ஒரு காலத்தில் 5 பெரிய ஈழ விடுதலை இயக்கங்கள் ஈழத்தில் இயங்கின. இவற்றில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் மலையகத்திலும் இயங்கியது. மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை கறாராக பின்பற்றிய ஈரோஸ் உறுப்பினர்களின் அரசியல் அறிவு காரணமாக ஏனைய இயக்கங்களினாலும், பொது மக்களினாலும் எப்போதும் மதிக்கப் பட்டனர்.
1984 ம் ஆண்டு சென்னையில் EROS, EPRLF, TELO ஆகிய 3 இயக்கங்கள் ஒன்றிணைந்து ENLF என்ற கூட்டமைப்பாக இயங்குவதற்கு முடிவு செய்தனர். இதில் இணைய வருமாறு PLOTE, LTTE ஆகிய இயக்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்று அந்த இரு இயக்கங்களும் "பரம்பரைப் பகைமை" பாராட்டி வந்தன. அதனால் ஒன்று வந்தால் மற்றது வராது என்ற நிலைமை இருந்தது. நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் 1985 ம் ஆண்டு LTTE வந்து இணைந்து கொண்டது. அப்போது இயக்க தலைவர்கள் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அடுத்த வருடம், 1986 ம் ஆண்டு, "தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றிய" ENLF அமைப்பு இறுதி மூச்சை விட்டது. அதற்கு காரணம் தம்மோடு ஒன்றாக இருந்த TELO இயக்கத்தை, LTTE முற்றாக அழித்தொழித்து விட்டிருந்தது. அதன் தலைவர் சிறிசபாரத்தினமும் நிராயுதபாணியாக படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு EPRLF தடை செய்யப்பட்டது. 1990 ம் ஆண்டு, அதன் தலைவர் பத்மநாபா சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் ஊடுருவிய புலிகளால் படுகொலை செய்யப் பட்டார்.
இவ்வாறு ENLF கூட்டமைப்பில் இருந்த ஏனைய இயக்கங்கள் அழிக்கப் பட்டு, அவற்றின் தலைவர்களும் படுகொலை செய்யப் பட்ட பின்னர் எஞ்சியது ஈரோஸ் அமைப்பும், அதன் தலைவர் பாலகுமாரும் மட்டுமே.
மீண்டும் ஒரு சகோதர யுத்தத்தை தவிர்ப்பதற்காக, பாலகுமார் புலிகளுடன் இணக்கமாக நடந்து கொண்டார். புலிகளும், ஈரோஸும் மோதிக் கொண்டால் இரண்டு பக்கமும் மரணிக்கப் போவது தமிழ் இளைஞர்கள் தான். உண்மையில் பாலகுமார் எவ்வளவு விட்டுக் கொடுப்புகளை செய்தாலும் திருப்தி அடையாத புலிகள் இறுதியில் "மகாபாரதக் கதையில் கர்ணனிடம் கவச குண்டலங்களை யாசித்த" மாதிரி, ஈரோஸ் இயக்கத்தை கலைத்து விட்டு தம்மோடு சேருமாறு உத்தரவிட்டனர். அன்று பாலகுமாருக்கும் வேறு வழியிருக்கவில்லை. புலிகளை எதிர்த்துக் கொண்டு இயங்க முடியாது. TELO வுக்கு நடந்தது தான் EROS க்கும் நடக்கும். ஒரே நாளில் அழித்து விட்டு "சமூக விரோத ஒட்டுக்குழுவை அழித்தோம்..." என்று அறிக்கை விட்டிருப்பார்கள். அதிர்ச்சியில் உறைந்த மக்களும் ஆயுதங்களுக்கு பயந்து புலிகள் சொல்வதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.
ஆகவே அன்று ஒரு சூழ்நிலைக் கைதியாக இருந்த பாலகுமார், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிது காலம் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். அவருக்கு "மெய்ப்பாதுகாவலர்களாக" சில புலிப் போராளிகள் நியமிக்கப் பட்டனர். உண்மையில் பாலகுமார் என்ன செய்கிறார் என்று கண்காணிக்கவும், உளவு பார்ப்பதற்காகவும் கூட நியமிக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் பாலகுமாருக்கு வேறு தெரிவு இருந்திருக்குமா? ஒரு கூண்டுக் கிளி மாதிரித் தான், அன்று புலிகளின் வீட்டுக் காவலில் இருந்த பாலகுமாரும் நடந்து கொண்டார். அதற்காக அவரை ஒரு புலி உறுப்பினர் என்பது அபத்தமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நல்ல வேளை, இறுதியில் பாலகுமார் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டார். அதனால் அவர் தியாகியாகி விட்டார். ஒரு வேளை அவர் புலிகளால் கொல்லப் பட்டிருந்தால் துரோகியாக்கப் பட்டிருப்பார்! விசித்திரமான உலகம்!