Thursday, February 18, 2021

பாஜக நாஜிகள் இலங்கையை ஆளும் கனவு பலிக்குமா?

👉நேபாளம் முதல் இலங்கை வரை பாஜக ஆட்சி நடக்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இந்திய ஏகாதிபத்திய அபிலாஷைகளை அறிய முடியாத அப்பாவிகளா அவர்கள்? முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை அதற்குள் மறந்து விட்டார்களா? பாஜக ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது ஜெர்மன் நாஜிக் கட்சியை பின்பற்றி அமைக்கப் பட்ட ஒரு பாசிசக் கட்சி. நாங்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. 


திரு. மனோ கணேசன் அவர்களுக்கு, 

நீங்கள் சொல்வது மாதிரி, பாஜக பத்தோடு பதினொன்றாக கருதப் படக் கூடிய அரசியல் கட்சி அல்ல. அது ஒரு பாசிசக் கட்சி. கம்யூனிச/சோஷலிசக் கட்சிகள் சர்வதேச தொடர்புகளை பேணலாம் என்றால், பாஜக இலங்கையில் தனது தோழமைக் கட்சிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதில் என்ன தவறு என்ற மாதிரி கேட்டிருக்கிறீர்கள். 

மேலெழுந்தவாரியாக சரி போன்று தோன்றினாலும், இது மிகவும் தவறான ஒப்பீடு. உலகில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் யாரையும் இன/மத ரீதியாக பாகுபாடு காட்டுவதில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தில் அல்லது மதத்தில் பிறந்த குற்றத்திற்காக யாரையும் கொல்லவில்லை. கம்யூனிச/சோஷலிசக் கட்சிகளின் அடிப்படைக் கோட்பாடே இனங்களுக்கு இடையிலான சகோதரத்துவமும், மனிதநேயமும் தான். அதை எப்படி நீங்கள் இஸ்லாமியவிரோத பாஜகவுடன் ஒப்பிடுவீர்கள்? இந்திய பாஜகவின் இஸ்லாமிய விரோதமும், ஜெர்மன் நாஜிகளின் யூத விரோதமும் ஒரே மாதிரியான இனவாதக் கொள்கைகள் தான். 

உங்களுடைய கூற்று, மறைமுகமாக பாசிசத்திற்கு சமூக அங்கீகாரம் கோரும் வாதம் ஆகும். மனிதர்களை இனரீதியாக பிளவுபடுத்தி இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் பாசிசக் கட்சிகள் தடைசெய்யப் பட வேண்டியவை. இனவாதம் பேசுவதை கருத்துச் சுதந்திரமாக கருத முடியாது. காரணம் இல்லாமல், ஐரோப்பாவில் நவ நாஜிக் கட்சிகள் தடைசெய்யப் படவில்லை. நாஜிசம் பாஜக வடிவில் வந்தாலும், அதை எதிர்க்க வேண்டுமே தவிர "அதுவும் அரசியல் கட்சி தானே" என வக்காலத்து வாங்கக் கூடாது. 

ஜெர்மனியிலும் ஹிட்லரின் நேஷனல் சோஷலிசக் கட்சி (NSDAP) ஆரம்ப காலங்களில் தேர்தல்களில் போட்டியிடும் ஒரு "சாதாரண" அரசியல் கட்சியாகத் தான் இருந்தது. அப்போது அயல்நாடான செக்கோஸ்லோவாக்கியாவிலும் NSDAP போட்டியிட வேண்டும் என்று ஹிட்லர் தனது கட்சித் தலைவர்களிடம் தனது பேராசையை வெளியிட்டு இருந்தார். 

அப்போதே, "ஆரிய இனத்தவர் வாழும் நாடுகள்" என்று, ஹிட்லர் கருதிய ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் நாஜிக் கட்சி உருவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தல்களில் நாஜிக் கட்சி பெற்ற அமோக வெற்றிகளை பார்த்த பின்னர், பிற ஐரோப்பிய நாடுகளிலும், பிற மொழிகளைப் பேசுவோர் மத்தியிலும் ஹிட்லருக்கு ஆதரவாளர்கள் உருவானார்கள். 

ஜெர்மன் மொழியுடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத, ஒரு சொல் கூட ஒற்றுமை இல்லாத, எஸ்தோனிய, ருமேனிய மொழிகளைப் பேசும் மக்கள் மத்தியில் இருந்து கூட, ஹிட்லரை ஆராதிக்கும் பாசிசக் கட்சிகள் தோன்றியது எப்படி? அன்று ஐரோப்பிய பாசிஸ்டுகளை கவர்வதற்கு ஹிட்லரின் ஆரியனிசக் கொள்கை உதவியது. அதே மாதிரி, இன்று மோடியின் இந்துத்துவா கொள்கை நேபாளம் முதல் இலங்கை வரையான தெற்காசிய பாசிஸ்டுகளை ஒன்று சேர்க்க உதவாதா? நாங்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிறோம். 

இலங்கையில் தமிழர்கள் மாதிரி, ஜெர்மனிக்கு அயல்நாடான செக்கோஸ்லோவேகியாவில் ஜெர்மன் மொழி பேசுவோர் ஒரு சிறுபான்மை இனம். நிலவுடைமையாளர்களின் ஜெர்மன் தேசியவாதக் கட்சிகள் அந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி வந்தன. ஆனால் முப்பதுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜெர்மன் நாஜிகளுடன் கொள்கை உடன்பாடு கொண்ட புதிய கட்சிகள் உருவாக்கி, ஓரிரு வருடங்களுக்குள் பெரிதாக வளர்ந்து விட்டன. 

முப்பதுகள் வரையில், செக்கோஸ்லோவேகியா தேர்தலில் நாஜிக் கட்சி போட்டியிட வேண்டுமென்ற ஹிட்லரின் "நிறைவேற முடியாத பேராசை" பற்றிக் கேள்விப்பட்டவுடன் செக்கோஸ்லாவாக்கிய ஜெர்மனியர்கள் பலர் சிரித்தனர். உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் அவர்களில் அடக்கம். முதலில் (நாஜிகளின் கோட்டையான) பவாரியா மாநிலத்திற்கு வெளியில் உள்ள பிற மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வென்று காட்டுங்கள் என்று பரிகசித்தார்கள். 

இன்று பாஜகவுக்கு உத்தரப் பிரதேசம் மாதிரி, அன்று நாஜிகளுக்கு பவாரியா இருந்தது. இன்று பாஜக கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வெல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவது மாதிரி, அன்று நாஜிகள் மேற்கு ஜெர்மன் மாநிலங்களில் வெல்லவே முடியாத சூழ்நிலை நிலவியது. வெஸ்ட் பாலென் (West Falen) போன்ற மேற்கு ஜெர்மன் மாநிலங்களில், எப்போதும் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிக்கு தான் பெருமளவு வாக்குகள் கிடைத்து வந்தன. 

நாஜிக் கட்சி பதவிக்கு வந்த 1933 ம் ஆண்டு தேர்தலில் கூட, மேற்கு ஜெர்மன் மாநிலங்களில் 30% க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. அந்தளவுக்கு அவர்களுக்கு அங்கே ஒருபோதும் மக்கள் ஆதரவு இருக்கவில்லை. அப்படியான ஒரு காலத்தில், நாஜிக் கட்சி செக்கோஸ்லாவாக்கிய தேர்தலில் போட்டியிடப் போகிறது என்று சொல்லி இருந்தால், எல்லோரும் அதைக் கேட்டு சிரித்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த வரலாறு என்னவென்பதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

இப்படிக்கு, 
- கலையரசன் 
 17-2-2021


இதில் உள்ள வீடியோப் பதிவையும் பாரவையிடவும்: 

 

Tuesday, February 16, 2021

இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம்

 இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து நெதர்லாந்தில் இயங்கும் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியிடும் Rode Morgen மாதாந்த சஞ்சிகையில் பெப்ரவரி மாத இதழில் வந்த கட்டுரையை இங்கே தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன். 

 இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மை அதை விட மிக வேகமாக வளர்கின்றது. ஏழைகளை மென்மேலும் ஏழைகளாக்கி கோடீஸ்வரர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். மோடி அரசாங்கம் பெரும் வணிக நிறுவனங்கள் சுரண்டலை நடத்துவதற்கு உதவுகின்றது. 2016 ம் ஆண்டு வங்கிகளுக்கு உதவும் நோக்கில், மோடி 1000, 500 ரூபாய் தாள்களை செல்லாதாக்கினார். அதே நேரம் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கும் இல்லை, வங்கி அட்டையும் இல்லை. பதினெட்டு மில்லியன் இந்தியர்கள் அதை எதிர்த்து போராடினார்கள். 

2019ம் ஆண்டு, முஸ்லிம்களை பாகுபடுத்தி பிளவை அதிகரிக்கும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து பாசிச மோடி பெரிய அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கி உழைக்கும் வர்க்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். வேலை நேரம் அதிகரிக்கப் பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும், ஜனநாயக உரிமைகளும் குறைக்கப் பட்டன. 

4 செப்டம்பர் 2020 நான்கு தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டன. அவற்றில் தொழில்முனைவோருக்கு நன்மையாகவும் தொழிலாளர்களுக்கு தீமையாகவும் பல அம்சங்கள் இருந்தன. நிரந்தர தொழில்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழில்கள் அனுமதிக்கப் பட்டன. நினைத்த படி பணி நீக்கம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்பு நீக்கப் பட்டது. நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை ஆலோசிக்காமல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். சட்டரீதியான வேலைநிறுத்தங்கள் சாத்தியமில்லை. ஒரு கம்பனி ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கான எல்லை 20 இலிருந்து 50 ஆக அதிகரிக்கப் பட்டது. 

பாசிச மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்த அதே காலத்தில் இந்திய சனத்தொகையில் ஐம்பது சதவீதத்தை கொண்ட உழவர்களுக்கு எதிராகவும் மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அரிசி, தானியங்களை ஒரு நிச்சயிக்கப் பட்ட விலைக்கு வாங்கி வந்ததை நிறுத்தி விடும். நிலம் குத்தகைக்கு கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் நீக்கப் பட்டன. 

இதன் மூலம் விவசாயிகள் தமது விளைபொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று அரசாங்கம் கூறுகின்றது. எழுபது சதவீதமான விவசாயிகள் ஒரு ஹெக்டேயரை விடக் குறைவான நிலத்தையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இந்த விவசாயிகள் உலகில் பெரிய தானிய வர்த்தகர்களுடன் பேரம் பேசலாமா? Cargill, Walmart போன்ற பெரிய நிறுவனங்கள் தாம் விரும்பியவாறு விலையை குறைத்து விடலாம். அதனால் விவசாயிகள் தாம் செலவிட்ட பணத்தை கூட திரும்பப் பெற முடியாது. பெரும் நிறுவனங்களின் இலாபவேட்டையில் உழவர்கள் பலி கொடுக்கப் பட்டுள்ளனர். குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தவர்கள் நின்று பிடிக்க முடியாமல் நகரங்களில் சேரிகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப் படுவார்கள். 

26 நவம்பர் 2020 அன்று, அரசு சட்டங்களுக்கு எதிராக 250 மில்லியன் அளவிலான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அது மனிதகுல வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டம். ஆனால் நெதர்லாந்தில் அதைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை. 

27 நவம்பர் இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் இருந்து விவசாயிகள் கால் நடையாகவும், டிராக்டர்கள், பேருந்து வண்டிகளிலும் தலைநகர் டெல்லியை நோக்கிச் சென்றனர். அவர்களது எண்ணிக்கை அரை மில்லியனாக வளர்ந்தது. நவம்பர் கடைசியில் இருந்து கடும் குளிரிலும், மழையிலும் நெடுஞ்சாலைகளை மறித்து நின்றனர். இந்த மறியல் போராட்டத்தின் போது 500 உழவர் அமைப்புகள் தற்காலிக சமையல் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், ஒரு பத்திரிகையும் கூட நடத்தினார்கள். 

ICOR சர்வதேச அமைப்பில் நெதர்லாந்து Rode Morgen கட்சியுடன் அங்கம் வகிக்கும், CPI (ML) Red star மற்றும் பல மார்க்சிய லெனினிச அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்துள்ளன. போலிஸ் தடையரண்கள் போட்டு, கலவரத் தடுப்பு காவலர்களையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், வேறு பல தாக்குதல் உபகரணங்களையும் பயன்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்தியப் பிரதமர் மோடி பிற்போக்குவாத சட்டங்களை அமுல்படுத்த முடிந்தது. ஆனால் தற்போது அவரது அரசாங்கம் எதிர்க்க முடியாத விவசாயிகளுக்கு முகம் கொடுக்கிறது. அவர்கள் இதுவரை எட்டு தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 20 ஜனவரி நடந்த பேச்சுவார்த்தையில் அரசு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை 18 மாதங்கள் பின்போடவும் ஓர் ஆணைக்குழு அமைக்கவும் சம்மதித்தது. உழவர் அமைப்புகள் அதை நிராகரித்ததுடன் சட்டங்களை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென கோரின. 

குடியரசு தினமான ஜனவரி 26 எப்போதும் பெரிய அணிவகுப்புகள் நடக்கும். இந்த வருடம் மில்லியன் கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் தமது அணிவகுப்பை நடத்தினார்கள். தடையை மீறி தலைநகருக்குள் நுழைந்தனர். அதற்கு ஆயத்தப் படுத்துவதற்காக 23 ஜனவரி மாநிலத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்தன. இந்து தேசியவாத பாஜக ஆதரவு தொழிற்சங்கம் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் பங்குபற்றி உள்ளனர். உழைக்கும் வர்க்க மக்களின் வர்க்க உணர்வானது மோடியின் பாஜக அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது.


இந்தக் கட்டுரை கானொலிப் பதிவாக யூடியூப்பில் உள்ளது: