Tuesday, May 04, 2010

இன அடிப்படையில் அடைக்கலம்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் ஐந்தாம் பகுதி)

நவீன அரசியல் தஞ்சம் கோரும் கொள்கையை நிறுவனமயப்படுத்தியது மேற்கு ஜெர்மனி(ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு) தான். தஞ்சம் கோருபவரின் விண்ணப்பத்தை பரிசீலித்தல், அவர்களுக்கு வசிப்பதற்கு வீடுகளை பார்த்துக் கொடுத்தல், வேலை தேடிக் கொடுத்தல் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படி செய்ய ஆரம்பித்தது. அதற்கு பிரதான காரணம், மேற்கு ஜெர்மனி எல்லையில் பல சோஷலிச நாடுகள் இருந்தன. கிழக்கே இருந்து தரைமார்க்கமாக தப்பி வரும் அகதிகள் முதலில் ஜெர்மனி வர வேண்டும். மேலும் ஜெர்மன் மொழி பேசும் மக்கள், ருமேனியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். என்றோ ஒரு நாளைக்கு அவர்கள் "தாயகம்" திரும்புவார்கள் என்ற நம்பிக்கை.

ஜெர்மன் அகதி அரசியல் ஹிட்லர் கால கொள்கையின் நீட்சியாகவும் அமைந்திருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மட்டுமே இனரீதியாக அகதிகளை ஏற்றுக்கொள்ள விரும்பியது. அந்த நிலைப்பாடு இன்று வரை தொடர்கிறது. 1991 ம் ஆண்டிற்குப் பின்னர், கம்யூனிசம் மறைந்த பிறகு ரஷ்யா உட்பட அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து பெருமளவு ஜெர்மன் இன அகதிகள், ஒன்றிணைந்த ஜெர்மனியில் வந்து தஞ்சம் கோரினார்கள். பெரும்பாலானோர் பொருளாதாரப் பிரச்சினைகளால் இடம்பெயர்ந்தவர்கள்.

பலருக்கு ஜெர்மன் மொழியில் ஒரு வார்த்தை கூட தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த "ஜெர்மன் இனத்தவர்கள்" யாவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். 1991 ம் ஆண்டு வரை ஜெர்மனி உட்பட, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம், சோஷலிச நாடுகளில் இருந்து வரும் அனைத்து அகதிகளையும் ஏற்றுக் கொண்டு வந்தன. அதுவரை எந்தவொரு அகதியும் திருப்பி அனுப்பப் படவில்லை. ஆனால் 1991 ம் ஆண்டிற்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது ஜனநாயகமயமாகியுள்ள கிழக்கு ஐரோப்பிய மக்கள் பொருளாதாரக் காரணங்களால் வருவதாகக் கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பணக்கார ஐரோப்பிய நாடுகள் நிறைய பொருள் வளங்களைக் கொண்டிருந்த போதிலும், மிகக் குறைந்த அளவு அகதிகளையே பெற்று வருகின்றன. விசா, மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள், பெருந்தொகைப் பணத்தை பயணச் செலவிற்காக செலவிட வேண்டிய நிலை, இது போன்ற காரணங்களால் மிகச் சிறிய அளவு அகதிகள் மட்டுமே மேற்கத்திய நாடுகளை வந்தடைகின்றனர். அதே நேரம் மூன்றாம் உலகைச் சேர்ந்த வறிய நாடுகள் பெருமளவு அகதிகளை மனிதாபிமான காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஈரான்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான ஆப்கான் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். பாலஸ்தீன அகதிகளின் ஐம்பது வருடங்களாக லெபனானில் முகாம்களில் வசித்து வருகின்றனர். கென்யா லட்சக்கணக்கான சோமாலிய அகதிகளை பராமரித்து வருகின்றது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

தனது நாட்டு மக்களையே கவனிக்க முடியாத வறிய நாடுகளுக்கு, அயல் நாட்டு அகதிகளின் வருகை பெருஞ்சுமையை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஐ.நா.சபையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த அகதிகளை பராமரிக்க உதவி செய்கின்றன. ஆனால் அந்த உதவி கூட, பணக்கார நாடுகளின் சுயநல நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றது. அகதிகளை பராமரிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான நிதி வழங்குவது பணக்கார நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் அப்படி நிதி உதவி செய்யாவிட்டால், அந்த அகதிகள் எல்லாம் தமது நாடுகளுக்குள் வந்து விடுவார்களோ என்று அவை அஞ்சுகின்றன.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலய (UNHCR) தலைவராக பணியாற்றிய லுபர்ஸ் என்பரின் அரசியல் பின்னணி குறித்து சில தகவல்களைத் தருகிறேன். இது எப்படிப்பட்டவர்கள் சர்வதேச அகதி அரசியலை தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு. 1984 ம் ஆண்டு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு பெருமளவு ஈழத்தமிழ் அகதிகள் நெதர்லாந்து நாட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் நெதர்லாந்தில் அகதி முகாம்கள் இருக்கவில்லை. அதே நேரம் அரசு தமிழர்களை அகதிகளாக கருதவில்லை. இதனால் அவர்களை திருப்பி அனுப்பும் நோக்கோடு, தற்காலிகமாக தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது நெதர்லாந்து பிரதமராக பதவி வகித்த லுபெர்ஸ், ஈழத் தமிழ் அகதிகளை எப்படியும் திருப்பி அனுப்பியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு நின்றார். அவரது கொள்கை இனப்பாகுபாடு கொண்டதாக சில தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அதற்குக் காரணம், அப்போதும் உலகம் முழுக்க இருந்தும் அகதிகள் வந்திருந்தாலும், லுபெர்ஸ் அரசு ஈழத் தமிழர்களை மட்டுமே திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியது. அன்று தனது நாட்டினுள் அகதிகள் வருவதை தடுத்த அதே லுபர்சுக்கு, பிற்காலத்தில் UNHCR தலைவர் பதவி வழங்கி "கௌரவிக்கப்பட்டது." ஆழ்ந்து கவனித்தால், இதில் எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியாது. மேற்குலக நாடுகளுக்கு மூன்றாமுலக அகதிகள் செல்வதைத் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு அந்தந்த நாடுகளிலோ, அல்லது அயல்நாடுகளிலோ தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆகவே "வருமுன் காக்கும்" பணியை UNHCR செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.

(தொடரும்)

4.சர்வதேச கம்யூனிச அகதிகள்
3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

No comments: