Friday, December 30, 2011

விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 13]
(பதின்மூன்றாம் பாகம்)

இந்து மதத்தில் உள்ள கருட புராணம், வைஷ்ணவர்களுக்கு உரியது. இந்து மதத்தில் இரண்டு பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு பிரிவினர், சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்கள். மற்ற பிரிவினர், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவர்கள். கருட புராணத்தில் விஷ்ணுவுக்கும், கருடனுக்கும் இடையில் நடைபெறும் ஆன்மீக உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கருடன் விஷ்ணுவின் வாகனமாகும். இன்றுள்ள இந்துக்களுக்கு, கருடனைப் பற்றி மேலதிகமாக எதுவும் தெரியாது. மதத்தை அமைப்பாக்குவதில் பங்கெடுத்தவர்கள், தமது வருங்கால சந்ததி எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று, அன்றே முடிவெடுத்திருந்தனர். தகவலை தணிக்கை செய்வது, செய்தியை இருட்டடிப்பு செய்வது எல்லாம், நமது கால அரசுக்களுக்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. பண்டைய கால மதவாதிகள் அதைத் தான் செய்தனர். நிசெயா நகரில் (துருக்கி) கூடிய கிறிஸ்தவ துறவிகள், விவிலிய நூலில் எந்தக் கதைகள் இடம்பெற வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்களின் தீர்மானத்தின் விளைவு தான், இன்று நாம் வாசிக்கும் பைபிள் நூல்.

இந்தியாவில் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவ மதம் அறியப் பட்ட காலத்திற்கு முன்பே கருட வழிபாடு இருந்துள்ளது. வேத கால ஆரியரின் தெய்வங்களில் ஒன்றாக ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கு இஸ்லாமிய மயப்பட்டுள்ள நாடுகளிலும் கருட வழிபாடு நிலவியது. அரேபியர்கள், கருடனை "ரூக் (Rukh, Roc) பறவை" என்று அழைத்தனர். அரேபியரின் தேவதைக் கதைகளிலும் ரூக் பறவையின் சாகசங்கள் பற்றி கூறப் பட்டுள்ளது. பிரமாண்டமான ரூக் பறவை, யானையையும் தூக்கிச் செல்லும் வல்லமை பெற்றது. மகாபாரதத்தில் எழுதப்பட்ட கிளைக் கதைகளில், கருடனின் கதையும் ஒன்று.

மகாபாரதக் கருடனும், யானையை தூக்கிச் செல்லும். "இந்து இந்தியாவிலும்", "இஸ்லாமிய அரேபியாவிலும்" வாழும் மக்கள் ஒரே மாதிரியான புராணக் கதையை பகிர்ந்து கொண்டமை ஆச்சரியத்திற்கு உரியது. நமது நாட்டு இந்து மத அடிப்படைவாதிகள், "முஸ்லிம்கள் என்றால் வேற்றுக் கிரக வாசிகள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு தெரியாத ஒன்றை, மற்றவர்கள் அறிய விடவும் மாட்டார்கள். ஆங்கிலேயர்கள், யூதர்களுடன் தம்மை இனங் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அரேபியர், சீனர்களுடனான ஒற்றுமைகளை மூடி மறைக்கப் பார்ப்பார்கள்.

கருடனைப் பற்றிய புராணக் கதைகள் இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. சீனா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும், கருடனைப் பற்றிய கதைகள், இன்றும் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளன. மொங்கோலியாவில் குலத் தலைவர்களை கருடனின் பெயரால் அழைக்கும் வழக்கம் இருந்தது. மொங்கோலிய நாட்டு தேசிய விமான சேவையின் பெயர் "Khan Garid" (கருட ராஜா). பிரபல ஹிந்தி சினிமா நடிகர் ஷாருக்கானை தெரியாதவர் எவருமிருக்க முடியாது. ஆனால், ஷாருக்கான் என்ற பெயருக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அது ஒரு முஸ்லிம் பெயர் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"ஷா" என்றால் ஈரானிய மொழியில் ராஜா என்று அர்த்தம். "ருக்" என்பது, புராண கால ராட்சதப் பறவையின் (கருடன்) பெயர். அதாவது, கருட ராஜா. கான், துருக்கி மொழியில் தலைவனைக் குறிக்கும். மொங்கோலியர்கள் "கான் கரிட்" என்று அழைக்கும் பாரம்பரியத்தை பின்பற்றி, ஈரானியர்கள் "ஷா-ருக்" என்ற பெயரிட்டனர். இந்திய இந்துக்களின் பூர்வீகம், ஈரான், சீனா, மொங்கோலியா போன்ற நாடுகளில் இருப்பதை நிரூபிக்க இத்தனை சான்றுகள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இந்து மதம் கருடனைப் பற்றி வேறென்ன எல்லாம் சொல்கிறது? பறவைகளின் ராஜாவான கருடன், ஒரு யானையை தூக்கிச் செல்லுமளவு ராட்சதப் பறவை. அது எமது குடியிருப்புகளுக்கு மேலே பறக்கும் பொழுது, சூரியனின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால், நிலத்திலே பெரியதொரு நிழல் படரும். அரபு நாட்டு புராணக் கதையும் அவ்வாறு தான் கருடனை (ரூக்) விபரிக்கின்றது. சிந்துபாத்தின் கடல் பயணத்தின் போது, ரூக் பறவை இரண்டு தடவைகள், கப்பல்களை தாக்கி சேதப் படுத்தியது. மார்கோ போலோ தனது கடற் பயணங்களின் பொழுது, மடகஸ்கார் தீவில் இருந்த ராட்சதப் பறவைகள் குறித்து கேள்விப் பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் அதனை, "யானை காவிப் பறவை" என்றழைத்தனர்.

கருடன் (ரூக்), Qaf மலையில் வசிப்பதாக அரேபியர்கள் நம்பினார்கள். அதனை உறுதிப் படுத்துவது போல, மொங்கோலியாவில், கருடனை வழிபட்ட மக்கள், தமது தெய்வம் ஒரு புனித மலையில் வசிப்பதாக நம்பினார்கள். மொங்கோலியாவில் பௌத்த மதத்தின் வருகைக்கு பின்னர், கருட வழிபாடு ஏறத்தாள மறைந்து விட்டது. அகழ்வாராய்ச்சியாளர்கள், கருட தெய்வச் சிலைகளை மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்தனர். பாதி பறவை, பாதி மனிதனாக அந்தச் சிலைகள் காணப் பட்டன. இதே போன்ற கருடன் சிலைகள், துருக்கி இன மக்கள் பரவி வாழ்ந்த, ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் கண்டெடுக்கப் பட்டன.

புராண கால கதைகளுக்கு அப்பால், கருடனை விஞ்ஞான அடிப்படையில் விளக்க முடியுமா? உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், டைனோசர்கள், டிராகன்கள் என பல ராட்சத விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. கற்கால நியாண்டர்தால் மனிதன் கூட, எம்மை விட அளவிற் பெரிய ராட்சதனாகத் தான் இருந்திருப்பான். பல இலட்சம் வருடங்களாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ராட்சத விலங்கினங்கள் அழிந்து விட்டன. இருப்பினும், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலும், எஞ்சிய உயிரினங்கள் சில அங்கும் இங்கும் வாழ்ந்திருக்கலாம்.

பண்டைய மக்கள், அந்தத் தகவல்களை புராணக் கதைகளாக பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொண்டு வந்துள்ளானர். எங்கேயோ ஒரு புள்ளியில் தோன்றிய மனித இனம், வெவ்வேறு திசைகளில், ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, கதைகள் மாற்றமடைவது இயல்பு. பெயர்கள், சம்பவங்கள் மாறினாலும், பெரும்பாலான மூலக் கதைகள் மாற்றமடைவதில்லை. கருடன் பற்றிய கதையும் அவ்வாறானது தான். கற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் மொங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. டைனோசர்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலத்தில் இராட்சதப் பறவையினங்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்புகின்றனர்.

கருடனின் பூர்வீகத்தை பற்றி, இப்போது நாங்கள் அறிந்து கொண்டோம். அடுத்ததாக, கருடனுக்கும், பாம்புக்கும் இடையில் என்ன பகை என்று பார்ப்போம். கருடனின் இனத்தவருக்கும், பாம்பு இனத்தவர்களுக்கும் இடையில் நடந்த போரில், ஓரிடத்தில் சிவபெருமானும் சம்பந்தப் பட்டுள்ள விடயம் சுவாரஸ்யமானது. சிவனின் கழுத்தில் பாம்பு சுற்றி இருப்பதும் காரணத்தோடு தான். "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?" உண்மையில், கருடன் தான் பாம்பைப் பார்த்து அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். போரில் தோல்வியடைந்த ஒரு சிறுபான்மை சமூகத்தை இகழ்ச்சியுடன் பார்த்த பெரும்பான்மை சமூகத்தவரின் வன்மம், தற்கால சினிமாவிலும் எதிரொலித்தது.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Garuda
Roc (mythology)
Shahrokh (mythology)
The Search for Gold Guarding Griffins
-------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

Wednesday, December 28, 2011

நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 12]
(பன்னிரண்டாம் பாகம்)


யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மும்மதங்களும் ஒன்றுக்கொண்டு தொடர்பு கொண்டவை. ஒரே மாதிரியான கதைகள், மும்மதங்களுக்கு உரிய புனித நூல்களில் எழுதப் பட்டுள்ளன. ஆதி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, தீர்க்கதரிசிகளின் காலம் வரையில் எழுதப்பட்டுள்ள கதைகள், ஒரே இன மக்களுக்குரியவை, என்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றன. அதனால் தான், யூதர்களைப் பற்றிய தவறான கணிப்புகள், இன்றைய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. யூதர்கள் கூட, பாபிலோனியாவில் வாழ்ந்த காலத்தில் அந்தக் கதைகளை அறிந்து கொண்டதாக, அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட பாபிலோனிய களிமண் தட்டுகளில், பாபிலோனியரின் புராணக் கதைகள் எழுதப் பட்டுள்ளன. அவை, பைபிள் கதைகளை பெரிதும் ஒத்துள்ளன. பெயர்கள் மட்டுமே வித்தியாசம். பாபிலோனிய நாகரீகம், பைபிள் காலத்திற்கு முந்தியது. ஆகவே, விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ள கதைகள், யூதரல்லாத வேற்றினத்தவரின் கதைகளாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஆதி கால கிறிஸ்தவர்கள் பற்றிய, "குகை மனிதர்களின் கதை", பண்டைய கால இலங்கையுடன் தொடர்புடையதா?

கி.பி. 250 ம் ஆண்டளவில், ரோம ஆட்சியாளர்களால் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப் பட்ட காலத்தில், அந்தக் கதை நடந்ததாக கூறப் படுகின்றது. எபெசுஸ் என்ற நகரத்தில் வாழ்ந்த ஏழு கிறிஸ்தவ இளைஞர்கள், ரோம அதிகாரிகளின் கைக்குள் அகப்படாமல், ஒரு குகைக்குள் மறைந்து வாழ்ந்தனர். சுமார் இருநூறு வருடங்களாக, குகைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். கிறிஸ்தவ மதம் ஆட்சிபீடமேறிய பின்னர் தான், கண் விழிந்து எழுந்து வந்து வெளியுலகைத் தரிசித்தனர்.

ஆதிக் கிறிஸ்தவர்களின் மதப்பற்றுக்கும், ஓரிறைக் கொள்கைக்கும் சான்றாக கூறப்படும் இந்தக் கதை, வேறெங்கேயோ நடந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கிறிஸ்தவத்திற்கு முந்திய மக்கள் மத்தியிலும் அது போன்ற கதைகள் நிலவின. பைபிளுக்கு பிந்திய, இஸ்லாமியரின் குர் ஆனில், இந்தக் கதை விரிவாக எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக, அந்தக் கதையில் வருபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆனால், ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள். "ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்ட மனிதர்கள் சிலர், ஆட்சியாளர்களின் மத அடக்குமுறை காரணமாக நகரத்தை விட்டோடி, குகை ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். சுமார் 300 வருடங்கள் அங்கேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். அவர்களை சூழவுள்ள பகுதிகள் யாவும், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற்பாடு, விழிப்படைந்தனர்." (Surat Al -Kahf, 9 – 26)

திருக்குரானில் வரும் Al -Kahf (குகை) என்ற அத்தியாயம், இலங்கை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அந்தக் குகை இலங்கையில் இருப்பதாக நம்புகின்றனர். இதே Al - Khaf அத்தியாயத்தில் வரும், இன்னொரு கதையான Al - Khidir என்ற ஞானி, கதிர்காமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப் படுகின்றார். மேற்கில் இருந்து கிழக்கே பயணம் செய்த, "அல்- கிதிர்" என்ற ஞானியினால் தான், "கதிர்காமம்" என்ற பெயர் வந்ததாக, இலங்கை முஸ்லிம்கள் நம்புகின்றனர். கதிர்காமத்தில் இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றுண்டு. ஒவ்வொரு வருடமும் கதிர்காமத் திருவிழாவின் கொடியேற்றம், பள்ளிவாசலில் நடைபெறும்! மத அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்த்தாலும், சாதாரண முஸ்லிம் மக்கள் இன்றைக்கும் கதிர்காமம் சென்று வழிபடுகின்றனர். ஆகவே, இஸ்லாமுக்கு முந்திய புராதன கால நம்பிக்கை ஒன்றை, இலங்கை முஸ்லிம்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது. குர் ஆனில் வரும் அல்- கிதிர் என்ற தீர்க்கதரிசிக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் என்ன தொடர்பு, என்று வேறொரு இடத்தில் பார்ப்போம்.

தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.

இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!

அந்த பாதாள உலகத்தில் யார் வாழ்ந்திருப்பார்கள்? இன்றைக்கு, அந்தக் குகைகளின் உள்ளே, பௌத்த மத சின்னங்கள் காணப்பட்டாலும், அவை அந்தக் குகைக்கு உரியன அல்ல. இவை எல்லாம் ஆதிக்கத்தின் குறியீடுகள். பண்டைய இலங்கை மக்களின் மத, கலாச்சார அடையாளங்கள் மீதான, வேற்று மத ஆக்கிரமிப்பு. பூர்வீக இலங்கையரின் மத நம்பிக்கைகள், இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. சில கலாச்சாரக் கூறுகள் மட்டுமே, புதிய மதத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான மதங்கள் தான். இலங்கையின் பூர்வ குடிகள் சிங்களவருமல்ல, தமிழருமல்ல. இவ்விரண்டு இனங்களும் தோன்றுவதற்கு முன்னரே, நாகர்கள், இயக்கர்கள் என்ற இரண்டு இனங்கள், இலங்கையை தமது தாயகமாகக் கொண்டிருந்தனர். (இயக்கர்களும், நாகர்களும், சிங்களவர், தமிழர் இரண்டு இனங்களிலும் கலந்துள்ளனர்.) அந்த மக்கள் பேசிய மொழிக்குப் பெயர் எலு. அது கூட அன்னியர்கள் இட்ட பெயர் தான். எலு என்ற மூலச் சொல்லில் இருந்து தான், ஈழம், சிங்களம் (ஹெல) ஆகிய சொற்கள் பிறந்தன.

வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. "இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத," நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.

தற்கால நாக இனத்தவர்கள், இன்றைக்கு வட கிழக்கு இந்திய மாநிலங்களில் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில், வங்காளம், ஒரிசா, தமிழகம், போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பரவி வாழ்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, இலங்கைத் தீவில் நாகர்களின் குடியேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய உப கண்டத்தை விட, சீனாவின் தென் பகுதி, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் நாகர் இன மக்கள் வாழ்ந்துள்ளனர். நாகர்கள் தோற்றத்தில், தாய்லாந்து, மலேய மக்களுக்கு நெருக்கமானவர்கள். சமூக- விஞ்ஞானிகள், நாகர்களை தீபெத்தோ- இந்திய இனம் என்று வகைப் படுத்தி உள்ளனர்.

கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் நம்பப் படும், "ஓரிறைக் கொள்கை மீது பற்றுக் கொண்ட குகை மனிதர்கள்" பற்றிய கதை, நாகர் இன மக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றதா? இந்துப் புராணங்களிலும், நாகர்கள் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. விஷ்ணு சயனித்திருக்கும் ஆதி சேஷன், பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி போன்ற பிரபலமான நாகங்களைப் பற்றிய கதைகள் புராணங்களில் வருகின்றன. புத்தர் தியானம் செய்யும் பொழுது குடையாக விரிந்து பாதுகாப்பளித்த மூச்சலிந்தா நாகம், பௌத்த மதத்தில் பிரசித்தமானது.

பல கோயில்களில்,விகாரைகளில் நாக பாம்புப் படுக்கையின் மேல் படுத்திருக்கும் புத்தர் சிலையும், விஷ்ணு சிலையும் ஒரே மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளன. இலங்கையின் தென் முனையான, தேவேந்திர முனையில் ஒரு விஷ்ணு கோயில் இருந்தது. அந்த விஷ்ணு கோயில் ஆதி காலத்தில் நாகர்களின் கோயிலாக இருந்தது. பிற்கால இந்துக்கள் அதனை விஷ்ணு கோயிலாக மாற்றி விட்டனர். நீண்ட காலமாக, தமிழ் வணிகர்களால் பராமரிக்கப் பட்டு வந்தது. தேவேந்திர முனை விஷ்ணு கோயிலை, கத்தோலிக்க மத அடிப்படைவாத போர்த்துக்கேயர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதன் மூலம், இலங்கையின் தென் முனையில், தமிழர்கள் வாழ்ந்த தடயமும் அழிந்து விட்டது. தென் மாகாணத்தில், ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த தமிழ்க் குடும்பங்கள், இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி விட்டன.

பௌத்த மதத்தைப் பொறுத்த வரையில், புத்தரையும், வேறெவரையும் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. (புத்தரே தன்னை கடவுளாக வழிபடுமாறு கூறவில்லை என்பது வேறு விடயம்.) இருப்பினும், இலங்கையில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. அது இந்து மத நம்பிக்கையாக இருக்கலாம், அல்லது நாக மத நம்பிக்கையாக இருக்கலாம். அவர்களிற்கு விருப்பமான தெய்வங்களையும் வழிபட அனுமதித்தது. அந்த வகையில், நாகர்களின் கடவுள், விகாரைகளை காவல் காக்கும் தெய்வமாக மாற்றப் பட்டார்.

இன்றைக்கும், இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்னால், நாக தேவதை சிற்பங்கள் காணப் படுகின்றன. இங்கே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். பௌத்த மதம், இந்து மத தெய்வங்களை வழிபடும் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், ஓரிறைக் கொள்கையையும் வலியுறுத்தி வருகின்றது. இன்றைக்கும், மத அடிப்படைவாத பௌத்தர்கள், புத்தரைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் வாழ்ந்த நாகர்கள், இன்று பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்களாக மாறி விட்டனர். பௌத்த மதத்தினுள் முழுமையாக ஒன்று கலப்பதற்கு, நாகர்களின் ஓரிறைக் கொள்கை காரணமாக அமைந்திருக்குமா?

பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, "தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று" என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.

"ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்", எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?

நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு :
Al Kahf
Seven Sleepers
Dambulla cave temple
Zeme Nagas, from Polytheism to Monotheism
Bnei Menasche
Qur'an, Surat Al- Kahf

-----------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்

Monday, December 26, 2011

புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 11]
(பதினோராம் பாகம்)


இன்று ஈழத்தமிழரின் பூர்வீகமான வாழிடங்களில் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது. இதே போன்றதொரு கலாச்சார மேலாதிக்கம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய இலங்கையிலும் இடம்பெற்றது. அது ஆரிய மயமாக்கும் நடைமுறையாக ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில், சிங்கள மன்னர்கள் மட்டுமல்லாது, தமிழ் மன்னர்களும் தம்மை ஆரியர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டனர். யாழ்ப்பாண இராஜ்யத்தை சிங்கை ஆரியன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். இவன் பெயரிலேயே "சிங்கமும், ஆரியனும்" இருப்பது கவனிக்கத் தக்கது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு அரச பரம்பரையினர், நீண்ட காலமாக வட இலங்கை ஆட்சியாளராக இருந்துள்ளனர். இவர்கள் கண்டி ராஜ்யத்துடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வந்துள்ளனர். ஆரியச் சக்கரவர்த்திகள், இராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ்ப் பிராமணர்கள் என்றும், பாண்டிய மன்னனின் தளபதிகளாக ஈழத்திற்கு அனுப்பப் பட்டவர்கள் என்றும், ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது. (Aryacakravarti dynasty - http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty)

ஆரியச் சக்கரவர்த்திகள், மலேயாவில் இருந்து படையெடுத்து வந்த சந்திரபானுவின் வம்சாவளியினர் என்று இன்னொரு குறிப்பு தெரிவிக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகளின் பூர்வீகம் குறித்து, இரண்டு வேறுபட்ட கதைகள் கூறப்பட்டாலும், இரண்டிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. "யாழ்ப்பாண ராஜ்யத்தை ஆண்ட, ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையினர் ஈழத் தமிழர் அல்ல, மாறாக அந்நியர்கள்", என்பது உறுதியாகத் தெரிகின்றது. மகாவம்சத்திலும் சந்திரபானு தலைமையிலான மலேயா நாட்டு படையினர் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்த கதை வருகின்றது.

இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், மகாவம்ச கால சந்திரபானுவும், சரித்திர கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப் பல் பாதுகாக்கப் பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். ஏனெனில், "புத்தரின் புனிதப் பல் யாரிடம் இருக்கிறதோ, அவர்களே இலங்கையை ஆள்வார்கள்." என்பது தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கை. யாழ்ப்பாண ராஜ்யத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள், தம்மை "புத்த மதக் காவலர்கள்" என்று காட்டிக் கொள்வதில் பெருமைப் பட்டுள்ளனர். இன்றைக்கு, பௌத்த மதத்திற்கு அரச அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கும், சிறிலங்கா ஆட்சியாளர்களைப் போன்று தான், அன்றைய "ஈழத் தமிழ் மன்னர்களும்" நடந்து கொண்டனர்.

முன்னொரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டிருந்த ஆரிய மயமாக்கல், பௌத்த மதம் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், இரண்டு கிளைகளாக பிரிந்தது. ஒன்றில் இந்துமயமாக்கல், அல்லது பௌத்தமயமாக்கல் என்று வடிவம் மாறியது. இவ்விரண்டு மதங்களும், இலங்கை மக்களின் தொன்மையான பாரம்பரியத்தை சிதைத்து, அழித்து விட்டன. பண்டைத் தமிழனின் பெருமைகள் யாவும் தொலைந்து போனதற்கு காரணம், (ஆரிய) இந்து மதம். இந்த உண்மையை மறுக்கும் தமிழர் எவராக இருந்தாலும், அவர் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தையும் மறைமுகமாக ஆதரிக்கின்றார் என்றே பொருள் படும்.

சில வருடங்களுக்கு முன்னர், மிகுந்த பொருட் செலவில் கட்டப்பட்ட, ரம்பொடை (மலையகம்) அனுமார் சிலை, திருகோணமலை உருத்திரன் சிலை, என்பன ஆரியமயமாக்கல் இன்றைக்கும் துடிப்புடன் நடந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாத அரசுக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மத அடிப்படைவாத அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் இராவணின் இருதய பூமியாக கருதப்பட்ட மலைநாட்டில், அனுமார் சிலை கட்ட வேண்டிய அவசியம் என்ன? புராதன நாகரீகத்துடன் சம்பந்தப்பட்ட திருகோணமலை சிவன் கோயிலின் அருகில், உருத்திரன் சிலை எப்படி வந்தது? உருத்திரனும், சிவனும் ஒன்றல்ல என்பதும், உருத்திரன் வேத கால ஆரியரின் தெய்வம் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

வடக்கே, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள நயினாதீவில், பிரசித்தி பெற்ற நாகபூஷணி அம்மன் ஆலயம் உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள தீவுகள் எல்லாம், ஒரு காலத்தில் இந்தியாவுடன் இருந்த நிலத் தொடர்பை நினைவு படுத்துகின்றன. அந்த நிலத்தின் பெரும்பகுதியை, கடல் அழித்து விட்டாலும், மேடான பகுதிகளான இந்தத் தீவுகள் மாத்திரம் எஞ்சி விட்டன. நயினாதீவின் நாகபூஷணி அம்மன் கோயில், இலங்கையில் நவீன வரலாற்றுக் கால கட்டத்திற்கு முன்பிருந்தே வழிபடப் பட்டு வந்துள்ளது. இன்று அந்தப் பழமை வாய்ந்த கோயில் நமது என்று, இந்துக்களும், பௌத்தர்களும் உரிமை கோருகின்றனர்.


உண்மையில், நாகபூஷணி அம்மன், பௌத்தர்களுக்கோ அல்லது இந்துக்களுக்கோ சொந்தமான தெய்வம் அல்ல! இலங்கையில் ஒரு காலத்தில் நாகர்கள் என்றொரு இனத்தவர்கள் வாழ்ந்தனர். தோற்றத்தில், பர்மா,அல்லது தாய்லாந்துக் காரர்கள் போலிருப்பார்கள். பண்டைய நாகர் இனத்தவர்கள் நாக பாம்பை கடவுளாக வழிபட்டனர். நயினாதீவு மட்டுமல்ல, வற்றாப்பளை (முல்லைத்தீவு) நாக தம்பிரான் கோயிலும், இந்து மதத்திற்கு முந்திய சமய நம்பிக்கைகளுக்கு சான்று பகர்கின்றன. பண்டைய நாகர் இனத்தவர்கள், பிற்காலத்தில் சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் மாறி விட்டனர். அதற்கு காரணம், மதம். இந்தியாவில் இருந்து இறக்குமதியான இந்து மதமும், பௌத்த மதமும், இலங்கைத் தீவின் பூர்வீக மக்களை இரண்டாகப் பிரித்தன.

உலகில் இன்றைக்கும் துலங்காத மர்மங்கள் பல உள்ளன. தென்னிலங்கையில் உள்ள மலை ஒன்றின் உச்சியில், ராட்சத கால் பாதம் ஒன்றின் அடையாளம் பதிந்துள்ளது. இந்துக்களைப் பொறுத்த வரையில் அது சிவனின் பாதம். அதனால், "சிவனொளிபாத மலை" என்று அழைக்கின்றனர். பௌத்தர்களுக்கோ அது புத்தரின் காலடித் தடம். சிங்களத்தில் "ஸ்ரீ பாத" என்று அழைக்கின்றனர். முஸ்லிம்கள், அதனை முதல் மனிதன் ஆதாமின் பாதம் என்று நம்புகின்றனர். அதனால், முஸ்லிம்களுக்கு அது "ஆதாமின் மலை". (அரபு மொழியில் ஆதாம் என்பதற்கு மனிதன் என்றும் அர்த்தம் உண்டு.)

மொரோக்கோ நாட்டை சேர்ந்த யாத்ரீகரான இபுன் பதூதா, அந்த மலைக்கு விஜயம் செய்துள்ளார். மலையடிவாரத்தில் கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் வந்து தங்கியதற்கான தடயம் இருந்ததாக குறித்து வைத்துள்ளார். (The Travels of Ibn Batuta - http://sripada.org/ibn-batuta.htm) அலெக்சாண்டர் இலங்கை வந்த தகவலை, எந்தவொரு சரித்திர ஆவணமும் பதிவு செய்யாதது ஆச்சரியத்திற்கு உரியது. இபுன் பதூதா, மலையடிவார குகையில், "இஸ்கந்தர்" என்ற பெயரைக் கண்டதாக எழுதுகின்றார். (துருக்கி, அரபி மொழிகளில் அலெக்சாண்டரை, "இஸ்கந்தர்" என்று அழைப்பார்கள்.) சிந்துபாத்தின் கதைகளிலும் இந்த மலை பற்றிய குறிப்பு வருகின்றது. இன்றைய ஈரானை சேர்ந்த மாலுமியான சிந்துபாத், கடற்பயணங்களின் பொழுது இலங்கை மன்னனின் விருந்தாளியாக தங்கியிருந்துள்ளார். அப்பொழுது ஆதாமின் மலையை சென்று பார்த்துள்ளார்.

முதன் முதலாக, சிவனொளிபாத மலையை கண்ட கிறிஸ்தவர், போர்த்துகேய காலனிய படைகளுடன் வந்திருந்த எழுத்தாளர் Diego de Couto ஆவார். கிறிஸ்தவ மதத்தை பொறுத்த வரையில், ஆதாம் வாழ்ந்த ஏடன் தோட்டம், இன்றைய ஈராக்கில் உள்ளது. அதனால், கிறிஸ்தவ போர்த்துக்கேயர்கள் அதனை ஆதாமின் காலடித் தடம் என்பதை நம்பவில்லை. அவர்கள் அதனை, "புனித தோமஸின் மலை" என்று அழைத்தனர். (தோமஸ் இந்தியா வந்த இயேசுவின் சீடர்களில் ஒருவராவார்.) 19 ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் ஆதாமின் மலை என்று பெயர் மாற்றினார்கள். இன்றைக்கும், கிறிஸ்தவர்கள் அந்தப் பெயரிலேயே அழைத்து வருகின்றனர். ஆனால், எந்தக் காரணத்தால் அந்தப் பெயர் வந்ததென்று அவர்களுக்கும் தெரியாது. "சொர்க்கத்தில் வாழ்ந்த ஆதாமும், ஏவாளும், கடவுளால் விலக்கப் பட்ட கனியை புசித்தனர். அதனால் கோபமுற்ற கடவுள், இருவரையும் பூமிக்கு நாடு கடத்தி விட்டார். ஆதாம் வந்திறங்கிய இடம் செரண்டிப் (இலங்கை) எனும் நாடாகும்." இந்த தகவல் திருக்குரானில் எழுதப் பட்டுள்ளது. (Holy Qur'An, Surah Al-Baqarah )

இறைதூதர் முகமதுவின், காலத்தில் அல்லது அதற்குப் பிறகாவது, அரேபியாவில் வாழ்ந்தவர்கள், இலங்கையில் உள்ள ஆதாம் மலை பற்றி அறிந்து வைத்திருந்தனரா? ஆமாம். முகமதுவுக்கு முன்னரும், பின்னரும், அரேபிய நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவுடனும், இலங்கையுடனும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அரேபியர்கள் முஸ்லிம்களாக மாறிய பின்னர் தான், அவர்களுக்கும் ஆதாமின் கதை மீதான ஆர்வம் ஏற்பட்டது. (கி.பி. 620-850)கேரளாக் கரையில், முசிறியில் வந்திறங்கிய, ஷேக் செயுதீன் தலைமையிலான அரபு வணிகர்கள், ஆதாம் மலையை தரிசிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர். (The Perumal and the Pickle - http://historicalleys.blogspot.com/2008/12/perumal-and-pickle.html)

அன்று கேரளாவை ஆட்சி செய்த, "தமிழ் மூவேந்தர்களுள்" ஒருவரான சேரமான் பெருமாள், அரபு வணிகர்களின் தொடர்பு காரணமாக முஸ்லிமாக மாறியுள்ளார்.(Cheraman Perumal - http://en.wikipedia.org/wiki/Cheraman_Perumal) சேரமான் பெருமாள் முஸ்லிமாக மாறிய கதை, இன்றைக்கும் கேரளா முஸ்லிகள் மத்தியில் பேசப் பட்டு வருகின்றது. கொடுங்களூரில் உள்ள சேரமான் மசூதி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பழமையான மசூதிகளில் ஒன்றாகும். (மெதீனாவுக்கு அடுத்ததாக, ஜும்மா (வெள்ளிக்கிழமை) தொழுகை நடக்கும் இரண்டாவது பழைய மசூதி.) சேரமான் ஜும்மா மசூதியின் சிறப்பம்சம் என்னவெனில், அது ஒரு இந்துக் கோயில் போன்று காணப்படுவது தான்! மெக்காவை நோக்கி இருக்கும் வழமையான மசூதிகளுக்கு மாறாக இதற்கு கிழக்கு வாசல் உள்ளது. விளக்கு வைத்தல், சாம்பிராணி புகை காட்டுதல், போன்ற இந்து மத சம்பிரதாயங்கள் இன்றைக்கும் பின்பற்றப் படுகின்றன.

இலங்கையில் இன்றைக்கும் வாழும் பழங்குடி இனமான வேடுவர்கள், "முதல் மனிதன்" பற்றி என்ன சொல்கிறார்கள்? அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் பிரகாரம், முதல் மனிதன் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்துள்ளான். அந்த வேற்றுக் கிரகவாசி வந்திறங்கிய இடமே சிவனொளி (ஸ்ரீ/ஆதாம்) பாத மலை உச்சியாகும். (Vedda People - http://www.vedda.org/) ராட்சத உருவம் கொண்ட வேற்றுக் கிரகவாசி, மலையில் இருந்து இறங்கி வந்த பொழுது, யானைகளும், பூதங்களும் (கற்கால விலங்கினங்கள்?) இளைப்பாறும் இடம் ஒன்றைக் கண்டான். அந்த இடமே கதிர்காமம் ஆகும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்திலும், கதிர்காமத்திற்கு "கஜர கம" என்ற பெயர் இருந்தது. "கஜர" என்பது பூதம் என்று அர்த்தம் வரும் சமஸ்கிருதச் சொல். "கம" என்றால் ஊர்.

கற்காலத்தில் வாழ்ந்து பின்னர் அழிந்து விட்ட, அளவிற் பெரிய நியண்டேர்தால் (Neanderthal) மனிதர்களும், மம்மூத் (Mammoth) வகை யானைகளும் இலங்கையில் வாழ்ந்தமையை மேற்படி கதை உறுதிப் படுத்துகின்றது. இன்னொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றுண்டு. கண்டியில், தலதா மாளிகையில் வைக்கப் பட்டுள்ள புத்தரின் பல் என்ற வஸ்து, உண்மையில் மனிதப் பற்களைப் போன்று தெரியவில்லை. "ஒரு சுட்டுவிரல் அளவு நீளமான ராட்சதப் பல்லை, எவ்வாறு புத்தருக்கு பொருத்திப் பார்க்க முடியும்?" என்று யாரும் சந்தேகம் எழுப்புவதில்லை. உண்மையில் அதுவொரு, கற்கால மனிதனின், அல்லது விலங்கின் பல்லாக (அல்லது தந்தம்) இருக்க வேண்டும். பிற்கால மனிதர்கள், அந்த தந்தத்தை வைத்திருந்தால், தமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியிருக்கலாம். பழங்குடியின தலைவர்கள் அதன் சக்தியினால் தமது குலத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதாக நம்ப வைத்திருப்பார்கள்.


புராதன கால மக்களின் நம்பிக்கைகள், வேறு வடிவில், மதம் என்ற பெயரில் தொடர்கின்றன. "சிங்கள மன்னர்களும்", "தமிழ் மன்னர்களும்", புத்தரின் புனிதப் பல்லை கைப்பற்றுவதற்காக போரிட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை. இருபதாம் நூற்றாண்டின் இனவாதிகள், அந்த வரலாற்றை திரித்து தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். "தமிழ் மன்னர்கள், புத்தரின் புனிதப் பல்லை கொள்ளையிட்ட மத துவேஷிகளாக" சித்தரிப்பது சிங்கள இனவாதிகளது அரசியல். மறு பக்கத்தில், "சிங்களவர்களை அடக்கி, புத்தரின் புனிதப் பல்லையும் கைப்பற்றிய தமிழ் மன்னர்களின் வீர தீரச் செயல்களை" தமிழ் இனவாதிகள் கூறிப் பெருமைப் படுகின்றனர். இன்றுள்ளோர் தமது அரசியல் அபிலாஷைகளுக்காக, வரலாற்றை எப்படித் திரிக்கின்றனர், என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

ஐரோப்பியர்கள் ஆதியில் இருந்தே கிறிஸ்தவர்களா? அரேபியர்கள் ஆதியில் இருந்தே முஸ்லிம்களா? தமிழர்கள் ஆதியில் இருந்தே இந்துக்களா? சிங்களவர்கள் ஆதியில் இருந்தே பௌத்தர்களா? அறியாமையின் காரணமாக, அநேகமானோர் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனம், மதம், மொழி என்று தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் "ஒரு குகையில் வாழ்ந்த ஆதி மனிதர்கள்" பற்றிய கதை, மேற்கு ஆசிய நாடுகள் வரையில் பரவியிருந்தது. அந்தக் கதை பின்னர் திரிபடைந்து, விவிலிய நூலிலும், திருக் குரானிலும் குறிப்பிடப் பட்டது. இலங்கையில் வாழும், சிங்களவர்களோ, அல்லது தமிழர்களோ, அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது. அதற்கு காரணம், இந்து, பௌத்தம் ஆகிய இரண்டு மதங்களின் ஆதிக்கம், மக்களின் சிந்தனையை கட்டுப் படுத்துகின்றது. இந்து, பௌத்த மதங்கள் இருட்டடிப்பு செய்த குகை மனிதர்களின் மர்மம் என்ன?

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:

The Travels of Ibn Batuta
Aryacakravarti dynasty
The Perumal and the Pickle
Cheraman Perumal
Sri Lanka's forest-dwellers the Veddas or Wanniyalaeto

- மகாவம்சம் (தமிழில்: ஆர்.பி.சாரதி, கிழக்கு பதிப்பகம்)
- சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு (கலாநிதி க. குணராசா)
- இலங்கை வரலாறு (பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா)
------------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"

Saturday, December 24, 2011

எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 10]
(பத்தாம் பாகம்)இன்றைக்கு பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசும் இனங்கள், "இயேசு கிறிஸ்து நம்மவரே" என்று நம்புகின்றன. மக்களின் மத நம்பிக்கையை, தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் இனத் தேசியவாதிகள் அவ்வாறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தேசியவாத அரசியலையும், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மதத்தையும் இணைப்பதால் பல வேடிக்கை வினோதங்கள் அரங்கேறுகின்றன.

"முருகன் தமிழ்க் கடவுள்" என்று, தமிழர்கள் சொந்தம் கொண்டாடுவதும் அது போன்ற நகைச்சுவை தான். ஏனெனில், மறு பக்கத்தில் சிங்களவர்களும், "முருகன் ஒரு சிங்களக் கடவுள்" என்று சொந்தம் கொண்டாடுவதை இவர்கள் அறியவில்லை. உண்மையில், முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, இன்னும் சொல்லப் போனால், அரேபிய தீபகற்பம் வரை மதிக்கப் பட்ட, உலகிற் சிறந்த அறிவுஜீவி தான் முருகக் கடவுள். மனித நாகரீகம் வளராத காலத்தில் வாழ்ந்த ஞானியை, மக்கள் ஒரு தெய்வமாக வழிபட விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்றைக்கு ஒரு நாகரீகமடைந்த அறிவு சார் சமுதாயம், வீரப் பிரதாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றைக்கே முருகனின் பெருமைகளும் மறைந்து போயின.

இன அடிப்படையிலான கலாச்சார ஆதிக்கம் போன்றது தான், ஒரு மதத்தின் ஆதிக்கமும். வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறிய, இந்து ஆரியர்கள், தாம் வென்ற நாடுகளின் அரசுகளை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் அழித்தார்கள். இராமாயணக் காலம் எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும், இலங்கையின் உன்னத நாகரீகம் வடக்கே இருந்து படையெடுத்து வந்த இராமனால் அழிக்கப் பட்டதை இராமாயணமே தெரிவிக்கின்றது. அன்றில் இருந்து, இலங்கையில் இந்து மத (ஆரிய இன) ஆதிக்க கலாச்சாரம் வலுப் பெற்றது. இலங்கையில் இன்றைக்கு வாழும், தமிழர்களும், சிங்களவர்களும், இந்து-ஆரிய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.

"சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல." என்ற உண்மையை சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போன்று, "தமிழர்கள் இந்துக்கள் அல்ல." என்பதை தமிழ் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய மயப்பட்ட தமிழர்களும், இந்துக் கலாச்சாரத்தை பின்பற்றும் சிங்களவர்களும், தமது பூர்வீகத்தை கங்கைக் கரையில் (வட இந்தியாவில்) தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக தோன்றுகின்றன. தமிழர்கள் தமது தொன்மையான நாகரீகத்தை மறந்து போனதற்கு காரணம், பிற்காலத்தில் வந்த இந்து நாகரீகம் அவர்களை சிந்தனைப் போக்கை மாற்றியது.

சிங்களவர்கள் என்ற புதிய மொழி பேசும் இனம் தோன்றுவதற்கு பௌத்த மதம் காரணமாக இருந்தாலும், இந்து மதக் கலாச்சாரம் முழுவதுமாக மறையவில்லை. இலங்கையில் பௌத்த மதம் காலூன்றிய பின்னரும், விஷ்ணுவை, சிவனை வழிபட்ட "சிங்கள" மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, "கதிர்காமக் கந்ததனின் அருளால்" போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (பார்க்கவும்:
A Short History of kataragama and Theivanaiamman Thevasthanam)

இலங்கையில், முதன் முதலாக பௌத்த மதத்தை தழுவிய தேவநம்பிய தீசன் முதல், ஐந்தாம் மகிந்தன் காலம் வரையில், கதிர்காமம் உள்நாட்டு மன்னர்களினால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இந்த மன்னர்களை எல்லாம் சிங்களவர்கள் என்றோ, அல்லது தமிழர்கள் என்றோ முத்திரை குத்துவது, எமது அறியாமையின் பாற் பட்டது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழிப் பிரிவினை தோன்றியது. இன்றைக்கும், யாழ்ப்பாண வட்டார மொழியாக பேசப்படும் தமிழுக்கும், சிங்கள பேச்சு மொழிக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் அதனை உறுதிப் படுத்துகின்றன.

துட்டகைமுனு போன்ற மன்னர்கள் சிங்களவர்கள் என்று, மகாவம்சத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிங்கள- தமிழ் இனவாதிகள் தான், தமது அரசியல் லாபங்களுக்காக அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர். "எல்லாளன் நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மன்னன்" என்று மகாவம்சம் எல்லாளனின் நற்செயல்களை புகழ்ந்து எழுதியுள்ளது. அதே நேரம், எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பளனாகவும் (சோழ ஏகாதிபத்தியம்) சித்தரிக்கப் படுகின்றான். (பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள், வேண்டுமென்றே சோழர்களை, தமிழர்கள் என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.) ஆகவே, அந்நியர்களிடம் இருந்து நாட்டை விடுதலை செய்வதற்காக, துட்டகைமுனுவிற்கு கதிர்காமக் கந்தன் உதவி புரிந்ததாகத் தான் மகாவம்ச வரலாறு கூற விளைகின்றது. எல்லாள-துட்டகைமுனு யுத்தத்தை, சிங்கள- தமிழ் யுத்தமாகக் கருதும் அடிப்படையே தவறானது.

இன்றைக்கு, சிங்கள இனவாதிகள் துட்டகைமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, தமிழினவாதிகள் எல்லாளனை தமது நாயகனாக மகிமைப் படுத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றை திரிக்கின்றனர். அன்று நடந்ததை சிங்கள-தமிழ் யுத்தமாகவோ, அல்லது பௌத்த-இந்து முரண்பாடாகவோ பார்ப்பது தவறு. கதிர்காமம், அன்றில் இருந்து இன்று வரையில், சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான புண்ணியஸ்தலமாகும். முஸ்லிம்களும் கதிர்காமம் சென்று வழிபடுவது வியப்பை உண்டாக்கலாம். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) இன்று அங்கே, "இந்துக் கதிர்காமம்", "பௌத்த கதிர்காமம்", "இஸ்லாமிய கதிர்காமம்" என்று மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக வாழ்ந்த மக்களை, பிற்காலத்தில் வந்த மதங்கள் மூன்றாகப் பிரித்து வைத்துள்ளன. (ம்ஹ்ம்... மனிதன் மாறி விட்டான்... மதத்தில் ஏறி விட்டான்...)

முருக வழிபாடு, இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கு பரவி இருக்க வேண்டும். இலங்கையின் பூர்வீக மக்களான வேடுவர்களால் கூட, முருகன் அறிவின் கடவுளாக போற்றப் படுவது கவனத்திற்கு உரியது. ஏனெனில், பொதுவாக, "நாகரீகமடையாத காட்டுமிராண்டி கால பழங்குடி சமுதாயங்கள்", தமது கடவுளை வீர சூர பராக்கிரமசாலிகளாகவே சித்தரிப்பார்கள். முருகனின் விடயத்தில் அது தலைகீழாக நடந்துள்ளது. ஆதிகாலம் தொடக்கம் கதிர்காமத்தில் முருகனை பூஜித்து வரும் பழங்குடி இனமான வேடுவர்கள், "உலகில் உள்ள அனைத்து அறிவையும் திரட்டி வைத்திருந்த ஞானியாகவே" முருகனை வழிபடுகின்றனர். எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட வேடுவர்களைப் பொறுத்த வரையில், வேட்டைக்கான நிபுணத்துவத்திற்கு மட்டும் கந்தனின் அருள் போதுமானதாக இருந்துள்ளது.

"சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக", இந்தியாவில் இந்து மதம் கந்தனைப் போற்றுகின்றது. அதே போன்று, "புத்தருக்கு ஞானோபதேசம் செய்ததாக", சீனாவில் பௌத்த மதம், முருகனை போற்றுகின்றது. ஆதி கால முருகனின் கையில், போர்க் கருவியான ஈட்டி (வேல்) இருக்கவில்லை. (கதிர்காம கோயிலின் மூலஸ்தானம் திரை போட்டு மறைக்கப் பட்டிருப்பதால், பல சந்தேகங்கள் எழுவது இயற்கை. அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை.) ஆதி கால முருகக் கடவுளின் கையில் ஒரு ஊன்று கோல் இருந்தது. பழனி முருகனும், கையில் ஒரு தடி வைத்திருப்பதால், "தண்டாயுதபாணி" என்று அழைக்கப் படுவது இங்கே குறிப்பிடத் தக்கது. இலங்கையை சேர்ந்த வேடுவர்கள், முருகனை ஒரு கிழவனாகவே வழிபட்டுள்ளனர். ஒரு வயோதிபரின் கையில் ஊன்றுகோல் இருப்பது வழமை தானே? இலங்கையில் வாழ்ந்த வயதான ஞானி (தீர்க்கதரிசி) யின் பெருமைகள், மேற்கு ஆசிய நாடுகளிலும் அறியப் பட்டுள்ளன. (அந்த விபரங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)

"எதற்காக நமது தெய்வங்களின் கைகளில், எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கின்றது?" என்பது பல இந்துக்களின் மனத்தைக் குடையும் கேள்வி. அதற்கான விடை இது தான். இவை எல்லாம் ஆரிய மயமாக்கப் பட்ட தெய்வங்கள். முருகன் மட்டுமல்லாது, சிவன், கிருஷ்ணன் போன்ற பல இந்திய தெய்வங்கள் ஆதி காலத்தில் ஆயுதங்களோடு காட்சியளிக்கவில்லை. (உதாரணத்திற்கு, திபெத்திய சிவனின் கையில் சூலாயுதம் கிடையாது.) என்றைக்கு, ஆரிய இனத்தவர்களும் அவற்றை தமது கடவுளராக ஏற்றுக் கொண்டனரோ, அன்றில் இருந்து அவர்கள் கைகளில் ஆயுதங்கள் முளைத்து விட்டன.

அந்நிய வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட உள்நாட்டு கறுப்பின மக்கள், சில போர்த் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். காளி, பைரவர் போன்ற தெய்வங்கள் போரின் நிமித்தம் முக்கியத்துவம் பெறுவதால், அவற்றின் கைகளில் ஆயுதங்கள் இருந்துள்ளன. பிற்காலத்தில், போரில் வென்ற இந்துக்களான ஆரியர்கள், போர்த் தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதன் மூலம், உள்ளூர் மக்கள் மீது கலாச்சார அடிமைத்தனம் திணிக்கப் பட்டது. இந்த அடிமைத்தனம் இன்றைக்கும் பலரின் மனதில் காணப்படுகின்றது.

வரலாற்றில் ஆரிய இனம், அறிவு சார் சமுதாயமாக இருக்கவில்லை. மற்றைய இன மக்கள் மீது போர் தொடுத்து, அடிமைப் படுத்தி, சொத்துகளை சூறையாடி வாழ்ந்த நிஜமான காட்டுமிராண்டி சமுதாயமே ஆரிய இனம் ஆகும். அவர்களைப் பொறுத்த வரையில், விவேகத்தை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில், வெறித்தனமான வீரம் தான் அவர்களை பல நாடுகளுக்கு அதிபதிகளாக்கியது. பிறர் செல்வங்களை கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்தது. (இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. ரிக் வேதத்திலேயே எழுதப் பட்டுள்ளன.) இன்றைக்கும், இனவெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தலைவர்கள், ஆரியரின் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை கண்கூடாக காணலாம். "மூத்தகுடித் தமிழர்கள்", ஆரியர்கள் போன்று காட்டுமிராண்டிகள் அல்ல. ஒரு அறிவு சார்ந்த சமுதாயமாக, நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால், தமிழர்கள் என்றைக்கு இந்து மதத்தை பின்பற்றத் தொடங்கினரோ, அன்றில் இருந்தே தமிழரின் பெருமைகள் மறக்கப் பட்டு விட்டன.

இன்றைய நவீன யுகத்திலும், இந்து மதத்தவர்கள், முருகனை ஒரு யுத்தக் கடவுளாகத் தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு வருடமும், முருகன் கோயில்களில் நடைபெறும் "சூரன் போர்" அதற்கு சான்று பகர்கின்றது. முருகன் கனரக ஆயுதங்களுடன் சூரனோடு போரிட்ட காட்சியை, மதச் சடங்கு என்ற பெயரில் மேடையேற்றுகின்றனர். சூரனின் படைகளை துவம்சம் செய்த முருகன், சூர சம்ஹாரத்திற்குப் பிறகு கதிர்காமத்தில் தங்கி விட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர். (எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு யுத்தக் கடவுளான முருகனிடம் ஆசீர்வாதம் வேண்டியதில் வியப்பில்லை.)

மகாவம்சமும் ஆரிய மயப் பட்ட மன்னர்களின் வரலாற்றை தான் கூறுகின்றது. மகாவம்சம் மட்டுமல்ல, எந்தவொரு இந்துப் புராணமும், இதிகாசங்களும் பூர்வீக மக்களின் கதைகளை எழுதியதில்லை. அவ்வாறு குறிப்பிட்டாலும், அந்த மக்களை "நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகம்" என்று தான் கூறுகின்றன. உதாரணத்திற்கு, இராவணனின் மக்களை அரக்கர்கள் என்று, இந்துக்களின் இராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. பௌத்தர்களின் மகாவம்சம், இலங்கையில் புத்தரின் வருகைக்கு முன்னர், பேய்களை போன்ற தோற்றம் கொண்ட மக்கள் (இயக்கர்கள்) வாழ்ந்ததாக எழுதுகின்றது. "அரக்கர்கள், இயக்கர்கள்", இவை போன்ற இழி சொற்களினால், மூத்த குடிகளின் நாகரீகம் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டன.

மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார ஆதிக்கம் என்பதைப் பலர் உணருவதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம், எந்தப் பிரிவினரின், அல்லது சாதியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பது தான் முக்கியமானது. பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கும் வரையில், அந்தப் பிரிவினரின் ஆதிக்கம் தொடரவே செய்யும். தமிழ் தேசியத்தை புரட்சிகரமான மாற்று அரசியலாக முன் வைக்க வேண்டுமானால், மதங்களுக்கு எதிரான தார்மீகப் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். உலகின் முதல் மனிதன் (ஆதாம்?) இலங்கையில் தோன்றியிருக்கலாம், என்று கூறப் படுவதன் சாத்தியப்பாட்டை, தமிழ் தேசிய பிரச்சாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளாத காரணம் என்ன? இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல், அல்லது அறிய முயற்சிக்காமல், "முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் நாம்." என்று பெருமை பேசுவதில் பயனேது?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்

Wednesday, December 21, 2011

தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 9]
(ஒன்பதாம் பாகம்)


பைபிளும், குரானும் குறிப்பிடும் ஏடன் தோட்டமெனும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இனவாத, மதவாத சிந்தனைகள் துளியும் தலைகாட்டாத காலத்தில், உலகிலேயே உன்னத நாகரீகத்தைக் கட்டிய இனமாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு வேளை, அவர்கள் தமிழர்களாக வாழ்ந்திருக்க மாட்டார்கள். தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், மலையாளிகளுக்கும் மற்றும் பல திராவிட இனங்களுக்கும் பொதுவான "தாய் இனமாக", அது இருந்திருக்கும். அவர்கள் பேசிய மொழி கூட வேறாக இருந்திருக்கலாம்."கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்க் குடி" என்று பெருமை பேசித் திரியும் தமிழினம், தன்னோடு கூடி வாழ்ந்த சகோதர மூத்த குடிகளை மறந்து போனது துரதிர்ஷ்டம். தமிழர்கள் மனதில் சர்வதேசிய சிந்தனைகள் மறைந்து, அந்த இடத்தில் சுயநலப் போக்குகள் தலை காட்ட ஆரம்பித்தன. தமிழினத்தின் வீழ்ச்சி அன்றே ஆரம்பமாகி விட்டது.

இந்திய உப கண்டத்தை சூழவுள்ள கடற்பரப்பில், கடந்த பத்தாண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பல மறைந்த நாகரீகங்களை வெளிப் படுத்தியுள்ளன. குஜராத் கரைக்கு அருகிலும், தமிழகத்திற்கு அருகாமையிலும், கடலில் மூழ்கிய நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அதே போன்று, இலங்கையின் தென் கிழக்கு கடலடியிலும் மறைந்திருந்த நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர், உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனித குலத்தின் தோற்றம் பற்றிய முந்திய ஆய்வுகளை மறுத்துரைக்கும், புதிய நிரூபணங்கள் கிடைத்துள்ளன. சங்க கால தமிழ் இலக்கியங்களில், கடல் கொண்ட குமரி கண்டம் பற்றிய தகவல் வருகின்றது. அந்த தகவலை மெய்ப்பிக்கும் அளவிற்கு, நவீன கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆயினும், இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. மறைந்த நாகரீகமான குமரி கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழர்களா?

குமரி கண்டத்தின் பரப்பளவு, இன்றைய இந்திய உப கண்டத்தை விடப் பெரியது. வடக்கே, குமரி முனையையும், இலங்கைத் தீவையும் இணைத்திருந்தது. மேற்கே மடகஸ்காருடன், கிழக்கே அவுஸ்திரேலியாவுடன் தொடுத்திருந்தது. இந்த மிகப் பெரிய கண்டத்தில், "தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்" என்பது சாத்தியமல்ல. முன் தோன்றிய மூத்த குடிகளான "ஆப்பிரிக்க" இனங்களில் ஒன்றாக தமிழினம் இருந்திருக்கும். இன்றைக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உடற்கூற்று ஒப்பீடுகளும், கலாச்சார ஒப்பீடுகளும் இதனை நிரூபிக்கின்றன. அதே நேரம், ஆப்பிரிக்க இனங்கள் மட்டுமல்லாது, மத்திய அமெரிக்காவை சேர்ந்த மாயர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், மேலும் பல மேற்காசியப் பழங்குடி இனங்களும் குமரி கண்டத்தில் இருந்தே பிரிந்து சென்றிருப்பார்கள். அதற்கு என்ன ஆதாரம்? கடல் பெருக்கால் அழிந்த கண்டம் பற்றிய தகவல் பண்டைய தமிழ் இலக்கியங்களில் எழுதப் பட்டுள்ளது. தமிழர்கள் தமது மொழியில் அதனை குமரி கண்டம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஒரு வேளை, தமிழர்களின் நாடு இன்றைய குமரி முனைக்கு அருகில் இருந்திருக்கலாம்.

சிங்கள செவி வழி கர்ண பரம்பரைக் கதைகளும் கடலில் மூழ்கிய கண்டம் பற்றி நினைவு கூறுகின்றன. சிங்களவர்கள் அதனை "இரிசியாவா" என்ற பெயரில் அழைக்கின்றனர். கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ "அட்லாண்டிஸ்" என்றொரு மறைந்த கண்டம் பற்றி எழுதியுள்ளார். இதே போன்று, எகிப்தியர்கள், மாயா இந்தியர்கள், பைபிள் கதையில் வரும் நோவாவின் மக்கள், என்று பல்லின மக்கள், இழந்த கண்டத்தை வெவ்வேறு பெயர்களில் நினைவுகூருகின்றனர். அதாவது, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற மொழிகளைப் பேசும் மக்கள், தமது பூர்வீகம் பற்றி ஒரே மாதிரியான கதையை கொண்டுள்ளனர். சுருக்கமாக சொன்னால், தமிழில் குமரி கண்டம் என்று அழைக்கப்படும், இழந்த சொர்க்கத்தில் பல்வேறு சகோதர இனங்கள் வாழ்ந்துள்ளன. "முன் தோன்றிய மூத்த குடி, தமிழர்கள் மட்டுமே" என்ற கற்பிதம், ஐரோப்பியரின் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிகின்றது. நாகரீகமடைந்த பண்டைய சகோதர இனங்களை பிரித்து வைத்திருப்பதால் தான், இன்றைக்கும் ஐரோப்பிய மையவாத வரலாற்றுப் புரட்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களும், சகோதர மூத்தகுடி இனங்களும் தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ஐரோப்பியரிடம் பறிகொடுத்து விட்டனர். நாகரீகமடைந்த புராதன இனங்களின் அறிவியலை அபகரித்த ஐரோப்பியர்கள், அதைக் கொண்டே உலகம் முழுவதும் அடிமைப் படுத்தினார்கள்.

குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த மிகவும் பழமையான நிலப்பகுதி ஆகும். உலகின் முதலாவது மனிதனான "ஆதாம்", தென்னிலங்கையில் உள்ள சிவனொளிபாத மலையில் (ஆதாமின் மலை) தோன்றியதாக ஒரு செவி வழிக் கதை நிலவுகின்றது. (ஆதாம், சிவனொளிபாதமலை என்பன பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள்.) முதல் மனிதனான "ஆதாம்", மலையில் இருந்து இறங்கி வந்தவிடத்தில், பூத கணங்களும், யானைகளும் இளைப்பாறிய இடத்தைக் கண்டதாகவும், அதுவே கதிர்காமம் என்றும் அந்தக் கதையில் சொல்லப் படுகின்றது. உண்மையில், "முதல் மனிதன், சிவனொளிபாத மலை, கதிர்காமம்" என்பனவற்றின் மூலக் கதை, பழங்குடி இனமான வேடுவர்க்கு உரியது. "கல் தோன்றா, மண் தோன்றாக் காலத்தில்" இருந்தே, சமுதாய அமைப்பையும், கலாச்சாரத்தையும் மாற்றிக் கொள்ளாத மூத்தகுடியான வேடுவர்கள், இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிப்படையிலான பிரிவினை தோன்றியது. சிங்களவர், தமிழர் இரண்டுமே "இன அடையாளத்தை" குறிக்கும் சொற்கள் அல்ல. வேடுவர்கள் மட்டுமல்லாது, இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இனங்களும், இரண்டு மொழிச் சமூகங்களிலும் கலந்துள்ளன.

அண்மைய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் பிரகாரம், குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, தற்போதுள்ளதை விட ஏழு மடங்கு அதிகமான பரப்பளவைக் கொண்டிருந்தது. இராவணனின் அரச வம்சம், அந்த நிலப்பரப்பை ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆண்டு வந்துள்ளது. இராவணன் ராட்சத இனத்தை சேர்ந்தவன். அநேகமாக, அது ஒரு கருப்பினமாக இருக்கலாம். இலங்கையில் இராவணனை தொடர்பு படுத்தும் இடங்கள் பொதுவாக இராமாயண அடிப்படையிலேயே ஊகிக்கப் பட்டன. இலங்கை மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இராமனின் ஆரியப் படைகள், இலங்கையின் நகரங்களை எரியூட்டி அழித்து விட்டன. அப்போதே இலங்காபுரியின் தொன்மையான நாகரீகம் அழிந்து போயிருக்கும். இராமாயணம் வென்றவர்களின் பார்வையிலேயே எழுதப் பட்டிருப்பதால், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. இன்று எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விடயம் என்னவெனில், பல முக்கியமான கண்டுபிடிப்புகள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. அதாவது, தமிழரோ, சிங்களவரோ அறிந்திராத தகவல்கள், சில ஆங்கிலேய ஆய்வாளர்களுக்கு தெரிந்துள்ளது. ஆப்பிரிக்க மக்களை அறியாமை இருளில் வைத்திருந்ததைப் போன்று தான், ஆங்கிலேயர்கள் எம்மையும் நடத்தி வந்துள்ளனர்.

ஆர்தர் சி. கிளார்க் என்றொரு பிரிட்டிஷ் எழுத்தாளர், இலங்கையில் வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர். அவர் எழுதிய நாவல்கள் பல வருங்காலத்தை பற்றிய கற்பனைகளை கொண்டிருந்தாலும், அவற்றின் கரு இலங்கையில் இருந்து கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கையில் குடியேறி, இறக்கும் வரையில் இலங்கைப் பிரஜையாகவே வாழ்ந்திருப்பாரா? ஆர்தர் சி கிளார்க், ஒரு சாதாரண எழுத்தாளரா, அல்லது பிரிட்டிஷ் உளவாளியா? அவர் ஆழ்கடல் சுழியோடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். திருகோணமலைக்கு அருகில், கடலின் அடியில் மறைந்திருந்த பண்டைய நகரத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்திருந்தார். அதைவிட பல தகவல்களை அறிந்து வைத்துக் கொண்டு பகிரங்கப் படுத்தாமல் இருந்திருக்கலாம். அவரைப் போலவே காலனிய இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேய ஆய்வாளர் ஒருவர், "இராவணணின் ஆகாய விமானம்" பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து சீதையை கவர்ந்து சென்றதாக இராமாயணம் கூறுகின்றது. விமானம் பற்றிய மேலதிக விபரங்களை அங்கே, தேடினாலும் கிடைக்காது. அதனாலேயே, "அது ஒரு கற்பனை" என்று இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், உண்மையிலேயே இராவணின் இராஜ்யத்தில், ஆகாய விமானங்களின் பயன்பாடு இருந்துள்ளது. இராவணனின் நாடு, விமானம் தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவு படைத்த நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தது. பொறாமை கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், அந்த உன்னத நாகரீகத்தை அழிப்பதற்காகவே போர் தொடுத்திருப்பார்கள். இராவணன் காலத்தில் கட்டப்பட்ட விமானம் பறவையைப் போன்ற வடிவில் அமைக்கப் பட்டிருந்தது. சிறிய ரக கடல் விமானம் அளவிலானது. நமது காலத்து கடல் விமானம் போன்று நீரிலும் செல்லும், ஆகாயத்திலும் பறக்கும் வல்லமை கொண்டது. இரண்டு, மூன்று விமானிகள் ஓட்டும் விமானங்கள். யுத்தத்திலும் பயன்படுத்தக் கூடியதாக அமைக்கப் பட்டிருந்தன. விமானத்தை பறப்பதற்கான எரிபொருளாக பாதரசம் (மெர்குரி) பயன்படுத்தப் பட்டுள்ளது.

பண்டைத் தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான உறவு. சித்தர்கள் அறிமுகப் படுத்திய பாதரசம். இவை பற்றி எல்லாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். போகர் சித்தர் கதிர்காமம் சென்றதையும், ஆகாய விமானம் தயாரிக்கும் செய்முறையை, சீனாவில் உள்ள சீடர்களிடம் கொடுத்த விபரத்தையும் எழுதியிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேய ஆய்வாளர்கள் இலங்கையில் சேகரித்த தகவல்கள் அதனை உறுதி செய்கின்றன. விமானம் தயாரிக்கும் முறை, விமானிகளுக்கான உணவு, பறத்தல் நெறி முறைகள் போன்ற பல விபரங்கள் அவர்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்கள் போன்ற பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த இனங்கள், பிற்காலத்தில் அவற்றை மறந்து விட்டன. அதற்கு காரணம், ஆட்சியாளர்கள் தமது பிராந்திய நலன் கருதி மட்டுமே ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் இனவுணர்வு கொண்டவர்களாக இல்லாவிட்டாலும், மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மத நம்பிக்கை, பகுத்தறிவை ஒடுக்கியது. நமது காலத்தில் இந்த குறுகிய சுயநலம் பேணும் சிந்தனை, இனவுணர்வு என்ற வடிவம் பெற்றுள்ளது.

மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த தமிழரும், சீனரும்,பிற நாகரீகமடைந்த சமூகங்களுடனான தொடர்பு அறுந்ததையிட்டு கவலை கொள்ளவில்லை. அதைத் தேடித் பார்க்கும் ஆர்வமும் இருக்கவில்லை. தமிழர்கள் சர்வதேசிய கொள்கையை கைவிட்டதால், எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்துள்ளனர், என்பதையிட்டு இன்றைக்கும் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. விமானம் செய்யும் தொழில்நுட்ப அறிவு, போகர் மூலம் கிடைத்திருந்தாலும், சீனர்களும் அதில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு பின்னர், சீனா வரை பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் அந்த தொழில்நுட்பக் குறிப்புகள் படிக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில், நவீன கால விமானம் பற்றிய சிந்தனை, மத்திய கால துருக்கியில் இருந்து தான் ஐரோப்பா சென்றது. இஸ்தான்புல் நகர மத்தியில் உள்ள ஒரு கோபுரத்தில் இருந்து, சிறகு கட்டிப் பறக்கும் பரிசோதனை செய்யப் பட்டது. அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வி கிட்டியது. இஸ்லாமிய துருக்கியுடன் தொடர்பு வைத்திருந்த வெனிஸ் (இத்தாலி) நாட்டு வர்த்தகர்களுக்கு, இந்த விபரங்கள் எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தன.

இலங்கையில், இன்றைக்கு உள்ள கொந்தளிப்பான இன முரண்பாட்டு அரசியலை காணும் ஒருவருக்கு, அந்த நாட்டின் தொன்மையான நாகரீகம் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. இன முரண்பாட்டை உருவாக்கி விட்ட ஆங்கிலேயர்களின் நோக்கமும் அதுவாகத் தானிருக்கும். சிங்களவனும், தமிழனும், நீயா, நானா என்று ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்டிருந்த தருணத்தை பயன்படுத்தி; ஆங்கிலேயர்கள் பல அறிவியல் செல்வங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். இன்று வரையில் வெளியிடப் படாத பல இரகசிய ஆவணங்கள், லண்டனில் மத்திய ஆவணக் காப்பகத்திலும், பிரிட்டிஷ் மியூசியத்திலும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்பதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை. (அந்த ஆவணங்களை வெளியார் பார்வையிடக் கூட அனுமதியில்லை.) ஆங்கிலேயர்கள் எமது அறிவியலை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த பொருட்களை, எமக்கே விற்று காசாக்குகிறார்கள். நாம் எவற்றை எல்லாம் அந்நியரிடம் பறிகொடுத்துள்ளோம் என்பதை அறியாதவர்களாக, பழம்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கின்றோம்.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Lost city 'could rewrite history'
ANCIENT FLYING MACHINES
Vimanas - King Ravana*****************************************

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

Sunday, December 18, 2011

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 8]
(எட்டாம் பாகம்)

"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்." என்று சொல்லப் படுகின்றது.
சுப்பிரமணியன்,ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?

முருகன் வழிபாடு தமிழகத்திற்கு மட்டுமே உரிமையானதல்ல. பிற திராவிட இனங்களான மலையாளிகள், கன்னடர், தெலுங்கர்கள் கூட முருகக் கடவுளை வழிபடுகின்றனர். (http://en.wikipedia.org/wiki/Murugan) இலங்கையில், ஈழத் தமிழர் மட்டுமல்லாது, சிங்களவர்களும் முருகனை தமது விருப்பத்திற்கு உரிய தெய்வமாக கருதுகின்றனர். ஆகவே, முருகன் ஒரு "தமிழ்க் கடவுள்" என்பதற்கு அப்பால், "திராவிடக் கடவுள்" என்று வரையறுக்கலாமா? அது கூட அத்தனை சுலபமானதல்ல. கம்போடியா, வியட்நாம் ஆகிய தூர கிழக்காசிய நாடுகளில், பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னர் முருக வழிபாடு நிலவியது. அங்கெல்லாம், கைவிடப் பட்ட கோயில் கல்வெட்டுகளில் முருகனின் உருவம் தெளிவாகத் தெரிகின்றது. அதற்கும் அப்பால்? "இந்துக்களின் தாயகமான" சீனா, திபெத் ஆகிய நாடுகளில்? மத்திய கிழக்கு நாடுகளில்? முருகனுக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் என்ன தொடர்பு?

வட சீன மாநிலமான மஞ்சூரியாவில், ஒரு குகைக்குள் இருந்து பண்டைய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. பௌத்த மதத்தின் வருகைக்கு முந்திய, புராதன சீன மக்களின் தெய்வங்கள் அவை. அவற்றில் ஒரு தெய்வம், ஆறு முகத்துடன், மயிலுடன் காணப் பட்டது. அதைக் கண்ட அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலருக்கு, மயிலை வாகனமாகக் கொண்ட ஆறுமுகக் கடவுள் நினைவுக்கு வந்தார். ஆயினும், அந்த உருவம் சீனக் கடவுளான மஞ்சுசிறி உடையது. (பார்க்கவும் :
An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China) மஞ்சு சிறிக் கடவுள் இன்றைய சீனர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். இருப்பினும், நமக்குத் தெரிந்த முருகனின் உருவத்துடன் ஒத்துப் போகவில்லை. மஞ்சு சிறி தெய்வத்தைப் பற்றிய கதைகளும், முருகனைப் பற்றிய புராணக் கதைகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால், திபெத்தில் நிலவும் மஞ்சு சிறி பற்றிய கதை ஒன்று, நமது புருவத்தை உயர்த்த வைக்கும்.

திபெத்திய பௌத்த மதமானது, இந்தியாவின் தாந்திரிய மதக் கூறுகளை உள்வாங்கியுள்ளது என்பதை முன்னர் பார்த்தோம். அது இன்றைக்கும், சாமிப் படங்களாக, மங்கள சின்னங்களாக, புராணக் கதைகளாக நிலைத்து நிற்கின்றது. மஞ்சு சிறிக் கடவுள் பற்றிய புராணக் கதை ஒன்று, சூர சம்ஹாரத்தை நினைவு படுத்துகின்றது. ஆனால், திபெத்தில் சூரனின் இடத்தில் யமனை வைத்து சொல்லப் படுகின்றது. யமன் என்ற மரண தேவதை, இந்து சமயத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பம்சமல்ல. சீனாவிலும், ஈரானிலும், "மனிதர்கள் இறந்த பின்னர் தீர்ப்பு வழங்கும் யம தர்மன்" பற்றிய நம்பிக்கை நிலவுகின்றது. அந்த நாடுகளில், யமனுக்கு எதிரான போரை, தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே நோக்கினார்கள். இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள், அந்தக் கதையை தமது அரசியல் நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை சூர சம்ஹாரம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா?

அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் யுக்தி அது. அண்மைய உதாரணத்திற்கு, லத்தீன் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளலாம்.

பூர்வீக மக்களான செவ்விந்தியரின் கடவுளரும், வழிபாட்டு முறைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினால் உள்வாங்கப் பட்டன. இன்றைக்கும் அந்த நாடுகளில் நடைபெறும் மத வழிபாட்டு விழாக்களில் அதனை அவதானிக்கலாம். தென்னிந்தியாவிலும் அது போன்றே, தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. ஆரியரின் கலாச்சார ஆதிக்கம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு, இது ஒரு சான்றாகும்.

தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைய "நாகரீகமடைந்த தமிழர்கள்", குறவர்கள் போன்ற "நாகரீகமடையாத" பழங்குடியினரை தமது மூதாதையர் என்று சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். "குறவர்களின் தெய்வமான முருகனை கடவுளாக கும்பிடுவோம். ஆனால் குறவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் ஒதுக்கி வைப்போம். ஏனென்றால் நாங்கள் நாகரீகமடைந்து விட்டோம்."

முருகனை தமிழ்க் கடவுள் என்று அழைக்கலாம் என்றால், முருகனை "குறக் கடவுள்" என்றும் அழைக்கலாம் அல்லவா? இவ்விரண்டு எடுகோள்களும் சரியானவை அல்ல. உண்மையில், தமிழ்ப் பழங்குடி இனங்கள் முருகன் வழிபாட்டை கைவிடாமல் காப்பாற்றி வந்துள்ளன. இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் முருகன், வள்ளி போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர், அதற்கு மாறாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. அன்றிருந்த வசதி படைத்த பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரத்தை விரும்பி ஏற்றிருந்தனர்.

சைவ சித்தாந்த மதத்தை வளர்த்த நாயன்மார்களும், சமஸ்கிருதமயப் பட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது. முருகக் கடவுளுக்காக இயற்றப் பட்ட பக்திப் பாடல்கள் எல்லாம், "கந்தர் அலங்காரம், கந்த சஷ்டிக் கவசம்" போன்ற பெயர்களில் உள்ளன. சுப்பிரமணியன் என்பதை விட, கந்தன் என்பது முருகனுக்கு நெருக்கமான பெயர். (முருகன் என்பதும் சமஸ்கிருதப் பெயராக இருக்கலாம். இது குறித்து பின்னர் பார்ப்போம்.) ஆச்சரியப் படத் தக்கவாறு, "ஸ்கந்தன்" என்ற பெயர் இந்து மதத்தில் மட்டும் அறியப் பட்ட ஒன்றல்ல.

பௌத்த மதத்திலும் ஸ்கந்தன் என்ற பெயர் வருகின்றது. ஆனால், பௌத்த மதம் புத்தரை முதன்மைப் படுத்தியதால், ஸ்கந்தனை காவல் தெய்வமாக தரம் தாழ்த்தி விட்டது. இன்றைக்கும், இலங்கையில் உள்ள புராதன பௌத்த விகாரைகளை
பார்வையிடும் ஒருவர், காவல்தெய்வமான ஸ்கந்தன் சிற்பத்தை நேரில் காணலாம். சீனாவிலும், பௌத்த கோயில்களின் முன்பு ஸ்கந்தன் சிலைகள் காணப் படுகின்றன. சில அறிஞர்கள், ஸ்கந்தன் என்ற சொல்லை, கந்தா என்ற பௌத்த தத்துவத்துடன் சேர்த்துப் பார்க்கின்றனர். சமஸ்கிருதத்தில் ஸ்கந்தா, அல்லது பாளி மொழியில் கந்தா என்பது, மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வேதனைகளின் தொகுப்பு பற்றிய தத்துவம் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை சேர்க்க வேண்டியுள்ளது. சரித்திரத்தில் ஆரியர்களின் படையெடுப்பு நடக்கவில்லை என்று வாதிக்கும் அறிஞர்கள், சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வேதங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். சம்ஸ்கிருத மொழியும், தேவநாகிரி எழுத்து வடிவமும் இந்தியாவுக்கு உரியது என்பது உண்மை தான். ஆனால், சமஸ்கிருதத்திற்கு முன்னரும், பழமையான மொழிகள் இந்தியாவில் இருந்துள்ளன. பிராமி, பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு தனித்து ஆராயப் பட வேண்டியது. இத்தகைய பொதுவான சர்வதேச மொழிகளின் ஊடாகத் தான், மதங்களும், தத்துவங்களும் பரவியுள்ளன. இல்லாவிட்டால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மொழிகளைப் பேசும், சீனர்களும், தமிழர்களும் எவ்வாறு கலந்துரையாடி இருப்பார்கள்? சித்த வைத்திய அறிவியலை கற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்த சீன தேச அகத்தியரும், தமிழ்க் கடவுளான முருகனும் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?

அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்று கருதப் படுகின்றது. உளவாளிகள் சேகரிக்கும் தகவல்கள் சில நேரம், உலக ஒழுங்கை மாற்றியமைக்கின்றன. கடல் கொண்ட பாண்டிய நாட்டில் நிலவிய முருக வழிபாடு, அகத்தியர் உதவியால் இன்றைய தமிழகத்தின் பொதிகை மலையில் மீளுயிர்ப்பு கண்டது. திருவள்ளுவர் என்பது ஒருவரைக் குறிக்குமா, என்ற சர்ச்சை போன்று தான், அகத்தியர்கள் பலராக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. அதாவது, பண்டைய காலங்களில், சீனாவில் இருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்கள் எல்லோரும், பிற்காலத்தில் அகத்தியர் என்று ஒரு நபராக கருதப் பட்டிருக்கலாம். சித்த மருத்துவம் மட்டுமல்ல, வான சாஸ்திரம் போன்ற பிற அறிவியல் துறைகளிலும், சீனர்-தமிழர் கூட்டுறவு இருந்துள்ளது. முருகனின் பூர்வீகத்தை பற்றிய இரகசியம் அதனை நிரூபிக்கின்றது.

முருகன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லா, அல்லது பழந்தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பா? தமிழர்கள் மட்டுமல்லாது, உலகின் பிற பாகங்களில் வாழ்ந்த மக்களும் முருகனை வழிபட்டனரா? யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தோற்றத்திற்கு முன்னர், மத்திய கிழக்கு நாடுகளில் முருக வழிபாடு பரவியிருந்ததா? அப்படியானால், பண்டைய நாகரீகங்களில் முருக வழிபாடு பல்வேறுபட்ட இனங்களுக்கு பொதுவான மதமாக இருந்துள்ளதா? உலகில் மறைந்து போன நாகரீகத்திற்கும், முருகனுக்கும் தொடர்புண்டா? முருகக் கடவுளின் பூர்வீகம் என்ன? எங்கே உள்ளது?

சர்வதேசியத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டைத் தமிழன் உலகம் போற்ற வாழ்ந்தான். இனத் தேசியவாதத்தால் மதி மயங்கிய இன்றைய தமிழன், இழி நிலைக்கு தள்ளப் பட்டான். முருகன் தமிழ் இனத்திற்கு மட்டுமே சொந்தமான கடவுள் அல்ல. மாறாக, தமிழ் சர்வதேசியவாதிகளுக்கு உரிமையான கடவுள்.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Murugan
Skanda
Manjusri
An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China
--------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !

Thursday, December 15, 2011

பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஏழாம் பாகம்)

"சித்தர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழர்களுடைய தனியுடமை. சித்த வைத்தியமும், தற்காப்புக் கலையும் தமிழகத்தில் இருந்தே சீனா சென்றன. " என்று சுய தம்பட்டம் அடிக்கும் தமிழினவாதிகள், அறிவியலில் பிற இனத்தவர்களின் பங்களிப்பை மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் சித்தர் மரபை தோற்றுவித்த முதலாவது சித்தரான திருமூலர் ஒரு தமிழரல்ல, காஷ்மீரை சேர்ந்தவர். அதே போன்று, சீனா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பலர், தமிழகம் வந்து சித்த அறிவியலை வளர்த்துள்ளனர். தமிழ்ச் சித்தர்கள் பலர், சீனா, அரேபியா சென்று தாம் அறிந்தவற்றை கற்பித்துள்ளனர். பண்டைய தமிழர்கள் நம்மைப் போல குறுகிய சிந்தை கொண்ட இனவாதிகளாக இருக்கவில்லை. இருந்திருந்தால், இன்று நாங்கள் சித்தர் அறிவியலுக்காக பெருமைப் பட்டிருக்க முடியாது. அறிவியலை ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக உரிமை பாராட்டுவது பேதைமை. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழகம் வருவதும், தமிழ் நாட்டு அறிஞர்கள் வெளிநாடு செல்வதுமாக, சர்வதேச தொடர்புகள் காரணமாகவே தமிழர் அறிவியலும் வளர்ந்தது.

சித்தர் மரபில் முக்கியமானவராக கருதப்படும் அகத்தியர், சீன தேசத்தில் இருந்து வந்தவர் என்பதை முன்னரே பார்த்தோம். இம்முறை, மேலும் இரண்டு சீனர்களின் பங்களிப்பை விரிவாகப் பார்ப்போம். இவர்களில் ஒருவராவது சீனர் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும், பதினெட்டு சித்தர்களின் பட்டியலில், பெயர் குறிப்பிடப் பட்டவர்களைப் பற்றி மட்டுமே, நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களை விட பல சீன நாட்டு சீடர்கள், அறிவியல் கற்க வந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அதே போன்று, பல தமிழ் சீடர்கள் அறிவுத் தேடல் காரணமாக சீனா சென்று தங்கி விட்டனர். "சீனர்களுக்கு நாம் தான் அறிவு புகட்டினோம்" என்பது தற்புகழ்ச்சி. "சீனர்களுடன் நாம் அறிவியலை பகிர்ந்து கொண்டோம்", என்பதே மெய்யான வரலாறு. எம்மிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டனர். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.

போகநாதர் என்ற சித்தரின் கதை அதனை உறுதிப் படுத்துகின்றது. தமிழகத்தில் போகர் அல்லது போகவா முனிவர் என அறியப் படுபவர், சீனாவில் போ யங் (Bo Yang ) என அழைக்கப் படுகிறார். பிறப்பால் அவர் சீனர் என்று நம்பப் படுகின்றது. அதே நேரம், போகநாதர் ஒரு இந்தியர் என்றும் சிலர் கூறுகின்றனர். இரண்டுமே இன்னும் உறுதிப் படுத்தப் படவில்லை. எந்தவொரு சித்தரும் தன்னை ஒரு இனத்தை, அல்லது தேசியத்தை சேர்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. அத்தகைய அடையாளத்தை ஏற்றுக் கொள்ள விரும்பியதுமில்லை. போகநாதர் தமிழகத்தில் மட்டுமல்லாது, சீனாவிலும் அறிவியலை போதித்தார். இரண்டு நாடுகளும், சித்தர்களின் அருஞ்செயல்களால் நன்மை அடைந்துள்ளன. உண்மையில், போகவா முனிவரை தமிழகம் மறந்து விட்டது. ஆனால், சீனர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். சீனாவில் டாவோயிசம் என்ற மதத்தை உருவாக்கிய லாவோசியும், போகநாத சித்தரும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.(பார்க்க :
Becomes known as Lao-Tzu, founder of Taoism)

வட இந்தியாவில், காசியில் பிறந்த காளிங்க நாதர் என்ற சித்தர், சீனா சென்றிருந்த சமயம், போகநாதர் அவரது சீடரானார். இந்திய ஞானிகள் சீனா சென்று போதனை செய்வது, 5000 அல்லது 3000 வருடங்களுக்கு முன்னர், வழக்கமாக நடந்து கொண்டிருந்த விடயம். பௌத்த மதமும் அவ்வாறு தான் பரவியது. அந்தளவுக்கு பண்டைய இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது. காளிங்க நாதர், சீனாவில் தனது சீடர்களுக்கு, தத்துவ ஞானம் போதிக்கும் பள்ளிகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான், போக நாதர் அவருக்கு அறிமுகமானார். அடுத்த தடவை இந்தியா செல்லும் பொழுது, போக நாதரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். இருவரும் பழனியில், சித்தர்கள் கல்லூரியை ஸ்தாபித்தனர். காளிங்க நாதர் தனது சக்தி முழுவதையும், தலைமைச் சீடரான போக நாதருக்கு தாரை வார்த்தார். அதே போன்று, போகநாதர் சமாதி அடைவதற்கு முன்னர், புலிப்பாணி சித்தருக்கு தனது சக்திகளை தாரை வார்த்தார்.

போகநாதர் காலத்தில் தான், பழனியில் சித்தர்களின் கல்லூரி அமைக்கப் பட்டதாகத் தெரிகின்றது. நமது கால கல்வி முறையுடன் ஒப்பிட்டால், அன்றிருந்தது ஒரு கல்லூரி தான். "பழனி சித்த அறிவியல் கல்லூரி" யில் தமிழ் சித்தர்கள் மட்டுமே படித்ததாக நினைப்பது தவறு. இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், சீனா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பன்னாட்டுச் சித்தர்கள் வந்து படித்தார்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். போக நாதருக்கு பின்னர், கல்லூரியின் தலைமைப் பொறுப்பேற்ற புலிப் பாணிச் சித்தர், ஒரு சீனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. புலிப் பாணிச் சித்தரின் நிஜப் பெயர் "யி"(Yi). சந்தேகத்திற்கிடமின்றி, புலிப் பாணிச் சித்தர் ஒரு சீனர் என்பதை, அனைத்து தரவுகளும் நிரூபிக்கின்றன. அந்தக் காலத்தில், சீனச் சித்தர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த நேரம், தமிழ்ப் பெயர் ஒன்றை தெரிவு செய்வது வழக்கம். Bo Yang என்ற சீன நாட்டு போகரும், அவ்வாறே தமிழராக கருதப் பட்டிருக்க வாய்ப்புண்டு.

காளிங்க நாதர், தனது வாரிசான போகரை சீனாவில் தேர்ந்தெடுத்தார். போகநாதரும் அதே வழி முறையை பின்பற்றினார். தனக்கு அடுத்தாக, பழனி சித்தர்களை தலைமை தாங்குவதற்கு, புலிப் பாணிச் சித்தரை (யி) சீனாவில் இருந்து கூட்டி வந்தார். சீனாவில் இருந்து வந்த தலைமைச் சித்தரான யி, வசியக் கலையில் வல்லவர். புலியை வசியம் செய்து, அதன் மேல் அமர்ந்து சவாரி செய்வார். மந்திரம் சொல்லி தண்ணீரை உறைய வைப்பார். அதனால் தான் அவருக்கு "புலிப் பாணி சித்தர்" என்ற பெயர் வந்தது. சித்தர்கள் மரபில், மெஸ்மரிசம் எனப்படும் வசியக்கலை புலிப் பாணிச் சித்தர் மூலமாகத் தான் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகமாகியது. இன்றைய தமிழர்களின் உணவுப் பழக்கம் கூட, சீனத் தொடர்பால் பெருமளவு மாறி விட்டது. பண்டைத் தமிழர்கள் அரிசியை கண்ணால் கண்டிருக்கவில்லை. சீனாவில் இருந்து அறிமுகமான அரிசியை, நாம் இன்று நாளாந்த உணவாகப் புசிக்கின்றோம். போகநாதர் சீனாவில் இருந்து கொண்டு வந்த உப்பு, தமிழகத்தில் "சீனாக் காரம்" என்ற பெயரில் அறிமுகப் படுத்தப் பட்டது.

சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக இன்றைக்கும் காட்சியளிக்கின்றது, பழனி முருகன் ஆலயம். தமிழகத்தில் பெருமளவு வருமானத்தை ஈட்டும் முருகன் கோயில். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. சிவன், பார்வதியிடம் இருந்து ஞானப்பழத்தை பெறுவதற்காக, முருகனும், விநாயகரும் போட்டி போட்டார்கள். யார் முதலில் உலகை சுற்றி வலம் வருவது, என்பதே போட்டி. அண்ணன் விநாயகர், தாய், தந்தையை சுற்றி வந்து ஞானப் பழத்தை வாங்கிக் கொண்டார். மயில் மீதேறி உலகை சுற்றி வந்த முருகன், கோபித்துக் கொண்டு சென்று, பழனி மலையில் தங்கி விட்டார். இது புராணக் கதை. பெரும்பாலான முருக பக்தர்கள் அறியாத நிஜக்கதை ஒன்றுண்டு. அதுவே தண்டாயுதபாணி எனும் பழனி ஆண்டவரின் இரகசியம். பழனியின் சிறப்பு, கோயில் மூலவர் சிலையிலும், அதைச் செதுக்கிய சித்தர்களிலும் தங்கி உள்ளது. பழனி முருகனை பிரதிஷ்டை செய்த போகநாதரின் சமாதியும் அங்கே தானுள்ளது.

பழனியில் கூடிய சித்தர்கள் மகாநாட்டில், பழனி முருகன் சிலை அமைப்பது பற்றி முடிவெடுக்கப் பட்டது. சித்தர்களும், பொது மக்களும் வழிபடுவதற்காக மட்டுமல்லாது, புதிய வேதியியல் அற்புதமான கண்டுபிடிப்பொன்றை காட்சிப் படுத்துவதற்காகவும் அந்த சிலையை செதுக்க விரும்பினார்கள். அதாவது, பழனி முருகனின் "தெய்வ சக்தி", சித்தர்களின் விஞ்ஞான அறிவியலுக்கு எடுத்துக் காட்டாகும். பழனி முருகன் சிலையை செதுக்கும் பொறுப்பு போக நாதரிடம் விடப்பட்டது. அந்தச் சிலை கல்லில் செதுக்கப் படவில்லை. மூலிகைகளால் தயாரிக்கப் பட்டது. ஒன்பது இரசாயன கலவைகளை கொண்டு தயாரிக்கப் பட்ட முருகன் சிலை, பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும், இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பழனியில் அபிஷேகம் செய்யும் முறை கூட, விஞ்ஞான முறைப்படி அந்த சிலையை பராமரிக்கும் யுக்தியாகும். பழனி முருகன் சிலை செய்வதற்கு பயன்படுத்தப் பட்ட இரசாயன சூத்திரம், இன்றைக்கும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. நவ பாஷாணங்கள் என்று அழைக்கப் படும் வேதியல் நச்சுப் பொருட்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன, ஒன்றைத் தவிர. பாதரசம் (Mercury) என்ற பதார்த்தம் இன்றி அந்தச் சிலை முழுமை அடைந்திராது. பாதரசம் இந்தியாவில் எங்கேயும் கிடைக்கவில்லை. போகநாதர் அதனை சீனாவில் இருந்து கொண்டு வந்தார். பழனி முருகன் சிலை, சித்தர்களின் அறிவியல் சாதனையை மட்டும் பறைசாற்றவில்லை. சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக, இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (
Siddha Bhoganāthar: An Oceanic Life Story)

இரசாயனவியல் (வேதியியல்) எனும் அறிவியலை ஐரோப்பியர்களே கண்டுபிடித்தார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு அல்ல. அந்த அறிவியலைக் குறிக்கும் பெயரான Chemistry, ஒரு ஆங்கிலச் சொல் அன்று. Al - Chemi என்ற அரபுச் சொல்லில் இருந்து உருவானது. (அரேபியர்களும் கிரேக்க மொழியில் இருந்து கடன் வாங்கியிருந்தனர்.) வேதியியல் (இரசாயனவியல்) கல்வியை, ஐரோப்பியர் அரேபியரிடம் இருந்து கற்றனர். கிரேக்கர், எகிப்தியர், (இஸ்லாமிற்கு முந்திய) அரேபியர் ஆகிய பண்டைய மேற்காசிய ஞானிகளின் குறிப்புகள், பிற்காலத்தில் அல்கெமி என்ற கற்கைநெறியாக தொகுக்கப் பட்டது. பண்டைய காலத்தில், சீனர், அரேபியர், கிரேக்கர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, தமிழர்களும் இரசாயனவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். (George Lockemann, The Story of Chemistry, Philosophical Library, U.S.A, 1959, pp.30-31.) பழனியாண்டவர் சிலையை செய்ய பயன்பட்ட சீனப் பாதரசம், தமிழகத்தில் வேதியியல் அறிவியலை தோற்றுவித்தது. பாதரசம் என்ற சொல்லில் இருந்து தான், சித்தர்கள் பயன்படுத்திய "ரசவாதம்" என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பீங்கான் மட்பாண்டம் செய்வதற்கான தொழில்நுட்ப அறிவை, சீனாவில் இருந்து வந்த சித்தர்கள் சொல்லிக் கொடுத்தனர். அதே போன்று, பட்டுத் துணி நெசவு செய்யும் தொழில் நுட்பமும், சீனச் சித்தர்களின் தொடர்பால் பெறப் பட்டிருக்கலாம்.

பண்டைய காலத்தில் நிலவிய, சீனர், அரேபியர், தமிழர்களுக்கு இடையிலான நெருக்கமான உறவு எவ்வாறு அறுந்து போனது? "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வரவில்லை", என்று மறுக்கும் வரலாற்று அறிஞர்களும், தென்னிந்தியா ஆரிய மயமானதை மறைக்க முடியாது. சமஸ்கிருதம் பேசிய, பிராமண- இந்து மதத்தை பின்பற்றிய வட நாட்டு மன்னர்கள், தென்னிந்தியப் பகுதிகளை படிப்படியாக ஆக்கிரமித்தார்கள். அந்தக் காலங்களில், வட நாட்டு மன்னர்களும், தென் நாட்டு மன்னர்களும் மாபெரும் போர்க் களங்களில் மோதிக் கொண்டார்கள். அந்தப் போர்களைப் பற்றிய தகவல்கள், தமிழில் புறநானூறு என்ற பெயரில் குறித்து வைக்கப் பட்டன. அதாவது, அந்நிய "இந்து" ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட, தமிழர்களின் வீரஞ் செறிந்த வரலாறு தான் புறநானூறு ஆகும். அன்று ஆரிய மன்னர்களுக்கு காட்டிக் கொடுத்து, அவர்களைப் போலவே "சமஸ்கிருதம் பேசும் இந்துக்களாக" மாறியவர்களின் வாரிசுகள்,இன்று "தமிழரின் புறநானூற்று வீரம்" பற்றி பேசுவது வேடிக்கையானது. அவர்கள் தான், பண்டைய தமிழர்களின் நண்பர்களான சீனர்களையும், அரேபியர்களையும் எதிரிகளாக கருதிக் கொண்டார்கள். உண்மையான தமிழர்கள் ஒன்றில் போரில் மாண்டு விட்டனர், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகள் என்ற பெயரில் அடிமைகளாக்கப் பட்டனர்.

ஆரிய ஆக்கிரமிப்பின் கீழ் இந்துக்களாக மாறிய தமிழர்கள், சித்தர்களையும், சர்வதேச நட்புச் சக்திகளையும் மறந்தார்கள். வட நாட்டவரின் இந்து மதம், சித்தர்களின் அறிவியலை புறக்கணித்தது. போலிச் சாமியார்கள், மந்திரம், பில்லிசூனியம் போன்ற தீய நோக்கங்களுக்காக சித்த அறிவியலை பயன்படுத்தி வரலாயினர். தமிழகத்தில் ஒரு இருண்ட காலம் வரப்போகின்றது என்பதை, சித்தர்கள் அன்றே அறிந்திருப்பார்கள். அதனால், கடுமையாக உழைத்து, ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த அறிவியல் குறிப்புகளை எல்லாம், தாமே அழித்து விட்டுச் சென்றனர். அன்றிலிருந்து பல போலிச் சித்தர்கள் தோன்றினார்கள். பிற்காலத்தில் தமிழில் எழுதப் பட்ட, சித்தர்களின் அறிவியல் நூல்கள் பல போலியானவை என்று தெரிய வருகின்றது.

போகநாத சித்தர், ஆகாய விமானம், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை உருவாக்கும்
தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தார். (அவர் அவற்றை எல்லாம் சீனர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.) அதே போன்று, ஜெருசலேம்
சென்ற போகநாத சித்தர், புகை கக்கும் மோட்டார் வாகனத்தில் சவாரி செய்ததாகவும் ஒரு தகவல். அவர் மெக்காவில் முகமது நபிகளை சந்தித்து முஸ்லிம் ஆக மாறினார். (Bogar.3.222and 3.227). சீன, அரேபிய தரவுகளைக் கொண்டு அந்தத் தகவல்களை உறுதிப் படுத்துவதற்கு ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பல விஞ்ஞான அற்புதங்களை எல்லாம் ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அவை குறித்த சாத்தியப்பாடுகளை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தார்கள். சீன, அரேபிய மூலங்களில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பியர்கள் அவற்றை பரிசோதனை செய்து மீளக் கண்டுபிடித்தார்கள்.

(தொடரும்)

மேலதிக விபரங்களுக்கு:
1.
Arulmigu Dandayudhapani Swami Devasthanam, Palani
2.
Hindu Web site
3.The Encyclopaedia Of Indian Literature (Volume Five)
---------------------------------------------


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்

Monday, December 12, 2011

தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்


[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஆறாம் பாகம்)

கைலாய மலையில், சிவபெருமானின் திருமணத்திற்காக உலக மக்கள் எல்லாம் திரண்டிருந்தனர். அதனால், பூமியின் பாரம் அதிகமாகி, வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. பூமியை மீண்டும் சமப் படுத்துவதற்காக, சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கி அனுப்பி வைத்தார். அகத்தியர் தென் திசை பயணமாகும் வழியில் விந்திய மலை குறுக்கிட்டது. அகத்தியர், தான் தெற்கே சென்று வடக்கே திரும்பும் வரையில், விந்திய மலை தாழப் பதிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அகத்தியர் திரும்பி வராததால், அப்போது தாழ்ந்த விந்திய மலை இன்றும் உயரம் குறைந்து காணப்படுகின்றது. தெற்கே போகும் வழியில், வாதாபி, வில்வலவன் என்ற இரு அசுரர்களை சமாளிக்க வேண்டியேற்பட்டது. அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை, காகம் வடிவில் வந்த விநாயகர் தட்டி ஊற்றி விட்டதால் தான், காவிரி ஆறு உருவானது. மேலேயுள்ள குறிப்புகள், அநேகமாக எல்லா தமிழ் இந்துக்களுக்கும் தெரிந்த புராணக் கதைகளில் இருந்து பெறப்பட்டவை.

தமிழகத்தில் பதினெண் சித்தர்களில் முக்கியமானவராகவும், "அகத்தியம்" எனப்படும் தமிழ் இலக்கண நூலை எழுதியவராகவும், அகத்தியர் போற்றப் படுகிறார். சித்தர்களின் சாதியையும் மறக்காமல் ஆராய்ந்தவர்கள், அகத்தியர் ஒரு வெள்ளாளர் என்று கூறுகின்றனர். உண்மையில், அகத்தியர் ஒரு "மர்ம ஆசாமியாக" கருதப் படுகின்றார். ஏனெனில், தமிழகத்து சித்தர்கள் பற்றி வேறு பல வரலாற்றுக் குறிப்புகள் மூலம் உறுதிப் படுத்த முடிகின்றது. ஆனால், அகத்தியர் பற்றி புராணங்கள் மட்டுமே பேசுகின்றன. இருந்த போதிலும், அகத்தியருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய காரணம் என்ன? மேலேயுள்ள புராணக் கதையில் இருந்தே அதனை புரிந்து கொள்ளலாம். எமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து, கனவுகள் தோன்றுவது போல, சரித்திரத்தில் நடந்த சம்பவங்கள் புராணக் கதைகளினுள் மறைந்து கிடக்கின்றன. கற்பனையை பிரித்தெடுப்பதன் மூலம், அன்று நடந்த நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளலாம்.

கலியுகம் பிறப்பதற்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்ததாக, அவரைப் பற்றிய புராணம் குறிப்பிடுகின்றது. அகத்தியரின் காலம், கி.மு. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புண்டு. அந்தக் காலகட்டத்தில் தான் வட இந்தியப் பிரதேசங்கள் ஆரிய ஆதிக்கத்தின் கீழ் வந்தன. அப்போதும், தென்னிந்தியா போரில் வெல்ல முடியாத சுதந்திரப் பிரதேசமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலை அதற்கு தடையாக இருந்தது. தென்னிந்தியா மீதான அடுத்த கட்ட படையெடுப்பை நடத்துவதற்கு முன்னர், அந்தப் பிரதேசத்தைப் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் தேவைப் பட்டன. அதற்காக அகத்தியர் என்ற ஒரு உளவாளியை அனுப்பி வைத்தார்கள். அகத்தியர், விந்திய மலையை தாண்டும் பாதையை கண்டுபிடித்தார். இன்று கர்நாடகா மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கும் வாதாபி நாட்டின் மன்னனை சூழ்ச்சியால் வென்றார். அகத்தியரின் வழித் தடத்தை பின்பற்றிய ஆரிய படைகள், மெல்ல மெல்ல தென்னிந்தியா ஆக்கிரமித்திருக்கும்.

அன்னியப் படைகள் ஆக்கிரமித்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களை வெல்லும் நோக்குடன் சில கதைகள் பரப்பப் பட்டன. தெற்கில் ஓடும் காவிரி ஆற்றுக்கு, வடக்கே ஓடும் கங்கை நதியுடன் தொடர்புள்ளதாக கதை கட்டி விடப்பட்டது. பூகோள ரீதியாக அது சாத்தியமில்லை என்று, அன்று தென்னிதியாவை ஆக்கிரமித்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால், அகத்தியரின் கமண்டல நீரை, விநாயகர் தட்டி ஊற்றியதாக கதை இயற்றினார்கள். அதே போன்று, அகத்தியர் ஒரு வட நாட்டு ஒற்றர் என்ற உண்மை தெரியக் கூடாது என்பதற்காக, தென்னிந்தியர்களின் கடவுளான சிவபெருமான் அனுப்பி வைத்ததாக கூறினார்கள். ஆரியரின் வருகைக்கு முந்திய, சங்க கால தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கணத்தை, அகத்தியர் சமஸ்கிருதத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதி இருப்பார். இவை எல்லாம், வடக்கே இருந்து தெற்கு வரையில் ஆரிய கலாச்சாரத்தை பரப்புவதற்காக புனையப் பட்ட கதைகள். இது போன்ற கதைகளை, இன்றைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டது.

இந்து மத நம்பிக்கையாளர்கள், எனது கூற்றுகளை கற்பனை என்று ஒதுக்கித் தள்ளலாம். அதே நேரம், புராணக் கதைகளும் கற்பனையே என்று அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவை உண்மை என்றால், பூமி தட்டை என்று (வடக்கு தாழ, தெற்கு உயர்ந்தது அதனால் தான்) நம்புகிறார்களா? அது போக, சிவபெருமானின் திருமண விழாவையும், அகத்தியரின் தெற்கு நோக்கிய பயணத்தையும் தொடர்பு படுத்தும் கதை தமிழர்களுக்கு மட்டுமே சொல்லப்படுவதன் காரணம் என்ன? பெங்களூர் சித்த மருத்துவ கல்லூரியை சேர்ந்த Dr. Mandayam Kumar செய்த ஆய்வு வேறொரு கதையைக் கூறுகின்றது.
( SAGE AGASTHYA – FOREMOST OF THE SIDDHAS by Dr. Mandayam Kumar of the Siddha Medical Research Institute, Bangalore) அகத்தியர் பற்றிய தமிழ் நாட்டுக் கதைகளை மட்டுமல்லாது, வட நாட்டுக் கதைகளையும் தனது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். அகத்தியர் பற்றி வட நாட்டில் நிலவும் கதைகளில், கடற்கோள் (சுனாமி) தாக்குதல் காரணமாக காணாமற் போன குமரி கண்டம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பழந்தமிழரின் பெருமைக்கு சான்றாக விளங்கும் தரவுகளை தமிழ்ப் புராணக் கதை மறைக்க வேண்டிய காரணம் என்ன?

சித்தர்கள் எனப்படுவோர், ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த திராவிட (பூர்வீக இந்தியர்கள்) புத்திஜீவிகள் ஆவர். (சைவ சமயத்தின் நெருக்கடியான நிலையும் சீர்திருத்தக் குறிப்புகளும், மறைமலை அடிகள்,& இந்து சமய வரலாறு, N.C. கந்தையா பிள்ளை) திருமூலரும், அகத்தியரும் தமிழர்கள் அல்ல. இருவரும் வட நாட்டில் இருந்து வந்தவர்கள்.(The coronation Tamil dictionary , N. Kadirvelu Pillai, Kanchi Nagalinga Mudaliar)தமிழகத்திற்கு வந்த அகத்தியர் பற்றி திருமூலர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் சில கொள்கை முரண்பாடுகள் காணப்பட்டன. ஆகவே, வடக்கே இருந்து வந்த "ஆரிய அகத்தியர்" எவ்வாறு சித்தர் குழுமத்தில் ஒருவராகக் கருதப் படுகிறார்? அகத்தியர் தன்னை ஆரியராக இனங் காட்டியிருக்க மாட்டார். அவரது "வித்தியாசமான முகத் தோற்றம், பேசிய மொழி, கல்வி கற்ற இடம்" என்பன (இது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்), அவரது உண்மையான அடையாளத்தை மறைக்க உதவியிருக்கலாம். வட நாட்டு புராணக் கதைகள் அவரை குஜராத்தில் பிறந்த தூய ஆரிய இனத்தை சேர்ந்தவராக குறிப்பிடுகின்றன.

தமிழர்கள், அகத்தியர் வெள்ளாள சாதியில் பிறந்ததாக கூறுகின்றனர். அகத்தியரின் வருகைக்கு பின்னர், தமிழகத்தில் ஆரிய ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டிருக்கும். அந்நியர்களான ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், உள் நாட்டில் தம்மோடு ஒத்துழைத்த தமிழர்களின் ஒரு பிரிவினரின் உதவியுடன் தான் ஆட்சி நடாத்தி இருப்பார்கள். அந்தப் பிரிவினர் (ஆரியர் ஆதரவில் உயர்சாதியான வெள்ளாளர்கள்?)அகத்தியரை தமது ஆன்மீகக் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அகத்தியர் பற்றிய தமிழ்ப் புராணக் கதைகள் எல்லாம், அந்நியருடன் ஒத்துழைத்த தமிழர்களால், பிற்காலத்தில் இயற்றப் பட்டிருக்கலாம். சைவ சித்தாந்தமும், அகத்தியர் புராணமும், தமிழர்களை "இந்து மதம்" எனும் வட நாட்டு ஆரிய கலாச்சாரத்திற்குள் ஒன்று சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.

அகத்தியர், கி.மு. 7673 ம் ஆண்டு, புராதன ஆரிய இனத்தை சேர்ந்த பார்கவா முனிவருக்கும், இந்துமதிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் இன்றைய சீனாவின் மாநிலங்களான திபெத், மஞ்சூரியா ஆகிய இடங்களில் கல்வி கற்றுள்ளார். சில காலம் மலேயாவில் வசித்து விட்டு, கடல் கடந்து குமரி கண்டம் வந்துள்ளார். அன்றைய குமரி கண்டமானது, தென்னிந்தியாவில் இருந்து அந்தார்ட்டிகா வரை விரிந்திருந்தது. அதன் மையப் பகுதியாக இலங்கை இருந்துள்ளது. குமரி கண்டம் முழுவதும் இராவணனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இராவணன், குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளான். திருகோணமலை, கதிர்காமம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்த அகத்தியர், அங்கு முருகனிடம் சித்த வைத்தியத்தை கற்றுக் கொண்டார். சித்த வைத்தியம் குறித்த அறிவை பெற்றுக் கொண்ட அகத்தியர், மீண்டும் சீனா சென்றுள்ளார். சீனாவின் மஞ்சூரியாவிலும், பிற பகுதிகளிலும் சித்த வைத்தியம் கற்பிக்கும் பாடசாலைகளை நிறுவினார்.

வட நாட்டாரின் புராணக் கதையிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. தெற்கே குமரி கண்டத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கியது. வடக்கே ஆர்க்டிக் பனி உருகியது போன்ற பேரழிவுகள் குறிப்பிடப் படுகின்றன. முன்பு மஞ்சூரியாவில் இருந்த இந்துக்களின் புனிதஸ்தலமான கைலாய மலை, பிற்காலத்தில் திபெத்திற்கு இடம் மாறுகிறது. ஒரு காலத்தில், சீனாவின் வட மாநிலமான மஞ்சூரியாவில் வாழ்ந்த "இந்துக்கள்" (பிராமணர்கள்), பிற்காலத்தில் தென் மாநிலமான திபெத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர் என்பது இத்தால் பொருள் கொள்ளப் பட வேண்டும். பிராமணர்கள் அல்லது ஆரியரின் மூதாதையர் துருக்கிய இனத்தவர்கள், வெளித் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருப்பார்கள். அதாவது, மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கிய இனங்களை சேர்ந்தவர்கள். மஞ்சூரியாவிற்கு அருகில் உள்ள மொங்கோலியா நாட்டில், இந்து தெய்வங்களின் படங்கள், இந்து புராணக் கதைகள் ஆகியன இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன. இது குறித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்.

இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட பூகோள மாற்றங்கள் காரணமாக, அகத்தியர் தமிழகத்தை தெரிவு செய்கிறார். தனது இறுதிக் காலத்தில் தமிழம் வந்து, அங்கிருந்த சித்தர்களுடன் தொடர்பேற்படுத்திக் கொள்கிறார். அகத்தியர் சித்த வைத்தியத் துறையை வளர்ப்பதற்காக கல்லூரிகளை நிறுவுகிறார். தமிழகத்தில் இருந்த படியே, மலேயா, சீனா, அரேபியா, போன்ற தூர தேசங்களுக்கும் சென்று சித்த ஞானத்தை போதிக்கிறார். இறுதியாக, திருவனந்த புறத்தில் சமாதி அடைகிறார். இது வரை கூறப்பட்ட அகத்தியர் கதையில், முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அகத்தியர் தனது ஆரம்பக் கல்வியை சீனாவில் கற்றுள்ளார். குமரி கண்டத்தில் (இலங்கையில்) சித்த வைத்தியத் துறை உன்னத வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனை கேள்விப் பட்ட அகத்தியர் இலங்கை வந்து, முருகனிடம் சித்த வைத்தியம் படித்துள்ளார். அந்த அறிவை போதிப்பதற்காக, சீனா சென்று பாடசாலைகள் அமைத்துள்ளார். தமிழகத்திற்கு வந்து சித்தர்களை நிறுவன மயப் படுத்தியுள்ளார். அதுவரை காலமும் தமிழில் எழுதப்பட்ட சித்த வைத்திய குறிப்புகளை, சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். (அதே நேரம், சித்தர்களின் குறிப்புகள் கிரேக்கம், அரபு, ஹீபுரு, மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.)

அகத்தியருக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, அகத்தியர் ஒரு சீனராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம். சீனாவில் ஆரம்பக் கல்வி கற்ற அகத்தியருக்கு சீன மொழி தெரியாது என்று கூற முடியாது. மேலும், "தமிழ் பேசினார்கள்", என்பதற்காக, சித்தர்கள் எல்லாம் தமிழர்கள் என்று வாதிடலாம் என்றால், அகத்தியர் ஒரு சீனர் என்று வாதிட முடியாதா? மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், தென்னிந்தியாவில் உள்ள சித்த மருத்துவ இரகசியங்களை அறிவதற்காக சீன மன்னர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனை பல்வேறு சீன இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு, பிரித்தானியா கலைக்களஞ்சியம் பதிவு செய்துள்ளது. அகத்தியர் ஒரு சீன தேச உளவாளி என்ற சந்தேகங்களும் நிலவின. ஆனால், அன்றைய காலகட்டத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். வட இந்தியா முழுவதும், பண்டைய திராவிட இராச்சியங்கள் ஆரியப் படைகளால் கைப்பற்றப் பட்டு ஆக்கிரமிக்கப் பட்டன. அந்நேரத்தில், விந்திய மலைக்கு தெற்கே, குறிப்பாக தமிழகத்தில் திராவிட பாரம்பரியமும், புராதன அறிவியலும் பாதுகாக்கப் பட்டது. அந்த அறிவியல் செல்வத்தை அடைவதற்காக, வட நாட்டில் இருந்து ஊடுருவல்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு.

அகத்தியர் ஒரு சீனர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம்? தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப் பட்ட அகத்தியரின் சிலைகளை ஒரு தடவை உற்று நோக்குங்கள். அகத்தியரின் முகம், சீனர்களின் முகம் போலத் தோன்றவில்லையா? மேலும் அகத்தியர் குள்ளமான முனிவர் என்று அனைத்து புராணங்களிலும் எழுதப் பட்டுள்ளது. பொதுவாகவே சீனர்கள் குள்ளமானவர்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. அகத்தியர் மட்டுமே ஒரேயொரு சீன நாட்டு சித்தர் அல்ல. தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களில், இன்னும் இருவர் சீனர்கள். இவை யாவும், பண்டைய தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் நிலவிய நெருங்கிய உறவை எடுத்துக் காட்டுகின்றன. நாம் உண்ணும் சோறு கூட, அறுந்து போன சீனத் தொடர்பை தினந்தோறும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றை எல்லாம் தமிழர்களான நாங்கள் மறந்து விட்டோம்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

Saturday, December 10, 2011

காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஐந்தாம் பாகம்)


பண்டைய இந்தியர்களின் அறிவியல், இனவாத ஆரியர்களின் கைகளில் சிக்கி விடாமல் தடுப்பதற்காக, சித்தர்கள் அவற்றை தமிழகக் காடுகளில் கொண்டு வந்து மறைத்து வைத்தார்கள். இன்று, ஆரிய மயப்பட்ட தமிழ் இனவாதிகளிடம் இருந்து சித்தர்களின் அறிவியலை காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன்னே விரிந்து கிடக்கிறது. மனித இனத்தின் வரலாறு முழுவதும், ஆங்காங்கே பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் அவற்றை, இனம், மொழி, மதம் கடந்து தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு இனத்தின் கண்டுபிடிப்பை இன்னொரு இனம் மெருகூட்டி வளர்த்தது. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, இடம்பெற்று வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, எந்த இனமும் தனது என்று உரிமை கோர முடியாது. நமது பாடசாலைகளில் போதிக்கப்படும் நவீன அறிவியல் கல்விக்கு சொந்தக்காரர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. சீனர்களிடமிருந்தும், அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்ட நவீன அறிவியலை ஐரோப்பியர்கள் தமது என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம். "வெள்ளையர்களை உலகிலேயே உன்னதமான கலாச்சாரம் கொண்ட சிறந்த இனம். வெள்ளை இனத்தில் மட்டுமே மேதாவிகள் தோன்ற முடியும்." என்பன போன்ற நிறவெறிக் கருத்துக்கள் அங்கிருந்து தான் உதயமாகின்றன.

சித்தர்கள் யார்? சித்தர்கள் தமிழர்களா? அவர்களது அறிவியலை, தமிழர்களது அறிவியலாக கருதலாமா? தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியின் பின்னர், சித்தர்கள் மீதான ஆர்வம் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே சித்தர்கள் பற்றிய நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், தொலைக்காட்சி தொடர்கள் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர வழிவகுத்தது. புனைவுகளை கலந்து தயாரிக்கப்பட்ட மர்மதேசம், மற்றும் சித்தர்கள் குறித்த தொடர் நாடகங்களும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கவர்ந்திருந்தன. இருப்பினும், அந்த தொடர்கள் தோற்றுவிக்காத அரசியல் விழிப்புணர்வை, "ஏழாம் அறிவு" எனப்படும் வணிகப் படம் ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்த திரைப்படம் சித்தர்களின் பற்றிய அறிவியல் தகவலை, தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றது.

வெறும் வாய் மென்று கொண்டிருந்த தமிழ் இனவாதிகளுக்கு அவல் கிடைக்கவே, "தமிழர்கள் உலகிற்கே நாகரீகத்தை சொல்லிக் கொடுத்த உன்னத மனிதர்கள்." என்று தற்பெருமை கொள்ளத் தொடங்கி விட்டனர். ("ஆசிய, ஆப்பிரிக்க மக்களுக்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுப்பது எமது கடமை." என்று இனவாத வெள்ளையர்களும் இறுமாப்புடன் கூறிக் கொண்டனர்.) தமிழ் இனவாதிகளின் உரிமை கோரல், சித்தர்களின் கொள்கைகளுக்கே முரணானது. தமிழகத்தின் சித்தர்கள் மரபின் மூலவராகக் கருதப்படுபவர் திருமூலர். தமிழ் மொழியிற் சிறந்த தத்துவமாக கருதப்படும் திருமந்திரத்தை எழுதியவர். திருமூலர் தன்னை ஒரு குறுகிய எண்ணம் கொண்ட தமிழ் இனவாதியாகவோ, அல்லது சைவ மத அடிப்படைவாதியாகவோ என்றுமே காட்டிக் கொள்ளவில்லை. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" போன்ற வாசகங்கள் மூலம் அவர் தன்னை ஒரு சர்வதேசவாதியாக தான் காட்டிக் கொள்கிறார்.

முதலில், சித்தர்கள் என்றால் யார்? நாலாயிரத்திற்கும் அதிகமான நோய்களைப் பற்றியும், அவற்றின் குணம் குறிகளையும், நோய் தீர்க்கும் மருந்துகளையும் சித்தர்கள் தமிழில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். நவீன மருத்துவம் பயின்றோர், இவற்றை புறக்கணிப்பது அறிவீனம். இந்த விடயம் குறித்து பிறகு பார்ப்போம். சித்தர்கள் என்றால், மருத்துவர்கள் என்பது போன்ற கருத்து தவறானது. பல்வேறு பட்ட துறைகளில் சித்தர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

தத்துவ ஆசிரியராக, மொழியியல் அறிஞராக, சமூக ஆய்வாளராக மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களாக கூட சித்தர்கள் இருந்துள்ளனர். சித்தர்களை நமது காலத்தில் விஞ்ஞானி என்று அழைப்பார்கள். நமது காலத்தில் அரிய கண்டுபிடிப்புகளை செய்த விஞ்ஞானிகள் எல்லோரும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் அல்ல. தேடல், திறமை, அறிவு, புத்திசாதுர்யம் என்பனவே அவர்களை விஞ்ஞானிகளாக்கியது. உதாரணத்திற்கு, ஒரு இலத்திரனியல் கண்டுபிடிப்பை செய்தவர் மட்டுமே விஞ்ஞானி அல்லர். சமூகத்தை ஆய்வு செய்தவரும், இயற்கையின் இரகசியங்களை தத்துவங்களாக விளக்கத் தெரிந்தவரும் விஞ்ஞானி தான்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், விஞ்ஞானிகளை சித்தர்கள் என்று அழைத்தனர். சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தில்,அல்லது நாட்டில் மட்டும் தோன்றவில்லை. உலகம் முழுவதும் இருந்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்த பதினெண் சித்தர்களினதும் பூர்வீகம் கூட பல வகைப் பட்டது. சித்தர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். நம் மத்தியிலும் வாழ்கின்றனர். நாம் அவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாததால், கிறுக்கன் என்று நினைத்திருப்போம்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர்களையும், அன்றைய மக்கள் "புத்தி சுவாதீனமற்ற பைத்தியக்காரர்களாக" கருதினார்கள். தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதிதர்மன், ஷவோலின் ஆலயத்தினுள் சுவரை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாராம். யாருடனும் எதுவும் பேசாமல், நாட்கணக்கில் சுவரை வெறித்துப் பார்த்த போதிதர்மனை பார்த்தவர்கள் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள். அந்த "புத்திசுவாதீனமற்ற" நபர் தான், ஜென் பௌத்தர்களால் தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கப் படுகிறார். கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள் அவரை, "தமிழ் தேசிய வீர புருஷனாக" வெள்ளித்திரையில் காட்டினார்கள்.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" என்று, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதிய சித்தர்களை, தமிழ்த் தேசியத்தின் தூண்களாக திரித்துக் கூறும் போக்கு அபாயகரமானது. அது சித்தர்களுக்கே விரோதமான போக்கு மட்டுமல்ல, அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு "பேட்டன்ட்" உரிமை கோருவது போன்றது. அமெரிக்க, ஐரோப்பிய தேசியவாதிகளும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், தேசியவாதிகளிடம் இருந்து அறிவியலை விடுதலை செய்ய வேண்டிய மாபெரும் கடமை மக்களுக்குண்டு. அறிவியல் அனைத்துலக மக்களின் பொதுச் சொத்து.

திருமூலர் அதனை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியுள்ளார், என்பதை மறந்து விடலாகாது. சிவ பக்தனான திருமூலர், சைவ சித்தாந்தவாதிகள் போன்று "ஒரு இந்துவாக" வாழவில்லை. சிவனைத் தவிர வேறெந்த கடவுளையும் ஏற்க மறுத்தார். யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் மையமாகக் கொண்ட "ஓரிறைக் கோட்பாட்டை" திருமூலர் அன்றே போதித்தார். அது மட்டுமல்ல, ஆகம வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவராக, ஆலயம் சென்று தொழுவது வீண்வேலை என்றும் சாடினார். "அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்..." என்று அன்பிலே இறைவனைக் கண்டார்.

"அறிவியல் மக்கள் மயப் படுத்தப் பட வேண்டும்", என்ற நல்லெண்ணத்துடன் தான், திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதினார். பண்டைய தமிழர்கள் பேசிய இலகு தமிழில், அந்த செய்யுள்கள் இயற்றப் பட்டன. திருமூலரை அடியொற்றிய சித்தர்களும், தமிழ் மொழியில் தமது குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள பாடநூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டும் என்பதற்காக, நாங்கள் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். "அறிவியலை கற்பதற்கு குறிப்பிட்ட மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்," என்ற மூட நம்பிக்கையை, சித்தர்கள் அன்றே தகர்த்திருந்தனர்.

உலகம் முழுவதும், சோஷலிச இயக்கம் வளர்ந்த காலத்தில் தான், தாய் மொழியில் கல்வி கற்க வேண்டுமென்ற அரசியல் மயப் பட்டது. அடித்தட்டு மக்களும் கல்வியறிவு பெறுவதற்கு, அவர்களது தாய் மொழியில் கற்பிப்பது அவசியம், என்பதை சித்தர்கள் அன்றே உணர்ந்திருந்தனர். அந்த வகையில், சித்தர்கள் சமூகப் புரட்சியாளர்களாக கருதப் பட வேண்டும். நமது சித்தர்கள் அறிவியலை மட்டும் உலகிற்கு அறிமுகப் படுத்தவில்லை, கூடவே சோஷலிச தத்துவங்களையும் கூறிச் சென்றனர்.

திருமூலர் போன்ற சித்தர்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் தமிழர்களை சமதர்மவாதிகளாக உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும். சமதர்மக் கொள்கை மூலம், நாம் அறிவியல் மேன்மை அடையலாம் என்பதையே சித்தர்களது வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. தூய இனத் தேசியவாதம் பேசினால், திருமூலரையும் ஒதுக்க வேண்டியேற்படும். ஏனெனில் திருமூலர் ஒரு தமிழரல்ல! அவர் ஒரு காஷ்மீர்க் காரன்!! திருமூலரின் பிறப்பிடம் கைலாச மலைக்கு தெற்கே இருந்ததாக, அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. அநேகமாக அது இன்றைய காஷ்மீராக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

இன்று திபெத்திற்குள் உள்ள கைலாச மலைக்கு அருகில் தான் காஷ்மீர் உள்ளது. ஒரு காலத்தில் காஷ்மீர் முழுவதும் சைவ சமயம் தழைத்திருந்தது. இன்றைக்கும், சிவனுக்கு சிறப்புச் சேர்க்கும் ஒன்பது புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று காஷ்மீரில் உள்ளது. பிற்காலத்தில், ஆரிய- பிராமண இனக்குழுக்களின் வருகையே, காஷ்மீரின் சமூகக் கட்டமைப்பை மாற்றியது. பிராமணீய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் திபெத்திய பௌத்த மதத்தில் சேர்ந்தனர். இன்றைக்கும், காஷ்மீரின் லடாக் பகுதியில் பௌத்தர்களே பெரும்பான்மையினர். ஆரிய- பிராமணர்கள், "காஷ்மீர் பண்டிதர்கள்" என்ற பெயரில் இன்றைக்கும் தமது இனத் தூய்மையை பாதுகாத்து வருகின்றனர். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்து தப்புவதற்காகத் தான், காஷ்மீர் பள்ளத்தாக்கு சைவர்களும், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறினார்கள்.

திருமூலர், காஷ்மீரை ஆரியர்கள் ஆக்கிரமித்த காலத்தில் தப்பிப் பிழைத்த அரசியல் அகதியாக இருக்கலாம். தாந்திரிய சைவ சமயம் கட்டிக் காத்து வந்த, அறிவுச் செல்வத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு, தெற்கு நோக்கி பயணமானார். தனது தாயகமான காஷ்மீரை ஆக்கிரமித்த அன்னியர்கள், சைவ மதத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்று, அவர் ஞானதிருஷ்டியால் உணர்ந்திருப்பார். இன்னமும் ஆரியரின் கால் படாத தமிழகம், புகலிடம் கோருவதற்கு சிறந்த இடம் என்று நினைத்திருப்பார்.

காஷ்மீரத்து திருமூலர் தமிழகம் வந்து, பழனி அருகில் ஒரு ஆச்சிரமத்தை நிறுவினார். ஆரியக் கலப்பற்ற தமிழ் மொழி, இந்திய உப கண்டத்திலேயே பழமையான மொழியாகும். அதன் காரணமாகவே, தமிழை கடவுளின் மொழி என்று, பிற மாநிலத்தவர்கள் மதித்த காலமொன்று இருந்தது. சம்ஸ்கிருத மொழியானது, தமிழில் இருந்து உருவான, சித்தர்களால் பயன்படுத்தப் பட்ட இரகசிய பரிபாஷை என்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது. அதாவது, சித்தர்கள் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை சம்ஸ்கிருத மொழியில் வைத்திருந்தனர். ஆரியர்கள் அந்த அறிவுச் செல்வத்தை கைப்பற்றி, தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்கள், சமஸ்கிருதத்துடன், கூடவே அறிவியலையும், ஆரியரிடம் பறிகொடுத்தார்கள். பல நூறாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா வரையில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அவற்றை ஆரியரிடம் இருந்து கேட்டறிந்து கொண்டனர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த பாக்தாத்தில், அறிவியல் குறிப்புகள் யாவும் அரபு மொழியில் எழுதி வைக்கப் பட்டன. அவற்றை பின்னர், ஐரோப்பியர்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொண்டனர். அந்த லத்தீன் மொழிபெயர்ப்புகள் தான், பிற்கால ஐரோப்பியரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தது.

பாக்தாத்தில் கூடிய அறிஞர்கள், தமிழ் சித்தர்களின் குறிப்புகளை மட்டுமல்ல, சீன தேசத்து சித்தர்களின் குறிப்புகளையும் அரபியில் மொழிபெயர்த்தார்கள். கூடவே அரேபிய சித்தர்கள் எழுதிய அறிவியல் நூல்களையும் மறந்து விடலாகாது. இவை எல்லாம் தான், லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டன. இவற்றை எல்லாம் தொகுத்து தான், நவீன விஞ்ஞானம் உருவானது. இந்திய, சீன, அரபு அறிஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஐரோப்பியர் தமது என்று உரிமை கோரினார்கள். மோசடிக் கார ஆங்கிலேயர்கள், தமது கண்டுபிடிப்புகள் என்று சொல்லி, எமக்கு போதித்தார்கள்.

நாம் இன்று பாடசாலைகளில், கல்லூரிகளில் கற்கும் நவீன விஞ்ஞானத்தின் ஒரு பகுதி, ஏற்கனவே சித்தர்களால் தமிழில் எழுதப்பட்டுள்ளன, என்ற உண்மை எமக்குத் தெரியாது. இது எவ்வளவு பெரிய அறியாமை? ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆரியரால் சிறைப் படுத்தப் பட்டிருந்த தமிழரின் அறிவியல், அரேபியரால் விடுதலை செய்யப் பட்டது. வரலாற்றில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்புமுனைகளால் தான், உலகில் நாகரிக வளர்ச்சி சாத்தியமானது. இல்லாவிட்டால், இன்றைக்கு நாம் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி வாழ்ந்து கொண்டிருப்போம்.

வட இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆரியர்கள், தென்னிந்தியாவில் மறைந்திருந்த அறிவியலை தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு உளவாளியை அனுப்பி வைத்தனர். இந்துப் புராணக் கதைகளில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதே நேரம், வடக்கே உள்ள "எதிரி நாடொன்றின்" வரலாற்றுக் குறிப்புகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் கூட, அவரை "தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய மாமுனிவர்" என்று சிலாகித்து பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்த திருமூலரும், அந்தப் பிரபலமான வட நாட்டு ஒற்றர் பற்றி கேள்விப் பட்டிருந்தார். யார் அந்த உளவாளி?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"