Friday, December 29, 2017

எழுபதுகளில் இத்தாலியை உலுக்கிய கம்யூனிச கெரில்லா இயக்கம்


எழுபதுகளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் இயங்கின. பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் ஆதரவுத் தளம் கொண்டிருந்த இயக்கங்கள், அரசுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இத்தாலியில் இருந்த இயக்கத்தின் பெயர் பிரிகாட்டே ரோசே (Brigate Rosse : செம் படைப் பிரிவு). 1970 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இயக்கம் மாரியோ மொறேத்தி என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.

இத்தாலிய செம்படை தோன்றிய காரணத்தை புரிந்து கொள்வதற்கு, நாம் இத்தாலிய வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலேயே, இத்தாலிய கம்யூனிஸ்ட் போராளிகள் வட இத்தாலியின் பல பகுதிகளை சொந்தப் பலத்தில் விடுதலை செய்திருந்தனர். சிலநேரம், பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் வந்திரா விட்டால், அன்றே இத்தாலியும், அயல்நாடான யூகோஸ்லேவியா போன்று ஒரு சோஷலிச நாடாகி இருக்கும்.

அப்போது இலட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்கள் சோஷலிசப் புரட்சிக்குத் தயாராக இருந்த போதிலும், திருத்தல்வாதிகளாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அதற்கு உடன்படவில்லை. இத்தாலி சோஷலிச நாடானால், நேட்டோ இராணுவம் படையெடுத்து புரட்சியை நசுக்கி விடும் என்று காரணம் கூறினார்கள். அன்றிலிருந்து, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசுக்கு ஆதரவாக முண்டுகொடுக்கும் திருத்தல்வாதப் பாதையை தேர்ந்தெடுத்தது.

உலகப்போருக்கு பிந்திய காலங்களில், குறிப்பாக ஐம்பதுகளுக்கு பின்னர் வளர்ந்து கொண்டிருந்த இத்தாலி பொருளாதாரம், எழுபதுகளில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டது. நாடு முழுவதும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. குறிப்பாக, படித்து முடித்த வாலிபர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். 

படித்தாலும் வேலை கிடைக்காது என்ற விரக்தி காரணமாக பல மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தினார்கள். அத்தகைய சமூகப் பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயார் படுத்துவது எப்படி என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இத்தாலி முழுவதும், மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் நூல்களைப் படிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் பிரதானமான செயற்பாடானது. பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடந்த மார்க்சிய வகுப்புகள், கூட்டங்களில்  பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தான், ஆயுதமேந்திய கம்யூனிச இயக்கம் ஒன்றுக்கான ஆதரவுத் தளம் உருவானது.

திரிபுவாத இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் இணக்க அரசியலில் நம்பிக்கையிழந்த மாணவர்கள், புதிதாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பித்து ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதைப் பேச்சளவில் வைத்துக் கொள்ளாது நடைமுறையில் கொண்டு வர விரும்பினார்கள். அப்போது உருவாக்கப் பட்டது தான் பிரிகாட்டே ரோசே. அதற்கு நாடு முழுவதும் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக இயங்கினார்கள்.

எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, இத்தாலியிலும் இடதுசாரி, வலதுசாரி வேற்றுமை, ஒரு கட்டத்தில் பகை முரண்பாடாக மாறி வன்முறை வடிவமெடுத்தது. ஆர‌ம்ப‌த்தில், வ‌ல‌துசாரிக‌ளான‌,  (முசோலினியின் பாசிச கட்சியை பின்பற்றும் புதிய தலைமுறை) நவ- பாசிஸ்டுகள், இடதுசாரி மாணவர்களை தாக்குவதும், அவர்களது கூட்டங்கள், பேரணிகளை குழப்புவதும் நடந்து கொண்டிருந்தது. சிலநேரம், நவ- பாசிஸ்டுகள் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. 1980ம் ஆண்டு, போலோய்னா நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப் பட்ட சம்பவம் பாசிச வன்முறையின் உச்சம் எனலாம்.

தொடக்கத்தில் பாசிச வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய செம்படை இயக்கம், சில வருடங்களில் துணிகரமான தாக்குதல்கள் நடத்தும் அளவிற்கு வளர்ந்தது. தமது எதிராளிகளான பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றவர்கள், பிற்காலத்தில் அரசு இயந்திரத்தை ஆட்டிப் படைத்தனர். 

நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். ஒரு தடவை, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரையும் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்தார்கள்.  இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோரை கடத்திச் சென்று கப்பம் கேட்பதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தன. நிதித் தேவைக்காக வங்கிகளை கொள்ளையடித்தார்கள். அப்போது தடுக்க முயன்ற காவலர்களை சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பத்து வருட போராட்டக் காலத்தில், 73 கொலைகள் நடந்துள்ளன.

16 மார்ச் 1978 ம் ஆண்டு, இத்தாலிய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலிப் பிரதமர் அல்டோ மோரோ, தலைநகரில் பட்டப் பகலில் கடத்திச் செல்லப் பட்டார். ரோம் நகரின் பிரதான வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த பிரதமரின் வாகனத்தை வழிமறித்த ஆயுதபாணிகள், மெய்ப்பாதுகாவலர்களை சுட்டுக் கொன்று விட்டு பிரதமரை கடத்திச் சென்றனர். தாக்குதல்தாரிகள் அலித்தாலியா விமான நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த படியால் யாரும் அவர்களை சந்தேகப் படவில்லை.

ஏற்கனவே, பிரிகாட்டே ரோசே வங்கிக் கொள்ளையடித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி மறைவிடமாக வைத்திருந்தனர். அந்தப் புதிய வீட்டில் தான் பிரதமர் பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் வாசிப்பதற்கு மார்க்ஸ், லெனின் நூல்கள் கொடுக்கப் பட்டன. அந்த வீட்டில், கடத்தியவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் தத்துவார்த்த வாதங்களும் நடந்தன. பிரதமரின் மார்க்சிய அறிவு அவர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது.

எது எப்படியோ, பிரதமர் அல்டோ மோரோ தன்னைக் கடத்தியவர்களுடன் முரண்டு பிடிக்காமல் இணக்கமாக நடந்து கொண்டார். எப்படியும் ஒரு சில நாட்களில் தான் வெளியே வந்து விடுவேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரச மட்டத்தில் தனக்கெதிராக சதி நடக்கிறது என்ற விடயத்தை அன்று பிரதமர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிகாடே ரோசே பிரதமரின் கடத்தலுக்கு உரிமை கோரினார்கள். il Messaggero பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், போட்டோகொப்பி இயந்திரத்தின் அருகில் ஒரு கடிதமும், அல்டோ மோரோவின் புகைப்படமும் இருப்பதாக அழைத்த குரல் கூறியது.

அந்த உரிமை கோரும் கடிதத்தில், "பிரதமர் மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரிக்கப் படுவார்" என்று எழுதப் பட்டிருந்தது. மேலும், அல்டோ மோரோவை விடுதலை செய்வதென்றால், சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமது இயக்க உறுப்பினர்களை, அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

பணயக் கைதியான பிரதமர், தனது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் உருக்கமான கடிதங்கள் எழுதி அனுப்ப அனுமதிக்கப் பட்டார். குறைந்த பட்சம், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், பிரிகாடே ரோசே எதிர்பார்த்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தன. "பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என்று அரசு ஒரேயடியாக மறுத்து விட்டது. அரசுடன் நல்லுறவு பேணிய, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அதையே எதிரொலித்தார். ஆளும் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், தமது பிரதமர் தானே என்று கூட எந்த நெகிழ்வுப் போக்கையும் காட்டவில்லை.

அல்டோ மோரோ பணயக்கைதியாக தடுத்து வைக்கப் பட்டு ஐம்பது நாட்களாகியும் இத்தாலி அரசு எந்தவொரு சமரசத்திற்கும் வரவில்லை. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்று பிரதமரும் தனது இறுதிக் கணங்களில் கலங்கி நின்றார். குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை. 

இடையில் ஒரு தடவை, பிரதமர் கொல்லப் பட்டு விட்டார் என்று வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பிப் பார்த்தனர். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் எதுவும் நடக்காது என்பது உறுதியானதும், 54 வது நாள் அல்டோ மோரோ சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது சடலம் வைக்கப் பட்டிருந்த கார், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காணப்பட்டது.

எதற்காக ஒரு பிரதமரை உயிரோடு விடுதலை செய்வதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? உண்மையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்குள் கூட அவர் வேண்டாப் பொருளாகக் கருதப் பட்டார். அவர் கொல்லப் பட வேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் பலர் எதிர்பார்த்தனர். இத்தாலி அரசில் இருந்த தீவிர வலதுசாரிகளும், நேட்டோ இராணுவத் தலைமையும் அல்டோ மோரோ அகற்றப் படுவதை விரும்பினார்கள்.

என்ன காரணம்?

உண்மையில் அல்டோ மோரோ ஒரு நேர்மையான அரசியல்வாதி. பொருளாதாரப் பிரச்சினைகளால் சீரழிந்து கொண்டிருந்த நாட்டை காப்பாற்றும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்க முன்வந்தார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தனது கட்சிக்குள் இருந்த கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தார்.

இத்தாலி வரலாற்றில் முதல் தடவையாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து, உடன்படிக்கை கைச்சாத்திடுவது மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக வழியில் வைத்து அல்டோ மோரோ கடத்தப் பட்டார்.

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், இத்தாலி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுப்பதை நேட்டோ தலைமை விரும்பவில்லை. அதே நேரம், இத்தாலி அரசியல் மட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டரசாங்கம் அமைப்பதை, தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, தீவிர இடதுசாரிகளும் விரும்பவில்லை. பிரதமர் கடத்தல் சம்பவத்தின் நேரடி விளைவாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒருபோதும் கைச்சாத்திடப் படவில்லை. இது உண்மையில் கடும்போக்காளர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றி.

"கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கம்யூனிசத்திற்கு அடிபணிந்து விட்டது" என்று தீவிர வலதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம், "கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்து விட்டது" என்று தீவிர இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். பிரிகாடே ரோசேயின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. முதலாளித்துவ அரசுக்கு முண்டு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை துரோகிகளாக பார்த்தனர். கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை துரோகத்தின் உச்சமாக கருதப் பட்டது.

பிரதமர் அல்டோ மோரோவின் கடத்தலும், கொலையும், பிரிகாடே ரோசே இயக்கத்தின் அழிவுக்கு வித்திட்டது எனலாம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். பிரிகாடே ரோசெயின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதே நேரம், பிரிகாடே ரோசே இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாக்கியதால், தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவையும் இழந்தது. குறிப்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்ற படியால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தொழிலாளர்களை பகைத்துக் கொண்டனர்.

1980 ம் ஆண்டு, பிரிகாடே ரோசே இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டு விட்டனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சில நூறு உறுப்பினர்கள், அயல் நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று அகதித் தஞ்சம் கோரினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களை நாடுகடத்துமாறு இத்தாலி அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரி இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் இறுக்கமாக வந்திருக்கவில்லை என்பதால் பிரெஞ்சு அரசு மறுத்திருந்தது. 

குறைந்தது முன்னூறு பிரிகாடே ரோசே உறுப்பினர்களாவது, பொலிஸ் கையில் அகப்படாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். சிலர் கியூபாவிலும், மெக்சிகோவிலும், அன்று சோஷலிச நாடாக இருந்த   நிகராகுவாவிலும் தஞ்சம் கோரியிருந்தனர். இப்போதும் அவர்கள் இத்தாலிக்கு திரும்பி வந்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்பதால் புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர். 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, December 28, 2017

"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்" எனும் பொய்ப் பிரச்சாரம் குறித்து...


இன்று வ‌ரை ப‌ல‌ரால் ந‌ம்ப‌ப் ப‌டும் பொய் ஒன்றுள்ள‌து. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நாடுகளில் மதம் தடைசெய்யப் பட்டதாகவும், ஆலயங்கள் மூடப் பட்டதாகவும் இன்னமும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலத்தில், மக்கள் அதிகார மையங்களை நொறுக்கும் பொழுது, மத நிறுவனங்களும் தாக்கப்படுவது வழமை. 

மதத்திற்கு எதிரான கிளர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியுடன் ஆரம்பமானது. அதன் விளைவாக மதச்சார்பற்ற அரசுகள் தோன்றின. இன்று பல மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது போன்ற சமூக மாற்றத்தை தான் கம்யூனிஸ்டுகள் ஆண்ட நாடுகளில் கொண்டு வர விரும்பினார்கள். 

ஆனால், முதலாளித்துவ எதிரிகளால் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன. "கம்யூனிஸ்டுகள் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள்" என்று கூறி, மத நம்பிக்கை கொண்ட பாமர மக்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளானர்.

இந்த விடயத்தில், மதம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரையை வாசித்தால் தெளிவு பிறக்கும். 13 மே 1909, புரெலேடார்ட் பத்திரிகையில் லெனின் எழுதியது. லெனின் நூல் திரட்டில் இருந்து எடுத்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். தமிழ் வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுவதற்காக நான் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்திருந்தாலும், லெனினின் மூலப்பிரதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனியில் மதத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளதையும், ரஷ்யாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அந்த நாடுகளில் இருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் மத எதிர்ப்பு பாரம்பரியம், சோஷலிச இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது. 

பிரான்ஸில் என்சீக்லோபீடியர்கள் (Encyclopedists) எனும் தத்துவ அறிஞர்களின் குழு, தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டிருந்தது. தமிழகத்தில் உள்ள திராவிடர் க‌ழ‌க‌ம் முன்னெடுக்கும் நாஸ்திக இயக்கத்துடன் அதை ஒப்பிடலாம். அதே மாதிரி, ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் (Feuerbach) கூட தீவிர மத எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தோன்றிய பூர்ஷுவா வர்க்கத்தினர் எந்தவொரு மத எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. லெனினின் கூற்றுப் படி, "அந்தப் பொறுப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப் பட்டது." அந்தக் காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி) ரஷ்ய விவசாயிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அமைப்பான நரோட்னிக்குகள் (லெனின் அவர்களை "குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகள்" என்று குறிப்பிடுகிறார்.) கூட பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. 

ஆகவே, கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த "மத எதிர்ப்பு இயக்கம்", அந்தக் கால கட்டத்தில் (முதலாளித்துவ) மேற்கு ஐரோப்பாவில் நடந்த சமூக- அரசியல்  மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கருதப் பட வேண்டும். சுருக்கமாக சொன்னால், பிரான்ஸில் நடந்த முதலாளித்துவ புரட்சியின் தொடர்ச்சியாகத் தான், ரஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சியும் மத நிறுவனங்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழித்தது.

லெனின் கூறியதாவது: 
//மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படையானது இயங்கியல் பொருள்முதல்வாதமே. அதையே மார்க்ஸ், எங்கெல்சும் பிரகடனம் செய்தனர். அது 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் தோன்றிய பொருள் முதல்வாத தத்துவத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார். பொருள்முதல்வாதமானது முற்றுமுழுதாக நாஸ்திக வாதமே என்பதுடன், அது மதத்துடன் பகைமை கொண்டுள்ளது.//

பொருள்முதல்வாத தத்துவம் நாஸ்திகமே என்பதைக் கூறும் லெனின், எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" நூலையும் வாசிக்கக் கோருகின்றார். டூரிங் (Düring) என்பவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு சோஷலிச தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியவாதி அல்ல. (அதாவது மார்க்சுடன் கொள்கை முரண்பாடு கொண்டவர்). அப்போது கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதில் மும்முரமாக இருந்த படியால், டூரிங்கின் வாதங்களை மறுக்கும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றிருக்கிறார். "டூரிங்கிற்கு மறுப்பு"(இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை இப்போதும் வாங்கலாம்.) நூலில் தீவிர நாஸ்திகம் எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். அதை லெனின் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு லெனின் எழுதியதை நான் இங்கு இலகுபடுத்தி தருகிறேன். மதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதன் மூலம், அதை தொழிலாளர் கட்சியின் முக்கிய செயற்பாடாகுவதன் ஊடாக, "இடதுசாரிகளாக", "புரட்சியாளர்களாக" காட்டிக் கொள்வோரை எங்கெல்ஸ் கண்டித்துள்ளார். 1874 ம் ஆண்டு, பிரான்ஸில் பிளாங் என்ற சோஷலிச அறிஞர் வழிகாட்டலில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்கடிக்கப் பட்டது. அப்போது பலர் லண்டனில் அகதிகளாக தஞ்சம் கோரி இருந்தனர். அந்த "பிலாங்கிஸ்ட் அகதிகள்" வெளியிட்ட அறிக்கையை எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். இது போன்ற மதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் மதத்திற்கு புத்துயிர் கொடுப்பதுடன், அது தானாகவே அழிந்து போவதைத் தடுத்து விடும் என்று கண்டித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பெரும்பகுதியை புரட்சிகரமாக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே, ஒடுக்கப் பட்ட மக்களை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுதலை செய்யும். மதம் ஒரு கருத்துமுதல்வாதம் என்பதைக் கூறிய தத்துவ அறிஞர் டூரிங்கை பாராட்டிய அதே எங்கெல்ஸ், டூரிங்கின் "சோஷலிச நாட்டில் மதத்தை தடை செய்யும் புரட்சிகர கொள்கையை" கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. எங்கெல்ஸ் அதை "பிஸ்மார்க் செய்தது போன்று முட்டாள்தனமான எதிர்விளைவுகளை தரும்" என்று குறிப்பிடுகிறார். "கலாச்சாரப் போராட்டம்"(Kulturkampf) என்ற பெயரில் அன்றைய ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அதைப் பலப்படுத்துவதில் முடிந்தது என்பதை லெனின் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பிஸ்மார்க் மதத்திற்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்பியமை, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியின் கவனத்தை திசை திருப்பியதுடன், பூர்சுவா வர்க்கத்தின் "மத எதிர்ப்பு போலித்தனத்தையும்" வெளிப்படுத்தியது. பிஸ்மார்க் செய்தது போன்று, டூரிங் வேறு வடிவில் செய்ய நினைக்கிறார் என எங்கெல்ஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளிவர்க்கம் அதற்காக தயார்படுத்தப் பட வேண்டும் என விரும்பினார். பாட்டாளிவர்க்கத்தை பொறுமையாக ஒழுங்குமுறைப் படுத்தி, தெளிவுபடுத்துவதன் மூலம் மதத்தை தானாக அழிய வைக்கலாம். ஆனால், அது மதத்திற்கு எதிரான அரசியல் போராக மாற்றப் படக் கூடாது.

மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம் தான். அது மதத்துடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பகைமை கொண்டுள்ளது. என்சீக்லோபீடியர்கள், போயர்பாக் போன்றோரின் நிலைப்பாடும் அது தான். ஆனால், மார்க்ஸ், எங்கெல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதற்கும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை சரித்திர தளத்துடனும், சமூகவியல் தளத்துடனும் இணைக்கிறது. நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அது பொருள்முதல்வாதத்தினதும், மார்க்சியத்தினதும் தொடக்கமாக உள்ளது.

ஆனால், மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் மேலே செல்கிறது. அதாவது நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கும் முதல், மக்களினதும், நம்பிக்கையினதும் மூலமாக உள்ள பொருள் வாதமாக வெளிப்படுத்தப் பட வேண்டும். மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சாரமாக குறுக்கக் கூடாது. ஆனால், மதத்தின் சமூக வேர்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான நடைமுறையாக பிணைக்கப் பட வேண்டும்.

எதற்காக நகர்ப்புற பாட்டாளிகள், விவசாயிகள் மத்தியில் மதம் நிலைத்திருக்கிறது? "அதற்குக் காரணம் மக்களின் அறியாமை" என்று ஒரு முதலாளிய பொருள்முதல்வாதி கூறுவார். "மதம் ஒழிக, நாஸ்திகம் வாழ்க, எமது முக்கிய கடமை நாஸ்திகத்தை பரப்புவது தான்" என்று ஒரு முதலாளித்துவ முற்போக்குவாதி மேலும் கூறுவார். ஆனால், மார்க்சியர்கள் அதைத் தவறு என்கிறார்கள். ஏனென்றால், இது போன்ற கருத்தானது, மேலோட்டமான, முதலாளிய கலாச்சாரத்திற்கு உட்பட்ட பரப்புகை ஆகும்.

அது போன்றதொரு கருத்து மதத்தின் வேர்களை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை. அதாவது, கருத்தியல் பூர்வமானதே தவிர பொருள்முதல்வாதம் அல்ல. நவீன முதலாளிய நாடுகளில் இந்த வேர்கள் சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளன:
  • முதலாளித்துவத்தின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறை. 
  • மிகப் பலமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத உழைக்கும் மக்களின் கையாலாகத்தனம். 
  • ஒவ்வொரு நாளும் பல தடவைகள் வருத்தி,காயப்படுத்தும் மனிதாபிமற்ற செயல்கள். 
  • அசாதாரணமான நிகழ்வுகளான யுத்தம், நிலநடுக்கம் போன்றன.

பயம் தான் கடவுளரை முன்னுக்கு கொண்டு வந்தது. கண்ணுக்கு புலப்படாத மூலதனத்தின் செயற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக இருந்தது. "கண்ணுக்கு புலப்படாத" என்று சொல்வதற்கு காரணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில், அவர்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் மூலதனத்தின் சக்தி பற்றிய புரிதல் சாதாரண மக்களிடம் இல்லை. இது தான் தற்காலத்தில் ஒரு மதத்தின் வேர். ஒரு பொருள்முதல்வாதி அதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, நாசமாக்கும் சக்தி படைத்த முதலாளித்துவத்தில் தங்கியுள்ள மதத்தின் வேரைக் கண்டறியாமல், நாஸ்திக பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மதத்தை அகற்ற முடியாது.

(பிற்குறிப்பு: "மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் தொடர்பு பற்றி" என்ற தலைப்பில் லெனின் எழுதிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது.)

Tuesday, December 12, 2017

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

(பாகம் - இரண்டு)


ஒரு வர்க்கப் புரட்சிக்கு தயாராக இல்லாத, இன்றைய காலத்தில், எமது தந்திரோபாயங்கள் எப்படி இருக்க வேண்டும்? 

இன்றைய காலகட்டத்தின் தோற்றப்பாடுகள்:

- இந்தக் காலகட்டமானது முதலாளிய வர்க்கத்தின் கூடுதல் பலமாகவும், உழைக்கும் வர்க்கத்தின் பலவீனமாகவும் உணரப்படும்.

- மூலதனம் தனது முகவர்களான சீர்திருத்தவாதிகள், திருத்தல்வாதிகளை பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணாம்சத்தை முறியடிக்கப் பார்க்கும். வர்க்க உணர்வை அரித்து துருப்பிடிக்க வைக்கும்.

- இந்தக் காலகட்டத்தில், உழைக்கும் வர்க்கமானது முதலாளிய அரசை நொறுக்கி விட்டு சோஷலிசத்தை கொண்டு வருவதற்கான கடமையில் இருந்து பல வருட காலம் பின்தள்ளப் பட்டிருக்கும்.

- ஏகபோக மூலதனத்தின் ஆட்சி அசைக்க முடியாத அளவு பலமாக இருக்கும். அரச இயந்திரம் பழுதில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்காத படியால், அவை முதலாளிய வர்க்கத்திற்கு நெருக்கடி உண்டாக்க மாட்டா.

அத்தகைய "அமைதியான" காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

- வர்க்கப் போராட்டத்திற்கான பள்ளிக்கூடம் அமைக்கலாம். உழைக்கும் வர்க்கத்தை அரசியல்மயப் படுத்தும் கல்வி புகட்டலாம். பொறுமையான, படிப்படியான தொழிற்சங்கப் போராட்டங்களை கட்டமைக்கலாம்.

- தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தற்காலிக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன் நின்று விடக் கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோள்கள் பற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் இருந்து தோன்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டும்.

- வர்க்க உணர்வு தானாக உருவாவதில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில் உறங்கிக் கிடக்கும் வர்க்க உணர்வை தட்டி எழுப்ப வேண்டும். அதை சோஷலிசத்திற்கான குறிக்கோளுடன் இணைக்க வேண்டும்.

- உழைக்கும் வர்க்கத்தினுள் படிப்படியாக வர்க்க குணாம்சத்தை புகுத்த வேண்டும். முதலாளிய அரசு அதிகாரத்துடனான ஒவ்வொரு மோதலையும், உரிமைகளை நசுக்கும் ஒவ்வொரு அடக்குமுறையையும் பயன்படுத்தி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்.

- குட்டி முதலாளிய வர்க்கத்தின் மீதும் செல்வாக்குப் பிரயோகிக்க வேண்டும். அவர்களுடன் ஒரு புரட்சிகர கூட்டு வைக்க முடியாவிட்டாலும், முதலாளிய அரசின் ஆட்சி குறித்த அவர்களது அவநம்பிக்கையை, அதிருப்தியை பயன்படுத்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும்.

- மூலதன ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான குட்டி முதலாளிய வர்க்கத்தின் போராட்டத்தை நிபந்தனையுடன் ஆதரிப்பதன் மூலம், அவர்களை உழைக்கும் வர்க்க போராட்ட வழிக்கு கொண்டு வர முடியும்.

*******

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

- இந்தக் கட்டத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலை மாறி விடும். உழைக்கும் வர்க்கம் தற்காப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு, முன்னரங்கிற்கு வந்து தாக்குதல் நடத்தும் கட்டத்திற்கு வந்திருக்கும். தொழிலாளர்களின் போராட்டமானது மிகப் பிரமாண்டமான பேரணிகளாகவும், வேலை நிறுத்தங்களாகவும் நடைபெறும்.

- தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகள் மறையும். உழைக்கும் வர்க்கமானது அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை நெருங்கி இருக்கும். அதனால், இந்த காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கம் தந்திரோபாய தாக்குதல்களை தொடங்கி இருக்கும்.

- இந்தக் கட்டத்தில் முதலாளிய வர்க்கத்தின் பலவீனம் தெரிய வரும். பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று நெருக்கடியை அடையும் பொழுது, ஏகபோக முதலாளித்துவம் எந்தவொரு சமரசத்திற்கும் வர முடியாது. அது சமூக நல சீர்திருத்தங்களின் முடிவின் தொடக்கமாக இருக்கும். இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வது கடினமாக இருக்கும்.

- அரசு இயந்திரம் துருப் பிடிக்கத் தொடங்கும். இடையில் நிற்கும் குட்டி முதலாளிய வர்க்கமும் கிளர்ச்சி செய்யத் தொடங்கும். முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் பலமிழக்கும். பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மக்கள் விரோத குணாம்சத்தை உழைக்கும் வர்க்கம் கண்டு கொள்ளும்.

- முதலாளிய வர்க்கம் நேரடி அடக்குமுறையில் ஈடுபடும். அரசு அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் நாள்தோறும் நடக்கும். இந்தக் கட்டத்தில் இருந்து தான் வர்க்கப் போராட்டம் தொடர்கின்றது.

- இந்தக் கட்டத்தில் அரசியல் போராட்டம் முதன்மையானது. அரசியல் கோரிக்கைகள் சமூக மாற்றத்திற்கான சுலோகங்களாக மாறும். அது மக்களை எழுச்சி கொள்ள வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றத் தூண்டும். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது, புரட்சிகர பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையின் கீழ் ஒரு விடுதலைப் போராட்டமாக பரிணமிப்பதற்கான கிளர்ச்சியையும் பிரச்சாரங்களையும் கொண்டிருக்கும்.

- இந்தப் போராட்டங்கள் ஊடாக, தொழிற்சாலைகளில் வேர் பரப்பியுள்ள (கம்யூனிஸ்ட்) கட்சியானது, ஒரு வெகுஜனக் கட்சியாக வளர்ச்சி அடையும். அதன் உத்திகளுக்கான இயங்குதளம் விரிவடையும். இது உழைக்கும் வர்க்கத்தை பலதரப் பட்ட போராட்டங்களை நடத்துவதற்கு ஊக்குவிக்கும். அதன் வியூகத்திற்கான வாய்ப்புகளும் வளர்ச்சி அடையும். நடுத்தர வர்க்கமான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் மத்தியிலும் கட்சிக்கு ஆதரவு கூடும். அந்த வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக இழுத்தெடுக்க முடியும்.

- வர்க்கப் போராட்டத்தை ஒரு புரட்சியை நோக்கி நகர்த்திச் செல்வதே, இந்தக் கால கட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

- இந்தக் காலகட்டம், பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் ஒன்று சேர்க்கும், விரிவான, ஆழமான போராட்டமாக பரிணமிக்கிறது. குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை பாட்டாளிவர்க்க சார்பானவர்களாக வென்றெடுத்து, அவர்கள் எல்லோரையும் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆக்கி, இதுவரை அறியப் படாத போராட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது.

- மாற்றத்திற்கான சுலோகங்களைக் கொண்டு அரசியல்மயப் படுத்த வேண்டும். அரச இயந்திரத்தை துருப்பிடிக்க வைப்பதுடன் நன்று விடாது, அரச அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களை எமது தந்திரோபாய முடிவுகளுக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும்.

- கம்யூனிஸ்ட் கட்சியை வெகுஜன செயற்பாட்டுகளை ஒழுங்கு படுத்தும் மக்கள் கட்சியாக மாற்ற வேண்டும். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு புரட்சி ஒன்றே மாற்று வழி என்பதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

(Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle - பாட்டாளி வர்க்க கல்வி நூலில் இருந்து சில பகுதிகள்) 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, December 08, 2017

ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - நான்கு)

ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே ட்ராஸ்கி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே ட்ராஸ்கியை நாடுகடத்தி, பின்னர் கொலை செய்து விட்டதாகவும் ட்ராஸ்கிஸ்டுகள் கற்பனைக் கதை புனைந்து பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவு உண்மையும் கிடையாது. தற்பெருமை கொண்ட ட்ராஸ்கி அவமானம் தாங்காமல் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்துள்ளார். அதையே இன்று ட்ராஸ்கி ஆதரவாளர்களும் காவித் திரிகின்றனர்.

அக்டோபர் புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் போல்ஷெவிக் கட்சி புனரமைக்கப் பட்டது. அப்போது லெனின் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அவருக்கு பதிலாக, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் தான் கட்சியை பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். அப்போது ட்ராஸ்கி ஸ்டாலினுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். அன்று பல போல்ஷெவிக் தலைவர்கள் கைது செய்யப் பட்டிருந்த நிலையில் ஸ்டாலின் தலையில் பொறுப்புகள் குவிந்தமை ஏற்கத்தக்கதே. இந்த உண்மையை ட்ராஸ்கி கூட மறுக்கவில்லை.

அக்டோபர் புரட்சியின் முதலாம் ஆண்டு நினைவுகூரல் தொடர்பாக பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடத் தயங்கவில்லை.
//"மக்கள் எழுச்சிக்கான நடைமுறை வேலைகள் தோழர் ட்ராஸ்கி தலைமையில் நடந்துள்ளன. பெத்ரோகிராட் நகர இராணுவ முகாம்களில் இருந்த போர்வீர்கள் மத்தியில் புரட்சிகர கமிட்டி அமைத்து அவர்களை சோவியத் ஆதரவாளர்களாக வென்றெடுத்த ட்ராஸ்கிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்."// (Source: Histoire du phénoméne Stalinien/Geschiedenis van het Stalinisme, Jean Elleinstein, பக்கம் 39)

அக்டோபர் புரட்சியை நேரில் கண்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் ரீட் எழுதிய "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை, ஸ்டாலின் தடை செய்ததாக ட்ராஸ்கிஸ்டுகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த நூலில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு குறித்து எழுதப் பட்டிருந்த படியால் காழ்ப்புணர்வு கொண்ட ஸ்டாலின் தடை செய்தார் என்பது தான். இது எந்த உண்மையும் இல்லாத வெறும் வதந்தி. பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதில் எந்தக் காழ்ப்புணர்வும் இன்றி ஸ்டாலின் ட்ராஸ்கியை புகழ்ந்து எழுதி இருப்பதைக் காணலாம்.

தமது வதந்தியை நிரூபிக்க முடியாத ட்ராஸ்கிசவாதிகள், ஸ்டாலினின் பேச்சு ஒன்றை ஆதாரமாக காட்டுகின்றனர். "ட்ராஸ்கிசமா அல்லது லெனினிசமா" என்ற தலைப்பின் கீழ் November 19, 1924 அன்று ஸ்டாலின் பேசிய உரையில் "ஜோன் ரீட் தனது நூலில் ட்ராஸ்கி பற்றி எழுதிய ஒரு பகுதியை பிரதியெடுத்து ட்ராஸ்கிச ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்" என்று தான் சொல்லப் பட்டுள்ளது.

அன்று கட்சிக்குள் நடந்த நீண்டதொரு விவாதத்தில் தோல்வியுற்ற ட்ராஸ்கியின் தத்துவார்த்த குறைகளை சுட்டிக் காட்டும் விதமாகத் தான், ஸ்டாலினின் மேற்படி உரை அமைந்திருந்தது.சிலநேரம், குறிப்பிட்ட அந்த துண்டுப் பிரசுரம் தடை செய்யப் பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், அன்று நாட்டுக்குள் குறிப்பிட்ட அளவு ட்ராஸ்கி ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களது அரச விரோத செயற்பாடுகள் தடுக்கப் பட்டன. அதைத் தான் ஸ்டாலின் "ஜோன் ரீட் நூலைத் தடைசெய்தார்" என்று திரித்து ட்ராஸ்கிசவாதிகள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர்.

"ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவதுவது" தொடர்பான விவாதங்கள் ஆண்டுக் கணக்காக நடந்து முடிவில் ட்ராஸ்கி தோற்கடிக்கப் பட்டார். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். 1923 ம் ஆண்டு, ஸ்டாலினுக்கு எதிரான மத்தியகுழு உறுப்பினர்கள் இரகசியமான ஒரு இடத்தில் கூடி போட்டிக் குழு அமைக்க முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் சினோவியேவ், ட்ராஸ்கி ஆகியோரும் இருந்தனர். அதில் பங்கெடுத்த ஒருவர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்த படியால், அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

இதற்கிடையே, கட்சியின் பதினான்காவது வருடாந்த மகாநாட்டின் முடிவில் கட்சி மறுசீரமைக்கப் பட்டது. இதனால் ட்ராஸ்கி போன்ற எதிராளிகளின் ஆதரவுத் தளம் சுருங்கியது. 1925 ம் ஆண்டு, ட்ராஸ்கியின் "யுத்தத்திற்கான மக்கள் அதிகாரி" பதவி பறிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்தும் கட்சி உறுப்பினராக இருக்க அனுமதிக்கப் பட்டார். கமனேவ், சினோவியேவ் ஆகியோர் முன்னர் ட்ராஸ்கியை விமர்சித்து வந்தாலும், பதினான்காம் கட்சி மகாநாட்டில் அவர்களும் ஸ்டாலினை எதிர்த்தனர்.

அந்தக் காலத்தில் கட்சிக்குள் குழுவாத அரசியல் மேலோங்கிக் காணப்பட்டது. பல்வேறு குழுக்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டவுடன், அவர்களது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். குறிப்பாக, அறிவுஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் குழுவாத அரசியல் நிலவியது. அதாவது ஆசிரியர்களும், மாணவர்களும் ஸ்டாலினிச குழு, ட்ராஸ்கிச குழு எனப் பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று உலகில் கிடையாது. மேற்கத்திய பாராளுமன்ற - பல கட்சி முறையானது இன்னொரு வகையான ஜனநாயகம் மட்டுமே. சோஷலிச நாடுகளில் இருப்பதை "ஜனநாயக மையவாதம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது, "வேற்றுமையில் ஒற்றுமை காண்பது". எந்தப் பிரச்சினை பற்றியும் கட்சிக்குள் விவாதம் நடத்தலாம். ஒரு கோரிக்கை, அல்லது திருத்தம் கூட விவாதிக்கப் படலாம்.

ஒரு குறிப்பிட்ட விடயம் நாட்கணக்காக விவாதிக்கப் பட்ட பின்னர், முடிவில் அது வாக்கெடுப்புக்கு விடப் படும். பெரும்பான்மையாக எத்தனை பேர் கையை உயர்த்துகிறார்கள் என்று பார்த்து அது ஏற்றுக் கொள்ளப் படும். அதை எதிர்த்த சிறுபான்மை வாக்காளர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கையானது கட்சியின் முடிவாக வெளியுலகிற்கு அறிவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்லாமல் வேறென்ன?

பிரச்சினை எங்கே இருக்கிறது என்றால், எதிர்த்து தோற்கடிக்கப் பட்ட சிறுபான்மையினர் அதற்குப் பிறகு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. "உண்மையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரம்" என்று இன்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அன்று ட்ராஸ்கி பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, குழுவாதமே ஜனநாயகம் என்று வாதாடிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன், கட்சிக்குள் தனிக் குழுவாக இயங்க விரும்பினார். ட்ராஸ்கி மட்டுமல்ல, புகாரின், கமனேவ், சினோவியேவ் என்று பலரும் தமக்கான குழுக்களை வைத்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள், ட்ராஸ்கி குழு போன்ற பல குழுக்களை இயங்க அனுமதித்திருந்தால், ட்ராஸ்கி ஸ்டாலினின் தலைமைக்கு கட்டுப்படத் தயாராக இருந்தார். ஆனால், அதை ஸ்டாலின் விரும்பவில்லை. கட்சிக்குள் குழுவாதத்தை ஏற்றுக் கொள்வதானது, பிசாசை கூப்பிட்டு பக்கத்தில் வைத்திருப்பதற்கு சமமானது. எந்த நேரம் எப்படிக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தான் ஸ்டாலின் - ட்ராஸ்கி முரண்பாட்டின் ஆரம்பப் புள்ளி.

1927 ம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. அப்போது ஸ்டாலின் எதிர்ப்பாளர்களான ட்ராஸ்கி, கமேநேவ், சிமில்கா, ராடெக், பியத்தகோவ், ராகொவ்ஸ்கி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து தனியான ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். அதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்டனர். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

1924 ம் ஆண்டு, சோவியத் நிறைவேற்றுக் கமிட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் படி, அரச எதிரிகள், வர்க்க எதிரிகள் ஆகியோர் நாடுகடத்தப் படலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. அந்த வகையில் நாடு கடத்தப் பட்டவர் ட்ராஸ்கி மட்டுமல்ல. 1927 வரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாடுகடத்தப் பட்டுள்ளனர். அதே சட்டம் பலரைக் கைது செய்யவும் உதவியுள்ளது. அப்போது, ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களும் களையெடுக்கப் பட்டதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், அதில் மத்தியதர வர்க்க பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர்கள் தான் பெருமளவில் அரசியல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாது, சுயநலக் காரணங்களுக்காக, குறிப்பாக பதவிக்காக வந்து சேர்வோரும் இருப்பார்கள்.

1927 ம் ஆண்டு, கட்சிக்குள் நடந்த மறுசீரமைப்பில் பலர் வெளியேற்றப் பட்டனர். அதில் பலர் மத்தியதர வர்க்க மனப்பான்மை கொண்டவர்கள், அல்லது பதவிக்காக கட்சியில் ஒட்டிக் கொண்டவர்கள். அந்த இடத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்கள் ஒன்றில் தொழிலாளர்களாக இருந்தனர், அல்லது அவ்வாறான குடும்பப் பின்னணியை கொண்டிருந்தனர். இவ்வாறு தான் வர்க்கப் போராட்டம் ஆரம்பமாகியது.

(முற்றும்)

Thursday, December 07, 2017

ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் சாத்தியமா?

(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - மூன்று)

ட்ராஸ்கி, ஸ்டாலினுக்கு இடையிலான கொள்கை முரண்பாடு, ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டி எழுப்புவது பற்றியது என்று பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். அதை விரிவாக ஆய்வு செய்தால் தான், பிற்காலத்தில் ட்ராஸ்கி சொல்லித் திரிந்த பொய்கள் வெளிச்சத்திற்கு வரும். அன்று ட்ராஸ்கி கூறிய பொய்களை, இன்றும் பல ட்ராஸ்கிசவாதிகள் கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார்கள்.

பலர் தவறாக நினைப்பதற்கு மாறாக, ரஷ்யப் புரட்சி தான் உலகின் முதலாவது பாட்டாளிவர்க்கப் புரட்சி அல்ல. இதற்கு முன்னரும் பல புரட்சிகள் நடந்து தோல்வியடைந்துள்ளன. ஒரு புரட்சியை நடத்துவதை விட அதை தக்க வைத்துக் கொள்வது தான் பெரிய விடயம். அந்த வகையில், தொழிலாளர், விவசாயிகளின் செம்படை ஒன்றை உருவாக்கி, பலமுனைத் தாக்குதல் தொடுத்த எதிரிகளுடன் போரிட்டு வெல்ல வேண்டி இருந்தது.

உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் சோஷலிச மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்குப் பல தடைகள் இருந்தன. ஆகவே, லெனினால் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) அறிமுகப் படுத்தப் பட்டது. அது சந்தைப் பொருளாதாரத்தை உள்ளடக்கி இருந்தது. அரசு மேற்பார்வையின் கீழான முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் புதிய முதலாளிகள், புதிய பணக்காரர்கள் தோன்றி இருந்தனர். மக்கள் அவர்களை "NEP காரர்" என்று அழைத்தனர். ஊடகங்களில் NEP காரருக்கு எதிரான கட்டுரைகளும், கார்ட்டூன்களும் வெளியாகின. அதில் அவர்கள் செல்வத்தில் மிதப்பதை வர்ணனை செய்திருந்தார்கள்.

லெனின் காலமாகி, ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பின்னரும், சோவியத் நாட்டில் சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அப்போது உள்நாட்டுப் போர் முடிந்து அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, இனிமேலும் சந்தைப் பொருளாதாரத்தை தொடர்வதா, அல்லது சோஷலிச கட்டுமானப் பணிகளை தொடங்குவதா என்ற கேள்வி எழுந்தது. உலகம் அன்றிருந்த நிலையில் சோஷலிசம் இறுதி வெற்றி பெறும் என்று யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அதற்குக் காரணம், உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் சோஷலிசம் கட்டப் படவில்லை. அது எப்படி இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது.

1925 ம் ஆண்டு, ஸ்டாலின் "ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டப் பட வேண்டும்" என்று தனது திட்டத்தை தெளிவாக முன்வைத்தார். ட்ராஸ்கி, கமனேவ், சினோவியேவ் போன்றவர்கள் அந்த யோசனையை எதிர்த்தனர். உடனடியாக சோஷலிசத்தை கட்டுவது சாத்தியமில்லை என்றும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் நம்பினார்கள். அதற்கு மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களையும் எடுத்துக் காட்டினார்கள். ஆனால், அவர்களது வாதமானது வெறும் "புத்தக அறிவு" என்பதற்கப்பால் எதுவுமில்லை. அதாவது, "புனித நூலில் எழுதியுள்ள படி தான் நடக்க வேண்டும்" என்பது மாதிரியான மனப்பான்மை கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும், ட்ராஸ்கியின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். இந்த விவாதம் வருடக் கணக்காக நடந்தது! அதுவும் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள்!! கட்சிக் கூட்டங்களில் மட்டுமல்லாது, காணுமிடமெங்கும், இரவு பகலாக, மூலை முடுக்கெல்லாம் பலர் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். சுருக்கமாக சொன்னால், ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவது தொடர்பான விவாதங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகபூர்வமாக நடந்து கொண்டிருந்தன.

இரண்டு தரப்பினரதும் வாதங்கள் துண்டுப் பிரசுரங்களாக அல்லது நூல்களாக அச்சிடப் பட்டு, கட்சியின் மேல்மட்ட, அடிமட்ட உறுப்பினர்கள் எல்லோருக்கும் விநியோகிக்கப் பட்டன. பத்திரிகைகளிலும் வாதங்கள் தொடர்ந்தன. அன்றைய காலத்தில் பேஸ்புக் போன்ற இணைய வழி சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. அந்த இடத்தை பத்திரிகைகளே நிரப்பின. 

நான்கு வருடங்களாக, நாடு முழுவதும் நடந்த அந்த முக்கியமான விவாதங்களின் முடிவில் தான் ட்ராஸ்கி தோல்வியைத் தழுவினார். இறுதியில், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத, திமிர் பிடித்த ட்ராஸ்கி, நாடுகடத்தப் பட்ட பின்னர் "புரட்சி காட்டிக் கொடுக்கப் பட்டது" என்று புலம்பித் திரிந்தார். அந்த நாடுகடத்தல் விவகாரம் கூட சோவியத் சட்ட விதிகளுக்கு அமையவே நடந்ததே அன்றி, ஸ்டாலினின் சுய விருப்பின் பேரில் எடுக்கப் பட்ட முடிவல்ல.

நிச்சயமாக, சோவியத் அரசு பிற உலக நாடுகளில் போராடும் பாட்டாளிவர்க்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய கடமையை மறந்து விட முடியாது. அதே நேரம், ஒரே நாட்டிற்குள் சோஷலிசத்தை கட்டுவதும் முக்கியம் தான். வேறு வழி கிடையாது. ட்ராஸ்கி முன்மொழிந்த யோசனைகளின் படி ஒரு "சோஷலிச சோவியத் யூனியன்" நடைமுறைக்கு வந்திருந்தால், அது இன்றுள்ள சீனா மாதிரி இருந்திருக்கும். 

அதாவது, விசேட வரிகள் விதிப்பதன் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மூலதனத்தை குவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. (அதையே தான் இன்று மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அரசுக்களுக்கு சில இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.)

"சோஷலிச மூலதன திரட்டல் என்றால் என்ன?" ட்ராஸ்கி சார்ந்திருந்த குழுவை சேர்ந்த பிரயோபிராஜென்ஸ்கி அது குறித்து விரிவாக பல கட்டுரைகள் எழுதினார். "நோவயா எகொனோமிக்கா" (புதிய பொருளாதாரம்) இதழில் பிரசுரமான கட்டுரைகளின் சாராம்சத்தை இங்கே தருகிறேன்.
//முதலாளித்துவ மூலதனக் குவிப்புடன் அவர் இதனை ஒப்பிடுகிறார். அதாவது, மேற்குலகில் உள்ள முதலாளித்துவ மூலதனமானது காலனிகளை சுரண்டியதன் மூலம் குவிக்கப் பட்டது. அத்துடன் கைத்தொழில் புரட்சியால் உருவான நிறுவனங்களின் உபரி மதிப்பும், அரசு வரிகளும், அரசு கடன்களும் சேர்ந்து மூலதனத்தை திரட்டியுள்ளன. ஆனால், சோவியத் யூனியன் எந்தக் காலனியையும் சுரண்ட முடியாது. அது சாத்தியமில்லை. ஆகவே, எஞ்சி இருக்கும் நடைமுறைகளை பிரயோகிக்கலாம். குட்டி பூர்ஷுவா வர்க்கம் இல்லாத விவசாயப் பொருளாதாரத்தை கட்ட முடியும் என நினைப்பது நடைமுறைச்சாத்தியமில்லாத கனவு.// ட்ராஸ்கி மேற்படி ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரித்தானியாவில் இருந்த ஆரம்பகால முதலாளித்துவம், குறைந்தது நூறாண்டுகளுக்குப் பிறகு தான் தொழிற்புரட்சியை நடத்தும் அளவிற்கு வளர்ந்திருந்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் அடுத்து வந்த பத்து வருடங்களுக்குள் தொழிற்புரட்சியை நடத்த திட்டமிட்டார். அதுவும் முதலாளித்துவம் இல்லாமல், சோஷலிச மூலதனத்தை திரட்ட வேண்டி இருந்தது. சோவியத் யூனியன் அன்றிருந்த நிலைமையில், அதாவது பொருளாதார வளர்ச்சியில் மேற்குலகை விட பல வருடங்கள் பின்தங்கி இருந்த ஒரு நாட்டில் இது சாத்தியப் படுமா? நிச்சயமாக, அன்று பலரது கேள்வியும் அதுவாகத் தான் இருந்திருக்கும்.

சோஷலிச மூலதனத்தை திரட்டுவதற்காக, நாடு முழுவதும் கூட்டு விவசாயப் பண்ணைகள் அமைப்பதற்கு திட்டமிடப் பட்டது. இதில் விவசாயிகளை சுய விருப்பின் பேரில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. இருப்பினும், சில இடங்களில் கட்டாயப் படுத்தி சேர்த்த சம்பவங்களும் நடந்துள்ளன. அது பெரும் போராட்டமாக நடந்தது. நாட்டுப்புறங்களில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை எதிர்த்து நின்ற பணக்கார விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். அதே நேரம், கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்களை எதிர்த்தும் போராட வேண்டி இருந்தது.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடக் கூடாது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளில் "ஸ்டாலினிச அடக்குமுறை" தேவைப் பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தேவையான மூலதனத்தை ஈவிரக்கமின்றி காலனிகளை சுரண்டுவதன் மூலம் திரட்டிக் கொண்டனர். அதாவது, ஸ்டாலின் காலத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கைதுகள், படுகொலைகள் ஐரோப்பிய காலனிகளில் நடந்துள்ளன.

ஆகையினால், குலாக் என்ற பணக்கார விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையையும், அங்கு நடந்த தொழிற்புரட்சியுடன் சேர்த்துப் பார்க்கப் பட வேண்டும். அது நடந்திருக்கா விட்டால், தொழிற்துறை வளர்ச்சி கண்டிருக்க முடியாது. உண்மையில் கட்சிக்குள் யாருமே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் கருத்து முரண்பாடு இருந்தது. ட்ராஸ்கி, புகாரின் ஆகிய எதிர்தரப்பினர் குலாக் மீது கடும் வரி விதிக்கலாம் என்று பிரேரித்தனர். குறைந்தது ஒரு வருட காலம் அது பற்றி விவாதிக்கப் பட்டது. இறுதியில் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் அந்த யோசனையை நிராகரித்தனர்.

"ஸ்டாலினின் கொடுங்கோன்மை" பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதும், "கம்யூனிசம் என்றால் இப்படித் தான் கொலைகள் நடக்கும்" என்று பயமுறுத்துவதும் சிறுபிள்ளைத்தனமான செயல். அது அன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் அவசியம். அதுவே எல்லா நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் நடக்கும் என்று நினைப்பது சுத்த அபத்தம். "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" கொண்டு வந்த தொழிற்புரட்சியின் விளைவாக கிடைத்த பயன்பாடுகளைத் தான் இன்றைய ரஷ்யர்கள் அறுவடை செய்கின்றனர். தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஒவ்வொரு நாட்டிலும் ஒரு காலத்தில் "ஸ்டாலினிச காலகட்டம்" இருந்திருக்கும்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

Wednesday, December 06, 2017

ட்ராஸ்கியின் கரங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தது!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - இரண்டு)

"ட்ராஸ்கி எந்தக் கொலை பாதகச் செயலையும் செய்திராத, எப்போதும் எழுதிக் கொண்டிருந்த அப்பாவி" என்பது போன்றதொரு மாயையை ட்ராஸ்கிசவாதிகளும், மேற்குலகமும் சேர்ந்து உண்டாக்கி வைத்துள்ளன. அதில் எந்த உண்மையும் இல்லை. இன்னொரு விதமாக சொன்னால், ட்ராஸ்கியின் கையில் அதிகாரம் இருந்த காலத்தில் அவர் "இன்னொரு ஸ்டாலினாக" இருந்தார். அக்டோபர் புரட்சியின் பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசியல் கைது ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நடந்தது.

ரஷ்யாவில் விளாடிமிர் பூர்த்சாவ் (Vladimir Burtsav) என்ற பிரபலமான இடதுசாரி எழுத்தாளர் இருந்தார். சார் மன்னன் காலத்தில் ஊடுருவலாளர்கள், உளவாளிகள், போன்றவர்களை அம்பலப் படுத்தி எழுதி வந்தார். இதனால் ஒரு தடவை நாடுகடத்தப் பட்டு திரும்பி வந்திருந்தார். சிறிது காலம் போல்ஷெவிக் கட்சியை ஆதரிப்பதாக போக்குக் காட்டி விட்டு, பின்னர் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர்களை ஜெர்மன் கைக்கூலிகள் என்று தூற்றி வந்தார். அத்துடன், யூதர்களுக்கு எதிரான "சியோன் ஞானிகளின் அறிக்கை" நூல் வெளியிடவும் காரணமாக இருந்தவர்.

அக்டோபர் புரட்சிக்கு முன்னர், போல்ஷெவிக் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று நினைத்து அதில் சேர்ந்து கொண்ட மாற்று இயக்கத்தவர் பலர் இருந்தனர். பூர்த்சாவ் அப்படியான கட்சி மாறிகளை தோலுரித்துக் கொண்டிருந்தார். ட்ராஸ்கியும் அப்படியானவர் தானே? அதனால் தானோ என்னவோ புரட்சி நடந்த அன்றிரவே பூர்த்சாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். ஒரு வருட சிறைவாசத்தின் பின்னர், எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி போட்ட கருணை மனுவிக்கிணங்க விடுதலை செய்யப் பட்டு நாடுகடத்தப் பட்டார்.

1917 ம் ஆண்டு புரட்சி நடந்திருந்தாலும், அதற்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போர் தான் முக்கியமானது. அந்த யுத்தத்தில் நடந்த பேரழிவுகள், மனிதப் படுகொலைகள் ஏராளம். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் "வெண் படைப் பயங்கரத்திற்கு எதிரான செம்படைப் பயங்கரம்" பற்றியும் விவரித்து எழுதி இருக்கிறார்கள்.

இதை நாம் "புரட்சிகர வன்முறை" என்று அழைப்பதே பொருத்தமானது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் பிரான்ஸில் இரத்த ஆறு ஓடியது. அப்போது நடந்த படுகொலைகள், சொத்தழிவுகள், தேவாலய இடிப்புகள் எண்ணிலடங்காதவை. அதே மாதிரியான நிலைமை தான் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் ஏற்பட்டிருந்தது.

அப்போது போல்ஷெவிக்குகள் அதை "போர்க்கால கம்யூனிசம்" என்று அழைத்தனர். அதாவது, புரட்சியின் குறிக்கோளான சோஷலிச சமுதாய மாற்றத்தை உடனடியாக கொண்டு வர முடியாத நிலைமை. ஏனெனில், நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்ட நேரத்தில் போரை நடத்துவதே முதன்மையானது. இருப்பினும், செம்படை கைப்பற்றும் பகுதிகளில் தற்காலிக ஏற்பாடாக சில மாற்றங்களை நடைமுறைப் படுத்தலாம். அதற்கு வன்முறை பாவிக்கலாம்.

ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, தான் கைப்பற்றிய இடங்களில் "போர்க்கால கம்யூனிச அதிகாரத்தை" நிலைநாட்டியது. அதன் அர்த்தம், நிலவுடமையாளர்கள், பணக்கார விவசாயிகள், உள்ளூர் முதலாளிகள் போன்றவர்கள், எந்த வித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் பட்டனர். கூட்டுப் பண்ணைத் திட்டம் அமுல் படுத்தப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன.

செம்படைக்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். அதாவது பிற்காலத்தில் ட்ராஸ்கி எதையெல்லாம் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" என்று சொல்லித் திரிந்தாரோ, அவை எல்லாம் அன்றே ட்ராஸ்கியால் நடைமுறைப் படுத்தப் பட்டன! அதாவது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

அன்று ரஷ்யாவில் யார் யாரை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்று தெரியாத குழப்ப நிலை. செம்படைக்கும், வெண்படைக்கும் இடையில் போர் நடந்தது என்பது மிகவும் இலகுபடுத்தப் பட்ட பதில். சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படை மட்டுமல்லாது, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி என்ற போல்ஷெவிக்குகளுக்கு எதிரான இன்னொரு இடதுசாரி கட்சியும் தனியே ஆயுதக்குழு அமைத்து செம்படையை போரிட்டது. குறிப்பாக சைபீரியா பகுதிகளில் இருந்த விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. இறுதிப் போரில் அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்.

புரட்சியின் ஆரம்ப காலத்தில், சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் கட்சியுடன் சேர்ந்து அரசமைத்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப் பட்டநேரம், போல்ஷெவிக் கட்சியினர் மட்டுமல்லாது, சிறிய அளவில் சோஷலிச புரட்சியாளர் கட்சியினரும், பெருமளவில் அனார்க்கிஸ்டுகளும் (நிர்ப்பந்தத்தின் பேரில்) சேர்க்கப் பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் லெனினின் போல்ஷெவிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒன்று கலந்தவர்கள். (இதுபற்றி உத்தியோகபூர்வ வரலாற்று நூல்களில் எழுதப் படவில்லை. இருப்பினும் அவ்வாறு தான் நடந்தது என்பது மக்களில் பலருக்கும் தெரிந்திருந்தது.)

அதே நேரம் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி தனியாக இயங்கி வந்தது. முதலாம் போரை நிறுத்துவதற்காக, லெனின் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் போட்டதை காரணமாகக் காட்டி சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் அரசைக் கவிழ்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போது தான் அவர்களது ஆயுதக் குழுவும், வெண் படையுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டது.

இதே நேரம், தலைநகரில் லெனினைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப் படுத்தியவர் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர். லெனின் கொலை முயற்சியின் எதிரொலியாக, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் வேட்டையாடப் பட்டனர். அதன் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் ஒன்றில் சிறையில் அடைக்கப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

சோஷலிச புரட்சியாளர்கள் கட்சிக்கு எதிரான அழித்தொழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம், ட்ராஸ்கி அதிகாரத்தில் இருந்தார். அன்று அவர் இதையெல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஸ்டாலினின் சர்வாதிகாரம் பற்றிப் பேசுவது உள்நோக்கம் கொண்டது. இது ட்ராஸ்கியின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது. "லெனின் மீதான கொலை முயற்சிக்கு பின்னர் யாரும் கைது செய்யப் படவில்லை" என்று, இன்றைய ட்ராஸ்கிஸ்டுகள் பரப்பும் கதைகளில் உண்மை இல்லை. அது வழமையாக ட்ராஸ்கியின் குற்றங்களை மறைப்பதற்காக சொல்லப்படும் பொய்களில் ஒன்று.

"வெண் படைக்கு சற்றும் குறையாத வகையில் செம்படையினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்" என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. எதிரிக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை சுட்டுக் கொன்றமை, கட்டாய ஆட்சேர்ப்புகள், தானியங்களை பறிமுதல் செய்தல், என்று பல போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பிலும் நடந்துள்ளன.

சில இடங்களில் போர் வன்முறைகளால் வெறுப்படைந்த விவசாயிகள் கலகம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. நகரங்களுக்கு உணவு கொண்டு செல்லும் வழிகளை விவசாயிகள் தடுத்தனர். போரினால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக பல இடங்களில் பட்டினிச் சாவுகளும் நடந்துள்ளன. இவை எல்லாம் ட்ராஸ்கி செம்படைக்கு தலைமை தாங்கிய காலத்தில் நடந்தவை! ஆனால், மேற்கத்திய அல்லது ட்ராஸ்கிச பரப்புரையாளர்கள் அதை எல்லாம் தந்திரமாக ஸ்டாலினின் கணக்கில் போட்டு விட்டனர். எல்லாப் பழியும் ஸ்டாலினுக்கே!

ட்ராஸ்கி செய்த படுகொலைகளின் உச்சகட்டம் குரோன்ஸ்டாட் தீவில் இடம்பெற்றது. குரோன்ஸ்டாட் (Kronstadt: ஒரு ஜெர்மன் பெயர்) என்பது பின்லாந்துக்கு கீழே, சென் பீட்டர்ஸ்பெர்க் அருகில் அமைந்துள்ள ஒரு தீவு. அங்கு ஒரு கடற்படைத் தளம் இருந்தது. (இப்போதும் இருக்கிறது) குரோன்ஸ்டாட் கடற்படையினர், அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்காற்றினார்கள். அதைப் பற்றி ட்ராஸ்கியும் "புரட்சியின் மகிழ்ச்சியும், பெருமையும்" என்று புகழ்ந்து பேசி இருந்தார். அப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய குரோன்ஸ்டாட் கடற்படையினர், அதே ட்ராஸ்கியால் படுகொலை செய்யப் படுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

உண்மையில், உள்நாட்டுப் போர்க் காலத்தில் நடந்த அளவுகடந்த வன்முறைகள், அதனால் ஏற்பட்ட பஞ்சத்திற்கு ட்ராஸ்கியும் பொறுப்பேற்க வேண்டும். அன்று நடந்த போரின் விளைவாக, நாடு முழுவதும் உணவுத் தட்டுப்பாடும், பஞ்சமும் நிலவியது. அதனால், குரோன்ஸ்டாட் தீவுக்கு உணவு விநியோகம் நடக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த கடற்படையினரும் மக்களும் போல்ஷெவிக் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அங்கு அனார்க்கிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது சோவியத் அமைப்பு போல்ஷெவிக் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனித்து இயங்கியது.

பிற்காலத்தில் "ஸ்டாலின் மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்கினார்" என்று புலம்பித் திரிந்த ட்ராஸ்கி 1921 ம் ஆண்டு செய்தது என்ன? போல்ஷெவிக் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து கலகம் செய்த குரோன்ஸ்டாட் சோவியத் மீது குண்டு போட உத்தரவிட்டார். ஏற்கனவே பஞ்சத்தால் பாதிக்கப் பட்டிருந்த குரோன்ஸ்டாட் கடற்படையினர் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ட்ராஸ்கி தலைமையிலான செம்படை வீரர்கள் குரோன்ஸ்டாட் சோவியத்தை கலைத்ததுடன், கிளர்ச்சியில் சம்பந்தப் பட்டவர்களைப் பிடித்து சுட்டுக் கொன்றனர். எஞ்சியவர்களை சிறைப் பிடித்தனர். குறிப்பிட அளவினர் பின்லாந்திற்கு தப்பியோடி விட்டனர். அன்று நடந்த படுகொலைகளில் குறைந்தது பத்தாயிரம் பேர் பலியாகி இருப்பார்கள். ஆம், அவை ட்ராஸ்கி செய்த படுகொலைகள்!

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

Monday, December 04, 2017

புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்


யார் இந்த ட்ராஸ்கி?

 இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி போன்றதொரு கட்சி தான், ஆரம்பத்தில் ரஷ்யாவிலும் இருந்தது. 1903 ம் ஆண்டளவில் கட்சிக்குள் நிலவிய கொள்கை முரண்பாடுகளின் விளைவாக போல்ஷெவிக், மென்ஷெவிக் என இரண்டு பிரிவுகள் உருவாகின. மென்ஷெவிக் பிரிவு தொடர்ந்தும் சமூக ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வந்தது.

1917 ம் ஆண்டு வரையில், ட்ராஸ்கி மென்ஷெவிக் பிரிவில் தான் இருந்தார். ஆகையினால், அவர் பின்னர் கட்சி மாறி போல்ஷெவிக் பிரிவில் இணைந்து கொண்ட போதிலும், சமூக ஜனநாயகக் கருத்துக்கள் அவரது ஆழ்மனதில் பதிந்திருக்கும். ட்ராஸ்கி சொல்லிக் கொண்டு திரிந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அடிப்படையில் ஒரு சமூக ஜனநாயகவாத அரசியல் தான். புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்லலாம்.

அன்றைய ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும், முதலாம் உலகப்போர் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் மென்ஷெவிக் - போல்ஷெவிக் பிளவு ஒரு கொதி நிலைக்கு வந்தது. அன்று ஐரோப்பாவில் இருந்த பிற சமூக ஜனநாயக கட்சிகள் போன்று, மென்ஷெவிக் பிரிவினரும் முதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து முதலாம் உலகப்போரை ஆதரித்தனர். அதை நாட்டுப் பற்று என்ற தேசியவாத கருத்தியலால் நியாயப் படுத்தினார்கள். அன்று ட்ராஸ்கியும் அதைப் பிரதிபலித்து வந்தார்.

ஆனால், போல்ஷெவிக் கட்சியினர் உலகப் போருக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்தனர். "ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றி, முதலாளிய வர்க்கத்திற்கு எதிரான புரட்சியில் ஈடுபட வேண்டும்" என்ற லெனினின் அறைகூவல், ட்ராஸ்கி அங்கம் வகித்த மென்ஷெவிக் பிரினரால் கடுமையாக எதிர்க்கப் பட்டது.

ஆகவே, ட்ராஸ்கி ஒரு காலத்தில் "போல்ஷெவிக் எதிர்ப்பாளராக" இருந்தவர். அப்படியானவரது நம்பகத்தன்மை, பின்னாளில் போல்ஷெவிக் உறுப்பினரான காலத்தில் சந்தேகிக்கப் பட்டதில் தவறில்லை. 1923 ம் ஆண்டு, ட்ராஸ்கி மீண்டும் தூசு தட்டி எடுத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அந்த சந்தேகத்தை மேலும் உறுதிப் படுத்தியது.

1917 பெப்ரவரி புரட்சிக்குப் பின்னர், ட்ராஸ்கி மென்ஷெவிக் கட்சியில் இருந்து விலகி, நடுநிலைமை வகித்த குழுவொன்றில் சேர்ந்து கொண்டார். அப்போது அவர் முதலாம் உலகப்போருக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்ததுடன், மெல்ல மெல்ல போல்ஷெவிக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். அதே வருடம் கோடை காலத்தில் (அதாவது அக்டோபர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்னர்), அன்று நடுநிலை வகித்த குழுவில் இருந்த அனைவரும் போல்ஷெவிக் கட்சியில் சேர்ந்து கொண்டனர்.

ட்ராஸ்கியின் மென்ஷெவிக் கடந்த காலம் தொடர்பான எச்சரிக்கை உணர்வு லெனினிடம் எப்போதும் இருந்து வந்துள்ளது. அவர் இதைப் பல தடவைகள் வெளிப்படுத்தி உள்ளார். "குட்டி பூர்ஷுவா ட்ராஸ்கியின் ஊசலாட்டம்" பற்றி லெனின் தனது எழுத்துகளில் குறிப்பிட மறக்கவில்லை. இருப்பினும் படித்த மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் ட்ராஸ்கிக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கட்சிக்குள் பொறுப்பான பதவி கொடுக்கப் பட்டிருக்கலாம்.

ட்ராஸ்கி செம்படையை உருவாக்கி இருந்தாலும், உண்மையில் அவர் இராணுவத்துறை சார்ந்த அனுபவம் கொண்டவர் அல்ல. செம்படை என்பது அடிப்படையில் "தொழிலாளர், விவசாயிகளின் படை". ஆனால், போரியல் அனுபவம் இல்லாத தொழிலாளர், விவசாயிகளுக்கு இராணுவ பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது.

அன்று உண்மையில் உள்நாட்டுப் போரை நடத்தியவர்கள், போரியல் அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகள் தான். முன்னர் சார் மன்னனின் படையில் இருந்த, ஆனால் அரசியல் ஈடுபாடில்லாத அதிகாரிகள் பலர், தாமாகவே விரும்பி வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களுடன், அக்டோபர் புரட்சியில் பங்கெடுத்த படைவீரர்களும் இருந்தனர்.

சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் திறமை படைத்த ட்ராஸ்கி, எப்போதும் தன்னை ஒரு மத்தியதர வர்க்க அறிவுஜீவி போன்றே காட்டிக் கொண்டவர். அவருக்கும் பாட்டாளிவர்க்க அரசியலுக்கும் வெகுதூரம். அதன் தொடர்ச்சியை இன்றைக்கும் சர்வதேச ட்ராஸ்கியவாதிகள் மத்தியில் காணலாம்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் தான் பெருமளவு ட்ராஸ்கிஸ்டுகள் உள்ளனர். குறிப்பாக படித்த மத்தியதர வர்க்க (குட்டி பூர்ஷுவா) இளைஞர்கள் மத்தியில் ட்ராஸ்கிச செல்வாக்கு அதிகமாக இருப்பதைக் காணலாம். அவர்களது ஸ்டாலினிச எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் "ஸ்டாலின் அறிவுஜீவிகளை கொன்றொழித்தார்" என்று புலம்புவதைக் காணலாம்.

ட்ராஸ்கிசவாதிகள் வரலாற்றை திரித்து கற்பனைக் கதைகளை எழுதி விட்டு, எல்லோரும் அதையே உண்மையென நம்ப வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஸ்டாலின் தொடர்பாக மேற்குலக முதலாளிய எதிரிகள் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை, இவர்களும் காவித் திரிகிறார்கள். பொதுவாக எதிரிகளிடம் இருந்து விஷமத்தனமான பரப்புரைகள் வருவது எதிர்பார்க்கத் தக்கதே. ஆனால், தம்மை மார்க்சிய - லெனினிசவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகளும் அப்படியே நம்பலாமா?

ட்ராஸ்கிசவாதிகள் லெனினை அப்பழுக்கற்றவர் என்று புகழ்வதும் ஒரு காரணத்தோடு தான். அது லெனின் மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல. ட்ராஸ்கியின் பெருமையை பேசுவதற்கு லெனினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். அவர்களுக்கு எல்லாம் ட்ராஸ்கி தான். லெனின் "தொட்டுக் கொள்ள ஊறுகாய்" போன்று பயன்படுகின்றார்.

லெனினுக்கும், ட்ராஸ்கிக்கும் இடையில் எந்த முரண்பாடும் இருக்கவில்லை என்று, ட்ராஸ்கி லெனினின் நம்பிக்கைக்குரிய சீடராகவும் இருந்தார் என்றும் ட்ராஸ்கிசவாதிகள் செய்யும் பரப்புரையில் எந்த உண்மையும் இல்லை.

1921 ம் ஆண்டு நடந்த பத்தாவது காங்கிரஸில், உழைப்பை இராணுவமயமாக்கும், தொழிற்சங்கத்தை அரசு நிறுவனமாக்கும் ட்ராஸ்கியின் பரிந்துரைகளை லெனின் கடுமையாக எதிர்த்து வாதாடினார். அதே நேரம், ஆலோசனைச் சபையின் உப தலைவராக ட்ராஸ்கியை நியமிப்பதையும் லெனின் எதிர்த்து, ட்ராஸ்கியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதே நேரம், லெனின் எந்த விமர்சனமும் இல்லாமல் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் அல்ல. தனிப்பட்ட முறையில், லெனினின் மனைவி குருப்ஸ்கயா ஸ்டாலினுடன் பிரச்சினைப் பட்ட நிகழ்வுகள் அரசியல் மட்டத்திற்கு வரவில்லை. லெனின் வாழ்ந்த காலத்திலேயே, ஸ்டாலினுக்கு அதிகளவு அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதை லெனின் விமர்சித்திருந்தார்.

அவை எல்லாம் லெனினுக்கு முக்கியமான முரண்பாடுகளாக படவில்லை. லெனின் சில பொறுப்புகளை ட்ராஸ்கிக்கு கொடுக்க விரும்பிய காரணம் வேறு. புரட்சி முடிந்தவுடன் ஸ்டாலினுக்கு தேசிய இனங்களின் கமிசார் பதவி அளிக்கப் பட்டிருந்தது.

ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஜோர்ஜியர். ஆனால், ரஷ்ய பெருந்தேசிய இனத்திற்குள் ஒன்றுகலந்து தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டவர். "ரஷ்யர்களை விட மேலான ரஷ்யர்கள்" என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு நம்மில் சிலர் சரளமாக ஆங்கிலம் பேசி, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கியவுடன், ஐரோப்பியரை விட மேலான ஐரோப்பியராக காட்டிக் கொள்வார்கள்.

அப்படியானவர்கள் நம்பி பொறுப்புக் கொடுத்தால், ஜோர்ஜிய பிரச்சினையை சரியாகக் கையாள மாட்டார்கள் என்ற எண்ணத்தில், லெனின் ட்ராஸ்கியை அணுகி இருக்கிறார். அதாவது, ஸ்டாலினை கீழிறக்கி விட்டு, ட்ராஸ்கியை உயர்த்துவதற்காக லெனின் அதைச் செய்யவில்லை. ட்ராஸ்கியின் இராணுவவாத போக்கு, ஏற்கனவே லெனினால் கண்டிக்கப் பட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால், ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி வந்திருந்தால், ஸ்டாலினை விட மோசமானதொரு இராணுவ சர்வாதிகாரியாக இருந்திருப்பார். ட்ராஸ்கி எப்படிப் பட்டவர் என்பது லெனினுக்கும் தெரிந்திருந்தது.

லெனின் வாழ்ந்த காலத்திலேயே, போல்ஷெவிக் கட்சிக்குள் ட்ராஸ்கியை விட ஸ்டாலினுக்கு தான் அதிக ஆதரவு இருந்தது. கட்சிக்குள் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருவதையும், இது அளவுகடந்த அதிகாரத்தை வழங்கி விடும் என்ற லெனினின் அச்சத்தை குருப்ஸ்கயா தெரிவித்து இருக்கிறார். இருப்பினும், ட்ராஸ்கியின் மென்ஷெவிக் கடந்த காலம் காரணமாக, கட்சிக்குள் யாரும் அவரை நம்பத் தயாராக இருக்கவில்லை.

1923 ம் ஆண்டு, போல்ஷெவிக் கட்சிக்குள் ட்ராஸ்கிக்கு மிகக் குறைந்த அளவு ஆதரவு தான் இருந்தது. அதனால், தான் ஸ்டாலினின் இடத்தை பிடிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற உண்மை ட்ராஸ்கிக்கு தெரிந்தே இருந்தது. கட்சிக்குள் பெருமளவு ஆதரவு பெற்றிருந்த ஸ்டாலினை ட்ராஸ்கி குறைத்து மதிப்பிட்டு இருந்தார். அன்று ட்ராஸ்கிக்கு ஒரேயொரு வழி மட்டுமே இருந்தது. செம்படையின் தலைமைத் தளபதியாக இருந்த படியால், இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கலாம். இருப்பினும், இது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் அபாயத்தையும் ட்ராஸ்கி உணராமல் இல்லை.

(தொடரும்) 


ட்ராஸ்கிசம் தொடர்பான இன்னொரு பதிவு: