Monday, June 24, 2013

நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (நான்காம் பாகம்)

2009 ஏப்ரல், நோர்வே ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயம், ஈழத் தமிழ் இளையோரால் ஆக்கிரமிக்கப் பட்டு, உடைத்து நாசமாக்கப் பட்டது. ஈழப்போரின் எதிரொலியாக, புலம்பெயர்ந்த நாடொன்றில், இலங்கை அரச நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அது இராஜதந்திர விஷயத்தில், இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விடயமும் ஆகும். முன்னாள் ஐரோப்பிய காலனி நாடொன்றின் இனப் பிரச்சினை, காலனிய எஜமானர்களின் தாயகத்தில் எதிரொலித்தது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, 1966 ம் ஆண்டு, நெதர்லாந்து, ஹேக் நகரில் அமைந்துள்ள இந்தோனேசிய தூதரகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. அந்த தாக்குதலை நடத்தியவர்கள், புலம்பெயர்ந்த மொலுக்கு இளையோர். ஈழத் தமிழ் இளையோரும், இந்தோனேசிய மொலுக்கு இளையோரும், அவர்களது பெற்றோரால் தான் அரசியல் மயப் படுத்தப் பட்டனர்.

நிச்சயமாக, புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மற்றும் மொலுக்கு பெற்றோர்கள், ஐரோப்பிய கனவான்களைப் பற்றி பெரு மதிப்பு வைத்திருந்தார்கள். (ஐரோப்பிய) பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த அரசியல் நடவடிக்கையையும் தவறாக கருதியவர்கள். ஆனால், சிறு வயது முதல் புலம்பெயர்ந்த மண்ணில் வளர்ந்த இளையோரிடம் அந்த மனப்பான்மை இருக்கவில்லை. தமது பெற்றோர் புலம்பெயர்ந்து வந்த தாயகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும், தாம் வாழும் ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும் நேரடி தொடர்பிருப்பதை புரிந்து கொண்டார்கள்.

நெதர்லாந்து காலனிய எஜமானர்களுக்கு, மொலுக்கு சமூகம் செய்த சேவை அளப்பெரியது. இருப்பினும், இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நாள் முதல், காலனிய எஜமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வெளிப்படையாகவே இந்தோனேசிய அரசுக்கு சார்பாக நடந்து கொண்டனர். தம்மை நம்பி இருந்த  மொலுக்கு சமூகத்திற்கு துரோகம் இளைத்தனர். நெதர்லாந்து நாட்டிற்கு கொண்டு வரப் பட்ட முன்னாள் காலனியப் படைவீரர்கள் கூட நல்ல முறையில் நடத்தப் படவில்லை.

அன்றைய காலத்தில், நெதர்லாந்து நாட்டில் எல்லோருக்கும் வீடு கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. அதனால், அரசு மொலுக்கு அகதிகளை முகாம்களில் குடியமர்த்தியது. இந்த முகாம்களில் சில, இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்தன. அங்கே யூதர்களை தற்காலிகமாக அடைத்து வைத்திருந்து, அருகில் இருந்த வெஸ்டர்போர்க் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு அனுப்பி, நச்சுவாயு செலுத்தி கொன்று குவித்தமை வரலாறு. முன்னாள் நாஜி தடுப்பு முகாம்களில், மொலுக்கு அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள விபரம், அவர்களுக்கு சொல்லப் படவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர், அகதிகள் தாமாகவே அறிந்து கொண்டனர். அப்போது அந்த அகதிகளின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்பதை, இங்கே விபரிக்கத்  தேவையில்லை. 

மொலுக்கு அகதிகள் ஆறு மாதங்கள் மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருப்பார்கள் என்று அரசு கூறி வந்தது. அதனால், அகதிகளும் டச்சு சமூகத்துடன் ஒன்று கலக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அரசும் வற்புறுத்தவில்லை. விளைவு? மொலுக்கு சமூகம் தீவு போன்று தனித்து விடப் பட்டது. பாடசாலை செல்லும் வயதில் இருந்த பிள்ளைகள், முகாம்களுக்குள் இருந்த பாடசாலைகளில் மட்டுமே படித்தனர். அவர்கள் நெதர்லாந்து மொழியில் படித்தாலும், பாடத்திட்டம் மொலுக்கு கலாச்சாரத்திற்கு அமைய உருவாக்கப் பட்டது.

பெற்றோரும் தமது பிள்ளைகளை மொலுக்கு கலாச்சாரத்துடன் வளர்க்க விரும்பினார்கள். பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு கீழ்ப் படிதல், தெய்வ நம்பிக்கை, கண்டிப்பு, கட்டுப்பாடு போன்றன போதிக்கப் பட்டன. இவை சில நேரம் நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு மாறாக இருந்த போதிலும், அரசு தலையிடவில்லை. என்றாவது ஒரு நாள், மொலுக்கு நாட்டுக்கு (தற்போது இந்தோனேசியா) திரும்பிப் போகப் போகிறவர்கள் என்ற எண்ணம், இரண்டு தரப்பிலும் மேலோங்கிக் காணப் பட்டது.

காலம் உருண்டோடியது. மாதங்கள் வருடமாகின. இப்படியே ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. அது வரைக்கும் மொலுக்கு அகதிகள், நாடற்றவர்களாக முகாம்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர். நெதர்லாந்து அரசுக்கு அவர்களைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்கவில்லை. அதற்கு வேறு பிரச்சினைகள் இருந்தன.  ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், மொலுக்கர்களுக்கு டச்சுக் குடியுரிமை கொடுத்து, வீடுகளில் தங்க வைப்பதென்று அரசு முடிவெடுத்தது. அப்போது தான், "தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பதை, மொலுக்கர்கள் உணர்ந்து கொண்டார்கள்."

ஆரம்பத்தில் மொலுக்கர்களுக்கு கொடுக்கப்பட்ட கடவுச் சீட்டும், வழக்கமான கடவுச்சீட்டை விட வித்தியாசமானதாக இருந்தது. "இதனை வைத்திருப்பவர், நெதர்லாந்து பிரஜை போன்று நடத்தப் பட வேண்டும்" என்று அதில் எழுதப் பட்டிருந்தது. இது பல பிரச்சனைகளை உருவாக்கியது. "நெதர்லாந்து பிரஜை போன்று நடத்தப் பட வேண்டும்...." இந்த வாக்கியம் பிற நாடுகளில் இருந்த எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. மொலுக்கர்கள் தாயக பூமிக்கு சுற்றுலாப் பயணியாக செல்ல விரும்பினாலும் தடைகள் ஏற்பட்டன.

இந்தோனேசியா குடிவரவுத் திணைக்களம், குறிப்பிட்ட பயணி வாழும் உள்ளூராட்சி சபையில் இருந்து கடிதம் கொண்டு வருமாறு கேட்டது. அது பற்றி உள்ளூராட்சி சபையிடம் விசாரித்தால், அவர்கள் அப்படி ஒரு கடிதம் தர மறுத்தார்கள். "நீங்கள் நெதர்லாந்து பிரஜைகள். உங்களுக்கு வதிவிட விபரம் பற்றிய கடிதம் தேவையில்லை." என்று விளக்கம் கூறப் பட்டது. இந்தோனேசிய தூதுவராலயம் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இந்த இழுபறி நிலைமை ஒரு முடிவுக்கு வந்து, மொலுக்கர்கள் "வழமையான" குடியுரிமை பெறுவதற்கு சில வருடங்கள் எடுத்தன.

குடிவரவு-குடியகல்வு துறையில் இவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதிலும், மொலுக்கர்கள் சுற்றுலாப்பயணியாக தாயகம் சென்று வருவதை நெதர்லாந்தும், இந்தோனேசியாவும் ஊக்குவித்தன. இதனை, ஈழப்போர் முடிந்த பின்னர், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், சுற்றுலாப்பயணிகளாக இலங்கை சென்று திரும்புவது போன்ற நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். "அங்கே நிலைமை வழமைக்கு திரும்பி விட்டது. யுத்தம் முடிந்து விட்டதால், மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அங்குள்ள மக்கள் எந்தளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்த்து விட்டு வாருங்கள்...." இது தான் அரசுகள் தெரிவிக்க விரும்பிய செய்தியின் சாராம்சம். அது இந்தோனேசியாவிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான விளைவுகளை உண்டாக்கியது.

உண்மையில் நேரில் சென்று பார்த்தால், அங்குள்ள மக்கள் "கடந்த கால யுத்தத்தை மறந்து, எந்தப் பிரச்சினையுமின்றி வாழ்வதாக" தோன்றும். அரசியலற்ற சாதாரண மக்கள், "எங்களுக்கென்ன பிரச்சினை" என்று தான் கேட்பார்கள். தாயகம் சென்று வரும் சுற்றுலாப்பயணிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வைத்திருப்பார்கள். குடும்பத்துடன் தாயகத்திற்கு பயணம் செய்து, அங்கே தமது உறவினர்களுடன் பொழுதுகளை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். ஐரோப்பாவுக்கு திரும்பியதும், தாயகத்தில் நிலைமை எந்தளவு மோசமாக இருந்தது என்றும், மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் கதைப்பார்கள். இவை எல்லாம் ஏதோ ஒரு பகுதி உண்மையை மட்டுமே கூறுகின்றன. எல்லோரும் தமது சமூக நலன்களையும், அது சார்ந்த அரசியலையும் மட்டுமே பேச விரும்புகின்றனர்.

இதற்குள் உண்மையான இனப் பிரச்சினை கவனிக்கப் படுவதில்லை. 1963 ம் ஆண்டுடன், ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டாலும், இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்தோனேசிய அரச படைகள், ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் போல நடந்து கொள்கின்றன. மொலுக்கு தேசியவாதத்திற்கு ஆதரவானவர்களின், சுதந்திரம் பறிக்கப் படுகின்றது. கொடியேற்றுவது கூட குற்றமாக பார்க்கப்பட்டு, தண்டிக்கப் படுகின்றனர். மொலுக்கு பிரதேசத்தில், இந்தோனேசிய ஆக்கிரமிப்புப் படைகளின் அத்துமீறல்கள் குறித்து, சர்வதேச மன்னிப்புச் சபை விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக தாயகம் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் கூறிய கதைகளும், அதை வைத்து புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்படும் அரசியலும், இளைய தலைமுறை மொலுக்கர்களை தீவிரவாதப் பாதை குறித்து சிந்திக்க வைத்தது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் எல்லோரும் தற்போதைய மொலுக்கு தேசிய தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். நாடு கடந்த தமிழீழ அரசு மாதிரி, "நாடு கடந்த மொலுக்கு அரசு" ஒன்று நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. (அது இப்போதும் இருக்கின்றது.) ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, இனிமேல் அஹிம்சாவழிப் போராட்டம் மட்டுமே நடத்துவதாக உறுதி பூண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்திரகுமாரன் மாதிரி, நாடு கடந்த மொலுக்கு அரசின் பிரதமரான யோப் மனுசம்மா ஒன்றுமே செய்ய முடியாத மிதவாதி என்ற எண்ணம், இளையோர் மத்தியில் காணப்பட்டது.

இந்த இடத்தில், புலம்பெயர்ந்த தமிழ் தேசியவாதிகளினதும், மொலுக்கு தேசியவாதிகளினதும் அரசியல் பாதைகள் வேறுபட்டு பிரிந்து செல்கின்றன. அதாவது, தாயகத்தில் நிறுத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை, புலம்பெயர்ந்த மண்ணில் தொடர வேண்டும் என்று, மொலுக்கு இளையோர் முடிவெடுத்தனர். அதற்கு கட்டியம் கூறுவதைப் போல, இந்தோனேசிய தூதுவராலயத்தின் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, நெதர்லாந்து மகாராணி யூலியானாவை கடத்திச் செல்வதற்கு திட்டம் தீட்டப் பட்டது. ஆனால், அந்த திட்டத்தில் ஒரு பெரிய குழு ஈடுபட்டதால், ஓட்டைகள் அதிகமாகி, யாரோ ஒருவர் மூலம் தகவல் கசிந்து விட்டது. அதனால் இராணியை கடத்தும் திட்டம் கைவிடப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற, உலகை உலுக்கிய ஆறு ஆயுதபாணித் தாக்குதல்களை, நெதர்லாந்து புலனாய்வுத் துறையால் துப்புத் துலக்க முடியவில்லை. என்ன காரணம்?

(தொடரும்)

உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html

இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

Tuesday, June 18, 2013

புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (மூன்றாம் பாகம்)


ஈழத் தமிழர்கள், மொலுக்கர்கள் ஆகிய தேசிய இனங்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். இரண்டு தேசிய இனங்களும், போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள் ஆகிய ஐரோப்பிய காலனியாதிக்க எஜமானர்களால் ஆளப்பட்டன. காலனிய காலத்தில் சிறப்புரிமை பெற்ற இனங்களாக இருந்தன. அவர்களின் முன்னோர்கள் காலனிய எஜமானர்களினால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். ஆனால், பிற்காலத்தில் வந்த தலைமுறையினர் அதே காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் இருந்து சில உதாரணங்களை காட்டலாம்.

இலங்கையில் போர்த்துக்கேய காலனியாதிக்கம் பரவிய காலத்தில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ - தமிழர்களை இனப்படுகொலை செய்தான். அதற்குப் பதிலடியாக, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர், அங்கு வாழ்ந்த இந்து - தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். மொலுக்கு தீவுகள், வாசனைத் திரவியங்களுக்கு பேர் போனது. அங்கு சென்ற டச்சுக்காரர்கள், மொலுக்கு விவசாயிகள் பணப் பயிர்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்தார்கள். ஆனால், அங்கு விளைந்த வாசனைத் திரவியங்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு மட்டுமே விற்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்கள். உள்ளூர் மக்கள், ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதை அறிந்த டச்சுக் காரர்கள், அதற்கு தண்டனையாக ஆயிரக் கணக்கான மக்களை இனப்படுகொலை செய்தார்கள். 

காலப்போக்கில் தென் மொலுக்கு தீவுகளில் வாழ்ந்த மக்களை, டச்சுக் காரர்கள் தமக்கு விசுவாசமானவர்களாக மாற்றினார்கள். அந்த விசுவாசம் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, அந்தப் பிராந்தியம் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அங்கு பல வீடுகளில் வைக்கப் பட்டிருந்த, நெதர்லாந்து இராணியின் உருவப் படத்தை அகற்றுமாறு, ஜப்பானிய படையினர் உத்தரவிட்டனர். பல மொலுக்கர்கள், அதற்கு மறுத்து சித்திரவதைகளை அனுபவித்தனர். மொலுக்கர்களின் காலனிய விசுவாசத்திற்கு, கிறிஸ்தவ மயமாக்கல் ஒரு முக்கிய காரணமாகும்.

மொலுக்கர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நெதர்லாந்து இராணிக்கு காட்டிய விசுவாசத்தை பெருமையுடன் நினைவு கூர்வார்கள். அதே போன்று தான், ஈழத் தமிழர்களும் தாம் பிரிட்டிஷ் இராணிக்கு காட்டிய விசுவாசம் குறித்து சிலாகித்து பேசுவதில் பெருமைப் படுவார்கள். காலனிய எஜமானர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்களை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு வணிகமும் முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, அன்றைய சர்வதேச வணிகம் இஸ்லாமிய மொலுக்கர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனை முறியடிக்க வேண்டிய தேவை இருந்தது. இதே போன்று, அன்றைய வட இலங்கையிலும் சர்வதேச வர்த்தகம் இஸ்லாமிய தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனியாதிக்க வாதிகள் கணிசமான தமிழர்களை கிறிஸ்தவ மயப் படுத்தி, தமக்கு ஆதரவான சக்தியாக வளர்த்தெடுத்தனர். 

இன்றைய இலங்கையின் இனப் பிரச்சினையில் காணப்படும், "தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டின் தோற்றுவாய்" காலனிய கால கட்டத்தில் உருவாகி விட்டது. இன்று தமிழ் - முஸ்லிம் முரண்பாடு, சிங்கள பேரினவாதத்திற்கு பயனளிக்கத் தக்கதாக மாறி விட்டது. அதே போன்று, இன்றைய இந்தோனேசிய அரசும், மொலுக்கர் சமூகத்தில் உள்ள கிறிஸ்தவ - முஸ்லிம் முரண்பாட்டை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. மொலுக்கு தீவுகளில் காணப்படும் கிறிஸ்தவ - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பகைமை உணர்ச்சியும் காலனிய காலத்திலேயே வேரூன்றி விட்டது. கிழக்கிலங்கையில் நடந்த தமிழ் - முஸ்லிம் கலவரங்கள், தமிழீழத்திற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக குறைத்தது. அதே போன்று, மொலுக்கு தீவுகளில் நடந்த கிறிஸ்தவ - முஸ்லிம் கலவரங்கள், மொலுக்கு தேசியத்திற்கு பின்னடைவாக அமைந்தது. 

ஆரம்பத்தில், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஈழத் தமிழ் தேசியம், வெகு விரைவில், கிறிஸ்தவ - இந்து தமிழர்களுடைய வடக்கு-கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கிய தமிழீழமாக குறுகிப் போனது.மொலுக்கு தேசியமும் அதே மாதிரியான பரிணாம வளர்ச்சியை கண்டது. கிறிஸ்தவர்கள் மட்டும் வாழும் தென் மொலுக்கு தீவுகளை மட்டுமே உள்ளடக்கிய, தென் மொலுக்கு தேசியமாக குறுகிப் போனது. அது மொலுக்கு தேசியத்தின் முக்கியமான தவறு என்பதை, இரண்டாவது தலைமுறையினர் மட்டுமே உணர்ந்தார்கள். ஆனால், அதற்குள் பல கசப்பான பின்னடைவுகளை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடியேறிய ஈழத் தமிழர் மத்தியில், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கணிசமான அளவு ஆதரவு இருந்தது. பெரும்பாலான தருணங்களில், புலிகளின் போர் வெற்றிகள், தமிழ் மக்கள் மீதான சிங்களப் படைகளின் அட்டூழியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நம்பியிருந்த ஊடகங்களும், தாயகத்து தொடர்புகளும் அந்த தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன. அதே மாதிரியான நிலைமையில் தான், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் இருந்தனர். மொலுக்கு குடியரசுவாதிகளின் ஆயுதப் போராட்டம், இந்தோனேசியப் படைகளின் அட்டூழியங்கள் போன்றன அவர்களின் உரையாடல்களில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, புலிகள் இயக்கத்திற்கான நிதியாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் குடும்பத்திற்கு 400 டச்சு கில்டர்ஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். (இன்று அதன் மதிப்பு 500 யூரோவாக இருக்கலாம்.) இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, ஐம்பதுகளில் நெதர்லாந்து முகாம்களில் வாழ்ந்த மொலுக்கு அகதி ஒருவருக்கு, வாரத்திற்கு மூன்று டச்சு கில்டர்ஸ் மட்டுமே செலவுக்கு கொடுக்கப் பட்டது. (எல்லா முகாம்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப் பட்டது.) ஒரு அகதியின் அத்தியாவசிய செலவுகளுக்கு, 3 கில்டர்ஸ் போதாது. புது உடுப்பு வாங்க முடியாது. வருடத்திற்கு ஒரு தடவை, மாற்று உடைகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

மொலுக்கர்கள் என்றோ ஒரு நாள் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என்பதால், அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப் படவில்லை. அதனால், அவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப் படவில்லை. அப்படியான இக்கட்டான நிலையிலும், பல அகதிகள் முகாமுக்கு அருகில் இருந்த வயல்களில், பண்ணைகளில் வேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தில் இருந்து தான், மொலுக்கு தீவுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கத்திற்கு நிதியுதவி செய்தார்கள். நிதி மட்டுமல்ல, ஆயுதங்களும் வாங்கி அனுப்பினார்கள். மொலுக்கு தேசியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட, லக்சம்பேர்க் நாட்டில் நிறுவனத்தை வைத்திருந்த, டச்சு வர்த்தகர் ஒருவர் தாராளமாக உதவினார். புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் பணத்தில், ஹங்கேரி ஆயுதங்களை வாங்கி அனுப்பி உதவினார். 

புலிகளுக்கு உதவிய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், மொலுக்கு விடுதலை இயக்கத்திற்கு உதவிய புலம்பெயர்ந்த மொலுக்கர்களும் இதனை தமது தார்மீகக் கடமையாக கருதினார்கள். அப்படி உதவியவர்களின் மனதில் ஒரேயொரு சிந்தனை மட்டுமே இருந்தது. அதாவது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து செல்லும் உதவி காரணமாக, தாயகத்தில் போராடும் போராளிகள் வெற்றிகளைக் குவிப்பார்கள். ஒரு நாளைக்கு, தாயகப் பகுதிகளை விடுதலை செய்து, அங்கே தனி நாடு பிரகடனம் செய்வார்கள். அதன் பிறகு சுதந்திரமடைந்த நாட்டில் சென்று வாழலாம். ஆனால், தாயகத்தில் நிலைமை வேறு விதமாக இருந்தது. அங்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் எந்தளவு நெருக்கடிக்குள் இருந்தனர் என்ற உண்மை, புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு தெரிந்திருக்கவில்லை. 

ஈழத் தமிழர்களுக்கு, 2009 ஆண்டு ஏற்பட்ட அனுபவம், 1963 ம் ஆண்டு மொலுக்கர்களுக்கு கிடைத்தது. ஈழப்போரின் இறுதியில் புலிகள் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப் பட்டதைப் போன்று, 1963 ம் ஆண்டு, மொலுக்கு போராளிகள் சேரம் தீவினுள் முடக்கப் பட்டனர். ஏற்கனவே அவர்கள் தமது  கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் படிப்படியாக இழந்து கொண்டிருந்தனர். சேரம் தீவில் மட்டுமே நீண்ட காலம் நின்று பிடித்து போராடிக் கொண்டிருந்தனர்.

1962 ம் ஆண்டு, மொலுக்கு தீவுகளுக்கு அருகாமையில் உள்ள பாபுவா நியூ கினியா, இந்தோனேசியா வசம் சென்றது. அது வரையும், டச்சு காலனிய படைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாபுவா நியூ கினியாவை, மொலுக்கு போராளிகள் பின் தளமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், நெதர்லாந்து அரசு பாபுவா நியூ கினியாவை இந்தோனேசியாவுக்கு தாரை வார்த்தமை, மொலுக்கு போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். மொலுக்கு தேசியவாதத்தை நியாயமான விடுதலைப் போராட்டமாக கருதி ஆதரிப்பதாக பாசாங்கு செய்த டச்சு காலனிய எஜமானர்கள், முதுகில் குத்தினார்கள்.  

1963 ம் ஆண்டு, மொலுக்கு விடுதலை இயக்கம், இந்தோனேசியப் படைகளால் முற்றாக அழிக்கப் பட்டது.  அதன் தலைவரான ஸௌமொகில் கைது செய்யப் பட்டார். 1965 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சுஹார்ட்டோ, தடுப்புக் காவலில் இருந்த சௌமொகிலை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். மொலுக்கு விடுதலை இயக்கத் தலைவரின் படுகொலை, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. 

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கியது என்பது தெரிந்ததே. புலம்பெயர்ந்த மொலுக்கு சமூகமும், அதேயளவு அதிர்ச்சியில் உறைந்து போனது. அதற்கு காரணமான இந்தோனேசிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும், இந்தோனேசிய அரசு பழிவாங்கப் பட வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அன்றைய புலம்பெயர்ந்த அரசியலை தீர்மானித்தன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், புலிகளின் தோல்விக்கு உலக நாடுகள் எல்லாம் காரணம் என்று குற்றஞ் சாட்டியதைப் போல, மொலுக்கர்கள் நெதர்லாந்து அரசின் மீது குற்றஞ் சாட்டினார்கள். 

நெதர்லாந்து அரசு, மொலுக்கர்களின் இனப் பிரச்சினையை ஏறத்தாள மறந்து விட்டது. இந்தோனேசிய அரசுடன் நல்லுறவைப் பேணுவதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். இந்தோனேசியாவில் ஒரு சிறுபான்மையினமான மொலுக்கர்கள், பாரம்பரியமான மேற்குலக விசுவாசம் காரணமாக, தனது துரோகத்தை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நெதர்லாந்து நினைத்திருக்கலாம். ஆனால், முதலாம் தலைமுறையினரைப் பொறுத்த வரையில் அந்தக் கணிப்பீடு சரியாக இருக்கலாம். நெதர்லாந்தில் வாழ்ந்த இரண்டாம் தலைமுறையினர் மேற்கத்திய மாயைகளை கண்டு மயங்கத் தயாராக இருக்கவில்லை. 

"மேற்கத்திய நாடுகளை விமர்சிப்பதே ஒரு பாவச் செயல்" என்று நினைத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், 2009 ம் ஆண்டு ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களை, ஸ்தம்பிக்க வைத்தார்கள். இலங்கைக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த தமிழீழப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்தது. அறுபதுகளில், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்களும் அதே மாதிரியான ஏகாதிபத்திய எதிர்ப்பு பாடங்களை கற்றுக் கொண்டார்கள். நெதர்லாந்து ஏகாதிபத்தியமும், தனது சுயரூபத்தை அவர்களுக்கு காட்டும் தருணம் வந்தது.  

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்

Monday, June 17, 2013

இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]

(இரண்டாம் பாகம்)

ஐரோப்பிய மையவாத சிந்தனை எமது மனதையும் ஆட்கொண்டுள்ளதால், ஐரோப்பிய காலனியாதிக்கம் உருவாக்கிய "தேசிய அரசுகள்" மட்டுமே எனது கண்களுக்கு தெரிகின்றன. இந்தோனேசியாவை ஒரே மொழி பேசும், ஓரின மக்களின் நாடு என்று தவறாக அனுமானித்தால், அது எம் தவறல்ல. எமக்கு அப்படி நினைக்க கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய மையவாத சிந்தனையால், பல முன்னாள் காலனிய  நாடுகளுக்குள் அடக்கப் படும், சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகள் வெளியுலகில் முக்கியத்துவம் பெறுவதில்லை. மொலுக்கு மக்களின் இனப் பிரச்சினை, ஈழத் தமிழரின் இனப் பிரச்சினை ஆகியன, வெளியுலகின் கவனத்தை கவராத காரணம், காலனிய கடந்த காலத்தினுள் மறைந்திருக்கிறது. உண்மையில், ஐரோப்பிய காலனியாதிக்கம் பூர்த்தி செய்யாமல் தவற விட்ட இடத்தில் இருந்து, இந்தோனேசிய, சிங்கள பேரினவாத அரசுகள் தமது பணியை ஆரம்பித்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,  காலனியாதிக்கத்தின் நவீன வடிவமான நவ காலனித்துவம், இன்றைய ஆட்சியாளர்களுக்கும், ஐரோப்பிய எஜமானர்களுக்கும் மிகவும் வசதியானது.

மொலுக்கு இன மக்கள், அவுஸ்திரேலிய அபோரிஜின் பூர்வ குடிகள் போன்றிருப்பார்கள். ஆனால், இருபதாம் நூற்றாண்டு வரையில் மொலுக்கர்கள் நாகரீகமடையவில்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு, ஜாவா, மலேசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு இருந்தது. இதனால் வர்த்தக நோக்குடன் வந்தவர்கள் அங்கே குடியேறி இருக்க வாய்ப்புண்டு. இன்று மொலுக்கர்கள் பல விதமாக தோன்றுவதற்கு, ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்த இனக் கலப்பு காரணமாக இருக்கலாம்.

மொலுக்கு தீவுகளில் வாழும் மக்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். சிறு சிறு குழுக்களாக நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு இனக் குழுவும் தனக்கென பூர்வீக கதையை கொண்டிருக்கிறது. Saparua தீவில், Ihamahu எனுமிடத்தில் வாழும் இனக் குழுவினர் தம்மை இந்திய வம்சாவளியினர் என்று கூறிக் கொள்கின்றனர். தென் கிழக்கு இந்தியாவில் இருந்த, காலிங்க நாட்டில் இருந்து புறப்பட்ட கப்பல் உடைந்த பின்னர் இந்தத் தீவில் தங்கி விட்டதாக, ஒரு கர்ண பரம்பரைக் கதை உலாவுகின்றது.

மொலுக்கு தீவுகளில் பெரிய நகரமான அம்பொன், இன்றைக்கும் சனத்தொகை அடர்த்தி கூடிய இடமாகும். அவர்கள் பேசும் "அம்பொன் மொழி", இன்று பெரும்பான்மை மக்களால் பேசப் படுகின்றது. அது பூர்வீக அபோரிஜின் மொழிகளும், மலே மொழியும் கலந்த புது மொழி ஆகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அதாவது இந்தோனேசியாவில் இஸ்லாம் பரவிய காலத்தில், மொலுக்கு தீவுகளிலும் இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதிருந்தே மொலுக்கு மக்கள் முஸ்லிம்களாக மாறி விட்டனர். 

500 வருடங்களுக்கு முன்னர், போர்த்துக்கேய காலனியாதிக்க வாதிகளின் தொடர்பால், அந்த தீவுகளில் கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியது. போர்த்துக்கேயரிடம் இருந்து டச்சுக் காரர்கள் கைப்பற்றிய பின்னர், கிறிஸ்தவ மதம் பரப்புவோர் முழு மூச்சுடன் செயற்பட்டனர். இன்று, வட மொலுக்கு தீவுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். தென் மொலுக்கு தீவுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தக் கட்டுரை முழுவதும், கிறிஸ்தவ தென் மொலுக்கர்கள் குறித்தும், அவர்களது தனி நாட்டுக்கான போராட்டம் குறித்தும் தான் பேசுகின்றது.

இந்தோனேசியா சுதந்திரம் அடையும் வரையில், முஸ்லிம், கிறிஸ்தவ மொலுக்கர்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் தோன்றி இருக்கவில்லை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழரும், முஸ்லிம்களும், "பிட்டும், தேங்காய்ப் பூவும் மாதிரி" சகோதர உணர்வுடன் கலந்து வாழ்ந்ததாக சொல்லப் படுவதுண்டு. அதே மாதிரி தான், மொலுக்கு தீவுகளிலும் நிலைமை இருந்தது. ஆனால், டச்சு காலனியாதிக்க ஆட்சியாளர்கள், கிறிஸ்தவ மொலுக்கர்களுக்கு பல சலுகைகள் வழங்கி வந்தனர். அது மட்டுமல்லாது, RMS  என்ற தென் மொலுக்கு குடியரசு என்ற தனி நாட்டுக் கோரிக்கை எழுவதையும் ஊக்குவித்தனர். ஆரம்பத்தில், மொலுக்கு தனி நாட்டுக் கோரிக்கையை டச்சுக் காரர்கள் ஊக்குவித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 

1. கம்யூனிச கொள்கை பரவுவதை தடுக்க முடிந்தது. 1965 ம் ஆண்டு, இந்தோனேசியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடி அழித்தொழிக்கப் பட்டனர். ஆனால், மொலுக்கு தீவுகளில் கம்யூனிஸ்டு என்ற பெயரில் யாரும் கொல்லப் படவில்லை. அந்தளவுக்கு, மொலுக்கு தேசியவாதம் "கம்யூனிச அபாயத்தை" தடுத்து நிறுத்தி இருந்தது. 
2. காலனிய எஜமானர்களின் வழமையான பிரித்தாளும் சூழ்ச்சி. ஒரு பக்கம் மொலுக்கு சிறுபான்மை இனத்தின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொண்டார்கள். மறு பக்கம் மொலுக்கு தேசியவாதிகளை அழித்தொழித்த இந்தோனேசிய பேரினவாதிகளை ஆதரித்தார்கள். இந்த இரண்டு தரப்பும் தங்களை நம்பும் படி பார்த்துக் கொண்டார்கள். 

கிட்டத்தட்ட இதே மாதிரியான தந்திரோபாய அரசியல், இலங்கையில் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களால் மேற்கொள்ளப் பட்டது.  

RMS என்ற தென் மொலுக்கு குடியரசு இயக்கம், இராணுவப் பிரிவையும் கொண்டிருந்தது. டச்சு காலனிய படைகளில் (KNIL) இருந்த அதிகாரிகள் அதில் சேர்ந்து கொண்டனர். இந்தோனேசியா சுதந்திரமடைந்த பின்னரும், டச்சு காலனிய படைகள் மொலுக்கு தீவுகளில் இருந்த தளங்களை எடுக்கவில்லை. இந்தோனேசிய அரசின் அழுத்தத்தால், டச்சு படைகளை விலக்கிக் கொள்ள சில வருடங்கள் எடுத்தன. அதற்குப் பிறகு தான், இந்தோனேசிய படை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அப்போது தான், தென் மொலுக்கு குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. (அதனை நெதர்லாந்து உட்பட, உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.) இந்தோனேசிய படைகளுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடந்தது. அதே நேரம், டச்சு காலனிய படைகளில் பணியாற்றிய 4000 வீரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நெதர்லாந்து நோக்கி பயணமானார்கள். 

நெதர்லாந்து வந்து சேர்ந்த கிறிஸ்தவ - தென் மொலுக்கு மக்கள், "நாடற்றவர்" என்ற நிலைக்கு தள்ளப் பட்டனர். அதாவது, அவர்கள் இந்தோனேசிய குடியுரிமையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரம், நெதர்லாந்து அரசு அவர்களுக்கு டச்சு குடியுரிமை கொடுக்க மறுத்தது. ஒரு வகையில், மொலுக்கு அகதிகள் அதனை எதிர்பார்க்கவுமில்லை. ஏனென்றால், அவர்கள் நெதர்லாந்தில் தற்காலிகமாக 6 மாதங்கள் மட்டுமே தங்கப் போகிறார்கள் என்றும், மொலுக்கு தீவுகளுக்கான "சுயநிர்ணய உரிமை" வழங்கப் பட்ட பின்னர் திரும்பிச் செல்லலாம் என்று கூறப் பட்டது. நமது தமிழ் தேசியவாதிகள், சுயநிர்ணய உரிமை என்றால் தனித் தமிழீழம் என்று புரிந்து கொள்வதைப் போன்று தான், அன்றைய மொலுக்கு தேசியவாதிகளும் நினைத்தார்கள். ஆனால், நெதர்லாந்து அரசைப் பொறுத்த வரையில், அது அதிக பட்சம் சமஷ்டியை நோக்கிய அதிகாரப் பரவலாக்கல் மட்டுமே. ஆனால், அந்த உறுதிமொழியை கூட நெதர்லாந்து அரசு நிறைவேற்றவில்லை.

நெதர்லாந்து வந்து சேர்ந்த மொலுக்கு அகதிகள், டிரெந்தெ (Drenthe) எனும் மாகாணத்தில் பல இடங்களில் குடி இருத்தப் பட்டனர். ஜெர்மனி எல்லைக்கு அருகில் உள்ள, வட கிழக்கு மாகாணமான டிரெந்தெ யில், நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தங்கியிருந்தேன். நெதர்லாந்து நாட்டில், அபிவிருத்தியில் பின்தங்கிய, "வறிய" மாகாணம் அது தான். இப்போதும் அங்கே குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொருளாதார விருத்திகள் எதுவும் நடப்பதில்லை. "தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது." என்று அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள், தமது அரசை குறை கூறுவார்கள். 

ஸ்வேலோ (Zweeloo)  என்ற ஒரு சிறிய கிராமத்தில், காட்டுப் பகுதியில் அமைந்திருந்த அகதி முகாமில், ஒரு காலத்தில் நானும் தங்கியிருந்தேன். வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட அந்த முகாமில், ஐம்பதுகளில் மொலுக்கர்கள் தங்க வைக்கப் பட்டனர். அன்றிலிருந்து இன்று வரையில், முகாம் நிலைமை பெரிதாக மாறி விடவில்லை. ஸ்வேலோ கிராமத்தில் இருந்த ஒரு சிறிய நூலகத்தில் தான், முதன் முறையாக மொலுக்கர்களின் வரலாற்றை பற்றி அறிந்து கொண்டேன். அன்று எனக்குத் தெரிந்த அடிப்படை டச்சு மொழி அறிவைக் கொண்டு, அங்கிருந்த பத்திரிகை துணுக்களை வாசித்தேன். அப்போது, நான் அது வரையும் அறிந்திராத சில தகவல்கள் கிடைத்தன. 

இன்று அமைதிப் பூங்காவாக காணப்படும் டிரெந்தெ மாகாணம், எழுபதுகளில் பெரும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான அரசியல் வன்முறைகள் பலவற்றை கண்டது. இந்தோனேசியாவில் வாழும் மொலுக்கு மக்களின் தனி நாட்டுக் கோரிக்கையை உலகம் அறியச் செய்த பல சம்பவங்கள் அங்கே இடம்பெற்றன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1. மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை

Friday, June 14, 2013

மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை  • "ஈழத் தமிழரின் இனப்பிரச்சினை தனித்துவமானது" என்றும், அதனை "உலகில் பிற இனங்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடியாது" என்றும், ஒரு தவறான எண்ணம் காணப் படுகின்றது. இன்று பல உலக நாடுகளில் காணப்படும் இனப் பிரச்சினையானது, கடந்த கால காலனிய ஆட்சியின் விளைவாகவே  இருந்து வருகின்றது. முன்னாள் ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களுக்கும் அவற்றில் பங்கிருக்கிறது என்பதை பலர் உணர்வதில்லை. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் "தமிழ் இளையோர்" அதனை உணர்ந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். மொலுக்கு இன மக்களின் கதையை அறிந்து கொள்வதன் மூலம், தமிழர்களும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளலாம்.


இந்தோனேசியாவில் தனி நாடு கோரும், மொலுக்கு இன மக்களின் வரலாறு குறித்து இங்கே அலசப் படவில்லை. இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்து சுதந்திரமடைந்த 1945 - 1949 கால கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நாங்களும் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தை, தமிழீழ போராட்டத்தின் தொடக்கமாக கருதுவதுண்டு. அதே போன்ற நிலையில் தான், மொலுக்கு மக்களின் தனி நாட்டு போராட்டமும் ஆரம்பமாகியது. ஆகவே அதற்குப் பிந்திய காலத்தில் நடந்தவை குறித்து கவனம் செலுத்துவோம். 

இந்தோனேசியா எனும் நாடு, ஆயிரக் கணக்கான தீவுகளை கொண்டது. அந்த நாட்டில் நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மலேசிய மொழிக்கு மிகவும் நெருக்கமான, இந்தோனேசிய மொழி அவற்றில் ஒன்று. ஆனால், அதுவே பிற மொழிச் சிறுபான்மையின மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், பல்வேறு இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யங்கள் இருந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தோனேசிய மொழி இன்று ஆங்கிலம் போன்று ஒரு தொடர்பாடல் மொழியாக மட்டுமே இருந்தது. ஆனால், காலனிய காலகட்டத்தின் பின்னர் ஒரு தேசிய அரசு உருவானது. அது இந்தோனேசிய பேரினவாதமாக உருமாறியது. 

மொலுக்கர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவுஸ்திரேலியாவுக்கு மேலே கிழக்கு தீமோர் உள்ளது. அதற்கும் மேலே உள்ள தீவுகளை மொலுக்கு தீவுகள் என்று அழைப்பார்கள். அவற்றில் அம்பொன், சேரம் போன்ற தீவுகளில் வாழும் மக்களைப் பற்றி தான் இந்தக் கட்டுரை பேசுகின்றது. அந்த மக்கள் தம்மை "தென் மொலுக்கர்கள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். 25 ஏப்ரில் 1950, அந்த தீவுகளை இணைத்து, "தென் மலுக்கு குடியரசு" (Republik Maluku Selatan, சுருக்கமாக RMS)  பிரகடனம் செய்யப் பட்டது. 

மொலுக்கு இன மக்கள் அந்த தீவுகளில் வாழும் பூர்வ குடிகள். பார்ப்பதற்கு அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் போன்றிருப்பார்கள். அனேகமாக, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனங்களின் வம்சாவளியினராக இருக்கலாம். ஆனால், எல்லோரும் கருப்பாக தோன்ற மாட்டார்கள். பலர் சிவப்பாகவும் இருப்பார்கள். உலகில் நாகரீகமடைந்த எந்த இனமும், தனது இனத் தூய்மையை பேணி வருவதாக பெருமையடித்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் வேறு இனங்களுடன் கலந்திருப்பார்கள். 

இந்தோனேசியா வரலாற்றில் முதன் முறையாக, மொலுக்கு தீவுகள் தான் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுடன் தொடர்பு கொண்டன. அனேகமாக, மகலனின் கடற்பயணத்தின் விளைவாக இருக்கலாம். ஏனெனில், மொலுக்கு தீவுகளுக்கு மேலேயுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில், ஸ்பானிஷ் காரர்கள் காலூன்றி இருந்தனர். ஐரோப்பியருடனான நீண்ட கால தொடர்பு காரணமாக, பிற்காலத்தில் வந்த டச்சுக் காலனிய ஆட்சியாளர்களுடன் விரும்பி ஒத்துழைத்தார்கள். இதனால், இயல்பாகவே மொலுக்கு இன மக்கள் மேலைத்தேய விசுவாசிகளாக மாறி விட்டிருந்தனர்.  

மொலுக்கர்களின் மேற்கத்திய சார்புத் தன்மையை, நாங்கள் எமது நாடுகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் கரையோரப் பகுதிகளும், சென்னை போன்ற இந்திய கரையோரப் பகுதியும் தான், முதல் தடவையாக ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் வந்தன. நீண்ட கால ஐரோப்பிய மேலாண்மை  காரணமாக, இன்றைக்கும் பல தமிழர்கள் மேலைத்தேய விசுவாசிகளாக இருப்பதைப் பார்க்கலாம். (கொழும்பு போன்ற மேல் மாகாணத்தில் வாழும், கரையோர சிங்கள மக்களும் அவ்வாறு தான்.) தங்களது விசுவாசத்தை புரிந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகள், என்றைக்காவது ஒரு நாள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில், தமிழர்களுக்கும், மொலுக்கர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளை காணலாம். 

காலனிய தொடர்பு காரணமாக, பெரும்பாலான மொலுக்கு மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். மொலுக்கர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் அல்ல. சனத்தொகையில் கணிசமான அளவு இஸ்லாமிய மொலுக்கர்களும் இருக்கின்றனர். ஈழத்தில் இந்து-கிறிஸ்தவ தமிழர்கள் மட்டுமே தமிழீழம் கேட்டது போன்று, கிறிஸ்தவ மொலுக்கர்கள் தான் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்தனர். ஈழப்போர் நடந்த காலத்தில், முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தது போன்று தான், மொலுக்கு விடுதலைப்  போராட்டத்தில் (மொலுக்கு) முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தனர். இந்தப் பிரிவினையை, ஈழத்தில் எவ்வாறு இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டதோ, அதே மாதிரித் தான் இந்தோனேசிய அரசு மொலுக்கு பிராந்தியத்தில் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில், ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்கள் பல சலுகைகளை பெற்றனர். குறிப்பாக கிறிஸ்தவ தமிழர்கள், காலனிய நிர்வாகத்தில் பதவிகளைப் பெற்றனர். இலங்கை முழுவதும் அரசாங்க அதிகாரிகளாக பணியாற்றினார்கள். காலனிய இராணுவத்திலும் சில உயர் பதவிகளில் இருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கமாண்டராக பதவி வகித்த அன்டன் முத்துக்குமாரு போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். காலனிய அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப் பட்டதைப் போன்று தான், டச்சு காலனிய அரசாங்கத்தில் மொலுக்கு இன மக்களுக்கு சிறப்பான இடம் கிடைத்திருந்தது. இதனால், பிற இனத்தவர்கள் அவர்களை  "Belanda Hitam" (கருப்பு டச்சுக்காரர்கள்) என்று அழைத்தார்கள். 

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், இலங்கையில் பெரும்பான்மையினமான சிங்களவர்களிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்த பின்னர் தான், தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகள் ஆரம்பமாகின. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்தில்,  தங்களது பதவிகள் பறிபோகாது என்று தமிழர்கள் நினைத்திருக்கலாம். அதனால், தமிழீழக் கோரிக்கையும் பல வருடங்கள் தாமதமாகவே எழுப்பப் பட்டது. ஆனால், மொலுக்கு மக்களுக்கு அந்த அவசியம் உடனேயே எழுந்தது. ஏனென்றால், இந்தோனேசியாவிற்கான டச்சு காலனிய படைகளில் (Koninklijk Nederlands Indisch Leger; சுருக்கமாக KNIL) ஏராளமான மொலுக்கு வீரர்கள் சேர்ந்திருந்தனர். சாதாரண காலாட் படையினராக இல்லாமல், அதிகாரிகள் தரத்திலும் இருந்தனர். இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நெதர்லாந்து அரசுக்கு, அவ்வளவு படையினரையும் என்ன செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. 

மொலுக்கு வீரர்கள், புதிதாக உருவான இந்தோனேசிய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு, நெதர்லாந்து கூறியது. ஆனால், மொலுக்கர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தோனேசியா ஒரு சமஷ்டிக் குடியரசாக இருக்கும், அதாவது ஐக்கிய அமெரிக்கா போன்று, "ஐக்கிய இந்தோனேசியக் குடியரசுகள்" ஏற்படுத்தப் படும் என்று நெதர்லாந்து உறுதிமொழி அளித்தது. இவை எல்லாம் வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டத்திலேயே நின்று விட்டன. நடைமுறையில் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தோனேசிய அரசு, மொலுக்கு தீவுகள் மீதான இறையாண்மையை வலியுறுத்திக் கொண்டிருந்தது. 

எதிர்பார்த்த எதுவும் நடக்காததால் ஏமாந்த மொலுக்கர்கள், தாமாகவே "தென் மொலுக்கு குடியரசு" ஒன்றை பிரகடனம் செய்தனர். உலகில் எந்த நாடும், நெதர்லாந்து கூட, அந்த தனி நாட்டை அங்கீகரிக்கவில்லை. இறுதியில், இந்தோனேசிய படைகள் மொலுக்கு தீவுகளை ஆக்கிரமித்தன. அப்போதும், நெதர்லாந்து பாராமுகமாக இருந்தது.  Dr. Chris Soumokil தலைமையில் ஒரு கெரில்லா இயக்கம்,  இந்தோனேசியப் படைகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியது. அதற்கும் நெதர்லாந்து உதவவில்லை. நட்டாற்றில் விடப் பட்ட மொலுக்கு மக்களுக்கு, நெதர்லாந்து அரசு ஒரேயொரு உதவியை மட்டும் செய்ய முன் வந்தது. 

இந்தோனேசியாவுக்கான முன்னாள் டச்சு காலனிய படையை சேர்ந்த 4000 முன்னாள் படைவீரர்களை, அவர்களது குடும்பங்களுடன் நெதர்லாந்து நாட்டில் தங்க வைப்பதாக உறுதியளித்தது. அதுவும் தற்காலிகமாகத் தான். ஆறு மாதங்களுக்கு மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருந்து விட்டு, தென் மொலுக்கு பிராந்தியத்திற்கு சுயாட்சி கிடைத்த பின்னர் திரும்பி வரலாம் என்று கூறியது. நெதர்லாந்து அரசின் உறுதிமொழியை ஏற்று, 4000 படையினரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுமான 12500 பேர் நெதர்லாந்து நோக்கி கப்பலில் பயணமானார்கள். தாங்கள் மலை போல் நம்பியிருந்த காலனிய எஜமானர்கள் தங்களை ஏமாற்றுவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள் என்றோ, தென் மலுக்கு என்ற தனிநாடு பகற்கனவாக போய் விடும் என்றோ, அன்று அந்த மக்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. 

(தொடரும்)


Monday, June 10, 2013

"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி

"கல்லைக் கண்டால் பொலிசைக் காணோம்! பொலிசைக் கண்டால் கல்லைக் காணோம்!! " - புரட்சி மொழி 
("இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி" -   இரண்டாம் பாகம்)

"துருக்கி என்று பெயரிடுவதன் மூலம், அந்த நாட்டை இதற்கு மேலும் அவமதிக்க முடியாது." துருக்கி மொழி பேசாத பிற சிறுபான்மை இனங்களின் மனக்குமுறல் இது. மகாகவி பாரதியார், இலங்கையை "சிங்களத் தீவு" என்று விளித்து பாடியதற்காக மனம் நொந்த தமிழர்கள் பலர் உண்டு. இலங்கையை சிங்களம் என்று அழைப்பதால் என்ன அரசியல் விளைவு ஏற்படுமோ, அதே போன்று தான் துருக்கி என்ற நாட்டின் பெயரும் உண்டாக்குகின்றது. 

ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், "துருக்கியர்" என்று அழைப்பது ஒரு இழி சொல்லாக கருதப் பட்டது. பெரும்பான்மையினர் பேசிய மொழியாக இருந்த போதிலும், அதற்கு சமூக அந்தஸ்து இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில், பல உலக நாடுகளிலும் பரவிய "தேசியவாதம்" என்ற தொற்று நோய் துருக்கியையும் பிடித்தாட்டியது. துருக்கி தேசியவாதிகள், அவர்களது தேசியத் தலைவர் அட்டாதுர்க் தலைமையில் ஒரு தேசிய அரசை உருவாக்கினார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த கிரேக்கர்களையும், ஆர்மேனியர்களையும் வெளியேற்றினார்கள். பிற சிறுபான்மை இனங்களான, அரபி, குர்து மக்கள் மேல், பலவந்தமாக துருக்கி மொழியை திணித்தார்கள்.

துருக்கியை ஒரு இஸ்லாமிய நாடாக பார்ப்பதும், யதார்த்தத்திற்கு முரணானது. கிரேக்கர்கள், ஆர்மேனியர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். முஸ்லிம்களிலும் அலாவி பிரிவினர் ஒதுக்கப் பட்டனர். அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அலாவி முஸ்லிம்கள் துருக்கியில் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், போன்ற நாடுகளிலும் கணிசமான தொகையில் வாழ்கின்றனர். அலாவி முஸ்லிம்களின் மதக் கொள்கைகள் பல, இருபதாம் நூற்றாண்டு சோஷலிச தத்துவத்துடன் பெருமளவு ஒத்துப் போகின்றன. அதனால், பெரும்பாலான துருக்கி கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் அலாவி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தற்செயல் அல்ல.

அலாவி முஸ்லிம்களும், துருக்கி தேசியவாதிகளும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் பெரிதும் ஒத்துப் போகக் கூடியவர்கள். இதைவிட பெரும்பாலான துருக்கியர்கள் மத்தியில், தாம் ஒரு ஐரோப்பிய நாட்டவர் என்ற எண்ணமும் நிலை கொண்டுள்ளது. துருக்கியின் வட - கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் ஆர்மேனியாவை ஒரு ஐரோப்பிய நாடாக ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள், துருக்கியை நிராகரிப்பது முரண்நகையானது. இதற்கு "கிறிஸ்தவம், இஸ்லாம்" என்ற மதப் பிரிவினையை தவிர வேறெந்த காரணத்தையும் சாட்டாக கூற முடியாது. எது எப்படி இருப்பினும், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும், இஸ்லாமியவாத AKP, மதம் காரணமாக அரபு-இஸ்லாமிய உலகுடன் தன்னை இனம் காட்டிக் கொள்ள விரும்புகின்றது.

AK கட்சி, "இஸ்லாமிய - முதலாளியம்" என்ற புதிய அரசியல் - பொருளாதார கொள்கையை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அதன் படி, நாடு முழுவதும் புதிய மசூதிகள் கட்டப் படுகின்றன. அதற்கு அருகில் புதிய கடைத் தொகுதிகள் கட்டப் படுகின்றன. AK கட்சியுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இதனால் இலாபமடைந்துள்ளனர். இந்தப் புதிய அரசியல் - பொருளாதார கொள்கை, துருக்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதை மறுக்க முடியாது. அயலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம், பொருளாதார தேக்கத்தால் கஷ்டப் படும் நேரம், துருக்கியின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. ஆனால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டின் மக்கள் அனைவருக்கும் பயனளிக்குமா? உதாரணத்திற்கு, சமீபத்திய இந்திய, இலங்கை பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, ஒரு சிறிய மத்தியதர வர்க்கம் மட்டுமே நன்மை அடைந்தது, அல்லது அந்த வர்க்கத்தின் எண்ணிக்கை மட்டுமே பெருகியது. ஆனால், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது.

AKP யின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், நாடு துரிதகதியில் இஸ்லாமிய மயமாகிக் கொண்டிருந்தது. பெண்கள் முக்காடு போடுவது ஊக்குவிக்கப் பட்டது. முக்காடு போடாத பெண்கள், பொது இடங்களில் பயமுறுத்தப் பட்டனர். காதலர்கள் கையோடு கை கோர்த்துக் கொண்டு திரிவதும், பொது இடங்களில் முத்தமிடுவதும் கலாச்சார சீர்கேடாக கருதப் பட்டது. தற்போது ஒரு சராசரி மேற்கு ஐரோப்பிய நாடு போன்று காட்சியளிக்கும் துருக்கி, வெகு விரைவில் சவூதி அரேபியா போன்று மாறிவிடும் என்ற அச்சம் பல மதச் சார்பற்ற துருக்கியர் மனதில் எழுந்தது. அவர்களின் உள்ளக் குமுறல், சமீபத்திய மக்கள் எழுச்சியில் எதிரொலித்தது. மேற்குக் கரையோரம் அமைந்திருக்கும் அழகிய இஸ்மீர் நகரம், பார்ப்பதற்கு பாரிஸ், லண்டன் போல மேற்குலகமயமாக காட்சியளிக்கும். வழமையாக அந்த இடத்தில் AKP க்கு ஓட்டுப் போடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. மக்கள் எழுச்சி தொடங்கிய அடுத்த நாளே, இஸ்மீரில் இருந்த AKP கட்சி அலுவலகம் எரிக்கப் பட்டது.


உலகம் முழுவதும், புரட்சி என்றதும், பலர் கம்யூனிஸ்டுகளை தான் நினைப்பார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமே புரட்சிக்கு ஏகபோக உரிமை கோர முடியாது. அராஜகவாதிகள் (அனார்கிஸ்டுகள்), சோஷலிஸ்டுகள், இடதுசாரி லிபரல்கள் மட்டுமல்ல, இஸ்லாமியவாதிகள் கூட புரட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதற்கு உலகில் பல உதாரணங்களை காட்டலாம். புரட்சி என்பதை "ஜனநாயகமயப்படுத்தல், மக்கள் மயப் படுத்தல்" என்றும் வேறுவிதமாக அழைக்கலாம். 

அறுபதுகளில், மேற்கு ஐரோப்பிய மாணவர்கள், புரட்சியில் புதியதொரு பரிமாணத்தை அறிமுகப் படுத்தினார்கள். ஆங்கிலத்தில் "Occupy" என்று அழைக்கப் படும், பொது இடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டம் அது. அது ஒரு மக்கள் அரசாங்கம். மாணவர்கள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து, கல்விக் கொள்கைகளை தீர்மானிப்பார்கள். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து உற்பத்தியை தீர்மானிப்பார்கள். அது மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உண்மையான ஜனநாயகம். அதனை மக்கள் கற்றுக் கொள்வதற்கு, பல நாடுகளில் நடக்கும் Occupy போராட்டம் உதவுகின்றது.

இஸ்தான்புல் நகரில், கேசி பூங்காவில் சுமார் நூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் Occupy பாணியில் ஒன்று கூடினார்கள். அங்கேயே கூடாரம் அடித்து தங்கினார்கள். ஒரு வகையில் அது விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக இயங்கியது. ஆரம்பத்தில் காவல்துறையினர், கண்ணீர்புகைக் குண்டுகள், ஒரெஞ்ச் நச்சு வாயுக்களை அடித்து, போராடிய மக்களை கலைக்க முயற்சித்தனர். வெகுஜன ஊடகங்களும், பொலிஸ் அராஜகத்தை கண்டுகொள்ளவில்லை. துருக்கி மொழியில் ஒளிபரப்பாகும் அமெரிக்கர்களின் CNN கூட, அன்றைய தினம் பென்குயின்கள் பற்றிய விவரணப் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்படியானால், பிற அரசு சார்பான ஊடகங்களை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"இன்று பெரும்பாலான மக்கள், மரபு வழி ஊடகங்களில் நம்பிக்கை இழந்து விட்டனர். உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை பயன்படுத்துகின்றனர்." - துருக்கி அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் பலர் தெரிவித்த கருத்து. துருக்கி ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை போலிஸ் ஒடுக்கிய சம்பவத்தை அறிவிக்காமல் அமைதி காத்தன. "தாங்கள் அறிவிக்கா விட்டால், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு தகவல் போய்ச் சேராது, ஒரு சில நாட்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்த சுவடே இல்லாமல் மறக்கப் பட்டு விடும்..." என்று ஊடக நிறுவனங்கள் நினைத்திருந்தன. 

ஆனால், சமூக வலைத் தளங்களின் மூலம் தகவல்கள் நாடு முழுவதும் பரவியது. அதற்குப் பிறகு தமது தவறை உணர்ந்து கொண்ட ஊடகங்கள், போராட்டம் குறித்த செய்திகளை அறிவிக்கத் தொடங்கன. அரச சார்பு தொலைக்காட்சியான NTV யின் தலைமை நிர்வாகி, நடந்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அப்படி இருந்தும், போராடும் மக்களின் ஆத்திரம் அடங்கவில்லை. தங்களின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வந்த NTV நிறுவனத்தின் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் சாதாரண மக்களின் சக்தி எத்தகைய தாக்கத்தை உண்டாக்க வல்லது என்பதை, இன்று அதிகார வர்க்கம் உணர்ந்துள்ளது.

ஆயுதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே போராளிகள் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்களை "இணையப் போராளிகள்" என்று நையாண்டி செய்து வருகின்றனர். பெரும் முதலாளிகளின் நிதியில் இயங்கும் ஊடகங்கள், மக்களுக்கு தெரிவிக்காத செய்திகளை, சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இணையப் போராளிகள் தெரிவித்து வருகின்றனர். துருக்கி மக்கள் எழுச்சி பற்றி வெகுஜன ஊடகங்கள் செய்தி அறிவிக்காது புறக்கணித்து வந்தன. சமூக வலைத் தளங்களின் ஊடாக தகவல்கள் பரவிய பின்னர் தான், திடீரென விழித்துக் கொண்டது போல பாசாங்கு செய்தன. துருக்கியில் டிவிட்டர் பயன்படுத்திய 23 இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பதில் இருந்தே, அரசாங்கம் எந்தளவு தூரம் "இணையப் போராளிகளை" நினைத்து அஞ்சுகின்றது என்பது தெரிய வரும். 

பெரும் முதலாளிகளிடம் சம்பளம் என்ற பெயரில் கையூட்டு வாங்கும் தொழில்முறை ஊடகவியலாளர்களை விட, மக்கள் மத்தியில் இருந்து தோன்றும் ஊடகவியலாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இஸ்தான்புல் நகரில் ஒரு தற்காலிக ஊடக மையத்தை உருவாக்கிய சமூக ஆர்வலர்கள், அங்கு நடக்கும் புரட்சியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கணணியும், இணையமும், சமூக வலைத்தளங்களும் மட்டுமே அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள். புரட்சி நடக்கும் களத்தில் நின்று பணியாற்ற வேண்டியிருப்பதால், கண்ணீர்ப் புகையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, பாதுகாப்பு முகமூடி அணிந்திருக்கின்றனர். புரட்சி என்பது இரண்டு ஆயுதக் குழுக்களின் மோதல் அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொள்ளும் சமுதாய மாற்றம்.

 "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!" 
பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும், இலக்கற்ற வன்முறையில் இறங்குவதும் புரட்சி அல்ல. தெருக்களை ஆக்கிரமிப்பதும், அங்கு புத்தகங்களை கொண்டு வந்து வாசிப்பதும், தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் புரட்சியின் ஒரு அங்கம் தான். "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!"

ஒரு மருத்துவரின் முன் முயற்சியினால், கேசி பூங்காவில் ஒரு நூலகம் கட்டப் பட்டது. செங்கற்களால் தூண்களைப் போல கட்டி, அவற்றின் நடுவில் பலகைகளை வைத்து, புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, மார்க்ஸ் முதல் மாவோ வரை எழுதிய நூல்கள் அங்கே கிடைக்கும். அவற்றோடு பல இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், நாவல்களும் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை இரவல் எடுத்து வாசிப்பதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், வாசித்து முடித்த பின்னர் நூலை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.புரட்சியாளர்களின் "அதி பயங்கரமான ஆயுதக் களஞ்சியம்!" பூங்காவின் மத்தியில் இயங்கும் தற்காலிக நூலகம். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து இடதுசாரி இலக்கியங்களையும் இரவல் வாங்கலாம். 


கேசி பூங்காவில் தினசரி உடற்பயிற்சி அப்பியாசங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவச உணவு கிடைக்கிறது. பகலில் வேலை செய்து விட்டு வருபவர்கள், பூங்காவில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து உறங்குகிறார்கள். இலவச உணவு, எந்த வணிக நிறுவனமும் தனது பெயரில் கொடுத்த "நன்கொடை" அல்ல. மக்கள் தம்மிடம் உள்ள உணவை கொண்டு வந்து பகிர்ந்து உண்கிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம், புதிய உலகத்தையே உருவாக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். பொலிஸ் படையுடன் மோதியதால் காயமுற்ற போராட்டக் காரர்களுக்கு இலவச மருத்துவம் செய்வதற்கு மருத்துவ மாணவர்கள் வருகிறார்கள். அதை விட, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போராளிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்கிறது. அதற்கென வழக்கறிஞர்களின் குழு ஒன்று, அல்லும் பகலும் தயாராக இருக்கிறது.

இஸ்தான்புல் நகரின் மத்தியில் உள்ள Taksim சதுக்கத்தில் முதன் முதலாக மக்கள் எழுச்சி ஆரம்பமாகியது. அங்கு குழுமியிருந்த போராட்டக்காரர்களை பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசி அடித்து விரட்டியது. அந்த பொலிஸ் வன்முறை, நாடு முழுவதும் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணமாக அமைந்தது. தற்போது தாக்சிம் சதுக்கத்தில் இருந்து பொலிஸ் வெளியேறி விட்டது. அந்த இடம் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் அதனை "தாக்சிம் மக்கள் குடியரசு" என்று அழைக்கின்றனர். அந்தப் பகுதியை சுற்றிலும், பொலிஸ் வர விடாமல் தடையரண்கள் போடப்பட்டுள்ளன. விடுதலை செய்யப் பட்ட "தாக்சிம் குடியரசில்" ஒரு மக்கள் அரசாங்கம் நடக்கின்றது. அதன் "பிரஜைகளின்" கடமைகள் என்னவென்று கூறும் அறிவிப்புகள் சுவர்களில் ஓட்டப் பட்டுள்ளன. எல்லோரும் சேர்ந்து, அங்கிருக்கும் குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

போராட்டக் காரர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட போதிலும், பிரதமர் எர்டோகன் அவர்களை  "சூறையாடிகள்" என்று அழைத்தார். அதனைக் குறிக்கும் "çapulcu" (ஷப்புல்சு)  என்ற துருக்கிச் சொல், இன்று போராட்டக்காரர்களின் விருப்பத்திற்குரிய சொல்லாக மாறி விட்டது. போராட்ட செய்திகளை அறிவிக்கும் இணைய ஆர்வலர்கள், தமது பெயருடன் çapulcu என்று சேர்த்துக் கொள்கிறார்கள்.  இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வலைத்தளத்திற்கு Çapul TV என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  ஆங்கிலமயமாக்கப் பட்ட, Chapulling  என்ற சொல் கூட சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.  "Chapulling என்றால் உரிமைக்காக போராடுதல்" என்ற அர்த்தம் உருவாகி விட்டது. நாளை அந்தச் சொல் அகராதியில் சேர்க்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

நாளை துருக்கி மக்களின் எழுச்சி நசுக்கப் படலாம், அல்லது இலக்கை எட்ட முடியாமல் தோற்றுப் போகலாம். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியை அது உண்டாக்கும். ஜனநாயகம் என்ற குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அவர்கள் திளைக்கிறார்கள். அதனை வளர்த்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அதிகாரவர்க்கத்திற்கு நாங்கள் அஞ்சத் தேவையில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சும் நிலைமை மாற வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு அஞ்சும் காலம் வர வேண்டும். அது தான் புரட்சி.

(முற்றும்)
**********


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


2. இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி
1. "துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

மேலேயுள்ள படங்கள்: புரட்சியாளர்களின் அன்றாட செயற்பாடுகளை காட்டுகின்றன.
கீழேயுள்ள படங்கள் : அரச படைகளின் அடக்குமுறை 
இதிலே யார் வன்முறையாளர்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Friday, June 07, 2013

இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி

துருக்கியில் ஒரு அமைதியான புரட்சி நடக்கிறது. ஆயிரமாயிரம் மக்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் எதிர்பார்க்கும் புரட்சி நடக்காமலே போகலாம். இன்னும் சில நாட்களில், இந்தப் போராட்டம் தனது இலக்கை அடையாமலே ஓய்ந்து விடலாம். ஆனால், தமது வாழ்நாளில் ஒரு வரலாற்றுக் கடமை ஆற்றிய உணர்வு அவர்களின் முகங்களில் பளிச்சிடுகின்றது.

இதனை ஒரு வகையில், "தமிழீழத்திற்கு ஆதரவான தமிழ்நாட்டு மாணவர்களின்" போராட்டத்துடன் ஒப்பிடலாம். இரண்டுமே தன்னெழுச்சியாக நடைபெற்றன. எந்தவொரு அரசியல் கட்சியும் தலைமை தாங்கி வழிநடத்தவில்லை. ஆனால், துருக்கி மக்களின் போராட்டம் அதிலிருந்து மாறுபட்டு தெரிகின்றது. நேரடியாக அந்த நாட்டு அரசாங்கத்துடன் மோதுகின்றது. மாணவர்கள் மட்டுமல்லாது, வைத்தியர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் என்று சமூகத்தின் பல பிரிவினரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இஸ்தான்புல், துருக்கியின் மிகப்பெரிய தொழில்துறை நகரம். இஸ்தான்புல் நகரப் பூங்காவான Gezi யில், நூறுக்கும் குறைவான சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, கூடாரமடித்து தங்கினார்கள். நகர மத்தியில் உள்ள பூங்காவில், நிழல்தரு மரங்களை தறித்து வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் நவீன கடைத் தொகுதி (Shopping Complex) ஒன்றை உருவாக்க இருந்த முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி அது. உண்மையில் அது பிரதமர் எர்டோகன் முன்மொழிந்த "இஸ்லாமிய - முதலாளியத்தின்" ஒரு திட்டம் ஆகும். அது என்ன இஸ்லாமிய முதலாளியம்?

கடந்த பத்தாண்டுகளாக பதவியில் உள்ள, துருக்கியின் ஆளும் கட்சியான AKP, ஒரு இஸ்லாமிய மதவாதக் கட்சி. ஒரு பூரணமான ஜனநாயக தேர்தலில், பெரும்பான்மை வாக்காளர்களால் தெரிவு செய்யப் பட்டது. குறிப்பாக, "அனத்தோலியா" என்று அழைக்கப்படும், துருக்கி நாட்டுப்புற ஏழை மக்கள், ஆழமான இஸ்லாமிய மத நம்பிக்கை காரணமாக அந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். அந்த நாட்டுப்புற ஏழைகள், முக்காடு போட்ட மத நம்பிக்கை கொண்ட முஸ்லிம் பெண்கள், அரசாங்கத்திற்கு எதிராக இன்னும் கிளர்ந்தெழவில்லை. அப்படி நடந்தால், துருக்கி மக்கள் புரட்சி வெற்றிப் பாதையில் பயணிக்கும். அல்லாவிட்டால், AKP அரசு தனது ஆதரவு தளத்தை, புரட்சிக்கு எதிராக திசை திருப்பி விடும்.

AKP ஆட்சியை கைப்பற்றிய ஆரம்ப நாட்களில், தேசியவாத - பாசிச இராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதே பெரும்பாடாக இருந்தது. பல தசாப்த காலமாக, "துருக்கி தேசப் பிதா" அட்டா துர்க் கொள்கையில் இருந்து வழுவாமல், துருக்கியை ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று தோன்றுமளவிற்கு ஆட்சி செய்ததில், இராணுவத்தின் பங்களிப்பு பெரிதும் குறிப்பிடத் தக்கது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய மாபியா குழுக்கள், நேட்டோ அங்கத்துவ நாடுகளின் நட்புறவு தனியாக ஆராயப் பட வேண்டியது.

இஸ்லாமியவாத AKP யும், அதன் பிரதமர் எர்டோகனும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப் பட்டிருக்கலாம். ஆனால், அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதும், மெல்ல மெல்ல தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தனர். அவர்களும் தமக்கென சில மாபியா குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள். முந்திய பாசிச ஆட்சியாளர்களைப் போல, மாற்றுக் கருத்தாளர்களை சிறையில் அடைத்தார்கள். குறிப்பாக ஆர்மேனிய இனப்படுகொலையை ஆராய்ந்த எழுத்தாளர், அரசை விமர்சித்த ஊடகவியலாளர்கள், இடதுசாரி ஆர்வலர்கள் போன்றோர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப் பட்டனர்.

தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த, துருக்கி ஊடகவியலாளர் ஒருவரும், பல வருடங்களாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவர் நெதர்லாந்து குடியுரிமை வைத்திருந்த போதிலும் விடுதலையாகவில்லை. அவர் செய்த ஒரே குற்றம், இஸ்தான்புல் நகரில் ஒரு புரட்சிகர வானொலி நிலையத்தை நடத்தி வந்தது தான். 2006 ம் ஆண்டு, நான் துருக்கி சென்றிருந்த சமயம், அந்த வானொலிக்காக என்னைப் பேட்டி கண்டார்கள். அவ்வாறு தான், துருக்கி ஊடகவியலாளர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

எர்டோகன் இஸ்லாமியவாதம் பேசினாலும், நேட்டோ, மேற்குலக நாடுகளுடனான நட்புறவை துண்டிக்கவில்லை. குறிப்பாக, சிரியா உள்நாட்டு யுத்தத்தில், மேற்குலக நலன்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். சிரியா கிளர்ச்சிக் குழுக்கள், துருக்கியில் தளம் அமைக்க இடம் கொடுத்தார். அரசாங்கத்தின் அபிலாஷைகள், பெரும்பான்மை துருக்கி மக்களின் விருப்பத்துடன் ஒன்று சேரவில்லை. தேசியவாதிகள், இடதுசாரிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு சாமானியர்களும் துருக்கி சிரியா உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை. எர்டோகன் இன்னொரு ஓட்டோமான் சக்கரவர்த்தியாக வருவதற்கு ஆசைப் படுவதாக விமர்சகர்கள் குறை கூறினார்கள். (நூறு வருடங்களுக்கு முன்னர்,  ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், சிரியா துருக்கியுடன் இணைந்திருந்தது.)

ஆளும் கட்சியான AKP யின் அரசாங்கம், காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. கடந்த பத்து வருட ஆட்சியில், AKP கட்சி ஆதரவாளர்கள், காவல்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப் பட்டனர். அதுவே இன்றைய மக்கள் எழுச்சிக்கும் வழிவகுத்தது எனலாம். இந்த வருடம், துருக்கி இடதுசாரி தொழிற்சங்கங்கள், கட்சிகள், மே தின ஆர்ப்பாட்டங்களை, இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் நடத்த விரும்பினார்கள். கடந்த கால இராணுவ அடக்குமுறை காரணமாக, பல தசாப்தங்களாக அந்த இடத்தில் மே தின ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன. இந்த வருடம், மே தின ஊரவலத்தில் புகுந்த பொலிஸ் படைகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர். வரலாறு காணாத அளவு அபரிதமான கண்ணீர்ப் புகைக் குண்டுவெடிப்பு காரணமாக, அந்த இடம் ரணகளமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் காரணமாக, இடதுசாரி கட்சிகளுக்கும், எர்டோகன் அரசுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்தது.

இந்த வருடம் மே மாதம், இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தது. Reyhanli என்ற நகரத்தில், இரண்டு கார்க் குண்டுகள் வெடித்தன. 54 பேர் பலியானதாக அறிவிக்கப் பட்டது. Reyhanli நகரம், சிரியா எல்லையோரம் அமைந்துள்ளது. அண்மைய சிரியா யுத்தம் காரணமாக, ஆயிரக் கணக்கான சிரிய அகதிகளின் வரவால், நகர சனத்தொகை இரட்டிப்பாகியது. FSA போன்ற சிரியா அரசுக்கு எதிரான ஆயுதக் குழுக்கள் அங்கே முகாமிட்டு உள்ளன. சிரியர்களுக்காக சிரியர்கள் நடத்தும் வணிக ஸ்தாபனங்களும் உருவாகி விட்டிருந்தன. சிரியர்கள் மட்டுமல்ல, சிஐஏ, மொசாட் போன்ற வெளிநாட்டு உளவு ஸ்தாபனங்களும் அந்த நகரத்தில் அலுவலகங்களை திறந்திருந்தன. இதெல்லாம், அங்கு வாழும் துருக்கி மக்களின் விருப்பத்தோடு நடக்கவில்லை.

குண்டு வெடிப்பு நடந்து ஒரு மணி நேரத்திற்குள், அது "சிரியா அரசின் சதி வேலை" என்று துருக்கி அரசு குற்றஞ் சாட்டியது. சிரியா மீது படையெடுக்கப் போவதாக பயமுறுத்தியது. சிரியாவின் ஆசாத் அரசு மீதான குற்றச்சாட்டை உறுதிப் படுத்துவதற்காக, உள்ளூரில் இயங்கிய மார்க்சிய கட்சி ஒன்றின் ஒன்பது உறுப்பினர்களை கைது செய்தது. அந்த மார்க்சிய கட்சி, ஆசாத் அரசிடம் நிதி பெறுவதாக குற்றம் சாட்டியது. ஆனால், இந்தக் கதைகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஈடுபட்டது. துருக்கி மக்கள் இதெல்லாம் கட்டுக்கதைகள் என்றனர். "அந்தக் குண்டுவெடிப்பில் 54 பேர் மட்டும் சாகவில்லை, குறைந்தது நூறு பேர் மாண்டிருப்பார்கள், அரசு உண்மையை மறைக்கிறது..." என்றார்கள்.

துருக்கி அரசு, சிரியாவின் ஆசாத் அரசின் மீது பழி போட்ட அதே நேரத்தில், Reyhanli நகர மக்களின் கோபம்,  சிரியா அகதிகளுக்கு எதிராக திரும்பியிருந்தது. அவர்கள் மத்தியில் இயங்கும் FSA அந்தக் குண்டுகளை வெடிக்க வைத்தது என்று நம்பினார்கள். சிரியர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள், வாகனங்கள் தாக்கப் பட்டன.  துருக்கி ஊடகங்கள் மட்டுமல்ல, மேற்கத்திய ஊடகங்களும் அந்த செய்திகளை அறிவிக்கவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த நகர மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், துருக்கி அரசின் சிரியா கொள்கை கடுமையாக விமர்சிக்கப் பட்டது. துருக்கி அரசு, சிரிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. மேற்கத்திய ஊடகங்கள், அதனை "சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிரான பேரணியாக" திரித்துக் கூறியன.

சில நாட்களில் உண்மை வெளியானது. துருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்ஸ் (Hackers), இணையத்தை ஊடறுத்து, துருக்கி அரசின் இரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதிலே Reyhanli குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய தகவல் முக்கியமானது. அதாவது, Reyhanli நகரத்தில் குண்டுவெடிப்பு நடக்கவிருக்கிறது என்ற விபரம், துருக்கி அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இந்த தகவல், துருக்கி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. மக்கள் மத்தியில், அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், ரெய்ஹன்லி குண்டுவெடிப்புக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு, ஹேக்கர்ஸ் வெளியிட்ட தகவலுக்கு கவனம் செலுத்தவில்லை. மேற்கத்திய ஊடகங்கள் அந்த செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தன. 

(தொடரும்)


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

Sunday, June 02, 2013

"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

Occupy இயக்கமாக, இஸ்தான்புல் பூங்காவில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களை பொலிஸ் வன்முறை கொண்டு விரட்டியடித்தது. ஆயிரம் பேரளவில் கைது செய்யப் பட்டனர். கூட்டத்தை கலைப்பதற்காக, பெருமளவு கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகிக்க பட்டதால் பலர் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுகளில், ஒரெஞ்ச் என்ற நச்சுப் பதார்த்தம் இருந்ததாகவும், அதனால் பாதிக்கப் படுபவர்கள் கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிய வருகின்றது. இஸ்தான்புல் நகரில் நடந்த பொலிஸ் வன்முறை குறித்து, வெகுஜன ஊடகங்கள் ஒரு வரி செய்தி கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. சமூக ஆர்வலர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரவச் செய்தனர். இதனால் பிற துருக்கி நகரங்களிலும் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனால், இணையப் பாவனை மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.

அரபு வசந்தம் பாணியில் "துருக்கி வசந்தம்" என்று அழைக்கக் கூடிய மக்கள் எழுச்சி பற்றி, துருக்கி ஊடகங்கள் எதுவும் கூறாமல் முழுமையாக இருட்டடிப்பு செய்த நேரம், BBC போன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், "சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களின் எதிர்ப்பு நடவடிக்கை" என்று செய்தியை திரித்து வெளியிட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களில் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், அனார்கிஸ்டுகள் என்று பல அரசியல் கொள்கைகளை பின்பற்றுவோர், அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஜனாதிபதி எர்டோகன் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக உணரும் மக்களின் எழுச்சி. BBC புளுகியது போல சுற்றுச் சூழல் பிரச்சினை ஒரு முக்கிய காரணம் அல்ல.

ஏற்கனவே, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர், சிரியா எல்லையோர நகரத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்பின் பின்னர், ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தக் குண்டுவெடிப்பில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதாகவும், அரசு எண்ணிக்கையை குறைத்து சொல்லி இருப்பதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். குண்டுவெடிப்பு நடந்து ஒரு மணிநேரத்திற்குள், "ஆசாத் அரச கைக்கூலிகளின் செயல்" என்று துருக்கி அரசு அறிவித்தது. தலைமறைவாக இயங்கும் மார்க்சிய அமைப்பை சேர்ந்த ஒன்பது துருக்கி ஆர்வலர்களை கைது செய்தது. சில மேற்கத்திய அரசுகள் மட்டுமே, "இந்த குண்டுவெடிப்பு ஆசாத் அரசின் வேலை" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முன்வந்தன. ஆனால், அந்தப் பிராந்தியத்தில் வாழும் துருக்கி மக்கள், FSA என்ற சிரியா அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக் குழுவை குற்றஞ் சாட்டுகின்றனர். ஆங்காங்கே சிரிய அகதிகளின் வியாபார ஸ்தலங்கள், வாகனங்கள் தாக்கப் பட்டன. 

சிரிய போராளிக் குழுக்களுக்கு துருக்கி அரசு ஆதரவளிப்பதால், மக்களின் கோபாவேசம் எர்டோகன் அரசுக்கு எதிராக திரும்பியது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் துருக்கி அரசு தலையிடுவதை, பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை. பொது மக்களின் அபிலாஷைகள் அரசினால் புறக்கணிக்கப் பட்டு வந்ததால், அந்த ஏமாற்றம் தெருக்களில் எதிரொலித்தது. பல நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், வெளிநாட்டு ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிடாமல் மூடி மறைத்து வந்தன. மக்களின் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை, சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் துருக்கியின் பங்களிப்பு தூண்டி விட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வறுமை காரணமாக பெருமளவு துருக்கி மக்கள் எர்டோகன் அரசின் மேல் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இஸ்லாமிய மதவாதக் கட்சித் தலைவரான எர்டோகன், தேர்தலுக்கு முன்னர் "மதத்தை காட்டி மக்களை மயக்கியதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வாதிகாரி போன்று நடந்து கொள்வதாகவும்..." அவருக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களே கூறுகின்றனர். இன்றைய காலத்தில், மதவாதம், தேசியவாதம் பேசி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை துருக்கியில் நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி, இஸ்தான்புல் நகரில் தொடங்கிய மக்கள் எழுச்சி, தற்போது நாடெங்கும் பரவி வருகின்றது. (முக்கியமான நகரங்களில், மக்கள் நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.) இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய, "அரபு வசந்தம்" பற்றி பெரும் மகிழ்வுடன் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், இன்றைய துருக்கி மக்கள் எழுச்சி குறித்து மௌனம் சாதிக்கின்றன. இஸ்தான்புல் நகர பூங்காவில், Occupy பாணியில் சுற்றுச்சூழலியல் ஆதரவாளர்களால் தொடங்கப் பட்ட போராட்டம், பொலிஸ் பலப் பிரயோகத்தினால் கடுமையாக நசுக்கப் பட்டது. பூங்காவை அழித்து, நவீன அங்காடிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர். பொலிஸ் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப்புகை குண்டுகளை பிரயோகித்து, போராட்டக்காரர்களை கலைத்த காட்சிகள், சமூக வலைத் தளங்களில் மட்டுமே வெளியாகின்றன. துருக்கி முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, மே தினத்தன்றும், சிரியா மீதான போரை எதிர்த்தும், பல்வேறு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.இஸ்தான்புல் நகரில், ஐரோப்பா-ஆசியாக் கண்டங்களை இணைக்கும் பொஸ்போருஸ் பாலத்தினை ஆக்கிரமித்துள்ள துருக்கி மக்களின் எழுச்சி. துருக்கி மேற்கத்திய சார்பு நேட்டோ அங்கத்துவ நாடென்பதாலும், போராடும் மக்கள் முதலாளிய எதிர்ப்பாளர்கள் என்பதாலும், அனைத்து ஊடகங்களும் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருவது கவனிக்கத் தக்கது.துருக்கியில் மக்கள் போராட்டம் பற்றிய முன்னைய பதிவுகள்:
உலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுறையும்
துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்
குர்திஸ்தான், துருக்கியின் துயரம்