Tuesday, March 31, 2020

கொரோனாவின் இரும்புப் பிடிக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரம்


நெதர்லாந்தில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தளவு தூரம் பாதித்துள்ளது? அங்கே இன்னமும் ஊரடங்கு சட்டம் இல்லை. பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் இருந்தாலும் வெளியில் நடமாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஒன்றரை மீட்டர் இடைவெளி விட்டு நடக்க வேண்டும் என்பது மட்டுமே சட்டம்.

தமிழ்நாட்டில் வேந்தர் டிவியில் தவறான தகவல்களை கொண்ட வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. அதில் உள்ள வீடியோவில் ஒருவர் நெதர்லாந்தில் இருந்து பேசுவதாக சொல்கிறார். "நெதர்லாந்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு இருக்கிறது... பொதுமக்கள் வெளியே வந்தால் பொலிஸ் சுடுவார்கள்..." என்பன போன்ற பொய்யான தகவல்களை கூறுகின்றார். அதில் பேசும் நபர் தான் நெதர்லாந்து நகர தெரு ஒன்றில் நடப்பதாக கூறினாலும், அந்த வீடியோப் பதிவு முழுவதும் அவரது முகம் மட்டுமே தெரிகின்றது. பின்னணியில் சுற்றாடலில் நடக்கும் எதுவும் தெளிவாகத் தெரிய விடாமல் மறைக்கப் பட்டுள்ளது. இது குறித்து வேந்தர் டிவி கவனமெடுக்க வேண்டும்.

இந்த வீடியோவை நானே ஆம்ஸ்டர்டாம் நகரில் நேரில் சென்று படமாக்கி உள்ளேன். ஏற்கனவே ஆம்ஸ்டர்டாம் வந்தவர்கள், பின்னணியில் தெரியும் காட்சிகளை கொண்டே அதை அறிந்து கொள்ளலாம். வழமையாக சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் தான் படமாக்கி இருக்கிறேன். ஆகவே இங்குள்ள உண்மை நிலைமை என்னவென்று நீங்களே வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் ஒரு பல்தேசிய தொற்று நோயாக பரவிக் கொண்டிருக்கும் பேரிடர் காலத்தில், மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் பொய்யான தகவல்களை பரப்புவது நிறுத்தப் பட வேண்டும். பரபரப்பு செய்திகளுக்காக என்ன வேண்டுமானாலும் புளுகலாம் என்ற நிலைமை மாற வேண்டும்.

நன்றி.

- கலையரசன்


Monday, March 30, 2020

சீனாவில் கொரோனா இறப்புகள் பற்றி மிகைப்படுத்திய பிரச்சாரம்


இது செய்தி அல்ல வதந்தி:

சீனாவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 40000 க்கும் அதிகம் என்று குறிப்பிடும் சில ஆதாரமற்ற தகவல்களை பலர் பகிர்ந்து கொள்வதை காணக் கூடியதாக உள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களை பார்த்தாலே இது ஆதாரமற்ற வதந்தி என்று தெரிந்து விடும். 
- அத்தனை பேர் இறந்திருக்கலாம் என "மதிப்பிடப் படுகிறது." அதாவது ஒருவரது ஊகம். 
- இதற்கான ஆதாரம் தேடினால், தனிநபர்கள் சமூகவலைத் தளங்களில் பகிரும் பதிவுகளை காட்டுகிறார்கள்.

அதாவது நம்மூரில் பரப்பப் படும் வாட்சப் வதந்திகள் மாதிரி சீனாவிலும் பரப்பும் ஆட்கள் இருக்கிறார்கள். அங்கேயும் அவற்றை உண்மையென்று நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. அதையெல்லாம் ஒரு ஊடகம் எடுத்து வெளியிடுகிறது. நாங்களும் அதை கேள்வி கேட்காமல் நம்பி விடுகிறோம்.

இந்த டிவிட்டர் தகவல் RFA இணையத் தளத்தை ஆதாரம் காட்டுகிறது. யார் இந்த RFA? Radio Free Asia. முன்பு பனிப்போர் காலத்தில் Radio Free Europe என்ற வானொலி இயங்கியதை அறிந்திருப்பீர்கள். அன்று CIA நிதியில் இயங்கிய RFE இன் ஆசிய சேவை தான் RFA. இரண்டும் ஒன்று தான். அன்றும் இன்றும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் பற்றி வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பி குழப்பத்தை உண்டு பண்ணுவது தான் இந்த பிரச்சார வானொலியின் நோக்கம்.

சீனாவில் வூஹான் நகரம் 2 மாத Lockdown இல் இருந்த காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ கணக்கை விட அதிகமாக இருக்கலாம். அதை மறுப்பதற்கு இல்லை. மருத்துவ வசதி கிட்டாமல் வீடுகளில் இறந்தவர்கள், வேறு நோய்கள் காரணமாக இறந்தவர்கள் கணக்கெடுக்கப் படாமல் இருந்திருக்கலாம். அதையெல்லாம் சேர்த்தாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு "ஒரு மில்லியன் சாவுகள்" என்று சும்மா அடித்து விட முடியாது.

இந்தத் தவறு தற்போது ஐரோப்பாவிலும் நடக்கிறது. இங்கேயும் உண்மையான இறந்தவர்களின் தொகை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகம். ஸ்பெயின், மாட்ரிட் நகரில் ஒரு கைவிடப் பட்ட கொரோனா மருத்துவமனையை இராணுவம் பொறுப்பெடுத்த நேரம், அங்கு பல நோயாளிகள் உயிரோடு இருந்தனர். அதாவது, மருத்துவப் பணியாளர்கள் அவர்களை அப்படியே கிடந்து சாகட்டும் என்று விட்டு விட்டு வெளியேறி விட்டனர். இத்தாலியில் அம்புலன்ஸ் வருவதற்கு மணித்தியாலக் கணக்கில் தாமதித்த படியால் பலர் உயிரிழந்தனர்.

அதை விட பல ஐரோப்பிய நாடுகளில் முன்பு மருத்துவ மனையில் கிடந்த "சாதாரண" நோயாளிகள் (புற்று நோயாளிகள் போன்றவர்கள்) வெளியேற்றப் பட்டனர். அவர்களில் பலரும் மருத்துவ வசதி இன்றி வீடுகளில் கிடந்து இறந்துள்ளனர். அதெல்லாம் கொரோனா மரண எண்ணிக்கையில் வருவதில்லை. அதற்காக "இத்தாலியில் ஒரு மில்லியன் பேர் கொரோனாவால் மரணம். ஆதாரம் சமூகவலைத்தளங்கள்." என்று பொறுப்பற்ற முறையில் வதந்தி பரப்ப முடியாது.

இன்று ஐரோப்பாவில் உள்ள நிலைமை தான் அன்று சீனாவிலும் இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அதற்காக அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்று சொல்வதெல்லாம் மிகைப் படுத்தல். (சீனா என்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் வேறு.) நாம் விரும்பிய படி ஒரு தொகையை கற்பனை பண்ணலாம். அதை சமூகவலைத்தளங்களிலும் பரப்பலாம். ஆனால், அவையெல்லாம் உண்மை என்று அர்த்தம் அல்ல.

*****



நெதர்லாந்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படுவதை விட அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் மரணமுற்றவர்கள் அரச புள்ளிவிபரத்தில் சேர்க்கப் படுவதில்லை. ஒரு நோயாளி இறந்த பிறகு Covid- 19 இருக்கிறதா என்று பரிசோதிக்கப் படுவதில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு மட்டுமே தெரியும். அவை அரச பதிவில் உள்ளடக்கப் படுவதில்லை.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப் படுகின்றது. கொரோனா தொற்றுகுள்ளான நோயாளிகளை பதிவு செய்து வரும் அரச மருத்துவ ஆய்வு மையமான RIVM இது குறித்து அலட்சியமாக நடந்து கொள்கிறது.

அதாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் மட்டுமே கணக்கிடுகிறது. அதற்கு மாறாக வீடுகளில் இருந்து மரணமடையும் நோயாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது. இதனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உண்மையான எண்ணிக்கை அதை விட அதிகம்.

தகவலுக்கு நன்றி: Zembla)
Huisartsen: ‘Niet geteste patiënten die overlijden aan corona ontbreken in sterftecijfer RIVM’
 

Sunday, March 29, 2020

இத்தாலியை கைவிட்ட ஐரோப்பா; சீனா, கியூபா,ரஷ்யா மட்டுமே உதவுகின்றன!


இதோ இத்தாலி அரசின் வாக்குமூலம்: "கியூபா, சீனா, ரஷ்யாவில் இருந்து நிறைய உதவிகள் கிடைத்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு எதுவுமே செய்யவில்லை!"


எற்கனவே நான் இது பற்றி குறிப்பிட்ட நேரம், "சித்தாந்த அரசியல் பிரச்சாரம் செய்வதாக" உதாசீனப் படுத்தினார்கள். ஐரோப்பாவில் வாழும் சிலர் "இதோ பாருங்கள். ஜெர்மனி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறது." என்று காட்டினார்கள். அது ஒரு கண்துடைப்பு நாடகம். கொரோனா தொற்றுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் பலியான நாட்டில் இருந்து, வெறும் பத்துப் பதினைந்து பேரை அழைத்து சிகிச்சை அளிப்பது என்ன வகையான உதவி? ஜெர்மனி மட்டுமல்ல ஆஸ்திரியாவில் உள்ள மருத்துவமனைகளிலும் இத்தாலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் மிக மிகக் குறைந்த அளவினர் தான் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இத்தாலி ஊடகங்களில் நிறைய பேசப் படுகின்றது. அவர்கள் சீன, கியூபா, ரஷ்ய நாடுகளில் இருந்து என்னென்ன உதவிகள் கிடைத்துள்ளன என்பதை விபரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் உதவி பற்றி சொல்லிக் கொள்ள அப்படி என்ன இருக்கிறது? ஆபத்துக் காலத்தில் தான் உண்மையான நண்பர்களை அறியலாம் என்று இத்தாலியர்கள் பேசிக் கொள்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு, டச்சு பத்திரிகையில் வந்த முழுமையான கட்டுரை: Italië: wel steun van Russen, China en Cuba, nauwelijks van Europa

*****


உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! 
மருத்துவத்தில் தனியார்மயத்தை ஆதரிக்காதீர்கள்!!

ஓர் ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான போதிலும், எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலையில் கியூப மருத்துவர்கள் வந்ததை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் பொழுது மேற்குலக- முதலாளித்துவ விசுவாசிகளுக்கு மனம் பொறுக்கவில்லை. அவர்கள் தமது எஜமான விசுவாசத்தை காட்டுவதற்காக கியூப எதிர்ப்புப் பதிவுகளை வெளியிட்டு தம்மைப் போன்ற பிற விசுவாசிகளின் மனங்களை குளிர வைக்கின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனியில் வாழும் Raj Siva என்ற எழுத்தாளர் (https://www.facebook.com/rajsivalingam) பேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவு பல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

அவரது பதிவில் இருந்து: 
//உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! கியூபா, சீனா போன்ற நாடுகள் இத்தாலிக்கும் ஏன் ஏனைய நாடுகளுக்கும் கூட முடிந்தளவுக்கு உதவுகின்றனதான். மனிதாபிமானம் என்பது உலகப் பொது மறை. அதை யாரும் இன்னும் மறக்கவில்லை.//

ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் முதலில் காணாமல்போனது மனிதாபிமானம் தான். இத்தாலி, கியூபா போன்றதொரு மூன்றாமுலக ஏழை நாடு அல்ல. பணக்கார முதலாமுலகத்தை சேர்ந்த, அதிகளவு தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடு. அத்தகைய நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைய வேண்டிய காரணம் என்ன?

முதலில் இந்நாடுகளில் மருத்துவ வசதி தனியார்துறையிடம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அதன் அர்த்தம் காசு கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் கிடந்தது சாக வேண்டியது தான். ஏராளமான கொரொனோ நோயாளிகள் அம்புலன்ஸ் வராமலே வீடுகளில் கிடந்து வருந்தி இறந்திருக்கிறார்கள். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் தேசத்தின் மருத்துவக் கட்டுமானம் முழுவதும் வீழ்ச்சி அடைந்தது. அத்தகைய நிலைமையில் தான் கியூப மருத்துவர் குழு வருகை தந்தது.

இந்த நேரத்தில் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் நினைவுகூர வேண்டும். முன்பு அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடைகளை இத்தாலியும் ஆதரித்தது. இன்று வரையில் அந்தத் தடைகள் நீக்கப்படவில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது திருக்குறள். ஓர் ஏழை நாடான கியூபா பணக்கார நாடான இத்தாலி தனக்கு செய்த துரோகத்தை மன்னித்து ஆபத்துக் காலத்தில் உதவ வந்தது மெச்சத் தக்கது. அதுவும் வேறெந்த ஐரோப்பிய நாடும் உதவாத நிலையில் தான் வந்துள்ளது.

முகநூலில் இந்தப் பதிவை இட்டவரிடம் ஐரோப்பிய நாடுகள் ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுப்பியதும், ஜெர்மனி சில நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதாக ஓர் ஆதாரத்தை காட்டினார். இத்தாலி சென்று கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதும், ஒரு சில நோயாளிகளை அழைத்து சிகிச்சை அளிப்பதும் ஒரே விடயம் அல்ல. இத்தாலியிலும் முன்னர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் (வடக்கு இத்தாலி) தான் தொற்று காணப்பட்டது. அங்குள்ள மருத்துவ மனைகளின் வேலைப்பளு அதிகரித்ததும், நோயாளிகள் இத்தாலியின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். அதே மாதிரி தான் ஜெர்மனிக்கும் அனுப்பப் பட்டனர்.

இதை சுட்டிக் காட்டியதும், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், "அவர்களது அவஸ்தையை புரிந்து கொள்ளுமாறும்" கெஞ்சினார். சரி, அப்படிப் பார்த்தால் கியூபாவில் யாருக்கும் இந்த நோய் தொற்றவிலையா? (தகவலுக்காக: கியூபாவில் இதுவரை எண்பது பேருக்கு நோய் தொற்றி உள்ளது. அதில் இரண்டு பேர் மரணம்.)

இது ஒரு உலகளாவிய தொற்று நோய் என்று WHO கூட அறிவித்திருந்ததே? மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகள் தம்மிடம் நிறையப் பணம் இருந்தும் உதவ முன்வரவில்லை. அதே நேரம் ஓர் ஏழை நாடான கியூபா உதவ முன்வந்தது. எது ஞாலத்தில் பெரிது? பொதுவாக பணக்காரர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஏழைகள் தம்மிடம் இருப்பதை பங்கிட்டு வாழ்வார்கள்.

//ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து, தங்கள் ஒனறியத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், ஒன்றிய உள் கட்டமைப்பின் மூலம் உதவிகளைச் செய்ய ஆயத்தமாகிறார்கள். சில உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ட்ரில்லியன் யூரோக்களில் பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன.//

இது முற்றிலும் தவறான தகவல். பெருமளவில் கொரோனா தொற்றுதலால் பாதிக்கப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த மார்ஷல் உதவி போன்றதொரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருமாறு கோரின. அதற்காக அவசரகால நிதியத்தில் உள்ள பணத்தை செலவிடுமாறு கோரின. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அதற்கு மறுத்து விட்டன. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது.

மேலும் "ட்ரில்லியன் யூரோக்கள் தொகை"(?) ஒதுக்குவது கூட கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான உதவி அல்ல. அது இந்த நெருக்கடியால் வருமானம் இழந்த வணிக நிறுவனங்களுக்கான மீட்பு நிதி. இதை ஏற்கனவே ஒவ்வொரு நாடும் அறிவித்து விட்டன. ஆனால் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றிய உதவி பற்றி இன்னமும் எந்தக் கதையும் இல்லை. ஆகவே "பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன" என்பது இதைப் பதிவிட்டவரின் எதிர்பார்ப்பு மட்டுமே. உண்மை அல்ல.

//அது தவிர்ந்து, G20 நாடுகள் ஒன்றிணைந்து 5 பில்லியன் டாலர்களை உடனடிக் கொரோணா உதவிக்கும், இனி வரப்போகும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடுகளை மீட்பதற்கு, 5 முதல் 8 ட்ரில்லியன் டாலர் வரை ஒதுக்குவதெனவும் தீர்மானித்துள்ளன.//

உண்மையில் இது பற்றி G20 நாடுகள் எதையும் அறிவிக்கவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். G20 நாடுகளில் இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா தனது நாட்டையே மீட்க முடியாத ஏழை நாடு. இதற்குள் ஐரோப்பாவுக்கு நிதி வழங்கும் என எதிர்பார்ப்பது மடமைத்தனம். இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டாலே இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் துள்ளிக் குதிக்கும். முதலில் பணக்கார நாடுகள் உதவட்டும், அதற்குப் பிறகு பார்க்கலாம் என்று தான் கூறுவார்கள்.

//சீனாவில் மட்டும் கொரோணா இருந்தபோது, எத்தனையோ நாடுகள் அவர்களுக்கு மருத்துவ சாதனங்களை அனுப்பியுள்ளனர். கிருமி நீக்கிப் பொருட்களில் கொடுத்து உதவினர். இதுவெல்லாம் நாடுகளுக்கிடையில் நடக்கும் சாதாரண செயல்கள்தான்.//

உண்மையில் சீனாவில் மட்டும் கொரோனா இருந்த நேரம் பிற நாடுகள் அது தமது பிரச்சினை அல்ல என்று ஒதுங்கி இருந்தன. அமெரிக்கா ஒரு சில மருத்துவ சாதனங்களை அனுப்பியது உண்மை தான். ஆனால் அந்த உதவி மிக மிக சொற்பமானது. மேலும் எந்தவொரு நாடும் மருத்துவர் குழுவை அனுப்பவில்லை.

கியூப விஞ்ஞானிகள் சீனாவுக்கு சென்று கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பங்குபற்றினார்கள். அந்த ஆய்வின் விளைவாக கியூபாவில் தயாரிக்கப் பட்ட தடுப்பு மருந்தினை கியூப மருத்துவர்கள் பல நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அதுவும் இலவசமாக கொடுக்கப் படுகிறது. பணக்கார நாடுகள் உதவ முன்வராமல் பின்னடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதாவது, அவர்களிடம் தடுப்பு மருந்து இருந்தாலும் சந்தைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கப் பார்ப்பார்களே தவிர, ஒரு நாளும் இலவசமாக கொடுக்க மாட்டார்கள்.

//இது இப்படியிருக்க, “கியூபா, சீனா போன்ற கம்யூனிச நாடுகள் மட்டும்தான் கடவுளாக உதவிக்கு வந்தன. முதலாளித்துவ நாடுகள் உதவி செய்யாமல் தங்கள் புத்தியைக் காட்டிவிட்டன. ஜனநாயக நாடுகளுக்கு மனிதாபிமானமே செத்துப் போய்விட்டது. கியூபாதான் அனைவரையும் காப்பாற்றுகிறது” என்று சிலர் கிளப்பியிருக்கிறார்கள்.//

இது ஒன்றும் இப்போது தான் "கிளம்பிய" கதை அல்ல. கடந்த நூறு வருடங்களாக உலகில் அனைவருக்கும் தெரிந்த விடயம். கியூப மருத்துவர் குழு வேறொரு நாட்டுக்கு செல்வது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே பல்வேறு ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணி புரிகிறார்கள். எதற்காக அந்த நாடுகளில் கியூப மருத்துவர்களின் உதவி தேவைப் படுகிறது என்ற கேள்வி இங்கே கேட்கப் பட வேண்டும்.

இன்று எல்லா நாடுகளிலும் மருத்துவம் தனியார் துறையிடம் உள்ளது. அதன் அர்த்தம் பண வசதி உள்ளவர்கள் மாத்திரம் மருத்துவம் பார்க்கலாம். அதனால் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. அந்தக் குறையை போக்குவதற்கு தான் கியூப மருத்துவர்களை தருவிக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, பிரேசில், கயானா போன்ற பல நாடுகளில் கியூப மருத்துவர்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

முதலாளித்துவ நாடுகள் இலாபம் கருதாமல் எதையும் செய்வதில்லை. இலங்கை, இந்தியாவுக்கு அபிவிருத்திக்கான கடன் கொடுப்பது கூட அதனால் கிடைக்கும் வட்டித் தொகை காரணமாகத் தான். இந்த இடத்தில் சீனா கூட ஒரு முதலாளித்துவ நாடு, கம்யூனிச நாடு அல்ல என்பது இந்த பதிவருக்கு தெரியாதது வருத்தத்திற்கு உரியது.

இருப்பினும் சீன அரசியல் அமைப்பு வித்தியாசமானது. கிட்டத்தட்ட ஸ்கண்டிநேவிய நாடுகளைப் போன்று மக்கள் நலன் காக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. மிக அத்தியாவசியமான மருத்துவத் துறையை அரசே கட்டுப்படுத்துகிறது.

அதனால் தான் வூஹானில் கொரோனா தொற்று ஏற்பட்ட நேரம் பதினைந்து நாட்களில் ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப் பட்டது. மேலும் இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் கூட சீனாவின் தடுப்பு முறையை தான் பின்பற்றுகின்றன. அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

//இது பிரிவினையை இப்போது விளைவிக்கும் ஒன்று. இந்தச் செயல் மனவருத்தத்தைத் தருகிறது. ஏதோ இன்று உலகத்தையே இரட்சிக்க வந்திருக்கும் தேவதைகள் சீனாவும், கியூபாவும்தான் என்னும் போக்கில் புளகாங்கிதம் அடைகிறார்கள்.//

இதிலே என்ன "பிரிவினை" வந்து விட்டது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! இவரது பிரச்சினை முழுக்க முழுக்க மருத்துவம் தனியார்துறையின் கைகளை விட்டுப் போய்விடும் என்பது தான். ஏற்கனவே ஸ்பெயின் அனைத்து மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கி விட்டது. அது பிற நாடுகளிலும் நடந்து விடுமோ என்பது தான் இவரது அச்சம்.

அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அப்படி நடந்தால் மருத்துவமனைகளை நடத்தும் மாபியாக்களின் வருமானம் நின்று விடுமே என்பது தான் இவரது கவலை போலிருக்கிறது. அதைத் தான் "பிரிவினை" என்கிறார். அதாவது முதலாளிகள் நலன் சார்ந்த அரசியலுக்கும், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை பற்றிப் பேசுகிறார்.

//இங்கே நான் சீனாவையும், கியூபாவையும் குறைத்துக் கூறவேயில்லை. அவர்களே நினைக்காததை நாம் பிரிவினையாக உருவாக்குகிறோம்.//

அது தானே? அவர் எப்படிக் குறைத்துக் கூறுவார்? சீனாவிலும், கியூபாவிலும் மருத்துவம் தனியார் துறைக்கு திறந்து விடப் பட வேண்டும் என்பது தானே இவர் போன்றவர்களின் பேரவா? உலக நாடுகள் முழுவதும் மருத்துவத்தை தேசியமயமாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? மருத்துவம் மக்களுக்கானதா? அல்லது முதலாளிகளின் இலாப நோக்கிற்கானதா? அது தான் நாம் உருவாக்கும் "பிரிவினை".

இவர் மாதிரி பணக் கொழுப்பெடுத்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச மருத்துவம் தேவையற்ற ஆணி தான். ஆனால் வசதியற்ற ஏழை மக்களுக்கு அது அத்தியாவசியம். நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், உங்களால் வெறுக்கப்படும் வர்க்கப் பிரிவினையை பற்றிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

//இப்போது உலகின் அனைத்து நாடுகளும், தங்கள் எல்லைகளைப் பூட்டியபடி, ஏனைய நாடுகளிலிருந்து தனியாகப் பிரிந்திருந்தாலும், தமக்குள்ளே ஒற்றுமையாக இந்தப் பொது எதிரியை விரட்டிதடிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.//

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நடக்கும் சர்ச்சை குறித்தும், அவர்களுக்குள்ளே நிலவும் ஒற்றுமையின்மை குறித்தும் நான் கேள்வி எழுப்பியவுடன் "அவர்கள் படும் அவஸ்தையை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கெஞ்சினார். இதே பணக்கார நாடுகள் தானே தானே Red Cross, Medicin Sans Frontier போன்ற மருத்துவ தொண்டு நிறுவனங்களை வைத்திருக்கின்றன? அவற்றிற்கு பெருமளவு நிதி கொடுத்து ஆதரித்தன? இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் நடந்த நேரம் கேட்காமலே வந்து உதவிய தொண்டு நிறுவனங்கள் இப்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டன?

//இதற்குள், அரசியல் இலாபம் கருதி இப்படிப் பேசுவது கடைந்தெடுத்த சுயநலமே!//

சுயநலம் என்பது முதலாளித்துவத்துடன் கூடிப் பிறந்த குணம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவசர கால நிதியம் குறித்து சர்ச்சை எழுந்த நேரம் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் சம்மதிக்க மறுத்தது ஏனோ? அவை தமது நலன் மட்டுமே பெரிதென நினைத்தன. நெதர்லாந்து தனது நாட்டை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி வழங்கி உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டது. இது சுயநலம் இல்லையா? பிற நாடுகள் அதை இரட்டை வேடம் என்று குற்றம் சாட்டின.

அது போகட்டும். இந்தப் பதிவை எழுதியவருக்கு எந்த அரசியல் இலாபமும், சுயநலமும் இல்லையா? அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குவதை விட, மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மாபியாக்களின் இலாபம் முக்கியம் என்று கருதினால் அது தான் கடைந்தெடுத்த சுயநலம்.

Friday, March 20, 2020

கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்


அமெரிக்கா, பிரிட்டனில் வாழும் அதி பணக்காரர்கள் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக பங்கருக்குள் பதுங்க தயாராகிறார்கள். இதற்காக முன்பு இராணுவம் பயன்படுத்தி கைவிட்ட பங்கர்களை வாடகைக்கு எடுக்கிறார்கள். சில பணக்காரர்கள் தமது குடும்பத்தினர் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட பங்கர்களை புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உலக நாடுகளில் எங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த நாட்டில், அல்லது பிரதேசத்தில் பங்கர் கட்டுகிறார்கள். அந்த இடங்களுக்கு செல்வதற்கு தனியார் ஜெட் விமானங்களை தயாராக வைத்திருக்கிறார்கள்.


மேலும் தற்போது மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால், பணக்காரர்கள் அங்கு செல்வதில்லை. அதற்குப் பதிலாக மருத்துவர்கள், தாதியருக்கு நிறையப் பணம் கொடுத்து தம்மோடு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை பங்கர்களுக்கும் கூட்டிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் யாவும் CNN, Guardian போன்ற அமெரிக்க, பிரிட்டிஷ் ஊடகங்களில் வந்துள்ளன.

பணக்கார்கள் ஓர் ஊழிக்காலத்திற்கு தயாராகும் அதே நேரத்தில் ஏழைகள் கொரோனா வந்து சாகட்டும் என்று கைவிடப் படுகின்றனர். இன்று பல நாடுகளில் இலவச மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அதனால் பண வசதியில்லாத ஏழைகள் தான் பாதிக்கப் படுகின்றனர். எத்தனை ஆயிரம் ஏழைகள் இறந்தாலும் பரவாயில்லை. ஒரு சில பணக்கார்கள் மட்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்பது தான் முதலாளித்துவம்.

மறு பக்கம் இந்த பேரிடர் காலத்தில் சோஷலிசம் என்ன செய்கிறது?
ஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு அத்தனை மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியுள்ளது.(BBC) ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக மருத்துவத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பது சோஷலிசத்தின் கோரிக்கைகளில் ஒன்று. அப்போதெல்லாம் அதனை சுதந்திர சந்தையின் பெயரால் நிராகரித்து வந்த முதலாளித்துவவாதிகள் (இங்கு ஸ்பானிஷ் அரசு), இன்று தாமே முன்வந்து மருத்துவமனைகளை தேசியமயமாக்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அது முன்பு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சி விட்டது. அப்படி இருந்தும் இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை! எல்லா நாடுகளிலும் தத்தமது தேச எல்லைகளை மூடுவதில் மட்டுமே கவனமாக இருக்கின்றன.

ஏற்கனவே கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டெழுந்த சீனா, இத்தாலிக்கு உதவுவதற்கு மருத்துவக் குழுவொன்றை அனுப்பியது. அத்துடன் மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனைக் கருவிகளையும் அனுப்பி உதவியது.

அதே நேரம் கியூபாவும் மருத்துவர்களின் குழுவொன்றை இத்தாலிக்கு அனுப்பியது. ஏற்கனவே பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கெல்லாம் கியூப மருத்துவர்கள் அனுப்பப் படுவது தெரிந்த விடயம். அவை பெரும்பாலும் மூன்றமுலக நாடுகள். ஆனால், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டுக்கு கியூப மருத்துவர்கள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை. இத்தனைக்கும் இத்தாலி, மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன.

கொரோனாவை குணப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்ற போதிலும், கியூபா சில மருந்துகளை தயாரித்துள்ளது. பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அந்த மருந்துகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. பிரேசிலை ஆளும் தீவிர வலதுசாரி ஜனாதிபதி போல்சனாரோ முன்பொரு தடவை கியூபாவுடன் முரண்பட்டு தன்நாட்டில் சேவையில் ஈடுபட்டிருந்த கியூப மருத்துவர்களை வெளியேற்றி இருந்தார். தற்போது அவரே மண்டியிட்டு கியூப மருத்துவர்கள் மீண்டும் தன் நாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதற்கிடையே இன்னொரு சம்பவமும் கியூபாவின் மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கரீபியன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த, கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி திருப்பி அனுப்பின. பிரிட்டிஷாரின் "தொப்புள்கொடி உறவுகளான" அமெரிக்கர்கள் கூட அந்தக் கப்பலை உள்ளே விட மறுத்து விட்டனர். இறுதியில் கியூபா மட்டும் கப்பலில் இருந்தவர்கள் தரையிறங்க அனுமதித்தது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தது. கியூபாவின் சோஷலிசம் தான் மனிதாபிமானம் என்றால் என்னவென்று உலகிற்கு புரிய வைத்தது என்றால் அது மிகையாகாது.

Thursday, March 19, 2020

சோவியத் யூனியனில் Sex இருக்கவில்லை!

There was no "sex" in USSR!
It was called "love"! 
"சோவியத் யூனியனில் Sex இருக்கவில்லை!" - எண்பதுகளில் அமெரிக்க- சோவியத் கூட்டுத்தயாரிப்பிலான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் கலந்து கொண்ட ஒரு பெண் செக்ஸ் தொடர்பாக நடந்த விவாதத்தில் இவ்வாறு கூறியிருந்தார். அன்று அந்தக் கூற்று மேற்கத்திய நாடுகளில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டது. பலர் இதை கேலிக்குரிய விடயமாக எடுத்தனர்.

இந்த சம்பவமானது அன்றிருந்த முதலாளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கும் இடையிலான மாறுபட்ட கலாச்சாரங்களுக்கு ஓர் உதாரணம். நிச்சயமாக அன்று சோவியத் யூனியனில் செக்ஸ் இருந்தது. அது சாதாரணமான விடயம். ஆனால் "செக்ஸ்" என்ற சொல் அங்கு வாழ்ந்த மக்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப் பட்டது என்பது தான் முக்கியம்.

சோவியத் யூனியனில் மட்டுமல்ல, அனேகமாக எல்லா சோஷலிச நாடுகளிலும், "செக்ஸ்" என்ற வார்த்தையை பாவிப்பது ஒரு பண்பாடற்ற செயலாகக் கருதப் பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் பாலுறவை "காதல் செய்வது" (ஆங்கிலத்தில்: making love) என்று அழைத்தனர். அதை "செக்ஸ் செய்வது" என்று கூறுவது அருவருப்பான, அநாகரீகமன விடயமாகக் கருதப் பட்டது. அரசியல் மொழியில் சொன்னால் "செக்ஸ் என்பது ஒரு சீரழிந்த முதலாளித்துவ கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது."

சோஷலிச நாடுகளில் "செக்ஸ்" என்பது ஏறக்குறைய ஒரு கெட்ட வார்த்தை போன்று கருதப் பட்டது. ஆபாசப் படங்களில் நடிப்பவர்களும், பாலியல் தொழிலாளிகளும் மட்டுமே "செக்ஸ்" என்ற வார்த்தையை பாவிப்பார்கள். மணம் முடித்த தம்பதிகள், காதலர்கள் தமக்கிடையிலான பாலியல் உறவை செக்ஸ் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக "காதல்" என்பார்கள். அவர்கள் காதல் வேறு, காமம் வேறு என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தொண்ணூருகளில் முதலாளித்துவம் வந்த பின்னர் அந்த நாடுகளை சேர்ந்த மக்களும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கி விட்டனர். தற்கால இளைஞர்கள் செக்ஸ் என்ற சொல்லை சர்வசாதாரணமாக பாவிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் "காதல் செய்வது" என்று தான் சொல்கிறார்கள்.

Sunday, March 15, 2020

பின்நவீனத்துவம் சாதிப் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஏ.ஜி. யோகராஜா "எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்!" என்ற பெயரில் ஒரு நூல் எழுதி இருக்கிறார். ஈழத்து சாதிய பிரச்சினைக்கு அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அதை நூலின் அட்டையிலேயே "சமூக சமத்துவம்: அடுத்த கட்ட நகர்வு குறித்த முன் வரைவு." என்று குறிப்பிட்டு விடுகிறார். இந்த நூலானது, "ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான கடமைகள், ஒழுக்க நெறிகள் பற்றி எழுதியுள்ள கையேடு" போன்ற வடிவில் எழுதப் பட்டுள்ளது!


ஏ.ஜி. யோகராஜா எனக்கும் நண்பர் தான். அவர் ஏற்கனவே பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களையும் நான் அறிவேன். யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள அவரது சொந்த ஊருக்கும் நேரில் சென்றிருக்கிறேன். ஆகவே இது அவர் எழுதிய இந்த நூல் மீதான விமர்சனமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த நூலுக்கு பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. ஒருவேளை யோகராஜாவும் ஒரு பின்நவீனத்துவவாதி என்பதால் ஆதரவளித்திருக்கலாம். இந்த நூலில் அப்படி என்ன எழுதி இருக்கிறது என்பதை அ. மார்க்ஸின் முன்னுரையை வாசித்தாலே புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவராலும் சில இடங்களில் உடன்பட முடியவில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

நூலாசிரியர் யோகராஜாவுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள, நமக்குத் தெரிந்த அரசியல் கோட்பாடுகள் அனைத்துடனும் முரண்பாடுகள் உள்ளன. அவர் அடிக்கடி கம்யூனிசத்தின் போதாமை குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார். அதே நேரம், முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை (?). தலித் மக்களின் விடுதலைக்கு அம்பேத்காரியம், பெரியாரியம் இருப்பதையும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே இந்த நூலில் அவராகவே ஒரு புதிய அரசியல் கோட்பாட்டை படைத்திருக்கிறார். (இது தான் பின்நவீனத்துவம்!) அது என்னவென்று பார்ப்போம்.

"அதிகாரம் 1. மொழியதிகாரத்தின் பிடியிலிருந்து விடுபடல்..." (இது அவரே கொடுத்துள்ள தலைப்பு.) இதில் அவர் தனது நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தி விடுகிறார். பெரும்பாலும் யாழ் குடாநாட்டு தமிழ்ச் சமூகம் பற்றிய "சமூகவியல்"(?) பார்வை தான் இந்த நூலின் சாராம்சம். உண்மையில் இந்த நூல் அரசியலும் இல்லாமல், சமூக விஞ்ஞானமும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. இந்த நூலை வாசித்து முடித்த பின்னர் உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் கவலைப்படாதீர்கள். அது தான் பின்நவீனத்துவம்!

இந்த நூலாசிரியர், ஈழத்து தலித் அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களை "விளிம்பு நிலைச் சமூகங்கள்" என்று குறிப்பிடுகிறார். அது அவர்களது சமூக முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில், நூல் முழுவதும் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது, "சாதி என்ற சொல்லை பயன்படுத்தா விட்டால் சாதி ஒழிந்து விடும்" (லாஜிக்?) என்பது போன்றதொரு வாதம் இது. இதற்கு நூலாசிரியர் கொடுக்கும் விளக்கத்தை அப்படியே தருகிறேன்: 
//பல்வேறு காரணங்களால் பஞ்சமர், தாழ்த்தப்பட்ட மக்கள், மற்றும் தலித்துகள் எனும் சொல்லாடல்களைத் தவிர்த்து; குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைக் குறிக்கும் வகையில் தோற்றம் பெற்ற விளிம்புநிலைச் சமூகங்கள் எனும் சொல்லாடலின் கீழ் ஒன்றிணைக்கப் படுகின்றனர்.//

இங்கே "விளிம்பு நிலைச் சமூகங்கள்" என்ற சொற்பதம் பிழையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. உலகம் முழுவதும், அமெரிக்கா, பிரிட்டன், இவர் வாழும் சுவிட்சர்லாந்து ஆகிய முதலாம் உலக நாடுகளிலும் விளிம்புநிலைச் சமூகங்கள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் வேலை இழந்து, வீடிழந்து, சொத்துக்களை இழந்து தெருவில் படுக்கும் அனைவரும் விளிம்புநிலைச் சமூகம் தான். பாலியல் தொழிலாளர்களையும் இதற்குள் அடுக்கலாம். மூன்றாமுலக நாடுகளில் நிரந்தரமாக சேரிகளில் வசிப்பவர்களும் அதற்குள் அடக்கம்.  இது பொருளாதாரக் காரணங்களினால் ஏற்படும் தோற்றப்பாடு. 

ஒரு காலத்தில் தொழிலதிபராக கொடி கட்டிப் பறந்தவரும் மீளாக் கடன்களில் மூழ்கி விளிம்புநிலைச் சமூகத்தவர் ஆகலாம். ஆனால் சாதியமைப்புமுறை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே "சாதியில் குறைந்தவர்" முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப் படலாம். அவர் எவ்வளவு படித்திருந்தாலும், நிறையப் பணம் வைத்திருந்தாலும், சமூகத்தில் அவருக்கான சாதிய முத்திரை மாறாமல் இருக்கும். சாதிய சமூகத்திற்கும், விளிம்பு நிலைச் சமூகத்திற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவதால் சமூக சமத்துவம் ஏற்பட்டு விடாது.

நூலாசிரியர் இன்னும் இரண்டு "புதிய" சொற்களை எமக்கு "அறிமுகப்" படுத்துகிறார். சாதிவெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களை இனிமேல் "பின்நிலைச் சமூகம்" என்றும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்காளர்கள் இனிமேல் "முன்நிலைச் சமூகம்" என்றும் அழைக்கப்பட வேண்டும் என்கிறார். உண்மையில் இந்த நூல் எழுதிய யோகராஜா தமிழ்த் தேசியக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், "தமிழர்கள் எல்லாம் ஒரே இனம்" என்ற கொள்கை கொண்ட தமிழ்த்தேசியவாதிகளின் மனதில் பால் வார்க்கும் வகையில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவேளை "தமிழர்களை ஒன்றுபடுத்தும்" அரசியல் கோட்பாடு எதுவென தெரியாமல் தவித்திருந்தால், இந்த நூல் அதற்கு உதவலாம்.

இனவெறியர்கள், மதவெறியர்கள் போன்று சாதிவெறியர்களும் சமூகத்தில் உள்ளனர். அவர்களை "நல்வழிப்படுத்தும்" முகமாக "பின்நிலைச் சமூகம்" என்று குறிப்பிடுவதால் எதுவும் மாறப் போவதில்லை. ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்க இன/மத/சாதி வெறியர்களை இனங்காண்பதும், அவமானப் படுத்துவதும் மக்களின் வழமையான போராட்டக் குணாம்சங்கள். (வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இந்தப் போராட்டம் நடக்கிறது.) இந்த தீயசக்திகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கு "தமிழ் தேசிய இன" அடையாளம் கொடுப்பதும், "பின்நிலைச் சமூகம்" என்று வகைப் படுத்துவதும் ஒன்று தான். இரண்டும் ஒரே நோக்கம் கொண்டவை. இதன் மூலம் நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப் படுகிறது. அதையே இந்த நூலாசிரியர் செய்ய நினைக்கிறார்.

மேலும் இவர் நேர்மறையான அர்த்தத்தில் வகைப்படுத்தும் "முன்நிலைச் சமூகம்" எப்போதும் முன்நிலையானதும் அல்ல. இன்னொரு இடத்தில் அதில் உள்ளவர்கள் பின்நிலைச் சமூகமாக காட்டிக் கொள்ளலாம். விரிவாகச் சொன்னால், ஓரிடத்தில் சாதிய சமத்துவம் பாராட்டும் ஒருவர், இன்னோர் இடத்தில் இஸ்லாமிய வெறுப்பைக் காட்டலாம். தமிழ்த்தேசியம் பேசும் பலரை இதற்கு உதாரணம் காட்டலாம். ஒரு பக்கம் சாதிய முரண்பாடுகளை சமரசப் படுத்திக் கொண்டே, மறுபக்கம் இனவாத - மதவாத முரண்பாடுகளுக்கு எண்ணை ஊற்றி தீ வளர்ப்பார்கள். இப்படிப் பலரை நூலாசிரியர் கண்டிருப்பார். இவர்களை எல்லாம் "முன்நிலைச் சமூகம்" எனலாமா?

யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் பல வெள்ளாள "உயர்சாதி" சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அதை இங்கே நன்றியுடன் நினைவுகூரும் நூலாசிரியர் "முன்நிலைச் சமூகம் என்ற சொல்லாடலால் விஷேஷிக்கப் படுகின்றனர்" என்கிறார். அன்று போராட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினால் வர்க்க அடிப்படையில் அரசியல்மயப் படுத்தப் பட்டவர்கள். ஒரு சில லிபரல் புத்திஜீவிகளும் இருந்ததை மறுப்பதற்கில்லை. அவர்கள் எல்லோரும் தாம் நம்பிய அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடு காரணமாக முற்போக்காளர்களாக இருந்தவர்கள். அதற்காக தமது குடும்ப உறுப்பினர்களுடனும் முரண்பட்டவர்கள். இது உலகம் முழுவதும் உள்ள சமூக யதார்த்தம். இதே மாதிரியான விமர்சனத்தை அ. மார்க்ஸ் கூட தனது முன்னுரையில் எழுதி உள்ளார். யாழ்ப்பாணத்தில் சைவ மத அடிப்படைவாத சிவ சேனையின் வருகை பற்றி இந்த நூல் எதுவும் பேசவில்லை என்று கூறி உள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் பெரும்பாலான தமிழ் குடியேறிகள் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதற்குக் காரணம் அந்த நாடுகளில் பெரும்பாலும் இடதுசாரிகள் மட்டுமே வெளிநாட்டுக் குடியேறிகள் மீது அனுதாபம் காட்டுகின்றனர். அப்படியானவர்களை தான் யோகராஜா "முன்நிலைச் சமூகம்" என்று புகழ்கிறார். இதை அவர் நமக்கு ஆன்மீக ஒளியில் காண்பிக்கிறார். "...சமூகத்திற்கு விடிவெள்ளிகளாக துலங்கிக் கொண்டிருக்கும் மனிதஜீவிகளையும் காலத்திற்குக் காலம் இதே சமூகம் பிரசவித்துக் கொண்டு தான் இருக்கிறது." என்கிறார். இந்த "முன்நிலைச் சமூகத்தினர்" எமக்காக தேவதூதர்களால் அனுப்பப் படவில்லை. அவர்கள் சுயமாகவோ அல்லது கட்சி சார்பாகவோ அரசியல் கற்றுக் கொண்டதால் தம்மைத் தாமே முற்போக்காளர்களாக மாற்றிக் கொண்டவர்கள். அதே நேரம், குறிப்பிட்ட ஒரு விடயத்தில் முற்போக்காளராக இருக்கும் ஒருவர் இன்னொரு விடயத்தில் பிற்போக்காளராக இருக்கலாம்.

நூலாசிரியர் யோகராஜா தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களை தனியாக நிறுவனமயப் படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தை " அடுத்த கட்ட நகர்வு குறித்த முன் வரைவு" என்பதன் மூலம் அறியத் தருகிறார். ஆனால் இது பல இடங்களில் இடறுகிறது. சொல்லதிகாரம் மூலம் சாதிகளை இல்லாதொழிக்க கிளம்பியவர் தவிர்க்கவியலாது சாதிகளை பெயர் சொல்லி குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்காங்கே ஏற்படுகிறது. ஈழத்தில் பலவகையான சாதிப்பிரிவுகள் இருந்தாலும், நூலாசிரியர் "நளவர், பள்ளர்" ஆகிய இரண்டு சாதிகள் மீது மட்டுமே அதிக கவனத்தைக் குவிக்கிறார். அதற்குக் காரணம் அவர்கள் பாரம்பரியமாக பனை மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பதே. இந்தியாவில் நாடார் சமூகம் மாதிரி அவர்களும் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்கிறார்.

யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியான (மன்னிக்கவும், "பின்நிலைச் சமூகம்") வெள்ளாளர்கள் பெருமளவு நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி கடலோர பிரதேசங்களில் வாழும் கரையார்கள் கடல் வளத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆகவே, பனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் நளவர், பள்ளர், பனை மரங்களுக்கு சொந்தம் கொண்டாடுவதில் என்ன தவறு என்பது தான் இவரது வாதம். பனைமரங்கள் ஆகாயத்தில் தொங்கும் தோட்டத்தில் வளர்வதாக இருந்தால் இவரது வாதத்தில் எந்தத் தவறும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பனைமரங்கள் எல்லாம் நிலவுடைமையாளர்களான வெள்ளாளரின் காணிகளில் தானே உள்ளன?

ஒரு பேச்சுக்கு, வயல் நிலங்கள் வெள்ளாளர்களுக்கு, பனைமரக் காணிகள் நளவர் - பள்ளருக்கு என்று பிரித்துக் கொடுத்து விடலாம். கடல் முழுவதும் கரையாருக்கு கொடுப்பதில் இவருக்கு ஆட்சேபனை இருக்காது. ஆனால், கரையோரப் பிரதேசங்களில் கடற் தொழிலை நம்பி வாழும் திமிலர் எனும் தாழ்த்தப் பட்ட சாதியினர் வசிக்கிறார்களே? அவர்களுக்கு எதைக் கொடுப்பது? அது மட்டுமல்ல, எந்த வித இயற்கை வளத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியாமல் நகரங்களை அண்டி வாழும் சக்கிலியர்கள், பறையர்கள் போன்ற சாதிய சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதியினருக்கு என்ன தீர்வு? நான் இங்கே உட்சாதிப் பிரிவுகள் பற்றிப் பேசவில்லை. ஈழத்தில் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் மாறுபட்ட சமூக- பொருளாதார அடிப்படைகளை கொண்டுள்ளனர். எல்லா சாதிகளும் சமமாக பொருளாதார வளர்ச்சி அடையவில்லை.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தில் வெள்ளாளர்களின் விகிதாசாரம் அதிகமாக இருந்ததாகவும், ஈழப்போரின் பின்னர் அவர்களது எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும், தற்போது தாழ்த்தப்பட்ட சாதியினர் அறுபது சதவீதமாக இருக்கலாம் எனவும் நூலாசிரியர் நினைக்கிறார். (உண்மையில் இப்படி ஒரு கதையாடல் யாழ் குடாநாட்டில் இருப்பதை மறுப்பதற்கில்லை.) அதை அடிப்படையாகக் கொண்டு தனது "முன்வரைபை" சமர்ப்பிக்கிறார். இந்தியா மாதிரி, இலங்கையில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடப்பதில்லை. மக்கட்தொகையில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

ஈழப்போருக்கு முந்திய காலத்தில் வெள்ளாளர்கள் 40% - 50% இருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பெரும்பாலும் வெள்ளாளர்கள் தான். அதற்கு மாறாக பெரும்பாலான தாழ்த்தப்பட்ட சாதியினர் தாயகத்தில் தங்கி இருந்தனர். அதை மட்டுமே வைத்துக் கொண்டு யாழ் குடாநாட்டில் வெள்ளாளரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து விட்டது என்று கருத முடியாது. முப்பதாண்டு கால போரில் இலட்சக்கணக்கானோர் கொல்லப் பட்டாலும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும் ஈழத்தமிழர் சனத்தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்றது.

மேலும் சாதிய கட்டமைப்பில் சனத்தொகை விகிதாசாரம் எந்தத் தாக்கத்தையும் செலுத்துவதில்லை. உதாரணத்திற்கு தமிழ்நாட்டு நிலைமையை எடுத்துப் பார்க்கலாம். அங்கு சாதிய பிரமிட்டின் உச்சியில் இருக்கும் பிராமணர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதே நேரம் அடித்தளத்தில் இருக்கும் பறையர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இருப்பினும் சமூகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் மேன் நிலைச் சாதியினர் தான் பொருளாதார துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதைக் கொண்டு அரசியல்- சமூக மாற்றங்கள் வந்து விடாமல் தடுக்க முடிகிறது. அதே நிலைமை தான் யாழ்ப்பாணத்திலும் உள்ளது. சனத்தொகையில் வெள்ளாளரின் எண்ணிக்கை குறைந்தாலும் பொருளாதாரத்தில் அவர்களது ஆதிக்கம் அதிகம்.

இன்று தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மத்தியதர வர்க்கத்தினர் பெருமளவு காணிகளை வாங்கிச் சேர்த்தாலும், நிலத்தின் மீதான அதிகாரம் வெள்ளாளரின் கையில் தான் உள்ளது. அந்த சாதியை சேர்ந்த நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கு சொந்தமான காணிகளின் தொகையும் மிக மிக அதிகம். இப்போதும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் உள்ளனர். இந்த பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளை போர்வையாக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசியல் சக்திகள் முன்வர வேண்டும். அதை இந்த நூலாசிரியர் ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயக அடிப்படையில் "விளிம்பு நிலை சமூகத்தவர்" அதிக பிரதிநிதித்துவம் கோர வேண்டும் என்கிறார். அது சரியே. ஆனால், நிலங்களையும், வளங்களையும் பகிர்ந்தளிக்கும் வரையில் சாதிய அமைப்பு மாறப் போவதில்லை. ஏனென்றால் தாம் ஆண்டு அனுபவிக்கும் சொத்துக்களை விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இல்லை. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. "முன்நிலைச் சமூகத்தவரே" என்று மயிலிறகால் வருடிக் கொடுத்தாலும் எதுவும் நடக்காது. 


Wednesday, March 11, 2020

Crash Landing on You: ஒரு வட கொரிய - தென் கொரிய காதல் கதை

Crash Landing on You - அவசியம் பார்க்க வேண்டிய Netflix தொலைக்காட்சித் தொடர். வட கொரியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் கண்டு களிக்கலாம். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப் பட்டுள்ளது.

இது ஒரு தென் கொரிய தொலைக்காட்சித் தொடர். கதையின் பெரும் பகுதி வட கொரியாவில் நடப்பதைப் போன்று ஸ்டூடியோவில் படமாக்கப் பட்டது. இதற்காகவே வட கொரிய மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்திருந்தனர். தென் கொரியாவில் வாழும் வட கொரிய அகதிகளும் தமது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டதாக பாராட்டி உள்ளனர்.

இந்தத் தொடரின் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் கற்பனை தான். சுருக்கமாக ஒரு வழமையான காதல் கதை. மென்மையான காதல் உணர்வுகள், நகைச்சுவைக் காட்சிகள், வில்லனின் சூழ்ச்சிகள், மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் அடங்கிய ஒரு சாதாரண தொலைக்காட்சித் தொடர். சிலநேரம் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தென் கொரியாவில் ஒரு பெரிய குடும்ப வணிக நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபரின் மகளான கதாநாயகியை சுற்றி கதை நகர்கிறது. அவள் ஒரு தடவை பொழுதுபோக்காக பாரசூட்டில் பறக்கும் போது அடித்த சூறாவளிக்குள் மாட்டிக் கொண்டதால் வாழ்க்கை திசை மாறுகிறது. தற்செயலாக வட கொரியாவுக்குள் வந்து இறங்கி விடுகிறாள். அங்கு எல்லைக் காவல் பணியில் இருக்கும் கதாநாயகனான வட கொரிய இராணுவ கேப்டன் மேல் வந்து விழுகிறாள்.

அங்கிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப் பட்ட சூனியப் பிரதேசத்தின் ஊடாக ஓடுகிறாள். இருப்பினும் வழி தவறி திரும்பவும் வட கொரியாவுக்குள் வந்து விடுகிறாள். அதுவும் கதாநாயகன் குடியிருக்கும் கிராமத்திற்கே நேரே வந்து விடுகிறாள்! கதாநாயகன் அவளைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்க உடன்படுகிறான். அவனது படைப்பிரிவில் பணியில் உள்ள வீரர்களும் அந்த இரகசியத்தை பாதுகாக்கிறார்கள்.

காதாநாயகன் ஒரு சாதாரணமான கடைநிலை இராணுவ கேப்டன் போன்று காட்டப் பட்டாலும், அவனும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு வட கொரிய தலைவரின் மகன் தான். முன்பொரு தடவை எல்லைப்புற பகுதியில் நடந்த தனது சகோதரனின் மர்ம மரணத்திற்கு காரணம் யார் என்று துப்புத் துலக்குவதற்காக எல்லைப் படையில் சேர்ந்திருக்கிறான். சகோதரனின் கொலைக்குக் காரணமான இராணுவ அதிகாரி தான் வில்லன். மாபியாக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கிறான்.

ஒரு தடவை எல்லைப் பகுதி கிராமத்தில் நடக்கும் வழமையான தேடுதலின் பொழுது வீட்டிற்குள் மறைந்திருந்த கதாநாயகி கண்டுபிடிக்கப் படுகிறாள். அந்நேரம் தலைநகர் பியாங்கியாங் சென்றிருந்த கதாநாயகன் விடயத்தை கேள்விப் பட்டு உடனே அங்கே வருகிறான். கதாநாயகி தென் கொரியாவில் இரகசிய உளவு வேளைகளில் ஈடுபட்டு நாடு திரும்பி இருப்பதாகவும், அவள் தனக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்றும் பொய் சொல்லி காப்பாற்றுகிறான். இருப்பினும் வில்லனான இராணுவ அதிகாரிக்கு சந்தேகம் தீரவில்லை. தொடர்ந்து ஆராய்கிறான். இதற்கிடையில் பியாங்கியாங் நகரில் இருந்து கதாநாயகனுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட முறைப்பெண் அவனைத் தேடி வருகிறாள்.

கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையிலான காதல் நிறைவேறியதா? கதாநாயகி தென் கொரியாவுக்கு திரும்பிச் சென்றாளா? மிகுதியை தொலைக்காட்சி தொடர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற கதை வேறொரு இடத்திலும் நடக்கலாம். தற்செயலாக வழிதவறிச் செல்லும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், திக்குத் தெரியாத கிராமத்தில் மாட்டிக் கொள்வதும், மாளிகை போன்ற வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்தவள் ஏழையின் குடிசையில் எளிமையாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும், ஏற்கனவே பல தமிழ்த் திரைப்படங்களில் வந்த கதை. அதே தான் இந்த தென் கொரிய படத்தின் கதையும்! வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகள் மட்டும் இதில் உள்ள சிறப்பம்சம் எனலாம்.

வட கொரிய கிராமத்தில் வந்து சேரும் முதல் நாளில் இருந்து, கதாநாயகி கலாச்சார அதிர்ச்சிக்கு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது. அங்கு யாரிடமும் மொபைல் போன் கிடையாது. (ஆனால் தலைநகர் பியாங்கியாங்கில் வசிப்பவர்கள் மொபைல் போன் பாவிக்கிறார்கள்.) வீட்டில் குளிர் சாதனப் பெட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, காய்கறிகளை ஒரு கிடங்கிற்குள் போட்டு மூடும் (kimchi) பாரம்பரிய குளிரூட்டும் முறையை பயன்படுத்துகிறார்கள். (கதாநாயகி அதை இயற்கை வழியிலான "Organic" முறை என்று புரிந்து கொள்கிறாள்.) அத்துடன் குளிப்பதற்கு சுடு நீர் கிடையாது. தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தொட்டிக்குள் ஊற்றி விட்டு, நீராவி வெளியேற விடாமல் சுற்றிவர பொலிதீன் திரையால் மூடிக் கொண்டு குளிக்க வேண்டும்.

கொரிய மொழி ஒன்று தான் என்றாலும், வடக்கிலும் தெற்கிலும் பேசப்படும் மொழயில் வேறுபாடு இருக்கிறது. அது பிராந்திய பேச்சு மொழி வேறுபாடு என்பதற்கும் அப்பால், சில சொற்களின் பயன்பாடும் மாறுபடுகின்றது.(படத்தில் தென் கொரிய நடிகர்கள் வட கொரிய வட்டார மொழி பேசுகின்றனர்.) அதனால் கதாநாயகி தென் கொரியாவில் இருந்து வந்தவள் என்பதை அனைவரும் எடுத்த உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். அவளும் தான் "தென் கொரியாவில் வசிக்கும் இரகசிய உளவாளி" என்று சொல்லித் தான் ஊர் மக்களுடன் பழகுகிறாள். அதை அவர்களும் நம்புகிறார்கள். வட கொரிய பெண்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகக் காட்டப் படுகின்றது. பெண்கள் ஊர் வம்பளப்பது எங்கும் உள்ள வழக்கம் தான். தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படியோ, அப்படித் தான் வட கொரியப் பெண்களும் இருக்கிறார்கள்.

கிராமிய மக்களின் கள்ளங்கபடம் அற்ற மனப்பான்மையும், நகரத்து மனிதர்களின் சூது வாது கொண்ட மனமும் தொடரில் சிறப்பாகக் காட்டப் படுகின்றது. உதாரணத்திற்கு, தென் கொரியாவில் கதாநாயகி காணாமல்போன நாள் முதல் அவளது சகோதரர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதும், நிறுவனத்தில் அவளின் பெயரில் உள்ள பங்குகள் தமக்குச் சேர வேண்டும் என்று சண்டை பிடிப்பதும் தத்ரூபமாக காட்டப் படுகின்றது. வட கொரிய கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பங்கு என்றால் என்னவென்று தெரியாது. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையாக வாழ்கிறார்கள்.

இன்றைய வட கொரியா சோஷலிச நாடும் அல்ல, அதே நேரம் முதலாளித்துவ நாடும் அல்ல. அது இரண்டும் கலந்த சமூக பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. பியாங்கியாங் நகரில் தனியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் வட கொரிய தொழிலதிபர்கள் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களது நுகர்வுக்கு தேவையான நவீன பாவனைப் பொருட்கள் அனைத்தும் அங்கு கிடைக்கின்றன. கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் தென் கொரிய பாவனைப் பொருட்கள் கிராமிய சந்தைகளிலும் விற்கப் படுகின்றன. அது எல்லோருக்கும் தெரிந்த "இரகசியம்"! அத்துடன் தென் கொரிய தொலைக்காட்சி டிராமா சீரியல்களும் வட கொரியர்களால் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. அரசாங்கம் இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது.

நீங்கள் இதுவரை காலமும் வட கொரியா பற்றி கேள்விப் பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் இந்தத் தொடரை பார்த்த பின்னர் விலகி விடும். வேண்டுமென்றே வட கொரியா பற்றிய பொய்ச் செய்திகளை பரப்பி வரும் விஷமிகள் இதைப் பார்த்தாலும் திருந்தப் போவதில்லை. தென் கொரியாவில் இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியானதும், வலதுசாரி கிறிஸ்தவ லிபரல் கட்சி அதற்கு எதிராக வழக்குப் போட்டது. அதாவது, வட கொரியா பற்றி நல்லபடியாக பேசுவது தென் கொரியாவில் ஒரு குற்றமாம்! அந்நாட்டில் அப்படியும் ஒரு சட்டம் உள்ளது!! அதனால் தான் பலர் வட கொரியா பற்றி இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் மனம்போன போக்கில் அடித்து விடுகிறார்கள். 


Tuesday, March 10, 2020

நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி"


நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி". தோழர் இரா. பாரதிநாதன் ஏற்கனவே எனக்கு ஓர் அரசியல் போராளியாக அறிமுகமானவர். நான் வாசித்த அவரது முதல் நாவல் இது தான். இந்த நூலை வாசிக்கத் தொடங்கும் போதே வாசகரை தனது எழுத்தால் கவரும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருக்கிறது. உண்மையை சொன்னால், ஒரு எட்டு மணிநேர ரயில் பயணத்தின் போது 230 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதையும் வாசித்து முடித்து விட்டேன்.

இந்த நாவல் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதில் வரும் பாத்திரங்கள் கற்பனை தான். ஆனால், மக்களின் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது உண்மை. அதை ஏற்கனவே பலர் அறிந்திருப்பார்கள். உண்மைச் சம்பவங்களுக்கு பொருத்தமாக ஒரு கதையை புனைவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அரசியல் கருத்துக்களை கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். அது தோழர் பாரதிநாதனிடம் இயற்கையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த மீத்தேன் எரிவாயு எதிர்ப்புப் போராட்டம் தான் கதைக்கரு. மீத்தேன் எரிவாயு என்றால் என்ன? எதற்காக மக்கள் அதை எதிர்த்துப் போராடினார்கள்? உண்மையில் இது போன்ற விபரங்கள் அன்றாடம் அரசியல் ஈடுபாடு கொண்ட பலருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. பாரதிநாதன் அந்த விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து எழுதி இருக்கிறார். எதற்காக அரசும், வணிக நிறுவனங்களும் மீத்தேன் வாயு எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன? அதனால் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன? என்றெல்லாம் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அரசியல் அறிவற்று இருந்த சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன் தான் கதையின் நாயகன். தற்செயலாக சர்ச்சைக்குரிய மாங்குடி கிராமத்திற்கு தாத்தா, பாட்டியை பார்க்கச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அது ஒரு சாதாரணமான உறவினர் வீட்டுக்கு போகும் நிகழ்வாக இருந்த போதிலும் எரிவாயு திட்டத்தை நடைமுறைப் படுத்த வரும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலிருந்து மீத்தேன் வாயு, அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேடி அறிந்து கொள்கிறான்.

கார்த்தியின் காதலி, ஈழத்தமிழ்ப் பெண் பிருந்தா மூலம் அரசியல் உணர்வு பெறுவதாக காட்டி இருப்பது ஒரு திருப்புமுனை. ஏற்கனவே கிராமிய மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வில் மனதை பறிகொடுத்த கார்த்தி, ஓர் அரசியல் போராளியாக திரும்பி வருகிறான். அதற்காக தாத்தாவுடன் முரண்பட்டு நகரத்து ஆடம்பர வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தந்தையை பகைத்துக் கொள்கிறான். இதன் மூலம் கதாசிரியர் தலைமுறை இடைவெளி என்ற விடயத்தில் அக்கறை காட்டினாலும், அது அரசியல் அடிப்படை கொண்டது என்பதையும் உணர்த்துகிறார்.

கார்த்தி என்ற பாத்திரத்தின் மூலம், நகரங்களில் வாழும் படித்த வாலிபர்கள் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சமூகக் கடமையை கதாசிரியர் உணர்த்துகிறார். போராடுவதற்கான மனவுறுதி இருந்தால் மட்டும் போதாது. சரியான அரசியல் நிலைப்பாடும் அவசியம். ஒருவரது போராட்ட வாழ்க்கை குடும்ப உறுப்பினர்களிடையே பிளவுகளையும் உண்டாக்கும். இந்த நாவலில் வருவது போல பெற்ற தந்தையையும் கருத்தியல் ரீதியாக எதிர்க்க வேண்டி இருக்கும். தாய்மார் ஆபத்துக்களை எதிர்பார்த்து தடுக்கப் பார்ப்பார்கள். இந்த நாவலில் கார்த்தியுடன் துணை நின்று போராடும் கலியன் தாத்தா, காதலி பிருந்தா மற்றும் அவளது தந்தை சிவராசா போன்று எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

இருப்பினும், எனக்கு இந்த நாவலுடன் உடன்பட முடியாத ஒரு குறையையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கான விளக்கத்தையும் கீழே தருகிறேன்: ஓர் ஈழத்தமிழ்ப் பெண் தான் இந்த நாவலின் நாயகி. அப்படி ஒரு பாத்திரத்தை படைத்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். அந்த ஈழப் பெண்ணின் தகப்பன் இலங்கையில் சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் என்றும் அறிமுகப் படுத்தப் படுகிறார். அவர் மூலமாகத் தான் கார்த்தி சரியான (மார்க்சிய) அரசியல் வழிகாட்டலை பெற்றுக் கொள்கிறான். அதெல்லாம் இந்த நாவலுடன் தொடர்புடைய விடயங்கள் தான். ஆனால், தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுப்பது தொடர்பாக நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நில அபகரிப்பை, இலங்கையில் சிங்களவர் தமிழரின் நிலத்தை பறித்துக் கொண்ட விடயத்துடன் ஒப்பிடும் போது தான் சறுக்கி விடுகிறார்.

இந்த விடயத்தில், இலங்கையில் நடப்பது வெறும் "இனப் போராட்டம்", ஆனால் தமிழகத்தில் நடப்பது "வர்க்கப் போராட்டம்" என்பது போன்ற கருத்தை உருவாக்குவது ஏற்கத் தக்கதல்ல. (ஒருவேளை நான் தவறாக புரிந்து கொண்டால் மன்னிப்புக் கோருகிறேன்.) இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை உண்மையில் வர்க்கப் பிரச்சினையை மறைப்பதற்கான போர்வையாக செயற்படுகின்றது. பெரும் வணிக நிறுவனங்கள் மீத்தேன் எரிவாயுவுக்காக தமிழகத்து விவசாய நிலங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லையா? இந்த நாவலில் இந்துக்கள்- முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து போராடுவது போன்று, இலங்கையில் சிங்களவர்- தமிழர் ஒன்று சேர்ந்து போராடவில்லையா? அந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி இருந்தால், நாவலின் பெறுமதி கூடியிருக்கும்.

அண்மையில் புத்தளத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான பாரிய தொட்டி அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். ஏன் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர் மலையகத்தில் கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் சிங்கள- தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நடத்தியது தான். அத்துடன் சிறிலங்கா அரசு தமிழர்களை மட்டும் ஒடுக்கவில்லை. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசமான வெலிவாரியாவில் சுற்றுச் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிலரை சுட்டுக் கொன்ற இராணுவம் "முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடத்துவோம்" என்று சிங்கள மக்களை மிரட்டியது.

ஆக்காட்டி நாவலின் நாயகியான பிருந்தா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு சிங்களக் காடையர்கள் தம்மிடம் இருந்த நிலங்களை பறித்துக் கொண்டதாக கூறுகின்றாள். அத்துடன் புலிகள் தமிழர்களுக்கு "பாதுகாப்பாக" இருக்கும் வரை சிங்களக் காடையர்கள் பயந்திருந்தார்கள் என்றும் கூறுகின்றாள். இது ஒரு தவறான தகவல். ஈழப்போர் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. அன்று புலிகளோ, வேறெந்த இயக்கமோ அடாத்தான நில அபகரிப்புக்கு எதிராக ஆயுதமேந்தவில்லை. இல்லவே இல்லை! யாழ்ப்பாண நடுத்தர வர்க்க இளைஞர்களின் உத்தியோகக் கனவுகளை கலைத்த தரப்படுத்தல் சட்டம் கொண்டு வந்த பின்னர் தான் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இதனை முள்ளிவாய்க்கால் வரை போராடிக் கொண்டிருந்த இடதுசாரியான தோழர் பாலகுமார் கூட குறிப்பிட்டு சொல்லி வந்தார்.

உண்மையில் இலங்கையில் நடந்த நில அபகரிப்புக்கு பின்னாலும் ஒரு வர்க்கக் காரணி இருந்தது. ஒரு பேரினவாத அரசு பெரும்பான்மை சமூகத்தின் ஓட்டுகளை நம்பி அரசியல் நடத்தும். இந்தியாவில் இந்துக்கள் என்றால், இலங்கையில் சிங்களவர்கள் தான் பேரினவாத அரசின் ஆதரவுத்தளம். இன்று இந்தியாவில் கொண்டு வரப்பட்ட CAA சட்டம் போன்றதொரு சட்டம் தான், முன்னர் இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையை பறித்தது. அசாமில் குடியேற்ற பட்ட வங்காளி இந்துக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்ட மாதிரி, கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப் பட்ட சிங்களவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்டது.

மேலும் சிறிலங்கா அரசு சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது. முதலாவதாக, தென்னிலங்கையில் நிலமற்ற ஏழை சிங்கள விவசாயிகளுக்கு, கிழக்கிலங்கை ஏழை விவசாயத் தமிழர்களின் நிலங்களை பறித்துக் கொடுத்தது. இதன் மூலம் ஒரு வர்க்கப் பிரச்சினை இனப்பிரச்சினையாக மடைமாற்றப் பட்டது. இரண்டாவதாக, இயற்கை வளம் நிறைந்த கிழக்கிலங்கை பிரதேசத்தில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அரசுக்கு விசுவாசமான ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று ஒரு பக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வளச் சுரண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், மக்கள் இனரீதியாக பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் ஏற்கனவே சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பேசப் பட்டவை தான். ஆனால், அதை ஆக்காட்டி நாவலில் வரும் சிவராசா பேசாமல் இருப்பது அதிசயமே! அவரது ஒரு மகன் போராளியாக இருந்து போரில் கொல்லப் பட்டதாக நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. யாழ்ப்பாணத்தில் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்த பெற்றோரின் பிள்ளைகள் ஈழ விடுதலைப் போராளிகளாக இருந்திருக்கின்றனர். புலிகளில் மட்டுமல்லாது எல்லா இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது அரசியல் சிந்தனை பெற்றோரினுடையதை விட முற்றிலும் வேறானதாக இருந்தது.

பெற்றோர் இடதுசாரிகள் என்றால், பிள்ளைகள் வலதுசாரிகளாக இருந்தனர். இதுவும் தலைமுறை இடைவெளி தான். இலங்கையில் நவ தாராளவாத கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர் தான் ஈழப்போராட்டம் தீவிரமடைந்தது. இரண்டுக்கும் தொடர்புள்ளது. மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட சிவராசா இலங்கையின் வர்க்க முரண்பாடுகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

சன்முகதானின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக குறிப்பிடப் படும் சிவராசா, யாழ்ப்பாணத்தில், அறுபதுகளில் அவரது கட்சியினர் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பு போராட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அன்று அதுவும் வர்க்க உணர்வு கொண்ட ஆயுதப் போராட்டமாக பரிணமித்து இருந்தது. இத்தனைக்கும் தமிழகத்தில் இரட்டைக் குவளை வைக்கும் சாதிய ஒடுக்குமுறை, அதற்கு எதிராக நடந்த இரணியன் போராட்டம் பற்றி எல்லாம் நூலாசிரியர் இந்த நாவலில் விரிவாக எழுதி உள்ளார்.

இது மட்டும் தான் நாவலில் நான் கண்ட குறைபாடு. எனது நண்பரும் நாவலாசிரியருமான இரா. பாரதிநாதன் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் ஆக்காட்டி ஒரு சிறந்த நாவல் என்பதில் ஐயமில்லை. தமிழில் இது போன்ற எழுத்துக்கள் வருவது மிக அரிது. தோழர் இரா. பாரதிநாதன் இன்னும் பல அரசியல் நாவல்கள் எழுத வேண்டும்.