Thursday, December 31, 2009

இஸ்ரேல் - ஈரான் போர் மூளுமா? விரிவான அலசல்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் அணு உலைகளை தாக்குவதற்கு இஸ்ரேல் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இஸ்ரேலின் விமானப்படைக்கு சொந்தமான இரு தாக்குதல் விமானங்கள் வீரியம் குறைந்த அணுகுண்டுகளை போடுவதற்கு தயாராகி வருகின்றன. இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பானில் அணு குண்டுகள் போடப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், முதலாவது அணுவாயுதப் போர் இதுவாக இருக்கும். ஈரான் மீதான தாக்குதல், இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை தோற்றுவிக்கலாம். வளைகுடா எண்ணெய் விநியோகம் தடைப்படலாம். இது போன்ற காரணங்களால் அமெரிக்கா தாக்குதலுக்கு அனுமதியளிக்கவில்லை. அவ்வாறு இஸ்ரேல்-ஈரான் போர் மூளுமாயின், அதன் காரணிகள் என்ன? ஈரானின் அணு உலைத் திட்டங்கள், இஸ்ரேலின் எதிர்ப்புக்கான காரணங்கள், போன்ற பூகோள அரசியலை ஆராயும் விறுவிறுப்பான ஆவணப்படம் இது.


Part 01

part 02

part 03

part 04

part 05

part 06

Wednesday, December 30, 2009

உலகம் அறியாத இஸ்லாமிய ஈரானின் மறுபக்கம்

"இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், ஈரானை இருண்ட மத்திய காலத்தில் வைத்திருப்பதாக" ஊடகங்கள் நமது காதில் முழம் முழமாக பூச்சுற்றுகின்றன. ஈரானிய இளைஞர்கள் ஆடம்பர அமெரிக்க கலாச்சாரத்திற்கு அடிமையானவர்கள். பாரிசிலும், லண்டனிலும் காணும் அதே கடைத்தெருக்கள் தெஹ்ரான் நகரை அலங்கரிக்கின்றன. இஸ்லாமியப் புரட்சி படித்த மத்தியதர வர்க்கத்தை தோற்றுவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் 60 % பெண்கள். நிறுவனங்களைக் கூட பெண்கள் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள். ஈரான் ஒளிர்கிறது! முதலாளித்துவ பொருளாதாரத்தின் வெற்றிகரமான சாதனை அது. இருப்பினும் ஈரானுக்கு இன்னொரு இருண்ட பக்கம் இருக்கிறது. குழந்தைத் தொழிலாளரை சுரண்டும் தொழிலகங்கள். பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தடைச் சட்டம் போடத் தயங்கும் அரசு. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான துரதிர்ஷ்டசாலிகள். நாடு முழுவதும் இரண்டு மில்லியன் போதை அடிமைகள் இருப்பதாக அரசே கூறுகின்றது. கணக்கில் வராதது இன்னும் பல மடங்கு. இது இஸ்லாமிய ஈரானின் இன்னொரு முகம். சமூக ஏற்றத்தாழ்வுக்கு காரணமான முதலாளித்துவ கொடுங்கோலாட்சியை இஸ்லாம் திரையிட்டு மறைக்கின்றது. இது தான் இன்றைய ஈரான்.

Monday, December 28, 2009

ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)
மறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது
அல்லது பாலஸ்தீன தேசியவாதம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.

பாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.

இதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.

பாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது? அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது! அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

இறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.


பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:
பகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

Sunday, December 27, 2009

இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஐந்தாம் பகுதி)
"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அது வருங்காலத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும்." இந்த எச்சரிக்கையை விடுத்தது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பனான சவூதி மன்னன் அப்துல்லா. அமெரிக்காவின் பிற கூட்டாளிகளான ஜோர்டான், பாஹ்ரைன் போன்ற நாடுகளும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இது வரை காலமும் அரபு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க சார்பு மேட்டுக்குடியினரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக வளர்ந்த அரபு மத்திய தர வர்க்கம் ஆட்சியாளருக்கு சவாலாக கிளம்பியுள்ளது.

முன்பெல்லாம் அரபு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள், அல்லது சமூக ஆர்வலர்கள் ஊர்வலங்களை ஒழுங்கு செய்கின்றனர். பொது ஜனங்களின் எழுச்சி வெறும் வாய்ப்பேச்சோடு நிற்காது செயலிலும் இறங்கியுள்ளது. முதற்படியாக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் தோன்றியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு, பொது மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. லெபனானில் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க பொருட்கள் எவை என்றும், அதற்கு மாற்றாக வாங்கக்கூடிய உள்ளூர் மற்றும் ஆசிய உற்பத்திப் பொருட்கள் எவை என்றும் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை துண்டுப் பிரசுரமாக வீடு வீடாக விநியோகித்துள்ளனர். அரபு நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் டாலரை புறக்கணித்து யூரோவுக்கு மாற வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொருளாதாரத் தாக்கம் இஸ்ரேலிலும் உணரப்படுகின்றது. பெரும் லாபமீட்டிய சுற்றுலாத் துறை, பயணிகளின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பீதி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தது. எதிர்காலம் கேள்விக்குறியான இஸ்ரேலியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி வருகினறனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் வரி அதிகரிப்பு, மானிய வெட்டு என்பன யூத உழைக்கும் மக்களை பாதிக்கின்றன.

வெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள், இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர். பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல், ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு? அரபுக்களின் தண்ணீரை திருடுவது!
1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி, சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள். இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது. இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானை 20 வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன. அதற்குக் காரணமும் தண்ணீர்க் களவு. லெபனானின் வற்றாத லித்தானி நதி, வட இஸ்ரேலியரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த தண்ணீர் எல்லாம் பகற்கொள்ளை மூலம் பெறப்படுவதால், யூதர்களுக்கு குறைந்த செலவில் விற்க முடிகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் திருடுவது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் தண்ணீர்க் கொள்ளையை நிரந்தரமாக்கும் பொருட்டு, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோ வரை, அதாவது ஜோர்டான் நதிக்கரையோரம் நூற்றுக்கணக்கான யூதக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. எல்லைப்புற யூத குடியேற்றங்களை அப்படியே விட்டு விடும் படி, அரபாத்திடம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. நோர்வே அனுசரணையிலான சமாதான ஒப்பந்தம், ஒரு நாளும் சுதந்திர பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கியிருக்காது. அது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

"மேகொரோட்" என்ற இஸ்ரேலிய கம்பெனி தான், யூதர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீன வீடுகளுக்கும் நீர் விநியோகம் செய்கின்றது. ஒரு நாளைக்கு, ஒரு சராசரி யூதர் 350 லீட்டர் தண்ணீரைப் பெறுகின்றார். அதே நேரம், சராசரி பாலஸ்தீனர் பெறுவதோ வெறும் 70 லீட்டர் தான்! உலக சுகாதாரக் கழகத்தின் அளவீட்டின் படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 100 லீட்டர் தண்ணீர் தேவை. கோடை காலங்களில், நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, பாலஸ்தீன வீடுகளுக்கான விநியோகம் நாட்கணக்காக நிறுத்தப்படும். குடிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் பாலஸ்தீனியர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீர் கடன் வாங்குவார்கள். அப்போதெல்லாம் யூதக் குடியேற்றங்களில் நீச்சல் குளங்கள் நிரம்பி வழியும்.

பாலஸ்தீனப் பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கு கூட, இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். யூதக் குடியேறிகளின் அட்டகாசம் குடிநீரையும் விட்டு வைப்பதில்லை. பாலஸ்தீனர்களின் கிணறுகளில் குப்பை கொட்டி நீரை அசுத்தமாக்குவது, குடிநீர் கொண்டு செல்லும் 'பௌசரை' வழிமறித்து, நீரை நிலத்தில் கொட்டி பாழாக்குவது. இப்படி பல அட்டூழியங்கள் வெளியே தெரிய வருவதில்லை. இஸ்ரேலிய படையும் தன் பங்குக்கு தண்ணீர்க் குழாய்களை உடைத்து நாசப்படுத்துகின்றது.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் நீர் நிலைகள் பாலஸ்தீன அதிகார சபையின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் காரணமாக, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எது எப்படி இருப்பினும், அபரிதமான நீர்ப் பாவனையால் ஜோர்டான் நதி வற்றி வருகின்றது. கோலான் குன்றுகளின் நீரூற்றுகளும் ஒரு நாள் வற்றிவிடலாம். மறுபுறம் இஸ்ரேலிய/பாலஸ்தீன சனத்தொகை பெருகி வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்ற நீர் வளம் குறைந்து வருகின்றது. நிலைமை இப்படியே போனால், இன்னும் 50 வருடங்களில் அந்தப் பிராந்தியம் வறண்ட பாலைவனமாகி விடும். அப்போது இந்த புனித பூமிக்காக சண்டை போட யாரும் இருக்க மாட்டார்கள்.

பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:


பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்

(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

Saturday, December 26, 2009

ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்

"ஜெருசலேம் சூழ்ச்சியினதும், அடக்குமுறையினதும் நகரம். ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல அதன் தீச்செயல்கள் ஓய்வதில்லை. வன்முறை, வன்கொடுமை பற்றி மட்டுமே கேள்விப்படுகிறேன். மதகுருமார், தீர்க்கதரிசிகள் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எனது மக்களின் நோய்களை குணப்படுத்துவதாக அவர்கள் கூறுகிறார்கள். "எல்லாம் நல்லபடியாக நடக்கும்... எல்லாம் நல்லபடியாக நடக்கும்..." ஆனால் எதுவுமே நன்றாக வருவதில்லை. அவர்கள் தமது கேட்ட காரியங்களுக்காக வெட்கப்படுகிறார்களா? இல்லை. அவர்கள் சிறிதளவேனும் வெட்கப்படுவதில்லை. வெட்கம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது." (ஜெரேமியா, அத்தியாயம் 6:6-7,13 ,15 , பழைய ஏற்பாடு, பைபிள்)

யூதர், இஸ்லாமியர் ஆகிய இரு மதத்தவர்களும் ஜெருசலேம் எமக்கே சொந்தம் என்று சண்டை பிடிக்கிறார்கள். தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அன்றாடம் சொல்லப்படுவதை நாம் உண்மை என்று நம்புகின்றோம். டேவிட் மன்னனால் கட்டப்பட்ட ஆலயமும், முறையிடும் சுவரும் யூதருக்கு புனிதமானவை. முகமது நபி அவர்கள் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படும் இடத்தில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி முஸ்லிம்களுக்கு புனிதமானது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த இடம் இருப்பதால், கிறிஸ்தவர்களுக்கும் ஜெருசலேம் புனிதமானது.

பண்டைய கால வரலாற்றில், யூதர்களும்,முஸ்லிம்களும், ஒரு போதும் ஜெருசலேமுக்காக சண்டையிட்டதில்லை. அது இரு மதத்தவருக்கும் சொந்தமான நகரமாக இருந்தது. ரோமர்கள் ஆட்சியில், யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க தடை விதித்திருந்தனர். அரேபியாவில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லிம்கள், பாலஸ்தீனத்தை கைப்பற்றிய பின்னரே யூதர்கள் ஜெருசலேமில் குடியேறும் உரிமை கிடைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்த சிலுவைப்போர் படைகளை, முஸ்லிம்களுடன், யூதரும் எதிர்த்து போராடினார்கள். ஜெருசலேமை கைப்பற்றிய கிறிஸ்தவ படைகள், முஸ்லிம்களோடு, யூதர்களையும் கொன்று குவித்தனர். மதச் சுத்திகரிப்பு செய்தனர். இஸ்லாமிய படைகள் ஜெருசலேமை விடுவித்த பின்னர் தான் யூதர்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது.

தற்கால ஜெருசலேம் சர்வதேச நிர்வாகத்தின் கீழ் வர வேண்டுமென, 1947 ல் ஐ.நா.சபை தீர்மானித்தது. 1948 அரபு-இஸ்ரேல் யுத்தத்தில், மேற்கு ஜெருசலேமை யூதப் படைகள் கைப்பற்றின. எஞ்சிய கிழக்கு ஜெருசலேமும், அதோடு அண்டிய மேற்குக்கரை பிரதேசமும் ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1967 யுத்தத்தில் அந்தப் பகுதியும் இஸ்ரேல் வசமாகியது. அதன் பின்னர் பாலஸ்தீனர் வாழ்ந்த கிழக்கு ஜெருசலேமையும் இணைத்து, ஒரே ஜெருசலேமாக இஸ்ரேலின் தலைநகரமாகியது.

அபிவிருத்தியடைந்த முதலாம் உலகத்தையும், பின்தங்கிய மூன்றாம் உலகத்தையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால், நீங்கள் ஜெருசலேம் செல்ல வேண்டும். யூதர்கள் வாழும் மேற்கு ஜெருசலேம் பகுதி, மேற்கத்திய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம் அரபுக்கள் வாழும் கிழக்கு ஜெருசலேம் கவனிப்பாரின்றி, அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்சியளிக்கின்றது. அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய அரசுக்கே வரி செலுத்திய போதும், அந்த வரிப்பணம் யூத-ஜெருசலேமின் அபிவிருத்திக்கே செலவிடப் படுகின்றது. நகர விஸ்தரிப்பு என்ற போர்வையின் கீழ், கிழக்கு ஜெருசலேமை சுற்றியுள்ள அரபு நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே யூதர்க்கான குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஆனால் பாலஸ்தீனர்கள் தமது சொந்தக் காணியில் வீடு கட்டினால் மட்டும், அனுமதியின்றி கட்டியதாக கூறி இடித்துத் தள்ளப்படுகின்றன.

புதிதாக வந்து சேரும், (பெயரில் மட்டுமே) யூதரான ரஷ்யர்களுக்கு கூட ஜெருசலேமில் குடியேற உரிமையுண்டு. அதே நேரம் பிற பாலஸ்தீன பகுதிகளில் இருந்து வரும் அரபுக்களுக்கு அந்த நகரத்தில் வசிக்கும் உரிமை கூடக் கிடையாது. யாராவது ஜெருசலேமில் இருக்கும் உறவுக்காரரை பார்க்க விரும்பினால், அதற்கென விசேஷ பாஸ் எடுக்க வேண்டும். காலங்காலமாக ஜெருசலேம் நகரில் வசித்து வரும் பாலஸ்தீனர்கள் வந்தேறுகுடிகளாக கருதப்பட்டு, கால வரையறை கொண்ட வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. நோர்வே அனுசரணையின் நிமித்தம் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் கூட ஜெருசலேமை மீட்டுத் தராது எனக் கண்டனர். இதனால் இரண்டாவது இன்டிபதா என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி ஜெருசலேமில் ஆரம்பமாகியதில் ஆச்சரியமில்லை.

இஸ்ரேல் தன்னை ஒரு ஜனநாயக நாடாக வெளி உலகுக்கு காட்டிக் கொள்கின்றது. ஆனால் இந்த ஜனநாயகம் யூதர்களுக்கு மட்டுமே. 1948 சுதந்திரப் பிரகடனத்தின் போது, இஸ்ரேலிய எல்லைக்குள் வசித்த பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்களை பாலஸ்தீனர்கள் என்று அழைப்பதில்லை. மாறாக "இஸ்ரேலிய அரபுக்கள்" என்ற நாமம் சூட்டப்பட்டுள்ளது. 1967 யுத்தத்தின் பின்னர், ஜோர்டானிடம் இருந்து மேற்குக்கரையும், எகிப்திடம் இருந்து காஸாவும் கைப்பற்றி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்க இஸ்ரேல் முன்வரவில்லை. அதனால் அவர்கள் "நாடற்றவர்கள்" (எந்த நாட்டிற்கும் சொந்தமில்லாதவர்கள்.) ஆனார்கள். இன்று சுமார் மூன்று மில்லியன் பாலஸ்தீனர்கள் நாடற்றவராக எந்த உரிமையுமின்றி வாழ்கின்றனர். நாடற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. அதனால் வெளிநாட்டுப் பயணத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, காசா பகுதிகளை "விவாதிக்கப்பட வேண்டிய பகுதிகள்" எனக் கூறுகின்றது. செவ்வியந்தியரின் நிலங்களுக்களை பறித்தெடுத்த ஐரோப்பியர்கள் இன்று அமெரிக்காவுக்கு சொந்தாடுகின்றனர். அதே போல, களவாடப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் அத்துமீறிக் குடியேறியவர்கள், அந்த நிலங்கள் தமது என உரிமை கொண்டாடுகின்றனர். "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள். இது எமக்கு ஆண்டவரால் அருளப்பட்ட பூமி." என்று பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகின்றனர். பாலஸ்தீனர்கள் தமது ஆரஞ்சு பழத் தோட்டங்களை, விவசாய நிலங்களை யூத குடியேற்றக்காரரிடம் பறி கொடுத்தனர். இன்று தமது சொந்த நிலத்திலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் ஐ.நா.சபையோ, அல்லது அமெரிக்காவோ, யாராயினும் பாலஸ்தீனியரின் மண் மீதான உரிமையை மீட்டுத் தரவில்லை.

அமெரிக்காவில் செவ்விந்திய பழங்குடிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றனர். அது போல பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகள், யூதக் கடலுக்குள் தனித்த தீவுகளாக காட்சி தருகின்றன. நிறவெறி தென்னாபிரிக்காவில் இருந்தது போல, விசேஷ பாஸ் நடைகுறை மூலம் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் யூத முதலாளிகளிடம் வேலை செய்து விட்டு வர தடையில்லை. இதனால் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்கள், அல்லது யூத கமக்காரர்கள் பாலஸ்தீன வேலையாட்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முடிகின்றது. சில முதலாளிகள் கூலியை ஒழுங்காக கொடுப்பதில்லை. சக்கையாக பிழிந்து வேலை வாங்கி விட்டு, நான்கு மாத சம்பளப் பணத்தை கொடுக்காமல் கம்பி நீட்டுபவர்களும் உண்டு. பாலஸ்தீன தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை இல்லை. இஸ்ரேலிய அரச நிறுவனங்கள் மட்டிலுமே நான்கில் ஒரு பங்கு பாலஸ்தீன தொழிலாளரை பயன்படுத்திக் கொள்கின்றன. மூலதனத்திற்கும், தேசிய இனப்பிரச்சினைக்கும் இடையிலான சிக்கலான உறவை விளக்கும் ஒரு சிறு உதாரணம் இது. சுதந்திர பாலஸ்தீன தேசம் உருவானாலும், இஸ்ரேலின் பொருளாதார அடிமையாக தொடர்ந்து இருக்க வேண்டி வரும்.

இஸ்ரேலில் நிலவும் இனப்பாகுபாட்டுக் கொள்கையை எந்தவொரு மேற்குலக அரசியல்வாதியும் கண்டிக்கத் துணிவதில்லை. ஏனெனில் இஸ்ரேலியரை இனவெறியர்கள் என்று கூறினால், தம்மீது "யூத விரோதி" என்ற பட்டம் சூட்டப்படும் என்று தெரியும். ஐரோப்பாவில் ஒரு முறை, "ஹோலோகோஸ்ட் என்ற யூத இனவழிப்பில் பலியான அப்பாவிகளின் பெயரை பயன்படுத்தி இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் பணம் கறந்து வருவதாக" ஒரு நூல் வெளியானது. அந்த நூலை எழுதியவர் ஒரு ஐரோப்பிய யூதர். ஆகவே அவர் மீது "இனத் துரோகி" முத்திரை குத்தப்பட்டது. "அகண்ட இஸ்ரேல்" அமைக்கும் கொள்கையை இஸ்ரேலிய அரசு கைவிட்டு விட்டதா என தெரியவில்லை. எத்தனை வருடம் போனாலும் பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேலுக்கு சொந்தமாக்கும் முயற்சியை அரசு கைவிடவில்லை. "பாலஸ்தீனப் பகுதி" ஊடகங்களில் மட்டுமே உயிர்வாழ்கின்றது. இஸ்ரேலிய பாடப் புத்தகங்களில் எங்குமே அதைப் பற்றிய குறிப்பு இல்லை. இதனால் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் "பாலஸ்தீனமா? அது எங்கே இருக்கின்றது?" எனக் கேட்பதில் வியப்பில்லை.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு தமது நிலை நன்றாக தெரியும். கடந்த கால யுத்தங்களின் போது அகதிகளாக இடம்பெயர்ந்து அயல்நாடுகளுக்கு ஓடிய முட்டாள்தனத்தை தற்போது நொந்து கொள்கின்றனர். இன்று எதிர்த்துப் போராடுவது அல்லது மடிவது என்று துணிந்து விட்டனர். என்ன தான் மதவாதச் சாயம் பூசினாலும், ஜெருசலேமை மையப்படுத்திய போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமேயாகும். ஜெருசலேமை தலைநகராக கொண்ட பாலஸ்தீனம் உருவாகப் போவதில்லை. அதே நேரம் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக நிலைத்து நிற்கப் போவதுமில்லை.

இதனால் சமாதான ஆர்வலர்களும், இடதுசாரிகளும், புதிய வகை "செமிட்டிக் குடியரசு" ஒன்றை முன் மொழிகின்றனர். அரபுக்களும், யூதரும் செமிட்டிக் இனத்தவர்கள் என்பதால் அது புதிய தேசிய அடையாளத்தை உருவாக்கும். ஆனால் யூத/இஸ்லாமிய/கிறிஸ்தவ மத அடையாளங்களற்ற சிவில் சமூகம். அதில் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் சம உரிமைகளுடன் பங்குபற்றலாம். நாடற்ற பாலஸ்தீனர்களுக்கு வாக்குரிமை இல்லையென்பது இவ்விடத்தே நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவில் நடந்த கறுப்பர்களின் சமூகநீதிப் போராட்டத்தை அடியொற்றி, "ஒரு மனிதன், ஒரு ஓட்டு" கோரிக்கைக்கு ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது. இஸ்ரேலில், பாலஸ்தீன பகுதிகளையும் உள்ளடக்கிய, பொதுத் தேர்தல் நடத்தப்படுமா? ஜனநாயக அடிப்படையில், அனைவருக்கும் (நாடற்ற பாலஸ்தீனருக்கும்) வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமா? அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தால், அங்கே இஸ்ரேல் என்ற தேசம் இருக்காது. ஆனால் அது பாலஸ்தீனக் குடியரசாகவும் மாறாது.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:


(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

Friday, December 25, 2009

இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்

(போர்க்களமான புனித பூமி, பகுதி 3)
உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா? இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சென்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், ஒரு யூதர் இஸ்ரேலிய பிரஜையாக கருதப்படுவார். ஆனால் ஆயிரம் ஆண்டு காலம், அந்த மண்ணிலேயே வாழும் பாலஸ்தீனருக்கு அந்த உரிமை கிடையாது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் அத்துமீறி குடியேறிய யூதர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. யூத குடியேற்றக் கிராமங்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளை, மானியங்களை வழங்கி வருகின்றது. குடியேறிகளுக்கு கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யூத குடியேற்றவாசிகள் பெரும்பாலும் யூத மத அடிப்படைவாதிகளாக இருப்பது வியப்புக்குரியதல்ல. "இது யூதரின் நாடு. அரபுக்களுக்கு இங்கே இடமில்லை." என்று சொல்லும் இனவெறியர்கள். ஆதாரம்? "அது தான் பைபிளில் எழுதியிருக்கிறதே." என்பார்கள்.

இஸ்ரேலிய படை (IDF), பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களுக்கிடையில் சோதனைச் சாவடிகள் அமைத்து மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் ஒவ்வொரு பாலஸ்தீன கிராமமும், நகரமும் தடுப்பு முகாமாக மாறி வருகின்றது. பாலஸ்தீனம் பிரிட்டிஷாரின் பாதுகாப்ப்புப் பிரதேசமாக இருந்த காலத்தில் இயங்கிய பயங்கரவாத இயக்கமான "ஹகனா", பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையாகியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் மட்டுமல்ல, உண்மையில் இஸ்ரேல் என்ற தேசத்தை ஆட்சி செய்வதும் அது தான். அரசாங்க பட்ஜெட்டில், ஆண்டு தோறும் 20 % இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. இதைவிட ஒவ்வோர் ஆண்டும் 1.8 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்குகின்றது. (அமெரிக்காவின் ஆயுத தொழிற்சாலையில் இருந்து இஸ்ரேல் தனக்கு வேண்டிய ஆயுதங்களை நேரடியாக வாங்கலாம்.) இதைவிட இன்னொரு வகை வருமானமும் உண்டு. நாசிகள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஆண்டுதோறும் மில்லியன் டாலர்களை ஜெர்மன் அரசு நஷ்டஈடாக வழங்குகின்றது. இது தான் இஸ்ரேலிய இராணுவ மேலாதிக்கத்தின் இரகசியம்.

இஸ்ரேல் ஒரு பாராளுமன்ற ஜனநாயக நாடு என கூறப்படுகின்றது. ஆயினும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதம மந்திரி எல்லோருமே இராணுவத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்கள். இதனால் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புண்டு. இராணுவத்தில் இருந்தவர்களே அரசுப் பதவிகளை அலங்கரிப்பதால், அங்கே உண்மையில் இராணுவ ஆட்சியே நடக்கின்றது. இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு பாசிச அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தனர். தென்னாபிரிக்காவின் முன்னாள் நிறவெறி ஆட்சியாளர்கள், லெபனானில் பலாங்கிஸ்ட், ஆகியோருடனான தொடர்புகள் இங்கே குறிப்பிடத் தக்கவை. இஸ்ரேலிய இனவெறிக் கொள்கையின் உச்சமாக "அரபுக்களை மட்டுமே தேடிப்பிடித்து கொல்லும்", உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க எத்தனித்தனர். அரபுக்களும், யூதர்களும் ஒரே மரபணுக்களை கொண்டிருப்பதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. முன்பு ஹிட்லர் இது போன்ற உயிரியல் ஆயுதம் ஒன்றை தயாரிக்க விரும்பியது நினைவுகூரத்தக்கது. இஸ்ரேலில், உயிரியல், இரசாயன ஆயுதங்கள் மட்டுமல்ல, அணு குண்டுகள் கூட இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தில் யூதர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பத்து லட்சம் அரபு மக்களுக்கு அந்த உரிமை இல்லை. 1948 ம் ஆண்டு யுத்தத்தில், வீடிழந்த பாலஸ்தீன அகதிகள் 60 வருடங்களாக அயல்நாட்டு அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களது தாயகம் திரும்பும் உரிமையை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் உலகம் முழுவதிலும் இருந்து வந்து குடியேறும் யூதர்களுக்கு, வந்த உடனேயே குடியுரிமை வழங்கப்படுகின்றது. இஸ்ரேலின் அரசியல் யாப்பு, யூதர்கள் மட்டுமே குடியேறலாம் எனக் கூறுகின்றது. இவ்வாறு சட்டம் போட்டு இனப்பாகுபாடு காட்டும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மட்டும் தான்.

சிலர் நினைப்பது போல யூதர்கள் ஒரு தனியினம் அல்ல. அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல். ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்கள் வெள்ளை நிறத்தவராகவும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த யூதர்கள் கருமை நிறம் கொண்டோராயும், மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்கள் அரபுக்கள் போன்றும் தோன்றுகின்றனர். வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகளே, யூதர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களல்ல என நிரூபிக்க போதுமானவை. அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ, அந்த நாட்டு மொழியையே தாய் மொழியாக பேசுகின்றனர். இரண்டாவது தலைமுறை மட்டுமே ஹீபுரு மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளது.

யூத மதத்தின் படி, ஒரு யூத ஆண் வேற்று மத பெண்ணை மணம் முடிக்கலாம். ஆனால் யூத பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை. மத ரீதியாக பார்த்தால், யூதத்திற்கும், இஸ்லாமுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பைபிளில் முதலாவது தீர்க்கதரிசியாக கருதப்படும் ஆப்பிரகாமுக்கு இரண்டு புதல்வர்கள். ஒன்று, இசாக். மற்றது, இஸ்மாயில். இசாக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் என்றும், இஸ்மாயிலின் வழிதோன்றல்கள் அரபுக்கள் என்றும் நம்பப்படுகின்றது. இரு மதத்தவரும் கண்டிப்பாக தெய்வ உருவங்களை வழிபடுவதில்லை. ஆபிரகாமை சுன்னத்து செய்து கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டதாகவும், அதையே யூதரும், முஸ்லிம்களும் பின்பற்றுவதாக நம்பப்படுகின்றது. இரு மதத்தவரின் உணவுப் பழக்கங்கள் ஒரே மாதிரியானவை. (யூதருக்கு: கோஷர், முஸ்லிம்களுக்கு: ஹலால்) பன்றி இறைச்சியை இரு மதங்களும் தடை செய்கின்றன. ஹீபுரு, அரபி, இரண்டும் செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. யூதரும், அரேபியரும் செமிட்டிக் இன மரபணுக்களைக் கொண்டுள்ளனர்.

அப்படியானால் பிரிவினை எங்கே தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைக்க அமெரிக்கா முன்வரலாம். நிரந்தர தீர்வைக் காண்பதற்கு யாரும் இன்னும் மனமொத்து வரவில்லை. அதற்கு காரணம், மத்திய கிழக்கின் அபரிதமான எண்ணெய் வளம். உலகில் தொழில்துறைக்கு எண்ணெய் மிக மிக அவசியம். அத்தகைய எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால், உலகில் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். அவ்வாறான ஒரு வல்லரசு தோன்றுவதை, அமெரிக்காவும், ஐரோப்பாவும் கற்பனை செய்யவும் விரும்பவில்லை. அதைத் தடுக்க உருவானது தான் நவீன இஸ்ரேல். இஸ்ரேலில் அரசியல் ஆதிக்கம் செலுத்துபவர்கள், வெள்ளையின ஐரோப்பிய யூதர்கள். இதனால் இஸ்ரேல் ஒரு ஐரோப்பிய குடியேற்ற நாடாகவே மேற்குலகில் கணிக்கப்படுகின்றது.

(தொடரும்)

முன்னைய பதிவுகள்:
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


குறிப்பு:
[உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.]

Thursday, December 24, 2009

தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

("போர்க்களமான புனித பூமி" தொடரின் இரண்டாம் பகுதி)

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலகில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது. போரில் பாதிக்கப்பட்ட பிரிட்டன் தனது காலனிகளை பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இதற்கிடையே அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகியிருந்தது. ஹிட்லரின் யூத மக்கள் படுகொலை, உலகம் முழுவதும் யூதர்களுக்கு சார்பான அனுதாப அலைகளை தோற்றிவித்தது. ஆரம்ப காலங்களில் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறியவர்கள், கிழக்கைரோப்பாவை சேர்ந்த சோஷலிச யூதர்களாக இருந்தனர். அவர்களால் இலகுவாக சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலின் நண்பனாக இருந்தது அமெரிக்கா அல்ல, சோவியத் யூனியன். இது இன்று பலருக்கு வியப்பளிக்கலாம்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் ஸ்டாலினின் கொள்கையின் கீழ் அந்த ஆதரவு வழங்கப்பட்டது. சோவியத் யூனியன் அன்று, அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் எதிரான சக்தியாக இஸ்ரேல் உருவாவதை விரும்பியது. ஆனால் அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இஸ்ரேலிய அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் உறவு கொண்டாடி, சோவியத் யூனியனுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்கா கூட ஆரம்பத்தில் எகிப்துடன் நல்லுறவைப் பேணவே விரும்பியது. ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினையில் இஸ்ரேலை விட சிறந்த அடியாள் கிடைக்க மாட்டான் எனக் கண்டு கொண்டது.

நாசிகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறவும், அங்கே இஸ்ரேல் அமைக்கவும் ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கியது. ஆரம்பத்தில் பாலஸ்தீன அரபுக்கள் கூட யூத மக்களும் அனுதாபத்துடன் நோக்கினார்கள். அதுவரை தாயகம் திரும்பும் யூதர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஐரோப்பிய அரசாங்கங்கள், இப்போது திடீர் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உதவியால் நாசிகளின் நரவேட்டைக்கு அகப்படாது தப்பிய யூதர்கள் கப்பல், கப்பலாக பாலஸ்தீனம் சென்று குடியேறினர். சிறிது சிறிதாக பாலஸ்தீன அரபுக்கள் என்ன நடக்கின்றது என உணர ஆரம்பித்தார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. மேற்கு பாலஸ்தீனத்தில் போதுமான அளவு யூதர்கள் குடியேறிய பின்பு, ஐ.நா.சபை பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தை இரு துண்டுகளாக்க தீர்மானித்தது. யூதர்கள் இந்த முடிவை வரவேற்றனர். இஸ்ரேலிய குடியரசு பிரகடனம் செய்தனர். மறுபக்கத்தில் அரபுக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. யுத்தம் மூண்டது. யூதர்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள், அவர்களின் வெற்றியை உறுதிப் படுத்தியது. பல கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அரபு மக்கள், அயல்நாடுகளில் அகதிகளாயினர்.

இந்தச் சமயத்தில், அன்றைய ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த துரோகம் பலர் அறியாதது. இந்த துரோகத்திற்கு பிராயச் சித்தமாக, பாலஸ்தீன அகதிகளுக்கு ஜோர்டானிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் அடித்து விரட்டப் பட்டன. மன்னருக்கு விசுவாசமான படைகள் பாலஸ்தீன எழுச்சியை அடக்கியதில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். இறுதியாக பாலஸ்தீன போராளிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் பலவீனமான லெபனான் நாட்டின் மீது படையெடுத்தது.

ஜோர்டானில் இருந்தது போலவே, லெபனானிலும் பாலஸ்தீன அகதி முகாம்கள் ஆயுதபாணி இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அத்தோடு இஸ்ரேலிய எல்லையோரம் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்த படியே இஸ்ரேலினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். போராளிகளின் செயல்கள் உள்ளூர் (லெபனான்) மக்களிடம் வெறுப்பை தோற்றுவித்தது. அதிலும் லெபனானிய கிறிஸ்தவர்கள் அளவுகடந்த வெறுப்பை காட்டினார்கள்.

பாலஸ்தீன போராளிகளை அடக்குவதாகக் கூறி (எல்லை கடந்த பயங்கரவாதம்?), இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்தது. பெய்ரூட் வரை வந்த இஸ்ரேலிய படைகளுக்கு கிறிஸ்தவ பலாங்கிஸ்ட் இயக்கம் ஒத்துழைப்பு வழங்கியது. அதுவரை அகதி முகாம்களை பாதுகாத்து வந்த பாலஸ்தீன போராளிகள் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் வெளியேறினர். அநாதரவாக விடப்பட்ட ஷப்லா, ஷடிலா முகாம்கள் இஸ்ரேலிய, கிறிஸ்தவ படைகளின் முற்றுகைக்குள்ளானது. 2000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதிகள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையை தலைமை தாங்கி நடத்திய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன் பிற்காலத்தில் பிரதமராக தெரிவானார்.

அரபு நாடுகளை தளமமைத்திருந்த பத்துக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் அன்று முற்போக்கான, மதச்சார்பற்ற, தேசியவாதக் கொள்கையை கடைப்பிடித்தன. தேசியவாத யாசீர் அரபாத் தலைமையிலான Tahir al Hatani al Falestini (பதாஹ்), மார்க்சிய PFLP ஆகியன பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்றிருந்தன. இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான கெரில்லாப் போராட்டம் தொடர்ந்தது. மறுபக்கம் மக்கள் போராட்டமான "இன்டிபதா" இஸ்ரேலிய அரசை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்தது.

பனிப்போர் காலத்தில் ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும், அமெரிக்க வீட்டோ தடுத்தது. அப்போதெல்லாம் சோவியத் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு வழங்கியது. பனிப்போர் முடிந்த பின்னர் பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலை உருவானது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யாசீர் அரபாத்தின் இயக்கத்தை தம் பக்கம் வென்றெடுத்தனர். இஸ்ரேலோடு சமாதானமாகப் போய் சுயாட்சிப் பிரதேசத்திற்கு உடன்படுமாறு வற்புறுத்தினர். தொடர்ந்து நோர்வேயின் அனுசரணையால் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய சில விஷயங்கள்:
- பாலஸ்தீனம் இஸ்ரேலின் உள்ளே ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருக்கும்.
- இனிமேல் பாலஸ்தீன மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து இஸ்ரேல் விடுபட்டது.
- பாலஸ்தீனர்களை, பாலஸ்தீனியர் அடக்கும் நிலை உருவானது. அரபாத்தின் தலைமை இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் பிரதேச பொலிஸ் ஆகியது.
- வெளிநாடுகளில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகள் நிரந்தரமாக தாயகம் திரும்ப முடியாது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சீரழிவு ஒட்டுமொத்த மதச்சார்பற்ற தேசியவாத சக்திகளின் பின்னடைவாகியது. ஏகாதிபத்தியங்களும் அரபு நாடுகளில் எழுந்த முற்போக்கு சக்திகளை திட்டமிட்டே அழித்தன. அதற்கு பாலஸ்தீனமும் பலியாகியது. அப்போது எழுந்த வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு சக்தி கிளம்பியது.

Harakat al-Muqaama al-Islamiya (இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அல்லது "ஹமாஸ்"). மேற்குலகில் மத அடிப்படைவாதிகள் என அழைக்கப் படும் இஸ்லாமிய தேசியவாதிகள். எகிப்தில் "முஸ்லிம் சகோதரர்கள்" இயக்க அரசியலால் கவரப்பட்ட பாலஸ்தீன அகதியால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரபாத்தின் பதாவுக்கு போட்டியாக, இஸ்ரேலும் ஹமாசுக்கு ஆதரவளித்தது. அரபாத் சமாதான கூட்டாளியான பின்னர், இவர்களைத் தேவையில்லை என கழட்டி விட்டது. சிறிது காலத்தின் பின்னர் சமாதானம் எந்தத் தீர்வையும் கொண்டு வராததால், ஏமாற்றமடைந்த பாலஸ்தீன மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டது. ஒரு காலத்தில் மதச் சார்பற்ற தேசியவாதிகளாக இருந்த பாலஸ்தீனர்களை, ஹமாஸ் இஸ்லாமியவாதிகளாக மாற்றியது. ஈழத்தில் புதிதாக ஒரு "சைவத் தமிழ் தேசிய அமைப்பு" உருவானால் விளைவு எப்படியிருக்கும்? அது தான் பாலஸ்தீனத்தில் நடந்தது. பாலஸ்தீன தேசிய அடையாளம் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் ஹமாஸ் பாலஸ்தீனத்தை இஸ்லாமிய சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக்கியது.

ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, அரசியல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றது. பாலஸ்தீன பகுதி எங்கும் வறிய மக்களுக்கான இலவச மருத்துவமனைகள், இலவச பாடசாலைகள், அநாதை இல்லங்கள், நலன்புரி மையங்கள் என்பனவற்றை நடத்தி வருகின்றது. (வைத்தியத்திற்கும், கல்விக்கும் கட்டணம் அறவிடும் நாட்டில் வாழும் ஏழைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.) ஹமாசின் தர்ம காரியங்களுக்கான நிதி, சவூதி அரேபியா, மற்றும் பல வளைகுடா நாடுகளில் இருந்து வருகின்றது. வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் கிளைகளும் நிதி சேகரித்து அனுப்புகின்றன. ஹமாஸ் நிர்வகிக்கும் சமூக நலன் காப்பகங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் தெரிவாகின்றனர்.

ஹமாஸ் ஒரு பரந்த அரசியல் அமைப்பு. அதன் இராணுவப் பிரிவான "காசிம் பிரிகேட்". அதன் உறுப்பினர்கள், முன்னைநாள் பாலஸ்தீன போராளிகளைப் போன்று கெரில்லா இராணுவப் பயிற்சி பெற்றவர்களல்ல. (இந்த நிலை பிற்காலத்தில் மாறியது.) சிறிது மனோதைரியம், தியாக சிந்தை, நடைமுறை தந்திரம், இவை இருந்தால் போதும். ஒருவரை தற்கொலைக் குண்டுதாரியாக மாற்றிவிடலாம். தற்கொலைக் குண்டு தத்துவத்திற்கும், இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை. இஸ்ரேல் மீதான வெறுப்புணர்வே பலரை தற்கொலைப் போராளியாக்குகிறது. பலம் வாய்ந்த இராணுவத்திற்கு எதிரான, பலவீனமானவர்களின் இயலாமையின் வெளிப்பாடு அது. ஹமாசின் குண்டுவெடிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது யூத பொதுமக்கள். (இஸ்ரேலிய அரச இயந்திரத்தை நெருங்கவே முடியாது.) ஒரு காலத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பப்பட்டது. இதனால் ஜிஹாத், அல் அக்சா பிரிகேட் என்பனவும் தற்கொலைக் குண்டு தாக்குதலில் இறங்கின. "முற்றுமுழுதாக இராணுவ மயப்பட்ட இஸ்ரேலிய சமூகத்தில், கொல்லப்படுபவர் படைவீரனா, அல்லது அப்பாவியா என வேறுபடுத்த முடியாது." எனபது ஹமாசின் வாதம். அதே போல இஸ்ரேலும், "யார் பயங்கரவாதி, யார் பொது மகன், என வேறுபாடு காட்டி தாக்க முடியாது." என வாதிடுகின்றது. இஸ்ரேலிய இராணுவம், ஹமாஸ் இரண்டுமே பழிக்குபழி வாங்குவதை இராணுவ நடவடிக்கையாக கொண்டுள்ளன.

சில நேரம், இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவான மொசாட் கூட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றது. தீவிரவாத அமைப்பை சேர்ந்த உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் கார், வீடு என்பன குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன. அந்த தீவிரவாதி தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இறந்தால் கூட, அவரின் உறவினர்களை வெளியேற்றி விட்டு, வீட்டை குண்டு வைத்து தரைமட்டமாக்குவார்கள்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முதலாவது பகுதி:
போர்க்களமான புனித பூமி


(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

Wednesday, December 23, 2009

போர்க்களமான புனித பூமி
"இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே?"


"யாருக்குத் தெரியும்? அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது கண்டு வெறுத்துப் போய் சொர்க்கத்திற்கே திரும்பிப் போயிருப்பார்."


இந்த நகைச்சுவை துணுக்கு, மும்மதத்தவராலும் உரிமை கோரப்படும் புனித பூமியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது.இன்று உலகில் அனைவரது பார்வையும் மத்திய கிழக்கு பக்கம் திரும்பியுள்ளது. "மத்திய கிழக்கு" என்ற சொற்பதம் கூட இஸ்ரேலிய மையவாத அரசியலில் இருந்து பிறந்தது தான். பைபிள் காலத்தில், இஸ்ரேல் உலகின் மத்தியில் அமைந்திருப்பதாக நம்பப்பட்டது. அதிலிருந்து இஸ்ரேலின் கிழக்குப் பக்கம் "மத்திய கிழக்கு" என அழைக்கப்பட்டது. அவ்வாறு தான் இஸ்ரேலிற்கு மேற்கே இருப்பதால் ஐரோப்பா "மேற்கத்திய நாடுகள்" என அழைக்கப்பட்டது.


பைபிளில் ஆதியாகமம் கூறுவதன்படி நாம் வாழும் பூமி, கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆண்டவரால் படைக்கப்பட்டதாக யூத மத அடிப்படைவாதிகள் நம்புகின்றனர். ஆனால் அதற்கு மாறாக, கி.மு. 9000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலஸ்தீனத்தில் மனிதர் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் பல பண்டைக்கால நாகரீகங்களின் விளைநிலங்களாக இருந்தன. பைபிள், மற்றும் வரலாற்றுச் சான்றுகளில் இருந்து அங்கே பல்லின மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பினீசியர்கள், பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள் ஆகிய இனத்தவர்கள், கி.மு. 3000 ஆண்டுகளிலேயே நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தனர். இவர்களிடம் இருந்து தான், கிரேக்கர்கள் எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். சிறந்த கடலோடிகளான பினீசியர்கள், இன்றைய துனீசியா, மயோர்க்கா (ஸ்பெயின்) ஆகிய இடங்களிலும் குடியிருப்புகளை அமைத்திருந்தனர். இவர்களின் கடவுளர் "எல்" (EL), பா அல் (Baal ) பற்றி, வேண்டுமென்றே எதிர்மறையான விபரங்கள் பைபிளில் காணப்படுகின்றன.


பினீசிய, கானானிய வழித்தோன்றல்கள், இன்று நாம் காணும் லெபனானியர், அல்லது பாலஸ்தீனியர். ரோமர்களும், கிரேக்கர்களும் இவர்களை பிலிஸ்தீனியர் என்ற பொதுப் பெயரால் அழைத்தனர். இவர்கள் பிற்காலத்தில் அரேபியாவில் இருந்து வந்த முஸ்லிம் படையெடுப்புகளால், மொழியை, மதத்தை மறந்தனர். (அதற்கு முன்னர் கிரேக்கர்கள் அவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வைத்திருந்தனர்.)

கி.மு. 1225 ல், எகிப்தில் இருந்து விடுதலையாகி வந்த இஸ்ரேலிய பன்னிரண்டு குடிகளை மோசேஸ் சினாய் பாலைவனம் வரை வழிநடாத்தி வந்தார். ஆனால் அவரால் வாக்குக் கொடுத்த நிலத்தை காண்பிக்க முடியவில்லை. மோசெசின் மறைவுக்குப் பின்னர், ஆண்டவரின் உத்தரவுப்படி (?) கானான் நாட்டு மக்களை இனப்படுகொலை செய்து, அவர்களது நிலங்களை அபகரித்து, யூத குடியிருப்புகளை நிறுவிக் கொண்டனர். இவ்வாறு தான் "யிஸ்ரா எல்" (Yisra 'el ) உருவானது. (பைபிளின் பழைய ஏற்பாடு கூறும் கதை இது.) சுருங்கக் கூறின், இனவழிப்பு செய்யப்பட்ட கானான் மக்களின் சமாதிகளின் மேலே தான் இஸ்ரேல் என்ற தேசம் கட்டப்பட்டது.


பைபிளானது இஸ்ரேலியரின் வரலாற்றை, அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் நூல் என்பதால், கானானியர் பற்றி அவ்வப்போது சம்பந்தப்படும் பொது மட்டும் குறிப்பிடுகின்றது. பைபிளில் இருந்தும், புதைபொருள் ஆராய்ச்சிகளில் இருந்தும் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்; கானானியர் நகரங்களில் வாழ்ந்த காலங்களில், இஸ்ரேலியர்கள் நாடோடிகளாக இருந்துள்ளனர். கானானிய நாகரீகம் அழிந்த பின்னர் தான், புதிய இஸ்ரேலிய நாகரிகம் தோன்றியது. விக்கிர வழிபாட்டை மறுத்த இஸ்ரேலியர்கள் தமது கடவுளான "ஜாஹ்வே" க்கு "சினஹோக்" என்ற யூத ஆலயங்களை கட்டினார்கள். கடவுள் சிலை வைத்து கோயில் கட்டுவது நாடோடி கலாச்சாரத்திற்கு மாறானது. அனேகமாக இஸ்ரேலியர், கானானிய நாகரீகத்தை தமதாக்கிக் கொண்டனர். ஆரம்பக் காலங்களில் சில யூதக் குடிகள் கானானியரின் கடவுளரையும் வழிபட்டு வந்துள்ளனர். இவர்கள் "கடவுட் சொற்கேளாதோராக" தண்டிக்கப் பட்டனர். அதாவது எஞ்சிய கானானிய குடிமக்களையும் யூதர்களாக மாற்றும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

சவுல் மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட சின்னஞ்சிறிய இஸ்ரேல், டேவிட் மன்னன் காலத்தில் அகண்ட இஸ்ரேலாகியது. இது ஹீபுரு மொழி பேசுவோரின் இராச்சியமாக வரலாற்றில் அறியப்பட்டது. டேவிட் அரசனின் ஆட்சியின் பின்னர் இஸ்ரேல் சிதைவடைந்தது. அதிகாரப் போட்டியால் இரண்டாகப் பிரிந்து, வடக்கு பகுதி இஸ்ரேல் என்றும், தெற்குப் பகுதி யூதேயா என்றும் அழைக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தான் யூதர்கள் என்ற இனம் தெளிவாக அடையாளம் காணப்பட்டது. டேவிட் காலத்திற்கு முன்னர் ஹீபுரு பேசப்பட்டதாக எந்த சான்றும் இல்லை. அதற்கு முன்னர் அரமிய மொழி வழக்கில் இருந்தது. இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியும் அதுவே. ஹீபுரு, அரபு ஆகியவற்றின் மூல மொழியாக கருதப்படக் கூடிய அரமிய மொழி இன்று அழிந்து வருகின்றது.

இன்றைய நவீன யூதர்களின் பாரம்பரிய பூமி கொள்கை, பல யூத அகழ்வாராய்ச்சியாளராலேயே நவீன இஸ்ரேலில் நிலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள், யூதர்களினுடையவை எனச் சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை. பைபிள் கூறுவதன் படி, ஆசிரியர்கள் இஸ்ரேலை பலமுறை ஆக்கிரமித்தனர். அதற்குப் பின்னர் பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், எகிப்தியர்கள் என்று பல சாம்ராஜ்யங்களின் பகுதியாக இருந்தது. இதனால் ஏகாதிபத்திய ஆட்சின் கீழ் வாழ்ந்த யூதர்கள் பல நாடுகளுக்கும் பரவினார்கள். இன்று பல இந்தியர்கள் அமெரிக்கா சென்று குடியேறுவதை போல, அன்று பல யூதர்கள் பாபிலோன் சென்று குடியேறினார்கள். பைபிள் இதனை "அடிமைகளாக பிடித்துச் செல்லப்பட்டதாக" கூறி சுயபச்சாதாபம் தேடுகின்றது.

ரோமர்கள் காலத்தில் வாழ்ந்த இயேசு(கிறிஸ்து என்பது கிரேக்க பெயர்), யூத குலத்தில் பிறந்த மதச் சீர்திருத்தவாதி. பைபிளின் புதிய ஏற்பாட்டின் படி, யூதர்கள் இயேசுவின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் மரணத்தின் பின்னர் வந்த கிறிஸ்தவர்கள் யூதர் மேல் வெறுப்புக் கொண்டனர். ஐரோப்பாவில் கால் பதித்த கிறிஸ்தவர்கள் யூத எதிர்ப்பு (Anti Semitism ) கருத்துகளை விதைத்தனர். ஐரோப்பாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த யூத விரோத கலவரங்கள், ஹிட்லர் காலத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

19 ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் தேசிய அரசுகள் தோன்றின. ஐரோப்பாவில் புறக்கணிக்கப்பட்ட சமுதாயமாக வாழ்ந்த, (ஹீபுரு மொழி பேசாத) யூதர்களும் தேசிய அரசுக் கொள்கையால் கவரப்பட்டனர். யூதருக்கான தாயகத்தை குறிக்கோளாக கொண்ட சியோனிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களது தத்துவாசிரியரான தியோடர் ஹெர்சல் எழுதிய Der Judenstaat (யூத தேசம்) தேசியவாதத்தின் அடிப்படை நூலாகியது. இந்த நவீன யூத தேசியவாதிகள் ஆரம்பத்தில் இருந்து ஒரே தன்மையுடையோராய் காணப்படவில்லை. ஹீபுரு மொழி யாருமே பேசாத, இறந்த மொழியாக இருந்தது. மத்திய அல்லது கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மன் கலந்த "யிட்டிஷ்" மொழி பேசினார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர்கள் என்பதால் சோஷலிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். அதற்கு மாறாக மேற்கைரோப்பா, அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்கள் முதலாளித்துவவாதிகளாக இருந்தனர். அவர்களில் பலர் பெரும் செல்வந்தர்கள், அல்லது வியாபாரிகள். அதனால் சியோனிச இயக்கத்திற்கு அவர்கள் நிதி வழங்கினார்கள்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில், பல யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறினார்கள். அவர்களின் "தாயகமான" இஸ்ரேல் யாருமே வசிக்காத பாலைவனமாக இருக்கவில்லை. அரபு பேசும் மக்களால் நிறைந்திருந்தது. யூத குடியேறிகள் அரபு நிலப்பிரபுக்களிடம் நிலம் வாங்கி குடியிருப்புகளை அமைத்தனர். அந்த நிலங்களில் கம்யூனிச பொருளாதார அடிப்படையில் அமைந்த கூட்டுறவுப் பண்ணைகளை (Kibbutz ) அமைத்தனர். அந்நேரம் அயலில் இருந்த பாலஸ்தீன கிராமங்களுடன் நல்லுறவு நிலவியது. பாலஸ்தீனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த அரபு மொழி பேசும் யூதர்களும் இருந்தனர்.

முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த துருக்கியரிடம் இருந்து பாலஸ்தீனம் ஆங்கிலேயரிடம் கைமாறியது. பிரிட்டிஷ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இருந்த பாலஸ்தீனத்திலும் விடுதலைப்போர் தொடங்கியது. ஆரம்பத்தில் அரபுக்களும், யூதர்களும் தோளோடு தோள் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள். தமது ஆட்சியை எதிர்த்தவர்களை பிரிட்டிஷார் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தினார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத் தலைவரான பென்கூரியன், பின்னாளில் சுதந்திர இஸ்ரேலின் முதல் பிரதமரானார்.


(தொடரும்)பகுதி 2: தனி நாடு கண்ட யூதரும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்


குறிப்பு:


உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.


Monday, December 21, 2009

காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை

முன்னொரு காலத்தில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சிந்து நாட்டை ஒரு இந்து அரசன் ஆண்டுவந்தான். அவனது இராச்சியம், காந்தாரம் (இன்று: கண்டஹார்) முதல் காஷ்மீர் வரை வியாபித்திருந்தது. அதாவது தற்கால ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியும், பாகிஸ்தானையும் உள்ளடக்கியிருந்தது. ஆட்சியிலிருந்த மன்னன் ஒரு இந்துவாக இருந்த போதிலும், அந்நாட்டில் இந்துக்களும், பௌத்தர்களும் வாழ்ந்து வந்தனர். தாலிபான் இடித்த பாமியான் புத்தர் சிலைகளைப் போல, பல புத்த விகாரைகளும் நாடு முழுவதும் காணப்பட்டன. பிற்காலத்தில் அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்பு காரணமாக, இஸ்லாமிய மதத்தை தழுவிய மக்கள் புத்த மடாலயங்களை மசூதிகளாக்கிக் கொண்டனர்.

அரேபியாவில் இருந்து கிளம்பிய முஸ்லிம் படைகள், ஈராக், ஈரான் வரை எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற முடிந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான், அல்லது சிந்து மீதான படையெடுப்பு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சரித்திர சான்றுகளின் படி மத்திய ஆசிய பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரேபியருக்கு ஒரு நூற்றாண்டு எடுத்தது. ஈராக்கில் இருந்து படை திரட்டி, ஏழு முறை முயற்சித்தும் கடும் எதிர்ப்பு காரணமாக பின்வாங்க வேண்டியிருந்தது. ஆப்கானிய பழங்குடியின படைகள், இஸ்லாமிய அரேபியருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தன. பொறுமையிழந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி (கலீபா) தனது படைகளுக்கு ஒரு இறுதி சந்தர்ப்பம் கொடுத்தார். வெற்றி அல்லது வீரமரணம். எட்டாவது தடவையாகவும் முஸ்லிம் படைகள் சிந்து நாட்டை முற்றுகையிட்டன. இம்முறை எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைத்தது. சிந்து நாட்டு ஏழைப் பிராமணன் ஒருவன் காட்டிக் கொடுக்க முன்வந்தான். படைத்தளபதியிடம் அந்த இரகசியத்தை சொன்னான். தலைநகரின் மத்தியில் இருக்கும் தெய்வீக சக்தி பொருந்திய கொடிமரம் ஒன்றிருக்கிறது. அது நிலைத்திருக்கும் வரை படையினர் தீரத்துடன் போரிடுவார்கள். இதைக் கேட்ட முஸ்லிம் படைகள் தாமதிக்கவில்லை. கொடிமரத்தை தாக்கி வீழ்த்தினார்கள். சிந்து வீரர்கள் சரணடைந்தனர்.

மேலே கூறப்பட்ட கதை எவ்வளவு தூரம் உண்மை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தற்கால பாகிஸ்தான் அமைந்திருக்கும் பிரதேசத்தை பற்றிய பண்டைய கதை இது ஒன்று தான். எது எப்படி இருந்த போதிலும், இன்று நாம் காணும் பாகிஸ்தான் ஒரு 20 ம் நூற்றாண்டின் உருவாக்கம். ஔ காலத்தில் (சில தென்னிந்திய பகுதிகள் நீங்கலாக) இந்தியா முழுவதையும் ஆட்சி செய்த முஸ்லிம் சுல்தான்களிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிய பிரதேசங்கள், இன்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என மூன்று தேசங்களாக காட்சியளிக்கின்றன.

சிந்து மீதான முஸ்லிம்களின் படையெடுப்பு சம்பந்தமான கதை ஒரு சரித்திர உண்மையை தெரிவிக்கின்றது. பாரசீகப் படையெடுப்பின் பின்னரே இந்தியாவில் இஸ்லாம் பரவியது. அன்று சிந்து நாட்டை ஆட்சி செய்த முஸ்லிம்கள், சிந்து நதிக்கு அக்கரையில் இருந்த பிரதேசங்களை "ஹிந்து" அல்லது "ஹிந்துஸ்தான்" என அழைத்தனர். அந்த இடுகுறிப் பெயரில் இருந்து தோன்றியது தான் இந்து மதம். இது பற்றிய குறிப்புகளை 14 ம் நூற்றாண்டின் யாத்திரீகர் இபுன் பதூதாவின் நூலில் காணக்கிடைக்கின்றன.

அரேபியரால் இஸ்லாமியரான மொங்கோலிய இனத்தவரான மொகலாயர்கள் இந்திய உப கண்டத்தை கைப்பற்றி ஆட்சி நடத்தினர். மொகலாயர் காலத்தில் டெல்லி தலைநகராகியது. அரபி, பார்சியுடன், பிரதேச மொழிகள் கலந்து உருது என்ற புதிய மொழி தோன்றியது. அதே மொழி சம்ஸ்கிருத சொற்களை சேர்த்துக் கொண்டதால் ஹிந்தியானது. 500 ஆண்டுகளாக நீடித்த முகலாய சாம்ராஜ்யம் ஆங்கிலேயர் படையெடுப்புகளால் முடிவுக்கு வந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரிட்டிஷ் இந்தியா என்ற ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன்தார்களும், மகாராஜாக்களும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். மொகலாயரின் வரி அறவிடுவோரான ஜமீன்தார்களும், இந்து நிலப்பிரபுக்களான மகாராஜாக்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசுகளை வைத்திருந்தனர். அவ்வாறான ஒரு பஞ்சாபிய மகாராஜாவின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசம் காஷ்மீர். பிரிட்டிஷ் இந்தியாவில் சிற்றரசுகள் மட்டுமல்ல, மணிப்பூர் போன்ற பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களும் அடங்கியிருந்தன. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்ற போது பெரும் குழப்பத்தை விட்டுச் சென்றனர். நவீன இந்தியாவின் அடிக்கல் நாட்டப்பட்ட நேரம் அது.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் கல்வி, நிர்வாகக் கொள்கைகளினால் படித்த மத்தியதர வர்க்கம் ஒன்று உருவாகியிருந்தது. இங்கிலாந்து சென்று படிக்கும் வாய்ப்பு பெற்ற இவர்கள், அங்கு தோன்றிய லிபரல் சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். லிபரல்-தேசியவாத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்தது. இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனிகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க வேண்டிய தருணம் வந்து விட்டதை அறிந்தது. சுதந்திர இந்தியாவுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டுமென்பது பிரிட்டிஷாரின் அவா. இந்நேரம் காங்கிரஸ் கட்சியினுள் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீக் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமது முஸ்லீம் தேசத்திற்கு பாகிஸ்தான் எனப் பெயரிட்டனர்.

"தூய்மையான நாடு" என அழைக்கப்படும் பாகிஸ்தான் ஆங்கிலேயர் கற்பித்த லிபரல் சித்தாந்தம், பாராளுமன்ற ஜனநாயகம் ஆகிய அரசியல் அடிப்படையை கொண்டிருந்தது. இவ்வளவிற்கும் நவீன உலக வரலாற்றின் முதலாவது இஸ்லாமியக் குடியரசு அது தான். மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட மக்களை மதம் மட்டுமே ஒன்றிணைத்தது. பஞ்சாப், சிந்தி, பலுச்சி, பதானி, வங்காளி ஆகிய ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மொழிகளைப் பேசும் மக்கள், உருது என்ற புதிய மொழியை கற்றுக்கொண்டனர். அதுவே தேசிய மொழியாகியது. அதிசயமாக இஸ்ரேலும், பாகிஸ்தானும் இந்த விடயத்தில் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. நவீன இஸ்ரேலின் குடிமக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். யூத மதம் மட்டுமே அவர்களை ஒன்றிணைத்த சக்தி. இஸ்ரேலின் உருவாக்கத்தின் பின்னர் தான் ஹீப்ரூ மொழியை கற்று, தேசிய மொழியாக்கினர்.

பாகிஸ்தான் பிரிவினை காரமாக இடையில் நின்ற காஷ்மீர் வெகுவாக பாதிக்கப்பட்டது. காஷ்மீரை ஆண்ட இந்து மகாராஜா ஒன்றில் பாகிஸ்தானை, அல்லது இந்தியாவை சேர வேண்டிய இக்கட்டட்டான நிலை. பள்ளத்தாக்கு பகுதியில் முஸ்லிம்களும், ஜம்முவில் பண்டித் என்ற காஷ்மீரி பிராமணர்களும், லடாக் பகுதியில் தீபெத்திய பௌத்தர்களும் என மூன்று தேசிய இனங்கள் காஷ்மீர் பிரஜைகளாக இருந்தனர். இதே நேரம் மகாராஜாவுக்கு எதிரான, காஷ்மீர் விடுதலைப் போர் ஆரம்பமாகியது. காஷ்மீர் என்ற சுதந்திர நாட்டிற்கான விடுதலைப்போரை முன்னின்று நடத்தியவர்கள் இந்துக்கள்! ஏனெனில் அரச நிர்வாகப் பதவி வகித்த மத்தியதர வர்க்கம் அவர்களாக இருந்தனர். இது இன்று பலருக்கு தெரியாத சேதி.

மகாராஜா அதிக காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. காஷ்மீரை கொள்ளையடிப்பதற்கு பாகிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்தனர் பத்தானி பழங்குடியினர். இவர்கள் ஊர் ஊராக கொள்ளையடித்துக் கொண்டு திரிந்த வேளை மகாராஜா இந்திய இராணுவத்திடம் உதவி கோரினார். இந்தியப்படை காஷ்மீர் வந்திறங்கியது. நிலைமை மோசமடைவதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான் இராணுவம் பத்தானிகள் பிடித்த இடங்களை தன்வசமாக்கியது. முதன்முறையாக இந்திய, பாகிஸ்தானிய படைகள் நேருக்குநேர் மோதலுக்கு தயாராக நின்றன. இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் விளைவாக காஷ்மீர் இரண்டு துண்டுகளாகியது.
இதற்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பகை முரண்பாடுகள் தீவிரமடைந்தன. எழுபதுகளில் இந்திய விமானக் கடத்தலில் ஆரம்பித்த முறுகல் நிலை காரணமாக, கிழக்கு பாகிஸ்தான் உள்நாட்டு யுத்தத்தில் இந்திய இராணுவம் தலையிட்டது. பங்களாதேஷ் என்ற புதிய தேசத்தின் உருவாக்கத்துடன் முடிந்தது. இந்தியாவின் இராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. காஷ்மீர் எல்லை இன்று, உலகில் மிக அதிக அளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ள எல்லைக் கோடாக மாறியுள்ளது.

-------------------------------------------------------------------------------------
இந்திய - பாகிஸ்தான் பிரச்சினையில் உளவுத்துறைகளின் பங்கு:

ஐ.எஸ்.ஐ. (Inter Service Intelligence)

1948 ம் ஆண்டு, பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பாகிஸ்தான் தேசப் பாதுகாப்பை பொறுப்பெடுத்துள்ளது மட்டுமல்ல, அரசியல் கட்சிகள், குழுக்கள், வெளிநாட்டவர்கள் என்று எல்லோரையும் கண்காணிக்கின்றது. தேசத்தின் பிரதமருக்கோ, பாராளுமன்றத்திற்கோ அல்லது இராணுவத் தலைமையகத்திற்கோ பதில் சொல்லக் கடமைப் பட்டதல்ல. இந்த உளவு நிறுவனமே ஒரு தனி அரசாங்கம். முன்பு ஒரு முறை பிரதமராகவிருந்த சுல்பிகார் அலி பூட்டோ, ஐ.எஸ்.ஐ. யின் அதிகாரங்களை குறைக்க விரும்பினார். அதற்குப் போட்டியாக Federal Security Force (FSF ) என்ற அமைப்பை ஸ்தாபித்தார். ஆனால் ஐ.எஸ்.ஐ. தனது பலத்தைக் காட்டியது. சியா உல் ஹக் திடீர் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். பூட்டோவை பிடித்து தூக்கிலிட்டார். FSF கலைக்கப்பட்டது.

பனிப்போர் காலத்தில் அமேரிக்கா பாகிஸ்தானை "முன்னணி காவல் அரண்" என அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஐ.எஸ்.ஐ. போதைமருந்து கடத்தியது. போதைவஸ்து கடத்தலினால் கிடைத்த வருமானம் ஆப்கான், காஷ்மீர் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியளிக்க பயன்பட்டது. அனேகமாக எல்லா காஷ்மீர் இயக்கங்களும் பாகிஸ்தான் உதவியை நாடின. ஆனால் அதற்குள்ளும் இஸ்லாமியவாத, அல்லது பாகிஸ்தானுக்கு விசுவாசமான ஆயுதக் குழுக்கள் விசேஷமாக கவனிக்கப்பட்டன. ஐ.எஸ்.ஐ. பஞ்சாப் காலிஸ்தான் குழுக்களும் உதவியளித்தது. இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களின் தீவிரவாதக் குழுக்களும் ஐ.எஸ்.ஐ.இடம் உதவி பெறுகின்றன. இவற்றில் சில கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் குழுக்கள். இவர்களுக்காக பூட்டான் என்ற பௌத்த நாட்டினுள் உள்ள இரகசிய முகாம்களில் ஐ.எஸ்.ஐ. பயிற்சியளித்தது.

ரா (Research and Analysis Wing)

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், நிதி ஒதுக்கீடு, செலவுகள் பற்றிய விபரங்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் வேவு பார்த்தல், பிரச்சாரம் செய்தல் என்பன முக்கிய பணிகள். சுமார் 30000 ரா உளவாளிகள் பாகிஸ்தானிற்குள் மட்டும் செயல்படுவதாக கருதப்படுகின்றது. சிந்தி, பலுசிஸ்தான் மாகாணங்களில் பிரிவினைவாத சக்திகளுக்கு உதவி வருகின்றது. உருது மொழியை தாய்மொழியாக கொண்ட முஜாகிர்களின் கிளர்ச்சியிலும் பங்கெடுத்துள்ளது. தாலிபான் தோன்றும் வரை, இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் ரா இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வந்தது.

Sunday, December 20, 2009

RACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி

"எந்த ஒரு மனிதனும் இன வெறியனாக பிறப்பதில்லை. பெற்றோரும், சுற்றியுள்ள சமூகமுமே ஒரு பிள்ளையின் மனதில் இனவெறிக் கருத்துகளை பதிக்கின்றனர்." - முன்னாள் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அனன்.

2001 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐக்கிய நாடுகள் சபையால் கூட்டப்பட்ட "இனவெறிக்கு எதிரான உச்சி மகாநாடு" உலகளவில் சலசலப்பை தோற்றுவித்தது. 166 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மகாநாட்டை உலக வல்லரசான அமெரிக்கா புறக்கணித்தது. இறுதி நேரத்தில் தாழ்நிலை அரச பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து, அவர் அங்கே வாயே திறக்கக் கூடாது என்று கூறி விட்டு ஒதுங்கி விட்டது. அமெரிக்கா மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் மகாநாடு தர்மசங்கடமான நிலையை தோற்றுவித்தது. தென் ஆபிரிக்காவில் தமக்கு எதிரான காற்று வீசும் என உணர்ந்து பின் வாங்கி விட்டனர்.

இந்த மகாநாடு, அமெரிக்காவையும், இஸ்ரேலையும், இந்தியாவையும் எதிரணியில் தள்ளி விட்டது. இந்த மூன்று நாடுகளையும் ஒன்று சேர்க்கும் புள்ளி என்ன? நிறவெறியில் வளர்ந்தது அமெரிக்கா. இன/மத வெறியில் வளர்ந்தது இஸ்ரேல். சாதிவெறியில் வளர்ந்தது இந்தியா. அமெரிக்கா கலந்து கொள்ளாமைக்கு இன்னொரு காரணமும் கூட சேர்ந்து கொண்டது. அமெரிக்க பொருளாதார வளம் ஆப்பிரிக்க அடிமைகளால் கட்டி எழுப்பப்பட்டது. அடிமைகளை பயன்படுத்தியதற்காக கடமைப்பட்டுள்ள அமெரிக்கா இன்று வரை மன்னிப்புக் கூட கேட்கவில்லை. இந்நிலையில் அதற்காக நஷ்டஈடு வழங்க வேண்டுமென ஆப்பிரிக்க நாடுகள் கோரி வருகின்றன.

ஆப்பிரிக்க அடிமைகளின் நூறாண்டு கால உழைப்பில் பணக்காரனான அமெரிக்கா, அதற்காக நஷ்டஈடு வழங்க இன்றுவரை தயாராக இல்லை. அமெரிக்கா மட்டுமல்ல, காலனிய காலகட்டத்தில் அடிமை வியாபாராததாலும், காலனிய நாடுகளை சுரண்டியதாலும், செல்வந்த நாடுகளாக மாறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் நஷ்டஈடு பற்றிய பேச்சை எடுத்தால் ஓடி விடுகின்றன. நஷ்டஈடு விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பிரஸ்தாபித்த ஆப்பிரிக்க நாடுகள், தமது வாதத்தை நியாயப்படுத்த, நடைமுறையில் இருக்கும் "யூத நஷ்டஈடு" விவகாரத்தை எடுத்துக்காட்டின. ஜெர்மனியில் நாசிச ஆட்சிக் காலத்தில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட யூதர்களுக்காகவும், வதை முகாம்களில் கட்டாயவேலை வாங்கியதற்காகவும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றன. இஸ்ரேல் அரசுக்கு கிடைத்துவரும் வருடாந்த வருமானத்தில் பெரும்பங்கு இந்த தொகையாகும்.

ஒவ்வொரு இனமும் தான் பாதிக்கப்படும் பொது மட்டும் இனவெறி எதிர்ப்பு கூச்சல் போடுவதும், அதே இனம் பிறிதொரு இனத்தை அடக்குவதை தனது உரிமை என நியாயப்படுத்துவதும் உலகில் நடப்பது தான். நாசிச அடக்குமுறையில் இருந்து விடுபட்டு, தமக்கென இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய யூதர்கள், அந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீன அரபு மக்களை அடித்து விரட்டி, தற்போது ஒரு சிறுபான்மை இனமாக மாற்றிவிட்டனர். அம்மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதை ஜனநாயகம் என்கின்றனர். எத்தனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்தாலும், வீடு திரும்ப முடியாத பாலஸ்தீன அகதிகள். இலட்சக்கணக்கில் அயல்நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் 60 வருடங்களாக அல்லலுறுகின்றனர். இஸ்ரேலினுள் வாழும் பாலஸ்தீனர்கள், சரளமாக ஹீப்ரூ மொழி பேசிய போதிலும் இரண்டாந்தரப் பிரஜையாக நடத்தப் படுகின்றனர். அதே நேரம் முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து வந்து குடியேறும், ஹீபுரு மொழியோ, யூத மத அனுஷ்டானங்களோ அறியாத யூதர்களுக்கு இலகுவில் இஸ்ரேலிய பிரஜாவுரிமை கிடைக்கின்றது.

இவற்றை தென் ஆப்பிரிக்காவில் முன்பு நிலவிய அப்பார்ட்ஹைட் (Apartheid ) நிறவெறி ஆட்சி முறையுடன் ஒப்பிட்டு, பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையையும் கண்டித்த அரசுசாரா நிறுவனங்களின் டர்பன் மகாநாட்டு அறிக்கை இஸ்ரேலையும், அமெரிக்காவையும் உலுக்கி விட்டது. யூகோஸ்லேவியா மற்றும் ஈராக் மீதான மோதல்களின் போது வாயில் வந்த படி பேசிய அமெரிக்கா, தனது நண்பனான இஸ்ரேலை விமர்சிப்பது என்றால் மட்டும் "பொருத்தமான வார்த்தைகளை" பாவிக்கும் படி வலியுறுத்தி வருகின்றது. இதுவரை காலமும் வழக்கில் இருந்த சொற்கள் பல யார் யாருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அர்த்தம் கற்பிக்கப்பட்டன.

துருக்கியில் கமால் பாஷாவின் லிபரல் பாசிஸ்ட்கள் ஆர்மேனிய மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை உலகம் நினைவுகூர்வதில்லை. ஆனால் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிகளின் யூத மக்கள் படுகொலை ஆண்டுதோறும் தவறாமல் நினைவுகூரப்படுகின்றது. கம்போடியாவில் பொல்பொட் மில்லியன் மக்களை இனப்படுகொலை செய்ததை விசாரிக்க நீதி மன்றம் அமைக்கும் ஐ.நா.சபை, இந்தோனேசியாவில் சுகார்ட்டோ நடத்திய படுகொலைகளை பற்றி விசாரிப்பதில்லை. கம்யூனிய எதிர்ப்பு என்ற பெயரில் சுகார்ட்டோ லட்சக்கணக்கான இந்தோனேசிய மக்களை கொன்று குவித்தமை இனப்படுகொலை இல்லையாம், அது "ஜனநாயக மீட்பு" என்று விளக்கமளிக்கின்றனர்.

கொசோவோ மக்களின் போராட்டத்தை நசுக்கிய காலஞ்சென்ற செர்பிய ஜனாதிபதி மிலோசொவிச்சை இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரித்தனர். மறுபக்கம் லெபனான் படையெடுப்பின் போது, பெய்ரூட் நகரில் 2000 பாலஸ்தீன அகதிகளை கொன்ற இஸ்ரேலிய படைத்தளபதி ஷரோன் பின்னர் பிரதமராகி அமெரிக்காவிற்கும் சென்று வந்தார். அவரை யாரும் இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து விசாரிக்கவில்லை. இங்கே ஒரு நடைமுறை தத்துவத்தை மறக்கக் கூடாது. எல்லோரும் தான் கொலை செய்கிறார்கள். ஆனால் கொலை செய்தவர்கள் எதிரியா, நண்பனா என்பதைப் பொறுத்தே நீதி வழங்கப்படுகின்றது.

டர்பன் மகாநாட்டில் எந்த சொற்களை யாருக்கு பாவிப்பது என்று மயிர்பிளக்கும் விவாதம் நடந்தது. இறுதித்தீர்மானத்தில் எந்த சொற்களை தவிர்க்க வேண்டும் என்று சர்ச்சை எழுந்தது. வெறும் சொற்கள் பலரை அச்சமடைய வைப்பதன் காரணம், அவற்றின் எதிர்கால விளைவுகளையும் கருதித்தான். "நடந்தவற்றை செய்தியாக தரும்" மக்கள் தொடர்பு சாதனங்கள், உண்மையில் அரச கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்யும் பிரச்சார சாதனங்களாகவே செயற்பட்டன. ஆங்கிலத்தில் "Racism " என்றழைக்கப்படும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இல்லை. "நிறவெறி" அல்லது "இனவெறி" என்று இடம், பொருள் கருதி பயன்படுத்தப் படுகின்றது. இதனால் தான் "சாதிவெறி" Racism அல்ல என்று இந்தியா வாதிட்டது.

இன்றும் பலர் Racism என்றால் அது நிறவெறியைக் குறிக்கும் என கருதுகின்றனர். இந்தக் கற்பிதம் உண்மையில் மேற்குலக நாடுகளில் இலகுவில் அறியப்படும் கருப்பு-வெள்ளை வேற்றுமை பற்றி கூறுகின்றது. மேற்குலக நாடுகளில் சூழலுக்கேற்ப பயன்படுத்திய அந்த சொல்லை தமிழில் அப்படியே இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். "மேற்குலக சூழலுக்கேற்ப" என்பதில் அர்த்தம் உண்டு. ஐரோப்பிய இனங்களுக்கு இடையில் எத்தனை வேறுபாடுகள், பகை முரண்பாடுகள் இருந்த போதிலும், வெள்ளையினம் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. அமெரிக்க ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் மூதாதையர் பல்வேறு ஐரோப்பிய இனங்களை சேர்ந்தவர்கள். தோல் நிறம் காரணமாகவும், அடிமைகளின் சந்ததி என்பதாலும் கருப்பர்களை இலகுவில் பாகுபடுத்தி, அதிகார பீடத்தை நெருங்க விடாமல் தடுக்கின்றனர். (ஒபாமா போன்றவர்கள் விதிவிலக்குகள். வேறொரு நாடாக இருந்தால் அதிகாரத்திற்கு சேவை செய்யும் இனத்துரோகிகள் என தூற்றப்பட்டிருப்பர்.)

ஆகவே Racism என்பதை எப்படி வரையறுப்பது? இரண்டாம் உலகயுத்ததிற்கு பின்பே Racism என்ற சொல் உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இதன் அர்த்தம் அதற்கு முன்னர் நிற/இனவெறி இருக்கவில்லை என்பதல்ல. நவீன உலகம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல மாற்றங்களை கண்டது. மேலும் எப்போதும் வெல்பவர்கள் அகராதியை நிரப்புகிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் "பந்தவம்" அல்லது "இனம்" (Race ) என்ற அடிப்படையை வைத்து மக்களை வேறுபடுத்தினான். நாசிச சித்தாந்தம் ஏற்கனவே ஐரோப்பியர் மனதில் இருந்த வெள்ளையர் இனம் உலகில் சிறந்தது என்ற மேலாதிக்க உணர்வின் மேல் எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்திய ஐரோப்பியர்கள் கருப்பர்களை மனிதர்களாக கருதவில்லை. இத்தகைய கருத்தியல்களுடன் யூத மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ மதத்தின் காழ்ப்புணர்ச்சியையும் சேர்த்து நிறுவனமயப்படுத்தியத்தில் ஹிட்லருக்கு பெரும் பங்குண்டு.

ஐரோப்பிய காலனிகள் எங்கும் நிற ரீதியிலான பாகுபாடு நிலவியது. கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும் ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இழிவுபடுத்தப் பட்டனர். இதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் ஹிட்லர் மீது பழி போட்டு விட்டு தப்பி விட முடியாது. பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது கடந்தகால நிற/இனவாத ஒடுக்குமுறையை மறைத்துக் கொண்டு, நாசிகளை மட்டும் இனவெறியர்களாக காட்டுகின்றனர். எது எப்படி இருந்த போதிலும் நவீன சரித்திரவியலாளரும், அரசியல்வாதிகளும், சமூக விஞ்ஞானிகளும் ஹிட்லர் காலத்தில் இருந்து தான் Racism என்ற சொல்லின் பயன்பாட்டை ஆரம்பிக்கின்றனர்.

இங்கே கூர்ந்து நோக்கினால் இன்னொரு விஷயம் தெளிவுபடும். ஹிட்லரின் இன ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள் வெண்ணிறத் தோலுடைய யூதர்கள். அவர்கள் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தாம் வாழ்ந்த நாட்டு மொழிகளையே தாய்மொழியாக கொண்டிருந்தனர். மேலும் ஐரோப்பிய யூதர்களை, பிற ஐரோப்பிய மக்களிடம் இருந்து பிரித்தறிய முடியாது. வெள்ளையின யூதர்கள் மட்டுமல்ல, வெள்ளையின ஸ்லாவிய மக்களும் (ரஷ்யர், செர்பியர்) நாசிச இனவெறிக் கொள்கைக்கு பலியானார்கள். ஆகவே Racism என்பது "நிற"வெறியை மட்டுமே குறிக்கும் எனக் கருதுவது தவறானது.

இதுவரை காலமும் பலரால் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மை ஒன்றுண்டு. ஹிட்லரின் ஆரிய சித்தாந்தத்திற்கும், இந்திய (மற்றும் ஈரானிய) ஆரியத்திற்கும் இடையிலான தொடர்பு தான் அது. ஆரியனிசமும், ஸ்வாஸ்திகா சின்னமும் ஹிட்லரின் மூளையில் உதித்த சிந்தனை அல்ல. இந்தியாவில் "தெயோசோபி" அமைப்பை ஸ்தாபித்த அன்னி பெசன்ட் அம்மையார் ஹிட்லர் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய கருத்துகளை கொண்டிருந்தார். ஹிட்லருக்கு ஆரியனிசத்தை கற்பித்த அமைப்பு, இன்றும் சென்னை நகரில் அடையார் பகுதியில் இயங்கி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் இத்தாலியில் ஆட்சிக்கு வந்த பாசிச முசோலினி பண்டைய ரோமர்களின் சின்னங்களுக்கு புத்துயிர் கொடுத்தான். அதே போல ஹிட்லரும் வெள்ளையினத்தவரின் மூதாதையர் மத்திய ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆரியர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தான். மத்திய ஆசியாவில் காணப்பட்ட (இன்று இந்துக்களால் பயன்படுத்தப்படும்) ஸ்வாஸ்திகா சின்னத்தை நாசிச அமைப்பின் சின்னமாக்கினான்.

சரித்திர ஆசிரியர்கள், ஐரோப்பிய இனத்தவர்களினதும், வட-இந்தியர்களினதும் முன்னோர்கள் ஆரியர்களே என்றும், அதற்கு ஆதாரமாக மொழியியல் ஒற்றுமைகளையும் எடுத்துக் காட்டுகின்றனர். "திபெத்தில் ஏழு வருடங்கள்" என்ற அமெரிக்க திரைப்படம் வெளியானது. சரித்திர சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைக்கதை அது. ஒரு சாதாரண சாகசக்காரனாக திபெத்தினுள் நுழையும் கதாநாயகனை பற்றி கூறுகிறது திரைப்படம். கதாநாயகன் நாசிக்கட்சி உறுப்பினர் என்பதும், ஹிட்லரின் உத்தரவின் பேரில் ஆரிய இனத்தின் தோற்றம் பற்றி ஆராய திபெத்திற்கு அனுப்பபட்டவன் என்பதையும் அந்த திரைப்படம் சொல்லாமல் மறைத்து விட்டது. திபெத்திய பௌத்தம் பல இந்து மதக் கூறுகளை கொண்டுள்ளது. ஸ்வாஸ்திகா சின்னமும் அவற்றில் ஒன்று. இந்து மதத்தினதும், திபெத்திய பெளத்த மதத்தினதும் மூலம் ஒன்றாக இருக்க வேண்டும். இந்துக்கள் சிவபெருமானின் வதிவிடமாக நம்பும் கைலாச மலை திபெத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள சாதியமைப்பு ஆதிகால வர்ணாச்சிரம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆரியரின் வரலாற்றைக் கூறும் வேதமான ரிக்வேதம் சாதிகளைப் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆனால் வர்ணங்கள் பற்றியும், அவற்றிற்கு இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்தும் பேசுகின்றது. மேலும் ஆரியக் குழுக்களின் தலைவன் இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட கருநிற தாசர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அடிமைகள் எனப் பொருள்படும் "தாசர்கள்" இன்றைய தாழ்த்தப்பட்ட தலித் சாதியினராக கருத இடமுண்டு. வர்ணம் என்பது நிறம் என்று கருதிக் கொள்பவர்கள், அது நிறவெறி என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். சாதியமும், நாசிசமும் சமூக ஏற்றத்தாழ்வு நியாயம் எனக் கூறுகின்றன. சாதிகளுக்கு இடையிலான கலப்புமணம் தடைசெயயப்பட்டதைப் போல, தூய ஆரிய இனம் பற்றி பேசிய நாசிசம் வேற்றினக்கலப்பை குற்றமாகப் பார்த்தது. நாசிகளின் காலத்தில் யூதர்களும், ஜிப்சிகளும் அசுத்தமானவர்கள், தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டனர். இத்தகைய சிந்தனை இன்றும் கூட இந்திய உயர்சாதியினர் மத்தியில் உள்ளது.

டர்பன் மகாநாட்டில் சாதிப்பிரச்சினை இந்தியாவில் இல்லை என்று பூசி மெழுக இந்திய அரசு பகீரதப் பிரயத்தனம் எடுத்தது. அப்படியே இருந்தாலும் சாதியத்தை Racism என வரையறுக்க முடியாது என வாதிட்டது. ஆயினும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசின் கூற்றை மறுதலித்தன. மகாநாட்டில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தின் சில பகுதிகள் இவை:

- பாகுபடுத்தும் வடிவமான சாதி அமைப்பு சரித்திர ரீதியாக சமூகங்களை பிளவு படுத்தி உள்ளது. தீண்டாமை முறையானது மனித உரிமைகளை மீறவும், வன்முறைகளை தூண்டவும் வழி வகுக்கின்றது.
- மனிதத்திற்கு விரோதமான சாதிப்பாகுபாடு, மதத்தாலும், கலாச்சாரத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட பொய்யான சித்தாந்தம் மீது கட்டப்பட்டுள்ளது. தென் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் வாழும் கோடிக்கணக்கான தாழத்தப்பட்ட மக்களை இது பாதிக்கின்றது.
- தூய்மையற்றவர்கள் என்று சொல்லி ஒதுக்கும் தீண்டாமை முறையானது, அம்மக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதுடன், கீழ்த்தரமான வேலைகளை செய்யுமாறு பணிக்கப்படுகின்றனர்.
- தலித் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் போதெல்லாம் அவர்கள் மீது சொத்துகளை அழித்தல், பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"இனி" (அக்டோபர் 09 ) சிற்றிதழில் பிரசுரமாகியது.