Tuesday, April 30, 2024

தமிழ்த் தேசிய மே நாள்!

 


இவ்விரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஒரு கட்சி "தமிழ்த் தேசிய மே நாள்" என்று பிரிவினை பேசுகிறது.
மற்ற கட்சியும் அதே பாணியில் "தமிழ்த் தேசத்து தொழிலாளர்" என்று பிரிவினை அரசியலை பேசுகிறது.

முதலாளிகள் ஒற்றுமையை இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ் தொழிலாளர்கள் சிங்களத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.
அதற்கு தான் தமிழ்த் தேசியம் என்ற மாயத் திரை தேவைப் படுகிறது.

உலகில் எந்த நாட்டிலும், இப்படியான மோசடியான மே தினத்தை பார்க்க முடியாது. ஒரு காலத்தில் ஜெர்மனியில் ஹிட்லரின் Nazi கட்சி இதே மாதிரி "ஜெர்மன் தேசிய மே நாள்", அல்லது "ஜெர்மன் தேசத்து தொழிலாளர்" பற்றி பேசியது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போது யாரும் அப்படி பேசத் துணிய மாட்டார்கள். உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. இன, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தொழிலாளர்களை தேசியம் பேசி பிரிப்பது அயோக்கியத்தனமானது.

அது போகட்டும்.
இவர்கள் சொல்லும் தமிழ் தேசத்தில் இன்றைக்கும் உள்ள தொழிற்சாலைகளை விரல் விட்டு எண்ணலாம். பெரும்பாலானவை சிறிய தொழிலகங்கள். அதனால் அமைப்பு ரீதியாக அணிசேரா தொழிலாளர்கள் சிறு முதலாளிகளின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். 
அந்த சிறு முதலாளிகள் செய்யும்  கொடுமைகள் எண்ணில் அடங்காதவை:
- மிகக் குறைந்த கூலி கொடுப்பது.
- அதிக நேரம் வேலை வாங்குவது.
- ஓய்வு நாட்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திப்பது. 
- தினசரி வேலைக்கு வரச் சொல்வது.
- ஆபத்தானவை வேலைக்கு பாதுகா‌ப்பு கவசங்கள் கொடுக்க மறுப்பது.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இவற்றை எல்லாம் இந்த முதலாளித்துவ கட்சிகள் மேதின கோரிக்கைகளாக வைக்க மாட்டார்கள்.

காரணம்: மேற்படி கொடுமைகளுக்கு காரணமான தமிழ் பேசும் சிறு முதலாளிகள் தான் இந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நிதி வழங்குகிறார்கள். அதாவது தமிழ் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டி அவர்களிடம் இருந்து திருடிய பணத்தில் தான் இந்த முதலாளித்துவ கட்சிகள் அரசியல் நடத்துகின்றன!
பணம் பேசுகிறது!


Saturday, April 27, 2024

EPDP & TMVP யின் இணக்க அர‌சிய‌ல், ஆயுதப் போராட்டத்தின் தோல்வி!

டக்ளஸ் தலைமையிலான EPDP மற்றும் கருணா/பிள்ளையான் தலைமையிலான TMVP ஆகிய அரசியல் கட்சிகள், சிறிலங்கா அரசுடன் ஒத்துழைப்பது தமிழீழத்திற்கான ஆயுத போராட்டத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகின்றது! 

விளக்கம் கீழே 👇👇👇

இவ்விரு கட்சிகளை உருவாக்கிய ஆரம்ப கால உறுப்பினர்கள் முன் ஒரு காலத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அவர்கள் வந்தடைந்த இடம் என்னவென்று விபரிக்க தேவையில்லை.

இன்னொரு வகையில் பார்த்தால், அவர்களால் தனித்து நின்று எதிர்ப்பு அரசியல் செய்ய முடியாது. காரணம், முன்பு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் என்பதால், அரசு எந்நேரமும் சந்தேகம் கொண்டிருக்கும். இனவாத மனநிலையும் இலகுவில் நம்ப விடாது. இதற்கு பல ஆதாரங்களை காட்டலாம். 

முன்னாள் இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய நந்திக் கடல் நோக்கி நூலை வாசிக்கவும். புலிகளால் இயங்க விடாமல் தடுக்கப் பட்ட முன்னாள் போராளிக் குழுக்கள், அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை எதிர்த்து போரிட முன்வந்த போதிலும் அவர்களை தம்முடன் சேர்க்காமல் தனித்து இயங்க விட பட்டதாக குறிப்பிடுகிறார். காரணம்: "அவர்களை நம்ப முடியாது. ஒரு காலத்தில் எமக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்டவர்கள்." 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் துணைப் படைக் குழுக்கள் இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு இருந்தன. அரசு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி இருந்தாலும், இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் குழுக்கள் தமது நிதி ஆதாயத்திற்காக தமிழ் வர்த்தகர்களிடம் மிரட்டி கப்பம் வசூலிப்பதை கண்டு கொள்ளவில்லை.  

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இன்று எதிர்ப்பு அரசியல் செய்யும் தரப்பினர் யார் என்று பார்த்தால், அவர்களுக்கும் ஆயுத போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது! சிலரது உறவினர்கள் போராளிகளாக இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் இவர்கள் யாரும் இயக்கத்தில் சேரவில்லை. உறங்காமல் விழித்திருந்து படித்து இருப்பார்களே தவிர, ஒரு இரவாவது காவலரண் கடமையில் இருந்திருக்க மாட்டார்கள். 

அனைவருக்கும் தெரிந்த தமிழரசுக் கட்சி, அதிலிருந்து பிரிந்து சென்று "தீவிர புலி அரசியல்" பேசும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி. இவ்விரண்டு கட்சிகள் தான் அரசை எதிர்த்து அரசியல் செய்யும் தூய தமிழ்த் தேசியக் கட்சிகளாக தம்மைக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒரு போதும் துப்பாக்கியை கையால் தொட்டிருக்க மாட்டார்கள். 

ஆயுத பாணி இயக்கங்களை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் இரு‌ந்து அரச இராணுவத்தை எதிர்த்து போராட்டிக் கொண்டிருந்த காலத்தில், இவர்கள் படித்து பட்டம் பெற்று அதே அரச இயந்திரத்தில் வேலைக்கு சென்றனர். இது தான் யதார்த்தம். 

ஆழமாக சிந்தித்து பாருங்கள். ஒரு போதும் ஆயுதம் தூக்கியிராதவர்கள், இன்னொரு விதமாக சொன்னால் மிதவாதிகள் "எதிர்ப்பு அரசியல்" செய்வதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதே நேரம் அவர்களே இணக்க அரசியல் செய்யும் முன்னாள் போராளிகளை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகும் எவனாவது தமிழீழத்திற்காக ஆயுதமேந்தி போராட முன்வருவானா? ஆளை விட்டால் போதும் சாமி என்று ஓடி விடுவான். 

அது... வந்து... என்று இழுக்காதீர்கள். ஒருவேளை பிரபாகரன் ஆயுதங்களை கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினாலும் அரசுடன் ஒத்தோடும் இணக்க அரசியல் செய்து கொண்டிருப்பார். உலகில் தனிநாடு பிரிவினை கேட்டு போராடிய இயக்கங்கள் எல்லாம் கடைசியில் அவ்வாறான இடத்திற்கு வந்தடைந்து உள்ளன. PLO முதல் IRA வரை பல உதாரணங்கள் காட்டலாம்.

Thursday, April 25, 2024

பு‌லிக‌ளி‌ன் ஈழத்திலும் சாதிக்கொரு நீதி!


புலிகளின் காலத்தில் சாதி வெறியர்களுக்கு மிக மென்மையான "தண்டனை" கொடுத்து சாதிய கட்டமைப்பை பாதுகாத்து வந்துள்ளனர். இதனை "அதி தீவிர புலி விசுவாசி" ஒருவர் தானாகவே உறுதிப் படுத்தி உ‌ள்ளா‌ர். 

ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சாமி தூக்க விடாமல் உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த நிர்வாகத்தினர் தடுத்துள்ளனர். அதற்கு தண்டனை என்ன? 
தாழ்த்தப்பட்ட சாதியினர் முதுகில்/கையில் சீனியை கொட்டி நக்க வைத்து ஒரு வேடிக்கையான, மிகவும் மென்மையான தண்டனை கொடுத்துள்ளனர்! 

ஏனென்றால் அந்தக் குற்றவாளிகள் சாதியால் உயர்ந்தவர்கள். அவ‌ர்களு‌க்கு கடுமையான தண்டனை கொடுக்க முடியாது. குறைந்த பட்சம் துரோகிகள், ஒட்டுக் குழு என்று முத்திரை குத்தி சமூகத்தில் இருந்து ஒதுக்க முடியாது. காரணம் அவர்கள் சாதியால் உயர்ந்தவர்கள்! பண வசதி படைத்த ஆதிக்க சாதியினரின் நிதி போராட்டத்திற்கு தேவை. அதனால் அவர்களை பகைக்க கூடாது.
இது தான் புலிகளின் நீதி! 
சாதிக்கொரு நீதி.

சரி, அதற்கு பிறகாவது சாமி தூக்க அனுமதித்தார்களா? 
இல்லை. கோயிலை மூடி விட்டார்கள். இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக ஆதிக்க சாதியினருக்கு தான் ஆதாயம். போர் நடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு அவ‌சிய‌ம். அதனால் அவர்களை திருப்திப் படுத்த தற்காலிகமாக கோயிலை மூடி விட்டனர். போர் முடிந்த பின்னர் திறக்கப் படும். ஆனால் பழைய நிலைமையே தொடரும். அதுவும் புலிகளுக்கு நன்றாகத் தெரியும். 

புலிகள் உண்மையிலேயே சாதியத்தை ஒழிக்க விரும்பி இருந்தால் சாதி வெறியர்களுக்கு மரண தண்டனை வழங்க எது தடையாக இருந்தது? 

கண்டிக்கு சென்று சிங்கள இனவெறி யின் சின்னமாக கருதப்பட்ட தலதா மாளிகைக்கு குண்டு வைக்க தெரிந்தவர்களுக்கு, அருகில் இருந்த சாதி வெறிக் கோயிலுக்கு குண்டு வைக்க முடியவில்லை. 
என்ன காரணம்? 

#அறிவோம்ஈழம்


Saturday, April 20, 2024

தமிழ்த் தேசியம்- ஒரு அதிகார வர்க்க ஒத்தோடி அரசியல்

மலையக தமிழ் தொழிலாளர்களை யாழ் தமிழ் கங்காணிகள் ஒடுக்கியது பற்றிய விவாதம் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் நடந்து வருகின்றது. 

இந்த வரலாற்றை மறுப்பவர்கள் கூறும் (வழமையான) காரணம், இந்த குற்றச்சாட்டு தமிழர்களை "பிளவு படுத்துகிறது"(!) என்பது தான். இப்படி பேசுவோர், "தமிழர்கள் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்..." என்ற இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் அதை சொல்கிறார்கள். உண்மையில் அது ஒரு கற்பனை (myth). உலகில் உள்ள ஏனைய இனங்கள் போன்று தமிழர்களும் "ஒரே இனமாக, ஒற்றுமையாக" வாழவில்லை. பகை முரண்பாடு கொண்ட சமூகங்களாக பிரிந்து நின்றனர். இன்றைக்கு அதில் பெருமளவு மாற்றம் வந்திருந்தாலும் வர்க்க முரண்பாடு மாறவே மாறாது. காரணம், இவர்கள் வாழும் முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு. 

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களை அழைத்து வரும் போதே கங்காணிகளையும் கொண்டு வந்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அப்படி நடந்திருக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் பிரித்தாளும் கொள்கையில் சிறந்த பிரிட்டிஷ்காரர்கள் காலப்போக்கில் யாழ்ப்பாண கங்காணிகளை பணியில் அமர்த்தினார்கள்.

அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:

1. இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை விட தனித்துவமான வரலாறு, பண்பாட்டை கொண்டவர்கள்.

2. இரண்டு வகை தமிழர்களுக்கு இடையில் உள்ள சாதி வேறுபாடு. அந்தக் காலத்தில் யாரிடமும் மொழி உணர்வு அல்லது இன உணர்வு இருக்கவில்லை. சாதிய உணர்வே மேலோங்கி  இருந்தது.

3. யாழ்ப்பாணத் தமிழர்கள் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இது மிக முக்கியமானது. எந்த அதிகார வர்க்கமும் தமக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினருக்கு பதவிகளை கொடுக்கும். 

பொதுவாக முதலாளித்துவ கட்டமைப்பு எவ்வாறு இயங்குமோ அ‌வ்வாறு தான் மலையகத்தில் நிலைமை இருந்தது. 

அதாவது முதலாளித்துவ சமுதாயத்தில் 3 வகையான வர்க்கப் பிரிவினைகள் இருக்கும்:

1. பெரும் முதலாளிகள். மலையகத்தில் பெருந்தோட்ட முதலாளிகள். அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேய அல்லது ஐரோப்பிய இனத்தவர்கள். 

2. முதலாளிகளுக்கு சேவை செய்யும் நடுத்தர வர்க்கம் அல்லது குட்டி முதலாளிய வர்க்கம். மலையகத்தில் கங்காணிகள், கீழ் மட்ட மனேஜர்கள், அலுவலக ஊழியர்கள். அவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள். 

3. அடித்தட்டு பாட்டாளி வர்க்கம். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்ட தொழிலாளர்கள். தமிழ் பேசினாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர். அதைவிட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக் கொள்ள தயாராக இருந்தவர்கள். 

இவ்வாறு மூன்று வர்க்கப் பிரிவுகளாக மலையகம் இருந்தது. இவர்களுக்குள் இணக்கப்பாடுகள் மட்டுமல்ல முரண்பாடுகளும் இருந்தன. அவற்றைப் பற்றி பேசாமல் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கடந்த கால வர்க்கப் போராட்ட  வரலாற்றை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டு இனவாதக் கண்ணோட்டத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவது  அதிகார வர்க்க ஒத்தோடித்தனம் அல்லாமல் வேறென்ன? இதைத் தான் தமிழ்த் தேசியம் காலாகாலமாக செய்து கொண்டிருக்கிறது.

Monday, April 15, 2024

"இராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்த ஜே.வி.பி!" நடந்தது என்ன?

ஜேவிபி க்கு எதிராக தமிழ் தரப்பில், தமிழ் வலதுசாரிகள், முன்வைக்கும் குற்றச்சாட்டு: "யுத்தம் நடந்த காலத்தில் ஜேவிபி யினர் கிராமம் கிராமமாக பிரச்சாரமும் செய்து இராணுவத்திற்கு ஆள் சேர்த்து கொடுத்தனர்!" 

இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் கூட அதை இனவாதக் கண்ணோட்டத்தில் தான் சொல்கிறார்கள். 

1. புலிகளின் காலத்தில், அவ‌ர்களது பிரச்சாரங்களில், "இராணுவம் என்பது தமிழர்களின் இரத்தம் குடிக்க காத்திருக்கும் காட்டேரிகள்" என்று தான் சித்தரிக்கப்பட்டது. உ‌ண்மையான விடுதலைப் போராட்டம் என்றால் இராணுவத்தை வென்றெடுக்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் அதை விடுத்து தமிழர்களுடன் எந்தப் பகைமையும் காட்டாத இராணுவ வீரர்களையும் எதிரிகள் ஆக்கியது தான் புலிகளின் "சாதனை". 


2. வி.பு. தலைவர் பிரபாகரன் "துப்பாக்கிக் குழலிருந்து அதிகாரம் பிறக்கிறது" என்ற மாவோவின் மேற்கோளை சொல்லிக் காட்டுவார். அவர் உண்மையில் மாவோ எழுதிய "தேர்ந்தெடுத்த இராணுவப் படைப்புகள்" என்ற நூலை வாசித்து அறிந்து இருந்தால், சிறிலங்கா இராணுவத்தை தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பார். இந்த விஷயத்தில் புலிகள் விட்ட தவறை ஜேவிபி பயன்படுத்தி கொண்டது. 


3. ஜேவிபி தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு விஷயத்தை கவனிக்கவும்: "கிராமம் கிராமமாக இராணுவத்திற்கு ஆள் சேர்த்தார்க‌ள்." கவனிக்கவும்: நகரம் நகரமாக அல்ல "கிராமம் கிராமமாக". இலங்கையின் கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால், வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் அங்குள்ள இளைஞர்களுக்கு  இராணுவத்தில் சேர்வது வறுமையில் இருந்து மீள்வதற்கு ஒரு தெரிவாக உள்ளது. 


4. ஜேவிபி அன்று நடந்த போரை பயன்படுத்தி தனக்கு ஆதரவான ஆட்களை இராணுவத்திற்குள் சேர்த்து விட்டால் பிற்காலத்தில் உதவும் என்று கணக்குப் போட்டதில் தப்பில்லை. ஆ... வந்து... என்று இழுப்பவர்கள் பிரபாகரன் மேற்கோள் காட்டிய மாவோவின் படைப்புகளை வாசித்து விட்டு வாருங்கள். அரச இயந்திரமான இராணுவத்தை கொள்கை ரீதியாக வென்றெடுப்பது விடுதலைப் போராட்டத்தில் அரைவாசி வெற்றியை அடைந்ததற்கு சமன். தற்போது இராணுவத்திற்கு உள்ளே ஜேவிபி ஆட்கள் இருப்பதால் எதிர்காலத்தில் அரசு ஜேவிபி யை ஒடுக்கி அழிப்பது மிக கடினமாக இருக்கும். 


5. வழமையாக ஜேவிபி புலிகளை எதிர்த்து ஏதாவது பேசி விட்டால் அதை தமிழர்களுக்கு எதிராக பேசியது போன்று திரித்து செய்தி வெளியிடுவது வலதுசாரி தமிழ் ஊடகங்களின் வாடிக்கை. பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. அதனால் யாரும் ஆராய மாட்டார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. சுனாமி கட்டமைப்பு ஒப்பந்தம் அந்நிய நிதி உதவி மூலம் புலிகளை பலப் படுத்தி விடும் என்று ஜேவிபி எதிர்த்தது. ஆனால் அதை தமிழர்களுக்கு எதிரானதாக தமிழ் ஊடகங்கள் சித்தரித்தன. 

1989 ம் ஆண்டு நடந்த ஜேவிபி அழித்தொழிப்பில் புலிகள் அரச படையினருடன் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டனர். தமிழ்த் தேசியவாதிகளுக்கு புரியும் மொழியில் சொன்னால் "அன்று புலிகள் ஒட்டுக் குழுவாக செயற்பட்டு இனப் படுகொலையில் பங்கெடுத்தனர்!" 

அதன் விளைவு: பழிக்கு பழி வாங்குவது மாதிரி பிற்காலத்தில் புலிகளை அழிக்க ஜேவிபி அரச படையினருடன் ஒத்துழைத்தது. இதை சரியென்று சொல்ல வரவில்லை. மேலே வீசுவது தான் கீழே வரும். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ, அதே தான் உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும்.