Saturday, June 26, 2021

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை

 


மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

Friday, June 18, 2021

வட கொரிய வாழைப்பழ கதை! (12+ சிறுவர்களுக்கு மட்டும்)

 

வட கொரியா - ஒரு வாழைப்பழ ஜோக் கதை! 
(12+ சிறுவர்களுக்கு மட்டும்) 
மாலைமலர் பத்திரிகையில் வட கொரியா புனைகதை எழுதும் போட்டியில் முதல் பரிசு வென்றவர் எழுதிய கற்பனைக் கதையில் ஒரு பகுதி: 
//விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. 1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது.//

புவியியல் கற்போம்: 
வட கொரியா ஒரு குளிர் நாடு. அதாவது, புவியின் கடுங் குளிர்ப் பிரதேசமான, வட துருவத்தை அண்டிய (ரஷ்யாவின்) சைபீரிய பிராந்தியத்திற்கு சற்று கீழே உள்ளது. வாழை மரம் வெப்ப மண்டல பிரதேசத்தில் மட்டுமே வளரும் தாவரம். அது கடும் குளிர் பிரதேசத்தில் வளராது.

பொருளியல் கற்போம்: 
ஆகவே வடகொரியாவில் வாழைப்பழம் வாங்க வேண்டுமானால், அது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட வேண்டும். அதிலும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் தாண்டி வரவேண்டும். இதற்குள், கடந்த வருடத்திய கொரோனா நெருக்கடிகள் வேறு. இதை எல்லாம் தாண்டி வாழைப்பழம் வருவதற்குள் அதன் விலை பல மடங்கு உயர்ந்து விடும். மேலும் அது அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் இறக்குமதிக்கான தேவையும் குறைவாக இருக்கும். சந்தையில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு இருந்தால் விலை அதிகரிக்கும். அடிப்படை முதலாளித்துவ விதி.

மாலைமலர் காமெடி: 
//1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது. இவற்றை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.// 
ஓஹோ...! வட கொரியாவில் வாழைப்பழம் தான் மக்களின் பிரதானமான உணவு போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சோற்றுக்கு பதிலாக வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவார்களாம். அத்தகைய பிரதானமான உணவு கிடைக்காமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்களாம். கேட்பவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓடுமாம்.

மாலைமலரின் மலையளவு புளுகு: 
//பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும் அவர்களில் பலர் 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடுவதாகவும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.//

ஆங்கிலம் கற்போம்: 
மாலைமலர் காமெடி எழுத்தாளர் தான் எழுதிய புனைவுக்கு ராய்ட்டர் செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டுகிறார். ஏனென்றால் இங்கே யாருக்கும் ராய்ட்டர் செய்தி வாசிக்கும் அளவுக்கு ஆங்கிலம் தெரியாது பாருங்க! எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணம்? இந்த சுட்டியில் ராய்ட்டர் செய்தியை இணைத்திருக்கிறேன். அதில் மாலைமலர் புளுகுவது மாதிரி எங்கே எழுதி இருக்கிறது? 


மாலைமலர் நிருபர் போதையில் உளறியது: 
//நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அதிபர் கிங்ஜாங் உன்னும் ஒப்புக்கொண்டுள்ளார்.// 
அங்கு பஞ்சம் நிலவுவதாக இதுவரை உலகில் யாரும், எந்தவொரு ஊடகமும் தெரிவிக்கவில்லை. இது மாலைமலர்க் காரன் தானாக இட்டுக் கட்டிய கதை.

சமூகவியல் கற்போம்: 
வட கொரியா பொருளாதாரத் தடைகள், கொரோனா காரணமாக எல்லைகளை மூடியமை, சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் உணவுப் பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது தான் செய்தியின் சாராம்சம். அதிலும் வட கொரியாவில் மக்கள் அனைவருக்குமான உணவுப் பங்கீட்டை அரசே பொறுப்பெடுத்து செய்கின்றது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி பாரபட்சம் காட்டாமல் உணவு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தான் வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாலைமலர் பத்திரிகை வெளியாகும் இந்தியாவில் நிலைமை அப்படியா இருக்கிறது? கடந்த வருடமும், இப்போதும் லொக் டவுன் காலத்தில், எத்தனை இலட்சம் ஏழை மக்கள் உணவில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள் என்பது இந்தப் பத்திரிகைக்கு தெரியுமா? "ஐயகோ, இந்திய மக்கள் அனைவருக்கும் எப்படி உணவளிப்பேன்?" என்று, பாரதப் பிரதமர் மோடிஜி என்றைக்காவது சொல்லி இருப்பாரா? "யோவ்! மாலைமலரு, மொதல்ல ஒன்னோட நாட்டை பாருய்யா! அதுக்கு அப்புறம் வட கொரியாவுக்காக கண்ணீர் வடிக்கலாம்!"

இந்த உணவுத் தட்டுபாட்டுப் பிரச்சினை இன்று உலகின் பல நாடுகளிலும் உள்ளது. ஏனென்றால் கொரோனா முடக்கம் காரணமாக சர்வதேச போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் Brexit காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டதால் அந்த நிலைமை தவிர்க்கப் பட்டது. அதற்காக பிரித்தானியாவில் பஞ்சம் நிலவுகிறது என்று யாரும் சொல்லவில்லை. சொன்னாலும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால், வடகொரியாவை பற்றி எவனும் எப்படியும் கதை கட்டி விடலாம். நம்புவதற்கு ஏராளம் முட்டாள் பசங்க இருக்காங்க!

மாலைமலர் புளுகுக் கட்டுரையை வாசிப்பதற்கு: 

Wednesday, June 09, 2021

The Family Man - 2 விமர்சனம்: "தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?"

 

அமேசன் தொலைக்காட்சித் தொடர் பேமிலி மேன் பற்றிய விமர்சனம். சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்தது தான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு பேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.

இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம் தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும் காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.

இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called "புலி ஆதரவாளர்கள்", அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப் படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். "புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?" என்ற கணக்காக பொரிந்து தள்ளி விட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.

பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்து தான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.

உண்மையில் பேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து "குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்" படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்து விட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம் தான்.

ஏற்கனவே செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால் ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் பேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப் படம். 

உண்மையில், வட இந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் பேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு "காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்" என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத் தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல் தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும் அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.

குறிப்பாக சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் பேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார். 

கவனிக்கவும்: "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை" என்று தமிழினவாதிகள்(வலதுசாரிகள்) மட்டும் தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள்!

இதை "ஆரிய - திராவிட முரண்பாடு" என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் "சிங்கள - தமிழ் முரண்பாடு" அல்லது "ஹிந்தி - தமிழ் முரண்பாடு" என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வட இந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை பேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.

இந்தப் படத்தில் வட இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.

ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போது தான் சன நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். "இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?" என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். பேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.

பேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே "பழைய பஞ்சாங்கம்" தானாம்! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப் படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித் தான், வட இந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள். 

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.

பொதுவாகவே வட இந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப் பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வட இந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.

இதனை என்னுடன் பேசிய சில வட இந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் "தொப்புள்கொடி உறவு பாசம்" கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு "போட்டுக்" கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப் படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் பேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.

உதாரணத்திற்கு புலனாய்வுத்துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்லமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம் தான், லண்டனில் இயங்கும் நாடுகடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.

எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த பேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு "தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்..." வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.

அதற்கு பேமிலி மேன் சொல்லும் பதில் என்ன? "நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம்! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம்!"

இங்கே சில உதாரணங்களை பார்ப்போம்: 
- இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால் உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி!

- லண்டனில் மறைந்து வாழும் "புலிகள்"(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் "உப தலைவர்" தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில் தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.

இப்படிப் போகிறது கதை!

Monday, June 07, 2021

James Bond முதல் Family Man வரை

- ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப் பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போது தான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். "இஸ்லாமியர்களை நம்ப முடியாது... குண்டு வைப்பார்கள்..." என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு- இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.

இவ்வாறு எந்தவிதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man - 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:

1. இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள் தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.

2. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை "உண்மையான தமிழினப் பற்றாளர்கள்" என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப் படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)

3. இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், "இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன" என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத் தான் சொல்வார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம்,  இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.

4. அமெரிக்காவில் ஸ்தாபிக்கப் பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்று நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள். 

 *****

சரி, இனிமேல் Family Man - 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலைமையில், Family Man - 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப் போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.