Thursday, December 30, 2010

அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்

"மக்கள் மேல் அதிகாரம் செலுத்தும் மன்னர்கள், தங்களை வள்ளல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்." (லூக்கா 22 :25 )
"மனிதர்களை அல்ல, ஆண்டவரையே ஆட்சியாளராக ஏற்று அடி பணிய வேண்டும்." (Acts 4:19, 5:29, 1 Corinthians 6:1-6)
"அடக்கப்பட்டவர்கள் பூமியை உடைமையாக்கிக் கொள்வார்கள்." (Psalms 37:10,11,28)

ஏசுவின் போதனைகளும், ஆதி கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கையும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவே இருந்துள்ளன. ஆனால் ஒரு கூட்டம் பிற்காலத்தில் ஏசுவின் பெயரை சொல்லி மதம் என்ற நிறுவனத்தை உருவாக்கி, மக்களை அடக்கி ஆண்டது. ஆதி கால கிறிஸ்தவ சமுதாயம், பொதுவுடமைப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியுடன் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொண்ட கத்தோலிக்க மதத் தலைவர்கள், நிலவுடமைச் சுரண்டல் சமுதாயத்தை உருவாக்கினர். மதத்தின் பெயரால் பெண்களை அடக்கி ஆணாதிக்கத்தை உலக நியதி ஆக்கினார்கள். மத நிறுவனத்தின் அதிகாரத்தை, அடக்குமுறையை எதிர்த்தவர்கள் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களை" உயிருடன் எரித்து, மக்கள் மேல் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். இன்றைக்கு இந்த உண்மைகளை எழுதுவதற்காக, கொடுங்கோலர்களின் வாரிசுகள் என்னை, "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்" என்று தூற்றித் திரிகின்றனர்.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபனமயப் பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு பட்ட மாற்றுக் கருத்தாளர்களைக் கொண்டிருந்தது. விவிலிய நூல் எழுதப்பட்ட காலத்திலேயே பல கிறிஸ்தவ பிரிவுகள் கருத்து முரண்பாடு கொண்டு தமக்குள் மோதிக்கொண்டன. புனித பவுல் எழுதிய கடிதங்களில், கிறிஸ்தவ சபைகளின் மேல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கவில்லை. அவரது சீடர்களான பீட்டர், பவுல் ஆகியோர் ஐரோப்பியக் கண்டத்தில் பல நம்பிக்கையாளர்களை புதிய மதத்தில் சேர்த்தனர். கத்தோலிக்க மதம் பீட்டரினால் ஸ்தாபிக்கப் பட்டதாக உரிமை கோருகின்றது. புனித பீட்டர் முதலாவது பாப்பரசராக பதவி வகித்தமை குறிப்பிடத் தக்கது. ஜெருசலேமில் ஏசுவின் சகோதரரான ஜேம்ஸின் கிறிஸ்தவ சபை ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. கி.பி. 66 ம் ஆண்டு இடம்பெற்ற யூதர்களின் கிளர்ச்சியினால், அந்த சபையும் பாதிக்கப்பட்டது.
ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிய சம்பவம், உலக வரலாற்றில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. கி.பி. 325 ம் ஆண்டு, சக்கரவர்த்தி கொன்ஸ்டாண்டின் தலைமையில் நடந்த மகாநாட்டில் ஒரேயொரு கிறிஸ்தவ சபை மட்டும் அரசு அங்கீகாரம் பெற்றது. மற்றவை யாவும் தடை செய்யப்பட்டன. அரச அங்கீகாரம் பெற்ற சபை, கத்தோலிக்க கிறிஸ்தவம் என்று மேற்கு ஐரோப்பாவிலும், கிரேக்க கிறிஸ்தவம் என்று கிழக்கு ஐரோப்பாவிலும் அழைக்கப்படலாயிற்று. இப்போதுள்ள விவிலிய நூல் அந்த மகாநாட்டிற்குப் பின்னர் தான் முழுவடிவம் பெற்றது. அதில் சேர்த்துக் கொள்ளப்படாத சுவிசேஷங்கள் யாவும் அழிக்கப்பட்டன.

கி.பி. 970 ம் ஆண்டு, பல்கேரியாவில் போகொமில் (Bogomil) என்ற பாதிரியார் தலைமையில் புதிய பிரிவு தோன்றியது. அதனை உருவாக்கியவரின் பெயரில் "போகொமில் கிறிஸ்தவர்கள்" என அழைக்கப்படலாயினர்.(Bogomilism) கடும் தூய்மைவாதிகளான போகொமிலியர்கள் பழைய ஏற்பாட்டை நிராகரித்து விட்டு, புதிய ஏற்பாட்டை மட்டும் புனித நூலாக ஏற்றுக் கொண்டனர். சிலுவை மனிதர்களை சித்திரவதை செய்யும் கருவி. ஆகவே ஒரு சித்திரவதைக் கருவியை வணங்குவது தவறு என்று நம்பினார்கள். இயேசு கிறிஸ்து கடவுள், ஆகையினால் அவரது ஆன்மா மட்டுமே சிலுவையில் அறையப்பட்டது, என்று வாதிட்டனர். பூமியும், மனிதர்களும், அனைத்துப் பொருள்களும் சாத்தானால் படைக்கப் பட்டவை, என்று நம்பினார்கள். (சாத்தானால் படைக்கப்பட்ட) கிறிஸ்தவ தேவாலயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அவர்கள் அரசு, மதம் ஆகிய நிறுவனங்களை தீமையின் உறைவிடமாக கருதினார்கள். ஒரு வகையில், இன்று அதிகார மையங்களை எதிர்க்கும் மார்க்சிய, இடதுசாரி கொள்கைகளை நம்புவோரின் முன்னோடிகள் என்றும் கூறலாம்.

அன்றிருந்த கத்தோலிக்க கிறஸ்தவ மதகுருக்கள் உலக இச்சைகளை துறந்தவர்களாக இருக்கவில்லை. பாதிரிகள் மணம் முடித்து வாழ்வதும், சொத்துகளை சேர்த்து வைப்பதும், அன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணம். போகொமில் மதகுருக்கள் மட்டும் அத்தகைய ஒழுக்கநெறிகளை கடைப்பிடித்தார்கள். போகொமில் மதகுருக்கள் மது, மாமிசம், பாலியல் உறவு மூன்றையும் ஒதுக்கி துறவறம் பூண்டனர். போகொமில் கிறிஸ்தவர்களின் எளிமையான வாழ்க்கை மக்களைக் கவர்ந்தது. பல்கேரியாவில் இருந்து இத்தாலி வரை, புதிய நம்பிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். கத்தோலிக்க மத தலைவர்கள், தமது அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்த்தார்கள். கத்தோலிக்க திருச்சபையும், பல்கேரிய மன்னனும் போகொமில் கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கிளம்பினார்கள். அவர்களின் புனித நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப் பட்டன. போகொமில் பிரிவை சேர்ந்த ஒருவர் விடாமல் தேடித் தேடி அழித்தனர். போகொமில் கிறிஸ்தவர்கள் வழிபட்ட புனிதஸ்தலம் ஒன்று மட்டும் எஞ்சியது. இன்றைக்கும் பல்கேரியாவில் காணப்படும் புனிதஸ்தலத்தின் படம் மேலே உள்ளது.

இன்று சில புரட்டஸ்தாந்து சபைகளும், அங்கிலிக்கன் திருச்சபையும் பெண்களை மதகுருக்களாக ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கிறிஸ்தவ மதத்தினுள் பெண்கள் சம உரிமை பெறுவதற்காக ஆயிரம் வருட காலம் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. இன்றைக்கும் கத்தோலிக்க மதத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்கள் சமையல்கட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று, பிற்போக்கு கலாச்சாரத்தை போதிக்கின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், கிறிஸ்தவ மதத்திற்குள் கிளர்ச்சி செய்த "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்" புதிய மதப் பிரிவை உருவாக்கினார்கள். அவர்களது சபைகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப் பட்டது. பெண்களும் பாதிரிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தெற்கு பிரான்ஸில், ராஜ்யத்தையே ஆளும் அளவிற்கு, இந்த "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்" பெருமளவு மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தனர். பெல்ஜியம் முதல் இத்தாலி வரை ஆதரவாளர்கள் பெருகியிருந்தனர். ஆனால் அதிகார வர்க்கம் இந்த முன்னேற்றங்களை சகித்துக் கொள்ளவில்லை. "புரட்சிகர கிறிஸ்தவர்கள்" மீது போர்ப் பிரகடனம் செய்தனர். அதையும் சிலுவைப்போர் என்றே அறிவித்தார்கள். ஜனநாயக சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்ஸில், Beziers என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் சரணடைந்த ஒன்பதாயிரம் பெண்களும், குழந்தைகளும் மதவெறியர்களின் வாளுக்கு இரையாகினர். ((800th anniversary of Béziers massacre) நாகரீக உலகம் வெட்கித் தலைகுனிந்த இனப்படுகொலைக்காக, வத்திக்கான் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.

Wednesday, December 29, 2010

ஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்

டிசம்பர் 15, ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் போது, அரச ஒடுக்குமுறை இயந்திரமான போலிசை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள். பெருமளவு உல்லாசப்பயணிகளை கவரும் ஏதென்ஸ் நகரம் அன்று போர்க்களமாக காட்சி அளித்தது.

Monday, December 27, 2010

கிறிஸ்தவ நாடுகள் (ஈழத்)தமிழரின் நேச சக்திகளா?


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?]
(பகுதி: பதின்மூன்று)"லங்காசிறி/தமிழ்வின்" இணையத் தளத்தில், "இஸ்ரேலிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்? எத்தகைய படிப்பினைகளைப் பெற வேண்டும்." என்று இஸ்ரேல் ஆதரவு தொடர் கட்டுரை ஒன்று வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள்:"இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே - ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்?
ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு சக்தியாக அமையமுடியும்?
ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்?
ஈழத் தமிழரில் ஒரு சிறிய குழு கைகளில் சிலுவைகளையும், பைபிளில் அநீதிக்கு எதிராக கூறப்பட்டிருக்கின்ற சில வாக்கியங்களையும், பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உதவேண்டும் என்ற கிறிஸ்துவின் போதனைகள் அடங்கிய பதாதைகளையும், வன்னியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தேவாலயங்கள் போன்றனவற்றின் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களையும் சுமந்தபடி வீதிகளில் இறங்கியிருந்தால், மேற்குலகின் அத்தனை கவனமும் நிச்சயம் எம்மை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எங்களில் ஒரு தரப்பு அவ்வாறு செய்திருந்தால், எமது பிரச்சனையையும், எமக்கு நடந்த அநீதிகளையும் உலகம் பார்த்திருக்கும். எமக்கெதிரான அவலத்தைத் தடுக்க மேற்குலகம் நிச்சயம் முயன்றிருக்கும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் சுமார் 500 ற்கும் அதிகமான கிறிஸ்தவ சபைகள் ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்றன. இந்தச் சபைகளை நாம் எமது போராட்டத்தின் ஒரு அங்கமாக மாற்றவில்லை என்பது உண்மையிலேயே ஒரு பின்னடைவு என்றுதான் நான் கூறுவேன்."
(இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: (பாகம்-8)- நிராஜ் டேவிட்)

*********************************

ஈழத்தமிழர் அவலத்தை பல சக்திகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கின்றன. தமிழரில் ஒரு பிரிவினர், "இவ்வளவு காலமும் எதற்காக இஸ்ரேலை உதாரணமாக காட்டிப் பேசி வந்தனர்?" என்ற கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. இதுவரை மறைத்து வைத்திருந்த இரகசிய நிகழ்ச்சி நிரலை இப்போது தாங்களாகவே எடுத்து விடுகின்றனர். "ஒருவர் கிறிஸ்தவ மதத்தவராயிருந்தால், அவர் கட்டாயம் மேற்குலக விசுவாசியாக இருக்க வேண்டும்," என்று யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? அதே போலத் தான், "கிறிஸ்தவர்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும்," என்று தமது அரசியலை திணிக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்கள் தமக்கு அரசியல் ஈடுபாடு இல்லாதது போல காட்டிக் கொள்வார்கள். மேலைத்தேய விசுவாசமும், இஸ்ரேலிய ஆதரவும் அரசியல் இல்லையா? அவை எல்லாம் மதக் கடமைகளா? இயேசு கிறிஸ்து ஒரு வெள்ளையின ஐரோப்பிய சமூகத்தில் பிறக்கவுமில்லை, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டிருக்கவுமில்லை.

நமது நாடுகளில் கிறிஸ்தவர்கள் என்றால் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுவார்கள், என்பன போன்ற தவறான கருத்துகளை திரைப்படங்களும் பரப்பி வருகின்றன. காலனிய ஆதிக்கம் - கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் - மேற்குலக விசுவாசம் - இஸ்ரேல் ஆதரவு, இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. நமது மக்கள் இவற்றில் இருந்து விடுபட்டு சுதேசித் தன்மையையும், அரசியலற்ற மதச் சுதந்திரத்தையும் கொண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் சுயாதீனமாக முடிவுகளை எடுக்கும் திறனை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சிகள் நடக்கின்றன. ஈழம் உருவானால், ஈழத் தமிழர்கள் சொந்தக்காலில் நிற்கக் கற்றுக் கொண்டிருப்பார்கள். ஈழத்தமிழரின் போராட்டம் பின்னடைவுக்குள்ளானது, மேற்குலக விசுவாசிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாகவே நடந்துள்ளது. திக்குத்திசை தெரியாத காட்டில் அல்லலுறும் ஈழத் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்: "அதோ பாருங்கள்! தூரத்தில் இஸ்ரேல் தெரிகிறதா? அது தான் எமது இலட்சியம். நாமும் யூதர்களை பின்பற்றி, அமெரிக்கா உதவியுடன் தமிழ் இஸ்ரேல் அமைப்போம். அதற்கு முதல் படி, எம்மை கிறிஸ்தவர்களாக இனங்காட்டுவோம். அப்போது தான் கிறிஸ்தவ நாடுகள் எமது துயர் துடைக்க ஓடோடி வருவார்கள்."
அப்படியா? கிறிஸ்தவர்களுக்கு இன்னல் ஏற்பட்டால், கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்களா? இவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.

அதிக தூரம் போகத் தேவையில்லை. அயல் நாடான இந்தியாவில், நாகலாந்து என்ற தனி நாடு கோரிப் போராடும் நாகா மக்கள் கிறிஸ்தவர்கள் தான். இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற ஆயுதமேந்திப் போராடும் நாகா இயக்கங்கள் யாவும், "சுதந்திர நாகலாந்து ஒரு கிறிஸ்தவ நாடாக அமையும்," என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர். சில மேலைநாட்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் இரகசியமாக நாகா போராட்டத்திற்கு உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகின்றது. இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே நாகா பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. இதெல்லாம் மேற்குலகில் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான். இருப்பினும் எந்தவொரு கிறிஸ்தவ நாடாவது, நாகலாந்து விடுதலைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளதா? ஈழத்தமிழர் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்று கூறுவதைப் போல, நாகா மக்கள் மன்மோகன் சிங் போர்க்குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அண்மையில் (கிறிஸ்தவ)அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மன்மோகன்சிங்கை சந்தித்து, இரு நாடுகளினதும் உறவைப் புதுப்பித்து விட்டு சென்றார். எந்தவொரு கிறிஸ்தவனும் நாகா மக்கள் சார்பில் எதிர்ப்புக் காட்டவில்லை.

இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு சீனாவை பிடிக்காது. அதே நேரம், அமெரிக்காவை அளவுக்கு அதிகமாகவே பிடிக்கும். "இலங்கை அரசு சீனாவுடன் நெருக்கமாகி வருவதால், அமெரிக்கா தமிழர்களை ஆதரிக்கும். கொஞ்ச நாட்களில் ஈழமும் வாங்கித் தரும்." என்று பல தமிழ் ஊடகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. கடந்த சில வருடங்களாகத் தான், சிறிலங்கா-சீனா உறவுகள் நெருக்கமடைந்ததாக, இந்த ஊடகங்கள் சொல்வதைக் கேட்கும் ஒரு சாதாரண தமிழன் நினைக்கிறான். பர்மா (மியான்மர்) பல தசாப்தங்களாக சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றது. சீனா முதன்மையான வர்த்தகக் கூட்டாளி மட்டுமல்ல, நீண்ட காலமாக பர்மிய இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்து வருகின்றது. பர்மாவில் இராணுவ சர்வாதிகாரம் நிலவுவதும், அவர்களின் அடக்குமுறை ஆட்சியும் மேற்குலகில் நன்கு தெரிந்த விடயங்கள். இராணுவமும், பெரும்பான்மை பர்மிய மொழி பேசும் மக்களும், அரசு மதமான பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள்.

தாய்லாந்து எல்லையோரம் காரேன் என்ற இன மக்கள் வாழும் பிரதேசம் உண்டு. காரேன் மொழி பேசும் மக்களில் கிறிஸ்தவர்கள் கணிசமான தொகையினர். அவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாக தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துகின்றனர். காரேன் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, பர்மிய இராணுவம் கிறிஸ்தவ ஆலயங்களையும் இலக்கு வைத்து தாக்கியது. "காரேன் மொழி பேசும் மக்களின் தனி நாட்டுக் கோரிக்கை மட்டுமல்ல, கிறிஸ்தவ மதமும் பர்மிய பிரிவினையை தூண்டும் தீய சக்திகள்," என்று பர்மிய அரசு பகிரங்கமாகவே அறிவித்தது. காரேன் மக்களுக்கு ஆதரவாக எந்த கிறிஸ்தவ நாடு குரல் எழுப்பியது? காரேன் நாட்டை பிரித்துக் கொடுத்தால், இலகுவாக சீன எல்லையில் கால் பதிக்கலாம் என்று அமெரிக்காவுக்கு தெரியாதா? போர்க்குற்றம் புரிந்ததாக, பர்மிய ஆட்சியாளர்களுக்கு எதிராக எத்தனை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன? சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் எல்லாம் ஒவ்வொரு வருடமும் இது பற்றி முறைப்பாடு செய்கின்றன.

இந்தோனேசியாவில் மலுக்கு தீவுக் கூட்டங்களில், மலுக்கு மொழி பேசும் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பான்மை இந்தோனேசியரிடம் இருந்து வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுபடுகின்றனர். மலுக்கு மக்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவர்கள். ஆரம்பத்தில் மலுக்கு மக்கள் தமக்கென தனிநாடு கோரிப் போராடினார்கள். இந்தோனேசிய அரசு அவர்களின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது. அதன் பிறகு, இந்தோனேசிய அரசு அங்கே வேண்டுமென்றே மதப் பிரச்சினையை தூண்டி விட்டது. வெளிப்பார்வைக்கு மதக்கலவரமாகவே தெரிந்தது. அரச ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காடையர்கள் கூட்டம் கிறிஸ்தவர்களை படுகொலை செய்தது, அவர்களின் ஆலயங்களை எரித்தது. ( பதிலுக்கு கிறிஸ்தவ காடையர் கூட்டம் முஸ்லிம் மக்களை கொன்று, மசூதிகளை எரித்தது.) இந்த செய்திகள் யாவும் மேற்குலகில் பரபரப்பாக பேசப்பட்டவை தான். நான் அறிந்த வரையில், இதுவரை எந்தவொரு கிறிஸ்தவ நாடும் (முன்னாள் காலனியாதிக்கவாத நெதர்லாந்து உட்பட) மலுக்கு கிறிஸ்தவர்களுக்கு உதவ முன் வரவில்லை. மாறாக, உலகிலேயே அதிகளவு முஸ்லிம்களை கொண்ட இந்தோனேசியாவுக்கு ஆதரவாக உறவுகளைப் பேணி வருகின்றனர். அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்ற சர்வாதிகாரி சுகார்ட்டோ, முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்த கதையை எழுதப் போனால், இந்தக் கட்டுரை நீண்டு விடும்.

"வேற்று மதத்தவர்களான யூதர்களின் இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு வலையம் போட்டு வைத்திருக்கிறார்கள்." இஸ்ரேலிய ஆதரவாளர்கள் ஒரு பெரிய உண்மையை கண்டுபிடித்துக் கூறுகிறார்கள். கிறிஸ்தவர்களான நாகா, காரேன், மலுக்கு மக்களைப் பாதுகாக்கும் வலையம் எங்கே? நான் இங்கே குறிப்பிட்ட தகவல்களை எல்லாம் எத்தனை தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எத்தனை கிறிஸ்தவ சகோதரர்கள் நாகா, காரேன், மலுக்கு கிறிஸ்தவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்? இஸ்ரேலின் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களில் எத்தனை பேர், நாகலாந்து விடுதலையை ஆதரிக்கிறார்கள்?

"யாராலும் வெல்ல முடியாத புத்திசாலி யூதர்கள்" பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்களுக்கு, உலகின் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்கள் கண்ணில் படாதது ஏன்? ஒரு வேளை, "புத்திசாலிகளுக்கு" மட்டும் தான் நாட்டை ஆள உரிமை உண்டு என்று கருதுகிறார்கள் போலும். "யூதர்களுக்கு உரிமையுடைய" இஸ்ரேலைப் பற்றி விலாவாரியாக எழுதும் ஊடகங்கள், ஏன் "கிறிஸ்தவ விடுதலைப் போராட்டங்கள்" குறித்து எழுதுவதில்லை? யூதர்கள் 2000 வருடங்களுக்கு முன்னர் நாடிழந்து அகதியாக அலைந்த கதை எல்லாம் விபரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். பர்மாவில் நாகா அகதிகள், தாய்லாந்தில் காரேன் அகதிகள், நெதர்லாந்தில் மலுக்கு அகதிகள், இவர்களும் நாடிழந்து அகதிகளாக அலைகிறார்கள். இது நிகழ்கால யதார்த்தம். நமது காலத்து "கிறிஸ்தவ அகதிகள்" குறித்து, இஸ்ரேல் விசுவாசிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் அகதியான யூத மக்களுக்கு ஆதரவாக உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் அகதிகளான மக்களைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரேயொரு வார்த்தை கூட பேசுவதில்லை. இஸ்ரேலிய விசுவாசிகள் ஈழத்தமிழர் சார்பில் பேசும் போது, அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகின்றது.


இஸ்ரேல் என்ற தேசம் உருவான காலங்களில் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்களில் கிறிஸ்தவர்களும் இருந்தனர். பிற்காலத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலேம், கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளில் பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். இஸ்ரேலிய விமானங்கள் குண்டு போட்ட சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ ஆலயங்களும் சேதமடைந்தன. அப்போதெல்லாம் கிறிஸ்தவ ஒற்றுமை எங்கே போனது? "கிறிஸ்தவ பிணங்களின் மீது ஏறி நின்று கொண்டு, இஸ்ரேலுடன் கை குலுக்குவது," பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யும் மதத் துரோகம் ஆகாதா?

கணிசமான தொகை கிறிஸ்தவர்களைக் கொண்ட பாலஸ்தீன, சிரியா, லெபனான் நாடுகளுக்கு ஆதரவாக அல்லவா, கிறிஸ்தவ பாதுகாப்பு வலையம் போடப்பட்டிருக்க வேண்டும்? வேற்று மதத்தவர்களான யூதர்களுக்கு ஆதரவாக, கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு வலையம் போட்டன என்றால், நம்பக் கூடியதாகவா இருக்கிறது? கிறிஸ்தவ மதத்தவர்களின் புனித ஸ்தலங்கள் இஸ்ரேலில் மட்டுமல்ல, லெபனான், சிரியா, ஜோர்டான், போன்ற அயல்நாடுகளிலும் காணப்படுகின்றன. (வருடந்தோறும் கிறிஸ்தவ யாத்திரீகர்கள் அந்த இடங்களுக்கு சென்று வருகின்றனர்.) இது உலகில் உள்ள அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த விடயம். ஆனால் "இஸ்ரேலை சுற்றி பாதுகாப்பு வலையம்" போட்ட, "கிறிஸ்தவ" நாடுகளுக்கு மட்டும் இந்த உண்மை தெரியவில்லை.

இஸ்ரேல் ஆதரவாளர்களிடம் இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. (அவர்களே இப்போது தான் முதன் முறையாக இதை எல்லாம் கேள்விப்படுகிறார்கள்.) உலகத்தில் எல்லாவற்றையும் இனமாக, மதமாக பிரித்துப் பார்ப்பவர்களுக்கு அதற்கு மேல் சிந்திக்கத் தெரியாது. இவர்கள் "கிறிஸ்தவ நாடுகள்" என்று குறிப்பிடுவன யாவும் மேலைத்தேய ஏகாதிபத்திய நாடுகள். அவை தமது பொருளாதார நலன் குறித்து மட்டுமே சிந்திக்கின்றன. அவர்களுக்கு மதம் ஒரு விஷயமே அல்ல. கீழைத்தேய மக்கள் தான் அப்படி நம்பி ஏமாந்து போகின்றார்கள்.

மேலைத்தேய "கிறிஸ்தவ" நாடுகள், கிறிஸ்தவ செர்பியாவுக்கு எதிராக முஸ்லிம் கொசோவோவை ஆதரிக்கவில்லையா? அதனை எப்படி நாம் புரிந்து கொள்வது? நேட்டோ படைகள் செர்பியா என்ற கிறிஸ்தவ நாட்டின் மீது குண்டு போட்ட போது, உலகக் கிறிஸ்தவர்கள் நேட்டோ நாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டாமா? அப்போதெல்லாம் இந்த "கிறிஸ்தவ-தமிழ்-சியோனிஸ்டுகள்" இஸ்லாமிய கொசோவோவை தானே ஆதரித்தார்கள்? அதனை மறுக்க முடியுமா? கொசோவோ விடுதலையடைந்த போது குதூகலித்தார்கள். அப்போது என்ன நடந்தது? கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன, கிறிஸ்தவ செர்பியர்கள் கொசோவோவில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள். இஸ்ரேலைக் காட்டி கிறிஸ்தவ ஆதரவு திரட்டும் பேர்வழிகளுக்கு அந்தக் கதைகள் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிப்பு செய்கிறார்களா?

அது சரி, "உலகக் கிறிஸ்தவர்களின் மீட்பரான" அமெரிக்கா, கிறிஸ்தவர்களுக்கு செய்த நன்மை என்ன? ஈராக்கில் குறைந்தது பத்து சத வீதமாகிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். சதாம் ஹுசைன் காலத்தில் எட்டு லட்சம் கிறிஸ்தவர்கள் சமாதானமாக, பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். தாரிக் அசிஸ் என்ற கிறிஸ்தவர் வெளிவிவகார அமைச்சராக உயர்பதவி வகித்தார்.
(கிறிஸ்தவ) அமெரிக்க படையெடுப்புக்கு பின்னர், கிறிஸ்தவ ஈராக்கியரின் வாழ்வு மேம்பட்டிருக்கும் என்று ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே எதிர்பார்த்திருப்பான். (கிறிஸ்தவ) அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருக்கும் போதே, ஆயுதபாணிகள் கிறிஸ்தவர்களை தாக்குவதை தடுக்க முடியவில்லை. சதாம் ஆட்சியில் ஒரு கிறிஸ்தவர் கூட கொல்லப்படவில்லை, ஒரு கிறிஸ்தவ ஆலயம் கூட சேதமாக்கப்படவில்லை. "அமெரிக்கா பாதுகாப்புக் கொடுத்த" ஈராக்கில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், தேவாலயங்கள் சேதப் படுத்தப் பட்டன.

எல்லாம் வல்ல, உலகில் அதிக சக்தி வாய்ந்த, அமெரிக்க இராணுவம் நினைத்திருந்தால் கிறிஸ்தவ ஈராக்கியருக்கு தனி அரசு வேண்டாம், ஒரு தனி மாநிலமாவது அமைத்துக் கொடுத்திருக்க முடியாதா? அது கூட வேண்டாம். கிறிஸ்தவ அமெரிக்க படையினர், ஈராக்கிய கிறிஸ்தவர்களை பாதுகாத்திருக்க கூடாதா? இன்று அங்கேயுள்ள நிலைமை என்ன? கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஐம்பது வீதமான கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் அகதிகளாக அலைகிறார்கள். ஈழத்தமிழருக்கும் அந்த நிலைமை வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களா? ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் வெளியேற்ற சூழ்ச்சி நடக்கிறதா?

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
12.இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Saturday, December 25, 2010

இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"](பகுதி: ஆறு)

இஸ்ரேலின் காஸா பிரதேசமும், கிழக்கிலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வாகரை பிரதேசமும், பல ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இரண்டுமே ஒடுக்கமான நிலப்பரப்புகள். நீளத்தால் கூடியவை, அகலத்தால் குறுகியவை. இரண்டு பிரதேசங்களும் மூன்று பக்கமும் எதிரி தேசத்தால் சூழப்பட்டிருந்தன. ஒரு பக்கம் கடலைக் கொண்டிருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வாகரை ஒரு சிறிய நிலப்பரப்பு. ஆனால் செறிவான சனத்தொகையைக் கொண்டிருந்தது. மேலும் வன்னி பெரு நிலப்பரப்புடன் சேராமல் தனித்துக் காணப்பட்டது. காஸாவும் பாலஸ்தீன பெரு நிலப்பரப்பான மேற்குக்கரையுடன் சேராமல் தனித்துள்ளது. மிகவும் ஒடுக்கமான காஸா பிரதேசத்தினுள் அதிகளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர்.
வாகரையிலும் வாழ்ந்த தமிழர்களில் பலரும், காஸா வாழ் பாலஸ்தீனரில் பலரும் ஒரே மாதிரியான கடந்த காலத்தைக் கொண்டவர்கள். திருகோணமலை, மட்டக்களப்பு மாகாணங்களில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டு வெளியேறிய மக்கள் வாகரையில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆயுதமேந்திய சிங்கள ஊர்காவல் படைகள் அந்த தமிழர்களை இருப்பிடங்களை விட்டு விரட்டினார்கள். காஸாவில் வாழும் பாலஸ்தீனர்கள் ஹைபா (வட இஸ்ரேல்), பெர்ஷேபா, அஷ்கெலோன் (தென் இஸ்ரேல்) ஆகிய நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். 1948 ம் ஆண்டின் பின்னர், அந்த நகரங்களில் யூத குடியேற்றங்கள் அதிகரித்தன. யூத ஆயுதக் குழுக்கள், அங்கு வாழ்ந்த பாலஸ்தீனர்களை காஸா வரை அடித்து விரட்டினர். தமிழர்களினதும், பாலஸ்தீனர்களினதும் எதிர்ப்பு நடவடிக்கையும் ஒரே மாதிரியாக இருந்தது. வாகரையில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதலால், ஒரு காலத்தில் தமிழ்க் கிராமங்களாக இருந்த சிங்களக் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. காஸாவில் நிலை கொண்டிருந்த ஹமாசின் ஷெல் தாக்குதலால் ஒரு காலத்தில் அரபு கிராமங்களாக இருந்த யூத கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் இரண்டையும் பயங்கரவாதமாக பார்த்தது.

இலங்கையில் சிங்களக் குடியேற்றங்கள், மகாவலி ஆற்றை திசைதிருப்பி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழே இடம்பெற்றது. அதை சாட்டாக வைத்து கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், பிரிட்டிஷ் கடற்படை முகாம் திருகோணமலையில் இருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த போதிலும், நாட்டின் தலைவியாக பிரிட்டிஷ் மகாராணி விளங்கினார். 1972 ம் ஆண்டு, குடியரசான பின்னரே பிரிட்டனுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் பட்டன. ஆகவே இலங்கை சுதந்திரமடைந்த சில வருடங்களிலேயே இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் பிரிட்டனின் கண்ணுக்கு முன்னால் தான் நடந்து கொண்டிருந்தது. யூத குடியேற்றங்கள் இடம்பெற்ற காலங்களில், அன்றைய பாலஸ்தீனா பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பிரிட்டன் யூத குடியேற்றங்களை கண்டும் காணாமல் இருந்தது. இஸ்ரேலியர்கள் "சுதந்திரத்திற்கான போர்" புரிந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆயுதங்களைக் கொண்ட யூத இராணுவம் பலமாக இருந்தது. 1948 ல், பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு விலகிய பின்னர், இராணுவ பலத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இஸ்ரேலை பொறுப்பேற்றனர்.

அதே வருடம் பிரிட்டன் இலங்கையை விட்டு வெளியேறியது. பிரிட்டன் அதற்கு முன்னர், சிங்களவர்களை மட்டுமே இராணுவமயமாக்கியது. சில பரங்கி அதிகாரிகளும், மிகக் குறைந்தளவு தமிழர்களும் அன்று சிறிலங்கா இராணுவத்தில் இருந்தனர்.
எண்ணிக்கையில் குறைந்த சிறிய இஸ்ரேலிய இராணுவம், பெருந்திரளான அரபு படைகளுடன் மோதி வென்றதாக பரப்புரை செய்யப்படுகின்றது. அன்றைய நிலையை தெரிந்த ஒருவருக்கு அந்தக் கதையை நம்புவது கடினமாக இருக்கும். இஸ்ரேலை சூழ இருந்த அரபு நாடுகள் அன்று இராணுவ பலத்துடன் இருக்கவில்லை. லெபனான், சிரியா ஆகியன 1946 ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலையடைந்தன. ஜோர்டான் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. எகிப்தில் மன்னர் பிரிட்டிஷாரின் தலையாட்டும் பொம்மையாக இருந்தார். அன்றைய போரில் ஈடுபட்ட படைகளின் விபரம் பின்வருமாறு. யூத ஆயுதக் குழுக்கள் கிஷ், கிம், இர்குன், பல்மாச், மொத்தம்: 97000. அரபு படையணிகள், மொத்தம்: 20000. இவை அமெரிக்க அரசு எடுத்திருந்த கணக்கெடுப்பு. (From Haven to Conquest , by W .Khalidi )

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் சிங்களப் பகுதிகளான கொழும்பு, காலி போன்ற நகரங்களில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சிங்களவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம், தமிழர்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்குள் சென்று முடங்க வைத்தார்கள். இனக்கலவரங்களின் பின்னர், தமிழர்களின் வாழிடங்கள்
சிங்களவர் வசமாகின. இஸ்ரேலிலும் அதே போன்ற காட்சிகள் அரங்கேறின. தலைநகரான கொழும்பில் நடந்த படுகொலைகள் அதிகமாக உலகின் கவனத்தை பெற்றன. சிங்களப் பேரினவாத வெறியை உலகம் அறிந்து கொண்டது. அதே போல ஜெருசலேம் அருகில் நடந்த டெய்ர் யாசின் படுகொலைகள், யூத பேரினவாத வெறிக்கு எடுத்துக்காட்டு. ஜெருசலேம் அருகில் யூத குடியிருப்புகளால் சூழப் பட்டிருந்த, டெய்ர் யாசின் என்ற ஊரில் 610 அரேபியர்கள் வாழ்ந்தனர். கிட்டத்தட்ட 50 பேர் மட்டுமே அங்கிருந்து உயிரோடு தப்பினார்கள். மிகுதி ஊர்வாசிகள் அனைவரும் இர்குன் என்ற யூத ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்டனர். சியோனிஸ்ட்கள் அந்த சம்பவத்தை மறைக்கவில்லை. படுகொலைச் செய்தியை உளவியல் யுத்தத்திற்கு சார்பாக பயன்படுத்தினார்கள்.(Deir Yassin Massacre) அன்று இனப்படுகொலையை நடத்திய இர்குன் ஆயுதக் குழுவின் தலைவர் மெனகம் பெகின் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக தெரிவானார். "டெய்ர் யாசின் படுகொலை இடம்பெற்றிரா விட்டால், இஸ்ரேல் தோன்றியிருக்காது." இவ்வாறு தனது சுயசரிதையில் எழுதியுள்ளார் மெனகம் பெகின்.

இஸ்ரேலின் உருவாக்கத்தின் பின்னர், யார் இஸ்ரேலியப் பிரஜை என்பதை வரையறை செய்தார்கள். உலகில் உள்ள யூதர்களுக்கு எல்லாம் இஸ்ரேல் தாயகம் என்று பிரகடனம் செய்தார்கள். அதே காலப்பகுதியில், சிறிலங்கா சிங்கள பௌத்த மக்களின் தாயகம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு தனியான சட்டம் இயற்றினார்கள். அவர்கள் இஸ்ரேலிய குடியுரிமை பெற்றிருக்கலாம், ஆனால் இஸ்ரேலிய தேசியத்தைக் கொண்டிருக்க முடியாது. அதற்கும் பல நிபந்தனைகள் உள்ளன:
- 1948 ம் ஆண்டுக்கு முன்னர், (பிரிட்டிஷ்) பாலஸ்தீன பிரஜையாக இருந்தவர்.
- குடிசன பதிவுப் புத்தகத்தில் பெயரிருக்க வேண்டும்.
- இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலம் வசித்திருக்க வேண்டும்.

யூத ஆயுதக்குழுக்களின் வன்முறைக்கு இலக்காகாத சில அரபுக் கிராமங்களை சேர்ந்த பாலஸ்தீனர்கள் மட்டுமே மேற்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு மட்டுமே இஸ்ரேலிய குடியுரிமை கிடைத்தது. இடம்பெயர்ந்தவர்கள், அகதிகளாக வெளியேறியோர் அந்த சட்டத்திற்குள் அடங்க மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட பிரஜாவுரிமைச் சட்டம் மேற்குக்கரை, காஸா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களை கணக்கெடுக்கவில்லை. அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். சிறிலங்காவின் பேரினவாத அரசும், சுதந்திரத்தின் பின்னர் இஸ்ரேலிய பாணி குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் மட்டுமே புதிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டனர். இந்தியாவில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளிகளாக கொண்டு வரப்பட்ட, மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் படவில்லை. அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்.

சிறிலங்காவும், இஸ்ரேலும் ஒரே காலத்தில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றன. சிறிலங்காவில் பௌத்த மதமும், இஸ்ரேலில் யூத மதமும் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முக்கிய இடம் பிடித்தன. சிறிலங்காவின் சிங்கள பேரினவாதம், தனக்கடுத்த சிறுபான்மை இனமான தமிழர்களை ஒடுக்கி வருகின்றது. அதற்காக முஸ்லிம்கள், பறங்கியர், மலேய் போன்ற பிற சிறுபான்மை இனங்களுக்கு சலுகைகள் கொடுத்து ஆதரவை பெற்றுக் கொண்டது. இஸ்ரேலிலும் அதே கதை தான். யூதர்களுக்கு அடுத்த பெரிய சிறுபான்மை இனமான பாலஸ்தீனர்களை ஒடுக்குவதே இஸ்ரேலிய பேரினவாதத்தின் கொள்கை. அதற்காக டுரூசியர்கள், பெதூயின்கள் போன்ற பிற சிறுபான்மை இனங்களுக்கு சலுகைகளை வழங்கி, ஆதரவை வாங்கியது. தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவானவர்களாக சந்தேகின்றனர். பாலஸ்தீனர்கள், பெதூயின்கள் அனைவரும் இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவானவர்களாக சந்தேகிக்கின்றனர். சிறுபான்மை இனங்களை பிரித்து வைத்து, சிறிலங்காவும், இஸ்ரேலும் தமது பேரினவாத நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.


(தொடரும்)

டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!


"அனைவருக்கும் யால்டா (Yalda) நல்வாழ்த்துக்கள்!"
என்ன? ஒன்றுமே புரியவில்லையா? "கிறிஸ்துமஸ் தினம்" என்று சொன்னால் தான் தெரியுமா?

டிசம்பர் 25 ம் தேதி, தேவகுமாரன் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரது பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவ சகோதரர்களே, நண்பர்களே, பெரியோர்களே, இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று தான் பிறந்தார் என்று விவிலிய நூலில் எங்கேயும் எழுதப்படவில்லை. பல அறிஞர்கள் பைபிளில் ஒவ்வொரு சொல்லாக தேடிப் பார்த்து விட்டார்கள். இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்ற விபரம் கூட அங்கே இல்லை.

அப்படியானால் எதற்காக டிசம்பர் 25 ஐ, இயேசு பிறந்த தினம் என்று கூறுகிறார்கள்? இதற்கான விடை ரோமர்களின் வரலாற்றில் தேடிப் பார்க்கப் பட வேண்டும். ஆதி கால கிறிஸ்தவர்கள், பிற ரோம பிரஜைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சினை, கிறிஸ்தவத்துக்கு முந்திய ரோம மதத்தின் பண்டிகை நாட்கள். டிசம்பர் 25 ம், வேற்று மதம் ஒன்றின் புனித தினம். அதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

ரோமர்கள் டிசம்பர் 17 முதல் 25 வரை, "Saturnalia" என்றொரு பண்டிகையை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் சட்ட ஒழுங்கு தளர்த்தப்படும். "மக்கள் தெருவில் பாடிக் கொண்டே நிர்வாணமாக வீடு வீடாக செல்வார்கள். பாலியல் பலாத்காரங்கள் சாதாரணமாக நடக்கும். மனித உருவத்தில் செய்யப்பட்ட பிஸ்கட் புசிப்பார்கள்." இவ்வாறு, தான் அவதானித்தவற்றை லூசியான் என்ற கிரேக்க சரித்திர ஆசிரியர் குறித்து வைத்துள்ளார்.

ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், இப்போதும் கிறிஸ்துமஸ் காலத்தில், மனித உருவத்தில் செய்யப்பட்ட பிஸ்கட்கள் தயாரிப்பார்கள். டிசம்பர் மாத பண்டிகை, தீமையை அழிப்பதாகவும் பொருள் கொள்ளப் படுகின்றது. ஒவ்வொரு ஊரிலும், தீய ஒழுக்கம் கொண்ட ஒரு ஆண்/பெண், பாவியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் மக்கள் யாரை "பாவி" என்று சுட்டிக்காட்டுகிறார்களோ, அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்படுவார். டிசம்பர் 25 அன்று தான் தீர்ப்புக் கூறும் நாள். பிற்காலத்தில், ரோமர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும், பழைய பண்டிகை தினத்தை கொண்டாடாமல் விடவில்லை. கிறிஸ்தவ சபை, டிசம்பர் 25 ம் திகதியை, இயேசுவின் பிறந்த தினமாக அறிவித்ததால், அது கிறிஸ்தவ புனித தினமாகி விட்டது.

டிசம்பர் 25, இன்னொரு கடவுளின் பிறந்த தினமாக கொண்டாடப் பட்டது. ஒரு காலத்தில் மித்ரா என்ற கடவுளை வழிபடும் மதம், இன்றைய ஈரான் முதல் ரோமாபுரி வரை பரவியிருந்தது. ரிக் வேதத்தில் எழுதப் பட்டிருப்பதால், வட இந்தியாவிலும் மித்ரா வழிபாடு இருந்திருக்க வேண்டும். குறிப்பாக ரோம படையினர் மத்தியில் மித்ரா வழிபாடு பிரபலமாக இருந்தது. பண்டைய ரோமர்களுக்கு மித்ரா கடவுளின் தோற்றம் பற்றிய கதை பரிச்சயமானது. ஆச்சரியப்படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த கதையும், மித்ராவின் பிறப்பு குறித்த கதையும் ஒரே மாதிரி உள்ளன.

கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்பு (கி.மு.600)பல நூறாண்டுகளாக, மித்ரா வழிபாடு இருந்துள்ளது. ஆகவே இது ஒன்றும் தற்செயல் அல்ல. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபன மயப் படுத்தியவர்கள், மித்ராவின் கதையை, இயேசுவின் கதையாக திரித்திருக்க வாய்ப்புண்டு. இன்று மித்ராவின் கதை யாருக்கும் தெரியாது. ஆனால் அன்றிருந்த நிலை வேறு. இன்று எவ்வாறு ஏசு பிறந்த கதை சாதாராணமாக எல்லோருக்கும் தெரியுமோ, அதே போல பண்டைய ரோம மக்கள் அனைவருக்கும் மித்ரா பிறந்த கதை தெரிந்திருந்தது. ஆகவே ஒன்றை இன்னொன்றிற்கு மாற்றாக கொண்டு வந்ததன் மூலம், பழைய மத நம்பிக்கைகள் அடியோடு அழிக்கப் பட்டன.

ஆண்டவரின் குமாரனான மித்ரா, டிசம்பர் 25 அன்று, பூமியில் பிறந்ததாக கூறப் படுகின்றது. ஏசுவை ஈன்ற கன்னி மரியாள் போன்று, மித்ராவின் தாயான Anahita வும் கன்னியாகவே கடவுளின் குமாரனை பெற்றெடுத்தார். மித்ரா மரணமுற்ற போது, ஒரு குகைக்குள் புதைக்கப் பட்டார். சில நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்தார். ஏசுவின் மரணம் பற்றிய கதையும், இந்த இடத்தில் ஒத்துப் போகின்றமை அவதானிக்கத் தக்கது. ஈரானில் சாரதூசர் என்ற தீர்க்கதரிசி, ஓரிறைக் கோட்பாட்டை கொண்டு வந்ததால், பல தெய்வங்களில் ஒன்றான மித்ரா முக்கியத்துவம் இழந்தது. சரதூசர், "இறைவன் ஒருவனே, அவன் பெயர் மாஸ்டா," என்று புதியதொரு மத சம்பிரதாயத்தைக் கொண்டு வந்தார். கிறிஸ்துமஸ் என்ற சொல்லில் உள்ள "மஸ்", மாஸ்டாவில் இருந்து திரிபடைந்த சொல்லாகும்.

அன்றிருந்த போப்பாண்டவர் லயோ(கி.பி. 376), மித்ரா வழிபாட்டுத் தலங்களை அழித்தார். அது மட்டுமல்ல, மித்ராவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஐ, இயேசு பிறந்த தினம் என்றும் அறிவித்தார். ஈரானுக்கு அயலில் உள்ள ஆர்மேனியாவில் மித்ரா வழிபாடு நீண்ட காலத்திற்கு தொடர்ந்தது. கிறிஸ்தவ மதத்தை அரசு மதமாக ஏற்றுக் கொண்ட முதலாவது நாடு ஆர்மேனியா என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களது கலண்டரின் படி, ஜனவரி 6 , இயேசுவின் பிறந்த தினமாக கொண்டாடப் பட்டது. (இன்றைக்கும் ரஷ்யா, கிரேக்கம் போன்ற நாடுகளில் அன்று தான் கிறிஸ்துமஸ்.) "கிறிஸ்துவுக்கு முன்", "கிறிஸ்துவுக்கு பின்" என்ற கால அளவீட்டுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ரோம சாம்ராஜ்ய கிறிஸ்தவர்கள், மதப் பிரச்சாரத்துக்கு வசதியாக, அவ்வாறு காலத்தை அளந்து வந்தனர். (தற்போது மதச் சார்பற்ற நாடுகளில் "நமது கால அளவீடு" என்று குறிப்பிடுகின்றனர்.)


பண்டைய ஈரானில் "ஒளி பிறக்கும் தினம்" கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி போன்றது. இதுவும் வருட இறுதியில் தான் வரும்.) ஈரானில் அந்த தினத்தை, யால்டா (Yalda) என்று அழைத்தனர். பார்சி மொழியில் "யால்(Yal )" என்றால் பிறப்பு, "டா(Da )" என்றால் நாள் என்று அர்த்தம். நாள் என்பது வெளிச்சம் என்றும் பொருள்படும். அதே நேரம் "டா" என்ற சொல், பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றன. நெதர்லாந்து மொழியில் "Dag"(டாக்), ஸ்கண்டிநேவிய மொழிகளில் "Dag " (டே), ஆங்கிலத்தில் "Day ". எல்லாமே நாளைக் குறிக்கும் சொல் ஒரே மாதிரி தோன்றுவதை அவதானிக்கலாம்.

கிறிஸ்துமஸ் தினத்தைக் குறிக்கும், ஈரானிய சொல்லான "Yalda " கிட்டத்தட்ட அதே உச்சரிப்பில் ஸ்கண்டிநேவிய மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய நாடுகளில் கிறிஸ்துமஸ், "Juledag" (உச்சரிப்பு "யூலே டெ") என்று அழைக்கப்படுகின்றது. பின்லாந்தில் "Joulu" (உச்சரிப்பு: "யவ்லு") என்று அழைக்கின்றார்கள். ஸ்கண்டிநேவிய நாடுகளில் டிசம்பர் 25, ஏசுவின் பிறந்த தினம் என்பதனை விட, அறுவடை நாள் என்ற அர்த்தத்திலும் கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய நாடுகளில் உங்கள் நண்பர்கள் வசித்தால், அவர்களிடம் கேட்டு தகவலை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு:
Merry Mithra
Yalda
Mithra
Saturnalia

Friday, December 24, 2010

பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பத்து)

1982 ல், ஈழ - பாலஸ்தீன ஆதரவு துண்டுப்பிரசுரங்கள், "ஈழப் புரட்சி அமைப்பினரால்" வெளியிடப்பட்டன. அந்த வருடம் லெபனானில் ஷப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஈழத்தமிழர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத்தில் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டம் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைவெறிக்கு சற்றும் சளைக்காமல், சிங்கள இராணுவம் படுகொலைகளை செய்தது. இருப்பினும் அந்த வருடம் (1982) இஸ்ரேலியரின் பாலஸ்தீன இனப்படுகொலை ஈழத்திலும் அனுதாப அலையை தோற்றுவித்தது.

ஷப்ரா, ஷட்டிலா படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் லெபனான் பாசிஸ்ட்களான பலாங்கிஸ்ட்கள். இருப்பினும் இஸ்ரேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தது. இஸ்ரேலிய படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட அகதி முகாம்களில், தொடர்ந்து மூன்று நாட்கள் படுகொலை இடம்பெற்றது. கசாப்புக் கடையில் ஆடு வெட்டுவதைப் போல, கொலைஞர்கள் சாவகாசமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். அன்று அந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன், பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஷரோனுக்கு எதிராக பெல்ஜியத்தில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தாலும் என்ன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு இருந்தால், எந்தவொரு போர்க்குற்றவாளியும் விசாரணைக்கு அஞ்சத் தேவையில்லை.

லெபனானில் இஸ்ரேலிய படையெடுப்பின் பின்னர், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு பாதுகாப்பான பின்தளம் என்று கூறக் கூடிய நாடு எதுவும் இருக்கவில்லை. ஏற்கனவே ஜோர்டானில் விரட்டப்பட்டு தான் லெபனான் வந்தார்கள். லெபனானிலும் அவர்களுக்கு வரவேற்புக் கிட்டவில்லை. வேண்டா விருந்தாளிகளாக நடத்தப் பட்டார்கள். எண்பதுகளில் லெபனானில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, PLO வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. அன்று PLO உலகில் "பணக்கார இயக்கம்" என்று பேசப்பட்டது. அனைத்து அரபு நாடுகளும் அளித்த தானங்கள், அவர்களது பணப்பெட்டியை நிரப்பின. யாசிர் அரபாத் வெளிநாட்டுப் பயணங்களுக்கு என தனியான விமானம் வைத்திருந்தார். உலகில் முதன்முதலாக விமானம் வாங்கிய விடுதலை இயக்கம் என்ற பெயரும் PLO வுக்கு இருந்தது. அந்நிய நாடுகளில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தால் விடுதலையைப் பெற முடியாது என்பதை, பாலஸ்தீனர்கள் காலந் தாழ்த்திப் புரிந்து கொண்டனர். இஸ்ரேலிய இராணுவம் பலமாக இருந்ததால், PLO வின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று எதுவும் இருக்கவில்லை. அதனால், இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் யாவும், அயல் நாடுகளில் இருந்தே நெறிப் படுத்தப் பட்டன.

1967 ம் ஆண்டு யுத்தத்தின் பின்னரே, ஆயுதமேந்திய பாலஸ்தீன அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன. ஜெருசலேம், மேற்குக் கரை, காஸா பிரதேசங்களை, இஸ்ரேல் போரில் கைப்பற்றியது. ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மேற்குக்கரை (ஜெருசலேம் உட்பட), எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா என்பன, பாலஸ்தீனரின் புகலிடமாக விளங்கியது. அதாவது 1948 ல் இஸ்ரேல் உருவானதால் வெளியேற்றப் பட்ட பாலஸ்தீன அகதிகள், அந்தப் பிரதேசங்களில் அடைக்கலம் கோரி இருந்தனர். 1967 போரின் பின்னர், மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ வேண்டிய நிலை வந்தது. ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்வதென்பது, ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும் இடர். அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு பிரஜாவுரிமை கிடையாது. அதனால் கடவுச் சீட்டும் எடுக்க முடியாது. வாக்குரிமை கிடையாது. அதனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது. வீடு, காணி சொந்தமாக வைத்திருக்கும் உரிமை கிடையாது. அதனால் அவர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. நிலங்கள் பறிமுதலாகின்றன. நிச்சயமாக அத்தகைய சூழ்நிலையில் மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரிப்பார்கள். 1967 ம் ஆண்டின் பின்னர், விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சமூகக் காரணி அங்கே காணப்பட்டது.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் குறித்த அவா, சில இளைஞர்களிடம் காணப்பட்ட போதிக்கும், அது வளர்ச்சி அடைய ஒரு உந்துசக்தி தேவைப்பட்டது. இஸ்ரேலில் 1967 யுத்தம், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேரத் தூண்டியது. அதே போல, இலங்கையில் 1983 இனக்கலவரம், ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேர்த்து விட்டது. அன்று ஈழத்தில் இயக்கங்களில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள், பயிற்சிக்காக இந்தியா சென்றார்கள். ஏனென்றால், அனைத்து இயக்கங்களும், இந்தியாவில், தமிழ் நாட்டில் தான், பயிற்சி முகாம்களை கொண்டிருந்தன. அதே போல அன்று பாலஸ்தீன இயக்கங்கள் யாவும், ஜோர்டானில் நிலை கொண்டிருந்தன. இஸ்ரேலின் எல்லையான ஜோர்டான் நதிக்கரை அருகில், பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. ஈழ விடுதலை அமைப்புகளின் தலைமையகங்கள் சென்னையில் இருந்ததைப் போல, பாலஸ்தீன இயக்கங்கள் ஜோர்டானின் தலைநகர் அம்மானில் தலைமையகங்களை கொண்டிருந்தன. அன்று தமிழ் நாட்டில் ஈழப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுமளவிற்கு சுதந்திரம் இருந்தது. இந்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசு ஆகியனவற்றின் செல்வாக்கு அவர்களுக்கு இருந்தது.

ஆரம்ப காலத்தில் முப்பதுக்கும் குறையாத ஈழ விடுதலை அமைப்புகள் தோன்றியிருந்தன. ஒரு சில, நாலைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட சிறிய இயக்கங்களாக இருந்தன. அன்று ஜோர்டானிலும் ஐம்பதுக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தோன்றின. அரபு நாடுகளில் இருந்து பணம் வருகின்றது என்பதற்காக இயக்கம் தொடங்கியவர்களும் உண்டு. பதா போன்ற தேசியவாத அமைப்புகளும், PFLP போன்ற மார்க்சிய அமைப்புக்களுமாக அவர்களுக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்பட்டது. அதே போன்று ஈழ விடுதலை அமைப்புகளிலும், ஒரு சில தேசியவாதத்தையும், வேறு சில மார்க்சியத்தையும் தமது கொள்கைகளாக கொண்டிருந்தன. 1984 ம் ஆண்டு யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலத்தில் A .K . 47 துப்பாக்கிகளை ஏந்திய இயக்க உறுப்பினர்கள், "பிக்-அப்" வாகனத்தில் பவனி வருவார்கள். அதே போன்ற காட்சிகளை அன்று ஜோர்டானில் இருந்தவர்கள் கண்டிருப்பார்கள். ஆமாம், அதே A .K . 47, அதே பிக் அப் வண்டி, போராளிகளின் தோற்றமும் ஒரே மாதிரித் தான் இருக்கும். (வெளியே இழுத்து விடப்பட்ட சட்டை. மார்பில் சன்னக் கூடுகளை வைக்கும் "ஹோல்சர்" பை. இத்தியாதி.)
ஒரு காலத்தில், தமிழக மக்களுக்கு ஈழப் போராளிகள் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. பின்னர் சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் அது இறங்குமுகமாகியது. ஜோர்டானிலும் அதே போன்ற நிலை காணப்பட்டது. உதாரணத்திற்கு குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு பாலஸ்தீன போராளியை ஜோர்டான் போலீசார் கைது செய்திருந்தனர். கைதியை விடுவிக்குமாறு, சம்பந்தப் பட்ட போராளியின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலிஸ் நிலையம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இது போல நிறைய சம்வங்கள் இடம்பெற்றன. தமிழகத்தில் போராளிக் குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்ட "பர்மா பஜார் சம்பவம்" போன்ற பல ஜோர்டானிலும் இடம்பெற்றன.

அன்று ஈழ விடுதலை அமைப்புகள் தமிழகத்தை பின்தளமாக பயன்படுத்துவதற்கு சில குருட்டு நம்பிக்கைகள் காரணமாக இருந்தன. "இந்தியாவிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அதனால் இந்திய அரசு எப்போதும் ஈழத்தமிழருக்கு சார்பாகவே நடக்கும். ஒரு போதும் ஈழ விடுதலை அமைப்புகளை அடக்க துணியாது. அது தமிழகத்தில் கிளர்ச்சியை தோற்றுவிக்கும்...." இவ்வாறு அந்த நம்பிக்கை அமைந்திருந்தது. ஜோர்டானில் தளம் அமைத்திருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் அதே போன்ற குருட்டு நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள். "ஜோர்டானில் பெருமளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். (1948 ல் இஸ்ரேலை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் குடியுரிமை வழங்கப்பட்டது.) அதனால் ஜோர்டான் அரசு விடுதலை அமைப்புகளை அடக்குமாகில், பாலஸ்தீன பிரஜைகள் கிளர்ந்தெழுவார்கள்..." 1970 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அந்த நம்பிக்கை தவிடுபொடியாகியது.

பேசும் மொழி ஒன்றாகிலும், பாலஸ்தீன, ஜோர்டானிய மக்கள் மத்தியில் கலாச்சார வேறுபாடுகள் உண்டு. பாலஸ்தீனர்கள் நகர்ப்புற கலாச்சாரத்தை கொண்டவர்கள். மேலைத்தேய கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தைக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக ஜோர்டானியர்கள் "பெதூயின்" என்ற நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களது கலாச்சாரமும் நாட்டுப்புறம் சார்ந்தது. மன்னர் ஹுசைன் ஹஷமித் குலத்தை சேர்ந்தவர். மன்னரின் குல விசுவாசம், பெதூயின் படைவீரர்களின் விசுவாசம் என்பன, பாலஸ்தீனருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவின.
மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான ஜோர்டானிய படைகள், பாலஸ்தீன ஆயுதபாணி இயக்கங்கள் மீது யுத்தம் தொடுத்தது. "கறுப்பு செப்டம்பர்" என்று அழைக்கப்படும் அந்தப் போரின் பின்னர், ஒரு பாலஸ்தீன போராளியை கூட ஜோர்டானில் விட்டு வைக்கவில்லை. போராளிகள் மத்தியில் இழப்பு அதிகமாக காணப்பட்டது. அனைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஜோர்டானை விட்டு வெளியேறி, லெபனானில் தளம் அமைத்தன.

1983 ம் ஆண்டு, இந்தியா ஆயுதம் கொடுக்கிறது, பயிற்சி கொடுக்கிறது என்று, அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளும் இந்தியாவில் தளமமைத்தன. இருந்தாலும் அன்று சில மார்க்சிய அமைப்புகள் இந்தியாவை "பிராந்திய வல்லரசு" என்றன. பங்களாதேஷில் இந்திய தலையீட்டை விளக்கும், "வங்கம் தந்த பாடம்" என்று ஒரு நூல் கூட வெளிவந்தது. "முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான புரட்சி என்ற கொள்கை, இந்திய முதலாளித்துவ அரசுக்கும் எதிரானது தான்." என்பதை ஒத்துக் கொண்டன. அதெல்லாம் சொல்லில் மட்டுமே, செயலில் காட்ட தயங்கினார்கள். ஆனால் ஜோர்டானில் நிலைமை வேறாக இருந்தது. மார்க்சிய PLFP ஜோர்டானிய தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவியது. பொதுவுடைமை புரட்சிக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தலைநகர் அம்மானில் கூட காணப்பட்டன. PFLP உறுப்பினர்கள் மசூதிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, கார்ல் மார்க்சின் மேற்கோள்கள் ஒலிபரப்பாகின. பிற்காலத்தில் ஒரு நேர்காணலின் போது, "மார்க்சிஸ்ட்கள் ஜோர்டானில் குட்டையை குழப்பியதாக...." யாசிர் அரபாத் தெரிவித்தார். இருப்பினும் சில சம்பவங்கள், அமெரிக்கா, ஜோர்டான் அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க காரணமாக இருந்தது உண்மை தான். அது வேறொன்றுமில்லை. PFLP, சில மேற்குலக நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, ஜோர்டானுக்குள் கொண்டு வந்து விட்டது!

இந்தியாவுக்கும், ஈழத்திற்கும் நடுவில் 20 மைல் கடற்பரப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில், ஈழப் போராளிகள் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பிச் சென்றனர். அதே போல, பாலஸ்தீன போராளிகளும் ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி விடுவார்கள். ஜோர்டான், இஸ்ரேலிய எல்லையான ஜோர்டான் நதி எல்லை தாண்டுவதற்கு இலகுவானது. பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலால், இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டானிய அரசுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. ஈழப் போராளிகளின் தாக்குதலால், இலங்கை, இந்திய அரசுகள் ஒன்றையொன்று பகைத்துக் கொண்டன. ஆனால் அந்தப் பகைமை எல்லாம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையில் தான். அதன் பிறகு இந்திய இராணுவமே ஈழப் போராளிகளை எதிர்த்துப் போரிட்டது. 1970 கறுப்பு செப்டம்பரும், அதே போன்ற அரசியல் மாற்றத்தின் விளைவாகும். இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டான் அரசுக்கும் இடையில் இரகசியமாக நட்புறவு ஏற்பட்டது. ஜோர்டான் மன்னர் ஹுசைன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்பது பின்னர் பகிரங்கமாகியது. மார்க்சிய PFLP கூட அதைக் காரணமாக காட்டி ஹுசைன் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் அன்று அயலில் இருந்த அரபு நாடுகள், ஹுசைன் அரசு கவிழ்வதை விரும்பவில்லை என்பது யதார்த்தம்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை ஜோர்டான் தனது நலன்களுக்காக பயன்படுத்தியது. மேற்குக்கரை, காஸா போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்துவது ஜோர்டானின் உள்நோக்கம். அதற்கு இஸ்ரேலின் ஒத்துழைப்பு கிட்டியதும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை கைவிட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கும் அதே போன்றதே. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. இலங்கை அரசு அதற்கு விட்டுக் கொடுத்ததும், ஈழ விடுதலை அமைப்புகள் இந்தியாவுக்கு தேவைப் படவில்லை. பாலஸ்தீன-ஈழப் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச சமூகமும் ஒரே முடிவைத் தான் கொண்டிருந்தது. இஸ்ரேலிய அரசு, பாலஸ்தீன விடுதலை இயக்க சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக இருந்தது நோர்வே. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கும் நோர்வே தான் அனுசரணையாளர். இந்த உதாரணம் ஒன்றே போதும், பாலஸ்தீனரும், ஈழத் தமிழரும் ஒரே விதியை கொண்ட சகோதர இனங்கள் என்பதை நிரூபிக்க.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு

6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Tuesday, December 21, 2010

கொசோவோ: பயங்கரவாதமே வெல்லும்!

சமீபத்தில் சர்வதேச செய்திகளில் அடிபட்ட விடயம் கொசோவோ பொதுத் தேர்தல் பற்றியது. செர்பியாவிடம் இருந்து பிரிந்த குட்டி நாடான கொசோவோவின் சுதந்திரத்தை குறிப்பிட்ட சில மேலைத்தேய நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. கொசோவோ பிரிவினைக்கு நேட்டோ படைகளின் இராணுவ பலம் மட்டுமல்ல, கொசோவோ விடுதலைப் படையின் (Ushtia Çlirimtare ë Kosovës) ஆயுதப்போராட்டமும் ஒரு காரணம். (கொசோவோ மக்களுக்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று அவர்களே முரண்பட்டுக் கொள்வது வேறு விடயம்.)
கூட்டாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால், KLA தலைவர் ஹாசிம் தாச்சி பிரதமராக வர வேண்டும் என்று நேட்டோ தலைமை எதிர்பார்த்தது. ஆனால் விதி வேறு விதமாக தீர்மானித்தது. சுதந்திர கொசோவோவில் நடந்த பொதுத் தேர்தலில், ஆயுதம் ஏந்தாத மிதவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் தீவிரவாத KLA ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தவறிய போதிலும், உண்மையான அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்தது. முன்னால் KLA போராளிகள், புதிய கொசோவோ போலிஸ் படையினராக மாற்றப்பட்டனர். என்ன வித்தியாசம்? சீருடை மட்டும் தான் மாறியது. கொசோவோ விடுதலைப் படை, கொசோவோ ஜனநாயகக் கட்சியாகியது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஹாசிம் தாச்சியின் கட்சி வெற்றியீட்டியதால், அவர் பிரதமராக தெரிவானார். முன்னை நாள் ஆயுதக்குழுவின் தலைவர், இன்று ஜனநாயக பாராளுமன்றத் தலைவரானார். ஆனால் ஆயுதப்போராட்ட கால அக்கிரமங்களின் ஊழ்வினைப்பயன் இன்னும் விரட்டுகின்றது. ஹாசிம் தாச்சியை ஒட்டு மொத்த கொசோவோ மக்களின் காவிய நாயகனாக கொண்டாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷன் கூட, அவரை குற்றவாளி என்கிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை, ஹாசிம் தாச்சியின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகின்றது. Parliamentary Assembly of the Council of Europe (PACE) அமைப்பின் சுவிஸ் பிரதிநிதி வெளியிட்ட உண்மைகள், புதிய பிரதமரின் முகத்தில் கரியைப் பூசியது. "90 களில் இயங்கிய Drenica என்ற மாபியா கிரிமினல் குழுவின் முக்கிய புள்ளி, இன்றைய பிரதமர் ஹாசிம் தாச்சி.
கொசோவோ அல்பேனிய கிரிமினல்களைக் கொண்ட Drenica வின் முக்கிய தொழில், மனிதர்களைக் கடத்துவது, கொலை செய்வது, அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பது. அநேகமாக இந்த கிரிமினல்களால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி செர்பிய பொதுமக்கள். இந்த செய்திகள் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்னமே செர்பிய ஊடகங்களில் வெளிவந்திருந்தன. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களான அமெரிக்காவும், ஐரோப்பாவும் அவற்றை அலட்சியப் படுத்தின. அன்று சர்வாதிகாரி மிலோசொவிச்சை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஹாசிம் தாச்சி மேற்குலகில் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
முன்னாள் யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்ற நீதிபதி கார்லா டெல் பாண்டே ஒரு புத்தகம்("The Hunt") எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொசோவோவை சேர்ந்த அல்பேனிய மாபியா குழுவினர், செர்பியர்களை அயல்நாடான அல்பேனியாவுக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கே அவர்களை கொன்று, உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை செய்து வெட்டி எடுத்துள்ளனர். அல்பேனியாவின் திரானா விமான நிலையம் ஊடாக, உடல் உறுப்புகள் இஸ்ரேலுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. அன்று அல்பேனியர்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு, மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. செர்பியர்கள் என்ன குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பது மட்டுமே, யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்றத்தின் கடமையாக இருந்துள்ளது.

கொசோவோ யுத்தம் வெடித்த பொழுது, சேர்பியப் படைகள் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. செர்பியப்படைகள் அல்பேனிய பொது மக்களை கொலை செய்து, வீடுகளை எரித்து, அவர்களை வெளியேற்றியது. இவை எல்லாம் சர்வதேச ஊடகங்களில் விலாவாரியாக பேசப்பட்டன. உலகத்தில் எல்லோரும் சேர்பியர்களின் கொடுமைகளை மட்டும் கேள்விப்பட்டனர். ஆனால் கொசோவோவை நேட்டோப் படைகள் ஆக்கிரமித்த பின்னர் என்ன நடந்தது? அதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. ஹாசிம் தாச்சி தலைமையிலான KLA ஆயுதபாணிகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். செர்பியர்கள் மட்டுமல்ல, ஜிப்சி இன மக்களும், அடித்து விரட்டப்பட்டனர். அல்பெனியர்களைத் தவிர்ந்த வேறு எந்த இனத்தவருக்கும், "சுதந்திர கொசோவோவில்" இடம் இல்லை என்பதே KLA யின் கொள்கை.

ஹாசிம் தாச்சியின் KLA ஆரம்ப காலத்தில் ஒரு பயங்கரவாத குழுவாகவே செயற்பட்டு வந்தது. செர்பிய அரசு மட்டும் இதனை கூறவில்லை, அமெரிக்க அரசும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் KLA பெயரை சேர்த்திருந்தது. பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்ட KLA யின் ஆரம்ப கால தாக்குதல்கள் சில:
பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து வண்டி மீது தாக்குதல். 40 பேர் பலி. செர்பிய பாடசாலை மீது தாக்குதல், 6 சிறுவர்கள் பலி. 1999 ல் Prizren நகரில் KLA தாக்குதலில் 300 செர்பியர்கள் படுகொலை செய்யப்படனர். அவர்களில் கிறிஸ்தவ பாதிரிகளும் அடக்கம். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்த சுருவங்கள் நொறுக்கப்பட்டன. ஒரு சேர்பியப் பொதுமகனின் வெட்டப்பட்ட தலையுடன் KLA ஆயுதபாணிகள் நிற்கும் போட்டோ மேலே உள்ளது. இது மட்டுமல்ல, சொந்த அல்பேனிய இனத்தை சேர்ந்த இளம்பெண்களை கடத்திச் சென்று, இத்தாலி விபச்சார விடுதிகளில் விற்றுள்ளனர்.

இன்று ஹாசிம் தாச்சியை குற்றவாளியாக காட்டும் தகவல்கள், மேற்குலகின் ஒப்புதல் இன்றி கசியவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், கொசோவோவை சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு செர்பியாவை நிர்ப்பந்தித்து வருகின்றது. செர்பியர்களை திருப்திப் படுத்தவும், தாம் நடுநிலையானவர்கள் என்பதைக் காட்டவும், இப்போது இந்தக் தகவல்களை பகிரங்கப் படுத்தியிருக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு:
Serbian Prosecutor Investigating Reports of Organ Trafficking During War in Kosovo
The horrors of the yellow house in Burrel N Albania.

Saturday, December 18, 2010

தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பதினொன்று)
"தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான். புலம்பெயர்ந்த தமிழர்கள், பைபிளையும், சிலுவைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தால், மேற்குலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்." "இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் போட்டுள்ள பாதுகாப்பு வலையம் தான் இஸ்ரேலின் பலம். ஈழத்தமிழர்களும் கிறிஸ்தவ நாடுகளை நண்பர்களாக்கிக் கொண்டால், அவர்களது இலட்சியத்தில் வெற்றி பெறலாம். முக்கியமாக சிறிலங்கா படைகள் குண்டு போட்டு அழித்த தேவாலயங்களின் படங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களை, பௌத்த-சிங்கள அரசு படுகொலை செய்கின்றது என்ற பிரச்சாரம், மேலைத்தேய கிறிஸ்தவர்களின் அனுதாபத்தை தேடித்தரும்."- ஒரு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளரின் ஆலோசனை.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அந்தக் கருத்துக்கள் வேடிக்கையாகத் தோன்றலாம். தமிழர்களில் பெரும்பான்மையோரான இந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம். சில முற்போக்கு தமிழ் தேசியவாதிகள், மதவாதம் தமிழ் தேசியத்தை உடைத்து விடும், என்று கவலைப்படலாம். தமிழீழத்தை இன்னொரு இஸ்ரேலாக்கும் கருத்தியல், எழுபதுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக வலதுசாரி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள், அதனை பகிரங்கமாக தேர்தல் மேடைகளில் பேசினார்கள். தமிழீழத்தை ஆசியாவின் இஸ்ரேலாக்குவோம், என்று பெருமையாக முழங்கினார்கள். அவர்கள் உதாரணம் காட்டிய இன்னொரு நாடு சிங்கப்பூர்.

சாமானியன் கூட தமிழீழம் என்றால், இன்னொரு இஸ்ரேலாக, இன்னொரு சிங்கப்பூராக கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினான். தமிழர்கள், யூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட காலமும் அது தான். இன்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருகி விட்டார்கள். அன்று, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே சிறு தொகை படித்த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அதனால், மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்களை, புலம்பெயர்ந்த தமிழர்களாக காட்டினார்கள். "தமிழன் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றான். தமிழர்களுக்கு என்றொரு நாடில்லை." என்று அவர்களைத் தான் உதாரணமாக காட்டினார்கள். அன்று தமிழீழம் உருவானால், அது உலகத் தமிழர்களின் தாயகமாக இருக்கும் என்றார்கள். அதாவது இன்று இஸ்ரேல் உலக யூதர்களின் தாயகமாக இருப்பதைப் போல. (ஒரு யூதர் உலகின் எந்த மூலையில் இருந்து சென்றாலும் இஸ்ரேலிய பிரஜை ஆகலாம்.)

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு காரணம் இருந்தது. "தமிழர்கள் உலகிலேயே புத்திசாலிகள்" என்ற இன மேலாண்மைக் கருத்தியல். அதற்காக எல்லா தமிழர்களும் புத்திசாலிகள் என்று தவறாக கருதி விடக்கூடாது. யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே உலகிற் சிறந்த மூளைசாலிகள். "எலிசபெத் மகாராணிக்கு கணிதப் பாடம் படிப்பித்த தமிழன் கதை", யாழ்ப்பாண தமிழரின் அதி சிறந்த புத்திசாதுர்யத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. இப்போதும் பல யாழ்ப்பாண தமிழர்கள், பிற மாவட்ட தமிழர்களை விட, சிங்களவர்களை விட, முஸ்லிம்களை விட, தாம் உயர்ந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். தற்போது யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி பேசும் போது கூட:"ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரைக்கு இந்த நிலைமையா?" என்று தான் ஆதங்கப் படுகின்றனர். (அடிமைப் பரம்பரையாக இருந்த தலித் மக்களும் தமிழர்கள் தான்.) மேற்குறிப்பிட்ட சமூகப் பின்னணி அவர்களை, யூதர்களுடன் மட்டுமே தம்மை ஒப்பிடத் தூண்டியது. ஏனெனில் உலகில் யூதர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள், அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் (யாழ்ப்பாண) தமிழர்கள் உலகிற் சிறந்த மூளைசாலிகள்.

"யூதர்களும் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தவர்கள். உலகம் முழுக்க அகதியாக அலைந்தார்கள். இப்போது இஸ்ரேல் என்ற தேசத்தை ஆள்கிறார்கள். யூதரின் வரலாற்றுடன் ஒப்பிட்டு, ஆண்ட தமிழினத்தின் கதையை தமிழர்கள் வாழையடி வாழையாக தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து வர வேண்டும்." வருங்காலத் தமிழீழமும் இஸ்ரேலைப் போன்று அமெரிக்க அடியாளாக செயற்பட வேண்டுமென்றால், அதையிட்டு அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக அது ஒரு பெருமைக்குரிய விடயம். அமெரிக்காவின் ஆப்கான், ஈராக் படையெடுப்புகள், அல்கைதா எதிர்ப்பு போர், எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறது என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். வியட்னாம் போர் நடந்த காலத்தில், அமெரிக்கா கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்று அகமகிழ்ந்தார்கள். இஸ்ரேல்- அமெரிக்க ஆதரவை, யாழ்ப்பாண சமூகப் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சைவ-கிறிஸ்தவ வெள்ளாள ஆதிக்கவாதிகள், முஸ்லிம்களை எதிரி இனமாக கருதினார்கள். அதே நேரம், கம்யூனிஸ்ட்கள் நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட சாதிகள் சம உரிமை கேட்டால், ஆண்ட பரம்பரைக்கே ஆபத்தாகி விடும்.

யூதர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்கள், "உலகில் அதிகமான நோபல் பரிசுகளை வென்றவர்கள் யூதர்கள்." என்று விஞ்ஞானபூர்வமாக தர்க்கம் செய்வார்கள். மேலைத்தேய நாடுகளிலும், யூத ஆதரவு அரசியல்வாதிகளால் இத்தகைய பிரச்சாரம் பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. கணிசமான யூதர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு மேலாக பலதரப்பட்ட சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருக்கிறது நோபல் நிறுவனம். இது வரை வழங்கப்பட்ட பரிசுகளில் 18 வீதமானவை, யூத இனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன.

உலக சனத்தொகையில் ௦௦௦0.3% மாக உள்ள யூதர்களுடன் ஒப்பிடும் போது இது அதிகம் தான். ஆயினும் பரிசு வாங்கிய இஸ்ரேலிய யூதர்கள் மிக மிகக் குறைவு என்பது ஆர்வத்தை தூண்டும் விடயம். அநேகமாக நோபல் பரிசு பெற்ற யூத சாதனையாளர்கள், ஒன்றில் ஐரோப்பாவில் வாழ்ந்திருப்பார்கள், அல்லது சிறிது காலமாவது அமெரிக்காவில் படித்திருப்பார்கள். திறமைசாலிகளின் சுதந்திரத்தில் தலையிடாத, அவர்களை ஊக்குவிக்கும் மேற்கத்திய சமூகத்தில் வாழ்ந்த யூதர்கள் மட்டுமே சாதிக்க முடிந்துள்ளது. (சோவியத் யூனியன் போன்ற சோஷலிச நாடுகளிலும் அத்தைய சுதந்திரம் இருந்தது.) இலங்கை, இந்தியா போன்ற பழமைவாத கலாச்சாரம் பேணும் சமூகங்களில் தனி மனித சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. பழமைவாத யூத குடும்பங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மேற்கொண்டு ஆராய விரும்புவோர், நோபல் பரிசு வென்ற யூதர்களின் சுயசரிதையை வாசித்துப் பார்க்கலாம். அவர்கள் எல்லோரும் பழமைவாத மதக் கட்டுப்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள். மதச்சார்பற்ற கல்வி கற்றவர்கள். நாசிஸ சர்வாதிகார ஆட்சியின் பயனாக பல ஐரோப்பிய யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தனர். அங்கே கிடைத்த வரவேற்பு, வசதி, வாய்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

நோபல் பரிசுகள் யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்காக வழங்கப்படும் நோபல் பரிசு சர்வதேச அரசியலில் கலகத்தை தோற்றுவிக்கும். உண்மையிலேயே சமாதானத்திற்காக பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். எதிரிகளாலும் மதிக்கப்பட்ட மாமனிதர். அவருக்கு சேர வேண்டிய நோபல் பரிசு, நீண்ட காலமாக கொடுக்கப்படாமல் இழுபறிப்பட்டது. அதற்கு முன்பே போர்வெறியன் புஷ்ஷுக்கு சமாதான பரிசு கொடுத்து விட்டார்கள். இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் மெனாகேம் பெகின், இட்சாக் ராபின், ஷிமோன் பெரேஸ் ஆகிய யூதர்களுக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யார் இவர்கள்? இஸ்ரேலை ஆண்ட காலங்களில் போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். மெனாகேம் பெகின் ஒரு பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் அரசே அறிவித்திருந்தது. மற்ற இருவரும் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்கள். ஒரு வேளை மகிந்த ராஜபக்சவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், தமிழர்கள் எந்தளவு கொதித்தெழுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நோபல் பரிசின் யோக்கியதை அந்தளவுக்கு தான் உள்ளது.

(தொடரும்)
முன்னைய பதிவுகளை வாசிக்க:
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Thursday, December 16, 2010

ஏதென்ஸ், ரோம்: முதலாளித்துவ பாராளுமன்றங்கள் முற்றுகை

டிசம்பர் 15 , ஏதென்ஸ், ரோம், நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, கிரேக்க, இத்தாலி பாராளுமன்றங்கள் முற்றுகையிடப்பட்டன. ஏதென்ஸ் நகரில், நவ தாராளவாத கொள்கைகளை முன்மொழிந்த வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார். ஊர்வலத்தைக் கலைக்க போலீசார் முயன்ற பொழுது, பொது மக்கள் திருப்பித் தாக்கினார்கள். இத்தாலியில் பெர்லுஸ்கோனி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு இடமேபெற்றது. அதிகப்படியான வாக்குகளால் பெர்லுஸ்கோனி தப்பிய போதிலும், ஆத்திரமுற்ற மக்கள்திரள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டது. போலீசார் வன்முறை பிரயோகித்து போராடிய மக்களை விரட்டினார்கள். ஏதென்ஸ், ரோம் ஆர்ப்பாட்டங்களில், மாணவர்கள், தொழிலாளர்கள், வேலையற்றோர் போன்ற பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் பெருமளவில் அணி திரண்டு போராடத் தொடங்கியுள்ளதை பி.பி.சி., சி.என்.என். போன்ற ஊடகங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. "நவ- தாராளவாத பொருளாதார சீர்திருத்தம் மக்கள் நலனுக்கானது", என்று இப்போதும் சில பொருளாதார அறிஞர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


வீடியோ 1: ஏதென்ஸ் நகர கலவரம். (RT video)

வீடியோ 2: ஏதென்ஸ் நகர வீதிகளில் போலீசுடன் மோதும் செங்கொடி ஏந்திய மக்கள்.

வீடியோ 3: ஏதென்ஸ் பாராளுமன்ற முன்றலில் இரசாயன, கண்ணீர்ப் புகை குண்டுகளை பாவித்து கலவரத்தை அடக்கும் போலிஸ்.
வீடியோ 4: ரோம் நகர பாராளுமன்ற முன்றலில் மக்கள் எழுச்சியை அடக்கும் போலிஸ் படைகள்.


Wednesday, December 15, 2010

சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள்

"அரேபியருக்கும், பிற இனத்தவர்களுக்கும், யூதர்கள் தமது வீடுகளையும், நிலங்களையும் விற்பதும், வாடகைக்கு விடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது." - 300 க்கும் மேற்பட்ட யூத மதகுருக்கள் அறிவித்துள்ள மத ஆணை. 7 டிசம்பர் அறிவிக்கப்பட்ட இந்த மத ஆணை, அரேபியர்களை மட்டும் பாதிக்கவில்லை. சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆகியோரும் வீடு வாடகைக்கு எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

யூத மதகுருக்களின் இனவாத சட்டம் ஒருபுறமிருக்க, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையில் சட்டவிரோத யூத குடியேற்றங்கள் தொடர்கின்றன. இந்த யூத குடியேற்றங்கள், சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்று ஐ.நா. சபை கூட கண்டித்திருந்தது. சில நூறு குடியேற்றங்கள் இஸ்ரேலிய சட்டத்திற்கு மாறானவை. இருப்பினும் சட்டவிரோத யூத குடியேற்றங்களை இஸ்ரேலிய அரசு ஆதரிக்கின்றது. அவற்றிற்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றது.
இதற்கிடையே "கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும், அமெரிக்காவில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி திரட்டி அனுப்புகின்றன. அண்மையில் விக்கிலீக்ஸ் சட்டத்தை மீறியதாக காரணம் காட்டி, அதற்கான பணக் கொடைகளை மாஸ்டர் கார்ட், விசா, போன்ற கடன் அட்டை நிறுவனங்கள் நிறுத்தியிருந்தன. ஆனால் அதே நிறுவனங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் யூத குடியேற்ற நிதியை தடை செய்யவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில், சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் அமெரிக்க கிறிஸ்தவ- சியோனிஸ்ட் தொண்டு நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிற்குறிப்பு : யூத குடியேற்றங்கள் நியாயமானது என்று வாதாடும் சியோனிஸ்டுகள், சிறிலங்காவில் சிங்களக் குடியேற்றங்களையும் ஆதரிப்பார்கள்.

1.The Shuva Israel group, an evangelical Christian group based in Texas, is accused by Israeli group Gush Shalom of channelling money to fund the illegal West Bank settlement of Revava.

2. The One Israel Fund, used as an example in the International Crisis Group report, boasts of being “the largest North American charity whose efforts are dedicated solely to the citizens and communities of Yesha”.

3.The website of another right-wing Christian group, the Christian Friends of Israeli Communities describes support for settlements like Argaman, which are illegal under international law.

4.Worst of all is the extremist SOS Israel group, which has incurred even the wrath of the Israeli Defence Force by rewarding Israeli soldiers who disobey orders to evict settlers from illegal outposts (i.e. inciting mutiny), and which has offered a bounty for Palestinians shot by IDF soldiers.

Sunday, December 12, 2010

விக்கிலீக்ஸ்: IT போராளிகள் - ஆவணப் படம்

சுவீடிஷ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் Jesper Huor, Bosse Lindquist, விக்கிலீக்ஸ் இயங்கும் பல நாடுகளுக்கு சென்று தகவல்களை திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் நிறுவனர்களான Assange, Kristinn Hrafnsson, Daniel Domscheit-Berg ஆகியோரை நேர்கண்டுள்ளனர்.

இந்த இரகசிய அமைப்பு எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்னரை விட பலமடைந்து உள்ளதா? அல்லது அமெரிக்காவால் உடைக்கப்பட்டு விட்டதா? யார் இந்த அசாஞ்சே? அவரது குறிகோள்கள் என்ன?


Saturday, December 11, 2010

நோர்வேயில் ஒரு குட்டி சோவியத் யூனியன்

சோவியத் கால நகரம் எவ்வாறு தோற்றமளிக்கும்? சோஷலிச சுவரோவியங்கள், லெனின் சிலை, இவை எல்லாவற்றையும் நீங்கள் இப்போதும் கண்டு களிக்கலாம். அதுவும் மேற்கத்திய ஐரோப்பிய நாடான நோர்வேயில்! சோவியத் மாதிரியில் கட்டப்பட்ட பாரேன்ட்ஸ்பூர்க் (Barentsburg) நகரம், வட துருவத்திற்கும், நோர்வேக்கும் இடையில் அமைந்துள்ளது. முன்பு ஸ்பிட்ஸ்பேர்கன் (Spitsbergen) என்று அழைக்கப்பட்ட தீவுக்கூட்டம், இன்று நோர்வேஜிய மொழியில் ஸ்வால்பார்ட் (Svalbard) என்று அழைக்கப்படுகின்றது. நோர்வீஜிய புராணக் கதை ஒன்றில் வரும், ஸ்வால்பார்ட் என்ற வட துருவப் பிரதேசம் இதுவாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். நவீன காலத்தில் ஒல்லாந்து நாட்டை சேர்ந்த கடலோடி பாரேன்த்ஸ் (Willem Barentsz) அந்த தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். அதனால் தான் அவர் நினைவாக பாரேன்ட்ஸ்பூர்க் நகருக்கு நாமம் சூட்டப்பட்டது. வில்லம் பாரேன்த்ஸ், இந்தியாவுக்கு வட துருவக் கடல் பாதையை கண்டு பிடிக்க விரும்பி, தனது கடல் பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரது குழுவினரால், ரஷ்யாவின் நோவா சியேம்ப்லா (Nova Zembla) வரை தான் செல்ல முடிந்தது.

பாரேன்த்ஸ்பூர்க் நகரில் முதலில் நோர்வீஜிய நிறுவனம் ஒன்று, சுரங்கத் தொழில் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் தான் முதல் குடியிருப்புகளை அமைத்தனர். 1920 ல், ஒரு டச்சு நிறுவனம் (Nespico) நிலக்கரிச் சுரங்க உற்பத்தியை பொறுப்பெடுத்தது. அது பின்னர், 1932 ல் ஒரு சோவியத் அரச நிறுவனத்திற்கு (Trust Arktikugol) விற்று விட்டது. அன்றிலிருந்து ரஷ்ய, உக்ரேனிய தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்து வருகின்றனர்.

பாரேன்த்ஸ்பூர்க் நோர்வேக்கு சொந்தமான நிலத்தில் இருந்த போதிலும், சோவியத் அரச நிறுவனம் அங்கே சுதந்திரமாக செயற்பட முடிந்தது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பாரேன்த்ஸ்பூர்க் செல்ல விசா தேவையில்லை. அங்கிருக்கும் ரஷ்ய (முன்பு சோவியத்) துணைத் தூதரகம், உலகில் வட துருவத்தில் இயங்கும் ஒரேயொரு தூதரகம். ரஷ்ய, உக்ரைன் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று வருட ஒப்பந்தப்படி அழைத்து வரப் படுகின்றனர். சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், தொழிலாளர் வருகை குறைந்து விட்டது. பிரமிடன் (Pyramiden) என்ற இன்னொரு சுரங்கத் தொழிலாளர் குடியிருப்பு மூடப் பட்டு விட்டது. பாரேன்த்ஸ்பூர்க்கில் தற்போது குறைந்தது 800 பேர் வசித்த போதிலும், சோவியத் கால சலுகைகள் குறைந்து விட்டன. பாரேன்த்ஸ்பூர்க்கில் ஒவ்வொரு வருடமும் 300000 தொன் நிலக்கரி அகழ்ந்தெடுக்கப் படுகின்றது. பெருமளவு நிலக்கரி மேற்கு ஐரோப்பாவுக்கும், ரஷ்யாவுக்கும் ஏற்றுமதியாகின்றது.

பாரேன்த்ஸ்பூர்க் நகர் குடியிருப்புகளுக்கு முன்னால், இன்றைக்கும் ஒரு பெரிய மார்பளவு லெனின் உருவச் சிலை காணப்படுகின்றது. சோவியத் கால லெனின் சிலைகள் நிலைத்து நிற்கும் சில இடங்களில் அதுவும் ஒன்று. அங்கே செல்லும் மேலைத்தேய பயணிகள், "ஏன் இந்த லெனின் சிலையை இப்போதும் வைத்திருக்கிறீர்கள்?" என்று உள்ளூர் மக்களைப் பார்த்துக் கேட்பார்கள். "அது எமது சரித்திரம். அதை ஏன் நாம் மறைக்க வேண்டும்?" என்று பாரேன்த்ஸ்பூர்க் வாழ் மக்கள் பதிலளிப்பார்கள். அங்கே மட்டுமல்ல, இன்றைக்கும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதிகளிலும் லெனின் சிலைகள் அப்படியே தான் இருக்கின்றன. சோவியத் காலத்தில் தான் அங்கெல்லாம் புதிய தொழில் வாய்ப்புகள், நகரங்கள் தோன்றின. பெரும்பாலும் சுரங்கத் தொழிலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த தொழிலாளர்கள் கூட, கை நிறையப் பணத்துடனும், தங்க நகைகளுடனும் வீடு செல்வார்கள். தொழிலாளர்கள் நன்றி மறந்தவர்களல்ல. யாரும் தமது இழந்த பொற்காலத்தை நினைவு படுத்தும் சின்னங்களை அழிக்க மாட்டார்கள்.

பாரேன்த்ஸ்பூர்க் நகரில் சோவியத் காலத்தை நினைவு கூரும் அனைத்தும் இன்றும் அப்படியே பாதுகாக்கப் படுகின்றன. குடியிருப்புகளுக்கு பின்னணியில் உள்ள மலைப்பாறையில் "அனைவருக்கும் சமாதானம்" என்ற ரஷ்ய வாசகம் நட்சத்திர குறிக்கு கீழே காணப்படுகின்றது. தொழிலாளர் ஓய்வு நேரத்தை கழிக்கும் பிரமாண்டமான நீச்சல் தடாகம். ஒரே கூரையின் கீழ் அனைவருக்கும் சமைத்த உணவு பரிமாறப்படும் உணவுச் சாலை. கட்டடங்களின் உள்ளே சுவர்களை அலங்கரிக்கும் சோஷலிச ஓவியங்கள். லெனின் படம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை விற்கும் கடைகள். எல்லாம் அப்படியே இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் "குட்டி சோவியத் யூனியன்" சென்று பார்த்து விட்டு வரலாம். ஆனால் பயணம் அவ்வளவு இலகுவானதல்ல. லோன்கியர் விமான நிலையம் மட்டுமே வெளியுலகத்துடன் தொடர்பு படுத்துகின்றது. ஸ்வால்பார்ட் தீவுகளின் குடியிருப்புகளுக்கு இடையில் செப்பனிடப்பட்ட பாதைகள் இல்லை. அதனால், லோன்கியர் (Longyearbyen) நகரத்தில் இருந்து பாரேன்த்ஸ்பூர்க்கிற்கு படகுச் சேவை மட்டுமே உண்டு. குளிர் காலத்தில் பனிச்சறுக்கல் வண்டியில் பயணம் செய்யலாம். உலகில் அரிதான விலங்கினமான துருவக் கரடிகளை பார்ப்பதற்கும் சுற்றுலாப்பயணிகள் ஸ்வால்பார்ட் செல்கின்றனர்.


Barentsburg
Barentsburg Travel guide

Thursday, December 09, 2010

இஸ்ரேல் ஆதரவாளர்களான இனவெறி பாசிஸ்டுகள்

இனவெறியர்களும், பாசிஸ்டுகளுமே இஸ்ரேலின் ஆதரவாளர்கள், என்பதற்கு இங்கேயுள்ள இரண்டு வீடியோக்களும் சாட்சியம். அண்மையில் ஐரோப்பிய இனவெறிக் கட்சிகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு நேரே சென்று தமது ஆதரவை தெரிவித்தனர். வெகுஜன அரசியல் கட்சிகள் என்ற போர்வையின் கீழ் இயங்கும் நவ- நாஸிகள். தாம் சார்ந்த ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர். தமது இனவெறிக் கொள்கைகளை மறைப்பதற்காக, புதிதாக "யூத- கிறிஸ்தவ சித்தாந்தம்" என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தின் வில்டர்ஸ், பெல்ஜியத்தின் டெ வின்டர் ஆகியோர் இஸ்ரேல் சென்ற தீவிர வலதுசாரிக் கட்சிகளின் குழுவில் முக்கியமானவர்கள். (பார்க்க: வீடியோ 1)

வில்டர்ஸ் இஸ்ரேலில் உரையாற்றும் பொழுது, "பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டான் என்ற தேசம் இருக்கின்றது." என்று கூறி யூத இனவெறியர்களின் கருத்தை பிரதிபலித்துள்ளார். (பார்க்க: வீடியோ 2) இலங்கையில் சிங்கள இனவெறியர்களும் அதே போன்ற பிரச்சாரம் செய்வது ("தமிழர்களுக்கு ஈழம் வேண்டுமானால் தமிழ் நாட்டுக்கு போகலாம்.") குறிப்பிடத் தக்கது.

Tuesday, December 07, 2010

தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்(பகுதி : இரண்டு )


தமிழ், சிங்கள மொழிகளில் இனம் என்ற வார்த்தையே கிடையாது. பண்டைய சிங்களவர்களும், தமிழர்களும் மத, சாதிய வேறுபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் வெவ்வேறு மொழி பேசுபவர்களை தனித்தனி இனங்களாக பார்க்கும் வழக்கம், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தான் ஆரம்பமாகியது. ஆங்கில மொழிச் சொல்லான "Race ", ஆங்கிலம் கற்ற தமிழர்களால் "இனம்" என்று மொழிபெயர்க்கப்பட்டது. அது எவ்வளவு தூரம் சரியான மொழிபெயர்ப்பு என்று அவர்கள் கவலைப்படவில்லை.

தமிழில் சாதி என்றும், சிங்களத்தில் ஜாதிய என்றும் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் பாகுபடுத்தப் பட்டனர். இன்று ஒவ்வொரு இலங்கைப் பிரஜையினதும் பிறப்புச் சான்றிதழிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. முன்பு அந்த இடத்தில் சாதிப் பெயரை பதிந்து வந்தார்கள். காலப்போக்கில் அது அநாகரீகம் என்று கருதியதால், சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லிம் என்றெல்லாம் பதிகிறார்கள். அந்தச் சொற்களைக் கூட சாதிக்கு மாற்றீடாக தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இனம் என்ற அர்த்தத்தில் அல்ல.

இனம் என்ற பாகுபாடு, பிற்காலத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படும் இரத்தக்களரிக்கு இட்டுச் செல்லப் போகின்றது என்பதை அன்று பலர் உணரவில்லை. ஒரு வேளை கடவுளுக்கு நிகரான சக்தி படைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உணர்ந்திருப்பார்கள். சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம் இரண்டினதும் அடிப்படை, மக்களை இனங்களாக பிரித்துப் பார்ப்பதிலே தான் தங்கியுள்ளது.

ரஷ்யாவில் வெற்றியடைந்த போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்தால், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக பல்லினத் தொழிலாளர் வர்க்கம் கொழும்பை மையமாகக் கொண்டு தோன்றியிருந்தது. கம்யூனிச, சோஷலிசக் கட்சிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்தன. தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளருடன் போராடிப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் வேறெந்த கட்சிகளையும் விட கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகள் பெரும்பான்மைப் பலத்துடன் காணப்பட்டன. ரஷ்யாவை பின்பற்றி இலங்கையிலும் புரட்சி வெடிக்குமோ என அஞ்சிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சிங்கள, தமிழ் மத்தியதர வர்க்கத்திற்கு இனவாதத்தை கற்றுக் கொடுத்தார்கள். அன்று பற்ற வைக்கப்பட்ட இனவாதத் தீ அறுபது ஆண்டுகளாக கொழுந்து விட்டு எரிகின்றது, என்பதை அறிந்து ஆங்கிலேயர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள்.

பிரிட்டிஷ் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அன்றைய மலேசியாவை விட வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்ததால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். (இவர்களை மலையக பெருந்தோட்டத் தொழிலாளரிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.) அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்ற போதிலும், கணிசமான அளவு மலையாளிகளும், தெலுங்கர்களும் புலம்பெயர்ந்து வந்தார்கள்.

ஆரம்பத்தில் மலையாள, தெலுங்கு சமூகங்கள் தமிழை தாய் மொழியாக பேசி வந்தனர். இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர், பலர் சிங்களத்தை தாய்மொழியாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு பகுதி கொழும்பு வாழ் இந்தியத் தமிழர்களும், தமிழை விட சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் சிங்களவர்களாக மாறியதை வரலாறு நெடுகிலும் காணலாம். மேலே குறிப்பிட்டது மிக அண்மைய உதாரணம் மட்டுமே.

சிங்களவர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். மறுபக்கத்தில் தமிழர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். இரண்டு பக்கமும் இருக்கும் இனவாதிகள் அத்தகைய பிரச்சாரங்களை இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் பெரும்பான்மை சிங்களவர்களும், தமிழர்களும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் பூர்வீக மக்களாக இனங்காணப் படக் கூடியவர்கள் வேடுவர்கள் மட்டுமே. அவுஸ்திரேலிய அபோரிஜின் பழங்குடி போல, இன்றைக்கும் நாகரீகத்துக்கு முந்திய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை விட இயக்கர், நாகர், ராட்சதர்கள் ஆகிய இனங்கள் பண்டைய இலங்கையில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கும் பல ஊர்ப் பெயர்கள் அதற்கு சான்று பகர்கின்றன.

இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள், ஒன்றில் பழங்குடியினரை அழித்து விட்டார்கள், அல்லது அவர்களுடன் ஒன்று கலந்து விட்டார்கள். இன்றுள்ள சிங்கள, தமிழ் மொழிகள் பேசும் மக்கள், அத்தகைய கலப்பினத்தை சேர்ந்தவர்கள். மரபுரிமையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்த முடிவுகள் இவை. (Genetic affinities of Sri Lankan populations.)

"அனுராதபுரத்திலே கலிங்கவாசர் குலம் விஜயனில் இருந்து ஐந்து தலைமுறைக்குள் அற்றுப் போக, கலிங்கரும் நாகரும் கலந்த மிசிர குலத்தரசர்களே அதன் பின் அரசாண்டு வந்தார்கள். தமிழரசரும் பலமுறைகளில் அனுராதபுரத்தை வெற்றி கொண்டு அரசாண்டு வந்தார்கள். அதனால் தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின. நாகரும், இயக்கரும், கலிங்கரும் கலந்தே சிங்களர் ஆயினார்கள். இலங்கை குடிச்சனங்களை சிங்களர் எனும் பெயரால் வழங்கத் தொடங்கியது தொட்டு நாகர், இயக்கர், கலிங்கர் எனும் நாமங்கள் வழக்கிழந்தன." (யாழ்ப்பாண சரித்திரம், சே.இராசநாயகம் )

இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், இந்தியாவில் பாண்டிய நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். பாண்டியர்களுக்கும், சிங்கள அரசர்களுக்கும் இடையில் திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாண்டிய மணப்பெண்கள், பரிவாரங்களுடன் அனுப்பப்பட்டதாக, இலங்கை வரலாற்றில் பலவிடங்களில் குறிப்பிடப் படுகின்றது. தமிழர்களான பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் சிங்களவர்களாக மாறி விட்டார்கள். சோழர்களின் படையெடுப்பை, சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளின் தோற்றமாக (சிங்கள) இனவாதிகள் காட்டுகின்றனர். எல்லாளன் - துட்ட கைமுனு போர் கூட அரசுரிமைப் போட்டியே தவிர, இன அடிப்படையிலான போர் அன்று.


உலகில் தேசிய இராணுவங்கள் 19 ம் நூற்றாண்டின் பின்னரே தோன்றின. பண்டைய காலத்தில் கூலிப் படைகளையே மன்னர்கள் போரில் ஈடுபடுத்தினார்கள். இலங்கையும் அதற்கு விதி விலக்கல்ல. சிங்கள மன்னர்கள் தமக்கிடையிலான போரில் தமிழகக் கூலிப் படைகளை பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் சிங்கள அரசர்கள் போருக்கு தேவையான வீரர்களை தமிழ் நாட்டில் சென்று திரட்டுவது சர்வ சாதாரணம்.

உண்மையில் தென்னிந்தியாவில் நிலவிய பாண்டிய- சோழ மன்னர்களுக்கு இடையிலான பகைமையின் தொடர்ச்சியே இலங்கை மீதான படை நடவடிக்கைகள். சில நேரம், சிங்கள அரசர்கள் தென்னிந்தியா வரை படையெடுத்து சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பாண்டியர்கள் அவர்களது கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.
"... பராக்கிரமவாகு இலங்காபுரித் தண்டநாதனுடன் ஒரு சிங்களப் படையை அனுப்பி பராக்கிரம பாண்டியனுக்கு உதவி புரிந்தான்." (யாழ்ப்பாணச் சரித்திரம்)

இலங்கையில் சோழர்களின் ஆட்சியை ஒரு ஏகாதிபத்தியக் காலமாகவே கருத வேண்டும். ஏனெனில் சோழரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த சிங்கள சிற்றரசர்கள் மட்டுமல்ல, தமிழ் சிற்றரசர்களும் அடக்கப்பட்டார்கள். "இலங்கை முழுவதும் சோழர் ஆட்சிக்குள் அமைந்தும், சமாதானம் எப்போதும் இருந்ததில்லை. சிங்கை நகர் அரசருஞ் சிங்கள அரசருங் கூடி சோழருடன் சமர் விளைவிக்க நேருங் காலங்களில், சோழ அரசர் படையுடன் வந்து கலகம் விளைவித்தாரை கொன்றும் வென்றுஞ் செல்வர்." (யாழ்ப்பாண சரித்திரம்)

இங்கே சிங்கை நகர் என்பது நல்லூரை தலைநகராக கொண்ட (ஈழத்) தமிழரின் சிற்றரசு ஆகும். ராஜராஜ சோழன் ஈழத்தில் அடிமைகளாக பிடித்து வந்தவர்களைக் கொண்டு தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியதாக சோழர்களே எழுதி வைத்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1365 ல் தஞ்சை, மதுரையை சேர்ந்த, வெள்ளாளர் என்ற சாதியினரின் இலங்கை நோக்கிய புலம்பெயர்வு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தென்னிந்தியா அந்தக் காலத்தில் விஜய நகரத்தால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யவாதிகள் தெலுங்கர்கள் என்பதால், தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தெலுங்கு பாளையக்காரர்களை நியமித்தார்கள்.

இதனால் அதிகாரம் இழந்த வெள்ளாளர்கள் இலங்கை சென்று குடியேற ஆரம்பித்தார்கள். அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்லாது, சிங்களப் பிரதேசங்களிலும் சென்று குடியேறினார்கள். சிங்களப் பிரதேசங்களில் குடியேறிய தமிழக வெள்ளாளர்கள், கொவிகம (அல்லது கொய்கம) என்ற சிங்கள சாதியினராக மாறி விட்டனர்.

".... இம் மாற்றங்களால் தம் பதவிகளை இழந்த தமிழ் வேளாண் தலைவர்கள், தங்கள் அடிமை, குடிமைகளுடன் பாண்டிய, சோழ, பல்லவ தேசங்களை நீங்கி, இலங்கைக்கு வந்தார்கள். ..... இப்போது சிங்கள வெள்ளாளராக மாறியிருக்கும் அவர்களை நீக்கி, யாழ்ப்பாணத்திலே வந்து குடியேறிய வெள்ளாளர்களைப் பற்றியே கயிலாய மாலை கூறும்: ....." (யாழ்ப்பாண சரித்திரம்)சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு சமூகங்களிலும் வெள்ளாளர்கள் 50 % அளவில் இருக்கலாம் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. பெரும்பான்மை சாதியாக இருப்பதால், அவர்களின் ஆதிக்கம் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சிங்கள அரசர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினாலும், அவர்களது கலாச்சாரம் பிராமணிய வர்ணாச்சிரம மரபைக் கொண்டிருந்தது. அதனால் சத்திரிய வம்சத்தவர்களான சிங்கள அரசர்கள், வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள். தென்னிலங்கையை ஆண்ட விஜயவாகு என்ற மன்னன், சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், ஒவ்வொரு சாதிக்கும் புறம்பான தங்குமடங்களை ஏற்படுத்தி இருந்தான்.

சிங்களவர்கள் அனைவரும் விஜயனின் வம்சாவழியினர் என்பது போல சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். அது பிற்காலத்தில் சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கும் நோக்கோடு புனையப்பட்ட கதைகளில் ஒன்று. (விஜயனின் வருகைக்கும், அப்படி ஒருவர் வாழ்ந்ததற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை.) மகாவம்சம் கூட விஜயனும் அவனது தோழர்களினதும் கதையைத் தான் கூறுகின்றதே தவிர, அவர்கள் தான் சிங்களவர்களின் முன்னோர்கள் என்று கூறவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் பைபிள் கதைகளை ஆதாரமாக காட்டி, இஸ்ரேலுக்கு உரிமை கொண்டாடினார்கள். சிங்கள தேசியவாதிகள், 19 ம் நூற்றாண்டிலிருந்து தான், விஜயனை தேசிய நாயகனாக்கினார்கள். யூதர்களுக்கு ஆப்பிரகாம் போல, சிங்களவர்களுக்கு விஜயன். சிங்களத் தேசியவாதிகள் விற்கும் வரலாற்றுப் புளுகுகளை, தமிழ் தேசியவாதிகளும் வாங்கி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் "சிங்களவர்களின் வரலாறு" என்று பொதுமைப் படுத்தக் கூடிய வரலாறு கிடையாது. சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும், தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளன. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன. அதனை நிரூபிக்கும் செவி வழிக் கதைகள் அந்தந்த சமூகத்தினர் மத்தியில் நிலவி வருகின்றன.

*******

இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்

Saturday, December 04, 2010

இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்


தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். "சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?" உண்மை தான். அவன் தான் "மோட்டுச் சிங்களவன்" ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா? 

தமிழ் இனவாதிகள், சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இனக் கலவரங்களை தூண்டி விட்ட சக்திகள், தமிழர்கள் சிங்களவர்களை விட தாழ்ந்த சாதி என்ற கருத்தை விதைத்தன. தமிழர் தீண்டத் தகாத சாதி என்ற கருத்துப் பட, "பறத் தெமலோ" என்று கோஷமிட்டு கொண்டு தான் அடித்தார்கள், கொன்றார்கள். சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட "பறத் தமிழர்கள்" அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

தமிழ் தேசியம் தோன்றுவதற்கு முந்திய காலங்களில், தமிழர்கள் சாதிப் பிரச்சினைகளை மறைக்கும் வலுவற்று இருந்தனர். அதற்கு மாறாக சிங்கள தேசியம், தனக்குள்ளே இருந்த சாதிப் பாகுபாட்டை வெளித் தெரியா வண்ணம் பூசி மெழுகியது. (பௌத்த மதம் சாதியத்தை எதிர்ப்பது முக்கிய காரணம்.) இருந்தாலும் சிங்களவர்களிடையே அவ்வப்போது எழும் சாதிப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்து வந்தன. இன்றைக்கும் அது தான் நிலைமை. உண்மையில் இனப்பிரச்சினை கூட, இலங்கையின் ஆதிக்க சாதிக்குள் (வெள்ளாளர்+கொவிகம) எழுந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் வெடிக்க முன்னர், சாதிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. அவர்களுக்கு இடையே திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டிருந்தன.

தமிழர்கள் மத்தியில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாளர்கள் அரசியல்-பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வந்துள்ளனர். அதே போல, சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்று வரை இலங்கையின் அரசியல்- பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். சிங்கள மொழியில் "கம" என்றால் ஊர், அல்லது வயல் என்று அர்த்தப் படும். தமிழில் கூட கமம் என்ற சொல் வழக்கில் உள்ளது. 


வெள்ளாள- கொவிகம ஆதிக்கம் இலங்கையின் சரித்திரத்தை தனக்கேற்றவாறு எழுதி வந்துள்ளது. இந்து பார்ப்பனீய பாரம்பரியத்தில் சூத்திரர்களாக கருதப்படும் விவசாய சமூகம், இலங்கையில் உயர் சாதியினராக தலையெடுத்தது. "கௌதம புத்தரின் தந்தை ஒரு கமக்காரன்" என்பது பௌத்த- சிங்கள புளுகுகளில் ஒன்று. இலங்கையை ஆண்ட தலை சிறந்த மன்னராக கருதப்படும் பராக்கிரமபாகு ஒரு "வெள்ளாளர்" என்கிறது சிங்கள-கொவிகம கற்பிதம். (மகாவம்சம், பராக்கிரமபாகு சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றது.) 

இன்றும் கூட அரசியல் தலைவர்கள் தாம் "வெள்ளாளரின் (கமக்காரர்களின்) மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களாக" காட்டிக் கொள்கின்றனர். அண்மைய உதாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏர் பூட்டி உழுத காட்சி. தமிழர்கள் மத்தியிலும் அது போன்ற பிரச்சாரங்கள் சர்வசாதாரணம். "கந்தன் நல்ல கமக்காரன்" போன்ற சாதிய முன்னேற்ற பாடங்கள், ஆரம்ப பாடசாலை தமிழ் பாடப் புத்தகத்தில் போதிக்கப் படுகின்றன.

வெள்ளாள- கொவிகம சாதியினர், தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று காணப் படுகின்றனர். ஆரம்பத்தில் மதம், மொழி போன்ற கூறுகளும், பிற்காலத்தில் இனப் பிரச்சினையும் அந்தப் பிரிவினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இரு துருவங்களான ஆதிக்க சாதியினர், தத்தமது சமூகங்களில் தலித் சாதியினரின் எழுச்சியை அடக்குவதில் ஒரே மாதிரி செயற்பட்டுள்ளனர். நம் கண் முன்னாலே நடந்துள்ள சமீபத்திய உதாரணங்கள்: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம். வடக்கில் EPRLF என்ற இயக்கத்தில் அதிகளவு தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழ் வாலிபர்கள் இணைந்திருந்தனர். அதனால் அந்த இயக்கத்தினை "ஈழப் பள்ளர் புரட்சிகர முன்னணி" என்று உயர் சாதியினர் பரிகசித்தனர். 


ஆதிக்க சாதியினரின் "நல்ல காலம்", அது போன்ற இயக்கங்கள் காலப்போக்கில் நிலைத்து நிற்கவில்லை. தெற்கில் ஜே.வி.பி. யில் சிங்கள தலித் சாதியினர் அதிகளவில் சேர்ந்திருந்தனர். அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்குவதற்கு சாதிய பாகுபாடும் ஒரு காரணம். 1988 - 1991 க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் குறைந்தது அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.

வெள்ளாள- கொவிகம சாதியினரின் ஆதிக்கம், காலனிய காலத்தில் தோன்றியது. காலனிய எஜமான்களின் தயவால் வளம் பெற்றது. அதனால், இன்றும் கூட தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய எஜமானுக்கு விசுவாசமாக உள்ளனர். காலனியாதிக்க ஐரோப்பியர்கள் இவர்களை எவ்வளவு தான் அலட்சியப் படுத்தினாலும், இன்று வரை இராஜ தந்திர உறவுகளை பேணிப் பாதுகாக்க விரும்புகின்றனர். 


தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் காலனிய விசுவாசம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவளித்தார்கள் என்று திட்டித் தீர்க்கும் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் பங்களிப்பு குறித்து பேச மாட்டார்கள். மேற்குலக நாடுகள் புலிகளை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடும் சிங்களவர்கள், அந்த நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க மாட்டார்கள். 

ஏகாதிபத்தியம் எங்கேயும், எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. அடிமைகளை சங்கிலியால் பிணைத்து உழைப்பை சுரண்டுவது ஒரு வகை. அடிமை உணர்வை மூளைக்குள் செலுத்தி உழைப்பை சுரண்டுவது இன்னொரு வகை. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இரண்டாவது வகையை சிறந்தது எனக் கண்டார்கள்.

"கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்." என்றொரு ஈழத் தமிழ்ப் பழமொழி உண்டு. காலனிய ஆட்சிக் காலத்தில் வெள்ளாளர் என்பது ஒரு வர்க்கமாகவே இருந்தது. அவர்கள் பின்னர் சாதியாக பரிணாம வளர்ச்சி அடைவதை காலனிய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அது தமது காலனிய நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கும் எனக் கருதினார்கள். போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில் பணம் வாங்கிக் கொண்டு "டொன்" என்ற பட்டம் கொடுத்து வந்தார்கள். பணம் படைத்த தமிழர்களும், சிங்களவர்களும் அன்று டொன் பட்டம் பெறுவதை மதிப்பாக கருதினார்கள். அதனை உள்ளூர் பாமர மக்களுக்கு காட்டிப் பெருமைப் பட்டனர். ஒல்லாந்தர் காலத்தில் "வெள்" என்ற பட்டம் கொடுக்கும் வழக்கம் தோன்றியது. "வெள்" பட்டம் வாங்கியவர்கள் உயர்சாதி வெள்ளாளர்கள் ஆனார்கள். ஒல்லாந்தர்களுக்கு அது ஒரு மேலதிக வருமானம்.


"பறங்கிகள் 'டொன்' பட்டம் விற்றது போலவே, ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதி எதிர்ப்பை அறிந்து, பணங் கொடுத்தவர்களை 'வெள்' அல்லது 'மடப்பம்' என்று தோம்பிற் பதிந்தனர்." (யாழ்ப்பாணச் சரித்திரம், சே. இராசநாயகம்)

இருப்பினும் 19 ம் நூற்றாண்டு வரையில், வெள்ளாளர் என்ற சாதியை பற்றிய குறிப்புகள் இலங்கை சரித்திரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும், வெள்ளாளர்களும் தம்மை ஸ்தாபனமயப் படுத்திக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் இது ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக நடைபெற்றது. சிங்களப் பகுதிகளில் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்பட்டதைப் போல, தமிழ்ப் பகுதிகளில் சைவ மத மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவத்தையும் சாதியையும் வளர்த்தவர்களில் ஆறுமுக நாவலர் முக்கியமானவர். ஆறுமுக நாவலர் ஒரு பக்கத்தில் வெள்ளாள சாதியினர் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளில் கல்வி கற்பதை ஊக்குவித்தார். மறு பக்கத்தில் தனது சமூகத்தினர் மத்தியில் சைவ மத கோட்பாடுகளை போதித்தார். ஆறுமுக நாவலர் உயர் சாதியினரை மட்டுமே சைவர்களாக்க பாடுபட்டார். அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

நாவலர் எழுதிய "சைவ வினா-விடை" என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. "விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது." பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து மதத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆறுமுக நாவலர் நெருங்கிய தொடர்பை பேணினார். பார்ப்பனர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, வெள்ளாளர்களின் சாதிப் படி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட்டார். அதன் பயனாக சூத்திரர்களான வெள்ளாளர்கள் பூணூல் அணியும் சடங்கான தீட்சை பெறுதலை இலங்கையில் அறிமுகப் படுத்தினார்.


இவ்வாறு தான் சைவ மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக மாறியது. நாவலர் "சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்" என்று பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால எவ்வாறு பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் வளர்த்தாரோ, அதே பணியை தான் நாவலர் வட இலங்கையில் ஆற்றினார். பௌத்த சிங்கள ஞானத் தந்தையையும், சைவத் தமிழ் ஞானத் தந்தையையும் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது. 


வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை. அதற்கு சாட்சியமாக "தமிழினத் தலைவரான" பிரபல சாதியவாதி சேர். பொன் இராமநாதனின் சிலை இன்றைக்கும் கொழும்பு நகரில் பழைய பாராளுமன்ற முன்றலில் காணப்படுகின்றது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தில், சிங்களவர்கள் பக்கம் வழக்காடிய இராமநாதனுக்கு சிங்களவர்கள் சிலை வைத்ததில் வியப்பில்லை. தமிழர்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல, இராமநாதனும் தனது சாதியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒருவர். ஒரு சாதித் தலைவர் காலப்போக்கில் தமிழ் தேசியத் தலைவராக்கப் பட்டார்.

வெள்ளாள- கொவிகம சாதியினர் காலனிய காலகட்டத்தில் உருவான போதிலும், அவர்கள் தமது வேர்களை பண்டைய மன்னராட்சியில் தேடினார்கள். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். 


பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் சமூகத்தின் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு, நவீன கல்வி பெறும் வசதி கிட்டியது. அன்றிருந்த படித்த மத்தியதர வர்க்கம் வெள்ளாள-கொவிகம சாதியில் இருந்து தான் தோன்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளுக்கு வரலாற்றை தமக்கேற்றவாறு மாற்றி எழுதுவதில் தடையேதும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியலில் அவர்களின் ஒரு பக்க சார்பான கருத்தியல், தேசியக் கோட்பாடாக கோலோச்சுகின்றது.

(தொடரும்)