Wednesday, June 30, 2010

இஸ்லாமை தடை செய்யக் கோரும் முஸ்லிம் பெண்மணி

"இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு அரசியல் சித்தாந்தம். முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை என்று பள்ளிக்கூட நூல்களிலேயே வெறுப்பை விதைக்கிறது. அதனை தடை செய்வதில் தவறில்லை." இவ்வாறு கூறுகிறார் சிரியாவை சேர்ந்த மனோதத்துவ நிபுணரான Wafa Sultan . கடந்த 18 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இஸ்லாம் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். 2006 ம் ஆண்டு, அல் ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் பின்னர் இவர் பிரபலமானார். இஸ்லாமைப் பற்றிய அவரது கருத்துகள் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. சிரியாவில் தான் படித்த பாடப்புத்தகத்தில் "இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது." என்று கூறுகின்றார். அப்படிப்பட்ட மதத்தை சீர்திருத்துவது நடைமுறைச் சாத்தியமன்று என்கிறார். "இஸ்லாம் சமாதானத்தை போதிக்கும் மதம்" என்பது குறித்த அவரது கருத்து என்ன? "அப்படிக் கூறுபவர்கள் இஸ்லாத்தை பற்றி குறைவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இஸ்லாமில் ‘Al Takiyya’ என்ற ஒரு கொள்கை உண்டு. அதன் அர்த்தம், முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம்."

அண்மையில் நெதர்லாந்தை சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி வில்டர்ஸ் மீதான வழக்கில் சாட்சியமளிக்க நெதர்லாந்து வந்திருந்தார். நெதர்லாந்து தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்தது. Wafa Sultan வழங்கிய நேர்காணல் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முழுவதும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. Wafa Sultan இன் அனைத்துக் கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இஸ்லாமிய மதத்திலும் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமென்பதற்காக இந்த வீடியோவை பதிவிடுகின்றேன்.

sitestat

Monday, June 28, 2010

டொரான்டோ நகரில் கலவரம், கனடிய போலிஸின் காடைத்தனம்

டொரண்டோ நகரில் G20 உச்சி மகாநாட்டை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம், போலிஸ் தலையீட்டால் கலவரமாக மாறிய காட்சிகள் கீழே. பூங்கா ஒன்றில் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்கள் மீதும் போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்வதையும் இங்கே இணைக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.

கனடாவில், டொராண்டோ நகரில் ஆரம்பமாகியுள்ள G8 & G20(செல்வந்த நாடுகளும், அபிவிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும்) உச்சி மகாநாட்டை எதிர்த்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் ஆரப்பாட்டம் செய்தனர். மகாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் போலிஸ் முன்கூட்டியே நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருந்தது.Pre-empting Dissent: Silencing opposition to G20 summit எந்த வித நீதிமன்ற உத்தரவுமின்றி, டொராண்டோ நகரில் திடீரென பல வீடுகள் சோதனையிடப்பட்டன. முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்வலர்கள் பலர், "அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டில்" கைது செய்யப்பட்டனர். ( House raids, warrants and arrests)இதற்கிடையே அமெரிக்க-கனடிய எல்லை மூடப்பட்டு பல ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். டொராண்டோ நகரில் உச்சி மகாநாடு நடக்கும் இடத்தை சுற்றியுள்ள பிரதேசத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முள்ளுக்கம்பி வேலியிடப்பட்ட அந்தப் பிரதேசம் திறந்தவெளி சிறைச்சாலை போல காணப்படுகின்றது.


Saturday, June 26, 2010

பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!


1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். 

இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள். உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது. பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கைப்பற்றிய புதிய பிரதேசங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள். அதற்கு இலகுவாக பைபிளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து போதித்தார்கள்.

பைபிள் என்பது ஆங்கில உச்சரிப்பு. பிபிலியோ (Biblio) என்றால் கிரேக்க மொழியில் புத்தகம் என்று அர்த்தம். போர்த்துகீச மொழிப் பெயரான பிபிலியா (Bíblia) என்ற சொல் தான் தமிழில் "விவிலியம்" என்று மாறியது. ஐரோப்பாவில் கிரேக்க, லத்தீன் மொழிகளைத் தவிர்ந்த பிற மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தன. 

பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களுக்கு தெரிந்த முதலாவது நூலும் பைபிள் தான். தனது பெயரைக் கூட எழுதப், படிக்கத் தெரியாத மக்கள் தான் ஞாயிறு பூசைக்கு தேவாலயங்களுக்கு சமூகமளித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தை காட்டி, இது ஆண்டவர் எமக்கு வழங்கியது என்று சொன்னால், கண்ணை மூடிக் கொண்டு நம்புவார்கள்.

லத்தீன் மொழியில் கைகளால் எழுதப்பட்டிருந்த பைபிளை, லத்தீன் மொழி படித்த பாதிரிகள் மட்டுமே வாசிக்க முடிந்தது. பைபிள் எழுதும் அல்லது பிரதி பண்ணும் வேலையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க துறவிகள் ஈடுபட்டிருந்தார்கள். மடாலயத்தில் வசித்த அவர்களின் வேலை அது மட்டும் தான். 

அது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நாள் முழுக்க உட்கார்ந்து மையைத் தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இன்று நாம் கிறுக்குவது போல எழுத முடியாது. நுணுக்கமாக படம் வரைவது போன்ற, அழகான கையெழுத்தாக இருக்க வேண்டும். தாளுக்கு பதிலாக பதனிடப்பட்ட மாட்டுத் தோல் பயன்படுத்தப் பட்டது. நெதர்லாந்து மொழியில் Monniken werk (துறவியின் வேலை) என்று ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. ஒரே இடத்தில் இருந்து செய்யும் நுணுக்கமான வேலையை அப்படி சொல்வார்கள்.

ஆனால் துறவிகள் எழுதும் பைபிளை வாசிப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இருக்கவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு மட்டுமே உள்ள விசேஷ உரிமை அது. அது மட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்ப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது. ஐரோப்பாவில் லத்தீன் மேட்டுக்குடியினர் பேசும் மொழியாக இருந்தது. சாதாரண மக்கள் வேறு மொழிகளைப் பேசினார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு எல்லாம் அந்தக் காலத்தில் "பட்டிக்காட்டான் பேசும் தாழ்ந்த பாஷைகளாக" இருந்தன. 

சாதாரண குடிமகனும் பைபிளை படித்து புரிந்து கொள்வதை வத்திகான் விரும்பவில்லை. கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் (போப்பாண்டவர்) "மொழிபெயர்ப்புத் தடை" உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பைபிள் லத்தீன் மொழியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதனை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது ஆண்டவருக்கு எதிரான பாவகாரியம் என்று அறிவித்தார். பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர். துரோகத்திற்கு தண்டனை மரணம். விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும், உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர்.


2.
இன்று லத்தீன் மொழி வழக்கொழிந்து விட்டது. இதனால் லத்தீன் பைபிளை வாசித்து புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். வத்திக்கானில் கடமையாற்றும் போப்பாண்டவர், கார்டினல்கள், மற்றும் உலகெங்கும் கிறிஸ்தவ இறையியல் கற்கும் மாணவர்கள் லத்தீன் மொழி படித்துள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கு லத்தீன் மொழி தெரியும்? பைபிளை மொழிபெயர்க்கக் கூடாது என்ற தடைச்சட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தால், இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? 

கிறிஸ்தவ மதத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட "நாஸ்திக" ஐரோப்பாவில், இன்று லத்தீன், கிரேக்க மொழிகள் அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் போதிக்கப்படுகின்றன. (முன்னாள் சோஷலிச நாடுகளிலும் அந்த பாடத்திட்டம் பின்பற்றப் பட்டது.)பலர் இவற்றை படிப்பதில் அக்கறை காட்டா விட்டாலும், குறைந்த பட்சம் விவிலிய நூலில் எழுதியுள்ள சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொள்ளவாவது உதவுகின்றது. நானும் தான் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் படித்திருக்கிறேன்.ஆனால் எனது கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகளை எதிர்க்கும் எத்தனை பேருக்கு இந்த மொழிகள் தெரியும்?

மொழிபெயர்க்கும் பொழுது தவிர்க்கவியலாது சில இடங்களில் அர்த்தம் மாறுபடுவதும் நடந்துள்ளது. இன்று ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு டசின் மொழிபெயர்ப்புகள் (
Timeline of Bible Translation History) வந்து விட்டன. (கர்த்தரே! எது சரியானது?) ஒவ்வொன்றும் எங்கோ ஒரு இடத்தில் வித்தியாசப்படும். 19 ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அன்க்லிகன் திருச்சபையை சேர்ந்த இறையியல் அறிஞர்கள் (Brooke Foss Westcott; Fenton John Anthony Hort) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தார்கள். அதுவே இன்று சிறந்த மொழிபெயர்ப்பாக (The New Testament In The Original Greek) கருதப்படுகின்றது. 

அனேகமாக தமிழ் விவிலிய நூலும் அதை தழுவியே மொழிபெயர்த்திருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகில் மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்த அறிஞர்கள் மத நம்பிக்கையற்றவர்கள்! டார்வினின் பகுத்தறிவுக் கொள்கையிலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள். பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக, கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு.

பைபிள் ஆண்டவரால் அருளப்பட்ட நூல் என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும் என்று பல கிறிஸ்தவர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு புரட்டஸ்தாந்து சபையினர் ஒழுங்கு செய்த பைபிள் வகுப்புகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

அந்த இடம், நெதர்லாந்து நாட்டுப்புறக் கிராமம் என்பதால், அருகில் இருந்த அகதி முகாமை சேர்ந்த பன்னாட்டு அகதிகள் கலந்து கொண்டார்கள். அரபு, ரஷ்ய, ஜோர்ஜிய, தமிழ் மொழி பேசுவோர் தம்மோடு அந்தந்த மொழிகளில் இருந்த பைபிளையும் கையோடு எடுத்து வந்திருந்தார்கள். பைபிள் வகுப்பை ஒழுங்கு படுத்தியவர்கள், டச்சு, ஆங்கில மொழிப் பிரதிகளுடன் காத்திருந்தார்கள்.

பைபிளை வாசிக்கும் பொழுது, அது அங்கே பல மொழிகளிலும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆயினும் டச்சு, ஆங்கில மொழிகள் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டன. (நானே ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கில, டச்சு மொழி பைபிள்களை மாறி, மாறி வாசித்திருக்கிறேன்.) ஒரே அத்தியாயத்தை சேர்ந்த, ஒரே வரிகள் ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை அப்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பை ஒழுங்கு படுத்திய கிறிஸ்தவ சபையை சேர்ந்த நெதர்லாந்துக்காரர்கள் சிறிது குழம்பிப்போனார்கள். 

"கர்த்தர் எதற்காக தனது சொந்த நூலிலேயே அடிக்கடி முரண்படுகிறார்?" எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. (பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவது வேறு விடயம்.)எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த பைபிளைத் தவிர, மோர்மன், ஜெஹோவா பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கென தனியான பைபிளை தயாரித்துள்ளார்கள். மோர்மன்களின் பைபிளில் மோர்மன் என்ற சொல்லும், ஜெஹோவாக்களின் பைபிளில் அடிக்கடி ஜெஹோவா என்ற சொல்லும் இடம்பெறும்.


3.
பைபிளின் மூல நூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு (எபிரேய), அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு முழுக்க முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இயேசுவின் பன்னிரு சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். 

இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் யூதாஸ் எழுதிய சுவிசேஷம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது பைபிளில் சேர்க்கப்படவில்லை.

இன்று பைபிளில் காணப்படும் சுவிசேஷங்கள் மட்டும் தான் எழுதப்பட்டன, என்று நம்புவது வரலாறு தெரியாதவர்களின் அறியாமை. கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன.கிரேக்கத்தில் (இன்று துருக்கி இருக்கும் இடம்) ஞானவாத கிறிஸ்தவ பிரிவு (Gnosticism) பரவலான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது. "இனோசிஸ்" (ஆங்கிலத்தில் : knowledge)என்ற கிரேக்க சொல்லில் இருந்து அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் இன்றுள்ள கிரேக்க பழமைவாத (ஓர்தோடொக்ஸ்) கிறிஸ்தவ பிரிவு அரச ஆதரவைக் கொண்டிருந்தது. 

இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தத்துவப் போர்கள் நடந்தன. ஞானவாத கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சபையை சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அழிக்கப்பட்டன. "நன்மைகளின் உலகம், தீமைகளின் உலகம்" என்ற ஈருலகக் கோட்பாடு அவர்களுடையது. ஞானவாத கிறிஸ்தவர்கள் பொருளாயவாத உலகை சாத்தானின் படைப்பாக கருதினார்கள். தேவாலயம் கூட ஒரு பொருள் என்பதால், அதனை அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ள "வெளிப்பாடு" (இறுதி அத்தியாயம்) என்ற சுவிசேஷத்தை என்ன காரணத்திற்காகவோ, கிறிஸ்தவர்கள் படிக்க விரும்புவதில்லை. "கத்தோலிக்க மடாதிபதி பாப்பரசர் சாத்தானின் அவதாரம்." என்ற அர்த்தம் வரும் சில வரிகள் அதிலே எழுதப்பட்டுள்ளன. (நேரடியாக குறிப்பிடவில்லை.) அதற்காக வத்திகான் அந்த இறுதி அத்தியாயத்தை மக்களின் கண்களில் இருந்து மறைத்து வைக்க விரும்பியதாக கூறப்படுகின்றது. 

"வெளிப்பாடு" எழுதிய அப்போஸ்தலர் யானிஸ் ("ஜோன்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் உங்களுக்கு புரியும்) பட்மொஸ் தீவில் அந்த சுவிசேஷத்தை எழுதினார். அவர் அங்கே மறைந்து வாழ்ந்ததாக கருதப்படுகின்றது. துருக்கிக்கு அருகில் உள்ள அந்த சிறு தீவில் இருந்து கொண்டே, பல எதிர்காலக் காட்சிகளை மனக்கண்ணால் கண்டுள்ளார். ஊழிக்காலத்தை எதிர்வு கூறிய ஒரு தீர்க்கதரிசியின் வாசகங்களைப் படிப்பதற்கு பல கிறிஸ்தவர்கள் பயப்படுகிறார்கள்.


4.
மேற்கு ஐரோப்பாவில், லத்தீனை தவிர வேறு எந்த மொழியும் எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. அனேகமாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அந்த மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது நூலாக இருக்கும். கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஊழல்மய மதகுருக்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்ப் பிரகடனம் செய்தார். 

ஜெர்மன் மொழியில் எதிர்ப்பு எனப் பொருள்படும் "Protest" என்ற பெயரில் புதிய இயக்கம் பைபிளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது. அதன் பின்னரே, டச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் துணிச்சலுடன் வெளிவந்தன. புரட்டஸ்தாந்து அமைப்பு தோன்றும் வரையில், மொழிபெயர்த்த பைபிளை வைத்திருப்பது பாரதூரமான குற்றமாக கருதப்பட்டது. 

1517 ம் ஆண்டு, அதாவது புரட்டஸ்தாந்து கிளர்ச்சி இடம்பெற்ற அதே காலப்பகுதியில், இங்கிலாந்தில் ஏழு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்தால் மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? அந்த ஏழு குற்றவாளிகளும் யாரையாவது கொலை செய்தார்களா? இல்லை. தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் ஜெபம் செய்ய சொல்லிக் கொடுத்தது தான் அவர்கள் செய்த மாபெரும் குற்றம்! ஆமாம், அந்தக் காலத்தில் ஜெபம் செய்வது கூட லத்தீன் மொழியில் தான்.

1380 ம் ஆண்டு, இங்கிலாந்தை சேர்ந்த
John Wycliffe, என்ற கிறிஸ்தவ இறையியல் பயின்ற அறிஞர் பைபிளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். பாப்பரசர் எத்தனை தடை போட்டும், மிரட்டியும் அஞ்சாமல் தனது முயற்சியை தொடர்ந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் கையால் எழுதி பூர்த்தி செய்த பைபிளை மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். முதன் முதலாக ஆங்கில மொழியில் வெளியான பைபிள் அது தான். John Wycliffe இறந்த பின்னரும் பாப்பரசரின் கோபம் அடங்கவில்லை. "கிறிஸ்தவ மதத்துரோகி" யின் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுக்கப்பட்டு எலும்புகள் பொடிப்பொடி ஆக்கப்பட்டன.

John Wycliffe பைபிளை படித்து மொழிபெயர்த்ததுடன் மட்டும் நிற்கவில்லை. கத்தோலிக்க தேவாலய மதகுருக்களின் ஊழலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடினார். உண்மையான கிறிஸ்தவன் ஏழ்மையில் வாழ வேண்டும் என நம்பியவர். ஒரு நேர்மையான கனவானின் பின்னால் மக்கள் அணிதிரண்டதில் வியப்பில்லை. 

அப்படியானால் அன்றைக்கு கத்தோலிக்க மதகுருக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளை தன்னலம் கருதும் ஊழல் பெருச்சாளிகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அதே போலத்தான், அன்றைக்கிருந்த ஐரோப்பிய மக்கள் கத்தோலிக்க மதகுருக்களை பார்த்தார்கள். ஆமாம், கத்தோலிக்க மதவாதிகள் ஆட்சி செய்த ஐரோப்பா, தேவகுமாரனின் பரிசுத்த ராஜ்ஜியமாக இருக்கவில்லை.


5.
இன்றைக்கு கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பிஷப், பாதிரிகள் துறவற வாழ்க்கை வாழ்கின்றனர். கர்த்தரின் திருப்பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று, நீங்கள் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. வத்திகானில் முடிசூடா மன்னனாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதலாவது போப்பாண்டவர் பீட்டர் திருமணம் செய்தவர். அது வரலாற்றில் பதியப்படுமளவிற்கு, எல்லோருக்கும் தெரியும். 

பிஷப்கள் முதல் சாதாரண கிராமப்புற பாதிரி வரையில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு காலத்தில் மதகுருக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கத்தோலிக்க திருச்சபை சுற்றறிக்கை அனுப்பியது. அதற்குப் பிறகு ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்வதை விட, பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது.

சுவிட்சர்லாந்துக்கு அருகில் உள்ள பிரான்சின் நகரமான லியோனில் இருந்து ஆட்சி செய்த கத்தோலிக்க மதகுரு, சினிமாவில் வரும் வில்லன் போல அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்த ஊரெல்லாம் அவரது அட்டகாசம் கொடி கட்டிப் பறந்தது. "லியோன் தாதா" வின் கொடுமை கண்டு பொங்கி எழுந்த வால்டோ
(Peter Waldo) என்ற வர்த்தகர், மக்களை திரட்டி சீர்திருத்த இயக்கம் ஒன்றை தொடங்கினார்(1170)தனது சொத்தை எல்லாம் தேவாலயத்திற்கு என எழுதிக் கொடுத்து விட்டு, களத்தில் இறங்கினார். 

ஆரம்பத்தில் வால்டோவின் சீர்திருத்த இயக்கத்திற்கு போப்பாண்டவர் அனுமதி வழங்கினார். (மதப் பிரசங்கம் செய்பவர் போப்பாண்டவரின்  அனுமதி பெற்றே செய்ய வேண்டும்.) ஆனால் வால்டோவின் போராட்டம் லியோன் ஊழல் பெருச்சாளிக்கு எதிராக திரும்பியதும் அனுமதியை ரத்து செய்து விட்டார்.

இதற்கிடையே வால்டோ பைபிளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். (அபச்சாரம்! அபச்சாரம்!!) அது மட்டுமல்ல வால்டோ குழுவினரின் தேவாலயங்களில் பெண்களும் மதகுருக்களாக பூசை செய்ய முடிந்தது. (தெய்வ குற்றம்! கர்த்தருக்கே பொறுக்காதே!!) வால்டோ குழுவினருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களும் போதுமானதாக இருந்தன. 

போப்பாண்டவர் அனுப்பிய சிறப்புப் படையணி வால்டோ குழுவினரின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு வேட்டையாடியது. வால்டோ குழு உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட போதிலும், மலைகளுக்குள் மறைந்து கொண்டனர். வால்டோ குழுவினர், சுவிட்சர்லாந்தின் வொட் (Vaud) என்ற மாநிலத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடித்தனர். பிரெஞ்சு மொழியில் வோடுவா (Vaudois) என்ற பெயரே பின்னர், (ஜெர்மன் மொழியில்) வல்டோ குழு என்று திரிபுற்றதாக சொல்லப்படுகின்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்னர் தான் பைபிளை மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துள்ளன. அதற்கு என்ன காரணம்? அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் புதிய நகரங்கள் உருவாகின. நகரமயமான சமுதாயத்தில் புதிய சிந்தனைகளுக்கான தேடல் ஏற்பட்டது. வர்த்தகர்கள் தொழில் நிமித்தம் உலக அறிவு கைவரப் பெற்றிருந்தனர். சிலர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். 

மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ பொருளாதார முறை தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அரசியல் அதிகாரம் (கத்தோலிக்க) மதகுருக்களின் கைகளில் இருந்து, மன்னர்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருந்தது. சுருக்கமாக, ஐரோப்பா ஒரு சமூகப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தவிர்க்கவியலாது மதம் குறித்த அறிவுத் தேடலும் அந்தப் புரட்சியின் ஒரு அங்கமாகியது. 

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.


கிறிஸ்தவ மதம் குறித்த மேலதிக வாசிப்புக்கு உதவும் முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

Friday, June 25, 2010

McDonald's: பிள்ளை பிடிகாரர்களின் உணவகம்!


எங்காவது ஒரு மேற்குலக நகரத்தில் பொருளாதார உச்சி மகாநாடு நடைபெற்றால், அங்கே முதலில் தாக்கப் படுவது மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கும். மகாநாட்டை எதிர்த்து தெருவில் ஊர்வலம் போகும் எதிர்ப்பாளர்கள் வழியில் மக்டோனால்ட்சை பார்த்தால் கல் எடுத்து வீசாமல் போக மாட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த உலகமயமாக்கலின் சின்னமான மக்டோனால்ட்சை அடித்து நொறுக்குவதில் அவர்களுக்கு அவ்வளவு குஷி. இதனால் மகாநாடு நடக்கும் சமயம், முதல் நாளே உணவு விடுதியை பூட்டி விட்டு, கண்ணாடிகளுக்கு மேலே பலகை அடித்து விட்டு போவார்கள்.

மக்டொனால்ட்ஸ் எந்த சத்துமற்ற சக்கையை விற்று காசாக்குகின்றது, என்ற விழிப்புணர்வு மெல்ல மெல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது. அதனால் மக்டொனால்ட்ஸ் நிர்வாகம், "உள்நாட்டில் வாங்கிய தரமான உணவுப் பொருட்களை கொண்டு தயாரிப்பதாக" அடிக்கடி காதில் பூச் சுற்றும். மக்டொனால்ட்ஸ் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் பல்வேறு வியாதிகளை உருவாக்குகின்றன. மக்டோனால்ட்சின் தாயகமான அமெரிக்காவில், "ஹம்பெர்கர்" தின்று கொழுத்த சிறுவர்கள் ராட்சதர்கள் போல காட்சி தருவார்கள். (உலகிலேயே பெரிய்ய்ய்ய நாடல்லவா. அங்கே எல்லாம் பெரிசு பெரிசாக தான் இருக்கும்.)

மக்டொனால்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட மேற்கு ஐரோப்பிய பொது மக்கள், அங்கே சாப்பிடுவதை தரக் குறைவாக கருதுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலை கீழ். வசதியான நடுத்தர வர்க்க இளைஞர்கள் மக்டோனால்ட்சை மொய்க்கிறார்கள். அங்கே சாப்பிடுவதில் ஒரு பெருமிதம். அமெரிக்காவில் இருந்து எந்த குப்பையை இறக்குமதி செய்தாலும் அவர்களுக்கு இனிக்கும். மேற்குலகில் தோன்றியுள்ள மக்டொனால்ட்ஸ் எதிர்ப்பு அலை பற்றி, இந்திய மேன் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். (நீங்க எல்லாவற்றிலும் too late)

கடந்த பத்தாண்டுகளில் வணிகவியல் படித்த மாணவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களது மார்க்கெட்டிங் வகுப்பில் மக்டோனால்ட்சின் "வெற்றியின் இரகசியம்" பற்றி கற்பித்திருப்பார்கள். அது என்ன பெரிய "மார்கெட்டிங் புரட்சி"? குழந்தைகளை கவர்ந்திழுக்கும் அன்பளிப்புகளை, (மக்டொனால்ட்ஸ் சின்னம் பொறித்த) விளையாட்டுப் பொருட்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளே பெரியவர்களை ரெஸ்டாரன்ட் பக்கம் இழுத்து வருகின்றன.

வழியில் மக்டோனால்ட்சை கண்டால் அங்கே போக வேண்டுமென்று அடம் பிடிக்கும் குழந்தைகள் எத்தனை? குழந்தைகள் வந்தால் கூடவே பணத்துடன் பெற்றோரும் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். இது ஒன்றும் மகத்தான மார்க்கெட்டிங் கிடையாது. "பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து கடத்தும் பிள்ளை பிடிகாரர்களின் கயமைத்தனம்." இப்படிக் கூறுகிறது அமெரிக்காவில் ஆய்வு செய்த Centre for Science in the Public Interest (CSPI).

உணவு உற்பத்தி தொழிற்துறையை ஆய்வு செய்யும் அந்த வெகுஜன நிறுவனம், மக்டொனால்ட்ஸ் நீதியற்ற, ஏமாற்றும் மார்க்கெட்டிங் மூலம் பிள்ளைகளை கவருவதாக குற்றஞ் சாட்டியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு விளம்பரம் செய்வதானது, நுகர்வோர் பாதுகாப்பை மீறும் செயல் என்று எச்சரித்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சத்தான உணவை சாப்பிட பழக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தடையாக இருப்பதாக அது மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் மக்டொனால்ட்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. எண்ணி முப்பது நாட்களுக்குள் மக்டொனால்ட்ஸ் தனது "பிள்ளை பிடி மார்க்கெட்டிங்கை" நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும். நிச்சயமாக மக்டொனால்ட்ஸ் நிர்வாகம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருக்காது. அவர்களைப் பொறுத்த வரையில் நமது குழந்தைகளின் நலன் முக்கியமல்ல, நமது பாக்கெட்டில் உள்ள பணம் தான் முக்கியம்.


References:
McDonald's Lawsuit: Using Toys to Sell Happy Meals
Centre for Science in the Public Interest
Jose Bove - the Man Who Dismantled a McDonalds
Super Size Me - anti McDonald's documentary

Thursday, June 24, 2010

"அல்கைதாவும் அமெரிக்காவும் நண்பர்கள்!" - ஒரு பயங்கரவாதியின் சாட்சியம்

"அல்கைதாவுடன் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை." - பிடிபட்ட பயங்கரவாதியின் வாக்குமூலம். மேலும் ஈரான் போன்ற நாடுகளில் இயங்கி வரும், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க அரசு ஆயுதங்களும், நிதி உதவியும் வழங்கி வந்துள்ளது. பெப்ரவரி மாதம் ஈரானில் பல பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான "ஜன்டுல்லா" (அல்லாவின் சேனை) என்ற இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் துபாயில் இருந்து கிரிகிஸ்தான் செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது பிடிபட்டார். கிரிகிஸ்தான் மனாஸ் அமெரிக்க இராணுவ முகாமில் ஒரு முக்கிய புள்ளியை சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்த பொழுது, விமானம் ஈரானில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டது. ஜன்டுல்லா தலைவர் ரிகி கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் தூக்கில் இடப்பட்டார்.
இங்கேயுள்ள வீடியோவில் பிடிபட்ட ஜன்டுல்லா தலைவர் ரிகியின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.


இது குறித்து கலையகத்தில் ஏற்கனவே வந்த செய்தி:
ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

Wednesday, June 23, 2010

அச்சுறுத்தப் போவது யாரு? முஸ்லிம்களா? ஐரோப்பியர்களா?

சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய Fitna என்ற இஸ்லாமிய விரோத வீடியோவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வீடியோ இது. "இஸ்லாம் ஐரோப்பாவை அச்சுறுத்துகிறது" என்ற தீவிர வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு மாறாக, ஐரோப்பிய கலாச்சாரம் உலகை அச்சுறுத்திய வரலாற்றை பதிவு செய்துள்ளது.
வீடியோவில் வரும் நெதர்லாந்து வசனங்களுக்கான தமிழ் மொழியாக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்.
______________________

Warning: This film contains very shocking images.

- சுதந்திரத்திற்கான கட்சி (PVV) -

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சிநிரல்

முன்னுரை


- நெதர்லாந்து தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத நிலையை அடைந்துள்ளது.
- தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத ஒரு சமுதாயம்
- முழு உலகும் பொறாமைப் படுகின்றது.
(கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட அடிமைகள்)
- கலாச்சாரங்கள் சமத்துவமானவை அல்ல. எமது கலாச்சாரம் இஸ்லாமை விட மேன்மையானது.
-நாம் கடுமையானவர்கள்.

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சி நிரல்
பாதுகாப்பு

- இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றத்தை முழுமையாக நிறுத்த விரும்புகிறோம்.
- (முஸ்லிம்களின் எண்ணிக்கை) அளவுக்கு மிஞ்சி பெருகி விட்டது.
- இந்த மசூதிகள் என்னை பைத்தியமாக்குகின்றன.
- அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?
- யார் அவர்களை உள்ளே விட்டது?
(CNN நேர்காணல்)
- அனைத்து நெதர்லாந்து மக்களையும் வந்து சேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
- எமது போராட்டம் இலகுவானதல்ல.
- இஸ்ரேல் எமக்காக யுத்தம் செய்கின்றது.
- ஜெருசலேம் வீழுமானால், எதேன்சும், ரோமும் வீழ்ச்சி அடையும்.
(காசா மசூதி மீதான இஸ்ரேலிய தாக்குதல்.)
- நெதர்லாந்து மீதான முஸ்லிம்களின் படையெடுப்பை நிறுத்த மறுப்பவர்களை இட்டு வெட்கப் படுகிறேன்.
- கோழைகளாக பிறந்த பயந்தாங்கொள்ளிகள் கோழைகளாகவே மடிவார்கள்.
- நாங்கள் யுத்தத்தில் தோல்வியடைகிறோம்.
(CNN நேர்காணல்)
ஹெர்ட் வில்டர்ஸ்
- முஸ்லிம்கள் பொய்யர்கள், கிரிமினல்கள்.
- எனக்கு இஸ்லாம் போதும் போதும் என்றாகி விட்டது.
- குரான் எனக்கு இனி வேண்டாம்.
- அல்லாவை, முகமதுவை வணங்குவது எனக்கு இனி வேண்டாம்.
(தலையில் வெடி குண்டு திரியுடன் வெடித்துச் சிதறும் வில்டர்ஸ்.)

A film by Wil Geerdersபிற்குறிப்பு:
கடைசியாக நடந்த நெதர்லாந்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இஸ்லாமிய விரோத வில்டர்சின் PVV என்ற கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தீவிர வலதுசாரியான வில்டர்ஸ் என்ற தலைமைப்பண்பும், அவரது இஸ்லாமியர் எதிர்ப்பு பிரச்சாரமும், பெருமளவு வெள்ளையின வாக்காளர்களின் வாக்குகளை வாங்கிக் குவிக்க போதுமானதாக இருந்துள்ளது. "இஸ்லாமிய காட்டுமிராண்டி கலாச்சாரம், அதி உன்னதமான ஐரோப்பிய கலாச்சாரத்தை அழித்து வருகின்றது. ஐரோப்பா முஸ்லிம்களின் காலனியாகி வருகின்றது." போன்ற இனவாதக் கருத்துகள் பெருமளவு வெள்ளையரைக் கவர்ந்துள்ளன. (குஜராத்துக்கு ஒரு நரேந்திர மோடி, நெதர்லாந்துக்கு ஒரு வில்டர்ஸ்.) வில்டர்ஸ் தனது முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மேற்கொள்ள உதவியாக Fitna என்ற வீடியோவை தயாரித்து இணையத்தில் உலவ விட்டார். அதனால் நெதர்லாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நெதர்லாந்து அரசியல் அரங்கில் பலமான சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், வில்டர்சின் PVV கட்சி நெதர்லாந்து சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல். வில்டர்சின் கொள்கை இஸ்லாமியருக்கு எதிரானது மட்டுமல்ல, அகதிகள், வெளிநாட்டு குடிவரவாளர்கள் ஆகியோருக்கும் எதிரானது. தீவிர முதலாளித்துவ ஆதரவுக் கட்சி, வெள்ளையின உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

Tuesday, June 22, 2010

சூப்பர் மார்க்கட்களை சூறையாடும் நவீன ராபின் ஹூட்கள்

தெஸ்சலோனிக்கி நகரத்தில் (வடக்கு கிரீஸ்) மீண்டும் இடதுசாரி அனார்கிஸ்ட் அமைப்பினரின் அரசியல் அதிரடி தாக்குதல். நகர மத்தியில் உள்ள சூப்பர் மார்க்கட் ஒன்று பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டது. (அவர்கள் இதனை "Proletarian Shopping " என்று அழைக்கிறார்கள்.) திடுதிப்பென சூப்பர் மார்க்கட்டினுள் புகுந்த முகமூடி அணைந்த இளைஞர்கள் உணவுப் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். போகும் பொழுது காசாளரிடம் இருந்த பணத்தை பிடுங்கி தெருவில் போட்டு எரித்து விட்டு சென்றனர். (அனார்கிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் காசை தீமைகளின் சின்னமாக கருதுகின்றனர்.)

தமது அதிரடி அரசியல் நடவடிக்கை குறித்து அனார்கிஸ்ட்கள் வெளியிட்ட பிரசுரம் கீழே உள்ளது. அதன் சாராம்சம் பின்வருமாறு: "நாம் மக்களின் மீட்பர்களாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. மக்களை அது போன்ற செயல்களில் ஈடுபடுமாறு தூண்டி விட விரும்பினோம். உணவுப்பொருட்கள் எமது தோழர்கள் மத்தியில் மட்டுமே பங்கிடப்பட்டது. எமக்காக இன்னொருவர் போராடுவார் என்ற மக்களை எதிர்பார்க்க வைப்பது எமது நோக்கமல்ல. மக்கள் தமக்காக தாமே போராட வேண்டும். காசு எரிப்பு ஒரு அடையாள எதிர்ப்பு நடவடிக்கையாகும். மக்களின் துன்பங்களுக்கு காசு காரணமாக இருந்துள்ளது.

சூப்பர் மார்க்கட் சூறையாடலின் போது எடுக்கப்பட்ட வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
On 14/06/10 we stormed into a super-market of the chain Masoutis on M.Kyriakou street, we took basic need goods (olive oil, pasta, milk etc.) and destroyed the anti-theft systems and the surveillance camera while we also smashed the cashiers and burnt all the money they had inside.

From the beginning we had decided that the goods of the appropriation would be distributed among the comrades who participated, not outside the super-market. With this choice of ours we want to make clear that this, and other practices aim not at promoting some of us as saviours of the society – rather, we want society itself to familiarise itself with such practices and to embrace them without waiting for the “revolutionary” philanthropist/ friends of the poor. Especially in a period like this one, where the rottenness of the present system is pushing it toward collapse. As for the term “Robin Hoodies” (in Greek: Super-market Robins) we believe it consists another typical attempt to twist the meaning of such actions by Mass Media, which present comrades as some sort of elite stealing for the poor. In result, the distribution of the goods is presented in a way that refers to the narcosis and the passivity reflected in the thinking “someone will think-act-take care of us”.

We do not believe in a society of “weak-minded” people who must necessarily be ruled, as is wished by the ruling propaganda. We are happy when people walk on with the belief that their life belongs to them, away from mediators and needless gabble, when they organise under the premise of solidarity, anti-authoritarianism and self-organisation; under the guidance of active negation and attack. When they do not fall for the fallacy of the regime that “by helping each other we will scrape through the crisis”. It is important, finally that when distributing goods you have no way of telling if the recipients are indeed in solidarity, even if that is not active, or if they are just hypocrites taking care of themselves only – and perhaps even, in another case, they would be the first to inform to the police. Of course we applaud similar actions by comrades who distribute the goods: as as we said earlier the aims are the same.

The burning of money is a symbolic action speaking for itself. These little pieces of paper that turned into ashes within seconds have managed, in even less seconds, to destroy lives, relationships, to transform the human and her desires by transforming life into indexes, digitalising feelings and experiences, simplifying the feelings of joy and misery down to the dipole I have/ I have no money.

As for the action itself it took place exactly as planned. Our getaway was relaxed and with no unexpected incidents. We used bins to block off some roads precautionary while we made sure to know the movements of the cops before and during the action. It is telling that pigs of the Z force (motorcycle cops –trans.) were sitting around confused by the fountain on Egnatia Ave, obviously waiting for reinforcements and tried to approach only when we were already gone.

We are consciously and actively in solidarity with every other action sabotaging capitalism within the urban environment in which we act.

PS 1. A warning toward the “macho Greeks” who might want to become heroes: they’ll receive the treatment they deserve, exactly as it happened when one of them was spotted to be calling the cops – he was chased, along with the bunch who were about to intervene. But as the saying goes, “the mother of the fast one has never mourned”

PS 2. We can only laugh at the misinformation of the media about supposed clashes with repression forces, trolleys filled with goods that we never managed to hand out etc…

PS 3. Of course we support the appropriation of money for the needs of the movement, it is just that we wanted to give a different context to this particular action.

The thieves’ thieves
(Greek original communique is here)

Monday, June 21, 2010

ஆப்பிரிக்காவில் ஒரு குவைத் - ஆவணப்படம்

ஈகுவாடோரியல் கினியா: உங்களில் எத்தனை பேர் இந்த நாட்டை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்? மேற்கு ஆப்பிரிக்க கரையில் இருக்கும் குட்டி நாடு. நீண்ட காலமாக வெளியுலக தொடர்பற்றிருந்த மர்ம தேசம். சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், மற்றும் ஒரு சிறு கூலிப்படை ஆகியன கூட்டுச் சேர்ந்து சதி செய்தன. ஒரு அதிரடி சதிப்புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது அவர்களது நோக்கம். காரணம்? ஈகுவாடோரியல் கினியாவில் காணப்படும் அபரிதமான எண்ணெய் வளம்.

ஈராக்கிடம் இருந்து குவைத்தை விடுவிக்க நடந்த வளைகுடாப் போரின் பின்னர் அமெரிக்கா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. எதிர்காலத்தில் எண்ணைத் தேவைக்காக (அமெரிக்க எதிர்ப்பு) இஸ்லாமிய நாடுகளில் தங்கியிருப்பதை தவிர்க்க விரும்பியது. வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்கு மாற்றாக, ஆப்பிரிக்க எண்ணெய் மீது கண் வைத்தது. ஈகுவாடோரியல் கினியா, உலகில் பலர் அறிந்திராத குட்டி ஆப்பிரிக்க தேசம். முன்னாள் ஸ்பானிய காலனியான ஈகுவாடோரியல் கினியா சுதந்திரம் பெற்றதும் ஒரு கொடுங்கோலனின் இரும்புப் பிடிக்குள் வந்தது. தன்னை "கிறிஸ்துவின் மீட்பர்" என அறிவித்துக் கொண்டே ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை சிலுவையில் அறைந்து கொன்றான். கொடுங்கோல் ஆட்சியால் வெறுத்துப் போன சொந்த மருமகனே இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். இன்றைய ஜனாதிபதி ஒபியங்கோ ஆட்சிக்கு வந்த பின்னர் தான் மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியன கிடைத்தன.

அண்மையில் கினியாவின் அபரிதமான எண்ணெய் வளம் காரணமாக வெளிநாட்டு கூலிப்படையினர் சதிப்புரட்சிக்கு திட்டமிட்டனர். கினியாவில் அமெரிக்க நிறுவனங்கள் எண்ணெய் அகழ்ந்த போதிலும், அமெரிக்க அரசு ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கியது. (லாபத்தில் அதிக பங்கு வேண்டும் என்ற பேராசை காரணமாக இருக்கலாம்.) தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய கூலிப்படை கினியா போய்ச் சேரவில்லை. இடையில் சிம்பாப்வே நாட்டில் வழிமறிக்கப் பட்டு கைது செய்யப்பட்டனர். மேற்குலக ஆதரவு பெற்ற கூலிப்படைக்கு தென் ஆப்பிரிக்க அரசு ஆதரவு வழங்கும் என்று நம்பியிருக்கலாம். ஆனால் தென் ஆப்பிரிக்கா அவர்களை பொறிக்குள் வீழ்த்தி விட்டது. கூலிப்படையின் கைதுக்கு பின்னர், தோல்வியுற்ற கினியா சதிப்புரட்சியில் பெரிய புள்ளிகள் சம்பந்தப் பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் மகன் மார்க், நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பெருமளவு பணத்திற்கு ஆசைப்பட்டு போன ஒரு கூலிப்பட்டாளம் மட்டும், இந்த தோல்வியடைந்த சதிப்புரட்சிக்கு காரணமல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் சதிப்புரட்சி நடக்கவிருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அதை தடுக்கவில்லை. பெருமளவு எண்ணெய் விநியோகம் அமெரிக்காவை நோக்கி சென்ற போதிலும், அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் ஈகுவாடோரியல் கினியாவின் ஜனாதிபதியை ஆத்திரமூட்டின. அமெரிக்காவில், கினியா ஜனாதிபதிக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கு, வங்கி வைப்பு முடக்கப்பட்டமை, தோல்வியுற்ற சதிப்புரட்சியில் பங்கு என்பன, அமெரிக்க தொடர்பை துண்டிக்க வைத்தன. தற்போது ஈகுவாடோரியல் கினியா சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. அமெரிக்கா போல சீனா உள் நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பதும், இந்தப் புதிய நட்புறவுக்கு காரணம். ஈகுவாடோரியல் கினியாவில் சீனா புதிய தலைநகரம் ஒன்றை உருவாக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. கூடவே எண்ணெய் வர்த்தகத்தில் பங்கு கேட்டுள்ளது.

பேராசை பெரு நஷ்டம் என்றொரு பழமொழி உண்டு. அதிக எண்ணெய் வருமானத்திற்காக பேராசைப்பட்ட அமெரிக்கா, "ஆப்பிரிக்காவின் குவைத்தை" சீனாவிடம் தாரை வார்த்து விட்டு விழிக்கிறது. ஆப்பிரிக்காவை கொள்ளையடிப்பதற்காக, மேற்குலக நாடுகள் சதிப்புரட்சிக்கு ஆதரவளிப்பதும், கூலிப்படையினருடன் கூடிக்குலாவுவதும் இன்றைக்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஈகுவாடோரியல் கினியாவின் எண்ணெய் வளத்தை அபகரிக்க மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சதி முயற்சிகளை ஆராய்கிறது இந்த ஆவணப்படம். நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்றில் ஒளிபரப்பானது. வீடியோ ஆங்கில உபதலைப்புகளை கொண்டுள்ளதால் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.


Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Sunday, June 20, 2010

கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...


எனது வலைப்பூவில் கிறிஸ்தவ, யூத மதங்களை விமர்சிக்கும் கட்டுரைகளை அதிகம் எழுதுவதாக சில நண்பர்கள் என் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சில விஷமிகள் இதனை "கிறிஸ்தவ/யூத எதிர்ப்பாக" திரிபு படுத்த பார்க்கின்றனர். இது அவர்களது குறுகிய மனப்பான்மையை காட்டுகின்றது. இதே போன்ற குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய, இந்து, (தலாய்லாமா) பௌத்த ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தும் எழுந்துள்ளன. பல முனைகளில் பிரிந்திருக்கும் அனைத்து மதவாதிகளும் சந்திக்கும் புள்ளியும் அது தான்.

மதச்சார்பின்மையை பற்றிய அவர்களின் புரிதலை "எம்மமதமும் சம்மதம்" என்ற சொற்பதத்திற்குள் அடக்கி விடலாம். "எல்லா மதத்திற்கும் சமமான ஜனநாயகம்" என்று இதற்கு பொழிப்புரை எழுதலாம். "மதம் ஒருவரின் அந்தரங்க விடயம்." என்ற அரச நிர்ணய சட்டத்தை நடைமுறைப் படுத்த கிளம்பினால் தான் பிரச்சினை கிளம்புகின்றது. இந்தியாவிலோ, இலங்கையிலோ அரசும் மதமும் இன்னமும் தனித்தனியாக பிரிக்கப்படவில்லை. இதனால் இணையம் என்ற பொதுத்தளத்தில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் பதிவர்கள் மீது சேறு பூசப்படுகின்றது. மதக் கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களுக்கு, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் இல்லை.

இவர்கள் "கிறிஸ்தவ நாடுகள்" என புரிந்து கொள்ளும், மேற்குலகில் வாழும் மக்கள், தம்மை அப்படி அழைப்பதை விரும்புவதில்லை. இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள், தம்மை "எந்த மதத்தையும் சாராதவர்" (Agnostic) என்றே அழைத்துக் கொள்வார்கள். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தால் கிறிஸ்தவன் தானே, என்று கொடுக்கும் விளக்கம் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. (அந்த விளக்கத்தின் படி பார்த்தால் இயேசு ஒரு கிறிஸ்தவன் அல்ல.) கிறிஸ்தவம் ஒரு உலகமயமாக்கப்பட்ட மதமாகி விட்டது. வறிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதே நேரம் செல்வந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. மதத்திற்கும், வர்க்கத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்க இந்த ஒரு உதாரணம் போதும்.

மேற்குலக மதச்சார்பற்ற நாடுகளில், மதம் குறித்து எத்தகைய கருத்தையும் முன்வைக்கலாம். ஒருவர் எந்த மதத்தையும், கடவுளையும் பற்றி விரும்பிய படி கிண்டல் செய்யலாம், பரிகசிக்கலாம், கேலிச்சித்திரம் வரையலாம். அந்த உரிமையை அரசும், நீதிமன்றமும் உறுதிப்படுத்தி வருகின்றன. ஏதாவது ஒரு மதத்தை விமர்சித்ததற்காக "மத எதிர்ப்பாளன்" முத்திரை குத்த முடியாது. விமர்சகரை பாதுகாக்கும் சட்டம், முத்திரை குத்தியவரை ஆபத்தான பேர்வழியாக கருதுகின்றது. இவை "பரம்பரை கிறிஸ்தவ நாடுகள்" என்பதால், இங்கெல்லாம் கிறிஸ்தவ மதத்தை பற்றி அதிக விமர்சனங்கள் எழுவதில் வியப்பில்லை. அதனை இங்கே யாரும் கிறிஸ்தவ எதிர்ப்பு என்று பாமரத்தனமாக புரிந்து கொள்வதில்லை. "பாப்பரசர் ஒரு மாபியா கிரிமினல்" என்று கூறும் கத்தோலிக்கர்களை இங்கே காணலாம். உண்மையிலேயே வத்திக்கானுக்கும், மாபியாவுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்த நூல்கள் பல வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில், ஐரோப்பா முழுவதும், கத்தோலிக்க மதம் மட்டுமே, ஒரேயொரு மதமாக ஆதிக்கம் செலுத்தியது. கத்தோலிக்க கிறிஸ்தவ சபை மக்களை சுரண்டி வாழும் ஒட்டுண்ணி நிறுவனமாகவே அவர்களுக்கு தெரிந்தது. கிராமத்தில் இருக்கும் சிறிய தேவாலயத்தின் பாதிரி கூட வரி வசூல் செய்யும் "கலக்டர்" போல நடந்து கொண்டார். ஒரு தேவாலயத்தின் உறுப்பினர் கொடுக்கும் பங்குப் பணம், ஒரு சாதாரண பக்தன் கொடுக்கும் காணிக்கை அல்ல. அதற்கும் மேலே. பாதிரிகள் அந்தப் பணத்தை வசூல் செய்து, பிராந்திய பிஷப்புக்கு அனுப்புவதும், அவர் அதை வத்திக்கானுக்கு அனுப்புவதும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைக்கும் கத்தோலிக்க திருச்சபை ஒரு சர்வதேச நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று பெருகி வரும் புரட்டஸ்தாந்து, பெந்தேகொஸ்தே சபைகளின் வியாபாரப் போட்டி வேறு.

ஐரோப்பாவில் இன்றைக்கும் கிறிஸ்தவர்களாக மத நம்பிக்கையுடன் வாழும் பலர் தேவாலயங்களுக்கு செல்வதில்லை. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மக்களின் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும், தேவாலயம் மக்களை கட்டுப்படுத்தும் அதிகார மையமாக இருந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேவாலயத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மாதாமாதம் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட வேண்டும். (குறைந்தது மொத்த வருமானத்தில் 10 %) அப்படி தனது பங்கை செலுத்தாதவர் கிறிஸ்தவனாக கருதப்பட மாட்டார். (தேவாலயம் அவரை கிறிஸ்தவன் அல்ல என்று பிரகடனம் செய்யும்). "ப்பூ... இதிலென்ன இருக்கிறது. நானும் தான் அடிக்கடி சர்ச்சுக்கு போவதில்லை. பணம் ஒன்றும் கொடுப்பதில்லை. என்னை யாரும் கிறிஸ்தவன் இல்லை என்று சொல்வதில்லையே..." என்று நீங்கள் வாதம் செய்யலாம். ஐயா, உங்களுடைய நிலைமை வேறு. அன்று ஐரோப்பிய மக்களின் நிலைமை வேறு. "கிறிஸ்தவன் இல்லை" என்று அறிவிப்பது, நமது காலத்தில் அரசாங்கம் ஒருவரது குடியுரிமையை பறிப்பதற்கு ஒப்பானது. அந்த நபரின் வாழ்வுரிமையே பறிக்கப்படுகின்றது.

தேவாலயம் எந்த அளவு பெரிய பணக்கார நிறுவனமாக இருந்திருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. (எனக்கு தெரிந்த, சிறிய தேவாலயம் ஒன்றின் கணக்கு வழக்குகளை பார்க்கும் நண்பர் ஒருவர், மாதம் 20000 யூரோ வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார்.) நிலப்பிரபுத்துவ காலத்தில், தேவாலயத்திற்கு என்று ஏக்கர் கணக்கில் நிலங்கள் சொந்தமாக இருக்கும். அவற்றில் விவசாயிகள் குடிமை வேலை செய்ய வேண்டும். (ஆண்டவன் பெயரில் அடிமை உழைப்பு). இதைத் தவிர தேவாலய கட்டிட தொழிலாளர்கள், சாமிப்படம் பொறித்த கண்ணாடிகள் செய்து கொடுப்பவர்கள், சிற்பக் கலைஞர்கள் கூலி கேட்டால், ஆண்டவனுக்கு செய்யும் கடமையாக கருதிக் கொள்ளுமாறு கூறி விடுவார்கள். கிறிஸ்தவ நிறுவனம் மெழுகுதிரி உற்பத்தி போன்ற பல தொழிற்துறைகளில் ஏகபோகம் கொண்டாடியது. சுருக்கமாக சொன்னால், மத்திய காலத்தில் கத்தோலிக்க திருச்சபை ஒரு தேசங்கடந்த பன்னாட்டு வர்த்தக கழகமாக இயங்கி வந்தது.

மதகுருக்களும், நிலப்பிரபுக்களும் சேர்ந்தே ஆட்சி நடத்தினார்கள். நிலப்பிரபுக்கள் செய்த அக்கிரமங்களை மதகுருக்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல மதகுருக்கள் செய்த துஷ்பிரயோகங்களை நிலப்பிரபுக்கள் கண்டுகொள்ளவில்லை. அப்படித் தான் கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பாதிரிகளின் காம இச்சைக்கு அப்பாவி சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது கத்தோலிக்க நண்பர்கள் நியாயம் கற்பிப்பது போல போல "ஒரு சில கெட்ட பாதிரிகளின் செயல்" அல்ல. (பிடிபட்ட பின் தானே கள்வன்?) ஒரு இரகசிய நிறுவனம் இதையெல்லாம் தானே வெளிவிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 20 ம் நூற்றாண்டிலும் வத்திகான் இரகசியங்களை வெளியே சொன்னவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தார்கள். அது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை.

தேவாலய நிர்வாகத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள். "மதத்தில் இருந்து வெளியேற்றுவது" என்றால் எத்தகைய தீய விளைவுகள் ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் எங்கோ ஒரு குக்கிராமத்தில், பஞ்சாயத்து கூடி ஊருக்கு உள்ளே வரக்கூடாது என்று தண்டனை கொடுப்பார்களே, அது போன்றது. தேவாலய உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களுடன் ஊர் மக்கள், உறவினர்கள் தொடர்பு வைக்க மாட்டார்கள். பட்டினி கிடந்தாலும் யாரும் உணவு கொடுக்க மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே இரந்துண்ணும் பிச்சைக்காரர்களாக வாழ வேண்டும். இத்தகைய நடைமுறை 19 ம் நூற்றாண்டில் கூட சில இடங்களில் தொடர்ந்தது.

கத்தோலிக்க மதம் அதிகாரம் செலுத்திய நாடுகளில் எல்லாம் கைதிகளை சித்திரவதை செய்வது, சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. உங்களது கற்பனைக்கு எட்டாத வழிகளில் எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. கசாப்புக் கடையில் செய்வது போல தோலை உரித்து எடுப்பார்கள். அப்போதெல்லாம் ஆன்மிகம் போதிக்கும் மதத் தலைவர்கள் சித்திரவதையை பார்த்து ரசிப்பார்கள். (அவர்கள் தானே விசாரணை அதிகாரிகள் ) அந்தக் காலத்தில் சித்திரவதை செய்ய பயன்பட்ட உபகரணங்களை இன்றைக்கும் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் காணலாம்.

எப்படியானவர்களை சித்திரவதை செய்தார்கள்? கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையுமா? இல்லை சாதாரண அப்பாவி மக்களை. மத நிறுவனத்திற்குள் நடந்த முறைகேடுகளை எடுத்துச் சொன்னவர்கள். தேவாலயத்தில் போதிக்கப்படும் கருத்துகளை விமர்சித்தவர்கள். மாற்றுக் கருத்து கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்து செல்ல விரும்பியவர்கள். மதத் தலைவர்களின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தியவர்கள். மதகுருக்களின் (பாலியல்) துஷ்பிரயோகங்களை எதிர்த்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மூலிகைகளைப் பயன்படுத்தும் இயற்கை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் கூட கொல்லப்பட்டார்கள். (ஏனென்றால் அவர்கள் சூனியம் செய்பவர்களாம்.) கொடுமைக்குள்ளான அப்பாவிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

மக்களும் எத்தனை காலத்துக்கு தான் கிறிஸ்தவ மதம் செய்த கொடுமைகளை பொறுத்துக் கொள்வார்கள்? மக்கள் விரோத மத நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக பொங்கி எழ மாட்டார்களா? பிரெஞ்சுப்புரட்சி வெடித்த பொழுது அரச குடும்பம் மட்டும் தாக்கப் படவில்லை. எத்தனையோ தேவாலயங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் பெருந்திரள் மக்கள் கூட்டத்தின் முன் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். அன்று அந்த மக்களுக்கு, கிறிஸ்தவ மத நிறுவனம் மீது எவ்வளவு வெறுப்பு இருந்திருக்க வேண்டும் என்று உணர முடிகின்றதா? இங்கே இந்த உண்மைகளை எழுதும் என்னை "கிறிஸ்தவ மத எதிர்ப்பாளன்" என்று தூற்றுவீர்கள் என்றால், நீங்கள் கொடுமைக்காரர்களின் பாவகாரியங்களுக்கு துணை போகின்றீர்கள் என்று அர்த்தம்.

எமது நாடுகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள் எல்லாம் ஆங்கிலேயர் அறிமுகப் படுத்தியவை. அதனால் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகள் என்றென்றும் அறிவியலில் சிறந்து விளங்கியதாக கருதுவது தவறு. கிறிஸ்தவ மதம் ஒரு நாளும் அறிவியலை வளர்க்கவில்லை. தீராத தலைவலி என்று வைத்தியரிடம் போனால், அவர் தலையில் ஓட்டை போட்டு அசுத்த ஆவியை வெளியேற்றுவார். இது உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டிய உதாரணம். பூமி உருண்டை என்று சொன்னதற்காக கலீலியோவுக்கு தண்டனை கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். உண்மையில் இன்று நீங்கள் கற்கும் அறிவியல் பாடங்கள் எல்லாம் கிரேக்க, அரேபிய மூல நூல்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.

நூலகங்களில் கிறிஸ்தவ மதத்தை ஆய்வு செய்யும் ஆயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கின்றன. பல நூல்களில் பைபிளுக்கு அப்பால் கிறிஸ்தவ மத வரலாறு குறித்து ஆராய்ந்துள்ளன. ("பைபிளில் இவ்வாறு எழுதியுள்ளது ....." என்றெல்லாம் சொல்லி விட்டால் அது விஞ்ஞான விளக்கம் ஆகி விடாது.) எனது கட்டுரைகளின் உசாத்துணையாக அவற்றை பல இடங்களில் குறிப்பிட்டுளேன். அவையெல்லாம் ஆயிரம் ஆண்டு கால கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட அறிஞர்களால் எழுதப்பட்டவை. (அதே போல யூதர்கள் சம்பந்தமான தகவல்களை யூத ஆய்வாளர்களே எழுதியுள்ளனர்.) இவற்றை எனது கட்டுரைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என்னில் மட்டும் குற்றம் காண விளையும் நண்பர்களின் உள் நோக்கம் என்ன? அவர்கள் யாரும் எனது கட்டுரைகளில் எழுதியுள்ளவை தவறானது என்று நிரூபிக்கவில்லை. மதவாதிகளின் வழக்கமான பாணியிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ளுகின்றனர். விமர்சிப்பவர் மீது முத்திரை குத்துவது, மிரட்டுவது அல்லது தூற்றுவது. மதம் ஆட்சி செய்த காலங்களில் அது தானே நடந்தது.

பிரான்ஸில் கத்தோலிக்க மதத்தை சீர்திருத்தி, அடக்குமுறை செய்யும் அதிகார வர்க்கத்தை ஒழித்து, சமத்துவத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்தியவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஓடுகாலிகள், துரோகிகள் என்ற அர்த்தம் வரும் வண்ணம் "ஹெரதிக்" என்ற பட்டம் சூட்டி, அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். "அன்னை மரியாள் எனக்கு காட்சி தந்தாள்" என்று சொன்னதற்காக 16 வயது இளம் பெண்ணை கத்தோலிக்க மதகுருக்கள் சித்திரவதை செய்து கொன்றார்கள். ஏனென்றால் தங்கள் கண்ணுக்கு புலப்படாத கடவுள் எப்படி சாதாரண பட்டிக்கட்டுப் பெண்ணுக்கு தெரியவரும், என்ற வெறும் "ஈகோ" பிரச்சினை. (ஆமாம், இல்லாத கடவுளைக் கண்டேன் என்று சொன்னால் நம்புவார்களா?) அதுவும் எப்படிக் கொன்றார்கள்? உயிரோடு நெருப்பு மூட்டிக் கொன்றார்கள். ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கொன்று குவித்த மக்களின் தொகையை கணக்கிட்டால் கோடிக்கணக்கை தாண்டும். அதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது? கத்தோலிக்க மதம் செய்த கொலைகளுக்காக 2000 ம் ஆண்டு பாப்பரசர் மன்னிப்புக் கேட்டார். கத்தோலிக்க மதவெறிக் கொலைஞர்களால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆன்மா ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான் பரிசுத்தமானது. ஆனால் கொடூரமான கொலைகாரர்கள் எவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாற்றில் எங்கேயும் எழுதப்படவில்லை.

நான் கடந்த இருபது வருடங்களாக 100 % கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்து வருகிறேன். கிறிஸ்தவ மதம் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு பகுதி. இந்த நாட்டவர்களின் மொழி, பண்பாடு, வாழ்க்கை நெறி போன்றவற்றில் கிறிஸ்தவ மதம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். கிறிஸ்தவ மதம் குறித்த அறிவு சிறிதளவேனும் இல்லாமல் பல சொற்களின், சொற்பதங்களின் அர்த்தங்களை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உள்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாது. மக்களின் மனோபாவம் கூட கிறிஸ்தவ சிந்தனையின் படி மாறியுள்ளது. இதிலிருந்து அவர்கள் மெல்ல மெல்லத் தான் மீள முடியும். (இன்றைய சராசரி ஐரோப்பியன் தன்னை மதச்சாற்பற்றவனாக காட்டிக் கொள்ள விரும்புகிறான்.)

இந்தியாவிலும், இலங்கையிலும் வரலாற்றுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் குறுகிய வட்டத்திற்குள் வாழும் சிலர் என்னோடு விதண்டாவாதம் செய்ய விளைகின்றனர். கடந்த காலம் பற்றி அறிந்திராதவர்களுக்கு நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வரலாறு ஒரு முக்கிய பாடம். வரலாற்றுப் பாடத்தில் சித்தியடையாத ஒரு மாணவன் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தில் குறைந்தது இரண்டு அத்தியாயங்கள் ஆவது கிறிஸ்தவ மதம் குறித்து இருக்காதா? இரண்டாயிரம் ஆண்டுகள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவ மதத்தை ஒதுக்கி விட்டு வரலாற்றுப் பாடம் நடத்த முடியுமா? நண்பர்களே ஒரு கணம் சிந்திப்பீர்.

யூத மதமும் ஐரோப்பிய வரலாற்றில் தவிர்க்கவியலாத பகுதி தான். ஐரோப்பாக் கண்டத்தில் இரண்டாவதாக யூத மதமே இருந்தது. நீண்ட காலமாக கிறிஸ்தவ மதத்தால் அடக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும் யூதர்கள் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியில் யூதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 20 நூற்றாண்டில் இஸ்ரேலை ஸ்தாபித்தவர்கள் ஐரோப்பாவில் இருந்து சென்ற யூதர்கள் தான். அதனால் ஐரோப்பாவில் யூத மதம் குறித்த தகவல்கள் அதிகமாக கிடைப்பதில் வியப்பில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய யூதர்களின் வரலாற்றை ஆவணப் படுத்தி வைத்திருக்கும் மியூசியம் ஒன்றுள்ளது. அப்படி இருக்கையில் யூதர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூற முடியுமா? அதே நேரம் தமிழர்கள் மத்தியில் ஏற்கனவே யூதர்கள் குறித்து பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துகளை நானும் மறுபதிப்பு செய்ய முடியாது.

நண்பர்களே! ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருபதாண்டு கால வாழ்பனுபவம், எத்தனை பாடங்களை எனக்கு கற்பித்திருக்கும்? குறிப்பிட்ட கால உயர்தர பாடசாலைக் கல்வியை இங்கே தான் பெற்றேன். அதிலே தவிர்க்கவியலாத கிறிஸ்தவ வரலாற்றை படிக்காமல் கல்வியை பூர்த்தி செய்திருக்க முடியாது. அதைவிட நாள் தோறும் ஊடகங்கள் கிறிஸ்தவ மதம் குறித்து புதிது புதிதாக எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைய ஐரோப்பியர்கள் மதச்சார்பற்ற சமுதாயமாக மாறி விட்டதால், கிறிஸ்தவ மதத்தின் குறைகளை எடுத்துக் கூறும் செய்திகளும் அதிகம் வருகின்றன. ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் தவிர வேறு யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

இந்த நாடுகளில் பொது இடங்களில் மதச்சார்பற்ற கொள்கை கடைப்பிடிக்கப் படா விட்டால், அது குறித்து முறைப்பாடுகள் வந்து குவியும். ஆம்ஸ்டர்டாம் நகரில் பேரூந்து வண்டியோட்டும் (எகிப்தை சேர்ந்த) கிறிஸ்தவ சாரதி சிலுவை மாலை அணிந்து வேலைக்கு வருவதை நிர்வாகம் கண்டித்தது. அவர் அதற்கெதிராக நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் தீர்ப்பு சொன்ன நீதிபதியோ, "பொதுப் போக்குவரத்து துறையை சேர்ந்த ஊழியர் மதச் சின்னம் அணிவது கூடாது" என்று தடை விதித்தார். இத்தாலி பாடசாலைகளில் சிலுவைகளும், இயேசு படங்களும் வைத்திருப்பதற்கு எதிராக சில பெற்றோர் முறைப்பாடு செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார். இது இப்படியிருக்க மதச்சார்பற்ற நாடென்று கூறிக் கொள்ளும் இந்தியாவில் பேரூந்து வண்டிகளில், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில் சாமிப்படங்கள் வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் இன்று தேவாலயங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பல தேவாலயங்கள் பராமரிக்கப்படாமல் மூடப் பட்டு கிடக்கின்றன. நான் வாழும் ஆம்ஸ்டர்டாம் நகர மத்தியில் உள்ள தேவாலயங்கள் அருங்காகாட்சியகமாக மாற்றப்பட்டு விட்டன. எனது வீட்டின் அருகில் உள்ள தேவாலயம் ஒன்று வழக்கறிஞர்களின் அலுவலகமாக செயற்படுகின்றது. லண்டன் மாநகரில் சில தேவாலயங்களை இஸ்லாமியரும், இந்துக்களும் வாங்கி தமது வழிபாட்டுத்தலமாக மாற்றியுள்ளனர். வெள்ளையின ஐரோப்பியரை விட, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய ஆசிய, ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களே இன்று தேவாலயங்களுக்கு அதிகம் செல்கின்றனர். இதனால் கிறிஸ்தவ சபைகளும் அவர்களை குறி வைத்தே பிரச்சாரம் செய்கின்றன. வீடு தேடி வந்து "எங்களுடைய சபைக்கு வாருங்கள், பைபிள் படியுங்கள்." என்று கூப்பிடுவார்கள். நான் அவதானித்த வரையில் அவர்கள் வெள்ளையர்களை அதிகம் நாடுவதில்லை. காரணம் அங்கே போனால் என்ன மரியாதை கிடைக்கும் என்று அவர்களுக்கே தெரியும்.

இருபதாண்டு காலம் கிறிஸ்தவ/யூத சமூக அமைப்பினுள் வாழும் நான், அந்த மதங்களைப் பற்றி அதிகம் எழுதுவது தானே முறை? எனக்கு அதிகம் தெரிந்த ஒன்றைப் பற்றி தானே நான் எழுத முடியும்? நான் வாழும் சுற்றாடலில் நடப்பதை அறிவிப்பது தானே ஒரு பதிவரின் கடமை? இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கார்ல் மார்க்ஸ், பகுனின், போன்ற தத்துவவியலாளர்கள் கிறிஸ்தவ மதத்தை கற்ற பின்னர் தான் அந்த மதத்தை கேள்விக்குட்படுத்தினர். பைபிளை மட்டும் படித்து விட்டு, கிறிஸ்தவ மதத்தை புரிந்து கொள்ள முடியாது. அடுத்த தடவை கிறிஸ்தவ இறையியல் குறித்து நான் படித்த ஐம்பதுக்கும் குறையாத நூல்களின் பட்டியலை தருகிறேன். நான் ஏட்டுப் படிப்புடன் மட்டும் நின்று விடவில்லை. நான் விஜயம் செய்த கிறிஸ்தவ மதம் சம்பந்தமான அருங்காட்சியங்களின் விபரங்களை தருகிறேன். பைபிளில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப்பயணியாக சென்றிருக்கிறேன்.

நண்பர்களே! நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவராக இருந்தால், முதலில் அந்த மதத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். மதங்களின் வரலாறு முழுவதையும் சீர் தூக்கிப் பார்த்தால், அவை மக்களுக்கு செய்த தீமைகளே அதிகமாக இருக்கும். எப்போதும் தமது மதத்தை பற்றி நல்ல அம்சங்களை மட்டுமே மதவாதிகளும் பிரச்சாரம் செய்வது, அவர்களை கடவுளிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றது. ஆன்மீகவாதிகளிடம் கடவுள் யார் என்று தத்துவ விளக்கம் கேட்டால், அது தான் உண்மை என்பார்கள். இங்கேயுள்ள மதவாதிகள் உண்மையைப் பார்த்து கண்களையும், காதுகளையும் மூடிக் கொள்கிறார்கள்.

Saturday, June 19, 2010

போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை

(23 May 2010) போலந்து தலைநகர் வார்சொவில் நைஜீரிய நடைபாதை வியாபாரி ஒருவரை போலிஸ் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து அங்கே கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறிந்த மேலதிக தகவல்கள். வார்சா நகரின் பிராஹா வட்டாரத்தை சேர்ந்த ஸ்டேடியம் அருகில் நடைபாதையில் நைஜீரிய வியாபாரிகள் காலணிகள் விற்றுக் கொண்டிருந்தனர். மே 23 அன்று, அதிரடியாக பாய்ந்த போலிஸ் அவர்களை அப்புறப்படுத்த எத்தனித்தது. ஒரு நைஜீரிய வியாபாரியை கைது செய்து நிலத்தில் போட்டு அமுக்கினார்கள். அருகில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அதே நாட்டவரான மாக்ஸ், தனது தோழனை காப்பாற்ற ஓடி வந்தார். திடீரென ஒரு போலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சீறியதில், வயிற்றில் சன்னம் பாய்ந்து மாக்ஸ் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். பட்டப் பகலில் நடந்த படுகொலை அங்கிருந்த பிற நைஜீரிய வியாபாரிகளை எழுச்சி கொள்ள வைத்தது. போலீசார் மீது கல்வீச்சு நடத்தினார்கள். நான்கு போலிஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டதற்காக 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

"தம்மை சுற்றி வளைத்து தாக்கிய ஆப்பிரிக்கர்களை தடுப்பதற்காக தற்பாதுகாப்புக்காக சுட்டதில் மாக்ஸ் கொல்லப்பட்டதாக...." ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது. இருப்பினும் தொலைக்காட்சி ஒன்று மாற்றுக் கருத்தை அறியும் பொருட்டு, மாக்ஸின் மனைவியை பேட்டி கண்டது. அப்போது தான் முன்னர் குறிப்பிட்ட உண்மைகள் வெளிவந்தன. ஒரு போலந்து பெண்மணியை திருமணம் செய்து சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த மக்ஸ், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். குடும்பக் கஷ்டம் காரணமாக மேலதிக வருமானம் ஈட்டுவதற்காகவே நடைபாதை வியாபாரம் செய்து வந்தார். மக்சின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பம் தற்போது நடுக்கடலில் தத்தளிக்கின்றது.

படுகொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தன் எழுச்சியான ஊர்வலம் ஒன்று போலிஸ் நிலையம் நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்தில் ஆப்பிரிக்க குடிவரவாளர்களுடன், போலந்து குடிமக்களும் கலந்து கொண்டனர்.

படுகொலை குறித்து போலந்து ஊடகங்களில் வந்த செய்தி:
தொலைக்காட்சி வீடியோ (போலிஷ் மொழியில்)
பத்திரிகை செய்தி (போலிஷ் மொழியில்)

Friday, June 18, 2010

கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் விபச்சார விடுதி!


கத்தோலிக்க திருச்சபை விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது! கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது. 

60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம். 


குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. 


ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.

ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது. 


"கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை." என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். "Verhandelingen" என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது. 


ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.

விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? "திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்." என்று நியாயம் கற்பித்தனர்.


Campo Alegre விபச்சார விடுதி குறித்து Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது. இது குறித்து நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை இங்கே வாசிக்கலாம். (Rk kerk stond aan wieg bordeel
(குறிப்பு: Trouw என்ற அந்த நாளேடு நெதர்லாந்தில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டது.)

பிற்குறிப்பு: வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியளிக்கும் செய்தியல்ல. இந்தியாவில் இந்து மதம் "தேவதாசி" என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது. அதே போல ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தேவாலயங்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை வைத்திருந்தது. புரட்டஸ்தாந்து கிளர்ச்சியாளர்கள் அதையும் ஒரு காரணமாக காட்டித் தான் பிரிந்து சென்றார்கள். மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டிய பின்னர் அது பற்றி தனியான பதிவு இடுகிறேன்.*********

(டச்சு மொழிக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு:)
//De rooms-katholieke kerk heeft rond de Tweede Wereldoorlog een staatsbordeel helpen opzetten. Campo Alegre op Curaçao is nog altijd een belangrijke doorvoerhaven voor vrouwenhandelaars richting Nederland. „Zoiets zou de rk kerk nooit meer doen”, denken nonnen die zich tegen gedwongen prostitutie verzetten.// 
இரண்டாம் உலகப் போர் அளவில், ரோம கத்தோலிக்க தேவாலயம் ஒரு அரச விபச்சார விடுதி அமைப்பதற்கு உதவியுள்ளது. குரசாவோ தீவில் உள்ள Campo Alegre இன்றைக்கும் நெதர்லாந்து நோக்கி பெண்களை கடத்துவோர் தங்கிச் செல்வதற்கான துறைமுகமாக உள்ளது. பலவந்தப் படுத்தப் பட்ட பாலியல் தொழிலுக்கு எதிரான கன்னியாஸ்திரிகள், "ஒரு கத்தோலிக்க தேவாலயம் இப்படியான வேலைகளை செய்யாது" என்று நினைக்கிறார்கள். 

 //Ze had ’Dubbelspel’ van Arion gelezen – zie hieronder – dus ze wist van het bestaan van Campo Alegre. Maar Ivonne van de Kar, coördinator van de Stichting Religieuzen Tegen Vrouwenhandel wist niet dat de rooms-katholieke kerk zelf aan de wieg heeft gestaan van dit megabordeel op Curaçao.// 
அவர் Arion எழுதிய Dubbelspel வாசித்திருக்கிறார். அதனால் Campo Alegre பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால், பெண்களை விற்பதற்கு எதிரான அமைப்பின் இணைப்பாளரான Ivonne van de Kar, குரசாவோவின் மிகப் பெரிய விபச்சார விடுதிக்கு கத்தோலிக்க தேவாலயம் அடிக்கல் நாட்டியது என்பது குறித்து அறியாமல் இருந்தார். 

//Sinds kort weet ze het wel, dankzij een column in het kwartaalblad van de nonnen, Verhandelingen. Daarin memoreert publiciste Coks van Eysden de opzienbarende geschiedenis van Campo Alegre. Zij gaat in haar stuk ’vijgenblad-toerisme’ in op de opmerkelijke ontstaansgeschiedenis van Campo Alegre (’vrolijk kamp’), een bordeel dichtbij het vliegveld van Curaçao.// 
அண்மையில் தான், Verhandelingen என்ற கன்னியாஸ்திரிகளின் காலாண்டு சஞ்சிகையை வாசித்ததன் மூலம் தெரிந்து கொண்டார். Coks van Eysden என்ற ஊடகவியலாளர், குரசாவோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள Campo Alegre யின் வரலாறு குறித்து எழுதி இருந்தார். 

//Op borden langs de weg wordt het aangewezen door een mooi logo, schrijft Van Eysden: een vijgenblaadje. Het is zo’n zestig jaar geleden opgezet „door de Nederlandse overheid in samenwerking met de katholieke kerk als staatsbordeel ten behoeve van immigranten voor de olieraffinaderij, zeelieden en militairen”.// 
பாதையின் அருகில் உள்ள விளம்பர தட்டியில் அழகான இலையின் (fig leaf) படம் உள்ளது. அந்த விபச்சார விடுதி, அறுபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்த குடியேறிகள், கப்பல் பணியாளர்கள், இராணுவ வீரர்களுக்காக அமைக்கப் பட்டது. அதனை கத்தோலிக்க தேவாலாயத்துடன் சேர்ந்து நெதர்லாந்து அரசு உருவாக்கி இருந்தது. 

//Daar mochten de plaatselijke schonen niet werken – die zouden maar rondvertellen welke eilandgenoten er tot de klandizie behoorden. Voor de arbeid werden prostituees uit de Dominicaanse Republiek en Colombia geronseld, voor maximaal drie maanden, zodat ze geen relaties konden aanknopen met hoerenlopers.// 
அங்கே உள்ளூர் அழகான நங்கைகள் வேலை செய்ய முடியாது. அங்கு வேலை செய்வதற்காக டொமினிக்கன் குடியரசு, கொலம்பியாவில் இருந்து பாலியல் தொழிலாளிகள் தருவிக்கப் பட்டனர். அதுவும் மூன்று மாதங்கள் மாத்திரம் வேலை செய்ய முடியும். ஆகவே, வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது. 

//Helemaal onbekend was de betrokkenheid van de rk kerk niet, maar in het Nederlands taalgebeid is er nauwelijks iets over te vinden. De verantwoordelijke rk geestelijke, apostolisch vicaris van Willemstad, een dominicaan, figureert wel in een recent overzichtswerk over dominicanen, maar zijn betrokkenheid bij Campo Alegre memoreert historica Marit Monteiro niet (zie ’Dubbele moraal’).// 
கத்தோலிக்க தேவாலயத்தின் பங்களிப்பு பற்றி யாருக்கும் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால், டச்சு மொழி பேசுவோர் மத்தியில் (குரசாவோ மக்களையும் சேர்த்து) அதைப் பற்றி அரிதாகவே அறிய முடிகின்றது. அந்தப் பிரதேச கத்தோலிக்க பிஷப் டொமினிக்கன் பிரஜைகளுடன் தொடர்பில் இருக்கிறார். ஆனால், அவர் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. 

//In haar dissertatie ’Reizende sekswerkers’ wijdde de antropologe Marie-Louise Janssen er vorig jaar welgeteld één regel aan. Ze schrijft dat Nederland sinds 1911 een bordeelverbod kende, maar feitelijk koos voor gedogen van prostitutie. Deze pragmatische houding leidde op Curaçao „tot de oprichting van Campo Alegre, een gezamenlijk initiatief van de Nederlandse regering, de katholieke kerk, het Amerikaanse leger en Amerikaanse zakenmensen”. Doel was het beschermen van lokale vrouwen tegen de buitenlandse mannen die het eiland aandeden en hun seksuele behoeften wilden bevredigen, aldus Janssen.// 
"1911 ம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் விபச்சார விடுதி தடையுத்தரவு இருந்து வருகின்றது. இருப்பினும் அது கண்டுகொள்ளாத கொள்கையை பின்பற்றியது" என்று மானிடவியல் நிபுணர் Marie-Louise Janssen, "பயணம் செய்யும் பாலியல் தொழிலாளர்கள்" என்ற பெயரில் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளார். இந்த விட்டுக்கொடா தன்மை, குரசாவோ தீவில் Campo Alegre உருவாக்கும் நடவடிக்கை வரை சென்றுள்ளது. நெதர்லாந்து அரசு, கத்தோலிக்க தேவாலயம், அமெரிக்க இராணுவம், அமெரிக்க வணிகர்கள் ஒன்று சேர்ந்து அதை அமைத்தனர். வெளிநாட்டு ஆண்கள் தமது பாலியல் தேவைகளுக்காக, உள்நாட்டு பெண்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் நோக்கமும் அதில் அடங்கி இருந்தது. 

//Waarom nam de rk kerk dit initiatief? Niet alleen in ’ons Oost-Indië’ greep de besmetting met geslachtsziekten om zich heen (en hielp de roep om kuisheid van de regering niets), ook in ’De West’ vormden soa’s een groot gevaar. De olie-industrie van Shell had reden tot vrees voor haar productiviteit en het Amerikaanse leger wist dat mannen niet harder gingen vechten met een doorwoekerende geslachtsziekte.// 
எதற்காக கத்தோலிக்க தேவாலயம் இந்த நடவடிக்கையை எடுத்தது? கிழக்கு இந்திய நாடுகளில் (அதாவது: இந்தோனேசியா) பாலியல் தொற்று நோய்கள் பரவி இருந்தன. (ஒழுக்கம் பேணுமாறு அரசு விடுத்த எச்சரிக்கை பயன்தரவில்லை.) அதே மாதிரி கிழக்கு இந்திய நாடுகளில் (அதாவது: கரீபியன் தீவுகள்) கூட பாலியல் நோய்த் தொற்று அபாயம் இருந்தது. அதனால், (எண்ணை சுத்திகரிப்பு ஆளை நடத்திய) ஷெல் நிறுவனம் (நோய் தோற்றிய ஊழியர்களால்) தனது உற்பத்தி பாதிக்கப் படும் என்று அஞ்சியது. அதே மாதிரி, தனது வீரர்கள் ஆக்ரோஷமாக சண்டையிட மாட்டார்கள் என்று அமெரிக்க இராணுவமும் அஞ்சியது. 

//Coks van Eysden, schrijfster van de column, deed onlangs op Curaçao archiefonderzoek naar de sporen die religieuzen op het eiland hebben nagelaten. „Wat je daarin tegenkomt is dat men in de jaren twintig al nauwelijks greep kreeg op de om zich heen grijpende geslachtsziekten. En tijdens de Tweede Wereldoorlog werd dat probleem nog veel groter.” De komst van Campo Alegre was daar het antwoord op, stelt Van Eysden. Op het overwegend katholieke Curaçao koos de kerk voor het minste van de kwaden: een bordeel met toezicht en medische begeleiding.// 
இந்தப் பத்தியை எழுதிய Coks van Eysden, குரசாவோ ஆவணங்களில் மறைக்கப் பட்ட மதகுருக்களின் பங்களிப்பு பற்றி தேடியுள்ளார். அவற்றில் அவர் கண்டறிந்த விடயங்கள் இவை. அந்தக் காலத்தில் பால்வினை நோய்கள் விடயத்தில் யாராலும் கட்டுபபடுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போர் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. Campo Alegre இன் வருகை அதற்கான தீர்வாக இருந்தது. "மருத்துவ வசதிகள் கொண்ட விபச்சார விடுதி": குரசாவோ கத்தோலிக்க தேவாலயம் மிகக் குறைந்த தீமையை தெரிவு செய்தது. 

//Iets omfloerster omschrijft Kamala Kempadoo dat in haar studie ’Sexing the Carribean’ (2004). Prostitutie gold als een kwaad, maar de kerk koos voor het kanaliseren van de ’perversie’, liever dan het eiland erdoor te laten overspoelen. De apostolisch vicaris, mgr. Van der Veen Zeppeveldt, sprak zich uit voor het ’treffen van maatregelen’ door de Nederlandse regering, om ’het kwaad dat de regering toch niet kan uitroeien, in banen te leiden’. Zo werd, schrijft Kempadoo, de rk kerk ’volledig medeplichtig’ aan het Nederlandse koloniale beleid dat prostitutie reguleerde. Lees: een staatsbordeel verordonneerde.// 
’Sexing the Carribean’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு செய்த Kamala Kempadoo எழுதியதாவது. விபச்சாரம் ஒரு தீமையாக இருந்தாலும், தீவு முழுக்க அதை பரவ விடுவதை விட ஒழுங்கு படுத்துவது சிறந்தது என்பதே கத்தோலிக்க தேவாலயத்தின் தெரிவாக இருந்துள்ளது. "அந்த தீமையை ஒழிக்க முடியாது. ஆனால், ஒழுங்கு படுத்தலாம்" என்பது பிஷப் Van der Veen Zeppeveldt நெதர்லாந்து அரசுக்கு கூறிய அறிவுரையாக இருந்தது. இதன் மூலம், விபச்சாரத்தை ஒழுங்கு படுத்திய நெதர்லாந்து காலனிய கொள்கையில் கத்தோலிக்க தேவாலயம் சம்பந்தப் பட்டுள்ளமை தெளிவாகும். (volledig medeplichtig: இதன் அர்த்தம் ஒரு குற்றத்தில் முழுப் பங்களிப்பு செய்வது. அதாவது, கத்தோலிக்க தேவாலயத்திற்கு நூறு வீதப் பங்கு இருக்கிறது.) 

//Het ’hoerenkamp’ stuitte al snel op bezwaren, ook van katholieke zijde. Niet alleen was de lokale pastoor fel tegen hoerenbezoek – maar wat hij ook sprak en dreigde, zijn mannelijke parochianen bezochten er geen lichtekooi minder om. Ministers wezen er toen al vergeefs op dat Campo Alegre alle regels over vrouwenhandel aan zijn laars lapte. En een petitie van meer dan tweeduizend Curaçaose vrouwen in 1951 voor het sluiten van het kamp had hetzelfde effect als de klachten van de pastoor en de ministers: geen enkel.// 
"விபச்சாரிகளின் முகாம்" வெகு விரைவில் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது. கத்தோலிக்க பக்கத்தில் இருந்தும் கூட. உள்ளூர் பாதிரியார் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கடுமையாக கண்டித்தார். Campo Alegre பெண்களை வியாபாரப் பொருளாக்குவது தொடர்பான சட்டங்களை காலில் போட்டு மிதிக்கிறது என்று அமைச்சர்கள் குற்றம் சாட்டினார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குரசாவோ பெண்கள், முகாமை மூடி விடுமாறு கோரி பெட்டிசன் எழுதிப் போட்டனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. 

//Campo Alegre bestaat nog steeds – het is uitgegroeid tot het grootste openluchtbordeel van het hele Caribisch gebied. Toen het bordeel een paar jaar geleden een breed aangekondigde Open Dag wilde houden, protesteerden jongeren fel, vertelt Van Eysden – katholieke jongeren, die hoogstwaarschijnlijk niet wisten dat ze dat vermaledijde bordeel dankten aan onder meer hun eigen kerk.// 
Campo Alegre இப்போதும் அங்கு இருக்கிறது. அது இன்று கரீபியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதியாக மாறிவிட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், அந்த விடுதி (விளம்பரத்திற்காக) திறப்புவிழா கொண்டாடியது. அப்போது கத்தோலிக்க இளைஞர்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அவர்களது தேவாலயம் தான் அந்த விபச்சார விடுதி அமைக்க உதவியது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 

//Al decennia is Campo Alegre een belangrijk doorvoerkanaal voor Colombiaanse en Dominicaanse prostituees die in Nederland achter de ramen en in clubs zitten – tot in de jaren negentig was eenderde van hen volgens onderzoekster Marie-Louise Janssen afkomstig uit Campo Alegre. Nu ligt dat aandeel wellicht iets lager, vermoedt Janssen, door de strengere immigratieregels.// 
கடந்த பல வருடங்களாக, நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வேலை செய்யும் கொலம்பிய, டொமினிக்கன் பாலியல் தொழிலாளிகள், Campo Alegre ஊடாகவே வந்துள்ளனர். தொண்ணூறுகள் வரையில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அவ்வாறு வந்துள்ளனர் என்று Marie-Louise Janssen செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது கடுமையான குடியேற்ற சட்ட விதிகள் காரணமாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 

//Het zijn uitgerekend deze vrouwen waar de nonnen van de Stichting Religieuzen Tegen Vrouwenhandel voor opkomen. „Het project-Campo Alegre heeft echt verkeerd uitgepakt. Dat mag je wel de ironie van de geschiedenis noemen”, zegt Ivonne van de Kar. „Ik kan me niet voorstellen dat de rk kerk nu zoiets zou opzetten. Laten we het voortschrijdend inzicht noemen.”// 
இந்தப் பெண்களின் உரிமைகளுக்காக தான், பெண் கடத்தலுக்கு எதிரான அமைப்பின் கன்னியாஸ்திரிகள் போராடுகின்றனர். இதை நீங்கள் வரலாற்று முரண்நகை என்று கூறலாம். இந்தக் காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் இது போன்ற ஒன்றை அமைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

//Zou het zin hebben om de kerkleiding aan te spreken op het oprichten van Campo Alegre? Van de Kar ziet er niet veel in. „Het is ooit met goede intenties gestart. Nu zou ik zeggen: laten we ons niet druk maken over het bestaan van bordelen. Prostitutie ban je echt niet uit. Maar laten we het het misbruik, de verkrachting en de vrouwenhandel in de prostitutie aan de kaak stellen.”// 
Campo Alegre அமைத்த குற்றத்திற்கு கத்தோலிக்க திருச் சபை தலைமையை பொறுப்பேற்க வைப்பதில் அர்த்தம் உள்ளதா? அது அன்று ஒரு நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் பட்டது என்று சொல்வார்கள். விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆகவே, விபச்சார விடுதி இருப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்பார்கள். அதற்குப் பதிலாக, பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது, வன்புணர்ச்சி செய்வது, துன்புறுத்துவது போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

Thursday, June 17, 2010

இஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)

"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய பாலியல் நூல்களின் இருப்பை மூடி மறைத்து தூய்மைவாதம் பேசுகின்றனர். ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய கலாச்சாரம், எவ்வாறு எப்போதும் ஒரே தன்மையானதாக இருந்திருக்க முடியும்? உலகின் பிற கலாச்சாரங்களைப் போன்று, இஸ்லாமிய கலாச்சாரம் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாவது எதிர்பார்க்கக் கூடியதே. கிறிஸ்தவ வரலாற்றில் இடையில் சிறிது காலம் Renaissance என அழைக்கப்படும் அழகியல் கலையின் காலம் இருந்தது. அந்தக் காலத்தை சேர்ந்த ஓவியர்கள், கவிஞர்கள் சுதந்திரமாக எதையும் வெளிப்படுத்த முடிந்தது. இன்றைக்கும் இத்தாலியில் இவர்களின் படைப்புகள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் மட்டுமே நிர்வாண ஓவியங்கள் வரையப்பட்டன. அதற்கு முன்னரும், பின்னரும் கிறிஸ்தவ மதம் அந்த அனுமதியை வழங்கவில்லை.

இஸ்லாமிய நாகரீகத்திலும் அது போன்ற Renaissance காலகட்டம் இருந்துள்ளது. குறிப்பாக பாக்தாத்தில் இருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த கலீபாக்களின் காலத்தில் சுதந்திரமான கலை வெளிப்பாடு அனுமதிக்கப் பட்டது. காமம் கலந்த செய்யுள்கள் அந்தக் காலத்தில் புனையப் பட்டன. அன்றைக்கு எழுதப்பட்ட "ஆயிரத்தொரு இரவுகள்" என்ற இலக்கியம், இன்றைக்கும் பலரால் விரும்பிப் படிக்கப்படுகின்றது. வாசகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் கொண்ட கதைகள் பல அதில் உள்ளன. இந்தக் கதைகளின் பூர்வீகம் மத்திய ஆசியா. இருப்பினும், வாய் வழி இலக்கியமாக இருந்த கதைகளை அரபு மொழி செழுமைப்படுத்தியது. தலை சிறந்த இலக்கியமாக உலகிற்கு வழங்கியது. கதைகள், செய்யுள்கள் மட்டுமல்ல, பாலியல் கல்வியை போதிக்கும் நூல்களும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டன. சில நேரம் ஆன்மீகத்தை போதிக்கும் இஸ்லாமிய மதகுருக்கள் கூட அவ்வாறான நூல்களை எழுதியுள்ளனர்.

உதாரணத்திற்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய நூல்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.
"உங்கள் அன்புக்குரியவரை வசீகரிகரிக்கும் கையேடு" - எழுதியவர் Ahmad al Falitha
"சந்தையில் ஆபரணங்கள்" - (காதல் கதைகள்), எழுதியவர் Abdalrahman al Shauzari
"திரை விலக்கப்பட்ட உடலுறவின் ரகசியங்கள்" - எழுதியவர் Shihab al Din al Tifashi
"புத்தகங்களில் சொல்லப்படாத உலகத்தை சுற்றிப் பார்த்தல்" - எழுதியவர் Abdal Wahab Ibn Sahnun
"மகிழ்ச்சியான ஆத்மா" - எழுதியவர் Ibn Ahmad al Tijani
"காதலுக்கும் காமத்துக்குமான அறிமுகம்" - எழுதியவர் Abdal Salam al Laqani

Umar al Nafzawi எழுதிய "நறுமணம் வீசும் பூங்காவனம்" (al Raud al Atir Fi Nuzhat al Khatir ) நூல் காமசூத்ராவுடன் ஒப்பிட்டு பார்க்கத் தக்கது. ஆயிரம் வருட பழமையான நூலை இன்றைக்கும் அரேபியர்கள் இரகசியமாக படிக்கிறார்கள். 1850 ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரர்களால் துனீசியாவில் கையெழுத்துப் பிரதியாக கண்டெடுக்கப் பட்டது. அப்போதே அந்த நூல் பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. அரபு இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட Richard Burton அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். உடலுறவு வகை மாதிரிகளைக் காட்டும் படங்களைப் பார்த்து ஆபாசம் என்றுணர்ந்த அவரது மனைவி நூலை எரித்து விட்டார். அன்று இங்கிலாந்தில் இருந்த கிறிஸ்தவ தூய்மைவாத கலாச்சாரம், பாலியலை பேசக்கூடாத மறைபொருளாக வைத்திருந்தது. இருப்பினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் இப்பொழுதும் ஒரு மூலப்பிரதியை பாதுகாத்து வைத்திருக்கிறது.

நறுமணம் வீசும் பூங்காவனம் உடலுறவு செய்முறைகளை விளக்குவது மட்டுமல்ல, ஆண்குறியையும், பெண்குறியையும் நாற்பது பெயர்களில் அழைக்கின்றது. "முட்டைகளின் மீது அமர்ந்து தூங்கும் புறா போன்ற ஆண்குறி", "சுவரில் உள்ள வெடிப்பை போன்ற பெண்குறி" போன்ற வர்ணனைகள் நூல் முழுவதும் பாலியல் உறுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு Nafzawi எழுதும் உடல் உறவு செய்முறை விளக்கம் ஒன்று: "விசேஷமாக குறி சிறிதாக உள்ள ஆண்களுக்கு. கலவியில் ஈடுபடும் பெண்ணின் முதுகை செங்குத்தாக சரித்து வைக்க வேண்டும். கால்களை தலைக்கு பக்கத்தில் தூக்கி வைத்திருக்க வேண்டும். கணுக்கால்கள் காதுமடல்களை முட்ட வேண்டும். அவளது யோனி மேல் எழும் நேரம் உன்னுடைய குறியை அறிமுகப் படுத்தலாம்."

மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை" எழுதிய Al Nafzawi ஒரு மத நம்பிக்கையாளர் என்பதில் ஐயமில்லை. அவரே தனது எழுத்துக்கள் ஒன்றும் பாவகாரியமல்ல என்று தெளிவு படுத்துகிறார். நான் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன். இந்த நூலில் உள்ள அறிவுச்செல்வங்கள் அனைத்தும் மனிதர்க்கு அவசியமான தகவல்களைக் கொண்டவை. இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆணின் இன்பம் பெண்ணின் உடல் பாகங்களில் தங்கியுள்ளது. பெண்ணின் இன்பம் ஆணின் உடல்பாகங்களில் தங்கியுள்ளது."

நறுமணம் வீசும் பூங்காவனம் நூல் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது:
The Perfumed Garden
of the Shaykh Nefwazi,Translated by Sir Richard Burton

Monday, June 14, 2010

ஏமாற்றுவது எமது தொழில் - Call Centre ஊழியரின் வாக்குமூலம்

[கால் சென்டர்கள் : "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்" - இரண்டாம் பகுதி]
"ஒவ்வொரு கால் சென்டர் விற்பனையாளரின் பின்னாலும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி ஒளிந்திருக்கிறான்." - Griebsch, CallOn நிறுவன சட்ட ஆலோசகர். (Kölner Stadt Anzeiger பத்திரிகையில்)

ஜெர்மனியில் வளர்ந்து வரும் கால் சென்டர் நிறுவனமான ZIU - Interbational இல் வேலை கிடைத்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கூடிய, துப்பரவாக்கும் இரசாயன திரவம் ஒன்றை எமது கம்பெனி விற்பனை செய்தது. அதாவது அந்த விற்பனைப் பண்டத்தை தொலைபேசி மூலம் வாங்குவோர்களைப் பிடித்து அவர்கள் தலையில் கட்டுவது எமது தொழில். அந்த இரசாயன சுத்தப்படுத்தும் திரவத்தை நாம் "ஐரோப்பிய சுற்றுச் சூழல் அமைச்சுடன்" சேர்ந்து தயாரித்ததாக அறிவித்து வந்தோம். உண்மையில் ஐரோப்பிய சுற்றுச் சூழல் அமைச்சு என்ற ஒன்று இல்லை என்ற விபரம் எமக்கு மட்டுமே தெரியும். எமது வாடிக்கையாளர்கள் உணவுவிடுதிகள் வைத்திருக்கும் சிறு முதலாளிகள். ஊர் பேர் தெரியாத புதிய துப்பரவாக்கும் திரவத்தை அவர்கள் தலையில் கட்டுவதற்கு முன்னர் எமக்கு இன்னொரு வேலை இருந்தது. ஏதாவது ஒரு உணவுவிடுதிக்கு தொலைபேசியை சுழற்றி, அவர்கள் "சிறுவர் பாதுகாப்பு விதிகளை" குறிப்பிடும் மட்டையை சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்களா? என்று பரிசோதிப்போம். ஜெர்மனியில் உணவுவிடுதி உரிமையாளர்கள் அத்தகைய பாதுகாப்பு விதிகளை சுவரில் மாட்ட வேண்டும் என்று உள்ளூராட்சி அரசுகள் சட்டம் போட்டுள்ளன.

உண்மையில் அரசாங்கம் அறிவித்துள்ள சிறுவர் பாதுகாப்பு விதிகளை இன்டர்நெட்டில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை சுவரில் மாட்டா விட்டால், உணவுவிடுதி பரிசோதகர் வந்து பார்த்து விட்டு அபராதம் விதிப்பார். அந்த அபராதத் தொகை வெறும் 25 யூரோக்கள் மட்டுமே. எமது கால் சென்டர் கம்பெனி, புத்தகக் கடையில் 4.5 யூரோவுக்கு வாங்கக் கூடிய மட்டையில் அந்த விதிகளை அச்சடித்து வைத்திருந்தது. அதை நாம் உணவுவிடுதி முதலாளிகளுக்கு 69 யூரோவுக்கு விற்று வந்தோம்! தேநீர்க் கடைகள், உணவுவிடுதிகளின் தொலைபேசி இலக்கங்களை சுழற்றி, அவர்களுக்கு "சிறுவர் பாதுகாப்பு விதிகளின்" முக்கியத்துவம் குறித்து பாடம் நடத்துவோம். ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்கத்தின் பெயரால் அழைப்பதாக கூறுவோம். (அப்படி ஒரு சங்கம் ஜெர்மனியில் இல்லவே இல்லை) அந்த விதிகள் அடங்கிய மட்டையை சுவரில் மாட்டா விட்டால், நகர சபைக்கு அறிவிப்பதாக மிரட்டுவோம். நகர சபை பரிசோதகர் வந்து பார்த்து விட்டு, 300 யூரோ அபராதம் விதிப்பார் என்று கதையளப்போம். எமது மிரட்டலுக்கு பயந்து உணவு விடுதி உரிமையாளர்கள், 5 யூரோ பெறுமதியற்ற மட்டையை 69 யூரோ விலை கொடுத்து வாங்குவார்கள்.

எமது பலியாடுகள் பெரும்பாலும் பிற இனங்களைச் சேர்ந்த சிறு முதலாளிகள். கடைகளை, உணவுவிடுதிகளை நடத்தும் துருக்கியர்கள், மற்றும் பல நாடுளைச் சேர்ந்தவர்கள். ஓரளவுக்கு மட்டுமே ஜெர்மன் மொழி பேசக் கூடியவர்கள். எமது டீம் தலைவர் முராட், ஒரு துருக்கி இனத்தை சேர்ந்த ஜெர்மன் பிரஜை. அவர் தனது துருக்கி சகோதரர்களுடன் பேசும் பொழுது குரல் உச்சஸ்தாயிக்கு செல்லும். ஒரு முறை துரித துருக்கி உணவு வகையான "டென்னர்" கடை வைத்திருக்கும் முதலாளி அகப்பட்டார். அவருடன் முராட் சுத்த ஜெர்மன் மொழியில் உரையாடலை ஆரம்பிக்கிறார். "நான் ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்க அதிகாரி ஹெர்ஸ்ட் முய்ள்ளர் (கவனிக்கவும் சுத்த ஜெர்மன் புனை பெயர்) பேசுகிறேன். எப்போதிருந்து நீங்கள் சிறுவர் பாதுகாப்பு விதிகளை மாட்டவில்லை என்பதை சோதிக்கப் போகிறேன். ஒரு நகரசபை அதிகாரியுடன் அங்கே வருகிறேன். சட்டத்தை மீறியதற்காக 300 யூரோ தண்டப்பணம் கட்டப்போகிறீர்கள். புரிந்ததா? அதை தடுக்க வேண்டுமானால் இப்போதே 69 யூரோ கொடுத்து எமது விதிகளை வாங்கி மாட்டுங்கள்."

உரையாடல் முடிந்தவுடன் முராட் என் பக்கம் திரும்பி சொன்னார்: "அவர் 15 வருடங்களாக ஜெர்மனியில் வாழ்கிறார். கொஞ்சமாவது ஜெர்மன் மொழி தெரியாது."
"அப்படியானால் நீ ஏன் அவருடன் துருக்கி மொழியில் பேசியிருக்கக் கூடாது?" நான் கேட்கிறேன்.
அதற்கு பதிலளித்த முராட், "ஜெர்மன்காரன் என்றால் இவர்கள் பயப்படுவார்கள். மரியாதை கொடுப்பார்கள்." என்றார்.
எம்மோடு ஒரு டானியெல்லா என்ற ஜெர்மன் பெண்மணி வேலை செய்தார். அவர் ஒரு அரேபியரை திருமணம் செய்து கொண்டு முஸ்லிமாக மாறியவர். வேலைக்கு வரும் பொழுது முகம் மட்டுமே தெரியக் கூடியவாறு முக்காடு அணிந்து கொண்டு தான் வருவார். அவர் ஒரு முறை யாரோ ஒரு வெளிநாட்டுகாரரிடம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். "உங்கள் பெயர் என்ன? பெயரை சொல்ல மாட்டீர்களா?.... ஜெர்மனியில் எத்தனை வருடங்களாக வாழ்கிறீர்கள்? ஜெர்மன் சட்ட திட்டங்கள் பற்றி தெரியாதா?.... நீங்கள் இங்கே சட்டவிரோதமாக வாழ்கிறீர்களா? ... என்னது? நாம் மோசடிகாரர்களா? ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்கம் மோசடி செய்ததாக எங்காவது கேள்விப்பட்டீர்களா?.... உங்களிடம் பேசுவதில் பயனில்லை. ஒரு அரசாங்க அதிகாரியை அனுப்புகிறேன்."

ஒரு முறை சக ஊழியர்களிடம் பேசும் பொழுது கேட்டேன். "நாம் செய்யும் மோசடி ஒரு நாளைக்கு தெரிய வராதா? யாரவது எமைப் பற்றி முறைப்பாடு செய்ய மாட்டார்களா?" நாம் மோசடி செய்வதாக எந்தவொரு ஊழியரும் நம்பவில்லை. எமது நிர்வாகி எல்லாம் சட்டப்படி நடப்பதாக உறுதியளித்ததாக கூறினார்கள். சில மாதங்கள் போன பிற்பாடு நானும் கால் சென்டர் சதிகாரர்களில் ஒருவராகி விட்டேன். நாம் ஒரு இரகசியமான மதப் பிரிவினர் ஆகி விட்டோம். வெளியே எமது நண்பர்களிடம், உறவினர்களிடம் வேலை குறித்து எதுவும் பேசுவதில்லை. வாடிக்கையாளர்களை துரத்திப் பிடித்து "வன்புணர்ச்சி" செய்வதில் எமக்கு அலாதி ஆனந்தம். தொலைத்தொடர்பு திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக புளுகுவோம். 'இணைப்பு வேலை செய்கிறதா என சோதிக்கிறோம்' என்று சொல்லி அரை மணித்தியாலம் காத்திருக்க வைப்போம். பின்னர் ரிசீவரை வைத்து விட்டு கெக்கட்டமிட்டு சிரிப்போம். மெல்ல மெல்ல நானும் ஒரு மோசடிக்காரன் ஆகி விட்டேன். எனது சக ஊழியர்கள் ஏதாவது வாதத்தை முன் வைத்தால், நானும் அதை பின்பற்றினேன்.

ஒரு முறை தொலைபேசி, இன்டர்நெட் சேவைகளை வழங்கும் கம்பெனி ஒன்றுக்கு வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி சந்தா பெற்றுக் கொடுப்பது இலகுவாக இருந்தது. ஆனால் அதற்குள் இன்டர்நெட்டும் அடக்கம் என்று பல வாடிக்கையாளருக்கு கூறுவதில்லை. ஒரு முறை எமது மேலாளர் நடுத்தர வயதை தாண்டிய வாடிக்கையாளரை பிடித்து விட்டார். அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. வீட்டில் கம்பியூட்டர் இல்லை. அதனால் இன்டர்நெட் தேவைப்படவில்லை. அவரிடம் தொலைத்தொடர்பு, இன்டர்நெட் இரண்டையும் சேர்த்து விற்பதற்காக மேலாளர் ஒரு கதை சொன்னார். சமையலறையில் ஓவன் போன்ற இலத்திரனியல் சாதனங்கள் பாவிக்கா விட்டாலும் வைத்திருப்பது நாகரீகம் என்றார். அவரது வாதத்தை கேட்ட வாடிக்கையாளர் இறுதியில் சம்மதித்து விட்டார். ஒப்பந்தத்தை முடித்த கையேடு மேலாளர் கூறினார். "இன்டர்நெட் சேர்த்து எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனியாக தொலைபேசி இணைப்பை மட்டும் விற்க முடியும். ஆனால் அதற்கு கிடைக்கும் கமிஷன் குறைவு"

ஒரு வயதான மூதாட்டியின் கதை இப்போதும் நினைவில் நிற்கிறது. அவருக்கு தொண்ணூறு வயது இருக்கும். ஏற்கனவே மாதம் இருபது யூரோ சந்தா கட்டி தொலைபேசி இணைப்பு வைத்திருந்தார். நாம் வழங்கும் புதிய இணைப்புக்கு மாதம் முப்பது யூரோ கட்ட வேண்டும். (இன்டெர்நெட் இணைப்பையும் சேர்த்து.) அந்த மூதாட்டியிடம் இன்டர்நெட் பற்றி எதுவும் கூறாமல் (இனிமேல் அதையெல்லாம் பழகவா போகிறார்?) விற்க எத்தனித்தேன். மாதம் பத்து யூரோ மேலதிகமாக கொடுத்து எமது புதிய சேவையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. மேலும் தனது நண்பர்கள் அனைவரும் காலமாகி இறந்து விட்டதாகவும், தான் மட்டுமே தனித்து வாழ்வதாகவும் கூறினார். அவசர தேவைக்கு வைத்தியருக்கு அழைப்பு விடுக்க மட்டுமே ஒரு தொலைபேசி தேவை என்றார். அன்று எனது மேலாளர் எனது அருகில் இருந்து உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார். கால் சென்டரில் இதனை "side -by -side training " என்பார்கள். அதனால் என்னால் அந்த மூதாட்டியை பணிய வைத்து ஒப்பந்தம் போடுவதை தவிர வேறு வழி இல்லை. எமது புதிய சேவைக்கு மாறா விட்டால், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும், என்று பயமுறுத்தி தான் சம்மதிக்க வைத்தேன். பின்னர் மேலாளர் வெளியே போயிருந்த தருணம் பார்த்து அந்த ஒப்பந்தத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன்.

தினசரி குறைந்தது தொண்ணூறு தொலைபேசி அழைப்புகளை விடுப்பதால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு வார இறுதி விடுமுறைக்கு பின்னர் தான் அதை உணர்ந்தேன். டெலிபோன் ரிசீவரை தூக்கிய உடனேயே எனது மூளைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நான் என்ன கூற வேண்டும் என்று உத்தரவு போட்டுக் கொண்டிருந்தது. நான் குழம்பிப் போனேன். மனம் ஒருமுகப்பட மறுத்தது. ஏதோ வாயில் வந்த படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தேன். Tectum என்ற மிகப் பெரிய கால் சென்டரில் சுகவீனமடைவது வேலை இழப்புக்கு ஒப்பானது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்ட அளவு சந்தாக்களை விற்கா விட்டால், சம்பளம் குறைக்கப்பட்டது.

Tectum தனது பணியாளர்களை மோசமாக நடத்துவதாக ஒரு தொழிற்சங்கம் குற்றம் சாட்டியது. 9 ஜூலை 2009 ல், தனது நானூறு பணியாளர்களை கூட்டிக் கொண்டு Tectum முதலாளி ஊர்வலம் போனார். சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் முன்னாள் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேடையில் ஒரு துடிதுடிப்பான பேர்வழி ஏறி நின்று கொண்டு "தொழிற்சங்கம் ஒரு ....... " என்று கோஷம் போடுகின்றார். சுற்றியுள்ள கூட்டம் கைதட்டுகின்றது.
"நாம் அடிமைகளா?" ஒலிபெருக்கி அலறுகின்றது.
"இல்லை, இல்லை"
"எமக்கு ஒரு நல்ல முதலாளி வாய்த்திருக்கிறாரா?"
"ஆம், ஆம்".
நடப்பனவெல்லாம் ஒரு சர்வாதிகாரியின் முன்னால் தலையாட்டும் மந்தைக் கூட்டத்தை நினைவு படுத்துகின்றது. கடைசி ஒன்றரை வருடமாக மட்டும் Tectum நிறுவனத்திற்கு எதிராக 27 தொழில் முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்தே அந்தக் கூட்டம் தாமாக விரும்பி ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

கால் சென்டர்கள் குறித்த எனது ஆய்வுகளை வெளியிட்ட பின்னர், பல முன்னாள் பணியாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைக்கு போகுமாறு எவ்வாறு தம்மை வற்புறுத்தியது என்று கூறினார்கள். (குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளில் தான் கால் சென்டர் வேலைக்கு தாமாக விரும்பிச் செல்கிறார்கள். மேற்குலகில் நிலைமை தலைகீழ். எந்த வேலையும் கிடைக்காதவர்களின் கடைசிப் புகலிடம் தான் கால் சென்டர்.) ஜெர்மன் அரச வேலைவாய்ப்பு பணியகம் தானாகவே கால் சென்டர் வேலைக்கான தொழிலாளர்களை தயார் படுத்துகிறது. "தொலைபேசி விற்பனையாளர் படிப்பு" என்ற பெயரில் இரண்டு வார பயிற்சி வழங்குகின்றது. அது மட்டுமல்ல அவர்களை ஒரு நிறுவனம் வேலைக்கு சேர்க்கும் பொழுது ஊதியத்தில் ஒரு பகுதியை கொடுக்கின்றது. கால் சென்டர்களின் லாபத்தில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கும் வருமானமாக போய்ச் சேருகின்றது. "தென் ஜெர்மனி", "வட ஜெர்மனி" என்ற பெயரில் இயங்கும் இரண்டு மிகப்பெரிய லொத்தர் விற்கும் நிறுவனங்கள் மட்டும் முன்னூறு மில்லியன் யூரோக்களை அரசாங்கத்திற்கு கொடுத்து வருகின்றன.
கால் சென்டர்களினால் ஏமாற்றப்பட்டு பரிதவிக்கும் அப்பாவி மக்களை நினைத்து கவலைப்படுவீர்களா?
கால் சென்டர்கள் நேர்மையாக நடந்து கொண்டால் அரசாங்கத்திற்கு வருமானம் குறையுமே என பரிதாபப் படுவீர்களா?
அரசாங்கம் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் மகா ஜனங்களே!

******************************************
முதலாவது பகுதியை வாசிக்க:
கால் சென்டர்கள்: "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்!"

(நன்றி : Günter Wallraff)
(Aus der schönen neuen Welt நூலில் இருந்து)
(டச்சு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.)


Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40