Friday, May 31, 2013

கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : 5)


கிறிஸ்தவ ஆர்மேனியா ஆக்கிரமிக்கப்படுகின்றது

துருக்கியில் எதிர்ப்பின்றி முன்னேறிய சிலுவைப் படைகள் ஆர்மேனிய நாட்டின் தலைநகரம் எடேசாவை வந்தடைந்தனர். இன்றிருக்கும் ஆர்மேனியா நாட்டை போல மும்மடங்கு பிரதேசம் அன்றைய ஆர்மேனிய மன்னராட்சியின் கீழ் இருந்தது. ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி பிற்காலத்தில் துருக்கியின் பகுதிகளாகி விட்டன.

ஆர்மேனியர்கள் (90%) கிறிஸ்தவர்கள். இருப்பினும் தமக்கென விசேஷ வழிபாட்டு முறையை கடைப்பிடித்தனர். சின்னச்சிறு ஆர்மேனிய நாட்டிற்கு, இரண்டு பக்கமும் எதிரிகள் இருந்தனர். இஸ்லாமிய துருக்கியர்களும், கிறிஸ்தவ கிரேக்கர்களும் ஆர்மேனியாவை விழுங்கி விடத் துடித்தார்கள். அவர்கள் மேற்கத்திய சிலுவைப் படைகளையும் நம்பவில்லை. இருப்பினும் ஆர்மேனிய மன்னன், துருக்கியருக்கு எதிராக சிலுவைப் படைகளின் பாதுகாப்பை நாடினான். அது எவ்வளவு பெரிய தவறு என்பது சில நாட்களின் பின்னர் புரிந்தது.

பவ்டவைன் (Boudewijn : பெல்ஜியத்தை சேர்ந்தவர்) என்ற தளபதியால் தலைமை தாங்கப்பட்ட சிலுவைப் படையணியே, ஆர்மேனியாவின் எடேசா நகருக்கு சென்றது. எடேசாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், தனக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டார் பவ்டவைன். அதாவது ஆர்மேனிய மன்னனின் அடியாளால் போன்று இருக்க முடியாது. ஆனால், அரச குடும்பத்தில் ஒருவனாக கருதப் பட வேண்டும்.  மூப்படைந்த கிழவனான ஆர்மேனிய அரசன், கிறிஸ்தவ சகோதரத்துவ உணர்வு காரணமாக, பவ்டவைனை பிள்ளையாக தத்தெடுப்பதாக அறிவித்தார். 

ஆர்மேனிய வழக்கப் படி பொது மக்களின் முன்னிலையில் நடந்த, ஒரு வாலிபனை தத்தெடுக்கும் சடங்கு, அந்தக் கால கிசு கிசு செய்தியாக, மத்திய கிழக்கு முழுவதும் வலம் வந்தது. அப்படி என்ன விசேஷம் அந்த சடங்கில் உள்ளது? அரசனும், அரசியும் இரண்டு பெரியதொரு வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு மேடையில் வீற்றிருப்பார்கள். தத்தெடுக்கப்படும் பிள்ளை நிர்வாணமாக அங்கிக்கு உள்ளே தவழ்ந்து சென்று மார்போடு மார்பு உரச வேண்டும். அன்று, பவ்டவைன் என்ற திடகாத்திரமான வாலிபனை, குழந்தை போல பலர் முன்னிலையில் தத்தெடுத்த கதை, ஒற்றர்கள் மூலம் துருக்கிய படைகள் மத்தியில் பரவியது. அவர்கள் அதனை தமக்குள் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள்.

இந்த வேடிக்கையான தத்தெடுப்பு நாடகம் பல காலம் நீடிக்கவில்லை. தத்தெடுக்கும் வைபவம் முடிந்த சில நாட்களில், பவ்டவைனின் அடியாட்கள், ஆர்மேனிய அரசனையும், அரசியையும் வீதியில் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றார்கள். அந்த கொடுஞ் செயலை, "வளர்ப்பு மகன்" தடுக்கவில்லை. அடுத்த சில நாட்களில் ஆர்மேனியாவின் ஆட்சி பவ்டவைன் கைகளுக்கு மாறியது. அவர் தனது நம்பிக்கைக்கு உரிய சிலுவைப் படைவீரர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். 

முதன் முறையாக ஒரு மத்திய கிழக்கு பிரதேசம், மேலைத்தேய ஐரோப்பியரின் ஆளுமையின் கீழ் வந்தது. வருங்காலத்தில் வரப்போகும், காலனியாதிக்க காலகட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல, அந்த சம்பவம் அமைந்திருந்தது.


கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தியோக்கியா முற்றுகை

அந்தியோகியா (இன்று: Antakya, துருக்கி) என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. மத்தியதரைக் கடலோரம், இன்றைய சிரியா எல்லையில் அமைந்துள்ள அந்த நகரம் பற்றிய குறிப்புகள் விவிலிய நூலிலும் வருகின்றன. இன்றைக்கும் நிலைத்து நிற்கும் உலகிலேயே பழமையான கிறிஸ்தவ தேவாலயம் (புனித பீட்டரின் குகை) அந்நகருக்கு சிறப்பு சேர்க்கின்றது. 

ஆதி கால கிறிஸ்தவ சமூகம் அங்கே தோன்றியிருந்தது. முன்னொருகாலத்தில் சீனாவுக்கு சென்று வரும் வியாபாரிகளின் இடைத்தங்கல் முகாமாக இருந்ததது. அதன் வர்த்தக முக்கியத்துவம் காரணமாக ரோமர்களின் காலத்திலேயே மிகப் பெரிய நகரமாக திகழ்ந்தது. 20 ம் நூற்றாண்டில் நவீன சிரியாவின் பகுதியாக இருந்தது. பின்னர், பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் அதனை துருக்கிக்கு விற்று விட்டனர். துருக்கியின் ஹத்தை மாகாணமாக அறியப்படும் பகுதியில், இன்றைக்கும் அரேபியர்களே (முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்) பெரும்பான்மை இனம்.

சிலுவைப்போர் காலத்தில், அந்தியோக்கியா "யாகி சியான்" என்ற துருக்கி இனத்தை சேர்ந்த முஸ்லிம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிலுவைப் படைகள் வருகின்றன என்று அறிந்தவுடனேயே, யாகி சியான் நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு குறைபாடு இருந்தது. நகரை சுற்றி கட்டப்பட்டிருந்த மிக நீண்ட மதில் சுவர் தான் அந்த குறைபாடு. 

அந்தக் காலங்களில், சிங்கப்பூர் மாதிரி குட்டி நாடுகள் அதிகம். தலைநகரத்தையும், சில கிராமங்களையும், சுற்றியுள்ள வயல் பரப்புகளையும் மட்டுமே தேச எல்லைகளாக கொண்ட நாடுகள். மதில்களால் சூழப்பட்ட அந்தியோக்கியாவில் நகரபகுதி மட்டுமல்லாது, விவசாய நிலங்களும் இருந்தன. இதனால் அன்றிருந்த 40000 மக்களுக்கு உணவிடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் ஒரேயொரு பிரச்சினை, சீனப் பெருஞ்சுவர் போல முடிவில்லாது நீண்டு சென்று கொண்டிருந்த மதில்களை பாதுகாப்பது எப்படி?

அந்தியோக்கியா 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1084 வரை, கொன்ஸ்டான்டிநோபில் தலைமையின் கீழ் கிரேக்க சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. ஒரு இஸ்லாமிய அரசனான யாகி சியான் ஆட்சியின் கீழே, கிறிஸ்தவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ஆர்மேனிய, ஜாகொபிய, மறோனிய, கிரேக்க பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் கிரேக்க சக்கரவர்த்தி, இம்முறை சிலுவைப்படை என்ற கூலிப்படையை  அனுப்பி அந்தியோக்கியாவை இணைக்கப் பார்க்கிறார், என்ற அச்சம் நிலவியது. அப்படியான நோக்கில் படையெடுப்பு இடம்பெற்றால், அந்தியோக்கியா கிறிஸ்தவர்கள் கட்சி மாறி விடுவார்களோ என்று மன்னன் அஞ்சினான். 

இதனால் யாகி சியான், அனைத்து கிறிஸ்தவ ஆண் பிரஜைகளையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். அவர்கள் நகரின் பாதுகாப்பு மதில்களுக்கு வெளியே வசிக்கும் படி உத்தரவிட்டான். அவ்வாறு நகரின் வெளியே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களின் மனைவி, பிள்ளைகளை, யாகி சியான் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டான். பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினர் நலன் கருதி, கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியா அரசுக்கு விசுவாசமாக நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தியோக்கியாவை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட சிலுவைப்படைகளின் உள்ளே ஒற்றர்களாக செயற்பட்டார்கள்.

சுமார் மூன்று மாதங்கள் நீடித்த முற்றுகை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. அந்தியோக்கியா மன்னன் எதிர்பார்த்தது போலவே, கோட்டை வாயில் கதவு ஒரு துரோகியினால் திறக்கப்பட்டது. அதன் மூலம் சிலுவைப் படைகள் அந்தியோக்கியாவினுள் நுழைந்தன. எதிரிக்கு காட்டிக் கொடுப்பவர்கள் எல்லா மதத்திலும், இனத்திலும் இருப்பார்கள். அன்று சிலுவைப்படைகள் நுழையும் வழியை திறந்து விட்டது, பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம். அவன் ஒரு முறை மந்திர, தந்திரங்களில் ஈடுபட்ட காரணத்தால் தண்டிக்கப் பட்டவன். அதற்காக கிடைத்த சந்தர்ப்பத்தை கொண்டு பழி வாங்கினான். 

பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம், இரவு நேரத்தில் இரகசியமாக,நுளை  வாயில் கதவுகளை திறந்து விட்டான். அந்தச் செயல், சிலுவைப் படைக்கு வைக்கப்பட்ட பொறி இல்லை என்று நிரூபிப்பதற்காக,  ஏற்கனவே தனது மகனை எதிரிப் படையினர் பக்கம் அனுப்பி வைத்திருந்தான். அப்படி ஒரு காட்டிக் கொடுப்பு இடம்பெற்றிரா விட்டால், சிரியாவில் இருந்து வந்த மேலதிக படைகள் அந்தியோக்கியாவை காப்பாற்றி இருக்கும். அதை விட நீண்ட கால முற்றுகையை தாக்குப் பிடிக்கக் கூடியவாறு, போதுமான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்தன.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, May 28, 2013

பொலிஸ் படையை விரட்டியடித்த இத்தாலி மாணவர்கள்


(Bologna, 27 May 2013)
இலங்கையிலும், இந்தியாவிலும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு,  இந்த செய்திக் குறிப்பு பெரிதும் பயன்படும். மக்களை அணிதிரட்டி போராடும் சமூக ஆர்வலர்களும், இத்தாலி மாணவர்களிடம் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்ளலாம். மக்கள் ஒன்று திரண்டு போராடினால், பெரும் பொலிஸ் படையை கூட விரட்டியடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவை கவனமாகப் பாருங்கள். ஒருவரோடு ஒருவர் கை கோர்த்துக் கொண்டு போராடும் மாணவர்கள், பொல்லுகளுடன் தாக்கக் காத்திருக்கும் கலவரத் தடுப்பு பொலிசாரை, துணிச்சலுடன்  எதிர்த்து நின்று  போராடுகின்றார்கள். இறுதியில், மாணவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பொலிஸ் படை, தலை தெறிக்க ஓடுகின்றது. அந்தக் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக வீடியோவில் பதிவாகியுள்ளன.

இத்தாலி நாட்டில், பொலோய்னா (Bologna) நகர பல்கலைக்கழக மாணவர்கள், ஒரு மாற்றுப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சுதந்திர பொது பல்கலைக்கழகம் (Collettivo Universitario Autonomo) என்று அதற்கு பெயரிட்டுள்ளனர். குறிப்பாக இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களால் உருவாக்கப் பட்ட  மக்களுக்கு இத்தாலியின் பொருளாதார பிரச்சினை பற்றிய அறிவு புகட்டுவது, அந்த கல்வி நிலையத்தின் குறிக்கோள். முழுக்க முழுக்க மாணவர்களால் நிர்வாகிக்கப் படும் சுயாதீனமான கல்லூரி, பொலோய்னா நகர மத்தியில் பேரவையை கூட்டியிருந்தது.



பொலோய்னா நகர மத்தியில் கூடிய பேரவையில், ஆயிரக் கணக்கான பொலோய்னா பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றினார்கள். அவர்களுடன் ஆர்வமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் கலந்து கொண்டனர். இத்தாலி எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்தின் மானியக் குறைப்பு, பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள், போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டன.

உலகில் எந்த அரசாங்கமும், நிர்வாகக் கட்டமைப்புக்கு மாறான எந்தவொரு நிறுவனத்தையும் அடக்குவதற்கு பின்னிற்பதில்லை. அந்த வகையில், மாணவர்களின் மாற்றுப் பல்கலைக்கழகத்தை ஒடுக்கி முறியடிக்கும் நோக்குடன், போலிஸ் படை கொண்டு வந்து குவிக்கப் பட்டது. Piazza Verdi என்ற பல்கலைக்கழக முன்றலில், மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டத்தை அடக்க முனைந்த போலிசின் நோக்கம் நிறைவேறாதது மட்டுமல்ல, இறுதியில் அவர்களே அவ்விடத்தை விட்டு ஓடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை, இத்தாலி மாணவர்களின் போராட்டம் உணர்த்தி நிற்கின்றது.



Monday, May 27, 2013

சிரியா போர்க் களத்தில் இருந்து சில குறிப்புகள்

  
இங்கேயுள்ள படத்தில், மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப் படும், சிரியாவின் "அல்கைதா விடுதலைப் போராளிகள்", சிரிய கிறிஸ்தவப் பெண் ஒருவரை வன்புணர்ச்சி செய்து, கோரமாக கொலை செய்த காட்சி. இந்த செய்திகள், உலகில் எந்த கிறிஸ்தவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், சிரிய அரச படைகளும், கிளர்ச்சிக் குழுக்களும் மனித உரிமைகளை மீறுவதுடன், பொது மக்களையும் துன்புறுத்தி, பலி வாங்கி வருவதும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். போரில் ஈடுபடும் இரண்டு தரப்பினரும் பாரிய போர்க்குற்றங்களை புரிந்துள்ளன. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே உலகிற்கு தெரிவித்து வருகின்றன.

சிரிய உள்நாட்டுப் போருக்கு காரணமான, மத ரீதியிலான சமூகப் பிரிவினைகள், அவற்றிருக்கு இடையிலான முரண்பாடுகள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. கிறிஸ்தவ சிறுபான்மையினர் சிரியாவின் அசாத் அரசை ஆதரவளிப்பதால், கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் வேட்டையாடிக் கொலை செய்யப் படுகின்றனர். அல்கைதா தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. ஆனால், "கிறிஸ்தவ நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகள், சிரிய கிறிஸ்தவர்களின் அவலங்களை புறக்கணித்து வருவதுடன், தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாத அல்கைதா தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றன. உலகத்தில் எங்காவது கிறிஸ்தவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால், "கிறிஸ்தவ நாடுகள்" தட்டிக் கேட்கும் என்ற மாயை இங்கே உடைக்கப் படுகின்றது.

*****************


சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்தால், அங்கே அல்கைதா ஆட்சியை கைப்பற்றி விடும். அதற்குப் பிறகு, இஸ்ரேல் மீதான ஜிகாத் அறிவிக்கப் பட்டாலும் ஆச்சரியம் இல்லை. முகம் தெரியாத பிசாசை விட, இவ்வளவு காலமும் பழகிய பிசாசே பரவாயில்லை என்ற முடிவுக்கு இஸ்ரேலிய இராணுவம் வந்துள்ளது. ஆசாத் அரசு பலவீனமாக இருந்தாலும், இஸ்ரேலுடன் சமாதானமாக இருக்கும் என்று நினைக்குமளவிற்கு நிலைமை வந்துள்ளது. இதைத் தான், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வார்கள்.

எகிப்தில் ஆட்சியில் இருப்பதைப் போன்ற, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி சிரியாவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது ஆசாத் (இன்றைய அதிபரின் தந்தை) காலத்தில் தடை செய்யப் பட்டிருந்தது. எண்பதுகளில், ஹோல்ம்ஸ் நகரில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சி, ஈவிரக்கமின்றி நசுக்கப் பட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதரக் கட்சி உறுப்பினர்கள் மாண்டனர். அதற்குப் பிறகு, அந்தக் கட்சி தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக, சிரியாவில் பெரும்பான்மை சமூகமான சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் அதன் ஆதரவுத்தளம் இருந்தது.

2010 ல் சிரிய அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பயன்படுத்திக் கொண்டது. அப்போது உருவான ஆயுதக் குழுவுக்கு, சவூதி அரேபியாவும், கட்டாரும் நிதியும், ஆயுதங்களும் வழங்கின. இதே நேரம், ஆயுதக் குழுக்கள் இயங்கவும், பயிற்சி பெறவும், துருக்கி இடம் கொடுத்தது. எண்பதுகளில் நடந்ததைப் போன்று, 2010 போராட்டமும், சுன்னி முஸ்லிம்களின் எழுச்சியாக கருதப் பட்டது. (ஷியா, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிரியர்கள், அந்தக் கிளர்ச்சியில் பங்கு பற்றவில்லை. அவர்கள் இன்றைக்கும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர்.)

2010 ல் சிரிய அரசுக்கு எதிரான, சுன்னி முஸ்லிம் சமூக போராளிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தமது சமூகத்தை சேர்ந்த போராளிகளை எதிர்த்து போரிட விரும்பாத, சிரிய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுன்னி முஸ்லிம் இராணுவ வீரர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருந்தது. சிரியா இராணுவத்தில் இருந்த, கணிசமான அளவு  சுன்னி முஸ்லிம் அதிகாரிகளும், படைவீரர்களும் துருக்கிக்கு தப்பி ஓடினார்கள். அவர்கள் அங்கிருந்து "சுதந்திர சிரியா இராணுவம்" (FSA) என்ற பெயரில் இயங்கினார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்கப் பட்டது போன்று, சிரிய சுதந்திர இராணுவம், பலமான எதிர்ப்புச் சக்தியாக உருவெடுக்கவில்லை.

சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராளிக் குழுக்களுக்கு, தாராளமாக நிதி, ஆயுதங்களை அள்ளி வழங்க பல வெளிநாடுகள் முன்வந்தன. இந்த வெளிநாட்டு நிதி, ஆயுதங்கள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈராக்கிய அல்கைதா சிரியாவிற்குள் ஊடுருவியது. பின்லாடனின் அல்கைதாவும், ஈராக் அல்கைதாவும் ஒன்றல்ல. ஈராக் அல்கைதா, அந்த நாட்டு சுன்னி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய அமைப்பு. பின்லாடனின் அல்கைதாவின் அரசியல் கொள்கைகளை வரித்துக் கொண்டனர். அதில் முக்கியமானது, முதலாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஒப்பந்தம் (Syces - Picot Agreement.).

முதலாம் உலகப்போரின் முடிவில் தான், இன்றுள்ள சிரியா, ஈராக் என்ற தேச எல்லைகள் பிரிக்கப் பட்டன. எல்லை பிரிப்பது குறித்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரபு மக்களுடனோ, அவர்களின் பிரதிதிகளுடனோ கலந்தாலோசிக்கப் படவில்லை. அதைக் காரணமாக காட்டும் அல்கைதா,  அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அதனால், ஈராக் நாட்டை மட்டுமல்ல, சிரியாவையும் சேர்த்து அரசமைப்பது அவர்களின் எதிர்கால இலட்சியம். ஈராக்கிய அல்கைதா, அல் நுஸ்ரா (Jabhat al-Nusra) என்ற பெயரில் சிரியாவில் களமிறங்கியது.

அது ஒரு அல்கைதா பாணி இயக்கம். அதன் அர்த்தம், அந்த இயக்கத்தில் எந்த நாட்டவரும் உறுப்பினராக சேரலாம். அதனால், சர்வதேச ஜிகாதிகளையும் ஒன்று சேர்க்க முடிந்தது. குறிப்பாக லிபியாவில் கடாபிக்கு எதிராக போரிட்ட போராளிகள் சிரியாவில் வந்து குவிந்தார்கள். ஆட்பலம் ஆயுத பலம் மிக்க அல் நுஸ்ரா, பல இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சிரியா, லெபனானில் வாழும் மக்களுக்கு இந்த விபரங்கள் தெரியும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் சிரியாவில் அல்கைதாவின் இருப்பை மூடி மறைத்து வந்தன. அல் நுஸ்ரா பெற்ற போர்க்கள வெற்றிகளை, FSA பெற்ற வெற்றிகள் என்று திரித்துக் கூறினார்கள். ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும், சிரியாவில் போரிடுவது பற்றிய தகவல்கள், அண்மைக் காலமாக வெளிவருகின்றன. அதற்குப் பிறகு தான், சிரியாவில் அல் நுஸ்ரா என்ற அல்கைதா பாணி இயக்கம் இருக்கின்றது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளவாரம்பித்தன.

"அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரிகள்" என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான துணைப்படை தான் அல்கைதா என்பது, ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட விடயம். ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர். இப்போது, Al Nusrah ல் சேர்ந்து போராடி வருகின்றார். Eric Harroun என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில்" பங்கெடுத்து வருகிறார். சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில், "அமெரிக்கன்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

Eric Harroun சிரியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்கு காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்குபற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் ஆசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார். (அந்த Youtube வீடியோக்களை இணைத்துள்ளேன்) சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் Al Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர் போன்ற வெளிநாட்டு போராளிகள், பொதுவாக அல்கைதாவின் கிளை அமைப்பான Al Nusrah போன்ற இயக்கங்களில் சேர்வது ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

சிரியாவில் போரிட்ட இன்னொரு அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. Matthew VanDyke என்ற பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் ஒரு "ஊடகவியலாளர்" என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சிரியா வந்து விட்டார். இவரது புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டதால் தான், வெளியுலகம் இவரைப் பற்றி அறிந்து கொண்டது. இவர்களைப் போல இன்னும் எத்தனை அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த ஒபாமாவுக்கே வெளிச்சம்!
(US Army veteran fighting with al Qaeda, http://www.longwarjournal.org/videos/2013/03/us_army_veteran_fighting_with.php)
(Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad,  http://www.youtube.com/watch?v=2SEdheC8Yq4&feature=player_embedded)

சிரியாவில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாகின்றது. சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுதபாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டு போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், சிரியாவில் போரிட்டு வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மறுத்து வந்தன.

தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. பிரிட்டனை சேர்ந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில், சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடி வந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்து வந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங்களுக்கு திரும்பி வந்து, தமது அரசுகளுக்கு எதிரான ஜிகாத் போராட்டங்களை நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.

இன்று வரலாறு திரும்புகின்றது. அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில் விடுகின்றது. இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல் இருக்கின்றது. நாளை, சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்த பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை சேர்ந்த போராளிகள் தயங்கினாலும், வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான போரை நடத்தப் போகின்றார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரியாமல் இல்லை. அதனால் தான், "முன் பின் பழக்கமில்லாத பிசாசுகளை விட, ஆசாத் போன்ற தெரிந்த பிசாசு ஆட்சியில் இருப்பதே உத்தமம்..." என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளே கூறுமளவிற்கு நிலைமை உள்ளது.
          **********

சிரியா பற்றிய முன்னைய பதிவுகள்:

Sunday, May 26, 2013

யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்



கடலூரில் நடந்த, நாம் தமிழர் கட்சிக் கூட்டத்திற்கு, காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து வந்திருந்தார்கள். அந்த சம்பவம், பல எதிர்வினைகளை தோற்றுவித்திருந்தது. காங்கிரஸ், மற்றும் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எதிர்மறையான எதிர்வினைகள் பிரிவினைவாதப் பீதியூட்டிக் கொண்டிருந்தன. அதே நேரம், மதிமுக போன்ற தமிழீழ ஆதரவு கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட பக்கப் பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தருணத்தில், பல கொள்கை முரண்பாடுகள் இருந்த போதிலும், நான் சீமானின் செயலை ஆதரித்து எழுதி இருந்தேன். அது குறித்து நான் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டிருந்தேன்:

  • //தமிழ் தேசியவாதிகள் யாருடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது, அவர்களது சொந்த அரசியல் தெரிவு. ஆனால், காஷ்மீர் தேசியவாத இயக்கமான JKLF, மற்றும் புலம்பெயர்ந்த சீக்கியரின் காலிஸ்தான் தேசியவாத இயக்கங்களுக்கும், CIA க்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு தான் நெருடலானது. இந்த அமைப்புகளுக்கு CIA நிதி கிடைப்பது, காஷ்மீரி, சீக்கிய சமூகங்களில் ஏற்கனவே தெரிந்த விடயம். ஆகவே, இந்த "CIA Connection" குறித்து தமிழர்கள் விழிப்புடன் இருப்பதும் அவசியம்.//  (Kalaiyarasan Kalai, May 19)
  • //நாம் தமிழர் கட்சி, JKLF உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டமை, தேசியவாத அரசியல் அடிப்படையின் படி சரியான நிலைப்பாடு தான். அதை நாங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், நாம் தமிழர் கட்சியின் கடந்த கால அரசியல் நடைமுறைகளை வைத்து பார்க்கும் பொழுது தான், இந்தப் புதிய கூட்டு குறித்து சந்தேகம் எழுகின்றது. எனது கணிப்பீட்டின் படி, சீமானுடைய அரசியல் பாதை மிகவும் தெளிவானது. அவர் ஒருவேளை "தமிழ் தேசியவாதியோ" என்று, மக்கள் தான் குழம்புகிறார்கள். பாசிசத்தின் குணங்குறிகள் ஆரம்பத்தில் அப்படித் தான் இருக்கும். தங்களது இனப் பெருமை பற்றி மட்டுமே பேசுவார்கள். தங்களது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மட்டுமே தமது கொள்கைகளை நடைமுறைப் படுத்துவார்கள். ஆனால், அவர்களுக்கென்று ஒரு "அயல் விவகார கொள்கை" உண்டு. மற்ற பிரதேசங்களில், தமக்கு நெருக்கமான சக்திகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். 

  • மகாராஷ்டிரத்தில் சிவசேனா தான் சீமானின் கூட்டாளிகள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். சிவசேனாவுக்கு இரண்டு முகங்கள். ஒன்று இந்துத்துவா, மற்றது மராட்டிய இனவாதம். அவர்கள் ஒரு காலத்தில், மும்பையில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை நடத்தியவர்கள் என்ற விடயம் சீமானுக்கு மறந்து விட்டது.தற்போது நாம் தமிழருக்கும், காஷ்மீர் விடுதலை இயக்கமான JKLF உடனும் உறவு ஏற்பட்டதற்கு, முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம். 

  • 1. JKLF சிஐஏ உடன் தொடர்பில் உள்ள விடயம் ஒன்றும் இரகசியமல்ல. நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் சிஐஏ க்கு மிகவும் உவப்பானது. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், தீவிரமான இடதுசாரி எதிர்ப்பாளர்கள் என்பதை அவர்களே பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். மேலும், அமெரிக்காவில் சிஐஏ யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும், "நாடுகடந்த தமிழீழ அரசுடன்" நெருங்கிய உறவு வைத்திருப்பதை, சீமானே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

  • 2. இன்றைய காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில், காஷ்மீரில் JKLF இன் பங்களிப்பு பலவீனமாக உள்ளது. வன்முறையில் இறங்காத, சாத்வீக வழியில் போராடும் JKLF இன் தலைமை, இன்று பல மாற்றங்களை கண்டுள்ளது. யாசின் மாலிக் இந்தியாவுக்குள் ஒரு பிரதேச சுயாட்சி கேட்குமளவிற்கு வந்துள்ளார். அவருக்கும், இந்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அண்மையில், ஜம்முவில் இருந்து விரட்டப்பட்ட இந்து பண்டித்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதிலே வேடிக்கை என்னவென்றால், யாசின் மாலிக் அல்லது JKLF இன் இன்றுள்ள நிலைப்பாட்டுக்கும், சீமான் ஆதரிக்கும் புலிகளின் அரசியலுக்கும் இடையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இந்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் யாசின் மாலிக், ஒரு "காஷ்மீர் டக்லஸ் தேவானந்தா" போன்று வர வாய்ப்புண்டு. 

  • சுருக்கமாக, சீமான் யாசின் மாலிக்கை அழைத்து வந்த விடயம், ஒரு வரவேற்கத் தக்க திருப்பம். ஆனால், அது சிலர் பயமுறுத்துவதைப் போல, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் அல்ல.// (Kalaiyarasan Kalai, May 21)
இதற்காக சந்தோஷப் பட வேண்டிய சீமானின் "நாம் தமிழர் தம்பிகள்", முகப்புத்தகத்தில் என் மீது அவதூறுகளை வாரியிறைத்து வருகின்றனர். (https://www.facebook.com/vallavan.udayaraj/posts/661451097204493)
அப்படி எழுதியவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழனாகப் பிறந்த எல்லோரும்,  "தமிழினவாதிகளின் செயல்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும், அல்லது முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும்," என்று எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையில் நின்று, பக்கச் சார்பற்ற விமர்சனம் வைப்பதை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  Vallavan Udayaraj என்ற "நாம் தமிழர் அனுதாபி" (?), முகநூலில் எனக்கெதிராக எழுதிய அவதூறை முதலில் பார்ப்போம். (கவனிக்கவும்: அவர் எந்த இடத்திலும், எனது பதிவில் எழுதியதை மேற்கோள் காட்டாமல், மேம்போக்காக எழுதிச் செல்கிறார்.)

  • Vallavan Udayaraj : //முகப்புத்தகத்தில் எங்கு திரும்பினாலும் யாசின் மாலிக் மயம், யாசின் மாலிக்கின் மறுபக்கம், அடுத்த பக்கம், அக்கம் பக்கம் என்று ஆளாளுக்கு பக்கம்பக்கமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், இதற்கிடையில் இடது 'சிந்தனையாளர்' ஒருவர் மற்றொரு தேசிய இனத்தோடு சேருவது பிரச்சணையில்லை யாசின் மாலிக்கின் JKLF அமெரிக்காவின் சி.ஐ.ஏ வோடு தொடர்பில் இருக்கிறது அதனை அழைத்து வருவதுதான் பிரச்சணை என்று தன் பங்கிற்கு எழுதியிருந்தார். இந்த புலனாய்வு செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை, எனினும் எழுதியவரின் தருக்க திறமை குறித்து எனக்கு ஓரளவு தெரியும்.//(May 21)
JKLF க்கும், CIA க்கும் தொடர்பிருக்கும் விடயத்தை, நான் மட்டும் முகநூலில் பகிர்ந்து கொள்ளவில்லை. வேறு சிலரும் எழுதியுள்ளனர். யாசின் மாலிக் ஒரு சிஐஏ கைக்கூலி என்று நான் இங்கே கூற வரவில்லை. சிஐஏ தொடர்பில் உள்ள எல்லோரும், கைக்கூலியாக வேண்டிய அவசியம் கிடையாது.

"1991 ம் ஆண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத முகவர் கேபி, சிஐஏ யுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த தொடர்பின் மூலம், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதங்கள்,  அமெரிக்காவிடம் இருந்தது கிடைக்கும் என்று, தேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியிருந்தார்."

இந்தத் தகவலை, அண்மையில் ராஜீவ் கொலை பற்றி புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பிய ஆவணப்படம் ஒன்றில் கூறியிருந்தனர். (பார்க்க: இராஜிவ்காந்தி கொலையும், விடை காணா வினாக்களும்... http://www.youtube.com/watch?v=VYvAK3q4nAw)  அதற்கு அவர்கள், ராஜிவ் சர்மா எழுதிய "Beyond the Tigers" என்ற நூலை ஆதாரமாக காட்டியிருந்தார்கள். இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், இந்த நூலை சவுக்கு பதிப்பகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது. சவுக்கு பதிப்பக உரிமையாளர்கள், மிகத் தீவிரமான புலி ஆதரவாளர்கள் என்பது, தமிழ் இன உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.    

"சிஐஏ க்கும், புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பிருந்ததாக" எழுதிய ராஜீவ் சர்மா, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட சவுக்கு பதிப்பகம், அதனை பலர் அறிய பகிரங்கப் படுத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆகியன, புலிகளை ஆதரிப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்க வேண்டும். இது குறித்து, "வல்லவன் உதயராஜ்" தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளாரா என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். ராஜீவ் சர்மா, சவுக்கு பதிப்பகம், புதிய தலைமுறை ஆகியவற்றின் "தர்க்க திறமை" குறித்தும் அவர் கேள்விக்குட்படுத்தி இருந்தால் அவரது நேர்மையை பாராட்டலாம்.  

புலிகளுக்கும், சிஐஏ க்கும் இடையில் கூட தொடர்பு ஏற்படலாமென்றால், JKLF க்கும், CIA க்கும் இடையில் தொடர்பிருக்க முடியாதா? அந்தப் பிராந்தியத்தில், சிஐஏ ஊடுருவல் அதிகமாக இருப்பதை, சம்பந்தபட்ட உளவு நிறுவனம் பல தடவைகள் உறுதிப் படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ க்கும், சிஐஏ க்கும் இடையிலான தொடர்பு உலகறிந்த இரகசியம். ஆரம்பத்தில், பாகிஸ்தானில் தளமமைத்திருந்த JKLF இயக்கம் விரும்பினால், சிஐஏ யுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் இலகுவான காரியம். சிஐஏ யுடனான உறவு குறித்து, காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அது குறித்தும், நான் ஏற்கனவே முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தேன்:

  • //யாசின் மாலிக் விடயம் தொடர்பாக, இன்று எனது காஷ்மீர் நண்பருடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவர் ஒரு JKLF ஆதரவாளர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார். நாங்கள் இருவரும், மூன்று வருடங்களாக ஒரே அகதிமுகாமில் வசித்துள்ளோம். ஐரோப்பிய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விட்ட படியால், தற்போது அரசியலில் அதிக நாட்டம் அற்றவராக வாழ்கிறார். இன்று அவரிடம், JKLF க்கும், சிஐஏ க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் விசாரித்தேன். அந்த தொடர்பு குறித்து, காஷ்மீர் மக்கள் யாரும் கவலைப்படவில்லை என்பதை, அவரின் பதிலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களைப் பொறுத்தவரையில், காஷ்மீர் சுதந்திர நாடாவதற்கு அமெரிக்கா உதவினால், அதையிட்டு மகிழ்ச்சி அடையும் நிலையில் உள்ளனர்.

  • யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற நிலைமை தான், காஷ்மீர் தேசியவாதிகள் மத்தியில் உள்ளது. இதனை நாங்கள், புலி ஆதரவாளர்களின் அரசியல் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா எப்படிப்பட்ட ஏகாதிபத்தியமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இலங்கையில் அமெரிக்கா தலையிட்டு, தமிழீழம் வாங்கிக் கொடுக்கும் என்றால், அதனை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தான், எமக்குத் தெரிந்த தமிழ் தேசியவாதிகள் யாரும் அமெரிக்காவை எதிர்ப்பதில்லை. அதே நிலைமை தான் காஷ்மீரிலும் காணப்படுகின்றது. பாகிஸ்தான், அமெரிக்காவின் உதவியை பெறுவதைப் போல, நாளை காஷ்மீர் சுதந்திர நாடான பிறகும், அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இந்தியா என்ற பலமான நாட்டை எதிர்த்து நிற்பதற்கு, அமெரிக்க ஆதரவு அவசியம் என்று நினைக்கிறார்கள். அதுவே காஷ்மீர் தேசியவாதிகளின் அரசியல் நிலைப்பாடு.// (Kalaiyarasan Kalai, May 24)
"JKLF க்கும், CIA க்கும் தொடர்பிருக்கும் விடயம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது" என்பதை, அவதூறை எழுதியவரே ஒப்புக் கொள்கிறார். ஆனால், "ஒருவரின் தர்க்கத் திறமை" என்ற, பகிரப்பட்ட தகவலுடன் எந்தவித தொடர்புமற்ற சங்கதியை கொண்டு வந்து, நான் எழுதியது உண்மை இல்லை என்று நிரூபிக்க முனைகிறார். (இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதுவது தான் அவரது தர்க்கத் திறமை.) அதாவது, அவர் ஒருக்காலும் அறிந்திராத, புதிரான விடயத்தை, அவரது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால், அதிலே தோல்வியடைந்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், "வல்லவன் உதயராஜ்" என்ற நண்பரின் புரிந்து கொள்ளும் தன்மை எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதை, அவரே குட்டிக் கதை ஒன்றின் மூலம் தெளிவு படுத்தி விடுகிறார். அந்த நண்பர் எனக்காக எழுதிய குட்டிக் கதை, முரண்நகையாக அவரது அறியாமையை படம்பிடித்துக் காட்ட உதவியுள்ளது:
  • //ஒருநாள் பார்வையற்ற‌ வழிப்போக்கன் ஒருவன் ஒரு கிராமத்தின் வழியாக சென்றுக் கொண்டிருந்தான், தொடர்ச்சியாக நடந்து களைப்படைந்திருந்த அவன், கொஞ்சம் இளைப்பாறலாம் என்று ஒரு வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்தான், அமைதியாக அமர்ந்திருந்த போது தான், வீட்டின் உள்ளிருந்து அழுகைச் சத்தம் வருவதை அவன் கவனித்தான். அப்போது திண்ணையில் அருகில் இருந்தவரிடம் வீட்டுக்குள் என்ன அழுகைச் சத்தம் என்று வினவினான்.அருகிலிருந்தவன், இந்த‌ வீட்டில் குழந்தை இறந்து விட்டது, அதனால் அக்குழந்தையின் தாய் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தான்."குழந்தை இறந்து விட்டதா? எப்படி இறந்தது" என்றான் பார்வையற்றவன். "அந்த பிள்ளையின் அம்மா பால் கொடுத்தாள், அப்போது இறந்து விட்டது" என்றான் இன்னொருவன். "பால் என்றால் எப்படியிருக்கும்" என்று கேட்டான் பார்வையற்றவன். எப்படி சொல்வது என்று யோசித்து "வெள்ளையாகயிருக்கும்" பதிலளித்தான் இன்னொருவன். "வெள்ளை என்றால் எப்படியிருக்கும்?" மீண்டும் கேட்டான் பார்வையற்றவன். மறுபடியும் நன்றாக யோசித்து "வெள்ளை என்றால் கொக்கு போல இருக்கும்" என்றான் இன்னொருவன். "கொக்கு என்றால் எப்படி இருக்கும்" என்று கேட்டான் குருடன். இப்போது கடுப்பாகிவிட்டது இன்னொருவனுக்கு, இருந்தாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு இப்படியிருக்கும் என்று கையை கொக்குபோல வளைத்துக் காண்பித்தான்.அதை தொட்டுப் பார்த்துவிட்டு அந்த குருடன் சொன்னானாம், "ஏன்யா இப்படியொரு வஸ்துவை குழந்தை வாய்க்குள் திணித்தால் குழந்தை இறக்காமல் என்ன செய்யுமாம்?"//

"வல்லவன் உதயராஜ்" என்ற நண்பரின் நிலைத் தகவலை வாசித்த நேரம், அவரது பிரச்சினை வேறு என்பது புரிந்தது. அதாவது, சிஐஏ க்கும் JKLF க்கும் இடையில் தொடர்பிருப்பது அவருக்கு நெருடலாகப் படவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பகிரங்கமாக ஆதரிக்கும் தமிழினவாதிகளுக்கு அது இனிப்பான செய்தி தான். ஆனால், அவரது கண்ணில் முள்ளாக துருத்திக் கொண்டிருந்த வேறொரு தகவலுக்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறார். இது தான் அந்தத் தகவல்:

  • //ஏனெனில் இவரேதான் சில நாட்களுக்கு முன்பு சிங்கள பெளத்த வெறியர்களான 'பெளத்த பல சேனா'வோடு சீமானுக்கு தொடர்பிருக்கிறது என்று சொல்லி அதனை தனது தருக்க திறமையில் வாயிலாக நிறுவியிருந்தார், அதாவது சிங்கள இனவெறியர்கள் 'பெளத்த பல சேனா' மராட்டியத்தின் 'சிவசேனா'வோடு தொடர்பில் இருக்கிறது, சீமான் சிவசேனாவோடு 'நெருங்கிய' தொடர்பில் இருக்கிறார், எனவே பெளத்த பல சேனாவுக்கு சீமானுக்கும் தொடர்பு இருக்கிறது, என்று எழுதியிருந்தார்.// (Vallavan Udayaraj, May  21)

இந்த தகவல் ஒரு திரிபு படுத்தல் என்பதை, முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். நான் முகநூலில் பகிர்ந்து கொண்ட பத்திரிகைச் செய்திகளை தான் அவர் குறிப்பிடுகின்றார். "இந்தியாவில் சிவ சேனா, நரேந்திர மோடி நடைமுறைப் படுத்திய கிராமிய அபிவிருத்திக் குழு போன்ற கட்டமைப்பை, இலங்கையில் உருவாக்கப் போவதாக பொதுபல சேனா ஒரு தடவை அறிவித்திருந்தது." இது ஒரு பத்திரிகைச் செய்தி. உண்மையில், வேறு ஒரு பத்திரிகைச் செய்தி, நண்பரை அதிகளவில் பதற்றமடைய வைத்துள்ளது. ஆனால், அதனை தனது வசதிக்கேற்ப திரிபுபடுத்தி, பதற்றத்தில் முற்றிலும் தவறான தகவலாக எழுதி உள்ளார். 

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் வலதுகரமாக திகழும் இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச, சிவ சேனாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக, பொதுபல சேனா செயலதிபர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த தகவலை நான் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அந்த செய்தி இது தான்:

  • //The Bodu Bala Sena (BBS) today claimed that Minister Wimal Weerawansa may have links with Shiva Sena in India. BBS general secretary the venerable Galagoda Aththe Gnanasara thero said that the Minister’s wife is working with a Buddhist monk in Padukka who is funded by the Shiva Sena.// (http://colombogazette.com/2013/05/13/bbs-suspects-wimal-shiv-sena-links/)

அந்த தகவலை பகிர்ந்து கொண்டதுடன் நில்லாது, சீமானுக்கும் சிவ சேனாவுக்கும் இடையிலான தொடர்பையும் நினைவுபடுத்தி இருந்தேன். என் மீது அவதூறு செய்யும் அவசரத்தில், "வல்லவன் உதயராஜ்" என்ற நண்பர், இவ்விரண்டு தகவல்களையும் மறுத்துரைக்க மறந்து விட்டார். அதுவே, அவர் ஆதரிக்கும் இனவாதிகளின் சுயரூபத்தை மீண்டும் உறுதிப் படுத்த உதவியுள்ளது.  ஏற்கனவே, அவருக்கு பதிலளிக்கும் வகையில், முகநூலில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தேன்:


  • //சிவ சேனாவுக்கும், இலங்கையில் சிங்கள இனவாத அமைச்சரான விமல் வீரவன்சவுக்கும் தொடர்பிருக்கும் தகவலை நான் வெளியிட்ட பின்னர், பதற்றமடைந்துள்ள "நாம் தமிழர் ஆதரவாளர்கள்", சிவசேனாவுக்கும் சீமானுக்கும் இடையிலான தொடர்பை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். மும்பையில் 13/02/2012 அன்று, சீமான் சிவ சேனாவின் தேர்தல் பிரச்சார மேடையில் தோன்றினார். தாராவியில் உள்ள 178 வார்டில், பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார். ஒரு காலத்தில் தமிழர்களை மும்பையிலிருந்து துரத்த வேண்டுமென இயக்கம் நடத்திய, சிவ சேனா இயக்கத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன் என, வெளிப்படையாக தமிழர் என்கிற பெயரில் இயக்கம் நடத்தும் சீமான் சொல்வதை என்னென்பது? சீமான் இலங்கை சென்று, சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இனம் இனத்தோடு தானே சேரும்?// (Kalaiyarasan Kalai, May 22)

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. இதற்கு எம் கண் முன்னாலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. சிங்கள இராணுவத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட புலிகளின் தலைவர்களான, கருணா, பிள்ளையான், கேபி, தயா மாஸ்டர், தமிழினி என்று ஒரு பெரிய பட்டாளமே, இன்று மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று, பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது சொல்லியிருந்தால், அது அன்று காமெடியாக தெரிந்திருக்கும். 






இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

Friday, May 24, 2013

சுவீடனின் வேலையில்லா திண்டாட்டம் : ஸ்டாக்ஹோல்ம் நகரம் எரிகின்றது!


சுவீடன், ஸ்டொக்ஹோம் நகரின் புறநகர்ப் பகுதியான ஹூஸ்பி (Husby) யில், ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய கலவரம், ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்க குடியிருப்புகள் நிறைந்த அந்த புறநகர்ப் பகுதி, தலைநகரின் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பெரும்பாலும் வெளிநாட்டுக் குடியேறிகளை கொண்டது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையினால் அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் வாழும் இடம். ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த இடத்தில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர்,போலீஸ்காரர்களின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்தார். "அந்த 69 வயது முதியவர், கத்தி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும், தற்பாதுகாப்புக்காக சுட்டதாகவும்..." போலிஸ் கூறுகின்றது. (Man skjuten till döds av polis i Stockholm, http://www.expressen.se/nyheter/man-skjuten-till-dods-av-polis-i-stockholm/)


பொலிஸ் அறிக்கையில் பல உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், ஆத்திரமுற்ற இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலிஸ் படையை எதிர்த்து கற்களை வீசினார்கள். வணிக நிலையங்கள், வாகனங்கள் எரித்து நாசமாக்கப் பட்டன. பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் வேலையிழந்து, வறுமையில் வாடுகின்றனர். இதனால், பல ஐரோப்பிய நகரங்கள் எந்த நேரமும் கலவரம் வெடிக்கக் கூடிய நேர வெடிகுண்டுகளாக காணப்படுகின்றன.


சுவீடிஷ் பொலிசின் இனவெறிப் பேச்சுக்களே, ஞாயிறு இரவு ஸ்டொக்ஹோம் நகரில் இடம் பெற்ற கலவரத்திற்கு காரணம் என்று தெரிய வருகின்றது. "குரங்குகள், நீக்ரோக்கள்" போன்ற இனவெறி வசைச் சொற்களை, அங்கு கடமையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளனர். சுவீடிஷ் போலிஸ் அடிக்கடி இவ்வாறு நடந்து கொள்வதாகவும், ஞாயிற்றுக்கிழமை அதன் எதிரொலியாக வன்முறை வெடித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. முகமூடி அணிந்த இளைஞர்களால், குறைந்தது 100 கார்கள் எரிக்கப் பட்டுள்ளன.

பெரும்பாலும் சோமாலிய இளைஞர்களே கலவரத்தில் ஈடுபட்டதால், இதனை "முஸ்லிம் இளைஞர்களின் வெறியாட்டம்" என்ற அர்த்தத்தில், வலதுசாரி சுவீடிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சுவீடிஷ் இனவெறியர்களும் சோமாலியர், முஸ்லிம்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கலவரம் இடம்பெற்ற ஹூஸ்பி (Husby) என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் 80 சதவீதமானோர் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகள் ஆவர். அண்மைக்கால பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினை, வாய்ப்புகள் மறுக்கப்படும் வெளிநாட்டவர்கள், இது போன்ற சமூகப் பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு, இனவாத திரிபுபடுத்தல்கள் உதவுகின்றன. "சுவீடன் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் இனவாதம் அறவே இல்லை" என்று பலர் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஏதோ ஒரு நிறுவனம் நடத்திய புள்ளிவிபர ஆய்வு ஒன்றும் அவ்வாறு தெரிவித்திருந்தது.

ஹூஸ்பி புறநகர் பகுதியில் தொடங்கிய கலவரம், தற்போது ஸ்டொக்ஹோல்ம் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகின்றது. வீதியோரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் கார்கள் இரவோடிரவாக கொளுத்தப் படுகின்றன. பெரும்பாலும் 15 முதல் 19 வயதான இளைஞர்களே கலவரத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரம், 12 அல்லது 13 வயது சிறுவர்களும் காணப்படுகின்றனர். நேற்றும் பொலிஸ் நான்கு பேரை கைது செய்தது. கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பிட்டு எழுதுவதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும் வலதுசாரி ஊடகங்கள், "சோமாலியர்கள், முஸ்லிம்கள்" என்று குறிப்பிட்டு எழுதி, "பன்முகக் கலாச்சார சமூகத்தின் எதிர்விளைவு" என்று, மூன்றாமுலக நாடுகளின் வந்தேறுகுடிகளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகின்றன. ஹூஸ்பி புறநகர் பகுதியில், ஒரு 69 வயது முதியவரை போலீஸ்காரர்கள் சுட்டுக் கொன்றது தான், கலவரத்திற்கு மூல காரணம். போலிஸ் வன்முறைக்கு பலியான வயோதிப நபர், "ஒரு ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்" என்று போலிஸ் அறிவித்த தகவலை, இந்த வலதுசாரி ஊடகங்கள் மூடி மறைப்பது குறிப்பிடத் தக்கது.

வேலையில்லாதோர் எண்ணிக்கை, ஐரோப்பிய நாடுகளின் பூர்வீக வெள்ளையின மக்களிடையே குறைவாகவும், வந்தேறுகுடி சமூகங்களில் அதிகமாகவும் உள்ளது. அதற்கு அவர்களின் சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் என்பது, பாதிக்கப்பட்ட மக்களை குறைகூறும் அயோக்கியத்தனம் ஆகும். வந்தேறுகுடி சமூகங்களில், அதிகமாக படித்து, பட்டம் பெற்றவர்களுக்கு கூட வேலை இலகுவில் கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழிக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு சரளமாக அவர்களது மொழியை பேசினாலும், மொழிப் புலமை காணாது என்று கூறுவார்கள். உங்கள் நாட்டில் இருந்து கொண்டு சென்ற சான்றிதல்களை காட்டினால், அவற்றை தகுதி போதாது என்று கூறி புறக்கணிப்பார்கள். பொதுவாகவே, தொழில் வாய்ப்புகள் குறைவாகவும், வேலை தேடுவோர் அதிகமாகவும் இருக்கும் காலங்களில், தங்களது இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பார்கள். இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

நீங்கள் அனுப்பும் CV யில் இருக்கும் பெயர், பிறந்த இடம் போன்ற விபரங்களை பார்த்து விட்டே, உங்களை நேர்முகப் பரீட்சைக்கு கூப்பிட மாட்டார்கள். நீங்கள் அந்த நாட்டை சேர்ந்த பூர்வீக பிரஜை என்றால், வாய்ப்பு அதிகமாக இருக்கும். வேலையில்லா பிரச்சினை ஏற்படும் காலங்களில், வந்தேறுகுடிகள் தான் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். அதனால், அவர்கள் அதிகமாக அரசின் உதவிப் பணத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அது கிடைக்காவிட்டால், திருடியோ, பிச்சை எடுத்தோ தான் வாழ வேண்டி இருக்கும். அது இந்த ஐரோப்பிய நாடுகளின் இமேஜை பாதித்து விடும். அதற்குப் பிறகு, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளிக்கும், வளர்ச்சி அடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளிக்கும் இடையில் வித்தியாசம் இல்லாது போய்விடும்.

அனேகமாக, எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வந்தேறு குடிகளின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை. அதனால், அவர்களில் எத்தனை இலட்சம் பேர் அரச உதவிப் பணத்தில் வாழ்ந்தாலும், அதே மாதிரி வாழும் பூர்வீக வெள்ளையரின் எண்ணிக்கைக்கு ஈடாகாது. அதாவது, அரச உதவிப்பணத்தில் வாழும் பூர்வீக வெள்ளையின மக்களின் எண்ணிக்கை, வந்தேறுகுடிகளை விட பல மடங்கு அதிகம். இதனை பல புள்ளிவிபரங்கள் உறுதிப் படுத்துகின்றன.

Tuesday, May 14, 2013

இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : நான்கு)



உலகில் சிறந்த பாக்தாத் நாகரிகம்

உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. எமது இன்றைய பாட நூல்களில் உள்ளது போல, பல கண்டுபிடிப்புகளுக்கு ஐரோப்பியர் உரிமை கோரும் அயோக்கியத்தனம் சிலுவைப்போர் காலத்தில் தான் ஆரம்பமாகியது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாக்தாத் நாகரீகம். ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ துறையில் அபார வளர்ச்சியடைந்த பாக்தாத்தில், ஏராளமான நவீன வைத்தியர்கள் இருந்தனர். மயக்கமருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இருந்தனர். நகர மத்தியில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான மருத்துவமனை அனைவருக்கும் இலவச வைத்திய சேவையை வழங்கியது.

அன்றைய உலகில், பாக்தாத் மட்டுமே வங்கி அமைப்பை கொண்டிருந்தது. பாக்தாத் வங்கியின் கிளை ஒன்று சீனாவிலும் திறக்கப்பட்டிருந்தது. இதை தவிர, நகரம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்கள், குடி நீர் விநியோகம், தபால் சேவை என்பன சிறப்பாக செயற்பட்டன. பாக்தாத்தின் வடக்கே உள்ள "ஹார்ன்" எனுமிடத்தில் ஒரு நவீன விஞ்ஞான பீடத்தைக் கொண்ட பல்கலைக்கழகம் இருந்தது. 

Albatinius என்ற விஞ்ஞானி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டிருந்தார். Jabir bin Hayyan என்ற இன்னொரு விஞ்ஞானி, அணுவைப் பிளந்து மாபெரும் சக்தியை உருவாக்கலாம் என கண்டுபிடித்திருந்தார்.  "அந்த சக்தியின் மூலம் பாக்தாத் நகரை அழிக்கலாம்,"    என்று அவர் எழுதி வைத்துள்ளார். அனேகமாக, அணுகுண்டை கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானி அவராகத் தான் இருப்பார். 
(இந்த தகவல்கள் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். அவர்கள்  The House of Wisdom என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.)

இத்தனை சிறப்பு மிக்க பாக்தாத் நாகரீகம் அழிந்து போன காரணம் என்ன? சில ஆயிரம் சிலுவைப் படைவீரர்களை ஒரு சாம்ராஜ்யத்தால் எதிர்க்க முடியாமல் போனதெப்படி? ஐரோப்பாவில் இருந்து சிலுவைப்படைகள் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே பாக்தாத் சக்கரவர்த்தி அந்நியப்படைகளினால் ஆட்டுவிக்கப் படும் பொம்மையாக மாறியிருந்தார். மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், இராணுவ ஆதிக்கம் செலுத்தினர். அந்தப் பிராந்தியம் முழுவதும், அதாவது இன்றைய ஈரான் முதல் துருக்கி வரை அவர்களின் ஆட்சி தான்.

செல்ஜுக் துருக்கியர்கள் நிலங்களை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு, குறுநில மன்னர்களைப் போல (ஆனால் இறைமையுள்ள ஆட்சியாளர்களாக) ஆட்சி செய்தனர். ஒரு காலத்தில் சக்கரவர்த்தியின் மெய்ப்பாதுகாவல் படையினராக இருந்த மம்மலுக் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் பாக்தாத் இருந்தது. இவர்களைப் பற்றி சுவையான கதை ஒன்றுண்டு. மம்மலுக் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் துருக்கி மன்னர்களின் குடும்பங்களுக்குள் பதவிச் சண்டை காரணமாக வாரிசுகள் கொல்லப்படுவது வழமை. அதனால் மம்மலுக் அடிமைகள் இளம் பிள்ளைகளை பாதுகாப்பார்கள். சில நேரம் அந்தப் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்கும் போது, வளர்ப்பு தந்தை கையில் அதிகாரம் போய்ச் சேரும்.


துருக்கி யுத்தத்தில் சிலுவைப் படைகளின் வெற்றி

அன்று கிரேக்க-துருக்கிப் பகுதிகளுக்கு இடையிலான யுத்தம், மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரச்சினையாக தோன்றும். ஆனால் நிலைமை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. (கிரேக்க) கிறிஸ்தவ தலைநகரில் இருந்து சிறிது தூரத்திலேயே இருந்த நிசெயா என்ற நாடு, இஸ்லாமிய துருக்கி சுல்த்தான் கிளிஜ் அர்ஸ்லான் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். கிரேக்க சக்கரவர்த்தி அலேக்சியுஸ், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களை காரணமாக காட்டியே நிசெயாவுக்கு உரிமை கோரிக் கொண்டிருந்தார். 

எதிரும் புதிருமான கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருவரும்,  வெளியே பகைவர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் உள்ளுக்குள், அவர்களுக்கிடையில் சிறந்த ராஜதந்திர உறவு நிலவியது. நிசெயாவை முற்றுகையிட்ட, ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படைகளுக்கு, அந்தப் பிராந்தியத்தின் அரசியல் நிலவரம்  தெரிந்திருக்க நியாயமில்லை. எதிர்பாராத விதமாக, முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட இஸ்லாமிய சுல்தானை காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ சக்கரவர்த்தி முன்வந்தார். கிளிஜ் அர்ஸ்லான் குடும்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். நிசெயா ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

சிலுவைப் படையினரிடம் இருந்து மயிரிழையில் தப்பிய கிளிஜ் அர்ஸ்லான், துருக்கியின் மையப்பகுதியில் பிற துருக்கி எமிர்களின் படைகளை துணைக்கு சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யுத்தத்தில் சிலுவைப்படைகளை வெல்ல முடியவில்லை. தூரத்தில் கிளம்பிய புழுதிப் படலத்தை வைத்தே, மேலதிக சிலுவைப் படைகள் வருவதை தெரிந்து கொண்ட துருக்கிப் படைகள் பின்வாங்கி விட்டன. முதன் முதலாக துருக்கி மண்ணில் காலடி எடுத்து வைத்த சிலுவைப் படைகள் ஒழுக்கமான இராணுவமாக இருக்கவில்லை. 

கொள்ளைக்காரர்களும், யாத்ரீகர்களும் நிறைந்திருந்த காடையர் கூட்டத்தை, அன்று துருக்கிப் படைகள் இலகுவாக விரட்ட முடிந்தது. ஆனால் தற்போது போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் வந்திருந்தார்கள். அத்தோடு மதவெறியும் அவர்களை இயக்கியது. "இது ஆண்டவன் கட்டளை" என்ற கோஷத்துடன் கிறிஸ்தவர்கள் போரிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்று முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு தரப்புமே, கடவுளின் பெயரால் ஒருவரை மற்றவர் கொன்றார்கள்.


(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, May 10, 2013

கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்


[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] 
(பாகம் : மூன்று)

அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர்

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம் இருந்து தான் பிரான்ஸ் என்ற சொல் வந்தது.) முதலாவது சிலுவைப்போரில் நிறைய பிராங் இன வீரர்கள் காணப்பட்டனர். அதனால் மத்திய கிழக்கில், சிலுவைப் போர்வீரர்களை "பிராங்கியர்கள்" என்றும் அழைத்தனர். 

பாப்பரசர் உர்பானுசின் கோரிக்கைக்கு, பலர் செவி சாய்த்தனர்.  அவர் சென்றவிடமெல்லாம், மக்கள் கூட்டம் வரிசையில் நின்று சிலுவைப்படைகளில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லையாதலால், குடிமக்களுக்கும் மன்னனைத் தெரியாது. (இன்றிருப்பதைப் போல தொலைக்காட்சி ஊடகம் அன்றிருக்கவில்லை.)  அப்படியான காலத்தில் ஒரு மதத்தலைவர், அதுவும் "ஆண்டவரின் பூலோகப் பிரதிநிதி" பாப்பரசரே நேரில் வருகிறார் என்றால், யார் தான் போக மாட்டார்கள்? எது எப்படியோ, பாப்பரசருக்கு சிலுவைப்படைக்கு ஆள் திரட்டுவதில் சிரமம் இருக்கவில்லை.

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டும் பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய நூதனசாலைகளில் காணலாம். "முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை." என்ற சாதாரண அடிப்படைத் தகவலை, ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் /மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. (அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது.) அவர்களை சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள்.

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். (அது பற்றிய தகவல்கள் பின்னால் வரும்) அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் மதச்சார்பின்மை தத்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, இஸ்லாமிய உலகில் நாஸ்திக அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சிரியாவை சேர்ந்த நாஸ்திக புலவர் அபூ அல் மாரி, சிலுவைப்படைகள் ஜெருசலேமை கைப்பற்றுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் காலமாகி இருந்தார்.

சிலுவைப்போருக்கு புறப்பட்ட வீரர்கள், ஆரம்பத்திலேயே தமது சுயரூபத்தைக் காட்டி விட்டனர்.முஸ்லிம்களை கொள்வதற்கு முன்னர் யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்தார்கள். ஜெர்மனியில் பல நகரங்களில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். பிற்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய, முஸ்லிம் நாடுகளில் நடத்தவிருக்கும் படுகொலைகளுக்கு முன்னோடியாக, யூதர்களை கொன்று பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும். 

ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யூத இனப்படுகொலைக்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 
1. யூதர்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள் என்ற மதவெறி. 
2. யூத வணிகர்கள் வசதியாக வாழ்ந்தனர். அவர்களைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்து சிலுவைப்போருக்கு நிதி திரட்டினார்கள். சில நகரங்களில் இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், யூத இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை. இருப்பினும் வெறி கொண்ட கூட்டம் அவர்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது நரவேட்டையை தொடர்ந்தது. 
(Chazan, Robert (1997). In the Year 1096: The First Crusade and the Jews. Jewish Publication Society)

சிலுவைப்படைகள் புறப்படுகின்றன

சிலுவைப்போருக்கு சென்ற படையினருடன், கூடவே அவர்களது குடும்பங்களும் சென்றன. தமது மதக் கடமையை நிறைவேற்ற விரும்பிய, கணிசமான அளவு யாத்ரீகர்களும் (இயேசு பிறந்த இடத்தை நோக்கி அல்லவா போகிறார்கள்?) சிலுவைப் படைகளுடன் சென்றனர். இதனால் பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு உணவு தேடுவது சிரமமாக இருந்தது. (இன்றைய செர்பிய தலைநகர்) பெல்கிரேட் நகரை அடைந்த பொழுது, அங்கிருந்த (கிறிஸ்தவ) ஆளுனருக்கு, பெரும்படை ஒன்று வரும் விடயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர், அவர்கள் கேட்ட உணவும், உறைவிடமும் தர மறுத்து விட்டார். அதனால் என்ன? இந்தப் பிரச்சினைக்கு சிலுவைப்படைகளிடம் தீர்வு இல்லையா? நகரம் முழுவதையும் சூறையாடி, வீடுகளுக்கும் நெருப்பு வைத்து விட்டுச் சென்றார்கள். கவனிக்கவும்:  பெல்கிரேட் நகரில் வசித்த குடிமக்களும் கிறிஸ்தவர்கள் தான்.

சிலுவைப் படைகள் கொன்ஸ்டாண்டின் (இன்று: இஸ்தான்புல்) நகரை வந்தடைந்த நேரம், இப்போது தான் வாழ்வில் முதல் தடவையாக, ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கொன்ஸ்டாண்டின் நகரின் பிரமாண்டம் அவர்களை மலைக்க வைத்தது. முழு ஐரோப்பிய கண்டத்திலும், கொன்ஸ்டாண்டின் இரண்டரை லட்சம் மக்கட்தொகையை கொண்ட பெரிய நகரமாக விளங்கியது. அதனோடு ஒப்பிடும் பொழுது, ரோம் முப்பதாயிரம் மக்கட் தொகையையும், லண்டன் பத்தாயிரம் மக்கட் தொகையையும் மக்களையும் கொண்ட, மிகச் சிறிய நகரங்கள். 

சிலுவைப்படையினர் வரும் வழியில், பெல்கிரேட் நகரில் நடத்திய அட்டூழியங்கள், கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியின் காதுகளை எட்டியிருக்கலாம். அடக்கமாக நடந்து கொள்ளும் படி அறிவுறுத்தி விட்டு, சிலுவைப் போர்வீரர்களை பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டு விட்டார். பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் இருந்த நிலப்பகுதி இன்று துருக்கி என அழைக்கப்படுகின்றது. அன்று அந்தப் பகுதி, இஸ்லாமிய-துருக்கி சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தது. மாலிக் ஷா (மாலிக் (அரபி), ஷா (பார்சி) இரண்டின் அர்த்தமும் மன்னன்.) என்று அழைத்துக் கொண்ட சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம், துருக்கி முதல் வட இந்தியா வரை பரவியிருந்தது.

இன்றைய துருக்கியின் பகுதிகளை, மாலிக் ஷாவின் படைகள் கைப்பற்றிய ஆட்சி செய்த காலத்தில், பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், அக்கரையில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியின் பாதுகாப்பைக் கோரவில்லை. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமிய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறு தொகையை வரியாக செலுத்தி விட்டு மதச் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், கிரேக்க கிறிஸ்தவ சக்கரவர்த்திக்கு விசுவாசம் காட்டாமைக்கு,  முக்கிய காரணம் ஒன்றுண்டு.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபன மயப் படுத்தப் பட்ட ஆரம்ப காலங்களில், அது  பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது. இன்று நமக்கு எல்லாம் தெரிந்த விவிலிய நூலை ஏற்றுக்கொள்ளாத, தமக்கென சொந்தமாக ஒரு விவிலிய நூலை வைத்திருந்த மதப்பிரிவுகள் இருந்துள்ளன. "ஜாகொபியர்கள்", "நொஸ்தாரியர்கள்" இவ்வாறான பல பிரிவுகள் துருக்கியில் வாழ்ந்தன. அவர்கள் மீது கிரேக்க கிறிஸ்தவர்கள் வன்முறை பிரயோகித்து அடக்கப்பார்த்தார்கள். சக கிறிஸ்தவர்களாலே வேட்டையாடப்பட்டு அழிந்து  கொண்டிருந்த கிறிஸ்தவப் பிரிவுகள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்ததில் வியப்பில்லை. ஆகவே, மதவெறியோடு பாய்ந்து வந்துள்ள சிலுவைப்படைகளுக்கும் அவர்களது ஆதரவு கிட்டப்போவதில்லை.

இன்றைய இஸ்தான்புள் நகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ளது "நிசெயா" (Nicea). கிளிஜ் அர்ஸ்லன் என்ற துருக்கிய குறுநில மன்னன் ஒருவனால் ஆளப்பட்டு வந்தது. சிலுவைப்படைகளின் முதலாவது தாக்குதல் அந்த இடத்தில் இடம்பெற்றது. செரிகொர்டன் (Xerigordon) என்ற கோட்டை, சிலுவைப்படைகளால் கைப்பற்றப் பட்ட போதிலும் சில நாட்களே அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

செரிகொர்டன் கோட்டைக்கு வரும் தண்ணீர், வெளியே இருந்து தான் கிடைக்கிறது. அந்த நீர்வழியை துருக்கியர்கள் தடுத்து விட்டனர். சிலுவைப் படைவீரர்கள் தண்ணீர் இன்றி விலங்குகளின் குருதியையும், சிறுநீரையும் குடித்து உயிர்பிழைக்க முயன்றார்கள். இறுதியில் இஸ்லாமியப் படைகளிடம் சரணடைந்தார்கள். மன்னன் அவர்கள் முன் இரண்டு தெரிவுகளை வைத்தான்.  முஸ்லிமாக மதம் மாறி உயிர் பிழைப்பது, அல்லது வீர மரணம். பெருந்தொகை சிலுவைப் படைவீரர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். கொள்கையில் உறுதியாக நின்ற மற்றவர்கள் வீர மரணத்தை தழுவினார்கள். 
(August. C. Krey, The First Crusade: The Accounts of Eyewitnesses and Participants,)

துருக்கியில் சிலுவைப்படையினருக்கு கிடைத்த அவமானகரமான தோல்வி, பாப்பரசரின் காதுகளை எட்டியது. பாப்பரசர் வேறு வழியின்றி தென் இத்தாலியை ஆண்ட மன்னரின் உதவியை நாடினார். ராபர்ட், தான்கிரெட் என்ற அரச குடும்ப வீரர்கள், சிலுவைப் படைகளை தலைமை தாங்கி வழி நடத்த முன்வந்தார்கள். இவர்கள் நோர்வீஜிய வம்சாவளியினர். அப்போது தென் இத்தாலியில் உள்ள சிசிலி தீவை நோர்மன்கள் எனப்படும் நோர்வீஜிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். ஒரு காலத்தில் வட ஐரோப்பியாவில் இருந்து படையெடுத்த "காட்டுமிராண்டி வைகிங்" பரம்பரையினர். தென் ஐரோப்பாவில் குடியேறியதும் கிறிஸ்தவர்களாகி நாகரீகமடைந்த மனிதர்களாகி விட்டனர்.

சிசிலியை சேர்ந்த நோர்மன் வீரர்கள், சிலுவைப் படைகளுக்கு தலைமை தாங்க முன்வந்த பொழுது வெற்றி உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு காரணம் அவர்களிடம், பிற ஐரோப்பியரைப் போல, முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் இருக்கவில்லை. இன்னும் கூறப்போனால், சிசிலியில் அந்தக் காலத்தில் மசூதிகள் இருந்தன, இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள். சிசிலியை, நோர்மன்கள் அரேபியரிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிறு வயதிலேயே அரேபியரின், முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்த தான்கிரெட், அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தான்கிரெட் தலைமை தாங்கிய சிலுவைப் படைகள், அனைத்து தடைகளையும் தாண்டி ஜெருசலேம் வரை சென்றன. அங்கே 200 ஆண்டு காலம் நீடித்த கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை நிறுவின.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, May 07, 2013

பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்


பெர்லின் சுவர் பற்றி அனைவருக்கும் தெரிந்த கதை ஒன்றுண்டு. "கிழக்கு ஜெர்மனியில், கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து, சுதந்திர மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடிக் கொண்டிருந்த அகதிகளை தடுப்பதற்காக, பெர்லின் மதில் கட்டப் பட்டது. அதனால் அவமானத்தின் மதில் சுவர் என்று அழைக்கப் பட்டது...."

நாம் அன்றாடம் தகவல்களைப் பெற நம்பி இருக்கும் ஊடகங்கள் மட்டுமல்ல, பாட நூல்கள், வரலாற்று நூல்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நம்பிக்கையாளர்களால் எழுதப் படுகின்றன. அதனால், எமக்கு எப்போதும் ஒரு பக்க தகவல்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் பாதி உண்மைகள் மட்டுமே. மீதி உண்மைகள் எங்கேயோ உறங்கிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான், கம்யூனிச நாடுகளில் தஞ்சம் கோரிய மேலைநாட்டு அகதிகள். அப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு, அரசியல் பிரச்சார சாதனங்களால் நாங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளோம்.

Wo ist Lieutenant Adkins? (லெப்டினன்ட் அட்கின்ஸ்  எங்கே?) என்ற நூல் ஜெர்மனியில் வெளியாகி உள்ளது. The Atlantic Times என்ற ஜெர்மன் பத்திரிகை ஆசிரியர் Peter H. Koef  அந்த நூலை எழுதி இருக்கிறார். (நூல் ஜெர்மன் மொழியில் மட்டுமே கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக தெரியவில்லை. இந்த தளத்தில் ஆங்கில மொழியில் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது:Deserting the wrong way: Why soldiers went East)  இரண்டு வருடங்களாக, முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் உள்துறை அமைச்சின் ஆவணங்களை ஆராய்ந்து, அந்த நூலை எழுதியுள்ளார். சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத் துறையான Stasi, தனது நாட்டில் வசித்த மேலைத்தேய நாட்டவர்களின் விபரங்களை சேகரித்து வைத்திருந்தது. அது பற்றிய மேலதிக விபரங்களை தேடிய பொழுது, சுமார் 200 அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைவீரர்களும், தஞ்சம் கோரியிருந்த விடயம் தெரிய வந்துள்ளது.

1961 ம் ஆண்டு தான், பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதற்கு முன்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விசா எடுத்து, கிழக்கு - மேற்கு பெர்லின் பகுதிகளுக்கு இடையில் சுலபமாக சென்று வர முடிந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்து, பெருமளவு மக்கள் மேற்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது உண்மை தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், மேற்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது குறித்து யாரும் பேசுவதில்லை. அந்த தகவல், சரித்திர நூல்கள், ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

அது மட்டுமல்ல, நேட்டோ படைகள் பல உளவாளிகளை, கிழக்கு ஜெர்மனிக்குள் அனுப்பி வைத்தன. அது குறித்தும் எல்லோரும் மௌனம் சாதிக்கின்றனர். அந்தக் காரணத்தை சொல்லித் தான், அதாவது "மேற்கத்திய ஊடுருவலாளர்களை, உளவாளிகளை வர விடாமல் தடுப்பதற்காக" பெர்லின் மதில் கட்டப் போவதாக, கிழக்கு ஜெர்மனி அன்று  அறிவித்தது. அவர்களின் பக்கத்தில், அதற்கு "பாசிச தடுப்புச் சுவர்" என்று பெயரிடப் பட்டது. மேற்கத்திய நேட்டோ படைகளில் இருந்து, கிழக்கு ஜெர்மனிக்குள் சென்றவர்கள் அனைவரும் உளவாளிகள் அல்லர். பல உண்மையான அரசியல் அகதிகளும் சென்றிருந்தனர். பெர்லின் மதில் கட்டப் படுவதற்கு முன்னர், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய, 200 மேற்கத்திய அரசியல் அகதிகள் பற்றித் தான், இந்த நூல் பேசுகின்றது.

12-1-1954 அன்று, William D. Adkins என்ற 23 வயதான அமெரிக்க இராணுவ வீரர், ஆஸ்திரியாவில் Amstetten நகரில் இருந்த சோவியத் படைமுகாமில் அகதித் தஞ்சம் கோரினார். தான் கம்யூனிசக் கொள்கைகளை நம்புவதாகவும், தனது ஜெர்மன் காதலியின் ஆலோசனையின் படி, சோவியத் யூனியன் சென்று வாழ விரும்புவதாக சொல்லி இருக்கிறார். சில நாட்கள் சோவியத் இராணுவ முகாமில் விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருந்தார். அப்போது அவர் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "நான் ஒரு தேசத் துரோகி அல்ல. எனது தாய்நாடான அமெரிக்கா, தவறான தலைவர்களால் ஆளப் படுகின்றது. சோவியத் பகுதிகளில் வாழும் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். நான் சோவியத் படைகளில் சேரும் காலம் ஒன்று உருவாகும். அன்று அமெரிக்காவை விடுதலை செய்யும் போரில் பங்குபற்றுவேன்."

அட்கின்ஸ் தன்னை சோவியத் யூனியனுக்கு அனுப்புமாறு விரும்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது விருப்பத்திற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை Dresden நகருக்கு கூட்டிச் சென்று, அங்கே Jack Forster என்ற பெயரில் போலி அடையாள அட்டை ஒன்றை செய்து கொடுத்தார்கள். Stasi க்காக வேலை செய்ய ஒத்துக் கொண்டதால் மாதாமாதம் 500 மார்க் சம்பளம் கொடுக்கப் பட்டது. அது அன்றைய கிழக்கு ஜெர்மனியில் சராசரி சம்பளத்தை விட சற்று அதிகமாகும். Jack Forster, மேற்கு ஜெர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைவீரர்களை, இராணுவத்தை விட்டு தப்பியோடுமாறு ரேடியோ பிரச்சாரம் செய்வதற்கு உதவினார். Stasi யின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொண்டதால், சம்பளம் உயர்த்தப் பட்டது. கார்ல்மார்க்ஸ் ஸ்டாட் (தற்போது: Chemnitz) நகர பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பெயர், John  Reed  என்று மாறி இருந்தது.

1963 ம் ஆண்டு, அட்கின்ஸ் மாயமாக மறைந்து போனார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல் எதுவும், Stasi ஆவணங்களில் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டார். கடைசியாக, மேற்கு பெர்லின் நகர் பகுதியில், Jörg Brandi என்ற நண்பருடன் சேர்ந்திருக்க காணப் பட்டார். அதற்குப் பிறகு எந்த சுவடும் இல்லாமல் மறைந்து விட்டார்.  Jörg Brandi என்பவர், மேற்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்தவர். (அவர் மேற்குலக உளவாளியாக இருக்கலாம்.) கிழக்கு பெர்லின் சென்றிருந்த சமயம் அட்கின்சை சந்தித்து இருக்கிறார். இருவருமாக திட்டம் தீட்டி, மேற்கு ஜெர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒருவருடன் நட்புடன் பழகி இருக்கிறார்கள். ஒரு நாள், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, அவரது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு மேற்கு பெர்லினுக்கு பயணம் செய்திருக்கிறார். யாரும் அவரை சந்தேகப் படவில்லை.

ஒரு முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியரான Peter H. Koef , தனது நூலுக்கு  "லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்று தலைப்பிட்டதும் ஒரு காரணத்தோடு தான். ஏனெனில், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த அமெரிக்க அகதிகளுக்குள், அட்கின்ஸ் போன்ற கருங்காலிகளும் இருந்துள்ளனர். அந்த நூலில், பல அகதிகளின் கதைகள் சொல்லப் பட்டிருந்தாலும், அட்கின்ஸ் பற்றிய கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால், அவர் ஒரு அமெரிக்க உளவாளியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனை நூலாசிரியரே உறுதிப் படுத்துகின்றார். அட்கின்ஸ் யாருடைய காதலுக்காக சோவியத் யூனியன் செல்ல விரும்பினாரோ, அந்த ஜெர்மன் பெண்ணை பின்னர் கைவிட்டுள்ளார். அவருக்கு பிறந்த மகளையும் விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்கு ஓடியுள்ளார். இன்று ஜெர்மனி ஒன்றிணைந்த பின்னரும், பிரிந்த  தந்தையை  தேடும் மகளுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. "அட்கின்ஸ் ஒரு CIC  உளவாளி," என்று அவரை விவாகரத்து செய்த முன்னாள் மனைவி கூறுகின்றார்.

Counter Intelligence Corps (CIC) என்பது, ஐரோப்பாவில் புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதற்காக, அமெரிக்க படைகளினால் பயன்படுத்தப் பட்ட இரகசிய அமைப்பாகும். அவர்களில் பலர், கிழக்கு ஜெர்மனிக்குள்ளேயும் செயற்பட்டு வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரியிருந்த அமெரிக்கர்களை, தேடிக் கண்டுபிடித்து கண்காணிப்பது, முடிந்தால் கடத்திச் செல்வது, அல்லாவிட்டால் கொன்று விடுவது கூட, அவர்களுக்கு இடப்பட்ட பணியாகும். "தேசத் துரோகிகளை" கடத்துவதோ, கொலை செய்வதோ, மிக மிக அரிதாகவே நடந்தது. அதற்கு காரணம், இன்னொரு பக்கத்தால், Stasi உளவாளிகளும் மேற்கத்திய அகதிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.  அட்கின்ஸ் ஒரு அமெரிக்க CIC  உளவாளி என்பதற்கான வேறு ஆதாரங்கள் உள்ளனவா? 

அட்கின்ஸ் சோவியத் இராணுவ முகாமில் தங்கியிருந்த காலத்தில், உறவினருக்கு எழுதிய கடிதம் போலியாக இருக்கலாம். தன்னை விசாரித்த அதிகாரிகள், அந்தக் கடிதத்தை உடைத்து வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே, "கம்யூனிசத்தை புகழ்ந்தும், சோவியத் படையில் சேர விரும்புவதாகவும்..." எழுதி இருக்கலாம். அனேகமாக, அந்த உத்தி பெரிதும் பயன்பட்டிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, மேற்கு பெர்லினுக்கு தப்பிச் சென்ற பின்னர், அமெரிக்க அரசு வேறு ஒரு பெயரில் அடையாள அட்டை, கடவுச் சீட்டு செய்து கொடுத்திருக்கலாம். அதனால் தான், இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு "மாயமாக மறைந்து போனார்". மேலும், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடிய அகதிகள் மீது, "தேசத் துரோக வழக்கு" போடப் பட்டுள்ளது. அவர்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தால், நிச்சயமாக சிறையில் அடைக்கப் படுவார்கள். அட்கின்ஸ் மீது அப்படி எந்த தேசத் துரோக வழக்கும் வழக்கும் போடப்படவில்லை. அது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியதாகவோ, எதிரி நாட்டில் தஞ்சம் கோரியதாகவோ, எந்தத் தகவலும் அமெரிக்க ஆவணங்களில் காணக் கிடைக்கவில்லை.

மேற்கு ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய,  நூற்றுக் கணக்கான கறுப்பின படைவீரர்கள், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடி அரசியல் தஞ்சம் கோரி இருக்கிறார்கள். அந்தப் பிரிவினர், என்றென்றும் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அப்போது நடந்த கொரிய யுத்தத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில், யுத்தத்தை வெறுக்கும் படையினரும், அமெரிக்க  இராணுவத்தை விட்டு ஓடினார்கள். அறுபதுகளுக்குப் பிறகு, பல வருடங்கள் வீட்டைப் பிரிந்திருந்ததால், அல்லது "தேசத் துரோக வழக்கு" வாபஸ் பெறப் பட்டதால், பல அமெரிக்க அகதிகள் தாயகம் திரும்பிச் சென்றிருக்கின்றனர். ஆனால், இன்று வரையில், ஒரு கறுப்பின அமெரிக்கர் கூட அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்று வாழ விரும்பவில்லை. அவர்கள் நிரந்தரமாகவே கிழக்கு ஜெர்மனியில் தங்கி விட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஐம்பதுகளில், அறுபதுகளில் இருந்த அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை, இனப் பாகுபாடு மிகவும் மோசமாக இருந்தது. கறுப்பின மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் பிரஜைகளாக இருந்தாலும், அமெரிக்கப் படையில் சேவை செய்தாலும், எந்த உரிமையுமற்று வாழ்ந்தனர். இந்த ஒடுக்குமுறை காரணமாக, கறுப்பின மக்களுக்கு இயல்பாகவே கம்யூனிசத்தின் பால் ஈர்ப்பு இருந்தது. சோவியத் யூனியன் பற்றி நல்லவிதமான அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் கம்யூனிசத்தை பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் இனப்பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது. அவர்களது நிலையில் இருந்து பார்த்தால், அதுவே போதுமானது.

பல கறுப்பின அகதிகள் மத்தியில், (கம்யூனிச) கொள்கை குறித்து அதிக அக்கறையில்லா விட்டாலும், வெள்ளையின மங்கையர் பால் கொண்ட ஈர்ப்பும் அவர்களை கிழக்கு ஜெர்மனிக்கு செல்லத் தூண்டியது. அதாவது, அன்றைய அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபன், வெள்ளையின காதலி வைத்திருப்பதே ஒரு பெரும் போராட்டம். இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு போன்று, அந்த விடயம் அமெரிக்க சமூகத்தில் கொந்தளிப்பை உருவாக்கும். ஆனால், கிழக்கு ஜெர்மனியில் நிலைமை வேறு. அங்கே, ஜெர்மன் மகளிர், கறுப்பின அமெரிக்கர்களை பெரிதும் விரும்பினார்கள். சமூகத்திலும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள். அப்படியான ஒரு வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பனிப்போர் காலத்தில், முதலாளித்துவ நாடுகளும், சோஷலிச நாடுகளும் தமக்கு விருப்பமான அகதிகளை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான அகதிகள் ஒரு வகை. ஜெர்மனியில் நடந்தது போல, வேறு பல நாடுகளிலும் அகதிகள் புலம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரிய கிழக்கு ஐரோப்பிய அகதிகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரிய மேற்கத்திய நாட்டு அகதிகள் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. கிரேக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் முறியடிக்கப் பட்டதும், பல்லாயிரம் கம்யூனிஸ்ட் போராளிகள், தமது குடும்பங்களுடன், அருகில் இருந்த சோஷலிச நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அது ஒரு பெரிய யுத்தம் என்ற படியால், சரித்திர நூல்களில் பதியப் பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில், இது போன்று நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.

"லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்ற  என்ற நூல், விசேடமாக முன்னாள் அமெரிக்கப் படையினரை பற்றி மட்டுமே ஆராய்கின்றது. நேட்டோ படைகளை விட்டோடி, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய அகதிகள், சிலநேரம் சந்தேகத்துடன் பார்க்கப் பட்டாலும், பொதுவாக அவர்களின் சேவை கிழக்கு ஜெர்மனிக்கு பெரிதும் தேவைப் பட்டது. அரசு ஒழுங்கு படுத்தும் பொதுக் கூட்டங்களில், ஊர்வலங்களில், மேற்குலக அகதிகள் முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களை, மேற்கு நோக்கிய பிரச்சார ஊடகங்களில், முழுநேரச் செய்தியாளர்களாக ஈடுபடுத்த முடிந்தது. சராசரி ஜெர்மன் குடிமகனுக்கு கொடுப்பதை விட, அதிக ஊதியம் கொடுத்து சிறப்பாக கவனிக்கப் பட்டார்கள். அதனால், பல மேற்குலக அகதிகளுக்கு சோஷலிச ஜெர்மனி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. தாயகத்தை, உறவினர்களை பிரிந்திருக்கும் சோகம் மட்டுமே அவர்களை வாட்டியது.


மேலதிக தகவல்களுக்கு:

1. நூல் அறிமுகம் (ஆங்கில மொழிக் கட்டுரை) Deserting the wrong way: Why soldiers went East

2. ஜெர்மன் மொழி நூலை வாங்குவதற்குWo ist Lieutenant Adkins? Das Schicksal desertierter Nato-Soldaten in der DDR; http://www.amazon.de/Lieutenant-Adkins-Schicksal-desertierter-Nato-Soldaten/dp/3861537095

3. ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளில் இருந்து தப்பியோடி, கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய Victor Grossman, 1994 ம் ஆண்டு, அவர் மேலான வழக்கு வாபஸ் பெறப் பட்ட பின்னர் அமெரிக்காவுக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். 
Crossing the River: A Memoir of the American Left, the Cold War, and Life in East Germany; அந்த நூலை வாங்குவதற்கு: 
http://www.amazon.com/Crossing-River-Memoir-American-Germany/dp/1558493719/ref=la_B001K8SVQG_1_1?ie=UTF8&qid=1367875620&sr=1-1


***********************


சோஷலிச நாடுகளில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள் பற்றிய வேறு பதிவுகள்:

1. சோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி!
2. வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்