Friday, February 28, 2014

மார்க்சியத்தின் வேர்கள் : கற்காலம் முதல் கிரேக்க நாகரிகம் வரை


- மார்க்சியத்தின் வேர்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றன? அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நாம் கற்காலத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.  
- கற்கால மனிதர்கள் தமது உணர்வுகளை எழுத்தில் பதிவு செய்திரா விட்டாலும், அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்பதை யூகித்து அறியலாம். 

 - கற்கால மனிதன், இடி, மின்னல், மழை, எரிமலை, நிலநடுக்கம் எல்லாவற்றையும் கண்டு அஞ்சினான். அறியாமை காரணமாக தனக்கு மேலே ஒரு சக்தி இருப்பதாக நினைத்தான். அதையே கடவுள் என்று பெயரிட்டான். அவ்வாறு தான், சூரியன், பூமி, மழை, ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளை உருவாக்கினான்.


 • கற்கால மனிதன் : “ஹா...ஹா… என்னுடைய கடவுள், டைனோசரின் கடவுளை விட சக்தி வாய்ந்தது. அதனால் தான் டைனோசர் இனமே அழிந்து விட்டது…”

 - அறியாமை நிறைந்த சமுதாயத்தில் மந்திரவாதிகளும், சூனியக்காரர்களும் தோன்றினார்கள். தெய்வீக சக்தி எனும் கோட்பாட்டை தமது சுயநலனுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். சில தந்திர வித்தைகளை செய்து காட்டி, தம்மை கடவுளின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டார்கள்.

- இவ்வாறு தான் ஒரு மேட்டுக்குடி வர்க்கம் உருவானது. அதுவே ஆளும் வர்க்கமானது. அறியாமையில் உழன்ற மக்களை சுரண்டி வாழ்ந்தது.

- அந்தக் காலத்திலும், சிலர் இயற்கையின் மர்மங்களை புரிந்து கொள்ள விரும்பினார்கள். காரணங்களை தேடி மண்டையை குடைந்தார்கள். அவர்கள் தான் “சிந்தனையாளர்கள்”. பிற்காலத்தில் தத்துவஞானிகளானார்கள். அந்த சிந்தனையாளர்கள் நீங்களோ, நானோ யாராகவும் இருக்கலாம்.

 • கற்கால தந்தை: “டேய்… உதவாக்கரைப் பயலே! அங்கே என்னடா யோசனை? போய் வேலையைப் பார்.” 
 • கற்கால மகன்: "ஒரு நிமிஷம், அப்பா. நான் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்திருக்கிறேன்."


- மத நம்பிக்கைகளின் மேலான விமர்சனமாக தத்துவவியல் எழுந்தது. இயற்கையில் இருப்பனவற்றிற்கு காரண, காரியங்களை கண்டுபிடிக்க முயன்றது. மனித இனம் தத்துவ விஞ்ஞானம் என்ற ஒன்றை உருவாக்கியது.  Philosophy என்ற கிரேக்க சொல்லில், சொபோஸ் (Sophos) என்றால் விஞ்ஞானம், பீலோஸ் (Philos) என்றால் நேசிப்பது என்று அர்த்தம்.

- அன்றிலிருந்து உலகம் இரண்டாகப் பிரிந்தது. அந்த இரண்டு பிரிவுகளும் இன்னமும் உள்ளன. ஒன்று: மதத்தை நம்புகிறவர்கள். மற்றது: விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.

- கிரேக்கத்தில் வாழ்ந்த செனொபாநெஸ் (Xenophanes) கடவுட் சிலைகளை வணங்க மறுத்து, அவற்றை கேள்விக்குள்ளாக்கினார். “மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் கை இருந்திருந்தால், அவை உருவாக்கும் கடவுளின் உருவம்  மாடாகவும், குதிரையாகவும் இருக்கும்.”

- செனோபாநெஸ் சொன்ன கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவின. கடவுளின் இருப்பை கேலி செய்யும் கோட்பாடு எதையும் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஏனென்றால், அது அதிகாரத்தின் மீதான அவர்களது “புனிதமான ஆளுமையை” சந்தேகப் பட வைத்தது.

- காலம் உருண்டோடியது. ஆட்சியாளர்களின் வருமானம் அதிகரித்தது. ஆளும் வர்க்கம் மதத்தை நிருவனமயமாக்கியது. மேலதிக கடவுள்கள், மேலதிக புராணக் கதைகள், இன்னும் பல சடங்குகள் உருவாக்கப் பட்டன. மக்கள் தெய்வங்களை வழிபடுவதற்காக கோயில்கள் கட்டப் பட்டன. கடவுளின் திருவருள் வேண்டுமென்றால், பக்தர்கள் காணிக்கையாக ஒரு தொகைப் பணத்தை செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

- அதே நேரத்தில், “தெய்வீக அம்சம் பொருந்திய உயர் சாதி” ஒன்று, சமூகத்தில் இருந்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டது. அரசர்களும், பூசாரிகளும் ஒன்று சேர்ந்து, விசுவாசமான அடிமைகளின் உழைப்பில், சாம்ராஜ்யங்களை சிருஷ்டித்தார்கள். “எல்லா மகிமையும் அந்த ஆண்டவருக்கே உரித்தாகுக. அவரது சித்தம் எதுவோ அப்படியே நடக்கட்டும்...” என்று மக்களை ஏமாற்றினார்கள்.

- மதம் கூட, தனக்கென ஒரு விஞ்ஞானத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அதுவே “இறையியல்” (தெய்வீக மெய்ஞானம்)

- மரணத்திற்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருப்பதாக, மதம் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்தது. எகிப்தியர்கள் அதனை மிகவும் இலகுவாகக் கையாண்டார்கள். அவர்களது படைத்தல் கடவுளான ஒசிரிஸ், பாதாள லோகத்திற்கும் அதிபதியாக வீற்றிருக்கிறார். அதனால் இறந்த பிறகு, ஒசிரிசிடம் திரும்பிச் செல்வதாக ஒரு நம்பிக்கையை வளர்த்தார்கள். அடிமைகளும் அதனை நம்ப வைத்தார்கள். பூலோக வாழ்வில் "நன்றாக" நடந்து கொள்ளும் அடிமைகள், மரணத்திற்குப் பின்னர் மறு உலகத்தில் நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள். (இந்து மதத்தில் “முக்தி அடைவது” என்று சொல்வார்கள்?)

- இருந்த போதிலும், கண்மூடித்தனமான நம்பிக்கையை நிராகரித்து, விஞ்ஞானத்தை முன்மொழிந்த சிந்தனையாளர்களுக்கும் குறைவிருக்கவில்லை. உதாரணத்திற்கு : தாலெஸ் (Thales) எனும் தத்துவஞானி

- கி.மு. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தாலெஸ், தத்துவவியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். வான சாஸ்திரம், இயற்கை விஞ்ஞானம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். (விஞ்ஞானம் வளராத காலகட்டம் அது. தத்துவஞானிகள் மட்டுமே எல்லாவற்றையும் பற்றி சிந்தித்தார்கள்.)

- பிதாகரஸ் (Pythagoras) எனும் ஒரு கணித மேதை இருந்தார். உலகில் எல்லாப் பொருட்களும், கணித சூத்திரத்தின் அடிப்படையில் உருவாகி இருப்பதாக நம்பினார்.

- பிதாகரஸ் ஆதரவாளர்கள் ஒரு மதக் குழு மாதிரி இயங்கினார்கள். அவரை விதைகளை உண்பதில்லை போன்ற விசித்திரமான பழக்க வழக்கங்களை பின்பற்றினார்கள். ஆனால், “பூமி அண்டவெளியின் மையப் பகுதியில் அமைந்திருக்கவில்லை” என்ற உண்மையை உறுதியாக நம்பினார்கள். அந்தக் காலத்தில், அது ஒரு மத நிந்தனையாக கருதப் பட்டது. அதனால், அரசு அவர்களை வேட்டையாடி அழித்தொழித்தது.


 • "ஒருவேளை, நமது காலத்தில் எண் சோதிடத்தை நம்பும் மக்கள், பிதாகரஸின் மதக் குழுவை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ?" 


- ஹெராக்லிட்டுஸ் (Heraclitus) என்றொரு நாத்திக தத்துவஞானி இருந்தார். அவரது பிரதானமான கோட்பாடுகள்: “எது இருக்கிறதோ, அது இல்லாமலும் இருக்கிறது. எல்லாப் பொருட்களும் அசைந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்றன.”

- ஹெராக்லிட்டுஸ், விவாதக் கலைக்கு அடிப்படையான “தர்க்கவியலின்” தந்தை எனப் போற்றப் படுகின்றார்.

- அன்றைய மத நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிய பகுத்தறிவுவாதிகள், ஆளும் வர்க்கத்தினால் அழித்தொழிக்கப் பட்டனர். அவர்கள் செய்த ஒரே குற்றம், இன்று நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி எடுத்துக் கூறியது. அந்தப் பட்டியலில் ஒருவர் : அனாகாகொராஸ் (Anaxagoras). “சூரியன், ஒரு பிரமாண்டமான கல்லால் உருவான நெருப்புக் கோள்.” என்ற உண்மையை கூறியதற்காக கொலை செய்யப் பட்டார்.

 • “அது தானே! சூரியன் ஏழு குதிரைகள் பூட்டப் பட்ட இரதம் ஒன்றில் பவனி வருவதாக நம்பிக் கொண்டிருந்த காலத்தில், சூரியன் ஒரு கோள் என்பதை எவன் ஏற்றுக் கொள்வான்? சும்மா காமடி பண்ணாதிங்க, சார்!” 

- அடுத்து வருபவர், உலகப் புகழ் பெற்ற சோக்ரடீஸ் (Socrates). எல்லாவற்றையும் கேலியாகப் பார்த்தார். கடவுள், மதம், அரசு, தத்துவஞானிகள், ஏன் தன்னைப் பற்றிக் கூட, கேலியும், கிண்டலுமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்.

- சோக்ரடீஸ், ஒழுக்கத்திற்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டார்.
“ஒரு மனிதன் கடவுளை நம்பாமலே ஒழுக்கத்துடன் வாழலாம்.” “அனைத்தையும் பற்றி கேள்வி கேட்டல் உண்மையின் தாய் ஆகும். அதிலிருந்தே வாழ்க்கை ஆரம்பமாகின்றது…”

- இறுதியில், "இளைஞர்களை கெடுக்கிறார், ஒழுக்கச் சீர்கேட்டை ஊக்குவிக்கிறார், நாத்திகத்தை வளர்க்கிறார்…" இது போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஏதென்ஸ் அரசு சோக்ரடீஸ்சுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டே, நஞ்சைக் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

- கிரேக்க தத்துவஞானத்தில் பிளேட்டோ(Plato) வின் பங்களிப்பு முக்கியமானது. உரையாடல் வடிவில் காரண காரியங்களை அறிய முயன்றார். உலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் கருத்துக்களின் நிழல்களாக கருதினார். அதாவது கருத்துக்கள் மட்டுமே நிரந்தரமானவை. உதாரணத்திற்கு: "குதிரைகளைப் பற்றிய நமது கருத்து மட்டுமே உள்ளது. குதிரை என்ற ஒன்று நிஜத்தில் இல்லை!"

- பிளேட்டோவை பொறுத்தவரையில், உண்மையான அறிவை காரணங்களின் மூலம் விளக்க முடியாது. கடவுளின் வழிகாட்டல் இன்றி, மனிதனால் பொருட்களின் தன்மையை உய்த்துணர முடியாது. சுருக்கமாக, இன்று ஆன்மீகவாதிகள் கூறும் அதே தர்க்க நியாயங்களைத் தான், அன்று பிளேட்டோவும் கூறினார். அதனால், ஆட்சியாளர்களுக்கு பிரயோசனமாக இருந்தார். அவரைக் கொல்ல வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லை.

- பிளேட்டோவை பாதுகாத்த ஆளும் வர்க்கம், டெமொக்ரிட்டுஸ் (Democritus) என்ற தத்துவஞானியை விரட்டிப் பிடித்து ஜெயிலுக்குள் போடத் துடித்தது. காரணம்? அவர் ஒரு பொருள் முதல்வாதி. “உலகில் உள்ள எல்லாப் பொருட்களும், பிரித்தறிய முடியாத, மிகச் சிறிய துணிக்கைகளினால் ஆக்கப் பட்டுள்ளன….” என்று கூறினார்.

- கி.மு. நானூறு வருடங்களுக்கு முன்னர், ஐன்ஸ்டீன் பிறப்பதற்கு இருபத்துநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், டெமொக்ரிட்டுஸ் “அணு” பற்றிப் பேசியுள்ளார்! 

- அரிஸ்டோட்டில் (Aristotle), மகா அலெக்சாண்டரின் ஆசிரியர். அனைத்து துறைகளிலும் ஆராய்ந்து எழுதிய மேதை. பௌதிகவியல், அரசியல், மெய்யியல், உயிரியல்…. ஒன்று விடாமல் எழுதித் தள்ளி இருக்கிறார். 18 ம் நூற்றாண்டில், பொருள்முதல்வாதக் கருத்துக்கள் முதன்மை பெறும் காலம் வரையில், அவரது கோட்பாடுகள் செல்வாக்குச் செலுத்தின.

- அரிஸ்டோட்டிலின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நமது ஆர்வத்தை தூண்டுகின்றது. “பொருளாதார, சமூக காரணிகளில் இருந்தும், சமுதாய ஏற்றத்தாழ்வில் இருந்தும், சமூகப் பிரச்சினைகள் தொடங்குகின்றன. சிலர் செல்வந்தர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் வாழ்வதற்கும், கடவுள்களுக்கும் சம்பந்தம் இல்லை.”

- ஒரு நாட்டின் அரசியல் அதிகாரம் பற்றிய அரிஸ்டோட்டிலின் கோட்பாடு : “சிறு தொகை பணக்காரர்கள் ஆளும் பொழுது, அந்த ஆட்சியை “ஒளிகார்கி” (Oligarchy) என்று அழைக்கிறோம். அதிகாரம் மக்கள் கையில் இருந்தால், அது “டெமொக்கிராசி” (Democracy).

- பொருளாதார கட்டமைப்பு சமூக ஏற்றத் தாழ்வுக்கு காரணம் என்று அரிஸ்டோட்டில் நம்பினாலும், அடிமை முறையை வரவேற்றார். சமூகத்தின் “தேவை” காரணமாக, அடிமைகளை வைத்திருப்பது ஏற்கத் தக்கது என்றார்.

- அரிஸ்டோட்டில், பிளேட்டோவின் கோட்பாடுகளை நகைப்பிற்கிடமானவை என்று நிராகரித்தார். உணர்வே உண்மையின் தோற்றுவாய் என்றார். அதாவது, நாம் ஒன்றை நேரில் பார்த்தால் தான் நம்ப முடியும்.

- பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த கார்ல் மார்க்ஸ், டெமொக்ரிட்டுஸ், அரிஸ்டோட்டில் ஆகியோரின் தத்துவங்களை ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் வாங்கினார்.


 • “இன்று, மார்க்சியத்தை குறை கூறத் தெரிந்த, நமது தமிழ் வலதுசாரி அறிவுஜீவிகள், மேற்குறிப்பிட்ட தத்துவஞானிகளின் நூல்களை எல்லாம் படித்துக் கரைத்துக் குடித்திருப்பார்கள் என்று நம்புவோமாக.”

(இந்தக் கட்டுரைத் தொடர், Marx for Beginners என்ற நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். இருந்த போதிலும், ஆங்காங்கே தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்துள்ளேன். இடைச்செருகலாக சில நகைச்சுவை துணுக்குகள் தலை நீட்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு மார்க்சியத்தை இலகுவாக புரிய வைப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.)


முன்னைய பதிவுகள்:

Thursday, February 27, 2014

மேற்குலக ஜனநாயகம் ஆதரித்த உக்ரைனிய நாஜிகளின் சதிப்புரட்சி

கீவ் நகரசபை கட்டிடத்தில் தொங்கவிடப் பட்டுள்ள, உக்ரைனிய - நாஜி இனப்படுகொலையாளி ஸ்டெபன் பண்டேராவின் உருவப் படம்.

உக்ரைனில் "புரட்சி" நடந்துள்ளதாக, மேற்கத்திய ஊடகங்கள் படம் காட்டிக் கொண்டிருந்தன. தமிழ் வலதுசாரிகளும் அந்தப் "புரட்சியை" வரவேற்றார்கள். உண்மையில் யார் அந்தப் புரட்சியாளர்கள்? உக்ரைனின் நவ நாஸிகள், நவ பாசிஸ்டுகள் தான் மேற்குலகம் ஆதரித்த "புரட்சியாளர்கள்". உக்ரைனின் தலைநகரம் கீவை தமது கட்டுப்பாடுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், நகர சபைக் கட்டிடத்தில் "பல புரட்சிக் கொடிகள்" பறந்தன. நாஜி, பாசிசக் கொடிகள் மட்டுமல்ல, அமெரிக்க வெள்ளையின நிறவெறியர்களின் கொடியும் அங்கே பறந்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து எழுபதாயிரம் போலிஷ் மக்களையும், யூதர்களையும் இனப் படுகொலை செய்த, உக்ரைனிய தேசியவாதிகளின் தலைவர் ஸ்டெபன் பண்டேராவின் ஆளுயர உருவப்படம், கீவ் நகரசபை மண்டபத்தினுள் வைக்கப் பட்டது. உலகம் முழுவதும், தாம் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவும், பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும், உக்ரைனில் ஜனநாயக விரோத பாசிஸ்டுகளை ஆதரித்தார்கள். இதெல்லாம் பகிரங்கமாக நடந்து கொண்டிருந்தது. தற்காலத்தில் பாசிஸ்டுகளும், பாசிச அனுதாபிகளும் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறார்கள். யாருக்கும் வெட்கமில்லை.

கடந்த சில வாரங்களாக, கீவ் நகர வீதிகளை மறித்து, கூடாரங்களை அமைத்து தங்கியிருந்த பாசிசப் புரட்சியாளர்கள், அந்தப் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று அறிவித்திருந்தனர். அந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள், நவ நாஜிகள், அல்லது உக்ரைனிய தேசியவாதிகளை மட்டுமே அனுமதித்தார்கள். மேற்கத்திய ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"பாசிச ஆர்ப்பாட்டக்காரர்களை சாதாரண மக்கள் போன்றும், அவர்கள் உக்ரைனிய பொலிஸ் படையை மட்டுமே எதிர்த்துப் போராடுவது போன்றும்", மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால், உண்மை நிலைமை வேறு. பாசிஸ்டுகள், "உக்ரைனிய பொலிசை மட்டுமே, தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அனுமதிக்கவில்லை" என்று நினைப்பது தவறு. உக்ரைன் அரசுக்கு எதிரான இடதுசாரிகளையும் தான் அனுமதிக்கவில்லை. சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப் பட்டோர் கடுமையாக தாக்கப் பட்டனர்.

பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கீவ் நகரப் பகுதிகள், கம்யூனிஸ்டுகள் செல்ல முடியாத ஆபத்தான இடங்களாக கருதப் பட்டன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, வேறெந்த கொள்கையை பின்பற்றும் இடதுசாரி அங்கே சென்றிருந்தாலும், அடித்துக் கொன்றிருப்பார்கள். ஆர்ப்பாட்டம் செய்த நவ நாஜிகளிடம் தாராளமாக பணம் புழங்கியது. (எல்லாம் மேற்குலக ஜனநாயகவாதிகள் அளித்த நன்கொடை தான்.) பலர் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். ஹிட்லர் காலத்து, நாஜி இராணுவ ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். அவர்களிடம் கத்தி, பொல்லு, கோடாலி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. 

அனார்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்லர். எந்தவொரு அரச கட்டமைப்பையும் எதிர்க்கும், புரட்சிகரமான இடதுசாரி கொள்கையை பின்பற்றுபவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில், நடைமுறையில் உள்ள எல்லா அரசாங்கமும் எதிரி தான். அதனால் தான், தமிழில் "அராஜகவாதிகள்" (அரசு அற்றவர்கள்) என்றும் அழைக்கப் படுகின்றனர்.

சுமார் முப்பது உக்ரைனிய அனார்கிஸ்டுகள், கீவ் நகர ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள சென்றனர். ஆனால், பாசிஸ்டுகள் அவர்களை அங்கே அனுமதிக்கவில்லை.
"இது எமது கட்டுப்பாட்டுப் பிரதேசம். வெளியே போங்கள்!" என்று கத்தினார்கள்.
"நாங்கள் அனார்கிஸ்டுகள். அரசை எதிர்ப்பவர்கள். நாங்களும் உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம்..."பதிலளித்தனர் அனார்கிஸ்டுகள்.
"அனார்கிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், யூதர்கள் என்று யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது." என்று பாசிஸ்டுகள் தமது சுயரூபத்தைக் காட்டினார்கள்.

ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி யனுகோவிச், ஒரு நவ லிபரல்வாதி என்பதற்காக, அவரை எதிர்க்கும் அனார்கிஸ்டுகள், ஒரு சில நாட்கள் அங்கே நின்று அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென ஒரு நாள், நூற்றுக் கணக்கான பாசிஸ்டுகள் அவர்களை சுற்றிவளைத்தார்கள். அவர்கள் கைகளில் கத்தி, கோடாலிகள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், யனுகோவிச் அரசை ஆதரித்தவர்களின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை, இங்கே சொல்லத் தேவையில்லை.

"அமைதி வழியில்" ஆர்ப்பாட்டம் செய்த யனுகோவிச் அரசு எதிர்ப்பாளர்கள் கூட, போலிஸ், மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்று பலரைக் கொலை செய்திருக்கிறார்கள் என்ற தகவல், எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்காது. ஒரு இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக வெளியேறிய அனார்கிஸ்டுகள், அதற்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அப்போது தான், அனார்கிஸ்ட் குழுவினருக்கு ஒரு உண்மை உறைத்தது. உக்ரைனில் நடந்தது ஒரு மக்கள் எழுச்சி அல்ல. மாறாக, பாசிஸ்டுகளின் சதிப்புரட்சி. இதைத் தான், "உக்ரைன் மக்களின் ஜனநாயகத்திற்கான புரட்சி" என்று மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் புளுகிக் கொண்டிருக்கின்றன.

உக்ரைன் நாட்டின் இனப்பிரச்சினை : ரஷ்ய, உக்ரைனிய இனப் பாகுபாடும், அரசியல் பிரிவினையும். 

உக்ரைன் நாட்டில், தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்து விட்டன. ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி யனுகோவிச் பதவி விலகி உள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எல்லாம் சுபமாக முடிந்து விட்டது என்று, மேற்கத்திய நாடுகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளன. ஆனால், உக்ரைன் நாட்டின் பிரச்சினை இன்னும் தீரவில்லை. உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில், மேற்கில் உக்ரைனிய மொழி பேசுவோரும், தென் கிழக்கில் ரஷ்ய மொழி பேசுவோரும் வாழ்கின்றனர். இரண்டு இனங்களுக்கு இடையிலான பிளவு அதிகமாகி உள்ளது.

ரஷ்ய, உக்ரைன் இனப் பிரச்சினையும் ஒரு மொழி அடிப்படையிலான பிரச்சினை தான். இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம், தமிழும், மலையாளமும் அளவிற்கும் இல்லை. தமிழகத் தமிழும், ஈழத் தமிழும் மாதிரி, இரண்டு மொழிகளும் மிகவும் நெருக்கமானவை. ஆனால், மொழியியல் அறிஞர்கள், உக்ரைனியனை தனித்துவமான மொழியாக வளர்த்தெடுத்து விட்டனர். இருபதாம் நூற்றாண்டில், இரண்டு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான முரண்பாடு, இரு தரப்பு அரசியல்வாதிகளால், அவர்களது குறுகிய நலன்களுக்காக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. அது இன்னமும் தொடர்கின்றது.


இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஜி ஜெர்மனி படையெடுத்த நேரம், உக்ரைனிய தேசியவாதிகள் நாஜிப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, ரஷ்யர்களும், உக்ரைனியர்களும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதிக் கொள்கின்றனர். இரண்டு மொழிப் பிரிவினருக்கு இடையிலான இனக் குரோதம், சகல இடங்களிலும் வெளிப்படுகின்றது. உக்ரைனியர்கள், ரஷ்யர்களை "ஏகாதிபத்தியவாதிகள்" என்று குற்றம் சுமத்துவார்கள். ரஷ்யர்கள், உக்ரைனியர்களை "பாசிஸ்டுகள்/ நாஜிகள்" என்று குற்றம் சாட்டுவார்கள்.

சோவியத் கூட்டமைப்பில் இருந்து, உக்ரைன் பிரிந்து சென்று தனி நாடான பின்னர், இனப் பிரச்சினை முன்னரை விட அதிகமாக கூர்மையடைந்துள்ளது. தலைநகரமும், அரசும் எந்த இனத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதிலான இழுபறி நிலைமை தான், தற்போது அந்த நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். மேலதிகமாக, உலக வல்லரசுகளான ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் கயிறிழுப்புப் போட்டியும், நிலைமையை மோசமடைய வைக்கிறது.

உக்ரைனில் இருந்து இறுதியாகக் கிடைத்த தகவலின் படி, ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா தீபகற்பம், உக்ரைனில் இருந்து பிரிவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது. ரஷ்ய உல்லாசப் பிரயாணிகளை கவரும், அழகிய கடற்கரைகளை கொண்ட கிரீமியா, அறுபது வருடங்களுக்கு முன்னர், உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது. அப்போது எல்லாம் சோவியத் யூனியன் என்ற ஒரே நாட்டின் கீழ் இருந்த படியால், அன்று அது பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை வேறு. 

தலைநகர் கீவில் ஆட்சி மாறிய உடனேயே, கிரிமியாவில் பறந்த உக்ரைனிய தேசியக் கொடி இறக்கப் பட்டது. அங்கே தற்போது ரஷ்யக் கொடி பறக்கின்றது. அதைத் தவிர, சட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்கள் உருவாக்கப் படுகின்றன. அவற்றில் தொண்டர்களாக சேரும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப் படுகின்றது. உக்ரைன் ஒரு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

உடைக்கப் பட்ட லெனின் சிலை இருந்த இடத்தில், நாஜி சுலோகங்களும், பாசிச சின்னங்களும் கிறுக்கப் பட்டுள்ளன. 
உக்ரைனில் மேற்குலக சார்பான அரசாங்கம் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? லெனின் சிலைகளையும், பிற சோவியத் கால சின்னங்களையும் உடைப்பது. அநேகமாக, உக்ரைனிய மொழிப் பெரும்பான்மை சமூகம் வாழும் பகுதிகளில், பரவலாக சிலை உடைப்புகள் நடக்கின்றன. "ஆஹா... மீண்டும் லெனின் சிலைகளை உடைக்கிறார்களா? நல்ல விடயம் தானே!" என்று சில தமிழ் வலதுசாரிகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள்....

இந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். வீழ்த்தப் பட்ட சிலை வைக்கப் பட்டிருந்த, அடித் தளத்தில் ஏதோ கிறுக்கி இருக்கிறார்கள். சில சின்னங்களையும் வரைந்திருக்கிறார்கள். அவை என்ன? ஆமாம், நாகரிக உலகில் தடை செய்யப்பட்ட, "நாஜி/பாசிச சின்னங்கள்" தான் அவை.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். லெனின் சிலைகளை விழுத்தியவர்கள் வேறு யாருமல்ல. உக்ரைனிய நவ நாஜிகள். சோவியத் யூனியன் வீழ்ந்த காலத்தில், லெனின் சிலைகளை உடைத்தவர்களும் அவர்கள் தான். இரண்டாம் உலகப்போர் காலத்தில், 1941 ம் ஆண்டு சோவியத் யூனியனின் பல பகுதிகளை ஆக்கிரமித்த நாஜிப் படையினர் தான், முதன் முதலாக லெனின் சிலைகளை உடைத்துக் காட்டினார்கள்.

இன்று நவ நாஜிகளும், நவ பாசிஸ்டுகளும் லெனின் சிலைகளை காணுமிடங்களில் எல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பரம்பரைத் தொழில் போலும். அதனை உலகம் முழுவதும் உள்ள, நாஜி / பாசிச அனுதாபிகள் வரவேற்கிறார்கள். இவர்களுக்காக இன்னொரு ஸ்டாலின்கிராட் காத்துக் கொண்டிருக்கிறது.


Neo-Nazi threat in new Ukraine


Monday, February 24, 2014

யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் கொடுக்கின்றன. இன்று தவறான வழியில் வழி நடத்தப் படும் இளைய தலைமுறையினருக்கு, Marx for Beginners நூல் பயன் மிக்கதாக இருக்கும்.

_________________________________________________________________________________________________

- சார்லி (கார்ல் என்ற ஜெர்மன் சொல்லின் ஆங்கில வடிவம்) மார்க்ஸ், ஒரு யூத- ஜெர்மன் தத்துவ ஞானி. அவர் 1818 - 1883 காலப் பகுதியில் வாழ்ந்து வந்தார், அல்லது போராடிக் கொண்டிருந்தார். உலகம் முழுவதும், கம்யூனிசத்தை கண்டுபிடித்தமைக்காக அவரைக் குற்றஞ் சாட்டினார்கள். "ஐயோ, ஏசுவே! அவர் ஒரு கிறிஸ்துவின் எதிரி!"

- மனித சமுதாயத்தில் மூன்றில் ஒரு பகுதி, அவரது எழுத்துக்களையும், கருத்துக்களையும் நடைமுறைப் படுத்த விரும்புகின்றது. மிகுதி மூன்றில் இரண்டு பங்கினர், அவரைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

- நீங்கள் எங்கே சென்றாலும், போல்ஷெவிக், மார்க்சிஸ்ட், சோஷலிசம், லெனினிசம், மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற சொற்களை பிழையாக புரிந்து கொள்ளும் மக்களைக் காணலாம்.
 "மூலதனம், வர்க்கப் போராட்டம், தொழிலாளர் சக்தி, பாட்டாளி வர்க்கம்... " 
 "இவர் என்ன சொல்றாரு? ஒண்ணுமே புரியலையே?"

- உண்மையில், மார்க்சியம் இன்றைய உலகத்தை இரண்டு முகாம்களாக்கி உள்ளது. ஒரு தரப்பினர், அவர் மேல் தங்களது நம்பிக்கையை வைத்துள்ளனர். மறு தரப்பினர் அவரை வெறுக்கிறார்கள்.
அத்தோடு, மூன்றாவதாக ஒரு குழு இருக்கிறது.
…… அவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது.

- பைபிள், குரான் மாதிரி, மார்க்ஸ் சொன்னதை பலர் மேற்கோள் காட்டப் பேசுகின்றார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே அவரைத் தெரியும். இன்னும் கொஞ்சப் பேர் தான் அவரைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

- கார்ல் மார்க்ஸ், உலகில் உள்ள எல்லாத் துறைகளிலும் ஆர்வம் காட்டியுள்ளார். தோழர் மார்க்ஸ் செல்வாக்கு செலுத்தாத துறை எதுவும் இல்லை. கடந்த நூறு வருடங்களாக அந்த நிலைமை பெருமளவிற்கு மாறவுமில்லை. பொருளாதாரம், இலக்கியம், விண்வெளி ஆராய்ச்சி, நாடகவியல், வரலாறு, கல்வி, மனித உறவுகள், சமூக மாற்றங்கள், புரட்சிகள், மருத்துவம், தொழிற்துறை, விவசாயம், ஊடகவியல்….. எல்லா இடங்களிலும் அந்த மனுஷன் தலை முடியை உதிர்த்துள்ளார்…. ஆனால், அவரின் தலையில் வழுக்கை மட்டும் விழவில்லை!

- மார்க்சின் கோட்பாட்டு அறிவும், நடைமுறையும், இருபது நூறாண்டுகளாக சாத்தியமில்லாதிருந்த பல விடயங்களை சாத்தியமாக்கியுள்ளது. அதாவது, மனிதனை மனிதன் சுரண்டும் முறையில் இருந்து விடுதலை…. சுருக்கமாக: நாம் இன்று வசதியாக வாழ்கிறோம் என்றால், அதற்கு நாங்கள் மார்க்சிற்கு கடமைப் பட்டுள்ளோம். சமூகக் காப்புறுதி, ஓய்வூதியம், விடுமுறைகள், தொழிற்சங்கம், புலமைப் பரிசில்… நாம் அனுபவிக்கும் இன்னும் பல சலுகைகளில் மார்க்ஸ் மறைமுகமாகப் பங்களித்துள்ளார். உடனே ஒரு முதலாளிய ஆதரவாளர் சொல்வார்: “அது உண்மை அல்ல. நான் எனது முதலாளிக்கு கடமைப் பட்டுள்ளேன்!”

- அரசமைப்பு சட்டங்களை கணக்கில் எடுக்காமல் விட்டால், உலகில் முன்னொருபோதும் இல்லாத தன்னெழுச்சி, என்று கருதப் படும் புரட்சிகள் உட்பட, எல்லாப் புரட்சிகளும் மார்க்சிய மூலத்தைக் கொண்டுள்ளன.

போப்பாண்டவர்: “அந்த _ _ _ _ மார்க்ஸ் பற்றி, வத்திகான் சபைக் கூட்டங்களிலும் பேசுகிறார்கள்!”

- லத்தீன் அமெரிக்க நாடுகளில், உழைக்கும் மக்களின் நலனுக்காக பாடுபடும் கிறிஸ்தவ பாதிரிகள் மார்க்ஸ் பற்றி கதைக்கிறார்கள். இராணுவ ஜெனரல்கள் கதைக்கிறார்கள். எசுயிஸ்ட் சபையில் மார்க்ஸ் பற்றி படிக்கிறார்கள். சொந்த நாட்டில் மார்க்சியம் பேச முடியாதவர்கள், லத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சிய நாடான கியூபாவுக்கு தப்பியோடி இருக்கிறார்கள்.

... இருந்தாலும், உலகில் யாருக்குமே மார்க்சியத்தில் அக்கறை இல்லை என்று, இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள்.

- ஜெர்மனியில் உள்ள Trevirorum (தற்போது: Trier) எனும் ரோமர்களின் பண்டைய நகரம் ஒன்றில் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். அவரின் தந்தையார் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த வழக்கறிஞர். அதனால், தனது மகனையும் சட்டம் பயில்வதற்காக, பொன் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார். 19 வயது இளைஞனுக்கு உரிய, அனைத்து பருவ வயது கோளாறுகளும் மாணவனான மார்க்சையும் பாதித்தன. பொன் பல்கலைக்கழகத்தில் இருந்து, பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாகி, அங்கே தனது கல்வியை முடித்துக் கொண்ட மார்க்ஸ், ஒரு ஆசிரியராக வேலை செய்வதற்காக பொன்னுக்கு திரும்பி வந்தார்.ஒரு நாஸ்திகனாக, அரச எதிர்ப்பாளராக திரும்பி வந்த கார்ல் மார்க்சிற்கு வேலை கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

- கார்ல் மார்க்ஸ் ஒரு பரம்பரை யூத குடும்பத்தில் பிறந்தாலும், யூத மத நம்பிக்கைகளுடன் வளர்க்கப் படவில்லை. அவரது தந்தை, லுதேர்ன் மதத்திற்கு (புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம்) மாறியிருந்தார். இளம் வயதில் மார்க்சும், கிறிஸ்தவ மத நம்பிக்கையாளராக தான் வளர்ந்தார்.

- பெர்லின் பல்கலைக்கழகம் மார்க்சின் மத நம்பிக்கையை அடியோடு மாற்றியது. அவரை ஒரு நாத்திகர் ஆக்கியது. அன்று, பெர்லின் பல்கலைக்கழகத்தில் புதிய புதிய சிந்தனைகள் பரவி இருந்தன. மனிதன், உலகம் பற்றிய மத நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின. சிந்தனையாளர்கள் மனித சமுதாயம் குறித்த தேடுதலில் இறங்கியிருந்தனர்.
“கடவுள் என்பது என்ன?” 
“வாழ்க்கையே ஒரு புதிர்." 
“வாழ்க்கை என்றால் என்ன?” 
“நாம் ஏன் வாழ்கின்றோம்?”

- “என்ன செய்ய வேண்டும்?” கார்ல் மார்க்ஸ் சிந்தித்தார். ஒரு வருமானத்தை தேடிக் கொள்வதற்காக, அவர் அந்தக் கேள்வியை கேட்கவில்லை. “வாழ்க்கையின் அர்த்தம் என்ன? எந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்காக நான் வாழ்கிறேன்?”

- வாழ்க்கை குறித்த தேடுதலுக்கு விடை கிடைக்க வேண்டுமென்றால், தத்துவவியல் படிக்க வேண்டுமென்று மார்க்ஸ் முடிவெடுத்தார். நிச்சயமாக, தந்தை அதனை விரும்பவில்லை. (தத்துவம் படித்தால் வேலை கிடைக்குமா?) பிரெடெரிக் ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவஞானியின் நூல்களை மார்க்ஸ் விரும்பிக் கற்றார். அந்தக் கால ஜெர்மனியில், ஹெகலை ஆதரித்தும், எதிர்த்தும் ஒரு குழு உருவாகி இருந்தது.

- ஹெகலின் முன்னோடியான இமானுவேல் கான்ட் கடவுளின் இருப்புக் குறித்து கேள்வி எழுப்பக் கூடாதென்றார். கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதனை எதுவும் நிரூபிக்க முடியாது. ஆனால், “கடவுள் எனும் கோட்பாடு" ஹெகலினால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. அதற்கு அவர் “பான்லோகிசம்" என்ற கோட்பாட்டு அடிப்படையை பயன்படுத்தினார். Panlogism என்ற கிரேக்க சொல்லின் அர்த்தம், எல்லாவற்றிற்கும் காரணம் கண்டுபிடித்தல்.

- ஹெகலின் தத்துவங்கள் மார்க்சை நன்றாகக் கவர்ந்து விட்டன. ஹெகலின் தத்துவப் படி, “யுத்தம், போராட்டம், புரட்சி, இவற்றின் ஊடாகத் தான், மனித இனம் வளர்ச்சி அடைகின்றது.” அதாவது அடக்குமுறையாளர்களுக்கு எதிரான, அடக்கப் பட்டவர்களின் போராட்டம். சமாதானம், நல்லிணக்கம் எந்தவொரு முன்னேற்றத்தையும் கொண்டு வருவதில்லை.

- ஹெகலின் தத்துவ விசாரம், சமூகப் போராட்டம் பற்றியது அல்ல. அது ஆன்மீகப் போராட்டம் சம்பந்தமானது. முதலாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் இடையிலான போராட்டம் குறித்து ஹெகல் சிந்திக்கவில்லை. ஹெகல் இறந்த பின்னர், அவரது சீடர்கள் வலது, இடது என இரண்டு பிரிவுகளாக பிளவு பட்டனர். ஹெகலின் மதம், ஆன்மிகம் பற்றிய தத்துவங்களை முக்கியமாக கருதிய வலதுசாரிகள் ஒரு புறம். அவரது தத்துவத்தை முற்போக்கான பாதையில் கொண்டு செல்ல விரும்பிய இடதுசாரிகள் மறுபுறம்.

- லுட்விக் பொயர்பாக் என்ற இன்னொரு தத்துவஞானி இடதுசாரி ஹெகலிய குழுவை சேர்ந்தவர். ஹெகலின் தத்துவங்களை நடைமுறைப் படுத்த எண்ணினார். கார்ல் மார்க்ஸ் அவரை நூறு சதவீதம் ஆதரித்தார்.

- ஹெகலிய ஆதரவாளர்கள், முடிவுறாத விவாதங்களில் ஈடுபட்டனர். அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இதற்கிடையே கார்ல் மார்க்ஸ் ஒரு ஊடகவியலாளராக ரைன் மாநில பத்திரிகையில் (Neue Rheinische Zeitung) வேலைக்கு அமர்ந்தார். மிக விரைவில், மார்க்சின் திறமை காரணமாக ஆசிரியர் குழுவிற்கு பதவி உயர்த்தப் பட்டார். அந்தப் பத்திரிகை மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததால், அரசாங்கம் அலுவலகத்தை இழுத்து மூடி விட்டது. மக்கள் விரோத அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கும், பத்திரிகை ஊடகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை கார்ல் மார்க்ஸ் நிரூபித்தார்.

- இதற்கிடையில், ஒரு சாதாரண மனிதனான கார்ல் மார்க்ஸ், குடும்பம் பந்தத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வசதியான மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்த ஜென்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், எந்த வேலையுமற்ற, எந்த வருமானமுமற்ற மார்க்சினால், ஜென்னியை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள முடியுமா? அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஜென்னியின் தந்தை, தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டதில் வியப்பில்லை.

- 1843 ம் ஆண்டு, மார்க்ஸ், ஜென்னி தம்பதிகள் பாரிஸ் நகரில் சென்று குடியேறினார்கள். அன்று பிரான்ஸ் நாட்டில் தான், ஐரோப்பாவின் பிரபலமான புரட்சியாளர்கள் வாழ்ந்து வந்தனர். பிராங், புருடொன், லெரூ, பொட்கின், பகுனின் இன்னும் பலர். அவர்களது சிநேகிதம் கிடைக்கப் பெற்ற மார்க்ஸ், இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.

- மார்க்ஸ் பாரிசில் வாழ்ந்த காலத்தில், முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களான ஆடம் சிமித், ரிக்கார்டோ ஆகியோரின் எழுத்துக்களை படித்தார். மேற்கொண்டு பொருளியல் துறையில் கல்வி கற்க விரும்பினார்.

- பிரெடெரிக் எங்கெல்ஸ் எனும் ஒரு புலம்பெயர்ந்த ஜெர்மானியர், இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். மார்க்சிற்கு எங்கெல்சின் நட்புக் கிடைத்தது. எங்கெல்ஸ், ஒரு இடது ஹெகலியவாதி. ஒரு ஆடைத் தொழிற்சாலை முதலாளியின் மகன். மான்செஸ்டர் நகரில், தந்தையின் தொழிலகத்தை நிர்வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். (ஒரு முதலாளியான தந்தை உழைத்த பணத்தை, தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவிய நூல்களை எழுதுவதில் செலவிட்ட பொதுநலவாதி.)

- அந்தக் காலங்களில், உழைப்பாளிகளின் ஏழ்மை பற்றி வெளியுலகிற்கு எடுத்துரைப்பதற்கு, நிறைய எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்வந்தனர். எங்கெல்ஸ் எழுதிய “இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் அவல நிலை” என்ற நூல், மார்க்சை கவர்ந்து விட்டது. மார்க்சும், எங்கெல்சும் இணைபிரியாத் தோழர்கள் ஆனார்கள்.

- கார்ல் மார்க்ஸ் பிரான்சில் வாழ்ந்து வந்த போதிலும், அவரது எழுத்துக்கள் ஜெர்மன் அரசை சங்கடத்திற்கு உள்ளாக்கின. ஜெர்மன் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டிக் கொண்டிருப்பதாக, ஜெர்மன் அரசு மார்க்ஸ் மீது குற்றஞ்சாட்டியது. ஜெர்மனியின் அழுத்தம் காரணமாக, பிரான்ஸ் அவரை வெளியேற்றியது. கார்ல் மார்க்ஸ் எல்லை கடந்து பெல்ஜியம் சென்று, அரசியல் அகதியாக தஞ்சம் கோரினார். ஆனால், அங்கிருந்து வெளியேறி, இங்கிலாந்தில் புகலிடம் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சாகும் வரையில் இங்கிலாந்தில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாத அகதியாக காலம் கழித்தார்.

- இறுதிக் காலத்தில், லண்டனில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், ஜென்னி தம்பதிகள் வறுமையில் வாடினார்கள். மார்க்சிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை. அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகள், மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டன. பணத் தேவைக்காக, உறவினர்கள், நண்பர்களிடம் இரந்து வாழ வேண்டிய நிலைமை. ஒரு தடவை, குழந்தையின் உணவுக்காக, ஒரு நண்பரிடம் இரந்து வாங்கிய இரண்டு பவுன்கள், அந்தக் குழந்தையின் சவப் பெட்டி வாங்குவதற்காக செலவிட வேண்டி இருந்ததை, ஜென்னி எழுதி வைத்துள்ளார்.

- கார்ல் மார்க்ஸ், மாற்றி உடுக்க உடை இல்லாமல், வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கிய காலங்களும் உண்டு. இந்த நிலைமையில், எழுதுவதற்கு தாள் வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது. அத்தகைய கொடிய வறுமையின் மத்தியில் தான், மார்க்ஸ் மூலதனம் என்ற நூலின் மூன்று பாகங்களையும் எழுதிக் கொண்டிருந்தார். நிச்சயமாக, உற்ற நண்பரான எங்கெல்ஸ் மார்க்ஸ் குடும்பத்திற்கு உதவிக் கொண்டிருந்தார். இல்லாவிட்டால், உழைக்கும் வர்க்கத்தின் விவிலிய நூலாக கருதப் படும், காலத்தால் அழியாத காவியங்களான மூலதனம் என்ற நூலை நாம் இன்று வாசிக்க முடிந்திராது.

- கார்ல் மார்க்ஸ் உயிருடன் வாழ்ந்த காலங்களில், அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு சிறிய புத்திஜீவிகள் வட்டத்திற்குள் தான் அவை வாசிக்கப் பட்டன. மார்க்ஸ் எந்த உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக எழுதினாரோ, அவர்களில் யாருக்கும் யார் அந்த கார்ல் மார்க்ஸ் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால், மார்க்ஸ் இறந்த பின்னர், அவரது எழுத்துக்கள் பல்வேறு தொழிற் சங்கங்களில் வாசிக்கப் பட்டன. பலர் அதைப் பற்றி விவாதித்தார்கள்.

- கார்ல் மார்க்ஸ் பெல்ஜியத்தில் வாழ்ந்த காலத்தில், “கம்யூனிஸ்ட் லீக்” எனும் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் எங்கெல்சுடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். இன்று அது, விவிலிய நூலுக்கு அடுத்த படியாக, அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

(நன்றி: Marx for Beginners)

Friday, February 21, 2014

காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம்


ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட,  "  கடவுள் இருக்கிறாரா, இல்லையா?"   என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்களின் வீடுகளில் நடக்கும், கடவுள் கொள்கை பற்றிய விவாதங்களை, நானே சிறுவனாக இருந்த காலங்களில் நேரடியாக கண்டிருக்கிறேன். 

 "வறுமையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மார்க்சியம் தெரியாது. எந்தவொரு இடதுசாரிக் கருத்தும் அவர்களைக் கவரவில்லை...." என்று பொய்யுரைக்கும் பலரை, அன்றாடம் சமூக வலைத் தளங்களில் சந்திக்கிறேன். அது அவர்களது மத்தியதர வர்க்க மனோபாவமே அன்றி, யதார்த்தத்தை உரைக்கும் கருத்து அல்ல. வசதி படைத்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மட்டும் தான் உலக ஞானம் இருப்பதாக நினைப்பது தவறு. எங்களது நெருங்கிய உறவினர்களுக்கு இடையே, ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இருந்தது. அதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே, மக்களின் வர்க்க வேறுபாடுகள் குறித்தும், அந்த வர்க்கங்களின் அரசியல் சமூகப் பார்வை குறித்தும் அறியும் வாய்ப்புக் கிட்டியது. 

என்னுடன் நன்கு பழகிய ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, சோஷலிசம் பற்றிய அறிவிருந்தது. சோவியத் யூனியன், கியூபா போன்ற நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களை பற்றிக் கேள்விப் பட்டிருந்தார்கள். அதே போன்று, கடவுள் மறுப்புக் கொள்கையான நாஸ்திகக் கருத்துக்களும் அவர்களை சென்றடைந்தன. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 

1. திராவிடக் கட்சிகள் செல்வாக்கு  செலுத்திய தமிழ் சினிமா. (பராசக்தி  போன்ற படங்களில் வந்த வசனங்களும், பல தத்துவப் பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.)
2. அன்று உலகில் பெருமளவு சோஷலிச நாடுகள் இருந்தன. அந்த நாடுகளில் அரச மதத்திற்கு பதிலாக நாஸ்திகம் கோலோச்சியது என்ற தகவல்.
3. தமிழர்கள் மத்தியில் களப் பணியாற்றிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு. ஏழை உழைப்பாளிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் அவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.
4. அறுபதுகள், எழுபதுகளில் கூட, தாழ்த்தப் பட்ட சாதியினர் சைவக் கோயில்களுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர். சாதி ஒழிப்புப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, " உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் இந்த அக்கிரமங்களை ஏன்  பொறுத்துக் கொண்டிருக்கிறார்?"  என்று, ஏழைத் தலித் மக்களை கேள்வி கேட்க  வைத்தது.
5. டாக்டர் கோவூர் நடத்திய நாஸ்திக பிரச்சாரம். குறிப்பாக, உழைக்கும் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்ட, ஜனரஞ்சகப் பத்திரிகையான "மித்திரன்", அது பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. 

இவை யாவும், நான் வாழ்ந்த சூழலில், எனது கண்ணுக்கு தென்பட்ட காரணிகள். அன்று நடந்த நாட்டு நடப்புகளால், சுயமாகத் சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் உருவாகி இருந்தனர். மேற்குறிப்பிட்ட தகவல்களில் ஏதாவதொன்று விவாதப் பொருளாகும் நேரம், நாஸ்திகக் கருத்துக்களும் முன் வைக்கப் படும். அந்த  நிலைமை, ஈழப் போராட்டம் தொடங்கிய எண்பதுகளிலும் காணப் பட்டது. 

கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் நடந்த, தமிழர் விரோதக் கலவரங்கள், இன்னொரு பரிமாணத்தில் இருந்தும் பார்க்கப் பட்டது. கலவரங்களின் போது, சிங்களக் காடையரினால் பல சைவக் கோயில்கள் எரிக்கப் பட்டன. அவற்றைக் கேள்விப் பட்ட யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், தமக்குள் கேட்டுக் கொண்ட கேள்வி இது: " சிங்களக் காடையர்கள் கோயில்களை எரித்த நேரம், அங்கிருந்த சாமிகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஏன் அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்தவில்லை? தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்ற சாமிகள், தமிழ் மக்களை காப்பாற்றுமா?"

சிங்கள ஊடகங்கள் வெளிப்படையாகவே தமிழர்களின் சைவ மத நம்பிக்கைகளை கேலி செய்து வந்தன. அதே போன்று, தமிழ் தேசியத்தை முன்னெடுத்த தமிழ் ஊடகங்களும், சிங்களப் பௌத்தர்கள் வழிபடும் புத்தனை கேலி செய்யும் கேலிச் சித்திரங்களை  பிரசுரித்தன. ஊடக முதலாளிகள், மதவாதம் அல்லது இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக அவற்றை பிரசுரித்து வந்தனர். ஆனால், "  மதம், கடவுள் என்பன, ஒருநாளும் எதிர்க்கவே முடியாத புனிதமான கோட்பாடுகள் அல்ல."   என்ற உண்மையை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும், அவர்களின் செயற்பாடுகள் அமைந்து விட்டன. அன்று, சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் சிலர் நேரடியாகவே கேட்டனர்: " அவர்கள் (சிங்களவர்கள்) எங்களது கடவுளரை கேலி செய்கிறார்கள். நாங்கள் அவர்களது கடவுளை கேலி செய்கிறோம். இதிலிருந்து ஒரு உண்மை தெரிய வருகின்றது. கடவுள் என்ற ஒன்று இல்லை..."

ஒரு தடவை, எங்கள் ஊரில் ஒரு விடுதலை இயக்கம் கூட்டம் நடத்தியது. அதில் பேசிய பேச்சாளர் பின்வருமாறு கூறினார்: " சிங்கள- பௌத்தர்களின் மதம் அஹிம்சையை போதிக்கிறது. அவர்களின் கடவுளின் கையில் ஆயுதம் கிடையாது. ஆனால், சிங்கள பௌத்தர்கள் எம் மீது வன்முறை பிரயோகிக்கிறார்கள். எங்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நாங்கள் அஹிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்..."  அன்று அது, கூட்டத்திற்கு வந்திருந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைப்பதற்காக செய்யப் பட்ட பிரச்சாரம் தான். அதே நேரத்தில், " கடவுள், மதம் என்பன புனிதமானவை... கேள்விக்குட்படுத்த முடியாதவை..." என்று மக்கள் நம்பிய மாயையையும் கட்டுடைத்தது. 

1984 ம் ஆண்டு, ஒரு போர் நிறுத்தத்தை தொடர்ந்து, யாழ் குடா நாடு முழுவதும் போராளி இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் முகாமுக்குள் முடங்கிக் கிடந்தது. அதனால் பல தடவைகள் விமானங்களில் வந்து குண்டு போட்டார்கள். முகாம்களில் இருந்து ஷெல் அடித்தார்கள். என்றாவது ஒரு இராணுவ நடவடிக்கை எடுக்கப் படுமானால், மக்களை கோயில்களில் (அல்லது தேவாலயங்களில்) சென்று தங்குமாறு, அரச வானொலி அடிக்கடி அறிவித்தது. 

பெரும்பான்மை தமிழ் மக்களும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்பதால், கோயிலுக்குள் தமக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால், விமானக் குண்டுவீச்சுக்கு கோயில்களும், தேவாலயங்களும் தப்பவில்லை. யாழ் நகரில் பிரபலமான பெருமாள் கோயிலின் கோபுரம் குண்டு வீச்சால் சேதமடைந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஷெல் வீச்சால் சேதமடைந்தது. இப்படி நிறைய வழிபாட்டு ஸ்தலங்கள், ஒன்றில் விமானக் குண்டுவீச்சினால், அல்லது ஷெல் தாக்குதலில் சேதமுற்றன. அந்த சேதங்கள் எல்லாம் ஒரு பெரிய பட்டியலில் தொகுக்கப் பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா படையினர், வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியதால், பொது மக்களும் பலியானார்கள். நவாலி தேவாலயம் விமானக் குண்டு வீச்சினால் தாக்கப் பட்டு, அங்கு தஞ்சம் புகுந்திருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள், பொது மக்களின் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள், உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப் பட்டன. அதன் விளைவாக ஏற்பட்ட, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம் காரணமாக, பெருமளவு மக்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதும் உண்மை தான். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்னொரு எதிர்பாராத விளைவையும் உண்டாக்கியது. நாஸ்திகக் கருத்துக்களின் உண்மைத் தன்மையை, ஈழத் தமிழ் மக்கள் போர் அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டனர். 

"  சிங்களப் படையினர் இதுவரையில் எத்தனை சைவக் கோயில்களை  உடைத்து விட்டார்கள்? எத்தனை தடவைகள், கோயில்கள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் கொன்றிருக்கிறார்கள்? அப்போது இந்த சாமிகள் எல்லாம் எங்கே போயின? அதுகளும் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனவா? கடவுள் இருப்பது உண்மை என்றால், எதற்காக குண்டு போட்ட சிங்களவனை தண்டிக்கவில்லை?"   இப்படிப் பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தன. இது போன்ற நாஸ்திகக் கேள்விகளை கேட்டவர்கள் எல்லோரும் படித்தவர்களும் அல்ல. சாதாரண பாமர மக்கள் மனதில் எழுந்த கேள்விகள் அவை. 

ஈழப் போராட்டம் நடந்த காலம் முழுவதும், கடவுள் நம்பிக்கை மிக்க ஆஸ்திகர்களுக்கு கஷ்டமான காலங்கள். அவர்களால் அந்த "நாஸ்திக கேள்விகளை" எதிர்கொள்ள முடியவில்லை. "  கடவுள் போராளிகள் மூலம் தண்டனை கொடுக்கிறார்."   "  சிங்களப் படையினருக்கு பலத்த இழப்புகள் உண்டாகின்றன..."    "  சிங்கள அரசை வெளிநாடுகள் தட்டிக் கேட்கின்றன..." என்று பதில் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அந்தப் பதில்கள் எல்லா தருணத்திற்கும் பொருந்தாது என்பதை, விரைவில் புரிந்து கொண்டனர். ஏனென்றால், போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும், கடவுளையும், மதத்தையும் மதித்து நடக்கவில்லை. மனித உரிமை நிறுவனங்களைப் பொறுத்த வரையில், அவை எல்லாம் மனித உரிமை மீறல்களுக்குள் அடங்கும். ஆனால், சாதாரண கடவுள் நம்பிக்கையாளர்களை பொறுத்த வரையில், அது அவர்களது நம்பிக்கையை தளர வைத்தது. 

சைவ மத வழிபாட்டு ஸ்தலங்கள் தமிழர்களுக்கு உரியவை என்பதால், சிங்களப் படையினருக்கு அவற்றை அழிப்பதில் மனச் சஞ்சலம் எதுவும் உண்டாகவில்லை.  பெரும்பாலும் பௌத்தர்களான சிங்களப் படையினர், சைவக் கோயில்களில் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. தங்களது கொடுஞ்செயலால் கோபமுறும் கடவுள் தங்களை தண்டித்து விடும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை. மறு பக்கத்திலும், தமிழர் தரப்பிலும் அதே நிலைமை தான் காணப்பட்டது. பௌத்தர்கள் நம்பிய புத்தனுக்கோ, அல்லது இஸ்லாமியர் நம்பிய அல்லாவுக்கோ, புலிகள் அஞ்சியதாகத் தெரியவில்லை.   

ஈழப்போர் தொடங்கிய, 1984 ம் ஆண்டு, யாழ் நகரில் இருந்த ஒரேயொரு புத்த கோயிலை, புலிகள் கிரனேட் வீசி உடைத்தார்கள். கண்டியில் பௌத்தர்களின் மிகப் புனிதமான கோயிலான தலதா மாளிகைக்கு குண்டு வைத்தார்கள். காத்தான்குடியில் இஸ்லாமியர் தொழுத பள்ளிவாசலுக்குள் நுழைந்து சுட்டார்கள். அறந்தலாவையில் புத்த பிக்குகளை கொலை செய்தார்கள். அதனால், புலிகளை எந்தக் கடவுளும் தண்டிக்கவில்லை. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தார்கள். ஈழத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புலிகளுக்கான ஆதரவு குறையவில்லை.

இதிலே வேடிக்கை என்னவென்றால், அறந்தலாவை புத்த பிக்குகளின் கொலைச் சம்பவத்திற்கு காரணமான கருணா அம்மான், இன்று ஸ்ரீலங்கா அரசினால் அமைச்சர் பதவி கொடுத்து கௌரவிக்கப் பட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரசு, ஒரு சிங்கள- பௌத்த பேரினவாத அரசாக இருந்த போதிலும், எல்லாக் காலங்களிலும் பௌத்த மதத்தை மதித்து நடக்கவில்லை. ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலங்களில், அரச படையினர், நூற்றுக் கணக்கான புத்த பிக்குகளை சுட்டுக் கொன்றார்கள். அரச படையினர் கைது செய்த மக்களை சித்திரவதை செய்யவும், கொன்று புதைக்கவும், புத்த கோயில்களை பயன்படுத்தினார்கள். 

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், கடவுள் இல்லையெனும் நாஸ்திகவாதம், ஏராளமான தமிழ் மக்கள் மனதில் தானாகவே தோன்றியது. ஆனால், புலிகள் உட்பட, எந்தவொரு ஈழ விடுதலை இயக்கமும், ஈழத் தமிழர்கள் மத்தியில் நாஸ்திகவாதக் கருத்துக்களை வளர்த்தெடுக்கவில்லை. அதற்குக் காரணம் கடவுளோ, மதமோ அல்லது ஆன்மீகமோ அல்ல. இன்றைக்கும் மத நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அரசியல் ஆதிக்கம் காரணம். அந்தப் பிரிவினர், சமூகத்தில் கடவுள், மதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வந்தாலும், பொருளாதார பலம் மிக்கவர்களாக உள்ளனர். புலிகள் எந்தக் காலத்திலும், அந்த அரசியல்- பொருளாதார சக்தியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, February 18, 2014

ட்ராஸ்கிசம் : நிரந்தரப் புரட்சி எனும் ஒரு நிரந்தரக் கனவு

" புரட்சிகர தத்துவம் இன்றி, ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. புரட்சிக்கான சூழ்நிலை இல்லையென்றால், புரட்சி சாத்தியமில்லை. ஆனால், எல்லா  புரட்சிகரமான  சூழ்நிலையும்  புரட்சியை நோக்கிச் செல்வதில்லை."   - லெனின் 

நான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ட்ராஸ்கிச "சர்வதேச சோஷலிஸ்டுகள்" (IS) (Internationale Socialisten) கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ட்ராஸ்கிச கட்சிகள் தான் பெருமளவு உறுப்பினர்களை கொண்டுள்ள "இடதுசாரி" கட்சிகள். பிரான்சிலும், பிரிட்டனிலும் ட்ராஸ்கிச கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக குட்டி முதலாளிய சிந்தனை கொண்ட மாணவர்கள் மத்தியில் ட்ராஸ்கிச செல்வாக்கு அதிகமாக உள்ளது.

ட்ராஸ்கிஸ்டுகளும் பல கட்சிகளாக பிரிந்திருக்கின்றனர். நான் தொடர்பு கொண்ட Internationale Socialisten (IS) பெருமளவு இளைஞர்களை கொண்டிருப்பதால், நாட்டில் எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தாலும் முன்னுக்கு நிற்பார்கள். அந்த விஷயத்தில் அவர்களை பாராட்டலாம். ஆனால், சித்தாந்த அடிப்படையில் மேற்கத்திய ஜனநாயக அமைப்பிற்குள் ஒரு தீர்வைத் தேடுவது ஒரு முரண்பாடாகத் தெரிந்தது.

என்றைக்கோ ஒரு நாள், மக்கள் தாமாகவே புரட்சி செய்வார்கள் என்று கூறுகின்றார்கள். சரி, மக்கள் எப்போது புரட்சி செய்வார்கள்? நீங்கள் எப்போது தலைமை தாங்கப் போகிறீர்கள்? தங்களை லெனினிசவாதிகளாக காட்டிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகள், பல தடவைகள் லெனினின் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்து கொள்வதை அவதானித்தேன்.

"உங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?" இந்தக் கேள்வியை எந்த ட்ராஸ்கிஸ்டிடம் கேட்டாலும், " ஐயோ! நாங்கள் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை"  என்று பதில் சொல்வார்கள். ஸ்டாலின் பற்றி மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை அப்படியே ஒப்புவிப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாமே ஸ்டாலினிச கட்சிகள் தான். பிரான்சிலும், இத்தாலியிலும் "ஐரோப்பிய கம்யூனிசம்" என்றொரு சித்தாந்தம் எழுந்தது. ஐம்பதுகளிலேயே ஸ்டாலினை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. இதெல்லாம் ட்ராஸ்கிஸ்டுகள்  தெரிந்து கொள்ள விரும்பாத  உண்மைகள்.

வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள், ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. சமாதானமாக வாழும் மக்கள் வன்முறைப் புரட்சியை விரும்பப் போவதில்லை. அதனால் தான், என்றோ ஒரு நாள் மக்கள் புரட்சி செய்வார்கள், நாங்கள் அதற்கு தலைமை தாங்கலாம் என்று ட்ராஸ்கிஸ்டுகள் காத்திருக்கிறார்கள். சுருக்கமாக, இரத்தம் சிந்தாமல் அஹிம்சா வழியில் நடக்கும் புரட்சி ஒன்றுக்காக காத்திருக்கிறார்கள். இது வெறும் குட்டி முதலாளிய மனோபாவம். " அமைதியான வழியில் ஒரு புரட்சி நடந்தால் எமக்கும் சந்தோஷமே. ஆனால், முதலாளிய வர்க்கம் அந்தளவு சுலபமாக தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்குமா?" என்று 150 வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்தார்.

அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் மக்கள் வாழும் மூன்றாமுலக நாடுகளில், "ஸ்டாலினிசத்திற்கு" நிறைய ஆதரவு உள்ளது. இதை ட்ராஸ்கிஸ்டுகளே ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இலங்கை மட்டும் விதிவிலக்கு. உலகிலேயே, இலங்கையில் மட்டும் தான், முதன்முதலாக ட்ராஸ்கிஸ்டுகள் அரசியல் பலம் பெறத் தொடங்கினார்கள். அதனால், இன்றைக்கு எந்தத் ட்ராஸ்கிஸ்டிடம் கேட்டாலும், இலங்கையை ஒரு உதாரணமாகக் காட்டுவார்கள். அதாவது, இலங்கை தான்  "ட்ராஸ்கிஸ்டுகளின் புண்ணிய பூமி"! 

இலங்கையில் ட்ராஸ்கிஸ்டுகள், சிங்களப் பேரினவாத கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து  ஆட்சி அமைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அது ஒன்றும் ட்ராஸ்கிச கொள்கைக்கு முரணானது அல்ல. ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகள் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அல்லர். அது ஒரு சமூக ஜனநாயகவாத இயக்கம். அதன் அடிப்படையில், ஒரு ஆளும் கட்சி தங்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சியமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால், அரசாங்கத்தை உள்ளிருந்த படியே மாற்றி விடுவார்களாம். மகிந்த ராஜபக்சவை கூட ஒரு ட்ராஸ்கிஸ்டாக மாற்றி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேருவது இலகுவான காரியமல்ல. கொஞ்சக் காலம் அந்தக் கட்சிக்காக வேலை செய்ய வேண்டும். ஒருவரது கொள்கைப் பற்று, அர்ப்பணிப்பு, சேவை உணர்வு, இவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் அவதானித்த பின்னர் தான், கட்சியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், அப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு ட்ராஸ்கிச கட்சியில் மட்டும், எதுவுமே முக்கியமில்லை. உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே அவர்களுக்கு முக்கியம். ஒருவர் இன்றைக்கே அறிமுகமானாலும், அவரை உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். ட்ராஸ்கிசம் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், கட்சிக்காக வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. சந்தா தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். 

முதன்முதலாக, IS அமைப்பினரின் கலந்துரையாடலுக்கு சென்றிருந்த நேரம், எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. கட்சியின் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு, என்னிடம் படிவத்தை கொண்டு வந்து நீட்டினார்கள். நான் அதற்கு மறுத்து விட்டேன். கட்சியின் அரசியல் கொள்கை பற்றி, ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல் அங்கந்தவராக சேர முடியாது என்று மறுத்து விட்டேன். எனது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட IS அமைப்பாளர்கள், தமது கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் ஓரிடத்தில், IS கட்சிக் கூட்டம் வாரத்திற்கு ஒரு தடவை, வகுப்புகள் இல்லாத மாலைநேரத்தில் நடைபெறும். அதிலே கலந்து கொள்வோர் பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்கள். அதனால், தாம் பயிலும் பல்கலைக்கழகத்தில் இலகுவாக இடம் ஒதுக்கிக் கொள்ள முடிந்தது. இது எனக்கு ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட் மாணவர்கள் எந்தவொரு நிகழ்வை நடத்த விரும்பினாலும், பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதிப்பதில்லை. தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகளையும் அனுமதிப்பதில்லை. ட்ராஸ்கிஸ்டுகளுக்கு மட்டும் விசேட சலுகை கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. அது போகட்டும்.

மார்க்சியம் ஒரு பாட்டாளி வர்க்க சித்தாந்தம். ஆனால், கூட்டங்களில் கலந்து கொள்வோர் (குட்டி முதலாளிய) மாணவர்கள். அது சிலநேரம், அவர்கள் மனதிலேயே நெருடலாக இருந்திருக்கும். ஒரு தடவை, துருக்கியை சேர்ந்த புதிய தோழர் ஒருவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்த அறிமுகத்தில் இப்படிச் சொன்னார்கள் : " இன்று எமது கூட்டத்திற்கு ஒரு பாட்டாளி வர்க்க பிரதிநிதி வந்திருக்கிறார்."   அங்கே கூடியிருந்த எல்லோரும் கரகோஷம் செய்து, "அரிதாகக் காணக் கிடைக்கும், பாட்டாளி வர்க்க பிரதிநிதியை" வரவேற்றார்கள். சில நாட்களின் பின்னர், அந்தப் புதிய தோழருடன் உரையாடிய பொழுது தான் உண்மை தெரிய வந்தது. உண்மையில், அவரும் ஒரு மாணவர் தான். ஆனால், தனது வருமானத்திற்காக ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறார்.

ட்ராஸ்கிஸ்டுகள் பேசும் மார்க்சியம் எனக்குப் புதுமையாக தோன்றியது. அவர்கள் தம்மைத் தாமே மார்க்சிஸ்ட் என்றும், லெனினிஸ்ட் என்றும் கூறிக் கொள்கின்றனர். ஆனால், மார்க்ஸ், லெனின் சொன்னவற்றை திரிபு படுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். மார்க்ஸ், லெனின் எழுதிய எந்த நூலில் தேடினாலும், ட்ராஸ்கிஸ்டுகளின் கோட்பாடுகளை கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கென்றே, விசேடமாக ட்ராஸ்கி சில நூல்களை எழுதி இருக்கிறார். ட்ராஸ்கிஸ்டுகள், ட்ராஸ்கியின் எழுத்துக்களை தவிர வேறெதையும் வாசிப்பதாகத் தெரியவில்லை.

" சோஷலிசத்தின் இறுதி இலக்கு கம்யூனிசம்."  என்று லெனின் கூட எழுதி இருக்கிறார். ஆனால், எந்தவொரு ட்ராஸ்கிஸ்டும் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்வதில்லை. தப்பித் தவறி, கம்யூனிசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்துவதில்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கம்யூனிசம் என்ற சொல்லை பாவித்த இடங்களில் எல்லாம், ட்ராஸ்கிஸ்டுகள் சோஷலிசம் என்ற சொல்லைப் போட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். 

ட்ராஸ்கிசம் ஒரு சமூக ஜனநாயக சித்தாந்தம். ட்ராஸ்கிஸ்டுகள் தம்மை நேரடியாக சமூக ஜனநாயகவாதிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவர்களது நடவடிக்கைகள் யாவும் அவ்வாறே அமைந்துள்ளன. சமூக ஜனநாயக் கட்சிகளுடன் தமக்கு நிறைய ஒத்துப் போகும் என்று, தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசிய ட்ராஸ்கிஸ்ட் ஒருவர் கூறினார். அதனால் தான் போலும், இலங்கையை சேர்ந்த  ட்ராஸ்கிஸ்டுகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கிறார்கள். (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய இடது கொள்கை கொண்டது. அதனை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடலாம்.)

கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றி எழுதியவற்றை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உலக வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிலவி வந்திருக்கிறது. தற்போதும், ஜனநாயக நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் கூட, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் உள்ளது. அதற்குப் பதிலாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை கொண்டு வருவதே சோஷலிசப் புரட்சியின் நோக்கம் என்று மார்க்ஸ் எழுதி இருக்கிறார். மார்க்ஸ் கூறிய "சர்வாதிகாரம்" ஒரு தத்துவார்த்த அடிப்படை கொண்டது. ஆனால், நாம் அன்றாட மொழி நடையில் பயன்படுத்தும் சர்வாதிகாரம் என்ற சொல், கொடுங்கோன்மை என்ற அர்த்தம் கொண்டது. 

குறிப்பாக, ஒவ்வொரு பிரஜைக்கும் ஜனநாயக சுதந்திரம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில், சர்வாதிகாரம் என்ற சொல் எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, மேற்கத்திய சமூகத்தில் பிறந்த குட்டி முதலாளிய மாணவர்களும், சர்வாதிகாரம் என்ற சொல்லை எதிர்மறையாக கருதுவது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால், தம்மை "மார்க்சிஸ்டுகள்" என்று காட்டிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகள், மேற்கத்திய சிந்தனை முறையை கொண்டிருப்பது தான், என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. மார்க்ஸ் எழுதிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்பதத்தை, "பாட்டாளி வர்க்க ஜனநாயகம்" என்று திரிபுபடுத்துவதே மார்க்சியத்திற்கு முரணானது. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகள் தம்மை "(மேற்கத்திய) ஜனநாயகவாதிகள்" என்று காட்டிக் கொள்வதற்காக, அந்த திரிபுபடுத்தலை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாவற்றையும் விட மிகப் பெரிய கொடுமை, சோவியத் யூனியனின் வீழ்ச்சியை, "ட்ராஸ்கிசத்தின் எழுச்சியாக" கருதினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தொன்னூறுகள் வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் "ஸ்டாலினிஸ்டுகள்"(?) ஆட்சி செய்தார்கள். குருஷேவ் காலத்திலேயே, ஸ்டாலினிச எதிர்ப்பு அரசியல் ஆதிக்கம் பெறத் தொடங்கி விட்டது. உலகம் முழுவதும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிளவு பட்டன. ஒரு பக்கம், ஸ்டாலினை ஆதரிக்கும், மறுபக்கம் குருஷேவை ஆதரிக்கும் பிரிவுகள் தோன்றின. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகளின் பார்வையில், அவை எல்லாமே "ஸ்டாலினிச கட்சிகள்" தான்!

ஸ்டாலினை விமர்சிக்கும் குருஷேவின் உரையை, போலந்து தான் முதன்முதலாக உலகிற்கு அறியத் தந்தது. எண்பதுகளில் போலந்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், வேறெந்த முன்னாள் சோஷலிச நாட்டிலும் ஏற்படவில்லை. லேக் வலேசா, "சொலிடார்நொஸ்க்" என்ற தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி, கத்தோலிக்க திருச்சபையின் உதவியுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதெல்லாம், போலந்தை தவிர, வேறெந்த சோஷலிச நாட்டிலும் சாத்தியப் பட்டிருக்காது. போலந்து பெரும்பான்மை கத்தோலிக்கர்களை கொண்ட நாடென்பதும், அன்று போப்பாண்டவராக தேர்தெடுக்கப் பட்ட ஜான் பால் ஒரு போலிஷ்காரர் என்பதும் குறிப்பிடத் தக்கது. லேக் வலேசாவும் ஒரு மேற்கத்திய ஆதரவாளர் என்பது, உள்ளங்கை நெல்லிக்கனியாக அப்போதே தெரிந்த விடயம்.

லேக் வலேசாவின் தொழிற்சங்க போராட்டத்தை, பிற்போக்கான கத்தோலிக்க மத நிறுவனம் முழு மூச்சுடன்  ஆதரித்தது. அது வெளிப்படையாகவே மேற்குலகிற்கு ஆதரவான தன்மை கொண்டிருந்தது. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகள் அந்தப் போராட்டத்தை வரவேற்றார்கள். "லேக் வலேசா ஒரு லெனினிஸ்ட்" என்றும், அவரது தலைமையின் கீழ் போராடிய தொழிலாளர்கள், "ட்ராஸ்கி காலத்து சோவியத் அமைப்பை கட்டுவதாகவும்," உண்மைக்கு புறம்பான  தகவல்களை பரப்பிக் கொண்டிருந்தார்கள். போலந்து மட்டுமல்லாது, பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும், சோஷலிச அரசுகள் வீழ்ந்தன. அங்கெல்லாம், கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. 

அன்று ட்ராஸ்கிஸ்டுகள் என்ன சொன்னார்கள்? அவர்கள் அதனை "ஸ்டாலினிசத்தின் வீழ்ச்சியாக" கொண்டாடினார்கள். " இதோ பாருங்கள், பாட்டாளி வர்க்க மக்கள் புரட்சி ஏற்படப் போகின்றது"  என்று நம்பிக்கையை விதைத்தார்கள். இவர்களது தத்துவ ஆசிரியர் ட்ராஸ்கி கூட, " இரண்டாம் உலகப் போரில், பாசிசம் ஸ்டாலினிசத்தை தோற்கடிக்கும்" என்று எதிர்வு கூறியவர் ஆயிற்றே. அதுவே அப்போது  அவரது மனதில் இருந்த விருப்பமாகவும் இருந்திருக்கும். (இது குறித்த விவாதம் IS கூட்டங்களில் நடைபெற்றது. போரின் முடிவை ட்ராஸ்கி தவறாகக் கணித்திருந்தார் என்பதை சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.)

"ஸ்டாலினிசம் வீழ்ந்து" இருபதாண்டுகளுக்கு மேலாகியும், ட்ராஸ்கிஸ்டுகள் எதிர்பார்த்த நிரந்தரப் புரட்சி ஏற்படவில்லை. அப்படி ஒரு புரட்சி எந்தக் காலத்திலும் வராது போலிருக்கிறது. அதனால் தான் ட்ராஸ்கியும் தனது தத்துவத்திற்கு "நிரந்தரப் புரட்சி" என்று பெயரிட்டார் போலும்.


ட்ராஸ்கிசம் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Sunday, February 16, 2014

இந்து மத சம்பிரதாயங்களை மாற்றிய விடுதலைப் புலிகள்


சிறு தெய்வங்களின்
கோயில் போன்ற வடிவில் கட்டப் பட்டுள்ள
மாலதி நினைவாலயம்
இந்தப் பதிவில், நான் எங்குமே புலிகளைப் பற்றிய அதீத நம்பிக்கையை விதைக்கவில்லை. ஒரு பழமைவாத சமுதாயத்தில், புலிகளின் சில நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி மட்டுமே, இதில் எழுதி இருக்கிறேன். விடுதலைப் புலிகள், தம்மை நாஸ்திகர்கள் என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கோயில்களை மூடவில்லை. 

புலிகள் கோயில் திருவிழாக்களை தடை செய்யவில்லை. ஆனால், கோயில்களுக்கு கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை, தமக்கு வரியாக கட்ட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தார்கள். கல்விச் சாலைகளை தேசியமயமாக்க துணிந்த சிங்கள அரசு கூட, கோயில்கள், தேவாலயங்களில் கை வைக்கவில்லை. ஏனென்றால், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு மதவாத அரசும் கூட. 

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் சமூகத்தில், ஆஸ்திகர்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். இப்போது கூட, ஒரு சைவ மத ஆன்மீகவாதியான விக்னேஸ்வரன் தான், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக தெரிவாகி உள்ளார். அந்தளவுக்கு ஆஸ்திக கடும்போக்காளர்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு சமூகத்தில், புலிகள் செய்த சில காரியங்கள் நாஸ்திகமாக தெரிந்திருக்கும்.

புலிகள் இயக்கப் போராளிகளாக இருந்த, சைவ மதத்தில் பிறந்த போராளிகள் மரணமடைந்தால், இந்து மத முறைப் படி அவர்களது உடல்களை எரிப்பதற்கு மாறாக மண்ணுக்குள் புதைத்தனர். இறந்த உடலை எரிப்பது இந்து மத நம்பிக்கை என்பதும், புதைப்பது கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நம்பிக்கை என்பதையும் நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், வீரச் சாவடைந்த சைவ மதப் போராளிகளை புதைப்பதற்கு எதிராக, குறைந்தது ஒரு சைவ மத நம்பிக்கையாளர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை. அதே போன்று, கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு விரோதமாக கருதப்படும் புலிகளின் தற்கொலை கலாச்சாரத்தை, ஒரு கிறிஸ்தவர் கூட எதிர்த்துப் பேசவில்லை.

அரசியல் இயக்கங்கள், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. உலகம் முழுவதும், கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் நாஸ்திகம் திணிக்கப் படும் என்று, அப்பாவி மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஈழப் போராட்டம் நடந்த காலம் முழுவதும், புலிகள் திணித்த நாஸ்திக கொள்கைகளை, குறைந்தது ஒரு மத நம்பிக்கையாளர் கூட எதிர்த்துப் பேசவில்லை. இன்றைக்கும் பல தீவிரமான இந்து-கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்கள், "நாஸ்திகப்" புலிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். இது எதைக் காட்டுகின்றது?

ஆஸ்திகர்கள், மத நம்பிக்கையாளர்கள் ஆகியோர் வெறும் காகிதப் புலிகள். ஈழப் போராட்டத்தில், என்றுமே அவர்கள் ஒரு பலமான அரசியல் சக்தியாக இருக்கவில்லை. புலிகள் ஏற்கனவே ஆஸ்திக மேலாதிக்கவாதிகளின் வாலை நறுக்கி விட்டிருந்தனர். இதனால், நாஸ்திகர்களுக்கும் வேலை மிச்சம். தமிழர்கள் மத்தியில், புலிகள் ஒரு சமூகப் புரட்சியை நடத்தவில்லை. புலிகள் சோஷலிசப் புரட்சியாளர்களும் அல்ல. ஆனால், தமிழ் சமூகத்தில் இருந்த பிற்போக்கு அம்சங்களான, சாதியவாதம், மதவாதம்,ஆன்மீகவாதம் போன்றன மேலாண்மை பெற விடாமல் அடக்கி வைத்திருந்தார்கள். இல்லாவிட்டால், ஈழப் போராட்டம் என்றைக்கோ தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

இலங்கை, இந்தியாவில், இந்து மதம் வருவதற்கு முன்பு, இயற்கை வழிபாடு இருந்தது. மக்கள் தமக்காக போராடி மரணித்த போராளிகளை கடவுளாக வழிபட்டார்கள். அண்ணன் மார், மதுரை வீரன், காத்தவராயன் போன்ற தெய்வங்கள் எல்லாம் மக்களுக்காக மரணித்த போராளிகள் தான். பிற்காலத்தில் எமது மண்ணை ஆக்கிரமித்த இந்து பேரினவாதிகள், அந்த வழிபாடுகளை தடை செய்து விட்டார்கள். அவற்றை பின்பற்றிய மக்களை கொன்று குவித்தார்கள் (இனப் படுகொலை). எஞ்சியவர்களை பலவந்தமாக வாள்முனையில் இந்துக்களாக மதம் மாற்றி விட்டார்கள்.

இன்றைக்கும், இந்து மதத்திற்கு முன்பிருந்த மத நம்பிக்கையை, இந்துக்கள் "சிறு தெய்வ வழிபாடு" என்று ஒடுக்குகிறார்கள். ஈழத்தில் இருந்த "சிறு தெய்வங்கள்", ஆகம விதிப் படி பெருந் தெய்வங்களுக்கான கோயில்களாக மாற்றப் பட்டன. அந்த நடவடிக்கை, இன்றைய சிங்களப் பேரினவாத அரசின், பௌத்த மயமாக்கலுக்கு ஒப்பானது.

யாழ்ப்பாணத்தில், ஒரு சைவ மத அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், சிறு தெய்வ வழிபாட்டை கடுமையாக எதிர்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு பௌத்த மத அடிப்படைவாதியான மேர்வின் சில்வா, காளி கோயிலில் பலி கொடுப்பதை தடுத்த நேரம், எத்தனை ஈழத்து சைவர்கள் அதனை வரவேற்றார்கள் தெரியுமா? இந்த விஷயத்தில், பௌத்த - சைவ மத அடிப்படைவாதிகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

இந்து பேரினவாதிகளின் கொடுங்கோன்மை காரணமாக, ஏறக்குறைய அழிந்து விட்ட நிலையில் இருந்த "இயற்கை வழிபாட்டுக்கு" புத்துயிர் கொடுத்தார்கள். ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள். ஆனால், புலிகள் அவர்களது மத நம்பிக்கைகளை மதிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்களது நம்பிக்கைகளுக்கு விரோதமாக  நடந்து கொண்டார்கள்.

உதாரணத்திற்கு சில: போரில் வீரச் சாவடைந்த மாவீரர்களை, மக்கள் நினைவுகூரி வழிபட வைத்தார்கள். இது, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்து மதம் ஒடுக்கிய சிறு தெய்வ வழிபாட்டின் நவீன வடிவம். புலிகள், அவர்களது மாவீரர்களின் கல்லறைகளை வழிபாட்டு ஸ்தலமாக்கினார்கள். அதுவும், ஆகம விதிப் படி இயங்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது. 

இறந்த போராளிகளை எரிக்காமல் புதைப்பது, இந்து மத நம்பிக்கை அல்ல. அது தமிழர்களின் பழைமையான இயற்கை வழிபாட்டுக்குரியது. இருப்பினும், ஒரு சைவத் தமிழர், எந்தளவு தீவிரமாக புலிகளை ஆதரித்தாலும், இறந்த பின்னர் தனது உடலை புதைக்க வேண்டுமென்று கூற மாட்டார். வாயளவில் தமிழ் தேசியம் பேசினாலும், பலர் இன்றைக்கும் மனதளவில் மதத் தேசியவாதிகளாகத் தான் இருக்கின்றனர்.

தற்கொலை செய்வது கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாத விடயம். சைனட் கடித்து தற்கொலை செய்வது, தற்கொலைப் போராளியாக குண்டுவைப்பது, மரணித்த போராளிகளின் சமாதிகளை வணங்குவது இவை எல்லாம் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு விரோதமானவை. புலிகள் கிறிஸ்தவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வைத்தார்கள். முன்னரே சில கத்தோலிக்க தேவாலயங்களால் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், அடிப்படையில் அது ஒரு கிறிஸ்தவ நம்பிக்கைக்கு விரோதமான இயற்கை வழிபாடு (Pagan festival) என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை. இப்படி நிறைய உதாரணங்களை கூறலாம்.

மேலும், புலிகளின் முகாம்களில், எந்தவொரு மத வழிபாடும் நடப்பதில்லை. போராளிகளை அதற்கு அனுமதிப்பதுமில்லை. முகாமில் ஒரு பக்திப் பாடலைக் கூட கேட்க முடியாது. (போராளிகள் சினிமாப் பாடல்களையும் கேட்க முடியாது. இயக்கப் பாடல்களை மட்டுமே கேட்பதற்கு அனுமதி கொடுத்தார்கள்.) புலிகளின் முகாம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள், ஒரு கோயிலையோ, அல்லது தேவாலயத்தையோ காண முடியாது. 

இன்று புலிகளின் முகாம்கள் இருந்த, அதே இடத்தில் முகாம் அமைத்துள்ள சிங்களப் படையினர், அங்கே புத்த கோயில்களை கட்டி உள்ளனர். இந்தப் புத்த கோயில்கள், ஒரு பக்கம் ஆக்கிரமிப்பின் சின்னமாக நிறுவப் பட்டாலும், மறு பக்கம் படைவீரர்களின் மத வழிபாட்டு சுதந்திரம் என்று நியாயம் கற்பிக்கப் படுகின்றது. இலங்கை முழுவதும் உள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாம்களில், எல்லா இடங்களிலும் புத்த கோயில்களும், சில இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

முப்பது வருடங்கள் ஈழப் போர் நடந்த காலத்தில், தமிழ் ஆஸ்திகர்கள் அடங்கிக் கிடந்தார்கள். யாருமே தங்களை கட்டுப்படுத்திய அதிகாரத்தை எதிர்த்து முணுமுணுக்கவில்லை. ஒரே சமயத்தில், இந்து, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களை எதிர்த்து நிற்கும் தைரியம் புலிகளிடம் இருந்தது. புலிகள் தமது மதச் சார்பற்ற கொள்கைகளை, பெரும்பான்மை தமிழ் மக்கள் ஏற்க வைத்தனர். அது ஈழத்தில் மத நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில், தமிழ் நாஸ்திகர்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி.

Tuesday, February 11, 2014

"இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்


“இணையம் எமது சமுதாயத்தை தலை கீழாக மாற்றி வருகின்றது. முன்னொருபோதும் இல்லாதவாறு, சாமானிய மக்களின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஸ்னோடன் என்ற தனி மனிதன், ஒபாமாவுக்கு சவாலாக உருவெடுத்துள்ள அதிசயம், வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்ததில்லை. இது நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் புரட்சி. இணையப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கற்பனாவாதமாக தோன்றினாலும், மறு பக்கம் அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.” - மிஷேல் செரெஸ்

83 வயதான பிரெஞ்சு தத்துவவியல் பேராசிரியர் மிஷேல் செரெஸ் (Michel Serres), புதிய தலைமுறை இணையப் புரட்சியாளர்களை வரவேற்று, ஒரு நூலை எழுதி இருக்கிறார். Pettite Poucette (சிறிய சுண்டுவிரல்) என்ற அந்த நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக நான் இன்னும் அறியவில்லை. அதன் டச்சு மொழிபெயர்ப்பு அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. இதற்கிடையில், நெதர்லாந்தில் வெளியாகும் Vrij Nederland சஞ்சிகை, அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்துள்ளது. தமிழ் வாசகர்களுக்காக, நான் அதனை  தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.

______________________________________________________________________________

1930 ம் ஆண்டு பிறந்த செரெஸ், ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம், இரண்டாவது உலகப்போர், பிரான்சின் இரண்டு காலனிய போர்களையும், அவரது வாழ்நாளில் பார்த்து விட்டார். தனது பிறப்பில் இருந்து, முப்பது வயது வரையில் போர்களை மட்டுமே கண்டு வளர்ந்ததாக கூறுகினார். தற்கால பத்திரிகைகள், போர்கள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு, தேவையற்ற அளவு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதாக குறைப்படுகின்றார். உண்மையில், உலகம் முன்பிருந்ததை விட பெருமளவு முன்னேறி விட்டதாகவும், பயங்கரவாதம் குறிப்பிடத் தக்க அளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

செரெஸ் சுயமாக படித்து முன்னேறிய ஒருவராக தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறார். (கணிதவியல், இலக்கியம், தத்துவியல் கற்றவர். பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அமெரிக்காவில் பத்து வருடமும், கோஸ்டாரிகா, தென் கொரியா, மாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் விஜயம் செய்யும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார்.) பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்காத பலவற்றை, அனுபவத்தில் அறிந்து கொண்டதாக கூறுகின்றார். அவரது கூற்றில்: “அறிவு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அறிவு விடுதலை செய்கின்றது.”  மிஷேல் செரெஸ் தனது  என்பது வயதில், இணையப் பாவனை பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

இந்த வயதிலும் தளராமல், சமூக வலைத்தளங்களில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கென்று ஒரு வலைப்பூ (Blog) வைத்திருக்கிறார். அமெரிக்க தொழில்நுட்ப பூங்காவான சிலிக்கான் வலியில் பணியாற்றும் பொழுதே இணையத்தை பாவிக்கத் தொடங்கி விட்டதாகவும், தற்போது தனது பேரப் பிள்ளைகள் மூலம் நிறையக் கற்றுக் கொள்வதாகவும் கூறுகின்றார்: “அறிவும், விஞ்ஞானமும், பெற்றோர் மூலம் பிள்ளைகளுக்கு கடத்தப் படுகின்றது. ஆனால், தொழில்நுட்பத்தை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.”

 • கேள்வி: உங்களது நூலில், பிரஜைகள் தலைவர்களாவதாகவும், இளைய சமுதாயம் அதிகார பலத்தை தங்கள் கையில் எடுத்திருப்பதாகவும், பழைய அதிகார வர்த்தினரின் பலம் நொறுங்கி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன?


பதில்: தொழில்நுட்பம், (சமுதாய)  மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும், அதில் குறைபாடுகளும் உள்ளன. கூகிள் உலகம் முழுவதும் உளவு பார்க்க முடியும். அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கெலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப் பட்டன. அனால், இவை அனைத்தும் தனி ஒரு மனிதனின் முயற்சியால் வெளியில் தெரிய வந்தது. அதன் அர்த்தம், ஜனாதிபதி ஒபாமா அளவிற்கு, ஒரு தனி மனிதனின் செல்வாக்கு வளர்ந்துள்ளது. ஏனென்றால் அவர் தான் ஒட்டுக் கேட்கும் உளவுத் தகவல்களை வெளிக் கொணர்ந்தார். ஒரு தனி மனிதன்! அது நானாக இருக்கலாம், நீங்களாக இருக்கலாம். இது ஒரு நவீன ஜனநாயகம்.

 • கேள்வி: அது சில நேரம் அச்சத்தை உண்டாக்குகின்றது.


பதில்: ஆமாம், அச்சமும் தான். ஆனால், உலகில் ஒரு புதிய சமநிலை தோன்றி உள்ளது. உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு சவாலாக, ஒரு தனி மனிதன் வந்துள்ளான். ஒரு தனி மனிதனால் அதிகாரத்தை எதிர்த்து போராட முடிகின்றது. அது ஒரு கற்பனாவாதமாக தெரிந்தாலும், அதே நேரத்தில் அச்சத்தையும் உண்டாக்குகின்றது.

 • கேள்வி: ஆகவே, உங்களது நூலில் எழுதி இருப்பதைப் போல, நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றீர்கள்.


பதில்: ஆமாம். இந்தப் போக்கு, மேலதிக ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகின்றேன். எமது சமுதாயம் ஈபில் கோபுரம் போன்று கட்டப் பட்டுள்ளது. உச்சியில் ஒரு சில அரசியல்வாதிகள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் மக்கள் திரளின் மேல் தமது முடிவுகளையும், கொள்கைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். உச்சியில் ஒரு சில ஊடகவியலாளர்கள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் ஏராளமான மக்களுக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நான் நினைக்கிறேன், கணணி யுகமானது, அறிவுடைமையை ஜனநாயக மயப் படுத்துவதிலும், சமுதாயத்தை மாற்றுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆட்சியில் இருந்த அரசன், அல்லது ஜனாதிபதிக்கு, தனது விவசாயக் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாது. தற்போது ஒரு விவசாயிக்கு, உலக தானிய விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி தெரிந்திருக்கிறது. அது ஜனநாயக உறவுகளில் மாற்றத்தை கொண்டு வரும்.

குடிமக்கள் ஒரு வல்லாட்சிக்கு வளைந்து கொடுக்க தயாராக இல்லை. பழைய உலகம் எம் கண் முன்னால் நொறுங்கிக் கொண்டிருக்கிறது. எமக்கு நல்லது எது, கெட்டது எது என்று கூறிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள். தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதையே வாசிக்க, கேட்க, பார்க்க வேண்டுமென்று எதிர்பார்த்த ஊடகங்கள். அவர்களின் காலம் போய் விட்டது. குடி மக்களான நாங்கள், அடிமைகளோ அல்லது புத்தி சுவாதீனமற்றவர்களோ அல்ல. எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும், அல்லது நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

தேசங்களும், தேவாலயங்களும் பல நூறாண்டுகளாக யுத்தம் செய்யும் இயந்திரங்களாக மட்டுமே இருந்து வந்துள்ளன. அதை விட, இன்னொருவரின் உயிரைக் கேட்காத, மாய உலகில் வாழ்வதை நான் விரும்புவேன். ஆனால், சமுதாய கட்டுமானம் உடையுமாக இருந்தால், தன் முனைப்பு அதிகமான தனி மனிதர்கள் அல்லவா எஞ்சி இருப்பார்கள்? அப்படி நினைத்தால், இதற்கு முந்திய தலைமுறையை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அவர்கள் எந்தளவுக்கு கூடி வாழ்ந்திருக்கிறார்கள்? விவாகரத்துகள் பெருகின. இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய அரசியல் கட்சிகள், எந்தக் கொள்கையும் இல்லாத வெறும் கோதுகளாக மட்டுமே இருந்து வருகின்றன. அதிகார வர்க்கத்தை சொகுசான பஞ்சு மெத்தையில் வைத்திருப்பதற்காக, ஓட்டு வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே அரசியல் கட்சிகள் உள்ளன.

இணையத்தில், வலைப்பூவில் தனது அரசியல் கருத்தை வெளியிடும் ஒருவருக்கு கிடைக்கும் ஓட்டுகள், ஒரு அரசியல் கட்சி தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட அதிகமாக உள்ளது. இது எதைக் காட்டுகின்றது? அவர்கள் உங்களையும், என்னையும் போன்று சாதாரண மக்கள். ஆனால், அரசியல்வாதிகளின் பேச்சை விட, அவர்களின் கருத்துக்களை கேட்போரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது, ஒரே சமயத்தில், ஆச்சரியத்திற்கு உரியதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது.

இந்த நிலைமை, இன்னும் இருபது, முப்பது வருடங்களில் எத்தகைய விளைவுகளை கொண்டு வரும்? ஒரு புதிய வகை அரசியல் தோன்றலாம். ஆனால், என்ன வகை? அது பற்றி சொல்லத் தெரியவில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியை நாங்கள் நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல திசையில் வழிநடத்தினால், தொழில்நுட்ப மாற்றத்தினால் நன்மையை உண்டாக்கலாம். எனது பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இந்தப் புதிய உலகில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். புதியதோர் உலகைப் படைப்பதற்கு, நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும். இது தத்துவ அறிஞர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அதில் ஆர்வமாக உள்ளனர்.

19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்களிடம் ஒரு அரசியல் நோக்கு இருந்தது. உதாரணத்திற்கு: சோஷலிசம். சிலர் அதனை ஒரு கற்பனையான கோட்பாடாக கருதி இருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சமூக காப்புறுதி, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற திட்டங்கள் கொண்டு வரப் படவில்லையா? தற்போதும் சமுதாயம் திரும்பவும் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது எதை நோக்கி செல்கின்றது என்பதை தீர்மானிக்க முடியாது. மரபு ரீதியாக, தத்துவ அறிஞர்கள் புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்தார்கள். கணனித் திரைகளை அல்ல. அவர்கள் தம்மை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

 • கேள்வி: நீங்கள் அதைச் செய்கிறீர்கள் தானே?


பதில்: நான் பல வருட காலமாக, என்னை அதில் ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் “ஹெர்மெஸ்” என்ற தலைப்பின் கீழ், நான் ஒரு புத்தகம் எழுதினேன். கிரேக்க புராணத்தின் படி, ஹெர்மஸ் என்பவன் கடவுளின் தூதுவன் அல்லது தகவல் தொடர்புக்கான தெய்வம். நெருப்பு அல்லது தொழிற்துறை புரட்சியின் தெய்வமான புரொமதெயுசிடம் இருந்து, ஹெர்மஸ் எமது சமுதாயத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக எழுதி இருந்தேன். ஆனால், அன்றைக்கு நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. ஹா… ஹா… ஹா…

 • கேள்வி: கணணி மயமாக்கல் எமது மூளை வளர்ச்சியில் பங்காற்றுவதாக சொல்கிறீர்கள்.


பதில்: நாங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, எமது மூளையில் எந்தெந்த நரம்புகள் இயங்க ஆரம்பிக்கின்றன என்று,  விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அந்த குறிப்பிட்ட நரம்புகள், வாசிப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை! அதனால், நாங்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் பொழுது, எமது மூளையும் வளர்ச்சி அடைகின்றது. இது எமது சிந்தனா முறையில் ஒரு புரட்சியை உண்டு பண்ணலாம். வரலாற்றில் ஏற்கனவே இது போன்ற இரண்டு புரட்சிகள் நடந்துள்ளன. எழுதும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், நூல்களை அச்சடிக்கும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், எமது சிந்தனா முறை மாற்றமடைந்தது.

 • கேள்வி: எல்லோரும் எல்லோருடனும் தொடர்பாடுவதாக உங்களது நூலில் புகழ்ந்து எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தொடர்பாடல் மேலோட்டமானது அல்லவா? 


பதில்: உண்மை தான். இதெல்லாம் கண்ணுக்கு புலப்படாத கற்பனையான தொடர்பாடல் தான். ஆனால், முந்திய காலத்திலும் அப்படித் தான் இருந்தது. தந்தி, தொலைபேசி மூலமான தொடர்பாடல் எப்படி நடைபெற்றது? கண்ணுக்கு புலப்படாத தொடர்பாடல் எப்போதும் மேலோட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொலைபேசி மூலம், ஒருவரை ஒருவர் பார்க்காமலே, மறுமுனையில் இருப்பவருடன் ஆழமான உரையாடல் ஒன்றை நடத்தலாம். அதே நேரம், உங்களுக்கு எதிரில் இருப்பவருடனான உரையாடல் மேலோட்டமாக இருக்கலாம். நான் இளைஞனாக இருந்த காலத்தில், சினிமா நட்சத்திரமான இங்க்ரிட் பெர்க்மான் மீது காதல் வயப் பட்டிருந்தேன். அவளை நான் எனது வாழ்கையில் ஒரு நாளும் நேரில் காணவில்லை. ஆனால், நான் மானசீகமாக காதலித்தேன்.

 • கேள்வி: அறிவு எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளதாக நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால், அது ஒரு குழப்பகரமான சூழ்நிலையாக தோன்றவில்லையா? நாலாபுறமும் இருந்து, தகவல்கள் குண்டு மழையாகப் பொழிகின்றன. இணையமானது ஒரு பெரிய நீர்த் தேக்கமாக உள்ளது.


பதில்: தகவலும், அறிவும் ஒன்றல்ல. அணுப் பௌதிகவியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், விக்கிபீடியாவில் தேடினால் அது பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம். அதை வாசித்தாலும், எனக்கு ஒன்றுமே புரியாது. அதாவது, எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அறிவு கிடைக்கவில்லை. பெருங் குழப்பம்? ஐயா, நீங்கள் ஒரு தடவை நூலகத்திற்கு சென்று பாருங்கள். அங்கேயும் நீங்கள் குழம்பிப் போகலாம். புத்தகங்கள் அகர வரிசைப் படி அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. அது மட்டும் தான். அறிவும் ஒரு காலத்தில் ஒழுங்கு படுத்தப் படாமல் கிடந்தது. அரிஸ்டாட்டில், லைப்னிஸ், எராஸ்முஸ்… மிகப் பெரிய தத்துவ அறிஞர்கள் அறிவை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அது அனேகமாக சாத்தியப் படாத வேலை.

 • கேள்வி: ஆனால், ஊடகங்கள் இப்போது அந்த வேலையை செய்கின்றன. (தகவல்களை) தெரிவு செய்கின்றன, வகைப் படுத்துகின்றன, விளக்குகின்றன.


பதில்: ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை கொடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், அதில் தீமையும் உள்ளது. எனக்குப் பதிலாக இன்னொருவர், தகவல்களை வகைப் படுத்தி, எனக்குத் தருகிறார். இணையத்தில் நானாகவே தெரிவு செய்ய முடியும். எனக்கு வேண்டிய தகவல்களை வகைப் படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். நீங்களாகவே ஒரு தகவலை தேடி எடுத்து அறிந்து கொள்வதில் இருந்து தான், உண்மையான அறிவு வளர்கின்றது.

 • கேள்வி: ஆனால், குடிப்பதற்கு கடலளவு தண்ணீர் உள்ளது. நல்ல தகவல்களும், தவறான தகவல்களும் ஒன்று கலந்து உள்ளன. பொய்கள் பரப்பப் படுகின்றன. எல்லாம் தெரிந்த மனிதர்களும் தவறான விக்கிபீடியா கண்டுபிடிப்புகளால் நோய் வாய்ப் படலாம். 


பதில்: மனிதர்கள் தவறிழைகிறார்கள், மிகைப் படுத்தி சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவரையும் ஏமாற்றலாம். உங்களுக்கு ஒரு விடயத்தை எடுத்துக் கூறும் ஒருவர், எப்போதும் உண்மையை சொல்வதில்லை. பத்திரிகை மூலம் சொல்லப் படும் தகவல்களும் உண்மையாக இருப்பதில்லை. தகவல்களை கொடுப்பவர்கள் எப்போதும் அதற்குத் தகுதியானவர்களும் அல்ல. நடைமுறை வாழ்வில் உள்ள அத்தனை சிக்கல்களும், இணைய வெளியிலும் இருக்கவே செய்யும்.

(நன்றி: Vrij Nederland, 8 februari 2014)

Monday, February 10, 2014

தேசியவாத போதை தெளிந்தது! பொஸ்னியா எரிகின்றது!

பொஸ்னியாவில் வர்க்கப் போராட்டம்! பொஸ்னியா எரிகின்றது!!

இந்த செய்திகளை, உங்களுக்கு தெரிந்த எந்தவொரு ஊடகமும் வெளியிட்டிருக்காது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர், பொஸ்னியாவில் வாழும் மூவின மக்கள், தேசியவெறி கொண்டு, ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச ஊடகங்கள் எல்லாம், பொஸ்னியாவில் முகாமிட்டு, அங்கு நடந்த போரை, இனப் படுகொலைகளை, உலகம் முழுவதும் அறிவித்துக் கொண்டிருந்தன. "பொஸ்னிய போருக்கு காரணம் என்ன? தேசியவாதமா? இனவாதமா? மதவாதமா?" - மேலைத்தேய அறிவுஜீவிகள், இப்படி எல்லாம் மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

கடந்த மூன்று நாட்களாக, பொஸ்னியாவில் மக்கள் எழுச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொஸ்னியாவில் உள்ள சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் கலவரம் பரவியது. அங்குள்ள அரசாங்கக் கட்டிடங்கள் எரிக்கப் பட்டன. ஆனால், சர்வதேச ஊடகங்கள் எங்கே? போர் நடந்த காலத்தில், குண்டுவெடித்து ஒருவர் பலியானலே, அழுது வடித்த ஊடகவியலாளர்கள், எங்கே தொலைந்து போனார்கள்? இரவு பகலாக மண்டையை பிசைந்து, பொஸ்னிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் இப்போது கேட்டால், "பொஸ்னியாவா? அது எங்கே இருக்கிறது?" என்று கேட்பார்கள். 

இங்கே எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை ஒன்று தான். வர்க்கப் போராட்டம் என்றைக்குமே ஒளிபரப்பப்படுவதில்லை. இனக் குரோதங்களால் நடக்கும் போர்கள் மட்டுமே, உலகின் கவனத்தைக் கவருகின்றன. ஏனென்றால், "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்." மக்களை இனவாரியாக பிரித்து வைத்தால், அவர்களை ஆள்வது இலகு. இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் அரசியல் நிர்வாகத்தின் அடிப்படை.

"தேசியவாதத்தை தடுத்து நிறுத்து! பொஸ்னிய மக்களைப் பிரிக்காதே!" - எரிந்து கொண்டிருக்கும் அரசாங்க கட்டிடம் ஒன்றின் சுவரில் எழுதப் பட்ட வாசகம். 

தேசியவாதம், இனவாதம், மதவாதம் என்பன, உலகிலேயே மிகவும் மோசமான போதைவஸ்துகள். மக்கள் தமது பிரச்சனைகளை மறந்து மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக, ஆளும் வர்க்கத்தால் இலவசமாக விநியோகிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், எத்தனை வருடங்களுக்குத் தான், மக்களை தொடர்ந்தும் போதையில் ஆழ்த்தி வைத்திருக்க முடியும்? முந்திய காலங்களில், இந்தியாவில் சில இடங்களில், உணவின்றி பட்டினி கிடக்கும் ஏழைகள், கொஞ்சம் அபின் உட்கொண்டு விட்டு, சில மணிநேரத்திற்கு பசி தெரியாமல் சந்தோஷமாக  இருப்பார்கள். தேசியவாதமும் அவ்வாறானது தான். 

ஏழைகள் மனதில், "தேசிய இன உணர்வு" எனும் போதையை ஏற்றி விட்டால், அவர்கள் சில காலத்திற்கு, பசியும், பிணியும், தெரியாமல் வாழ்வார்கள். உலகம் முழுவதும், மேட்டுக்குடியினரும், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளும், "தீவிரமான தேசியவாதிகளாக" இருப்பது, ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அப்போது தான், அவர்களால் ஒரு போலியான வர்க்க ஒற்றுமையை கட்டிக் காப்பாற்ற முடியும்.


" ஏழைகள், செல்வந்தர்களை கொன்று விடாமல் தடுப்பதற்கு, மதம் உதவுகின்றது."   என்று சொன்னான் நெப்போலியன். 19 நூற்றாண்டில் மதம் பிரதானமாக இருந்தது. இன்று மதத்தின் இடத்தை, தேசியவாதம் பிடித்துள்ளது. முரண்நகையாக, நெப்போலியனின் போர்கள் தான், தேசியவாதம் என்ற சித்தாந்தத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியது. 

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், பொஸ்னியாவின் உள்நாட்டுப் போர், மேற்கத்திய நாடுகளின் தலையீட்டினால் முடிவுக்கு வந்தது. அப்போது, மேற்கத்திய நாடுகள், தமது தலைசிறந்த இராஜதந்திரிகளை அனுப்பி, "இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வொன்றைக்" கண்டன. பொஸ்னியாவில் உள்ள மூன்று தேசிய இனங்களுக்கும், தனித் தனியான சுயாட்சிப் பிரதேசங்கள், தனித் தனியான அரசாங்கங்கள் அமைத்துக் கொடுத்தன. அதாவது, ஒவ்வொரு இனத்திற்கும் தனியாக ஒரு நாடு பிரித்துக் கொடுத்து விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும். அது அவ்வளவு சுலபமில்லை. 

இனப் பிரச்சினைக்கு தீர்வாக, தனி நாடு பிரித்துக் கொடுத்த அறிவாளிகள், மெத்தப் படித்தவர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், ஒரு தேசிய அரசு அமைத்துக் கொடுத்து விட்டால் போதுமா? அங்கு வாழும் மக்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? யார் உணவு கொடுப்பார்கள்? அவர்களின் வறுமையை போக்குவதற்கு என்ன வழி?" அதைப் பற்றியெல்லாம், அன்று யாருமே கவலைப் படவில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள், அன்று விட்ட தவறின்  விளைவை இன்று அனுபவிக்கிறார்கள். 

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட பதினைந்து வருடங்களில், பொஸ்னிய பொருளாதாரம் ஆஹா, ஓஹோ என்று வளர்ந்து சாதனை படைக்கவில்லை. மாறாக மூவினங்களையும் சேர்ந்த மேட்டுக்குடியினர் மட்டுமே நன்மை அடைந்தார்கள். ஒரு காலத்தில், சாதாரண மக்களுக்கு தேசிய வெறியூட்டி போருக்கு தள்ளியவர்கள், இன்று தமக்கும், தமது குடும்பத்திற்கும் மட்டும் செல்வம் சேர்ப்பதில் குறியாக இருக்கின்றனர். அவர்களால் யுத்த களத்தில் பலி கொடுக்கப் பட்ட மக்கள், இன்று தொழில் இன்றி, வருமானம் இன்றி, வீடின்றி பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். 

பொஸ்னியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 40% க்கும் அதிகம். இது அரசாங்க கணக்கு. பட்டப் படிப்பு படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், ரொக்கமாக பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டிய அவல நிலை. ஊழலுக்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வறுமையை பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை. எழுபது சதவீதமானோர் வறுமைக் கோட்டை தாண்டுவார்களா என்பதே கேள்விக்குறி. 
சரயேவோ நகரில், ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் ஒரு அரசாங்க கட்டிடத்தை எரிக்கின்றனர்.

இந்த நிலைமையில், மக்கள் மனதில் தணலாய்க் கிடந்த தார்மீக சீற்றம், ஒரு நாள் எரிமலையாக வெடித்தது. துஸ்லா நகரில், மூன்று அரச தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்றதன் காரணமாக, அங்கே கலவரம் வெடித்தது. ஊழல் மலிந்த அரசாங்கம், அந்த தொழிற்சாலைகளை, தனியாருக்கு சிறு தொகைப் பணத்திற்கு விற்றிருந்தது. புதிதாக பொறுப்பேற்ற தனியார் கம்பனி ஒன்றின் நிர்வாகம், தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி கொடுக்காமல் வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களை ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்திருந்தது. 

வேலையிழந்த  தொழிலாளர்களுடன், வேலையில்லாதவர்களும், மாணவர்களும் கைகோர்த்துக் கொண்டனர். வீதியில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிசார் வன்முறை பிரயோகித்தமையினால், மக்களின் பொறுமை எல்லை கடந்தது. மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு சென்று, துஸ்லா நகராட்சி சபையின் கட்டிடத்திற்கு தீ வைத்தார்கள். அதைத் தொடர்ந்து பிற அரசாங்கக் கட்டிடங்களும் தாக்கி எரிக்கப் பட்டன. (அதைக் காட்டும் வீடியோ பதிவு கீழே உள்ளது:)துஸ்லா நகரில் நடந்த கலவரத்தின் எதிரொலி, பிற பொஸ்னிய நகரங்களிலும் கேட்டது. ஒரே நாளில், ஒரு டசினுக்கும் குறையாத நகரங்களில் மக்கள் எழுச்சி உருவானது. தேசியவாத மேட்டுக்குடியினரால், "இணையப் போராளிகள்" என்று பரிகசிக்கப் படும், சோஷலிச இளைஞர்கள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டினார்கள். அரச எதிர்ப்புக் கலவரம், பொஸ்னியா முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. 

பொஸ்னிய மக்கள் எழுச்சியில், சில குறிப்பிடத் தக்க முற்போக்கான அம்சங்கள் உள்ளன. அது ஒரு வர்க்கப் போராட்டம். இன்று அங்கு போராடும் மக்களின் மனதில், வர்க்க உணர்வு மேலோங்கிக் காணப்படுகின்றது. இதே மக்கள் தான், பதினைந்து வருடங்களுக்கு முன்னர், தேசியவெறியுடன் ஒருவரை கொன்று, இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காலத்தில், ஜென்மப் பகைவர்களாக போரிட்ட இனங்கள், இன்று சகோதரத்துவ உணர்வுடன் ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கின்றனர். 

"மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சக் கூடாது. அரசாங்கம் தான் மக்களுக்கு அஞ்ச வேண்டும்." அது தான் உண்மையான ஜனநாயகம். ஆட்சியாளர்கள் தங்களது பணப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காக, தங்கள் மனதில் தேசியவாத வெறியை ஊட்டி வந்தார்கள் என்ற உண்மையை, இன்று பொஸ்னிய மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். எரிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களின், சுவர்களில் எழுதப் பட்டுள்ள கோஷங்களில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். 
"தேசியவாதம் ஒழிக!" பொஸ்னியாவில் எரிக்கப் பட்ட அரசாங்க கட்டிடம் ஒன்றின் சுவரில் எழுதப் பட்ட வாசகம். 


அரசாங்கக் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள், அங்கே தமது மனதில் உள்ளதை சுவரில் கிறுக்கி விட்டு சென்றுள்ளனர்.
"  தேசியவாதம் ஒழிக!"
"  பொஸ்னிய மக்களை பிரிக்காதே! தேசியவாதத்தை தடுத்து நிறுத்து!"
இது போன்ற தேசியவாத எதிர்ப்பு வாசகங்கள், சாதாரண மக்களின் அரசியல் விழிப்புணர்வை எடுத்துக் காட்டுகின்றன. 

பொஸ்னியாவில் உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், "பொஸ்னியாவில் நடந்த அரசியல் படுகொலை ஒன்று, முதலாம் உலகப் போருக்கு மூல காரணியாக இருந்தது."  என்று மேற்கத்திய ஊடகங்கள் எமக்கு வரலாற்றுப் பாடம் நடத்தின. சில நேரம், இன்று பொஸ்னியாவில் ஏற்பட்டுள்ள வர்க்கப் போராட்டம், பிற ஐரோப்பிய நாடுகளிலும் வர்க்கப் போரை உண்டாக்கி விடும் என்று அஞ்சுகிறார்கள் போலத் தெரிகின்றது. அதனால் தான், இன்று எல்லா சர்வதேச ஊடகங்களும், பொஸ்னியாவில் நடக்கும் மக்கள் எழுச்சியை, ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. 

(பொஸ்னிய மக்கள் எழுச்சியினை காட்டும் படங்களையும், வீடியோக்களையும் இங்கே இணைத்துள்ளேன்.)

பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவுகள்: