Tuesday, November 29, 2011

திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்


(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - இரண்டாம் பாகம்)

திபெத் பிரச்சினை பற்றி ஹாலிவூட் தயாரிப்பில் உருவான, "Seven Years in Tibet" எனும் திரைப்படம், ஒரு ஜனரஞ்சகப் படம் என்றளவில் உலகளவில் வெற்றி பெற்றது. "சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்ட திபெத்" பற்றிய சித்திரத்தை அரசியல் செய்தியாக கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் பலராலும் பேசப் பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் மறைத்த இனவாத / நிறவாதக் கருத்தியல் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. ஒரு சரித்திரக் கதையை ஆதாரமாக கொண்டு தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது. அந்த சரித்திர நாயகன் Heinrich Harrer, ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த ஜெர்மனியர். இந்த விபரம் படத்தில் வருகின்றது. "செவன் இயர்ஸ் இன் திபெத்" என்பது கூட அவர் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டது தான். 1939 ம் ஆண்டு, ஹைன்ரிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ்காரரால் சிறை வைக்கப் பட்டிருந்தார். அங்கிருந்து தப்பி ஓடி, உலகப்போரில் நடுநிலை வகித்த திபெத்தினுள் தஞ்சம் புகுந்து, ஏழு ஆண்டுகள் பாதுகாப்பாக வாழ்ந்துள்ளார். யார் இந்த ஹைன்ரிஷ்? அவருக்கு திபெத்தில் என்ன வேலை? அவரை அங்கே அனுப்பியது யார்?

ஹைன்ரிஷ் ஹிட்லரின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய நாசிக் கட்சி உறுப்பினர். வெள்ளை நிற ஆரிய இனத்தின், ஆதிமூலம் குறித்து ஆராய்வது ஹிட்லரின் நோக்கம். திபெத்தில் ஆரிய இனத்தின் தூய்மை இன்னமும் பேணப் படுவதாக கிடைத்த தகவலை உறுதிப் படுத்துவதற்காக, ஹைன்றிஷை அனுப்பி வைத்தார். மேலும், நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா, மத்திய ஆசியாவில் இருந்து வந்தது என்பது, அன்றைய ஜெர்மனியில் அறியப் பட்டிருந்தது. (இந்துக்களின் மங்கலச் சின்னமான அதே ஸ்வாஸ்திகா தான்.) ஆகவே, ஹிட்லரின் நிறவெறிக் கொள்கைக்கு சான்றுகளை திரட்டுவதற்காகவே, ஹைன்ரிஷ் திபெத் சென்றுள்ளமை இதிலிருந்து புலனாகும். இந்தத் தகவல்களை எல்லாம், செவன் இயர்ஸ் இன் திபெத் திரைப்படம் இருட்டடிப்பு செய்துள்ளது. ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சிக் காலத்தில், தீபெத்தியர்கள் கௌரவ விருந்தினர்களாக நடத்தப் பட்டனர். அவர்கள் நாஜிப் படையிலும் இணைந்து போரிட்டிருக்கலாம். போரின் முடிவில், பெர்லின் நகரை செம்படையினர் கைப்பற்றிய வேளை, நூற்றுக்கணக்கான திபெத்தியர்களின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. (The Morning of the Magicians, authors: Louis Pauwels and Jacques Bergier)

தலாய் லாமா பாதுகாத்து வைத்திருந்த இரகசிய நூல்கள் சில நாஜி ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டன. மேற்கத்திய இனவாத தத்துவ ஆசிரியர்களுக்கு பயன்படத் தக்க தகவல்கள் பல அவற்றில் இருந்திருக்கலாம். நாஜிகள் ஆராய்ச்சி செய்யுமளவிற்கு திபெத்தில் அப்படி என்ன இருக்கிறது? பல இரகசியங்கள் இன்னும் வெளிவரவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உலகம் நாகரீகமடைந்து கொண்டிருந்த காலத்தில், திபெத் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி இருந்தது. உயரமான இமய மலையில், தனிமைப் படுத்தப் பட்டிருந்த திபெத், ஆரிய இனத் தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கும் என்பது, நாஜிகளின் எண்ணம். உண்மையில், திபெத் என்பது மொழியைக் குறிக்கும். குறைந்தது நான்கைந்து இனங்கள் அந்த மொழியைப் பேசுகின்றன. அவர்கள் எல்லோரும் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் அல்ல. குறிப்பிட்ட அளவு முஸ்லிம்களும், "பொன்" (Bon) எனும் பழமையான மதத்தை பின்பற்றுவோரும் சிறுபான்மையாக உள்ளனர். (பொன் மதம் குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) இனத்துவ அடிப்படையில் பார்த்தால், திபெத்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், வெள்ளை நிறமாக இருப்பர். இவர்களுக்கும், சீனர்களுக்கும் (பெரும்பான்மை ஹான் இனத்தவர்கள்) இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமானது. அதே நேரம், அந்த நாட்டில் காணப்படும் பழுப்பு நிற மக்களை மட்டுமே திபெத்திய இனமாக வெளியுலகம் தவறாக கருதிக் கொண்டிருக்கிறது.

திபெத்தியர்கள், மொங்கோலிய இனத்திற்கும், ஐரோப்பிய இனத்திற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது, வெள்ளை இனத்தின் பரிணாம மாற்றம் அங்கே தான் நடைபெற்றது என்பது நாஜிகளின் நம்பிக்கை. திபெத்திய ஆட்சியாளர்களும், ஜெர்மனியில் இருந்து வருகை தந்த நாஜி விருந்தினர்களை இரு கரம் நீட்டி வரவேற்று உபசரித்தனர். (1926 க்கும் 1940 க்கும் இடையில் பல ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் திபெத் மீது ஆர்வம் காட்டியுள்ளனர்.) நாஜிகளின் இனங்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தனர். இந்த விபரம் எல்லாம் வெளியில் தெரிந்தால், தலாய் லாமாக்களின் முகத்திரை கிழிந்து விடும் என்பதால், வரலாறு அவற்றை இருட்டடிப்பு செய்து விட்டது. அது ஒரு புறமிருக்க, நாஜிகளிற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்தனவோ இல்லையோ, ஸ்வாஸ்திகா சின்னம் பற்றிய உண்மைகள் தெளிவாகின. திபெத்தில், இந்திய எல்லையோராமாக உள்ள இமய மலைத் தொடர்கள் ஸ்வாஸ்திகா வடிவத்தில் காணப்படுகின்றன. அதனை பண்டைய "இந்துக்கள்" (அல்லது ஆரியர்கள்) தமது புனிதச் சின்னமாக கருதியிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? வெவ்வேறு திசைகளை நோக்கிய ஆரிய இனங்களின் புலம்பெயர்வு அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

Tagzig Olmo Lung Ring என்ற பெயரைக் கொண்ட மலைத் தொடரானது, கிழக்கே திபெத்திலும், மேற்கே தஜிகிஸ்தான் வரையிலும் நீண்டுள்ளது. மலையின் பெயரில் வரும் தாஜிக் என்ற சொல்லானது, இன்றைய தாஜிகிஸ்தான் நாட்டின் பெயருக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. தாஜிக்கியர்கள் பாரசீக (ஈரானிய) மொழி பேசும் மக்கள். அதாவது தாஜீக்கும், பார்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பான மொழிகள். நாகரிக வளர்ச்சி காரணமாக, நவீன ஈரான் எமக்கு நன்கு பரிச்சயமாகியுள்ளது. ஆனால், பார்சி மொழி பேசும் ஈரானியரின் மூதாதையர் தாஜிகிஸ்தானில் இருந்து வந்திருப்பார்கள், என்று சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். அநேகமாக, துருக்கிய மொழி பேசும் இனங்களுக்கும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் இனங்களுக்குமிடயிலான பிரிவினையும் அங்கே தோன்றியிருக்க வேண்டும். அது வேறு விடயம். இப்போது அந்த, தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையில் அப்படி என்ன விசேஷம் என்று பார்ப்போம்.

தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலைத் தொடரை முழுமையாகப் பார்த்தால், எண் கோண வடிவில் அமைந்த தாமரைப் பூ போன்றிருக்கும். அதன் மையப் பகுதி ஸ்வாஸ்திகா என்று அழைக்கப் படுகின்றது. திபெத் பொன் மத ஸ்தாபகர், சொர்க்கத்தில் இருந்து நேராக, அந்த மலையில் தான் வந்திறங்கியதாக, பொன் மதத்தவர்கள் நம்புகின்றனர். அந்த மலைப் பகுதியின் மேலே உள்ள ஆகாயம், தர்ம சக்கரம் போன்றிருக்கும். இந்து மத நம்பிக்கையாளர்கள் புனிதமாகக் கருதும், "ஸ்வாஸ்திகா, தாமரை மலர், தர்ம சக்கரம்" போன்ற குறியீடுகள் திபெத்தில் தான் தோன்றின. இந்த உண்மை பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. "ஒரு இனத்தின் பூர்வீகத்துடன் சம்பந்தப்பட்ட குறியீடுகள்", இவ்வாறு தான் மதச் சின்னங்களாக மாறின. நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஆரம்பத்தில் இந்து மதமானது, பிராமணர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்களின் மதமாக இருந்தது. பிற்காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் மக்களும், ஆக்கிரமிப்பாளர்களின் மதத்தை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்றால், பிரம்மாவின் மக்கள் என்று அர்த்தம். முன்னொரு காலத்தில் படைத்தற் கடவுளான பிரம்மாவை வணங்கும் வழக்கம் இருந்தது.

புனிதமான தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையை, அதன் குறியீடுகளை எல்லாம் புனிதமாக கருதி வழிபட்ட பொன் மதம் திபெத் முழுவதும் பரவியிருந்தது. அது திபெத் மக்களுக்கு மட்டுமே பிரத்தியேகமான மதம். அது ஒரு பண்டைய மத நம்பிக்கை. இயற்கையை கடவுளாக வழிபடும் மக்களுடைய நம்பிக்கை. லாமாக்களின் பௌத்த மதமானது, பொன் மதத்தை ஏறக்குறைய அழித்து விட்டது. அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த சில ஆயிரம் பொன் மத திபெத்தியர்கள், இன்றைக்கும் அந்த மதத்தை அழிய விடாது பாதுகாத்து வருகின்றனர். பௌத்த மதம் இந்தியாவில் இருந்து திபெத்திற்கு பரவியது. அரசர்களும், மதகுருக்களும் பௌத்த மதத்தை மக்கள் மேல் திணித்தனர். இருந்தாலும், திபெத்திய மக்களின் பொன் மத நம்பிக்கையை முற்றாக அகற்ற முடியவில்லை. அந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில உள்வாங்கப் பட்டன. உதாரணத்திற்கு, வண்ண மயமான கொடிகளில் பிரார்த்தனையை எழுதி தொங்க விடும் வழக்கமானது, பொன் மதத்திற்கு உரியது. கொடிகளின் வர்ணங்கள் ஒவ்வொன்றும், பஞ்ச பூதங்களைக் குறிக்கும். இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பொன் மதத்திலும், திபெத்திய பௌத்தத்திலும் இது ஒரு அடிப்படை நம்பிக்கையாகும். இந்து மதத்திலும், பஞ்சபூதங்கள் பற்றிய நம்பிக்கைகள் நிலவுவது, இங்கு குறிப்பிடத் தக்கது.

திபெத்திற்கு அருகில் உள்ள நேபாளத்தில், இந்துக் கோயில்களுக்கும், பௌத்த ஆலயங்களுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. உள்ளேயிருக்கும் புத்தர் சிலை ஒன்று மட்டுமே வித்தியாசம். நேபாளத்தில் உள்ள லும்பினி எனுமிடத்தில் புத்தர் அவதரித்ததாக கருதப் படுவதால், இன்றைக்கும் அங்கே ஒரு ஆலயம் உள்ளது. புத்த சமயம், உண்மையில் இந்திய உப கண்டத்தில் தோன்றிய மதமாகும். அது பிராமண மதத்தில் இருந்த காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களை எதிர்த்து உருவானது. அந்தக் காலத்தில் இந்து மதம் என்றால், புரோகிதர்கள் எல்லாம் சேர்ந்து யாகத்தீ மூட்டுவது முக்கியமான வழிபாடாக இருந்தது. யாகத்தீயில் குதிரை, மாடு, ஆடு என்று வளர்ப்பு மிருகங்களை தூக்கிப் போட்டு கடவுளுக்கு பலி கொடுப்பது வழக்கம். இதைத் தவிர, ரிக் வேதம் என்ற செய்யுள்களை பாடுவார்கள். மத்திய ஆசியாவில் இருந்து நாடோடிக் கூட்டங்களாக வந்த ஆரியர்கள், "வரும் வழியில் எத்தனை தேசங்களை அழித்தனர், எத்தனை மக்களை இனப்படுகொலை செய்தனர், எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்தனர்," என்பன போன்ற கதைகள் அந்த செய்யுள்களில் பாடப்படும். நமது காலத்தில், யாராவது இப்படியான செய்யுள்களை இயற்றினால், சர்வதேச நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், தமது இனப்பெருமையை பறைசாற்றுவதற்காக எழுதப் பட்டதே ரிக் வேதம். அதில் எந்த தத்துவ விசாரத்தையும் எதிர்பார்க்க முடியாது.

இந்திய ஆரியர்களின் சகோதர இனத்தவர்கள், மத்திய ஆசிய பாலைவனங்களில் இன்னமும் நாடோடிகளாக அலைந்து கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பௌத்த மதமும், இஸ்லாமிய மதமும் பரவும் வரையில், அவர்கள் நாகரீகத்தை அறிந்திருக்கவில்லை. அதே நேரம், இந்திய உப கண்டத்திற்கு வந்து சேர்ந்த ஆரிய இனத்தவர்கள், அங்கே ஏற்கனவே வளர்ச்சி அடைந்த நாகரிக சமுதாயத்தை கண்டனர். அவர்களது மதமும், இயற்கையோடு இணைந்திருந்தது. இயற்கையின் அற்புதங்களுக்கு மதத்தின் பெயரால் விளக்கங்கள் கொடுத்தனர். அது வரையில், வருண பகவானையும், வாயு தேவனையும், இன்ன பிற இயற்கையின் அமானுஷ்ய சக்திகளை கண்டு அஞ்சி கடவுளாகக் கருதி வழிபட்ட "இந்துக்கள்"; இந்திய மண்ணில் மெய்யியல் தத்துவங்களை கற்றுக் கொண்டனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!

Sunday, November 27, 2011

இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!சிறு வயதில், வீட்டில் எல்லோரும் சாமி கும்பிடும் பொழுது, சிவபெருமான் படம் மட்டும் கண்ணை உறுத்தும். பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தலையில் வைத்துள்ள சிவன், இமயமலைச் சாரலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். இமய மலைக்கும், இலங்கைக்கும் இடையிலான புவியியல் வித்தியாசங்களை கணக்கில் எடுக்கும் பொழுது, சிவபெருமான் எனக்கு அந்நியமான ஒருவராக தெரிந்தார். 


இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால், கைலாச மலையில் வசிக்கும் சிவன், எவ்வாறு எமக்கு கடவுளாக முடியும்? இந்தக் கேள்விக்கு சைவ மத நம்பிக்கையாளர்களான பெற்றோரும், மதக் கல்வி போதித்த ஆசிரியர்களும் சரியான பதிலைக் கூற முடியவில்லை. இந்து மதம், இந்திய உப கண்டத்திற்கு பொதுவான சமயம், என்று பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தார்கள். என்ன இருந்தாலும், சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் வரும் விசித்திர உருவமாக காட்சியளித்த சிவபெருமானின் மூலத்தை அறியும் ஆர்வம் மட்டும் மறையவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு, புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டில், எனது தேடுதலுக்கான தீனி கிடைத்தது. ஆம்ஸ்டர்டாம் நூலகத்தில், நாம் அதிகம் அறிந்திராத நாடுகளைப் பற்றிய நூல்களை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக, மொங்கோலியா பற்றிய நூலில், அவர்களது கடவுளரின் படங்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன. 


பண்டைய மொங்கோலியா இன்று இரண்டாகப் பிரிந்துள்ளது. நாட்டின் அரைவாசிப் பகுதி, சீன தேசத்துடன் இணைக்கப்பட்டு, "உள்ளக மொங்கோலியா" என்ற மாநிலமாக உள்ளது. 

 பெரும்பான்மையான மொங்கோலியர்கள் பௌத்த மதத்தினர். ஆனால், பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, கணபதி அவர்கள் வணங்கும் தெய்வங்களாக இருந்தன. நமக்கு நன்கு பரிச்சயமான அதே இந்துத் தெய்வங்கள் தான். அந்தப் படங்களில் சற்று வித்தியாசமாக, மொங்கோலியர் போன்ற சப்பட்டை மூக்குடன், தட்டை முகத்துடன் காணப்பட்டனர். 

சரஸ்வதி வைத்திருந்த வீணை, மொங்கோலியரின் பாரம்பரிய நரம்பிசைக் கருவி போலத் தோன்றியது. இந்தக் கருவி இன்றைக்கும் மத்திய ஆசியாவின், துருக்கி இன மக்களால் இசைக்கப் படுகின்றது. மொங்கோலிய மக்களும் துருக்கி மொழி பேசும் இனத்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்து மதம் உண்மையில் பிராமணர்களின் மதம். ஆரியர்கள் என்போர், மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளை நிறமான மக்கட் கூட்டத்தினர். இது குறித்த பல தகவல்களை, ஏற்கனவே பகுத்தறிவு நூல்களில் வாசித்தறிந்திருக்கிறேன். மொங்கோலியாவில் இந்து மதக் கடவுளரின் படங்கள், ஆரியரை வேறொரு கோணத்தில் ஆராய வைத்தது. 


வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம். ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் ஈரான் வழியாக இந்தியாவை வந்தடைந்தனர். ஐரோப்பிய மொழிகளில் "கொகேசியர்கள்" என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில் ஆரியர்களின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் பகுதியில் இன்று வாழும் மக்கள், சீனர்கள் போன்று தோற்றமளிக்கும் துருக்கி இனத்தவர்கள். 

பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய இடப்பெயர்வில், இனத்தூய்மை காப்பாற்றப் பட்டிருக்கும் என்று கூற முடியாது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியையும் கருத்தில் எடுக்க வேண்டும். இவை எல்லாம், சமூக விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவுகள்.

மொங்கோலியா நாட்டின் புராணக் கதைகளை வாசித்த பொழுது, இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. மொங்கோலியர்கள் பௌத்தர்கள் என்பதால், அந்தக் கதைகளில் புத்தரின் பெயரையும் சேர்த்திருக்கின்றனர். சில கதைகள், மொங்கோலிய நாடோடி சமூகத்தை அடிநாதமாக கொண்டுள்ளன. இருப்பினும், சில கதைகள் இந்து மதக் கதைகளை ஒத்திருக்கின்றன. 


இன்று, இந்து மதமானது பல்லினங்களை சேர்ந்தவர்களின் நம்பிக்கையாக மாறி விட்டது. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறிப்பிட்ட சில (வட இந்திய) இனத்தவர்களின் மதமாக இருந்துள்ளது. அந்த வகையில், வட இந்திய இனக் குழுக்களும், மொங்கோலிய இனத்தவரும் ஒரே மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

உண்மையில், மத்திய ஆசியாவை சேர்ந்த பிற துருக்கிய இனத்தவர்கள் மத்தியிலும் இது போன்ற புராணக் கதைகள் நிலவியிருக்கலாம். ஆனால், இஸ்லாம் மதமானது அவற்றை மறக்கச் செய்து விட்டது. அதற்கு மாறாக, பௌத்த மதத்தினுள் தெய்வங்களுக்கு வெற்றிடம் இருப்பதால், மொங்கோலிய மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும் உள்வாங்கியுள்ளது.

மொங்கோலியாவில், அதன் எல்லையோரமாக உள்ள ரஷ்ய பகுதிகளில் திபெத்திய பிரிவான "லாமாயிச பௌத்தம்" பின்பற்றப் படுகின்றது. அதனால் தான், மனிதர்களின் சிருஷ்டி பற்றிய மொங்கோலிய கதை, கடவுளின் இடத்தில் ஒரு லாமா (திபெத்திய பௌத்த மதகுரு) வை குறிப்பிடுகின்றது. 


முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு லாமா, ஒன்பது சொர்க்கங்களையும், ஒன்பது உலகங்களையும், ஒன்பது ஆறுகளையும் படைத்ததாக அந்தக் கதை கூறுகின்றது. திபெத்திய மத நம்பிக்கையின் படி, "ஒன்பது" மிக முக்கியமான அதிர்ஷ்ட எண். இந்து மதத்தில் அது ஏழாக மாறி விட்டது. இந்து மத நம்பிக்கையின் பிரகாரம், கடவுள் எல்லாவற்றையும் ஏழு, ஏழாக படைத்துள்ளார். 

ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம்). ஏழு ஆறுகள் (சிந்து, அஷிக்னி, பருஷ்னி, ஸரஸ்வதி, யமுனா, கங்கை மற்றும் சரயூ). திபெத்திய பௌத்தர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது, இந்துக்களின் அதிர்ஷ்ட எண்ணான ஏழு ஆகிய நம்பிக்கைகள் கைலாய மலையில் இருந்து தோன்றின. அது குறித்து பிறிதொரு இடத்தில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர்கள், மொங்கோலிய புராணக் கதைகளை தொகுத்துள்ளனர். (Mongol creation stories: man, Mongol tribes, the natural world, and Mongol deities, Nassen-Bayer; Kevin Stuart, Asian Folklore Studies, Vol.51 No.2, pp.323-334) அவற்றில் சில. நிது மலையில், காட்டுக்குள் இருக்கும் குளம் ஒன்றினுள் தேவ லோக கன்னிகைகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியால் சென்று கொண்டிருந்த ஒரு வேட்டைக்காரன் அந்தக் காட்சியைக் கண்டு விட்டான். ஒரு கன்னியின் உடைகளை எடுத்து மறைத்து வைத்தான். 


ஒரு மானுடன் பார்த்து விட்டதை அறிந்த தேவ லோக கன்னிகள், அன்னப் பறவையாக மாறி சொர்க்கத்திற்கு பறந்து சென்று விட்டனர். ஆடைகளை பறிகொடுத்த கன்னி மட்டும், பூமியில் தங்கி விட்டாள். வேடனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை மணந்து ஒரு குழந்தை ஈன்றெடுத்தாள். தேவ லோக கன்னிகைகள் நீண்ட காலம் பூவுலகில் வாழ முடியாது. அதனால், தேவ லோகம் செல்வதற்கு தக்க தருணம் பார்த்து காத்திருந்தாள். 

ஒரு நாள், குழந்தையை தனியாக தொட்டிலில் விட்டு, அதற்கு காவலாக ஒரு மஞ்சள் பறவையை நியமித்து விட்டு தேவ லோகத்திற்கு சென்று விட்டாள். அந்தக் குழந்தையின் வழித்தோன்றல்கள் தாமே என, Dorbed என்ற மொங்கோலிய இனக்குழுவினர் நம்புகின்றனர்.

இந்து மதத்தில் இதே போன்றதொரு கதை உள்ளது. அதிலும் தேவ லோக கன்னிகள், பூலோக வனத்தில் உள்ள குளத்தில் நீராடுகின்றனர். தேவ லோகத்தை சேர்ந்த மேனகை, விஸ்வாமித்திர முனிவருடன் குடித்தனம் நடத்தி, ஒரு குழந்தையை பெற்றெடுத்து விட்டு சென்றதாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில், மேனகை விட்டுச் சென்ற குழந்தையை சகுந்தப் பறவைகள் கொஞ்சியதால், சகுந்தலா என்று பெயர் வந்தது. 


இந்திய இந்துக்களும், மொங்கோலியர்களும் ஒரே புராணக் கதையை பகிர்ந்து கொள்வது எப்படிச் சாத்தியமானது? ஒரே வேரில் இருந்து கிளம்பிய கிளைகள் போன்று, இரு இனங்கள் வெவ்வேறு திசைகளில் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அந்த வேர் எங்கேயுள்ளது? கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னர், ஒரே மொழி பேசும் இனங்கள் ஓரிடத்தில் ஒன்றாக வாழ்ந்துள்ளன. அது ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட இமய மலைப் பிரதேசம் ஆகும். 

ஆரிய இனங்களின் குடிசனப் பரம்பலை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், அவர்கள் நாடோடிக் கூட்டங்களாக இந்தியா வந்தடைந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்களில் ஒன்று, புராணக் கதைகள். குறிப்பாக ஈரானிய ஆரிய இனம், இந்திய ஆரிய இனத்திற்கு நெருக்கமானது. ஈரானிய புராணங்களிலும் தேவர்கள், அசுரர்கள் வருகின்றனர். இந்துக்களின் ரிக் வேதமும், ஈரானியர்களின் அவேஸ்தாவும் ஒரே மாதிரியான கதைகளை கொண்டுள்ளன.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதைப் பற்றிய இந்துக்களின் நம்பிக்கை என்ன? சூரியனையும், சந்திரனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன. அதனால் தான் கிரகணம் ஏற்படுகின்றது. அதற்கு விஷ்ணுபுராணம் கூறும் கதை இது. ஒரு முறை பாற்கடலை கடையும் பொழுது, ராகு என்ற அசுரன், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் ஒளிந்திருந்து அமிர்தத்தை பருகி விட்டான். 


இதைக் கண்ட விஷ்ணு சக்கராயுதத்தை வீசி ராகுவின் தலையை சீவி எறிந்தார். அமிர்தத்தை அருந்தியதால் உயிர் பிழைத்த, ராகுவின் தலையுடன் பாம்பின் வாலையும், ராகுவின் உடலுடன் பாம்பின் தலையையும் இணைத்து விட்டார்கள். அவை தான் ராகு, கேது என்ற கிரகங்கள். கிட்டத்தட்ட இதே போன்ற கதையொன்று மொங்கோலியரிடம் புழங்கி வருகின்றது.

கடவுள் ஒரு தடவை, மிகவும் சக்தி படைத்த ராட்சதனான ராகுவை (கவனிக்கவும்: மொங்கோலிய பெயரும் ராகு தான்.) தண்டிக்க நினைத்தார். இதை அறிந்த ராகு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட, தேடிக் கண்டு பிடித்து வருமாறு, கடவுள் சூரியனை அனுப்பி வைத்தார். எங்கேயும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் சூரியன் திரும்பி விட்டான். 


கடவுள் அதற்குப் பிறகு சந்திரனை அனுப்பினார். சந்திரன் ராகுவை பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கவே, கடவுள் தண்டனை வழங்கினார். அன்றில் இருந்து, தன்னை பிடித்துக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் விரட்டுவதே ராகுவின் வேலையாகி விட்டது. அதனால் தான், சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

புராணக் கதைகள் உண்மையில் நடந்தவையா, அல்லது கற்பனையா என்ற விவாதத்திற்கு அப்பால், அவை குறிப்பிட்ட மக்களின் பாரம்பரியத்தை கட்டிக் காக்க உதவுகின்றன. ஒவ்வொரு இனமும், தமது தனித்துவத்தை பேணுவதற்காக, இது போன்ற கதைகளை பரம்பரை பரம்பரையாக சொல்லி வருகின்றது. 


தாமே கடவுளின் நேரடி வழித்தோன்றல்களாக காட்டுவதற்கும் இந்தக் கதைகளை உருவாக்கி உள்ளனர். சில நேரம், அவர்களின் மூதாதையர் இடம் பெயர்ந்து வந்த தாயகத்தை நினைவூட்டுவதாகவும் அமைந்திருக்கும். வருங்கால சந்ததியினர், தமது பூர்வீகத்தை மறக்காமல் இருப்பதற்கு புராணக் கதைகள் உதவுகின்றன. அந்த வகையில் பார்த்தால், "இந்துக்களின்" பூர்வீகமும் இந்தியாவாக இருக்க முடியாது.

உண்மையில் "இந்து" என்ற சொல், பிற்காலத்தில் உருவானது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் புழக்கத்தில் வந்த சொல்லாகும். சிந்து நதியை எல்லையாக கொண்டிருந்த முஸ்லிம்கள், நதிக்கு அப்பால் இருந்த பகுதியை ஹிந்துஸ்தானம் என்று அழைத்தனர். ஆகவே, இந்துக்களின் தாயகம் இந்தியா என்று நினைப்பது தவறான எண்ணக் கரு. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், அந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடுவதைப் போன்றது தான் இதுவும். 


வைதீக இந்துக்களான பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இனமாக, இமய மலைப் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களின் பூர்வீகம், இன்று சீனாவின் பகுதியாகவுள்ள திபெத்தில் உள்ளது. அதனை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள். இந்துக்களின் தாயக பூமியை தரிசிக்க வேண்டுமானால், நாம் சீனா செல்ல வேண்டும்.


(தொடரும்)

Sunday, November 20, 2011

அரசியல் படுகொலையும், அமெரிக்க கழுகின் வருகையும்


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பதின்மூன்று)


இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி, இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுகள் வெளி வந்து விட்டன. சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை மிக நுணுக்கமாக ஆராய்பவர்கள், காலனிய ஆட்சி ஏற்படுத்திய தாக்கத்தை அலட்சியப் படுத்துகின்றனர். குறிப்பாக, 1972 ம் ஆண்டு வரையில், ஆளுநர் என்னும் ஒருவர் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக அதியுயர் ஸ்தானத்தில் இருந்ததை மறந்து விடுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான ஆளுநர் பதவியை, அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறானது. இலங்கையரால் ஆளப்படும் அரசு, பிரிட்டிஷ் காலனிய நலன்களை மீறாத வண்ணம் பார்த்துக் கொள்வதே ஆளுநரின் பொறுப்பு. அடுத்த பிரதமராக யார் வர வேண்டும், என்பதை தீர்மானிப்பதிலும், ஆளுநரின் பங்கு குறைத்து மதிக்கத் தக்கதல்ல. உதாரணத்திற்கு, முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் மறைவின் பின்னர், சேர். ஜோன் கொத்தலாவல ஆட்சியைப் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால், டி.எஸ். சேனநாயக்கவின் மகன் டட்லி ஆளுனரால் பிரதமராக்கப் பட்டார். இத்தனை செல்வாக்குப் பெற்ற ஆளுனரால், இனப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனது ஆச்சரியத்திற்கு உரியது.

டி.எஸ். சேனநாயக்க காலத்தில் நடந்த சிங்களக் குடியேற்றம். பண்டாரநாயக்க காலத்தில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், மற்றும் முதலாவது இனக்கலவரம். எதிர்வரும் காலங்களில் பெரும் இரத்தக்களரியை ஏற்படுத்தப் போகும், இனப்பிரச்சினை குறித்து ஆளுநர் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தார்? ஆளுநர் மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசு கூட இவற்றைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவித்தாக நாம் அறியவில்லை. "இலங்கை அமைதிப் பூங்காவாக காட்சியளித்த" அதே காலத்தில், உலகில் பிற பாகங்களில் இருந்த பிரிட்டிஷ் காலனிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. மலேசியா, கென்யா, யேமன் போன்ற பிரிட்டிஷ் காலனிகளை சேர்ந்த மக்கள், சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திப் போராட வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் இராணுவம், என்ன விலை கொடுத்தேனும், காலனிய எதிர்ப்பு சக்திகள் ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க நினைத்தது. இலங்கையிலும், சிங்களப் பேரினவாதிகள் தமக்கு எதிரானவர்கள் என்று, பிரிட்டிஷார் கருதியிருந்தால், எப்பாடு பட்டாகிலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதை தடுத்திருப்பார்கள். சிங்கள பேரினவாதத்தை தன்னோடு முரண் பட்ட சக்தியாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்றைக்குமே கருதியது கிடையாது.

காலனிய காலத்திற்குப் பின்னரான சுதந்திர இலங்கையில், மதப் பழமைவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப் படவில்லை. மாறாக அது ஊக்குவிக்கப் பட்டது. இலங்கை அரசியலில், புத்த மதப் பிக்குகளின் செல்வாக்கு குறித்து, தமிழர்கள் அதிகமாகவே அறிந்து வைத்துள்ளனர். "இலங்கையில் பௌத்த மதமும், புத்த பிக்குகளும் தமிழரை அழிப்பதற்காக இனவெறி கொண்டு அலைவதாக," பாமரத் தமிழனும் கூறுகின்றான். இது சற்றே மிகைப் படுத்திய கூற்றாக இருந்த போதிலும், "ஒரு நாட்டில் மத-இனவாதத்திற்கும் அரசியல்- பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு" குறித்து படித்த தமிழன் கூட பேசுவதில்லை. "சிங்களம் மட்டும் நாயகன்" பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, பௌத்த மதவெறியர்களின் செயலாக மட்டுமே பார்க்கின்றனர். பண்டாரநாயக்க கொலை குறித்து நடந்த விசாரணைகள் வேறொரு கோணத்தில் செல்கின்றன.

முதலில், அனைவராலும் ஊகிக்கப் பட்ட வெளிப்படையான காரணம் எதுவெனப் பார்ப்போம். பண்டாரநாயக்க பதவிக்கு வந்த பின்னர், பௌத்த மத சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால், ஒரு காலத்தில் பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு உழைத்த பௌத்த சங்கங்கள், இப்போது அவரை "துரோகியாகப்" பார்த்தார்கள். பண்டாரநாயக்கவை சுட்டுக் கொன்ற புத்த பிக்கு கூட, "துரோகி அரசியலால்" மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவர் தான். "துரோகியின் மரணமானது, கொள்கைப் படி நியாயமான ஒன்றாகவே" அவர் மனதிற்கு தோன்றியது. கொலைக் கருவியாக பயன்படுத்தப் பட்ட பிக்கு, அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப் பட்டு விடலாம் என்றே நம்பப் பட்டது. கொலைக் கருவியை அனுப்பிய சதிகாரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?

களனி, கொழும்பு நகருக்கு அருகில் உள்ளது. அங்குள்ள பௌத்த விகாரை, இலங்கை அரசியலில் கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றது. களனிய விகாரையின் தலைமை பீடாதிபதி மபித்தாகம புத்தராகித்த, காஞ்சி இந்து மத பீடாதிபதி சங்கராச்சாரியருடன் ஒப்பிடத் தக்கவர். இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப் படுகின்றன. மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் நடமாடும் தெய்வமாக காட்டிக் கொள்வார்கள். பணம், பொருள், மங்கையர் தொடர்பு போன்ற இல்லற சுகங்களை இழக்க விரும்பாத "துறவிகள்". ஆட்சியாளர்களும் பாதத்தில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குமளவு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள்.

களனி பீடாதிபதி புத்தராக்கித்த, வெளிப்படையாகவே முதலாளித்துவத்திற்கு சார்பாக வலதுசாரி அரசியல் பேசுவார். அவருடைய சொந்த நலன்களும் அதற்கு காரணம். பண்டாரநாயக்கவின் கட்சிக்கான ஆதரவை, பொருளாதார ஒப்பந்தங்களுக்கான நிபந்தனையாக பயன்படுத்திக் கொண்டார். அதிக வருமானம் தரும், கப்பல் போக்குவரத்து ஒன்றுக்கான ஏகபோக உரிமையை பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டினார். ஆனால், பண்டாரநாயக்க அதற்கு சம்மதிக்கவில்லை. இடதுசாரி அமைச்சர் பிலிப் குணவர்த்தன கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டம் வேறு, மதவாதிகளின் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஏனெனில், களனி விகாரைக்கு சொந்தமான பல காணிகள் அரசால் பறிக்கப் பட்டன.

களனி பீடாதிபதி, "வணக்கத்திற்குரிய" புத்தராக்கித்த, இலங்கை அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பங்கு தருமாறு கேட்டுள்ளார். பண்டாரநாயக்க உட்பட பல அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரத்தில், புத்தராக்கித்தவுக்கு அமைச்சர் ஒருவருடன் தொடர்பிருந்தது. பெண் அமைச்சர் விமலா விஜெரத்னவுக்கும், புத்தராக்கித்தவுக்கும் இடையில் நெருக்கமான, உடல் ரீதியான உறவு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. களனிய பீடாதிபதிக்கும், அமைச்சருக்கும் இடையிலான கள்ள உறவை அம்பலப் படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டன. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, விமலா விஜேவர்த்தன, பண்டாரநாயக்கவை கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் தெரிகின்றது. அதற்கு பழிவாங்குவதற்காக பண்டாரநாயக்க குடும்பம் பற்றிய அவதூறுகள் பரப்பப் பட்டன. அவை எல்லாம், விமலா- புத்தராகித்த கூட்டில் உருவான சதிகள் என்று நிரூபிக்கப் பட்டது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் விவாதிக்கப் பட்டது. இறுதியில் மூக்குடைபட்ட விமலா அவமானத்தில் வெளியேறினார். ஆகவே, தனிப்பட்ட குரோதம் காரணமாக, விமலாவும், புத்தராக்கித்தவும் கூட்டுச் சேர்ந்து, பண்டாரநாயக்கவை கொலை செய்ததாக விசாரணைக்குழு கண்டறிந்தது.

பண்டாரநாயக்கவின் கொலையில் சி.ஐ.ஏ. சம்பந்தப் பட்டிருப்பட்டிருந்ததாக, முன்னாள் அமெரிக்க உளவாளி எழுதிய நூலில் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் சி.ஐ.ஏ. யினால் நெறிப்படுத்தப் பட்ட முதலாவது அரசியல் படுகொலை அதுவாக இருக்கலாம். பண்டாரநாயக்க கொலையில் சி.ஐ.ஏ. சம்பந்தப் பட்டிருப்பதற்கான காரணம் என்ன? பிரிட்டிஷாரால் சுதந்திரம் வழங்கப் பட்ட பின்னரும், காலனிய காலப் பொருளாதாரம் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்ததை முன்னர் பார்த்தோம். பண்டாரநாயக்க அரசாங்கத்தில் பல நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. மேலும், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையிலும் பெருமளவு மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனிலும், அமெரிக்காவில் தங்கியிருந்த மேற்கத்திய சார்பு நாடான இலங்கை, பிற நண்பர்களை தேடத் தொடங்கியது. பனிப்போர் எதிராளிகளான ரஷ்யா, சீனா மற்றும் பல சோஷலிச நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. பண்டாரநாயக்கவை சி.ஐ.ஏ. குறி வைப்பதற்கு இவ்வளவு காரணங்கள் போதுமே.

சர்வதேச அரங்கில் ஏற்படும் மாற்றங்களும், இலங்கையை பாதித்து வந்துள்ளன. பண்டரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர், அவரது விதவை சிறிமாவோ பிரதமரானார். சிறிமாவின் அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால், இலங்கை மென்மேலும் ரஷ்யா, சீனா நோக்கி நகர்ந்தது. இந்தியாவில் நேருவும், அவரது புதல்வி இந்திராவும் அணிசேரா கொள்கைகளுடன் ஆட்சி நடத்தியதால், இந்தியாவுடனும் நெருக்கம் அதிகரித்தது. சுருங்கக் கூறின், பனிப்போர் காலகட்டத்தில், இந்தியாவும், இலங்கையும் சோவியத் யூனியன் பக்கம் நின்றன. இந்த நெருக்கம் காரணமாக, புதிய அரசியல் நிர்ணய சட்டம் இயற்றப் பட்டு, இலங்கை குடியரசானது. எஞ்சியிருந்த பிரிட்டனின் காலனிய ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது.

1977 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல், இலங்கை வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், சிங்கள பேரினவாதக் கருத்துகளை உதிர்ப்பதில் பண்டாரநாயக்கவுடன் போட்டி போட்ட, ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் இலங்கையை மீண்டும் மேற்குலக சார்பான நாடாக மாற்றினார். இந்திய கரையோரமாக, சிலாபத்தில் "வொய்ஸ் ஒப் அமெரிக்கா" தொலைத் தொடர்பு நிலையம் அமைப்பதற்கு இடம் கொடுத்தார். இன்றைக்கு இலங்கையில் சீனாவின் பிரசன்னம், இந்தியாவில் அதிர்வலைகளை தொற்றுவிப்பதைப் போன்று தான் அன்றைக்கும் நடந்தது. (சோவியத் சார்பு) இந்தியாவை உளவு பார்ப்பதற்காக, அமெரிக்கா அந்த தொலைத் தொடர்பு நிலையம் அமைப்பதாக சந்தேகங்கள் எழுப்பப் பட்டன.

ஒரு சில வருடங்களின் பின்னர், பனிப்போரின் பதிலிப் போர் ஒன்று இலங்கையில் ஆரம்பமாகியது. "தமிழீழம் அடைவதற்காக ஆயுதப்போராட்டம் நடத்துகிறோம்," என்று கூறிய தமிழ் இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப் பட்டது. அமெரிக்க சார்பான ஜே.ஆர். அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, இந்தியா பக்கம் இழுக்கும் நோக்குடன், தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியா உதவி செய்தது. அவர்களுக்கு தேவையான நிதியும், ஆயுதங்களும் தாராளமாகக் கிடைத்தன. 1977 ல், ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்., "போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்." என்று கூவி, தமிழரை போருக்கு அழைத்திருந்தார். அதுவரை காலமும் நேரடிப் போரில் ஈடுபட்டிராத இலங்கை இராணுவத்திற்கு,SAS என்ற பிரிட்டிஷ் கூலிப்படையினர் பயிற்சி கொடுத்தனர். ஜே.ஆரின் மகன் தலைமையில், பிரிட்டனில் இருப்பதைப் போன்ற சிறப்புப் படையணியும் (STF) உருவாக்கப் பட்டது.

அமெரிக்காவின் ஆசியுடன், இஸ்ரேல் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது. "பத்து தமிழர்களைக் கொன்றால், அதில் ஒருவன் போராளியாக இருப்பான்." என்று இஸ்ரேல் வழங்கிய ஆலோசனை பிரபலமானது. அதாவது, "தமிழர்களை இனப்படுகொலை செய்தாகிலும், போராளிக் குழுக்களை அழித்து விடுமாறு...", புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய இஸ்ரேல் அப்போதே போதித்திருந்தது. சிங்கள பேரினவாதிகளுக்கும், காலனிய ஆதிக்கவாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறைந்தது ஒரு இலட்சம் தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்து விட்டது. இருந்த போதிலும், இன்றைக்கும் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளை மீட்பர்களாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகளான, சிங்களப் பேரினவாதமும், தமிழ் குறுந் தேசியவாதமும் மக்களை வேறெப்படி வழி நடத்திச் செல்வார்கள்?

(முற்றும்)இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
12. 1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்
11. "ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Thursday, November 17, 2011

ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு

ஐரோப்பியர்கள் அறிமுகப் படுத்திய இனத் தேசியவாதம் என்ற கற்பிதம் செயற்கையானது. இது பல தடவை நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனமும் பழம் பெருமை பேசத் தெரிவு செய்யும் சரித்திர நாயகர்கள், அந்தப் பெருமைக்கு தகுதியுடையவர் தானா, என்பது சந்தேகமே. இன்றைக்கு இருக்கும் மொழி சார்ந்த இனவுணர்வு, நூறாண்டுகளுக்கு முன்னர் காணப்படவில்லை. 

மதத்தை மாற்றுவது போல, மொழியை மாற்றிக் கொள்வதும் காலங்காலமாக நடைபெற்று வரும் மாற்றங்கள். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்கள் கூட அவ்வாறு தான் வாழ்ந்துள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், இன்று "தமிழர்கள்" என அறியப்படும் பல்லவர்கள். 

சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களுடன் பல்லவர்களையும் பண்டைய தமிழ் மன்னர்களாக உருவகித்துக் காட்டும் போக்கு, இனப்பெருமை பேசுவோரால் முன்னெடுக்கப் படுகின்றது. "தமிழ் மன்னர்கள்" எல்லாம், உண்மையிலேயே தமிழர்களா, அல்லது தமிழ் உணர்வுடன் ஆட்சி செய்தனரா, என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

பல்லவர்கள் என்றவுடன், சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்கள் நினைவுக்கு வரும். பல்லவர் காலத்து கோயில்களும், சிற்பங்களும் இன்றைக்கும் அழியாமல் உள்ளன. கருங்கல்லில் வடிக்கப் பட்ட சிற்பங்கள், இந்து புராணக் கதைகளை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்து பல்லவர்கள் நம்மவர்கள் என்று கருதிக் கொள்கிறோம். 


மாமல்லபுரம் கோயில்களை குடைந்தவர்களும், சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளும் தமிழ் பாட்டாளி மக்கள் தான். அதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால், அவற்றை செதுக்குவதற்கு உத்தரவிட்ட மன்னர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோழர் காலத்து கல்வெட்டுகள் தமிழில் இருக்கையில், பல்லவர் காலத்து கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் காணப் படுகின்றன. 

இந்தியாவின் கிழக்குப் பகுதியில், சமஸ்கிருதத்திற்கு முன்னர் பேசப்பட்ட பிராமி மொழி, அந்தக் காலத்தில் நாகரீகமடைந்த மொழியாக இருந்துள்ளது. அதுவே பல்லவர்களின் ஆட்சி மொழியாக இருந்திருக்கலாம். பல்லவர்களின் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம், மாமல்லபுரத்திற்கு மட்டுமே சிறப்பான ஒன்றல்ல.

முதலில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எதுவெனப் பார்ப்போம். இன்றைய ஆந்திரா மாநிலத்தின் தென் பகுதியும், தமிழ் நாடு மாநிலத்தின் வட பகுதியும் பல்லவர்களின் நாடாக இருந்துள்ளது. தென் ஆந்திராவில் உள்ள குண்டூர், வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் என்பன பல்லவர் காலத்தில் குறிப்பிடத் தக்க நகரங்களாக இருந்துள்ளன. 


ஒரு காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து தெற்கு நோக்கி விரிந்திருந்த சாதுவாகனரின் சாம்ராஜ்யத்தின் மறைவில் தான் பல்லவர்கள் தலையெடுக்கத் தொடங்கினார்கள். பண்டைய இந்தியாவில், சாதுவாகனரின் சாம்ராஜ்யத்திற்குள், இன்றைய இந்திய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியிருந்தன, சாதுவாகனரின் ஆட்சியில் பௌத்த மதம் அரச அந்தஸ்துப் பெற்றிருந்தது. 

இன்றைக்கும் ஆந்திராவில், குண்டூருக்கு அருகில் புத்தர் சிலைகளும், வேறு சில பௌத்த மத சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. மகாராஷ்டிராவில் தான் அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும் காணப் படுகின்றன. இவை யாவும் பௌத்த மத துறவிகளால் செதுக்கப் பட்டவை. இதற்கெல்லாம் நீங்கள் சரித்திரப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சாதாரணமாக, அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணியாக செல்லும் ஒருவர், அறிந்து வைத்திருக்க கூடிய தகவல்கள் இவை.

இன்றைக்கும் புத்தகக் கடைகளில் சூடாக விற்பனையாகும், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற "சரித்திர நாவல்கள்", வரலாற்றை திரித்து எழுதப் பட்டுள்ளன. கல்கியின் நாவல்களில் வரும் புலிகேசி என்ற "வில்லன்", உண்மையில் இந்தியர்கள் பெருமைப் படக் கூடிய சக்கரவர்த்தி ஆவார். ஆனால், அவர் காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப் பட்டமை, அவரை வில்லனாக காட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், "இந்து மதம்" (இந்து என்ற சொல் சர்ச்சைக்குரியது. பொதுவான அர்த்தத்தில் கூறப் படுகின்றது.) தலையெடுத்தது.

பண்டைய காலங்களில், இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய ஆதிக்க மதமாக இருந்தது. யாகம் வளர்த்து மிருகங்களை பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை, வழிபாடாகக் கொண்டிருந்தது. சாதுவாகனரின் ஆட்சிக் காலத்தில், அந்த வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. 


புலிகேசி காலத்தில் அடங்கியிருந்த பிராமணர்கள், பல்லவர்கள் காலத்தில் தான் மறுபடியும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல்லவர்களும் பிராமணர்கள் என்றொரு சரித்திரக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்திய சாதி அமைப்பின் பிரகாரம், அரச பரம்பரையினர் சத்திரியர்களாக கருதப் பட வேண்டும். இருப்பினும், பிராமணர்களும், சத்திரியர்களும் ஆரிய வம்சாவழியை பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

வரலாற்றில் திராவிடர் என்றொரு இனம் இருந்ததில்லை. அது, ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தென்னிந்தியர்களுக்கு சூட்டிய பொதுப் பெயர். ஆனால், ஆரியர், அல்லது அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்ளும் இனம், இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. 200 க்குப் பின்னர், ஈரானிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சசானியர்கள் தம்மை ஆரிய இனத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் காலத்தில் தான் ஈரான் என்ற பெயர்ச் சொல்லும் பாவனைக்கு வந்தது. அதாவது, ஈரான் என்றால் "ஆரியர்களின் நாடு" என்று அர்த்தம்!

சசானியர்களுக்கு முன்னர், ஈரானை பார்த்தியர்கள் ஆண்டார்கள். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிப் பரப்பு, இன்றைய பாகிஸ்தான் வரையில் விரிந்திருந்தன. அதற்குமப்பால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் படையெடுத்து சென்றுள்ளனர். இரண்டு அரச பரம்பரையினர் காலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ளது போன்று சிற்பங்கள் போன்று செதுக்கும் கலை வளர்ந்திருந்தது. மேலும் ஒரு தகவல், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 


சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிக் காலத்தில், பெரும்பான்மை ஈரானிய குடிமக்கள் பேசிய மொழியின் பெயர், "பல்லவ மொழி"! அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்பின் பின்னர், பல்லவ மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய ஈரானியர்கள் பேசும் பார்சி மொழியில், நிறைய அரபுச் சொற்கள் கலந்துள்ளதால், புதிய மொழி போன்று தோற்றமளிக்கின்றது.

ஈரானியர்களுக்கும், வட-இந்தியர்களுக்கும் இடையில் மிக அதிகமான கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பார்சி, சமஸ்கிருதம், உருது, ஹிந்தி எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழிகள். இவற்றில் ஒரு மொழி தெரிந்தவர், இன்னொன்றை பயில்வது இலகு. மார்ச் 21 , அல்லது அதற்கு பிந்திய நாள், ஈரானில் புது வருடமாகவும், வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகவும் கொண்டாடப் படுகின்றது. 


இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய ஈரானிய மதக் கதைகள், இந்து மதக் கதைகளை ஒத்துள்ளன. மித்ரா, வருணா, போன்ற கடவுளர்கள் ஒரே பெயரில் வந்தாலும், அவர்களைப் பற்றிய கதைகள் சிறிது மாறு படுகின்றன. இந்துக்களின் "ரிக் வேதம்", ஈரானியர்களின் "அவெஸ்தா கதா" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். 

சுருக்கமாக, இந்து மதமும், ஈரானிய மதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்துக்களான பல்லவர்கள், ஈரானியர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை நிறுவுவதற்கு இது போதும்.

பண்டைய ஈரானிய மன்னர்கள் போரில் கைப்பற்றும் நாடுகளில், தமது மதத்தையோ, அல்லது மொழியையோ திணிக்கவில்லை. உள்நாட்டு மக்களின் மொழியை, மதத்தை அங்கீகரிப்பதன் மூலம், சிறந்த முறையில் அவர்களை ஆள முடியும் என்று நம்பினார்கள். இல்லாவிட்டால், கிரேக்கம் முதல் இந்தியா வரையிலான, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அவ்வளவு சுலபமாக நிர்வகித்திருக்க முடியாது. 


ஈரானிய ஆட்சியாளர்கள், "நெருப்பை வணங்கும், சரதூசரின் தத்துவங்களை பின்பற்றும்" மத நம்பிக்கையாளர்கள். ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில், தமது மதத்தை தமக்குள்ளே மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஈரானிய மன்னர்கள் வெளியிட்ட இலச்சினைகளில் எப்படியும் நெருப்பின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். 

தென்னிந்தியாவில் பல்லவர்கள் ஆண்ட இடங்களிலும், அது போன்ற இலச்சினைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் பல்லவர்கள் ஆண்ட பகுதி "பல் நாடு" என்று அழைக்கப் படுகின்றது. பல் நாடு பற்றிய செவி வழிக் கதைகள், "பல் நாட்டி வீருள்ள கதா" என்ற நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் உள்ள, பண்டைய இலக்கியங்களில் அது முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள், தமிழ் பேசும் மக்களைக் கவர்வதற்காக தமது பெயர்களையும் தமிழ்ப் படுத்திக் கொண்டார்கள். "மாமல்லன்" என்பது, தமிழாக்கப் பட்ட ஈரானியப் பெயராக இருக்க வாய்ப்புண்டு. தமிழில் மல்யுத்தம் செய்யும் வீரர்களை மல்லர்கள் என்று அழைப்பார்கள். 


மல்யுத்தம் என்ற வீர விளையாட்டு, பல்லவர்களின் தாயகமான ஈரானில் இருந்து வந்திருக்க வேண்டும். பல்லவ மன்னர்கள், தம்மை சிறந்த மல்யுத்த வீரர்களாக காட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. Varzesh-e Bastani என்பது ஈரானின் மரபு வழி மல்யுத்த விளையாட்டைக் குறிக்கும். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, இன்றைக்கும் பயிற்றப் படும் மல்யுத்தமானது, ஈரானியக் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. ஈரானில் மல்யுத்த வீரர்களை "பஹ்லவன்" என்று அழைப்பார்கள்! ஈரானிய பஹ்லவன், தமிழில் பல்லவனாக மருவியிருக்கலாம். இன்றைக்கும் பல ஈரானியர்கள், பஹ்லவன் என்று பெயர் வைத்துக் கொள்வது வழமையானது.


இணைய சுட்டிகள்:

India's Parthian Colony On the origin of the Pallava Empire of Dravidia
Pallava dynasty
Pal Nadu
Varzesh-e Bastani
பல்லவர்
சாதவாகனர்

Wednesday, November 16, 2011

இத்தாலி தடுப்பு முகாம்களில், இத்தனை கொடுமைகள்

இத்தாலியில் தஞ்சம் கோரும் அகதிகள், பல இடங்களில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஊடகங்களை சேர்ந்தவர்கள் இந்த தடுப்பு முகாம்களை பார்வையிடுவதை, அரசு சட்டம் போட்டு தடுத்துள்ளது. இருப்பினும், தற்செயலாக Repubblica.it ஊடகவியலாளர் ஒருவர், நகரசபையிடம் அனுமதி பெற்று சென்றுள்ளார். தென் இத்தாலியில் Basilicata பிராந்தியத்தில் உள்ள Palazzo எனும் கிராமத்தில் இந்த முகாம் அமைந்துள்ளது. "இத்தாலியின் குவாந்தனமோ சிறை முகாம்" என்று அது அழைக்கப் படுகின்றது. அங்கே அந்த ஊடகவியலாளர் கண்ட காட்சிகள், அதிர்ச்சியில் உறைய வைத்தன. "நாகரீகமடைந்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில்", காவல் துறை இந்தளவு மிருகத் தனமாக நடந்து கொள்ளும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. சுமார் தொண்ணூறு துனிசியா அகதிகள், கோழிகளை போன்று கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தப் பட்டனர். கைதிகள் போன்று சிறை வைக்கப் பட்டிருப்பவர்கள், இத்தாலியில் அகதித் தஞ்சம் கோரியதை தவிர வேறெந்த குற்றமும் செய்யவில்லை. தடுப்பு முகாம் கொடுமைகளை காட்டும் இந்த வீடியோ, இத்தாலியின் தேசிய தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இத்தாலியில் இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதை எண்ணி மக்கள் வருத்தப் பட்டனர். பாராளுமன்றத்திலும், இந்தப் பிரச்சினை விவாதிக்கப் பட்டது.

"இத்தாலியின் குவாந்தனமோ" சிறைக் கொடுமைகளை காட்டும் வீடியோ:

இதற்கிடையே, செப்டம்பர் 20 ம் தேதி, பெருமளவு அகதிகளை தடுத்து வைத்துள்ள Lampadusa தீவு போர்க்களமாக காட்சியளித்தது. பொலிஸ், மாபியா, உள்ளூர் மக்களுடன் சேர்ந்து, இரகசியமாக அகதிகளை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இதனால், கலவரமடைந்த துனீசியா அகதிகள் முகாமுக்குள் கலகம் செய்தனர். படுக்கைக்கு விரிக்கும் போர்வைகளில் அரசியல் சுலோகங்களை எழுதி மதில் சுவரில் மாட்டினார்கள். "Freedom Libertà", "Sorry Lampedusa" போன்ற வாசகங்கள் அவற்றில் காணப்பட்டன. ஆனால், இந்தக் குரல்கள் அந்தத் தீவில் யார் காதிலும் ஒலிக்கவில்லை. கலகம் குறித்து கேள்விப்பட்டு வந்த பத்திரிகை நிருபர்களை, பொலிஸ் தடுத்து நிறுத்தியது. தீவில் வசிக்கும் இத்தாலியர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் அகதிகளை சுற்றி வளைத்து கல் வீசித் தாக்கினார்கள். தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய அகதிகள், மூன்று மீட்டர் உயரமான முள்வேலியில் தாவிக் குதிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.இத்தாலியில் மனித உரிமை மீறல்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.இத்தாலி தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்
2.கறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒதுக்கல்
3.இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது

Tuesday, November 15, 2011

சோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி!

சோஷலிச நாடுகளை, "இரும்புத்திரை நாடுகள்" என்றும், கொடுங்கோன்மையில் இருந்து தப்புவதற்காக வெளியேறும் மக்கள் பற்றியும் அளவுக்கதிகமாகவே கேள்விப்பட்டிருப்போம். மாறாக, மேற்கத்திய நாடுகளில் இருந்து சோஷலிச நாடுகளிற்கு சென்று குடியேறிய மக்களைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப் படுவதில்லை. அதிலும், அமெரிக்காவிலிருந்து சோவியத் யூனியன் சென்று குடியேறிய ஆயிரக்கணக்கான அமெரிக்க குடும்பங்கள் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற தகவல்கள் திட்டமிட்டே மறைக்கப் படுவதால், ஊடகங்களும் அதிக சிரத்தை எடுத்து ஆராய்வதில்லை. சோவியத் யூனியனில் குடியேற்றப்பட்ட அமெரிக்கர்களின் காலனியை பொறுப்பெடுத்தவர், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பொறியியலாளர் என்பதால் தான், எனக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிய வந்தன.

இன்றைய ரஷ்யாவில், சைபீரியப் பகுதியில் அமைந்துள்ளது கெமெரோவோ (Kemerovo) மாநிலம். இந்த மாநிலத்தில் "குஸ்பஸ் (Kuzbass) அபிவிருத்தி திட்டம்" என்ற பெயரில் ஒரு காலனி, மேற்கத்திய நாட்டவரின் உழைப்பில் உருவாகியது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்ற பின்னர், மேலைத்தேய கம்யூனிஸ்டுகளின் ரஷ்யா மீதான ஆர்வம் அதிகரித்தது. பலர் சமதர்ம புரட்சி நடந்த பூமியை ஒரு முறை தரிசித்து விட்டுச் சென்றனர். இதே நேரம், புதிய சோஷலிச சமுதாயத்தை கட்டி எழுப்ப, தம்மாலான உதவிகளை செய்யவும் விரும்பினார்கள். சோவியத் யூனியனில், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த குடியேறிகள் நிர்வகிக்கும் தொழிலகத்தை உருவாக்கும் திட்டம், ஒரு சிலரால் முன் மொழியப் பட்டது. William D. Haywood J.H.Bayer; T.Barker; Herbert S.Calvert, Sebald J. Rutgers ஆகியோரே அந்த திட்டத்தின் முன்னோடிகள். 22-10-1921 அன்று, இவர்கள் லெனினுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தகுதி வாய்ந்த தொழிலாளர்கள், முகாமையாளர்கள், பொறியியலாளர்கள், தமது நிபுணத்துவத்தை சோவியத் பொருளாதார கட்டமைப்பிற்கு வழங்குவதே குறிக்கோள் ஆகும்.

லெனினின் நம்பிக்கைக்குரிய நெதர்லாந்து கம்யூனிஸ்டான ருத்கேர்ஸ் தலைமையில் அந்த திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டது. அமெரிக்க கூட்டாளிகள், தமது நாட்டில் இருந்து ஆர்வலர்களை திரட்டிக் கொடுத்தனர். ஆர்வமுள்ள அமெரிக்கர்களை திரட்டுவதற்காக, "Kuzbass, an opportunity for workers and engineers" என்றொரு கைநூல் வெளியிடப் பட்டது. 8 ஏப்ரல் 1922 அன்று, ஆண்களும், பெண்களுமாக 68 பேர் முதன்முதலாக கெமெரோவோ வந்து சேர்ந்தனர். அவர்களில் பலர், தொழில்நுட்ப கல்வி கற்ற அனுபவசாலிகள். 13 மே, இரண்டாவது பிரிவாக 101 அமெரிக்கர்கள் நியூ யார்க் நகரில் இருந்து புறப்பட்டனர். அதே வருடம், Kuzbass Bulletinஎன்றொரு மாதாந்த சஞ்சிகை, அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் வெளியிடப் பட்டது. ஆரம்பக் கட்டத்தில், சுமார் இரண்டாயிரம் அமெரிக்கர்களும், 150 மேற்கு ஐரோப்பியர்களும் குடியேறி இருந்தனர். அதில் ஐம்பது பேர் டச்சுக்காரர்கள். 1926 ம் ஆண்டுக்குப் பின்னர், நிர்வாகம் ரஷ்யர்களின் கைகளுக்கு மாறிய பின்னர், 500 மேலைத்தேய நாட்டவர் மட்டுமே நிரந்தரமாக தங்கி விட்டிருந்தனர். எஞ்சியவர்கள் புதிய நிர்வாகத்துடன் முரண்பட்டு, சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர்.

சமதர்ம சமுதாயத்தில் நம்பிக்கை கொண்ட வெளிநாட்டவரை கவர்ந்திழுப்பது, முதலாளித்துவ நாடுகளின் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்திக் கொள்வது, இவையே லெனினின் நோக்கமாக இருந்தது. அதனால், கெமெரோவோ குடியேற்றம்,மாஸ்கோவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக இயங்க விடப் பட்டது. "சுதந்திர தொழிற்துறை குடியேற்றம்" என்பதுவே, அந்த திட்டத்தின் பெயராக இருந்தது. சைபீரியாவின் பெறுமதி மிக்க கனிம வளங்களை பயன்படுத்தி, ஒரு இரசாயன தொழிற்சாலை அமைக்கப் பட்டது. முழுக்க முழுக்க மேலைத்தேய நாட்டவரின் நிர்வாகத்தின் கீழ் உற்பத்தி நடைபெற்றது. அனுபவம் வாய்ந்த திறமைசாலிகளால் நடத்தப் பட்டதால், தொழிலகம் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில், குடியேற வந்த குடும்பங்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது, முதலீட்டுக்கு பணம் சேகரிப்பது போன்ற பிரச்சினைகள் காணப்பட்டன. இருப்பினும் காலப்போக்கில் அவையெல்லாம் நிவர்த்தி செய்யப் பட்டன. லெனின் மரணமடையும் வரையில், தொழிற்துறை எந்தவித இடையூறும் இன்றி நடந்து கொண்டிருந்தது.

1924 ல், லெனினின் மரணத்திற்குப் பிறகு, காலனியை தலைமை தாங்கிய ருத்கெர்ஸ், சுகயீனம் காரணமாக நெதர்லாந்துக்கு திரும்ப வேண்டி நேரிட்டது. அவருக்குப் பதிலாக நியமிக்கப் பட்ட ப்ரோங்கா வின் நிர்வாகம் சிறக்கவில்லை. அடுத்த வருடம் அவரும் காலமாகி விட்டார். இதே நேரம், மாஸ்கோவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் அழுத்தங்கள் அதிகரித்தன. நிர்வாகத்தில் ரஷ்யர்களின் தலையீடு காரணமாக ருத்கெர்ஸ் அதிருப்தி கொண்டிருந்ததாக தெரிகின்றது. புதிதாக வந்த ரஷ்ய பொறியியலாளர்கள் மத்தியில் அலட்சியப் போக்கும், திறமையின்மையும் காணப் பட்டதாகவும் குறைப் பட்டுள்ளார். ஐந்து வருடங்கள் மட்டுமே சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த மேற்கத்திய நாட்டவரின் காலனி, அதற்குப் பிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. தனது கடைசிக் காலத்தில் நெதர்லாந்திலேயே தங்கி விட்ட ருத்கெர்ஸ் எழுதிய சுயசரிதைக் குறிப்புகள், இன்றைக்கும் ஆம்ஸ்டர்டாம் சமூக விஞ்ஞான ஆய்வு நிலையத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

முகாமைத்துவ மாற்றத்தால் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, பெருமளவு மேற்கத்திய நாட்டவர்கள் காலனியை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால், காலனியின் வீழ்ச்சிக்கு காரணம், "ஸ்டாலினிச களையெடுப்பு" என்று, சில மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நிபுணர்களின் பங்களிப்பில் உருவான இரசாயன தொழிற்சாலையானது, கெமெரோவோ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், எல்ட்சினின் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம், தனிமைப் படுத்தப் பட்ட சைபீரிய மாநிலமான கெமெரோவோ பொருளாதாரம் வளர்ந்தது. அதற்கு காரணம், கொர்பெஷோவின் சீர்திருத்தத்தை எதிர்த்த ஆர்மன் துலயேவ் கவர்னராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தமை தான். இன்றைக்கு புட்டினின் அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டாலும், 2003 ம் ஆண்டு வரையில் ஒரு கடும்போக்கு கம்யூனிஸ்டாக கொள்கையை விட்டுக் கொடாதவர். முன்னாள் ரயில் போக்குவரத்து துறை ஊழியர் என்பதால், சிறுவர்களுக்கான ரயில் போக்குவரத்து சேவை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதாவது, சீருடை அணிந்த சிறுவர்கள், சிறிய ரக ரயில்களை தாமாகவே இயக்கிப் பழகுகின்றனர். இதற்கென நாலு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதையும், குட்டி ரயில் நிலையங்களும் அமைக்கப் பட்டுள்ளன.
Sunday, November 13, 2011

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர்மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர்மன் நாட்டின் தெருக்கள் பலவற்றிற்கு இவர் ஞாபகார்த்தமாக பெயரிடப் பட்டுள்ளது. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய்ய எத்தனித்தது. 1939 ம் ஆண்டு. இரண்டாவது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்கமாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன்று வருகை தந்திருந்தார். NSDAP கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, பிற்பகல் 9 .20 க்கு ஒரு குண்டு வெடிக்கின்றது. அந்த மண்டபத்தில் அரைவாசி சேதமாகியது. எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். ஹிட்லர் எங்கே? குண்டு வெடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு, புறப்பட்டு சென்று விட்டான். திட்டமிட்ட படி, அன்று ஹிட்லர் மட்டுமல்ல, கோயபல்ஸ் கூட கொல்லப் பட்டிருந்தால், ஒரு உலகப்போர் தடுக்கப் பட்டிருக்கும்.

மிகவும் துணிச்சலாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து, நேரம் கணித்து பொருத்திய மாவீரனின் பெயர் யொஹன் கெயோர்க். 4 -1 -1903 அன்று, ஒரு ஏழை உழைக்கும் வர்க்க குடும்பத்தில் பிறந்த தச்சுத் தொழிலாளி. ஒரு கம்யூனிஸ்ட். கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த யொஹான், அங்கே தான் நேரக் கணிப்பு வெடிகுண்டு செய்யும் கலையை கற்றுக் கொண்டான். மியூனிச் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி விட்டு தப்பி ஓடும் பொழுது, சுவிட்சர்லாந்து எல்லையில் வைத்து பிடிபட்டான். கெஸ்டபோ இரகசியப் பொலிசாரின் சித்திரவதை காரணமாக, குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டான். அதன் பிறகு, டாஷவ் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டு சிறை வைக்கப் பட்டான். நேச நாடுகளின் படையணிகள் ஜெர்மனியை கைப்பற்றிய நேரம், ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர், யொஹான் சுட்டுக் கொல்லப் பட்டான்.

யொஹான், தலைமறைவாக இயங்கிய சிவப்பு முன்னணி போராளிகளின் அமைப்பு (Rotfrontkämpferbund) என்ற ஆயுதபாணி இயக்கத்தின் உறுப்பினர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு அது. நாஜிக் கட்சிக் குண்டர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். "நாஜிக் கட்சிக் கூட்டத்தில் ரகளை செய்த, தெருச் சண்டையில் ஈடுபட்ட மார்க்சிஸ்டுகள்" பற்றி, ஹிட்லரும் தனது "மைன் கம்ப்" நூலில் எழுதியுள்ளான். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றதும் செய்த முதல் வேலை, நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளை பிடித்து சிறையில் அடைத்தது தான். ஜெர்மன் நாடாளுமன்றம், இனந் தெரியாதவர்களால் எரிக்கப் பட்ட சம்பவத்தை அதற்கு சாட்டாக பயன்படுத்தினான். பெர்லினில் தங்கியிருந்த வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளும் கைது செய்யப் பட்டனர். பிற்காலத்தில் பல்கேரியாவின் ஜனாதிபதியான, டிமித்ரோவும் அவர்களில் ஒருவர்.

ஹிட்லரை கொலை செய்யும் நோக்குடன் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. பிற்காலத்தில், இராணுவத்திற்குள் நடந்த சதியை மையமாக வைத்து, Valkyrie என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளியானது. உலகப்போர் முடியும் தறுவாயில், 1944 ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு பற்றி உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளது. ஆனால், 1939 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி எந்தவொரு சரித்திர நூலிலும் நீங்கள் வாசித்திருக்க சந்தர்ப்பமில்லை. ஹிட்லரின் காலத்தில் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் அசைபோடும் ஊடகங்களும் அது பற்றிப் பேசுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், (முதலாளித்துவ) மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால், கம்யூனிஸ்டுகளின் ஹிட்லர் மீதான தாக்குதல் பற்றிய தகவல்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

சரித்திர ஆசிரியர்களினதும், ஊடகங்களினதும் ஒட்டுமொத்த புறக்கணிப்புக்கு காரணம் என்ன? தாக்குதல் நடத்திய யொஹான் எல்சர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதாலா? நாசிஸ கொடுங்கோன்மைக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் நடத்திய ஆயுதப் போராட்டம் குறித்து, உலகம் அறிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? எது எப்படி இருந்த போதிலும், சமூகப் பொறுப்புணர்வு இதனால் மறைக்கப் படுகின்றது. யொஹான் எல்செர் எதற்காக ஹிட்லரை கொலை செய்யத் திட்டமிட்டான்? "எனது செயல் மூலம், மேலதிக இரத்தக் களரியை, மனிதப் பேரழிவை தடுத்து நிறுத்த விரும்பினேன்." இது யொஹான் எல்சரின் வாக்குமூலம். அந்த தீர்க்கதரிசனம் வெகுவிரைவில் சரியென மெய்ப்பிக்கப் பட்டது. குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் தப்பிய ஹிட்லரினால், இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அதுவரை உலகம் காணாத மனிதப் பேரழிவு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான சோஷலிச நாடுகளில்,"எதிர்கால உலகில் போர்களை இல்லாது ஒழிப்பதற்காக, நாம் இன்று போராடுகின்றோம்" என்று பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது. "Ich habe den krieg verhindren wollen" (நான் யுத்தம் வருவதை தடுக்க விரும்புகிறேன்.)- Johann Georg Elser

யொஹான் எல்சர் பற்றிய விபரங்கள் ஜெர்மன் மொழியில் மட்டுமே காணப்படுகின்றன.

Thursday, November 10, 2011

அடிமை வாழ்வுக்கு அவசியமான அதிர்ஷ்ட எண்கள்


எண் சோதிட நம்பிக்கையாளர்கள், மியான்மர் (பர்மா) நாட்டின் முன்னாள் கொடுங்கோல் சர்வாதிகாரி "எம்மவர்" என்று கூறிப் பெருமைப் படலாம். நியுமரலோஜி அல்லது எண்சோதிடம் என்று அழைக்கப்படும் சாத்திரத்திற்கும், பர்மாவின் சர்வாதிகாரிக்கும் என்ன தொடர்பு? உலகிலேயே பர்மாவில் மட்டும் தான், எண்சோதிடம் "தேசிய சாஸ்திரமாக" ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தது.

தேசத்தை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த சர்வாதிகாரி ஜெனரல் நீவின், எண் சோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஒருவர். அவரது அதிர்ஷ்ட இலக்கம் ஒன்பது என்பதால், அரச அலுவல்களில் எல்லாம் அந்த இலக்கம் வரும். சிறுபான்மை இன மக்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவிக்கும் பொழுதும், "கூட்டெண் ஒன்பது" வருமாறு பார்த்துக் கொள்வார் போலும். எண் சோதிடம் குறித்து எழுதப்பட்ட எந்த நூலிலும், இந்தத் தகவல் வந்திராது. எமது சோதிட அறிஞர்கள், பர்மா சர்வாதிகாரியின் ஆதரவை கண்டு கொள்ளாதது போல நடிக்கின்றனர். சோதிடம் கேட்க வருபவர், "பில்கேட்ஸ் மாதிரி" வர விரும்புவானே ஒழிய, பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் மாதிரி வர விரும்புவானா? அப்படி வர விரும்புகிறவர்களுக்கு இரகசியமாக சாஸ்திரம் பார்க்கிறார்களோ, என்னவோ?

"எண்கள் எமது துணையை, நண்பர்களை மட்டுமல்ல வெற்றி- தோல்விகளையும் தீர்மானிக்கின்றன." இவ்வாறு நம்பும், என்னையும் நம்ப வேண்டுமென்று வற்புறுத்தும் பலரை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு எண் சோதிடத்தின் அபத்தங்களை எடுத்து விளக்கியும், சிந்திக்க வைக்க முடியாதளவு, அந்த மூட நம்பிக்கை அவர்களை ஆட்கொண்டுள்ளது. கடந்த இருபது வருடங்களாக, ஐரோப்பாவில் வாழும் காலங்களில், பல்வேறு நாட்டவர்களிடமும் எண் சோதிடம் குறித்து விசாரித்தேன். தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும், அப்படி ஒன்று உலகில் இருப்பதே தெரியவில்லை. அதிலும் குறிப்பாக, ஆங்கில எழுத்துகளுக்கு (அல்லது லத்தீன் எழுத்துகளுக்கு) மட்டுமே "அந்த மந்திர சக்தி" இருப்பதாக எண் சாஸ்திரம் கூறுகின்றது. ஐரோப்பாவில், பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் லத்தீன் எழுத்துகளை பாவிக்கின்றன. அந்த மக்களுக்கெல்லாம், தமது மொழிகளின் சக்தி தெரியவில்லை. நினைக்கவே பரிதாபமாக உள்ளது.

பண்டைய கால வரலாற்றைப் படித்த பொழுது, சுமேரியர்களே எண் சாஸ்திர அறிவியலை முதன் முதலில் உருவாக்கியவர்கள், என்று அறிந்து கொண்டேன். ஆனால், சுமேரியர்களின் மொழியில் பாவிக்கப்பட்ட வரி வடிவங்கள், இலக்கங்கள் வேறு. அவற்றை தற்காலத்தில் எந்தவொரு மொழியுடனும் ஒப்பிட முடியாது. இந்த தகவலை, தமிழில் எழுதப்பட்ட எந்தவொரு எண் சோதிடப் புத்தகத்திலும் காண முடியாது. அவர்கள் இதனை, முழுக்க முழுக்க மேலைத்தேய இறக்குமதியாகவே காட்ட முனைகின்றனர். சந்தேகமும் அது தான். அதாவது, தமிழர்கள் மனதில், மேற்கத்திய கலாச்சாரத்தை திணிப்பதே எண் சோதிடத்தின் தலையாய நோக்கம். "ஆங்கில மொழி, கலாச்சாரமே சிறந்தது." எனும் காலனிய கால கலாச்சார திணிப்பின் நீட்சியாகவே, எண் சாஸ்திரத்தை கருதுகின்றேன். பாமரர் முதல் படித்தவர் வரை, எவ்வாறு மூளைச் சலவை செய்யப் படுகின்றனர், என்று ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.

எண் சாஸ்திரம் பார்த்து பெயர் வைப்பவர்களின் கோமாளிக் கூத்துகளைப் பார்த்தால், அவர்கள் தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்வது தெரியும். தமிழில் ஒரு மாதிரியும், ஆங்கிலத்தில் வேறு மாதிரியும் அழைக்க வேண்டியிருக்கும். ஆங்கிலத்தில் கூட, அவர்களது பெயரை அப்படியே உச்சரிக்க முடியாது. அதனால் பெயரே மாறி விடுகின்றது. இது ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகும். அடிமைத்தனம் இன்று மனதளவில் இருந்தாலும், காலனியாதிக்க காலத்தில் அது பலவந்தமாக திணிக்கப் பட்டது. எனது நண்பர் ஒருவர் சுரினாம் நாட்டிலிருந்து வந்த ஒரு நண்பரின் பெயர் "கான்பட்"(Ganpat). அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த, இந்து சுரினாமியர். உண்மையில் அவரது பெயர் கணபதி என்றிருக்க வேண்டும். ஆனால், அவரது முப்பாட்டன் மாரை கூலிகளாக அழைத்து சென்ற ஒல்லாந்துக்காரர்கள், தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு பெயரை மாற்றி விட்டார்கள். இவ்வாறு தான் சுரினாம் இந்தியர்களின் பெயர்கள், டச்சு மயப்பட்டு காணப்படுகின்றன. அந்தப் பெயர்கள் இன்னமும் தொடர்கின்றன.

ஆங்கில எழுத்துகளை கொண்டு நமது பெயர்களை எழுதினால் தான், அதிர்ஷ்ட தேவதை எட்டிப் பார்ப்பாள். தமிழிலும், பிற மொழிகளிலும் பெயர்களைக் கொண்டவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். அவர்களால், அதிர்ஷ்ட எங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றியமைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. பெரும்பாலான சீனர்களும், ரஷ்யர்களும் தமது மொழியின் வரி வடிவங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த சமூகங்களில் இருந்து விஞ்ஞானிகளும், அறிஞர்களும், சிறந்த வர்த்தகர்களும் உருவாகவில்லையா?

எண் சோதிட நம்பிக்கையாளர்கள் பாவிக்கும் "ஆங்கில எழுத்துகள்" கூட, உண்மையில் ஆங்கில மொழிக்கு சொந்தமானதல்ல. அவை லத்தீன் மொழியில் இருந்து கடன் வாங்கப் பட்டவை. லத்தீன் எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளை பார்த்து தான் வடிவமைக்கப் பட்டன. இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள கிரேக்க எழுத்துகள் சற்று வித்தியாசமாக இருக்கும். சில நேரம், ரஷ்ய எழுத்துக்கள் போலிருக்கும். ஆனால், கிரேக்க எழுத்துகளை பயன்படுத்தி நமது பெயரை எழுதினால், அவற்றிற்கு அதிர்ஷ்ட எண்கள் துணை புரிய மாட்டா! ஒரு காலத்தில், லத்தீன் மொழியில் மட்டுமே ஆண்டவரை வணங்க வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் போதித்தது. ஏனெனில், கடவுளுக்கு லத்தீன் மொழி மட்டுமே புரியுமாம். மத்திய காலத்தில், மக்களை ஏய்க்க, பாதிரிகள் சொன்ன கட்டுக் கதைகளை, எண் சோதிட ஆராய்ச்சியாளர்கள் எம் மேல் அவிழ்த்து விடுகின்றனர்.

பிறந்த தேதி, மாதம், வருடம், ஆகிய இலக்கங்களை கூட்டி பலன் சொல்லுமளவுக்கு எண்சாஸ்திரம் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். "நீங்களாகவே வீட்டிலேயே செய்து பாருங்கள்" என்று வர்த்தகர்கள் விளம்பரம் செய்வதைப் போல, மக்கள் மயப் படுத்தப்பட்ட சாஸ்திரம் இது ஒன்று தான். மற்ற எல்லா சாஸ்திரங்களையும், அது குறித்து படித்த பண்டிதர்களிடம் மட்டுமே, காணிக்கை செலுத்தி அறிந்து கொள்ளலாம். (அதிலும் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்றும், இந்து மதம் கூறுகின்றது.) அதற்கு மாறாக, எண் சோதிடத்தில், ஒன்பது இலக்கங்களின் பலன்களை மட்டும் சிறிது படித்து விட்டால் போதும்.

அது சரி, ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியன வெவ்வேறு நாட்காட்டிகளில் (கலண்டர்) வேறு இலக்கங்களில் வருமல்லவா? கிரகோரியன் கலண்டர், இந்து கலண்டர், இஸ்லாமியக் கலண்டர், சீனக் கலண்டர், திருவள்ளுவர் கலண்டர் என்று பலவகையான நாட்காட்டிகள் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளனவே. ஈரானில் இஸ்லாமியக் கலண்டர் தான் உத்தியோகபூர்வமானது. நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் பிறந்திருப்போம். ஆனால், அதைக் குறிப்பிடும் எண்கள் (திகதி, மாதம், வருடம்) மாறுபடுமல்லவா? நாம் இன்றைக்கு பாவிக்கும் ஐரோப்பிய- கிறிஸ்தவ கலண்டர் மட்டுமே சரியானது என்று வாதிடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

கிரகோரியன் என்ற கிறிஸ்தவ மதகுரு தான், நாம் இன்றைக்கு பாவிக்கும் கலண்டரைக் கண்டுபிடித்தவர். இது பயன்படுத்துவதற்கு இலகு. ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், ஒரு காலத்தில் எமது பூமியின் முக்கால்வாசி நாடுகளை ஆட்சி செய்தார்கள். அங்கெல்லாம் அவர்கள், கிரகோரியன் கலண்டரின் பாவனையை அறிமுகப் படுத்தினார்கள். ஐரோப்பாவை மையப்படுத்தி உலகமயமாகிய சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக் கொண்டது. விஞ்ஞான, அறிவியல் கண்டுபிடிப்புகளும், அந்தக் கலண்டரின் பாவனையை சர்வதேச மயப் படுத்தின. நான் சந்தித்த வெள்ளையின கிறிஸ்தவ மதப்பற்றாளர் ஒருவர் கூறினார்: "இன்று உலகம் முழுவதும், கிறிஸ்தவ கலண்டரைத் தானே பயன்படுத்தின்றனர்? ஆகவே கிறிஸ்தவ மதம் மட்டுமே ஆண்டவரினால் இரட்சிக்கப்பட்ட உண்மையான மதம் என்பதை நிரூபிக்க இது போதுமானதல்லவா?" அவர் அதிகம் படித்திராத சாதாரணக் குடிமகன் தான். உலக நாடுகள் முழுவதும், மறுக்கவியலாது ஐரோப்பிய மையவாதக் கருத்துகளே கோலோச்சுகின்றன.

"முனிவர்களால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சாஸ்திரங்கள்" என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதற்கு, எண் சாத்திர அபிமானிகளாலும் முடியும். சுமேரியர்கள் கண்டுபிடித்த சாஸ்திரம் இதுவென்று விளம்பரம் செய்யலாம். இதிலே என்ன பிரச்சினை என்றால், எமது பெயர்களை சுமேரிய எழுத்துகளில் எழுதிப் பார்த்து பலன் சொல்வது அவர்கள் நோக்கமல்ல. சுமேரியர் பயன்படுத்திய கலண்டர், நமது காலத்து கிரகோரியன் கலண்டர் போன்று நுட்பமாக கணிக்கப் பட்டுள்ளது. அதாவது 365 நாட்களும், லீப் வருடமும் பற்றிய அறிவு சுமேரியர்களுக்கும் இருந்தது. சுமேரிய கலண்டரின் படி, எமது பிறந்த திகதியும், வருடமும் மாறுபடலாம். ஆனால் இங்கே அதுவல்ல பிரச்சினை. எண் சாத்திரப் பண்டிதர்கள், இது மேற்குலகில் இருந்து வந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பு என்றே விதந்துரைக்கின்றனர்.

மேற்குலகில் இருந்து, எந்தக் குப்பையை இறக்குமதி செய்து விற்றாலும், அதனை நம்பி வாங்குவது எம்மவர் பண்பாடு. எண் சோதிட விற்பன்னர்களும், அந்த நம்பிக்கையை வைத்து தான் "விஞ்ஞான ஜோஷ்யம்" சொல்கின்றனர். பண்டைய காலத்தில், சுமேரியரின் எண் சோதிடம் குறித்து, கிரேக்கர்களும், அரேபியர்களும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. சுமேரியா இன்றைய இராக்கை சேர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாமிய மத நம்பிக்கையின் படி, இவை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்பதால், அரேபியர்கள் அதிலே அதிக அக்கறை செலுத்தவில்லை. பிற்காலத்தில், அரேபியர் எழுதி வைத்த குறிப்புகளை பிரதியெடுத்த ஐரோப்பியர்களும் அது குறித்து அறிந்து கொண்டனர். ஆனால், எண்களை நம்பும் சோதிடத்தை விவிலிய நூல் எதிர்த்ததால், கிறிஸ்தவ ஐரோப்பியர்களுக்கு அது தேவைப் படவில்லை. ஆங்கிலேயர்கள், தந்திரமாக அதனை தமிழர்களுக்கு விற்று விட்டார்கள். எண் சோதிடம் இன்று, தமிழர்கள் மத்தியில் சூடாக விற்பனையாகும் பண்டமாக உள்ளது. தமது மக்களுக்கு தேவையற்ற மூட நம்பிக்கைகளை, காலனிய நாடுகளை சேர்ந்த மக்கள் மனதில் புகுத்தி விடுவது ஐரோப்பியருக்கு கை வந்த கலை.

Saturday, November 05, 2011

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப் படுகின்றனர். "போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர். அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது. முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.
---------------------------------------------------
Film: Master of Zen 達摩祖師(1994)

Country: Hong Kong
Circuit: Mandarin-Rex
Genre: Historical Drama
Rating: II (Hong Kong)
Theatrical Run: 02/26/1994 - 03/23/1994
Director : Brandy Yuen Jan-Yeung
---------------------------------------------------------
Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6

Part 7

Part 8

Part 9

Part 10

Part 11

Friday, November 04, 2011

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!


இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது.

போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் பற்றிய திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து சீக்கிய தேசியவாதிகள், பகத்சிங்கை தமது நாயகனாக தூக்கிப் பிடிக்கின்றனர். பல வரலாற்று நாயகர்களின் பாத்திரம், அவர்களின் கொள்கைகளுக்கு முரணாக திரிபுபடுத்துவது உலகெங்கும் நடப்பது தான். இந்து மத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜராஜ சோழன், தமிழ் தேசியவாதிகளால் மாபெரும் தமிழனாக புகழப் படுகிறான். போதி தர்மர், பௌத்த மதத்தை பரப்பிய மதகுரு என்ற உண்மை மறைக்கப் பட்டு வருகின்றது. 7 ஆம் அறிவு என்ற ஜனரஞ்சக சினிமாவின் புண்ணியத்தால், "ஒரு வீரத் தமிழனாக" மறு அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழர்கள் மறந்து விட்ட போதி தர்மனை அறிமுகப் படுத்தக் கிளம்பிய சினிமா, அந்த மகானின் வரலாற்றை திரிபு படுத்த வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றையும், நிகழ்கால கற்பனைக் கதையையும் கலந்து தயாரிப்பது சினிமாவில் வழமையானது தான். Davinci code என்ற ஆங்கிலத் திரைப்படம் கூட, அவ்வாறான கதை தான். அதிலே, வரலாற்றுக்கு இசைவாக நிகழ்கால கற்பனையை அமைத்திருப்பார்கள். ஆனால், 7 ம் அறிவு கூறும் 6 ம் நூற்றாண்டு வரலாற்றுக்கும், நிகழ்கால சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்புமில்லை.

7 ஆம் ஆறிவு சினிமா பற்றி வரும் கடுமையான விமர்சனங்கள், அந்த படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 7 ம் அறிவு, ஒரு அபத்தமான கதையை வைத்து எடுக்கப் பட்டுள்ளமை அவர்களுக்கே தெரிகின்றது. அதனால் இப்போது, படத்திலே வரும் ஈழ ஆதரவு வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுகின்றனர். "தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக" ஜெயலலிதாவை ஆதரிக்குமாறு கோரியவர்கள் தான், இந்த நியாயத்தையும் முன் வைக்கிறார்கள்.

ஜெயலலிதா முதல் முருகதாஸ் வரை, சில வசனங்களை மட்டுமே பேசி தமிழனை ஏய்க்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை ஓட்டுகளையும், முருகதாசுக்கு பெட்டி நிறைய பணத்தையும் அள்ளிக் கொடுப்பதற்கு, குறிப்பிட்ட சில வசனங்களே போதும். இதெல்லாம் ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வரும் கூத்துகள் தான். ஈழத்தில் தமிழன் செத்துக் கொண்டிருப்பான். தமிழகத்தில் அதைக் காட்டியே பிழைப்பு அரசியல் நடத்துவார்கள். 7 ஆம் அறிவு சினிமாவும், ஈழத் தமிழரின் பிணங்களைக் காட்டி காசு வசூல் பண்ணுகின்றது.

போதி தர்மரை தமது காவிய நாயகனாக கொண்டாடத் தொடங்கியிருக்கும் தமிழ் உணர்வாளர்கள்,அவர் ஒரு "தமிழ் பௌத்த பிக்கு" என்ற உண்மையை கூறுவதில்லை. ஏழாம் அறிவு திரைப்படமும் இந்த தகவலை வேண்டுமென்றே மறைத்துள்ளது. போதி தர்மர் பௌத்த மதத்தை சேர்ந்த மாமேதை என்பதாலும், சீனாவில் பௌத்த மத பிரசங்கம் செய்ததாலும் தான் உலகப் புகழ் பெற்றார். பௌத்த மதத்தின் ஒரு கிளையான, ஜென் (Zen) பிரிவை தோற்றுவித்தவரும் அவரே. இன்றைக்கும் சீனா, ஜப்பான் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் ஜென் பௌத்தர்கள் போதி தர்மரின் தத்துவ போதனைகளை கற்கின்றனர். 7 ஆம் அறிவு திரைப்படம், தமிழர்களுக்கு போதி தர்மரை அறிமுகப் படுத்துவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, மேற்கத்திய நாடுகளில் நன்கு அறிமுகமானவர்.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும், அவரின் போதனைகள் அடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இந்த நூல்கள் யாவும், மேலைத்தேய நகரங்களில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. சீனாவில் மட்டுமல்ல, மேலைத்தேய நாடுகளில் கூட, தலைசிறந்த தத்துவ அறிஞராக போற்றப்படும் போதி தர்மரை, ஏழாம் அறிவு திரைப்படம் அவமானப் படுத்தியுள்ளது.

போதி தர்மரை குங்பூ ஆசிரியராகவும், சித்த வைத்தியராகவும் மட்டும் காட்டுகின்றது. போதி தர்மரின் போதனைகளை தேடிப் படிக்கும் தமிழன் அறிவாளியாகி விடுவான். அதன் பிறகு, ஒரு மாமேதையை தமிழகம் மறந்த காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கி விடுவான். அதற்கு இடம் கொடுக்கலாமா? தமிழனின் ஆறாவது அறிவை மழுங்கடிப்பது தானே, ஏழாவது அறிவு தயாரித்தவர்களின் நோக்கம்? புத்திசாலித் தமிழன் ஆபத்தானவன். அதனால், சிந்திக்கும் திறனன்ற "வீரத் தமிழன்" தான் அவர்களுக்கு தேவை.

"போதி தர்மரை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?" இந்தக் கேள்வியை ஒரு ஆவணப் படத்தில் வருவது போன்று, திரைப் படத்தில் கேட்கின்றார்கள். தமிழர்கள் எல்லோரும் தெரியாது என்று கையை விரிக்கிறார்கள். அதே நேரம், சீனர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அதிலும் "ஒ யா.. குங்பூ மாஸ்டர்" போன்ற பதில்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். மேற்கொண்டு பேசுவதற்கு சீனர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அதற்கு இடம் கொடுத்தால், சீனர்களை தமிழர்களை அழிக்க தேடி வரும் வில்லன்களாக காட்ட முடியுமா? விசாரணையை அத்துடன் நிறுத்திக் கொண்டு, சூர்யாவின் சர்க்கஸ் வித்தை, ஸ்ருதிஹாசனின் மரபியல் ஆராய்ச்சி என்று கதை நகருகின்றது.

சரி, அவர்கள் தான் விசாரிக்கவில்லை, ஒரு சராசரித் தமிழனுக்கு தேடல் இருக்காதா? அந்த அளவுக்கு தமிழன் புத்திசாலி இல்லை என்று தெரியாமலா, முருகதாஸ் ஏழாம் அறிவு படம் எடுத்திருப்பார்? முதலில், போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்தே, அவரை தமிழன் என்று டைரக்டரால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. போதி தர்மர், பௌத்தராக மதம் மாறிய பிராமணர் என்று, அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பார்ப்பனர்கள் என்போர் வடக்கே இருந்து வந்த ஆரியர்கள்," என்ற திராவிட கற்பிதங்களினால் உருவான தமிழ் தேசியம், பிராமண போதி தர்மரை தமிழர் என்று நம்புவது எங்கேயோ இடிக்கிறது. ஏழாம் அறிவு திரைப்படம் கூறுவது போல, "போதி தர்மர் ஒரு பல்லவ இளவரசர்" என்ற கூற்று எங்கேயும் நிரூபிக்கப் படவில்லை. இதனை வெறுமனே சினிமாக்காரர்களின் வரலாற்றுத் திரிபாக மட்டும் கருத முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் திணிக்கும் ஆதிக்க அரசியலும் அதனுள் அடங்கியுள்ளது.

ஏழாம் அறிவு திரைப்படத்தில், போதி தர்மரின் மரபணு கொடுத்து உயிர்ப்பிக்கப் பட்ட கதாநாயகன் பேசும் வசனம் ஒன்று : "மதமாற்றம், இனமாற்றம் காரணமாக தமிழர்கள் தமது அறிவியல் செல்வத்தை இழந்து விட்டார்கள்." போதி தர்மர் காலத்து அறிவியல் பிறகு எப்படி காணாமல் போனது? அதனை யார் அழித்தார்கள்? தமிழர்களை யார் மதமாற்றம், இனமாற்றம் செய்தார்கள்? மரபணுவால் உயிர்ப்பிக்கப் பட்ட போதி தர்மரின் மறு அவதாரத்திற்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.

தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மதங்களாக இருந்தன. தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் பௌத்த மதப் பின்னணியில் எழுதப் பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் வானாந்தரங்களில் வாழ்ந்த காலத்தில், பீகாரில், நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்தது. (கி.மு. 5 - கி.பி. 1193) அதில் கல்வி கற்பதற்கு சீனாவில் இருந்தும் மாணவர்கள் வந்தனர். ஏழாம் அறிவு திரைப்படத்தில் காட்டப்படும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, நாலந்தா பல்கலைக்கழகமும் பௌத்த மத மேற்படிப்புக்காக உருவாக்கப் பட்டவை. அங்கே அறிவியல் பாடங்களும் போதிக்கப் பட்டன.

வடக்கே இஸ்லாமியரான துருக்கிய இனத்தவர்களின் படையெடுப்பினால், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் அறிவியல் செல்வங்களும் அழிக்கப் பட்டன. தெற்கில், இந்துக்களான பல்லவர்களின் படையெடுப்பினால் காஞ்சிபுரத்தின் அறிவுச் செல்வங்கள் அழிக்கப் பட்டன. பல்லவர்கள் பௌத்த, சமண மடாலயங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சமணக் கோயில்களும், பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன. பௌத்த, சமண மதங்களை சேர்ந்த தமிழர்கள், பலவந்தமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

சைவ மத நாயன்மார்களான சம்பந்தரும், சுந்தரரும், திருநாவுக்கரசரும் கட்டாய மதமாற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்கள். தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின.

தமிழர்கள் தமது தொன்மையான அறிவியலை இழந்த வரலாறு இது தான். காஞ்சிபுரத்தில் பௌத்த மத தமிழர்கள் வளர்த்த அறிவுச் செல்வத்தை அழித்த பல்லவ அரச வம்சம்சத்தில், போதி தர்மர் எப்படிப் பிறந்திருக்க முடியும்? இது ஒரு மாபெரும் வரலாற்று மோசடி அல்லவா? தமிழர்களின் எதிரிகளை நல்லவர்களாக காட்டுவதற்காக வரலாற்றை திரிக்கும் ஏழாம் அறிவு, ஈழத் தமிழர்களுக்காக உருகுகிறது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் ஞாபகம் வருகின்றது.

டாவின்சி கோட் திரைப்படம் எடுத்தவர்கள், கிறிஸ்தவ நாட்டை சேர்ந்தவர்கள். அதன் பெரும்பான்மையான பார்வையாளர்களும் கிறிஸ்தவர்கள் தான். இயேசுவின் புதல்வி பற்றி கற்பனை கலந்து படம் தயாரிக்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. டாவின்சி கோட் தயாரித்தவர்கள் நினைத்திருந்தால், நிகழ்கால அரசியளுக்கேற்றவாறு முஸ்லிம்களை வில்லன்களாக காட்டியிருக்கலாம். ஆனால், அந்த திரைப்படத்தின் வில்லன்கள் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ கடும்போக்காளர்களின் எதிர்ப்பை மீறி, திரைப்படத்தை வெளியிட்டார்கள்.

ஏழாம் அறிவு தயாரித்தவர்களுக்கு, அந்த தைரியம் கிடையாது. மரபணு கொடுத்து உயிர்ப்பித்த நவீன போதி தர்மன் யாரை பழிவாங்கத் துடித்திருப்பார்? தமிழ்நாட்டில் பல்லவர்களின் வாரிசுகளை தேடிச் சென்று வேட்டையாடியிருப்பார். போதி தர்மன் எதற்காக, தனக்கு இன்றைக்கும் தெய்வ ஸ்தானம் வழங்கி கௌரவிக்கும் சீனர்களுடன் முரண்பட வேண்டும்?

திரைப்படத்தில் சீன வில்லனின் ஹிப்னோடிச வித்தைகளை கண்டு வியந்த சூர்யாவுக்கு, சுருதிஹாசன் கூறுவார்: "இதுவும் தமிழர்களின் நோக்குவர்மம் கலை. போதிதர்மரால் கொண்டு செல்லப்பட்டது." இதைக் கேட்ட சூர்யா: "எப்பேர்ப்பட்ட துரோகம்" என்று கொதிப்பார். யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், என்பது மரபணுவால் உயிர்ப்பிக்கப்பட்டவருக்கு தெரியாதா?

களரி (குங்பூ), நோக்குவர்மம் (ஹிப்னோடிசம்) போன்ற தமிழரின் தொன்மையான கலைகள், இந்து மன்னர்களான பல்லவர்களின் காலத்தில் தானே புறக்கணிக்கப் பட்டன? அதனால் தானே, இன்றுள்ள தமிழர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை? அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், போதி தர்மர் சொல்லிக் கொடுத்த கலைகளை சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையில்லையா? போதி தர்மர் தென்னிந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவி என்பதை, சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சீனத் திரைப்படத்தை இணையத்திலேயே பார்வையிடலாம்.(Bodhidharma - The Master of Zen) சீனத் திரைப்படத்தில், தென்னிந்தியாவில் இருந்து வந்த போதி தர்மர், தியானத்தையும், குங்க்பூ தற்காப்புக் கலையையும் போதிப்பது விபரமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஏழாம் அறிவு என்ற தமிழ்த் திரைப்படம், போதி தர்மரின் வரலாற்றைத் திரித்து அவரை அவமதிக்கிறது. சுருக்கமாக சொன்னால், "தமிழனுக்கு துரோகமிழைக்கும் தமிழனை வீரனாகக் காட்டுவது" தான் ஏழாம் அறிவின் திரைக்கதை.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் இறுதியில், சூர்யா தமிழனின் உணர்வைத் தூண்டும் வசனங்களை அடுக்குவார். யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததால், தமிழர்களின் அறிவுடைமை இழக்கப் பட்டது. உண்மை தான். ஆனால், போதி தர்மனுக்கு, 6 ம் நூற்றாண்டில் தான் படித்த காஞ்சிபுரம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு தெரியவில்லை. யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சிங்கள இனவெறியர்களினதும், காஞ்சிபுரம் நூலகத்தை எரித்த இந்து மதவெறியர்களினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது.

ஏழாம் அறிவு எடுப்பதற்கு முன்னர், போதி தர்மனை பற்றி ஆராய்ச்சி செய்த டைரக்டர் முருகதாசுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. அதையெல்லாம் சொன்னால், தணிக்கைக் குழுவினர் கத்திரிக்கோல் போட்டு விடுவார்களா? "பக்கத்து நாட்டில் தமிழனை அழித்த ஒன்பது நாடுகளின் துரோகம்" பற்றி சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தைரியமாக அந்த நாடுகளை பெயரிடத் தெரியவில்லை. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் களத்தில் நின்றுள்ளனர். செய்மதிப் படங்களை வழங்கியுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவை தமது தாய்நாடு போன்று நம்பினார்கள். ஒருவர் எமது நம்பிக்கைக்கு எதிராக நடப்பது தான் துரோகம்.

ஏழாம் அறிவு, இந்திய அரசு மீதான விமர்சனங்களை கவனமாகத் தவிர்க்கின்றது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான். "இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதாலும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொப்புள்கொடி உறவுகளாலும்," இந்தியா தமது பக்கம் நிற்கும் என்று ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். உண்மையில், இந்திய மேலாதிக்க நலன்களுக்காக, ஈழத்தமிழர்கள் பொம்மைகளாக ஆட்டி வைக்கப் பட்டனர். சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், ஈழத்தமிழர்களை இந்தியா சார்பானவர்களாக தொடர்ந்து வைத்திருக்கவே விரும்புகின்றது. தமிழகத்தில் சில அதிரடி அரசியல்வாதிகளும், திரையுலக பிரமுகர்களும் பொம்மலாட்டக் காரர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஹாலிவூட்டில் அரசியல் கலந்த ஜனரஞ்சக திரைப் படங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையுடன் எடுக்கப் படுவது இரகசியமல்ல. ஏழாம் அறிவு புகட்டும் தமிழ் இனவுணர்வு சாயம் படத்திலேயே வெளுத்து விடுகின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக திணிக்கத் தெரிந்த இந்து மதமல்லவா? போதி தர்மரை காட்டி, தமிழனின் மூளைக்குள் இந்துத்துவா சிந்தனை திணிக்கப் படுகின்றது. ஏழாம் அறிவு வெறும் பொழுதுபோக்குப் படமல்ல. திரைப்படத்தைப் பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களை வசியப்படுத்தி, இந்திய மேலாதிக்க திட்டங்களுக்கு ஆதரவாக வென்றெடுக்கும் உள்நோக்கம் கொண்டது. அது தான் "நோக்கு வர்மம்". ஒரு திரைப்படம் மூலம், தமிழர்களின் கண்களைக் கட்டும் கண்கட்டி வித்தை.

***************
முன்னைய பதிவு : - "ஏழாம் அறிவு" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வரலாறு