Friday, November 28, 2008

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு


“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.

சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.

புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).

அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.

முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், "யாஹ்வே" அல்லது "எல்" (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.

இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.

முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.

குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.

யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.

தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.


உசாத்துணை தொடுப்புகள் :
Jew from Wikipedia
A Resource for Turkic and Jewish History in Russia and Ukraine
Israel deliberately forgets its history ________________________________________

Wednesday, November 26, 2008

அதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்


"அதிகம் படித்தல் = அதிகம் சம்பாதித்தல்" மத்தியதர வர்க்க குடும்ப பெற்றோர்களால், தம் பிள்ளைகளை சமூகப்-பொருளாதார ஓட்டப்போட்டியில் முன்னுக்கு வர பயிற்றுவிக்கும் மந்திரம் அது. அரசியல் பொருளாதார கற்பிதங்கள் பலருக்கு இரத்தத்தோடு ஊறி விட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக என்பதுகளுக்கு பின்னர் பிள்ளை வளர்ப்பென்பது, "தட்சரிசம்" (அல்லது "றீகனிசம்") என்ற பொருளாதார கொள்கைகளுக்குள் உட்பட்டதென்பது அவர்களுக்கே தெரியாது. 1979 ல் பிரித்தானிய பிரதமராகிய மார்கிரட் தட்சர், 1980 ல் அமெரிக்க ஜனாதிபதியாகிய ரொனால்ட் றீகன், ஆகியோர் எமது காலத்து உலகப் பொருளாதார கட்டமைப்பை அடியோடு மாற்றி விட்டு, அல்லது நாசமாக்கி விட்டு, மறைந்து விட்டனர்.

அது என்ன "தட்சரிசம்"? சுருக்கமாக சொன்னால், பணக்காரர்கள் குறைந்த வரி கட்ட வேண்டும்.(ஏழைகள் அதிக வரி கட்ட வேண்டும்). பட்டப் படிப்புகளை முடித்து விட்டு உத்தியோகம் பார்ப்பவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். (படிப்பறிவு குறைந்த தொழிலாளர்கள் குறைந்தளவு சம்பளம் எடுக்க வேண்டும்.) இவ்வாறு சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு, மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாக இருந்தால் தான், சமூகப் படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் மக்கள், வசதியாக வாழ்வதற்காக போட்டி போட்டு, உயர்ந்த இடத்திற்கு வர முயற்சிப்பார்கள். (போட்டியில் தோற்பவர்கள் இழக்கும் தொகை முதலாளிகளின் கையில் லாபமாகப் போய்ச் சேருவது வேறு கதை.) அது சரி, அதிகம் சம்பாதிக்கும், குறைவாக வரி கட்டும், பணக்காரர்கள் எப்படி பொருளாதாரத்தை பெருக்குவார்கள்? அதிகம் சம்பாதிப்பதால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடித்து அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள்(அப்படி செய்யாதவர்களையும் செய்ய வைக்க ஊக்குவிக்கப்படும்). இந்த வசதிபடைத்த மத்தியதர வர்க்கம் வங்கிகளில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தையும், வங்கிகள் பின்னர் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும். ஆமாம், இது தானே நமது நாட்டிலும் நடக்கிறது? தட்சரிசம் அவ்வளவு தூரத்திற்கு சர்வதேச சித்தாந்தமாகி விட்டது.

அப்போது சேமிப்பது நல்ல காரியமாக பார்க்கப்பட்ட காலம் அது. இப்போது காலம் மாறிவிட்டது. அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை, பொருளாதாரக் குதிரை இதற்கு மேல் இழுக்க முடியாது, என்று படுத்து விட்டது. தேசம் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை காண என்ன செய்யலாம்? என்று சர்வதேச அரசியல் தலைவர்கள் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களுக்கு தெரியும் ஒரே வழி, மக்கள் பணத்தை சேமிக்காமல், தாராளமாக செலவு பண்ண வைப்பது. அவர்களது ஒரே நோக்கம், பொது மக்களை, அதாவது ஏழை மக்களை, அதாவது உங்களையும் என்னையும் போன்றவர்களை, செலவு பண்ண வைப்பது எப்படி? பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை விட கடினமான வேலையா இது?

புதிய பொருளாதார கொள்கை காரணமாக, சமூகத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி சிறிது குறையலாம். அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அதனை வீட்டுக் கடனை கட்ட முடியாதவர்களுக்கு உதவும் வகையில், பணக்காரர்கள் அதிக வரி கட்ட வைக்க வேண்டுமென்கிறார். பிரிட்டன் பிரதமர் உபரி மதிப்பு வரியை(VAT) குறைக்க வேண்டும், அதனை பணக்காரரிடம் இருந்து அறவிடும் வரி ஈடுகட்ட வேண்டும் என்கிறார். நெதர்லாந்து நிதி அமைச்சர் அதிகம் சம்பாதிப்பவர்களும், குறைவாக சம்பாதிப்பவர்களும் ஒரே அளவு வரி கட்ட வேண்டும் என்று, வரி அமைப்பையே மாற்றுகின்றார்.

அப்பாடா, இப்போதாவது (பொது மக்கள் நினைப்பதற்கு மாறாக) அதிகம் சம்பாதிப்பவர்கள், அதிக வரி கட்டுவதில்லை என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்களே! அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இருபதாம் நூற்றாண்டு வரையில் பணக்காரர்கள் அரசாங்கத்திற்கு வரியே கட்டவில்லை. அப்பாவி உழைக்கும் மக்கள் தான் வரி கட்டுவதை தமது கடமை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது கூட நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. உபரி மதிப்பு வரி(VAT) கட்டுவது, நுகர்வோரான நீங்களும், நானும் தான். பொருட்களை அல்லது சேவைகளை உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் இந்த வரியை கட்டுவதில்லை. அதிலும் எம்மிடம் அறவிடும் வரியை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக சொல்லி, சிலர் தாமே பதுக்குகிறார்கள். தொழில் புரிபவர்கள் மட்டுமல்ல, சிறு வணிகர்கள் கூட வருமான வரி கட்டுகிறார்கள். அதேபோல, அதிக லாபம் சம்பாதிக்கும் பெரிய கம்பனிகள், அதிகளவு வருமான வரி கட்டுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட(LTD) அல்லது மட்டுப்படுத்தப்படாத (Unlimited) பெரிய கம்பெனிகளுக்கு வருமான வரி கிடையாது. (கார்பரேட் வரி மட்டும் உண்டு) .

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட போது, பெரிய நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகள் வருடாவருடம் பெற்றுக்கொள்ளும், மில்லியன் டாலர்கள் போனஸ் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. திவாலான கம்பெனி நிர்வாகிகள் கூட லட்சக்கணக்கில் சம்பளம், கோடிக்கணக்கில் போனஸ், என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தமை, ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை நினைவூட்டவில்லையா? நெருக்கடிக்கு பிறகு தேசிய பொருளாதாரத்தை தமது கைகளில் எடுத்த அரசியல் தலைவர்கள் "இனிமேல் கை நீட்டி போனஸ் வாங்கினால், கையை வெட்டி விடுவேன்..." என்று சொல்லாத குறை மட்டும் தான். ஒரு காலத்தில், "அவன் கஷ்டப்பட்டு அதிகம் உழைக்கிறான், அதனால் அதிகம் சம்பாதிக்கிறான்." என்று இந்த கோடி டாலர் பரிசுகளை நியாயப்படுத்திக் கொண்டிருந்த அதே மக்கள், இன்று அப்படி சம்பாதிப்பது பாவகாரியம் என்று தூற்றுகிறார்கள். அரசியல் தலைவர்களும் இது தான் தருணம் என்று, கோடிக்கணக்கான லாபப்பணத்தை போனஸ் என்று அள்ளிக் கொடுத்து ஒரு சிலரிடம் மட்டும் பணத்தை குவிக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டு, அந்தப் பணத்தை கம்பெனி வளர்ச்சியில் முதலீடு செய்யலாமே என்று கறாராக சொல்லி விட்டார்கள்.

தட்சரிசம் தோன்றிய பிரித்தானியாவில், அவரது பழமைவாத கட்சியே புதிய பொருளாதார கொள்கை பற்றி கடும் விமரிசனங்களை முன்வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. பணக்காரர் நலன்களை மட்டுமே கவனிப்பதாக கருதி (உண்மையும் அது தான்), பெரும்பான்மை மக்கள் தமது கட்சிக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்ற ஐயம் அதற்கு காரணம். இருப்பினும் பிரபல வலதுசாரி பத்திரிகைகள் சும்மா இருக்கவில்லை. "ராபின் ஹூட் பட்ஜெட்" என்று ஏளனம் செய்கின்றன. ஒரு நாளிதழ் பிரதமர் பிரௌன் செங்கொடி ஏந்தி இருப்பதாக கார்ட்டூன் போட்டது.

தற்போது "அதிகம் சம்பாதிப்பவர்களிடம் அதிக வரி வசூலித்து, குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு வரிச் சலுகை கொடுப்பதன்" நோக்கத்தை, அவர்கள் சோஷலிசத்தை கொண்டு வரப் போவதாக, யாரும் பிழையாக புரிந்து கொள்ளக் கூடாது. இல்லை, ஏழை ஆடுகள் நனைவதற்காக முதலாளித்துவ ஓநாய்கள் அழுகின்றன. ஏழை மக்கள், அல்லது குறைவாக சம்பாதிப்பவர்கள் தான், அதிகமாக செலவழிக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்கள் தமக்கு கிடைக்கும் சொற்ப தொகையை, எதையாவது வாங்குவதற்கு செலவழிக்கிறார்கள், அல்லது அப்படி செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஓரளவு நல்ல சம்பளம் எடுப்பவர்கள் கூட, தமது ஆடம்பர தேவைகளுக்காக வாகனம், வீடு, வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்று வாங்கிக் குவிக்கிறார்கள் இல்லையா? அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து, இன்னும் அதிகம் செலவழிக்க வைப்பது தான், இப்போது வரும் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கம்.

அனைவரது கவனமும் நிதி நெருக்கடி மீது இருந்த நாட்களில், ஒரு ஐரோப்பிய நாளிதழ் இவ்வாறு எழுதியது, "பொருளாதாரப் நெருக்கடியால் வேலை இழந்தவர்கள், வியாபாரத்தில் நட்டமடைந்தவர்கள், ஆகியோர் தமது கவலையை தீர்க்க மதுவை தஞ்சமடைந்து வருவதால், மது பான விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு." ஆகவே பெருங் குடிமக்களே, புகைப்பிரியர்களே, போதைக்கு அடிமையானவர்களே, நீங்கள் தேசிய பொருளாதாரத்தை வளர்க்கும் நாட்டுப்பற்றாளர்கள், என்று இனிமேல் பெருமையாக கூறிக் கொள்ளலாம்.

உசாத்துணை:
UK PM taxes rich to help fund economic recovery
Darling Aka Robin Hood
_____________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Tuesday, November 25, 2008

பெல்ஜியம் மீது தாக்குதல்? - வீடியோ பயங்கரவாதம்

பெல்ஜியத்தின் பிரதான செய்தி நிலையங்களின் ( VRT, VTM) முகவரிகளுக்கு, ஒரு டி.வி.டி. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வீடியோ செய்தி அது. நான்கு நிமிடங்களே ஓடும் அந்த வீடியோ படத்தில், அல் கைதா பாணியில் முகமூடியணிந்த மூன்று நபர்கள், சைகைகள் மூலம் சொல்ல வரும் செய்தி, நெதர்லாந்து மொழியில் (பெல்ஜியத்தின் தேசிய மொழிகளில் ஒன்று) உப தலைப்புகளாக காட்டப்படுகின்றது. செய்தி நிலையங்கள், ஆரம்பத்தில் இந்த வீடியோ குறித்து கவனமெடுக்காவிட்டாலும், உடனடியாக காவல் துறையிடம் கையளித்து விட்டன. இன்று நெதர்லாந்து, பெல்ஜிய தொலைக்காட்சி சேவைகள் அந்த வீடியோவை ஒளிபரப்பி விட்டதாலும், ஏற்கனவே நெதர்லாந்து மொழி இணையங்களில் உலாவுவதாலும், தமிழ் பதிவுலக வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.


வீடியோ செய்தியின் சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு

அந்த வீடியோ மடல், ஏற்கனவே நியூ யார்க், மாட்ரிட், லண்டன், ஆகிய நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை மேற்கோள் காட்டி ஆரம்பமாகின்றது: "பெல்ஜிய மக்கள் சரித்திரத்தில் இருந்து பாடம் படிக்க வேண்டும். நீங்கள் வாழ்வதற்காக அவா கொண்டிருப்பதைப் போல, நாம் சாவதற்காக அவா கொண்டுள்ளோம். எமது பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்யும் உங்கள் மீது நாம் இரக்கம் கொள்ள மாட்டோம்."

அண்மையில் பெல்ஜிய அரசு, ஆப்கானிஸ்தானுக்கு படைகளையும், F-16 யுத்த விமானங்களையும் அனுப்பி வைத்தமை குறிப்பிடப்படுகின்றது: "உங்களது அரசாங்கம் சொந்த நலன் கருதி எடுக்கும் முடிவுகளால், உங்கள் இரத்தமும் ஆறாக ஓடும் என்பதை மறக்க வேண்டாம். இதிலிருந்து தப்ப ஒரேவழி, பெல்ஜிய அரசு தனது படைகளை, ஆப்கானிஸ்தானில் இருந்தும், பிற முஸ்லீம் நாடுகளில் இருந்தும் திருப்பி அழைக்குமாறு, நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். உங்கள் அரசின் செயல்களுக்கு நீங்களும் பொறுப்பு."

பெல்ஜிய இணையத்தளமான "Indymedia België" க்கு, கடந்த வியாழன் இந்த டி.வி.டி. கிடைத்த போதும், அதன் ஆசிரியர் பீடம் அனுப்பியவர்களின் நோக்கம் தெரியாததால் பிரசுரிக்க மறுத்து விட்டது. யாரும் இது போன்ற வீடியோ தயாரிக்கலாம் என்ற நிலையில், சில மோசடிக்காரரின் ஏமாற்று வேலையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. உண்மையான பயங்கரவாதிகள் எப்போதாவது முன்கூட்டியே அறிவித்து விட்டு குண்டுவைப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு:
Dutch TV Station Gets "Threat" To Belgium Over Afghanistan

Sunday, November 23, 2008

கணணி மென்பொருளே! கலியுக பரம்பொருளே!!


பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன. அவற்றிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இருப்பதை மெருகூட்டவும் என அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தேவைப்பட்டனர்.

ஒரு பக்கம் இந்த புதிய தொழில்வாய்ப்புகளை நாடி கணிப்பொறி வல்லுனர்கள் படையெடுத்துக் கொண்டிருந்த போது, மறுபக்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய மென்பொருள் துணை கொண்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வந்தன. அப்போது இது குறித்து எந்த ஒரு ஐ.டி.(IT) பணியாளரும் அப்போது அக்கறைப்படவில்லை. தனது நலனே பெரிதெனக் கருதி கருமமே கண்ணாக இருந்து விட்டனர். இப்போது காலம் மாறி விட்டது. ஐ.டி. துறையின் தலைக்கு மேலே பணி நீக்கம் என்ற கத்தி தொங்குகின்றது. அன்று ஐ.டி. துறையின் மகிமை பற்றி மட்டுமே எழுதி வந்த தினமலர் பத்திரிகை; இன்று அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று அழுதுவடிகின்றது. ஹைதராபாத் ஐ.டி. பணியாளர்கள் தமக்கு வேலை போய் விடக்கூடாது என்று திருப்பதி பாலாஜி சாமியிடம் வேண்டுவதாக(இது கிண்டல் தானே?) செய்தி வெளியிட்டது.

ஆங்கிலத்தில் புலமை மற்றும் கல்வித் தகமை காரணமாக, "Out sourcing" என்ற பெயரில் அமெரிக்க மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி.(IT) கம்பனிகள் இந்தியா வந்த போது, இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு புதிய வசதிபடைத்த வர்க்கம் விரைவாக உருவாகியது. சராசரி இந்திய சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதால், கண் விழித்து செய்யும் இரவு வேலை என்றாலும் ஏற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் இதே வேலையை செய்ய ஒரு அமெரிக்க கணிப்பொறி வல்லுநருக்கு கொடுப்பதில் கால்வாசியை கூட சம்பளமாக கொடுக்காது செலவை மிச்சம் பிடித்தன, அந்த கம்பெனிகள்.

Out sourcing செய்யும் கம்பெனிகள் தமது தாயகத்தில் ஆங்கில மொழியே பேசப்படுவதால், இந்திய தொழிலகங்களிலும் ஆங்கில மொழியை "உத்தியோகபூர்வ" மொழியாக்கினர். (வேலை செய்யும் இந்தியர்கள் தமது ஓய்வு நேரங்களிலும்,தமக்குள்ளே ஆங்கிலம் பேசினர்.) இந்த "ஆங்கிலப் பருப்பு" இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வேகும். இதே அமெரிக்க கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலகங்களை நிறுவி, உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஆனால் அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளில் தான் முகாமைத்துவம் நடக்கின்றது.

காலனிய காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் தாம் என்றென்றும் பிரயோசனப்படுத்தக் கூடிய வர்க்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த வர்க்கம் தமது தாய்மொழியான ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும். தொழிற்புரட்சி காரணமாக வளர்ந்து வரும் இங்கிலாந்து மருந்துக் கம்பெனிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்கள், கட்டுமான கம்பெனிகளுக்கு தேவைப்பட்ட பொறியியலாளர்கள், இது போன்று தமக்கு தேவைப்படும் தகமையுடைவர்களை மட்டுமே உருவாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கணிப்பொறி வல்லுநர்கள் உருவாக்கப்படுகின்றனர். பொருளியல் மொழியில் கூறினால், சந்தையில் எந்தப் பண்டத்திற்கு பற்றாக்குறை உள்ளதோ, அதை உற்பத்தி செய்ய வேண்டும். அந்தப் பண்டம் மாங்காயாக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், இது தான் சந்தையின் விதி.

காலனியாதிக்க நாடான இங்கிலாந்தில் உருவாகிய மத்திய தர வர்க்கத்திற்கும், காலனி நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மத்தியதர வர்க்கத்திற்கும் இடையே ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. இவற்றை சற்று விரிவாக பார்ப்பது இன்றைய நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும். "இங்கிலாந்து தேசியத்தில்" தங்கியிருந்த ஆங்கிலேய மத்தியதர வர்க்கம், ஏற்கனவே நாடளாவிய அதிகாரங்களை வைத்திருந்த அரச/பிரபு குடும்பங்கள் போன்ற உயர் வர்க்கத்திற்கு போட்டியாக புரட்சிகர மாற்றங்களை கொண்டுவந்தது. அரசவை மொழியான பிரெஞ்சு மொழியை கைவிட்டு விட்டு உழைக்கும் வர்க்கம் பேசிய ஆங்கில மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த தேசியவாத உணர்வு காரணமாகத்தான், அந்த தேசத்தை நிர்வகிக்க தேவையான அனைத்து வகையினரையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றனவே அன்றி, நமது நாடுகளில் உள்ளது போல மருத்துவர்களை அல்லது கணிப்பொறி வல்லுனர்களை உற்பத்தி செய்யும் "சமூக தொழிற்சாலைகளை" கொண்டிருக்கவில்லை.

மத்தியதர வர்க்க பெற்றோர் தமது பிள்ளைகளை பெரும் மூலதனத்திற்கு சேவை செய்து சம்பாதிக்கும் படி போதித்து வளர்ப்பதால் தான், நிதி நெருக்கடியால் அமெரிக்க ஐ.டி. கம்பெனிகள் சொந்த ஊருக்கு மூட்டை கட்டும் போது, வேறு வழி தெரியாமல் திருப்பதி பாலாஜி சாமியிடம் சென்று முறையிடுகிறார்கள். பாமரர்கள் போல படித்தவர்களும் நடந்து கொள்வதை இந்தியாவில் தான் பார்க்கலாம். படித்தவர்கள் தமது திறமையை, அறிவை சொந்த தேச மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால், தற்போது எதிர்காலம் பற்றி அஞ்சத் தேவையில்லை. "உள்ளூரில் எனது திறமைக்கு தரும் கூலி குறைவு, அமெரிக்காவிலோ அள்ளிக் கொடுக்கிறார்கள்." என்று அதிக விலை பேசும் பெரு மூலதனத்திற்கு தனது உழைப்பை விற்கும் சுயநலவாதத்தை வெளிப்படுத்துவோர் அதற்கு தயாராகமாட்டார்கள். தமது உற்பத்தி செலவை குறைக்க மலிவு விலை தொழிலாளரை தேடி இந்தியா வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கும், தமது வருமானத்தை உயர்த்த அமெரிக்கா செல்லும் கணிப்பொறி நிபுணர்களுக்கும் தேசியம் தேவையில்லை. இது சர்வதேசியமல்ல, ஆனால் "சந்தை தேசியம்".

இந்தியாவில் தாம் அதிக வருமானம் எடுப்பதால் தம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவதாக ஐ.டி. துறையில் பணி புரிபவர்கள் கவலைப்படுகின்றனர். மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாலேயே சிலருக்கு தலைக்கனம் வருவதும், பிறர் அதைப்பார்த்து பொறாமை கொள்வதும் மனித இயல்பு தான். இருப்பினும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஐ.டி. தொழிலாளிகள், பெரு மூலதனத்தின் நூலில் ஆடும் பொம்மைகள் என்பது அவர்களுக்கே தெரியாத போது, பிறர் அறியாததில் வியப்பில்லை. முதலில் தம்மை "கணிப்பொறி நிபுணர்கள்" போன்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படுவதையே விரும்புவதும், பிற தொழிலாளர்களுடன் தம்மை இனம் காண மறுப்பதிலும் இருந்து தான் இந்த பிரச்சினை ஆரம்பமாகின்றது. அதிக சம்பளம் கொடுக்கும் பெரும் மூலதனம், இவர்களை அடிமட்ட உழைப்பாளர் வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் குறைவாக சம்பாதிக்கும் பிற மத்தியதர வர்க்கத்திடம் இருந்தும் தனியாக பிரித்து வைத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும்? உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய "கணனிக் கண்மணிகளின்" கண் கண்ட தெய்வம்.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தப் படும் மென்பொருட்கள் குற்றவாளிகளை மட்டும் பிடிக்கவில்லை, உள்நாட்டு போரில் அகப்படாது தப்பிவரும் அப்பாவி அகதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கின்றது, நாடு கடத்துகின்றது அல்லது தற்கொலைக்கு தள்ளுகின்றது. அந்தக்காலத்தில் ஹிட்லரின் கையில் இந்த மென்பொருட்கள் இருந்திருந்தால், எந்தவொரு யூதனும் தப்பியிருக்க முடியாது. தனிமனித சுதந்திரம் கொடிகட்டிப் பறப்பதாக பீற்றிக்கொள்ளும் மேலைநாடுகளில், தனிமனித நடவடிக்கைகளை அவதானிக்கும் மென்பொருட்கள் சத்தமில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகின்றன.

பல நூறு பேரின் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மென்பொருட்களின் வருகையால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை? ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், பிறரின் உயிர்களை பறிக்கும் குற்றத்தில் பங்கெடுக்கின்றனர். அதுபோல மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு, தாம் பிறரின் வேலைவாய்ப்பை பறிக்கிறோம், வறுமையை உருவாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா? நிச்சயமாக இருக்கும்.

இந்த குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தான், பில் கேட்ஸ் தனது லாபத்தில் ஒரு சிறிய தொகையை தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்குகிறார். அதைக்கூட இடதுகைக்கு தெரியாமல் வலதுகையால் கொடுப்பதில்லை. ஊரைக்கூட்டி விளம்பரம் தேடிவிட்டு தான் செய்கிறார். ஐ.டி. நிறுவனங்களும் இது போன்ற விடயங்களை தெரிந்தே வைத்திருக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை வெளிப்படையாக கூற முடியாது. "ஊழியர்களே! நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம்!!" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா? "சமூக சேவை தொண்டு செய்வது, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவது." என்று தமக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். இந்த மாதிரியை தமது ஊழியர்களும் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். வறுமைக்குள் தள்ளப்பட்ட நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், பணக்கார நாடுகளில் இந்த கலாச்சாரம் ஏற்கனவே உள்ளது.

ஐரோப்பிய கலாச்சாரத்தை...சரியாகச் சொன்னால் அமெரிக்க கலாச்சாரத்தை, அது சீரழிவே ஆனாலும், பழமைவாத இந்தியாவில் பரப்பத் துடிக்கும் ஐ.டி. நிறுவனங்களின் அரசியல் அதிகமாக கவனிக்கப்படுவதில்லை. கலாச்சார சீரழிவை தேர்ந்தெடுக்கும் ஒரு சிலரை வைத்துக் கொண்டு முழு ஐ.டி. துறையை களங்கப்படுத்தக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் அப்படி சீரழிவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் "அப்பாவி பலியாடுகள்" என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இருந்து, இந்த சீரழிவு கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் தரகு வேலையை ஐ.டி. நிறுவனங்களின் முகாமையாளர்கள் செய்கின்றனர். கம்பெனி செலவில் நடக்கும் இரவுக் களியாட்ட விழாக்களில், மது தாராளமாக பரிமாறப்படுகின்றது. இந்தக் கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்களுக்கு கிள்ளிப் போடும் தொகை, களியாட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையை விட மிகக் குறைவு என்பதை சொல்லத் தேவையில்லை.

இங்கே தான் ஐ.டி. கம்பெனிகளின் சுயரூபம் வெளிக்கின்றது. இந்திய கணிப்பொறி வல்லுனர்களின் உழைப்பை சுரண்டும் அதே நேரம், தாம் வழங்கும் (இந்திய தராதரத்தில்) அதிக சம்பளப் பணத்தை, நுகர்பொருள் கலாச்சாரம் நோக்கி திருப்பி விடுகின்றனர். ஐ.டி. கம்பெனிகளின் வருகைக்கு பின்னர் தான் இந்திய நகரங்களில் ஆடம்பர பாவனைப்பொருட்களை விற்கும் கடைகள் பெருகின. தீபாவளி, புதுவருடப் பிறப்புக்கு, ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது போல ஐந்நூறு, ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வருடாவருடம் கொடுக்கின்றன. இவற்றை குறிப்பிட்ட (உதாரணத்திற்கு இறக்குமதி ஆடைகளை விற்பனை செய்யும்) கடைகளில் மட்டுமே பயன்படுத்தலாம். அப்படியான கடைகள் இருப்பது தெரியாதவர்களுக்கு கூட அவற்றை அறிமுகப்படுத்துவதுடன், அதிகமாக நுகர்வதற்கு ஆசை காட்டப்படுகின்றது.

தமிழ் மென்பொருட்களையும் இதே கணிப்பொறி நிபுணர்கள் உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. அதுகூட வியாபார நோக்கம் கருதித் தான் நடந்தது. தமிழ் மென்பொருள் பாவனை வந்த பிறகு கணணி விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதையும், தமிழ் இணையத்தளங்களை பார்வையிடலாம் என அறிந்து ஆங்கிலம் தெரியாத ஆயிரக்கணக்கானோர் இணைய இணைப்பு பெற்றதை, நான் இங்கே புள்ளிவிபரங்களுடன் விளக்கத் தேவையில்லை. இதனை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம் அது.

ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் தான் கணணி பயன்படுத்தலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. கணனிக்கு ஆங்கிலம் தெரியாது, அது குறியீடுகளை மட்டுமே புரிந்து கொள்ளும், என்ற அடிப்படை தொழில்நுட்பம் ஒருபுறம் இருக்கட்டும். ஆங்கிலத்தை மட்டும் நம்பியிருந்தால் சீனாவிலும், ரஷ்யாவிலும் கடை விரிக்க முடியாது; என்ற சந்தை நியதி தான் எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியையும் சாத்தியமாக்குகின்றது. தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.

பங்குச் சந்தைக்கும், பால்காரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தெரியாது. அது போலத்தான் முதலாளித்துவம் எப்படி தம்மை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிகின்றது என்பது கணிப்பொறி நிபுணர்களுக்கு தெரியாது. அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளும், வர்த்தக நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு கணிப்பொறி நிபுணர்களை உருவாக்கும் கல்வியில் முதலிடுவதை நிறுத்தி விட்டன. அதற்குப் பதிலாக இந்தியாவில் ஐ.டி. படிப்பு முடித்தவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. தாமே மென்பொருட்களை தயாரிக்கக் கூடிய வல்லமை இருந்தும், தகுதியான உள்ளூர் நிபுணர்கள் இருந்தும், அதற்கான முயற்சியே எடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம், ஐ.டி. துறையில் இந்தியர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதல்ல. பொருளாதார ரீதியான திட்டமிடலே ஒரேயொரு காரணம்.

உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனம், தனக்கு தேவையான மென்பொருளை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது, அதற்கு பத்து கணிப்பொறி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை கூட்டிப்பார்த்தால், இறுதியில் அந்த மென்பொருளின் செலவு அதிகமாக இருக்கும். சந்தையில் அதைவிட குறைந்த விலைக்கு, ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் கிடைக்கின்றது.

எல்லோரும், எங்கே பொருள் மலிவாகக்  கிடைக்கும் என்று தானே பார்ப்பார்கள்? இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து, ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதால், இந்நாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் பயனடைகின்றன. குறிப்பிட்ட ஒரு நபரை பணியில் அமர்த்திக்கொள்ளும் நிறுவனம், அவரது சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவே முகவர் நிலையத்திற்கு கொடுக்கின்றது. இதனால் முகவர்கள் அதிக வருமானம் ஈட்டுவது ஒருபுறமிருக்க, தேவைப்படாவிட்டால் விரும்பிய நேரம் வேலையை விட்டு நிறுத்திவிடலாம் என்பது அனுகூலமாக பார்க்கப்படுகின்றது.

பெரும் மூலதனத்துடன் வரும், வெளிநாட்டு தேசங்கடந்த நிறுவனங்களை கையாள்வதில், கியூபாவின் நடைமுறை இங்கே ஒப்புநோக்கத் தக்கது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உல்லாசப் பிரயாணத் துறையில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் யாவும், கியூபா அரசுடன் Joint Venture என்ற இரட்டை முகாமைத்துவ முறையின் கீழேயே அனுமதிக்கப்பட்டன. துப்பரவு பணியாளர் முதல் மனேஜர் வரை கியூபா பிரசைகளையே பணிக்கு அமர்த்திய போதும், அவர்களுக்கு வெளிநாட்டு நிறுவங்கள் முன்னூறு தொடக்கம் எண்ணூறு(தகுதிக்கேற்ற படி) டாலர்கள் என்று அள்ளிக் கொடுத்த போதும், அனைத்து சம்பளங்களும் சராசரி கியூப தரத்தை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன.


உதாரணத்திற்கு கியூபாவில், சராசரி சம்பளம் நூறு டாலர் என்றால், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளம் நூற்றி இருபது டாலராக இருக்கும். மிகுதியை பிடித்துக் கொள்ளும் அரசாங்கம் அதனை பிற துறை சார்ந்த தொழிலாளர் நல திட்டங்களில் முதலீடு செய்யும். வெளிநாட்டு நிறுவனங்கள் ஐந்து அல்லது பத்து வருடங்கள் மட்டுமே நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்படுவதால், அதற்குப் பின்னர் அரசாங்கம் பொறுப்பு என்பதால், யாருக்கும் அங்கே நாளை வேலை போனால் என்ன செய்வது, என்ற அச்சம் இல்லை. தொழிலாளர் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்கி, சமுகத்தில் பிரிவினை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வான சம்பள முறை ஏற்கனவே இந்தியாவில் தவிர்க்கப்பட்டிருந்தால்; யாரும் "திமிர் பிடித்தவர்கள்" என்று பெயர் எடுத்திருக்கவும் மாட்டார்கள், யாரையும் "பொறாமைக்காரர்கள்" என்று குற்றம் சாட்டவும் அவசியம் இருந்திருக்காது.Saturday, November 22, 2008

கிழக்கே நகரும் உலக அதிகார மையம்உலகில் அமெரிக்கா என்ற ஒரேயொரு அதிகார மையம் மறைந்து, அந்த இடத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற பல அதிகார மையங்கள் உருவாக்கி வருவதாக, அமெரிக்க தேசிய புலனாய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இத்தகைய நிலையை ஏற்கனவே பலர் சரியாக கணித்து இருந்த போதும், அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமொன்று அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்று, எதிர்கால உலகில் ஆசியாவின் தலைமைப் பாத்திரம் குறித்த நிகழ்ச்சி ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்(1 செப்டம்பர் 2008) ஒளிபரப்பியது. 'The New Asian Hemisphere: The irresistible Shift of Global Power to the East' என்ற நூலை எழுதி வெளியிட்ட, சிங்கப்பூர் பல்கலைக்கழக உப வேந்தரும், ஐ,நா.சபைக்கான முன்னாள் தூதுவருமான Kishore Mahbubani என்பவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல், உலக அதிகார மையம் மாறுவதன் காரண காரியங்களை அலசுகின்றது. அவரது கருத்துகள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் இங்கே கொடுத்திருக்கும் தொடுப்பின் மூலம் முழு பேட்டியையும் பார்வையிடலாம். உரையாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது.

மேற்குலகின் தவறான வெளிவிவாகார கொள்கைகள் பற்றி விமர்சனங்களை வைக்கும் அதே வேளை, ஆசிய நாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேற்குலக அடிப்படையை கொண்டிருந்த போதும், தமக்கென தனியான பாதையை வகுத்துக் கொண்டதை அலசுகிறார். கிஷோரைப் பொறுத்த வரை, ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஜனநாயகம் அவசியமல்ல, சிறப்பான ஆட்சி அமைப்பே முக்கியம்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியானது, மேற்குலகில் வெற்றிக் களிப்பை ஏற்படுத்தியது. கம்யூனிசத்தை ஜனநாயகம் வென்று விட்டது என்றும், இனிமேல் உலகம் முழுவதும் வேறுவழியின்றி தம்மைத் தான் பின்பற்ற வேண்டும் என்று மேற்குலகம் மமதை கொண்டது. அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா போன்றோர், சரித்திரம் இத்துடன் முற்றுப் பெற்று விட்டதாகவும், மேற்கத்திய நாகரீகம் இனி காலங்காலமாக நிலைத்து நிற்கும் என்றும் எதிர்வு கூறினார். (பூக்கியாமா தனது நிலைப்பாட்டை பிறகு திருத்திக் கொண்டார்.) உலக மக்கள் முழுவதும் இனிமேல் சராசரி அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் போல மாறி விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். அதாவது உலகம் பன்முகக் கலாச்சாரம் கொண்டது என்ற யதார்த்தத்தை மறுதலித்து, ஒற்றைக் கலாச்சாரம் கொண்டது என்று கருதினர்.

ஐரோப்பிய புத்திஜீவிகள் ஐரோப்பிய மையவாத கண்ணோட்டத்திலேயே உலகைப் பார்ப்பதாக கிஷோர் விமர்சிக்கிறார். இதனால் அவர்கள் மூடுண்ட சமூகத்தினுள் வாழ்வதாக, சர்வதேச உறவுகளில் பல தவறான முடிவுகளை எடுப்பதாக கூறுகின்றார். இப்போதும் தினசரி பிரபல அமெரிக்க நாளிதழ்கள் சீனா போன்ற நாடுகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுப்பதாகவும், இந்த போதனைகள் தற்போது சீனர்களுக்கு சலிப்பைத் தருவதால், யாரும் பொருட்படுத்துவதில்லை, என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.

மேற்கத்திய நாடுகள் எதிர்பார்ப்பது போல மாற்றம் ஒரே இரவில் வரப்போவதில்லை. மேற்குலகம் மீதான புதிய வெறுப்புணர்வு சோவியத் வீழ்ச்சியுடன் ஆரம்பமாகியது. ரஷ்யா ஒரே நாளில் கம்யூனிச பொருளாதாரத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு(முதலாளித்துவ பொருளாதாரம்) மாறிய போது, ரஷ்ய மக்கள் சொல்லவொணா துன்பத்தை அனுபவித்தனர். அவர்களது தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றது. அப்போது ரஷ்யர்கள் ஏதோ ஜனநாயகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல, மேற்குலகம் அன்றைய மக்களின் அவல நிலையை கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததே தவிர உதவி எதுவும் செய்யவில்லை. அந்த படிப்பினை தந்த விளைவு தான், இன்று ரஷ்ய ஆளும் வர்க்கம் மேற்குலகின் மீது வன்மம் கொண்டிருப்பதன் காரணம். சீனாவும் அதனை அவதானித்து வந்துள்ளது. தமது நாட்டிலும் ரஷ்யா போன்ற நிலைமை வரக்கூடாது என்பதால் தான், சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டம் கட்டமாக பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டுவந்தது.

சீனா தனது இரண்டாயிரம் வருட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, இடையிடையே, நிலையற்ற ஆட்சி, அல்லது சட்டம் ஒழுங்கற்ற ஆராஜக நிலை நிலவியது. சில நூற்றாண்டுகளாவது தொடர்ந்த, அது போன்ற காலகட்டத்திற்கு திரும்பக்கூடாது என்ற அச்சமே, சீன அரசு தனது இரும்புப் பிடியை தளர்த்தாததன் காரணம். ஜனநாயக அமைப்பை தனது இறுதி லட்சியமாக கொண்டிருப்பதாக கூறும் கிஷோர், ஆனால் மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல சீனா ஒரு சில வருடங்களில் ஜனநாயகமயப் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்பது மட்டுமல்ல, அது எதிர்மறையான விளைவுகளையும் தோற்றுவிக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றார்.

தனிமனித சமத்துவத்தை சட்டமாக பிறப்பித்த அமெரிக்கா, அந்த சட்டம் இயற்றி 200 வருடங்களுக்கு பிறகு தான் கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை கொடுத்ததை நினைவுபடுத்தும் கிஷோர், ஆகவே அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது சீனா கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாதித்தது அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். சாதாரண சீன மக்கள் மாணவர்களாகவோ, உல்லாசப் பிரயாணிகளாகவோ ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் வேளை, அங்கிருக்கும் சிறந்த அம்சங்களை தமது நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் காலப்போக்கில் சீன மக்கள் தாமாகவே ஜனநாயக சமூகமாக மாறிவிடுவார்கள். அதை விடுத்து, சீனாவில் குறை கண்டுபிடித்து, அதனை பூதாகரமாக காட்டும் போது, மேற்குலகின் உள்நோக்கம் குறித்து சீன மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு காலத்தில், அமெரிக்கர்கள் ஜனநாயகத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று சீன புத்திஜீவிகள் நம்பினர். ஆனால் (கியூபாவில் அமெரிக்க தளமான) குவாந்தனமோ சிறையில் வைத்து கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட செய்திகள் வெளியான போது, அமெரிக்கா பற்றிய எண்ணங்களை அடியோடு மாற்றிக் கொண்டு விட்டனர். நாகரீகத்தின் உச்சிக்கு வந்து விட்டதாக நம்பப்பட்ட அமெரிக்காவே சித்திரவதை போன்ற மனித உரிமை மீறல்களை செய்யலாமென்றால், சீனாவை மட்டும் குறை சொல்லும் போக்கு, இரட்டை அளவுகோலை எடுத்துக் காட்டுகின்றது. ஊருக்கு உபதேசம் செய்து கொண்டே, தனக்கு பிறிதான நீதியை வைத்திருக்கும் இரட்டை அளவுகோல் முறை இன்று பல உலக நாடுகளை வெறுப்படைய வைத்துள்ளது. அதனாலேயே அமெரிக்கா சொல்வதை கேட்பவர்கள் குறைந்து விட்டது.

வெளிவிவகார கொள்கைகளில் மேற்குலகின் தவறான நிலைப்பாட்டிற்கு இன்னொரு உதாரணம் ஈரான். அமெரிக்க அதிபர் புஷ் ஈரானை "முரட்டு நாடுகளின்" பட்டியலில் இட்ட நேரம், அந்த நாட்டை கதாமி என்ற மிதவாத தலைவர் ஆண்டுவந்தார். அனைத்து முஸ்லீம் நாடுகளிலும், ஈரானியர்கள் தான் அதிகளவு அமெரிக்க சார்பானவர்கள். அப்படியான நாட்டை, வெளியுலக தொடர்பை துண்டித்து தனிமைப்படுத்தி, அந்த மக்களுக்கு மேற்குலகில் கல்வி கற்கும் வசதிகளை மறுத்து, பொருளாதார தடைகளை ஏற்படுத்த போனால், மக்களும் மேற்குலகின் மீது இயல்பாகவே வெறுப்படைவது இயல்பு. அதனால் மேற்குலக எதிர்ப்பு ஜனாதிபதி அஹ்மதின்ஜாத் போன்றவர்களை ஈரானிய மக்கள் தெரிவு செய்ததில் வியப்பில்லை.

இஸ்லாமிய நாடுகள் மீதான ஐரோப்பாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் கிஷோர் கூறுகின்றார். குறிப்பாக வட ஆப்பிரிக்காவில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் ஐரோப்பிய கண்டத்திற்கு அருகில் இருக்கும் அதே நேரம் ஏற்றத்தாழ்வான இரண்டு உலகங்கள் அருகருகே அமைந்துள்ள முரண்பாட்டையும் கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்த முதலாம் உலகை சேர்ந்த, குறைந்தளவு சனத்தொகையை கொண்ட ஐரோப்பா ஒரு பக்கம். அதே நேரம் அபிவிருத்தியடையாத மூன்றாம் உலகைச் சேர்ந்த, அதிகரித்து வரும் சனத்தொகையை கொண்ட வட ஆப்பிரிக்கா மறு பக்கம். இது போன்ற முரண்பாட்டை தொடர விடுவது ஆபத்தானது. ஐரோப்பா தனது நலன்களை பற்றி மட்டுமே கவனிப்பதை ஒத்தி வைத்து விட்டு, அயலில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளை நவீனமயப் படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை நீக்கலாம். இஸ்லாமிய நாடுகளும் தமது பின்தங்கிய நிலை நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து, நவினமயப் படலாம் என்பதைக் காட்டவே பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்ட துபாய் நகரின் படத்தை தனது நூலின் அட்டையில் போட்டதாக கிஷோர் தெரிவிக்கின்றார்.

"நவீனமயப்படுதல்" என்பதை மேற்கத்தைய கலாச்சாரத்தை பிரதி பண்ணுதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இத்தகைய மேலைத்தேய கருத்தாக்கமே பன்முகக் கலாச்சார உலகை ஏற்றுக் கொள்ள மறுக்கும் முக்கிய தடைக்கல். ஒவ்வொரு மக்கள் குழுவும், அந்நிய கலாச்சார சிறப்பம்சங்களை தன்வயப்படுத்துவதன் மூலம் பரிணாம வளர்ச்சியடைகின்றன. அவர்கள் தமது கலாச்சாரத்தை கைவிட்டு விட்டு, ஐரோப்பியராக மாறி விடுவார்கள் என எதிர்பார்ப்பது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. இன்றைக்கும் மேலைத்தேய உயர்கல்வி கற்ற இளம்தலைமுறை தமது தாய் மொழிப் பெயர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (கிஷோர் இங்கே சீனர்களை குறிப்பிடுகிறார். நம்மவர்களைப் பற்றி உங்களது தீர்ப்பிற்கே விடுகிறேன்.)

Video: The Interview with Kishore Mahbubani

Friday, November 21, 2008

சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா?


ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?

சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.

பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!

சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல. அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை. இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.

1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது. ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.
உசாத்துணை:

'World only cares about pirates'


'Toxic waste' behind Somali piracy


SOMALIA VIDEO

Part 1

Part 2


________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Thursday, November 20, 2008

"ஒபாமா ஒரு இனத் துரோகி!"- அல் கைதா குற்றச்சாட்டு

அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட ஒபாமா பற்றிய அல் கைதாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அல் கைதாவின் இரண்டாவது தலைவரும், கொள்கை வகுப்பாளருமான ஸவாஹிரி(Zawahiri) இந்த வீடியோவில் உரையாற்றுகிறார்.

ஒபாமாவின் தந்தை ஒரு முஸ்லீமாக இருந்த போதும், பெரும்பான்மை வெள்ளையினத்தவர்களை போல கிறிஸ்தவராக இருப்பது மட்டுமல்ல, யூத மதத் தலைவர்களுக்கும் ஆதரவாக நடந்து கொள்வதை சுட்டிக்காட்டும் ஸவாஹிரி, இதனால் ஒபாமா ஒரு துரோகியாக பார்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பின விடுதலைப் போராளியும், தனது இன மக்களை இஸ்லாமியராக மாறும்படி ஊக்குவித்த "கறுப்பு முஸ்லீம் தேசிய" தலைவர் மல்கம்-எக்சினை(Malcom-x) ஸவாஹிரி தனது உரையில் மேற்கோள் காட்டுகின்றார். ஸவாஹிரி ஒபாமாவை ஒரு "வீட்டு நீக்ரோ" என்று அழைக்கிறார். மல்கம் எக்ஸின் புகழ்பெற்ற கூற்றான: "வெள்ளையின எசமானுக்கு உயிரைக் கொடுக்குமளவு விசுவாசம் காட்டும், வீட்டு வேலைக்காரனாக இருப்பதால் கிடைக்கும் வசதிகளையிட்டு பெருமிதப்படும் வீட்டு நீக்ரோ அடிமைத்தனம்" இந்த வீடியோவில் மேற்கோள் காட்டப்படுகின்றது. மேலும் ஒபாமா தனது வெளியுறவுக் கொள்கையாக, இஸ்லாமிய நாடுகளான ஆப்கானிஸ்தான் போரை தொடரப் போவதையும், ஈரான் மீது படையெடுக்க ஆலோசிப்பத்தையும், "இஸ்லாமிய சகோதரத்துவ" சித்தாந்த குருவான ஸவாஹிரி கடுமையாக கண்டித்துள்ளார்.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, "பராக் ஹுசைன்" என்ற அரபு இஸ்லாமியப் பெயரை கொண்டிருப்பதும், தந்தை கென்யாவை சேர்ந்த இஸ்லாமியர் என்பதும், அவர் தெரிந்தெடுத்த முதன்மை ஆலோசகர் ராம் இமானுவேல், கடும் போக்கு சியோனிச யூத குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கில உப தலைப்புகளுடனான முழுமையான வீடியோ இத்துடன் இணைக்க பட்டுள்ளது.
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

Wednesday, November 19, 2008

இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்


"நமது நாட்டை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்ட வேண்டும்." இவ்வாறு அரசியல்வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை, ஒரு ஆசிய நாடான சிங்கப்பூர் பணக்கார நாடாக இருப்பதை உதாரணமாக காட்டி, வியந்துரைப்பதை பலர் கேட்டிருக்கலாம். ஆனால் "சிங்கப்பூர் செல்வந்த நாடானது எப்படி?" என்ற இரகசியம் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. ஒரு காலத்தில் மீனவர்களின் தீவாக இருந்து, பிற்காலத்தில் சீன கடற்கொள்ளையர்களின் புகலிடமாக மாறிய சரித்திரம் பற்றி பலர் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அண்மையில் ஹோலிவூட் படமான "பைரேட்ஸ் ஒப் கரீபியன்" கதையில் சீன (சிங்கப்பூர்) கடற்கொள்ளையரை காண்பித்த பின்னர், அது குறித்த ஆர்வம் மீண்டும் எழுந்துள்ளது. (பார்க்க :The Pirates of Singapore) சிங்கப்பூர் தனிநாடான போது, முன்னாள் கடற்கொள்ளையர்கள் தாம் கொள்ளையடித்து சேர்த்த பணத்தையெல்லாம் வர்த்தகத்தில் முதலீடு செய்து விட்டனர். அவர்களது பிள்ளைகள் இன்று "மதிப்புக்குரிய" கம்பெனி முதலாளிகளாக வலம்வருகின்றனர். இது தான் சிங்கப்பூர் பணக்கார நாடான கதைச் சுருக்கம்.

இன்று இந்து சமுத்திரத்தில் வெற்றிகரமாக கப்பல்களை கடத்திச் சென்று, பணயம் வைத்துக் கொண்டு பணம் கேட்கும் சோமாலிய கடற்கொள்ளையரும், நாளை கம்பெனி முதலாளிகளாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. சோமாலியாவில் நிரந்தர அரசமைப்பு உருவாகும் வரை கடற்கொள்ளையரின் பிரச்சினை தொடரவே செய்யும் என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதன் படி பார்த்தால் ஒரு சில கடற்கொள்ளையர்களை இப்போது பிடித்து தண்டித்தாலும், மிகுதிபேர் எதிர்கால சோமாலியாவின் முதலாளித்துவ பொருளாதாரத்தில் தமது பங்கை செலுத்துவார்கள்.

கரீபியன் கடற்கொள்ளைக்காரர்களின் உண்மைக்கதையும் இதுதான். "பைரேட்ஸ் ஒப் கரீபியன்" திரைப்படம் சொல்லமுடியாத சேதி அது. அப்போது வடக்கு அமெரிக்க மாநிலங்களில் மட்டுமே சட்டபூர்வ அரசு ஏற்பட்டிருந்த காலமது. தென்பகுதி மாநிலங்கள், இன்று நாம் காணும் சோமாலியாவின் நிலையை ஒத்ததாக இருந்தது. அதனால் அவை கடற்கொள்ளையரின் புகலிடமாக இருந்தன. கடற்கொள்ளையருக்கு பொது மன்னிப்பு மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய வைத்து, அமெரிக்க அரசும் அடித்த கொள்ளையில் லாபம் பார்த்தது. இப்படி எல்லாம் செய்திருக்கா விட்டால், அமெரிக்கா பணக்கார நாடாக வந்திருக்க முடியுமா?

இங்கிலாந்தும் கடற்கொள்ளையால் நன்மையடைந்த ஒரு தேசம் தான். முதலாம் எலிசபெத் மகாராணி (பார்க்க:
"PIRATE QUEEN ELIZABETH") காலத்தில், ஆங்கிலேய கடற்கொள்ளையர்கள் தென் அமெரிக்காவில் இருந்து தங்கம் ஏற்றி வந்த ஸ்பானிய கப்பல்களை தாக்கி கொள்ளையடித்தார்கள். இங்கிலாந்து செல்வந்த நாடானதற்கு, ஒருவகையில் கடற்கொள்ளையருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்த காலமது. அதனால் கடற்கொள்ளக்காரருக்கும் பொற்காலமாக இருந்தது. போர் முடிந்து சமாதானம் வந்த பின்னர், இங்கிலாந்து அரசால் இனி தேவையில்லை என்று கைவிடப்பட்ட கடற்கொள்ளைக்காரர்கள் தான் பின்னர் கரீபியன் கடல் பிரதேசத்தில் அட்டகாசம் செய்தார்கள்.

சோமாலியா, அன்றைய சர்வாதிகாரி "சியாட் பாரெ"யின் காலத்தில், சோவியத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரினுள் அகப்பட்டு சின்னாபின்னப் பட்டது. அன்றே அந்த நாட்டை சும்மா விட்டிருந்தால், இன்று அங்கே ஒரு தேசிய அரசு நிலைத்து நின்றிருக்கும். சோமாலியா மக்கள் அனைவரும் இஸ்மாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே மொழியான "சோமாலி" பேசுவதும் மட்டுமே அவர்களை ஒன்று சேர்க்கும் அம்சங்கள். மற்றும் படி பண்டைய காலத்தில் இருந்து, சாதி ரீதியாக பிரிந்துள்ள மக்கள் (ஆமாம், இந்தியா போன்றே அங்கேயும் சாதிகள் உள்ளன) தத்தம் சாதிய தலைவர்களுக்கே விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் ஏகாதிபத்திய தலையீடு காரணமாக சோமாலியாவில் அரச கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்ட போது, கிடைத்த இடைவெளியில் சாதீய சக்திகள் தலையெடுத்தன. ஒவ்வொரு சாதியும் தனக்கென ஆயுதக்குழுவை உருவாக்கி, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. சர்வதேச ஊடகங்கள் அதனை "யுத்த பிரபுக்கள் மோதிக்கொள்வதாக" உலகிற்கு திரித்துக் கூறின.

இருப்பினும் யுத்த பிரபுக்களாக மாறிய சாதீய தலைவர்கள், தமது நலன்களுக்காக மட்டுமே ஆயுதபாணிகளை வைத்துக் கொண்டதும், சொந்த சாதியினரையே வருத்தியதும், யாருமே வெற்றியடையாத நீண்ட போரும், மக்களை விரக்தியடைய வைத்தன. அதனால் பெரும்பாலான மக்கள் புதிதாக தோன்றிய இஸ்லாமியவாத இயக்கத்திற்கு ஆதரவு வழங்கினர். இந்த இஸ்லாமியவாத இயக்கம் "அல் கைதாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக" சந்தேகப்பட்ட மேற்குலக நாடுகள், சோமாலி மக்களின் விருப்பத்திற்கு மாறாக யுத்த பிரபுக்களுக்கு உதவி செய்தனர். இஸ்லாமியவாதிகளை அடக்குவதற்காக, அயல்நாடான எத்தியோப்பியாவை படையெடுக்குமாறு தூண்டினர். இன்று தமது நாட்டில் பொருளாதார பிரச்சினை காரணமாக எத்தியோப்பியபடைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சோமாலியாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. இது கடற்கொள்ளையில் ஈடுபடும் கிரிமினல் கும்பல்களுக்கு சாதகமான நிலைமை என்பதை சொல்லத்தேவையில்லை.

சோமாலிய கரையில் இருந்து 200 கடல் மைல் தூரத்திற்குள் வரும் பிரயாணிகள் கப்பலானாலும், சரக்கு கப்பலானாலும், கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டு பெருமளவு பணம் பிணையாக கொடுக்கப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுகின்றது. ராக்கெட் லோஞ்சர் போன்ற நவீன ஆயுதங்களுடன், நவீன திசையறிகருவிகளுடனும் சிறு சிறு குழுக்களாக அதிவிசைப்படகுகளில் வந்து சுற்றிவளைக்கும் கொள்ளைகாரருடன், கப்பல் பணியாளர்கள் சண்டை பிடிக்காமல் சரணடைந்து விடுகின்றனர். கப்பலில் உள்ள பயணிகளையும், பல லட்சம் பெறுமதியான கப்பலையும், சரக்கையும் பாதுகாப்பதற்காக அவ்வாறு சரணடயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கப்பலைக் கைப்பற்றும் கொள்ளைக்காரர்களும் மிக அரிதாகவே பணியாளர்கள் மீது வன்முறை பிரயோகிக்கின்றனர். மில்லியன் கணக்கில் கேட்கப்படும் பணம் கொடுக்கப்பட்ட பின்னர் கப்பல்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த வருடம் மட்டும் பல மில்லியன் டாலர்கள் இவ்வாறு சோமாலியாவிற்கு வருமானமாக கிடைத்துள்ளது. நீண்ட கால யுத்தம் காரணமாக, விவசாயம் உட்பட அனைத்து உற்பத்திகளும் ஸ்தம்பிதமடைந்துள்ள சோமாலியாவிற்கு, இந்த கிரிமினல் பொருளாதாரம் மட்டுமே "அந்நிய நிதியை" கொண்டு வந்து சேர்க்கின்றது. அதனால் தான், சோமாலியாவிலும் இன்றைய கடற்கொள்ளையர்கள் நாளைய முதலாளிகளாக வரக்கூடிய சாத்தியம் உள்ளது.(பார்க்க:Ransoms bring wealth to Somalia)

அமெரிக்க, ஐரோப்பிய கடற்படைகள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தாலும் கடற்கொள்ளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அண்மையில் கனரக ஆயுததளபாடங்களுடன் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய கப்பல், நூறு மில்லியன் டாலர் பெறுமதியான சவூதி எண்ணெய் கப்பல் என்பன, பேரம் பேசலுக்கு பிறகு, சோமாலிய கடற்கொள்ளையருக்கு இதுவரை இல்லாத வருமானத்தை ஈட்டித்தரலாம். கப்பலுக்கும், பணியாளர்களுக்கும் ஆபத்து என்பதால், சர்வதேச கடற்படைகள் தூரத்தில் இருந்த படியே நடப்பனவற்றை அவதானித்து வருகின்றன.

சுயெஸ் கால்வாய் ஊடாக இந்து சமுத்திரத்திற்கு பயணம் செய்வது தற்போது ஆபத்து நிறைந்தது என்று கருதப்படுவதால், ஆப்பிரிக்க கண்டத்தை நன்னம்பிக்கை முனைப் பக்கமாக சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. நோர்வே தனது கப்பல்களை ஏற்கனவே அப்படித் தான் அனுப்பி வருகின்றது. மேலும் "டெல்டா லியோட்ஸ்" போன்ற, கப்பல் கம்பனிகளின் காப்புறுதி நிறுவனங்கள் தான், இறுதியில் கடற்கொள்ளையர் கோரும் பணத்தை கொடுத்து வருகின்றன. இதனால் மாதாமாதம் கட்டப்படும் காப்புறுதிப்பணம் இந்த வருடம் மட்டும் ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இது இன்னும் உயரலாம். ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை காரணமாக காட்டி கப்பல் கம்பெனிகள் சேவைக் கட்டணத்தை கூட்டி விடும். அதன் விளைவு, இவை ஏற்றிச் செல்லும் சரக்குகளின் விலையும் உலக சந்தையில் அதிகரிக்கும். அப்படியானால், நாம் அன்றாடம் நுகரும் உணவுப்பொருட்கள், பிற பாவனைப்பொருட்கள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

உசாத்துணை :
Piracy (விக்கிபீடியா)

Creative Commons License
Op dit werk is een
Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Sunday, November 16, 2008

சோவியத் இளைஞர் மன்றத்திற்கு 90 வயது


"கொம்சொமோல்"(Komsomol) என்ற ரஷ்ய பெயரால் அழைக்கப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் இளைஞர் அமைப்பு, கடந்த 29 ஒக்டோபர் தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடியது. இன்று அந்த அமைப்பு முக்கியத்துவம் இழந்து விட்டாலும், (கொள்கைரீதியாக பிரிந்துள்ள) பல்வேறு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் இளைஞர் அணியினர், கொம்சொமொலின் 90 வது பிறந்தநாள் விழாவை பரவலாக ரஷ்யாவெங்கும் கொண்டாடியுள்ளனர். இன்று மிகப்பெரிய கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான "புரட்சிகர போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி" நடத்திய மகாநாட்டில், முன்னாள் சோவியத் குடியரசுகளான பெலாரஸ், உக்ரைன், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் பலர் பங்குபற்றினர். அந்த மகாநாட்டில் மீண்டும் அனைத்து சோவியத் குடியரசுகளை உள்ளடக்கிய புதிய கொம்சொமோல் ஸ்தாபிக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.

இன்றைய ரஷ்யாவில் முன்னாள் அதிபர் விளாடிமிர் புத்தின் உருவாக்கிய "நாஷி" என்ற இளைஞர் அமைப்பு தான் பலமாக உள்ளது. இந்த நாஷிக்கும், கொம்சொமொலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாஷி, புத்தினின் தலைமை வழிபாட்டையும், ரஷ்ய தேசியவாதத்தையும் முன்னெடுக்கின்றது. அதற்கு மாறாக கொம்சொமோல் மாணவர், இளைஞரை பயனுள்ள திட்டங்களில் ஈடுபடுத்தியது. கொம்சொமோல் ஓரளவுக்கு பிரிட்டிஷாரின் சாரணர் அமைப்பைபோடு ஒப்பிடத்தக்கது. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவும் இருந்தது. மேற்குலகில் பரவலாக நம்பப்படுவதைப் போல, இந்த இளைஞர் மன்றத்தில் அங்கத்தவராக சேருவது கட்டாயமாக இருக்கவில்லை. இருப்பினும் கொம்சொமோல் அங்கீகாரம் பல பதவிகளுக்கு தேவைப்பட்டது.

பழைய கொம்சொமோல் உறுப்பினர்கள் இப்போது நினைவு கூறுவது போல, அரசியல் கூட்டங்கள் பலருக்கு சலிப்பை கொடுத்திருக்கலாம். வாரமொரு முறை கண்டிப்பாக செய்ய வேண்டிய தொண்டு வேலையும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் மேற்குலகில் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது போல, "கொம்சொமோல் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்" கலாச்சார சீரழிவுக்கு இட்டு செல்லவில்லை. வேண்டாவெறுப்பாக அந்த அமைப்பில் சேர்ந்தவர்களின் சாட்சியமே, அந்த பிரச்சாரத்தை முறியடிக்கிறது. தன்னால் "சாதாரண(அங்கத்துவரல்லாத) இளைஞர்கள் போல மதுபான விடுத்திக்கு போக முடியவில்லை" என்றும், "தொண்டு வேலை செய்து கிடைத்த சிறு தொகையில் இரகசியமாக மது வாங்கி குடிக்க வேண்டியிருந்ததாகவும்" இவர்கள் கொம்சொமோல் காலங்களை நினைவு கூறுகின்றனர். (பார்க்க:
Happy Birthday, Komsomol!)

மாணவர், இளைஞர்களை நிறுவனப்படுத்தி அவர்களுக்கு சமூகப் பொறுப்பை கற்றுக் கொடுப்பதே கொம்சொமொலின் நோக்கமாக இருந்தது. போல்ஷெவிக் புரட்சியின் பின்னர் 1918 ம் ஆண்டு கொம்சொமோல் உருவாக்கப்பட்ட போது, அதன் உறுப்பினர்கள் தொகை 22000. இரண்டு வருடங்களுக்கு பின்னர், சோவியத் முழுவதும் போல்ஷெவிக் அதிகாரம் வந்த பின்னர், உறுப்பினர் தொகை நான்கு லட்சமாக உயர்ந்தது.

புரட்சிக்குப் பின்னான Komsomol உறுப்பினர்களின் முதலாவது கடமை, அனைத்து சோவியத் மக்களுக்கும் எழுத்தறிவை கொடுப்பதாகவிருந்தது. அப்போது பெரும்பான்மை ரஷ்யர்கள் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளாக இருந்த காலம் அது. 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட காலத்தில், "எழுத்தறிவின்மையை ஒழிக்கும்" போராட்டத்தில் குதித்த Komsomol உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு எழுதப்படிக்க(இலவசமாக) கற்பித்தனர். அதை தவிர மொஸ்கோ நிலக்கீழ் சுரங்கரயில் திட்டம், துர்கெஸ்தான்- சைபீரிய ரயில்பாதை கட்டுமானம் போன்றன இன்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள். இரண்டாம் உலகப்போரில் Komsomol தனது உறுப்பினர்களை விமானமோட்டிகளாக பயிற்சி கொடுத்தது. உலகப் போருக்கு பின்னர் பல திறமையான முகாமையாளரை உருவாக்கியது. முரண்நகையாக சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் நிறுவனங்களை பொறுப்பெடுத்த முதலாளிகளும் கொம்சொமொலின் பயிற்சிப்பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான்.

"மனித குலத்தின் அனைத்து அறிவுச் செல்வங்களையும் கற்றுத்தேர்ந்து புலமை பெற்ற பின்பு தான், நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் ஆக வர முடியும்." - லெனின், Komsomol மூன்றாவது மகாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து.

உசாத்துணை தொடுப்புகள் :
Happy Birthday, Komsomol!
Komsomol (Wikipedia)
Video: Long Live Komsomol

____________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Saturday, November 15, 2008

ஐரோப்பா: சர்வதேச போர்களின் தொடக்கப்புள்ளி


கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவர்களது தாயக பூமியில் மக்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கையில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் குண்டு வீசிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இராணுவ முகாம்கள், தம் நாட்டு சிப்பாய்களை யுத்தகளத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறன. ஆம், ஐரோப்பா போரில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் சாதாரண ஐரோப்பிய பிரசைக்கு இது குறித்து எதுவும் தெரியாது. தமது வீட்டிற்கருகில் குண்டு விழாத வரை, அவர்களுக்கு அக்கறையும் இல்லை.

ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளைப் போல பரம்பரை பகைமை கொண்ட எதிரிகளை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. இந்திய-பாகிஸ்தான் சச்சரவெல்லாம், ஐரோப்பிய குரோதங்களுக்கு முன்னால் ஒன்றுமேயில்லை. இங்கிலாந்தும் பிரான்சும் தொடர்ந்து நூறு ஆண்டுகள் போரில் ஈடுபட்டிருந்தன. நெதர்லாந்து என்பது ஆண்டுகள் யுத்தம் செய்து தான், ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. ஜெர்மனியும், பிரான்சும் இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை, ஒருவர் மற்றவரை கண்டால் கொன்று தின்னுமளவு வன்மம் கொண்டிருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் (முதலாம் உலகப்போரை போலவே அதுவும் ஐரோப்பிய நாடுகளின் போர் தான்) முடிவுற்றதும், பழைய ஐரோப்பா மறைந்து, புதிய ஐரோப்பா உதயமாகியது. தமது பகைமையை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்வை, எல்லாவற்றையும் மறந்து விட்டு, இணைபிரியாத் தோழர்களாக தழுவிக்கொண்டனர். தமக்குள் இனிமேல் சண்டையிடுவதில்லை, என்று முடிவெடுத்துக் கொண்டனர். அன்று ஏற்பட்ட வரலாறு காணாத நட்பு, இன்று ஐரோப்பிய யூனியன் வரை வளர்ந்துள்ளது என்பதை நம்புவது கஷ்டம் தான். ஆனால் பகைவர்கள் நண்பர்களான அதிசயம் சாத்தியமாகியுள்ளது

ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிடுவதில்லை, ஒருவரை ஒருவர் கொல்வதில்லை என்று "நாகரீகத்தின் உச்சத்தை" தொட்டாலும், அவர்கள் காந்தியின் புதல்வர்களாக மாறிவிடவில்லை. தமது யுத்தங்களை, காலனிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற, மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பிரான்ஸ் இப்போதும் முன்னாள் காலனி நாடுகளில் இராணுவ முகாம்களை பராமரிக்கின்றது. அதெல்லாம் தனது நலன்களுக்காகத் தான், என்று பிரான்ஸ் ஒத்துக் கொள்கின்றது. நாசிச கடந்த காலம் காரணமாக சொந்தமாக இராணுவம் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்ட ஜெர்மனி, இன்று தனக்கென்று நவீன இராணுவத்தை கொண்டிருப்பது மட்டுமல்ல, "ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளி" பிரான்சுடன் சேர்ந்து, வெளிநாடுகளுக்கும் படைகளை அனுப்பியது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு, பெர்லின் வரை வந்த சோவியத் செம்படைகள், ஐரோப்பா முழுவதும் ஆக்கிரமிக்கப் போகின்றன, என்ற வதந்தியை கிளப்பி விட்ட அமெரிக்கா, சமயோசிதமாக "வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு"(NATO) என்ற இராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. ஐரோப்பியர்களும், கடல்கடந்து வந்த அமெரிக்கா மைத்துனர்களுடன் சேர்ந்து கொண்டு, இராணுவ சாகசங்களை தொடர கிடைத்த சந்தர்ப்பத்தை, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். இந்த வரலாற்றை புரிந்து கொண்டோருக்கு, தற்போது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஐரோப்பிய படைகள் நிலை கொண்டுள்ள யதார்த்தம் வியப்பளிக்காது.

ஐரோப்பிய ஒத்துழைப்பு மட்டும் இல்லாவிட்டால், அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் படை நகர்வுகளை மேற்கொள்ள சிரமப்பட்டிருக்கும். ஜேர்மனி, ஹைடெல்பேர்க்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கா இராணுவ முகாம் தான், மத்திய கிழக்கிற்கான விநியோகத்தை கவனிக்கின்றது. தனது இராணுவ விமானப் போக்குவரத்தை காரணமாக காட்டி, அருகில் இருக்கும் பிராங்க்பெர்ட் சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகின்றது. கடல்வழிப் போக்குவரத்திற்கு பெல்ஜியத்தின் அன்த்வேர்ப் துறைமுகம் பயன்படுத்தப் படுகின்றது.

நேட்டோ பதாகையின் கீழ், அமெரிக்க படைகளுடன் கூட்டுசேர்ந்து செயல்படும் ஜெர்மன் படைகளை (பெர்லின் அருகில்) பொட்ஸ்டமில் உள்ள கொமாண்டோ தலைமையகம்(Einsatzführungskommando) நெறிப்படுத்துகின்றது. இதைவிட ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பூகில் (பிரான்ஸ்) வருங்கால ஐரோப்பிய இராணுவ தலைமையகம் (Eurocorp) உள்ளது. அனேகமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் படைகளை இனிமேல் இது நிர்வகிக்கும்.

சர்வதேச போர்களில் ஐரோப்பாவின் பங்களிப்பை அம்பலப்படுத்தும் நோக்கில், சில சமாதான ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெல்ஜியத்தில் கடந்த 14 நவம்பர் சர்வதேச போர் எதிர்ப்பு தினமாக அறிவித்து விட்டு, சில ஆர்வலர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னால் தமது எதிர்ப்பை காட்டினர். நுழைவாயில் முன்பு "போர் அமைச்சு" என்ற அட்டையை மாட்டினர். சுவரில் இரத்தத்தை உவமைப்படுத்த சிவப்பு சாயம் பூசினர். "போர் இங்கே தொடங்குகிறது, இங்கேயே முடியட்டும்" என்ற சுலோகம் பொறித்த பதாகையை கட்டினர். சிறிது நேரத்தில் போலிஸ் வந்து ஆர்வலர்களை கைது செய்து கொண்டு சென்றாலும், அவர்களது போராட்டம் வீதியால் சென்ற பலரது கவனத்தை ஈர்த்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு :
European day of action against military infrastructure

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Friday, November 14, 2008

நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது


ஐஸ்லாந்து என்ற பணக்கார நாடு திவாலாகின்றது, என்ற செய்தி கேள்விப்பட்டு பல சர்வதேச ஊடகங்கள் ஐஸ்லாந்தை மொய்த்தன. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் காட்சியை படம் பிடிக்க ஓடோடி வந்தன. ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறாத படி ஐஸ்லாந்து மக்கள் தமது நிதி நெருக்கடியை மறைத்துக் கொண்டனர். தாம் வாங்கிய வீடுகளுக்கு இரண்டு மடங்கு கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், தொழில்களை இழந்தபோதும், இறக்குமதி பொருட்கள் அருமையாக கிடைத்த போதும், உள்ளூர் மதுவை குடித்து நெருக்கடியை தமக்குள் மறைத்துக் கொண்டனர்.

தற்போது வரும் செய்திகளின் படி திவாலான பொருளாதாரத்தால் செய்வதறியாது தவிக்கும் ஐஸ்லாந்து அரசானது, அமெரிக்க தேசங்கடந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இயற்கைவளத்தை விற்க முன்வந்துள்ளதாக தெரிகின்றது. அலுமினியத்தின் மூலப்பொருளான பொக்சீட்டை, ஐஸ்லாந்தின் இயற்கையான பனி ஆறுகளால் சுத்திகரித்து, அலுமினியத்தை பிரித்தெடுக்கும் கம்பெனிகளுக்கு(alcoa), ஐஸ்லாந்தின் சில பகுதிகள் தாரை வார்க்கப் பட்டுள்ளன. மிக இரகசியமாக நடந்துள்ள இந்த ஒப்பந்தமானது, ஐஸ்லாந்தை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்தும் மூன்றாம் உலக நாட்டைப் போல மாற்றுவதற்கு வழி வகுத்துள்ளது. மூலப்பொருளான போக்சீட்டில் இருந்து அலுமினியத்தை பிரிப்பதற்கு ஆகும் செலவு, பிரேசிலை விட ஐஸ்லாந்தில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தவிச்ச முயல் அடித்த கதையாக, பொருளாதார நெருக்கடியால், பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்தை அமெரிக்க அலுமினியம் கம்பனிகள் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்டளவு ஐஸ்லாந்துகாரருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்குமென்றாலும், இந்த நிறுவனங்களுக்கான அணைக்கட்டு கட்டும் ஒப்பந்தப்படி சீன, போர்த்துகீசிய தொழிலாளர்கள் வரவிருக்கின்றனர்.

ஐஸ்லாந்தின் இடதுசாரி இயக்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, ஐஸ்லாந்து அரசுக்கெதிரான போராட்டமாக முன்னெடுத்துள்ளன. வெகுஜன போராட்டத்தில்
செங்கொடிகளும் பயன்படுத்தப்பட்டது, ஐஸ்லாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேசத்தை திவாலாக்கிய ஐஸ்லாந்து வங்கிகளை கொளுத்துவோம், என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறாத, அந்த ஆர்ப்பாட்ட வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
.வெளி இணைப்புகள் :
Saving Iceland

முன்னைய பதிவுகள் :
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Thursday, November 13, 2008

சுதந்திர சுரண்டல் வலையம்


இலங்கையில் எழுபதுகளின் இறுதியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த மேற்குலகின் ஆசி பெற்ற யு.என்.பி. கட்சி தெற்கு ஆசிய வரலாற்றில் அதுவரை கேள்விப்பட்டிராத புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்தது. “சுதந்திர வர்த்தக வலையம்” என்ற ஒன்றை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களை தடையின்றி வந்து முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது. குறைந்த விலையில் உழைப்பை சுரண்டுவதற்கு ஏற்ப, தனது தொழிலாளர்களை கொடுப்பதாக அறிவித்தது. ஒரு பக்கம் தனது நாட்டின் சிறுபான்மை தமிழ் இனத்தின் மீது இனவெறி தாக்குதல்களையும், மறு பக்கம் மொத்த ஏழை, எளிய மக்கள் மீதும் நவ -லிபரல் தாக்குதல்களையும் ஒரு சேர தொடுத்தது. உலகின் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் இனவாதத்திற்கும், பொருளாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இன்றைய “உலக ஒழுங்கின்” முன்னோடி நாடான அமெரிக்காவில் கடந்த எட்டு வருட புஷ் ஆட்சியில் தான், ஒரு பக்கம் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம் சிறுபான்மை மீதான அடக்குமுறையும், அதேநேரம் வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, அந்நிய கடன் என்பன அதிகரித்துக் கொண்டே போனது.

காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலியாக, அல்லது நவகாலனித்துவ தொடர்ச்சியாக வெளிநாட்டு கடன், பொதுத் தேர்தல்கள் அமைந்துள்ளன. என்றோ ஒரு நாள் இந்த நாடுகள் தமது ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும் என்ற முன்நோக்கோடு பிரிட்டன் போன்ற நாடுகள் அப்போதே திட்டம் தீட்டியுள்ளன. ஆகவே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் யாவும் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அதற்குமாறாக மேற்குலக தேசங்கடந்த வர்த்தக கழகங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக, இடைத்தரகர்களாக செயற்படும் வர்க்கத்தை மட்டுமே உருவாக்கியுள்ளது. இவர்களுக்கு எந்த விதமான தேசாபிமானமும் கிடையாது. தமது வருமானம் குறித்து மட்டுமே அக்கறைப்படுகின்றனர்.

இலங்கையில் யு.என்.பி. எழுபதுகளில் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்கள், இந்தியாவில் தொன்னூறுகளில் ராஜீவ் காங்கிரஸ் கொண்டு வந்த மாற்றங்கள், யாவும் அங்கே அந்நிய நாடுகளில் தங்கியிருக்கும் தரகு முதலாளிகளையும், அவர்களுக்கு சேவை செய்யும் அரசாங்கத்தையும் உருவாக்கி விட்டிருந்தன. இந்த நிலைமை, தற்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்கின்றது. இந்த பொருளாதாரம் எப்படி செயல்படுகின்றது என்பதற்கு சிறந்த உதாரணம், “வெளிநாட்டு வேலைவாய்ப்பு”. ஒரு காலத்தில் மத்தியதர வர்க்கம் தமது பிள்ளைகளை எஞ்சினியர், டாக்டர்களாக உருவாக்கி, அவர்களது சேவைகளை மலிவு விலைக்கு பிரிட்டிஷ், அமெரிக்க கம்பெனிகளுக்கு விற்பனை செய்து, அந்நிய செலாவணி சேர்த்தனர். இதே நோக்கத்திற்காக தொன்னூறுகளில் இந்தியா கணிப்பொறி வல்லுனர்களை உருவாக்கியது.

ஒரு தேசத்தை நிர்வகிக்கும் மத்தியதர வர்க்கமே அவ்வாறு நடந்து கொள்ளும் போது உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையும் அதுவாகவே இருப்பதில் வியப்பில்லை. மத்திய கிழக்கு நாட்டு பாலைவனங்களில், புதிதாக கட்டப்பட்ட நவீன நகரங்களில், உடல் உழைப்பை வழங்க இலங்கை-இந்திய மலிவு விலை தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். கூலிக்கும், விற்பனை சரக்கிற்கும் இடையிலான உறவை அறியாத மக்கள், தொழில் சந்தையில் அதிக விலை கொடுக்கும் முதலாளிகளின் “காருண்யத்தை” கண்டு வியந்தனர். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வறுமையில் இருந்து தப்புவதற்கு இது ஒரு வழி என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. இந்த மாய மானை நம்பிய மக்கள் அந்நிய தேசம் சென்றால் பொருள் ஈட்டலாம் என்ற கனவுடன், பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாது உலகம் முழுவதும் பணக்கார நாடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

பணக்கார நாடுகளை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு தொழிலாளரின் உழைப்பை சேவைத் தொழில்துறை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. அதிகம் படித்த வைத்திய கலாநிதி முதல், பாடசாலை பக்கம் போகாத துப்பரவுப் பணியாளர் வரை சேவைத்துறையில் தான் பணி புரிகின்றனர். தவிர்க்கவியலாமல் இவர்களது உழைப்பு அந்த நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. உதாரணத்திற்கு லண்டன் தெருக்களை கூட்டும் துப்பரவு பணியாளர் லண்டனில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் சராசரியில் இருந்து சிறிதளவு மட்டுமே குறைகின்றது.

அதற்கு மாறாக உற்பத்தி தொழில்துறைக்கு சில அனுகூலங்கள் உள்ளன. அவை தமது தொழிற்சாலைகளையே குறைந்த வேதனம் கொடுக்கும் நாடுகளுக்கு மாற்றி, அதிக லாபம் சம்பாதிக்க முடியும். அமெரிக்க-ஐரோப்பிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து விட்டு பல நிறுவனங்கள் தமது தொழிலகங்களை வறிய நாடுகளில் நிறுவி வருகின்றன. இதற்கு தாம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இருக்கும் “ஏழை மக்களுக்கு உதவுவதாக”(வேலை வாய்ப்பு கொடுப்பதாக) ஒரு காரணம் கூறுகின்றனர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் இதுவும்.

பணக்கார நாடுகளில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றதென்றால், அதன் காரணம் அந்த நாடுகளில் தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகம் என்பதால் தான். உற்பத்தி செலவினங்களை குறைத்து லாபத்தை பெருக்க வேண்டுமானால், தொழிலாளியின் சம்பளத்தை குறைப்பது சிறந்த வழி. மூலப்பொருளின் விலை, போக்குவரத்து செலவு என்பனவற்றை குறைப்பது, அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டவை. மேற்குலக நாடுகளில் தொழிலாளியின் சம்பளம் குறைக்கப்படும் போது, அது பலவித சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஒருவேளை கிளர்ச்சிகளுக்கும் வழிவகுக்கலாம். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக, நீண்டகாலமாகவே மேற்குலக நாடுகள், தமது உழைக்கும் மக்களை, சேவைத்துறையில் வேலை தேடுமாறு நிர்ப்பந்திக்கின்றன. (தவிர்க்கவியலாது சேவைத்துறையை இடம்மாற்ற முடியாத நிர்ப்பந்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

உலகமயமாக்கல் தொடர்பான பிரச்சினைகளை, மேற்குலக கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம், என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். இல்லாவிட்டால் “ஓநாய் தன்மீது சகோதர பாசத்துடன் நடந்து கொள்வதாக ஆடு நினைத்த” கதையாகி விடும். ஏனெனில் எமது மக்கள் பலர்(படித்தவர் முதல் பாமரர் வரை) உலகமயமாக்கல் வந்தது, தமது நன்மைக்கே என்று கருதிக்கொண்டிருக்கின்றனர். உலகமயமாக்கல் முழு வீரியத்துடன் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்பே, “சுதந்திர வர்த்தக வலையம்” என்ற பொருளாதாரக் கொள்கை முன்னோட்டமாக காட்டப்பட்டது. இந்த “வலையம்” என்ற சொல், ஒரு நாட்டின் சிறிய நிலப்பரப்பையே குறிக்கும். அதுவே ஒரு தேசம் முழுவதும் விஸ்தரிக்கப்படும் வேளை, “உலகமயமாக்கல்” என்ற புது அவதாரம் எடுத்திருக்கும்.

ஒரு தேசத்தின் இறைமை என்பது வெறும் அரசியல் சுதந்திரம் சார்ந்த விடயமல்ல. பொருளாதார சுதந்திரம் முக்கியமானது. உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக எழுதப்படும் சட்டங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளை வழங்குவதில்லை. சில உற்பத்தி சாதனங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவையும், அதற்கென முதலிடும் பணபலத்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயங்க விடுவதில் தவறில்லை. இரண்டு பக்க நலன்களையும் முன்னிலைப்படுத்தும் “Joint Venture” நிறுவன முறை ஏற்கனவே உள்ளது. கியூபா போன்ற சோஷலிச நாடுகள் அந்த முறையை தான் பின்பற்றுகின்றன.

உலகமயமாக்கலின் அழுத்தங்களுக்கு தலை சாய்க்கும் நாடுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளூர் நிறுவனப் பங்குகளை வாங்கவும்(அதன் மூலம் அந்த நிறுவனம் வெளிநாட்டவர் சொத்தாகலாம்), அல்லது நேரடியாகவே முதலீடு செய்யவும்(இதனால் ஈட்டப்படும் லாபம் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு திரும்ப கிடைக்காது) சட்டங்களை திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு பலத்துடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டி போட முடியாதாகையால், அவர்கள் தரகு முதலாளிகளாக மாறி விடுவர். சிறு முதலாளிகள் தான் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் ஓரளவிற்கேனும் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழே தான் நடக்கும். அதாவது வர்த்தகத்தில் ஈடுபடுவது வெளிநாட்டு நிறுவனமேயானாலும், உள்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும். வழமையான வரிகள் தவிர, லாபத்தில் ஒரு பங்கு கூட அரசுக்கு வரியாக போய்ச் சேரும். (இதனால் அரச பட்ஜெட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் விடயமாகவும் பார்க்கப்படலாம்.) மேலும் தொழிலாளர் நல சட்டங்களை மதிக்க வேண்டுமென்பதால், தொழிலாளர் சுரண்டப்படுவது குறையும். தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டால், சட்டப்பாதுகாப்பை கோரலாம். ஆனால் சுதந்திர வர்த்தக வலையங்கள் இவற்றில் இருந்து விதிவிலக்கானவை, அல்லது அந்நிய நிறுவனங்களை கவர்வதற்காக விதிவிலக்கு அளிக்கப்படுகின்றன.

தனது நாட்டில், குறிப்பிட்ட பிரதேசத்தை சுதந்திர வர்த்தக வலையமாக பிரகடனப்படுத்தும் அரசு, அங்கே தனது சட்டங்களை பிரயோகிக்காமல் தளர்த்திக் கொள்கின்றது. முதலீடு செய்யும் நிறுவனத்தை கவரும் இனிப்பான விடயங்கள் பல இதிலே உள்ளன. முதலில் தொழிற்சாலை கட்டும் செலவில் அரசாங்கமும் ஒரு பங்கை போடும். இரண்டாவதாக வேலைக்கு வரும் உள்ளூர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கவோ, அல்லது பிற தொழிலாளர் நல சட்டங்களின் துணை கொண்டு பாதுகாப்பு தேடவோ முடியாது. மூன்றாவதாக லாபமாக கிடைக்கும் தொகையை மறுமுதலீடு செய்யாமல் நாட்டை விட்டு எடுத்துச் செல்லலாம். குறிப்பிட்ட வருடங்களுக்கு லாபத்திற்கு வரியும் கட்டத்தேவையில்லை.(Tax Holiday)

இவ்வாறு கட்டுப்பாடற்ற, சுதந்திர வர்த்தக வலையம் அமைவதால் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு என்ன பிரயோசனம்? Off shore கம்பனிகள் அமைக்க இடம்கொடுக்கும் குட்டி நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற சட்டத்தை கொண்டுள்ளன. அதாவது வரிவிலக்கு அளிப்பதன் மூலம், தமது நாட்டிற்கு பெருமளவு முதலீட்டாளரை கவர்வது. இந்த நிறுவனங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் உள்நாட்டு சட்ட ஆலோசகர்கள், ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்காக பயன்படுத்தபோகும் துறைமுகம், இவற்றை விட மானேஜர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்தல். இப்படியான வழிகளில் தான் அந்த நாட்டிற்கு வருமானம் கிடைக்கின்றது. வரிகளால் அல்ல.

சுதந்திர வர்த்தக வலையத்தில், அனேகமாக உப-ஒப்பந்தக்காரர் தான் தொழிற்சாலை அமைக்கின்றனர். உதாரணத்திற்கு அமெரிக்காவின் பிரபல ஆயத்த ஆடை விற்பனை நிலையம் ஒன்று, தனக்கு தேவையான ஆடைகளை தயாரிப்பதற்கு பாகிஸ்தான் நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்தம் வழங்கும். இந்த பாகிஸ்தான் நிறுவனம் இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிலகத்தை நிறுவி, அங்கிருந்து ஆடை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும். இத்தகைய சிக்கலான வலைப்பின்னல் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகின்றது. ஏனெனில் சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிலாளரை கொடுமைப்படுத்தியதாக போடப்படும் வழக்குகள் யாவும், உப-ஒப்பந்தக்காரருக்கு எதிராகவே போடப்படுகின்றன. பெரிய நிறுவனம் தனக்கு “எதுவும் தெரியாது” எனக்கூறி ஒதுங்கிக்கொள்ளும்.


சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக உள்ளனர். சில இடங்களில் குழந்தை தொழிலாளரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பல ஏழைக்குடும்பங்களில் ஆண் பிள்ளைகளை மட்டுமே படிக்க வைப்பதால், பெண் பிள்ளைகள் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இலங்கையாகவிருந்தாலும், கம்போடியாகவாக இருந்தாலும் இது தான் நிலைமை. உலகெங்கும் சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால், இது ஒரு பெண்ணியம் சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது. பாலியல் துன்புறுத்தல், மகப்பேறு விடுமுறையில் நிலவும் கட்டுப்பாடுகள் போன்றன, பெண்கள் என்பதால் மேலதிக சுரண்டலுக்கு ஆளாவதை எடுத்துக்காட்டுகின்றது.


சுதந்திர வர்த்தக வலையங்கள், பண்டைய கால உழைப்பு சுரண்டல் சமூகத்தையே உருவாக்கி வருகின்றதால், இவற்றை “சுதந்திர சுரண்டல் வலையம்” என அழைப்பதே பொருந்தும். எனினும் இவற்றை ஆதரிக்கும் Paul Krugman, Joan Norberg போன்ற பொருளாதார அறிஞர்களும் உள்ளனர். அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் ஒரு காலத்தில் அப்படியான நிலை இருந்ததை சுட்டிக் காட்டுகின்றனர். குறைந்த கூலி வழங்கி அதிக நேரம் வேலை வாங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகளற்ற தொழிலகம், தொழிலாளருக்கு உதவாத சட்டங்கள், தொழிற்சங்கம் அமைக்க தடை, ஆகிய நிகழ்கால சுதந்திர வர்த்தக வலைய குறைபாடுகள் யாவும், 19 ம் நூற்றாண்டிலும், 20 ம் நூற்றாண்டு தொடக்கத்திலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக இருந்தவை தான். எனினும் இந்த நிலைமை தொழிலாளர் போராட்டங்களால் தான் மாறியதே தவிர எந்த முதலாளியும் ஒரே இரவில் மனிதாபிமானியாக மாறிவிடவில்லை.


இந்த பொருளாதார அறிஞர்கள் வாதிடும் “பாரம்பரிய முதலாளித்துவம்” மேற்குலகில் புரட்சிகர மாற்றங்களுக்குள்ளாகிய போது, அதனை தடுக்கக் கூடிய பலமான சக்தி எதுவும் அப்போது இருக்கவில்லை. ஆனால் இன்று மூன்றாம் உலக நாடுகளின் நிலை வேறு. அங்கே எந்த நாட்டில், எந்தவொரு போராட்டம் வெடித்தாலும், அதனை அடக்குவதற்கு மேற்குலக நாடுகள் உதவிக்கு ஓடோடி வரும். இந்த நெருங்கிய தொடர்பை விளக்குவதற்காக தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் வரலாற்றை இரைமீட்க வேண்டி ஏற்பட்டது. இல்லாவிட்டால் சுரண்டலை ஆதரிக்கும் அறிஞர்கள் நமது காதிலே முழம் முழமாக பூச்சுற்ற காத்திருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டும் இன்னொரு உதாரணம் “ஆசிய புலிப்பாய்ச்சல் பொருளாதார” சிங்கபூர், மற்றும் ஹொங்கொங். இந்த குட்டி நாடுகளில், ஒரு காலத்தில் நாடு முழுவதும் சுதந்திர வர்த்தக வலையமாக இருந்தது உண்மை தான். மேற்குலக வாழ்க்கைமுறைக்கு நிகராக தனிநபர் வசதிவாய்ப்புகள் அதிகரித்தது உண்மை. ஆனால் அதற்கு முக்கிய காரணம், அப்போது கம்யூனிச நாடுகளாக இருந்த சீனா, வியட்நாம் ஆகியவற்றுக்கு எதிராக போட்டி போடுவது தான்.


உலகமயமாக்கலுக்கும், சுதந்திர வர்த்தக வலையங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. பெரிய பெரிய நிறுவனங்கள் யாவும் உலகமயமாக்கல் காரணமாக சர்வதேச வர்த்தக சட்டங்கள் தளர்த்தப்பட்டதை பயன்படுத்தி, தமது பொருட்களை குறைந்த கூலிகொடுக்கும் நாடுகளில் உற்பத்தி செய்து, அவற்றை அதிக விலைக்கு பணக்கார நாடுகளில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன. காலனிய கால வர்த்தகம் மீண்டும் “உலகமயமாக்கல்” என்ற புதிய பெயரில் நடைமுறைக்கு வருகின்றது.
அன்று “கிழக்கிந்திய வர்த்தக கழகம்” என்ற பன்னாட்டு நிறுவனம்,(ஒல்லாந்தர் தாமே உலகின் முதலாவது தேசங்கடந்த வர்த்தக நிறுவனத்தை உருவாக்கியதாக, இப்போதும் பழம்பெருமை பேசுவர்) இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய ஆசிய நாடுகளில் மலிவு விலைக்கு மிளகு, கறுவா, கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை வாங்கி, அவற்றை ஐரோப்பா கொண்டு சென்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இன்று அதே நாடுகளில் நவீன தேசங்கடந்த நிறுவனங்கள் சுதந்திர வர்த்தக வலையம் அமைத்து, தொழிலாளரை சுரண்டி அதிக லாபம் ஈட்டுகின்றன. நைக் என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனம், வால்-மார்ட் என்ற பல்பொருள் அங்காடி என்பன இதனால் பயனடையும் குறிப்பிடத்தக்க பிரபல தேசங்கடந்த நிறுவனங்கள்.


ஆகவே சுதந்திர வர்த்தக வலையத்தை முற்போக்கான தொழில்துறை புரட்சியாகவோ, அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவோ காண்பது அறிவீனம். அவை சந்தேகத்திற்கிடமின்றி மறுகாலனியாதிக்கத்தின் மறுவடிவமாகும்.
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy