Friday, January 24, 2020

ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?


நவீன கால வரலாற்றில் முதல் தடவையாக, ஈரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது. அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் யுத்தம் வெகுவிரைவில் தொடங்கும். கவனிக்கவும்: எண்பதுகளில் ஈரான் - ஈராக் போர் நடந்த காலத்தில் கூட இந்தக் கொடி பறக்க விடப் படவில்லை.

ஈரானின் ஷியா மதப்பிரிவினரின் ஆன்மீகத் தலைநகரமான கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜம்கரன் (Jamkaran) மசூதியின் உச்சியில் இந்த செங்கொடி ஏற்றப் பட்டது. தெஹ்ரான் அரசியல் தலைநகரமாக இருந்த போதிலும், ஷியாக்களின் உயர் மதத்தலைவராக கருதப்படும் ஆயத்துல்லா இந்தக் கோம் நகரில் இருந்து தான் ஆட்சிபரிபாலனத்தை கவனிப்பார். ஆகவே இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த சம்பவம் நவீன உலக வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இதில் உள்ள விசேஷம் என்ன?

இஸ்லாமிய ஷியா மதப் பிரிவினரை பொறுத்தவரையில் இந்த செங்கொடி ஒரு வரலாற்று துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறது. ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் தடவையாக, அவர்களால் முதலாவது இமாம் என மதிக்கப்படும் ஹுசைன் தூக்கிப் பிடித்த கொடி அது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஆண்ட கலீபாக்களால் இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவன் அலியும் சதி செய்து கொல்லப் பட்டனர். அவர்களது மகன் ஹுசைன் குருதியில் நனைந்த செங்கொடி ஏந்தி, ஆட்சியாளரின் அநீதிக்கும், அராஜகத்திற்கும் எதிராக நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடத்தினார். அதனால் இந்த செங்கொடி "ஹுசைனின் கொடி" என்றும் அழைக்கப் படுகின்றது. ஷியா இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம். இது ஒரு வகையில் நீதியை நிலைநாட்டும் போராட்டத்திற்கான அறைகூவலாகவும், கோழைத்தனமாக படுகொலை செய்த பகைவர்களின் பழி தீர்ப்பதற்கான மதக் கடமையாகவும்  கருதப் படுகின்றது.

இன்றைய நிலைமையை புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மதம் பரவிய ஆரம்ப காலங்களில், 632 ம் ஆண்டு இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய அகிலத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சினை எழுந்தது. குறிப்பாக இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வன்முறையில் முடிந்தது. இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப் பதவிக்கு, அதாவது கலீபாவாக முகமதுவின் ஆருயிர் நண்பர் அபூபக்கர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார். இருப்பினும் முகமதுவின் மருமகன் அலியின் தலைமையை பின்பற்றிய குழுவினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஷியாத் அலி (அலியின் கட்சியினர்) என்று அழைக்கப் பட்டனர். அதிலிருந்து தான் பிற்காலத்தில் ஷியா மதப் பிரிவு உருவானது.

அலி ஆதரவுக் குழுவினர், இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவின் கணவர் என்ற வகையில், அவரது மருகனான அலிக்கு தான் தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்று வாதாடினார்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில் பாத்திமா மர்மமான முறையில் மரணமுற்றார். அங்கு நடந்த வன்முறைகள், சூழ்ச்சிகள் காரணமாக, அபூபக்கர் ஒரு சதிப்புரட்சி மூலம் கலீபா பதவிக்கு வந்ததாக அலியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். இருப்பினும், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்த அபூபக்கர் காலத்திலும், அதற்குப் பின்னர் ஒரு வருடம் கலீபாவாக இருந்து ஓர் அடிமையால் கொல்லப்பட்ட ஒமார் காலத்திலும், ஆட்சியாளர்களுக்கு அலியின் நிபந்தனையற்ற ஆதரவு இருந்து வந்தது. உண்மையில் அலி தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கலீபாப் பதவிக்காக பொறுமையுடன் காத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், ஒமாருக்கு அடுத்ததாக ஒத்மான் கலீபாவாக பதவியேற்றதற்கு பின்னரான காலத்தில் அலியின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்தனர். அதற்குக் காரணம், ஒத்மானின் எதேச்சாதிகாரம். அவர் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அரச பதவிகளை கொடுத்து அதிகாரத்தில் வைத்திருந்தார். அத்துடன் முன்பு இறைதூதர் முகமதுவை எதிர்த்துப் போரிட்ட குற்றத்திற்காக நாடுகடத்தப் பட்ட இனக்குழுக்களையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டார். இதனால் குடிமக்கள் கலகம் செய்தனர். கலீபாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல் ஒத்மானை பிடித்துக் கொன்று விட்டது. அன்று கலீபா ஒத்மானின் கொடுங்கோன்மைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் மத்தியில் ஷியாக்கள் இருந்தனர்.

இன்றைக்கும் ஷியா- இஸ்லாமிய மத நிறுவனமானது அடிமட்ட மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு இயங்கி வருகின்றது. அதனால் தான், ஈரானில் 1979 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக மாற்ற முடிந்தது. அன்று பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுத்த பொதுவுடைமைக்கான வர்க்கப் புரட்சியை, ஆயத்துல்லா கொமெய்னி தந்திரமாக சுவீகரித்து மத அடிப்படைவாத இஸ்லாமியப் புரட்சியாக மடைமாற்றியது ஒரு தனிக்கதை. (புரட்சிக்குப் பின்னரும் சில வருட காலம் இடதுசாரிகளும், மதவாதிகளும் கூட்டணி வைத்திருந்தனர்.)

இந்த இடத்தில் சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும், ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும் இடையிலான சமூகப் பின்னணியையும் கவனிக்க வேண்டும். சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒரு வகையில் மேலைத்தேய கலாச்சார மரபை பின்பற்றினார்கள் எனலாம். அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதில் நவீன காலத்து குடியரசு முறையை பின்பற்றினாலும், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றில் விட்டுக்கொடாத தன்மையை கொண்டிருந்தனர். அதற்கு மாறாக ஷியா முஸ்லிம் பிரிவினர் கீழைத்தேய மரபை பின்பற்றினார்கள் எனலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அரசியல் தலைமைக்கு தகுதியான நபர் அரச பரம்பரை போன்று வாரிசு முறையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அத்துடன், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றிற்கு பதிலாக அனைவராலும் அங்கீகரிக்கப் பட்ட ஓர் ஆன்மீகத் தலைவரே, அரசியலுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அரசியல், மதம் தொடர்பான ஷியாக்களின் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இன்றைய ஈரானில் ஆட்சி நடக்கிறது. அந்நாட்டில் பாராளுமன்ற முறையிலான அரசமைப்புக்கு சமாந்திரமாக மதத் தலைவர்களும் தனியான அரசு நிர்வாகத்தை நடத்துகின்றனர். பொதுத் தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டாலும், உண்மையான அதிகாரம் மதத்தலைவர்கள் கைகளில் இருக்கிறது. அங்கே இரண்டு இராணுவங்கள் உள்ளன. அரசியல் தலைமைக்கு கட்டுப்படும் தேசிய இராணுவம் ஒரு புறமும், ஆயத்துல்லாவுக்கு விசுவாசமான புரட்சிகர இராணுவம் மறுபுறமும் இயங்கி வருகின்றன.

ஈரானிய தேசிய இராணுவத்தில் யாரும் சேரலாம். ஆனால், புரட்சிகர இராணுவத்தில் கொள்கை அடிப்படையில்  விசுவாசமானவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். அண்மையில் ஈராக்கில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானி, புரட்சிகர இராணுவத்தின் ஒரு பிரிவான அல் குட்ஸ் சிறப்புப் படையணிக்கு தலைமை தாங்கியவர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர் பதவிக்கு வந்தவர். பெரியளவு மதப்பற்று இல்லாவிட்டாலும், நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிரியா, ஈராக்கில் நடந்த ISIS எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றியவர். ஜெனரல் சுலைமானியின் இராணுவ தந்திரோபாயம் தான் ISIS பயங்கரவாதம் தோற்கடிக்கப் படக் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பூகோள அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ஈரானிற்கு வரவிருந்த ஆபத்தை சிரியாவிலும், ஈராக்கிலும் எதிர்த்துப் போராடி முறியடித்திருந்தார். உண்மையில் இதுவே அமெரிக்கா அவரைக் குறிவைத்து தீர்த்துக் கட்டக் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆரம்ப கால இஸ்லாமிய சாம்ராஜ்ய வரலாற்றில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (அல்லது சகோதர யுத்தங்கள்) மிக முக்கியமானவை.  உண்மையில் கலீபா ஒத்மானின் மரணத்திற்கு பின்னர், இறைதூதர் முகமதுவின் பேரன் அலிக்கு தான் கலீபா பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் டமாஸ்கஸ் ஆளுநர் முவாவியா அலியை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவருடன் இறைதூதர் முகமதுவின் இளம் விதவை மனைவி ஆயிஷாவும் சேர்ந்து கொண்டார். அவர்களது படையினரும், அலியின் படையினரும் மோதிக் கொண்டமை முதலாவது உள்நாட்டுப் போர் ஆகும். 657 ம் ஆண்டு, உள்நாட்டுப் போரின் இறுதியில் அலி முவாவியாவின் ஆட்களால் படுகொலை செய்யப் பட்டார்.

அடுத்து வந்த சில வருடங்களில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் ஏற்பட்டன. 669 ம் ஆண்டு அலியின் மூத்த மகன் ஹசன் முவாவியாவின் ஆட்களால் நஞ்சூட்டிக் கொல்லப் பட்டார். அதை அடுத்து இரண்டாவது மகன் ஹுசைன் ஷியா பிரிவினரின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்றைக்கும் ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஹுசைன் ஒரு மிக முக்கியமான ஆளுமை. பெரும்பாலான ஷியா முஸ்லிம்களின் வீடுகளில் ஹுசைன் படம் மாட்டி வைத்திருப்பார்கள். அண்மையில் ஈரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்குகளின் போது, "சொர்க்கத்தில் ஹுசைன் சுலைமானியை ஆரத்தழுவும்" படம் பொறித்த போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.

ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் முறையாக ஹுசைன் தான் செங்கொடி ஏந்திப் போருக்கு சென்றார். எதேச்சாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தம்முயிர் ஈந்த தியாகிகளின் இரத்தத்தில் தோய்ந்த படியால் அது சிவப்பு நிறக் கொடி ஆனது. கொடியின் சிவப்பு நிறமானது வஞ்சகர்களை பழி தீர்க்கும் கடமையை உணர்த்துவதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான விடுதலைப் போரின் எழுச்சியாகவும் கருதப் பட்டது. இன்றைய ஈராக்கில் உள்ள கர்பலா நகரில், 680ம் ஆண்டு நடந்த போரில் ஹுசைனின் படையினர் சுற்றிவளைக்கப் பட்டனர். இறுதிப்போரில் ஹுசைனும், குடும்பத்தினரும் எதிரிப் படைகளால் கொல்லப் பட்டனர். ஹுசைனின் தலை வெட்டி எடுத்துச் செல்லப் பட்டது.

கர்பலா நகரில் ஹுசைன் படுகொலை செய்யப்பட்ட இடம் இன்றைக்கும் ஷியாக்களின் புனித ஸ்தலமாக பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. அங்கு ஒரு பெரிய மசூதி உள்ளது. அதற்கு ஒவ்வொரு வருடமும் ஷியாக்கள் புனித யாத்திரை செல்வார்கள். இஸ்லாமியக் கலண்டரில் வரும் அஷூரா நாளன்று ஹுசைன் கொல்லப் பட்ட படியால், வருடந் தோறும் அஷுரா நினைவுதினம் அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம் ஷியா மத நம்பிக்கையாளர்கள் தமது தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். சிலநேரம் இரத்தம் வரும் வரை சவுக்கால் அடித்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்கள்.

பிற மதத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியாக்கள் தலையிலும், மார்பிலும் அடித்து அழும் நடைமுறை ஒரு புரியாத புதிராக இருக்கும். பலர் இதனை பைத்தியக்காரத்தனம் என்றும் சொல்வார்கள். ஆனால், ஷியாக்களை பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம். அநேகமாக இஸ்லாத்திற்கு முன்பிருந்த கீழைத்தேய பண்பாட்டில் இருந்து இந்தப் பழக்கம் வந்திருக்கலாம். எது எப்படியோ, ஹுசைனின் தியாக மரணத்தை நினைத்து ஒப்பாரி வைக்கும் சம்பிரதாயம், அவர்களது மத நம்பிக்கையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.

கர்பலாவில் பறந்த ஹுசைனின் செங்கொடி இறக்கப் பட்டு ஆயிரத்து நானூறு வருடங்களுக்குப் பின்னர், இப்போது தான் மீண்டும் அதே செங்கொடி கோம் நகரில் ஏற்றப் பட்டுள்ளது. அந்தக் கொடியில் "ஹுசைன் சிந்திய இரத்தத்திற்கு பழி தீர்ப்பவர்களுக்காக..." என்று எழுதப் பட்டுள்ளது.  இந்தச் சம்பவமானது இனி வருங்காலத்தில் உக்கிரமான போர் நடக்கப் போவதற்கான அறிகுறி. அன்றைய ஈராக்கில் ஈராக்கில் ஷியாக்களின் இராணுவத் தளபதியும், பன்னிரு இமாம்களில் ஒருவருமான ஹுசைன் எதிரிகளால் வஞ்சகமான முறையில் தீர்த்துக் கட்டப் பட்டார். வரலாறு திரும்புகிறது என்பது மாதிரி, இன்று ஜெனரல் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தீர்த்துக் கட்டப் பட்டார். இந்த ஒற்றுமையானது வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஷியா மத நம்பிக்கையாளர்களுக்கு இது உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு குறிப்பிடத்தக்க விடயம்.

தெஹ்ரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்கில் பல கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியப் புரட்சி நடந்து இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், இந்தளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டது இதுவே முதல் தடவை. அத்துடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள், அஷுரா தினம் அனுஷ்டிப்பது போன்று தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்தனர். அத்துடன், ஈரான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் அல்லது ஆன்மீகத் தலைவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான பழி தீர்க்கும் போருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர். அதன் அர்த்தம் ஷியா முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அமெரிக்காவுக்கு எதிரான போரை தமது நீதியான மதக் கடமையாகக் கருத வேண்டும். அதை அவர்கள் ஹுசைனின் செங்கொடி ஏற்றப்பட்ட மறுகணமே புரிந்து கொண்டு விட்டனர்.

கோம் நகரில் உள்ள மஹ்தி மசூதி என அழைக்கப்படும் ஒரு புனித ஸ்தலத்தில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்துக்கள் கலிகாலத்தில் வரும் கல்கி அவதாரத்தை நம்புவது மாதிரி, முஸ்லிம்கள் (கிறிஸ்தவர்களும் கூட) இனிவரப்போகும் ஊழிக் காலம் பற்றிய நம்பிக்கையை கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் கடவுளின் பிரதிநிதி பூமியில் தோன்றுவார் என்றும் நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்றும் நம்புகின்றனர். இது பற்றிய விவரணைகள் பைபிள், குரான் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் உள்ளன.

ஷியா முஸ்லிம்களுக்கென தனித்துவமான நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறைதூதர் முகமதுவுக்கு அடுத்ததாக பன்னிரண்டு இமாம்களை தமது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த மதத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாரிசு உரிமையின் படி மதத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். ஆனால், 868ம் ஆண்டு பிறந்த  பன்னிரண்டாவது இமாம் முஹம்மத் ஹசன் அலி இயற்கை மரணம் அடையவில்லை என்றும், அவர் திடீரென மறைந்து விட்டார் என்றும் சொல்லப் படுகின்றது.

பூமியில் போரும், குழப்பங்களும் அதிகரிக்கும் காலத்தில் பன்னிரண்டாவது இமாமின் வருகை இடம்பெறும் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். இது இயேசு வருகிறார் எனும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை பெரிதும் ஒத்துள்ளது. பன்னிரண்டாவது இமாம் தோன்றும் காலத்தில் நீதி நிலைநாட்டப் பட்டு சமாதானம் ஏற்படும் என்பது ஷியாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அவர் "இறைவனால் வழிநடத்தப் படுபவர்" என்ற அர்த்தத்தில் முஹமத் அல் மஹ்தி என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார்.

ஈரானில் மஹ்தியின் வருகைக்காக கட்டப்பட்ட ஜம்கரன் மசூதியின் உச்சியில் ஹுசைனின் செங்கொடி பறக்கின்றது. இந்தத் தகவலை நாங்கள் ஒரு சாதாரண விடயமாக கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விட முடியாது. உலகில் பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது வேண்டுமென்றே தவிர்க்கப் பட்ட விடயமாக இருக்கலாம். ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு அடுத்த நாள் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்: "இந்தப் போரை நீங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் தான் அதை முடித்து வைக்கப் போகிறோம்!"

- கலையரசன் -   
7-1-2020

இந்தக் கட்டுரை ஜூனியர் விகடனில் பிரசுரமானது:
ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?

Wednesday, January 22, 2020

ஓமான் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியை ஒடுக்கிய ச‌ர்வாதிகாரி க‌பூஸ் ம‌ரணம்


ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் 50 வ‌ருட‌ங்க‌ள் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌பூஸ் ம‌றைவு (10 January 2020) குறித்து ஊட‌க‌ங்க‌ள் இர‌ங்க‌ல்பா பாடி ஓய்ந்து விட்ட‌ன‌. அநேக‌மாக‌ எல்லா ஊட‌க‌ங்க‌ளும் அவ‌ரைப் ப‌ற்றி ந‌ல்ல‌தாக‌வே சொல்லி புக‌ழார‌ம் சூட்டின‌. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் ச‌ர்வாதிகாரி என்ற‌ சொல்லை பாவிக்க‌வில்லை. ஏனென்றால் க‌பூஸ் மேற்க‌த்திய‌ நாடுகளுக்கு விசுவாச‌மான‌ அரசிய‌ல் த‌லைவ‌ர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.

ஈராக்கை 24 வ‌ருட‌ங்க‌ள் ஆண்ட‌ ச‌தாம் ஹுசைன் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ நேர‌த்திலும், லிபியாவை 42 வ‌ருட‌ங்க‌ள் க‌டாபி கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌த்திலும், இதே ஊட‌க‌ங்க‌ள் மூச்சுக்கு முன்னூறு த‌டவை ச‌ர்வாதிகாரி என்று கூறின‌. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, இறந்த பின்னரும் இரக்கமில்லாது தூற்றப் பட்டனர். ஆனால் ஓமானில் 50 வ‌ருட‌ங்க‌ள் கொடுங்கோல் ஆட்சி நடத்திய க‌பூஸ் அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளுக்கு ச‌ர்வாதிகாரியாக‌ தெரியாத‌து அதிச‌ய‌மே.

எழுப‌துக‌ளின் தொட‌க்க‌த்தில் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சியில் பின்த‌ங்கியிருந்த‌ ஓமானை ஆண்ட‌ சுல்த்தான் தைமூர், அர‌ச‌ மாளிகையில் ந‌ட‌ந்த‌ ஒரு திடீர் ச‌திப்புர‌ட்சியின் மூல‌ம் ப‌த‌வியிற‌க்க‌ப் ப‌ட்டார். அந்த‌ ச‌திப்புர‌ட்சிக்கு கார‌ண‌ம் வேறு யாரும் அல்ல‌. சுல்த்தானின் சொந்த‌ ம‌க‌ன் க‌பூஸ், மற்றும் பிரிட்டிஷ் ப‌டையின‌ர் தான். த‌ன‌து த‌ந்தையை த‌னய‌னே கைது செய்து சிறையில் அடைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? பொதுவாக சொல்லப் படும் காரணம் அவரது தந்தை ஒரு விடாப்பிடியான பழமைவாதியாக இருந்தார் என்பதே. ஆனால், உண்மையான கார‌ண‌த்தை எந்த‌ ஊட‌க‌மும் தெரிவிக்க‌ப் போவ‌தில்லை.

எழுப‌துக‌ளின் தொட‌க்கத்தில் ஓமான் ஒரு க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியின் விளிம்பில் நின்ற‌து. புரட்சி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய தென்பட்டன. குறிப்பாக‌ நாட்டின் தெற்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதி ஆயுத‌மேந்திய‌ க‌ம்யூனிச‌ப் போராளிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அவ‌ர்க‌ளுக்கு அய‌ல் நாடான‌ சோஷ‌லிச தெற்கு யேம‌னில் இருந்து உத‌வி கிடைத்துக் கொண்டிருந்த‌து.

முன்பிருந்த சுல்த்தான் ஆட்சிக் கால‌த்தில் நாடு அபிவிருத்தி அடைய‌வில்லை. சாலைக‌ள் இருக்க‌வில்லை. பாட‌சாலைக‌ள் க‌ட்ட‌ப் ப‌ட‌வில்லை. கால‌ஞ்சென்ற‌ சுல்த்தான் க‌பூஸ் தான் அந்த‌ நிலைமையை மாற்றியமைத்தார் என்று ஊட‌க‌ங்க‌ள் உங்க‌ளுக்கு சொல்லி இருக்க‌லாம். உண்மை தான். ஆனால் ஊட‌க‌ங்க‌ள் சொல்லாம‌ல் ம‌றைத்த‌ இன்னொரு விட‌ய‌ம் உள்ள‌து.

உண்மையில் ஓமான் அபிவிருத்தி அடையாம‌ல் பொருளாதார‌த்தில் பின்த‌ங்கி இருந்த‌ ப‌டியால் தான் அந்நாட்டு ம‌க்க‌ள் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியாள‌ர்க‌ளை ஆத‌ரித்தார்க‌ள். க‌பூஸ் சுல்த்தானாக பதவியேற்பதற்கு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே, கம்யூனிஸ்டுக‌ள் சமூக அபிவிருத்தியில் அக்கறை செலுத்தி வந்தனர். கம்யூனிச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பாட‌சாலைக‌ளை அமைத்து பெண் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்த‌ன‌ர். இய‌க்க‌த்தில் க‌ணிச‌மான‌ அள‌வு பெண் போராளிக‌ள் இருந்த‌ன‌ர்.

சுருக்க‌மாக‌ சொன்னால், ஓமான் தொட‌ர்ந்தும் அபிவிருத்தியில் பின்த‌ங்கி இருந்தால் அது விரைவில் க‌ம்யூனிச‌ நாடாக‌ மாறி விடும் என்று பிரிட்ட‌ன் அஞ்சிய‌து. அத‌ன் விளைவு தான், மாளிகையில் ந‌ட‌ந்த‌ ச‌திப்புர‌ட்சியும், க‌பூஸ் சுல்த்தானாக‌ ப‌த‌வியேற்ற‌மையும். எல்லாம் ஒன்றுக்கொன்று தொட‌ர்புள்ள‌ விட‌ய‌ங்க‌ள் தான்.

உண்மையிலேயே க‌பூஸ் ப‌த‌வியேற்று அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளை தொட‌ங்கிய‌தும் க‌ம்யூனிஸ்டுக‌ளின் போராட்ட‌த்தில் பின்ன‌டைவு ஏற்ப‌ட்ட‌து. சில‌ போராளிகள் ச‌ர‌ண‌டைந்த‌ன‌ர். இருப்பினும் க‌ம்யூனிச‌ இய‌க்க‌ம் அழிக்க‌ப் ப‌டவில்லை. தென் ப‌குதிக‌ளில் இன்ன‌மும் செல்வாக்குட‌ன் இருந்த‌ன‌ர். அத‌னை த‌னி நாடாக‌ பிரிக்க‌ விரும்பின‌ர். சுல்த்தான் க‌பூஸ் உத்த‌ரவின் பேரில் பிரிட்டிஷ் கூலிப்ப‌டையான‌ SAS ஒரு "ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்புப் போர்" ஆர‌ம்பித்த‌து. அப்போது ஈரானை ஆண்ட‌ மேற்க‌த்திய‌ சார்பான‌ ஷா ம‌ன்ன‌ரும் ப‌டைக‌ளை அனுப்பி உத‌வினார். சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ஓமானில் க‌ம்யூனிச‌ இய‌க்க‌ம் முற்றாக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து. எஞ்சிய‌வ‌ர்க‌ள் ச‌ர‌ண‌டைந்து விட்ட‌ன‌ர்.

ஓமானில் க‌ம்யூனிச‌ அபாய‌ம் நீங்கி விட்டாலும், க‌பூஸ் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை நீடித்த‌து. இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்த்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். அங்கு ந‌ட‌க்கும் ம‌னித உரிமை மீற‌ல் கொடுமைகள் ப‌ற்றி ஏற்க‌ன‌வே ப‌ல‌ ம‌னித உரிமை அமைப்புக‌ள் அறிக்கைக‌ள் வெளியிட்டுள்ளன‌.

இருப்பினும் என்ன‌? மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் "ஜன‌நாய‌க‌" அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் ஓமான் ச‌ர்வாதிகாரியின் இர‌த்த‌ம் தோய்ந்த‌ கையைப் பிடித்து குலுக்க‌த் த‌ய‌ங்க‌வில்லை. எண்ணை நிறுவன‌ ஒப்ப‌ந்த‌ம், ஆயுத‌ விற்ப‌னை வ‌ருமான‌ம் என்று த‌ம‌து ந‌லனில் ம‌ட்டும் குறியாக‌ இருந்த‌னர். அந்த‌ ந‌ன்றிக்க‌ட‌னுக்காக‌ த‌ம‌து அபிமான‌த்திற்குரிய‌ ச‌ர்வாதிகாரி க‌பூஸ் இற‌ந்த‌வுட‌ன் க‌ண்ணீர் வ‌டித்த‌ன‌ர். நாம் யாரை விரும்ப வேண்டும், யாரை வெறுக்க வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகளும் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும் தீர்மானிக்கின்றன.

Friday, January 17, 2020

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. பண்டைய காலத்து பெருமை பேசுவதும், ஆயிரம் வருடங்களானாலும் இனம் மாறவில்லை என்று நம்புவதும் தேசியவாதத்தின் கொள்கைகள். தமிழ்த்தேசியம் என்றாலும், ஜெர்மன் தேசியம் என்றாலும் அதில் எந்தக் குறையும் இல்லை. எப்போதுமே மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். ஜெர்மன் தேசியமும் அதற்கு விதிவிலக்கல்ல.

உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் ஜேர்மனியர்களுக்கு "இன உணர்வு" ஏற்பட்டது. அதற்கு முன்னர் யாருமே தம்மை ஜெர்மனியர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் புரூசியர், ஆஸ்திரியர் என ராஜ்ஜியத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது அவரவர் வாழ்ந்த பிரதேசத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துக்காரர், யூதர்கள் என்று மதத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஜெர்மன் இனத்தவர்கள் ஒற்றுமையில்லாமல்  தமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

ஜெர்மனியர்கள் என்றால் யார்? ஆங்கில மொழியில் ஜெர்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஜெர்மன்காரர்கள் தம்மை டொய்ச்சே என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி டொய்ச் என்றும், அவர்களது நாடு டொய்ச்லாந்து என்றும் அழைக்கப் படுகின்றது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் காரர்கள் தமது மொழியில் அலெமான் என்று அழைக்கிறார்கள். ஜெர்மன், அலெமான் என்பன பண்டைய காலத்தில் ஜெர்மனியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்ட பெயர்ச் சொற்கள் தான். அதே நேரம் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்பன கூட ஜெர்மன் இனத்தவரைக் குறிப்பிடும் சொற்கள் தான்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் ரோம சாம்ராஜ்யத்திற்கு வடக்கே வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக கருதப் பட்டனர். ரோமர்கள் அந்த மக்களை "கெர்மானி" (Germani) எனும் பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் ஜெர்மனி ஆகியது. ஆனால், கெர்மானி என்பது ஒரே மொழி பேசும், ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இன்றைய ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது, டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், சுவீடிஷ்காரர்கள், நோர்வீஜியர்கள் எல்லோரும் ரோமர்களின் பார்வையில் கெர்மானி தான்.

உண்மையில் அன்றிருந்த ஜெர்மன் இனத்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அவர்கள் நகரங்களை கட்டவுமில்லை. அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. அவர்கள் இடி, மின்னல், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிபாட்டை பின்பற்றினார்கள். அத்துடன் ஜெர்மன் இனக்குழுக்கள் அடிக்கடி தமக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால் பெருந்தொகையிலான அகதிகள் ரோமர்களின் நாட்டுக்குள் தஞ்சம் கோரி இருந்தனர்.

இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து புலம்பெயரும் அகதிகளை தடுப்பதற்காக, ஐரோப்பியக் கோட்டை எனும் பெயரில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படுவது தெரிந்ததே. அதே மாதிரியான சூழ்நிலை தான் பண்டைய ரோம சாம்ராஜ்யத்திலும் நிலவியது. இருண்ட ஐரோப்பாவில் இருந்து ஜெர்மன் அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக ரோம சாம்ராஜ்யத்தின் வட புற எல்லைகள் பலப்படுத்தப் பட்டன. தெற்கே சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கே நெதர்லாந்து வரை ஓடிக் கொண்டிருக்கும் ரைன் நதி தான், அன்று ரோமர்களின் நாகரிகமடைந்த ஐரோப்பாவையும், ஜெர்மனியர்களின் காட்டுமிராண்டி ஐரோப்பாவையும் பிரிக்கும் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது.

அதற்காக, ஜெர்மனியர்கள் எல்லோரும் ரோம ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை. கணிசமான அளவு ஜெர்மன் இனத்தவர்கள் ஏற்கனவே ரோமப் பேரரசின் குடிமக்களாக உள்வாங்கப் பட்டு விட்டனர். இதற்கு நாம் பெரியளவு யோசிக்கத் தேவையில்லை. ஐரோப்பிய வரைபடத்தில் ரைன் நதிக்கு தெற்கில் உள்ள பிரதேசங்களை பார்த்தாலே போதும். 

அதாவது, இன்றைய நெதர்லாந்தில் ரொட்டர்டாம் நகருக்குக் கீழே உள்ள பகுதியும், பெல்ஜியம் முழுவதும் ரோம நாட்டிற்குள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் கூட, டச்சு மொழி (தற்காலத்தில்: நெடர்லான்ட்ஸ் மற்றும் பிளாம்ஸ்) பேசும் ஜெர்மன் இனத்தவர்கள். அத்துடன் இன்றைக்கு தனிநாடாக உள்ள லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் மாகாணமாக உள்ள அல்சாஸ், லோரேன் பிரதேசங்களில் வாழ்பவர்களும் ஜெர்மன் இனத்தவர்கள் தான். இன்றைக்கும் அவர்கள் பேசும் மொழிகள், உண்மையில் ஜெர்மனின் கிளை மொழிகளே!

மேற்குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினர், ரோம மயமாக்கப் பட்ட ஜெர்மனியர்கள் எனலாம். அவர்களில் படித்தவர்கள் லத்தீன் மொழி பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தனர். இந்த "நாகரிக வளர்ச்சி" தான் பிற்காலத்தில், தனித்துவமான ஜெர்மன் மன்னராட்சி தோன்றுவதற்கு அடித்தளம் இட்டது. மத்திய கால ஐரோப்பாவில், அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர், ஒரு அசல் ஜெர்மனியரான கார்ல் சக்கரவர்த்தி கெல்ன் (ஆங்கிலத்தில்: கொலோன்) நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். கார்ல் மன்னரின் நிர்வாகம் முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் தான் நடந்தது. அப்போதும் படித்தவர்கள் லத்தீன் பேசினார்கள். ஜெர்மன் மொழி? அது படிப்பறிவில்லாத பாமரர்கள் பேசும் கீழ்த்தரமான மொழியாக கருதப் பட்டது.

ரோமர்கள் ஆட்சிக் காலத்தில், இருண்ட ஐரோப்பாவை அடிபணிய வைக்கும் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதற்கான போர்களில் ஈடுபட்ட ரோம இராணுவத்தில், கணிசமான அளவில் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களும் இருந்தனர். ரைன் நதிக்கு அப்பால் சுதந்திரமாக வாழ்ந்த ஜெர்மனியர்களின் பார்வையில், அந்த வீரர்கள் துரோகிகளாக, ஒட்டுக் குழுக்களாக தெரிந்ததில் வியப்பில்லை. இருப்பினும் காலப்போக்கில் "காட்டுமிராண்டி ஜெர்மனியர்களும்" ரோம இராணுவத்தின் கீழ் இயங்கிய கூலிப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

"காட்டுமிராண்டி ஜெர்மனியர்கள்" எதற்கும் அஞ்சாத வீரர்களாக இருந்த படியால், அவர்கள் ரோமர்களால் பிரித்தானியா தீவு வரை கொண்டு செல்லப் பட்டனர். அதனால், ரோமர்கள் காலத்திலேயே பெருமளவு ஜெர்மானியர்கள் இன்றைய பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் சென்று குடியேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த படியால், அடுத்த வந்த தலைமுறையினர் ஜெர்மன் மொழியை மறந்து விட்டனர். ஏனெனில் பொதுவாக தாய்மார் ஊடாகத் தான் மொழி கடத்தப் படுகின்றது.

மத்திய காலத்தில், கிறிஸ்தவ மத ஆட்சிக் காலத்தில் தான், இன்றைய ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி அடைந்தன. சாதாரண பாமர மக்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தேவாலயங்களில் லத்தீன் மொழி பயன்படுத்தப் பட்டாலும், பொது மக்களுக்கு புரியும் மொழியிலும் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் நடைமுறைக் காரணங்களுக்காக "மக்களின் மொழி" பயன்படுத்தப் பட்டது. அது லத்தீன் மொழியில் தெயோடிசே (Theodisce) என அழைக்கப் பட்டது. அது காலப்போக்கில் மருவி டொய்ச் (Deutsch) ஆனது. பிற்காலத்தில், ஜெர்மனியர்கள் அதையே தமது மொழியின் பெயராக ஏற்றுக் கொண்டு விட்டனர்!

தெயோடிசே தான் ஆங்கிலேயரால் டச்(Dutch) என்றும் அழைக்கப் பட்டது. டச் என்பது நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியை குறிப்பிடும் ஆங்கில பெயர்ச் சொல். இன்றைய காலத்தில் டச், டொய்ச் (ஜெர்மன்) இரண்டும் வெவ்வேறு மொழிகளை குறிப்பிடும் சொற்கள். ஆனால் குறைந்தது ஐநூறு வருடங்களுக்கு முன்னராவது அது ஜெர்மனின் கிளை மொழியாக கருதப் பட்டு வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில், வட ஜெர்மனியில் லுய்பேக் நகரை மையமாகக் கொண்டு ஹான்சே எனும் வணிகர்களின் அமைப்பு இயங்கியது. மேற்கே அன்த்வேர்பன் (பெல்ஜியம்)முதல் கிழக்கே ரீகா (லாட்வியா) வரையில் ஹான்சே வணிகர்களின் பணத்தால் வளர்ந்த நகரங்கள் பல உண்டு. அன்று வர்த்தக நோக்கிற்காக ஒரு பொது மொழி தேவைப் பட்டது.

அப்போது தரப்படுத்தப் பட்ட ஜெர்மன் மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் "நேடர் டொய்ச்"(தாழ்நில ஜெர்மன்) என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இன்றைய ஜெர்மனியில் நேடர் டொய்ச் அழிந்து விட்டது. ஆனால் மத்திய காலத்து நேடர் டொய்ச் பிற்காலத்தில் "நெடர் லான்ட்ஸ்" (டச்) என்ற பெயரில் ஒரு தனியான மொழியாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஆப்பிரிகான்ஸ் மொழியும் அதிலிருந்து பிரிந்து சென்ற தனி மொழி தான்.

இதற்கிடையே மத்திய கால ஐரோப்பாவில் இன்னொரு அரசியல்- சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத பல இனங்கள் வாழ்ந்தன. அன்றிருந்த போப்பாண்டவர் அங்கெல்லாம் வாள்முனையில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டுமென்றார். அதற்காக தொய்ட்டன்ஸ் எனப்படும் ஜெர்மன் குதிரைப் படையினரை ஒரு சிலுவைப் போருக்கு அனுப்பினார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜெர்மன் படையினர், பெருமளவு நிலங்களை கைப்பற்றி காலனிப் படுத்தினார்கள். அங்கு பெருமளவு ஜெர்மன் இனத்தவரை குடியேற்றினார்கள். குறிப்பாக இன்றைய போலந்தின் வட மேற்குப் பகுதிகள் ஜெர்மன்மயமாகின.

இன்று போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையில் காலினின்கிராட் எனும் பெயரில் ஒரு சிறிய நிலப்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு காலத்தில் கேனிங்க்ஸ்பேர்க் என்ற பெயரில் ஜெர்மனியர்களின் பிரதேசமாக இருந்தது. அன்றைய காலத்தில் வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக" கருதப் பட்டனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமர்கள் ஜெர்மனியர்களை பார்த்து நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர். அதே ஜெர்மனியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் இயற்கை வழிபாடு செய்த மக்களை நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர்.

காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்த மாதிரி, அன்றைய ஜெர்மனியர்கள் வட கிழக்கு பிராந்திய மக்களுக்கு "புரூசீ" என்று ஒரு பொதுப் பெயர் சூட்டி இருந்தனர். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அந்த இடங்கள் யாவும் ஜெர்மனியரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர் "புரூசியா" (Prussia) என அழைக்கப் பட்டது. வெளியுலகில் இருந்தவர்களுக்கு, புரூசியா என்பது ஜெர்மனியை குறிக்கும் ஒத்த கருத்துச் சொல்லாக தென்பட்டது. அங்கிருந்த ஜெர்மனியர்களும் தம்மை புரூசியர்கள் என அழைத்துக் கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றுள்ள ஜெர்மனியின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புரூசிய சாம்ராஜ்யம் இருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் தேசியவாத கொள்கைகள் செல்வாக்குப் பெறத் தொடங்கி விட்டன. அதனால் ஜெர்மனியர்களின் தேசம் எனும் பொருள்படும் "டொய்ச்லாந்து" என்ற பெயர் சூட்டப் பட்டது. இருப்பினும் "ஜெர்மனியரின் தேசத்தில்" போலிஷ், லிதுவேனிய, இன்னும் பல மொழிகளைப் பேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்ந்தனர்.

அதைவிட கணிசமான அளவு ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவும், ஆஸ்திரியாவும் இடையறாது போரில் ஈடுபட்டிருந்தன. அதாவது இரண்டு ஜெர்மன் ராஜ்ஜியங்கள் நீண்ட காலம் பகைமை பாராட்டி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அதுவும் ரஷ்யா, பிரித்தானியா ஆகிய வல்லரசுகளின் நெருக்குதல் காரணமாக ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது வரைக்கும், புரூசியாவில், ஆஸ்திரியாவில் வாழ்ந்த யாருக்கும் ஜெர்மன் இன உணர்வு இருக்கவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவிலும், ஆஸ்திரியாவிலும் வாழ்ந்த ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். அந்தக் காலத்தில் அதுவே நாகரிகமடைந்த மொழியாக கருதப் பட்டது. இன்றைக்குப் பலர் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது மாதிரி, அன்றைய ஐரோப்பிய மேட்டுக்குடியினர் பிரெஞ்சு பேசுவதில் பெருமைப் பட்டனர். இன்றைய ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் உத்தியோகபூர்வ ஜெர்மன் மொழியாக உள்ள ஹோக் டொய்ச் (உயர்ந்த ஜெர்மன்) பிரெஞ்சு மொழியின் நிழலில் வளர்ச்சி அடைந்தது.

"ஜெர்மன் ஷேக்ஸ்பியர்" என்று அழைக்கப் படக் கூடிய இலக்கிய மேதை கோதே கூட பிரெஞ்சு மொழியை உயர்வாகக் கருதினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த நெப்போலியன் போர்களின் போது ஜெர்மனி முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்காக எல்லா ஜெர்மனியர்களும் நெப்போலியனை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதவில்லை. உண்மையில் நவீன ஜெர்மனியின் அடித்தளம் நெப்போலியனால் (ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்) இடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நெப்போலியன் காலத்தில் இன்றைய ஜெர்மனியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய "ரைன் சமஷ்டிக் குடியரசு" உருவானது. அங்கு நிலப்பிரபுக்களின் அதிகாரம் பறிக்கப் பட்டது. சட்டத்தின் ஆட்சி ஏற்பட்டது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற நடைமுறை வந்தது.

1848 ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு புரட்சி நடந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளை பின்பற்றிய ஜெர்மன் மத்தியதர வர்க்கத்தினரின் புரட்சி. அவர்கள் அமெரிக்கப் புரட்சியையும் முன்மாதிரியாகப் பார்த்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு: 
- மக்கள் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். 
- அரசமைப்பு சட்டம் எழுதப்பட வேண்டும். 
-பிரஜைகளின் தனி மனித உரிமைகள் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும். 
- தடையற்ற ஊடகச் சுதந்திரம் வேண்டும். 

பெர்லினில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னூறு பேரளவில் கொல்லப் பட்டனர். அதன் விளைவாக ஜெர்மன் புரட்சி தோல்வியுற்றது. இருப்பினும் அரசு முன்பு போல இயங்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற அமைப்பில் ஆரம்பத்தில் பழமைவாதக் கட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வீற்றிருந்தனர். சில வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப் பட்ட சோஷலிசக் கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தேசியவாதம் தோன்றியது. அது மொழி அடிப்படையிலான கொள்கையை முன்வைத்தது. வாரிசு உரிமை அடிப்படையில் ஆளும் மன்னர் பரம்பரைக்கு பதிலாக, ஜெர்மன் மக்களே ஜெர்மனியை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அந்தக் காலத்தில் தேசியவாதக் கொள்கை முற்போக்கானதாக கருதப்பட்டது. லிபரல் சித்தாந்தத்தை பின்பற்றியது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை ஆண்ட மன்னர்கள் தேசியவாதத்தை கண்டு அஞ்சினார்கள்.

தேசியவாதத்திற்கு இடம் கொடுத்தால் தமது அதிகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று மன்னர்கள் அஞ்சினார்கள். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் காலம் மாறிவிட்டிருந்தது. கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த புரூசிய, ஆஸ்திரிய மன்னர்கள் ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக ஜெர்மன் பேசும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அது ஜெர்மன் தேசியவாதத்தின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

Thursday, January 09, 2020

மேசியா : "இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!"


Messiah:
"இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!" 
"இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தால், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்!!"

நெட்பிலிக்ஸ் (Netflix) தளத்தில் புதியதொரு தொடர் ஒளிபரப்பாகிறது. மேசியா என்ற அந்தத் தொடர் முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டது. இயேசு கிறிஸ்து அல்லது அவர் போன்ற ஒரு மீட்பர் இன்று எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தால், உலகம் அவரை எப்படிப் பார்க்கும் என்ற கற்பனையை வைத்து இதைத் தயாரித்துள்ளனர். அதிலும் தற்காலத்தில் நடக்கும் உலக அரசியலை களமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது.

சிரியாவில், டமாஸ்கஸ் நகரில் ISIS முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட பாலஸ்தீன அகதிகள் மத்தியில் ஒருவர் அன்பையும் சமாதானத்தையும் பற்றிப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சாதாரண மக்களைப் போன்று ஜீன்ஸ், டி சேர்ட் அணிந்திருக்கிறார். மக்கள் அவரது பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பாலைவன மணல் சூறாவளி வீசுகிறது. அதனால் ISIS படையினர் அழிக்கப் பட பாலஸ்தீன அகதிகள் தப்பிப் பிழைக்கிறார்கள்.

இந்த அற்புதத்தை நேரில் கண்ட மக்கள், பிரசங்கம் செய்தவரிடம் தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் அவரை "அல் மசீ" என்று அழைக்கிறார்கள். அரபி மொழியில் அல் மசீ என்பது ஆங்கிலத்தில் மேசியா எனப்படும். (தமிழில் மீட்பர் என்று சொன்னாலும் அது மிகச் சரியான அர்த்தம் அல்ல. இறைவனின் தூதுவர் என்ற அர்த்தமும் உள்ளது.)

அல் மசீ, பாலஸ்தீன அகதிகளை இஸ்ரேலை நோக்கி வழிநடத்திச் செல்கிறார். எல்லையை அடைந்ததும், இஸ்ரேலிய படைகள் தடுத்து நிறுத்துகின்றன. தாயகம் திரும்பும் பாலஸ்தீன அகதிகளை உள்ளே விட மறுக்கின்றனர். எல்லை தாண்டிச் சென்ற அல் மசீ கைது செய்யப் படுகிறார். அகதிகள் எல்லையில் தற்காலிக முகாம் அமைத்து பசியிலும், பிணியிலும் வாடுகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன.

இஸ்ரேலிய ஷின் பெட் புலனாய்வுத் துறையினர் அல் மசீயை சிறையில் அடைத்து வைத்து விசாரணை செய்கின்றனர். அவர் தனது சொந்தப் பெயரை சொல்ல மறுக்கிறார். அரபி, ஹீபுரு, ஆங்கிலம் பேசுகிறார். அவர் ஒரு யூதரா, இஸ்லாமியரா, அல்லது கிறிஸ்தவரா? எதுவுமே புரியவில்லை. எதற்குமே பதில் கூற மறுக்கிறார்.

இதே நேரம் ஒரு சி.ஐ.ஏ. பெண் அதிகாரி அல் மசீ என்ற இந்த ஆசாமி உண்மையில் யார் என்று ஆராய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு வருகிறார். இஸ்ரேலின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக புலனாய்வுத்துறை அதிகாரி குற்றம் சாட்டுகிறார். இதற்கிடையே திடீரென ஒரு நாள் மேசியா மறைந்து விடுகிறார். இதனால் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் வேலை பறிபோகிறது.

சில தினங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் அடித்த சூறாவளியில் மேசியா தோன்றுகிறார். அங்குள்ள மக்களும் மேசியாவுக்கு தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அவரை ஒரு நவீன கால இயேசு கிறிஸ்து போன்று பார்க்கிறார்கள். இதனால், ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க அரசு அவரை சட்டவிரோத குடியேறி என்று குற்றம் சுமத்தி பிற அகதிகளுடன் சிறையில் அடைத்து வைக்கிறது. அனால், அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி அகதித் தஞ்சம் கொடுத்து விடுவிக்கிறார்.

இதற்கிடையே சந்தேகக் கண்ணுடன் விசாரித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, அவர் ஓர் ஈரானியர் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அவரது உண்மையான பெயர், கல்வி கற்ற இடங்கள், மருத்துவக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு, இந்த மர்ம ஆசாமி மேசியா போன்று நடித்து ஊரை ஏமாற்றும் பேர்வழி என நிறுவ முயற்சிக்கின்றனர்.

மேசியா தன்னைப் பின்தொடர்பவர்களை தலைநகர் வாஷிங்டன் நோக்கி அழைத்துச் செல்கிறார். அங்கே இயேசு கிறிஸ்து மாதிரி தண்ணீர் மேலே நடந்து அற்புதம் செய்து காட்டுகிறார். இதனால் மேசியாவின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. ஆனால் சி.ஐ.ஏ. மேற்கொண்டு விசாரிக்கிறது. "இவர் என்ன நோக்கத்திற்காக அமெரிக்கா வந்திருக்கிறார்? அமெரிக்காவில் ஒரு புரட்சி நடத்த திட்டமிடுகிறாரா? இவர் ரஷ்யாவின் ஆளா? இவர் ஒரு பயங்கரவாதியா? இவர் ஒரு மனநோயாளியா?" என்று பல கேள்விகளை எழுகின்றன.

ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியே மேசியாவை நேரில் கண்டு பேசுகிறார். அப்போது மேசியாவின் நோக்கம் என்ன என அறிய விரும்புகிறார். 
- "உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொண்டால் சமாதானம் உண்டாகும்." என மேசியா பதில் கூறுகின்றார். 
- "அமெரிக்கப் படைகள் இருப்பதால் தான் அந்தப் பிராந்தியத்தில் சமாதானம் நிலவுகிறது" என்கிறார் ஜனாதிபதி. 
- "ஐரோப்பியர்கள் தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் எல்லைகளை பிரித்து விட்டார்கள். அந்த நாடுகளில் சர்வாதிகாரிகளை பதவியில் அமர்த்தி மக்களை ஒடுக்கினார்கள்..." மேசியாவின் பதிலைக் கேட்டு ஜனாதிபதி வாயடைத்துப் போகிறார். 
- "அமெரிக்க இராணுவத்தை திருப்பி அழைக்க மறுத்தால் என்ன நடக்கும்?" என்று கேட்கிறார். 
- "கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இயற்கைப் பேரழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." 
"பயமுறுத்தலா?" 
"இல்லை, எச்சரிக்கை!" 
அடுத்து வந்த சில தினங்களில் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

அமெரிக்க அரசு தொடர்ந்தும் மேசியா ஒரு மோசடிப் பேர்வழி என்று நிரூபிக்க முயற்சிக்கிறது. அவரது பெயரைக் கெடுப்பதற்காக மனநோயாளி என்ற மருத்துவ சான்றிதழ் கொண்ட இரகசிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அரசாங்கமே அவரைக் கடத்திச் சென்று இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது.

இந்த தொலைக்காட்சித் தொடர் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று வாழ்ந்த இயேசு கிறிஸ்துவும் எம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகத் தான் இருந்திருப்பார். அதே இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்போம். அன்றைய இயேசு ரோம ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மாதிரி, இன்றைய இயேசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்.

இந்தத் தொடரில் மேசியா பேசும் வசனங்கள் யாவும் மிக எளிமையான தத்துவார்த்த அடிப்படை கொண்டவை. ஆன்மீகத்தின் பெயரால் மூடி மறைக்கப்படும் உண்மைகளையும் இலகுவாக புரிய வைக்கிறது.

Saturday, January 04, 2020

நாஸிகளின் "கிரிமினல் படைப்பிரிவு"!


பொதுவாக நாஸிகள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் தான். ஆனால், நாஸிகளின் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு கிரிமினல்களின் படைப்பிரிவு இயங்கியது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், நாஸிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த கிரிமினல்களின் படைப்பிரிவு பெரிதும் உதவியது.

இந்த துணைப்படையின் தலைவர் Diriewanger இன் பெயரால் அந்தக் குழு அழைக்கப் பட்டது. நாசிகளே கண்டு முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் குழுவினரின் கொடூரங்கள் அமைந்திருந்தன. சாதாரண கிரிமினல்களான கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், மற்றும் மனநோயாளிகள் போன்றவர்களே இந்தப் படைப்பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தனர். இந்தக் குற்றங்களுக்காக சிறைத்தண்டனைஅனுபவித்தவர்கள் மன்னிப்பு வழங்கப் பட்டு துணைப்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

இதன் தளபதி Diriewanger கூட ஒரு கிரிமினல் குற்றவாளி தான். தென் ஜெர்மனியில் Wuersburg எனும் இடத்தில் பிறந்த தீவிர வலதுசாரியான Diriewanger ஒரு பேராசியராக பணியாற்றியவன். முதலாம் உலப்போர் முடிந்த காலத்தில் எழுந்த கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய Freikorps இயக்கத்தில் இருந்தவன். அவன் 1922 ம் ஆண்டே நாஸிக் கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருந்த பொழுதிலும், ஒரு 13 வயது சிறுமியை சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றச்சாட்டில் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தான். பிற்காலத்தில் நாஸிகளின் SS படையில் ஒரு இராணுவ ஜெனரல் நண்பராக இருந்த காரணத்தால், ஹிட்லரின் வலதுகரமாக இருந்த அமைச்சர் ஹிம்லரின் செல்வாக்கில் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் நாஸிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்ட போலந்தின் பகுதிகளில் Diriewanger தலைமையிலான கிரிமினல்களின் துணைப்படை உருவாக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் கெட்டோ எனும் தனியான பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தனர். (அதற்குள் மட்டும் யூதர்கள் தாம் விரும்பிய படி வாழ அனுமதிக்கப் பட்டது.) கெட்டோவுக்குள் நுழைந்த Diriewanger கொலைப்படையினர், யூதர்களின் மதச் சம்பிரதாயமான கோஷர் முறையில் இறைச்சி தயாரிக்கும் (முஸ்லிம்கள் இதனை ஹலால் என்பார்கள்) முறையை சாட்டாக வைத்து பல யூதர்களை பிடித்துச் சென்று துன்புறுத்தினார்கள். பின்னர் பெருமளவு கப்பப் பணம் வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் Diriewanger குழுவினரின் கொடூரச் செயல்கள் நாசிகளையே முகம் சுழிக்க வைத்தன. ஒரு தடவை, யூதப் பெண்களை பிடித்துச் சென்று நஞ்சூட்டிக் கொல்லும் "பரிசோதனை" பற்றி ஹிட்லரிடமே முறைப்பாடு செய்யப் பட்டது. கெட்டோ குடியிருப்புகளில் பிடித்த யூதப் பெண்களுக்கு strychnine நஞ்சு செலுத்தி, அவர்கள் மெல்ல மெல்ல துடிதுடித்து இறப்பதை பார்த்து இரசிப்பார்கள். பின்னர் அவர்களது இறந்த உடல்களை துண்டு துண்டாக வெட்டி குதிரை இறைச்சியுடன் சேர்த்து சூப் தயாரித்து குடிப்பார்கள். ஹிட்லர் இது போன்ற கொடூரக் கதைகளை பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதிலும் Diriewanger குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு மென்மேலும் சுதந்திரம் வழங்கப் பட்டது.

நாஸிகள் ஆக்கிரமித்த வெள்ளை ரஷ்யாவில் கம்யூனிச கெரில்லாக்களை அடக்குவதற்கு Diriewanger துணைப்படை பெரிதும் உதவியது. எங்காவது ஒரு கிராமத்தில் கெரில்லாத் தாக்குதல் நடத்தினால், அந்தக் கிராமத்தையே அழிப்பதற்கு முதலில் Diriewanger படையினர் தான் அனுப்பப் பட்டனர். பெண்கள், குழந்தைகள் என்று எந்தப் பாகுபாடும் காட்டாமல் கொன்று குவித்தனர். ஆயிரக்கணக்கான கம்யூனிச கெரில்லாக்கள் உயிரோடு கொளுத்தப் பட்டனர். Diriewanger குழுவினரின் கொலைவெறியாட்டம் காரணமாக, அப்போது வெள்ளை ரஷ்யாவில் மட்டும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர்.

Diriewanger குழுவில் சாதாரண கிரிமினல்கள் சேர்க்கப் பட்டிருந்தாலும், அவர்களை மேலிடத்து உத்தரவுக்கு அடிபணிய வைப்பது சிரமமாக இருந்தது. அதனால் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டன. உத்தரவை மீறுவோர் சவப்பெட்டி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடைக்கப் பட்டனர். அதற்குள் நாட்கணக்காக நின்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த சித்திரவதையை அனுபவித்த ஒருவர், பெட்டி திறக்கப் பட்டதும் ஒரு நடைப்பிணமாக அல்லது கொலைவெறியுடன் பாயக் கூடியவராக இருப்பார். இந்தக் கிரிமினல் படைபிரிவு உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றுடன் வோட்கா குடிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அந்தப் போதையுடன் வெளியே செல்பவர்கள் குறைந்தது நான்கு பேரைக் கொன்று விட்டுத் தான் திரும்பி வருவார்கள்.

உலகப்போர் முடிந்த பின்னர், நேச நாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மனியில், Diriewanger வேறொரு பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இருப்பினும் எப்படியோ மோப்பம் பிடித்த பிரெஞ் படையினர் தென் ஜெர்மனியில் கைது செய்து விட்டனர். தம்மோடு சேர்ந்து போரிட்ட போலிஷ் படையினரிடம் அவனை ஒப்படைத்தனர். போலிஷ் படையினர் அவனை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவே அடித்துக் கொன்று விட்டனர். முன்பு நாஸிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து வார்சோ நகரை மீட்பதற்காக நடந்த விடுதலைப் போராட்டம் நசுக்கப் பட்ட காலத்தில் Diriewanger குழுவினர் நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு பழி தீர்த்துக் கொண்டனர்.


Friday, January 03, 2020

ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதைகள்


ப‌வ்லோவின் வீடு - ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை


இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் முன்னேறிக் கொண்டிருந்த‌ ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டைக‌ள் ர‌ஷ்யாவின் உள்ளே ஸ்டாலின்கிராட் நக‌ர‌ம் வ‌ரை வ‌ந்து விட்டிருந்த‌ன‌. சோவியத் அதிபர் ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டதால் மட்டும் அந்த நகரம் முக்கியத்துவம் பெறவில்லை. தெற்கே க‌வ்காஸ் பிராந்திய‌த்தில் இருந்து, வடக்கே ர‌ஷ்ய நகரங்களுக்கான எண்ணை விநியோக‌ம் ஸ்டாலின்கிராட் ஊடாக‌ ந‌ட‌ந்த‌ ப‌டியால் அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாக‌வும் இருந்த‌து.

நாஸிகள் இதனை "எலிகளின் போர்" என்று அழைத்தனர். ஏனெனில் எதிரி எங்கே இருக்கிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த எல்லாக் கட்டிடங்களும் குண்டுவீச்சுகளால் அழிக்கப் பட்டு விட்டன. இருந்தாலும் ஒரு சதுரங்க ஆட்டம் போன்று எல்லா இடங்களிலும் எதிரிகள் இருந்தனர். நாஸிப் படையினர் ஒரு வீட்டின் சமையலறையை கைப்பற்றி இருந்தால், அதே வீட்டில் உள்ள படுக்கையறையை கைப்பற்றுவதற்கு நாட்கணக்கில் சண்டை நடந்தது. செம்படை வீரர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, சுவர்களுக்கு பின்னால் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் மூன்றாம் நாடியிலும் கீழேயும் நாஸிப் படையினரும், இரண்டாம் மாடியில் செம்படையினரும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஸ்டாலின்கிராட் போரின் ஆரம்ப நாட்களில், நாஸிப் ப‌டைக‌ளுட‌னான‌ யுத்த‌த்தில் ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த‌ செம்ப‌டைக‌ள் பெரும்பாலும் வெளியேற்ற‌ப் ப‌ட்டு விட்ட‌ போதிலும், இருபது அல்லது முப்பது வீரர்களைக் கொண்ட 62 ம் ப‌டைப்பிரிவு ம‌ட்டும் உள்ளே சிக்கிக் கொண்ட‌து.

முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட படையினர் "பின்வாங்காம‌ல் க‌டைசி ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை போரிட‌ வேண்டும்" என்ற‌ ஸ்டாலினின் க‌ட்ட‌ளைப் ப‌டி இறுதி மூச்சு உள்ள வ‌ரை போராடுவ‌து என்று முடிவெடுத்த‌ன‌ர். அவர்கள் ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ நான்கு மாடிக் க‌ட்டிட‌ம் ஒன்றை த‌ம‌து க‌ட்டுப்பாட்டில் வைத்திருந்த‌ன‌ர். சுற்றிலும் பாதுகாப்பு அர‌ண்க‌ளை அமைத்து த‌ற்காப்பு யுத்த‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌ன‌ர். அந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இறுதியில் மேலதிக படைகள் வந்து ஸ்டாலின்கிராட்டை விடுதலை செய்யும் வரையில் தாக்குப் பிடித்தனர்.

அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62 ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் "ப‌வ்லோவின் வீடு" என்று அழைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌. ஆர்ட்டில‌ரி போன்ற‌ க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ளை பாவித்தால் ம‌றுப‌க்க‌ம் இருந்த‌ ஜேர்ம‌ன் ப‌டையின‌ர் மீதும் குண்டு விழ‌லாம்.

அந்த வீட்டை நாஸிப் ப‌டைக‌ள் மூன்று ப‌க்க‌ங்க‌ளில் சுற்றிவ‌ளைத்திருந்த‌ன‌. ஒரு ப‌க்க‌ம் வோல்கா ஆறு ஓடியது. அத‌ன் ம‌று க‌ரையில் நின்ற‌ செம்ப‌டையின‌ர் தாக்குத‌ல் ந‌ட‌த்திக் கொண்டிருந்தார்க‌ள். அத்துட‌ன் ம‌று க‌ரையில் இருந்து ப‌வ்லோவின் வீட்டுக்கு உண‌வு, ம‌ருந்து, ஆயுத‌ங்க‌ள் விநியோக‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. அதுவும் ஜேர்ம‌ன் விமான‌ங்க‌ளின் குண்டு வீச்சுக்கு த‌ப்பிச் செல்ல‌ வேண்டும்.

ப‌வ்லோவின் வீட்டினுள் ஆயுத‌ங்க‌ள், தோட்டாக்க‌ள், உண‌வு, த‌ண்ணீர் எல்லாவ‌ற்றுக்கும் த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ப‌டைவீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, உரிய‌ நேர‌த்தில் வெளியேற‌ முடியாம‌ல் மாட்டிக் கொண்ட‌ பொது ம‌க்க‌ளும் அத‌ற்குள் இருந்த‌ன‌ர்.

அங்கிருந்த‌ ஒரு நிறைமாத‌க் க‌ர்ப்பிணி ஒரு பெண் குழ‌ந்தையை பிர‌ச‌வித்தாள். குழ‌ந்தையின் த‌ந்தை ஏற்க‌ன‌வே ந‌ட‌ந்த‌ போரில் கொல்ல‌ப் ப‌ட்டு விட்டார். அநேக‌மாக‌ அப்போதிருந்த‌ நிலைமையில் குழ‌ந்தையும் உயிர் பிழைப்ப‌து க‌டின‌ம் என்றே ந‌ம்ப‌ப் ப‌ட்ட‌து. ஆனால் செம்ப‌டை வீர‌ர்க‌ள் த‌ம‌து உயிரைத் துச்ச‌மாக‌ ம‌தித்து அத்தியாவ‌சிய‌ பொருட்களை கொண்டு வ‌ந்து சேர்த்து குழ‌ந்தையை காப்பாற்றி விட்ட‌ன‌ர்.

ப‌வ்லோவின் வீடு புக‌ழ் பெற்ற‌மைக்கு அன்று சோவிய‌த் அர‌சு ஊட‌க‌ங்க‌ளில் செய்ய‌ப் ப‌ட்ட‌ பிர‌ச்சார‌மும் ஒரு கார‌ண‌ம். ஸ்டாலின்கிராட் முற்றுகைக்குள் அக‌ப்ப‌ட்ட‌ செம்ப‌டைப் பிரிவின் வீர‌ஞ்செறிந்த‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உட‌னுக்குட‌ன் தெரிவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. பிற்கால‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்டாலின்கிராட் யுத்த‌ம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ளிலும் இந்த‌ ப‌வ்லோவின் வீடு த‌வ‌றாம‌ல் இட‌ம்பெற்ற‌து.

*********

ஸ்டாலின்கிராட் டைரிக் குறிப்புக‌ள்: "60 வ‌ய‌து பெண் போராளி"!

இது ஸ்டாலின்கிராட் யுத்த‌த்தில் ப‌ங்கெடுத்த‌ ஒரு நாஸிப் ப‌டைவீர‌ர் எழுதிய டைரிக் குறிப்புக‌ளில் இருந்து ஒரு ப‌குதி.

//அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் எங்க‌ள‌து வாக‌ன‌ங்க‌ள் க‌ண்ணி வெடிக்கு அக‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தன. யாரோ இரவில் புதைத்து வைத்த கண்ணிவெடிகளுக்குள் சிக்கிய வாகனங்கள் வெடித்து எமக்கு பெருமளவு பொருட்சேதம் உண்டானது. அதனால் இந்த நாசவேலைகளுக்கு காரணமான முரட்டு ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு திரிந்தோம்.

இந்த‌க் க‌ண்ணிவெடிக‌ளை புதைப்ப‌து யாரென‌க் க‌ண்டுபிடிக்க‌த் திட்ட‌மிட்டோம். ஒரு நாள் இரவு காத்திருந்து ஆளைப் பிடித்து விட்டோம். அது ஒரு 60 வ‌ய‌து மதிக்க‌த்த‌க்க‌ முதிய‌ பெண். ஒரு ப‌ட்டியில் க‌ண்ணி வெடியும், ம‌ண்வெட்டியும் கொண்டு வ‌ந்திருந்தார். அவ‌ரை கையும் மெய்யுமாக பிடித்து விட்ட ப‌டியால் எமக்கு விசாரிக்க‌ எதுவும் இருக்க‌வில்லை.

அடுத்த‌ நாள் காலை அவ‌ரைத் தூக்கில் போடுவ‌த‌ற்கு த‌யார்செய்ய‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ப் பெண்ணின் இறுதி ஆசை என்ன‌வென‌க் கேட்டோம். தான் சிறுவ‌ய‌தில் வாழ்ந்த‌ வோல்கா ந‌தியை பார்க்க‌ வேண்டும் என்றார். ஒரு கொண்டாட்ட‌த்திற்கு செல்வ‌து போல‌ ந‌தியில் இற‌ங்கிக் குளித்து விட்டு வ‌ந்தார்.

அந்த இடத்தில் ஒரு தூக்கு மரம் ந‌தியை நோக்கிய ப‌டி அமைக்கப் ப‌ட்ட‌து. ஒரு துளி கூட அச்சமின்றி தூக்குக் கயிறை நோக்கிச் சென்றார். அந்த‌ப் பெண்ணை ஒரு தோட்டாக்கள் வைக்கும் மர‌ப் பெட்டியின் மேல் ஏறி நிற்க சொன்ன அவ‌ர‌து காவலாளி, க‌ழுத்தில் தூக்குக் க‌யிறு மாட்டி விட‌ நெருங்கினார். அது தேவையில்லை என்று சைகையால் காட்டிய‌ மூதாட்டி, தானாக‌வே தூக்குக் க‌யிறை பிடித்து தனது கழுத்தில் மாட்டிக் கொண்டார்.

அங்கே சில‌ நிமிட‌ நேர‌ம் நிச‌ப்த‌ம் நில‌விய‌து. ஒரு க‌ண‌ம் வோல்கா ந‌தியை பார்த்த‌ அந்த‌ப் பெண் பின்ன‌ர் த‌லையை குனிந்து எங்க‌ளைப் பார்த்தார். எங்க‌ளை நோக்கி காறித் துப்பி விட்டு கோஷ‌ம் எழுப்பினார்: "ஊத்தை நாஸிக‌ள்... நீங்க‌ள் மனநோயாளிகள்... இந்த‌ பூமியில் கொள்ளை நோய் ப‌ர‌ப்ப‌ வ‌ந்த‌ கிருமிக‌ள்... புர‌ட்சி நீடூழி வாழ்க‌! லெனின் நீடூழி வாழ்க‌!" அத்துடன் காவ‌லாளி காலுக்கு கீழே இருந்த‌ பெட்டியை த‌ட்டி விட்டார். அந்த 60 வ‌ய‌து பெண் போராளியின் உயிரற்ற உட‌ல் தூக்கும‌ர‌த்தில் தொங்கிய‌து.//

(ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையில் டாங்கி ஓட்டுன‌ராக‌ ப‌ணியாற்றிய‌ Henry Metelman எழுதிய‌ அனுப‌வ‌க் குறிப்புக‌ள். Through Hell for Hitler என்ற‌ பெயரில் நூலாக‌ வந்துள்ள‌து.)


ஸ்டாலின்கிராட் போரில் தான் புதிய சோவியத் கண்டுபிடிப்பான கத்யூஷா ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட பதினாறு குழாய்களில் இருந்து ஒரே நேரத்தில் ஷெல் வீச்சு நடந்தது. நாஸிகள் இதனை "ஸ்டாலின் ஓர்கன்" (ஓர்கன் எனும் குழாய் இசைக்கருவி போன்றிருந்த படியால்) என்று அழைத்தனர். 1943 ம் ஆண்டு தொடக்கத்தில் கடும் குளிர்காலத்தில் ஸ்டாலின்கிராட் நகரை மீட்பதற்கான செம்படையினரின் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அதற்குள் பட்டினியாலும், கடும் குளிராலும் செத்து மடிந்து கொண்டிருந்த நாஸிப் படையினர் இறுதியில் சரணடைந்தனர். ஸ்டாலின்கிராட் வெற்றியானது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இன்றைக்கும் ஸ்டாலின்கிராட் யுத்தத்தை விவரிக்கும் பல நூல்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகின்றன.

Wednesday, January 01, 2020

இந்தியா இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா?


இந்தியாவில் இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி வ‌ரும் என்ப‌தை முப்ப‌டைக‌ளின் த‌ள‌ப‌தி ம‌றைமுக‌மாக‌த் தெரிவிக்கிறார். இல்லாவிட்டால், சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள், எத‌ற்காக‌ எல்லைக‌ளை பாதுகாக்கும் இராணுவ‌த்தைக் க‌ண்டு அஞ்ச‌ வேண்டும்? இந்திய முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ள் பாதுகாக்கப் ப‌ட‌ வேண்டுமானால், பாஜக அர‌சு இராணுவ‌த்தை ஏவி விட்டு சொந்த‌ ம‌க்க‌ளையே கொல்ல‌த் த‌ய‌ங்காது.

 "இராணுவத்தை கண்டால் மக்கள் அஞ்ச வேண்டும்" என்று பிபின் ராவத் சொன்னது ஏன்? இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்....

இருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, நான் பெல்ஜிய‌ க‌ம்யூனிஸ்ட் தொழிலாள‌ர் க‌ட்சி ஒழுங்கு ப‌டுத்திய‌ கோடை கால‌ முகாமில் ப‌ங்குப‌ற்றி இருந்தேன். அப்போது எம‌க்கு வ‌குப்பெடுத்த‌ க‌ட்சியின் பிர‌தான‌ உறுப்பின‌ர் ஒருவர் பின்வ‌ரும் த‌க‌வ‌லை தெரிவித்தார்:

//பெல்ஜிய‌த்தில் உள்ள‌ இராணுவ‌ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் நெருக்க‌மாக வாழும் ப‌குதிக‌ளை அண்டியே உள்ள‌ன‌. இது ஒன்றும் த‌ற்செய‌ல் அல்ல‌. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற‌ கால‌ங்க‌ளில் தான் எதிரி நாடுக‌ளுட‌ன் யுத்த‌ம் செய்வார்க‌ள்...//

உண்மையில் இந்த‌த் த‌க‌வ‌ல் அன்று என‌க்கு ம‌ட்டும‌ல்லாது, பல பெல்ஜிய‌ தோழ‌ர்க‌ளுக்கும் நம்புவ‌த‌ற்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. எம‌து ச‌ந்தேக‌த்தை நேரடியாகக் கேட்டோம். அத‌ற்கு அவ‌ர் பின்வ‌ரும் ப‌திலைக் கூறினார்:

//உதார‌ண‌த்திற்கு 19 ம் நூற்றாண்டின் இறுதிப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ பாரிஸ் கம்யூன் புர‌ட்சியை எடுத்துப் பாருங்க‌ள். அந்த‌ நேர‌த்தில் "ஜென்ம‌ விரோதிக‌ளான‌" பிரெஞ்சு இராணுவ‌மும், ஜேர்ம‌ன் இராணுவ‌மும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌.

பாரிஸ் க‌ம்யூன் புர‌ட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜேர்ம‌ன் இராணுவ‌மும், பிரெஞ்சு இராணுவ‌மும் தமது "ஆயிர‌ம் வ‌ருட‌ கால‌" ப‌கைமையை ம‌ற‌ந்து ஒன்று சேர்ந்து விட்ட‌ன‌.

அன்று "எதிரி" நாட்டுப் ப‌டைக‌ளின் ஒத்துழைப்பு இருந்த‌ ப‌டியால் தான், பிரெஞ்சு இராணுவ‌ம் இல‌குவாக‌ பாரிஸ் புர‌ட்சியை ந‌சுக்க‌ முடிந்த‌து. அது முடிந்த‌ பின்ன‌ர் இர‌ண்டு நாட்டுப் ப‌டைக‌ளும் வ‌ழ‌மை போல‌ மீண்டும் யுத்த‌திற்கு திரும்பிச் சென்று விட்டன.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள‌ வேண்டிய‌ பாட‌ம் ஒன்றுள்ள‌து. இந்த முத‌லாளித்துவ‌ தேச‌ங்க‌ள் ஒன்றையொன்று விழுங்கும் அள‌வு ப‌கைமை பாராட்டினாலும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சி ந‌ட‌க்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்க‌ள்.//

இந்தியாவில் புதிதாக‌ முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த் "இராணுவ‌த்தைக் க‌ண்டு ம‌க்க‌ள் அஞ்ச‌ வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இத‌ன் மூல‌ம், எதிரி நாடான‌ பாகிஸ்தானுட‌ன் யுத்த‌ம் செய்வ‌தை விட‌, சொந்த‌ நாட்டில் புர‌ட்சி ஏற்ப‌ட‌ விடாம‌ல் த‌டுப்ப‌து தான் இந்திய‌ இராணுவ‌த்தின் த‌லையாய‌ ப‌ணி என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லி இருக்கிறார்.