Wednesday, March 28, 2018

அரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்


Secret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது Netflix இணைய வீடியோ சேவையில் வெளியாகியுள்ள டிவி நாடகம். ஒரு துப்பறியும் மர்மக் கதையாக விறுவிறுப்பாக செல்லும் இந்தத் தொடர், எகிப்திய சமூகத்தில் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகளை மிக எளிமையாக விளக்குகிறது. படக் கதை ஐம்பதுகளில் நடக்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடை, உடை, பாவனைகள் தத்ரூபமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

 எகிப்தின் தென் பகுதியில், நைல் நதியோரம் அமைந்துள்ள அஸ்வான் நகரில் உள்ள Grand Hotel தான் கதைக் களம். அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் தங்கை டோஹாவை தேடி ரயிலில் வரும் கதாநாயகன் அண்ணன் அலியுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒழுங்காக கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்த தங்கையிடம் இருந்து மாதக் கணக்காக எந்தப் பதிலும் இல்லாத படியால் தேடி வருகிறான்.

அஸ்வான் நகரை வந்தடைந்த பின்னர், ஹோட்டல் நிர்வாகம் நகை திருடிய குற்றச்சாட்டில் தங்கையை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக அறிகிறான். தனது சகோதரி திருடி இருக்க மாட்டாள் என்று நம்பும் அண்ணன் அலி, ஹோட்டலில் வேலை செய்யும் அமீனின் நட்பைப் பெற்று, உணவு பரிமாறுபவர் வேலையில் சேர்ந்து கொள்கிறான்.

டோஹா எதையும் திருடவில்லை என்பதும், அவள் காணாமல் போனதிற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. அது பற்றி ஆராயும் அலி, ஹோட்டல் மனேஜருக்கும் டோஹாவுக்கும் இடையிலான காதல் உறவை கண்டறிகிறான். கதாநாயகியான நஸ்லி என்ற மைத்துனியை திருமணம் செய்யவிருக்கும், மனேஜர் மூராட், ஏற்கனவே ஹோட்டலில் வேலை செய்யும் இன்னொரு பணிப்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறான்.

படத்தின் தொடக்கத்தில் காணாமல் போன டோஹா அப்போது கொலை செய்யப் படவில்லை. அவள் பின்னர் ஒரு கட்டத்தில் திரும்பி வந்து ஹோட்டேல் உரிமையாளர் பற்றிய இரகசியக் கடிதத்தை பகிரங்கப் படுத்த நினைக்கையில் தான் கொல்லப் படுகிறாள். இதற்கிடையே கதாநாயகன் அலியுடன் நட்பாகப் பழகும் கதாநாயகி நஸ்லியுடன் காதல் உண்டாகிறது. ஆனால், ஆழமான வர்க்க வேறுபாடு இருவரும் ஒன்று சேரத் தடுக்கிறது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது போன்ற கதை பல தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன. ஆனால், பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழைக் கதாநாயகன் காதலிப்பதாக வரும் தமிழ்ப் படங்களில், அதை "அதிர்ஷ்டமாக", அல்லது "காதலின் மகத்துவமாக" காட்டி திசைதிருப்புவார்கள். தப்பித் தவறிக் கூட வர்க்கம் என்ற சொல் படத்தில் இடம்பெறாது.

ஆனால், இந்த அரபி மொழி பேசும் படத்தில் வர்க்கப் பிரச்சினை பற்றிய உரையாடல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார்கள். உதாரணத்திற்கு சீமாட்டி நஸ்லியை காதலிக்கும் ஏழை அண்ணனுக்கு தங்கை அறிவுறுத்துகிறாள். "இந்த மேட்டுக்குடி வர்க்கத்தில் அவள் ஒருத்தி மட்டும் நல்லவளாக இருக்கலாம்... ஆனால் அவள் பிறந்து வளர்ந்த வர்க்கம் எதுவென்பதையும், அதன் குணங்குறிகளையும் மறந்து விடாதே!"

ஆடம்பரமாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினுள், ஹோட்டேல் உரிமை சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகள், கழுத்தறுப்புகள், காழ்ப்புணர்வுகள் வெளிப்படும் தருணங்களில் அவர்களது நாகரிக முகமூடி கிழிகிறது. மேட்டுக்குடியினர் தமது கௌரவத்தை காப்பாற்ற கொலை செய்வதற்கும் அஞ்சாதவர்கள். போலிஸ் சட்டப் படி கைது செய்தாலும் பணத்தை வீசியெறிந்து வழக்காடி வெல்கிறார்கள். அரசாங்கத்தை வளைத்துப் போடும் செல்வாக்கும் இருக்கிறது.

அதே நேரம், அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களிடையே நிலவும் தூய்மையான அன்பும், பாசமும், காதலும் அவர்களை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது. உதாரணத்திற்கு மனேஜருடனான உறவால் கர்ப்பம் உண்டாகி வஞ்சிக்கப் பட்ட பணிப்பெண்ணை, தனது மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சக தொழிலாளி அமீன். அதே மாதிரி, மனேஜர் அனுப்பிய கொலையாளியால் கத்தியால் குத்தப் பட்ட பணிப்பெண் டோஹாவை காப்பாற்றி, தனது வீட்டில் மறைத்து வைக்கும் சக தொழிலாளி மஹேர். இத்தகைய கதாபாத்திரங்கள், பணமில்லாத இடத்தில் தான் அன்பிருக்கும் என்பதை நிரூபிக்கின்றன.

வர்க்கப் போராட்டம் என்பது சமூக யதார்த்தம். அது ஒன்றும் "நடைமுறைக்கு உதவாத", "மார்க்சியத் தத்துவம்" அல்ல. வர்க்கப் போராட்டம், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் காண மறுக்கிறோம். உணர மறுக்கிறோம்.

தமிழ் சினிமாக்கள், தமிழ் சீரியல்கள் வேண்டுமென்றே வர்க்க முரண்பாடுகளை மூடி மறைத்து அல்லது திரிபுபடுத்தி தயாரிக்கப் படுகின்றன. அந்த வகையில், வர்க்க முரண்பாட்டு உண்மையை நேரடியாகக் கூறும் இந்த அரபிப் படம் யதார்த்தத்தை தொட்டு நிற்கிறது.

Secret of the Nile என்ற அரபி மொழி டிவி சீரியல் மிக நீளமாக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் அவிழும் மர்ம முடிச்சுகளால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல், ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் படம். அனைவரும் அவசியம் பாருங்கள். தமிழ் சமூகத்திற்கும், அரபு சமூகத்திற்கும் இடையில் அடிப்படையில் எந்த வித்தியாசம் இல்லை என்பதை கண்டுகொள்வீர்கள். உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதர்களின் குணம் மாறுவதில்லை. வர்க்கக் குணாம்சமும் மாறுவதில்லை.

- கலையரசன்

Wednesday, March 21, 2018

ஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை


வருடாந்தம் தவறாமல் நடைபெறும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன கூட்டத்தொடரில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஈழத் தமிழர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.
  1. தமிழர் தரப்பும், சிங்களவர் தரப்பும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி. 
  2. புலிகளின் படையணிகளில் இருந்த சிறார் போராளிகள் பற்றி கஜேந்திரகுமாரின் வாக்குமூலம்.
மேற்குறிப்பிட்ட இரண்டும், ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகள். சிலர் வழமை போல தமது அரசியல் ஆதாயங்களுக்காக பெரிது படுத்துகின்றனரே தவிர, அதைப் பற்றிப் பேசுவதால் எந்த நன்மையையும், தீமையும் கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாவின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்பது மட்டுமே இதனால் ஏற்படும் பலன்.

ஜெனீவாவின் உள்ளே இரு தரப்பிற்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவுக்கு பின்வரும் தலைப்புக் கொடுத்திருந்தனர்."ஜெனீவாவில் தமிழர்களை மிரட்டும் சிங்கள இராணுவத்தினர்!" நடந்தது இது தான். ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு தரப்பு பிரதிநிதிகள், புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தனர். சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். தமிழர்களின் பிரதிநிதிகள் அவற்றை பொய் என்று எதிர்த்து வாதிட்டனர். அனேகமாக, இதே வீடியோவை சிங்கள இணைய ஆர்வலர்களும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அதற்கு "ஜெனீவாவில் சிங்களவர்களை மிரட்டும் புலிகள்!" என்று தலைப்பிட்டிருப்பார்கள்.

கடந்த இருபது, முப்பது வருடங்களாக இது தான் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் தரப்பினர் சிறிலங்கா இராணுவம் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். அதே மாதிரி, சிங்கள தரப்பினர் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். இரு தரப்பினரும் தமது பக்க நியாயங்களை மட்டும் பேசி விட்டு செல்வார்கள். ஐ.நா. பிரதிநிதிகள் அவற்றை எல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்வார்கள்.

இத்தகைய பின்னணியை வைத்துப் பார்த்தால், புலிகளின் படையணிகளில் சிறார் போராளிகள் சேர்த்துக் கொண்டமை பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொடுத்த வாக்குமூலம் ஒன்றும் புதினம் அல்ல. ஹியூமன் ரைட்ஸ் வோச் போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் பேசியுள்ளன. அதனால், தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கனவே இது பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது புலிகள் இருந்த காலத்திலேயே நடந்தது. கஜேந்திரகுமார் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே, இதை பரபரப்பு செய்தியாக்குகிறார்கள்.

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஒன்றுகூடலை, விவாகரத்து செய்யவிருக்கும் கணவனும், மனைவியும் கவுன்சிலிங் போவதுடன் ஒப்பிடலாம். நடுவராக இருப்பவர் இரண்டு பக்க குற்றச்சாட்டுகளையும் கேட்டுக் கொள்வார். ஆனால், யாருக்கும் சாதகமாக பதில் கூற மாட்டார். இரண்டு பக்கமும் பிழைகள் இருப்பதாக சொல்லி முடிப்பார். கவுன்சிலிங் செய்பவர் தனக்கு சார்பாக மட்டுமே தீர்ப்புக் கூற வேண்டும் என்று இரண்டு பேரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை. இது தான் ஜெனீவா கூட்டத்திலும் நடக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், சர்வதேச அரசியல் அரங்கில் உண்டாக்கும் தாக்கங்களை புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஜெனீவா பற்றிய மாயையில் வாழ்கின்றனர். நாங்கள் ஒரு இலங்கையை மட்டும் பார்க்கிறோம். ஜெனீவா உலக நாடுகள் அனைத்தையும் பார்க்கிறது.

அதாவது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப் போல, இலங்கையில் நடக்கும் அதே பிரச்சினைகள் இன்னும் பல உலக நாடுகளில் நடக்கின்றன. ஜெனீவா மகாநாடு இதுபோன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளில் தலையிட்டு யாருடைய பக்கத்திற்கு சார்பாகவும் தீர்ப்புக் கூறப் போவதில்லை. அதற்கான அதிகாரமும் கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக, ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆராய்வது தான் ஜெனீவா மகாநாட்டின் நோக்கம். மூன்றாமுலக நாடுகள் என அழைக்கப் படும் இந்த நாடுகள் யாவும், முன்னொரு காலத்தில் காலனிய அடிமை நாடுகளாக இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. காலனிய காலத்தில் "வெள்ளை மனிதனின் கடமை" என்ற பெயரில் இயங்கிய ஐரோப்பியரின் மேலாண்மையை, இன்று "மனித உரிமை" என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகிறார்கள்.

இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், காலனியாதிக்க பிரபுக்களைப் பொறுத்தவரையில் இரண்டு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஜெனீவாவில் தமக்கு சாதகமான பதில் வர வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம், சிங்களவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், இரண்டு பக்கமும் தமது பக்க நியாயங்களை அடுக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

உணர்ச்சிவசமான அரசியலுக்குள் இழுபடாமல், மூன்றாவது மனிதராக பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பொஸ்னிய யுத்தம் நடந்த காலத்தில், செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்த் தரப்பை கடுமையாக சாடி, தமது பக்க நியாயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீண்டும் பொஸ்னியா என்ற ஒரே நாட்டுக்குள் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இதற்கு இன்னும் பல நாடுகளை உதாரணம் காட்டலாம்.

இனப் பிரச்சினை நடக்கும் நாடொன்றில் இது சர்வ சாதாரணம். ஒவ்வொரு இனமும் தனது பக்கம் நியாயம் இருப்பதாக வாதாடிக் கொண்டிருக்கும். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் எதிரி இனம் என்று குற்றம் சாட்டும். பெரும்பான்மையான மக்கள் இந்த உணர்ச்சிகர அரசியலுக்குள் இழுபட்டு செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டில், பேரழிவுகள் தரும் யுத்தம் நடந்த பின்னர், இரண்டு பக்கமும் கசப்புணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏகாதிபத்திய தலையீடு ஏற்படும். நாட்டாண்மை மாதிரி தலையிட்டு, இரண்டு பக்கமும் சமாதானமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இலங்கையிலும் அதைத் தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை.

குரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரி, மனித உரிமைகள் விவகாரம் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அடிகோலும் காரணி என்பதை பலர் உணர்வதில்லை. மூன்றாமுலக நாடுகளில், மேற்குலகின் சொற் கேட்டு நடக்காத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், இயற்கை வளங்களை அபகரிப்பதற்கும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் உதவுகின்றது.

சுருக்கமாக சொன்னால், ஜெனீவாவில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதால், தமிழர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ஆனால், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான அந்நிய இராணுவ தலையீடு இடம்பெற்றால், அதனால் தமிழர் உட்பட இலங்கையின் அனைத்து மக்களும் பாதிக்கப் படுவார்கள்.

Tuesday, March 20, 2018

மொங்கோலியர் ஆட்சியில் சீனாவில் குடியேறிய சோழ வணிகர்கள்


இந்து மத புராணக் கதையொன்றை காட்டும் சோழர் கால கல்வெட்டு. தென் சீனாவில் உள்ள குவாங்ஸௌ (Quanzou) நகரத்தில் கண்டெடுக்கப் பட்டது. 13 ம் நூற்றாண்டில் இருந்த, சிவன் கோயில் ஒன்றின் எஞ்சிய பகுதி அது.

அந்தக் கோயில் தற்போது இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. ஒரு காலத்தில், குவாங் ஸௌ நகரில் இந்து-தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அது.

சீன, தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும், குவாங் ஸௌ அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. "சீனாவை ஆண்ட மொங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கானுக்கு நல்லாசி வேண்டி கட்டப்பட்ட கோயில்" என்று ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. அன்றைய சோழ சாம்ராஜ்யத்திற்கும், செங்கிஸ்கானுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை இது காட்டுகின்றது.

சோழ நாட்டு தமிழ் வணிகர்கள், சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அவர்களில் சிலர், குவாங் ஸௌ நகரில் தங்கி விட்டனர். அன்று சீனாவை ஆண்ட சொங் அரச பரம்பரைக்கும், சோழர்களுக்கும் இடையில் கடல் வாணிபம் தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. இதனால், மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கானுக்கு சோழ வணிகர்கள் உதவினார்கள்.

செங்கிஸ்கான் சாம்ராஜ்யத்தில், இந்து மதம் உட்பட, அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் சீனாவில் இந்து மதம் அழிந்து விட்டாலும், இருபதாம் நூற்றாண்டு வரையில், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றுவோர் (சோழ நாட்டு தமிழர்களின் வம்சாவளியினர் ?) வாழ்ந்து வந்துள்ளனர். மாவோவின் கலாச்சாரப் புரட்சியில், அவை எல்லாம் நிலப்பிரபுத்துவ எச்சங்களாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டன. (Quanzhou Overseas-relations History Museum; http://www.chinamuseums.com/quanzhou_overseas.htm )

மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் பன்னாட்டு வர்த்தகம் ஊக்குவிக்கப் பட்டது. இன்றுள்ள மாதிரி வர்த்தகர்களுக்கு இடையில் பணப் பரிமாற்றங்கள் இலகுவாக நடந்து கொண்டிருந்தது. இன்று பரவலாக புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு மொங்கோலிய சாம்ராஜ்யம் முழுவதும் பயன்பாட்டில் இருந்தது. பண்டைய சீனர்கள் கண்டுபிடித்த "பறக்கும் காசு" என அழைக்கப்பட்ட நாணயத் தாள், அதாவது கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள் வணிகத்தை இலகுபடுத்தி இருந்தது.

அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது.

அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களான முத்துக்கள், நவரத்தினக் கற்கள் கூட வாங்கலாம். எல்லா வணிகர்களும் நாணயத் தாள்கள் வைத்திருந்தனர்.

அதே நேரம், 17 ம் நூற்றாண்டு வரையில், ஐரோப்பாவில் நாணயத்தாள் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம் ஐரோப்பியர்கள் தங்க, வெள்ளி நாணயக் குற்றிகளை காவிக் கொண்டு திரிந்தனர்.

உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் மொங்கோலியர்கள் தான். அது பற்றிய எதிர்மறையான தகவல்களே வரலாற்று நூல்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இருப்பினும், மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் இருந்த சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்தது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், உலகில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வது இலகுவான காரியம் அல்ல. அதை நடைமுறைப் படுத்துவதற்காக தபால் சேவை கொண்டுவரப் பட்டது. மேற்கே கருங்கடலில் இருந்து கிழக்கே பசுபிக் சமுத்திரம் வரையில், தபால் சேவை சிறப்பாக இயங்கியது.

சாம்ராஜ்யத்திற்குள் இருந்த மாகாணங்களில் இருந்தும் செல்லும் அனைத்துப் பாதைகளும், (சீனாவில் இருந்த) தலைநகர் கான்பாலிக்கை வந்தடைந்தன. 40 அல்லது 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தபால் நிலையம் இருந்தது.

அங்கிருந்து தபால் கொண்டு செல்வதற்கு 200 தொடக்கம் 400 வரையிலான குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. சராசரியாக ஒரு கடிதம், ஒரு நாளைக்கு நானூறு கிலோமீட்டர் பயணம் செய்திருக்கும். ஐரோப்பாவில், 19ம் நூற்றாண்டில் தான் இது போன்று ரயில் வண்டி மூலம் கொண்டு செல்லும் தபால் சேவை அறிமுகப் படுத்தப் பட்டது.

மேலும் கான் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் அனைத்து மக்களுக்குமான நலன்புரி அரசாங்கமாகவும் இயங்கியது. களஞ்சிய அறைகளில் எந்நேரமும் தானியங்கள் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். விளைச்சல் குறைவான காலத்தில் மானிய அடிப்படையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படும். அத்துடன் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது.

ஏழைகளுக்கு தேவையான உணவு மட்டுமல்லாது, உடைகளையும் அரசு கொடுத்தது. கோடை காலம், குளிர் காலத்திற்கு அவசியமான உடைகள் வழங்கப் பட்டன. இதற்காக ஆடை தயாரிப்பாளர்கள் ஒரு நாள் உழைப்பை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்தது. யார் யாருக்கு உடுபுடைவகள் வழங்க வேண்டும் என்ற விபரங்களை அரசு அலுவலர்கள் குறித்து வைத்திருந்தனர். ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து தான், இது போன்ற நலன்புரி அரசு நடைமுறைக்கு வந்தது.

Saturday, March 17, 2018

ஆப்பிரிக்கக் கடவுள் முப்பாட்டன் முருகனுக்கு ஆரோகரா!


தமிழர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை பற்றி, ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் ஆய்வு செய்து எழுதி வைத்துள்ளனர். சொத்து வழி உறவு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், உழவுத் தொழிலில் பயன்படுத்தும் சாதனங்கள், போன்றவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.

இந்திய உப கண்டத்தில் மட்டுமல்லாது, ஆபிரிக்காவிலும் வேரூன்றியுள்ள சாதிய சமுதாய அமைப்பும், ஒரே பூர்வீகத்தை உறுதிப் படுத்துகின்றது. காசி நகரம் திராவிடர்களுடையதாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவின் பண்டைய குஷி ராஜ்யத்தின் பெயருடன் ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.

பண்டைய எகிப்தியரின் ஓசிரிஸ்-இசிஸ் கதை, தமிழர்களின் கோவலன்- கண்ணகி கதையுடன் ஒற்றுமைகளை கொண்டுள்ளது. கண்ணகி அம்மன் வழிபாடு, பண்டிகைகள் சில ஆப்பிரிக்க மதங்களிலும் காணப் படுகிறன. எகிப்தியரின் ஆமுன் தெய்வத்திற்கும், அம்மனுக்கும் இடையிலான பெயர்ப் பொருத்தமும் கவனிக்கத் தக்கது.

ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு (Murungu) கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்!

தமிழர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் என்று நிரூபிப்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இருந்தாலும், தமிழினவாதிகள் எப்பொழுதும், தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மூத்த குடிப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், ஆபிரிக்கர்களுடனான ஒற்றுமைகளை புறக்கணிப்பதன் காரணம் என்ன?

தமிழினவாதக் கோட்பாடு, ஒரு ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு. ஐரோப்பியர்களை நாகரீகத்தில் உயர்ந்தவர்களாகவும், ஆப்பிரிக்கர்களை நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிய காட்டுமிராண்டிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம்: //ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”). இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது.//
(https://www.facebook.com/rosyrascalring/posts/1268068239894446?hc_location=ufi)

சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

Friday, March 16, 2018

நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்"

சோவியத் யூனியனுக்குள் நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்".

ஒரு நோர்வே நாட்டு உளவாளியின் வாக்குமூலம்.

பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள் உளவு பார்ப்பதற்கும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், நேட்டோ நாடுகளை சேர்ந்த உளவாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். 

ஊடுருவல் குறித்து, பல தடவைகள் சோவியத் ஒன்றியம் முறையிட்டு வந்த போதிலும், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும், அந்தக் குற்றச்சாட்டுகளை "கம்யூனிச பிரச்சாரம்" என்று நிராகரித்து வந்தன. தற்போது, நோர்வே நாட்டு சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர், மரணப் படுக்கையில் இருக்கையில் அந்த இரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

வடக்கு நோர்வேயில் வாழ்ந்த, ஒரு சாதாரண பாடசாலை ஆசிரியரான Arne Lund, தான் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற தகவலை, தனது ஆறு மகள் மாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இறுதியாக, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்கு அந்த இரகசியத்தை தெரிவித்தார். இவரைப் போன்ற நேட்டோ உளவாளிகள் பலர் இருந்த போதிலும், முன்னாள் உளவாளி ஒருவர் தனது செயல்கள் பற்றிய வாக்குமூலம் கொடுத்துள்ளமை, இதுவே முதல் தடவை.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த Arne Lund, தனது நடவடிக்கைகள் பற்றி, மனைவியிடம் கூட கூறாமல் மறைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருப்பதைக் கண்ட மனைவி, விஷயம் தெரியாமல், அவர் மேல் சந்தேகப் பட்டிருக்கிறார். 

சி.ஐ.ஏ. இவரை ஊடுருவல் பணியில் ஈடுபடுத்திய காலத்தில் எல்லாம், வேறு இடத்திற்கு படிக்கச் செல்வதாக கூறியுள்ளார். Arne Lund, வட நோர்வேயில் உள்ள Hammerfest எனுமிடத்திற்கு கப்பலில் சென்று, சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்திப்பார்.

அவர்கள் பின்லாந்து எல்லையோரம் உள்ள, Karasjok எனும் நகரத்திற்கு செல்வார்கள். அங்கிருந்து சாதாரண பேரூந்து வண்டியில் ஏறி, பின்லாந்தில் உள்ள Ivalo என்ற இடத்தை சென்றடைவார்கள். 

இவாலோ நகரில் இருந்து தான், சோவியத் யூனியனுக்குள் ஊடுருவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். சோவியத் நாட்டு எல்லையோரம் உள்ள Virtaniemi, மற்றும் Raja-Jooseppi ஆகிய பின்னிஷ் நகரங்கள், நேட்டோவின் ஊடுருவல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப் பட்டு வந்தன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லை கடந்து செல்வதற்கு, பின்லாந்து நாட்டு உளவாளி ஒருவர் உதவுவார். தான் சி.ஐ.ஏ. இடம் இருந்து எவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லாத ஆர்னே லுண்ட், பின்னிஷ் உளவாளிக்கு ஒரு வருட, அல்லது இரு வருட சம்பளப் பணம் கொடுக்கப் பட்டதாக தெரிவித்தார். ஆயுதங்களுடனும், தொலைத்தொடர்புக் கருவிகளுடனும், சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் ஊடுருவும் நேட்டோ அணியினர், உளவறிந்த பின்னர் திரும்பி வருவது வழக்கம்.

குறைந்தது ஏழு தடவைகள், அவ்வாறு சோவியத் நாட்டுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாக, ஆர்னே லுண்ட் தெரிவித்தார். ஆனால், கடைசித் தடவையாக நடந்த ஊடுருவலில் தவறு நேர்ந்து விட்டது. தற்செயலாக சோவியத் பாதுகாப்புப் படையினரின் கண்களில் சிக்கியுள்ளனர். 

அதனால், நேட்டோ ஊடுருவல் அணியினர், எதிரில் வந்த மூன்று சோவியத் படையினரை சுட்டுக் கொன்று விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். ஆர்னே லுண்ட், தன்னிடம் இருந்த சைலன்சர் பூட்டிய துப்பாக்கியால், அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆர்னே லுண்ட் விவரித்த இரகசிய ஊடுருவல்கள் யாவும், ஐம்பதுக்களில், அறுபதுகளில் இடம்பெற்றவை. எண்பதுகளில் ஒரு தடவை, நேட்டோ ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்ததாக சோவியத் அரசு அறிவித்திருந்தது. அப்போது அதனை யாரும் பொருட் படுத்தவில்லை. அமெரிக்க ஆதரவாளர்கள், அந்த செய்தியை "வழமையான சோவியத் பிரச்சாரம்" என்று புறக்கணித்து வந்தனர்.

பனிப்போர் காலத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, ஆர்னே லுண்ட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், "Agentens skriftemål" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வீஜிய NRK1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆவணப் படத்திற்கான இணைப்பு:
Brennpunkt , Agentens skriftemål
https://tv.nrk.no/serie/brennpunkt/mdup11001913/29-10-2013