Thursday, October 30, 2008

டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...டாலரின் மதிப்பு திடீரென ஒரே நாளில் குறைந்து, உலகம் முழுவதும் டாலரை நிராகரித்தால் என்ன நடக்கும்? நிதி நெருக்கடி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகையில், எந்த நேரம் எதுவும் நடக்கலாம் என்பதால், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் VPRO, பொருளாதார செய்திகளை தாங்கி வரும் NRC Handelsblad உடன் இணைந்து, "டாலர் வீழ்ச்சியடைந்த அந்த நாள்..." என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்களை பேட்டி கண்டு, அவர்களது எதிர்காலம் பற்றிய ஊகங்களின் அடிப்படையில், கற்பனை கலந்து, பொது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.

டாலர் மதிப்பு திடீரென சரிவதற்கு சாத்தியமான ஒரு நிகழ்வு, பெருமளவு டாலர்களை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசியநாடுகள், அதன் மதிப்பு மேலும் குறைவதற்கு முன்னர் சந்தையில் விற்று, தமது முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள முனைவதேயாகும். அதிகாலையில் உலக சந்தை முதலாவதாக வியாபாரத்தை ஆரம்பிக்கும் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் சில வணிகர்கள் பெருமளவு டாலர்களை விற்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்போதே டாலரின் வீழ்ச்சி ஆரம்பமாகும். சிறிது நேரம் கழித்து சிங்கப்பூர் பங்குச் சந்தையிலும் அப்படி எல்லோரும் தம்மிடம் இருக்கும் டாலரை எப்படியாவது விற்றுவிட துடித்தால், அந்த சர்வதேச நாணயத்தின் பெறுமதி கணிசமாக குறையும். இது பற்றிய செய்திகள் ஐரோப்பாவில் பரவும் போது, ஏற்கனவே "டாலர் நெருக்கடி" உருவாகி விட்டிருக்கும்.

ஆரம்பத்தில் சாதாரண மக்கள் எதனையும் உணராவிட்டாலும், டாலர் மதிப்பு இறங்குவது பற்றிய செய்தி பீதியைக் கிளப்பும் வேளை, எல்லோரும் தமது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்றுவிட முனைவார்கள். நாணய மாற்று நிலையங்களில், அல்லது வங்கிகளில் குறிப்பிட்ட அளவு டாலர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமென அறிப்பார்கள். கட்டுப்படுத்தப்பட முடியாவிட்டால் டாலர் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள். வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில், எல்லோரும் தமது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துவிட முண்டியடிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், வங்கிகள் தானியங்கி இயந்திரங்களை நிறுத்தி விடுவார்கள். மக்கள் தமது கையில் இருக்கும் பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டி வரும்.

அமெரிக்காவில் பங்குச் சந்தை தரகர்களும், வணிகர்களும் எதுவுமே நடக்காதது போல பாவனை செய்வார்கள். இதற்கு முன்னரும் பொருளாதார நெருக்கடி வந்ததாகவும், அதிலிருந்து அமெரிக்கா மீண்டு விட்டதாகவும் சமாதானம் கூறிக்கொள்வர். ஆனால் அங்கேயும் டாலர் பெறுமதி மேலும் குறைவதை தவிர்க்க முடியாது. இதுவரை நட்பு பாராட்டி வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு தடைவிதிப்பர். எரிச்சலடையும் அமெரிக்க ஜனாதிபதி பிற நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகத்தை இரத்து செய்வார். 

அமெரிக்கா உலகில் இருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும். நிச்சயமாக வர்த்தக உறவு முறிவடைவதை சீனா விரும்பப்போவதில்லை. தற்போது மேலாண்மை வல்லரசாகிவிடும் சீனா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும். அமெரிக்கா பொருளாதார நெருக்கடியை இராணுவப் பலம் கொண்டு தீர்க்கும் முகமாக, சீனாவை அண்டிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகளை மேற்கொள்ளும். இத்துடன் இந்த பொருளாதாரத் திகில் படம் முடிவுறுகின்றது.

டாலர் வீழ்ச்சியடையும் ஊழிக்கால சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருளாதார அடிப்படை தரவுகள் என்ன? உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செய்யும் அமெரிக்காவின் செல்வாக்கு, மற்றும் டாலர் இன்றியமையாத அந்நிய செலாவணியாக மாறிவிட்டதன் விளைவுகளே அவை. இன்றைய நிலையில், அனைத்து நாடுகளும் டாலரை தமது சேமிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது. 

உலக சந்தையில் குண்டூசி முதல் ஆகாயவிமானம் வரை வாங்குவதற்கு டாலர் தேவைப்படுகின்றது. மேலும் பெற்றோலின் விலை டாலரில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து தமது கஜானவை டாலரால் நிரப்பிக் கொள்கின்றன. இதற்காகவே தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை குறைத்துக் கொள்கின்றன. ஐரோப்பா கூட தமது ஐரோ நாணயம் டாலரை விட மதிப்பு கூடுவதை விரும்பவில்லை. இது ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் என அஞ்சுகின்றன.

நிலைமையை விளக்குவதற்கான உவமானக் கதை ஒன்று. ஒரு தீவில் ஐந்து பேர் மட்டும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒன்று அமெரிக்கா, மற்றயவர்கள் ஆசிய நாடுகள். மீன் பிடித்தல், உணவுப்பயிர் விளைவித்தல், கால்நடை வளர்ப்பு என ஒவ்வொருவர் தமக்குத் தெரிந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா மட்டும் இவர்கள் உற்பத்தி செய்யும் உணவை வாங்கி உண்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளது. எஞ்சும் உணவே மற்றவர்களுக்கு கிடைக்கின்றது. 

இத்தகைய சூழலில் அமெரிக்கா இருப்பதாலேயே தமக்கு உணவு கிடைப்பதாக கருதிக்கொள்கின்றனர். இன்றைய உலகமும் அப்படிதான் இயங்குகின்றது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு பொருட்களை அதிகம் நுகர்வோனாக அமெரிக்கா உள்ளது. உதாரணத்திற்கு உலகில் ஐம்பது வீதமான பெற்றோலை அமெரிக்காவே வாங்குகின்றது. எஞ்சிய ஐம்பது வீதத்தை மிகுதி நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.

அமெரிக்கா இவ்வாறு உலகம் முழுவதும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு கடனும் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதாவது ஊர் முழுக்க கடன் வாங்கி, அந்தப் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளிடமும், நிறுவனங்களிடமும் கடன் வாங்கி தான், தனது பட்ஜெட்டை சரிக்கட்டுகின்றது. 

சீனா உட்பட பிற நாடுகள், அமெரிக்க கடன் பத்திரங்களை (இவை பங்குகள் போல சந்தையில் ஏலம் விடப்பட்டாலும், கடனை திருப்பிக் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது) பெருமளவில் வாங்கி வைத்துக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் கடன் அந்நாடுகளின் இருப்பில் இருக்கும் வேளை, டாலரின் மதிப்பு இறங்குவதோ, அமெரிக்க பொருளாதாரம் வீழ்வதையோ, அல்லது இருபக்க வர்த்தகம் தடைப்படுவதையோ யாரும் விரும்பப்போவதில்லை. இருப்பினும் அமெரிக்க பொருளாதாரம் மீதோ, அல்லது டாலர் மீதோ நம்பிக்கை இல்லாமல் போகும் போது தான் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உருவாகும்.


தற்போதைய நிதி நெருக்கடியால், பங்குச் சந்தை குறியீட்டு சுட்டெண் தொடர்ந்து குறைந்து வருகையில், அமெரிக்காவில் பொருளாதார தேக்கம் உருவாகும். அது அந்நாட்டு பொருளாதாரம் வளரவில்லை என்பதன் அறிகுறி. அதன் விளைவுகளாக, அமெரிக்கா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ளும். இது ஒருவகையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, சேமிப்பு போன்ற சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதே நேரம் அமெரிக்காவின் உலக பொருளாதார ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பிற நாடுகளும் எதிர்பாராத வளர்ச்சியை காணலாம். 

குறிப்பாக இதுவரை காலமும் டாலரின் மதிப்பு கூடியிருந்தால் தமக்கு நன்மை(ஏற்றுமதி வர்த்தகம்) என்று நினைத்துக் கொண்டு, பல நாடுகள் உள்நாட்டு நாணய பெறுமதியை செயற்கையாக குறைத்து வைத்திருந்த நிலை மாறும். இதனால் நமது நாட்டு நாணயங்களுக்கு என்றுமில்லாதவாறு மதிப்பு அதிகரிக்கும். அவற்றின் பெறுமதி கூடுவதால், மக்களின் வாங்குதிறன் அதிகரிக்கலாம். டாலரின் வீழ்ச்சி கொடுக்கும் அதிர்வலைகள், குறிப்பிட்ட காலத்திற்கு உடனடி கலவரங்களை உருவாக்கினாலும், நீண்ட கால நோக்கில் அது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.


"டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்" Video வை இங்கே பார்வையிடலாம் :Monday, October 27, 2008

பெரு: மீண்டும் ஒளிரும் பாதை


பெரு நாட்டின் "ஒளிரும் பாதை" இயக்கம் பற்றி இன்றைய இளம்தலைமுறையினருக்கு அதிகம் தெரியாமலிருக்கலாம். ஒரு காலத்தில் புரட்சியை நோக்கி வெற்றிநடை போட்ட, பெரு கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் ஆயுதமேந்திய வடிவமே ஒளிரும் பாதையாகும். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.

தலைவர் அபிமால் குஜ்மான் (இயக்கப் பெயர்: கொன்சலோ) தலைமையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தினர். தலைநகர் லீமா, அடுத்தடுத்து இடம்பெற்ற கார் குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. அதுவே அமெரிக்கா, ஒளிரும் பாதையை ஒரு காலத்தில் உலகின் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமாக காட்ட காரணமாயிற்று.

என்பதுகளில் அந்த இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஒரு கட்டத்தில், மாவோயிஸ்ட் புரட்சி வென்று, விரைவில் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ என்று சி.ஐ.ஏ. மட்டத்தில் கூட ஐயம் நிலவியது. பெருவின் அன்றைய சர்வாதிகாரி புஜிமோரிக்கு அமெரிக்கா தேவைப்பட்ட உதவிகளை வழங்கி ஒளிரும் பாதையை அழித்தொழிக்க ஆரம்பித்தது. அரச இராணுவ நடவடிக்கையால் மட்டுமல்ல, எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு(சாதாரண விவசாயிகளும் அதற்குள் அடக்கம்) ஆயுதங்கள் வழங்கியும், ஒளிரும் பாதை போராளிகள், ஆதரவாளர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இறுதியில் இயக்கத் தலைவர் கோன்சலோ கைது செய்யப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் பலம் பெருமளவில் குறைந்து விட்டது. அதற்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற முக்கிய தலைவர்கள் ஒன்றில் கைது செய்யப்பட்டோ அல்லது சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.

தற்போது எஞ்சியிருக்கும் மத்திய குழு உறுப்பினர் ஒருவர்(அவரைப் பற்றிய விபரங்கள் குறைவு), அரச கட்டுப்பாடற்ற அமேசன் காட்டுப் பகுதியில் எஞ்சிய போராளிகளை வழிநடாத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஒளிரும்பாதை, தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்(பெருமளவு வனாந்தரப் பகுதிகள்), தன்னை மீளக் கட்டமைத்து வந்தது. அந்தப்பகுதியில் (கோகெயின் போதைப்பொருளின் மூலப்பொருளான) கொக்கோ பயிர் செய்யப்படுவதாகவும், அதைப்பயிரிடும் விவசாயிகளுக்கும், அதை கடத்தும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கொடுத்து, வரி அறவிட்டு வருவதாகவும், அதுவே ஒளிரும் பாதை இயக்கத்தின் பிரதான வருமானம் என்று பேரு அரசாங்கமும், அமெரிக்காவும் கூறி வருகின்றன. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

உலகெங்கும் "கம்யூனிசம் காலாவதியான சித்தாந்தமாகி விட்டதால்" மக்கள் ஆதரவும் கிட்டாது, அதனால் பெருவில் ஒளிரும் பாதை மாவோயிஸ்டுகளின் கதை முடிந்து விட்டது, என்று தான் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக ஒளிரும் பாதை கெரில்லாக்கள் மீண்டும் இராணுவ இலக்குகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் கூட (ஒக்டோபர் 2008), பிரபலமான புரட்சியின் மையமான "ஆயாகுச்சோ" பிரதேசத்திற்கு அருகில், அரச இராணுவத் தொடரணி மீது இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். (பார்க்க : 19 killed in Peru in worst Shining Path attack in 10 years)


"ஆயகுச்சோ" சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் என்பது குறிப்பித்தக்கது. பூர்வீக செவ்விந்தியக் குடிகள் வாழும் மலைப்பிரதேசமான ஆயகுச்சோவில் இருந்து தான் ஒளிரும் பாதை இயக்கத்தினர் தமது புரட்சியை ஆரம்பித்தனர். இப்போது கூட அந்தப் பகுதி மக்கள் யாவரும், ஒளிரும் பாதையின் தீவிர ஆதரவாளர்கள். மேலும் பெரு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

"ஒளிரும் பாதை புரட்சி" ஆரம்பமாகு முன்னர் பெருவின் சனத்தொகையில் பத்து வீதமானோர், அந்நாட்டின் என்பது வீதமான நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்தனர். சனத்தொகையில் அரைவாசி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்தனர். இன்று "ஒளிரும் பாதை அழிக்கப்பட்டு", "கம்யூனிசம் காலாவதியான" காலத்திலும், நிலைமை இன்னும் மாறவில்லை.

இதற்கிடையே பிரிட்டனின் "சேனல் 4" தொலைக்காட்சி சேவை செய்தியாளர் ஒருவர் பெரு சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், ஒளிரும் பாதை இயக்கத்தின் இன்றைய நிலையை படம்பிடித்து அனுப்பியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, இதுவரை வெளியுலகம் பார்க்காத அரிய படங்களையும், தகவல்களையும் திரட்டித் தருகின்றது. பல மறைக்கப்பட்ட உண்மைகளை இந்த ஆவணப்படம் வெளிக்கொணர்கின்றது.

பூர்வீக மக்கள் மத்தியில் தற்போதும் ஒளிரும் பாதை இயங்கி வருகின்றது. அது மட்டுமல்ல, பெருமளவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் போராளிகள் கூட, சிறைக்குள்ளே தமது புரட்சிகர அரசியலை தொடர்கின்றனர். சிறைச்சாலையில் வைத்து பூட்டிய போதும், ஒளிரும்பாதை உறுப்பினர்களின் கொள்கைப்பற்றை உடைக்க முடியாத அரச படைகள், சிறைக்கலகத்தை அடக்குவதாக சொல்லி, நூற்றுக்கணக்கான கைதிகளை கொன்று குவித்தனர். இவையெல்லாம் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

People of the Shining Path


_______________________________________

Sunday, October 26, 2008

வீடியோ: புஷ்ஷின் புகழ் பெற்ற உரை

அமெரிக்கா ஜனாதிபதி புஷ் இதுவரை ஆற்றிய உரைகளில் மிகச் சிறந்தது இது. அவரின் உரையை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்பு தேவையில்லை என்பதுடன், குழந்தைகளுக்கும் புரியும் வகையில் சிறப்பாக உரையாற்றியுள்ளார்.

NO COMMENT________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Friday, October 24, 2008

வீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை. நீண்டகால போரினால் களைப்படைந்த சராசரி யாழ்ப்பாண மக்கள், சமாதானத்திற்காக ஏங்குகின்றனர், என்ற யதார்த்தத்தை பதிவு செய்த தொலைக்காட்சி வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு யுத்தம் காரணமாக இலங்கையின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி தருகின்றது. போர்ச்சூழல் உருவாக்கிய பொருளாதாரக் கஷ்டங்கள், மரணபயத்துடன் அஞ்சி அஞ்சி வாழும் நிலைமை, போன்றவற்றை சாதாரண மக்களை பேட்டி கண்டு,அவர்களின் பிரச்சினையை உலகம் பார்க்கும் வகை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. பெரும்பாலான ஊடகங்கள் போரைப் பற்றி மட்டுமே அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாதாரண மக்களின் அவலங்களை தேடிச் சென்று படம் பிடித்த, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

DAYS IN JAFFNAThanks to: International Network of Sri Lankan Diaspora
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

ஒரு பெண் போராளியின் கதை

Guerrillera (பெண் போராளி) ஆவணப் படம். 
கொலம்பியா நாட்டின் புரட்சி இராணுவமான FARC இல் இணைந்த ஒரு பெண் போராளியின் கதை, படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள், அந்த இயக்கத்தின் இராணுவப்பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் போராளிகளின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றை இந்த படத்தில் பார்க்கலாம். ஸ்பானிய மொழி பேசும் படம் ஆங்கில உப தலைப்புகளுடன்.

GuerrilleraThe translation of the introduction
___________________________________
Two hundred years ago
Simon Bolivar lead an uprising of
indians and african slaves
against the Spaniard empire in Southamerica.

Bolivar defeated spaniard army
but his social and revolutionary dream
was beatrayed for Colombian landowners.

Today,
a guerrilla called FARC-EP
keep fighting in Bolivar ideals
against Colombian oligarchy

FARC controls a big part of Colombia
and the foreign investor consider it as
a dangerous threat.

For Colombian and U. S. Goverments
guerrilas are kidnappers, drug-traders
and Terrorist

no other confict in western hemisphere
has the same bloody and suffering consequenses

Military and paramilitary death squadas
mutilate, kill and jail civilians suspected
of shimpaties with rebelds.

In hidden jungle training camps
FARC teachs to new recruits Simon Bolivar,
Carl Marx and Valdimir Lenin ideals, and
prepare them to fight.

when anyone decides fight
his/her compromise is for life time.

_______________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Wednesday, October 22, 2008

வீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!"அமெரிக்கா என்றால் சொர்க்கம்" என்ற நாகரீக வெகுளிகளின் மனக்கோட்டை நமது கண்முன்னால் தகர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கையில், முதலாளிகள் மட்டும் அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு கரை ஒதுங்குகின்றனர். கடவுளும் கைவிட்டுவிட்ட சாதாரண மக்கள், வேலை இழந்து, வீடிழந்து, வீதிக்கு விரட்டப்படுகின்றனர். உயிரை மட்டும் இழக்காத அமெரிக்க மக்கள், தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக கூடாரங்களுக்குள் தஞ்சமடைகின்றனர். ஆனால் இப்போதும் சில "நாகரீக வெகுளிகள்" தம்மைச் சுற்றி அப்படி எதுவும் நடக்கவில்லை என்று, மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் தீக்கோழி போல பாசாங்கு செய்கின்றனர்.

இதோ உண்மையான அமெரிக்கா! கூடாரங்களுக்குள் குடியிருக்கும் ஏழை அமெரிக்கா!! தொலைக்காட்சி கமெராக்கள் பதிவுசெய்த சலனப்படங்கள் :

முன்னைய பதிவு :
சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு

________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

பாலஸ்தீன அகதிகள் தயாரித்த குறும்படம்லெபனானில் பெர்ஜ் அஷ்-ஷமாளி முகாமில் வசிக்கும், பாலஸ்தீன இளைஞர்கள் தயாரித்த குறும்படம் ஒன்று, பாலஸ்தீனியர்கள் பற்றி இதுவரை சொல்லப்படாத மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. தமது முகாமில் இருந்து ஆரஞ்சு பழத்தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளரைப் பற்றிய விவரணப்படம் இது. லெபனானில் 4 லட்சம் பாலஸ்தீனியர்கள், கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், அவர்களை லெபனானிய சிவில் சமூகத்துடன் சேர்க்காமல், இன்றும் அகதிகளாக ஒதுக்கியே வைத்திருக்கிறது அரசாங்கம். லெபனான் சட்டப்படி அவர்கள் வெளிநாட்டவர்களாக பார்க்கப்படுவதால், எந்த ஒரு அரசியல்-சமூக உரிமைகளோ, சலுகைகளோ இன்றி, முகாம்களுக்குள் காலம் கடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒரு டசினுக்கும் அதிகமான வேலைகளை செய்வதற்கு, பாலஸ்தீன அகதிகளுக்கு தடை உள்ளது. உதாரணத்திற்கு மருத்துவப்படிப்பை முடித்த ஒரு அகதி (அரசாங்க ஆஸ்பத்திரிகளில்) மருத்துவராக பணி புரிய முடியாது. தனியார் மருத்துவனைகளில் ஒருவேளை தனியார் மருத்துவமனை பணிக்கு அமர்த்தினாலும், அது கூட தகுதிக்கேற்ற சம்பளமற்ற, தராதரம் குறைந்த வேலையாக இருக்கும்.

பாலஸ்தீனர்கள் என்ற காரணத்தாலேயே, சக லெபனானிய தொழிலாளரில் இருந்து பாகுபாடு காட்டப்படுதல். மிகக் குறைந்த சம்பளம் வழங்கி, உழைப்பை சுரண்டும் முதலாளிகள். நெருப்பாக கொளுத்தும் வெயிலிலும், எலும்பை உருக்கும் பனிக்குளிரிலும், வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுதல். சட்டப்படி பதிவு செய்யமுடியாததால், மருத்துவ காப்புறுதி, சமூகநலக் கொடுப்பனவு போன்ற சலுகைகளை பெற முடியாத நிர்க்கதியான நிலைமை. கூலி உயர்வுக்காக ஒன்றுபட்ட போராட்டம். தாங்களாகவே தொழிற்சங்கம் அமைத்து, தமக்குள்ளே சிறுதொகையை சேமித்து, தொழிலாளர் நலன் பேணும் காப்புறுதியை உருவாக்கி கொண்டமை. இவை போன்ற பிரச்சினைகளை, தொழிலாளர்களே சொல்லக் கேட்டு, யதார்த்தத்தை படம் பிடித்துள்ளனர், இந்த குறும்பட பயிற்சிப் பட்டறையை முடித்த மாணவர்கள்.

HARVESTING ORANGES


Part 1


Part 2

முன்னைய பதிவுகள் :
காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்
_________________________________________Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Tuesday, October 21, 2008

வெகு விரைவில் அமெரிக்காவில் இராணுவ ஆட்சி (வீடியோ)Latest News Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

பொருளாதார நெருக்கடியானது, தன்னிச்சையான மக்கள் எழுச்சிகளை உருவாக்கலாம் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்க அரசாங்கம் விரைவில் இராணுவ சட்டத்தின் ஆட்சியை, பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல், கொண்டு வர இருக்கின்றது. இது குறித்து விளக்கும் வீடியோ கீழே:
U.S. Army prepares to invade U.S."Wake up America!" Still not convinced were in Martial law?

Latest News Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

________________________________________Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.-
Burned Feeds for kalaiy

Monday, October 20, 2008

சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு


வாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

வீட்டுக்கடன் பிரச்சினையால் உருவான நிதி நெருக்கடியின் நேரடி விளைவு தான் இதுவென்றாலும், 2007 ம ஆண்டில் இருந்தே இந்தப்பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள் என்றதால் யாருமே அக்கறைப்படவில்லை. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, கடைசியில் வங்கிகளுக்கே அடிவிழுந்த பிறகு தான், உலகமே அலறித் துடித்தது. இப்போது கூட என்ன நடக்கிறது? நிர்வாகிகள், முகாமையாளர்கள், முகவர்கள், என்று பதவிகளில் ஓட்டிக்கொண்டு, வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் பணம் கொடுக்கின்றது. அமெரிக்க மூலதனத்தால் லாபமடைந்த முதலாளிகளும், நடுத்தர வர்க்கமும், வங்கிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். "வங்கிக் கொள்ளையரால்" ஏமாற்றப்பட்டு, குடியிருந்த வீடுகளை இழந்து, நிரந்தர கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்த அப்பாவி மக்களைப்பற்றி யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. அரசாங்கம் வழங்கும் மீட்பு பணத்தில் ஒரு பகுதி, வங்கியில் பணி புரியும் மேல்மட்ட நிர்வாகிகளுக்கு சம்பளமும், போனசும் வழங்க பயன்படப் போகின்றது. இது குறித்து செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ்
Guardian பத்திரிகை பதவி விலகிச் செல்லும் வங்கி மேலாளர்கள் கூட மில்லியன் கணக்கில் போனஸ் பணம் பெற்று செல்வதாக தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு (பகிரங்கப்படுத்தப் பட்ட) பிரிட்டனின் பெரிய வங்கியான Barclays தலைவரின் வருட சம்பளம் £250,000 ( 20,979,283.75 இந்திய ரூபாய்கள், 46,302,032.78 இலங்கை ரூபாய்கள்), ஆனால் போனசை சேர்த்தால், அவரது மொத்த வருட வருமானம் 36 மில்லியன் பவுன்கள்.

"நம்மூர் போல அமெரிக்காவில் வீட்டுக்கடன் தவணைப்பணம் கட்டத்தவறியவர்களை, ரவுடிகளை வைத்து மிரட்ட முடியாது. அதனால் தான் பங்குச் சந்தை சரிந்தது." என்று சில தமிழ்ப் பத்திரிகைகள் சிறுபிள்ளைத்தனமாக எழுதியிருந்தன. அமெரிக்காவில் அந்த வேலையை செய்ய ரவுடிகள் தேவையில்லை, அதை போலீஸ்காரர்களே செய்வார்கள். உதாரணத்திற்கு சில சம்பவங்கள். நியு ஒர்லின்சில், 'மத்திய அவசரகால முகாமையகம்' ஒரு வீட்டுக்காரனை எழும்பச் சொன்னது. சம்பந்தப்பட்ட வீட்டுக்காரன் கிட்ட வந்தால் சுடுவதாக மிரட்டியதால், போலிசின் உதவி கோரப்பட்டது. போலிஸ் தாக்குதல் பிரிவு, மிதமிஞ்சிய கண்ணீர்புகையை பிரயோகித்து, கடைசியில் அந்த நபரை சுட்டுக்கொன்றது. புளோரிடாவில் ஒரு நகரத்தில் இருந்த வீட்டை காலி பண்ண சொல்லி போலிஸ் நோட்டீஸ் அனுப்பியது. அந்த வீட்டின் குடும்பத்தலைவன், நோயாளியான முன்னாள் இராணுவவீரன். வீட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் வந்த போது, குடும்பத்துடன் வீட்டுனுள்ளே இருந்து கொண்டு, தன்னிடம் துப்பாக்கி இருக்கின்றது, என்று மட்டும் கூறிக்கொண்டிருந்தார். அயலவரின் வற்புறுத்தலால் இறுதியில், விட்டுக் கொடுத்தாலும், போலிசை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நகரமும், கிராமமும் இது போன்ற சோகக் கதைகளை சொல்கின்றது. வீட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்த போது, வீட்டினுள்ளே தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள், அல்லது தனிநபர்கள். வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டவர்கள். வீட்டை விட வேண்டிய நாள் வந்தால், தனது பிணத்தை வந்து பார்ப்பீர்கள், என்று ரியல் எஸ்டேட் கொம்பனிக்கு கடிதம் எழுதிய வயோதிப மாது. வீட்டை விட மறுத்து, கையில் கிடைத்ததை வைத்து எதிர்த்து போரிட்ட குடும்பத் தலைவர்கள். இந்தப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. (பார்க்க:
As economy sinks, officials fear violent solutions)

வீடற்றவர்களாக வீதிக்கு வரும் தனிநபர்கள், அவர்கள் வயோதிபர் ஆனாலும், நோயாளி ஆனாலும், பொதுக் கட்டிடங்களின் கீழ், அல்லது பூங்காக்களில் உறங்க வேண்டிய பரிதாப நிலை. வீடுகளை இழந்த குடும்பங்கள் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள வெட்டவெளிகளில், சிலநேரம் நகரமத்தியில் இருக்கும் பூங்காக்களில் கூட, கூடாரங்களை அமைத்து தங்கி வருகின்றனர். Los Angeles, Chattanooga, Columbus, St. Petersburg, Seattle and Portland போன்ற அமெரிக்க நகரங்களில், இந்தக் கூடார வீடுகள் முகாம்களாக மாறிவருகின்றன. உண்மையில் அவை நமது நாட்டில் இருப்பதைப் போன்ற சேரிகள்.(பார்க்க:ECONOMY-US: No Joy in Hooverville)

இந்த நவீன சேரிவாசிகள், தமக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். போதைவஸ்து, மது, அடிதடி என்பன தடுக்கப்பட்டுள்ளது. சில சேரிகளை உள்ளூராட்சி சபை ஆதரவளித்து வருகின்றது. வேறு சில இடங்களில் சட்டவிரோதமாக பார்க்கப்படுகின்றன. இந்த நவீன சேரிவாசிகள் எல்லோரும், வீட்டுக்கடன் என்ற பொதுப்பிரச்சினையால் வீதிக்கு வந்தவர்கள். அவர்களில் சிலர் மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வீடுகளை சொந்தமாக வைத்திருந்தவர்கள். குடும்ப உறுப்பினர் யாராவது திடீரென கடுமையான சுகயீனம் அடைந்த பிறகு தான் சனியன் பிடிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில் காசிருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்கலாம், அல்லது கிடந்தது சாக வேண்டியது தான். தமது சேமிப்பை எல்லாம் வைத்தியம் பார்க்க செலவழித்ததால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்கள்.

அமெரிக்காவில் இந்த நவீன சேரிகள் "Hoovertowns" என்று அழைக்கப்படுகின்றன. அது ஒரு காரணப்பெயர் ஆகும். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, பல கோடி மக்கள் தொழிலை இழந்து, வீட்டை இழந்து வீதிக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அமைத்துக்கொண்ட கூடார முகாம்கள், அல்லது சேரிகள், அன்றைய ஜனாதிபதி Hoover என்பவற்றின் பெயரால் அழைக்கப்படலாகின. RealityTrac என்ற நிறுவனம் செய்த ஆய்வின்படி, சமீபத்திய நிதி நெருக்கடியால் இன்னும் ஐந்து கோடிப் பேர் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அப்படியானால் அமெரிக்காவில் சேரிகள் பெருகப் போகின்றன என்று அர்த்தம்.Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

முன்னைய பதிவுகள் :
வீடு வரை கனவு, காடு வரை கடன்

Sunday, October 19, 2008

மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்

நிலக்கண்ணி வெடிகள், யுத்த தளபாடங்கள், ஆகிய அழிவு சாதனங்களின் உற்பத்தியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தொழிலாளரை சுரண்டுதல், சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்வதற்கும் வங்கிகளின் லாபவெறி ஒரு காரணம். நெதர்லாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு ஒன்று, தமது நாட்டின் பெரிய வங்கிகளின் முதலீடுகளைப் பற்றி ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நெதர்லாந்தில் தலைமையகத்தை கொண்ட, உலகின் மிகப்பெரிய தேசங்கடந்த வங்கி நிறுவனங்களான ABN Amro, ING, Rabo போன்றன, பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்கின்றன.

ஒவ்வொருநாளும் சராசரி 48 பேர் உலகின் எங்காவது ஒரு இடத்தில் நிலக்கண்ணி வெடிக்கு பலியாகினறனர். Alliant Techsystems, General Dynamics, Textron போன்ற நிலக்கண்ணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், வங்கிகள் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் வழங்குகின்றன. உலகில் மிக மோசமான அழிவு சாதனமாக கருதப்படும், "Cluster Bomb" உற்பத்தி செய்யும் Alliant, L3 Communications, Lockheed Martin, Northrop Grumman, Raytheon ஆகிய நிறுவனங்களிலும் இந்த வங்கிகள் முதலீடு செய்து, மனித அழிவில் பணம் சம்பாதிக்கின்றன. இது குறித்து வங்கிகள் தகவல் தர மறுக்கின்றன. தாம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதில்லை என்று நழுவுகின்றனர். அதேநேரம் இந்த அழிவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில் இருப்பதால், முதலீட்டாளரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், இந்த வங்கிகளின் முதலீடுகள் குறித்த விபரங்கள் தெளிவாக காணக்கிடைக்கின்றன.

மக்கள் வங்கியில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தை, அல்லது பங்கு முதலீட்டை எடுத்து இந்த வங்கிகள் அதிக லாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் கொடுக்கின்றன. அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதி, அல்லது கடனுக்கான வட்டிகளை சம்பாதிக்கும் வங்கிகள் அவற்றில் ஒரு சிறுபகுதியை, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு கொடுக்கின்றன. இதனால் அதிக பயனடைவது வங்கிகள் தான். இவ்வாறு வங்கிகளுக்கு கிடைக்கும் மொத்த வருடாந்த லாபம் 3 டிரில்லியன் யூரோக்கள்! (3.000.000.000.000) இவ்வளவு பெரிய தொகையை மூலதனமாக கொண்டிருக்கும் வங்கிகள் உலகிலேயே சக்திவாய்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.

சர்வதேச சட்டங்களையும் வங்கிகள் மதிப்பதில்லை. சீனாவுக்கு ஆயுத ஏற்றுமதி சம்பந்தமான தடை இருந்த காலத்தில் அந்நாட்டிற்கு யுத்த ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்பட்டது. சீனா அந்த ஹெலிகாப்டர்களை பின்னர் சர்வதேச தடை இருக்கும் இன்னொரு நாடான சூடானுக்கு விற்றது. சூடான் இராணுவம், டார்பூர் பிராந்தியத்தில் நடக்கும்போரில் மக்களை படுகொலை செய்வது தொடர்பாக சர்வதேச கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் EAD என்ற ஐரோப்பிய நிறுவனம், அதிலே முதலீடு செய்யும் ABN Amro வங்கி, என்பன சர்வதேச சட்டங்களை தெரிந்து கொண்டே மீறும் குற்றத்தை புரிந்துள்ளன. இதிலே வேடிக்கை என்னவென்றால், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ABN Amro வங்கியின் ஆணையராக பதவி வகுப்பது தான். இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளை (Novib என்ற NGO)பகிரங்கப்படுத்திய போது, எந்த வங்கியும் அந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

உலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் சுற்றுச் சூலை மாசு படுத்தும் சுரங்க கம்பெனிகளிலும் வங்கிகள் முதலீடு செய்கின்றன. இந்தோனேசியாவில் பொஸ்பேட் கணிமவளத்தை அகழும் Freeport McMoran என்ற நிறுவனத்தில் ABN Amro முதலீடு செய்திருந்ததை ஒரு சூழல் பாதுகாப்பு அமைப்பு அம்பலப்படுத்திய பின்னர், வங்கி அந்த ப்ரொஜெக்டில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. ஆனால் தற்போதும் சர்ச்சைக்குரிய Freeport McMoran நிறுவனத்தில் கணிசமான பங்குகளை ABN Amro வைத்திருக்கின்றது. பொஸ்பேட் அகழ்வு வேலைகளால் இந்தோனேசியாவில் நீர், நிலம் மாசடைந்ததுடன், சுற்றாடலில் வாழும் மக்களும் நோயாளிகளாகியுள்ளனர். இந்தியாவிலும் (ஒரிசாவில்) இது போன்ற சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவன அகழ்வு திட்டங்களுக்கு நெதர்லாந்து வங்கிகள் பணம் கொடுக்கின்றன. இது போன்ற சூழலை மாசுபடுத்தும் திட்டங்களுக்கு, வங்கிகள் முதலீடு செய்யாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இயங்க முடியாது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி "Wall-Mart" நிறுவனத்திற்கு சொந்தமான, பங்களாதேஷில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலகங்களில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தினசரி 17 மணிநேரம் கட்டாயவேலை வாங்கப்படுகின்றது. குழந்தைகளின் உற்பத்தித்திறன் குறையும் போது, அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். Wall-Mart மனித உரிமை மீறல்களை புரிவதாக அமெரிக்காவின் Human Rights Watch கூட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நெதர்லாந்தின் பெரிய வங்கிகள் யாவும், குழந்தை தொழிலாளரை சுரண்டும் Wall-Mart ல் முதலீடு செய்து வருகின்றன.

எந்த வித பொறுப்புணர்வும் இல்லாமல் பொது மக்களின் பணத்தை எடுத்து, தீய காரியங்களில் முதலீடு செய்யும் வங்கிகள், இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவிப்பதில்லை. மனித அழிவுக்கும், மனித உரிமை மீறலுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடி காரணமாக இருந்தாலும், இவற்றில் முதலிடும் வங்கிகளுக்கும், தெரிந்து கொண்டே பணம் வைப்பிலிடும் மக்களுக்கும் மறைமுகமான பொறுப்பு இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.


நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பிய "Bank Secrets" (மூல மொழி:நெதர்லாந்து, ஆங்கில தலைப்புகளுடன்)வீடியோவை பின்வரும் தொடுப்பின் மூலம் பார்வையிடலாம். Zembla (English)


ACE Bank Movie
The documentary tells about ACE Bank, educational project and set-up game by Netwerk Vlaanderen. This unethical bank goes for the highest returns and invests in such unethical activities as weapon systems, companies involved in child labor and human rights violations, heavy environment pollution etc. Curious how the passers-by and the clients reacted? Watch the film and find out!
Part 1
Part 2

_________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Saturday, October 18, 2008

தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்

கிரீஸ் நாட்டில் "சூபர் மார்க்கெட்" ஒன்றில் உணவுப்பொருட்களை சூறையாடிய இடதுசாரி இளைஞர்கள் அவற்றை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினர். "நவீன ராபின் ஹூட்கள்" என்று உள்ளூர் ஊடகங்கள் வர்ணித்த இந்த சம்பவம், கிரீசின் வடபகுதி நகரமான தெஸ்ஸலொனிகியில் நடந்துள்ளது. உலகில் அண்மைக்காலமாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதும், அதன் காரணமாக மக்கள் கலவரங்களில் ஈடுபடுவதும் பல நாடுகளிலும் வாடிக்கையாகி விட்டது. (பார்க்க : "உலக (உணவுக் கலவர) வங்கி") ஐரோப்பாவில் செல்வந்த நாடான கிரீசும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தப்பவில்லை. அங்கே கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் உணவுப்பொருட்களின் விலைகள் ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளன. உலகம் முழுவதும் மக்கள் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு தமது வருமானத்தில் பெரும்பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது.


கிரீசில் இடதுசாரி அமைப்புகள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராடுமாறு மக்களை திரட்டி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களில் மட்டும், குறைந்தது ஐந்து தடவைகள் நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளை (சூபர் மார்கெட்) கொள்ளையடித்து மக்களுக்கு இலவசமாக பங்கிட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தெஸ்ஸலோனிகி சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட அங்காடிக்கு முன்னர் விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த இளைஞர்கள் குழுவொன்று, கடையின் உள்ளே நுழைந்து அரிசி, பால் போன்ற உணவுப்பொருட்களை மட்டும் சூறையாடி, அவற்றை வெளியே காத்திருந்த ஏழை மக்களுக்கு விநியோகித்தனர். பொது மக்கள் அவற்றை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பெற்றுக்கொண்டனர். கடையின் ஊழியர்கள் மீது எந்த வன்முறையும் பிரயோகிக்காமல், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை தொடாமல், உணவுப்பொருட்களை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். போகும்போது "விலைவாசியை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் முதலாளிகளை அம்பலப்படுத்தும்" துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுவரை பொலிஸ் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Greek "Robin Hoods" raid stores to fight high prices
________________________________________________
முன்னைய பதிவுகள் :
* "உலக (உணவுக் கலவர) வங்கி"
*எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

_________________________________________ Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Tuesday, October 14, 2008

காஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி

சமூகங்களுக்கும், நாடுகளுக்குமிடையிலான வர்த்தகமானது, மனிதர் உற்பத்தி செய்த பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றமாக உள்ளது. உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்கள் லாபத்தையும் தமக்கே உரித்தாக்கி கொள்கின்றனர். முதலாளித்துவ தேசத்தின் தலைவர்களாக வீற்றிருக்கும் இந்த வர்க்கமானது, தாம் வணங்கும் தெய்வமான சந்தையின் மூலம் தமது வளத்தை பெருக்கிக் கொள்கின்றது.

ஒவ்வொரு நாட்டிலும் பலமானதிற்கும், பலவீனமானதிற்குமிடையில் போட்டி நிலவுகின்றது. தேவையான அளவு உணவு உள்ள, பாடசாலை செல்லக்கூடிய, எழுத வாசிக்க தெரிந்த, அனுபவங்களை சேகரித்துக் கொண்ட, அதிக வளங்களைக் கொண்ட வசதி படைத்தவர்கள் ஒரு புறம். இந்த வசதி எல்லாம் கிடைக்காத மக்கள் மறு புறம். ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையேயான வித்தியாசமும் இது போன்றதே.


ஐரோப்பிய வெள்ளையர்கள் தமது கனவுகளுடனும், பேரவா கொண்டும் ஸ்தாபித்த அதி உயர் முதலாளித்துவ தேசம்(அமெரிக்கா) இன்று நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சாதாரண நெருக்கடியல்ல. உலகம் முழுவதும் (அமெரிக்க) மாதிரி வளர்ச்சியை வரித்துக் கொண்ட காலத்தில் இருந்து எழுந்த மிக மோசமான நெருக்கடியாகும். அபிவிருத்தியடைந்த முதலாளித்துவத்தின் தற்கால நெருக்கடி, ஒரு சில நாட்களில் ஏகாதிபத்தியம் அதன் தலைமையை மாற்றிக்கொள்ள போகும் காலகட்டத்தில் வந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் நிறவாதம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒரு கறுப்பன் தனது மனைவி பிள்ளைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறப்போவதை லட்சக்கணக்கான வெள்ளையின மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "வெள்ளை" மாளிகை என்று மிகச் சரியாகத் தான் பெயரிட்டுள்ளனர். மார்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் போன்று நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு கிட்டியது போல, ஜனநாயக கட்சி வேட்பாளர் அந்த விதிக்குள் மாட்டாதது ஒரு அற்புதம் தான்.


பதவி விலகும் ஜனாதிபதி புஷ், $10.3 டிரில்லியன் கடன் சுமையை பொது மக்களின் முதுகின் மீது ஏற்றி விட்டு செல்கிறார். தனது எட்டு வருட பதவிக்காலத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை கணக்கிடுவதாயின்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுவாராகில், வருடம் 300 நாட்களாக வேலை செய்தால், 715,000 வருடங்களுக்கு பின்னர் தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார்.
தற்போது புஷ் நிர்வாகம் சோஷலிசத்திற்கு வழங்கும் பங்களிப்பு பற்றி நாம் அதிசயப்படலாம். ஆனால் நாம் அது போன்ற எந்த மாயைக்குள்ளும் சிக்கக்கூடாது. வங்கி நடைமுறைகள் யாவும் வழமைக்கு திரும்பிய பின்னர், ஏகாதிபத்தியவாதிகள் வங்கிகளை மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள்.


எந்தவொரு சமூக கட்டமைப்பிலும் முதலாளித்துவம் தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ளும், ஏனெனில் அது மனித அகத்தூண்டுதலிலும், தன்முனைப்பிலுமே கட்டப்பட்டுள்ளது. மனித சமூகம் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதைத் தவிர, தப்புவதற்கு வேறு வழி இல்லை. கியூபாவில் பங்குச் சந்தை இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி நாம் பகுத்தாய்ந்து, சோஷலிச வழியில் எமது அபிவிருத்திக்கான நிதியை செலவிடுவோம்.


தற்போதைய நெருக்கடியும், அமெரிக்க நிர்வாகம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கொண்டுவரும் இரக்கமற்ற அளவீடுகளும் ஏற்படுத்தப்போவது; பணவீக்கத்தையும், தேசிய நாணய மதிப்புக் குறைவையும், இன்னும் அதிக வருந்த வைக்கும் சந்தை இழப்புகளையும், ஏற்றுமதிக்கான குறைந்த விலையையும், சமமற்ற பரிமாற்றத்தையும் ஆகும். அதே நேரம், அவர்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வைப்பதுடன், மக்களிடையே அதிக விழிப்புணர்வையும், இன்னும் கிளர்ச்சியையும், புரட்சியையும் கூட உருவாக்குவார்கள்.
இந்த நெருக்கடி எவ்வாறு விருத்தியடையப் போகின்றது என்பதையும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய அமெரிக்காவில் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-Fidel Castro Ruz, October 11, 2008

(நன்றி, "கிரான்மா" வார இதழ், கியூபா )
THE LAW OF THE JUNGLE
(சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

குறும்படம்: "வேலை தேடும் மேல் மட்ட நிர்வாகிகள்"

நிதி நெருக்கடியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற அருமையான கற்பனையில் எழுந்த அழகான சலனப்படம். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார பிரச்சினை காரணமாக, கம்பெனியின் மேல் மட்டத்தில் பதவிகளை அலங்கரிக்கும், முகாமையாளர்கள், கணக்காளர்கள், விற்பனை ஆலோசகர்கள், கணிப்பொறி நிபுணர்கள், ஆகியோர், சாதாரண கூலித் தொழிலாளர் போல வேலை தேடி அலையும் நிலை வந்தால் எப்படி இருக்கும்?
THE JOB


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Monday, October 13, 2008

வரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்


வங்கி நிர்வாகிகள் தான், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்ற கூற்று நிரூபணமாகி வருகின்றது. Fortis என்ற பெல்ஜிய வங்கி சில நாட்களுக்கு முன்னர் தான் திவாலாகியது. தம்மிடம் பணம் இல்லை என்று சொல்லி அரசிடம் கையேந்தியதால், பெல்ஜிய அரசும் "பெருந்தன்மையுடன்" மக்களின் வரிப்பணத்தை கொடுத்து தேசியமயமாக்கியது. வங்கி அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட பின்னர், அந்த வங்கி நிர்வாகிகள் செய்த முதல் வேலை: "ஆடம்பர கொண்டாட்டம்." Fortis (காப்புறுதி) நிறுவனம், தனது 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்து, மொனோகோவில் இருக்கும் ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்தது. இதற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் யூரோக்கள் செலவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த விருந்தின் போது பரிமாறப்பட்ட உணவின் பெறுமதி, ஒரு ஆளுக்கு 300 யூரோக்கள். அழைப்பு விடுத்த விடுதியில் ஓரிரவு வாடகை ஒரு அறைக்கு ஆயிரம் யூரோக்கள்.

வங்கி நிர்வாகிகள் தமது கொண்டாத்ததிற்கு மொனோக்கொவை தெரிவு செய்தது தற்செயல் நிகழ்வல்ல. நீண்ட காலமாகவே பிரான்சின் தெற்கில் இருக்கும் மிகச்சிறிய சுதந்திர நாடான மொனோக்கோ, உலகெங்கும் இருந்து வரும் பணக்காரரின் புகலிடமாக திகழ்கின்றது. கடுமையான "வங்கி இரகசியம்"(கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விபரம் வெளியிடப்பட மாட்டாது) பேணப்படுவதாலும், வருமான வரி இல்லாத படியாலும், பல ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புபணத்தை மொனோக்கோ வங்கிகளில் வைப்பில் இட்டு வருவது இரகசியமல்ல. அமெரிக்க-ஐரோப்பிய சினிமா நட்சத்திரங்கள், மற்றைய பிரபலங்கள் யாவரும் மொனோக்கோவில் வீடு வாங்கி, அயலவராக வாழ்ந்து வருகின்றனர். இனம் இனத்தோடு தானே சேரும்?

ஐரோப்பாவின் பெரிய வங்கிகள்(Fortis உட்பட) எல்லாம், மொனோக்கொவில் கிளைகளை வைத்திருக்கின்றன. இதனால் பல பணக்காரருக்கு தமது கறுப்புபணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது இலகுவாகின்றது. லாபம் என்ற பெயரில் தமது செல்வத்தை பெருக்கும் முதலாளிகள் மட்டுமல்ல, கொள்ளைக்காரர்கள், கிரிமனல்கள் யாவரும் மொனோக்கோ போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். 7800 மொனோக்கோ பிரசைகள், 25000 உலகப் பணக்காரருடன் தமது வாழ்விடத்தை பகிர்ந்து கொண்டதன் காரணமாக, அந்நாட்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வருடத்திற்கு 900 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது போன்ற நாடுகளில், வருமான வரி அறவிடப்படா விட்டாலும், ஒரு நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான பதிவுப்பணம், உள்ளூர் சட்ட ஆலோசகரை நியமித்தல், மற்றும் அந்த நிறுவன முகாமையாளர்கள் உள்நாட்டில் செலவிடும் தொகை என்பனவற்றால் அதிக வருமானம் ஈட்டுகின்றன. ஐரோப்பிய முதலாளிகளும், செல்வந்தர்களும் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய வரிப்பணத்தை கட்டாது, இவ்வாறான வரியில்லா சொர்க்கபுரிகளில் புகலிடம் பெற்று ஏமாற்றுவதால், மொனோக்கோ வங்கிகள் தமது வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று, ஐரோப்பிய அரசுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சமீபத்திய நிதி நெருக்கடி, அல்லது பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக, வங்கி நிர்வாகிகள் உலகெங்கும் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர். வங்கிகளை நடத்தும் நிர்வாகிகள் தாம், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்பது தற்போது உலகறிந்த இரகசியம். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் மக் கைன், நெருக்கடிக்கு காரணம் வங்கி நிர்வாகிகளின் பேராசை என்று கூறி வருகிறார். ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் இதனை "சூதாட்டவிடுதி முதலாளித்துவம்" என்று வரையறுக்கின்றனர்.

ஐஸ்லாந்து கூட பணக்காரர் தமது கறுப்புபணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக இருந்து, அண்மையில் அந்த தேசமே திவாலானது தெரிந்த விடயம். அங்கிருந்து பொதுமக்களின் பணத்தை எடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு வேறு வழியின்றி ஐஸ்லாந்தை "பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தது. இதே சட்டம் மொனோக்கோ மீதும் பயன்படுத்தப்பட்டு, "கருப்புபணமாக" ஒதுங்கியிருக்கும் மக்களின் பணம் மீட்கப் படுமாகில், அதுவே ஐரோப்பிய பொதுமக்களின் கொண்டாட்டமாக இருக்கும்.
______________________________________________________________
முன்னைய பதிவு:
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
_______________________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

Saturday, October 11, 2008

கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்

காலங்காலமாக ஒரு கட்டுக்கதை மக்களின் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. "கம்யூனிஸ்ட் நாட்டில் மதச் சுதந்திரம் கிடையாது", என்று இறை நம்பிக்கையுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவது வழமை. இவ்வருடமும் "கியூபாவில் மனிதஉரிமைகள்" பற்றிய அமெரிக்க அறிக்கையில், அங்கே மதச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த அறிக்கை கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
1. தனியார் மதப் பாடசாலைகளை அமைக்க தடை.
2. எந்த ஒரு மத நிறுவனமும் நீதி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. சமய முறைப்படியான திருமணத்திற்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்திருக்க வேண்டும்.

கியூபாவின் கிறிஸ்தவ பாதிரிமார் இந்த அறிக்கையில் இருப்பதை, "கியூபாவில் உண்மைநிலையை அறியாது, தவறான தகவல்களை வைத்து" எழுதப்பட்டுள்ளதாக நிராகரித்துள்ளனர். அவர்கள் கூறுவதன் படி, மத நிறுவனங்களை நீதி அமைச்சில் செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை. மேலும் தாங்களே திருமணம் முடிக்க காத்திருக்கும் சோடிகளை சட்டப்படி பதிவுத்திருமணமும் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துவதாகவும், இருப்பினும் சில பாமரர்கள் (நமது நாடுகளில் உள்ளது போல) சமயத்திருமணங்களை மட்டும் செய்து கொண்டு வாழ்வதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் குறிப்பிடும் போது, அமெரிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ மகாநாடுகளுக்கு செல்ல, தமக்கு அமெரிக்க விசா வழங்கப்படுவதில்லை என்றும் குறை கூறினர்.

கியூபாவின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Cuban Council of Churches (CIC) என்ற அமைப்பு, அமெரிக்காவின் இந்த மனித உரிமைகள் சம்பந்தமான அறிக்கை, தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறியுள்ளது. கியூபாவில் இதுவரை யாருமே மத வழிபாடு செய்வதில் இருந்து தடுக்கப்படவில்லை என்றும், மதகுருக்கள் தமது கடமையை செய்வதற்கு எந்த தடையுமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த அமைப்பின் பாதிரிமார் தலைநகர் ஹவானாவில் கூடி, கியூபாவின் நிலையை உண்மைக்கு மாறாக திரித்து கூறும் அமெரிக்க அறிக்கைக்கு எதிராக, மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். "நேர்மையான" சர்வதேச ஊடகங்களோ கியூபா அறிக்கையை இருட்டடிப்பு செய்து விட்டு, அமெரிக்க அறிக்கையை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவார்கள், என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
கியூபாவில் கிறிஸ்தவ சமயத்தவர்கள் மட்டும் வாழவில்லை. ஆப்பிரிக்க வம்சாவளியினர் தமது மூதாதையரின் சமயத்தை இப்போதும் பின்பற்றுகின்றனர். Yoruba Cultural Association, Soka Gakkai Association என்பன அவர்களது மத நிறுவனங்கள். இவர்களை விட சிறிய அளவில் யூதர்களும், முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அவர்களும் பூரண சுதந்திரத்துடன் தமது மதங்களை பேணி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவர்களல்லாத மதங்களின் பிரதிநிதிகள் கூட அமெரிக்க அறிக்கையை கண்டித்துள்ளனர்.

மதச் சார்பற்ற கியூபா அரசியல் அமைப்பு சட்டமானது, "அனைத்து மதங்களும் சட்டத்திற்கு முன்னாள் சமம்", என்று கூறுகின்றது. "ஒவ்வொரு பிரசையும் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களை பின்பற்றவோ, அல்லது ஒன்றிலிருந்து வேறொரு மதத்திற்கு மாறவோ, அல்லது எந்த மதத்திலும் சேராமல் இருக்கவோ உரிமை உள்ளது."- இவ்வாறு குறிப்பிடும் எட்டாம் இலக்க சட்டம், அரசும், மதங்களும் வேறுவேறாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்துகின்றது.
நீண்ட காலமாகவே பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில், "விடுதலை இறையியல்" என்ற கொள்கை அடிப்படையில், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய கத்தோலிக்க பாதிரிமாருக்கு கியூபா அடைக்கலம் கொடுத்து வந்தது. பாராளுமன்றத்திற்கு சிலவேளை கிறிஸ்தவ பாதிரிமாரும் சுயேச்சையாக தெரிவு செய்யப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவராக சேருபவர்களுக்கு மட்டுமே, எந்த மதத்தையும் சேர்ந்திருக்க கூட்டாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆனால் அந்த கட்டுபாடு கட்சி அரசியலில் ஈடுபடாத சாதாரண மக்களுக்கு கிடையாது.
கியூபா புரட்சிக்கு பின்னர் ஒருபோதும் எந்த தேவாலயமும் பூட்டப்படவில்லை. மாறாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது காரணமாக, பலர் தாமாகவே (விசேட தினங்கள் தவிர்ந்த பிற நாட்களில்) தேவாலயம் போவதை நிறுத்திக்கொண்டனர். மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், வாழ்க்கை கஷ்டங்களில் இருந்து விமோசனம் இல்லாத நேரம் தான் ஆலயம் செல்வது வழமை. நவீன உலகின் மேற்கத்திய-நாகரீக மோகம் காரணமாக பல இளைஞர்கள் தேவாலயங்களுக்கு போவதில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இளம்சமுதாயம் மத்தியில் மதநம்பிக்கை குறைவாக உள்ளது. அங்கெல்லாம் வழிபாட்டாளர்கள் வருவது பெருமளவு குறைந்து விட்டதால், பல தேவாலயங்களை கவனிப்பார் அற்று வெறுமையாக இருக்கின்றன. இதுவே கியூபாவில் அல்லது பிறிதொரு கம்யூனிச நாட்டில் நடந்தால் மட்டும், "மத சுதந்திரம் இல்லை", "மனித உரிமை இல்லை" என்று பிரச்சாரம் அவிழ்த்துவிடப்படும்.
_______________________________________________________________
_______________________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!

உலகில் அபிவிருத்தியடைந்த, பணக்கார நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து என்ற தேசமே திவாலாகும் நிலையில் உள்ளது. அதேநேரம் பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற நாடுகள் ஐஸ்லாந்துடன் பொருளாதார யுத்தம் ஒன்றை தொடுத்துள்ளன. அதற்கு காரணம் இந்நாடுகளின் லட்சக்கணக்கான பிரசைகள் ஐஸ்லாந்து வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் தற்போது மாயமாக மறைந்து விட்டது தான்.அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை அதிர்ச்சி, இன்று பல்வேறு நாடுகளிலும் நடுக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.


அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்கண்டிநேவிய தீவுநாடு, ஐஸ்லாந்து. எரிமலைகளையும், வெந்நீர் ஊற்றுகளையும், பனிப்பாறைகளையும், சூழவுள்ள கடலையும் தவிர வேறு எந்த இயற்கை வளமுமற்ற ஒரு சிறிய நாடு, 20 ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார நாடாக முடிந்ததென்றால், அதற்குகாரணம் Kaupthing, Landsbanki, Glitnir ஆகிய வங்கிகளின் அபார வளர்ச்சி ஆகும். இந்த மூன்று பெரிய வங்கிகளும், கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி விட்டதால், அரசாங்கத்தால் தேசியமயப்படுத்தப்பட்டு விட்டன. நெருக்கடி காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த கடன், ஐஸ்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்சியுள்ளது. பங்குச்சந்தை மூடப்பட்டு, வர்த்தகம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து தேசிய நாணயமான குரோனா பெறுமதி வீழ்ச்சியடைந்து(1 யூரோ =340 குரோனா) வருவதால், இறக்குமதிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்து ஒரு ஐரோப்பிய யூனியனில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. இது நெருக்கடிக்கு முன்னர் ஒரு நல்ல விடயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சேமிப்பு வைப்புக்கு வட்டியாக, ஐரோப்பிய மத்திய வங்கி நியமித்த 5% என்ற எல்லையை ஒன்றிய அங்கத்துவ நாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஐஸ்லாந்து அதனை பயன்படுத்தி கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. Landsbanki என்ற வங்கி, தனது வங்கியில் வைக்கப்படும் வெளிநாட்டு சேமிப்பு கணக்கிற்கு 5.25% வட்டி வழங்குவதாக அறிவித்தது. வெளிநாட்டவர்களின் சேமிப்பு திட்டத்திற்கு "Icesave" என்று பெயரிட்டு, இன்டர்நெட் மூலமாக கணக்கை தொடங்கவும், பணம் அனுப்பவும் வழி வகுத்தது. அதிக வட்டி கொடுக்கிறார்கள் என்பதால், லட்சக்கணாக்கான வாடிக்கையாளர்கள் Icesave கணக்கை திறந்தனர். அனேகமாக கோடிக்கணக்கான யூரோக்கள், இவ்வாறு பிரித்தானியா, நெதர்லாந்து சேமிப்பாளரிடமிருந்து ஐஸ்லாந்து போய் சேர்ந்தது. ஐரோப்பிய நிதி சட்டங்களில் இருந்து தப்புவதற்காக பல பணக்காரர்கள், ஐஸ்லாந்து வங்கிகளில் தமது கறுப்புபணத்தை போட்டனர். தற்போது Landsbanki யும் திவாலாகி விட்டதால், ஐஸ்லாந்து அரசாங்கம் Icesave பணம் குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல மறுக்கிறது. அனேகமாக அந்தப்பணம் காற்றில் கரைந்து விட்டிருக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டவர்கள், இன்று அனைத்தையும் இழந்து கையைப்பிசைகிறார்கள்.

சாதாரண மக்களின் சேமிப்பு மட்டுமல்ல, பணக்காரரின் கருப்புபணமும் ஐஸ்லாந்தில் மாட்டிக்கொண்டுள்ளதால், பிரித்தானிய, நெதர்லாந்து அரசாங்கங்கள் தலையிட்டு ஐஸ்லாந்து அரசுடன் கதைத்து பணத்தை மீளப்பெற முயன்றன. ஆனால் ஒரு சதம் கூட இதுவரை திரும்பக்கிடைக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த பிரிட்டிஷ் பிரதமர் பிரௌன், ஐஸ்லாந்து நாட்டை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி பிரித்தானியாவில் ஐஸ்லாந்துக்கு சொந்தமான சொத்துகள், பணம் யாவும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. 2001 ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய நாட்டிற்கெதிராக பயன்படுத்தப்படுகின்றது. ஐஸ்லாந்து தலைநகர் ரைக்யாவிக், தமக்கெதிரான பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, எதிர்காலத்தில் ஐஸ்லாந்து தனது தேசிய நாணயமான குறோனாவை கைவிட்டு விட்டு, யூரோவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியான உடன்பாடுகள் எதுவும் ஏற்படின்,ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அது தனித்துவம் பேண விரும்பும், ஆளும் கட்சியின் அரசியல் தற்கொலையாக அமையும். ஏனெனில் ஆழ்கடல் மீன்பிடி உரிமை குறித்து, ஏற்கனவே ஐரோப்பாவுடனான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மீன்பிடித்துறை ஐஸ்லாந்தின் முக்கிய வருவாய் ஈட்டித்தரும் முதன்மை தேசிய உற்பத்தியாகும்.

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Friday, October 10, 2008

இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்"இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், அரை மில்லியன் மக்கள் 11 டாலருக்கும் குறைவான கடனுக்காக, அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் 90 வீதமானோர் தலித்துகள்."- மத்திய பிரதேச மாநில அறிக்கை.

Benjamin Skinner என்ற அமெரிக்க எழுத்தாளர் இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளிலும் தற்போதும் அடிமை முறை நிலவுகின்றது என்பதை, நேரடியாக தானே சென்று பார்த்து சேகரித்த தகவல்களை கொண்டு, தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். "A Crime So Monstrous" என்ற பெயருடைய அரிய பொக்கிஷமான இந்த நூல், அவரது பல வருட கடுமையான உழைப்பின் விளைவு. இந்த நூலை எழுதுவதற்காக பல நாடுகளில் அடிமைகளாக வாழும் மக்களுடன் பழகி, அவர்களது இருப்பிடத்தில் தங்கி கஷ்டத்தை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். அடிமைகளின் உழைப்பை சுரண்டும் கிரிமினல்களுக்கும் அஞ்சாமல், அசாத்திய துணிச்சலுடன் ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை உலகறிய செய்யும் மாபெரும் பணியை செய்திருப்பது, இந்த நூலை படிக்கும் போது தெரிகின்றது. வாசிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல், சில தெரிவுசெய்யப்பட்ட அடிமைகளின் வாழ்க்கை கதைகளை, அதேநேரம் செய்திகளையும், புள்ளிவிபரங்களையும் சேர்த்து சுவைபட அளித்துள்ளார்.

சரித்திர நூல்கள் கூறுவது போல, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைக்கப்பல்கள் அமெரிக்க கண்டத்திற்கு போவதை தடை செய்ததன் பின்னும், காலனிய ஆதிக்கவாதிகள் தமது அமெரிக்க பெருந்தோட்டங்களில் வைத்திருந்த அடிமைகளை விடுதலை செய்ததன் பிறகும், உலகில் இன்று அடிமைகளே இல்லை என்று பலர் நம்புகின்றனர். அனால் உலகில் நிலவும் ஏழை-பணக்கார சமூக ஏற்றத்தாழ்வானது, ஒரு பக்கத்தில் அடிமைகளாக அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள், மறுபக்கத்தில் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் அடிமை வியாபாரிகள், முதலாளிகள், பணக்காரர்கள், மற்றும் காமவெறியர்கள் ஆகிய சமூக பிரிவுகளை தோற்றுவித்துள்ளது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Skinner அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும், உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் இருந்து, நாகரீக உலகின் நவீன அடிமைகளைதேடும் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஒரு காலத்தில் அடிமைகளின் புரட்சி வெற்றியடைந்து பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற ஹைத்தி மக்கள், இன்று நித்திய அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கே ஏழைகளின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி அரிஸ்தீத் கிரிமினல் குழுக்களாலும், அமெரிக்காவாலும் விரட்டப்பட்ட பின்னர், அந்நாடு தற்போது ஐ.நா. பாதுகாப்புபடையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. ஐ.நா.இராணுவத்தில் கடமையிலீடுபடுத்தப்பட்ட பன்னாட்டு வீரர்கள்(இலங்கை வீரர்களும் அடக்கம்), ஹைத்தி சிறுமிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த விவகாரம் வெளிவந்து, ஐ.நா.சமாதானப் படைகளின் மானம் சந்திக்கு வந்தது. வீதிகளில் அநாதரவாக விடப்பட்ட சிறுமிகள் 2 டாலருக்கு தமது உடலை வாடகைக்கு விடுகின்றனர். பாலியல் நுகர்வுக்காக கொடுக்கும் பணம் தான், ஐ.நா.படையினர் ஹைத்தியின் பொருளாதாரத்திற்கு வழங்கும் நேரடி பங்களிப்பு, என்று அங்கத சுவையுடன் சொல்லப்படுவதுண்டு.

இந்த நூலாசிரியர் கொடுக்கும் தகவலின் படி, இவையெல்லாம் அங்கே வழக்கமாக நடக்கும் அட்டூழியங்கள், எப்போதாவது தான் வெளிவருகின்றது. காலங்காலமாக தலைநகர் போர்ட்-ஒ-ப்ரின்சில் வாழும் வசதிபடைத்த ஹைத்தியர்கள், நாட்டுப்புற ஏழை சிறுமியரை வீட்டு வேலைக்காரிகளாக, அதாவது கூலி கொடுக்காத அடிமைகளாக, வைத்திருந்து கொடுமைப்படுத்துவதும், அதேநேரம் அவ்வீட்டு ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும் சர்வசாதாரணம். அமெரிக்காவில் வாழும் வசதியான புலம்பெயர்ந்த ஹைத்தியர்கள் கூட, கடத்தி வரப்படும் சிறுமிகளை வீட்டு அடிமைகளாக வைத்திருக்கின்றனர். சில பத்து டாலர்களுக்கு ஒரு சிறுமியை/சிறுவனை வாங்கும் நிலையுள்ளதை, நூலாசிரியர் ஒரு அடிமை வியாபாரியை சந்தித்து விசாரிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

சூடானில் தெற்குப்பகுதியில் பழங்குடியினமான டிங்கா மக்களின் வாழ்விடங்களை சூறையாட வடக்கில் இருந்து குதிரைகளில் வரும் அரேபியர்கள், பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக பிடித்துச் சென்று, தமது வீடுகளில் வேலைக்கு அமர்த்துவது காலங்காலமாக நடந்து வரும் சம்பவங்கள். இது பெருபாலும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டமாக இருந்தாலும், சில அரேபியர்கள் இந்த பழங்குடியினரை இஸ்லாமியமயப்படுத்தவும், அதேநேரம் (அவர்களைப் பொறுத்தவரை) நாகரீகப்படுத்தவும் என்று, இந்த அடிமை வேட்டையாடலை நடத்தி வந்தனர். இருப்பினும் டிங்கா மக்கள் மிஷனரிகளால் கிறிஸ்தவர்களக்கப்பட்ட பின்னர், அதிலும் குறிப்பாக அரசுடன் மோதும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம்(SPLM) தோன்றிய பிறகு நிலைமை சர்வதேச அவதானத்தை பெறுகின்றது.

ஒரு முறை அமெரிக்க தொலைக்காட்சி சூடான் அடிமைகளைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. தொடர்ந்து கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள், சூடானில் கிறிஸ்தவ அடிமைகளை அரேபியரிடமிருந்து மீட்கப்போவதாக கூறி, நிதி சேர்க்கத்தொடங்கி விட்டன. கோடிக்கணக்கில் சேர்ந்த அமெரிக்க டாலர்களுடன் சூடான் சென்ற இந்த தர்ம ஸ்தாபனங்கள் குறிப்பிட்ட அளவு அடிமைகளை விடுவித்திருந்தாலும், அவமானத்திற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். SPLM கொமான்டர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சிறுவர்களையும், உதவிநிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அடிமைகள் என்று பொய் சொல்லிக் கொடுத்தனர். இயக்க கொமாண்டர்களின் சுயதேவைக்கும், ஆயுதங்கள் வாங்க அந்தப்பணம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அடிமைகளின் விடுதலை, SPLM மிற்கு நிதி சேர்ப்பதில் போய் முடிந்த கதை அம்பலமாகிய போது, அதையிட்டு தமக்கு கவலையில்லை என்று கூறின இந்த தர்ம ஸ்தாபனங்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச கட்டுமானம் வீழ்ந்த பிறகு பெருமளவு மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ருமேனியா, மற்றும் அதற்கருகே இருக்கும், முன்னாள் சோவியத் குடியரசான மோல்டேவியா என்பன கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்று இந்நாடுகள் அதிகளவு பாலியல் அடிமைகளை உற்பத்தி செய்து பணக்கார நகரங்களுக்கு விநியோகித்து வருகின்றன. மேற்கு ஐரோப்பிய நகரங்களில், அல்லது துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆசை காட்டி, இளம்பெண்களை கவரும் கடத்தல்காரர்கள், அவர்களை சில நூறு யூரோக்களுக்கு அடிமைகளாக விற்று விடுகின்றனர். இவர்களை வாங்கும் விபச்சார விடுதி உரிமையாளர்கள், இந்த இளம்பெண்களை விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அப்படி சம்பாதிக்கும் பணத்தையும் தாங்களே பறித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பாலியல் அடிமைகள் தப்பியோட முயன்றால், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்து என்று மிரட்டப்படுகின்றனர்.

"Loverboy" என அழைக்கப்படும் காதலிப்பதாக நடித்து, கன்னியரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிவிடும் தரகர்களும் நடமாடுகின்றனர். அவ்வாறு "காதலனால்" ஏமாற்றப்பட்டு ஆம்ஸ்டர்டம் விபச்சாரவிடுதியில் மாட்டிக்கொண்டு, பின்னர் அதிர்ஷ்டவசமாக தப்பிய ருமேனிய யுவதி ஒருவர், இந்த நூலில் நேரடி சாட்சியமளித்துள்ளார். நூலாசிரியர் மொல்டோவியா சென்று அங்கிருந்து இஸ்தான்புல்(துருக்கி) வரை, கடத்தல்காரரின் பாதையை பின்பற்றி சென்று, ஒரே நாளில் எவ்வாறு இந்த இளம்பெண்கள் மூன்றாமுலகில் இருந்து முதலாமுலகிற்கு கடத்தப்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்துள்ளார். துபாயில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் காமவெறியர்களால் கொலையாகி, யாரும் தேடாத அநாதை பிணங்களாக பாலைவனத்தில் வீசப்படும் செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.

இந்தியா சென்ற நூலாசிரியர், உத்தரப்பிரதேசத்தில் லொகராதல் என்ற இடத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான "கொள்" பழங்குடியின அடிமைகளைப்பற்றி விபரிக்க குறைந்தது ஐம்பது பங்கங்களை ஒதுக்கியுள்ளார். அங்கே கல் குவாரிகளை வைத்திருக்கும் உயர்சாதி ஒப்பந்தக்காரர் இந்த மக்களை அடிமைகளாக தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கின்றார். பாட்டன் வாங்கிய வெறும் 60 சதங்களுக்காக (டாலர்), அதற்கு வட்டி வளர்ந்து குட்டி போட்டு விட்டாலும், கடனை கட்டமுடியாமல் இன்று பேரப்பிள்ளைகள் குவாரிகளில் அடிமை வேலை செய்கின்றனர். இவர்கள் மீளமுடியாத கடனுக்குள் சிக்குவதன் காரணம், குடும்பத்தில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு முதலாளியிடமே பணம் கடனாக கேட்டு வாங்க வேண்டிய நிலை தான். ஆகவே திருமண விழா, மரணச்சடங்கு என்பன கடனை அதிகரித்து, இந்த மக்களை பரம்பரை அடிமைகளாக்குகிறது. இடதுசாரி தலித் சமூக ஆர்வலர் உருவாக்கிய, "சங்கல்ப்" என்ற அரசு சாரா நிறுவனம் செயல்பட தொடங்கிய பின்னர், சாத்வீக போராட்டம் மூலம் சில வெற்றிகள் சாத்தியமாகியுள்ளன.

இந்தியாவில் அடிமைகள் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். இந்தியாவை காலனிப்படுத்தியிருந்த பிரிட்டிஷ்காரர்கள், அன்று தமது சாம்ராஜ்யமெங்கும் அடிமை முறையை ஒழித்து விட்டதாக அறிவித்த போதும், இந்தியாவில் ஏனோ விட்டுவைத்தனர். பின்னர் சுதந்திரமடைவதற்கு சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவில் அடிமைகள் இல்லையென்றும், "பண்ணையடிமைகளும்", "சுரண்டப்படும் உழைப்பாளிகளும்", அல்லது "ஏழைகளும்" மட்டுமே இருப்பதாக புதிய விளக்கம் கூறினர். இன்றைய இந்திய அரசும் அதே சொல்லாடலை பயன்படுத்துகிறது.

நாடு முழுவதும், சுமார் எட்டு மில்லியன் விவசாய அடிமைகள் உள்ளனர். சில பருத்தி விவசாயிகள், அதிக விளைச்சலை தரும் என்ற நம்பிக்கையில், சிறுமிகளை பருத்தித் தோட்டங்களில் தொழில் புரிய வைக்கின்றனர். உலகில் வேறெந்த நாட்டையும் விட, இந்தியாவில் தான் அதிக குழந்தைத் தொழிலாளர் உள்ளனர். வாரணாசி கம்பளம் தயாரிக்கும் நெசவாலைகளில், பிஹாரி சிறுவர்கள் ஒவ்வொருநாளும் 15 மணித்தியாலங்கள், கூலியற்ற வேலை வாங்கப்படுகின்றனர். கடுமையான வேலை காரணமாக, கண்பார்வை குறைவதுடன், எலும்பும் வளைவதால் சில சிறுவர்கள் நடப்பதற்கு ஊன்றுகோலை பாவிக்க வேண்டியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் 1993 ம் ஆண்டு வரை, சேரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தலித் சிறார்களை விற்கும் "சிறுவர் சந்தை" செயற்பட்டு வந்தது. அங்கே வந்து சிறுவர்களை வாங்கிச் செல்லும் முதலாளிகள், தமது தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் 350 மில்லியன் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இப்போது 83,000 லட்சாதிபதிகளும், 15 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் விதிவிலக்குகள். பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா இன்னமும் குழந்தைத் தொழிலாளரை வைத்திருப்பதை ஒழிக்கவில்லை. 14 வயது வரையான கட்டாய இலவச கல்வி இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை. சாதி ஒழிப்பும் அவ்வாறே சட்டத்தில் மட்டுமே உள்ளது. பிற வளர்முக நாடுகளைப்போல நகரங்கள் வளர்ந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்னமும் நாட்டுப்புறங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் தொல்லையிலிருந்து மீள முடியாமல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்கின்றனர்.


_______________________________________________________________________
-A Crime So Monstrous-
by E. Benjamin Skinner
Published by : Mainstream Publishing Company (Edinburgh)
_______________________________________________________________________

Thursday, October 09, 2008

லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு"நவீன கால அரசு, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறில்லை." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
முதலாளித்துவம் அழியவில்லை. கடைசியில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், பொதுமக்களின் வரிப்பணத்தை கொட்டி, அழிவில் இருந்த வங்கிகளை ஒருவாறு காப்பாற்றிவிட்டனர். தானே ஏற்படுத்திய நிதிநெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட முதலாளித்துவம், அரசாங்கத்தால் அழிவில் இருந்து மீட்கப்பட்டுவிட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் ஜனநாயக அரசுகள் மக்களை மீளாத்துயருக்குள் தள்ளிவிட்டன. சுருங்கக் கூறின்: ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் அதனை முதலாளிகள் தமது தனிச்சொத்து என்று உரிமை கொண்டாடும் அதேநேரம், அந்த நிறுவனம் நட்டமடைந்தால் அதனை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.

அமெரிக்க அரசு வழங்கிய 700 பில்லியன் டாலர் மீட்புநிதி, முதன்மைப் பங்குதாரரின் ஆதாயப்பங்கு(டிவிடென்ட்) பட்டுவாடா செய்யவும், நிர்வாகிகளின் சம்பளங்களை (குறைந்தது US $ 30,000), போனஸ்களை (லட்சக்கணக்கில்) கொடுப்பதற்கும் செலவிடப்படாது என்பது என்ன நிச்சயம்? அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை. அதே நேரம் இந்த மீட்புநிதியை வீட்டுக்கடன் கட்ட முடியாத பொது மக்களுக்கு வழங்கி, அவர்கள் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்க அரசு எப்போது தனது மக்களைப்பற்றி கவலைப்பட்டது? மீட்புநிதி பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தது என்பதால், வருங்காலத்தில் பொதுநல செலவினங்கள் குறைக்கப்படும். இதனால் அநேகமான பொது மக்கள், வறிய நாடுகளில் உள்ளது போல தப்பிப்பிழைக்கும் வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதே 700 பில்லியன் டாலரை கொட்டியிருந்தால், பரிதாபகரமான பொதுநல மருத்துவ துறையை சிறப்பாக நடத்தியிருக்கலாம். இதற்கிடையே இந்த தொகை, அமெரிக்க அரசு பாதுகாப்புக்கு (ஆப்கன், ஈராக் போர்கள்) செலவழிப்பதை விட குறைவு, என்று பெருமை வேறு.

"Laissez Faire"(பிரெஞ்சு மொழியில் : செய்ய விடு)முதலாளித்துவம் இது, என்று சொல்லி அரச தலையீடற்ற பொருளாதாரம் நடத்திய, அகங்காரம் கொண்ட தாராளவாத சந்தை விற்பன்னர்கள் தற்போது, "தவறு செய்து விட்டு தந்தைக்கு பின்னால் ஒளிக்கும் குழந்தைகளைப் போல" நடந்து கொள்கிறார்கள். இதே நிதி நெருக்கடி மூன்றாம் உலக நாடொன்றில் ஏற்பட்டிருந்தால், அந்நாட்டு அரசு இது போன்று மீட்புநிதி வழங்கி நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றக் கூடாது என்று, அமெரிக்க அரசு மட்டுல்ல, உலகவங்கி, ஐ.எம்.எஃப்., எல்லாமே ஆலோசனை வழங்கியிருப்பார்கள். அதற்கு உடன்படா விட்டால், கடனுதவிகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அந்த உபதேசமெல்லாம் உலகிற்கு மட்டுமே, அமெரிக்காவுக்கு இல்லை.

நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை சீனா வாங்க வேண்டும் என்று, சில சீன பொருளியல் நிபுணர்களும், மற்றும் சர்வதேச பெருமுதலாளிகளும் கேட்டுள்ளனர். ஆனால் சீன அரசு தயங்குகின்றது. ஏனெனில் லாபம் வரக்கூடிய நிறுவனங்களிலேயே யாரும் முதலீடு செய்ய விரும்புவர். அதன் அர்த்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது சீனா உட்பட பலரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஐரோப்பாவும் தனி வழியில் செல்ல விரும்புகின்றது. அனேகமாக அதிக தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஜெர்மனி, ஐரோப்பிய பொருளாதாரத்தை தலைமை தாங்கலாம்.

கடன் நெருக்கடிக்குள் சிக்கி திவாலான ஐரோப்பிய வங்கிகள் சில அவை பிரதிநிதித்துவப் படுத்திய நாடுகளை விட அதிக பணபலம் கொண்டிருந்தமை அவற்றின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. உதாரணத்திற்கு, மூன்று லட்சம் பேர் சனத்தொகையை கொண்ட சிறிய ஐஸ்லாந்து நாட்டு வங்கிகள், அகலக்கால் வைத்ததன் விளைவாக இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அது ஐஸ்லாந்து என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலைக்கு இட்டுச்சென்றது. வடதுருவ தீவுநாடான ஐஸ்லாந்து பொருளாதாரம், ஒரு காலத்தில் மீன்பிடித் துறையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த தசாப்தங்களாக ஏற்பட்ட வங்கித் துறையின் பகாசுர வளர்ச்சி ஐஸ்லாந்தை செல்வந்த நாடாக்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வங்கிகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாங்கிக் குவித்தன, பெருமளவில் முதலீடு செய்தன. இறுதியில் அமெரிக்க கடன் பிரச்சனைக்குள் அகப்பட்டு, அனைத்தையும் இழந்து நிற்கின்றன. பேராசை பெருநஷ்டம் என்றொரு பழமொழி உண்டு.

ஐஸ்லாந்து அரசு, வங்கிகளை தேசியமயப்படுத்த தேவையான பணமின்றி தவித்தது. அதற்காக "தனது நண்பர்களிடம்" உதவி கேட்டும் கிடைக்காத நிலையில், தற்போது ரஷ்யா நான்கு பில்லியன் யூரோ கடன் வழங்க சம்மதித்துள்ளது. சர்வதேச நிதிநெருக்கடிக்குள் ரஷ்ய பங்குச்சந்தையும் மாட்டிக் கொண்டு நஷ்டமடைந்துள்ளது. இருப்பினும் அங்கே வலிமையான அரசாங்கம் இருப்பதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நாணயமான ரூபிளை சர்வதேச பரிவர்த்தனைக்கு விரிவுபடுத்தப் பார்க்கின்றது. அதனோடு நெருங்கிய உறவைப் பேணும் பெலாரஸ், வாங்கும் எண்ணைக்கு ரூபிளில் பணம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது. இது பின்னர் பிற நாடுகளுடனும் விரிவுபடுத்தப்படலாம்.

நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சிறந்த வழி உண்டு. லாபவெறி பிடித்தலையும் வங்கிகள் எமக்கு தேவையில்லை. சேமிப்பு வங்கி, கூட்டுறவு வங்கி, விவசாய வங்கி, தபால் வங்கி போன்றன, அவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசத்தின் பொருளாதாரத்துடனும், மக்களுடனும் ஒன்றிணைந்து இருந்தன. அவை மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருப்பதால், நிதிநெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் அபாயம் குறைவு. முன்பெல்லாம் அமெரிக்காவிலும், மேற்கு-ஐரோப்பாவிலும் அப்படியான வங்கிகள் இருந்தன. அனால் Laissez Faire முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, பெருமளவு நிதி கொண்ட வர்த்தக-முதலீட்டு வங்கிகள், அவற்றை பிடித்து தின்று விழுங்கி விட்டன. அன்றைய பேராசை, இன்றைய பேரழிவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இன்று மக்கள் வங்கிகளைக் கண்டு பயந்தோடும் நிலைமை உருவாகி விட்டது.Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

________________________________________________________________
முன்னைய பதிவுகள் :
காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)
வீடு வரை கனவு, காடு வரை கடன்
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
__________________________________________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
-
Burned Feeds for kalaiy

காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)

காசு என்றால் என்ன? பணம் எவ்வாறு உருவாகின்றது? வங்கிகள் எப்படி தோன்றின? அவை மக்களுக்கு கடன் கொடுத்து பணத்தை உருவாக்கும் இரகசியம் பற்றி பொருளியல் அறிஞர்கள் மறைப்பதேன்? இன்றைய நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும், அனைவருக்குமான இலகுபடுத்தப்பட்ட பொருளியல் பாடம் கார்டூன் வடிவில்.

MONEY AS DEBT
Money As Debt 1 - The Rothschild Mafia Money As Debt II: promises unleashed

Monday, October 06, 2008

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர்(மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது. பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)

இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர். உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது. ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.


_______________________________________________________________

When the Moors Ruled in Europe