Wednesday, May 12, 2010

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !

அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது. அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து, மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ் ஆகிய நாடுகளும் சுனாமியின் அகோரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். யார் குற்றவாளி?

துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான். பலமான பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை அடிமையாக்க திட்டம் போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம். ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன் யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின் மொத்த அந்நிய/உள்நாட்டு கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.

கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?

இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது. எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். பெரும்பான்மை கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன் கம்யூனிசக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த தீவுகள் மெருகூட்டப்பட்டன. பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.

கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும் பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும் கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.

பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை. பிற்கால இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கிய ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.

முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.

கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது. கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும். ”லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.

கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.

நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன. அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. ”கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.

சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE ) யினுடையது. ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.

எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம் மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.

கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.

கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.

இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் ”டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள். கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.



26 comments:

jai said...

கிரேக்க பிரச்சனைக்கு உலகயுத்த காலத்தில் நாசிகள் திருடியது முதல்,ப்ரிட்டனின் காலனி ஆதிக்கம் வரை காரணம் கண்டுபிடிக்கிறீர்கள்.அப்படியே அலெக்சாந்தர் காலத்துக்கு போய் அலெக்சாந்தர் கொள்ளையடித்ததை இரானுக்கு திருப்பி தரவேண்டும் என கேட்காமல் இருந்தால் சரி.

கிரேக்கத்தை திவாலாக்கியதே உங்கள் தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர்களும்தான்.வீங்கிபெருத்த பொதுத்துறை, வருடா வருடம் கட்டாய ஊதிய உயர்வு, போனஸ், 53 வயதில் 110% சதவிகித சம்பளத்துடன் ரிடையெர்மென்ட், இப்படி அரசு ஊழியருக்கு சலுகை கிடைத்தால் அப்புறம் ஏன் தேசம் திவாலாகாது?இதை ரத்து செய்தால் 3 லட்சம் யூனியன் மெம்பெர்கள் ஏன் வீதிக்கு வந்து போராடமாட்டார்கள்?

யூனியன் மெம்பெர்கள் என்ன வேண்டுமானாலும் போராடலாம்.ஆனால் அவர்களே ஆட்சியை பிடித்து வந்தாலும் ஒன்றும் கிழிக்க இயலாது. பொதுதுறையின் சைசை குறைக்கவேண்டும்,அல்லது யூரோவை விட்டு விலகி திவாலாகவேண்டும் என்ற இரு தேர்வுகள் மட்டுமே கிரேக்கத்திடம் உள்ளது.

Kalaiyarasan said...

நன்றி jai

//53 வயதில் 110% சதவிகித சம்பளத்துடன் ரிடையெர்மென்ட்// இது உலகில் எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. நீங்களே புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறீர்கள். வருடாவருடம் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும் போது, தொழிலாளர்கள் ஊதிய உயர்வும், போனசும் கேட்பதில் என்ன தவறு? லாபம் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வரவில்லை. தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது. அதில் அவர்களுக்கு கிடைக்கும் மிகச் சொற்ப தொகை தான் போனஸ், ஊதிய உயர்வு எல்லாம். முதலாளிகளுக்கு போகும் பங்கு அதை விட பல மடங்கு அதிகம். கிறீஸ் தொழிலாளிக்கு கிடைப்பதை விட அதிக சலுகைகள் ஜெர்மன் தொழிலாளருக்கு கிடைக்கின்றன. உங்களது கருத்தின் படி ஜெர்மனி தான் முதலில் திவாலாகி இருக்க வேண்டும்.

Jai said...

பதிலுக்கு நன்றி கலையரசன்

//இது உலகில் எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை.//

கிரேக்கத்தை தவிர..கிரேக்க அதிபர் அறிவித்த ஒரு சீர்திருத்தம் ஓய்வுபெறும் வயதை 53ல் இருந்து 67 ஆக உயர்த்தியது.இரண்டுமாத சம்பளத்தை போனசாக பெறும் அயோக்கியத்தனத்தை ஒழித்தது.

http://www.dailymail.co.uk/news/worldnews/article-1270415/Collapse-salvation-stark-choice-faced-Greece-faces-26billion-budget-cuts-TWO-years.html#

///வருடாவருடம் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும் போது, தொழிலாளர்கள் ஊதிய உயர்வும், போனசும் கேட்பதில் என்ன தவறு? ///

கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை.அந்த போனசை கடன்வாங்கி கொடுத்த பில்லைதான் இப்ப கிரேக்கம் கட்டவேண்டி இருக்கிறது.போனஸ் கேட்கும்போது இல்லை என சொல்லி இருந்தால் இப்படி துன்பப்படும் நிலை வந்திருக்காது.

//கிறீஸ் தொழிலாளிக்கு கிடைப்பதை விட அதிக சலுகைகள் ஜெர்மன் தொழிலாளருக்கு கிடைக்கின்றன. உங்களது கருத்தின் படி ஜெர்மனி தான் முதலில் திவாலாகி இருக்க வேண்டும்.//

நாம் பேசுவது பொதுதுறையை பற்றி.கிரேக்கத்தில் இருக்கும் அளவுக்கு பெரிய சைஸில் உழைப்பை மறந்து சுரண்டிகொழுக்கும் மோசமான பொதுதுறை ஜெர்மனியில் இல்லை.இருந்திருந்தால் ஜெர்மனியும் திவாலாகி இருக்கும்.

Kalaiyarasan said...

பிரிட்டனின் மோசமான வலதுசாரிப் பத்திரிகையான மெயிலில் இருந்து மேற்கோள் காட்டியமைக்கு நன்றி. உங்களது சிந்தனையோட்டம் அவர்களைப் போலவே இருப்பதில் வியப்பில்லை. பொதுத்துறை லாபம் சம்பாதிப்பதாக ஐரோப்பிய யூனியனுக்கு பொய்க் கணக்கு காட்டியதை பிரபல பிரிட்டிஷ் பத்திரிகைகளே எழுதியுள்ளன. அவ்வாறு பொய்க்கணக்கு எழுத கோல்ட்மன் சக்ஸ் முதலீட்டு வங்கி நிபுணர்கள் உதவியுள்ளார்கள். அதெல்லாம் உங்களது கண்ணுக்கு தெரியாததில் வியப்பில்லை. தொழிலாளருக்கு கிடைக்கும் போனஸ் என்ற "அயோக்கியத்தனத்திற்காக" அழுகின்றீர்கள். ஆனால் பொதுத்துறை நிர்வாகிகள் வருடாந்தம் எவ்வளவு போனஸ் பெற்றுக் கொண்டார்கள் என்பதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒவ்வொரு அரச நிறுவனத்தினதும் தலைமை நிர்வாகிக்கு கிடைத்து வந்த போனஸ், அங்கே வேலை செய்த ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த போனஸ் தொகையை விட பல மடங்கு அதிகம். இப்போது சொல்லுங்கள், எது அயோக்கியத்தனம்?

யார் யாரை சுரண்டிக் கொழுக்கிறார்கள்? எதற்காக அப்பாவித் தொழிலாளர்கள் மீது உங்களுக்கு இவ்வளவு துவேஷம்? ஜெர்மனியின் பொதுத்துறை கிரீஸின் பொதுத்துறையை விட பெரியது. கிரீசை விட ஜெர்மனி பெரிய நாடு என்ற உண்மையையும், ஜெர்மன் சனத்தொகை கிரீசினுடையதை விட பல மடங்கு அதிகம் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும் விஷயம் இது.

Kalaiyarasan said...

Goldman Sachs helped the Greek government to mask the true extent of its deficit with the help of a derivatives deal that legally circumvented the EU Maastricht deficit rules. At some point the so-called cross currency swaps will mature, and swell the country's already bloated deficit.

http://www.spiegel.de/international/europe/0,1518,676634,00.html


How German Companies Bribed Their Way to Greek Deals Greece's rampant corruption is one of the reasons why the country's
economy is in such a mess. German companies have taken advantage of the system for years in order to secure lucrative deals.

http://www.spiegel.de/international/europe/0,1518,693973,00.html#ref=nlint

jai said...

கலையரசன் அவர்களே,

//பிரிட்டனின் மோசமான வலதுசாரிப் பத்திரிகையான மெயிலில் இருந்து மேற்கோள் காட்டியமைக்கு நன்றி. உங்களது சிந்தனையோட்டம் அவர்களைப் போலவே இருப்பதில் வியப்பில்லை. //

நான் குறிப்பிட்டது கிரேக்கத்தில் ஊழியர்களின் ஓய்வு பெறூம் வயது 53 என்ற செய்தி.அது இடதுசாரி,வலதுசாரி என எந்த பத்திரிக்கையை படித்தும் உறுபடுத்திகொள்ளகூடிய விஷயம்தான்.மற்றபடி எனக்கு அந்த பத்திரிக்கை இடதா,வலதா என்பதெல்லாம் தெரியாது.

//பொதுத்துறை லாபம் சம்பாதிப்பதாக ஐரோப்பிய யூனியனுக்கு பொய்க் கணக்கு காட்டியதை பிரபல பிரிட்டிஷ் பத்திரிகைகளே எழுதியுள்ளன. அவ்வாறு பொய்க்கணக்கு எழுத கோல்ட்மன் சக்ஸ் முதலீட்டு வங்கி நிபுணர்கள் உதவியுள்ளார்கள். அதெல்லாம் உங்களது கண்ணுக்கு தெரியாததில் வியப்பில்லை. //

கோல்ட்மன் சாக்ஸ் பொய்கணக்கு எழுதியதால் கிரேக்கம் செய்தது நியாயம், அல்லது கிரேக்க பொதுதுறை ஊழியர்கள் பொதுமக்களை கொள்ளையடித்து சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்தது நியாயம் என ஆகிவிடுமா?அல்லது கோல்ட்மனும்,கிரேக்க அரசும் செய்த கூட்டுகளவாணிதனத்துக்கு ஜெர்மன் அரசோ,அமெரிக்க அரசோ பொறுபேற்கவேண்டும் என ஆகுமா?

//தொழிலாளருக்கு கிடைக்கும் போனஸ் என்ற "அயோக்கியத்தனத்திற்காக" அழுகின்றீர்கள். ஆனால் பொதுத்துறை நிர்வாகிகள் வருடாந்தம் எவ்வளவு போனஸ் பெற்றுக் கொண்டார்கள் என்பதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒவ்வொரு அரச நிறுவனத்தினதும் தலைமை நிர்வாகிக்கு கிடைத்து வந்த போனஸ், அங்கே வேலை செய்த ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த போனஸ் தொகையை விட பல மடங்கு அதிகம். இப்போது சொல்லுங்கள், எது அயோக்கியத்தனம்? //

இரண்டுமே அயோக்கியதனம்தான்.பொதுதுறையே ஊதிபெருத்து வீங்கிய ஊழல்துறை எனும்போது அதில் நிர்வாகியென்ன,கடைமட்ட ஊழியன் என்ன? அனைவரும் வீட்டுக்கு அனுப்பபட வேண்டியவர்கள்தான். கிரேக்க பொதுதுறையில் ரணசிகிச்சை செய்து அதை பாதிக்கு மேல் குறைத்து, தனியார்மயத்தை அமுல்படுத்தி, சம்பள குறைப்பு, போனஸ் ஒழிப்பு,சலுகை மறுப்பு என நலிவுற்ற ஒரு தனியார் நிறுவனத்தை எப்படி லாபத்துக்கு கொண்டுவருவார்களோ அப்படிதான் கிரேக்க அரசையும் திருத்தவேண்டும்.அதுக்கு ஐ.எம்.எப்பும், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சட்டையை எடுத்து சுழற்ற வேண்டும்.அல்லது கிரேக்கம் திவாலாகி திருந்தவேண்டும்.

//யார் யாரை சுரண்டிக் கொழுக்கிறார்கள்? எதற்காக அப்பாவித் தொழிலாளர்கள் மீது உங்களுக்கு இவ்வளவு துவேஷம்? //

எனக்கு தொழிலாளர் மேல் எந்த துவேஷமும் கிடையாது.அவர்கள் இதுநாள்வரை அனுபவித்த சலுகைகளை இனிமேல் அளிக்க அரசிடம் வசதியில்லை.பணம் இல்லாத,திவாலான ஒரு நிர்வாகம் என்ன செய்யுமோ அதைதான் கிரேக்க அரசு செய்யவேண்டும் என்கிறேன்.

//ஜெர்மனியின் பொதுத்துறை கிரீஸின் பொதுத்துறையை விட பெரியது. கிரீசை விட ஜெர்மனி பெரிய நாடு என்ற உண்மையையும், ஜெர்மன் சனத்தொகை கிரீசினுடையதை விட பல மடங்கு அதிகம் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும் விஷயம் இது.//

இல்லை.கிரேக்கத்தின் ஜிடிபியில் பொதுதுறையின் பங்கு 40%.ஜெர்மனியில் இதில் பாதிக்கும் குறைவே.மற்றபடி ஜெர்மனியோ, அமெரிக்காவோ தம்மக்களின் வரிப்பணத்தை கிரேக்க அரசு ஊழியர்களின் பென்ஷனுக்கான காசையும், வருடம் இரண்டுமாதம் போனசுக்கான காசையும் கொடுத்து அவர்களை காப்பாற்றவேண்டிய அவசியம் இல்லை.கிரேக்கம் திவாலாகி தொலையட்டும் என விட்டால் தான் இந்த ஊதாரிதனம் ஒரு முடிவுக்கு வரும்.

மரா said...

நல்லதொரு நடையில் வரலாறு. தொடர்கிறேன் ஆவலுடன்.

Kalaiyarasan said...

திரு ஜெய் அவர்களே! கிறீஸ் தொழிலாளர்கள் பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சுக போக வாழ்க்கை வாழ்ந்ததாக நீங்கள் கூறுவது சுத்த அபத்தம். இப்படி கிறுக்குத்தனமாக சிந்திப்பவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை. மக்கள் யார்? தொழிலாளர்கள் மக்கள் இல்லையா? அவர்கள் வரி செலுத்துவதில்லையா? எல்லா நாட்டிலும் இருப்பதைப் போல வேலை செய்யும் அனைவரும் வரி செலுத்துகிறார்கள். அவர்கள் கட்டும் வரி, முதலாளிகள் கொடுக்கும் வருமான வரியை விட பல மடங்கு அதிகம். இதை விட அரசுக்கு சேரும் மறைமுக வரிகள் வேறு. வருடாவருடம் அரசு சம்பாதிக்கும் வரிப்பணம் எவ்வளவு? இதிலே தொழிலாளருக்கு கொடுக்கும் ஊதியத்தின் பங்கு எவ்வளவு? அரசு தனக்கு கிடைக்கும் வரிப்பணம் முழுவதையும் தொழிலாளருக்கு ஊதியமாகவும் போனசாகவும் செலவளிக்கிறதா?

உங்களது கருத்திலேயே முரண்பாடுகள் நிறைய உள்ளன. பொதுத்துறை என்பதை சேவைத் துறை என்று புரிந்து கொள்கின்றீர்கள். சேவைத்துறை எதையும் உற்பத்தி செய்வதில்லை என்பது உண்மை தான். ஆனால் கிரீசில் பல தனியார் நிறுவனங்கள் சேவைத்துறையில் ஈடுபட்டுள்ளன. உதாரணத்திற்கு சுற்றுலாத்துறை. கிரேக்க பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத் துறையின் பங்களிப்பு அதிகம். அந்த துறை முழுக்க முழுக்க தனியாரின் கைகளில் உள்ளது. ஆனால் நீங்களோ கிறீஸ் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை பொதுத்துறை (அரசு) நிர்வகிப்பது போல பேசுகின்றீர்கள். கிறீஸ் தொழிலாளர்கள் அனைவரும் அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதைப் போல மாயையை ஏற்படுத்துகிறீர்கள். சராசரி கிறீஸ் ஊழியர் பெறும் சம்பளம் ஜெர்மனியில் அதே வேலை செய்யும் ஊழியருடையதை விட குறைவு. கிட்டத்தட்ட 200 -500 யூரோக்கள் குறைவாகப் பெறுகின்றார்கள். அந்த வகையில் பார்த்தால் கூட ஒரு ஊழியர் மாதாமாதம் இழக்கும் தொகையை இரண்டு மாத போனசாக பெறுவதில் எந்த தவறும் இல்லை.

கிரீஸின் இன்னொரு முக்கிய பொருளாதாரமான விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்க ஊழியர்கள் அல்ல. கிரீசில் எத்தனை தனியார் வங்கிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியாது. நான் கிரீசில் இருந்திருக்கிறேன். கிரேக்க மக்களை சந்தித்திருக்கிறேன். ஒரு சராசரி மேற்குலக நாட்டில் உள்ளதைப் போல கிறீஸ் பொருளாதாரத்திலும் தனியார் துறையின் பங்களிப்பு அதிகம். பெரும்பாலான கிரேக்க மக்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான கிரேக்க ஊழியர்கள் சேவைத் துறையில் வேலை செய்வது உண்மை தான். ஆனால் அவை எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமானவை அல்ல. இதை விட உற்பத்தி துறையான விவசாயம் வெளிநாட்டு கூலித் தொழிலாளர்களிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்ன தெரியுமா? மணித்தியாலத்திற்கு ஒரு யூரோவுக்கு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் மக்களின் வரிப் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக கூறுகிறீர்களா?

Anonymous said...

கட்டுரை வெளியிட்ட கலையரசனுக்கு நன்றி.JAI விளக்கத்திற்கு நன்றி.

Hai said...
This comment has been removed by the author.
Hai said...

My full coment cannot be published in one page so read it in part.


இதனை நான் முன்னரே வினவு தளத்தில் வாசித்திருந்தாலும் நண்பர் ஜெய்-யின் கலையுடனான நீண்ட விவாதங்கள் என்னை நிறைய யோசிக்க வைத்தது.

கீழே குரிப்பிடுவதுவே சரியென வாதிட நான் இங்கு வரவில்லை.
என்னுடைய மனதில் ஓடியதை எனது கருத்துக்களாக மட்டும் பதிவு செய்யவே.

//நான் குறிப்பிட்டது கிரேக்கத்தில் ஊழியர்களின் ஓய்வு பெறூம் வயது 53 என்ற செய்தி.அது இடதுசாரி,வலதுசாரி என எந்த பத்திரிக்கையை படித்தும் உறுபடுத்திகொள்ளகூடிய விஷயம்தான்.மற்றபடி எனக்கு அந்த பத்திரிக்கை இடதா,வலதா என்பதெல்லாம் தெரியாது.//

உண்மையில் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மற்றும் அவற்றிற்கு வலிந்து கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் அதனைச் சார்ந்து ஏற்படுத்தும் விவாதம் எதிவிவாதம் ஆகியவற்றை பார்க்க முடியுமே தவிரவும் எல்லாச்சமயங்களிலும் அச்செய்திகள் முழுக்கவே போலியானது இல்லை என்றே நம்பி வந்தேன் . ஆனால் வெறும் நூற்று எண்பது பொதுமக்கள் மட்டுமே மரணித்தார்கள் என்றெல்லாம் கூட ஊடகங்கள் மூன்றாம் பக்கத்தில் சொல்லுகின்றனவே இப்படிச் சொல்லும்போதுதான் இவற்றின் கோரமுகம் தெரிகிறது.( this opinion not for this jai’s comment or link. my genaral opinnion upon media)

//110% சதவிகித சம்பளத்துடன் ரிடையெர்மென்ட்//
நீங்கள் குறிப்பிட்ட செய்தியில் இருப்பது 110% சதவிகித ஓய்வூதியத்துடன் ஓய்வு என்றே பொருள் கொடுக்கிறது நண்பர் ஜெய் அ வர்களே.

அது பணிக்கொடை எனப்படும் gratuvity ஆகவே இருக்க முடியும் மற்றபடி எங்கும் நடைமுறையில் இல்லாத விஷயம். பணிக்கொடை எனப்படும் gratuvity - இது எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ள நடைமுறையாகும். இந்தியாவில் 28 வருடங்கள் அரசுப்பணி புரிந்த ஒருவர் 17 .5 மாதச் சம்பளத்தை பணிக்கொடையாக பெறுவது நடைமுறையில் உள்ளது. இது அவர் அரசுக்கு இவ்வளவு காலமாக செய்த பணிக்கு அரசு கொடுக்கும் கோடை. அவர் காலம்காலமாய் அரசுப் பணிக்கு சுமையாக இருந்திருப்பார் அது வேறு விஷயம்.

Hai said...

//தொழிலாளருக்கு கிடைக்கும் போனஸ் என்ற "அயோக்கியத்தனத்திற்காக" அழுகின்றீர்கள். ஆனால் பொதுத்துறை நிர்வாகிகள் வருடாந்தம் எவ்வளவு போனஸ் பெற்றுக் கொண்டார்கள் என்பதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒவ்வொரு அரச நிறுவனத்தினதும் தலைமை நிர்வாகிக்கு கிடைத்து வந்த போனஸ், அங்கே வேலை செய்த ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த போனஸ் தொகையை விட பல மடங்கு அதிகம். இப்போது சொல்லுங்கள், எது அயோக்கியத்தனம்?//

இவை அரசுத்துறைகளின் நடைமுறையில் உள்ள மிகப்பெரும் குறைபாடுகள். உயர்பதவிகளை வகிக்கும் அலுவலர்களே அதன் அனைத்து முடிவுகளையும் எடுப்பதும் அமைச்சர்களும் அமைச்சரவையும் அதனை அங்கீகரிக்க அவர்களைப் போன்ற அலுவலர்களிடமே யோசனை கேட்பதும் இப்போது நடைமுறையில் இருக்கிறது. எனவே இவற்றுக்கு முடிவு எப்போது வரும் என்று சொல்ல முடியாது.

முதலாளித்துவத்தில் பல பயன்கள் ஏற்பட்டுள்ளன என்பதில் நான் உடன்படுகிறேன்.
ஆனால் பாதிப்புகளினைப் பார்ப்போமானால் அவை மக்களை கடுமையாக சுரண்டுகின்றன.
ஒரு சிறிய உதாரணம் இருபதாயிரம் ரூபாய் சமபலத்தில் ஒரு நபர் அரசுத்துறையில் ஆசிரியராக பணியிளிருக்கிறார். அதே பணியை தனியார் பள்ளியில் 3000 - 5000 ரூபாயில் அதைவிட (அரசுத்துறை) சிறப்பாக ஆனால் பற்பல நெருக்குதல்களுக்குள்ளும் பணிநிரந்தரம் இல்லாமலும் மே மாதச் சம்பளம் இல்லாமல் கூட குடும்ப சூழல் காரணமாய் அல்லது வேலை வாய்ப்பின்மை காரணமாக பணிபுரிவது அவசியம்மகிறது.


ஆனால் ஒன்றே ஒன்று இதற்கு முதலாளித்துவம் சரியான தீர்வு அல்ல என்றே படுகிறது. மக்களைச் சுரண்டுகிறது பணியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் கொடுக்காத அவற்றை கவனிக்காத அதிகாரிகள் கவனிக்கவிடாத அளவுக்கு வலிமை படைத்த முதலாளிகள் இதனை கேள்விகேட்க இயலாத வாக்காளர்கள் கேட்கமுயலும் சில அரசின் அவைகளில் இடம்பிடித்திருக்கும் உறுப்பினர்களின் ஊமையாக்கப்படும் குரல் இவை யாவும் இன்ன பிறவும் மக்களை சுரண்டவும் இன்னமும் இக்கட்டிற்கே எடுத்துச்செல்லும் என்பதுவே ஒரு உதாரணம் இந்தியாவில் லாலு பிரசாத் இரயில்வே அமைச்சராக இருந்த பொது இரயில் கட்டணங்களை உயர்த்தவேயில்லை என்று சொல்லி அவற்றில் தத்கால்(thatkaal இந்த ஹிந்தி வார்த்தைக்கு immediate என்று ஆங்கிலத்தில் பொருள் கொள்ளவும் ) என்றொரு கட்டண முறையைக் கொண்டு வந்து இரயில் பயணிகளை பெரிய இக்கட்டுக்குள்ளக்கி விட்டுச் சென்று விட்டார் 40 % பயணச்சீட்டுக்கள் இன்றும் இம்முறையிலேயே வழங்கப்படுகின்றது . இவை யாவும் மக்களை இக்கலுக்குள்ளாக்கி புரோக்கர்கள் அல்லது ஏஜண்டுகள் எனப்படும் சில நபர்கள் கொழுக்கவே முழுக்க முழுக்க உதவுகிறது. irctc என்ற ஒரு அமைப்பை இரயில்வேயின் துணை நிறுவனமாக்கி மெல்ல மெல்ல இரயில்வேப் பணிகளை தனியார் மயப்படுத்தி வருகிறது. இதன் விளைவுகள் நல்ல சுத்தமான இரயில் பெட்டிகள் மற்றும் சுத்தமான இரயில் நிலையங்கள் என்று சொல்லி பயணிகளை திருப்திபடுத்த் முயன்றாலும் வெறும் 2000 ரூபாயில் சாதி அடிப்படையில் சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களை இவ்வேளைகளில் அமர்த்தி அவர்களை சுரண்டுகிறார்கள். இந்திய இரயில்களில் எப்போதேனும் நீண்ட தொலைவு வண்டிகளில் பயணம் செய்ய நேர்ந்தால் பெட்டிகளின் கழிவறைகளின் அருகில irctc அடையாளத்துடன் கூடிய நீல நிற சீருடையும் அணிந்து பிச்சைக்காரகளின் மார்ருருவாய் வரும் நபர்களைப் பாருங்கள் இந்தியத் தனியார் மயமாக்கலின் விளைவுகளை. அரசுத்துரையாக செயல்படும் இரயில்வேயிலேயே இப்படி என்றால் இவை தனியார் மயமானால் என்ன என்ன நடக்கும் என்றே பயமாயிருக்கிறது.

Hai said...

குறிப்பாக பொதுத்துறையில் பெரிய மாற்றங்கள் வேண்டியிருந்தாலும் அவை (பொதுத்துறை) யாவும் ஒதுக்கித்தள்ள வேண்டிய குப்பைகளும் இல்லை. திறனில்லாத பணியாளர்களும் குப்பை கொட்டுவது தேவைக்கும் அதிகமான பணியாளர்களை வைத்துக் கொண்டு கும்மாளமடிப்பது நிறைந்த ஊழல் அரசுகளின் திறனில்லாத மேற்பார்வை இன்னுமின்னும் பற்பல குறைகள் இருக்கத்தான் செய்கிறது.

நாம் செய்ய வேண்டியது பொதுத்துறையை பெரும் உறுதியுடன் சீர்திருத்தி மீள்கட்டமைப்பதுதான் அதற்கு வலிமையும் உறுதியும் இல்லாததாலும் தனிப்பட்ட பயன்களுக்குமான பேராசை காரணமாயும் தனியார்மயமாக்கலை நோக்கி நமது தலைவர்கள் (with the help of thinktanks) விரைவாகச் செல்கிறார்கள்.

Jai said...

///மக்கள் யார்? தொழிலாளர்கள் மக்கள் இல்லையா? அவர்கள் வரி செலுத்துவதில்லையா? எல்லா நாட்டிலும் இருப்பதைப் போல வேலை செய்யும் அனைவரும் வரி செலுத்துகிறார்கள். அவர்கள் கட்டும் வரி, முதலாளிகள் கொடுக்கும் வருமான வரியை விட பல மடங்கு அதிகம்///

வரி எல்லோரும் தான் செலுத்துகிறார்கள் கலையரசன்.ஆனால் வருடா வருடம் சம்பள உயர்வு, 2 மாத போனஸ், 53 வயதில் ரிடையர்மெண்ட்,பென்ஷன் போன்றவை அனைவருக்கும் கிடைப்பதில்லை.நிதி நெருக்கடியில் இருக்கும் அரசு இதை குறைப்பதில் தவறில்லை.கிரேக்க அரசு கொண்டுவந்த சீர்திருத்தம் சம்பள உயர்வை நிறுத்தி வைத்தது, போனசை நிறுத்தியது மற்றும் ரிடையர் ஆகும் ஐந்து ஊழியர் பதவிகளில் ஒன்ருக்கு புதிதாக ஆள் எடுக்காமல் நிறுத்துவது...இதுக்கு தான் யூனியன்கள் ஏதோ உல்கமே அழிந்தார்போல் குதிக்கின்றன


//உங்களது கருத்திலேயே முரண்பாடுகள் நிறைய உள்ளன. பொதுத்துறை என்பதை சேவைத் துறை என்று புரிந்து கொள்கின்றீர்கள்.//

இல்லை.நான் பொதுதுறையை தான் சொல்கிறேன்.சேவைதுறைக்கும் பொதுதுறைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்,.


///சராசரி கிறீஸ் ஊழியர் பெறும் சம்பளம் ஜெர்மனியில் அதே வேலை செய்யும் ஊழியருடையதை விட குறைவு. கிட்டத்தட்ட 200 -500 யூரோக்கள் குறைவாகப் பெறுகின்றார்கள். அந்த வகையில் பார்த்தால் கூட ஒரு ஊழியர் மாதாமாதம் இழக்கும் தொகையை இரண்டு மாத போனசாக பெறுவதில் எந்த தவறும் இல்லை.///

திவாலான கிரேக்க அரசு போனசை எங்கிருந்து கொடுக்கும் கலையரசன்?அரசிடம் காசு இல்லையெனில் போனஸ் எப்படி கொடுப்பார்கள்?கடன் வாங்கியா?கடன்வாங்கி பொனசை கொடுத்தால் அப்புறம் அந்த கடனை திருப்பி கட்டுவது எப்படி?

///இதை விட உற்பத்தி துறையான விவசாயம் வெளிநாட்டு கூலித் தொழிலாளர்களிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்ன தெரியுமா? மணித்தியாலத்திற்கு ஒரு யூரோவுக்கு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் மக்களின் வரிப் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக கூறுகிறீர்களா?///

தனியார் துறை தொழிலாளர்களைநான் ஒன்றும் சொல்லவில்லை.அவர்கள் முதலாளிகளிடம் காசு இல்லௌஇயெனில் கடன்வாங்கி,கம்பனியை திவாலாக்கி போனஸ் தரசொல்லி தனியார் துறை தொழிலாளிகள் போராட மாட்டர்கள்.அரசு ஊழியர்கள் தான் இப்படி அநீதியாக போராடுவார்கள்.

Jai said...

Greece's pension system, a political hot potato, has an actuarial deficit estimated at about twice the size of the country's GDP of 240 billion euros ($322 billion).

http://www.reuters.com/article/idUSLDE63E12Z20100510

கிரேக்க அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய பென்சன் தொகை கிரேக்கத்தின் ஜிடிபியை விட இரு மடங்கு அதிகம்.அப்புறம் பென்சனை நிறுத்தி வைக்காமல் அரசு என்ன செய்யும்?

Jai said...

Years of work to earn a full pension; Greece: 35 Germany: 45


Proportion of wages as pension; Greece: 80% Germany: 46%


Number of pension payments a year; Greece: 14 Germany: 12


Pension increase 2004; Greece: 3% Germany: 0%, Pension increase 2005; Greece: 4% Germany: 0%, Pension increase 2006; Greece: 4% Germany: 0%, Maximum Payment; Greece: €2538 Germany: €2100

Maximum Payment; Greece: €2538 Germany: €2100


Minimum pension age for women; Greece: 60 Germany: 65-67


Read more: http://www.businessinsider.com/greece-germany-pensions-2010-4#minimum-pension-age-for-women-greece-60-germany-65-67-10#ixzz0nsn7m4fs

Jai said...

அரைகிறுக்கன்,

//irctc என்ற ஒரு அமைப்பை இரயில்வேயின் துணை நிறுவனமாக்கி மெல்ல மெல்ல இரயில்வேப் பணிகளை தனியார் மயப்படுத்தி வருகிறது. இதன் விளைவுகள் நல்ல சுத்தமான இரயில் பெட்டிகள் மற்றும் சுத்தமான இரயில் நிலையங்கள் என்று சொல்லி பயணிகளை திருப்திபடுத்த் முயன்றாலும் வெறும் 2000 ரூபாயில் சாதி அடிப்படையில் சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களை இவ்வேளைகளில் அமர்த்தி அவர்களை சுரண்டுகிறார்கள். //

இரண்டாயிரத்துக்கு பதில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் ரயில் டிக்கட்டின் விலை அதற்கேற்றவாறு உயரும்.

அதனால் 2000 சம்பளம் சரி என சொல்லவில்லை.மினிமம் வேஜ் என்ன என்பது பல காரணிகளை பொறுத்து தீர்மானிக்க வேண்டும்.மினிமம் வேஜ் ஐயாயிரம் என வைத்துகொண்டால் நிறைய வேலைகள் உருவாகாது.2000 சம்பளம் மேலா,இல்லை அதுவும் இல்லாமல் அவர்கள் சும்மா இருப்பது மேலா என அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.

//அது பணிக்கொடை எனப்படும் gratuvity ஆகவே இருக்க முடியும் மற்றபடி எங்கும் நடைமுறையில் இல்லாத விஷயம். பணிக்கொடை எனப்படும் gratuvity - இது எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ள நடைமுறையாகும். இந்தியாவில் 28 வருடங்கள் அரசுப்பணி புரிந்த ஒருவர் 17 .5 மாதச் சம்பளத்தை பணிக்கொடையாக பெறுவது நடைமுறையில் உள்ளது. இது அவர் அரசுக்கு இவ்வளவு காலமாக செய்த பணிக்கு அரசு கொடுக்கும் கோடை. அவர் காலம்காலமாய் அரசுப் பணிக்கு சுமையாக இருந்திருப்பார் அது வேறு விஷயம்.//

இல்லை ஐயா.அது பென்ஷன் தான்.நான் முந்தி அனுப்பிய ஆங்கில சுட்டிகளை பார்க்கவும்

கலையரசன்,

உங்களது பின்னூட்டத்துக்கு பதிலாக நீண்ட பின்னூட்டம் ஒன்று அனுப்பினேன்.வந்து சேரவில்லையா?

Kalaiyarasan said...

போனஸ் என்றால் என்னவென்று தெரியாத அப்பாவிகளாக ஜெய் போன்ற பலர் இருக்கின்றனர். வருட இறுதியில் ஒரு கம்பெனி ஈட்டிய லாபத்தொகையை ஊழியருக்கு பங்கிட்டுக் கொடுப்பதே போனஸ் ஆகும். அதாவது நஷ்டம் வந்தால் போனஸ் இல்லை. நிகர லாபம் எவ்வளவு என்று பகிரங்க கணக்கு காட்ட வேண்டும். அது அரச நிருவனமேன்றாலும் கணக்கு ஒன்று தான். மேலும் போனஸ் கொடுப்பது, ஓய்வூதியம் கொடுப்பது எல்லாம் அரச நிறுவனங்களில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. நாடு முழுவதும் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் அது பொருந்தும். இதிலே எந்த மாற்றங்களை அரசு கொண்டு வந்தாலும், அது பொதுத் துறையை மட்டுமல்ல, தனியார் துறையையும் பாதிக்கும்.

சில ஊடகங்கள் மக்களை கற்பனை உலகத்திலேயே வைத்திருக்க விரும்புகின்றன. மக்கள் விரோத ஊடகங்கள் ஜெய் போன்றவர்களை எப்படி ஏமாற்றி வருகின்றன? சில உதாரணங்களைப் பார்ப்போம். கிறீஸ் ஊழியர்கள் 53 வயதில் 110% சதவிகித சம்பளத்துடன் ரிடையெர்மென்ட் பெறுவதாக ஜெய் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவர் கொடுத்த சுட்டியில் (Mail) 110 % சதவீத சம்பளத்துடன் ஓய்வு பெறுவதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதே பத்திரிகையில் 53 வயதில் ஓய்வு பெறுவதாக குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் ஜெய் பின்னர் கொடுத்த தரவுகளில் (Reuters, Busines Insider) கிரீசில் ஓய்வு பெறும் வயது 60 என்று உள்ளது! உண்மையில் சுயவிருப்பின் பேரில் (அதாவது ஊழியர் நிலையான வைப்பில் தான் கட்டிய பணத்தை ஓய்வூதியமாக பெறுகிறார்.)ஓய்வு பெறும் வயதை (53) தான் முன்னர் ஜெய் குறிப்பிட்டுள்ளார். (இதனை அவர் கொடுத்த தளத்திலேயே பார்க்கலாம்.) ஒரு நபர் வழமையான ஓய்வு பெறும் 60 வயதிற்கு முன்னரே ஓய்வு பெற விரும்பினால், அதற்கென அவரது சம்பளத்திலிருந்து சேமித்து வருகிறார். சில விஷமிகள் அதனை அரசு கொடுப்பதாக திரிக்கிறார்கள்.

ஜெய் கொடுத்த ஊடகங்களின் தரவுகள் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது மயக்கத்தை ஏற்படுத்தலாம்.
//ஜெர்மனி வருடத்திற்கு 12, கிறீஸ் வருடத்திற்கு 14 ஓய்வூதியம் வழங்குகின்றன.//
அதற்கான காரணம் அடுத்து வருகின்றது. ஜெர்மனியில் ஓய்வு பெறும் வயது 67 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. (சிலபேர் ஓய்வுபெறுவதற்கு முன்னரே மரணமடையலாம்)
//கிரீசில் ஓய்வூதியம் வருடத்திற்கு 4 % அதிகரிக்கப்படுகிறது, ஜெர்மனியில் ஒன்றுமில்லை.// அதற்கான விடையும் அங்கேயே உள்ளது. கிறீஸ் ஊழியருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவு.(€ 450,௦௦)
//கிரீசில் அதிகபட்ச ஓய்வூதியக் கொடுப்பனவு € 2538 //
எந்தவொரு நாட்டிலும் ஓய்வூதியம், ஒரு ஊழியர் எடுத்த கடைசி சம்பளத்தின் 70 % (எங்கேயாவது 80 %) நூறுவீதம் வேண்டுமானால் அவர் மேலதிக கட்டுப்பணம் செலுத்தியிருக்க வேண்டும். ஆகவே € 2538 (மாதத்திற்கா? ) ஓய்வூதியம் பெறும் ஒருவர் குறைந்தது அதேயளவு சம்பளம் பெறும் மேல்மட்ட மனேஜராக அல்லது மேலதிகாரியாக இருந்திருப்பார். இதிலே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெய் போன்றவர்களின் கோபமெல்லாம் சாதாரண ஊழியர்கள் மீது தான். கிரீசில் அவர்களின் சம்பளம் என்ன? மாதம் € 700 அல்லது 800 மட்டும் தான்!

"ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்தை கிறீஸ் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுத்து வந்தது, இப்போது வெளிநாட்டில் கடன்வாங்கிக் கொடுக்கின்றது." என்றொரு புரளி. பொருளாதாரம் தெரியாத மக்களை ஏமாற்ற முனையும் விஷமிகளின் பிரச்சாரம் இது. ஓய்வூதியம் என்பது ஒரு காப்புறுதி. ஒரு ஊழியர் தனக்கான ஓய்வூதியப் பணத்தை தான் வேலை செய்யும் காலத்தில் கட்டி வருகிறார். உலக நாடுகள் எங்கும் நடைமுறையில் உள்ள இந்த நடைமுறை தான் கிரீசிலும் உள்ளது. சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினர் ஓய்வூதியம் பெறும் நேரம், இன்னொரு பிரிவினர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். வேலை செய்து கொண்டிருப்பவர்களின் கட்டுப்பணம், ஓய்வு பெறுபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகின்றது. இதை விட காப்புறுதி நிறுவனங்கள் ஊழியர்களின் கட்டுப்பணத்தை பங்குச் சந்தையில் போட்டு மேலதிக லாபம் சம்பாதிக்கின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க, "கிறீஸ் அரசாங்கம் ஓய்வூதியம் அள்ளிக் கொடுத்து திவாலானதாக" ஊடகங்கள் வாசகர்களை முட்டாளாக்கி வருகின்றன. இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஜெய்க்கு நன்றி கூற வேண்டும்.

Hai said...

//மினிமம் வேஜ் ஐயாயிரம் என வைத்துகொண்டால் நிறைய வேலைகள் உருவாகாது.2000 சம்பளம் மேலா,இல்லை அதுவும் இல்லாமல் அவர்கள் சும்மா இருப்பது மேலா என அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.//

இங்கு மினிமம் wage எல்லாம் இங்கு வேலை செய்து நண்பரே இது இந்தியா மேலை நாடல்ல மணிக்கணக்கில் ஊழியம் வாங்குவதற்கு.

எதுவுமே இல்லாதவன் என்று சொல்லி அவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து அவர்களுக்கு சட்டத்தின்படி நிரந்தர ஊழியரின் எவ்வித உரிமையும் ஏற்பட்டு விட இயலாதவாறு அவனை வைத்திருப்பது அவனிடம் நிரந்தர ஊழியனை விடவும் அதிகம் வேலை வங்க்குவதுவும் அடிமையாக்குவதைத்தவிரவும் வேறல்ல.(in both only exploitation takes place without any claim for basic rights)

இதனையே அமெரிக்கர்கள் தாங்கள் செய்து வந்த அடிமை முறைக்கும் விளக்கமாக அளிக்க முன்வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

Jai said...

Did you get my feedback Kalai?They were not published

Jai said...

கலையரசன்,

அரசுக்கு ஏது லாபம்? உலகத்தில் லாபத்தில் இயங்கும் அரசு எதாவது உண்டா? கிரேக்க அரசு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் போனஸ் இல்லை. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போனஸ். இவர்களுக்கு அரசு தரும் போனஸ் எல்லாமே வரிப்பணத்திலும், கடன் வாங்கி தருவதும்தான்.லாபம்,நஷ்டம் எல்லாம் கணக்கே இல்லை.

அரசு ஊழியர்களின் பென்ஷன் முறை அவர்களின் வைப்பு நிதியில் இருந்து வழங்கப்படுவதில்லை.மாதா மாதம் ஊழியர்கள் சார்பில் அரசே பென்ஷன் நிதியில் காசை செலுத்தும்.அதை அரசு அல்லது அரசு கம்பனி நிர்வாகம் அரசின் பாண்டுபத்திரங்களிலும்,பங்கு சந்தையிலும் முதலீடு செய்யும்.லாபம் வந்தாலும்,நஷ்டம் வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு மாதா மாதம் தருவதாக உறுதியளீக்கப்பட்ட பென்ஷன் தொகை பைசா குறைவில்லாமல் போய் சேரும்.துண்டுவிழும் தொகை வரிபணத்தில் இருந்து கட்டப்படும்.

இப்படி துண்டுவிழுந்த தொகை கிரேக்க ஜிடிபியை விட இரு மடங்கு அதிகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறூவதை எடுத்துபோட்டிருந்தேன்.ஆக தொழிலாளிகள் தம் பணத்தை தாமே திரும்ப பெறும் முறை இல்லை இது.மக்களின் வரிப்பணத்தை தான் போனசாக பெறுகின்றனர்.



//ஓய்வூதியம் என்பது ஒரு காப்புறுதி. ஒரு ஊழியர் தனக்கான ஓய்வூதியப் பணத்தை தான் வேலை செய்யும் காலத்தில் கட்டி வருகிறார். உலக நாடுகள் எங்கும் நடைமுறையில் உள்ள இந்த நடைமுறை தான் கிரீசிலும் உள்ளது. சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினர் ஓய்வூதியம் பெறும் நேரம், இன்னொரு பிரிவினர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். வேலை செய்து கொண்டிருப்பவர்களின் கட்டுப்பணம், ஓய்வு பெறுபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகின்றது. இதை விட காப்புறுதி நிறுவனங்கள் ஊழியர்களின் கட்டுப்பணத்தை பங்குச் சந்தையில் போட்டு மேலதிக லாபம் சம்பாதிக்கின்றன. //

பங்குசந்தையில் லாபமும் வரும்,நஷ்டமும் வரும்.நஷ்டமான பணத்தை பிற தொழிலாளர்களின் பணத்தையும்,துண்டுவிழும் தொகையை அரசும் தந்து இத்தனைநாள் சமாளித்துகொண்டிருக்கிந்தன.அந்த துண்டுவிழும் தொகை இன்று சமாளிக்க இயலாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.அந்த துண்டுதொகையை கடனாக தர ஜெர்மனி தயாராக இல்லை.அவர்கள் ஏன் அதை ஈடுகட்டவேண்டும்?அது திரும்பிவரவே வராத முதலீடு என அவர்களுக்கு தெரியும்.அதனால் தான் அதற்கு பணம் தர ஜெர்மனி மக்கள் மறுத்தார்கள்.

Jai said...

//எதுவுமே இல்லாதவன் என்று சொல்லி அவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து அவர்களுக்கு சட்டத்தின்படி நிரந்தர ஊழியரின் எவ்வித உரிமையும் ஏற்பட்டு விட இயலாதவாறு அவனை வைத்திருப்பது அவனிடம் நிரந்தர ஊழியனை விடவும் அதிகம் வேலை வங்க்குவதுவும் அடிமையாக்குவதைத்தவிரவும் வேறல்ல.(in both only exploitation takes place without any claim for basic rights)//

நிரந்தரவேலை என்பதே மாயை.அரசு வேலையை தவிர உலகில் எந்த வேலையும் நிரந்தரம் கிடையாது.நிரந்தரமாக எந்த கம்பனியாவது இயங்கும் என யாராலும் உத்தரவாதம் தரமுடியாதபோது நிரந்தர வேலையும் கிடையாது.

தற்காலிக சீசனல் வேலைக்கெல்லாம் நிரந்தர பணியாளரை நியமித்தால் கம்பனி காலி.அப்புறம் இந்த வேலையும் கிடைக்காமல் எல்லோரும் அவதிப்படவேண்டியதுதான்.இதை எல்லாம் சீசனலா அல்லது பார்ட் டைம் அடிப்படையிலான வேலையா கருதணும். இதிலேயே வாழ்நாள் முழுக்க உழல முடிவெடுப்பது தொழிலாளிக்கு நல்லதல்ல.

//இதனையே அமெரிக்கர்கள் தாங்கள் செய்து வந்த அடிமை முறைக்கும் விளக்கமாக அளிக்க முன்வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?//

அடிமைகள் தாமாக விருப்பப்பட்டு அடிமை வேலையில் சேர்ந்ததாக எனக்கு தெரியவில்லை.அடிமைகள் அந்த தொழிலை விட்டு வெளியேறவும் அனுமதி அளிக்கபடவில்லை.இந்த தொழிலாளிகள் தாமாக விரும்பித்தான் இந்த வேலையில் சேர்ந்தனர்.வேலையை விட விரும்பினால் அதுக்கு ஒரு நொடி கூட போதும்.சம்பளம் பிடிக்கவில்லை என்றால் அடுத்த வினாடி அவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம்.யாரும் தடுக்கவில்லை.

Kalaiyarasan said...

ஜெய்,
//அரசுக்கு ஏது லாபம்? உலகத்தில் லாபத்தில் இயங்கும் அரசு எதாவது உண்டா?//
அரச நிறுவனம் சமர்ப்பிக்கும் கணக்கில் லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் சமர்ப்பிக்கும் கணக்கில் லாப, நஷ்டமே கிடையாது என்று அர்த்தமல்ல. சில அரச நிறுவனங்கள் மக்கள் சேவைக்காக இயங்குவதால் லாபத்தை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் வேறு சில நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன. அனேகமாக வரிகளை அறவிடும் இலாகா, லாபம் கருதாத சேவைகளின் செலவை ஈடுகட்டுகின்றன. வசதியற்ற மக்களுக்கு அது பேருதவியாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, ஏழைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்களா? பணம் இருந்தால் கொடு, இல்லாவிட்டால் கடவுளிடம் சென்று முறையிடு என்று சொல்கிறீர்களா? உங்களது மனித நேயத்திற்கு கோடி நன்றிகள்.

அரச ஊழியருக்கு என்று தனியான பென்ஷன் நிதியம் உள்ளது. அது தனியார் துறையில் உள்ளதைப் போல, ஆனால் சில வித்தியாசங்களுடன் செயல்படுகின்றது. அரசு அதற்கென்று தனியாக நிதி ஒதுக்குவதில்லை. பென்ஷன் கட்டுப்பணம் ஒரு ஊழியரின் சம்பளத்தைப் பொறுத்தது. ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதியும், (அரச) நிறுவனம் கொடுக்கும் இன்னொரு பகுதியுமாக அந்த நிதியில் போய்ச் சேர்கின்றது. இந்த இரண்டு பகுதிகளும் ஊழியரின் சம்பளத்திற்கான செலவினமாகத் தான் பார்க்கப் படுகின்றன. போனசும் அதே செலவினத்தில் தான் சேர்க்கப் படுகின்றது.(தனியார் துறையிலும் அது தான்.)

எந்த நாட்டிலும் ஒரு அரச ஊழியருக்கு கிடைக்கும் மொத்த சம்பளத் தொகை, தனியார் நிறுவனத்தில் கொடுக்கும் தொகையை விட குறைவு. நீங்கள் வாதிடலாம், தனியார் துறை லாபம் வருவதால் அதிக சம்பளம் கொடுக்கின்றது என்று. வாஸ்தவம் தான். ஆனால் பொதுத் துறையில் வேலை செய்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்கத் தான் வேண்டும். அதற்காக அரசுக்கு வருமானமாக வரும் வரிப் பணத்தை எடுத்து சம்பளம் கொடுக்க பயன்படுத்தாதே என்கிறீர்கள். அப்போ, அந்தப் பணத்தை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பணக்காரர்களுக்கு நீச்சல் தடாகம் கட்டிக் கொடுக்க சொல்கின்றீர்களா? ஏழைகள் வீட்டில் அடுப்பெரியா விட்டாலும் பரவாயில்லை. பணக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைக்க சொல்கின்றீர்களா?

Jai said...

//அரச நிறுவனம் சமர்ப்பிக்கும் கணக்கில் லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் சமர்ப்பிக்கும் கணக்கில் லாப, நஷ்டமே கிடையாது என்று அர்த்தமல்ல. சில அரச நிறுவனங்கள் மக்கள் சேவைக்காக இயங்குவதால் லாபத்தை எதிர்பார்ப்பதில்லை. //

லாபத்தில் இயங்காத அரசுதுறைகள் மக்கள் காசை வீணடிப்பதாக தான் அர்த்தம். அரசு சேவை நோக்கில் இயங்கவேண்டிய துறைகள் சில உண்டு (சுகாதாரம், ராணுவம், சாலைவசதி).இவற்றில் லாபம் வரவேண்டியதில்லை.ஆனால் தனியார்துறை இயங்கவேண்டிய துறைகளில் அரசு கம்பனிகள் இயங்கி மக்கள் பணத்தை தொலைப்பது ஏற்றுகொள்ள இயலாத விஷயம்.

//ஆனால் வேறு சில நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன. அனேகமாக வரிகளை அறவிடும் இலாகா, லாபம் கருதாத சேவைகளின் செலவை ஈடுகட்டுகின்றன. வசதியற்ற மக்களுக்கு அது பேருதவியாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, ஏழைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்களா? பணம் இருந்தால் கொடு, இல்லாவிட்டால் கடவுளிடம் சென்று முறையிடு என்று சொல்கிறீர்களா? உங்களது மனித நேயத்திற்கு கோடி நன்றிகள். //

இதுக்கு தான் முந்தைய பத்தியில் பதில் சொன்னேன்.அரசு காப்பகங்களை நடத்தலாம்,ராணுவம் நடத்தலாம், மருத்துவ வசதிகளை அளிக்கலாம்.வங்கி,ஏர்லைன்ஸ், தொலைதொடர்பு போன்ற துறைகளை நடத்த கூடாது.கிரேக்கம் தற்பொழுது தான் இவற்றை ஒவ்வொன்றாக தனியார்மயமாக்கி வருகிறது.இருந்தாலும் கிரெக்க ஜிடிபியில் சுமார் 50% அரசு துறைகளின் பங்களிப்புதான்.ஆக கிரேக்கத்தில் தனியார் துறை பெரிதாக வளரவே இல்லை என்பதுதான் தெரிகிறது.

//எந்த நாட்டிலும் ஒரு அரச ஊழியருக்கு கிடைக்கும் மொத்த சம்பளத் தொகை, தனியார் நிறுவனத்தில் கொடுக்கும் தொகையை விட குறைவு. நீங்கள் வாதிடலாம், தனியார் துறை லாபம் வருவதால் அதிக சம்பளம் கொடுக்கின்றது என்று. வாஸ்தவம் தான். ஆனால் பொதுத் துறையில் வேலை செய்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்கத் தான் வேண்டும். //

அத்தியாவசியமான துறையில் பணிசெய்பவர்களுக்கு தரலாம்.22% பேர் லாபமே வராத பொதுதுறையில் வேலைபார்ப்பது கட்டுபடியாகாத விஷயம்.இத்தனைபேர் அந்த துறையில் வேலைபார்க்கும் அவசியம் இல்லை என்பதால் இதில் அத்தியாவசிய துறைகளை தவிர மற்றது அனைத்தையும் தனியார் மயமாக்கலாம்.

//அதற்காக அரசுக்கு வருமானமாக வரும் வரிப் பணத்தை எடுத்து சம்பளம் கொடுக்க பயன்படுத்தாதே என்கிறீர்கள். அப்போ, அந்தப் பணத்தை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பணக்காரர்களுக்கு நீச்சல் தடாகம் கட்டிக் கொடுக்க சொல்கின்றீர்களா? ஏழைகள் வீட்டில் அடுப்பெரியா விட்டாலும் பரவாயில்லை. பணக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைக்க சொல்கின்றீர்களா?//

மக்களின் பணத்தை மக்களுக்கெ திருப்பி தரலாம்.அதாவது வருமானவரி,சேல்ஸ் டாக்ஸ் ஆகியவற்றை குறைக்கலாம். குறைந்த வரி, சிறிய பொதுதுறை, நிறைந்த மகிழ்ச்சி...

Kalaiyarasan said...

திரு. ஜெய் யாருக்காக இவ்வளவு பாடுபடுகின்றார் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். என்றாலும் அவரே தனது மக்கள் விரோத கருத்துகளை இவ்வாறு இனங்காட்டிக் கொள்கிறார்.
//மக்களின் பணத்தை மக்களுக்கெ திருப்பி தரலாம்.அதாவது வருமானவரி,சேல்ஸ் டாக்ஸ் ஆகியவற்றை குறைக்கலாம். குறைந்த வரி, சிறிய பொதுதுறை, நிறைந்த மகிழ்ச்சி...//
அவர் மக்கள் என்று குறிப்பிடுவது நெருக்கடிக்கு காரணமான பணக்கார வர்க்கத்தை தான். கிரீசில் அந்த வர்க்கம் ஏற்கனவே வருமான வரி கட்டாமல் ஏய்த்து வருகின்றது. இந்த லட்சணத்தில் ஜெய் சொன்னது போல நடந்து கொண்டால் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். மக்கள் பாடு தான் திண்டாட்டமாகி விடும். சுகாதாரத் துறை போன்ற அத்தியாவசிய சேவைகளை அரசு நடத்தலாம் என்று ஜெய் அனுமதி வழங்குகின்றார். வரிகளை குறைத்தால் இந்த அத்தியாவசிய சேவைகளுக்கு பணம் எங்கிருந்து வரும்?

22 % பொதுத் துறை ஊழியர்கள் கடமையாற்றுவதால் தான் இந்த நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாக கருதப்படுகின்றன. ஜெய் போன்ற பலர் அந்த நாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்புகிறார்கள். (அதிக சம்பளம் + வசதியான வாழ்க்கை) ஜெய் ஆலோசனை கூறுவது போல நடந்து கொண்டால் அவை இந்தியா போல, ஆப்பிரிக்கா போல வந்து விடும். (வல்லவன் மட்டும் பிழைத்துக் கொள்ளலாம்.) அமெரிக்காவில் ஏற்கனவே மத்திய வங்கி உட்பட எல்லாமே தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது உண்மை தான். ஆனால் அங்கே 18 மில்லியன் ஏழைகள் வாழ வழியற்று திண்டாடுவது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. அந்த நிலைமை ஐரோப்பாவில் இல்லை என்றால் அதற்கு காரணம் ஜெய் குற்றம் சாட்டும் பொதுத்துறை தான். அவரின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பாவில் ஏழைகள் அதிகரிப்பார்கள். ஐரோப்பா இன்னொரு ஆப்பிரிக்காவாக காட்சியளிக்கும். செல்வந்தர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டே போவார்கள். (வரிகள் குறைக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.) ஏழைகள் பட்டினி கிடந்தது சாக வேண்டியது தான்.

ஆகவே மனிதநேயத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, இரக்கமற்ற மக்கள் விரோதக் கருத்துகளை பரப்பி வரும் ஜெய் போன்றவர்களுடன் வாதிப்பதில் அர்த்தமில்லை.

Jai said...

//அவர் மக்கள் என்று குறிப்பிடுவது நெருக்கடிக்கு காரணமான பணக்கார வர்க்கத்தை தான். கிரீசில் அந்த வர்க்கம் ஏற்கனவே வருமான வரி கட்டாமல் ஏய்த்து வருகின்றது. இந்த லட்சணத்தில் ஜெய் சொன்னது போல நடந்து கொண்டால் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். மக்கள் பாடு தான் திண்டாட்டமாகி விடும். //

வருமானவரி கட்டாதவனுக்கு வருமானவரி எத்தனைசதவிகிதம் இருந்தால் என்ன?கலையரசன்....வருமானவரி குறைந்தால் மாதசம்பளகாரர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும்,சிறு தொழிலதிபர்களுக்கும் இன்னும் பலருக்கும் நன்மை.சேல்ஸ்டாக்ஸ் குறைந்தால் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை.

//சுகாதாரத் துறை போன்ற அத்தியாவசிய சேவைகளை அரசு நடத்தலாம் என்று ஜெய் அனுமதி வழங்குகின்றார். வரிகளை குறைத்தால் இந்த அத்தியாவசிய சேவைகளுக்கு பணம் எங்கிருந்து வரும்? //

நான் வரிகளை முழுவதுமாக ஒழிக்க சொல்லவில்லையே?தேவையற்ற அரசு ஊழியர்களை தனியார்மயம் மூலம் குறைத்து அவர்களுக்கு தரப்படும் சம்பளம், அரசு கம்பனிகளில் செய்யபடும் முதலீடு ஆகியவற்றை மக்களுக்கு வரிகுறைப்பு மூலம் திருப்பிதர தான் சொன்னேன்.சேல்ஸ்டாக்ஸ் குறைந்தால் ஏழைகளுக்கு தானே வாழ்க்கைதரம் உயரும்?

//22 % பொதுத் துறை ஊழியர்கள் கடமையாற்றுவதால் தான் இந்த நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாக கருதப்படுகின்றன. //

இல்லை.எந்த நாடும் முன்னேறியநாடாவது மக்களின் வாழ்க்கைதரத்தில் தான்.வாழ்க்கைதரம் உயர காரணம் வேலை வாய்ப்பு.அதை தனியார்துறையே சிறப்பாக அளிக்க இயலும்.

//ஜெய் போன்ற பலர் அந்த நாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்புகிறார்கள். (அதிக சம்பளம் + வசதியான வாழ்க்கை) //

இது நீங்களாக செய்துகொள்ளும் கற்பனை.

//அவரின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பாவில் ஏழைகள் அதிகரிப்பார்கள். ஐரோப்பா இன்னொரு ஆப்பிரிக்காவாக காட்சியளிக்கும். செல்வந்தர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டே போவார்கள். (வரிகள் குறைக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.) ஏழைகள் பட்டினி கிடந்தது சாக வேண்டியது தான்.//

அரசு கம்பனிகள் தனியார்மயமானால் கிரேக்கம் இப்போதிருப்பதை விடமுன்னேறும்.பிற ஐரோப்பியநாடுகளின் நிலையையாவது அடையும்.வரிகள் அதிகரித்தால் தான் ஒரு தேசம் அழிவுநிலைக்கு செல்லும்.