Showing posts with label இனப்படுகொலை. Show all posts
Showing posts with label இனப்படுகொலை. Show all posts

Saturday, April 25, 2015

கெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா? அல்லது மக்கட்படுகொலையா?

Genocide (கெனோசீடே) என்ற சொற்பதத்தினை தமிழில் இனப்படுகொலை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அது பல தடவைகள் சரியான அர்த்ததுடன் பயன்படுத்தப் படுவதில்லை.

Genos (கெனோஸ்) என்ற கிரேக்க சொல்லுக்கு நிகரான சமஸ்கிருத சொல் "கணம்". அதையொத்த தமிழ்ச் சொல் ஜனம் (மக்கள்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

Genocide என்பது பெரும்பான்மையான உலகமொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப் பட்டாலும், தமிழ் போன்று பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து பாவிக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Völkermord. டச்சு மொழியில் Volkerenmoord, சுவீடிஷ் மொழியில் Folkmord. டேனிஷ் மொழியில் Folkemord / Folkedrabet.

ஜெர்மன் சொல்லான völk ஆங்கிலத்தில் folk, அதாவது மக்கள் என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது. சிங்கள மொழியில் கூட, "மக்கள் அழிப்பு" (ජන සංහාරය - ஜன சங்காரம்) என்று தான் மொழிபெயர்த்துள்ளனர்.

ஆகவே, இதனை தமிழில் "மக்கட்படுகொலை" என்று மொழிபெயர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

//இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.//
அது தொடர்பான என்னுடைய கருத்துக்கள்:
ரஃபேல் லெம்கின் பெருந்திரளான மக்கள் படுகொலையை குறிப்பதற்கு தான் அதைப் பயன்படுத்தினார். ஏற்கனவே யூதப் படுகொலையானது, pogrom (ரஷ்யா), holocaust (ஜெர்மனி) போன்ற ஹீபுரு மொழிச் சொற்களால் அழைக்கப் பட்டு வந்துள்ளன. அதை யூதர்கள் தமக்குரிய சொல்லாக மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ஜேர்மனியர்களும், யூதர்களும் தனிதனி இனமாக இருக்கவில்லை. ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் தான். சியோனிஸ்டுகளும், நாஸிகளும் யூதர்களை தனியான இனமாகக் உருவகித்துக் காட்ட முனைந்தனர். ஆயினும், இன்றைய நாகரிக உலகில் அந்தக் கருத்துக்கள் இனவாதமாக கருதப் படுகின்றன.
பொஸ்னியாவில் சேர்பியர்களினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களும் தனியான இனம் அல்ல. நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், செர்பியர்களுக்கு நெருக்கமானவர்கள். மதம் மட்டுமே வேறு வேறு.

மேலும், இந்தோனேசியாவில், குவாத்தமாலாவில், அரசியல் கொள்கை வேறுபாடு காரணமாக நடந்த genocide பற்றி பெரும்பாலான தமிழர்கள் பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த genocide பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஆனால், அது கூட கம்போடியர்களை கொலை செய்த கம்போடியர்களுக்கு எதிரான நீதிமன்றம் தான். ஒரே மொழி பேசும், ஓரின மக்களுக்கு இடையில் நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.

"ஒரே மொழி பேசும் மக்களுக்குள் படுகொலை நடந்திருந்தால், அது இனப்படுகொலை ஆகாது" என்று சில தமிழ் அறிவுஜீவிகள் வாதாடுகிறார்கள். அது தவறு. யூதர்களும், ஜெர்மனியர்களும் ஒரே மொழி பேசினார்கள். சேர்பியர்களும், பொஸ்னியர்களும் ஒரே மொழி பேசினார்கள். ஆனால், அவை எல்லாம் genocide என்று தான் அழைக்கப்பட்டன.

Genocide என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். genos என்ற கிரேக்கச் சொல்லையும், cide என்ற லத்தீன் சொல்லையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. அப்போது எந்த ஐரோப்பிய மொழியிலும் அப்படி ஒரு சொல் இருக்கவில்லை. genocide என்பது பெருந்தொகையான அளவில் மக்களை படுகொலை செய்வதைக் குறிக்கும். ஐ.நா. வில் அதற்கான வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்த பொழுது கூட பல நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

குறிப்பாக தமிழில் " இனப்படுகொலை" என்று சொல்லும் அர்த்தத்தில்பயன்படுத்துவதை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே காலனிகளில் இருந்த பூர்வகுடி இனங்களை அழித்தொழித்து விட்டிருந்தன. 

அதனால், தமிழில் புரிந்து கொள்ளப்படும் "இனப்படுகொலை" என்ற அர்த்தத்தில், மேற்குலகில் பயன்படுத்தப் படுவதில்லை. Genocide என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்குள் இனம் என்ற அர்த்தம் வரக்கூடாது என்று அமெரிக்கர்கள் பிடிவாதமாக மறுத்து வந்தனர். ஏனென்றால் செவ்விந்தியர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படும் என்ற அச்சம் காரணம்.

நாகரிக உலகின் போக்கிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் திருத்தங்கள் கொண்டு வருவது புதுமை அல்ல. வன்புணர்ச்சி, பாலியல் தொழிலாளி, திருநங்கையர், மாற்றுத் திறனாளி போன்ற பல புதிய சொற்கள், ஏற்கனவே இருந்த விரும்பத்தகாத அர்த்தம் தரும் சொற்களுக்கு மாற்றாக வந்துள்ளன. அதே மாதிரி, இனப்படுகொலை என்பதை மக்கட்படுகொலை என்று திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!
http://kalaiy.blogspot.nl/2014/04/blog-post.html
மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_30.html
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2013/03/blog-post_8.html
அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு
http://kalaiy.blogspot.nl/2013/04/blog-post_17.html
கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள் http://kalaiy.blogspot.nl/2014/06/blog-post_4.html
இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள் http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html 
உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_11.html 
ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_21.html 
இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_6.html

Wednesday, June 04, 2014

கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. 

கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர்.


கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்:
1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்.
2) Métis : கலப்பின வம்சாவளியினர்.
3) Inuït :  முன்பு எஸ்கிமோக்கள் என்று அழைக்கப் பட்ட துருவப் பகுதி மக்கள். 

மேற்குறிப்பிட்ட பூர்வகுடி மக்களைப் பாதுகாப்பதற்காக தனியான பிரதேசங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், இன்றைய கனடிய அரசு, அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, மெல்ல மெல்ல ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வேலையற்றோர் எண்ணிக்கை பூர்வ குடியினர் மத்தியில் அதிகமாக காணப் படுகின்றது. அரச கொடுப்பனவுகளில் பெரும் பகுதி, மது பாவனைக்கு செலவாகின்றது. அவர்களது ஆயுட்காலமும் குறைவு. பருவ வயது இளைஞர்களில், பாடசாலைக்கு சென்று படிப்பவர்கள் குறைவு. ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்குள் இருப்பவர்கள் தான் அதிகம். இது ஒரு வகையில், மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டிருக்கும்  இனப்படுகொலை.

கனடிய பூர்வகுடிகளின் இனவழிப்பு, 1844 ம் ஆண்டே ஆரம்பமாகி விட்டது. அன்றிருந்த கனடிய அரசு ஆணைக்குழு, சிறு குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து, விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது.  நாடு முழுவதும், 139 விடுதிப் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. பூர்வ குடிகளின் வாழிடங்களில் இருந்து, தொலைதூரத்தில் அமைந்திருந்த படியால், அவற்றை தடுப்பு முகாம்களாகவே கருத வேண்டும். 

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வகுடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப் பட்டனர். அவர்களை தங்க வைத்த விடுதிப் பாடசாலைகளை, கத்தோலிக்க அல்லது புரட்டஸ்தாந்து திருச்சபைகள் நிர்வகித்து வந்தன என்பது தான் விசேஷம். கிறிஸ்தவ மதப் பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் பாடசாலை ஆசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்தனர். 



கிறிஸ்தவ பாதிரிகள் நடத்திய பாடசாலைகள் என்பதால், அன்பாக கவனித்து இருப்பார்கள், என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். விடுதிப் பாடசாலைகளுக்கு கொண்டு வரப் படும் குழந்தைகளை முதலில் குளிக்க வார்ப்பார்கள். அதற்குப் பிறகு பேன் தடுப்பு மருந்து போடுவார்கள். குழந்தைகளுக்கு புதிய ஆங்கில- கிறிஸ்தவ பெயர் சூட்டப் படும். அவர்கள் அங்கே ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். பூர்வகுடிகளின் தாய்மொழியை பேசிய பிள்ளைகள் தண்டிக்கப் பட்டார்கள். "தாழ்வான" பூர்வக்குடிப் பிறப்பு குறித்த குற்றவுணர்வு, அவர்கள் மனதில் புகுத்தப் பட்டது. 

விடுதிப் பாடசாலைகளில் தங்கிப் படித்த பூர்வக்குடிப் பிள்ளைகளை, நிவாகிகளும், ஆசிரியர்களும், "குட்டிப் பிசாசுகள்" என்று ஏளனம் செய்தனர். அனாதரவான பிள்ளைகளை அடிப்பது, துன்புறுத்துவது மட்டுமல்ல, அவர்கள் மீதான பாலியல் பலாத்காரமும் தாராளமாக இடம்பெற்றது. பல குழந்தைகள், அங்கு நடந்த கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓட முயன்றன. தப்பியோடும் முயற்சியில் ஆபத்திற்குள் மாட்டிக் கொண்டதால் பல குழந்தைகள் மரணத்தை தழுவியுள்ளன. பாலியல் அத்துமீறல்கள், சித்திரவதைகள் தாங்க முடியாமல் பல சிறுவர்கள் இறந்தனர், அல்லது கொலை செய்யப் பட்டனர்.  அந்தக் கணக்குகளில் சேர்க்கப் படாத, "வெளிப்படுத்த முடியாத" காரணங்களினால் இறந்து போன பிள்ளைகள், ஆயிரக் கணக்கில் இருக்கும். மொத்தமாக, திட்டமிட்ட வகையில் கொல்லப் பட்டவர்களையும் சேர்த்தால், எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை தாண்டும். 

கடந்த நூற்றாண்டில், எண்பதுகளின் இறுதிக் காலத்திலும், இன ஒதுக்கல் கொள்கை கொண்ட விடுதிப் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. கடைசிப் பாடசாலை 1996 ம் ஆண்டு மூடப் பட்டது. அந்தக் காலகட்டத்தில், கனடிய அரசும், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து திருச்சபைகளும் நடந்த தவறை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரின. ஆயினும், அவர்கள் நடைமுறைப் படுத்திய இனவழிப்புத் திட்டங்கள், இன்று வரையும் ஆறாத வடுக்களாக காணப் படுகின்றன. 

விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கப் பட்ட பிள்ளைகள், தாய், தந்தை பாசத்தை அறியாமலே வளர்ந்து விட்டன. அவர்களது தாய், தந்தையர் யார்? எங்கே வசிக்கிறார்கள்? என்ற விபரம் எதுவுமே தெரியாது. அவர்களுக்கு "உயர்ந்த ஐரோப்பிய நாகரிகத்தை" கற்றுக் கொடுத்தாக, கனடிய அரசு நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அன்று பாதிக்கப்பட்ட பல பிள்ளைகளின் மனதில், அது வெறுப்பைத் தான் விதைத்து விட்டிருந்தது.    


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Sunday, May 18, 2014

நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்


ஒரு இனப்படுகொலையாளி பிரதமராகிறார்! நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பலர் துள்ளிக் குதிக்கின்றனர். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வென்ற பொழுது கூட, இலங்கையில் பலர் இவ்வாறு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மோடி ஆதரவாளர்களில், கணிசமான அளவு தமிழர்களும் அடங்குவார்கள். அவர்கள் யாரும் ஈழப் போரின் துயர முடிவில் இருந்து, எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகின்றது.


முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஐந்தாண்டு நினைவு தினமும், நரேந்திர மோடி இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தினமும் அடுத்தடுத்து வந்தது, ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வரப்போகும் பேரழிவை அது கட்டியம் கூறுகின்றது. 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது, அவர் தமிழ்த் தீவிரவாதத்தை, அல்லது புலிகளை அழித்தொழிப்பார் என்ற என்ற எதிர்பார்ப்பில் பலர் அவருக்கு ஓட்டுப் போட்டிருந்தனர். அதன் விளைவு தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள். 

நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களின் மனநிலையும், அதற்கு சற்றேனும் குறைந்தது அல்ல. இஸ்லாமிய தீவிரவாதத்தை, காஷ்மீர் இயக்கங்களை, நக்சலைட்டுகளை அழித்தொழிப்பார் என்று எதிர்பார்த்து, மோடிக்கு ஓட்டுப் போட்டதாக பலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச முதல்தடைவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நேரம், "அவர் ஒரு மிகத் தீவிரமான சிங்களப் பேரினவாதி, இதற்கு முன்னர் இருந்த எல்லா சிங்களத் தலைவர்களையும் விட கடும்போக்காளர், அவர் ஜனாதிபதியாக தெரிவானால், தமிழர்களுக்கு அழிவுகாலம் நிச்சயம்...." என்றெல்லாம் கூறி, புலிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அன்று, புலிகளின் ராஜபக்ச எதிர்ப்புப் பிரச்சாரங்களை யாரும் பொருட் படுத்தவில்லை. நல்லாட்சி தருவார் என்ற எதிர்பார்ப்பில், பெரும்பாலான மக்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள். 

2005 ம் ஆண்டு, புலிகள் விடுத்த ராஜபக்ச அபாயம் பற்றிய எச்சரிக்கைகள் யாவும், 2009 ம் ஆண்டு உண்மையென மெய்ப்பிக்கப் பட்டது. இலங்கையில் நல்லாட்சி தருவார் என நம்பப் பட்ட கடும்போக்காளர், புலிகளையும், அவர்களோடு ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் படுகொலை செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஒரு பெரும் மனிதப் பேரவலம் நடந்த அந்த நாட்களை, உலகெங்கும் வாழும் புலி ஆதரவாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், மே 18 இனப்படுகொலை தினமாக நினைவுகூர்கின்றனர். 

இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடும் நரேந்திர மோடி பிரதமராக தெரிவானால் ஏற்படப் போகும் ஆபத்துகள் குறித்து, ஏற்கனவே பலர் எச்சரித்திருந்தனர். ஆனாலும், பெரும்பான்மை இந்திய மக்கள், அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு காலத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் மட்டுமல்ல, தன்னை எதிர்த்தவர்களையும் கூட, நரேந்திர மோடி ராஜபக்சவின் பாதையை பின்பற்றி அழித்தொழிக்கலாம். 

இந்தியாவிலும், ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்க விட மாட்டோம் என்று, மே 18 நினைவுநாளில் உறுதி பூணுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து, ஐந்தாண்டுகளுக்கு பின்னரும், ராஜபக்ச எதிர்ப்பு போராட்டம், அயல்நாடான இந்தியாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், உயிர்ப்புடன் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. அதே மாதிரி, மோடி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப் படும்.

Friday, April 04, 2014

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!


இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே நடத்தப் படுகின்றன. எங்கேயும், எப்போதும், தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப் பட்டுள்ளனர். வென்றவர்கள் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு தீர்ப்புக் கூறி உள்ளனர். 

உள்நாட்டுப் போர்களில் வென்ற பிரிவினர், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக எந்தவிதமான தண்டனையையும் அனுபவிப்பதில்லை. உலகம் முழுவதும் இதுவே பொதுவான நடைமுறையாக இருந்து வந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன. 

இந்த உண்மையை, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற வழக்குகளில் பங்கெடுத்த Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். சர்வதேச நீதிமன்றத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ள தகவல்கள், தமிழர்களுக்கும் பிரயோசனப் படும். அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

இலங்கையில் நடந்த ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடந்துள்ளது என்றும், அதனை சர்வதேச சமூகம் விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கும் என்றும் பல தமிழர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய ஆதரவு வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஒரு அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். போர்க்குற்றங்கள் என்ற சொற்பதத்தை பாவிப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.

"இனப்படுகொலை விசாரணை நடத்து!" என்று, உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே குரலில் உரத்துச் சொன்னால் போதும். சர்வதேச சமூகம் செவி கொடுக்கும். யூகோஸ்லேவியா, ருவாண்டா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்காக, விசேட சர்வதேச நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. அதே மாதிரி, இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் படும் என்று உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறு நம்புவோர் மத்தியில், மெத்தப் படித்த அறிவுஜீவிகளும், சட்டத் துறை நிபுணர்களும் அடங்குவார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நவீன உலகம், முன்னரை விட நாகரிகமடைந்து விட்டதாகவும், மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றுள்ளதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால், உண்மை நிலைமையோ, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. அண்மைக் கால உலக வரலாற்றில், சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட போர்கள் நடந்துள்ளன, சில இப்போதும் தொடர்கின்றன.

யுத்தத்தில் ஈடுபடும் அரச படைகளோ, அல்லது ஆயுதக் குழுக்களோ மனித உரிமைகளை மதிப்பதில்லை. உலகில் எந்தவொரு இராணுவமும், ஆயுதக் குழுவும் ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சட்டங்கள் இவற்றை சரியாக நடைமுறை படுத்தி விட்டால் போதும், உலகம் முழுவதும் பாதுகாப்பானதாக மாறிவிடும் என்று நம்புவதற்கு இடமில்லை. இன்றைய உலகில், அது ஒரு கற்பனாவாதமாகவே இருக்கும்.

உலகில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? அதாவது ஒரு நாட்டிற்குள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் சட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே மாதிரி, உலகம் முழுவதும் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் பொதுவான சட்டம் இருக்கிறதா? சட்ட வல்லுனர்கள் மத்தியில் அது தொடர்பாக மிகுந்த குழப்பம் நிலவுகின்றது. ஏனென்றால், புரிந்துணர்வின் அடிப்படையில் நாடுகள் தமக்குள் சில உடன்படிக்கைகளை செய்துள்ளன. பெரும்பாலான தருணங்களில், அதையே நாம் சர்வதேச சட்டம் என்று புரிந்து கொள்கிறோம்.

சூடான் நாட்டு ஜனாதிபதி பஷீர், டாபூர் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தேடப்படுகிறார் என்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. அந்த உத்தரவானது, ஆரம்பித்த நாளில் இருந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத் தக்க சாதனையாக கருதப் பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சிக்கல்களை பலர் அவதானிக்கவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான ஒப்பந்தத்தில் சூடான் கைச்சாத்திடவில்லை. அந்த வகையில், பஷீரை கைது செய்ய வேண்டுமென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு அவசியம். இதிலே வேடிக்கை என்னவென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும், மூன்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

பஷீருக்கு எதிரான பிடிவிறாந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கொடுக்கப் பட்டது என்பது இரகசியம் அல்ல. இந்த விடயத்தில் அமெரிக்காவின் அரசியல் இலாபம் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் ஒத்துழைக்க மறுத்தன. ஏற்கனவே, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்கள், ஆப்பிரிக்கர்களை மட்டுமே தண்டிப்பதில் குறியாக இருப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பஷீரை கைது செய்யும் பொறுப்பை, சூடான் அரசிடம் ஒப்படைக்குமாறு, ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே, அமெரிக்காவின் "பஷீர் எதிர்ப்புக் கொள்கை" ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பிரிப்பதே, அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. டாபூர் இனப்படுகொலை விவகாரம், பஷீருக்கு அழுத்தம் கொடுக்கவே பயன்பட்டது. தற்போது, தெற்கு சூடான் தனி நாடாகி விட்டதால், பஷீரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து கிடப்பில் போடப் பட்டு விட்டது.

இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச விசேட நீதிமன்றங்கள், மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நிறுவப் படுகின்றன. அதனால், நீதிமன்றங்கள் அரசியல் மன்றங்களாகி விடுகின்றன. அங்கே நீதிக்குப் பதிலாக, அரசியல் கருத்துக்களே தீர்ப்புக்களாக கூறப் படுகின்றன. போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நீதிமன்றம் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்தால், இந்த உண்மை புலப்படும். 

கம்போடியாவில் நடந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு, கம்போடிய விசேட நீதிமன்றம் அமைக்கப் பட்டது. 15000 பேர் கொன்று குவிக்கப் பட்ட, சித்திரவதைக் கூடம் ஒன்றிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு, இருபது வருட தண்டனை வழங்கப் பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் திருப்தியடையா விட்டாலும், அது அன்று பெரிதாக சிலாகித்துப் பேசப் பட்டது. ஆனால், பல முக்கிய புள்ளிகள் தண்டனையில் இருந்து தப்பி விட்டனர்.

கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைக்கு, இறுதியில் நீதி வழங்கப் பட்டு விட்டது என்று பலர் கூறலாம். ஆனால், இதிலே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம். கம்போடியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பொல்பொட் ஆதரவு கமர் ரூஜ் இயக்கத்தவர் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். அவர்களுடன் கூடவிருந்த, இனப்படுகொலையில் பங்கெடுத்த ஒரு பிரிவினர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அந்தப் பிரிவினரை, சிலர் எதிரிக்கு காட்டிக் கொடுத்த துரோகக் கும்பல் என்று தூற்றலாம். ஆனால், சர்வதேச சமூகம் அத்தகைய துரோகக் கும்பல்களுடன் ஒத்துழைப்பதில் திருப்தி அடைகின்றது.

கமர் ரூஜில் இருந்து பிரிந்து சென்ற ஹூன் சென் தலைமையிலான குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்களின் ஆட்சியதிகாரம் இன்று வரை நிலைத்திருக்கிறது. ஒரு நாள், தங்களையும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பார்கள் என்று, கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அஞ்சுவார்களா? அதற்கான சாத்தியமே கிடையாது. ஏனென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் தான் கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு துணை நின்றுள்ளனர். அதாவது, இது தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி.

சியாரா லியோன் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லிபியாவின் ஆதரவைப் பெற்ற சாங்கோவின் படையினரை மட்டுமே தண்டித்தது. ஏனென்றால் அவர்கள் தான் சியாரா லியோன் போரில் தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு உதவியாக இருந்த அயல் நாட்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டெயிலர் பதவியில் இருந்து அகற்றப் பட்டார். பின்னர் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப் பட்டார்.

சியாரா லியோன் போர்க்குற்ற விசாரணையின் முடிவில், டெயிலர் இறுதி வாக்குமூலம் கொடுக்கும் நேரம், நீதிபதிகள் அதை பதிவு செய்ய மறுத்தனர். அதற்கு காரணம், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை, டெயிலர் தனது வாக்குமூலத்தில் மேற்கோள் காட்டி இருந்தார். "டெயிலர் விடுதலை செய்யப் பட்டால், புதியதொரு போர் வெடிக்கும்" என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. விசாரணை முழுமையடையாமலே, நீதிபதிகள் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பதைக் கண்ட டெயிலர் வெளிநடப்புச் செய்தார்.  

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை உலகம் முழுவதையும் உலுக்கியது. அந்த நாட்டில் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, அங்கே ஒரு ஐ.நா. சமாதானப் படை நிலை கொண்டிருந்தது. "இன்னும் இரண்டாயிரம் போர்வீரர்களை உடனடியாக அனுப்பினால், பேரழிவு ஏற்படுவதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும்" என்று, சமாதானப் படை தளபதி Romeo Dallaire கேட்டிருந்தார். ஐ.நா. தலைமையகம் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. மேலதிக நிதி கொடுப்பதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால், ஏற்கனவே ருவாண்டாவில் இருந்த அமைதிப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான், அந்த நாட்டில் பல இலட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு பலியானார்கள்.

2004 ம் ஆண்டு, அன்றைய ஐ.நா. செயலதிபர் கோபி அனன், ருவாண்டாவில் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இனிமேல், "அது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக" கூறினார். "உலகில் எந்த நாட்டில் இனப்படுகொலை நடந்தாலும், ஐ.நா. அங்கே உடனடியாக தலையிடும்" என்று உறுதி மொழி அளித்தார். "குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு", என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. 2009 ம் ஆண்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரம், ஐ.நா.வின் உறுதிமொழி காற்றோடு பறக்க விடப் பட்டது. 

"எது எப்படி இருந்தாலும், ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில், இறுதியில் நீதி நிலைநாட்டப் பட்டு விட்டது தானே?" என்று சிலர் கேட்கலாம். அதுவும்,  தோற்றவர்களை தண்டிக்கும், வென்றவர்களின் நீதி தான். ருவாண்டாவில் முன்பிருந்த ஹூட்டு இனத்தவரின் அரசை தூக்கியெறிந்து  விட்டு, அந்த இடத்தில் துட்சி இனத்தவரின் அரசு அமைந்துள்ளது. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், முன்பு ஆட்சியதிகாரத்தை வைத்திருந்த ஹூட்டு இராணுவம் தோல்வியடைந்தது. துட்சிகளின் கிளர்ச்சிப் படை வென்றது.

ருவாண்டா இனப்படுகொலையினை விசாரிக்கும், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர், போரில் தோற்ற ஹூட்டு இனத்தை சேர்ந்த குற்றவாளிகள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய துட்சி இன குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். (அவர்களும் முக்கியமான புள்ளிகள் அல்ல.) அது ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் நடுநிலைமை நாடகம். கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், துட்சி அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இன்றைய ருவாண்டா அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலர், ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே உட்பட, நடந்த போரில் இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை புரிந்திருந்தாலும், அவர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. இனிமேலும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

"யூகோஸ்லேவியா நீதிமன்றம் வித்தியாசமானது, அது போரில் வென்றவர்களை தானே தண்டித்தது?" என்று யாராவது வாதாடலாம். யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்த போர்களில், ஆரம்பம் முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தலையிட்டு வந்தன. அனைத்துப் போர்களிலும் செர்பிய பெரும்பான்மை இனம் வென்று கொண்டிருந்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் எம்மை நம்ப வைத்தன. ஒரு கட்டம் வரையில் மட்டுமே அந்தக் கருதுகோள் சரியாகும்.

இறுதியாக நடந்த கொசோவோ போரிலும், நேட்டோ படைகள் விமானக் குண்டுகள் போட்டு தான் போரை முடித்து வைத்தன.  நேட்டோ நாடுகள் தான், செர்பியரின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. சேர்பியப் படைகள் கொசோவோவை விட்டு பின்வாங்கிச் சென்றன. நேட்டோ படைகளும், அல்பேனிய கிளர்ச்சிக் குழுவும், வெற்றி வீரர்களாக கொசோவோவுக்குள் பிரவேசித்தனர். 

ஆகவே, யூகோஸ்லேவியப் போர்கள் அனைத்திலும் தோற்றவர்கள்: செர்பியர்கள். வென்றவர்கள்: மேற்கத்திய நேட்டோ நாடுகள். போரில் வென்ற நேட்டோ நாடுகள் தான், யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கினார்கள். அவர்களே அதற்கு நிதி வழங்கினார்கள். அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டவர்கள் எல்லோரும் செர்பிய குற்றவாளிகள் தான். கண்துடைப்புக்காக, விரல் விட்டு எண்ணக் கூடிய குரோவாசிய குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் அரசியல் முலாம் பூசப் பட்டிருந்தன. வேண்டுமென்றே ஊடகங்களின் கவனத்தை கவரும் வகையில் வழக்குகள் நடத்தப் பட்டன.

யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அரசதரப்பு சட்டத்தரணிகள் சாட்சிகளை மிரட்டி சாட்சியம் பெற்றனர். அவர்கள் விரும்பியவாறு சாட்சி சொல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர், மிரட்டப் பட்டனர், அல்லது சலுகைகள் தருவதாக ஆசை காட்டினார்கள். ஒரு சாட்சிக்கு, அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தனர்.

யூகோஸ்லேவியா நீதிமன்றம் மூலம் உலகப் புகழ் பெற்ற, அரச தரப்பு சட்டத்தரணி கார்லா டெல் போந்தே, இன்னும் இரண்டு பேர் மீது, சாட்சிகளை மிரட்டியதாக குற்றஞ் சாட்டப் பட்டது. இறுதியாக, சர்வதேச நீதிமன்றம் அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு உலக நாட்டிலும் நடந்த, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள், சர்வதேச நீதிமன்றத்தினால் ஒழுங்காக விசாரிக்கப் பட்டு, நீதி வழங்கப் பட்டால், உலகம் திருந்தி விடும் என்று நினைப்பது வெகுளித்தனமானது. உலக நாடுகளின் பிரச்சினைகளும், சட்டங்களும் அந்தளவு இலகுவானது அல்ல. மேலும், அரசியல் தலையீடு இன்றி, நீதித்துறை செயற்பட முடியாத நிலைமை உள்ளது.

கடந்த கால வரலாறு முழுவதும், சர்வதேச நீதியானது, "வென்றவர்களின் நீதியாக" இருந்து வந்ததை, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இனி வருங்காலத்திலும், போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம், வென்றவர்களுக்கு சாதகமாகவும், தோற்றவர்களுக்கு பாதகமாகவும் தான் நடந்து கொள்ளப் போகின்றது.

ஈழப் போரின் இறுதியில், வென்றவர்கள் அமைக்கப் போகும் சர்வதேச நீதிமன்றம், எவ்வாறு தோற்றுப் போன தமிழர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கப் போகிறது? தமிழ் மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரையில், தொடர்ந்தும் இலவு காத்த கிளியாக ஏமாற்றப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.


(பிற்குறிப்பு: Geert Jan Knoops, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர். அவர் எழுதிய "Bluf Poker, De Duistere Wereld van het Internationaal Recht" என்ற நூல், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. அவருக்கு எனது நன்றிகள்.)  



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, February 03, 2014

திருஞான சம்பந்தர் ஒரு பாசிச இனப் படுகொலையாளி?


திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான "ஒரு பாசிச இனப் படுகொலையாளி" என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான்.

அன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில், ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

தமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், "அப்படி ஒரு படுகொலை நடந்ததாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று, இன்று சில சைவ மத அடிப்படைவாதிகள் வாதாடலாம்.

ஒரு இனம் தனது மூதாதையருக்கு நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் மரபு, யூதர்களிடம் இருந்து தான் ஆரம்பித்தது. ஆனால், உலகில் பொதுவாக, வேறெந்த இன மக்களும், தமக்கு நடந்த இனப் படுகொலைகளை நினைவுகூரும் மரபைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், பண்டைய காலத்தில் கொலையாளிகள் மட்டுமே, தாம் எத்தனை பேரை படுகொலை செய்தோம் என்பதை பெருமையாக நினைவுகூர்ந்து வந்தனர்.

//அக்காலத்தில் மதுரையை சுற்றிலும் 8000 சமணக் குருமார் இருந்ததை அறிகிறோம். இக் கருத்தை சம்பந்தர் பெருமானே "ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்" என்று கூறி இருக்கிறார்...."எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்" என்று சேக்கிழார் கூறுகின்றார். //
(ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)

சேக்கிழாரின் பெரிய புராணத்தில், சமணர்களின் இனப்படுகொலை குறிப்பிடப் படுகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், வேறு சில சைவ மத ஆலயங்களிலும், சமணப் படுகொலை பற்றிய சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மதுரையில் "சாமநத்தம்" என்ற ஊரில், இறுதிக் கட்ட சமண இனவழிப்பு நடந்திருக்கலாம். சமணர்களின் இரத்தம் என்ற சொல் திரிபடைந்து, சாமநத்தம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சம்பந்த நாயனார் பற்றிய கதையில், அன்று நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சம்பந்தர் சமணத் துறவிகளை, "அனல் வாதம், புனல் வாதம்" இரண்டிலும் வென்றதாகவும், அதற்கு தண்டனையாக கழுவேற்றம் நடந்ததாகவும், அந்தக் கதையில் இருந்து தெரிய வருகின்றது. ஆன்மீகம் தொடர்பாக , இரு மதப் பிரிவினராலும் அன்று விவாதிக்கப் பட்ட விபரங்கள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை. சமபந்தர் ஆற்று நீரில் விட்ட சைவ மத ஓலைச் சுவடிகள் மிதந்து வந்து கரையொதுங்கின. அது தான் "புனல் வாதம்".  சம்பந்தர் நெருப்பில் போட்ட ஓலைச் சுவடிகள் எரியவில்லை. அது தான் "அனல் வாதம்".

மதுரைக்கு வந்து தங்கிய, திருஞான சம்பந்தரின் சத்திரத்திற்கு சமணர்கள் நெருப்பு வைத்தனர். அதாவது, "சமணப் பயங்கரவாதிகள்" நடத்திய "பயங்கரவாத தாக்குதலில்" இருந்து, சம்பந்தர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாராம். அதன் பிறகு தான், சம்பந்தர் தன் மீதான கொலை முயற்சிக்கு பழிவாங்குவதற்காக, அல்லது  "சமணப் பயங்கரவாதிகளின்" கொட்டத்தை அடக்குவது அவரது நோக்கமாக இருந்துள்ளது.

திருஞான சம்பந்தர், ஏழாம்  நூற்றாண்டுத் தமிழகத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை நடத்தி இருக்கிறார். போரின் இறுதியில், ஒட்டுமொத்த சமணர்களும் இனவழிப்புச் செய்யப் பட்டனர். பாண்டியன்-சம்பந்தனின் சைவ பேரினவாத அரசு, "எண்ணாயிரம் சமணப் பயங்கரவாதிகளுக்கு கழுவேற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டதாக" பரப்புரை செய்து வந்துள்ளது. 

//‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் 
பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக் 
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே 
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’’ 
என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.// 
(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

//திருஞான சம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் மதுரைப் பொற்தாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றும் காட்சியை சித்திரம் தீட்டிவைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில், ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்றுவருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.// (சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

//திருவோத்தூர் சிவன் கோயிலில் சமரைக் கழுவேற்றுதல் போன்ற சிறப்பு உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்வித கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமல் இருந்திருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்கு சென்று அங்கு சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தது. இது போன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டில் பழையாறை எனுமிடத்தில் அப்பர் சுவாமிகள் சென்ற பொழுது நடைபெற்றதாக திருத்தொண்டர் புராணத்திலே சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலை கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தை கண்டு வணங்காமல் உணவு கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்து உணவு கொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை அழிக்கும் படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.//
(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

இதனை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி காலத்தில் தான், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தவரின்  ஆதிக்கம் அதிகரித்தது. சக்கரவர்த்தியின் மனைவியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தாள்.

கிறிஸ்தவர்களின் செல்வாக்கு, அரச குடும்பம் வரையில் வந்து விட்ட பின்னர், சக்கரவர்த்தியை பணிய வைப்பது இலகுவாகி விட்டது. கொன்ஸ்டாண்டின், அதற்கு முன்னர் கிறிஸ்தவர்களை கொன்றவன் தான். ஆனால், கிறிஸ்தவனாக மதம் மாறிய பின்னர், பூர்வீக மதத்தை பின்பற்றியவர்களை கொன்றான். வரலாறு நெடுகிலும், அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.

சமணர்களை கழுவேற்றிய  கூன் பாண்டியனும், ஐரோப்பாவில் கொன்ஸ்டாண்டின் கொண்டு வந்த அரசியல் மதப் புரட்சியை, தமிழகத்தில் கொண்டு வர விரும்பியிருக்கிறான்.  ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டாண்டினின் அரசியல் சாணக்கியம், தமிழக மன்னனான  கூன் பாண்டியனிடமும் இருந்துள்ளது.

கொன்ஸ்டாண்டின், கூன் பாண்டியன் இருவரது வரலாற்றுக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்திற்குரியது. தமிழகத்திலும், பாண்டியனின் மனைவி தான் முதலில் சைவ மதத்திற்கு மாறியிருந்தாள். சம்பந்தர் அரச குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதாவது கூன் பாண்டியனின் தீரா நோய் ஒன்றை குணப் படுத்திய காரணத்தால், அவனை சைவ மதத்திற்கு மாற்ற முடிந்தது.

ஒரு நாட்டினுள், ஒரு குறிப்பிட்ட மதம் ஆதிக்கம் பெற வேண்டுமானால், அந்த நாட்டை ஆளும் மன்னனை கைக்குள் போட்டுக் கொண்டால் போதும். அதன் பிறகு, எல்லாம் இலகுவாக முடிந்து விடும். தமது நாட்டினுள் எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகரிக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மன்னர்களும் மாறி விடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் இலகுவாக ஆட்சி செய்யலாம். அது எங்கேயும் பொருந்தும் அரசியல் பால பாடம்.

கழுவேற்றப் பட்ட எண்ணாயிரம் பேரும் சமண மதக் குருக்கள் அல்லது தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த எண்ணாயிரம் பேர் மட்டுமே சமணர்களாக இருந்திருக்க முடியாது. மதகுருக்கள், தலைவர்கள் கொல்லப் பட்டதும், சாதாரண சமண மக்கள், சைவ சமயத்திற்கு மதம் மாறி இருப்பார்கள்.

தமிழகத்தில் இன்றைக்கும் வாழும் சமணர்கள் வீட்டில் கன்னடம் பேசுகின்றனர். தமிழகத்தில் சமண இனவழிப்பு நடந்தாலும், கர்நாடகா மாநிலத்தோடு அண்டிய கொங்கு நாட்டில், சில சமணத் துறவிகள், மலைக் குகைகளில் மறைந்து வாழ்ந்து வந்தனர். சில சமணக் கோயில்களில், இந்துக் கோயில்கள் போன்று பூசைகள் நடைபெறுகின்றன. அங்கு பூசை செய்வோர், பிராமணர் போன்று பூணூல் அணிந்திருப்பதால், உள்ளூர் மக்களால் ஐயர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் வெளியில் தமிழும், வீட்டில் கன்னடமும் பேசுகின்றனர். இன்றைக்கும் சமணர்கள் பெருமளவில் வாழும் கர்நாடகாவுடன் தொடர்பைப் பேணி வருகின்றனர். (ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)

மேலும், பண்டைய காலத்தில் கழுவேற்றும் தண்டனை இருந்ததற்கான பல சரித்திர சான்றுகள் உள்ளன. சம்பந்தர் போன்ற பாசிச சைவ மத அடிப்படையாளர்கள்  மட்டுமல்ல, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் கூட தம்மை எதிர்த்தவர்களை கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை கழுவேற்றிக் கொன்றதாக, இலங்கை வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது.

வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப் படுவதால், சமணர்களின் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு" பதிலடியாகவே அந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாக, பெரும்பான்மை சைவர்களின் பிரதிநிதியான சம்பந்தர் ஒரு "நியாயத்தை" கூற விளைகிறார். ஒரு சம்பந்தர், எண்ணாயிரம் சமணர்களையும் வாதிட்டு வென்றாலும், "தோல்வியுற்ற அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்குவது," ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை தான்.

நாஜிகளும் யூதர்களை அடைத்து வைத்து விஷவாயு கொடுத்து தான் கொன்றார்கள். 7 ம் நூற்றாண்டில் நடந்த படுகொலைக்குப் பின்னர், இன்று வரையில் ஒரு சமணர் கூட தமிழ் நாட்டில் தப்பிப் பிழைக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால், திருஞான சமபந்தர் ஒரு பாசிச இனப்படுகொலையாளி தான்.
____________________________________________________________________________________________

சமண மதம் பற்றிய சில குறிப்புகள்: 

உலகில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட பலரால் தவறாக அல்லது குறைவாகப் புரிந்து கொள்ளப் படும் மதமாக ஜைன மதம் உள்ளது. அண்மைக் காலமாக, நான் ஜைன மதம் தொடர்பான நூல்களை படித்து வருவதால், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையில், ஜைன மதம் இந்து மதத்தை விடப் பழமையானது. இந்தியாவின் பூர்வீக மதம் என்றும் சொல்லலாம்.

ஜைன மதத்தின் 24 ஆன்மீகக் குருக்களாக தீர்த்தங்காரர்கள் இருந்துள்ளனர். பத்தாவது தீர்த்தங்காரரின் காலத்தில் தான், ஆரியர்களின் மதமான "இந்து" மதம், இந்தியாவிற்கு வந்தது. சமணம், பிராமணர்களின் மேலாதிக்கத்தையும், சாதி அமைப்பு பிறப்பால் வருவது என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கொல்லாமை, புலால் உண்ணாமை, சந்நியாசம் போன்றவற்றை, ஜைன மதத்திடம் இருந்து இந்து மதம் சுவீகரித்துக் கொண்டது.

காந்திக்கு தென்னாபிரிக்காவில் ஞானம் பிறக்க முன்னரே, பண்டைய இந்தியாவில் ஜைன மதம் அஹிம்சையை போதித்து வந்துள்ளது. தனது தாயகத்தில், அஹிம்சையை அடிநாதமாக கொண்ட மதம் ஒன்று இருப்பது, காந்திக்கு தெரியாமல் போனது அதிசயம் தான். (மகாத்மா காந்தியின் பிறந்த இடமான குஜராத்தில், இன்றைக்கும் நிறைய ஜைன மதத்தவர்கள் வாழ்கின்றனர். காந்தியின் சிறு வயதில், அவரது தாயார், ஜைன மதக் கருத்துக்களை புகுத்தி இருக்கலாம். ஆனால், இந்து தேசியவாதக் கொள்கையை ஏற்றுக் கொண்ட காந்தியார், அதைக் குறிப்பிட மறந்ததில் ஆச்சரியம் இல்லை.

ஜைன மத நம்பிக்கையாளர், தீய எண்ணங்களை எதிர்த்து தனக்குள்ளே போராடி, தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மதத்தில், அந்த மதக் கடமையை "ஜிஹாத்" என்று அழைக்கின்றனர். (இஸ்லாத்தில் ஜிஹாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.)

கர்மா என்ற தத்துவத்தை, ஜைன மதத்திடம் இருந்து கற்றுக் கொண்டாலும், இந்துக்கள் அதனை தவறான அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றனர். "நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவே எம்மை உருவாக்குகின்றது. நல்லது நினைத்தால்/செய்தால், எமக்கு நல்லது நடக்கும்." அது கர்மா பற்றிய ஜைன மத தத்துவம். ஜைன மதம், பொதுவான கடவுட் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. (கடவுள் உண்டு என்றோ, அல்லது இல்லை என்றோ கூறவில்லை.) ஒவ்வொருவரின் ஆன்மாவுக்குள்ளும் கடவுள் இருப்பதாக கூறுகின்றது.

சமண மதம் என்ற பெயர், ஜைன மதத்தை மட்டும் குறிக்கவில்லை. பௌத்த மதத்திற்கும் அது பொருந்தும். பிராமண (இந்து) மதம், வேத கால கட்ட வேள்விகளை வழிபாடாக கொண்ட தத்துவவியல். அதற்கு மாறாக, ஜைனமும், பௌத்தமும் துறவறம் மூலம் இறைவனைக் காண்பதை அடிப்படையாக கொண்டது. சமணம் என்பது பாளி மொழிச் சொல். சமஸ்கிருதத்தில் அதனை சிரமணம் என்பார்கள். தமிழில் அதன் அர்த்தம் உழைப்பு. அதிலிருந்து தான் சிரமதானம் சென்ற சொல் வந்திருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில், சோழர் ஆட்சிக் காலத்தில், பிராமண மத மேலாதிக்கம் காரணமாக சமண மதங்கள் அழிக்கப் பட்டன. சமண மதத் துறவிகள், இரகசியமாக மலைக் குகைகளில் பதுங்கி இருந்து மத வழிபாடுகளை பின்பற்றி வந்தார்கள். இன்றைக்கும், தமிழகத்தில் பல இடங்களில், சமண மத அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறையின்றி இருக்கின்றது. தமிழகத்தில் உள்ள, இந்து மத மேலாண்மைவாதிகளும் அதனை கண்டுகொள்வதில்லை.

________________________________________

உசாத்துணை :

1.சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி 
2.கொங்குநாடும் சமணமும், கோவை கிழார் 
3.Jainisme een introductie, Rudi Jansma

Web Sites: 
Madurai massacre
8000 Samanar's were massacred in seventh century by Thiru Ghana Sampanthar

Wednesday, April 17, 2013

அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு

[இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை] 
(இரண்டாம் பாகம்)



இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் "இந்தியர்களின் நாடு" உருவாகி இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.

நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு" நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.

ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI)  சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது "கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்..." என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், "கத்தியின்றி, இரத்தமின்றி" புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை.  ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன.  இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.

1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இஸ்லாமிய மதகுருக்கள், வெளிப்படையாகவே நிலப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.  "கடவுள் மறுப்பாளர்களான கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்கு, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரலாம்." இஸ்லாமிய மதவாதிகளின் நாஸ்திக எதிர்ப்பு பிரச்சாரம், கடவுள்  நம்பிக்கையுள்ள ஏழை விவசாயிகளை மனம் திரும்ப வைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.

30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.

வான்படையில் சில  முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக,  PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.

உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.

சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.  கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும்  நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.

ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும்  தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.

உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென,  சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், "கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு" என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் இரகசிய தொடர்பிருந்திருக்கலாம்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 5000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலினை, அமெரிக்க தூதரகம் சுஹார்ட்டோவுக்கு விசுவாசமான படைகளிடம் கொடுத்திருந்தது. இந்த தகவலை ஜகார்த்தாவில் பணியாற்றிய CIA அதிகாரியான Clyde McAvoy  உறுதிப் படுத்தி உள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA  வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.  (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசிய இனப்படுகொலையில், அமெரிக்க அரசும் சம்பந்தப் பட்டிருந்தமை, இத்தால் உறுதிப் படுத்தப் படுகின்றது.

"கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?"  என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம்.  அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி  படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)

அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், "கம்யூனிஸ்டுகளை கொன்றது இனப்படுகொலை ஆகாது" என்று வாதாடுபவர்கள், எதனை  அடிப்படையாக கொண்டு கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறுகின்றார்கள்? பொல்பொட் ஆட்சிக் காலத்தில் நடந்த, "கம்போடிய இனப்படுகொலையை" விசாரிப்பதற்கு ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஏன் இந்தோனேசியாவில் அத்தகைய நீதிமன்றம் ஒன்று செயற்படவில்லை? ஏன் சர்வதேச சமூகம் அது குறித்து பாராமுகமாக இருக்கிறது?

(முற்றும்)

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை


உசாத்துணை:
1. De Stille Genocide, Lambert J.Giebels
2. De Groene Amsterdammer 28.02.2013
3. De Indonesische coup van 1965 (Historisch Nieuwsblad)
4. De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski
5. Legacy of Ashes: The History of the CIA, Tim Weiner

1965 ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் நடந்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ:

Friday, March 08, 2013

இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை



"மேற்குலகிற்கு கிடைத்த நற்செய்தி!"
- இந்தோனேசிய இனப்படுகொலையை மகிழ்வுடன் வரவேற்று தலையங்கம் தீட்டிய டைம்ஸ் வார இதழ் (ஜூலை 1966).

"கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது ஒரு சுகமான அனுபவம்! அவர்களை  (இனப்) படுகொலை செய்ததற்காக பெருமைப் படுகிறேன். போர்க்குற்றம் என்றால் என்னவென்று வென்றவர்களே தீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்கு எதிரான போரில் நாங்கள் வென்று விட்டோம்."
- 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.

உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த "கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்", இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.



அண்மையில் இந்தோனேசியாவுக்கு ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க சென்ற இயக்குனர்  Joshua Oppenheimer, ஐம்பது வருடங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிந்து கொண்டார்.  இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், கொலைகாரர்களும் அருகருகே வாழ்ந்து வருவதைக் கண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதையும், இனபடுகொலை செய்தவர்கள் அதனை பெருமையுடன் சொல்லிக் கொண்டு திரிவதையும் நேரில் பார்த்தார். அப்படியானவர்கள் சிலரை தெரிந்தெடுத்து, ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அதிலே இனப்படுகொலை செய்தவர்கள், தாமாகவே முன்வந்து நடித்திருந்தனர். "கம்யூனிஸ்டுகளை கொல்வது எந்தளவு சுகமான அனுபவம். எத்தனை கம்யூனிஸ்டுகளை, எத்தனை விதமாக கொலை செய்தோம்..."  என்று கமெராவுக்கு முன்னால் தைரியமாகக் கூறுகின்றனர். சொல்வதோடு நின்று விடாமல், கொலை செய்த முறையை மீண்டும் ஒரு தடவை நடித்துக் காட்டுகின்றனர். முன்னாள் இனப்படுகொலையாளர்கள் நடித்த, The Act of Killing என்ற ஆவணப்படம், இந்த மாதம் உலகத் திரையரங்குகளில் காண்பிக்கப் படவுள்ளது.   

இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? "இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்." என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாட்டில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுக்க வேண்டுமானால், எத்தனை இலட்சம் போரையும் இனப்படுகொலை செய்யலாம். அது தவறென்று சர்வதேச சமூகம் கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.

 இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல, "போர்க்குற்றம் என்றால் என்னவென்று, வென்றவர்களே தீர்மானிக்கிறார்கள்."  கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள்.  இறுதியில்,  தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின. 

அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா  நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக," சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம். 

1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், "இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு" என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது.  ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

1924 ம் ஆண்டு,   "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி" (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட  ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். 

அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள். 

கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு "இந்தோனேசிய சோவியத் குடியரசு" உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, "சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக" கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.

1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.   

இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன: 
1. இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
2. நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
3. கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், "நாஸ்திக கம்யூனிஸ்டுகளை" வெறுத்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை. 
4. அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல் சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள். 

30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப் பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது.  "30 செப்டம்பர் குழு" என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?

Monday, August 01, 2011

இனப்படுகொலையால் புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியம்


தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் தெரு ஒன்றுக்கு, "அரண்மனைக் காரர் தெரு" என்று பெயர். ஆங்கிலேயர் காலனி ஆட்சிக் காலத்தில் அங்கே ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்ததனர். ஆர்மேனியர் தெரு என்ற பெயர் காலப்போக்கில் மருவி அரண்மனைக்காரர் தெருவாகி விட்டதாக கருதப்படுகின்றது.

"புலம்பெயர்ந்த யூதர்கள், யூத இனப்படுகொலை" பற்றி அளவுக்கதிகமாகவே அறிந்து வைத்திருக்கும் எமக்கு, கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாற்றைக் கொண்ட ஆர்மேனியர்களைப் பற்றித் தெரியாது. இப்போதும் வலதுசாரி- தேசியவாத தமிழர்கள் யூதர்களை உதாரணமாகக் காட்டி அரசியல் நடத்துகின்றனர்.

உலகில் இன்னும் பல இனங்கள் யூதர்களின் தலைவிதியை பகிர்ந்து கொண்டுள்ளன. போதுமான பொருளாதார வளங்கள் இல்லாததால், அந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியுலகம் அறியவில்லை.

ஆர்மேனியர்களின் நிலை வேறு. இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அமெரிக்க அரச மட்டத்தில் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்து லட்சம் ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்த துருக்கி மீது, குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.

துருக்கி அரசோ, ஆர்மேனிய இனப்படுகொலை நடக்கவில்லை என்று, இன்று வரை சாதித்து வருகின்றது. அண்மையில், புலம்பெயர்ந்த ஆர்மேனியர்களின் எரிச்சலைக் கிளப்பும் வகையில், ஆர்மேனியா குடியரசு, துருக்கியுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில், முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்த, ஆர்மேனிய இனத்தின் கதை இது.

ஆர்மேனிய இனம் பெருமளவு யூதர்களுடன் ஒப்பிடத் தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகின் முதலாவது கிறிஸ்தவ நாடு, என்று அவர்கள் தம்மை பெருமையாக அழைத்துக் கொள்கின்றனர். ஆர்மேனியர்களின் பாரம்பரியப் பிரதேசம், முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான, ஆர்மேனியா மட்டுமன்று. அந்த நாட்டில் வாழும் மக்களை விட, இரு மடங்கு ஆர்மேனியர்கள் பல உலக நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், "துருக்கிய ஆர்மேனியரின்" வம்சாவளியினர்.

உண்மையில், இன்றைய துருக்கியின் வட- கிழக்குப் பகுதி, ஆர்மேனியரின் பாரம்பரியப் பிரதேசமாகும். "முதலாவது கிறிஸ்தவ ஆர்மேனியா", காலப்போக்கில் அந்நிய படையெடுப்புகளினால் மறைந்து விட்டது. மத்திய காலத்தில், மேற்கே இருந்து வந்த சிலுவைப் போர்வீரர்களின் உதவியுடன், இரண்டாவது ஆர்மேனிய இராச்சியம் அமைக்கப் பட்டது. துருக்கியின் கிழக்கு எல்லையோரம், சிரியாவுக்கு அருகில் அந்த இராச்சியம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் மொங்கோலியப் படையெடுப்புகளால், அந்த இராச்சியமும் பறி போனது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தை ஆண்ட சார் மன்னனின் இறுதிக் காலம் வரையில், ஆர்மேனியர்களுக்கு தனியான நாடு இருக்கவில்லை. அநேகமாக, ஆர்மேனியரின் புலம்பெயர் படலம் அப்போதே ஆரம்பித்து விட்டது. யூதர்களைப் போன்று, ஆர்மேனியர்களும் சர்வதேச வணிகத்தில் நாட்டம் காட்டினார்கள்.

ஓட்டோமான் துருக்கிய அரச பரம்பரையினரின் இஸ்லாமிய சாம்ராஜ்ய காலத்தில், கிறிஸ்தவ ஆர்மேனியர்களுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை. மாறாக, ஆர்மேனிய கைவினைஞர்களும்,தொழிலதிபர்களும், வணிகர்களும், சுல்த்தானின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். சாம்ராஜ்ய விஸ்தரிப்பு போர்களில் ஈடுபட்ட, ஓட்டோமான் படையினருக்கு தேவையான வெடிமருந்துகளை தயாரிக்கும் முக்கிய பொறுப்பில் ஆர்மேனியர்கள் இருந்துள்ளனர். ஆர்மேனிய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சிறப்பு சலுகைகளும் கிடைத்து வந்தன.

முதலாம் உலகப்போருக்கு முந்திய நிலைமை, ஐரோப்பிய தேசிய இனங்களின் தலைவிதியை தீர்மானித்தது. புதிய தேசிய அரசுகள் தோன்றின. வேறு சில தேசிய இனங்கள் அடக்கியாளப் பட்டன. இதற்கிடையே ஓட்டோமான் துருக்கி சாம்ராஜ்யம் பலமிழந்து கொண்டிருந்தது. பிற ஐரோப்பிய வல்லரசுகள் அதனை "ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைத்தன. வடக்கே ரஷ்யப் படைகளும், மேற்கே ஆஸ்திரிய-ஹங்கேரியப் படைகளும், ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதிகளை கைப்பற்றி விட்டன. அங்கே வாழ்ந்த முஸ்லிம் மக்கள், துருக்கிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் துருக்கியரல்லாத வேற்று மொழிக்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது பொஸ்னியர்கள், செச்னியர்கள் போன்றோர். இந்த முஸ்லிம் அகதிகள், கிழக்கு துருக்கியில் தான் குடியேற்றப்பட்டனர்.

இன்றைய ஐரோப்பிய நாடுகள், துருக்கியை ஐரோப்பிய நாடாக ஏற்க விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, ஐரோப்பிய மாற்றங்கள் துருக்கியையும் பாதிக்கின்றன. முதலாம் உலகப்போரில் துருக்கி ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டு தோற்றது. அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவெங்கும் பரவிய தேசியவாத கருத்தியல்கள் துருக்கியரையும் ஈர்த்தன.

துருக்கிய அரசில் அமைச்சர்களாக, இராணுவத் தளபதிகளாக பதவி வகித்தவர்கள் சுல்த்தானை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றினார்கள். துருக்கி இன மக்களுக்கான தேசிய அரசை ஸ்தாபித்தார்கள். அதன் அர்த்தம், துருக்கியினுள் வாழ்ந்த சிறுபான்மையின மக்கள் துருக்கிமயப் படுத்தப் பட வேண்டும், அல்லது வெளியேற்றப்பட வேண்டும். அவர்களது முதலாவது இலக்கு ஆர்மேனியர்கள்.

மொழியால், மதத்தால் வேறுபட்டவர்கள் என்பது மட்டுமே காரணமாக இருக்கவில்லை. துருக்கி பேரினவாதிகள், கிழக்கே உள்ள அசர்பைஜான் போன்ற துருக்கி மொழி பேசும் நாடுகளை இணைக்க விரும்பினார்கள். அதற்கான போர் நடவடிக்கைகள், ரஷ்ய- ஆர்மேனிய கூட்டுப் படைகளால் முறியடிக்கப் பட்டன. அந்தத் தோல்விக்கு பழி தீர்ப்பதற்காக, துருக்கிய ஆர்மேனியர்கள் இனவழிப்புச் செய்யப்பட்டனர்.


இஸ்தான்புல் நகரில் ஆர்மேனியப் புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். கிழக்கு துருக்கியில் இருந்த அனைத்து ஆர்மேனியக் கிராமங்களும் சுற்றிவளைக்கப் பட்டன. சொத்துக்கள் சூறையாடப் பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கண்ணில் பட்டோர் கொலை செய்யப் பட்டனர். குறிப்பிட்ட அளவு பெண்களும், குழந்தைகளும், பலவந்தமாக முஸ்லிம்களாக மாற்றப்பட்டதனால் மட்டுமே தப்பிப் பிழைக்க முடிந்தது. மிகுதி மக்கள் அனைவரும் வெளியேறி, சிரியாவை நோக்கி செல்லுமாறு பணிக்கப் பட்டனர். அகதிகள் சென்ற பாதையிலும் பாதுகாப்பில்லை.

குர்திய கொள்ளையர்கள், அகதிகளைக் கொன்று, அவர்களிடமிருந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள். அந்த சோதனையையும் தாண்டி வந்தவர்கள், சிரியா நாட்டு எல்லையோரம் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அந்த முகாம்கள் கூட, வதை முகாம்களாக காணப்பட்டன. குறைந்தது பத்தாயிரம் பேராவது முகாமில் மட்டும் இறந்துள்ளனர். இனவழிப்பில் தப்பிய ஆர்மேனியர்கள் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இந்தப் பிரிவினருக்கு மட்டுமே நிம்மதியான வாழ்வு கிடைத்தது.

இன்னொரு பிரிவினர், ரஷ்யாவிடம் இருந்து புதிதாக சுதந்திரமடைந்த ஆர்மேனியக் குடியரசுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஆர்மேனியாவில், அகதிகளை வரவேற்க யாரும் இருக்கவில்லை. வசதியற்ற முகாம்களில், பட்டினி கிடந்தது மாண்டனர் பலர். குறைந்தது பத்தாயிரம் பேராவது "ஆர்மேனியரின் தாயகத்தில்" மரணத்தை எதிர்கொண்டனர்.


1915 ம் ஆண்டு நடந்த ஆர்மேனிய இனப்படுகொலையில், "ஒன்றரை மில்லியன் பேர் இறந்ததாக ஆர்மேனிய தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது. இது குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள், குறைந்தது எட்டு இலட்சம் பேராவது இறந்திருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். இனவழிப்பை நேரில் கண்ட, கேள்விப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளினது வாக்குமூலமும் பெறப்பட்டது. இருப்பினும், துருக்கி அரசும், பெரும்பான்மை துருக்கியரும், அங்கே அப்படி ஒரு இனப்படுகொலையும் நடக்கவில்லை என்று மறுத்து வருகின்றனர். அதே நேரம், ஆர்மேனியத் தேசியவாதிகள், இன்றும் "ஆர்மேனிய இனப்படுகொலையை" நினைவுகூருகின்றனர்.

அன்று இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகள் எல்லோரும் தண்டிக்கப்படாமலே, இயற்கை மரணம் அடைந்து விட்டனர். இருப்பினும், குறைந்த பட்சம், துருக்கியை மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், புலம்பெயர்ந்த ஆர்மேனியர்கள் சளைக்காமல் போராடுகின்றனர். ஒரு சில சமயங்களில், அமெரிக்க, பிரெஞ்சு அரசுகள் கண்டனம் தெரிவித்தன. இருந்தாலும், துருக்கி அரசை பகைக்க விரும்பாத வெளிவிவகார கொள்கை காரணமாக, வெறும் கண்டனத்திற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை.

அட்டா துர்க் ("துருக்கியின் தந்தை") அறிமுகப்படுத்திய, துருக்கி இன மேலாண்மை பெரும்பான்மை துருக்கியரின் அரசியல் நிலைப்பாடாகவுள்ளது. சைப்பிரசில் துருக்கிய சிறுபான்மையினம் அடக்கப்பட்ட பொழுது நியாயமான எதிர்ப்பைக் காட்டியவர்கள், துருக்கியில் ஆர்மேனிய, குர்திய சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப் படுவதை நியாயப்படுத்துவார்கள்.

உலகில் உள்ள அத்தனை தேசியவாதிகளிடமும் காணப்படும் முக்கிய குறைபாடு இது. தமது இனம் அடக்கப்படும் பொழுது உலகம் முழுவதும் ஆதரவை எதிர்பார்ப்பார்கள். அதே நேரம், தாம் இன்னொரு இனத்தை அடக்குவதை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். துருக்கியர்கள், நூறு வருடங்கள் கடந்த பின்னரும், ஆர்மேனிய இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு, அவர்கள் மனதில் வேரோடியுள்ள தேசியவெறி காரணம்.

அண்மையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற துருக்கிய எழுத்தாளர், ஒர்ஹன் பாமுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவர் செய்த ஒரேயொரு தவறு, ஆர்மேனிய இனப்படுகொலை நடந்ததென்ற உண்மையை அங்கீகரித்தது. "ஆர்மேனிய இனப்படுகொலை நடக்கவில்லை" என்று வாதாடும் வலதுசாரி- தேசியவாத துருக்கியர்கள், ஆர்மேனியர்கள் துருக்கி முஸ்லிம்களை படுகொலை செய்ததை எதிர்வாதமாக முன்வைக்கின்றனர்.

வடக்கே இருந்து படையெடுத்து வந்த ரஷ்ய இராணுவத்துடன் ஆர்மேனியர்கள் சேர்ந்து கொண்டு, துருக்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மை தான். ஆனால், ஆர்மேனிய இனச்சுத்திகரிப்புக்கு பின்னர் நடந்த ரஷ்யப் படையெடுப்பின் பொழுது தான் பெருமளவு துருக்கி- முஸ்லிம் படுகொலைகள் நடந்துள்ளன. ஆர்மேனிய இனப்படுகொலைக்கு எதிர்வினையாக அந்தப் படுகொலைகள் நடந்திருக்கலாம். ஆர்மேனியர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் இனமாக, உலகின் அனுதாபத்தைப் பெறுவதற்காக பேசுவது வழமை. ஆனால், அவர்களும் பிற இனங்களை ஒடுக்கி வந்துள்ளனர்.

முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான கிறிஸ்தவ ஆர்மேனியாவும், இஸ்லாமிய அசர்பைஜானும் அயலவர்கள். ஆனால் தீராப் பகையாளிகள். கடந்த நூறு வருடங்களாக, அவர்களுக்கிடையில் இனக்கலவரங்களும், ஆயுதமேந்திய மோதல்களும் சகஜம். சோவியத் யூனியனின் உடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

சோவியத் யூனியன் வீழ்வதற்கு முன்னரே, "ஆர்மேனியா-அசர்பைஜான் யுத்தம்" ஆரம்பமாகி விட்டது. "கிறிஸ்தவ சகோதரனான" ரஷ்யாவின் உதவியால், சிறந்த இராணுவ வளங்களைக் கொண்டிருந்த ஆர்மேனியா போரில் வென்றது. அசர்பைஜானில் ஆர்மேனிய சிறுபான்மையினர் வாழும் நாகார்னோ- கரபாக் பகுதியை இணைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த அசர்பைஜான் துருக்கியரை இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றினார்கள்.

உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், இனப்படுகொலையை மையப்படுத்திய அரசியல் கொள்கைகள் அமைதிக்கும், சமாதானத்திற்கும் இட்டுச் செல்வதில்லை. நவீன அரசியல்வாதிகள் யாரும், "அசோகச் சக்கரவர்த்தி போன்று, இனப்படுகொலையால் விரக்தியடைந்து" உலக சமாதானத்தை போதிப்பதில்லை. யூதர்களும், ஆர்மேனியர்களும் தமது இனத்திற்கு ஏற்பட்ட பேரழிவை நினைவுகூருவதை, புனிதக் கடமையாகக் கொண்டுள்ளனர். அது மீண்டும் அந்த இனத்தின் தேசியவெறியை வலுப்படுத்தவே உதவுகின்றது. தம்மினத்திற்கு நேர்ந்த அதே அவலத்தை, இன்னொரு வலிமை குன்றிய இனத்திற்கு கொடுப்பதற்கு தயங்குவதில்லை.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனம் என்பதற்காக, யூதர்கள் பாலஸ்தீனரை ஒடுக்குவதோ, அல்லது ஆர்மேனியர் அசர்பைஜான்- துருக்கியரை ஒடுக்குவதோ சரியாகி விடாது. துருக்கியில் நடந்த ஆர்மேனிய இனப்படுகொலை கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, துருக்கியர் அதற்காக மனம் வருந்துவதும், அவர்களின் அரசு மன்னிப்பு கேட்பதும் அவசியம். ஆனால், அத்தகைய நிலைமைக்கு இறங்கி வரக் கூடியவர்கள் இடதுசாரி துருக்கியர் மட்டுமே. வலதுசாரி துருக்கியர் பிடிவாதமாக தொடர்ந்தும் நியாயப் படுத்துவார்கள். இஸ்தான்புல் நகரில் வாழ்ந்த ஆர்மேனிய பத்திரிகையாளர் Hrant Dink, இந்த உண்மையைப் புரிந்து கொண்டார்.

இன்னமும் துருக்கியில் (பெரும்பாலும் இஸ்தான்புல் நகர்) வாழும் சிறு தொகை ஆர்மேனியருக்கும், முற்போக்கு எண்ணம் கொண்ட துருக்கியருக்கும் இடையில், Hrant Dink நல்லுறவுப் பாலத்தை கட்டினார். அவரது நல்லெண்ணம் கொண்ட நடவடிக்கைகள், பெரும்பான்மை துருக்கியரின் எதிர்ப்புக்குள்ளாகின. நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியவாதிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இறுதியில் அந்த பத்திரிகையாளர், துருக்கி பாசிஸ்ட் ஒருவனின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

Hrant Dink இன் மரணச் சடங்கில், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். ஆர்மேனியர்கள் மட்டுமல்லாது, பெருமளவு துருக்கியரும் இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றி கொலைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஒரு ஊடகவியலாளரின் மரணமானது, துருக்கி அரசியலில் பேசாப் பொருளான ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த விவாதங்களை தூண்டி விட்டன. பல தசாப்தங்களாக, புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியவாதிகளால் நிறைவேற்ற முடியாத காரியத்தை, ஒரு எழுத்தாளரின் பேனா சாதித்துக் காட்டியது. "1915 ல் துருக்கிய- ஆர்மேனியர்களுக்கு ஏற்பட்ட பேரழிவை மறுப்பதற்கு எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை." என்ற மனுவில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான துருக்கியர்கள் கையெழுத்திட்டனர்.