கணக்கான யூரோக்கள் எல்லாம் மண்ணில் வந்து விழுவதில்லை." நெருக்கடியை புரிந்து கொள்வதற்காக, ஒரு பார வாகன சாரதி அவ்வாறு கூறினார். அவர் கூறியது மிகச் சரியானது.  சந்தைகள் இயற்கையான தோற்றப்பாடுகள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

சந்தைகள் நெருக்கடிகளை உருவாக்குவதால், வெள்ளத்தை தடுக்க ஆணை கட்டுவதைப் போல அவற்றை நாங்கள் தடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சந்தைகள், உண்மையில் மக்களைக் குறிக்கும். ஒரு சிறு தொகை ஊக வணிகர்கள், நெருக்கடியினால் நாறிப் போகுமளவிற்கு பணத்தை அள்ளுகின்றனர். மண்ணில் வந்து விழாத கோடிகள் எல்லாம் அங்கே தான் போகின்றன.  ஒரு இயற்கையான தோற்றப்பாட்டை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், மனிதர்களின் துர் நடத்தையை தடை செய்யலாம். கோடிக் கணக்கான மக்களுக்கு பாதகமான முறையில், செல்வம் சேர்க்கும் ஒரு சிலருக்கு மட்டுமே உதவுமாக இருந்தால், அப்படிப் பட்ட சந்தைகளை தடை செய்வதற்கு அதுவே ஒரு சிறந்த காரணமாக இருக்கும். 

தாராளவாதம் என்பது சாலச் சிறந்தது. பல தடவைகளாக தவறாக பயன்படுத்தப் பட்ட சுதந்திரம் என்ற சொல்லானது, ஒவ்வொரு அரசியல் அமைப்பினதும் உயரிய இலட்சியமாக உள்ளது. "அனைத்து பிரஜைகளினதும் தனித்துவமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவது. ஒரு தனிநபர் அதிக பட்சம் முன்னேறுவதற்கு நிபந்தனைகள் விதிப்பது. ஒவ்வொருவரும் அவர் விரும்பியவாறு வாழ அனுமதிப்பது."  அதுவே ஒவ்வொரு அரசினதும், ஒரேயொரு, புனிதமான கடமையாக உள்ளது. 

அனைவருக்குமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, சுதந்திரத்திற்கான பாதை செப்பனிடப் பட வேண்டியுள்ளது. ஒருவரின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தி, இன்னொருவரின் சுதந்திரம் குறைக்கப் படுகின்றது. அடுத்தவரின் சுதந்திரத்தில்  தலையிடுவதும், பாதிப்பதுமான நடத்தைகள் தடை செய்யப் பட வேண்டும். அதனால் தான், நாங்கள் சில நேரம் பிரஜைகளின் சுதந்திரத்தை பறிக்கிறோம். இன்னொருவரின் கழுத்தை அறுப்பதற்கு, இன்னொருவரின் பொருளை திருடுவதற்கு, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனமோட்டுவதற்கு, அயலவரின் வீட்டை எரிப்பதற்கு, இது போன்றவற்றுக்கு எல்லாம் சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை. மற்றவர்களின் சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, எமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்வதை நாங்கள் சாதாரணமாக எடுக்கிறோம். 

தாராளவாதம் (லிபரலிசம்) என்ற சொல்லை, கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் ஒத்த கருத்துள்ள சொல்லாக புரிந்து கொள்கிறோம். பண்பாட்டு தாராளவாதத்திற்கும், பொருளியல் தாராளவாதத்திற்கும் இடையில் பாகுபாடு காட்டப்பட வேண்டும். சிந்திப்பதற்கு, நம்புவதற்கு, கருத்துக் கூறுவதற்கான சுதந்திரமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரமும் ஒன்றல்ல.  சுதந்திரமான சந்தை, குடிமக்களின் நலன்களை பாதிக்கின்றது. அதனால், அது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக கருதப்பட வேண்டும். அதனாலேயே தடை நியாயப் படுத்தப் படுகின்றது, அத்தோடு அவசியமானதும் கூட. ஆனால், அதற்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளன. கட்டற்ற சுதந்திர சந்தையை தடை செய்வதென்பது, உண்மையில் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு ஒப்பானது. அந்த இடத்தில் இனி வரப்போவது, அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் என்று அறியப் பட்டாலும், நாங்கள் அதனை கம்யூனிசம் என்றழைப்போம். 

இத்தகைய மாற்றத்தை தான் மார்க்ஸ் கண்டார். ஆனால், அதைக் கேட்டவுடன் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஏனென்றால், கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள, இப்போதைக்கு எமக்கு எந்த விருப்பமும் கிடையாது. கம்யூனிசம் நடைமுறைச் சாத்தியமில்லாதது என்று,  நாங்கள்  இருபது வருடங்களுக்கு முன்னரே முடிவு செய்து விட்டோம். "ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டங்களை செயற்படுத்தி, வறுமையையும், பஞ்சத்தையும் மட்டுமே உண்டாக்கும்", அரசியலாளருடன் கம்யூனிசத்தை ஒன்று படுத்திப் பார்க்கிறோம். ஆனால், அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் குறித்து நாங்கள் அச்சப் படத் தேவையில்லை. 

அரசு என்பது ஒரு காவல் நிலையம் அல்ல. ஒரு ஜனநாயக அமைப்பில், (மக்களாகிய) நாங்கள் தான் அரசாங்கம்.  எல்லாவிதமான அவலங்களையும் எமக்களித்த சுதந்திர சந்தையினால், மக்களாகிய நாங்கள் பொருளாதாரத்தை எமது கையில் எடுப்பதை தடுக்க முடியுமா? ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் கட்டுப்படுத்தப் படும் பொருளாதாரத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்காவது இருக்கிறதா?  தங்களுக்கு மட்டுமே செல்வம் சேர்க்கும், மனச்சாட்சியே இல்லாத ஊக வணிகர்களிடம் நாங்கள் அதனை விட்டு விட முடியுமா? 

அதனால் தான், மதில் வீழ்ந்ததையும், சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கியதையும் உதாரணமாக காட்டி,  "கம்யூனிசம் நடைமுறையில் சாத்தியப் படாது" என்ற முடிவுக்கு நாங்கள் வந்து விட முடியாது.  அங்கே இருந்தது கம்யூனிசம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் இருந்த, இப்போது இருக்கும் ஒரு சில, "கம்யூனிச நாடுகள்" என்று கருதப் பட்ட நாடுகள் எல்லாம், உண்மையில் கூட்டுத்துவ அமைப்பு நாடுகள். 

மார்க்சின் அடிப்படைச் சுலோகத்தின் படி, மக்களின் கைகளில் உற்பத்திச் சாதனங்கள் இருந்தால் தான் அது கம்யூனிசம் என்று அறியப்படும். ஆனால், கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்ட எந்த நாட்டிலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. மக்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. மதிலின் வீழ்ச்சியானது எமக்கு எதனை உறுதிப் படுத்தியுள்ளது என்றால், "சர்வாதிகாரம் நடைமுறையில் சாத்தியப் படாது." மக்கள் ஜனநாயகமான உண்மையான கம்யூனிசம், சரித்திரத்தில் என்றுமே முயற்சிக்கப் படவில்லை. 

நிச்சயமாக,  அதற்கேற்ற ஜனநாயக கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த நிலைமை தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. Occupy இயக்கமானது, கட்டற்ற சுதந்திர சந்தைக்கு எதிராக எழுச்சியுறும் போராட்டங்கள் பற்றிய நற்செய்தியை அறிவித்த முதலாவது தூதுவன். இந்த இயக்கமானது பெருமளவு ஆர்வத்தை தூண்டுவதற்கு காரணம், அது அடித்தட்டு மக்களிடம் இருந்து தானாக கிளர்ந்தெழுந்தது.  19 ம் நூற்றாண்டில் மார்க்ஸ் திட்டமிட்டதைப் போல, அது ஒரு பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி. 

Occupy இயக்கத்தினரால் குறைந்தளவு தாக்கம் மட்டுமே செலுத்த முடிந்ததது. அத்தோடு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கவில்லை. ஆனால், அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருந்தார்கள். இப்போது இருக்கும் நிலைமை, என்றென்றைக்கும் தொடரப் போவதில்லை. வருங்காலத்தில், நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்கள் இந்த உணர்வைப் பெறுவார்கள்.  ஓய்வூதியம் கிடைக்கப் போவதில்லை என்றால், யாருமே வீட்டை விற்க முடியாது என்றால், அது விரைவில் நடக்கும். நாங்கள் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று, சமூகத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் கருதுவதையும் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவில் நான் வாழ விரும்புகின்றேன். ஒரு தடவை, நாங்கள் அதனை முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

(நன்றி: Vrij Nederland , 11 ஆகஸ்ட் 2012 )

(மூலப் பிரதியை இங்கே வாசிக்கலாம்: http://www.vn.nl/boeken/essay-2/een-democratisch-communistisch-%E2%80%A8europa/)


அடிக்குறிப்பு: 
Vrij Nederland ஒரு "வழக்கமான இடதுசாரிகளின் பிரச்சார சஞ்சிகை" அல்ல. நாஜிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த நெதர்லாந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மக்களின் குரலாக ஒலித்தது. சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்கத்தின் குறை நிறைகளை விமர்சித்து எழுதி வருகின்றது. சர்வதேச மட்டத்தில், முதலாளித்துவ நாடுகளின் தவறுகளையும், சோஷலிச நாடுகளின் தவறுகளையும் சுட்டிக் காட்டி எழுதி வந்துள்ளது. நேர்மையான ஊடகவியல் காரணமாக, வலது, இடது பாகுபாடின்றி, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப் படுகின்றது. மேலதிக தகவல்களை விக்கிபீடியா இணைப்பில் வாசித்து அறிந்து கொள்ளலாம்.