Sunday, August 27, 2023

சாதியால் பிரிந்த முன்னாள் போராளிக் குடும்பம்

 

இது ஓர் உண்மைக்கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு புலிப் போராளிகள் குடும்பத்தின் கதை. கணவன், மனைவி இருவரும் முன்பு போராளிகளாக இருந்த காலத்தில் இயக்கத்திற்குள்ளே சாதி கடந்த கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. கணவன் உயர்த்தப்பட்ட சாதியையும், மனைவி தாழ்த்தப்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள்.

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. மனைவி தன்னிடமிருந்த நகைகளை விற்று அல்லது அடைவு வைத்து கணவனை சவூதி அரேபியாவுக்கு வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

கணவன் விடுமுறைக்கு வந்த காலத்தில், அவரது பெற்றோர் சாதியை காரணமாக காட்டி பிரித்து விட்டனர். அவருக்கு உடனடியாக தமது சாதிக்குள் ஒரு பெண்ணை பார்த்து மறுமணம் செய்து வைத்து சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி விட்டனர். இந்த விடயங்கள் யாவும் மனைவிக்கு தெரியாமல் மறைக்கப் பட்டன. தற்போது அவர் கணவரது உதவியுமின்றி தனியாக இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப் படுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இது தான் புலிகள் சாதியை ஒழித்த (ஒளித்த) இலட்சணம். சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வராமல், புலிப் போராளிகளுக்கு மட்டும் கலப்பு மணம் செய்து வைப்பதால் சாதி ஒழியப் போவதில்லை. உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் தொடங்கவேயில்லை.

Saturday, August 26, 2023

இராணுவ முகாமை அகற்றாதே! யாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  Aug 15, 2023

யாழ் குடாநாட்டில், பிரபாகரன் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள, பருத்தித்துறையை சேர்ந்த கற்கோவளம் எனும் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். (15-8-2023) அந்த பகுதியில் திருட்டுகள், போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நேரத்தில் தமக்கு பொலிஸ் மீது நம்பிக்கை இல்லையென்றும், இராணுவம் இருந்தால் பாதுகாப்பு என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர். உண்மையில் லஞ்சம், ஊழலில் ஊறிய, கையாலாகாத காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதன் பிரதிபலிப்பு.

இது இப்படி இருக்கையில், இவ்வளவு காலமும் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்றே அரசியல் செய்து வந்த elite தமிழ்த்தேசியவாதிகளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. "ஆட்டு மந்தைகள்... போதைவஸ்துக்கு அடிமையானவர்கள்... விலை மாதர்கள் (ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுமிகளும் இருந்தனர்.)" என்றெல்லாம் ஏசத் தொடங்கி விட்டனர். அடித்தட்டு தமிழ் மக்கள் மீது, மேட்டுக்குடி தமிழ்த்தேசிய போலிகள் கொண்டிருக்கும் வன்மம் நன்றாக வெளிப்பட்டது.

அது சரி, சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு அச்சுவேலி பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்கள இராணுவம் வந்து தேரிழுத்த நேரம் இவர்கள் எங்கே போனார்கள்? அந்த நேரம் அழகான ஆதிக்க சாதிப் பெண்கள் சட்டை போடாத சிங்கள இராணுவ வீரர்களுடன் உரசிக் கொண்டு தேரிழுத்தார்கள். பருத்தித்துறை ஆர்பாட்டத்தில் பங்கெடுத்த பெண்களை நாக்கூசாமல் "விலை மாதர்" தூற்றிய வாய்கள், அந்நேரம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அச்சச்சோ... மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்ல மாட்டோம்! அந்தளவு வர்க்க பாசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்னாலையில் மாட்டு வண்டில் சவாரியில் நடந்த கைகலப்பு காரணமாக, ஆதிக்க சாதியினர் அழைப்பின் பேரில் வந்த சிங்கள இராணுவம் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. நம்ம தமிழ் உணர்வாளர்களை இப்போது கேட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நடிப்பார்கள்.

அது போகட்டும். 1987 முதல் 1990 வரை, தொடர்ச்சியாக 3 வருடங்கள் விடுதலைப் புலிகளும், சிங்களப் படையினரும் இணைபிரியாத நண்பர்களாக நட்பு பாராட்டியதை எப்படி பார்க்கிறீங்க? ஆங்... அது மேட்டுக்குடி நலன் சார்ந்த "சாணக்கியம்" இல்லே? அந்த நேரம் நம்ம elite- தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் செவ்வாய்க் கிரக சுற்றுலா சென்றிருந்தனர். பாவம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

இது தான் மேட்டுக்குடி கனவான்களின் எலைட்- தமிழ்த்தேசியம். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இராணுவத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றைய நேரங்களில் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்று தமக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள். 
Déjà vu.

முதலாம் உலகப் போர் காலம் முதல் தேசியவாதிகள் செய்து வரும் பிரச்சாரம். தேசியவாதம் என்ற சொல்லுக்கு முன்னுக்கு தமிழ் என்ற அடைமொழியை போட்டு விட்டால் கொள்கை மாறி விடுமா? 
c'est la même chose
 

Thursday, August 24, 2023

கிளப் ஹவுசில் நடந்த சாதி ஒளிப்பு 🤡 நாடகம் ⁉️

 

கிளப் ஹவுசில் இனவாத- பாஸிஸ்டுகள் ஒன்று சேர்ந்து "சாதி ஒழிப்பு மகாநாடு" நடத்தினார்கள். அங்கே இரண்டு கோமாளி "மார்க்சியர்களும்"(?) சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றினார்கள். அவர்கள் தமது வழக்கமான இனவாதத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை திறம்பட செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது எதுவும் புரியா விட்டாலும் இனவாத தற்குறிகள் "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்து "மார்க்சிய"(?) கோமாளிகளை பப்பாசி மரத்தில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அடடே... என்ன இது இனவாதிகள், அதிலும் சிலர் தீவிர சாதிவெறியர்கள், திடீரென சமூக அக்கறையுடன் பேசுகிறார்களே!" என்று எட்டிப் பார்த்தால் ஒரே வழ வழா, கொள கொளா பாணியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாநாட்டில் கலந்து கொண்ட "அறிவுஜீவிகள்" சாதி ஒழிப்புக்கு (திருத்தம்: ஒளிப்புக்கு) முன்மொழிந்த தீர்வுகள்: 
- எல்லோருக்கும் கல்வி அறிவூட்டி சாதியை ஒழித்து விடுவார்களாம். ஏற்கனவே இலங்கையில் 95% எழுத்தறிவு இருப்பதை இவர்களுக்கு யாராவது சொல்லி விடுங்கள்.

- பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு நன்னெறி போதித்து சாதி தவறு என்று உணர வைத்து விடுவார்களாம். பாலர் வகுப்பில் இருந்தே ஆத்திசூடி சொல்லிக் கொடுக்கிறார்கள். :""சாதி இரண்டொழிய வேறில்லை" என்றும் கற்பிக்கிறார்கள். அட போங்கப்பா... நன்னெறி போதிக்கும் ஆசிரியரே தனிப்பட்ட வாழ்வில் சாதி பார்ப்பார். இங்கே ஊருக்கு தான் உபதேசம்.

இனவாத- பாஸிஸ்டுகள் திடீரென சமூக அக்கறை கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரு தடவை சாதியே இல்லை என்பார்கள். இன்னொரு தடவை அதே வாயால் சாதிப் பிரச்சினை பற்றி உரையாடுவோம் என்பார்கள். அதற்கு காரணம் உள்ளது. சமுதாயத்தில் உள்ள மிக முக்கியமான பகை முரண்பாடுகளான சாதிய/வர்க்க பிரச்சினைகள் மேலெழும் போதெல்லாம் அதை தணிப்பதற்கு, மறுபடியும் கிடப்பில் போடுவதற்கான நாடகம்.

உலகில் உள்ள எல்லா பாஸிஸ்டுகளும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கு கொண்டவர்கள். ஹிட்லரின் கட்சியின் பெயர் "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி". அந்த கட்சிக்கும் சோஷலிசத்திற்கும், தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் சுருக்கமாக நாஸி (தேசியம்) என்ற சொல்லை மட்டும் பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்.

"அந்த கூட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்கள் தானே? அப்போது (சாதி ஒழிப்புக்கான) தீர்வையும் சொல்லி இருக்கலாமே?" என்று கடிந்து கொண்டார் ஒரு நண்பர். வாஸ்தவம் தான். ஆனால் முதலில் என்னை பேச விட்டால் தானே? ஏற்கனவே அழைத்து விட்டு அடித்து துவைக்க காத்திருந்த இனவாத- பாஸிஸ்டுகள் நடத்திய கூட்டத்தில் நான் எந்த கருத்தை வைத்திருந்தாலும் பாய்ந்து பிடுங்கி இருப்பார்கள். உண்மையில் அது தான் நடந்தது.

"சிங்களவர்களிடம் சாதி இல்லை என்று டிவிட்டரில் எழுதினீர்களாமே?" என்று புலனாய்வுத்துறை அதிகாரி போன்றிருந்த ஒருவர் விசாரணையை ஆரம்பித்தார். உடல் ரீதியாக சித்திரவதை செய்யாத குறை. (ஆனால் உளவியல் சித்திரவதைக்கு குறைவில்லை) "சிங்களவர்கள் மத்தியில் சாதி இல்லை என்று எப்போது சொன்னேன்?" நான் கேட்டதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

அட தற்குறிகளே! சிங்களவர் மட்டுமல்ல, பாகிஸ்தானியர் மத்தியிலும் கூட சாதிகள் உள்ளன. "என்னால் ஜப்பானில் உள்ள சாதியம் பற்றியும் கூற முடியும். ஆனால் அதைப் பற்றி இவர்களுக்கென்ன கவலை?" - இதை அங்கே நேரடியாக கேட்டிருந்தேன்.

சிங்களவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு, திருகோணமலையில் வாழும் தமிழர்களும் தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். என்னை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை அதிகாரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கும் போலிருக்கிறது. மட்டக்களப்பு, திருகோணமலை தமிழர்களை மட்டும் விட்டு விட்டு, சிங்களவர்களை மட்டும் தூக்கிப் பிடித்தார். (அட... அப்போது தானே இனத்துரோகி பட்டம் சூட்டலாம்? புலனாய்வுத்துறை மூளை என்றால் சும்மாவா?)

ஆகவே, அவர் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டாராம். குற்றப் பத்திரிகை வாசித்தார். "கனம் கோட்டார் அவர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் அவரை தமிழினத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன். அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வாழ வேண்டும். அவருக்கு எந்த தமிழனும் சோறு, தண்ணி கொடுக்க கூடாது." என்று வழக்காடினார்.

என்ன கொடுமை இது? சாதி ஒளிப்பு, ஸாரி மழுப்பு, ச்சே ஒழிப்பு மகாநாட்டில் பேச வந்த என்னையே தீண்டத்தகாதவன் ஆக்கி விட்டார்களே? ஒருவேளை காலச்சக்கரத்தில் ஏறி 17ம் நூற்றாண்டுக்கு வந்து விட்டேனோ? எதற்கும் ஒரு தடவை மொபைல் நாட்காட்டியை தட்டிப் பார்த்தேன். ஆண்டு 2023 எனக் காட்டியது. அப்பாடா... இப்போது நடப்பது 21ம் நூற்றாண்டு தான்.

கிளப் ஹவுஸில் கைகோர்ட் நீதிபதி மாதிரி இருந்த ஒருவர் தீர்ப்பளிக்க முன்னர் ஒரு கேள்வி கேட்டார்: "நீவிர் யாழ்ப்பாணத்தில் மட்டும் சாதிய- தீண்டாமை இருப்பதாக சொல்கிறீர். யாழ்ப்பாணத்தார் மீது அப்படி என்ன வன்மம்?" என்று ஒரே போடாகப் போட்டார்.

ஐயயோ, இனி நீதிபதி ஷரியா சட்டத்தின் படி அல்லாவின் நாமத்தால் கல்லால் அடிக்கும் தண்டனை கொடுக்கப் போகிறார். அல்லாவே, ஆட்டுக்குட்டியே என்னை காப்பாற்ற வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

யோவ், மூளையை தலைப்பாகை சுருட்டி வைத்திருக்கும் அநீதிபதி! - அப்படி சொல்ல வந்ததை வாய்க்குள் வைத்துக் கொண்டு, "அடக்குமுறையை எதிர்த்தால் அது வன்மமா... சமூக ஒடுக்குமுறை பற்றி பேசினால் வன்மம் என்பீர்களா? இது என்ன நியாயம்?" என்று கேட்டு விட்டேன்.

நான் அப்படி கேட்பேன் என்று நீதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கு. ஒரு நொடி வாயடைத்து போனவர் சுதாகரித்துக் கொண்டே "அது வந்து... போயி... சிங்களவர்களிடமுள்ள தீண்டாமையை பற்றி பேச மட்டும் அனுமதிக்கப் படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தீண்டாமையை பற்றி பேசக் கூடாதென ஆயத்துல்லா பாணியில் ஃபத்வா உத்தரவு போட்டார்.

என்னடா இது? தப்பித் தவறி ஒருவேளை ஆப்கான் தாலிபான்களின் கிளப் ஹவுஸுக்கு வந்து விட்டேனோ? நான் யோசிக்க கொண்டிருக்கும் பொழுதே ரூமை விட்டு ரிமூவ் பண்ணி விட்டார்கள். அப்பாடா, மறுபடியும் நிஜ உலகிற்கு வந்து விட்டேன்.

Sunday, August 06, 2023

ஈழப்போரில் "உரிமை கோரப் படாத" குண்டுவெடிப்புகள்!

ஈழப்போர் தொடங்கிய காலங்களில் வடக்கு கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகரில் வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தியது புலிகள் அல்ல. அது ஈழப் புரட்சி அமைப்பு(EROS) எனும் இன்னொரு இயக்கம். 1984 ம் ஆண்டு ஒபரோய் ஹொட்டேல் தொடங்கி பல குண்டு வெடிப்புகளை நடத்தினார்கள். அவை யாவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். கொழும்பு மத்திய தபால் நிலைய குண்டுவெடிப்பில் குறிப்பிட்ட அளவு பொது மக்களும் பலியாகி இருந்த போதிலும், EROS தான் செய்த எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பேற்று உரிமை கோரி வந்தது. 


அப்போது புலிகள் இது போன்ற தாக்குதல்களை முற்றாக நிராகரித்து வந்தனர். "நீங்கள் இலங்கை முழுவதையும் தறிழீழமாக கேட்கிறீர்களா?" என்று கிண்டல் அடித்தார்கள். அந்த காலகட்டத்தில் இயக்கங்களுக்கு ஏதாவதொரு திரைப்படத்தின் பெயர் பட்டப்பெயராக வைக்கப் பட்டது. அவ்வாறு EROS இயக்கத்தை "தூரத்து இடிமுழக்கம்" என்று அழைத்தனர். அதாவது தமிழ் மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அதே நேரம் எந்த பாதிப்பும் இல்லாத இடத்தில் யுத்தம் செய்கிறார்களாம். அதை அன்று புலிகளும் வழிமொழிந்தனர்.
 

பல வருடங்களுக்கு பின்னர், குறிப்பாக 1991 இலிருந்து புலிகளும் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடத்த தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடவை 1987 ம் ஆண்டு கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் குண்டு வெடித்தது. பொது மக்கள் 100 பேரளவில் பலியாகினர். அன்று யாரும் அந்த குண்டுவெடிப்புக்கு உரிமை கோரவில்லை. இருப்பினும் அதை புலிகளே செய்ததாக நம்பப் படுகிறது. EROS தான் செய்யவில்லை என்று உடனடியாக மறுத்திருந்தது. 1987 ம் ஆண்டு வடக்கில் பிற இயக்கங்களை தடைசெய்து விட்டு புலிகள் மட்டுமே போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். EROS மீது தடை இல்லாத போதிலும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகளை வெகுவாக குறைத்து விட்டிருந்தனர்.

Friday, August 04, 2023

நோர்வேயில் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டதா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், வன்னியில் இருந்து நோர்வே சென்ற புலிகளின் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள இராணுவ முகாமொன்றில் பயிற்சி அளிக்கும் வீடியோ பார்க்க கிடைத்தது. எப்படியான பயிற்சிகள் என்பதை நோர்வீஜிய படையினர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது கலவரங்களை தடுப்பதற்கான காவல்துறை (மிலிட்டரி பொலிஸ்) பயிற்சி.

அதாவது, சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு தீர்வு எட்டப்பட்டால் புலிகள் இராணுவ ரீதியாக இயங்க முடியாது. ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டி இருக்கும். அதற்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே இயங்கலாம். முன்னாள் போராளிகள் புதிதாக உருவாகப் போகும் வட - கிழக்கு மாகாண பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவர். தற்போதைய நிலையில் இது அனுமானமாக தெரியலாம். ஆனால் அது மட்டும் தான் நடைமுறைச் சாத்தியமான விடயம். அதை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட பொலிசாரின் கைகளில் இருந்த கவசங்களில் "KFOR" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது நேட்டோவின் கொசோவோ சமாதானப் படையின் குறியீடு.

உண்மையில் புலிகள் அல்லது தமிழர்களுக்கு பூரண திருப்தி அளிக்கக் கூடிய ஒரு தீர்வு எட்டப் பட்டாலும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் அல்ல. இங்கு தீர்க்கப் பட்டது இனப் பிரச்சினை மட்டுமே. ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருக்க போகின்றன. அவற்றுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் வெடிக்கலாம். ஏன் கலவரங்கள் கூட நடக்கலாம். அவற்றை அடக்கும் பொறுப்பு புலிகளின் அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்கள் தமது பொலிஸ் படையை அனுப்பி மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் சிங்கள பொலிஸ் செய்த அதே வேலையை இனி தமிழ்ப் பொலிஸ் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் நோர்வேயில் அளிக்க பட்டது.

நோர்வேயில் மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் கையாண்ட வன்முறை நடவடிக்கைகள் உலகறிந்த விடயம். இதனால் பலர் காயமடைந்த, கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், தமிழீழமே வந்தாலும் அது ஏகாதிபத்திய நலன் காக்கும் இன்னொரு சிறிலங்காவாகத் தான் இருக்கும். 100%. தமிழர்களின் அரசாக இருந்தாலும், அதுவும் ஒரு அரசு தான். அரசு என்பதே ஒரு அடக்குமுறை இயந்திரம் தான். நோர்வேயில் இராணுவப் பயிற்சி வீடியோ: