Wednesday, March 17, 2010

கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!

அயர்லாந்து, டப்ளின் நகரை சேர்ந்த, பாதிரியார் ஜேம்ஸ் மக்னமி யை சுற்றி எப்போதும் சிறுவர்கள் கூட்டம் காணப்படும். ஆனால் "திருத்தந்தை," தனது அந்தரங்க நீச்சல் தடாகத்தில் அம்மணமான சிறுவர்களுடன் நிர்வாணமாக குளிப்பதில் நாட்டம் கொண்டவர். நிர்வாணப் பாதரின் சில்மிஷங்களுக்கு அஞ்சி பல சிறுவர்கள் அவர் பக்கம் போவதில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு ஜேம்ஸ் பாதரின் லீலைகள் பற்றி தெரியும். ஆனால் தேவாலய நிர்வாகம் எந்த முறைப்பாட்டையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஆதரவற்ற மன நலம் குன்றிய குழந்தைகளின் காப்பகத்தை நடத்திய "பாதர்" எட்மொன்தாஸ் கைகளில் பல இளம் மொட்டுகள் கருகியுள்ளன. 8- 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளை விதம் விதமாக படம் பிடிப்பது அவரது பொழுதுபோக்கு. அந்தப் புகைப்படச் சுருள்களை இங்கிலாந்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றிற்கு அனுப்பி கழுவி எடுப்பார். புகைப்படங்களை நகல் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்த ஸ்டூடியோ ஒரு முறை விழிப்படைந்தது. சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட தலைமை பிஷப்புக்கு அறிவித்தது. ஆனாலும் என்ன? எந்த வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க தேவாலயம் தயாராக இல்லை. முப்பது ஆண்டுகளாக, பாதர் எட்மொண்டுசின் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. கத்தோலிக்க திருச்சபை அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இறுதியில் வணக்கத்திற்கு உரிய பாதிரியார் வேஷத்தில் நடமாடும் பாவிகள், விசாரணைக் குழுவால் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டனர். விசாரணைக்குழுவின் முன்பு சாட்சியமளித்த பாதர் எட்மாண்டுஸ் "தான் ஆண் சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததால், பெண்களின் உடல் உறுப்புகளை பற்றிய ஆர்வ மேலீட்டினால் அப்படி நடந்து கொண்டதாக..." காரணம் கூறினார். அயர்லாந்தை சேர்ந்த கத்தோலிக்க ஜேம்ஸ், எட்மொன்தாஸ் ஆகியோர் அந்த வட்டாரத்திலேயே மிகப் பிரபலமானவர்கள். தேவ ஊழியம் செய்த பகுதி மக்களால் மரியாதைக்குரியவர்களாக கருதப்பட்டவர்கள். அண்மையில் வெளியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை அறிக்கைகள் அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

அரசாங்கத்தின் தலையீடு, திருச்சபையின் குறுக்கீடு, "காணாமல்போன" ஆவணங்கள் ஆகிய தடைகளைக் கடந்து அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கென ஆயிரக்கணக்கான சாட்சியங்களை விசாரணைக் குழு பதிவு செய்திருந்தது. அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்த பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்தனர். அறிக்கையில் காணப்படும் உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன.
அயர்லாந்து அரசும், கத்தோலிக்க அதிகார மையமும், ஏன் வத்திக்கான் கூட இவற்றை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தன. கத்தோலிக்க மத நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்பதற்காக, வெண்ணிற ஆடைக்குள் ஒளிந்திருந்த காமப் பிசாசுகளை பாதுகாத்து வந்துள்ளன. பல தசாப்தங்களாக மூடி மறைக்கப்பட்ட வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் வாய்மூடி மௌனிகளாக சகித்துக் கொண்டார்கள். உண்மை அறியும் அறிக்கை கூட 1950 தொடக்கம் 2004 வரையிலான முறைப்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் விதிவிலக்குகள் அல்ல. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஆயிரக்கணக்கான துஷ்பிரயோகங்களில் ஒன்று. கன்னியாஸ்திரிகள் நடத்திய பாடசாலைகளில் கூட சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லை. மாணவர்களை அடித்து துன்புறுத்தியதால் பல சிறுவர்கள் பாடசாலை செல்லவே அஞ்சி நடுங்கினார்கள். இதிலே கொடுமை என்னவென்றால், துஷ்பிரயோகத்திற்கும், துன்புறுத்தலுக்கும் ஆளான சிறுவர்கள் ஒன்றில் அனாதைகளாக இருப்பர். அல்லது ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்திருப்பர்.
அயர்லாந்தில் கத்தோலிக்க மத நிறுவனம் ஒரு மூடுமந்திரம். உள்ளே என்ன நடக்கின்றது என்பது வெளி உலகத்திற்கு தெரியாது. தெரிந்தவர்கள் வெளியே சொல்வதில்லை. சொன்னாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. ஏனென்றால் அதிகாரம் எளியவர் கையில் இல்லை. அண்மைக்காலம் வரையில் அயர்லாந்து மக்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். தமது பிள்ளைகளை படிப்பிக்க வசதியற்றவர்கள். அரசாங்கமும் எதுவும் செய்வதில்லை. சமூகத்தில் தோன்றிய வெற்றிடத்தை கத்தோலிக்க மதம் நிரப்பியது. அயர்லாந்தில் ஆனாதை ஆச்சிரமங்கள், இலவச பாடசாலைகள் எல்லாம் கத்தோலிக்க மத நிறுவனங்களாலேயே நடத்தப்பட்டன. ஓரளவு வசதியான பெற்றோரும், கத்தோலிக்க பாடசாலையில் தமது பிள்ளை படிப்பதை பெருமையாக கருதினார்கள்
ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் நிலைமை மாறியது. அயர்லாந்துக் குடியரசின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டிப் போட்டது. முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்கள் அயர்லாந்தின் பொருளாதாரத்தை புலிப் பாய்ச்சலில் முன்னேற வைத்தது. ஐரோப்பாவின் ஏழை நாடுகளில் ஒன்றான அயர்லாந்து செல்வந்த நாடாகியது. இதனால் மக்களின் வாழ்க்கை வசதிகளும் உயர்ந்தன.
இரண்டாவதாக தேவாலயத்திற்கு செல்வோர் தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி. இதற்கும் பொருளாதார முன்னேற்றமே முக்கிய காரணம். வசதி,வாய்ப்பு கைவரப் பெற்ற மக்களுக்கு கடவுள் தேவைப்படவில்லை. மூன்றாவதாக சட்டத்தின் ஆட்சி. ஐரோப்பிய ஒன்றியம் தனது சட்டங்களை கறாராக நடைமுறைப் படுத்த வேண்டி நின்றது. சமூக விழிப்புணர்வை தூண்டும் தன்னார்வ நிறுவனங்களுக்கு தடை போட முடியவில்லை. ஊடகங்களின் கழுகுக் கண்களுக்குதேவாலயமும் தப்பவில்லை. இவை எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கபலத்துடன் நடந்தன.
அயர்லாந்தில் விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் இருந்து, கத்தோலிக்க மதத்தின் அரசியல் செல்வாக்கு அதிகம். பிரிட்டனை சேர்ந்த ஆங்கிலேய - புரட்டஸ்தாந்து ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக கத்தோலிக்க மத நிறுவனங்களும் போராடின. அயர்லாந்து குடியரசு உருவான பிற்பாடு, கத்தோலிக்க மதம் அரச அங்கீகாரம் பெற்றது. இதனால் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதன் அதிகாரம் கோலோச்சுகின்றது. அரசாங்கம், அரசு அதிகாரிகள், மதகுருக்கள் இவர்களுக்கிடையிலான நல்லிணக்கம் முறைகேடுகளில் ஈடுபட்ட பாதிரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்தது.
ஆளும் வர்க்கத்திற்கு மத நிறுவனத்தின் ஆதரவு தேவைப்பட்டது. மத நிறுவனத்தை வழி நடத்திய பிஷப்புகளுக்கோ கத்தோலிக்க திருச்சபையின் பெயர் கெடக் கூடாது என்பதைப் பற்றி மட்டுமே அக்கறை. அவர்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டவில்லை. அப்பாவிகள் தண்டிக்கபட்டனர். குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டனர். எல்லாம் கர்த்தரின் பெயரால் நடந்தது. வத்திக்கானில் இருக்கும் பாபரசருக்கும் முறைகேடுகள் பற்றி நன்கு தெரியும். ஆனால் அவருக்கும் கத்தோலிக்க மதத்தை பற்றி யாரும் குறை கூறக் கூடாது என்பது மட்டுமே கவலை.
அயர்லாந்தில் வெண்ணிற ஆடைக்குள் மறைந்திருந்த பாதிரிகள் என்ற குற்றவாளிகளை இனங்காட்டிய போது மண்டபத்தில் குழுமி இருந்த மக்கள் சீற்றமுற்றனர். இவ்வளவும் நடந்தும் வாளாவிருந்த கத்தோலிக்க மத தலைமைப்பீடத்தின் செருக்கையும், அரசின் கையாலாகாத் தனத்தையும் கண்டனம் செய்தனர். தற்போது இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்காத படி அமுக்குவதற்கே கத்தோலிக்க நிறுவனம் முயற்சிக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கி அவர்களின் வாயை அடைக்க முயற்சிக்கின்றது.
மத நிறுவனங்களின் பாலியல் துஷ்பிரயோகம் அயர்லாந்திற்கே பிரத்தியேகமான ஒன்றல்ல. அமெரிக்காவிலும், வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்தவை. மத்திய கால ஐரோப்பா கத்தோலிக்க மதத்தின் ஆட்சியின் கீழ் இருந்த காலம் ஒன்றுண்டு. அப்போது ஒவ்வொரு நகரிலும் உள்ள விபச்சார விடுதிகளை கத்தோலிக்க தேவாலயமே நடத்திக் கொண்டிருந்தது. விபச்சார வியாபாரத்தால் அதிக வருமானம் வருகிறதென்றால், அதையும் விட்டு வைப்பார்களா? இவை எல்லாம் ஐரோப்பிய சரித்திரத்தில் காணப்படும் சான்றுகள்.
********************

Tuesday, March 16, 2010

சுவிட்சர்லாந்து ஈழத்தமிழரின் காலனியாகிறதா?


(1994 , தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் சுவிட்சர்லாந்தின் செயலை விமர்சித்து "தமிழ் ஏடு" பத்திரிகையில் எழுதிய கட்டுரை.)

"ஒரு சிறிய நாடான சுவிட்சர்லாந்து இலங்கை அகதிகளின் மிகப்பெரிய குடியேற்ற நாடாக இருக்க முடியாது." சுவிஸ் அகதிகளுக்கான அமைச்சுக் காரியாலய முன்னாள் நிர்வாகி "தமிழ் ஏடு" வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்த கருத்துகளே இவை. இதனை இன்னும் அழுத்தமாக, இன்று சுவிஸ் அரசு தமிழர்களுக்கு புரிய வைத்து வருகின்றது. தற்பொழுது சுவிட்சர்லாந்தில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை 25000 க்கும் மேல் (1994 கணக்கெடுப்பு) என BFF (அகதிகளுக்கான சமஷ்டி அலுவலகம்) தெரிவிக்கின்றது. சுவிஸ் அகதிகள் தொகையில் இரண்டாவது பெரும்பான்மையினராக இலங்கைத் தமிழர்கள் திகழ்கின்றனர்.

எது எப்படியிருப்பினும், இலங்கை அகதிகளை திருப்பியனுப்பும் திட்டத்தை பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் கண்டித்துள்ளன. பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை, என நிரூபிக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு, அப்பாவி அகதிகளை அனுப்பி வைப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பது தெளிவு. இவற்றினால் சுவிட்சர்லாந்தை " ஒரு மனிதாபிமானம் மறந்த நாடாகவே" பலர் பார்க்கும் நிலையை தோற்றுவிக்கின்றது. இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தில், ஜெர்மனியில் இருந்து நாசிகளின் இன அழிப்புக்கு அஞ்சி, தப்பியோடி வந்து அடைக்கலம் கோரிய யூத அகதிகளை வெளியேற்றிய கறை படிந்த வரலாறு ஒன்றும் சுவிட்சர்லாந்திற்கு உண்டு. அதை இன்று பலர் நினைவுபடுத்தல் தவிர்க்கவியலாதது.

செல்வந்த மேற்கைரோப்பிய நாடுகள் தமது மனிதாபிமானத்தை பறை சாற்றிக் கொள்வதற்காக, போரால் பாதிக்கப்பட்ட அகதிகளை அழைத்து, அரவணைத்து, அடைக்கலம் கொடுத்தன. பின்னர் தம் தேசம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் போது, அதே அகதிகளை குற்றஞ்சாட்டி வெளியேற்றுவதும் இன்றைய ஐரோப்பிய அரசியல்!

சுவிட்சர்லாந்தும் இத்தகைய அரசியலுக்கு விதிவிலக்கானதல்ல. அத்தோடு பழமைவாதிகளின் வற்புறுத்தலும் சேர்ந்து கொள்கின்றது. ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்த வேலையற்றோர் எண்ணிக்கையை கொண்ட சுவிட்சர்லாந்து, அந் நிலைமைக்கும் (வேலையில்லாப் பிரச்சினை) அகதிகளை காரணமாகக் காட்டுவது முற்றுமுழுதாக ஏற்கக் கூடியதல்ல. மேலும் நடைபெற்ற ஐரோப்பிய சமூக இணைப்பிற்கான வாக்கெடுப்பில், பெரும்பான்மை சுவிஸ் குடி மக்களின் எதிர்ப்பும், அதற்கு காரணமாக வெளிநாட்டவர் பெருக்கத்தை சுட்டிக்காடியுள்ளமையும் அகதிகள் குறைப்புக்கு அஸ்திவாரமாக அமைந்து விட்டது. இனி அடுத்து வரும் காலங்களில் மீண்டும் ஒரு இணைப்பிற்கான வாக்கெடுப்பு நடைபெறும். அதற்கான தயார் படுத்தலாகவே அகதிகள் வெளியேற்றத்தை கருத வேண்டியுள்ளது.

காரண காரியங்கள் எவையாக இருப்பினும், சுவிஸ் அரசின் செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பேரினவாத அரசுக்கு சாதகமாகவே அமைந்து விடுகின்றன. இதேவேளை புலம்பெயர்ந்த நாடுகளில் தொடரும் தமிழரின் குற்றச் செயல்களும் நாடுகடத்தலை துரிதப்படுத்துவதாகவே உள்ளன. ஒரு சிலரின் தன்னலம் சார்ந்த செயல்களால் முழுத் தமிழினமும் பாதிக்கப்படுகின்றது.

(தமிழ் ஏடு, ஜூலை-ஆகஸ்ட் 1994 )

[குறிப்பு: "ஏடிட்டோர் பக்கம்" என்ற தலைப்பின் கீழ் தொடர்ச்சியாக வந்த எனது பத்தி எழுத்துகளின் ஒரு பகுதி இது.]


(பிற்குறிப்பு: சம்பந்தப்பட்ட சுவிஸ் அமைச்சு அதிகாரியின் கருத்து, தீவிர வலதுசாரிக் கட்சிப் பிரச்சாரத்திலும் எதிரொலிக்கின்றது. சுவிட்சர்லாந்து தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் குடியேற்ற நாடாகி வருவதாக, நீண்ட காலமாக தேர்தலில் பிரச்சாரம் செய்த SVP கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. வெளிநாட்டவர் குறித்த அச்சவுணர்வு சாதாரண பிரஜை முதல், அரச மட்டம் வரை காணப்படுகின்றது.)

Monday, March 08, 2010

இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்

[இலங்கையில் இரண்டாவது ஈழப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. சுவிஸ் "தமிழ் ஏடு" மாதப் பத்திரிகையில் "எடிட்டோர் பக்கம்" பகுதியில் பிரசுரமானது.]

இரண்டாவது தமிழீழ யுத்தம் என அழைக்கப்படும், இன்றைய "புலிகள் - ஸ்ரீ லங்கா இராணுவ யுத்தம்" 3 வது ஆண்டை நிறைவு செய்து, 4 வது ஆண்டுக்குள் பிரவேசிக்கின்றது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தில், இம் மூன்றாண்டு காலம் என்பது மிகச் சொற்பமே, எனச் சுலபமாக கூறிடலாம். பெருமளவு இழப்புகளையும், சிறிதளவு வெற்றிகளையும் சந்தித்து விட்ட இவ்விரு பக்க படைகளும், இதுவரை சாதித்தது என்று எதையும் கூறிக் கொள்ள முடியாத நிலை. சமாதான மூச்சிற்கு அவகாசம் எடுக்காது சமரைத் தொடர்வது பற்றி நாம் புரிதல் அவசியம். தம் இருத்தலுக்காகவோ, அன்றில் கௌரவ தடைக்கோ தயங்கி நிற்றல் பலர் அறியாதவொன்றல்ல.

இருப்பினும் மரணத்திற்குள்ளும், பட்டிநிக்குள்ளும் தமது வாழ்வை இழந்து விட்ட மக்களையிட்டு உணராதிருத்தலும் முடியாது. இன்றைய நிலையில், இழப்பதற்கு உயிரை விட ஏதுமற்ற நிலையில், மக்கள் வாழும் ஒரு தேசத்தில் சமதர்மம் பிறக்குமா? அல்லது தமிழீழம் பிறக்குமா? என்பதை ஆராயும் அளவிற்கு யாரும் வரவில்லை. 1990 ல் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இருந்த நட்புறவு அறுந்து விட்ட தருணம். இந்த யுத்தத்தின் நன்மை,தீமைகளை பகுத்தாயும் முன்பே மக்கள் போர்ச் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி விட்டு, முழுத் தமிழீழ பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க புலிகள் எடுத்த முயற்சி. குறுகிய காலத்திற்குள் கிழக்கை மீட்டெடுத்த ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை, போராளிகளை காடுறையும் கெரில்லாச் சமருக்கு தள்ளியது. சில மாதங்களுக்கு போர் ஓய்ந்த வேளை, வடக்கில் புலிகளின் ஆட்சி, கிழக்கில் இராணுவ ஆட்சி எனும் வரையறையை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை விட, வவுனியா போன்ற எல்லைப்புறங்களை தக்க வைத்தலையே இராணுவம் விரும்பியது. ஒரு வகையில் இப்படி இருப்பதுவே தமக்கும் சிறந்தது, என இரு பக்கமும் கருதுவது போல தெரிந்தது.

யாழ் குடாநாட்டை சிங்கள முழுமையாக பார்த்தே ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. இடையில் இடம்பெற்ற வடமராட்சி தாக்குதலும் இந்திய தலையீட்டால் இடையில் நின்றது. கிழக்கில் மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேல் சிங்கள,முஸ்லிம் இனங்கள் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அங்கு தனது காலைப் பலப்படுத்தவே இலங்கையரசு விரும்பியது. அது போல நூறு வீதம் தூய தமிழினத்தை (முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்) கொண்ட வடபகுதியில் தமது நிரந்தர தளத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் புலிகள் இறங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால செயற்பாடுகள், யாழ் குடாநாட்டுக்குள்ளே கருக்கொண்டதும், உருக் கொண்டதும், இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இதுவே "வட இலங்கைப் போராளிகள்" என உலக நாடுகள் அழைப்பதற்கு காரணமானது.

அப்பாவி தமிழ் மக்களின் வீடுகள் மீது, விமானக் குண்டுகளைப் பொழிவதால், இடம்பெயரும் மக்கள். போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான நெருக்கம் விரிவடையும் என்பது இலங்கை இராணுவத்தின் கணக்கு. பெருமளவு இழப்புகளை சந்தித்த போதிலும், மக்கள் அரசின் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். புலிகள் இவ் வெறுப்பை தமக்கான ஆதரவாக மாற்றி வருதையும் கண்கூடாக காணக் கூடியதாகவிருந்தது.

முன்பு போராட்டப் பாதையில் இருந்து வழி மாற்றி விரட்டப்பட்ட மாற்று இயக்கங்கள். தமது இருத்தலுக்காய் முன்பு இந்திய இராணுவம், தற்போது இலங்கை இராணுவம் என்று கொழு கொம்பாய் பற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சிக்காத இவர்களது போக்கு. பழிவாங்கலை முதன்மைப் படுத்தல். அரசின் எடுபிடிகளாக செயற்படுதல். இவை யாவும் இவர்களையும் இராணுவ தாகம் கொண்ட குழுக்களாகவே இனங்காட்டுகின்றன. பலம் வாய்ந்த மாற்று அரசியல் இயக்கமாக தம்மை வளர்த்துக் கொள்ளாததும் இக் குழுக்களின் பலவீனமாகும்.

இப் போராட்ட வரலாற்றில் பல தலைமைகள் கொல்லப்பட்டதும், இம் மூன்றாண்டு காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரச தரப்பில் பாதுகாப்பு அமைச்சர், வட பகுதி இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படைத் தளபதி, ஜனாதிபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் மத்திய குழு உறுப்பினர்களான செங்கதிர், சர்வதேச தொடர்பாளர் கிட்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை. அதை தொடர்ந்த விசாரணைகள் புலிகளை குற்றவாளிகளாக சுட்டி நின்றன. அது சர்வதேசத்தின் பார்வையை சிறு தீவின் பக்கம் திரும்பச் செய்தது.

போரின் அகோரத்திற்கு அப்பாவி மக்கள் முகம் கொடுப்பது ஒரு பக்கம். இவர்களும் எதிரிகளா? எனக் கேட்கும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பாராது, ஈவிரக்கமின்றி கொள்வதும் அவ்வப்போது நடந்துள்ளன. இவற்றை நியாயப்படுத்த யார் எத்தகைய காரணங்களைக் கூறிய போதிலும், இவை இனங்களுக்குள்ளே ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

இரு பக்கமும் இராணுவரீதியிலான பலப்பரீட்சையிலேயே நம்பிக்கையோடு தொடரும் வேளை, எதிர்காலம் குறித்த அச்சவுணர்வு பலரிடம் குடிகொண்டிருத்தல் இயல்பு. புலிகளும், இலங்கையரசும் சமரசத்திற்கு இடம் கொடாத நிலையில், இந்தியாவின் தலையீடு அடிக்கடி வலியுறுத்தப் பட்டது. ஆனால் ஏற்கனவே சூடு கண்ட இந்தியா, தனக்குள்ளே உள்ள முடிச்சுகள் இறுகிய நிலையில் மீண்டும் இலங்கைக் களத்தில் குதிக்கும் நிலையிலிருக்கவில்லை. அகதிகளை வைத்திருப்பதைக் கூட ஒரு சுமையாகவே, இந்திய துணைக்கண்டம் கருதுகின்றது. சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவை தாண்டி வர முடியாத நிலை. இந்நிலையில், முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்ட தீவாக காட்சி தரும் இலங்கை. எந்தவொரு தீர்வும் இராணுவ சக்திகளுக்குட்பட்டதாகவோ, அல்லது அவர்களின் பங்கேற்புடனோ அமையும் என அரசியல் அவதானிகள் கருதினார்கள்.

எது எப்படியிருப்பினும், சமாதானம் என்பது இன்னும் நீண்ட காலத்தின் பின்பே சாத்தியப் படக் கூடியது. நாட்டின் வட-கிழக்கு பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அளவு மோசமடைந்த நிலை. கிழக்கில் ஸ்ரீலங்கா படையினர் எதிரிகளை அளிப்பதை விட வயல்களை அழிப்பதே சிறந்தது எனக் கருதி செயற்பட்டனர். இயற்கையாகவே வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டை யுத்தம் பாலைவனமாக்கியது.

Friday, March 05, 2010

பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும், இந்தோனேசியாவுக்கு சொந்தமான "Batam " தீவு விபச்சார விடுதிகளுக்கு பிரபலமானது. இங்கே வரும் பணக்கார காமுகர்களுக்கு உடல் இச்சைக்கு தீனியாக்கப் படும் பருவமடையாத இளம் நங்கைகளைப் பற்றிய ஆவணப்படம்.

Thursday, March 04, 2010

"கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடு" - Political Talk

("வாழ்க்கைப்பயணம்" வலைப்பூ ஆசிரியருடனான அரசியல் கலந்துரையாடல். விக்னேஷ்வரனும் நண்பர்களும் தொடுத்த வினாக் கனிகளும், அவற்றிற்கான எனது பதில்களும்.)

1) சமீபத்திய உலக அரசியல் மக்கள் மத்தியில் மிகப் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தி இருக்கிறதென்பதை மறுக்க இயலாது. புரிந்தும் புரியாமலும் கூட மக்கள் அதில் உழன்று போய் இருப்பதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

எத்தகைய மக்கள் என்பது இங்கே பார்க்கப்பட வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றல்ல. பல வகையினர். அவர்களது அரசியல் சார்புத்தன்மையும் வேறுபடுகின்றது. உலக அரசியலில் சாதகமான பக்கத்திலும்,
பாதகமான பக்கத்தில் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். பாதிக்கப்படும் தரப்பை சேர்ந்த மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இயற்கை. அதற்கு அவர்களது எதிர்பார்ப்புகள் கைகூடி வராமையும் ஒரு காரணம். குறிப்பாக பனிப்போரின் முடிவில் இருந்து புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. எதிர்க்க ஆளில்லாத ஒரேயொரு வல்லரசாக அமெரிக்கா அறிவிக்கப்பட்ட போது, பலர் அதை தேவதூதனின் நற்செய்தியாக புரிந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய மக்களின் கருத்தியலை தீர்மானிப்பது, அந்நாட்டின் படித்த மத்தியதர வர்க்கம். அவர்களது வர்க்க அடிப்படையில் இருந்து கணித்து, அமெரிக்கா பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என தீர்மானித்தார்கள். ஆனால் அமெரிக்கா தனது சுயநலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றது என காலந்தாழ்த்தி புரிந்து கொண்டார்கள். மக்கள் அதில் உழல்வது மக்களின் தவறல்ல. அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆளும் வர்க்கம் சர்வதேச மூலதனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

2) குறிப்பிட்ட மதத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல், குறிப்பிட்ட இனத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல் என இவ்விரண்டிற்கும் உள்ள பாகுபாடுகளை பற்றிய உங்கள் பார்வை?

இரண்டுமே மக்களின் குழுவாத உணர்வுகளை தட்டி எழுப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. பாகுபாடுகள் எனப் பார்க்கும் போது, மதம் என்பது உலகளாவிய நிறுவனமயப்பட்ட சித்தாந்தம். இனம் என்பது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய பண்டைய இனக் குழும சமுதாயத்தின் தொடர்ச்சி. இந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் முன்னெடுக்கும் அரசியலும் வேறுபடுகின்றது. நவீன உலகில், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி காரணமாக, "மத சர்வதேசியம்", "இன சர்வதேசியம்" என்று பரணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்கள், அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதைப் பொறுத்து, இத்தகைய அரசியல் இயக்கங்கள் எழுச்சியுறுகின்றன. இன அரசியல் பேசுவோருக்கு தமது இன அடையாளம் முக்கியம். மதம் இரண்டாம் பட்சம் தான். அதே போல, மத அரசியலில் மத அடையாளம் அனைத்தையும் மேவிநிற்கிறது. ஏற்கனவே வழிபாட்டுத் ஸ்தலங்கள் மக்களை நிறுவனமயப்படுத்தி வைத்துள்ளமை, மத அரசியலுக்கு சாதகமானது. இன அரசியல் அதற்கு மாறாக வழமையான அரசியல் செயல்பாடுகள், ஊடகங்கள் மூலம் மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது.

3) ஜனநாயகத்தைப் போற்றி புகழ்ந்து மார்தட்டிக் கொள்ளும் நிலைபாடுகள் பற்றி?

ஜனநாயகம் என்பதன் அர்த்தம் மக்கள் ஆட்சி என்பதாகும். அதாவது மக்கள் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக பங்கெடுப்பது. வாக்குப் போடுவது ஏன் என்று தெரியாத வாக்காளர் இருப்பதற்குப் பெயர் ஜனநாயகமல்ல. மன்னர் காலத்தில், மக்களிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. கடவுளுக்கு கட்டுப்படுவதைப் போல, மக்கள் மன்னனின அதிகாரத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். பிற்காலத்தில் மன்னனை அகற்றி விட்டு, மக்களின் பெயரால் குடியரசு முறை வந்தது. இருப்பினும் ஜனநாயகம் என்பது தேர்தலில் கட்சிக்கு வாக்குப் போடும் முறை என்பதோடு மட்டுப்படுத்தப்பட்டது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது ஒரு பிரதிநிதி (அல்லது கட்சி) மக்களின் குறையை அதிகார தளத்தில் பேசித் தீர்க்க முனைவார். அது சரி, ஆசிய நாடுகளில் ஏன் ஜனநாயகம் சரியாக செயல்படுவதில்லை? அதற்கு காரணம், ஆசிய நாடுகளின் மக்கள் இன்னமும் சாதி, இன, மத, தனிநபர் வழிபாடு போன்ற குழுவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லை. அரசியல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே பார்க்கின்றனர். இதனால் ஆதாயம் பெற்றவர்கள் ஜனநாயகத்தை போற்றிப் புகழத் தானே செய்வார்கள்? இங்கே எந்த அரசியல் அலகு யாருக்கு நன்மை பயக்கின்றது எனப் பார்ப்பது அவசியம். ஈராக்கில் சதாம் காலத்தில் ஆதாயம் பெற்றவர்கள், இப்போதும் சதாமின் சர்வாதிகாரத்தை போற்றுகின்றனர்.

4) பழுதடைந்த ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் எடுத்துரைக்க விரும்புவது?

இதற்குப் பதில் முந்திய கேள்வியிலேயே வந்து விட்டது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவது ஜனநாயகமல்ல. நவீனமயப்பட்ட இனக்குழுவாதம். இந்த நாடுகள் சமுதாய மாற்றத்தின் ஊடாக தாமே ஜனநாயகத்தை கண்டறிந்திருக்க வேண்டும். மாறாக அவசர அவசரமாக காலானியாதிக்கவாதிகளால் திணிக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று மேற்கத்திய பாணி நிர்வாகத்தை ஏற்றுமதி செய்வதையே முக்கியமாக கருதினார்கள். அவர்கள் இப்போதும் "ஜனநாயக வளர்ச்சியடையாத " நாடுகள் ஆட்சி நடத்துவது எப்படி என்று இப்போதும் ஆலோசகர்களை அனுப்பி கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாவிட்டால் நாமே அவர்களது பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறோம். இதை நான் பழுதடைந்த ஜனநாயகம் என அழைக்க விரும்பவில்லை. ஜனநாயகம் அதன் ஆரம்பக்கட்டத்தில் சிறுபிள்ளைக் கோளாறுகளுடன் உள்ளது.

5) மார்க்ஸிசம் மற்றும் சோஷலிசம் பற்றிய இன்றய மக்களின் புரிதல்கள் பிசகிக் கிடக்கின்றன. போர் புரிவதிலும், எதிர் தீர்மானங்களின் வழியிலும் மட்டுமே தீர்வுக்கு வழி நாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே போற்றிப் புகழப் படுகிறார்கள். இம்மாற்றத்தின் காரணம் எதனால் வந்திருக்கக்கூடும்?

மக்களின் புரிதல்கள் எப்போதும் பிசகித் தான் கிடக்கின்றன. அதற்குக் காரணம் சாதி, இனம், மதம் போன்ற உணர்வுகளைக் கொண்டு அரசியல் நடத்தும் ஆதிக்கவாதிகள், அல்லது ஊடகங்களை கையில் வைத்திருக்கும் முதலாளிகள். மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தங்களது இருப்பிற்கு ஆபத்து என கருதுகிறார்கள். போர் என்பது வன்முறை கொண்டு சாதிக்க நினைக்கும் அரசியல். பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை போராடித் தீர்க்கும் போது புகழப்படுவது இயற்கை. இருப்பினும் யாரின் நலன்களுக்காக யுத்தம் நடத்தப்படுகின்றது? போரினால் நன்மையடைபவர்கள் யார்? போர் நடப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் போற்ற மாட்டார்கள். மறுபக்கம் போரினால் லாபமடைந்தவர்கள் நிறையைப் பேர். பணவருவாயை ஈட்டித் தருவதால் அவர்கள் போரை தொடர்ந்து நடத்த விரும்பலாம்.

6) போர் நிறுத்தம் வேண்டி குளிரூட்டியின் பக்கத்தில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்க செய்கிறார்களே. இது ஒரு தனிமனிதனின் 'ஜனநாயக' வீரியத்தை குறிக்கிறதா?

இல்லை, வாக்காளருக்கு வேறு தெரிவுகள் கிட்டவில்லை என்பதைக் காட்டுகின்றது. காலங்காலமாக பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் முன்பு குறிப்பிட்டது போல, இந்திய ஜனநாயகத்தில் தனிநபர் வழிபாடு, சாதியம், இனவாதம், மூலதனம் இவற்றின் செல்வாக்கு அதிகம்.

7) அல்கயிதா பற்றிய உங்களின் பார்வை வாசகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அல்கயிதா சம்பந்தமாக எல்லோரும் அறியப்பட்ட எழுதாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தோடு அது முற்றிலும் முரணாக இருந்தது. புத்தகச் சந்தையில் பேசப்பட்ட அந்த புத்தகத்தை பலரும் விரும்பி இருக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு தோதாகவே அரசியல் பார்வையை விரும்புகிறார்கள் என இதை சொல்ல முடியுமா?

ஆவிகள் இருக்கின்றன என்று நம்புகிறவர்கள் இருப்பதால் தான் ஆவிகளின் அட்டகாசம் பற்றிய நூல்களும் சந்தையில் விற்பனையாகின்றன. அல்கைதா இல்லை. ஆனால் இருக்கென்று நம்புகிறவர்கள் அதிகம். இதனால் தான் எனது கட்டுரை ஒன்றிற்கு "அல்கைதா என்ற ஆவி" என்று தலைப்பிட்டேன். ஏற்கனவே ஊடகங்கள் செய்தியாக வழங்கிய அல்கைதா பற்றிய கதைகளை தொகுத்து எழுத்தாளர்கள் புத்தகமாக வெளியிடுகின்றனர். மக்களால் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தை புத்தகமாக்கி சந்தைக்கு கொண்டுவர நினைக்கும் அளவிற்கு, தகவல்களின் உண்மைத் தன்மை அலசப்படுவதில்லை. அல்லது அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லைப் போல தெரிகின்றது.

8) உலக அமைதிக்காக போராடுகிறோம் என சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் இருந்த காலத்தில் சமாதான இயக்கம் தோன்றியது. மதம் போதிக்கும் அனைத்து ஜீவராசிகளுடனும் அன்பு காட்டும் தத்துவம், உலக அமைதிக்கான அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ளது. போர் வேண்டாம், அனைத்துப் பிரச்சினையையும் அன்பு காட்டுவதன் மூலம் தீர்க்கலாம் என்பது ஒரு உயரிய நோக்கம் தான். ஆயினும் உழைப்புச் சுரண்டலால் உருவாக்கப்பட்ட உலகில் தோன்றும் முரண்பாடுகளை இவர்கள் பார்ப்பதில்லை. மதங்களை, இனங்களை பிரித்து வைப்பதால் ஆதாயமடையும் நபர்கள், எந்தவொரு அமைதி இயக்கத்தையும் எதிரிகளாகவே பார்ப்பார்கள்.

9) வினவு பக்கத்தில் நீங்கள் எழுதுவது குறித்து நீங்கள் இன்ன சாரரை சேர்ந்தவர் என முத்திரையிடப்பட்டு எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்ததா?

சில நேரம் இருக்கலாம். எதிர்வினைகளை எதிர்பார்த்து அல்லது எதிர்பார்க்காமல் கட்டுரை எழுத முடியாது. நான் வினவில் மட்டும் எழுதவில்லை. உயிர்நிழல், உன்னதம் போன்ற சிற்றிதழ்களிலும் எழுதி வருகிறேன். வேறு சில இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் எனது கட்டுரைகளை பிரசுரித்துள்ளன. இவையெல்லாம் அரசியல் தளத்தில் ஒன்றுக்கொன்று முரணானவை. அந்தந்த அரசியல் பின்னணியை கொண்டவர்களுக்கு, அது சம்பந்தமான கட்டுரை பிடிக்கின்றது. அதே நேரம் அவர்களின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் போது விரும்பமாட்டார்கள். "இன்னொரு அ.மார்க்ஸ் உருவாகிறார்." "தாலிபான் ஆதரவாளர்" என்றெல்லாம் கூட முத்திரை குத்தினார்கள்.

10) எல்லோரையும் எல்லோராலும் திருப்தி அடையச் செய்து விட முடியாது. சில விடயங்களை பேசும் போது நியாயம் அற்ற பெரும்பான்மை கருத்தைக் கொண்டிருப்போர், நியாயம் உள்ள சிறுபான்மையினரை சிறுமைபடுத்தவும், சமுதாய துரோகி எனவும் அடையாளப் படுத்திவிடுகிறார்கள். இது ஊடகங்களின் போக்கினால் எற்பட்ட ஒன்றா?

நான் அப்படி கருதவில்லை. இது மனிதனின் கூடப்பிறந்த குணம். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை நியாயம் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அரசியல் கருத்துகளை கொண்டவர்கள் ஒன்று சேரும் போது, எதிர்க்கருத்து கூறுபவர்களை துரோகி என்று ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களது குழுவை மட்டுமே முழு சமுதாயமாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். யாருடைய கை ஓங்குகிறதோ, சமுதாயத்தில் யார் பலமாக இருக்கின்றனரோ, அவர்களின் கருத்து பொதுக் கருத்தாக மாறி விடுகின்றது. ஊடகம் என்பது யாரின் கையில் இருக்கிறதோ அவரின் ஊதுகுழலாக மாறிவிடுவதைப் பார்க்கலாம்.

11) இன்றைய நிலையில் இணைய தளம் மாற்று ஊடகமாக அமைந்திருக்கிறதென்பதை மறுக்க இயலாது. இதன் வீச்சு மக்களின் அரசியல் சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் தகுந்த ஒன்றுதானா?

பெரும்பான்மை மக்கள் தகவல் அறிவதற்காக இன்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளையே நம்பி இருக்கின்றனர். இணையத்தளத்தை ஊடகமாக பாவிப்பது ஓரளவு படித்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேறோருவிதமாக சொன்னால், மத்தியதர வர்க்கத்தின் எண்ணவோட்டத்தை இணையம் பிரதிபலிக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் மிகக் குறைவு. 5% இருந்தாலே அபூர்வம். இணையத்தில் பலரது வரவேற்பை பெற்று அமர்க்களமாக முன்வைக்கப்படும் எதிர்வுகூறல்கள் பின்னர் பொய்த்துப் போவதை அனுபவத்தில் கண்டு கொள்ளலாம். இவர்களது இணைய உலகம், பெரும்பான்மை மக்களின் நிஜ உலகில் இருந்து அந்நியப்பட்டிருப்பதே இதற்கு காரணம். சனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் இணையத்தை பயன்படுத்தும் மேலை நாடுகளில் அது ஓரளவு மாற்றத்தை கொண்டு வரலாம். இருப்பினும் அங்கேயும் ஏற்கனவே அறிமுகமான வெகுஜன ஊடக கலாச்சாரம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் நேரில் காணும் சமுதாயத்தின் கண்ணாடியாகத் தான் இணையமும் அமைந்துள்ளது.

12) ஒஸ்திரியோடொவிஸ்க்கிய் போன்ற நாவல்கள் புரட்சிகளைப் பற்றிய பார்வையை மக்களிடம் எடுத்துரைக்க பங்காற்றியவற்றுள் ஒன்று. தற்சமயம் அது அவ்வளவாக பேசப்படும் ஒன்றல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

ஒரு காலம் இருந்தது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசின் செல்வாக்கு காரணமாக பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் சோஷலிசக் கருத்துகள் பரவியிருந்தன. பல நாடுகளில் வெகுஜன அரசியல்வாதிகள் சோஷலிசம் பேசினார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் நேரு. அந்தக்காலங்களில் சோவியத் தனது நட்புனாடுகளில் புரட்சிகர நாவல்களை பரப்ப முடிந்தது. இன்று காலம் மாறிவிட்டது. அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. அரசு எவ்வழியோ, குடிமக்களும் மாறி விட்டார்கள்.

13) உங்களைக் கவர்ந்த அரசியல் புத்தகங்கள் அல்லது நிச்சயம் படிக்க வேண்டியவற்றுள் எதை குறிப்பிடுவீர்கள்?

மார்க்சிம் கார்கி எழுதிய "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்". ஒரு மனிதன் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எவ்வளவு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் எனக் கூறும் அவரது சுயசரிதை. லாஹிர சாங்கிருத்தையர் எழுதிய "வால்காவில் இருந்து கங்கை வரை". மனித இனம் எவ்வாறு தோன்றி பரிணமித்தது என்பதை சுவையாக கதை போல சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நாவல்களை சிறுவயதில் வாசித்திருந்த போதிலும், இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

14) கடற் கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடுகளென சிங்கபூர் போன்றவற்றை நீங்கள் குறிப்பிட்டு எழுதியது சர்ச்சயை ஏற்படுத்திய ஒன்று. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிலைபாடு என்ன?

உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? ஒவ்வொரு பணக்கார நாட்டிற்கும் இருண்ட பக்கம் ஒன்றுண்டு. சாதாரண கிரிமினல் குறுக்கு வழயில் பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரும்புள்ளியாக வருவது போலத் தான் நாடுகளும். மேன் நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் தமது கசப்பான கடந்த காலத்தை மறைப்பது இயற்கை தானே? இதிலே சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கா?

15) மலேசியாவில் வெகுண்டெழுந்த ஹிண்ட்டிராஃப் இயக்கம் தற்சமயம் ஒரு அரசியல் கட்சியென மாறிவிட்டிருக்கிறது. அதற்குள் சில பிரிவினைகள் வேறு. இவ்வியகத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை மறுக்க இயலாது. நெடுநாளைய அரசியல் மாற்றத்துக்கு இது போன்ற இயக்கங்களின் நடவடிக்கை சரியான ஒன்றென கருதுகிறீர்களா?

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இந்திய வம்சாவழியினரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மலாய் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இனப் பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நியாயமானவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மலாய் பெரும்பான்மையினர் அரசு பக்கம் நிற்பதை மறுக்க முடியாது. (அரசு வழங்கும் சலுகைகள் முக்கிய காரணம்) இதிலே கவனிக்கப்பட வேண்டியது, பெரும்பான்மை மக்களிடையே எமக்கான ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்வது முக்கியம். ஹிண்ட்ராப் அப்படியான செயல் திட்டம் வைத்திருந்ததா? இவர்களது ஆரம்ப கட்ட போராட்டமே பிரிட்டிஷ் தூதுவராலயத்தை நோக்கியதாக, பிரிட்டிஷ் அரசிடம் நஷ்ட ஈடு கோருவதாகத் தான் அமைந்திருந்தது. தங்கள் கோரிக்கைக்கு கனவான்களின் தேசமான பிரிட்டன் செவி கொடுக்கும் என்ற வெகுளித்தனம் தான் காரணம். அது தான் போகட்டும், பெயரிலேயே "இந்து" அடையாளத்தை புகுத்தியதன் மூலம், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினரை எட்டி நிற்க வைத்தார்கள். ஹிண்ட்ராப் அறிக்கையில் பிற மலேசிய சிறுபான்மை மக்களான சீனர்கள், மற்றும் சாராவாக் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினருடன் ஒன்றிணைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்தியவம்சாவளி சமூகத்தின் பொதுப் பிரச்சினை, இந்து மதத்தின் பிரச்சினையாக திசைதிருப்பி விடப்பட்டது. தனது அதிகாரத்தை நிலை நிறுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து வரும் அரசின் நோக்கமும் அது தான்.

16) பொருளாதார நிவர்த்திக்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பல திட்டங்களில் முன்னோக்கியிருக்கும் இவ்வேளையில் அவற்றிக்கு பலிக் கடாவாக மூன்றாம் உலக நாடுகள் சில பாதிப்படைவதை அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் உணராமல் தான் இருக்கிறார்களோ?

அரசியல் தலைவர்களில் பல பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கு சிக்கலான விஷயமெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரியும். இதிலே கவனிக்கப்பட வேண்டியது, அரசியல் என்பது என்ன தான் பொதுநலம் சார்ந்த துறையாக இருப்பினும், அதை நடத்துபவர்கள் தமது சுயநலம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சனத்தொகையில் அரைவாசி வறுமையில் உழன்றாலும் தனது குடும்பம் நன்றாக வாழ்கிறது என்று திருப்திப்படும் தலைவர்களே அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற நடுத்தர வர்க்கம். அவர்களுக்கும் அதிகம் உடலுழைப்பைக் கோராத தொழில், அதற்கேற்ற ஊதியம் போன்றன கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் சாதாரண குப்பனும், சுப்பனும், ஆண்டவரின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமா, என்று தான் புரிந்து கொள்வார்கள்.

17) ஒரு பக்க பார்வையைக் கொண்ட உலக அரசியலை பின் நவீனதுவம் மறுக்கிறது. பல திறப்பட்ட சிந்தனைகளையும் மாற்றுக் கருத்தையும் அது ஆதரிப்பதாக இருப்பதால் ஒரு நிலை கலாச்சார பிடியில் இருப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் நிலை அல்லது கலாச்சார குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

இருண்ட காலம், மீளுயிர்ப்புக் காலம், நவீன காலம் என்று மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இப்போது நடப்பது பின் நவீனத்துவக் காலம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சித்தாந்தம் தேடி தவித்துக் கொண்டிருந்த புத்திஜீவிகள் பின் நவீனத்துவ கருத்தியலை தோற்றுவித்தார்கள். கலாச்சாரக் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மாயை நிலவியது உண்மை தான். ஆனால் பின் நவீனத்துவமே ஒரு கலாச்சாரமாகிப் போனதைக் காண்கிறேன். எப்போதும் உலக வரலாற்றில் குறிப்பிட்ட சில காலம் வெற்றிடம் ஏற்படும். முன்பு இருந்த ஆதிக்க கலாச்சாரத்திற்கும், பின்னர் வரப்போகும் புதிய கலாச்சாரத்திற்கும் இடையில் தோன்றும் சிறிது கால இடைவெளியில் பல திறப்பட்ட சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நிலவும்.

18) ஏகப்பட்ட சமரசங்களுக்கிடையே தன்னை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தகுதியாக்கிக் கொண்டார். உலக மக்களுக்கு இவரிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமான ஒன்றே. தனி மனிதராக ஒபாமா விரும்பினாலும் அவர் இருக்கும் அமைப்பின் செல்வாக்கை மீறி அவர் செயல்படுவது சாத்தியம் தானா?

அவர் எதை சாதிக்க விரும்பினார்? ஒபாமா வருவதற்கு முன்னரே அதிகார மட்டத்தில் சில மாற்றங்கள் தேவை என உணரப்பட்டது. அதற்கேற்ற ஆளாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக யார் வந்தாலும், அரச இயந்திரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டு தான் இருக்கும். கொள்கை வகுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளை மக்கள் தெரிவு செய்வதில்லை. உலக மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஊடகங்கள் கிளப்பி விட்ட வெப்பத்தின் வெளிப்பாடு.

19) இன்றய அரசியலில் உணவு தட்டுப்பாடு சம்பந்தமான வாதங்கள் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் 'லிவிங் கோஸ்ட்' அதிகமாகியிருக்கும் அதே வேலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மந்தகர நிலையில் இருக்கிறதே?

பல நாடுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதே போல உணவுத் தட்டுபாடு நிலவுவது, உணவு உற்பத்தி, விநியோகத் துறையில் முதலீடு செய்திருக்கலாம் நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகின்றது. எப்போதும் லாபத்தை குறிக்கோளாக கொண்ட வர்த்தக நிறுவனங்கள், மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இருப்பினும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கியாக வேண்டும். அதே நேரம் பன்முகப் பட்ட நுகர்வுப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால் தற்போது நடப்பது பொருளாதார மறுசீரமைப்பு. இதன் விளைவுகளை சில வருடங்கள் கழித்து உணரலாம்.

20) புத்தகம் ஒன்று எழுதி வருவதாக அறிகிறேன். அதைப் பற்றிய மோலோட்ட தகவல்களை அல்லது எதை சார்ந்தது என்பதையோ குறிப்பிட முடியுமா?

ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போர் காரணமாக, ஒரு அகதி எவ்வாறு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் கோரும் வரை இடையறாத பயணத்தில் ஏற்படும் இன்னல்கள். புகலிடம் கோரிய நாட்டில் அதிகாரிகளின் திமிரான மெத்தனப் போக்கு. ஐரோப்பிய அரசுகளின் உள் நோக்கம் கொண்ட அகதி அரசியல். இவை போன்ற பல தகவல்களை விரிவாக வழங்க முயற்சித்துள்ளேன். இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் சொந்த அனுபவத்தினூடாக பெறப்பட்டவை. நூல் வெளிவந்த பின்னர், அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க சில நண்பர்கள் விரும்புகின்றனர். இதை விட நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. அனேகமாக மூன்று நூல்களையும் அடுத்த வருட தொடக்கத்தில் சந்தையில் வாங்கலாம்.

21) இந்தியா வல்லரசாகுமா?

அயலில் இருக்கும் குட்டி நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா எப்போதும் வல்லரசு தான். அமெரிக்காவின் நிழலின் கீழ் பிராந்திய வல்லரசாக இருக்கின்றது. இதைத் தவிர உலக வல்லரசாவது நடக்கக் கூடிய விஷயமல்ல. அணு குண்டு வைத்திருப்பதற்காக ஒரு நாடு வல்லரசாகி விடுமானால், பாகிஸ்தான், வட-கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் வல்லரசுகள் தான்.

22) நீங்கள் பார்த்து வியந்த நாடு?

என்னைக் கவர்ந்த நாடு எகிப்து. ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஐந்தாயிரம் ஆண்டிற்கு முந்திய நாகரீகம் இன்றைக்கும் சிதைவுறாமல் பார்த்து வியக்கும் வண்ணம் நிலைத்து நிற்கின்றது. இன்றும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

23) வலையில் எழுதும் கட்டுரைகளுக்கு மாட்டி விடுவதற்கென்றே சில கேள்விகள் கேட்கப்படும் போது கோபப் பட்டதுண்டா?

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்கலாம். ஆனால் சில பேர் புரிந்தாலும் புரியாத மாதிரி பிடிவாதமாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எரிச்சலூட்டுகின்றனர். இது வலையில் வருபவர்கள் மட்டுமல்ல, சில நண்பர்கள், உறவினர்கள் கூட அப்படி நடந்து கொள்ளகின்றனர்.

24) வளர்ந்த நாடுகளின் இன்றய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மூன்றாம் உலக நாடு ஒன்றும் அதீத வளர்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த நாடாக இருக்கக் கூடும்?

எந்த நாட்டையும் குறிப்பிட்டு எதிர்வு கூற விரும்பவில்லை. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, ஆப்பிரிக்காவில் லிபியா, ஆசியாவில் சீனா ஆகிய நாடுகள் தற்போது உள்ள உலக பொருளாதார ஒழுங்கிற்கு நிகரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து, செயல்படுத்தி வருகின்றன. அனேகமாக எல்லோரும் டாலர் வீழ்ச்சியடையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றிருக்கும் உலகம் நாளை இருக்கப் போவதில்லை.

25) மூன்றாம் உலக யுத்தம் பற்றிய உங்கள் பார்வை?

முதலில் உலக யுத்தம் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் அதிகாரப் போட்டிக்காக அணி பிரிந்து போரிட்டார்கள். பின்னர் போரினால் ஆன பயன் எதுவுமில்லை என்று உணர்ந்து, ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தார்கள். ஐரோப்பியர்கள் போரின்றி சமாதானமாக வாழ்வதால், அதை உலக சமாதானமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது போர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.

(குறிப்பு: இது ஒரு மறுபதிவு. வாசகர்களிடம் இருந்து புதிய கேள்விகள் எதிர்பார்க்கப்படுகின்றன.)

Part 1 : http://vaazkaipayanam.blogspot.com/2009/07/politics-talk-with.html

Part 2: http://vaazkaipayanam.blogspot.com/2009/07/blog-post_30.html

Monday, March 01, 2010

வறுமை ஒழிப்பு ஒரு வரலாற்றுக் கடமை

"ஒரு நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால், அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் பிரயோசனம் என்ன?" - நெல்சன் மண்டேலா

"உலகமயமாக்கல்" என்றால் என்ன? பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க, ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கூற்று என்பதை, நாம் நாள் தோறும் கண்கூடாக காண்கிறோம். 21 ம் நூற்றாண்டின் பொருளாதாரக் கொள்கையாக, உலகமயமாக்கல் சக்தி வாய்ந்த பணக்கார நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை சமூகத்தை பீடித்துள்ள ஏழ்மை என்ற நோயை தீர்க்கும் மருந்தாக பிரகடனப் படுத்தப் படுகின்றது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் முடுக்கி விடப் படுகின்றன. உலகில் இன்று உலகமயமாக்கல் வலைக்குள் விழாத நாடுகள் எதுவும் இல்லை.

உலகில் ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையிலான பிரிவினையானது, வடக்கு-தெற்கு பிரிவினையாக புரிந்து கொள்ளப்படுகின்றது. அனேகமாக எல்லா பணக்கார நாடுகளும் பூமியின் வட புலத்தில் அமைந்துள்ளதும், தென் புலத்தில் அமைந்துள்ள ஏழை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் கசப்பான உண்மை. அவர்கள் எப்படி "பணக்கார நாடுகள்" ஆனார்கள்? மற்றவர்கள் எப்படி "ஏழை நாடுகள்" ஆக்கப்பட்டார்கள்? ஏழை நாடுகளில் வாழும் மூன்றில் இரண்டு உலக சனத்தொகை அவசியம் அறிந்திருக்க வேண்டிய உண்மை அது.

ஆதிகாலத்து மனிதன் குகைகளில் வாழ்ந்த போது, அந்த சுற்றாடலில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தான். கால்நடைகள் பராமரிப்பை அறிந்து கொண்ட போது நாடோடி கலாச்சாரம் ஆரம்பமாகியது. குறிப்பிட்ட இடத்தில் இயற்கை வளம் அருகிய போது, அது கிடைக்கக் கூடிய வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆகவே செல்வம் இருக்கும் இடம் தேடி மக்கள் குடிபெயர்வது நவீன காலத்திற்கே உரிய தோற்றப்பாடு அல்ல. ஒரு தேசத்தின் உள்ளேயே, கிராம மக்கள் வாய்ப்பு தேடி நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். துரித காதியில் வளர்ச்சியடையும் நகரங்களும், புறக்கணிக்கப்படும் கிராமங்களும், சமூக இடைவெளியை விரிவு படுத்துகின்றன.

உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் திரளைப் போல, வசதியானவர்கள் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்களை, பணக்கார நாடுகள் எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்பதில்லை. தேவைப்படும் பொழுது பயன்படுத்தி விட்டு, அபரிதமாக தேங்கி விடும் தொழிலாளரை வெளியே தள்ளுகின்றன. மேலும் "ஏழைகளின் படையெடுப்பை" கண்டு அஞ்சி புதுப்புது சட்டங்களை போடுகின்றனர். யுத்த அகதிகளும் பொருளாதார அகதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் கோபன்ஹெகன் நகரில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு மகாநாடு, குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமையை ஒழிப்பதில் பணக்கார நாடுகளின் கடமை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் வறிய நாடுகள் மீது சுமத்தப்பட்ட கடன்சுமை குறையவில்லை. பணக்கார நாடுகள், வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முடுக்கி விடுகின்றன. "மூன்றாம் உலக நாடுகளுக்கான சமூக நலன்புரி திட்டம்" என்ற பதாகையின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி, தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் மேலைத்தேய முகாமையாளரின் சம்பளத்திற்கே போதாது. எது எப்படியிருப்பினும், பணக்கார நாடுகள் வறுமை ஒழிப்பில் தமது பங்கை மறுக்கவில்லை.

பணக்கார நாடுகள் தமது நாடுகளுக்குள் புக முனையும் ஏழை அகதிகளை, குடியேறிகளை தடுக்க முயல்கின்றன. மறு பக்கம் ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்கின்றன. ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் யாவும், அவற்றை தம்மில் தங்கியிருக்க வைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டினுள் குடியேற விரும்புபவர்களை "பொருளாதார அகதிகள்" என குறிப்பிடுகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மேற்கு ஐரோப்பியர்கள் பொருளாதார அகதிகளாக அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு படையெடுத்தார்கள். தாயகத்தில் நிலவிய வறுமை அவர்களை புதிய உலகம் நோக்கி குடிபெயர தூண்டியது. இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வறுமை, இன்றைய அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலையை ஒத்தது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் பத்து வீதத்திற்கும் குறைவானோரே செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமைக்குள் உழன்றனர். ஐரோப்பிய வறிய மக்களின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல புரட்சிகளுக்கு வழி சமைத்தது. மேலும் பல எதிர்கால புரட்சிகளை தடுக்கும் நோக்கில், "நலன்புரி அரசு" உருவாக்கப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.

பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சிறு தீவுகள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளின் காலடி பட்ட பின்னர் "நாகரீகமடைந்தன." தீவுவாசிகள் ஐரோப்பியரின் நவீன சாதனங்களை கண்டு வியப்புற்றனர். ஐரோப்பியரின் கடவுள் அவர்களுக்கு கப்பல்களையும், துப்பாக்கிகளையும், நவீன இயந்திரங்களையும் கொடுத்ததாக கருதினர். தாமும் ஐரோப்பியரின் மதத்தை தழுவினால் இவற்றைப் பெறலாம் எனக் கருதினர். ஆனால் ஆண்டுகள் பலவாகியும், "ஐரோப்பியக் கடவுள்" தமக்கு நவீன கருவிகளை கொடுக்காததையிட்டு விசனமுற்றனர். தற்போது இந்த மக்கள் கிறிஸ்தவ மத உட்பிரிவை உருவாக்கி ஐரோப்பிய எதிர்ப்பாளராக மாறியுள்ளனர்.

இன்று மூன்றாம் உலக நாட்டு மக்களின் மனநிலை மேற்குறிப்பிட்ட பசுபிக் தீவுவாசிகளின் மனநிலைக்கு ஒப்பானது. தன் பிள்ளை ஆங்கிலம் கற்றால் போதும், ஆங்கிலேயரைப் போல பணக்காரர் ஆகலாம் என பல பெற்றோர் நினைக்கின்றனர். சில நேரங்களில் அவர்களது கனவுகள் நிஜமாகின்றன. ஆனால் அதற்கு காரணம் ஐரோப்பியமயமாகிய (அல்லது ஆங்கிலமயமாகிய) வாழ்க்கைத் தரமல்ல. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மேன்நிலையில் உள்ளது. இந்த நாட்களில் தகமை சார்ந்த தொழிலாளரின் பற்றாக்குறையை, மூன்றாம் உலகில் இருந்து வரும் பட்டதாரிகளை கொண்டு நிரப்புகின்றனர்.

19 ம் நூற்றாண்டில் காலனிகளை ஐரோப்பியமயப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கில, மொழிகளும், கலாச்சாரங்களும் பரப்பப்பட்டன. அங்கே ஏற்கனவே இருந்த பூர்வீக கலாச்சாரங்கள் நசுக்கப்பட்டன, அல்லது புறக்கணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தை பரப்பவும் உதவின. கல்விக்கூடங்கள் ஐரோப்பிய கல்வி முறையை இறக்குமதி செய்தன. இவ்வாறே காலனிகளில் வாழ்ந்த மக்களின் மூளைக்குள் ஐரோப்பிய கலாச்சாரம் புகுத்தப்பட்டது. ஐரோப்பியமயப்பட்ட புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. அவர்களின் சேவைக்காக காலனிய அரசு அதிகபட்ச சம்பளத்தை வெகுமதியாக வழங்கியது. அதாவது, காலனியில் சுரண்டிய பணத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

ஐரோப்பிய காலனிகள் யாவும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை தமது காலனிகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளில் மக்களை அடிமைகளாக, அல்லது குறைந்த கூலிக்கு அமர்த்தி திருடப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயத்த உடைகள் பின்னர் அதே மக்களுக்கு விற்கப்பட்டன. சுதந்திரமடைந்த முன்னாள் காலனிகள், தொழிலகங்களை நிறுவி முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அப்போதெல்லாம் (ஐரோப்பாவை வந்து சேரும் போது) "இறக்குமதி தீர்வை" விதிக்கப்பட்டது. அந்த வரியை செலுத்திய பின்னர் விற்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் மூன்றாமுலக நாடுகளின் பாவனைப் பொருட்கள் பல ஐரோப்பிய நிறுவனங்களாலேயே சந்தைப் படுத்தப்படுகின்றன. இலங்கையில் வாங்கும் தேயிலையை பிரித்தானியக் கம்பனிகள் வாங்கி, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கின்றன. பிரேசிலில் வாங்கும் காபியை சுவிஸ் கம்பனிகள், கவர்ச்சிகரமான போத்தல்களில் அடைத்து உலகம் முழுவதும் விற்கின்றன. அண்மைக் காலங்களில் இந்தியாவை சேர்ந்த பிரபல ஐ.டி. கம்பனிகள் சில ஐரோப்பாவில் முதலிட விரும்பின. ஆனால் அவை கூட்டு ஒப்பந்தத்திற்கு அணுகிய ஐரோப்பிய கம்பனிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஐரோப்பிய கம்பனிகளின் பொருளாதார பலம் மிக அதிகமாக இருந்ததால், இந்திய கம்பனிகளை விலை கொடுத்து வாங்க மட்டுமே விரும்பின.

பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் காபி, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம் ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப் படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலக பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள், உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன. இத்தகைய நியாயமற்ற வர்த்தகத்தை நிரந்தரமாக உறுதி செய்ய, GATT அமைப்பு உருவாக்கப்பட்டது.