Sunday, November 29, 2015

IDFA : ஆம்ஸ்டர்டாம் ஆவணப் பட விழாவில் ஆர்வத்தை தூண்டும் படங்கள்


நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரில், நவம்பர் 2015, சர்வதேச ஆவணப் படங்களின் திரைப்பட விழா (IDFA) நடைபெற்றது. அதில் நான் கண்டுகளித்த, மூன்று திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.
The Black Panthers: Vanguard of the Revolution

அமெரிக்காவில் அறுபதுகளில் இயங்கிய கருப்பின மக்களின் விடுதலை இயக்கமான கருஞ் சிறுத்தைகள் (Black Panthers) பற்றிய ஆவணப் படம்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் சம உரிமைகள் கொடுக்கப்படாமல் ஒடுக்கப் பட்ட காலத்தில் தோன்றிய மாவோயிச - கம்யூனிச இயக்கம் அது. அமெரிக்க உழைக்கும் மக்களின் விடுதலையையும், முக்கியமாக கருப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக அதன் அரசியல் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. அதனால், கருப்பின மக்கள் மட்டுமல்லாது, வெள்ளையின ஏழை மக்களும் அந்த இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக இருந்த போதிலும், அதன் புரட்சிகர அரசியல் கோட்பாடுகள் அமெரிக்க அரசை அச்சுறுத்தின. ஆரம்பத்தில் அதன் உறுப்பினர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. ஆனால், அரசியல் நிர்ணய சட்டம் வழங்கிய உரிமையை பயன்படுத்தி துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

அமெரிக்க அரசு, கருஞ் சிறுத்தைகள் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்றும், கிரிமினல் கும்பல் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது. தலைவர் ஹூவி நியூட்டன் கைது செய்யப் பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு, கருப்பின- வெள்ளையின மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தினால் ஊடகங்களின் கவனம் குவிந்தது. அமெரிக்கா முழுவதும் கருஞ் சிறுத்தைகள் பிரபலமடையத் தொடங்கினார்கள். அவர்களும் ஊடகங்களின் கவனத்தைக் கவரும் வகையில் நடந்து கொண்டனர். கருஞ் சிறுத்தை உறுப்பினர் போன்று லெதர் ஜாக்கட் அணிவதும், இராணுவத் தொப்பி அணிவதும், சாதாரண இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

மக்கள் ஆதரவு பெற்ற இயக்கத்தை அழிப்பது மிகவும் கடினமானது. அதனால், கருஞ் சிறுத்தைகள் உறுப்பினர்களை மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தும் சதி மேற்கொள்ளப் பட்டது. வெள்ளை இனவெறியூட்டப் பட்ட பொலிஸ், வேண்டுமென்றே சில உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

பொலிசாரின் சீண்டுதல் காரணமாக, பதிலுக்கு கருஞ் சிறுத்தைகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினால், அந்த இயக்கத்தை அழித்து விடுவது அரசின் நோக்கம். நிலைமை ஆபத்தான கட்டத்தை அடைந்த படியால், பொது மக்கள் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைக்க அஞ்சினார்கள்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கத்தின் சர்வதேச கிளை, அல்ஜீரியாவில் இயங்கியது. அமெரிக்காவுடன் எந்த வித இராஜதந்திர உறவுமற்றிருந்த அல்ஜீரியாவில் சர்வதேச செயலகம் அமைப்பது மிகவும் இலகுவாக இருந்தது. அங்கிருந்த படியே, சீனா, வியட்நாம், வட கொரியா போன்ற மூன்றாமுலக கம்யூனிச நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Stanley Nelson உடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்காவின் சமூக வரலாற்றில், கருஞ் சிறுத்தைகள் ஏற்படுத்திய மாற்றம் முக்கியமானது என்று தெரிவித்தார். "இன்றைக்கு, இந்தத் திரைப் படத்தை பார்வையிடுவதற்காக, ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மழையையும், குளிரையும் பொருட்படுத்தாது இந்த அரங்கத்தில் கூடி இருக்கிறார்கள். கருஞ் சிறுத்தைகள் கொண்டு வந்த புரட்சி இன்னமும் மக்கள் மனதில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை அது நிரூபிக்கின்றது." என்றார்.

Driving with Selvi

தமிழ்நாட்டில் வசிக்கும், முதன்முதலாக டாக்சி ஓட்டி பிரபலமான பெண் சாரதி செல்வி பற்றி, சிலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். அவரது வாழ்க்கைக் கதை "Driving with Selvi" என்ற பெயரில் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த IDFA திரைப்பட விழாவில் அது திரையிடப் பட்ட பொழுது, பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில், செல்வியும் தனது குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த ஆவணப் படத்தை ஒரு NGO தயாரித்திருப்பதால், இடையிடையே NGO பிரச்சார வாடையும் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மற்றும் படி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக செல்வி படம் முழுவதும் பிரகாசிக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட செல்வி, சரளமாக தமிழும் பேசக் கூடியவர். அவர் தற்போது ஒரு தமிழ் வாலிபரை மறுமணம் செய்து கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

குடும்பத்தினரால் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட செல்வி, தனது கதையை சொல்லத் தொடங்குகின்றார். சிறுவயதில் தந்தையை இழந்த செல்வி, ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தாயால் கட்டாயப் படுத்தப் பட்டு திருமணம் செய்து வைக்கப் பட்டார். அதற்குப் பிறகு கணவனாக வந்தவன் தாங்க முடியாத அளவுக்கு துன்புறுத்திய படியால், கொடுமைகளை தாங்க முடியாமல் வீட்டை விட்டோடி, (இந்தப் படத்தை தயாரித்த) NGO விடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

கொடுமைக்கார கணவனுடன் வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட தன்னை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முன்வரவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். வழமையான கொடுமைகள் போதாதென்று, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுக்குமாறு சித்திரவதை செய்ததாக சொல்லி அழுகின்றார். திருமணத்திற்கு முன்னர் தன்னைப் புரிந்து கொண்ட அண்ணனும், தன்னை நடத்தை கெட்டவள் என்று சொன்னதைக் கேட்டு, இரத்த உறவுகள் மீதான நம்பிக்கை தகர்ந்து போனதை குறிப்பிடுகின்றார். அதனால் இன்று வரையில் தனது குடும்ப உறவுகளுடன் தொடர்பில்லாமல் வாழ்வதாகவும் கூறுகின்றார்.

கடந்த கால வாழ்க்கையில் கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக, எல்லா ஆண்களும் இப்படித் தான் என்ற விரக்தியில் இருந்திருக்கிறார். 15 வயதில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது, அதற்குப் பிறகு துரதிர்ஷ்டம் தொடங்கியது என்றிருந்தவருக்கு புதியதொரு துணை கிடைக்கிறது. விஜி என்ற தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபரின் காதல் கிடைத்த பின்னர், வாழ்க்கையில் தனது அதிர்ஷ்டம் ஆரம்பமானதாக கூறுகின்றார். இருவரும் மனமொத்து காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட பின்னர், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.

சிறு வயதிலேயே சொல்லொணா துன்பங்களை அனுபவித்து, தற்கொலைக்கு கூட முயற்சித்து உயிர் தப்பி விட்டார். அதற்குப் பிறகு, உலகிற்கு வாழ்ந்து காட்டுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்திருக்கிறார். அவரைப் போன்ற பல அபலைப் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் விரக்தியின் விளிம்பில் நின்ற செல்வி, தொழில் தகைமை கொண்ட சாரதியாக சாதித்துக் காட்டியதுடன், மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வது எப்படி என்பது வியப்பிற்குரிய விடயம். அதனை படத் தயாரிப்பாளரே நேரில் கேட்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் செல்வி: "வாகனம் ஓட்டும் பொழுது ஒரு பாதை கரடுமுரடானதாக இருக்கும். இன்னொரு பாதை மிருதுவாக இருக்கும். வாழ்க்கையும் அது போலத் தான். மனம் தளராமல் புதியதொரு வாழ்க்கையை அமைத்து புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்வது தான் மகிழ்ச்சியின் அடிப்படை." படம் முழுவதும் செல்வியுடன் கூடவே பயணம் செய்த பார்வையாளர்கள், படம் முடிந்த பின்னர் பலத்த கரகோஷம் செய்து ஆதரவைத் தெரிவித்தனர்.

Under the Sun

வட கொரியாவை பார்க்கும் கோணத்தில், அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, வட கொரியா "தலையில் கொம்பு முளைத்த அசுரர்களின் தேசம்". ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு "சர்க்கஸ் கூடாரம்"!

தயாரிப்பாளர் Vitaly Mansky நெறிப்படுத்தலின் கீழ், Under the Sun ஆவணப் படமானது, செக் (அல்லது ரஷ்யா) நாட்டை சேர்ந்த குழுவினரால், சுமார் ஒரு வருட காலம் வட கொரியாவில் தங்கி இருந்து படமாக்கப் பட்டுள்ளது.

பியாங்கியாங் நகரில் வாழும் Zin-mi குடும்பத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் படம் எடுக்கப் பட்டுள்ளது. அந்தக் குடும்பத்து சிறுமி தான் கதாநாயகி. அவள் பாடசாலையில் மாணவர் ஒன்றியத்தில் சேர்வது முதல் பிரமாண்டமான நடனக் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றுவது வரையில் படமாக்கியுள்ளனர். அதே மாதிரி, அவளின் பெற்றோர் வேலை செய்யும் தொழிலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.

இது ஒரு ஆவணப்படமாக இருந்தாலும், கொரிய அரசின் மேற்பார்வையின் கீழ் நடந்தாலும், சில காட்சிகள் டைரக்டர் சொன்ன படி அமைந்துள்ளது போன்று தெரிகின்றது. பல இடங்களில் டைரக்டர் முத்திரை பதித்துள்ளார். எடிட்டிங் கூட கலைநயத்துடன் பேணப் பட்டுள்ளது. அதனால் படத்தின் கதாநாயகியான கொரிய சிறுமி கூட, சில இடங்களில் டைரக்டர் சொற்படி நடித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

குறிப்பாக சிறுமி முதன் முதலில் நடனம் பழகும் பொழுது அழுவது. பாடசாலையில் முன்னாள் போர்வீரர் உரையாற்றும் நேரம் தூங்கி விழுவது போன்றவற்றை சொல்லாம். பாடசாலைக்கு சமூகமளிக்கும் முன்னாள் போர்வீரர், மணிக்கணக்காக உரையாற்றும் நேரம், அதைக் கேட்கும் பொறுமை பிள்ளைகளுக்கு இருக்காது. அந்த முன்னாள் போர்வீரர், கொரியப் போரில் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய கதையை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமிக்கு தூக்கக் கலக்கத்தில் கண்கள் செருகுகின்றன. பின்னர் சுதாகரித்துக் கொண்டு கண்களை திறக்கிறாள். இப்படி குறைந்தது பத்து நிமிடங்கள் தூக்கத்துடன் போராட்டம் நடக்கிறது. டைரக்டர் அதைப் படமாக்கியுள்ள விதம், அரங்கில் இருந்த பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.

ஐரோப்பிய மக்களின் பார்வையில் வட கொரியா ஒரு கிளுகிளுப்பூட்டும் மியூசியம் நாடு. அங்கு நடப்பன எல்லாம் நாடகத் தனமானவை. இயல்பான வாழ்க்கை அங்கே கிடையாது. படத் தயாரிப்பாளரும், அவ்வாறான ஒரு தலைப் பட்சமான ஐரோப்பிய கோணத்தில் இருந்தே படமாக்கியுள்ளார். அதனால் தான் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கண்டதற்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தொழிலகத்தில் பணி புரியும் தொழிலாளர்கள், உற்பத்தி தொடர்பாக உரையாற்றும் காட்சி ஒன்று வருகின்றது. மிகச் சிறப்பாக வேலை செய்து, அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த பெண்மணிக்கு பாராட்டுத் தெரிவித்து பூச்செண்டு வழங்குகிறார்கள். சக தொழிலாளி எப்படிப் பேச வேண்டும் என்று முகாமையாளர் முன்கூட்டியே பயிற்சி அளிக்கிறார். இந்தக் காட்சிகளுக்கும் அரங்கில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

அது மட்டுமல்ல, இறுதிக் காட்சியில் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து, கொரியப் போரில் மரணமடைந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்தில் பூச் செண்டுகளை அடுக்கி வைத்து வணங்கி விட்டு செல்கின்றனர். ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு அதுவும் நகைச்சுவைக் காட்சி தான்! எது எதற்கு சிரிப்பது என்ற விவஸ்தையே இல்லையா? சிலநேரம், தமிழர்களின் கார்த்திகை மாத மாவீரர் நினைவுதினத்தை படமெடுத்துக் காட்டினாலும், ஐரோப்பியர்கள் இப்படித் தானே கேலி செய்து சிரிப்பார்கள்?

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Vitaly Mansky கேள்விகளுக்கு பதிலளித்தார். வட கொரியாவில் தங்கியிருந்த காலம் முழுவதும், அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டதாக கூறினார். படமெடுத்து முடிந்த பின்னர், தனியான எடிட்டிங் அறை ஒன்றில் வீடியோ முழுவதையும் போட்டுப் பார்த்தார்களாம். இருப்பினும், தந்திரமாக கமெராவில் இரண்டு டிஸ்க் வைத்து, சில காட்சிகளை மறைத்தது பற்றி பிரஸ்தாபித்தார்.

இது போன்ற "வட கொரியாக் கதைகள்" ஒன்றும் ஐரோப்பாவுக்கு புதியன அல்ல. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வட கொரியா சென்று படமெடுப்பவர்கள் எல்லோரும், ஸ்காட்லான்ட் யார்ட் பயிற்சி பெற்ற துப்பறியும் சாம்பு மாதிரி நினைத்துக் கொள்வார்கள். "நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஒன்பதாம் மாடி இல்லை... டட்ட டாய்ங்... அங்கே என்ன நடக்கிறது.... வாருங்கள் துப்புத் துலக்குவோம்..." "நாங்கள் சென்ற பஸ் வண்டி வழி தவறிச் சென்றது... அங்கே நாம் கண்ட காட்சிகள்...." இப்படித் தான் ஜூனியர் விகடன் பாணியில், வட கொரியா பற்றிய ஆவணப்படம் தயாரித்திருப்பார்கள்.

அதே மாதிரித் தான், இந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் Vitaly Mansky உம், வட கொரிய அதிகாரிகளை ஏமாற்றிய வீரப் பிரதாபங்களை பற்றி நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அனேகமாக, ரஷ்ய அரசின் உதவி பெற்று, வட கொரியா சென்று படமாக்கியுள்ளனர். அதனால் படம் தயாரித்து முடிந்த பின்னர், தங்களது "குளறுபடிகள்" பற்றி, வட கொரிய அரசு ரஷ்ய அரசிடம் முறைப்பாடு செய்ததாம். ஆகவே, படத்தின் முடிவில் நன்றி தெரிவிக்கும் பட்டியலில் ரஷ்யாவின் பெயரை எடுத்து விட்டு, ரஷ்யாவுக்கு வந்த சங்கடத்தை தவிர்த்தார்களாம்.

வட கொரியாவுக்குள் சென்று, அங்கிருந்த அரசு அதிகாரிகள் அறியாமலே உண்மை நிலவரத்தை படமாக்கி வந்ததாக கதையளந்த தயாரிப்பாளர் இறுதியாக ஒன்று சொன்னார். வட கொரியாவில் இன்டர்நெட் இல்லாத காரணத்தால், அவர்கள் தனது பெயரை கூகிளில் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாதாம். ஸ்ஸப்பா.... தாங்க முடியல....

Wednesday, November 25, 2015

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா : சில ஆதாரங்கள்

ரஷ்ய Su24 போர் விமானம், துருக்கி F16 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. துருக்கி, சிரியா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு ரஷ்ய விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினாலும் அவர்கள் பின்னர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய விமானம், சிரியா வான் பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயினும், அது தனது நாட்டுக்குள் பிரவேசித்ததாக துருக்கி கூறுகின்றது. அதை நிரூபிப்பதற்கு காட்டிய வரை படத்தில், இரண்டு கி.மீ. தூரமுள்ள பிரதேசம் உள்ளது. ரஷ்ய விமானம் அதைக் கடக்க வெறும் 17 செக்கண்டுகள் மட்டுமே எடுத்தது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தக் காரணம் என்ன? அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி, நீண்ட காலமாகவே ISIS உடன் தொடர்புகளை பேணி வந்தது. அதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. சிரியா யுத்ததில் காயமடைந்த ISIS போராளிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கப் பட்டது. கொபானியில் குர்திஷ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS படையணிகள், துருக்கியில் இருந்து சென்றுள்ளன.

ISIS தொடர்புகள் மூலம், துருக்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைத்து வந்தன. சிரியாவின் ஒரேயொரு எண்ணை வளமுள்ள பகுதி, வருடக் கணக்காக ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எண்ணை, பார ஊர்திகள் (Oil tanker) மூலம் துருக்கிக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு, துருக்கி சிரியா எண்ணையை வாங்கி வருகின்றது. (Turkey buying oil from Isis? Syrian army releases photos of captured tanker; http://www.ibtimes.co.in/turkey-buying-oil-isis-syrian-army-releases-photos-captured-tanker-656183 )

சிரியா போரில் ரஷ்யாவும் பங்கெடுக்கத் தொடங்கியதால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும், இதுவரை காலமும் பாலைவனத்தில் குண்டு போட்டு விட்டு, "ISIS அழிப்பு போர் நடத்துவதாக" பம்மாத்து காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், ரஷ்ய விமானங்கள் ISIS நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. 

ISIS எண்ணை கடத்தி வந்த வாகனங்கள் மீதும் குண்டு போட்டதால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. தனக்கு கிடைத்து வந்த மலிவு விலை எண்ணை தடைப் பட்டதால் கோபமுற்ற துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி பழி தீர்த்திருக்கலாம். ஆனால், இதனால் ரஷ்யா சிரியா போரில் இருந்து பின்வாங்கி விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ISIS இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அமெரிக்காவே பாதுகாப்பு வழங்குகின்றது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் மேற்குலகினால் உருவாக்கப் பட்ட ISIS, துருக்கி போன்ற அயல்நாடுகளால் நேரடியாகவும், அமெரிக்காவினால் மறைமுகமாகவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அமெரிக்காவும், ISIS உம் இணைபிரியாத நண்பர்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்டினாலும், சில மரமண்டைகளுக்கு உறைப்பதில்லை.

இதோ சமீபத்தில் கிடைத்த ஆதாரம் ஒன்று: 

ISIS, சிரியாவின் எண்ணையை திருடி, அதை பார ஊர்திகள் மூலம் கொண்டு சென்று துருக்கியில் விற்று வருவது தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக, ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ISIS கொண்டு சென்ற எண்ணைத் தாங்கி வாகனங்கள் எரிந்து நாசமாகின. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தன் பங்கிற்கு, எண்ணை வாகனங்களை தாக்கி அழித்ததாக ஊடகங்களில் பீற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அங்கே நடந்ததோ வேறு கதை.

இந்த தடவை, தாக்குதல் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை, அமெரிக்க விமானம் ஒன்று ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீசியுள்ளது. விமானத் தாக்குதல் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் போடப் பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. (Pentagon Confirms: Warning Pamphlets Dropped on Islamic State ‘to Minimize the Risks to Civilians’ http://freebeacon.com/national-security/pentagon-confirms-warning-pamphlets-dropped-on-islamic-state-to-minimize-the-risks-to-civilians/)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

Sunday, November 22, 2015

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல!


ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம்.

விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்றது. பைபிளுக்கும், குரானுக்கும் இடையிலான ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. 

இஸ்லாத்தின் இறைதூதரான முகமது நபி வார்த்தைகளை குறிப்பிடும் ஹதீஸ் நூலின் ஒரு பகுதி உள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நாம் நம்புவதும், நம்பாததும் வேறு விடயம். ஆனால், அதிலிருக்கும் சில வாசகங்கள், நமது காலத்தில் இயங்கும் ISIS என்ற தீய சக்தியை இனங் காட்டுவதாக எழுதப் பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.

//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். // (The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij. http://sunnah.com/muslim/12/206http://sunnah.com/bukhari/61/118)   

அதே நூலில் Kitaab Al Fitan இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவிக்கின்றது. ISIS தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை "இஸ்லாமிய தேசம்" என்று பிரகடனம் செய்துள்ளனர். அதை அரபியில் "டாவ்லா" (Dawla) என்கிறார்கள்.

Kitaab Al Fitan நூல், இரும்பு மனம் படைத்த, "டாவ்லாவின் (தேசத்தின்) கையாட்கள்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. அவர்கள் நீண்ட முடி வளர்த்திருப்பார்கள். கருப்புக் கொடி ஏந்தி இருப்பார்கள் என்று கூறும் வாசகங்கள், இன்றைய ISIS அமைப்பினருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அது மட்டுமல்லாது ஒப்பந்தங்களை மீறுவார்கள் என்றும், ஊரின் பெயரை வைத்திருப்பார்கள் என்றும் கூறுகின்றது. ISIS தலைவர் அபுபக்கர் அல் "பாக்தாதி", பாக்தாத் என்ற ஊர்ப் பெயரை வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. (ISIS and the End of Times;  http://splendidpearls.org/2014/07/04/isis-and-the-end-of-times/)

ISIS, ஓர் இஸ்லாமிய விரோத சக்தி என்பதை, ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், இன்னமும் ISIS "இஸ்லாத்தின் பெயரால்" போராடுவதாக, அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமே நம்புகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான தீவிர வலதுசாரிகளும், ISIS இன் இருப்பை நியாயப் படுத்துவதற்காக, அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.


லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் கெரில்லா இராணுவம், ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னர், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி (LCP) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி இருந்தது. கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், தற்போது சிரியா நாட்டு எல்லையோரம் உள்ள பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவும், கடந்த சில வருடங்களாக ISIS எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. (https://www.youtube.com/watch?v=UD_IbVi9eyo)

இருப்பினும், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு மதச் சார்பற்ற அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம், கிறிஸ்தவர்கள், டுரூசியர்கள் போன்ற அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், கட்சி உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக உள்ளனர். (http://www.aljazeera.com/news/2015/09/lebanese-communist-fighters-gear-battle-isil-150919100740425.htmlஇஸ்லாமிய மதத்தின் பெயரில் இயங்கும், ISIS போன்ற தீவிரவாதக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு, "உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று என்று அறிவுரை கூறும் மேதாவிகளுக்கு ஒரு விண்ணப்பம்.

உலகில் உள்ள எல்லா மதத்தவரையும் போன்று, முஸ்லிம்கள் எல்லோரும் மதவாதிகள் அல்லர். மேற்கத்திய பண்பாட்டை பின்பற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். சோஷலிசத்தில், கம்யூனிசத்தில் அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதைத் தாங்கள் அறிவீர்களா? நீங்கள் அப்படியான முஸ்லிம்களை ஆதரிக்கலாமே?

உதாரணத்திற்கு, கடந்த மூன்று வருடங்களாக, சிரியாவின் வடக்கில் உள்ள குர்திய படையணிகள் ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை காலமும் நடந்த யுத்தத்தில், ஆயிரக் கணக்கான ISIS தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.

பெரும்பான்மையான குர்தியர்கள், மதத்தால் முஸ்லிம்கள் தான். ஆனால், மதச்சார்பற்ற, சமதர்ம கொள்கையை நம்பும் முஸ்லிம்கள். ஆகவே, அப்படியான முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு உங்களுக்கேன் தயக்கம்?

"முஸ்லிம்கள் எல்லாம் மதவெறியர்கள்" என்று ஒரு பக்கச் சார்பான கதைகளை கூறி புலம்புவதை விட்டு விட்டு, மதச் சார்பற்ற முஸ்லிம்களை ஆதரிக்கும் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கலாமே?

Saturday, November 14, 2015

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!" பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை. நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

Monday, November 09, 2015

கோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்கப் படும் கருத்துச் சுதந்திரம்


மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அபிமான புரட்சிகர பாடகர் கோவன் கைது செய்யப் பட்டதும், தமிழ்நாட்டில் மீண்டும் கருத்துச் சுதந்திர அடக்குமுறை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. அரசு நடத்தும் டாஸ்மார்க் மதுக்கடை ஒழிப்புப் பாடலைப் பாடியதாலேயே கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதனால், அந்தப் பாடல் இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. 

யாருக்குமே தெரியாமல் இருந்த கோவன் என்ற பாடகரை, நாடறிய வைத்த பெருமை, ஆளும் ஜெயலிதாவின் ஆதிமுக அரசைச் சேரும். முதல்வர் ஜெயலிதாவை நையாண்டி செய்து பாட்டுப் பாடியதால் கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், கோவனின் கைதுக்கு வெளியில் சொல்லப் படாத சில காரணங்களும் இருக்கலாம்.

கோவனின் கைது தொடர்பாக தந்தி டிவியில் ஒரு விவாத அரங்கு இடம்பெற்றது. அந்த விவாதம், மீன் சந்தை ஆரவாரம் போன்று காட்சியளித்தது. ஆதிமுக சார்பில் கலந்து கொண்ட சரஸ்வதி, தனது கருத்துக்களை மட்டுமே எல்லோரும் கேட்க வேண்டுமென்பது போல, உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்களை பேச விடாமல் இடையூறு செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க வேண்டிய ரங்கராஜ் பாண்டே, இடையூறுகளை கட்டுப்படுத்தாமல், தானும் அதே தவறைச் செய்து கொண்டிருந்தார்.


விவாதத்தில் கலந்து கொண்டவர்களுடன், இந்திய அரசியல் சாசன விதிகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரங்கராஜ் பாண்டே, CPML (Peoples Liberation) சார்பில் கலந்து கொண்ட சதீஷிடம் மட்டும் சம்பந்தாசம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ரஷ்யாவில் அப்படி, சீனாவில் இப்படி என்று தனது "மேதாவிலாசத்தை" காட்டினார். ஓர் இந்தியரான சதீஷுக்கும், ரஷ்யா அல்லது சீனாவுக்கும் என்ன சம்பந்தம்?

இந்திய அரசியல் சட்டங்களை கூட கரைத்துக் குடித்திருக்கும் அறிவுஜீவிகள், கம்யூனிசம் என்று வந்து விட்டால் மட்டும் படிக்காத பாமரர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். கம்யூன் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து தான், கம்யூனிசம் வந்தது என்பதும், உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் நடந்தது என்பதும், இந்தப் படித்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ரஷ்யா, சீனாவில் மட்டும் தான் கம்யூனிசம் தோன்றியது என்று, இவர்கள் எங்கே படித்தார்கள் என்று தெரியவில்லை. கிரேக்க, ஜேர்மனிய தத்துவங்களின் தொடர்ச்சியாகத் தான் மார்க்சியம் தோன்றியது என்பதையாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கூட, தமது கம்யூனிச சித்தாந்தத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக, ஆதி கால தமிழ் சமுதாயத்தை பற்றி சில குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், ஜனநாயகம் பற்றிய இவர்களது புரட்டும். எதிர்க் கட்சி என்பது, எதிர்த்துப் பேசும் கட்சி அல்ல. அரசுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி என்பதை மறந்து விட்டு, ரங்கராஜ் பாண்டே இந்திய ஜனநாயகம் பற்றி பாடம் நடத்துகிறார். உண்மையான எதிர்க் கட்சிகளுக்கு (அவை தேர்தலில் போட்டியிடாதவையாக இருந்தாலும்) கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுகின்றது என்பதைத் தான், கோவனின் கைது எடுத்துக் காட்டுகிறது.

டாஸ்மார்க் எதிர்ப்புப் பாடல் மட்டும் கைதுக்கு காரணம் அல்ல. வினவு தளம் நடத்தும் கண்ணையன் ராமதாஸ் மீதும், தேசத் துரோக குற்றப்பத்திரிகை எழுதப் பட்டுள்ளது என்ற உண்மையை, அந்த நிகழ்ச்சியிலேயே ரங்கராஜ் பாண்டே அடிக்கடி சுட்டிக் காட்டினார். ஆட்சியாளர்களை கேலி செய்வது தவறு என்றால், அது என்ன வகை ஜனநாயகம்? அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்லவா?

இந்த உண்மையை புரிந்து கொள்ளாத ரங்கராஜ் பாண்டே, சதீஷ் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டுகிறார். அதற்கு "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்பதத்தை எடுத்துக் காட்டுவது நகைப்புக்குரியது. தற்போது உலக நாடுகள் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளிய வர்க்க சர்வாதிகாரம் முறியடிக்கப் பட்டு, அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர வேண்டும் என்பது ஒரு தத்துவார்த்த வாதம். அதை ஒரு தத்துவமாகப் பார்க்காமல், "சர்வாதிகாரம்" என்ற ஒரு சொல்லை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

இந்த இலட்சணத்தில் தான், இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை. தொலைக்காட்சிக் கமேராக்களை அங்கே திருப்புங்கள்.

"தோழர் கோவனின் கைதுக்கு உண்மையான காரணம், அவர் பாடிய டாஸ்மார்க் பற்றிய பாடல் அல்ல. அதை மக்களிடையே கொண்டு சென்று பரப்பிய வினவு இணையத் தளம். இந்தத் தேசத் துரோக வழக்கின் முதல் குற்றவாளி, வினவு இணையத்தள நிர்வாகி கண்ணையன் ராமதாஸ்."

இந்த உண்மையை தந்தி டிவி இல் ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, அழுத்தம் திருத்தமாக கூறினார். விவாதத்தில் கலந்து கொண்டு, கோவனின் கைதுக்கு ஆதரவாக பேசிய, ஆதிமுக பிரமுகர் சரஸ்வதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோரும், சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் பரவியது என்று குற்றஞ்சாட்டினார்கள்.

"நானும் பேஸ்புக் பார்க்கிறேன். இண்டைக்கு எத்தனை பேரிடம் மொபைல் போன், வாட்ஸ் ஆப் இருக்கு. இந்தப் பாடல் எத்தனை பேரிடம் பரவி இருக்கும்?" என்று சரஸ்வதி பொரிந்து தள்ளினார். அதை ஆமோதிப்பது போல முருகனும் "பேஸ்புக்கில் அரசை விமர்சித்து எழுதுவது தேசத்துரோகம்... இப்படியே விட்டால் கழைக் கூத்தாடியும் பேஸ்புக்கில் அரசியல் செய்யத் தொடங்கி விடுவான்." என்று தனது அச்சத்தை வெளியிட்டார்.

இவர்களின் கூற்றில் இருந்து ஓர் உண்மை புலனாகும். அண்மைக் கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரம் அதையிட்டு அஞ்சி நடுங்குகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிய மாய்மாலம் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே உரியது. குரலற்ற அடித்தட்டு மக்களும் கருத்துச் சுதந்திர உரிமையை பாவிப்பது அரசு அதிகாரத்திற்கு ஆபத்தானது.

எனக்கும் கூட, கோவன் யார் என்பது கைதுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அவர் பாடிய பாடல்களை கடந்த பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். மகஇக இயக்கத்தின் அரசியல் பிரச்சாரப் பாடல்களை பாடும், கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், அனைவரையும் கவரும் வல்லமை பெற்றிருந்தார். ஆந்திராவில் புரட்சிகர தெலுங்குப் பாடல்களை பாடும் கத்தாரின் பாணியை, தமிழுக்கு கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், கோவன் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாக (ஆடியோ கேசட்) விற்பனை செய்யப் பட்டன. சென்னை கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனையான கேசட்டுக்களை, வெளிநாடுகளில் இருந்து கொண்டு தருவித்து, கேட்டு மகிழ்ந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன்.

இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம், கோவன் பாடத் தொடங்கி, அவை கேசட்டுக்களாக விற்பனை செய்யப் பட்ட காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது! அப்போதும் ஜெயலலிதா ஆட்சியை கிண்டலடித்து பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியுமளவிற்கு நடந்த, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தை நையாண்டி செய்யும் பாடலை, அன்றைய அதிமுக கட்சிக்காரர்கள் யாரும் கேட்கவில்லையா? "அசைந்து வருகிறது நகைக்கடை... தங்கம் வேணுமா... சொல்கிற இடத்தில வெட்டனும்..." என்றெல்லாம் பாடினார்கள். அதுவும், ஜெயலிதா ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில்!

புரட்சிகர பாடகர், தோழர் கோவனை அப்போது கைது செய்யாமல், இப்போது கைது செய்யக் காரணம் என்ன? அதைத் தான் தந்தி டிவி விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் பரவி விட்ட, இணையப் பாவனை, சமூக வலைத் தளங்கள், ஸ்மார்ட் போன்கள் தான் காரணம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, இப்படி ஒரு சமூக மாற்றம் வரும் என்று ஆட்சியாளர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வசதி படைத்த மத்தியதர வர்க்கம் மட்டுமே இணையம் பாவித்த காலம் மலையேறி விட்டது. இன்று காய்கறிக் கடைக்காரன், கிரமாப்புற விவசாயி எல்லாம், இணையப் பாவனை கொண்ட ஸ்மார்ட் போன் பாவிக்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.

சமூகவலைத்தளங்களிலும், ஒரு சில மத்தியதர வர்க்க இளைஞர்கள் மட்டும் கூடியிருந்து, அமெரிக்க சுகபோக வாழ்க்கை பற்றி அரட்டை அடித்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், கடந்த ஏழாண்டு காலத்தில், வினவு போன்ற கம்யூனிசக் கொள்கைகளை பரப்புவோரும், சமூக வலைத்தளங்களை பாவிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வலைப்பூவாக தொடங்கிய வினவு, குறுகிய காலத்திலேயே பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த இணையத் தளமாக மாறியது.

"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்..." என்று, அதிகார வர்க்கத்தின் குரலாக ஒலிக்கும் சரஸ்வதியும், முருகனும் கூறுகின்றனர். பணபலம் படைத்த பெரிய கட்சிகள் மட்டுமே, மேடை போட்டுப் பேசி ஆயிரக் கணக்கான மக்களை கவர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) தமிழகத்தில் இயங்கி வருகிறது. அறுபதுகளில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சி என்பதும், ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தி போராடும் இயக்கம் என்பதும் அரசுக்கு நன்றாகத் தெரியும். சென்னை கீழைக்காற்று புத்தகக் கடைக்கு வரும், கியூ பிராஞ்ச் புலனாய்வு அதிகாரிகள், "ஒன்றும் தெரியாத மாதிரி" நூல்களை வாங்கிச் செல்வார்கள்.

சென்னை மாநகர மின்சார ரயிலில், பஸ் வண்டிகளில், மகஇக தோழர்கள் ஏறி, தமது வெளியீடுகளான புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சஞ்சிகைகளை, ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும்.

அப்போதெல்லாம், மகஇக பிரச்சாரம் செய்யும் கருத்துக்கள், மிக மிகக் குறைந்தளவு மக்களிடம் மட்டுமே போய்ச் சேர்ந்தது. இப்போதும் அப்படியா? உலகமயமாக்கலின் விளைவுகளில் ஒன்றாக, இணையப் பாவனையும், ஸ்மார்ட் போன்களும் எல்லோரும் வாங்கிப் பாவிக்குமளவிற்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்க மக்கள் கூட, மிக விரைவாக நவீன தொலைத்தொடர்பு வசதிகளை தமதாக்கிக் கொண்டனர். உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இருந்து உருவான படித்த வாலிபர்கள், மிக இலகுவாக வினவு பிரச்சாரம் செய்யும் புரட்சிகர கம்யூனிசக் கருத்துக்களால் ஆகர்சிக்கப் படுகின்றனர். அதுவே வினவு இணையத் தளத்தின் வெற்றி எனலாம்.

"இதை இப்படியே விட்டு விடலாமா?" தந்தி டிவி விவாதத்தில், அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக பேசிய, சரஸ்வதி, முருகன் மட்டுமல்ல, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரங்கராஜ் பாண்டே கூட, அந்தக் கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

அது தானே? அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் அரசியல் கருத்துகளுக்கும் சுதந்திரம் கொடுத்தால் என்னாகும்? நாளைக்கு அரசு அதிகாரத்திலும், மேட்டுக்குடியினரிடம் பங்கு கேட்டு வர மாட்டார்களா? அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். அந்த உண்மையை, விவாதத்தில் பேசிய (முன்னாள்) அரசு அதிகாரி முருகன் நேரடியாகவே கூறினார்: "உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரையில் தான்!" 

நான் எழுதிய இந்தப் பதிவையும், தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளும், புலனாய்வுத் துறையினரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரம் தங்கள் கணனியில் சேமித்தும் வைக்கலாம். ஏற்கனவே அப்படி எல்லாம் நடக்கிறது என்பதைத் தான், தந்தி டிவி விவாத அரங்கமும் எமக்குத் தெளிவு படுத்தி உள்ளது.

ஆகவே, தோழர் கோவன் கைது செய்யப் பட்ட பின்னர், வினவு ஆற்றிய எதிர்வினையை சொல்லி முடிக்கலாம் என நினைக்கிறேன். "கோவன் பாடிய அதே பாட்டை பாடு அஞ்சாமல் பாடு!" என்ற கோஷத்தை வினவு எழுப்பியது. அதே மாதிரி, "பேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், வாட்ஸ் அப்பில், எழுது அஞ்சாமல் எழுது!"


தோழர் கோவன் பாடிய டாஸ்மார்க் ஒழிப்புப் பாடல்:


தந்தி டிவி இல் ஒளிபரப்பான விவாத அரங்கம்:

Sunday, November 08, 2015

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்

யாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை. 

"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக" முஸ்லிம்களை வெளியேற்றியதாக "நியாயம்" கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், "முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக" பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, "தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக" கூறினார்.

அந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் "புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்." ஆங்கில ஊடகங்களில் "புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்." சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக "மன்னிப்பு" என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக "வருத்தம்" என்ற வார்த்தையும் பயன்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, இறுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.

பின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் "முஸ்லிம் கொள்கையை" தீர்மானித்தன:


  1. கிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.
  2. யாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.


வலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

ஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்தனமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.

புலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. "வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்?" என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

வட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.

அதே மாதிரித் தான், GTV இல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். "யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக..." நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.

ஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.

தொடர்ந்து பேசிய இரண்டு "ஆய்வாளர்களும்", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். "தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்." என்று கூறினார்கள்.

இதற்குத் தீர்வாக, "இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்." என்று "அன்பான" உத்தரவு பிறப்பித்தார்கள்.

4-11-2015 அன்று ஒளிபரப்பான GTV அரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTV சொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்: 
//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்!// 
AK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, November 05, 2015

"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்


"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.)  அதில் பல வரலாற்றுத் தவறுகள், தகவல் பிழைகள் உள்ளன. பல இடங்களில், யூதர்கள் பற்றி (வேண்டுமென்றே) தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. முகில் அதனை ஒரு கற்பனை கலந்த நாவலாக எழுதி இருக்கலாம்.

சுவாரஸ்யமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, வரலாற்றை திரிபு படுத்தி இருக்கிறார். அதில் கூறப் பட்டுள்ளது யூதர்களின் "வரலாறு" அல்ல. அதை ஓர் ஆய்வு நூலாக அல்லது வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எழுத்தாளரின் கற்பனை, நூல் முழுவதும் இழையோடுகின்றது. வேண்டுமானால், வரலாற்றை அடிப்படையாக கொண்டு புனையப் பட்ட நாவலாக நினைத்து வாசிக்கலாம். 

நூலாசிரியர் விவிலிய நூலை உசாத்துணையாக எடுத்துக் கொண்டுள்ளார். முதல் ஆறு அத்தியாயங்களிலும் விவிலிய கதைகளை எழுதியுள்ளார். முதலில், பைபிளை யூதர்களின் உண்மையான வரலாறாக எடுத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

நூலாசிரியர் யூதர்களை தனி இனமாக காட்ட விரும்புவது தெரிகின்றது. யூதர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட இனக்குழுவினர் என்பது ஒரு கற்பனையான வாதம். எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்திற்கு செல்ல விரும்பவில்லை. யூதர்கள் மத்தியிலும் பலதரப் பட்ட அரசியல் கொள்கைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

நூலின் முதலாவது அத்தியாயம், இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்த கதையுடன் தொடங்குகிறது. ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு, அது அடிப்படைக் காரணமாக இருந்தது உண்மை தான். ஆயினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க முடியாது. ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு அதை விடப் பல காரணங்கள் உள்ளன. 

உண்மையில், "யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தானா?' என்பதே கேள்விக்குறி. பல நூறாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட விவிலிய நூலில், பல கதைகள் இடைச் செருகலாக புகுத்தப் பட்டன. யூதாஸ் எழுதிய சுவிசேஷம் அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப் பட்டது. அந்தப் பகுதி விவிலிய நூலில் வேண்டுமென்றே அகற்றப் பட்டது. மேற்கத்திய கிறிஸ்தவ சபைகளின் யூத எதிர்ப்பு அரசியல், பல நூறாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மத- அரசியல் கொள்கை ஆகும்.

யூதாஸ் மட்டுமல்ல, இயேசுவும் அவரது சீடர்கள் அனைவரும் யூதர்களாக இருந்தனர். இயேசு கூட, யூத மதத்தை சீர்திருத்த விரும்பினாரே அன்றி, தனியான மதம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்திருக்கவில்லை. இயேசுவை பின்பற்றிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனத்தில் வாழ்ந்த பிற யூதர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்திப் பார்த்தனர். அதற்கு ஓர் அரசியல்- சமூகக் காரணி இருந்தது. அது இந்த நூலில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிலநேரம், நூலாசிரியருக்கே அந்த விடயம் தெரியாமல் இருக்கலாம்.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் காலத்தில், ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பிரதேசம், ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டது. உண்மையில் ஆட்சியாளர்கள் தம்மை "ரோமர்கள்" என்று அழைத்துக் கொண்டாலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். அதனால், பாலஸ்தீனத்திலும் கிரேக்க மொழி ஆட்சி மொழியாக இருந்தது.

ரோமர்களின் அரச அலுவலகர்களாக வேலை செய்ய விரும்புவோர், கிரேக்க மொழியை சரளமாக எழுதப், பேசத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கிரேக்கத்தில் இருந்து வந்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும், அவர்களுக்கு கீழே வேலை செய்த உள்ளூர் மேட்டுக்குடி வர்க்கம் ஒன்றிருந்தது. யூதர்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

ரோமர்களின் கீழ் அரசுப் பதவிகளில் இருந்த யூதர்களை "ஹெலனிக் யூதர்கள்" என்று அழைக்கலாம். அதாவது, அவர்கள் தமது தாய்மொழியான ஹீபுருவை விட, அந்நிய மொழியான கிரேக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பல யூதர்கள் வீட்டிலும் கிரேக்க மொழி பேசினார்கள். நமது நாடுகளில் உள்ள ஆங்கிலம் பேசும் தமிழ் மேட்டுக்குடியினருடன் அவர்களை ஒப்பிடலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம், யூதர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கவில்லை.

ஹீபுரு யூதர்களுக்கும், ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடுகள் கொதி நிலையில் இருந்தன. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல. பொருளாதாரப் பின்னணியும் முக்கிய பங்காற்றியது. ஹெலனிக் யூதர்கள் வசதியான பிரிவினராக இருக்கையில், ஹீபுரு யூதர்கள் ஏழ்மையில் வாழ்ந்தனர். அதற்கான காரணம் மிகத் தெளிவானது. ரோம அரசுடன் ஒத்துழைத்த யூதர்கள் பதவிகளை பெற்று வளமாக வாழ்ந்திருப்பார்கள்.

அன்றைய யூதர்கள் எல்லோரும் ஹீபுரு பேசினார்கள் என்றும் சொல்ல முடியாது. ஹீபுரு, அரபி மொழிகளுக்கு நெருக்கமான அரமைக் மொழி பேசிய யூதர்களும் இருந்தனர். உதாரணத்திற்கு இயேசு அரமைக் மொழி தான் பேசினார். ரோமர்கள் காலத்தில் அரமைக் மொழி முக்கியத்துவம் இழந்து விட்ட போதிலும், அது ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் பரவலாக பேசப் பட்ட வணிக மொழியாக இருந்தது.

அன்றைய பாலஸ்தீன அரசியல் நிலவரம், பிற்காலத்தில் கிறிஸ்தவம் என்ற தனியான மதம் உருவாக காரணமாக இருந்தது. உண்மையில், முதன் முதலாக கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள் என்பது தற்செயல் அல்ல. (விவிலிய நூலின் புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது. "கிறிஸ்து" கூட ஒரு கிரேக்கச் சொல் தான்.) பின்தங்கிய பிரிவினரான ஹீபுரு யூதர்களுக்கும், முன்னேறிய பிரிவினரான ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடு, பிற்காலத்தில் யூத - கிறிஸ்தவ மத முரண்பாடாக பரிணமித்தது.

ஏற்கனவே, கிரேக்க மொழி சரளமாகப் பேசத் தெரிந்த யூதர்கள், கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், பிற யூதர்களிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அது தான் யூத வெறுப்புக்கு காரணமே தவிர, யூதாஸின் காட்டிக்கொடுப்பு அல்ல. ஹெலனிக் யூதர்கள், ஹீபுரு யூதர்களை தம்மை விடக் கீழானவர்களாக பார்த்தார்கள். நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத பழைமைவாதிகள் என்றார்கள். மறு பக்கத்தில், ஹீபுரு யூதர்கள், ஹெலனிக் யூதர்களை, எதிரிகளுடன் ஒத்துழைக்கும் இனத் துரோகிகளாக கருதினார்கள். "மத நம்பிக்கையற்றவர்கள், போலி யூதர்கள், கிரேக்க கைக்கூலிகள்" என்றெல்லாம் தூற்றினார்கள்.

ரோம அரச அதிகாரத்திற்கு எதிராக, ஆங்காங்கே ஹீபுரு யூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்.  யூதர்களின் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ரோமப் படைகள் அனுப்பப் பட்டன. இராணுவ நடவடிக்கைகளுக்கு ஹெலனிக் யூதர்களும் உதவினார்கள். சகோதர இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை காட்டிக் கொடுத்தார்கள், அல்லது போரிட்டுக் கொன்றார்கள். அதே நேரம், யூதக் கிளர்ச்சியாளர்கள், "துரோகிகள் அழிப்பு" என்ற பெயரில் ஹெலனிக் யூதர்களை கொன்றார்கள். அதாவது, "யூதர்களுக்கு எதிராக யூதர்கள்"! ஆகவே, யூதர்கள் எல்லோரும், தொன்று தொட்டு ஒரே சிந்தனை கொண்ட, ஒற்றுமை மிக்க இனமாக வாழ்ந்தனர் என்பது ஒரு கற்பனை.

நூலில் இருந்து: 
//கி.பி. 115 ல் ஈராக், லிபியா, எகிப்து, சைப்ரஸ் ஆகிய இடங்களில் திடீரென யூதர்கள் கலகங்களில் ஈடுபட்டனர். ஆனால், பாலஸ்தீன யூதர்கள் அமைதியாகத் தான் இருந்தார்கள். ரோமானியர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.... இந்தப் புரட்சிகளின் நோக்கம் ஒன்று தான். ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு. அதற்காக நிகழ்ந்த புரட்சிகளை வழிநடாத்த சரியான தலைமை கிடைக்கவில்லை.....//

குறிப்பாக எகிப்தில் அலெக்சாண்ட்ரியா நகரில் யூதர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். உண்மையில், அந்தக் கலவரத்திற்கு காரணம், "ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு" அல்ல! அது வெறும் கட்டுக்கதை. உண்மையான காரணம், நமது காலத்தில் நடப்பதைப் போன்ற, இன/மத முரண்பாடுகளால் வெடிக்கும் இன/மதக் கலவரங்கள்.

இனக் கலவரத்தை தூண்டுவதற்கு சிறு நெருப்புப்பொறி போதுமாக இருந்தது. எங்காவது ஒரு கிரேக்க- கிறிஸ்தவரை, யூதர்கள் கொலை செய்திருந்தால், அதை சாட்டாக வைத்து கலவரம் வெடித்தது. கிரேக்க காடையர்கள், யூதர்களின் வீடுகளை எரித்தனர். கண்ணில் கண்ட யூதர்களை படுகொலை செய்தனர், அல்லது பாலியல் பலாத்காரம் செய்தனர். யூதர்களும் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், எதிர்த் தாக்குதல்கள் நடத்தினார்கள். இப்படியான இனக் கலவரங்கள், ரோம சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் நடந்துள்ளன.

உண்மையில், பண்டைய கால ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு மதம் முக்கியமாகப் படவில்லை. தலைநகர் ரோமாபுரியில் ஈரானிய, எகிப்திய தெய்வங்களுக்கும் ஆலயங்கள் இருந்தன. யூதர்களின் ஆலயமும் (சினகொக்) இருந்தது. ரோமர்கள் சாம்ராஜ்ய நன்மை கருதி, அனைத்து மதங்களையும், இனங்களையும் உள்வாங்கிக் கொண்டனர். 

ஆயினும், பாலஸ்தீன யூதர்கள், சிலை வணக்கத்தை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையில் பற்றுள்ளவர்களாக இருந்த படியால், அவர்கள் தம்மை தனித்துவமானவர்களாக கருதிக் கொண்டனர். இது சிலநேரம் ரோம அதிகாரிகளுடன் மோதல் நிலையை தோற்றுவித்தது. அதனால் அரசுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி நடந்ததும், யூத ஆலயங்கள் இடிக்கப் பட்டதும் உண்மை தான். உண்மையில் அது மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினை. ரோம தெய்வங்களை வழிபட்ட யூதர்களும், மதச் சார்பற்ற யூதர்களும் இருந்துள்ளனர்.

ஆனால், மேற்படி மோதல்களால் ஏற்பட்ட முக்கியமான விளைவை நூல் பதிவு செய்யவில்லை. அதாவது, பாலஸ்தீன யூதர்களின் கிளர்ச்சி அடக்கப் பட்டதும், அங்கு வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிலநேரம், ரோமர்கள் அவர்களை பலவந்தமாக வெளியேற்றி, சாம்ராஜ்யத்தின் பிற பாகங்களில் குடியேற்றினார்கள்.

அதே நேரம், உள்நாட்டுப் போர்களால் பின்தங்கி இருந்த பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி, பொருளாதார நலன்களுக்காக இத்தாலியில் குடியேறிய யூதர்களும் உண்டு. இதனை நாங்கள் பிரிட்டிஷ் காலனியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு காலத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்த இந்தியர்களும், இலங்கையரும், பிரிட்டனிலும், பிற ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் குடியேறியுள்ளதை உதாரணமாக குறிப்பிட்டுச் சொல்லலாம். 

ரோமர்களின் காலகட்டம் முழுவதும், யூதர்களின் பிரச்சினையானது, ஒரு சிறுபான்மையினத்தவரின் அரசியல் - சமூகப் பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் தமது பலம் எது, பலவீனம் எதுவென உணர்ந்திருந்தனர். உருவ வழிபாட்டை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையை தமது பலமாகக் கருதினார்கள். அதே நேரம், அடிக்கடி பாதிக்கப்படும் சிறுபான்மை இனமாக இருப்பதை பலவீனமாகக் கருதினார்கள். அடுத்து வந்த ஆயிரம் வருடங்களுக்கும் அந்த நிலைமை தொடர்ந்திருந்தது. ஆனால், "கிறிஸ்தவ மதப் பரவலை தடுப்பதற்காக, யூதர்கள் அல்லும் பகலும் யோசித்தார்கள்" என்பது ஒரு கற்பனை.

யூதர்களை தனியான இனமாகக் கருதுவது அறியாமை. எத்தியோப்பிய கருப்பின யூதர்களுக்கும், ஐரோப்பிய வெள்ளையின யூதர்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் கிடையாது. ஒரு காலத்தில், யூத மதம் மத்திய கிழக்கில் இருந்து உலகம் முழுவதும் பரப்பப் பட்டு வந்தது.

பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாது, அரேபியாவில் (நஜ்ரான்; http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_13.html), ரஷ்யாவில் (கஸாரியா; http://kalaiy.blogspot.nl/2008/11/blog-post_28.html) கூட யூத ராஜ்ஜியங்கள் இருந்தன. அங்கிருந்தெல்லாம் மதம் பரப்பப் பட்டது. நஜ்ரான் யூதர்கள், இனத்தால் யேமன்- அரேபியர்கள். கஸாரியா யூதர்கள், இனத்தால் துருக்கியர்கள். இவ்வாறு, பிற இனத்தவர்களும் யூதர்களாக மதம் மாறியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  

ஆயினும், ரோமர்கள் காலத்தில், யூதர்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. அதனால், மதம் பரப்பும் கொள்கை எப்போதோ கைவிடப் பட்டு விட்டது. அதே காலகட்டத்தில், கிறிஸ்தவ மதம் பரவியது. கிறிஸ்தவம் யூத மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கிரேக்க வழிபாட்டு முறைகளை பின்பற்றி தனியான மதமாக உருவாகியது. கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவியதும், மன்னரை பின்பற்றி குடி மக்களும் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

யூதர்கள் இயேசுவை தமது "மெசியாவாக" ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதற்காக கிறிஸ்தவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தம்மை ஆண்ட ரோம சாம்ராஜ்யவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், யூதர்களால் என்ன செய்திருக்க முடியும்? 

பிற்காலத்தில் யூதர்கள் போன்று, ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய கிறிஸ்தவ மதத்தினர், யூதர்களை எதிரிகளாக கருதினார்கள். அதுவும், கிறிஸ்தவத்திற்கு மாறிய, கிரேக்க- ரோம சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவு தான். ஆதி கால கிறிஸ்தவ மதம், கிட்டத்தட்ட யூத மதம் போன்றே காணப் பட்டது. இன்றைக்கும், எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றுகிறார்கள்.

உண்மையில், உலகில் மதம் என்ற தோற்றப்பாடு, ஓரிறைக் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட பின்னரே ஏற்பட்டது. (இதனைப் புரிந்து கொள்ள Karen Armstrong எழுதிய நூல்களை வாசிக்கவும்.) மதம் ஒரு நிறுவனமாக உருவாகாத பலதெய்வ வழிபாட்டுக் காலத்தில், ஓரிறைக் கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வந்த யூதர்கள், ஒரு பக்கம் கிறிஸ்தவமும், மறு பக்கம் இஸ்லாமும் தமக்குப் போட்டியாக வந்து விட்டதை உணர்ந்து கொண்டனர்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், நூலாசிரியர் தனது கற்பனைக் குதிரையை தட்டி விடுகிறார்:
 //கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ யூதர்களை வெறுக்கக் காரணம் என்ன? காரணம் யூதர்களின் தலைக்கு மேலிருந்ததாக அவர்கள் நம்பிய மாய ஒளிவட்டம் தான். தாங்கள் தான் உயர்ந்தவர்கள். கடவுளால் பிரத்தியேகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற மனப்பான்மை. கடவுள் தம்மை எந்த நிலையிலும் கைவிட மாட்டார் என்ற அசாத்திய நம்பிக்கை. பொருளாதாரம், கல்வி வளர்ச்சி, புத்திசாலித்தனம் இப்படி எல்லாவற்றிலும் தேர்ந்தவர்களாக இருந்தாலும், உலகில் தங்களின் கலாச்சாரம் மட்டுமே மிக உயர்ந்தது என்ற மனப்பான்மை அவர்களுக்கு எப்போதும் உண்டு. இன்று வரையிலும் கூட. அதனால் தனியாகவே வாழ்ந்தார்கள். தங்களைத் தனியாக அடையாள படுத்திக் கொண்டார்கள்.//

கிறிஸ்தவ ராஜ்ஜியங்களில் யூதர்கள் ஒடுக்கப் பட்ட மாதிரி, இஸ்லாமிய ராஜ்ஜியங்களில் ஒடுக்கப் படவில்லை, வெறுக்கப் படவுமில்லை. இஸ்லாம் தோன்றும் பொழுதே, யூதர்களும், கிறிஸ்தவர்களும் "ஒரே புத்தகத்தின் மக்கள்" என்று வரையறுக்கப் பட்டது. அதனால், கிறிஸ்தவர்கள் மாதிரியே யூதர்களும் நடத்தப் பட்டனர். இரண்டாந்தரப் பிரஜைகளாக இருந்தாலும், வரி கட்டி விட்டு சுதந்திரமாக வாழ முடிந்தது. கிறிஸ்தவர்கள் போலல்லாது, இஸ்லாமியர்கள் யூதர்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. யூதர்களும் "தலைக்கனம் பிடித்தவர்களாக" இருக்கவில்லை. ஒரு சிறுபான்மை இனமாக, தமது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் மட்டும் குறியாக இருந்தனர்.

மத்திய கால, கிறிஸ்தவ ஐரோப்பாவில், யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தோன்றுவதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதம், கடனுக்கு வட்டி அறவிடுவதை தடை செய்திருந்தது. அதனால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்கவில்லை. அந்தத் தொழிலை யூதர்கள் கைப்பற்றிக் கொண்டனர். சாதி அமைப்பு மாதிரி, குலத் தொழில்களை மட்டுமே செய்யும் சமூகங்களை கொண்ட, மத்திய கால ஐரோப்பாவில் யூதர்களுக்கு செய்வதற்கு வேறு தொழில் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம், பல இடங்களில் யூதர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் தடை இருந்தது. 

ஆகவே, யூதர்களுக்கு இருந்த மிகக் குறைந்த தெரிவுகளில் ஒன்று தான் வட்டிக்கு கடன் கொடுப்பது. கடன் வாங்கி பாதிக்கப் பட்ட கிறிஸ்தவ மக்கள் மத்தியில், யூத வட்டிக் கடைக்காரருக்கு எதிரான வெறுப்புணர்வு இருந்தது. கத்தோலிக்க தலைமைப் பீடம், அந்த வெறுப்பை தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்தது. போப்பாண்டவர் முதலாவது சிலுவைப் போரை அறிவித்ததும், ஜெர்மன் பகுதிகளில் ஆயிரக் கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப் பட்டனர். வத்திக்கான் அதைத் தடுக்கவில்லை.

மத்திய கால ஐரோப்பாவை பொறுத்தவரையில், யூதர்கள், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழ்ந்தனர் என்று கூறலாம். ஒரு காலத்தில் ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன. (நூலாசிரியர் இந்த உண்மையை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.) ஆனால், அவற்றை கிறிஸ்தவ மன்னர்கள் கைப்பற்றியதும், அங்கு வாழ்ந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப் பட்ட யூதர்கள், மொரோக்கோவிலும், துருக்கியிலும் பெருமளவில் சென்று குடியேறினார்கள்.

நூலில் இருந்து:
//சிலுவைப்போர்கள் முடிவுக்கு வந்துவிடும் என்றிருந்த சமயத்திலேயே (கி.பி. 1210), யூத நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று பாலஸ்தீனுக்கு சென்று, அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை நிறுவ முடியுமா, அதற்கான சாத்தியங்கள் எவ்வளவு உள்ளன, தாங்கள் இழந்த நிலங்களை மீட்டெடுக்க முடியுமா என்று ஆராய்ச்சிகள் நடத்தி வந்திருந்தது.... அந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு, துருக்கி சுல்தான் பயஸித்திடம் பேசச் சென்றனர். "பாலஸ்தீனத்தில் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தங்கள் தயை வேண்டும்." //

இது பெரும்பாலும் இட்டுக்கட்டிய கற்பனைக் கதை. இதில் பல வரலாற்றுத் தகவல் பிழைகள் உள்ளன. துருக்கி ஓட்டோமான்கள் தலைமையிலான இஸ்லாமிய சாம்ராஜ்யம், 1517 ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உருவானது. முதலாவது துருக்கி சுல்தானின் பெயர் (முதலாம்) செலிம். தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த செலிம், 1517 ம் ஆண்டு தான் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார். அதற்கு முன்னர், அரேபியர்கள் தான் சிலுவைப் போரில் ஈடுபட்டு, பாலஸ்தீனத்தை மீட்டெடுத்தனர்.

1291 ம் ஆண்டு சிலுவைப்போர் முடிவுக்கு வந்தது. போரில் வெற்றி வாகை சூடிய தளபதியின் பெயர் சலாவுதீன். பிறப்பால் அவர் குர்து இனத்தவர். அதனால், மம்மலேக்குகள்" என்ற பெயரில், துருக்கி மொழிபேசும் வீரர்களைக் கொண்ட படையணி உருவாகக் காரணமாக இருந்தார். மம்மேலுக் படைவீரர்கள், பிற்காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, துருக்கியில் ஒரு சிறிய நாட்டை ஆண்டார்கள். அது நடந்தது 1250 ம் ஆண்டு! 

அப்படியானால், எப்படி கி.பி. 1210ல் துருக்கி சுல்தான் ஆண்டதாக நூலாசிரியர் கதை விடுகிறார்? யூதர்கள் ஆயிரமாண்டு காலமாக, ஜெருசலேம் திரும்பக் காத்துக் கிடந்ததாக, தேசியவாத- யூதர்கள் வரலாற்றை திரித்து எழுதியுள்ளனர். தமது இஸ்ரேலிய தாயகக் கோட்பாட்டுக்கு, வலுச் சேர்ப்பதற்காக இது போன்ற வாதங்களை கூறி வருகின்றனர்.

பாலஸ்தீனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த யூதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கேயும் புலம்பெயர்ந்து சென்று திரும்பி வரவில்லை. ஆனால், "ஜெருசலேமுக்கு திரும்பிச் செல்லுதல்" என்ற கொள்கை, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தான், ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள்.

அதற்கு முன்னர், மொரோக்கோ, துருக்கியில் வாழ்ந்த யூதர்கள், ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்தனர். அதாவது, பாலஸ்தீனம், துருக்கி, மொரோக்கோ எல்லாம் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. ஒரே நாடு என்பதால், யூதர்கள் விரும்பிய படி ஒவ்வொரு வருடமும் ஜெருசலேமுக்கு யாத்திரை சென்று வர முடிந்திருக்கும். நிலைமை அப்படி இருக்கையில், அவர்கள் ஜெருசலேமில் தான் குடியேற வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லையே?உசாத்துணை: 
Rome and Jerusalem, The Clash of Ancient Civilizations, Martin Goodman
A History of Christianity, Diarmaid MacCulloch
The Jewish War, Flavius Josephus 
Vreemd Volk, Integratie en discriminatie in de Griekse en Romeinse wereld, Fik Meijer

Tuesday, November 03, 2015

மேலைத்தேய முதலாளித்துவம் சிறந்தது என்பது ஒரு மாயை


மேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள்? ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.

சோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு? என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: "எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்..."

அதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, "அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்..."

அதெல்லாம் உண்மையா? ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது? போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும்.

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.

"சோம்பேறிகளை" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, "உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன." இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு?

நெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:

//அதிக வேலைப்பளு காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.

அதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் "சுகாதார நிர்வாகி" ஒருவர் நியமிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும்.

ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்? இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)

இந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.

சாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள். 

 ******

சோஷலிச நாடுகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்ற கதைகளை பற்றி அடிக்கடி கேள்விப் பட்டிருப்பீர்கள். சில அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நேரம், அரசு அவற்றை அனைத்து மக்களுக்கும் கிடைக்குமாறு பங்கிட்டுக் கொடுத்தது.

முதலாம், இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய காலங்களில், மேற்கத்திய நாடுகளிலும் அதே மாதிரியான நிலைமை இருந்தது. அந்த நாடுகளிலும் நீண்ட வரிசைகளை காண முடிந்தது. ஆனால், அது பற்றி யாரும் பேச மாட்டார்கள். பொதுவாக, மற்றவர்களுடன் பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலப் பிராணிகள், சோஷலிச நாடுகளில் பாவனையாளர்கள் வரிசையாக நின்ற கதைகளை அடிக்கடி நினைவு படுத்துவார்கள்.

ஒவ்வொரு வருடமும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், "கருப்பு வெள்ளி தினம்" (Black Friday) பிரபலமானது. அதில் அப்படி என்ன விசேஷம்? சென்னையில் வாழும் மக்களுக்கு, ஆடித் தள்ளுபடி, தீபாவளி மலிவு விற்பனை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அது தான் இதுவும். மேற்கத்திய நாட்டவருக்கு, டிசம்பர் மாதம் தான் கொண்டாட்டங்கள் நிறைந்தது. அதனால், வர்த்தக நிலையங்களும் அந்த மாதத்தில் தான், விசேட கழிவு விலையில் பொருட்களை விற்பார்கள்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வர்த்தகர்களின் நன்மை கருதி, கருப்பு வெள்ளி என்று ஒரு நாளை விடுமுறை நாளாக்கி விட்டார்கள். அன்றைக்கு அதிகாலை மூன்று மணிக்கே கடைகள் திறக்கப் படும். அன்று மட்டும் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதால், அதை வாங்குவதற்காக மக்கள், முதல் நாளே கடைகளுக்கு முன்னால் வந்து காத்திருப்பார்கள்.

கடைகள் திறக்கப் பட்ட உடனேயே, பட்டியில் இருந்து அவிழ்த்து விடப் பட்ட ஆடு,மாடுகளைப் போன்று முண்டியடித்துக் கொண்டு ஓடுவார்கள். முதல் ஆளாக சென்று தமக்கு பிடித்த பாவனைப் பொருட்களை வாங்குவதற்கு அடிபடுவார்கள். சிலர் இந்த நெரிசலுக்குள் சிக்கி, மிதி பட்டு, நசி பட்டு, மூச்சுத் திணறி இறப்பதுண்டு, அல்லது காயப் படுவதுண்டு.

இது தான், மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் மக்களை நடத்தும் லட்சணம். மக்களை நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைகளாக்கி, தன் உணர்வற்ற கால் நடைகளாக நடத்துகின்றது. மேற்கத்திய நாடுகளில், முதலாளித்துவம் மக்களை சுய மரியாதையுள்ள மனிதர்களாக மதிப்பதில்லை. அவர்களை நுகர்வதற்காக மட்டும் வாழும் நடைப் பிணங்களாக வைத்திருக்கிறது.

மேலைத்தேய முதலாளித்துவம் சிறந்ததென, இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சில ஜென்மங்களை என்ன செய்யலாம்?


Wednesday, October 28, 2015

நெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப் போராட்டம்


மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகள் தான். இருப்பினும், முன்னாள் சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை, நலன்புரி அரசு என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகின்றன. அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் "சோஷலிசப் பாதையில் பயணிக்கின்றன..." என்று சொல்ல வரவில்லை.

ஆனால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் வைத்த பல கோரிக்கைகளை, முதலாளித்துவ அரசே ஏற்றுக் கொண்டு செயற்படுத்தி வருகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள் சிலர், "மேற்கத்திய பாணி முதலாளித்துவ - ஜனநாயகத்தை" ஆதரிக்கும் அதே நேரம், அங்கு நடந்த வர்க்கப் போராட்டத்தை வசதியாக மறந்து விடுகின்றனர்.

இப்படியான தகவல்களை, மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். தங்களது நாட்டில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், தங்களைப் போன்று வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம்.

நெதர்லாந்தில் இருப்பதைப் போன்று, குப்பை அள்ளும் தொழிலாளியின் சம்பளம், அலுவலகப் பணியாளரின் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால்...? சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்களும், வசதியாக வாழத் தொடங்கினால்...? ஐயகோ... அந்த நிலைமையை நினைக்க நெஞ்சு பதறுகின்றதே! இது தான் மத்தியதர வர்க்கத்தினரின் கெட்ட கனவு. அதற்காகத் தான் சோஷலிசத்தை வெறுக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடக்காத ஐரோப்பிய நாடு எதுவும் கிடையாது. நீங்கள் எந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டாலும், அந்த நாட்டில் எந்தக் கட்சி, எப்படியான போராட்டங்களை நடத்தியது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன். சோஷலிசத்திற்கான மக்கள் போராட்டத்திற்கு எந்த ஐரோப்பிய நாடும் தப்பவில்லை.

இன்றைக்கு ஐரோப்பிய மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு அங்கு நடந்த வர்க்கப் போராட்டம் தான் காரணம். நெதர்லாந்து நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பற்றி அதிகமாக அறிந்திருப்பதால், அதைப் பற்றி தொடர்ந்து விரிவாக எழுத விரும்புகிறேன். இந்தியா, இலங்கையில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தகவல்கள் பிரயோசனமாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் காலம் வரையில், தொழிலாளர்கள் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். பதினாறு சதுர அடி கொண்ட சிறிய வீட்டுக்குள், ஒரு பெரிய குடும்பம் வசித்தது. படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, எல்லாம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அதற்குள், தந்தை, தாய், ஐந்து பிள்ளைகள் வாழ்வது சர்வ சாதாரணம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் அந்தக் காலங்களில் சர்வ சாதாரணம். நெசவாலைகளில் தரையில் கொட்டும் நூல்களை பொறுக்குவது போன்ற வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், இயந்திரங்களுக்கு நடுவில் சிக்கி பல சிறுவர்கள் கைகளை இழந்துள்ளனர்.  

சிறார் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமும் மிகக் குறைவு என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. ஏன் அவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை என்று கேட்கலாம். வறுமையில் வாழ்ந்த பெற்றோருக்கு வேறு வழி இருக்கவில்லை. தமது பிள்ளைகளும் சேர்ந்து சம்பாதித்தால் தான் அன்றாட உணவு கிடைக்கும் என்ற நிலைமை.

தொழிலாளர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். சிறுவர்களும் தான். மதிய உணவு இடைவேளைக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஓய்வு கிடைக்கும். அதற்குப் பின்னர், இரவு ஏழு மணி வரையில் வேலை செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பதினான்கு அல்லது பதினாறு மணி நேர வேலை சர்வ சாதாரணம். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஓய்வு நாள்.

தொழிலாளர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப் பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களில் சேர்ந்து கொண்டார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. வேலைக்குப் போனால் மட்டும் தான் சம்பளம் கிடைக்கும் என்றிருந்த காலத்தில், ஒரு நாள் வேலை நிறுத்தம் கூட, அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆயினும், உரிமைகளை பெறுவதற்காக மனம் தளராமல் போராடினார்கள். 

நெதர்லாந்தின் வர்க்கப் போராட்டம், 1906 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட NVV (Nederlands Verbond van Vakverenigingen - நெதர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) சோஷலிச தொழிற்சங்கத்துடன் தொடங்கியது. 

அதற்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில் இருந்து அங்கே இயங்கிக் கொண்டிருந்த SDAP (Sociaal-Democratische Arbeiderspartij - சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) அரசியல் போராட்டங்களை நடத்தியது. SDAP ஒரு மார்க்சிய சமூக - ஜனநாயகக் கட்சியாகும். நெதர்லாந்தில் சோஷலிசத்தை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப் பட்டது.

NVV தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பியது. சோஷலிசம் என்றால், குறிப்பாக மத்தியதர வர்க்க  இளைஞர்கள் பலருக்கு என்னவென்ற தெளிவில்லை என்பது தெரிகின்றது. ஓய்வூதியம், விடுமுறை, எட்டு மணி நேர வேலை, பல்வேறு காப்புறுதிகள், இவையெல்லாம் சோஷலிசம் தான்.


அது மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வாக்குரிமை இவை கூட சோஷலிசத்திற்கான போராட்டம் மூலம் தான் சாத்தியமானது. அவை எதையும் அரசு சும்மா தூக்கிக் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.

உலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் முதலாளிகள் தமக்கு சார்பான கருங்காலி தொழிற்சங்கத்தை உருவாக்கி இருந்தனர். CNV என்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கம், முதலாளிகளுடன் சமரசமாகப் போவதை விரும்பியது. (முதலாளியும் கிறிஸ்தவர். ஆகவே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.)

1906 ம் ஆண்டு, NVV ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. Het Volk (மக்கள்) என்ற சோஷலிச மாற்றத்திற்கான சஞ்சிகையின் அட்டைப் படத்தை இங்கே பார்க்கிறீர்கள். "வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பின் கீழான கருத்துப் படம் வரையப் பட்டுள்ளது. கீழே, கிறிஸ்தவ தொழிலாளர் சொல்கிறார்: "நான் போராட்டத்தை விரும்பவில்லை. ஒத்துழைப்பதை விரும்புகிறேன்." அதற்கு முதலாளி கூறுகிறார்:"சரியாகச் சொன்னாய்... அது தான் எனது நோக்கமும்...பட்...பட்..."
மேலதிக தகவல்களுக்கு:
Naar groter eenheid, De geschiedenis van het Nederlands Verbond van Vakvereningen 1906 -1981