Wednesday, January 27, 2010

புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்

1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். "என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது...." (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியே வீசுகின்றனர்.)

உலகமெங்கும் தமிழீழம் என்ற சொல்லை ஒலிக்க வைத்த அந்த குரலுக்கு சொந்தமானவர் கிருஷ்ணா வைகுந்தவாசன். பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த முன்னாள் நீதிபதி. ஐ.நா.சபையில் கிருஷ்ணாவின் அதிரடி உரை, இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சுதந்திரன் என்ற தீவிர தமிழ் தேசியவாத பத்திரிகை, கிருஷ்ணா முடிக்காத முழுமையான உரையை வெளியிட்டது. அடுத்தடுத்து கிருஷ்ணா பற்றிய தகவல்களை வெளியிட்டு, ஈழத் தமிழரின் குரலை உலகத் தலைநகரில் ஒலிக்க வைத்த மாபெரும் வீரனாக போற்றியது. வெளிநாடொன்றில் நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத தனி மனிதனான கிருஷ்ணாவுக்கு பலர் உரிமை கொண்டாடினார்கள்.

அமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கிருஷ்ணாவை தனது பிரமுகராக தத்தெடுத்துக் கொண்டது. இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில், அப்போது தலைமறைவாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் கிருஷ்ணாவின் செயலைக் கண்டித்து அறிக்கை விட்டனர். "நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசு" என்று அதற்கு தலைப்பிட்டிருந்தது. சொந்த மண்ணில் தமிழீழ மக்களின் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டிருப்பதால் ஆதரிக்க முடியாது என தெரிவித்தனர். சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழ அரசு" அமைப்பது தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படுகின்றது. இந்தப் பிரகடனத்தை செய்தவர், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகரான தியாகராசாவின் மகன் ருத்திரகுமார்.

கற்பனைக்கும் எட்டாத வரலாற்றுத் திருப்புமுனைகளைக் கண்ட முப்பதாண்டு கால தமிழ்த் தேசியவாத அரசியல், ஆரம்பித்த புள்ளிக்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவிற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் கடந்த இருபது வருடங்களுக்குள் புலம்பெயர்ந்தவர்கள். அதாவது ஈழப்போர் ஆரம்பமான ஆண்டாக கருதப்படும் 1983 க்குப் பின்னர் வந்தவர்கள். அதற்கு முன்னர் வெளிநாடு சென்று வாழ்வதென்பது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கே சாத்தியமான விஷயம். ஆனால் ஒருவழிப் பயணச் சீட்டுடன் அகதி அந்தஸ்து கோரலாம் என்ற தகவல் அறிந்து, ஓரளவு வசதியானவர்கள் கூட வெளிநாடுகளுக்கு சென்றார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு ஒத்துப்போன மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்து இவர்கள் மாறுபட்டு நின்றனர். தமது ஊர் பழக்கவழக்கங்களை அப்படியே பெயர்த்து சென்று, தாம் குடியேறிய நாடுகளிலும் பின்பற்றினார்கள். இப்படித்தான் சமயச் சடங்குகளும், சாதிய இறுக்கங்களும் கூடவே சென்றன.

இருப்பினும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே ஊரை சேர்ந்தவர்கள் பிரிந்து வேறு வேறு நாடுகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். புலம்பெயர்ந்து இரண்டாவது தாயகமாக்கிக் கொண்ட நாட்டில் கூட, ஈழத்தமிழர் சமூகம் பல்வேறு சாதிகளின், பிரதேசங்களின் கூட்டுக்கலவையாக இருந்தது. ஊரில் சம்பந்தமில்லாத சமூகப்பிரிவினர், குடியேறிய நாடுகளில் கலந்து பழகவேண்டிய நிர்ப்பந்தம். இவர்களை இணைக்கும் பாலமாக விளங்கியது தமிழ் மொழி ஒன்று மட்டுமே. மொழி என்ற அடிப்படையில் இருந்து வளர்ந்த தமிழீழ தேசியமும் புலம்பெயர்ந்த தமிழரை கவ்விக் கொண்டதில் வியப்பில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள குடிமைச் சமூகத்தில் அந்நியப்பட்டு விலகி நின்றவர்களுக்கு தமிழ் தேசியம் புகலிடம் அளித்தது. வெள்ளயினத்துடன் ஒட்ட முடியாத இரண்டாவது தலைமுறையினரின் மனதிலும் "தமிழீழ பிரஜை" என்ற கருத்தியல் பெருமிதத்தை கொடுத்தது.

"நாடுகடந்த தமிழீழ அரசு" என்பது ஒரு அரசியல் விஞ்ஞான கற்பிதம். "புலம்பெயர்ந்த தமிழீழம்" என்பது ஒரு சமூகவிஞ்ஞான கற்பிதம். முன்னையது ஒரு கனவு, பின்னையது நிதர்சனம். அரசு என்பது சில புத்திஜீவிகளின் கூட்டமைப்பு. தான் சார்ந்த சமூகத்தை வழிநடத்த, தலைமை தாங்க, அல்லது அடக்குவதற்கு என கட்டமைக்கப்படுகின்றது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் நிலப்புரபுத்துவ அரச அதிகாரம் மறைந்து, அந்த வெற்றிடத்தில் குடிமைச் சமுதாயம் தோன்றியது. "அனைவரும் இந்நாட்டு குடிமக்கள்" என்ற கோஷத்துடன் பிரெஞ்சுப் புரட்சி குடியரசை அறிமுகப்படுத்தியது. ஒரு நாட்டில் ஆட்சி முறை பாராளுமன்ற ஜனநாயகம், சர்வாதிகாரம் எதுவாக இருப்பினும் அது குடி+அரசு ஆக கருதப்படுகின்றது. அதற்கு காரணம் ஆட்சிக்கு வருபவர்கள் அரச பரம்பரையினர் அல்ல, மாறாக நிர்வாகத்திறன் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்.

காலனியாதிக்க சாம்ராஜ்யங்களின் காலத்திலேயே நாடு கடந்த அரசுகள் இருந்துள்ளன. லண்டனில் உயர்கல்வி கற்ற இந்தியர்களின் காங்கிரஸ் கட்சி, நாடுகடந்த அரசாகவும் செயற்பட்டது. ஒரு வகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அந்த தோற்றப்பாட்டை ஊக்குவித்திருந்தது. வெள்ளையர்களைப் போல சிந்திக்க கூடிய இந்தியர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. அதே நேரத்தில் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்தனர். இது அவர்களது எதிர்கால அரசியல் திட்டமிடலை கருத்தில் கொண்டிருந்தது. அவர்கள் நிர்ணயித்த தேசியத்திற்குள், சில குறுந்தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. சில இடங்களில் கொடுத்த வாக்குகளை மீறி துரோகம் இளைத்தனர்.

இந்தோனேசியாவை காலனிப்படுத்தியிருந்த ஒல்லாந்து இராணுவத்தில், பல "மொலுக்கு" இன போர்வீரர்கள் கடமையாற்றினார்கள். மொலுக்கு என்ற தீவுக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், பெரும்பான்மை இந்தோனேசியர்களை விட முற்றிலும் வேறுபட்ட மொழி பேசும் மொலுக்கர்கள், தமக்கென தனிநாடு கோரினர். இரண்டாம் உலகப்போரில் மொலுக்கு வீரர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒல்லாந்தர்கள் தனிநாட்டிற்கு சம்மதித்தார்கள். ஆனால் இறுதியில் மொலுக்கர்களின் தலைவிதியை இந்தோனேசியர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓடினார்கள். ஒல்லாந்தரின் துரோகத்தால் "மொலுக்கு தாயகக் கனவு" கருவிலேயே சிதைந்தது. மொலுக்கர்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு நெதர்லாந்திற்கு புலம்பெயர்வது. நெதர்லாந்தும் மொலுக்கு அகதிகளை வரவேற்று தங்கவைத்துக் கொண்டது.

மொலுக்கர்களின் தாயகத்திற்கான போராட்டம், புலம்பெயர்ந்த நெதர்லாந்திலும் தொடர்ந்தது. மொலுக்கு பெற்றோர்கள் மொலுக்கு தேசியக் கருத்தியலை தமது பிள்ளைகளுக்கு கடத்தினர். நெதர்லாந்திலேயே வளர்ந்து பருவ வயதைக் கடந்த இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் மத்தியில் "நாடு கடந்த மொலுக்கு தேசியம்" பிரபலமானது. நெதர்லாந்து ஏகாதிபத்திய அரசு தமது இனத்திற்கு செய்த துரோகத்தை அவர்கள் மறக்கவுமில்லை. சில தீவிரவாத இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள். 1977 ம் ஆண்டு, வட நெதர்லாந்து மாகாணம் ஒன்று, முதலாவது பயங்கரவாத நில நடுக்கத்தை எதிர்கொண்டது. 40 பயணிகளுடன் ஒரு ரயில்வண்டி, 105 பிள்ளைகளுடன் ஒரு பாடசாலை, ஆயுதமேந்திய மொலுக்கு இளைஞர்களால் பணயம் வைக்கப்பட்டன. "மொலுக்கு தேசத்திற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். சிறையில் உள்ள மொலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்." இது போன்ற கோரிக்கைகள் விடுக்கப் பட்டன.

நெதர்லாந்து அரசும், மக்களும் இந்த வன்செயலை பயங்கரவாதமாகப் பார்த்தனர். நெதர்லாந்து கமாண்டோ படையினரின் திடீர் தாக்குதலில் ஆயுதபாணிகள் சுட்டுக் கொல்லப்பட, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அந்த சம்வத்திற்குப் பின்னர் கூட, நெதர்லாந்து அரசு மொலுக்கு விடுதலைக்கு சார்பாக ஒரு வார்த்தை தன்னிலும் பேசவில்லை. இளந்தலைமுறை மொலுக்கர்கள் நெதர்லாந்து சமூகத்தினுள் உள்வாங்கப்பட்டு விட்டனர். என்றாவது ஒரு நாள், மொலுக்கு தீவுகளில் மதக்கலவரம் வெடிக்கும் போது மட்டும், ஊடகங்கள் மொலுக்கர்களின் உறவினர்களைப் பற்றி கரிசனத்துடன் விசாரிப்பார்கள். அதற்குப் பிறகு எல்லோரும் மறந்து விடுவார்கள்.

நெதர்லாந்தின் அரசியல் தலைநகரம் டென் ஹாக்கில், "நாடு கடந்த குர்திஸ்தான் அரசு" தோற்றுவிக்கப்பட்டது. துருக்கியில் தனி நாடு கோரும் குர்தியரின் விடுதலை அமைப்பான பி.கே.கே.யின் தலைமையின் கீழ் "நாடு கடந்த பாராளுமன்றம்" இயங்கி வந்தது. துருக்கியின் ராஜதந்திர பயமுறுத்தல்களுக்கு மத்தியில், நெதர்லாந்து அரசு தனி நபர் சுதந்திரக் காப்பாளனாக காட்சி தந்தது. இருப்பினும் 1995 ம் ஆண்டு நிறுவப்பட்ட நாடு கடந்த குர்திஷ் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ஐரோப்பிய நாடுகளில் பி.கே.கே. ஒரு பயங்கரவாத இயக்கமாக தடை செய்த சட்டம் பாராளுமன்ற செயற்பாடுகளை பாதித்தது. துருக்கியுடன் நடந்த அரசியல்-பொருளாதார பேரம் பேசல் முடிவுக்கு வந்தது மற்றொரு காரணம். புகலிடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த சிறுபான்மை இனத்தின் அரசியல் செயற்பாடுகளை சகித்துக் கொள்வது ஒரு எல்லை வரையில் தான். அவர்கள் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் அரசை தமக்கு ஏற்றவாறு வளைப்பதே நோக்கம்.

பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களை கட்டுபாட்டுடன் வளர்த்தது. எண்பதுகளில் ஈழ விடுதலைக் குழுக்களின் தலைவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் தங்கியிருந்தனர். அப்போதே அவர்களுக்கிடையில் நாடு கடந்த அரசு குறித்த எண்ணக்கரு தோன்றியிருந்தது. இலங்கை அரசும், தமிழ் விடுதலை இயக்கங்களும் கலந்து கொண்ட திம்பு பேச்சுவார்த்தையின் போதும் ஒரு அரசுக்கான திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. (புதிய அரசு எந்தளவு அதிகாரம் கொண்டது என்பது வேறு விஷயம்.) அன்று இந்தியா பக்கபலமாக இருந்த போதிலும், இரு தரப்பும் நம்பிக்கையின்றி கலந்து கொண்டதால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னொரு வகை நாடுகடந்த அரசை அறிமுகப்படுத்தியது. வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பகுதிகளில், ஒரு பொம்மை அரசை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கென நாடு கடந்த ஈழ இராணுவம் ஒன்று தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் பரவியுள்ள ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இருந்து இளைஞர்கள் திரட்டப்பட்டனர். அவர்களுக்கு இந்திய இராணுவம், தமிழ் நாட்டில் வைத்து பயிற்சி வழங்கி, ஆயுதங்களையும் கொடுத்தது. ஈ.என்.டி.எல்ப். என்ற பெயரில் இயங்கிய ஆயுதக் குழு, இந்திய இராணுவத்துடன் ஈழப் பகுதிகளில் நிலை கொண்டது.

இந்திய அமைதிப் படையின் ஆதரவில் வட-கிழக்கு மாகாண சபை திருகோணமலையில் இருந்து இயங்கியது. தமிழீழம் என்ற கற்பிதத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, திருகோணமலையை தலைநகராக தெரிவு செய்திருந்தது. பிற ஈழத் தமிழ் தேசிய அமைப்புகளும் அந்த தெரிவை கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொண்டிருந்தன. இந்திய இராணுவம் வெளியேறும் காலத்தில் மாகாண சபைக்கு முதல்வராக இருந்த ஈ.பி.ஆர்.எல்ப். வரதராஜப் பெருமாள் திருகோணமலையில் ஈழம் பிரகடனம் செய்திருந்தார். சில நாட்களின் பின்னர் "ஈழத்தின் முதல் பிரதமரும்", பரிவாரங்களும், அவர்களது குடும்பங்களும் நாடு கடந்து இந்தியா சென்றனர். இன்றைக்கும் ஈ.என்.டி.எல்ப். எச்சசொச்சங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு நாடு கடந்த தமிழீழம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது, திபெத் என்ற தேசத்தை ஆண்டு கொண்டிருந்த மதகுரு தலாய் லாமாவும்,அவரது ஆதரவாளர்களும் குடும்பத்துடன் வெளியேறினார்கள். இமாலய பனிச் சிகரங்களை தாண்டி இந்தியா வந்த லாமா குழுவினருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் எதிரியான இந்தியாவில் அவர்கள் திபெத்தியர்கள் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இந்தியாவில் தலாய் லாமா தலைமையில் நாடு கடந்த திபெத் அரசாங்கம் உருவானது.

திபெத்தில் தலைமை மதகுருவாக நிலப்பிரபுத்துவ ஆட்சி நடத்தியவர்கள் தலாய் லாமா குழுவினர். இந்தியாவில் அமைந்த நாடு கடந்த அரசில் தவிர்க்கவியலாது பிற அரசியல் சக்திகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. இந்தியா, மற்றும் மேற்குலக நட்பு நாடுகளின் ஆதரவோடு மீண்டும் திபெத் தாயகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் சீனாவுக்கு ராஜதந்திர நெருக்கடி கொடுக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்ற உண்மை பின்னர் தான் தெரியவந்தது. இதற்கிடையே புகலிடத்தில் கழிந்த அரை நூற்றாண்டு, திபெத்தினுள் வாழும் மக்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது.

தலாய் லாமா காலத்தில் பின்தங்கியிருந்த ஒரு பிரிவினர் சீன ஆக்கிரமிப்பு காலத்தில் வசதிவாய்ப்புகள் கைவரப் பெற்றனர். இன்று மீண்டும் சுதந்திர திபெத் உருவாகி, தலாய் லாமாவின் நாடு கடந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னர் போல மக்கள் ஆதரவு கிட்டும் எனக் கூற முடியாது. கணிசமான தொகையினர் மாற்று அரசியலை நாடக் கூடிய சாத்தியம் உண்டு. நாடு கடந்த அரசு தாயகம் திரும்பினால் எந்தளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை பாலஸ்தீன உதாரணத்தில் பார்க்கலாம்.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் வெளியேறிய பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானிலும், லெபனானிலும் தஞ்சம் கோரினார்கள். அந்த அகதிகளில் இருந்து தோன்றியவை தாம் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் இருந்த பாலஸ்தீன பகுதிகளில் ஆயுதபாணிகள் ஊடுருவுவது கடினமாக இருந்தது. பி.எல்.ஒ.வின் கெரில்லா தாக்குதல்கள் பல தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில் பி.எல்.ஒ. தலைவர் யாசீர் அரபாத் நாடு கடந்த அரசு ஸ்தாபிக்கும் முயற்சியில் இறங்கினார். அரபாத்தின் தலைமை வெளியில் பாலஸ்தீன சுதந்திர நாடு குறித்து பேசி வந்தாலும், சமஷ்டி அலகை ஏற்றுக் கொள்ள சித்தமாக இருந்தது. அரபு நாடுகளும், சோஷலிச நாடுகளும் பி.எல்.ஒ. தலைமையிலான பாலஸ்தீன அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் தான் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பாலஸ்தீன அதிகார சபை ஏற்படுத்த மேற்குலகம் முன்வந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, நல்லுள்ளம் கொண்ட மேற்குலகம் பிரச்சினையை தீர்க்க முன்வந்ததாக தெரியும். ஆனால் அமெரிக்கா தலைமையில் ஒரு முனைப்பான புதிய உலக ஒழுங்கு திருப்புமுனையை கொண்டுவந்தது. "இத்துடன் உலக வரலாறு முற்றுப் பெறுகின்றது" என சில அறிவுஜீவிகள் கூறியதை பி.எல்.ஒ. நம்பி விட்டது. அமெரிக்காவின் தலைமைப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, இஸ்ரேல் என்ற தேசத்தை அங்கீகரித்தது. அதற்குப் பெயர் சமாதானம் அல்ல, சரணாகதி.

பாலஸ்தீன பகுதிகளில் பி.எல்.ஒ. பெருமளவு மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தமைக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. முதலாவது, பி.எல்.ஒ. என்பது பல முக்கிய விடுதலை இயக்கங்களின் கூட்டமைப்பு. இரண்டாவது, யாசீர் அரபாத்தின் மக்களை வசீகரிக்கும் தன்மை. மூன்றாவது, சர்வதேச ஆதரவு (தற்போதும் பாலஸ்தீனப் பிரச்சினை உலகெங்கும் எதிரொலிக்கிறது.) பி.எல்.ஒ. புகலிடத்தில் நாடு கடந்த அரசில் மும்முரமாக ஈடுபட்ட நேரம், பாலஸ்தீனத்தில் எதிர்பாராத மாற்றங்கள் தோன்றின. இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஹமாஸ் போன்ற சக்திகளை, இஸ்ரேலே ஊக்குவித்தது. பாலஸ்தீன தேசியக் கொள்கையை சிதைப்பதே இதன் நோக்கம். இருப்பினும் அரபாத்தும், பி.எல்.ஒ.வும் இஸ்ரேலின் காலடியில் வந்து விழுந்த பின்னர் ஹமாஸை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதன் பின்னர் பாலஸ்தீன அரசியல் களம் முழுமையான மாற்றத்தைக் கண்டது. தேசியவாத பி.எல்.ஒ. ஒருபுறம், மதவாத ஹமாஸ் மறுபுறம் என பாலஸ்தீன சமுதாயம் இரண்டாக பிளவுபட்டது. இந்தப் பிரிவினை இன்று வரை நீடிக்கின்றது.

அரபு-முஸ்லிம் நாடுகள் சகோதரத்துவம் குறித்து பேசுவது ஏட்டளவில் தான். முதலும் கடைசியுமாக தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உண்மையை பி.எல்.ஒ. காலம் தாழ்த்தி புரிந்து கொண்டது. ஜோர்டானில் நிலை கொண்டிருந்த ஆயுதமேந்திய பாலஸ்தீன போராளிகள் மறைந்திருக்கும் ஆபத்தாக கருதப்பட்டது. ஜோர்டான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி அதனை மெய்ப்பித்தது. பாலஸ்தீன நாடு கடந்த அரசும், போராளிகளும் ஜோர்டானில் இருந்து லெபனானுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். லெபனான் (அரபு) மக்களும் ஆயுதமேந்திய பாலஸ்தீன போராளிக்குழுக்களின் அடாவடித்தனங்களால் வெறுப்புற்றனர். இஸ்ரேலிய இராணுவம் லெபனான் மீது படையெடுத்த போது, லெபனான் மக்களின் அதிக பட்ச வெறுப்பு (பாலஸ்தீன) அகதி முகாம் படுகொலையில் பிரதிபலித்தது. பி.எல்.ஒ.வின் தலைமையகம் துனிசியாவிற்கு புலம்பெயர்ந்தது. எகிப்து, ஜோர்டான் போன்ற அயலில் உள்ள அரபு நாடுகள், இஸ்ரேலுடன் உடன்பாட்டிற்கு வருமாறு அறிவுறுத்தினார்கள். அதுவே நோர்வே தலைமயிலான சமாதான ஒப்பந்த கைச்சாத்திட வழிவகுத்தது.

ஏதாவதொரு நாட்டில் சுதந்திரம் கோரும் தேசிய இனத்தின் பிரதிநிதிகள், தமது தேசியக் கனவை நனவாக்கும் நோக்கோடு செயலூக்கத்தோடு பாடுபடுகின்றனர். எந்த அரசை எதிர்த்து போராடுகின்றனரோ, அதனோடு பகைமை கொண்ட வல்லரசு நாட்டில் நாடு கடந்த அரசை ஸ்தாபிக்கின்றனர். இது காலப்போக்கில் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. குறிப்பிட்ட பகை வல்லரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வருவதை தவிர்க்கவியலாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் போலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லிபரல்கள், இங்கிலாந்தில் தஞ்சம் கோரி இருந்தனர். லண்டனில் நாடு கடந்த அரசுகளை அமைத்துக் கொண்டு, நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை நோக்கிய பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இதே போன்று ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் யூனியனில் புகலிடம் கோரியிருந்தன. இறுதியில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளால் விடுவிக்கப்பட்ட நாடுகளில் லிபரல் அரசாங்கங்களும், சோவியத் படைகள் விடுதலை செய்த நாடுகளில் சோஷலிச அரசாங்கங்களும் அமைந்தமை வரலாறு. லண்டனிலும், மொஸ்கோவிலும் நாடு கடந்த அரசுகளை அமைத்தவர்கள் தமது நட்பு சக்தியை சித்தாந்த ரீதியாக இனங்கண்டிருந்தார்கள்.

சித்தாந்தங்களுக்கு விடை கொடுத்த நவீன உலகம் பூகோள அரசியலை முக்கியமாக கருதுகின்றது. நேட்டோ படைகளின் உதவியிலான கொசோவோ விடுதலையும், ரஷ்ய படைகள் தலையீடு செய்த அப்காசிய, ஒசெத்திய விடுதலையும் பூகோள அரசியல் நலன்களுக்குட்பட்டவை. தொண்ணூறுகளுக்கு பிறகு தோன்றிய புதிய சுதந்திர நாடுகள் அனைத்தும் மேற்குலக நலன் சார்ந்து உருவாக்கப்பட்டவை. இந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் மேற்குலக சார்புத் தன்மை பரகசியமானது. இந்த நாடுகளின் புதிய தலைவர்கள் பலர் அமெரிக்காவில் இருந்து சென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், பல சோஷலிச நாடுகள் காணமல் போயின. இது சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பெரும் பின்னடைவை தோற்றுவித்தது. இருப்பினும் கம்யூனிச நம்பிக்கையாளர்கள் மறையவில்லை. உலகத் தமிழ்த் தேசியவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த "வன்னித் தமிழீழம்" வீழ்ந்த போதிலும், வெளிநாடுகளில் அது உயிர்ப்புடன் உள்ளது. "தமிழீழம்" என்ற கோட்பாடு புலிகளால் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மை தான். தமிழரசுக் கட்சியின் எண்ணக்கருவுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சித்தாந்த விளக்கம் கொடுத்தது. விரைவில் அது தமிழ் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் தத்துவமாகியது. அதன் இரண்டாவது தலைமுறை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தது. மூன்றாவது தலைமுறை மேற்கத்திய நாடுகளில் "நாடு கடந்த தமிழீழ தேசியத்தின்" பின்னால் அணிதிரள்கின்றது.

தமிழ் தேசியவாதம் இன்று உலக வல்லரசுக் கோள்களின் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. வருங்கால வல்லரசின் துணையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இருந்திருப்பின், "நாடு கடந்த தமிழீழ அரசு" சீனாவில் தான் அமைந்திருக்கும். ஈழப்போர் ஆரம்பமாகிய காலமான என்பதுகளின் முற்பகுதியில் இருந்து மேற்குலக நாடுகள் இலங்கை அரசை ஆதரித்து வந்துள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா என்றால் "கம்யூனிஸ்டுகள்" என நினைக்கும் வலதுசாரி சக்திகள், தமிழ் தேசிய இயக்கத்தை மேற்கு நோக்கி தள்ளிவிட்டன. எழுபதுகளில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயுதமேந்திய வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தக் காரணத்தாலும் தமிழ் தேசியவாதிகள் சீனா மீது வெறுப்புக் கொண்டிருந்தனர்.

அமெரிக்க ஆதரவில் மலர்ந்த இஸ்ரேல் குறித்து பெருமளவு சிலாகித்து பேசப்படுகின்றது. சியோனிச காங்கிரஸ், இஸ்ரேலுக்கு திரும்பும் யூத தேசியவாதிகளின் நாடு கடந்த அரசாக செயற்பட்டது. அந்த உதாரணத்தை தமிழீழ தேசியவாதிகள் தமக்கும் பொருத்திப் பார்க்கின்றனர். இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு காரணியாக இருந்த பல முக்கிய அம்சங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் தேசிய மொழியான ஹீப்ரூ பேச்சு வழக்கில் மறைந்து போயிருந்தது. பல்வேறு ஐரோப்பிய மொழிகளை பேசிய போதிலும், யூதர்களுக்கு பொதுவான மதம் அவர்களை ஒன்று சேர்த்தது. மேலும் "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் எண்ணை வளம் கொண்ட அரபு நாடுகளை மேற்பார்வை செய்ய அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அவசியமானது. ஒரு வேளை இந்தியா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்திருப்பின், அமெரிக்க உதவியால் தமிழீழம் இன்று சாத்தியமாகியிருக்கலாம்.


[உன்னதம், (ஜனவரி 2010 ), இதழில் பிரசுரமானது.]

Tuesday, January 26, 2010

ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்

("ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?" - கட்டுரையின் இரண்டாம் பகுதி)

பேரழிவைக் கொண்டு வந்த கொரிய யுத்தத்தை தொடர்ந்து உலகம், அமெரிக்க சார்பு, சோவியத் சார்பு என இரு துருவங்களாக பிரிந்தது. இரு மேன்நிலை வல்லரசுகளும் தமது சார்பான நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தனர். இதனால் பல நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை. இருப்பினும் ஐ.நா. பெயரில் போர் முனைப்புகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உலகம் தப்பியது. சோவியத் யூனியனில் கோர்பசேவ் ஜனாதிபதியாகிய பின்னரே, இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்தது.

1990 ம் ஆண்டு, எண்ணெய் வளம் மிக்க, ஆனால் மேன்நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு கட்டுப்படாத சதாமின் ஈராக், குவைத் மீது படையெடுத்தது. குவைத் எண்ணெய்க் கிணறுகள் யாவும் பிரிட்டிஷ் கம்பனிகள் வசம் இருந்தன. ஈராக்கின் ஆக்கிரமிப்பால் அவற்றை இழந்த பிரித்தானியா ஐ.நா.சபையில் முறையிட்டது. இதே நேரம் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு போட்டியாக ஈராக் வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஐ.நா.சபையில் பெரும்பான்மை ஆதரவுடன், பன்னாட்டுப் படை குவைத்தை மீட்க சென்றது. குவைத் மீட்பதற்காக நடந்த வளைகுடாப் போரில், "பேட்ரியட்" போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும், பேட்ரியட் ஆயுதம் தயாரித்த கம்பெனி கொள்ளை லாபமீட்டியது.

ஈராக்கும், குவைத்தும் ஒரே நாடாகவிருந்ததும், பிற்காலத்தில் ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டதும் உலகம் வசதியாக மறந்து விட்ட வரலாறு. வளைகுடாப் போரின் பின்னர், முன்பு பிரிட்டன் வசம் இருந்த குவைத் எண்ணைக் கிணறுகள் யாவும் அமெரிக்க வசமாகின. அயல் நாட்டை ஆக்கிரமித்த குற்றத்தை ஈராக் மட்டும் செய்யவில்லை. இஸ்ரேல் சிரியா,லெபனானின் பகுதிகளை ஆக்கிரமித்தது. ஸ்பானிய காலனியான மேற்கு சஹாராவை ஆக்கிரமித்த மொரோக்கோ, அதனை தனது நாட்டுடன் இணைத்தது. இவற்றின் மீதான ஐ.நா. தீர்மானங்களுக்கு யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை.

ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியத்திற்கு பலியான இன்னொரு நாடு சோமாலியா. 1993 ல் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு, பல ஆயுதக் குழுக்கள் அதிகாரத்திற்கு போட்டியிட வழிவகுத்தது. நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டவென, அமெரிக்கா தலைமையில் ஐ.நா. படை அனுப்பப்பட்டது. எதிர்பாராவிதமாக (அல்லது தவிர்க்கவியலாது) ஐ.நா. சமாதானப் படைக்கும், முதன்மை ஆயுதக் குழு ஒன்றுக்குமிடையில் சண்டை மூண்டது. நடுநிலை வகிக்க சென்ற ஐ.நா.படை தானே எதிரியாக களத்தில் இறங்கியது. யுத்தம் என்று வந்து விட்டால், மனித உரிமைகளை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வேலியே பயிரை மேய்வது போல, ஐ.நா. இராணுவம் மனித உரிமைகளை மீறியது.


அப்பாவி சோமாலிய மக்கள், வெள்ளையின இராணுவவீரர்களினால் இழிவுபடுத்தப் பட்டனர். ஒரு சம்பவத்தில் பெல்ஜிய நிற வெறிப் படையினர், ஒரு சோமாலிய சிறுவனை கைது செய்தனர். அவனை சித்திரவதை செய்து, எரியும் நெருப்பின் மீது இறைச்சி போல வாட்டி வருத்தினார்கள். அந்த சம்வத்தை இன்னொரு படைவீரர் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி விட்டார். ஐ.நா. படையினரின் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆதாரமான புகைப்படங்கள், ஐரோப்பிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. நீதிமன்றத்தில் முறையிட சிறந்த ஆதாரம் கிடைத்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கருதினார்கள். சம்பந்தப்பட்ட படைவீரர்கள் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். படைவீரர்கள் மீதான் குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப் பட்ட போதிலும், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து விட்டது!

அண்மைக்காலங்களில் நடந்த போர்களில் பொஸ்னியா யுத்தம் முக்கியமானது. அதிலும் "அமைதிப் பூங்காவான" ஐரோப்பாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியர்கள் உன்னத நாகரீகம் கொண்ட மானிடர்கள் என்ற மாயை அகன்றது. கேள்வி கேட்க யாருமின்றி இனப்படுகொலைகள் தொடர்ந்ததால், ஐ.நா. அமைதிப்படை அனுப்பப்பட்டது.
போஸ்னியாவின் பல பாகங்களிலும் ஐ.நா. பாதுகாப்பு வலையங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று "சிரபெனிசா". அங்கே "டச்பட்" என்ற பெயரில் நெதர்லாந்து இராணுவம் பாதுகாப்பு வழங்கியது. சிரபெனிசாவில் வாழ்ந்த பொஸ்னிய முஸ்லிம்கள், தமக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைத்து விட்டதாக நம்பினார்கள். சில நாட்களில் ஐ.நா. படையின் சுயரூபம் அம்பலமானது. சிரபெனிசா நகரை சுற்றி வளைத்த செர்பிய படைகள், மிக இலகுவாக பாதுகாப்பு வலையத்தை கைப்பற்றினார்கள். அகதிகளின் பாதுகாப்பிற்கென நிறுத்தி வைக்கப்பட்ட நெதர்லாந்து இராணுவம் தலை தெறிக்க ஓடியது. தமக்கு முன்னால் ஓடிய, (முஸ்லிம்) அகதிகள் மீது டாங்கிகளை ஏற்றி நசுக்கிக் கொண்டே சென்றார்கள். அந்தக் காட்சிகள் டச்பட் சிப்பாய் ஒருவனால் படமாக்கப்பட்டன. ஆனால் மேலதிகாரி ஒருவரின் தலையீட்டால் அழிக்கப்பட்டன.

இதன் பின்னர், டச்பட் உயர் அதிகாரிகள், செர்பிய இராணுவ தளபதிகளுடன் கூடிக்குலாவிய படங்கள் அம்பலமாகின. சிரபெனிசாவில் நடந்த அட்டூழியம் பற்றிய விபரங்கள் நெதர்லாந்து அரசுக்கு தெரிந்திருந்தும் மறைத்தது வருகின்றது. தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவது போல, ஆயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம் அகதிகளுக்கு நெதர்லாந்தில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இன்னொரு பக்கத்தில், நடைபெற்ற சம்பவங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செர்பிய பேரினவாதத்திற்கு உதவியது. போஸ்னியாவில் முஸ்லிம்களின் விகிதாசாரம் வெகுவாகக் குறைந்தது. இதனால் ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு "இஸ்லாமியக் குடியரசு" தோன்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

ஐ.நா.சபையின் இயலாமைக்கு காரணம் என்ன? ஐ.நா. சபையானது தனது செலவினங்களுக்கும், நிதி திரட்டலுக்கும், பணக்கார நாடுகளின் தயவில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. நிதி வழங்கும் மேற்குலக நாடுகள், நிதியை தமது சொந்த நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். ஐ.நா. மன்றத்தின் பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் மேற்குலக பிரதிநிதிகளாக இருப்பர். அவர்கள் தத்தமது நாடுகளின் வெளிவிவகார கொள்கை எதுவோ, அதையே ஐ.நா.வின் கொள்கையாக்குகின்றனர்.

ஐ.நா. வின் ஈழப் பிரச்சினை சார்ந்த கொள்கை வகுப்பும், மேற்குலக நலன் சார்ந்திருப்பது அதிசயமல்ல. மூன்றாமுலக தேசிய அரசுகள் அனைத்தும் முன்னை நாள் காலனிய எஜமானர்களால் உருவானவை. உள்நாட்டு மக்களின் விருப்பங்களை கேட்காமலே, காலனியாதிக்க நாடுகள் தாம் விரும்பியபடி எல்லைகளை வரையறுத்தன. புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகள் தோன்றும் போது, அங்கே கிளர்ச்சிகளும் தோன்றும். உள்நாட்டு யுத்தம், கிளர்ச்சி, சதிப்புரட்சி, இவ்வாறு ஆட்சியை மாற்ற எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா? முதலில் ஐ.நா. சபை ஈழம் என்ற தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றதா? பிரிட்டிஷார் வரையறுத்த இலங்கை என்ற தேசத்தின் எல்லையை மாற்றுவதற்கு ஐ.நா.சபை முன்வராது. கிழக்கு தீமோர் கூட முன்னாள் போர்த்துகேய காலனி என்பதாலேயே ஐ.நா. தலையிட்டது. மேற்குலகிற்கு சதாம் மீது அளவிட முடியாத ஆத்திரம் இருந்த போதிலும், ஈராக் எல்லையை மறுவரைபுக்கு உட்படுத்த முன்வரவில்லை. வட-ஈராக்கில் வாழும் குர்தியருக்கு நிபந்தனையற்ற ஆதரவு காட்டிய போதிலும், குர்திஸ்தான் என்ற தனியரசுக்கு தயாராக இல்லை.

இலங்கை சுதந்திரமடைந்து, ஐந்து வருடங்களுக்கு பின்னரே, அதற்கு ஐ.நா. அவையில் உறுப்புரிமை கிடைத்தது. அதற்கு காரணம், "இலங்கை ஒரு மேற்குலக சார்பு நாடு" என்ற காரணத்தால் சோவியத் யூனியன் எதிர்த்து வந்தது. இலங்கையில் தற்போதும் பிரிட்டன் எழுதி வைத்துப் போன சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பொருளாதாரத்தை பொறுத்தவரை மேற்குலகில் இருந்து வரும் கடன்களை இலங்கை அரசு மறுக்கவில்லை. தேசியமயமாக்கல் காலத்திலும் அந்நிய நாட்டு கடன்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அதை வைத்துக் கொண்டே திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு பேரம் பேசினார்கள். இலங்கை அரசு மேற்குலகம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் வரையில், அங்கே ஐ.நா. தலையீடு ஏற்படப் போவதில்லை. ஐ.நா. தலையிட்டு அமைதிப்படை அனுப்பிய நாடுகளைப் பட்டியலிட்டால், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் மேற்குலக பொருளாதார நலன்கள் தெளிவாகும்.

(முற்றும்)

கட்டுரையின் முதலாவது பகுதியை வாசிக்க:
ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?


Monday, January 25, 2010

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?

(பகுதி: ஒன்று)
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மயங்கி அது போன்ற ஒரு தலைப் பட்சமான அறிக்கை தயாரிப்பதாக சிலர் கருதலாம். ஆனால் அறிக்கையின் கீழே உள்ள உசாத்துணை பகுதியை பார்க்கும் ஒருவர் அதிர்ச்சியடையலாம். அரச சார்பு ஊடகங்கள், புலிகள் சார்பு ஊடகங்கள், நடுநிலை ஊடகங்கள், பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். அதாவது இவற்றின் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே தாம் மேற்படி முடிவுக்கு வந்ததாக எழுதியிருப்பார்கள்.

எப்போதும் அரசாங்கங்களை குறை கூறும் மக்கள், ஒரு போதும் பெரு மதிப்புக்குரிய ஐ.நா.சபையை குறை சொல்லத் தயங்குவார்கள். பொது மக்களின் "தயக்கத்தை" மேற்குலக அரசுகள் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. இரண்டாவது உலகப்போரினால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிதைவடைந்தது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 19 ம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்த பிரித்தானியா, 20 ம் நூற்றாண்டில் தள்ளாடியது. ஒரு காலத்தில் லாபங்களை அள்ளிக் குவித்த காலனிகள், தற்போது நஷ்டங்களை கொடுத்தன. இதனால் பிரித்தானியா, தனது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது. அவற்றில் இஸ்ரேலின் சுதந்திரம் முக்கியமானது.


அப்போது தான் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில், இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான பிரேரணை அமெரிக்காவால் முன்மொழியப்பட்டது. இதற்கு இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனின் சம்மதம் கிடைக்கவே, பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானது. யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் (இஸ்ரேல்) 51 % அரபுக்கள் வாழ்ந்தார்கள். இதனை பொறுக்க மாட்டாத சியோனிச அரசு, அந்த மக்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டது. அரபுக் கிராமங்களை சுற்றி வளைத்த ஆயுதபாணிக் குழுக்கள், நூற்றுக் கணக்கான மக்களை படுகொலை செய்தனர். இதைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான அரபுக்கள் இடம்பெயர்ந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பில் தப்பிய பாலஸ்தீன அகதிகள், மேற்கு ஐரோப்பாவுக்கோ, அல்லது அமெரிக்காவுக்கோ அகதிகளாக வரலாம் என்ற "அச்சம்" நிலவியது. பாலஸ்தீன அகதிகள் தமது நாடுகளுக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக, ஐ.நா. சபையின் உதவியை நாடின. அதன்படி ஜோர்டானிலும், லெபனானிலும் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் பல அகதி முகாம்கள் கட்டப்பட்டன. கடந்த அறுபது வருடங்களாக அந்த அகதி முகாம்களே, பாலஸ்தீனர்களின் நிரந்தர வதிவிடமாகி விட்டன. இன்று ஐ.நா. மன்றம் மட்டுமல்ல, எந்த ஒரு மேற்குலக நாடும் அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. இஸ்ரேலை பகைத்துக் கொள்ளக் கொட்டாது என்பதில் அவதானமாக உள்ளன.

முன்பெல்லாம் கடவுளின் பெயரால், அல்லது மதத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. 20 ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. அவ்வாறான தொடர் யுத்தங்களில் முதலாவது "கொரியாப் போர்." இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானை கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா ஜப்பானில் அணு குண்டு போட்டு தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டு தாக்குதல், அமெரிக்கா தன்னை வல்லரசு ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கின.

இதற்கிடையே சோவியத் படைகள் வட கொரியாவை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டிருந்தன. உலகப்போர் முடிவுற்ற உடனே, கொரியாவில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வட கொரியாவிலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் கொரியாவிலும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்து விட்டதால், கொரிய இணைப்பு பின் போடப்பட்டது. தென் கொரியாவில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஒரு இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. சதியில் பங்குபற்றிய அதிகாரிகள் முன்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். தற்போது அமெரிக்க விசுவாசிகளாக மாறி விட்டனர். இதே நேரம், வட கொரியாவில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த கிம் இல் சுங் புதிதாக உழைப்பாளர் கட்சி ஆரம்பித்தார். சோவியத் செஞ்சேனை உதவியுடன் கெரில்லாக் குழுக்களை அமைத்தார். "ஒருங்கிணைந்த கம்யூனிச கொரியா", கிம் இல் சுங்கின் லட்சியமாக இருந்தது. கிம் இல் சுங் தலைமையிலான கெரில்லாக்கள் கொரியா சுதந்திரப் போரை ஆரம்பித்தனர். ஆரம்பித்த சில மாதங்களிலேயே 90 % கொரியப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

கிம் இல் சுங்கின் படைகளின் முன்னேற்றம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இப்படியே விட்டால், "கம்யூனிச அபாயம்" ஆசியாவில் பரவி விடும். "உலகம் எதிர்நோக்கும் அபாயத்தை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு" ஐ.நா. மன்றம் கூட்டப்பட்டது. அன்று, வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச் சபையில் சீனா என்ற பெயரில் தைவான் அங்கம் வகித்தது. கம்யூனிச சீனாவுக்கு உறுப்புரிமை கொடுக்க வேண்டுமென கோரி, சோவியத் யூனியன் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது. எஞ்சிய பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத அமெரிக்கா, கொரியாவுக்கு ஐ.நா. படை அனுப்பும் கோரிக்கையை முன்வைத்தது. அமெரிக்க சார்பு நாடுகளால் நிரம்பியிருந்த ஐ.நா. சபை அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக கை உயர்த்தின. அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. இராணுவம் கொரியா சென்றது. பெயர் மட்டும் தான் "ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை" என்றிருந்தது. 90 % இராணுவவீரர்கள் அமெரிக்கர்களாக இருந்தனர். இந்தியா போன்ற வேறு சில நாடுகளும் தம் பங்குக்கு சிறிய படையணிகளை அனுப்பி இருந்தன.

கொரியப் போரில், ஐக்கிய நாடுகளின் "அமைதிப் படை" நிகழ்த்திய அட்டூழியங்கள் அளவிட முடியாதவை. கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகளால், ஆயிரக்கணக்கான கொரியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், உடமைகளும் அழிந்தன. இவற்றிற்கு சிகரம் வைத்தது போல, அடைக்கலம் கோரி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்தது. அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருமாறு, இன்றைய கொரிய அரசு கோரியது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது. இரண்டாவது உலகப்போரில் ஐரோப்பாவில் விழுந்த குண்டுகளை விட, இரு மடங்கு அதிகமான குண்டுகள் சின்னச்சிறு கொரிய தேசத்தின் மீது வீசப்பட்டன. தற்காலிக யுத்த நிறுத்தத்துடன், கொரியப் போர் முடிவுக்கு வந்த போது, கோடிக்கணக்கான கொரியர்கள் ஐ.நா. சபையின் பெயரால் இனவழிப்புக்கு உள்ளாகினர். வட கொரியாவின் பொருளாதார கட்டுமானங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இனப்படுகொலைகளை செய்த ஐ.நா.மன்றத்திடமே, இனப்படுகொலை குறித்து விசாரிக்குமாறு கோரும் வேடிக்கையை நாம் இன்று காணலாம்.


(தொடரும்)
[பகுதி இரண்டு: ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்]


Sunday, January 24, 2010

"தீர்வுக்கான வாய்ப்புகளை தவற விட்ட தமிழர்கள்" - GTV யில் ரணில்

"2005 ம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியிலும், இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்திலும் கிடைத்த தீர்வுக்கான அரிய வாய்ப்புகளை தமிழர்கள் தவற விட்டனர்." ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சி நேர்காணலில் எதிர்க்கட்சி தலைவர் ரணில்.
Opposition UNP leader Ranil Wickramasingha, in an interview with the Europe based Tamil television GTV, blamed the LTTE for his loss in the 2005 elections. Wickramasingha also strongly refuted claims that he was behind the Karuna split from the Tigers.

ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு?


(Press TV, 23-1-10)"லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.

வெனிசுவேலா ViVe தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் சாவேஸ், "அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையாக நிலநடுக்கம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே பரிசோதனை அமைந்திருந்ததாக" குற்றஞ்சாட்டினார். (இது குறித்து ரஷ்ய டுடே ஒளிபரப்பிய செய்தியறிக்கை.)


ரஷ்ய அறிக்கையை மேற்கோள் காட்டிய ViVe தொலைக்காட்சி: "அமெரிக்கா இதற்கு முன்னரும் கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடத்தியதாகவும்,6.5 magnitude நிலநடுக்கம் பதிவாகியதாகவும்..." தெரிவித்தது. கலிபோர்னிய நிலா நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்படா விட்டாலும், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெனிசுவேலா செய்தியறிக்கையின் பிரகாரம் "ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் வரப்போகும் விளைவுகளை அமெரிக்க அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கும். அமெரிக்க தென் பகுதி கட்டளைத் தளபதி ஜெனரல் கீன் ஏற்கனவே (நிவாரண வேலைகளை பொறுப்பேற்க) ஹெய்ட்டி அனுப்பபட்டிருந்தார்."

இயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை செயற்கையாக உருவாக்க கூடிய ஆராய்ச்சி மையம், High Frequency Active Auroral Research Program (HAARP) ஏற்கனவே அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோகன் தெரிவித்த கூற்று ஒன்றும் இங்கே நினைவு கூறத் தக்கது. "தொலைதூர மின்காந்த அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றை தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்" குறித்து கவலை அடைவதாக தெரிவித்திருந்தார்.

மேலதிக தகவல்களுக்கு:
Hugo Chavez Mouthpiece Says U.S. Hit Haiti With 'Earthquake Weapon'
H.A.A.R.P.
HAARP: The Ultimate Weapon of the Conspiracy


HAARP Holes in Heaven Part 1/6

HAARP Holes in Heaven Part 2/6

HAARP Holes in Heaven Part 3/6

HAARP Holes in Heaven Part 4/6

HAARP Holes in Heaven Part 5/6

HAARP Holes in Heaven Part 6/6

Wednesday, January 20, 2010

இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்


உலகில் எந்தவொரு மதமும் இராணுவ பலமின்றி பரவவில்லை. இஸ்லாமும் அதற்கு விதிவிலக்கல்ல. இஸ்லாமியப் படையெடுப்புகள் பற்றிய சரித்திரக் குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அனைத்துப் போர்களிலும் வெற்றிவாகை சூடிய இஸ்லாமியப் படையணியின் பக்கம் நின்றவர்களால் எழுதப்பட்டுள்ளன. அவர்களை எதிர்த்து தோல்வியுற்ற கிறிஸ்தவ கிரேக்கர்களும் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அதே போல பெர்சியப் பேரரசின் இறுதிக் காலத்தைப் பாடும் செய்யுள்கள் சில காலத்தால் அழியாமல் நிலைத்து நின்றுள்ளன. இவற்றைத் தவிர்ந்த பிற தரவுகளைக் காண்பதரிது. ஆகையினால் மத்திய கிழக்கில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்த நிலைமை குறித்து மட்டுப்படுத்தப் பட்ட தகவல்களே காணக் கிடைக்கின்றன.

மேற்கே ரோமப் பேரரசும், கிழக்கே பெர்சியப் பேரரசும் மத்திய கிழக்கை பங்கு போட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அரேபியாவின் அரைவாசிப் பகுதி ரோமர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இயேசு கிறிஸ்து அரேமிய மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர். அவர் பேசிய அரேமிய மொழி, கிட்டத்தட்ட அரபு போன்றிருக்கும். (இப்போதும் அந்த மொழி வழக்கில் உள்ளது.) அன்றிருந்த அரேபிய தீபகற்ப மக்கள் அனைவரும் ஒரே அரபு மொழி பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழி(களைப்) பேசியிருப்பார்கள். நமது காலத்தில் அவற்றை வட்டார மொழிகள் என அழைக்கின்றனர்.

அரேபிய தேசிய இனம் என்ற அரசியல் அறிவு தோன்றியிராத காலத்தில், இஸ்லாம் என்ற மதக் கலாச்சாரம் அவர்களை ஒன்றினைத்தது. ரோமப் பேரரசின் மாகாணமாக கருதப்பட்ட அரேபியாவைச் சேர்ந்த வீரர்கள், அரபு சாம்ராஜ்யம் ஒன்றை ஸ்தாபிப்பார்கள் என்று அன்று யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அரபு பாலைவனத்தில் வாழ்ந்த, தமக்குள்ளே ஒற்றுமையற்ற நாடோடிக் குழுக்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவமாக மாறுவார்கள் என்று யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. அதனால் ரோமர்களும் அவர்களை அடக்கி ஆள வேண்டுமென்று நினைக்கவில்லை.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யேமன் நாட்டில் நாகரீகமடைந்த அரபு ராஜ்ஜியம் இருந்தது. ரோமர்களின் காலத்திலேயே யேமன் நாகரீகம் அதன் அழிவில் இருந்தது. பிற்காலத்தில் இஸ்லாம் பரவிய போது, பண்டைய அரபு நாகரீகம் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. யேமன் நாகரீகம் பற்றி பைபிளில் கூட சில குறிப்புகள் உள்ளன. அந்த நாட்டை சேர்ந்த இராணி ஷீபா,(ஆங்கிலத்தில் : Sheba, அரபியில்: Saba) இஸ்ரேலை ஆண்ட சொலமன் மன்னனை சந்திக்க வந்திருக்கிறாள். ஷீபா ராணி ஆப்பிரிக்க இனத்தவராக இருக்க வேண்டும். நவீன காலத்து நிறவாத கருத்துக்கு மாறாக, "ஷீபா உலகப் பேரழகி, புத்திக்கூர்மையுடைய பெண்." என்றெல்லாம் பைபிள் புகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஷீபாவின் வருகையின் போது கொண்டு வந்த பரிசுப் பொருட்களை வைத்து, அவளது ராஜ்ஜியத்தின் செல்வத்தை வியக்கின்றது.

ஆமாம், இன்று ஏழை நாடாக உள்ள யேமன், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் பணக்கார நாடாக இருந்தது. அன்று "ஹிம்யர்"(Himyar ) என அழைக்கப்பட்ட நாட்டின் முக்கிய ஏற்றுமதி, சாம்பிராணித் துகள்கள். சாம்பிராணி, விஷேசமாக யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டும் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கின்றது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. தினசரி ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் சாம்பிராணி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரபி பாலைவனத்தை கடந்து செல்லும். ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து காஸா போன்ற துறைமுகங்களை அடையும். அங்கிருந்து கப்பல்கள் மூலம் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படும். உலகம் முழுவதும் ஹிம்யர் சாம்பிராணிக்கு கிராக்கி இருந்தது. இன்றும் கூட கிரேக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பிராணிப் புகை போட்டு தான் வழிபாடு நடக்கின்றது. பிற்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை, அரேபியரின் வர்த்தக மேலாண்மையை உடைப்பதற்காக, மெழுகுதிரி பயன்படுத்த தொடங்கியது. இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பிரிக்க முடியாத அம்சமான மெழுகுதிரியின் பயன்பாட்டுக்கு காரணம் வெறும் வர்த்தகப் போட்டி தான்.

இன்று எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், சில வளைகுடா அரபு நாடுகள் பணக்கார நாடுகளாகின. அதேபோல அன்றைய யேமன் (ஹிம்யர்) ஒரு பணக்கார நாடாக திகழ்ந்தது. யேமன் அரசு, சாம்பிராணி ஏற்றுமதியால் கிடைத்த லாபத்தை அபிவிருத்திப் பணிகளில் செலவிட்டது. யேமன் நாடு மலைகளையும், வளமான விவசாய நிலங்களையும், பருவகால மழை வீழ்ச்சியையும் கொண்டது. அந் நாட்டு பொறியியல் நிபுணர்கள், "மாரிப்" என்ற பெயரைக் கொண்ட ராட்சத அணைக்கட்டு ஒன்றை நிர்மாணித்தார்கள். அணை கட்டி சேமித்த தண்ணீர், வயல்களுக்கு பாசனம் செய்யப்பட்டது. மக்களுக்கான குடிநீர் தேவையையும் 'மாரிப்' அணை பூர்த்தி செய்தது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில், அதாவது இஸ்லாம் தோன்றிய காலத்தில், 'மாரிப்' அணை கைவிடப்பட்டது. அதனால் விவசாயமும் பாழானது. மக்கள் குடிபெயர ஆரம்பித்து விட்டனர்.

தென் அரேபியாவில் (யேமன்) இருந்த தொன்மையான நாகரீகம் தானாக மறைந்தது. ஆனால் சிரியாவில் இருந்த அரபு நாகரீகம், அந்நிய சக்திகளால் வெற்றி கொள்ளப்பட்டது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில், செனோபியா என்ற அரசி தலைமையில் ஒரு அரபு ராஜ்ஜியம் நிறுவப்பட்டது. அனேகமாக எழுதப்பட்ட அரபுக்களின் வரலாற்றில் முதலாவது அரசாட்சி அதுவாகத் தானிருக்கும். சிரியாவில் உள்ள பால்மிரா (Palmyra என்ற சொல் அதிலிருந்து வந்தது) நகரை சுற்றி அமைந்திருந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால், சர்வதேச வர்த்தகத்தின் மையப்புள்ளியாக இருந்தது. பால்மிரா அரபு இராசதானி சிறிது காலமே நீடித்தது. இறுதியில் ரோமப் பேரரசின் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டது. இஸ்லாமிய-அரேபியப் படையெடுப்புகள் வரையில், அந்தப் பகுதியில் ரோமர்களின் காவல் அரண் மட்டுமே இருந்தது. அந்தக் காவலரண் பாலைவனத்தில் இருந்த நாடோடி அரேபியரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையே ரோமப் பேரரசில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகார மையம் ரோமாபுரியில் இருந்து கொன்ஸ்டான்டிநோபில் (இன்று இஸ்தான்புல்) நகருக்கு மாறியது. கொன்ஸ்டான்டிநோபில் நகரில் வீற்றிருந்த சக்கரவர்த்தியும், மேட்டுக்குடியினரும் கிரேக்க மொழி பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். அவர்களின் ஆட்சி எல்லைக்குள் அடங்கிய, மத்திய கிழக்கிலும், வட ஆப்பிரிக்காவிலும் கிரேக்க மொழி உத்தியோகபூர்வ மொழியாகியது. ஆயினும் அவர்கள் தம்மை ரோமர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.

மத்திய கிழக்கின் நகரங்களில் கிரேக்கர்கள் மட்டுமல்ல, அரேபியர்களும் வாழ்ந்தனர். கல்வி கற்ற, அரச பதவிகளை வகித்த அரேபியர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். (எமது நாடுகளில் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தினருடன் ஒப்பிடத் தக்கது.) அன்று பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈராக்கின் ஒரு பகுதி (கிரேக்க) ரோமப் பேரரசால் ஆளப்பட்டன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் அரபு இனத்தவர்கள். (அன்று பலர் தம்மை கிரேக்கர்களாக இனங்காட்டிக் கொள்ள விரும்பினர்.)

இன்று சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் வாழும் அரபு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒரு காலத்தில் காசானிய (Ghassanid ) நாட்டுப் பிரஜைகளாக இருந்தவர்கள். காசானிய அரச பரம்பரையும், பிரஜைகளும் யேமனில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. காசானிய நாட்டை ஆண்ட அரசர்களின் பெயர்கள் எல்லாம் அரபு மொழிப் பெயர்களாக உள்ளன. அரபியில் "இன்னாரின் மகன்" எனக் குறிப்பிடும் "இபுன்" என்ற விகுதியைக் கொண்டிருப்பதும் கவனத்திற்குரியது.

இருப்பினும் காசானிய அரச பரம்பரையினர் தம்மை கிரேக்கர்களாக காட்டிக் கொண்டனர். கிரேக்கர்களுடனான திருமண பந்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். காசானிய இராசதானி, ரோமப் பேரரசிற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அரேபியப் பாலைவனத்தில் தொல்லை கொடுக்கும் நாடோடிக் கும்பலை அடக்குவதற்காக, ரோமர்கள் கசானிய பொம்மை அரசை பயன்படுத்திக் கொண்டார்கள். சுருக்கமாக சொன்னால், அரபுக்களை அரபுக்களை கொண்டே அடக்கினார்கள்.

தெற்கு ஈராக்கில் "லக்மிடியா"(Lakhmid ) என்ற இன்னொரு அரபு சிற்றரசு இருந்தது. லக்மிடியர்களின் மூதாதையரும் யேமனில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். லக்மிடிய பிரஜைகள் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அக்காலத்தில் இரு பெரும் உலக வல்லரசுகளாக இருந்த பெர்சியப் பேரரசும், ரோமப் பேரரசும் லக்மிடிய நாட்டை யுத்த சூனியப் பிரதேசமாக்கினார்கள். காசானிய தேசமும் அது போன்றே இரு வல்லரசுகளுக்கு இடையிலான சூனியப் பிரதேசமாக இருந்தது. லக்மிடிய அரசவம்சமும் அரபிப் பெயர்களைக் கொண்டிருந்தது.

"ஹிரா" (Al Hira) வை தலைநகராகக் கொண்ட லக்மிடிய தேசம் அரபி இலக்கியங்களை வளர்த்தது. அனேகமாக அரபி மொழி எழுத்துகள், இலக்கணம் என்பன லக்மிடியர்களின் பெருமைக்குரிய கண்டுபிடிப்புகள். பல அரபுப் புலவர்கள் லக்மிடிய அரசவைக்கு சென்று இலக்கியம் படைத்தனர். லக்மிடிய தேசத்தின் வீழ்ச்சிக்கு அயலில் இருந்த பெர்சிய பேரரசு முதல் காரணம். இஸ்லாமியரின் படையெடுப்புகளின் போது, லக்மிடியா ஏற்கனவே பெர்சியாவின் மாகாணமாக இருந்தது.

அரேபிய தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில், "நாகரிக உலகின்" தொடர்பால் நகரங்கள் உருவாகின. குறிப்பாக சிரியாவுடன் (காசானிய நாடு) கொண்டிருந்த வர்த்தக தொடர்பால், ஹிஜாஸ், யமானா, மெக்கா, மெதீனா போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அங்கிருந்த வணிகர்கள் கம்பளி, பதனிடப்பட்ட தோல் போன்ற பண்டங்களை சிரியாவில் விற்று வருவார்கள். சிரியாவில் இருந்து ஒலிவ் எண்ணை, தானியம், வைன் போன்ற பண்டங்களை வாங்கி வந்து தமது நகரங்களில் விற்பார்கள்.

வெளிநாட்டு வர்த்தகத்தால் வளர்ந்த நகர-தேசங்களில் மெக்கா பிரசித்தமானது. எப்போதோ அங்கு விண்வெளியில் இருந்து விழுந்த வால்வெள்ளிப் பாறை ஒன்றுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதை சுற்றி ஓர் ஆலயம் தோன்றியது. பகைமை கொண்ட அரபு இனக்குழுக்கள் அங்கே வந்து சமாதானமாக உரையாடுவது, அந்த ஆலயத்தின் சிறப்பம்சம். அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் யாத்திரீகர்கள் மெக்கா ஆலயத்தின் மகிமையை கேள்விப்பட்டு வரத் தொடங்கினார்கள். பக்தர்கள் பெருகவே, ஆலயத்தின் அயலில் ஒரு வருடச் சந்தை தோன்றியது. ஆன்மீகமும், வியாபாரமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு வளர்ந்தன.

மெக்கா ஆலயத்தை பராமரிப்பதும், அதை ஒட்டிய வணிக நடவடிக்கைகளும் "குறைஷி" என்ற அரபு இனக்குழுவின் பொறுப்பில் இருந்தன. குறைஷி குலத்தை சேர்ந்த பலர் ஏற்கனவே சிரியாவுடனான வணிகத் தொடர்புகளால் செல்வந்தர்களாக இருந்தனர். சிலருக்கு மெக்காவில் மட்டுமல்லாது, சிரியாவிலும் சொந்தமாக வீடு, காணி, சொத்துக்கள் இருந்தன. வடக்கே சிரியாவுக்கும், தெற்கே யேமனுக்கும் இடையே மெக்கா நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெக்காவின் பூகோள அமைவிடம், மெக்கா நகரவாசிகளான குறைஷிகளின் ஆதிக்கம், அவர்களின் சிரியாவுடனான வர்த்தக தொடர்பு போன்ற காரணிகள், இஸ்லாம் என்ற புதிய மதத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி, 570 ம் ஆண்டு, ஒரு செல்வந்த குறைஷி குடும்பத்தில் பிறந்தார்.

(தொடரும்)

முதலாவது பகுதி:
இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

மேலதிக தகவல்களுக்கு:
Himyarite Kingdom
Lakhmids
Ghassanids

Tuesday, January 19, 2010

மதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்


சீனாவில் திபெத்திய பௌத்த மதத்திற்கு சுதந்திரம் கேட்டு போராடும் தலாய் லாமா, அதற்காக நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதே தலாய் லாமா திபெத்திய பௌத்த மதத்திற்குள் ஷுக்டன் என்ற தெய்வத்தை வழிபாடும் பிரிவினரை அடக்கி வருகிறார். இந்தியாவில் திபெத்திய அகதிகள் வாழும் முகாம்களில், ஷுக்டன் மதப் பிரிவினர் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். திபெத்தியர்களால் நடத்தப்படும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தடை. தலாய் லாமாவின் குண்டர் படையினர் ஷுக்டன் மதத்தவர்களை தாக்குகின்றனர். ஷுக்டன் மதப் பிரிவினரும் திபெத்தில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்கள் தாம். தலாய் லாமா இவர்களை "சீன அரசின் கைக்கூலிகள்" என்று அவதூறைப் பொழிகிறார். கீழே உள்ள இரண்டு ஆவணப் படங்களும் தலாய் லாமாவின் மதவெறியையும், வன்முறைகளையும் பதிவு செய்துள்ளன.
Dalai Lama expels thousands of monks and Tibetan familiesPart 2
திபெத் மடாலய மர்மங்கள்

Monday, January 18, 2010

ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்


அன்புடன் ஒபாமாவுக்கு,

அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?"திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு "இன்னும் சில தினங்கள்" காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.

ஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா? கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. "அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு..." உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளையடித்தால் என்ன செய்வது? அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்! நாம் கேட்டது drinking water , கிடைத்ததோ Black water.

திரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள், எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும்? சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம் செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.

தசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன?) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.

இராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: "தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்." கடவுளே! அமெரிக்க மருந்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம், "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.

அந்தோ பரிதாபம்! ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு? அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.

மனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் "நவ-காலனித்துவம்" என்கிறார்களா? எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18 ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா?

இப்படிக்கு,
ஒரு ஹைத்தி அகதி


Haiti needs a relief effort that doesn't continue oppression Carl Dix of the Revolutionary Communist Party says that US Haitian relations has influenced the way the relief efforts have unfolded in Haiti Is there

Sunday, January 17, 2010

இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

இலங்கையில் முதன்முதலாக இஸ்லாமிய மதம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாம் என்ற புதிய மதத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த நாட்டில் தங்கி விட்டவர்களும் உண்டு. இவையெல்லாம் இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சங்கதிகள்.

நெடுந்தீவு, மன்னார் கரையோரங்களில் பிரமாண்டமாக நிற்கும் பவோபப் மரங்களை இன்றும் காணலாம். கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆலமர இனத்தை சேர்ந்த பவோபப் மரங்கள், அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டன. பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை, இஸ்லாமுக்கு முந்திய அரேபியர்கள் தெய்வமாக வழிபட்டனர். இந்தக் காலத்தில் மத நம்பிக்கையாளர்கள் சாமிப் படங்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அது போல, பண்டைய அரேபியர்கள் பவோபப் மரங்களை இலங்கையில் நட்டு வணங்கியிருக்க வாய்ப்புண்டு. இவர்களை விட, முத்துக் குளிக்கும் அரேபிய சுழியோடிகள் ஆயிரம் ஆண்டுகளாக மரிச்சுக்கட்டி (மன்னார்) வந்து சென்றனர். ஈழத்து முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி இருந்த காலம் அது. பண்டைய துறைமுகமான சிலாபத்துறையில் இருந்து முத்துகள் மூட்டை மூட்டையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. நிச்சயமாக, ஏற்றுமதி வாணிபத்திலும் அரேபியர் ஆதிக்கம் செலுத்தினார்கள். 16 ம் நூற்றாண்டில், போர்த்துக்கேயர் வரும் வரையில் அரேபிய ஏகபோகம் தொடர்ந்தது.

இந்த விபரங்களை எல்லாம் இங்கே கொடுக்கக் காரணம், எவ்வாறு பக்கச் சார்பான கருத்துகள் தகவல் சுதந்திரத்தை தடுக்கின்றன என்பதைக் காட்டத்தான். அரேபியர் என்ற இனத்தை, இஸ்லாம் என்ற மதத்தின் பிரிக்கவியலாத அம்சமாக கருதப்படுகின்றது. மேற்குலகில் இருந்து கிழக்குலகம் வரையில், இந்த கருத்தியல் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்துடன் வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள், ஓமான் அல்லது யேமன் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி. 500 ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய இஸ்லாம் என்ற புதிய மதம், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவ நீண்ட காலம் எடுத்தது. லெபனான் முதல் ஓமான் வரையிலான நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் கி.மி. தூரம் கொண்டது. ஒட்டகத்தின் துணை கொண்டு கடப்பதற்கு மாதக்கணக்காகும். இந்தியாவை போல, அரேபிய தீபகற்பமும் ஒரு துணைக் கண்டம்.

துபாய், அபுதாபி ஆகிய வளைகுடா செல்வந்த நாடுகள், தமது கலாச்சார பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கின்றனர். அங்கே அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் எனப் பார்க்க முடியும். அதே கலாச்சாரத்துடன், அரபு மொழியில் "பெதூயின்" என அழைக்கப்படும் நாடோடிகள் இன்று அருகி வரும் பழங்குடியினராவர். எந்தப் பயிரும் முளைக்காத கட்டாந்தரையில் (பாலைவனம் என்பதற்கு அரபியில் பல சொற்கள் உள்ளன) ஆடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடியும். பெதூயின்கள் ஒரு இனக்குழுச் சமுதாயம். அவர்களுக்கென்று ஒரு அரசனோ, தேசமோ கிடையாது. "எமக்கென்று ஒரு நாடு இல்லையே" என்று கவலையும் இல்லை. ஒவ்வொரு நாடோடிக் குழுவுக்கும் ஒரு மூத்தோர் தலைவராக இருப்பார். மூத்தோர் வாய் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். எந்த இடத்தில் கூடாரம் அடிக்க வேண்டும்? எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது? எங்கே நிலத்தடி நீர் உண்டு? இதையெல்லாம் குழுத் தலைவர் தீர்மானிப்பார்.

அரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை "ஷெரீப்" (பன்மை: அஷ்ரப்) என்று அழைத்தனர். பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின. இஸ்லாம் "அறியாமையின் காலகட்டம்" எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

அரபு பெதூயின் குலங்கள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வது சர்வ சாதாரணம். கால்நடைகளை பிறிதொரு குலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையிட்டு செல்வார்கள். அல்லாதுவிடின் ஒரு கிணறு தமதே என்று ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் யுத்தங்களை தோற்றுவிக்கும். சாதாரண பெதூயின் இளைஞன் சிறு வயதில் இருந்தே யுத்தத்திற்கும், கடுமையான பாலைவன வாழ்க்கைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். பெதூயின்களின் போர்க்குனாம்சமும், நாடோடி வாழ்க்கை முறையும் பிற்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாகின. அப்போது கூட அவர்கள் தனித்தனி குலங்களாக தான் போரிட்டார்கள். அவர்களுக்கு உலகில் வேறெதையும் விட குலப்பெருமையே முக்கியமானது. உயிரை விட மானம் பெரிதென்று கருதுபவர்கள். ஒன்றுக்கொன்று ஜென்ம விரோதிகளான அரபு குழுக்களை இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

எந்த ஒரு அரேபியனும் தான் சார்ந்த குலத்தை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். அப்படி சென்றால், ஆளரவமற்ற பாலைவனப் பூமியில் தனித்து வாழ முடியாது. அரசாங்கமோ, வேறெந்த நிர்வாகமோ இல்லாத ஒரு சமூகத்தில், குல உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இஸ்லாம் இந்த சவாலை செயலூக்கத்துடன் எதிர்கொண்டது. "உம்மா" என்ற அமைப்பை ஸ்தாபித்தது. ஒரு குலச் சமுதாயம் வழங்கிய பாதுகாப்பை உம்மா வழங்கியது. ஏற்கனவே இருந்த குலக் கட்டமைப்பை உடைத்து, முஸ்லீம் என்ற புதிய சமூகத்தினுள் உள்வாங்கியது. பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர். புதிய மதமான இஸ்லாம், இந்த "ஊடகத்தை" திறமையாக கையாண்டது. "இஸ்லாம் என்ற புதிய மதம்" பற்றிய செய்தியை அரேபிய தீபகற்பம் முழுவதும் காவிச் சென்று பரப்பினார்கள்.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர். சிரியா அரேபியர்கள் கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்திருந்தார்கள். மாளிகைகளில் வாழ்ந்த மேட்டுக்குடியினர் கிரேக்க மொழியில் அரசகருமமாற்றினர். செங்கடல் கரையோர ஜெத்தா போன்ற நகர மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் சிறந்து விளங்கினர். மெக்கா நகரில் முகமது தலைமையிலான சிறு குழு, இஸ்லாம் என்ற புதிய மதத்தை பிரச்சாரம் செய்தது. மாற்று உலகிற்காக போராடிக் கொண்டிருந்த முஸ்லிம்களை, அரேபியர்கள் தேடித்தேடி அழிக்கத் துடித்தார்கள்.

(தொடரும்)

Saturday, January 16, 2010

இங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்

இரண்டாவது உலகப்போரின் முடிவில் அமெரிக்காவை அதிகம் குடைந்து கொண்டிருந்த கேள்வி இது. மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட விடாமல் தடுப்பது எங்ஙனம்? முதலாம் உலகப்போரின் பின்னர் எழுந்த சோஷலிச எழுச்சி அலைகளை யாரும் மறந்து விடவில்லை. மீண்டும் அதே போன்று பேரழிவை கொடுத்த போர் இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. ஐரோப்பிய மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கின்றனர். (அன்றைய ஜெர்மனி எத்தியோப்பாவை விட மோசமாக இருந்தது.) ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும்பான்மை மக்கள் வறுமையின் கோரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இத்தாலி, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்களில் கம்யூனிசக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சி ஆட்சியமைக்க முடியவில்லை.

"இது என்ன ஜனநாயகம்?" என நீங்கள் கேட்கலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு தலையிட்டு தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய வைத்தது. முடிந்த அளவு தகிடுதத்தங்களை செய்து, அமெரிக்க சார்பு கட்சிகளை தேர்தலில் வெல்ல வைத்தனர். இத்தாலியில் நடைபெற்ற மறுதேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்குப் போடுபவர்களை, (கிறிஸ்தவ) மதத்தை விட்டு ஒதுக்கி வைப்பதாக வத்திக்கான் அறிவித்தது. அபிவிருத்துப் பணிகளுக்கென பெருமளவு நிதி ஒதுக்குவதாக அமெரிக்கா வாக்களித்தது. "மார்ஷல் உதவி" என்ற நிதி அமெரிக்க சார்பு அரசுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது பிற்காலத்தில் சர்வதேச நாணய நிதி நிறுவனமாக உருமாறியது. அமெரிக்க நிதியில் "நலன்புரி அரசுகள்" (சோஷலிசத்திற்கு மறு பெயர்) தோன்றின. கிட்டத்தட்ட இதே போன்ற சூழ்நிலை, சோவியத் படைகள் ஆக்கிரமித்த கிழக்கு ஐரோப்பாவிலும் காணப்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய நலன்புரி அரசுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தின. பெரிய கம்பனிகள் சிறிது காலத்திற்கு லாபவெறியை கட்டுப்படுத்த முன்வந்தன. நலன்புரி அரசு அள்ளி வழங்கிய மானியங்களும், சலுகைகளும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவியது. மறுபக்கத்தில் பண வசதி படைத்த மக்கள், அதனை செலவளிக்க வழிகாட்டும் நுகர்வுக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர். இதனால் அரசு அளித்த மானியம், கம்பனிகளின் லாபமாகவும், லாபத்தில் ஒரு பகுதி அரசுக்கு வரியாகவும், பணப் பரிமாற்றம் ஒரு சுழற்சிக்குள் நின்றது. இந்த "பொருளாதார இரகசியம்" எல்லாம் மூன்றாம் உலக மக்களுக்கு தெரியாது. மேற்கு ஐரோப்பா பணக்கார நாடுகளாக மாறிய அதிசயம், கடவுளின் கொடை, என ஏழை நாடுகளின் மக்கள் வியந்தனர்.

"இரும்புத் திரை" என அழைக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்கு அப்பால், சோஷலிச நாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன. மேற்குலகிற்கு நிகராக இல்லாவிட்டாலும், ஏதோ தம்மாலியன்ற பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தன. சர்வதேச மூலதனத்தில் இருந்து அன்னியப்பட்டதால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. குறுக்கு வழியில் பணக்காரனாக விரும்பிய சுயநலம் மிக்க கும்பல் இன்னும் அங்கே இருந்தது. மேலும் ஒரே கட்சி ஆட்சியினால் சுதந்திரம் மறுக்கப்பட்ட, பிற அரசியல் போக்குகளைக் கொண்ட நபர்களும் மூச்சு விட வழி தேடினர். மேற்குலக நாடுகள், சோஷலிச அரசாங்கங்களுடன் முரண்பட்ட மக்களை கவர்ந்திழுக்க எண்ணின. அவர்களை குறி வைத்து, கவர்ச்சிகரமான வசதிகளுடன் அகதி அந்தஸ்து வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. வசதியான வீடு, வட்டியில்லாக் கடன், உடனடி வேலைவாய்ப்பு, "சோஷலிச அகதிகளுக்கு" வெகுமதிகள் காத்திருந்தன. இரும்புத்திரையைக் கிழித்துக் கொண்டு, சுதந்திர மேற்கு ஐரோப்பாவிற்குள் நுழைந்த லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது.

"சோஷலிச அகதிகள்" விவகாரம் எல்லாம், மூன்றாம் உலகத்தில் இருந்து வரும் அகதிகளுக்கு தெரியாது. அவர்களும் "அழையா விருந்தாளிகளாக" மேற்கு ஐரோப்பாவிற்குள் புகுந்து தஞ்சம் கோரினார்கள். "நாங்கள் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்வோம்." என்று சட்டம் போட முடியுமா? அப்புறம் ஐரோப்பியரின் உன்னத நாகரீகத்திற்கு களங்கம் ஏற்படாதா? அதனால் உலகின் எப்பாகத்தில் இருந்து வந்தாலும், அகதிகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. "வெள்ளை கிறிஸ்தவ" ஐரோப்பிய நாடுகள், பல்லின மக்கள் வாழும் நாடுகளாகின. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அபரிதமான உழைப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். இதற்கென கூலியாட்களை துருக்கி, மொரோக்கோ ஆகிய "முஸ்லிம்" நாடுகளில் இருந்து தருவித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இரண்டு உலகப் போர்களினால், ஐரோப்பிய சனத்தொகை வெகுவாக குறைந்திருந்தது.

எண்பதுகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. நெருக்கடி உருவானது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. அதே நேரம், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச அரசுகள் நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தன. அந் நாடுகளில், முதலாளித்துவம் மீட்கப்படும் காலத்திற்காக காத்திருந்த முதலாளிகள், தொழிற்சாலைகளை அங்கே கொண்டு சென்றார்கள். மேற்கு ஐரோப்பாவில் பல ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உற்பத்தி துறைகள் புறக்கணிக்கப்பட்டு, சேவைத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இருப்பினும் வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இம்முறை அரசின் கவனம், மூன்றாமுலக அகதிகள் மீது திரும்பியது.

பெல்ஜியத்தில் டச்சு மொழி பேசும் மாகாணங்களில், "பிலாம்ஸ் ப்ளாக்" (தற்போது பெயர் மாற்றி விட்டார்கள்) என்ற பாசிசக் கட்சி ஒன்று பிரபலமாகி வருகின்றது. இந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார். "தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட அகதிகளைப் பிடித்து வாடகை விமானங்களில் ஏற்றி, அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும், என நாம் கூறி வந்தோம். ஆனால் அன்று எமக்கு எதிராக கூச்சல் போட்டார்கள். இன்று அரசாங்கமே நாம் முன்மொழிந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றது." ஒரு காலத்தில் பாசிசக் கட்சிகளின் வெற்றுக் கோஷங்கள் எனக் கருதப்பட்ட கருத்துகள், இன்று அரசினால் சட்டமாக்கப் பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகள், வாக்குரிமை இல்லாததால் விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்கின்றனர். சட்டப்படி இவர்களுக்கு என பல உரிமைகள் இல்லை. உள் நாட்டு மக்களோடும் தொடர்பு இல்லை. ஆகவே அதிகம் அறியப்படாத அகதிகளை திருப்பி அனுப்பும் போது, எந்த சலசலப்பும் ஏற்படாது. நெதர்லாந்தில் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில், பாசிசக் கட்சி தான் வைத்திருந்த இரண்டு ஆசனங்களையும் இழந்தது. இதனால் தீவிர வலதுசாரிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று அர்த்தமில்லை. அது குறித்து பொது மக்கள் கருத்துகளைக் கேட்போம்: "நவ-நாசிசக் கட்சிகள் என்னவெல்லாம் சொல்கின்றனவோ, அவற்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்துகின்றது. ஆகவே சின்னச்சிறு தீவிர வலதுசாரிக் கட்சிக்கு வாக்குப் போடுவதை விட, ஆளும் கட்சிகளுக்கு போடலாம்."

மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியது. இன்று அடுத்தடுத்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்கின்றன. "எமது பிரஜைகளுக்கே தொழில் வழங்க முடியாமல் தடுமாறும் காலத்தில், அகதியாவது, ஆட்டுக்குட்டியாவது. என்ன செய்தும் புதிய அகதிகள் வருவது குறையவில்லையே." என்று அங்கலாய்கின்றன மேற்குலக நாடுகள். அகதிகளுக்கு அனுப்படும் தஞ்ச மனு நிராகரிப்புக் கடிதங்களில் பின்வரும் வாசகங்கள் காணப்படுகின்றன. "இந்த நாட்டில் வேலையற்றோர் தொகை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. ஆகவே அகதியாக வருபவரால் நாட்டுக்கு நன்மை விளையும் என்றால் மட்டுமே, இங்கே தங்க அனுமதிக்க முடியும்."

*******************************