Showing posts with label மொழிப் பிரச்சினை. Show all posts
Showing posts with label மொழிப் பிரச்சினை. Show all posts

Thursday, June 26, 2014

லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்

லாசிஸ்தான் தேசியக் கொடி 
உலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின்  ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான்  என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர். 


துருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் சிறுபான்மை இனமான லாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று குறைந்தது இருபதாயிரம் பேர் மட்டுமே லாஸ் மொழி பேசத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும், லாஸ் இன மக்கள், துருக்கியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு, துருக்கியராக மாறி வந்துள்ளனர். 

அண்மைக் காலமாகத் தான், லாஸ் மொழி மீள் உயிர்ப்பு பெற்று வருகின்றது. இளந் தலைமுறையினர் லாஸ் மொழி கற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கூட, அங்கிருந்த நிலைமை வேறு விதமாக இருந்தது. லாஸ் மக்கள், தமது தாய்மொழியை பேசுவதற்கு வெட்கப் பட்டார்கள். தனிப்பட்ட பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தமது தாய்மொழி உதவாது என நினைத்து, அதனை புறக்கணித்து வந்தனர். 

துருக்கியின் பிற சிறுபான்மை மொழி பேசும் மக்களைப் போன்று, லாஸ் மக்களும் வேலை வாய்ப்புகளுக்காக, துருக்கி மொழி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்னொரு அந்நிய மொழியாக ஆங்கிலம் அல்லது ரஷ்யன் படிப்பதற்கு காட்டிய அக்கறை காட்டி வந்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட மொழி அடக்குமுறைக் கொள்கை மட்டுமல்லாது, அந்த மக்களின் அக்கறையின்மையும் லாஸ் மொழி அழிந்து வருவதற்கு காரணமாக அமைந்தது.

துருக்கியில் வாழும் மக்கள் அனைவரும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாக வெளியுலகில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துருக்கியின் மிகப் பெரிய மொழிச் சிறுபான்மையினரான குர்து மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, குர்து மொழி பற்றி பலர் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், துருக்கியில் பேசப் படும் பத்துக்கும் குறையாத பிற மொழிகள் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 

துருக்கி மொழி, 1300 வருடங்களுக்கு முன்னர் தான் துருக்கியில் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் கிரேக்க, ஆர்மேனிய மொழிகள் பெரும்பான்மையாக பேசப் பட்டன. அது முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ அந்தஸ்து பெற்றிருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், முன்னாள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் நிரந்தரமாக தங்கி விட்டனர். (ஓட்டோமான் சக்கரவர்த்திகளின் காலத்தில் கூட ரோமாபுரி என்ற அர்த்தம் வரும் "ரூம்" என்ற சொல் சில இடங்களில் புழக்கத்தில் இருந்தது.)

துருக்கி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முன்பு கிரேக்க மொழி பேசிய மக்களில் ஒரு பகுதியினர், துருக்கி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டனர்.  இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட, கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். நவீன கிரேக்க குடியரசு எல்லையோரம் உள்ள மேற்கு துருக்கிப் பகுதிகளில் மட்டுமல்லாது, கருங்கடல் பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். 

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டம் முழுவதும் தேசியவாத சித்தாந்தம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு தேசிய அரசாகியது. துருக்கியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி தேசியவாதிகள், தமது நாட்டில் துருக்கி மட்டுமே பேசப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சிறுபான்மை மொழிகளின் அழிவு ஆரம்பமாகியது. 

நவீன மயமாக்கல் கூட, சிறுபான்மை மொழிகளுக்கு எதிராகவே அமைந்திருந்தது. உலகமயமாக்கலை தோற்றுவித்த தொழிற்புரட்சி அல்லது தொழில்நுட்ப புரட்சி காரணமாக, கல்வி, ஊடகத் துறை வளர்ச்சி அடைந்ததாலும், பெரும்பான்மை மொழி ஆதிக்கம் பெறத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த சுதந்திரம் யாவும், முதலாளித்துவ காலத்தில் பறிக்கப் பட்டன. இந்த சமூக மாற்றம் துருக்கிக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவானது.

துருக்கி, கிரேக்க எல்லைகள் வரையறுக்கப் பட்ட போதும், அதற்குப் பின்னரும் துருக்கியில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கிரேக்கர்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு பகுதியினர் கிரேக்க குடியரசுக்கும், இன்னொரு பகுதியினர் ரஷ்யாவுக்கும் நாடு கடத்தப் பட்டனர். லாஸ் இன மக்கள், அது போன்ற அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம், லாஸ் மக்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமல்ல, மிகச் சிறுபான்மை இனமான அவர்கள், துருக்கி மொழி கற்பதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார்கள். 

லாஸ் மக்களின் லாசிஸ்தான் நாடு, முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால், 19 நூற்றாண்டின் இறுதியில் நடந்த ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, ஒரு பகுதி ஜோர்ஜியாவுடன் இணைக்கப் பட்டது. மறுபகுதி இன்றைக்கும் துருக்கி குடியரசின் பகுதியாக உள்ளது. 

லாஸ் மொழிக்கும், துருக்கி மொழிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ஒரே மாதிரி தோன்றினாலும், ஜோர்ஜிய மொழியும், லாஸ் மொழியும் வேறுபட்டவை. ஜோர்ஜியர்கள் அந்த வேறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் லாஸ் மொழி என்ற தனியான மொழி இல்லை என்றும், அது ஜோர்ஜிய மொழியின் வட்டார வழக்கு மொழி என்று வாதிட்டு வருகின்றனர்.

மேற்கு ஜோர்ஜியாவில், கருங்கடலோர பிரதேசத்தில் பேசப்படும் மிங்கிரெலிய மொழிக்கும், லாஸ் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லாஸ், மிங்கிரெலியா மட்டுமல்லாது, சில வருடங்களுக்கு முன்னர், ஜோர்ஜியாவுடன் முரண்பட்டு, தனி நாடு கோரிப் பிரிந்து சென்ற, அப்காசியா மொழியும் ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வேறுபட்ட மொழிகள் ஆகும். 

லாஸ் மொழி, உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு கூட, லாஸ் மொழி பேசும் மக்கள் கருங்கடல் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள் அவர்களது நாட்டை "கொள்கிஸ்" என்று அழைத்தனர். (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, லாஸ் மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில், குறிப்பாக Trabzon நகர்ப் பகுதியில், கிரேக்கர்கள் வாழ்ந்து வந்தனர்.) மெடியா என்ற கிரேக்க புராணக் கதையில், கொள்கிஸ் நாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லாஸ் மக்கள் தமது பூர்வீகத்தை மறந்து விட்டார்கள். தங்களது மொழி உலகிலேயே பழமையான மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை கூட அறிந்திருக்கவில்லை. பொயர்ஸ்டைன் (Feurstein) என்ற ஜெர்மானியர், துருக்கிக்கு சுற்றுலா பயணியாக சென்ற காலத்தில் லாஸ் மொழிச் சிறுபான்மையினர் பற்றி அறிந்து கொண்டார். லாஸ் மொழி பேசும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நாட்டார் பாடல்களை சேகரித்தார். 

பொயர்ஸ்டைன் அடிக்கடி லாஸ் பிரதேசத்திற்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகப் பட்ட துருக்கி அரசு அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர், இனிமேல் எந்தக் காலத்திலும் துருக்கிக்கு வரக் கூடாது என்று எச்சரித்து விட்டு, ஜெர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.

பொயர்ஸ்டைன் ஜெர்மனியில் இருந்து கொண்டே, புலம்பெயர்ந்த லாஸ் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, லாஸ் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கினார். அழிந்து வரும் மொழி ஒன்றுக்கு எழுத்தை உருவாக்கினால், அந்த மக்களே தமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள் என்பது அந்த ஜெர்மனியரின் நம்பிக்கை. அது பலித்தது. இரகசியமாக துருக்கிக்கு அனுப்பப் பட்ட லாஸ் மொழியின் எழுத்து வடிவத்தை, லாஸ் மக்கள் ஆர்வமெடுத்து படித்தார்கள். தற்போது அவர்கள் தமது தாய்மொழியை தாமாகவே வளர்க்கின்றனர். பொயர்ஸ்டைனின் அயராத முயற்சியால், லாஸ்-ஜெர்மன் அகராதி ஒன்றும் உருவாக்கப் பட்டது.

லாஸ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இன்னொரு அரசியல் சக்தியும் உதவியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர், துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் மார்க்சிய அமைப்புகள் தோன்றின. லாஸ் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான கம்யூனிச கொள்கை பிரபலமடைந்தது. அவர்களது பிரதேசத்திற்கு அருகில், லாஸ் மொழி பேசும் சகோதரர்கள் வாழும் ஜோர்ஜியா ஒரு சோஷலிச நாடாக மாறியிருந்தது. அதுவும் லாஸ் மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பரப்புவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.


கம்யூனிச கொள்கைகளினால் ஈர்க்கப் பட்ட, லாஸ் புத்திஜீவிகள் சிலர், Mç'ita Murutsxi  (சிவப்பு நட்சத்திரம்) எனும் பத்திரிகையை லாஸ் மொழியில் வெளியிட்டு வந்தனர். அந்தப் பத்திரிகை லாஸ் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் சந்தா கட்டி பெற்றுக் கொண்டார்கள். Mç'ita Murutsxi பத்திரிகையின் முதலாவது பிரதி வெளிவந்தவுடனேயே, துருக்கி அரசு பத்திரிகை ஆசிரியர்களை பிடித்து சிறையில் அடைத்தது. ஆயினும், பத்திரிகையின் இரண்டாவது பிரதியும் வெளிவந்து விட்டது. காலப்போக்கில், அடக்குமுறை காரணமாக லாஸ் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி அரசு பின்வாங்கியது.

தற்போது லாஸ் மொழி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. துருக்கி அரசு இன்னமும் லாஸ் மொழியை அங்கீகரிக்காத படியால், அரசு மானியம் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் நிதி உதவியுடன் தான் லாஸ் மொழி கற்பிக்கப் படுகின்றது. லாஸ் மொழியில் பத்திரிகை, சஞ்சிகைகள், நூல்கள் வெளிவருவதற்கு துருக்கி அரசு சுதந்திரம் வழங்கி உள்ளது. (அதுவும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தான்.) ஆனால், இன்னமும் லாஸ் மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உரிமம் வழங்க மறுத்து வருகின்றது. 


மேலதிக தகவல்களுக்கு:
அல்ஜசீரா ஆவணப் படம் 

Friday, September 16, 2011

ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஐந்து)
இன்று பெரும்பாலான மக்கள், மொழி சார்ந்த அடையாளத்தை, "இனம்" என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால், இலங்கைத் தீவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், மொழி அடையாளம் பிரதானமாக உணரப்படவில்லை. அதற்கு காரணம், காலனிய ஆட்சியாளர்களின் ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. பாராளுமன்றம், அரச அலுவலகங்கள், நீதிமன்றங்கள், எங்கும் ஆங்கிலமே கோலோச்சியது. ஆரம்ப பாடசாலை முதல், பல்கலைக்கழகம் வரையில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்ட வரையில் இது தான் நிலைமை. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களம், அல்லது தமிழ் பேசினார்கள். ஆனால், சுதேசி மொழிகளுக்கு அரச அந்தஸ்து வழங்கப்படாமல், உழைக்கும் மக்களின் மொழியாக இழிவுபடுத்தப் பட்டது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றிய மேட்டுக்குடியினரும் அவ்வாறு தான் கருதி வந்தனர். இது போன்ற மேட்டுக்குடி மனப்பான்மையில் சிங்களவர், தமிழர் பேதம் இருக்கவில்லை.

இலங்கை இடதுசாரிகளால், நாடு தழுவிய பாட்டாளி மக்களின் எழுச்சியை உருவாக்க முதலாவது தடையாக இருந்தது, மொழி தான். இங்கிலாந்தில் கல்வி கற்ற, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூட, உழைக்கும் மக்களுக்கு புரியாத ஆங்கிலத்திலேயே அரசியல் பேசினார்கள். பழமைவாதத்தில் ஊறிய உள்நாட்டு மக்கள், மார்க்சியத்தை மேலைத்தேய இறக்குமதியாக பார்த்தார்கள். இதனால், சிங்கள பேரினவாதத் தலைவர்கள், இலகுவாக இடதுசாரிகளைத் தாக்க முடிந்தது. "இடதுசாரிகள் நாஸ்திகர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், கோயில்களை, விகாரைகளை இடித்து தள்ளி விடுவார்கள்." இவ்வாறான பிரச்சாரம் மத நம்பிக்கை கொண்ட மக்களை வெகுவாக பாதித்தது. ஆனால், இடதுசாரிகளை தாக்கிய சிங்களத் தலைவர்கள் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தனர். "கடவுள் நம்பிக்கையற்ற இடதுசாரிகளை" கண்டு பயந்த பெரும்பான்மை மக்கள், சிங்கள இனவாதம் பேசிய உதிரி அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தார்கள். 1947 பொதுத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் பலர், சிங்கள-பௌத்த இனவாதிகள். அவர்களின் நோக்கம்: "சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவது. பௌத்த மதத்தின் கடந்த கால மேன்மையை மீட்டெடுப்பது." சுருக்கமாக, சிங்கள-பௌத்த தேசியவாத கருத்தியல் மூலம், சாமானியர்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். கிட்டத்தட்ட இதே போன்ற அரசியல், தமிழ் பேசும் வடபகுதியில் நடந்து கொண்டிருந்தது. "ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு?" என்பன போன்ற கோஷங்கள், சிங்கள இனவாதிகளை நகல் எடுத்தது போன்று அமைந்திருந்தன.

தேசத்தில், "சிங்களத்தை, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமா?" என்ற விவாதம் கூட ஆங்கில மொழியில் தான் நடந்து கொண்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆங்கிலத்தில் தமது உரையை நிகழ்த்த வேண்டியிருந்தது. விவாதங்களை மொழிபெயர்க்கும் வசதி இல்லை என்ற குறைபாடு காரணமாக கூறப்பட்டது. பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்பது, சாமானிய மக்களுக்கு புரியவில்லை. இனவாத அரசியல்வாதிகள், மக்களுக்கு கொழும்பு அரசியலை திரித்துக் கூறிக் கொண்டிருந்தனர். இதனால், ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் மத்தியில், இனவாதக் கருத்துக்கள், சாதாரண அரசியல் கருத்துகளைப் போன்று பதிந்து விட்டன. இலங்கைப் பாராளுமன்றம் மட்டும், காலனியவாதிகளின் எச்சமாக விளங்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும், பல அரச அலுவலகங்களில் பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டிருந்தது. சாமானிய மக்களைப் பொறுத்த வரையில், சுதந்திரத்தால் ஏற்பட்ட மாற்றம் எதையும் கண்கூடாக காணவிலை. இலங்கை இன்னமும் பிரிட்டிஷ்காரர்கள் ஆள்கின்றார்களா, என்ற ஐயம் உண்டாகும் வகையில், எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. ஆளும் வர்க்கத்தினர், கறுப்பு - ஆங்கிலேயர்கள் போன்று நடந்து கொண்டனர். பௌத்த-இந்து பண்பாட்டுக்கு மாறாக, மது பான விருந்துகளும், குதிரைப் பந்தயங்களும், அரசியல் தலைவர்களின் விருப்பமான பொழுதுபோக்குகளாக இருந்தன.

இனம் என்ற சொல்லாடலின் போதாமைகள் :

இலங்கையின் அரசியல் யாப்பு தயாரித்த, டொனமூர் குழுவும், சோல்பரி குழுவும், "இனம்" என்பதை, மொழி அடிப்படையில் வரையறுக்கவில்லை. இந்திய மரபுவழி சார்ந்த சொல்லான "ஜாதி", இனம் என்று மொழிபெயர்க்கப் பட்டது. குறிப்பாக, பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ஜாதி என்றொரு பிரிவு உண்டு. இந்தியாவில், அந்த இடத்தில் சாதிப் பெயரை எழுதுவார்கள். ஆனால், இலங்கை நிர்வாகத்தில், சாதிக்கு பதிலாக, "சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், பறங்கியர், ஐரோப்பியர்...." இவ்வாறான பெயர்களை குறித்துக் கொள்வார்கள். இலங்கையர் சமூகத்தை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ளடக்கும் செயல்முறை, டொனமூர் யாப்பு காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் தான் அமைத்திருந்தனர். அன்று ஆங்கிலேயர்கள், இலங்கை மக்களை எவ்வாறு பிரித்து வைத்தார்களோ, இன்றைக்கும் அதே பிரிவினை தொடர்வதைப் பார்க்கலாம். இன்று முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் தம்மை தனியான தேசிய இனமாக கருதிக் கொள்கிறார்கள் என்றால், அதற்கான எண்ணக்கரு ஆங்கிலேயர் காலத்திலேயே விதைக்கப் பட்டு விட்டது.

இந்திய வம்சாவழித் தமிழருக்கும், இலங்கைத் தமிழருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கவில்லை. இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப் படுத்திய யாழ் - வேளாள மையவாதிகள், மலையகத் தமிழர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதி ஒதுக்கினார்கள். தமிழர்களுக்கு மத்தியில் நிலவிய சாதிப் பிரிவினையை, சிங்களப் பேரினவாதம் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. இலங்கையின் மொத்த சனத்தொகையில், இன்றுள்ள மலையகத் தமிழரின் விகிதாசாரத்தை விட, அன்றிருந்த விகிதாசாரம் அதிகமாக இருந்தது. இந்திய தோட்டத் தொழிலாளரை நாடற்றவராக்கிய, பிரஜாவுரிமை சட்டம் காரணமாக, மலையகத் தமிழரின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்தது. பிரஜாவுரிமை இழந்த தமிழர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர். இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டது. வரப்போகும் ஆபத்தை உணர முடியாதவாறு, இலங்கைத் தமிழ்த் தலைவர்களின் கண்களை சாதி வெறி மறைத்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தேசியத் தலைவர்கள், இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு துணை போன சாதி அபிமானிகள், எதிர்காலத்தில் ஈழத்தமிழர் மீதான இனவெறி அடக்குமுறைக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தனர்.

1943 ம் ஆண்டு, வட இலங்கையில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களின் அமைப்பொன்று உருவாகி இருந்தது. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" என்ற அமைப்பானது, தாழ்த்தப்பட்ட தமிழர்களை தனி இனமாக அங்கீகரிக்குமாறு கோரி வந்தது. அரசியல் யாப்பு எழுதுவதற்கு முன்னர், சோல்பரி குழுவினர் இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் சென்றனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபை பிரதிநிதிகள், சோல்பரி குழுவினரை யாழ்ப்பாணத்தில் தலித் மக்களின் நிலைமையை பார்வையிட வருமாறு அழைத்தனர். உயர்சாதி வெறியர்களின் எதிர்ப்பை மீறி, தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை நேரில் கூட்டிச் சென்று காட்டினார்கள். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் யாப்பில் எழுதப் படுவதை, கொழும்பு ஆளும்வர்க்கத்தில் செல்வாக்கு மிக்க, ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தடுக்க முடிந்தது. பொன்னம்பலம் போன்ற சாதிமான்கள் பிரேரித்த, பழமைவாத தேசவழமை சட்டம் சோல்பரி யாப்புக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த அறுபதாண்டுகளாக, மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் கூட தேச வழமை சட்டத்தில் கை வைக்கவில்லை. இன்றைய தலைமுறைக்கு, "தாலிபான் சட்டம்" என்றால் இலகுவில் புரியக் கூடிய தேச வழமை சட்டம், உயர்சாதி நிலவுடமையாளர்களை பாதுகாக்கின்றது. பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது. இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த விசேட சட்டம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆங்கிலேயரின் இறுதிக் காலத்தில், தெற்கில் பௌத்த மத மறுமலர்ச்சியும், வடக்கில் சைவ மத மறுமலர்ச்சியும் தோன்றியது. பௌத்த மத மறுமலர்ச்சிக்கு, ஒல்கொட் போன்ற ஆங்கிலேயர்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தை, சிங்களத்தில் மொழிபெயர்த்தது மட்டுமல்ல, பண்டைய சரித்திரத்தில் "சிங்களவர்-தமிழர் பிரச்சினையை" இடைச்செருகல் செய்தனர். சிங்கள-பௌத்த கருத்தியலை உருவாக்கிய அநகாரிக தர்மபால, பிற்காலத்தில் சிங்கள மகாசபை போன்ற அரசியல் கட்சிகளுக்கு குருவாக திகழ்ந்தார். அதே போல, சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர், தமிழ் பழமைவாதிகளின் குருவானார். தெற்கில் "பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி" சிங்கள இனவாதத்தின் அத்திவாரமாக விளங்கியது. அதனைப் பின்பற்றி, வடக்கில் "சைவத்-தமிழ் மறுமலர்ச்சி" தமிழ் இனவாதத்திற்கு அடிக்கல் நாட்டியது.

பௌத்த மதம், சிங்களவர்களை நிறுவனமயப் படுத்த சிறந்ததாக விளங்கியது. இந்து மதம், (அல்லது சைவ மதம்) இன்று வரை சாதியமைப்பை நிராகரித்த மதமல்ல. அதற்கு மாறாக, பிராமணீயத்தை எதிர்த்து உருவான பௌத்த மதம், மேலெழுந்தவாரியாக சாதி அமைப்புக்கு எதிரானது. இருப்பினும், சிங்கள- பௌத்த மடாலயங்கள், சாதிவாரியாக பிரிந்துள்ளன. இந்த வேறுபாடு வெளித்தெரியா வண்ணம், பௌத்த மதம், சாதி கடந்து மக்களை ஒன்றிணைத்தது. இதே நேரம், வடக்கில் தமிழர்கள், தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி தோன்றும் வரையில் காத்திருக்க நேர்ந்தது. ஐம்பதுகளில், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தின் எதிர்வினையாக, தமிழ்த் தேசியக் கருத்தியல் வலுப்பெற்றது. அது வரையில், தமிழர்கள் தம்மை தனியான இனமாக அடையாள படுத்துவதை விட, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக அடையாள படுத்திக் கொள்ளவே விரும்பினார்கள். தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தமிழகத்து திராவிட அரசியலை முன் மாதிரியாகக் கொண்டு தான் உருவாக்கப் பட்டது. தமிழீழ ஆயுதக் குழுக்கள் தோன்றும் வரையில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் உரைகள் ஈழத் தமிழ் மக்களை கவர்ந்திழுத்தன.

இஸ்லாமிய மதராசாக்களில், அரபி மொழியும், திருக் குர் ஆனும், கற்பிக்கப் படுவதைப் போன்று, பௌத்த சங்கங்கள் நடத்திய கிராமிய பாடசாலைகளில், சிங்களமும், பௌத்த மதக் கல்வியும், போதிக்கப் பட்டன. ஆங்கிலேய அரசு, கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பாடசாலைகளில், முழுக்க முழுக்க ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. சுதேசி மொழிகளான சிங்களமும், தமிழும் புறக்கணிக்கப் பட்டன. சில பணக்கார பௌத்த சங்கங்கள், ஆனந்தா கல்லூரி போன்ற தனியார் பாடசாலைகளை உருவாக்கின. இதே போன்ற தோற்றப்பாட்டை, தமிழர் பகுதிகளிலும் காண முடியும். குறிப்பாக, யாழ். இந்துக்கல்லூரி, "சைவத்தையும், தமிழையும்" வளர்ப்பதற்காக கட்டப்பட்டது. உயர்சாதி வேளாளர்களின் அமைப்பு அந்த பள்ளிக்கூடத்தை நிர்வகித்ததால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்கவில்லை. பிற்காலத்தில், பாடசாலைகள் எல்லாம் அரசுடமையாக்கப் பட்டன. அதற்குப் பிறகு தான், இந்துக் கல்லூரியில் அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். இன்றைக்கும் கூட, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிங்கள தேசியத்தின் கோட்டையாக விளங்குவது போல, யாழ் இந்துக் கல்லூரி தமிழ் தேசியத்தின் கோட்டையாக உள்ளது.

பௌத்த சங்கங்கள் நடத்திய, கிராமியப் பாடசாலைகளில் சிங்களம் கற்பித்த ஆசிரியர்கள், காலனிய அடிவருடிகளின் ஆட்சி மாற வேண்டும் என விரும்பினார்கள். இவர்களோடு, ஆயுர்வேத மருத்துவர்களும் சிங்கள தேசியவாத கருத்தியலோடு உடன்பட்டார்கள். உண்மையில், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியை, மகாவம்ச பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக காட்டுவது மோசடியாகும். சிங்கள பேரினவாதிகள் நிறுவத் துடிக்கும் தவறான கருத்தை, தமிழ் தேசியவாதிகளும் பரப்பி வருவது விசனத்திற்குரியது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களை, சிங்கள ஆசிரியர்களும், ஆங்கில மருத்துவர்களை, ஆயுர்வேத மருத்துவர்களும் போட்டியாக கருதியமை, ஒரு பொருளாதாரப் பிரச்சனை. காலனிய ஆட்சியின் பலனாக உள்நாட்டு உற்பத்திகள் நலிவடைந்தன. சிங்கள மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் போன்ற பிரிவினர், தமது வர்க்க நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக சோஷலிசப் பொருளாதாரத்தை முன் மொழிந்த மார்க்சியர்களை யாருக்கும் பிடிக்கவில்லை. "கடவுள் மறுப்பாளர்கள்" என்று பௌத்த பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். "போல்ஷெவிக் படுகொலையாளர்கள்" என்று ஆங்கிலேயர்கள் வெறுத்தார்கள். அத்தகைய பின்னணியில், பண்டாரநாயக்க போன்றோர் நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பண்டாரநாயக்கவுக்கு பதிலாக, இலங்கை கம்யூனிசக் கட்சி ஆட்சி அமைத்திருந்தால், பிரிட்டன் இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்திருக்கும். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஏற்பட்ட இரத்தக்களரி இலங்கையில் ஏற்பட்டிருக்கும். பிரிட்டனைப் பொறுத்த வரையில், சிங்களவர்களும் தமிழர்களும் இன்னும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும் பரவாயில்லை. ஆனால், அடுத்த நூறாண்டுகளுக்காவது மார்க்சியவாதிகள் அதிகாரத்திற்கு வர விடக்கூடாது. இன்றைக்கும், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள், சிங்கள பேரினவாதிகள், தமிழ் தேசியவாதிகள், "கம்யூனிச எதிர்ப்பாளர்கள்" என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைவதைக் காணலாம்.

(தொடரும்)

Monday, May 24, 2010

மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

(பெல்ஜியம் பயணக் கதை - பகுதி 1)

"பிரெஞ்சு பெருச்சாளிகளே! வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுங்கள்." புருசல்ஸ் மாநகரின் அருகில் உள்ள உள்ளூராட்சி சபைக்கு முன்னால் ஒரு கூட்டம் டச்சு மொழியில் கோஷம் போடுகின்றது. முகத்தை மூடிய நபர்கள் அறிவிப்பு பலகைகளில் பிரெஞ்சுப் பெயர்களை தார் பூசி அழிக்கின்றனர். ஒரு உணவுச்சாலையினுள் நுளையும் "மொழிப் பொலிஸ்" எதற்காக டச்சு மொழியில் விளம்பரத் தட்டி இல்லை என்று கேட்கிறது. மொழி உரிமைக்காக போராடும் டச்சு இனவாதிகளையும், பிரெஞ்சு இனவாதிகளையும் சமாளிக்க முடியாமல் பெல்ஜிய அரசாங்கம் இராஜினாமா செய்கின்றது. ஜூன் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப் படுகின்றது.

இனப்பிரச்சினை உச்சத்தில் உள்ள மேற்குலக நாடான பெல்ஜியம் அரசியல் குழப்பத்திற்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக, நானும் ஒரு மாத காலம் பெல்ஜியத்தில் தங்கியிருந்ததால், இந்த அரசியல் சர்க்கஸ் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. முதலில் அந்த சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுத்த பல துறை சார்ந்த நண்பர்களுக்கு எனது நன்றிகள். நெதர்லாந்திற்கும், பிரான்சிற்கும் நடுவில் உள்ள ஒரு சிறிய நாடு பெல்ஜியம்.(இலங்கையை விட சிறியது.) உலகில் அதிக கவனம் எடுக்கப்படாத பிரதேசங்களில் ஒன்று. இன்று மொழிப் பிரச்சினையால், எதிர்காலத்தில் பெல்ஜியம் என்ற நாடு நிலைத்து நிற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெதர்லாந்துக்காரர்கள் இராணியின் பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்த ஏப்ரல் 30 அன்று, நான் பெல்ஜியத்தினுள் பிரவேசித்தேன். அப்பாடா, இராணியின் "பெருங் குடி" மக்களின் தொல்லையில் இருந்து இந்த வருடம் தப்பிவிட்டேன். அடுத்த நாள் மே தினம், உழைப்பாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். ஆனால் நெதர்லாந்தில் மட்டும் விடுமுறை கிடையாது. முதல் நாள் இராணியின் தினத்தை கொண்டாடிய களைப்பில் அயர்ந்து தூங்கி விட்டு அடுத்த நாள் வேலைக்குப் போக வேண்டும். பெல்ஜியத்தில் இராணியின் தினம் கிடையாது. (உன்னுடைய ராணி அழகா? என்னுடைய ராணி அழகா? என்று நெதர்லாந்து, பெல்ஜிய சாமானியர்கள் போடும் சண்டையை பார்த்து ரசித்திருக்கிறேன்.) நான் அன்றைய தினம், ஒரு பலசரக்கு கடை உரிமையாளருடன், அவர் கொள்வனவு செய்யும் கடைக்கு சென்றிருந்தேன். கடை உரிமையாளர் ஒரு பாகிஸ்தானி, அவருக்கு விநியோகம் செய்தவர் பெல்ஜிய நாட்டவர். பொருட்களை விநியோகம் செய்து கொண்டே, "நாளை நாம் கடையை பூட்டியிருப்போம்." என்றார். ஏன் என்று கேட்டதற்கு "நாளை மே தினம். பெல்ஜிய மக்கள் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் வேலை செய்வார்கள்." என்று கிண்டலடித்தார். உழைப்பாளர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறைப்படாத குடிவரவாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அநேகம். அதை அவர்கள் ஒரு குறையாக எடுப்பதில்லை. குறைந்த காலத்தில் கூடிய பணம் சேர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

பிற ஐரோப்பிய நாடுகளைப் போல, பெல்ஜியத்திலும் சிறிய கடைகள் யாவும் வெளிநாட்டு "முதலாளிகளாலேயே" நடத்தப் படுகின்றன. அவை "இரவுக் கடைகளாக" இருக்கும். அதாவது தினசரி மாலை ஆறு மணி முதல், அதிகாலை மூன்று மணி வரை திறந்திருப்பார்கள். அநேகமாக பாகிஸ்தானியர்கள் (சில இடங்களில் இந்தியர்கள், இலங்கையர்கள்) "இரவுக் கடை" வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ஒரு இரவுக் கடை எடுத்து நடத்துவதற்காக தான், எனது நண்பர் என்னை பெல்ஜியம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இரண்டு நாட்கள் அந்தக் கடையில் இருந்து, பழைய கணக்கு நிலுவைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அல்கஹோல் கலந்த குடிவகைகளுக்கு இரண்டு மடங்கு விலை போடப்பட்டிருந்தது. மதிப்புக் கூட்டு வரியில் (VAT) நிறைய குளறுபடிகள். விநியோகஸ்தரிடம் வாங்கிய பொருளின் வரியை திருப்பி எடுக்கும் அதே தருணம், அதை சரியான முறையில் விற்பனை விலையில் காட்டுவதில்லை. இலகுவாக அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார்கள். அதாவது ’பில்’ போடுவதில்லை. இதனால் கறுப்புச் சந்தையில் வாங்கும் பொருட்களை, கற்பனைக்கு எட்டிய வண்ணம் விலை போட்டு விற்க முடிகிறது. இது எல்லாவற்றிற்கும் கடை உரிமையாளர் சொன்ன ஒரே காரணம்: ".... இல்லாவிட்டால் நான் எப்படி லாபம் சம்பாதிப்பது?" வாடிக்கையாளர்களிடம் அறவிடும் வரியை அரசுக்கு கொடுக்காமல், தனது பைக்குள் போடுவதற்கு பெயர் "லாபம்".

தொழிற்துறை புரட்சி உருவாக்கிய நகரங்கள் பல பெல்ஜியத்தில் உண்டு. இதனால் பல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பெயர் போனது. அண்மையில் கூட ஜெர்மனியின் ஒபெல் கார் தொழிற்சாலை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி இருந்தது. அதற்கெதிரான தொழிற்சங்க நடவடிக்கையால் நாடே ஸ்தம்பிதமடைந்திருந்தது. அன்றும் இன்றும் பெல்ஜியத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் சர்வதேச துறைமுகம், அன்த்வேர்பன் (ஆங்கிலத்தில்: Antwerp) நகரில் உள்ளது. அன்த்வேர்பன், ரொட்டர்டாம் (நெதர்லாந்து) ஆகிய துறைமுகங்களில் இறக்கப்படும் சரக்குகள், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளுக்கும் செல்கின்றன. அன்த்வெர்பன் நகரை சுற்றி பல தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது பிரச்சினை என்னவென்றால், நாட்டிற்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் "அன்த்வெர்பன்", டச்சு மொழி (பெல்ஜியத்தில் "பிளாம்ஸ்" என்றழைப்பர்.) பேசும் மாநிலத்தில் உள்ளது. தொழிற்துறை அபிவிருத்தி மட்டுமல்ல, நவீன வர்த்தக தொடர்புகள் காரணமாக மொத்த தனி நபர் வருமானம் பிளான்டரன் (டச்சு பேசும் பிரதேசத்திற்கான பெயர்) மாநிலத்தில் அதிகம். அதனால் அவர்களுக்கு கொஞ்சம் தலைக்கணம். நாம் எதற்காக "வலொனியா" (பிரெஞ்சு பேசும் பிரதேசம்) மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரெஞ்சுக்காரர்கள் எமது பணத்தில் சலுகைகளைப் பெறுகிறார்கள். அவர்களை கழற்றி விட்டு, தனி நாடாக இருப்போம். அல்லது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழும் நெதர்லாந்துடன் சேருவோம். இந்த பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதற்கு புதிய கட்சியும் உருவானது. "பிளாம்ஸ் பெலாங்" என்ற அது, கூடவே முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம், அகதிகளை அகற்றும் கொள்கை என்று இனவாதக் கட்சியாகவும் உள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் வலொனியாவும் மொழிப் போரில் சளைக்கவில்லை. அங்கேயும் வலொனியா பிரிவினை கோரும் அமைப்பு உள்ளது. பிளாம்ஸ் பெலாங் அளவு பிரபலமடையவில்லை. அதற்கு காரணம் பிரெஞ்சு இனவாதிகள் குறைவு என்பதல்ல. வேலயில்லாதோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள வலொனிய மாநிலம், பௌதீக பிரிவினையால் மேலும் பாதிக்கப்படலாம். இன்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். வலொனியா ஒரு காலத்தில் தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக அதிக வருமானம் பெற்று வந்தது. தொழிற்புரட்சியால் முழுமையான வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய பகுதிகளில் வலொனியாவும் ஒன்று. அபிவிருத்தி இன்றி பின்தங்கியிருந்த பிளாம்ஸ் மக்கள் வலொனியாவுக்கு வேலை தேடி சென்றார்கள். அந்தப் பகுதி தொழில் வளர்ச்சிக்கு காரணம், இரும்பு, நிலக்கரி சுரங்கங்கள். லியெஜ் நகருக்கு அண்மையில் பல சுரங்கங்கள் அமைந்திருந்தன. இத்தாலியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் முதலாவது அந்நிய குடிவரவாளர்களான இத்தாலியர்கள் வெள்ளைத்தோல் ஐரோப்பியர் என்பதால், பெல்ஜிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விட்டனர்.

பெல்ஜிய இனப் பிரச்சினைக்கு தெளிவாக தெரியக் கூடிய பொருளாதாரக் காரணிகள் இருந்த போதிலும், சிலர் சரித்திரத்தில் வேர்களைத் தேடுகின்றனர். உலகில் எல்லா தேசியவாதிகளும் வழக்கமாக கற்பிக்கும் நியாயம் தான். அந்நிய படையெடுப்பாளர்கள், (ரோமானிய, ஸ்பானிய, பிரெஞ்சு வல்லரசுகள்) பெல்ஜிய பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில் தங்களை வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டார்கள், எனக் கூறுகின்றனர். வடக்கு நோக்கி படையெடுத்து வந்த ரோமர்கள் ரைன் நதிக் கரையுடன் நின்று விட்டனர். அவர்கள் அந்தப் பிரதேசத்திற்கு பெல்ஜிகா மாகாணம் என்று பெயரிட்டார்கள். ரோமர்களுக்கு பின்னர் பெல்ஜியமும், நெதர்லாந்தும் ஸ்பெயின் அரசாட்சிக்கு உட்பட்ட மாகாணமாக இருந்தது. அவர்கள் அதனை "தாழ் நிலங்கள்" (டச்சு : Nederlanden, பிரெஞ்சு : Pays Bas) பெயர் மாற்றினார்கள். நெதர்லான்தும், பெல்ஜியமும் புவியியல் ரீதியாக கடல்மட்டத்தின் கீழே அமைந்துள்ளன. அதனால் தான் "தாழ் நிலம்" என்ற பெயர் வந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் ஜெர்மானிய பழங்குடி மக்கள். பெல்ஜிகா, வலொனியா எல்லாம் அந்த இனக்குழுக்களை சுட்டும் பெயர்கள் தான்.

ஸ்பானிய அரசின் கீழே இருந்த காலங்களில் என்பது ஆண்டு காலம் சுதந்திரப் போர் நடத்தினார்கள். நெதர்லாந்து என்ற பெயரில் பெல்ஜியமும் சேர்ந்து தான், ஸ்பெயினுக்கு எதிராக போர்கொடி தூக்கினார்கள். அன்று "நெதர்லாந்துகள்" என்பது பெல்ஜியத்தையும் சேர்த்தே குறிப்பிடப்பட்டது. சிறிது காலம் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. உலகப்புகழ் பெற்ற "வாட்டர்லோ" போரில் "வில்லெம்" ன் ஒல்லாந்து படைகள், பிரெஞ்சுப் படைகளை வெற்றி கொண்டன. ஆமாம், நெப்பொலியன் தோற்கடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கும் அதே வாட்டர்லோ தான். (வோட்டர்லூ என்பது ஆங்கில உச்சரிப்பு) பெல்ஜியத்தில் உள்ளது. விடுதலையடைந்த நெதர்லாந்துகளில் புதிய பிரச்சினை காத்திருந்தது. தேசியவாதம் பிரபலமடையாத காலகட்டம் அது. ஆனால் கத்தோலிக்க, புரட்டஸ்தான்து பிரிவினர்கள் தமது மதமே உயர்ந்தது என்று அடித்துக் கொண்டார்கள். பெல்ஜியத்திலும் கத்தோலிக்க மதவெறி (அல்லது மத அடிப்படைவாதம்) உச்சத்தில் இருந்தது. புரட்டஸ்தாந்து மத அடிப்படைவாதிகள் அதிகாரம் செலுத்திய நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் துண்டித்துக் கொள்ள விரும்பியது. மதத்தின் பெயரின் பெல்ஜிய சுதந்திரத்திற்கான போர் ஆரம்பமாகியது. அந்தப் போரில் தேவாலயங்களும், யேசு, மாதா உருவச் சிலைகளும் தப்பவில்லை. எல்லாம் அடித்து நொருக்கப் பட்டன!

(தொடரும்)


Sunday, November 02, 2008

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

"ஆங்கிலம் பேசுவோர் அறிவாளிகள்! தமிழ் பேசுவோர் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்!!” இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம், இப்படியான வெவ்வேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில், கிடைக்கும் அனுபவங்கள் வேடிக்கையானவை. அந்த விசித்திர அனுபவங்களை அலசுவதன் மூலம் அவர்களின் உலகையும், அதனூடாக எம்மையும் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை, 500 வருட காலமாக அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவு. இன்று இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமல்ல, அடித்தட்டு வர்க்கத்தினர் கூட காலனிய மனவுலகில் வாழ்கின்றனர். அல்லது அப்படி வளர்க்கப்படுகின்றனர். பண்டைய காலங்களில் எமது மூதாதையர் எம்மைப்போல சிந்திக்கவில்லை. நான் நாகரீக வளர்ச்சியை இங்கே குறிப்பிடவில்லை. தன்னிலையுணர்வை, சமூகத்தில் தனது பாத்திரம் பற்றிய வரையறை பற்றியே இங்கே பேசப்படுகின்றது.

தமிழர், சிங்களவர் என்ற மொழியை அடிப்படையாக கொண்ட தேசியம் உருவான 20 ம் நூற்றாண்டு வரையில், மக்கள் தமது குலத்தை, சாதியை, பிரதேசத்தை, அதற்கும் மேலால் மதத்தை கொண்டு மட்டுமே தம்மை அடையாளப்படுத்தினர். தாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனால் வாழும் இடத்தை பொறுத்து தமிழர் சிங்களவராவதும், சிங்களவர் தமிழராவதும் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்த காலங்கள் அவை.

ஆங்கிலேயருக்கு முன்னர் இலங்கையை ஆண்ட போர்த்துகேயரும், டச்சுக் காரர்களும், அப்போது தமது தாயகத்தில் இருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையையே பின்பற்றியதால், பெருமளவில் குடியேறியிருந்த அவர்களின் இனத்தை சேர்ந்த, அல்லது அவர்களுக்கு விசுவாசமான கலப்பின பறங்கியர் மட்டுமே ஆட்சியதிகாரத்தை நிர்வகிப்பவர்களாக இருந்ததால், உள்நாட்டு மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகக் குறைவே எனலாம். ஆனால் ஆங்கிலேயர் வந்த காலத்தில், உலகில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு மத்திய தர வர்க்கம் தேவைப்பட்டது.

ஒரு சாம்ராஜ்யம் நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூரில் ஒரு அடிவருடிக் கும்பல் உருவாக வேண்டும். அந்தக் குழுவை சேர்ந்த பிள்ளைகளை சாம்ராஜ்ய தலைநகருக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும். ஏகாதிபத்திய கல்வியால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஊர்திரும்பும் புதிய தலைமுறை, சாம்ராஜ்யத்தின் உள்ளூர் முகவர்களாக ஆட்சியை நிர்வகிப்பார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மாபெரும் சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட எகிப்தியர்களும், ரோமர்களும் அறிமுகப்படுத்திய “ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எப்படி?” என்ற பாடத்தை ஆங்கிலேயர்கள் கச்சிதமாக கடைப்பிடித்தனர். உள்நாட்டு நிலச்சுவாந்தர்கள் பலர் தமது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்குமளவு பணவசதி படைத்தவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர்களாக இருந்தால் சலுகைகள் கிடைத்தன. ஆட்சியாளரின் ஆங்கிலேய கல்வியை கற்றவர்கள் அரச நிர்வாகத்தில் பங்குபற்றுவது எளிதாக இருந்தது.

இன்று ஆங்கில மோகம் கொண்ட தலைமுறைக்கு மேற்குறிப்பிட்ட சரித்திர சான்றுகள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை சரித்திரம் என்ற ஒன்றே கிடையாது. உலகம் இப்போது உள்ளதைப்போல, அப்போது இருந்தது, அது எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆங்கிலம் உலக மொழியானது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்று வாதிப்பார்கள், அல்லது மதப்பற்றாளர்கள் என்றால் அதுவே கடவுளின் விருப்பம் என்பர்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, உயர்கல்வி கற்று பட்டம் பெற்றோரும் கூட, "ஆங்கிலமே உலகம் முழுவதும் பேசப்படுவதாக" நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது உலகமானது, கடல் கடந்த தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அப்பால், எதுவுமே இல்லை. தப்பித்தவறி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் புகுந்து விட்டால், "இந்த மக்கள் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்கள் இல்லை" என்று நொந்து கொள்வார்கள். அதே நேரம், "ஆங்கிலேயர்கள், தமது தாய்நாட்டில், வேறொரு தொடர்பாடல் மொழி பேச மறுப்பதேன்?" என்ற கேள்வியை கேட்க மாட்டார்கள். சுருக்கமாக சொன்னால், வான் கோழிகளான  “கறுப்பு-ஆங்கிலேயர்கள்”,  மயில்களான “வெள்ளை- ஆங்கிலேயரை” பார்த்து, அது போன்று ஆடுகின்றனர்.

நடுத்தர வர்க்க மக்களில் பலருக்கு தம்மைப் போன்றோர் மட்டுமே உலகில் இருப்பதாக எண்ணம் இருக்கும். அதற்கு காரணம் கலாச்சாரம் அவர்கள் சார்ந்ததாக இருப்பது தான். திரைப்பட கதா மாந்தர்கள் நடுத்தர வர்க்க பிம்பமாக காட்சிதருவர். இலக்கியங்கள் யாவும் எழுதப்படிக்கத் தெரிந்த பிரிவையே சந்தையாக கொண்டிருக்கும். பல படி முறைப்பட்ட சமூகத்தில், அந்தஸ்து என்பது பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கும்.

முதலாளித்துவ கல்விமுறை தமக்கு சேவகம் செய்பவர்களை உருவாகுவதை நோக்கமாக கொண்டது. அதிலும் திறமை கொண்டவர்க்கு அள்ளி வழங்கும் தன்மை கொண்டது. இதனால் ஒப்பீட்டளவில் உழைக்கும் வர்க்கத்தை விட மேல்நிலையில் இருக்கும் வசதி கருதி, அதை அடையும் வழி கருதி, கல்வியை ஒரு ஊக்கியாக நடுத்தரவர்க்கம் கண்டு கொண்டதில் வியப்பில்லை. அதிலும் ஆங்கில வழிக் கல்விக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்ய ஆங்கிலம் கற்றவர்கள் அவசியம். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மூலதனம் குவிந்து கிடப்பதால், ஆங்கில வழிக் கல்வியின் மதிப்பு அதிகம்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரும் ஆங்கிலமே பாடசாலைகளில் போதனா மொழியாக இருந்தது. ஐம்பதுகளில் தேசியவாத சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்து பிரதமரான பண்டாரநாயக்க வந்த பின்னரே மாபெரும் சமூக-கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. சிங்களப்பகுதிகளில் சிங்களமும், தமிழ் பகுதிகளில் தமிழும் போதனாமொழியாகியது.

பண்டரநாயக்கவை ஒரு சிங்கள இனவாதியாக பார்க்கும் தமிழர்கள், தமது பிள்ளைகள் தமிழ் கற்க காரணம் யார் என்று சொல்வதில்லை. அதேநேரம் அவரை ஒரு முற்போக்குவாதியாக பார்க்கும் சிங்களவர்கள் இன முரண்பாடுகளின் தோற்றத்தை கண்டுகொள்வதில்லை. அதேநேரம் ஏகாதிபத்தியமும் தனது நலன்களை பற்றி மட்டுமே அக்கறைப்பட்டது. கல்வியை தேசிய மொழியாக்குவதும், பொருளாதாரத்தை பொருளாதாரத்தை தேசியமயமாக்குவதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாக புரிந்து கொண்ட சி.ஐ.ஏ. ஒரு புத்த பிக்குவிடம் துப்பாக்கியை கொடுத்து கொலை செய்ய வைத்தது.

பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்ட திருப்புமுனையின் பின்னர் தான், ஆங்கிலம் பேசுவோர் “சர்வதேசவாதிகள்”(ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதன் நாகரீக வடிவம்) ஆனார்கள். அதேநேரம் தமிழ் பேசுவோர் “இனவாதிகள்” (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதன் புராதன வடிவம்) என வகைப்படுத்தப்பட்டனர். சிங்களவரும், தமிழரும் ஒருவரை ஒருவர் இனவாதிகள் என்று குற்றம் சாட்டுவது வேறு விடயம். நான் இங்கே ஏகாதிபத்திய மேற்பார்வை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

இப்போது கூட உள்நாட்டு அரசியல்வாதிகளைப் பரிகசித்துக் கொண்டிருக்கும் இந்த “கறுப்பு-ஆங்கிலேயர்கள்”, ஐரோப்பிய வெள்ளையின “தேவர்களின் வருகைக்காக” காத்திருக்கின்றனர். உலகமயமாக்கலும், மறுகாலனியாதிக்க அலையும், அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியது. புதிது புதிதாக கடை விரித்த பன்னாட்டு கம்பனிகளில் தமது ஆங்கிலப் புலமையை காட்டி ஒட்டிக் கொண்டனர். சர்வதேச மூலதனம் அள்ளி வழங்கிய, பணத்தை கண்டு மயங்கினர். இதனால் அவர்களது ஆங்கில மோகமும், அது தந்த செருக்கும் கூடியதே தவிரக் குறையவில்லை. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதைத் தொடர்ந்த பொருளாதார தேக்கமும், கறுப்பு-ஆங்கிலேயரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சர்வதேச மூலதனமானது, உலகின் ஒவ்வொரு சிறு பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உள்ளூர் முதலாளிகளை வளர்த்து விடுகின்றது. உள்ளூர் முதலாளிகளைப் பொறுத்தவரை, கடல்கடந்த கனவுகள் இருந்தபோதும், முதலில் உள்ளூரிலேயே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தவிர்க்கவியலாமல் உள்ளூர் மக்கள் பேசும் தமிழ் மொழி வளர்ச்சியடைகின்றது.

ஒரு சரக்கின் விற்பனை மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்த முடியாது. அது நகரம் தவிர்ந்த நாட்டுப்புறங்களில் பலருக்குப் புரியாது. அதனால் தான் மூலதனத்தின் வளர்ச்சியினால், தமிழ் மொழியின் வளர்ச்சி(பிற மொழிகளைப் போன்றே) தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகமயமாக்கலின் நல்ல விளைவுகளில் ஒன்று.

இருப்பினும் ஊடகங்களின் பெருக்கமானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு துணை போனாலும், அதன் மூலமாக ஆங்கிலம் மறைமுகமாக திணிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும், திரையுலக பிரபலங்கள் போன்றோர், தமிழுடன் ஆங்கிலத்தையும் சமவிகிதத்தில் கலந்து பேசுவதை, இந்த தொலைக்காட்சிகள் அனுமதிக்கின்றன. மேலை நாடுகளில் அப்படி ஒருவர் பேட்டியளித்தால், (உதாரணத்திற்கு பிரெஞ்சு டி.வி.யில் ஒருவர் பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்து பேசினால்) அதனை உப தலைப்புகளுடன் தான் ஒளிபரப்புவார்கள். அதே போன்று எமது தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்யாத காரணம் என்ன? தமிழ் மட்டுமே தெரிந்த பாமரனும் ஆங்கிலம் கற்பதற்கான ஏக்கத்தை உருவாக்குவதை தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

நவீன தமிழின் நிலைமையை, நவீன அரபு மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அரபு மொழி, தமிழ் மொழி போல இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழி தான். நவீன அரபு மொழியானது நிறைய ஆங்கில அல்லது பிரெஞ்சு சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து அரபு நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர் அறிமுகப்படுத்திய கல்விமுறையே இன்றுவரையில் போதிக்கப்படுகின்றது. ஆனால் அவ்வவ் நாடுகளின் அரசியல்- பொருளாதார ஆதிக்கத்திற்கு உட்பட்டு, கல்வியின் போதனா மொழி மாறுபடுகின்றது. இரண்டு மாறுபட்ட உதாரணங்களைப் பார்ப்போம்.

மொரோக்கோவில் உயர்கல்வி முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் போதிக்கப்படுகின்றது. இதனால் சிறுவயதில் இருந்தே பிரெஞ்சு மொழி வழிக் கல்வியை பெற்றுவரும் நடுத்தர வர்க்க மாணவர்கள் இலகுவாக உயர்கல்வி கற்க வாய்ப்பாகின்றது. அதற்கு மாறாக நாட்டுப்புறங்களில் வாழும் உழைக்கும் வர்க்க பிள்ளைகள், தாய்மொழியான அரபு மொழியில் கல்வி கற்பதால், உயர்கல்விக்கான வாய்ப்பு தடைப்படுகின்றது.

இத்தகைய கல்விமுறை நாட்டில் இரு வர்க்கங்களினதும் முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றது. பிரெஞ்சு வழிக் கல்வி கற்ற “புத்திசாலிகள்” வசதிபடைத்தோராயும், அரபு வழிக் கல்வி கற்ற “முட்டாள்கள்” வசதியற்ற ஏழைகளாகவும், சமூகத்தில் பார்க்கப்படுவதற்கு பாரபட்சமான கல்விமுறை ஏதுவாகின்றது. அதேநேரம் அசாத் தலைமையில் சோஷலிச மாற்றங்கள் ஏற்பட்ட சிரியாவில், அனைத்துப் பாடங்களும், மருத்துவம் உட்பட, அரபு மொழியிலேயே போதிக்கப்படுகின்றன. இதனால் அனைவரும் கல்விகற்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், அரபுலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடாக சிரியா திகழ்கின்றது.

நம்மவர்கள் அதிகம் மெச்சிக் கொள்ளும் ஐரோப்பிய உதாரணங்களைப் பார்ப்போம். இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும், பிரபுக்களும் பிரெஞ்சில் கல்வி கற்று பிரெஞ்சு மொழியிலேயே தமக்குள் உரையாடினர். ரஷ்யாவிலும் அது தான் நிலைமையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட ஆங்கில, ரஷ்ய மொழிகள் கல்வியறிவற்ற சாதாரண குடிமக்களால் மட்டுமே பேசப்பட்டு வந்தது. என்றைக்கு இங்கிலாந்தில் ஆங்கில மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், போதனா மொழியாகியதோ, அப்போதிருந்து தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை பெருகியது. இன்று அந்நாடுகளில் மொத்த சனத்தொகையும் எழுத, வாசிக்க தெரிந்து வைத்திருக்கின்றது என்றால், அதற்கு தாய்மொழிக் கல்வியே காரணம்.

நமது நாடுகளில், அந்நிய மொழியை புறக்கணித்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கப் படாததன் காரணம், வெளிநாட்டு மூலதனத்தின் கவர்ச்சிக்கு மயங்கும் மக்களும், நவகாலனிய முகவர்களாக செயற்படும் அரசியல்வாதிகளும் தான். இரண்டாவது வகையினர் அந்நிய கடனுக்கு அடிமையானது கவனிக்கத்தக்கது. தமிழ் நாடு என்று மொழிவாரி மாநில அதிகாரம் கொண்டிருந்தாலும், உலகவங்கி, ஐ.எம்.எப்., போன்றவை தரும் கடனுக்கு கட்டுப்படுவதால், தனியார்மயம் என்ற பதாகையின் கீழ் முளைக்கும் ஆங்கிலவழிப் பாடசாலைகளை தடுக்க முடியாத நிலை. இதுவே நாளைக்கு தமிழ் ஈழம் வந்தாலும் ஏற்படப்போகின்றது.

ஒருவகையில் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வது கூட, காலனிய எஜமானர்களுக்கும், உலகவங்கிக்கும் விரும்பத்தக்க பலன்களையே தருகின்றது. ஏனெனில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, தாய்மொழிக் கல்விக்கு செலவிடவும், அதேநேரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்கவும் முடியும். மேற்குலக நாடுகள் எல்லாம் அவ்வாறு தான் அபிவிருத்தியடைந்தன. மேற்குலக சீரழிவுகளை இறக்குமதி செய்பவர்கள், அந்நாடுகளில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை புறக்கணிக்கின்றனர். அரசியல்வாதிகள் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே மேற்குலக மோகத்திற்குள் மயங்கிக் கிடக்கின்றனர்.


தமிழ் செம்மொழி என்று பழம் பெருமை பேசுவதாலோ, தமிழ்க் கலாச்சாரத்தை பாதுகாப்பதாலோ, அல்லது தமிழ் தேசியம் கோலோச்சுவதாலோ, பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது. இங்கிலாந்து கண்ட தொழிற்புரட்சி, ரஷ்யா கண்ட போல்ஷெவிக் புரட்சி, சிரியா கண்ட (முற்போக்கு) இராணுவப்புரட்சி; இவையெல்லாம் பொருளாதார சுதந்திரத்தை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டதால் தான் தமது தாய்மொழியை அரியணையில் அமர்த்த முடிந்தது.

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வோம்.