Sunday, August 24, 2014

அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்


ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில்  பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்?

பெஷ்மேர்கா எனப்படும் ஈராக்கிய குர்திஷ் படையினர், இசிஸ் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும், தம்மிடம் அந்தளவு ஆயுத பலம் இல்லை என்றும் குறைப் பட்டனர். ISIS போராளிகள், அமெரிக்க ஹம்வீ கவச வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சிறிய ரக ஆயுதங்களினால் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. டயர் பார்த்து சுட்டால் கூட, சில்லுக்கு காற்றுப் போன நிலையிலும் 80 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நிற்கும் வல்லமை கொண்டது.

ஹம்வீ கவச வாகனங்களை எதிர்த்து நிற்க முடியாமல், பல இடங்களில் பெஷ்மேர்கா படையணிகள் பின்வாங்கி ஓடியுள்ளன. தற்போது அமெரிக்காவும், பிரிட்டனும் பெஷ்மேர்கா படையினருக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அவை கனரக ஆயுதங்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

கடைசியாக, "மனித குலத்திற்கு விரோதமான ISIS அமைப்பை முற்றாக அழிக்கப் போவதாக" அமெரிக்க அரசு சூளுரைத்துள்ளது. இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், ISIS இயக்கத்தை அழிக்க வேண்டுமானால், சிரியாவுகுள்ளே சென்றும் போரிட வேண்டி வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவில் ஒரு பகுதியையும், ஈராக்கில் ஒரு பகுதியையும் தனது இஸ்லாமிய அரசு என்று ISIS அறிவித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

ஆனால், எதற்காக சிரியாவுக்குள் அமெரிக்கப் படைகள் செல்ல வேண்டும்? மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஈராக் அரசுடன், சிரிய அரசை ஒப்பிட முடியாது. இசிஸ் போன்ற கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான போரில், சிரிய அரச படைகள் குறிப்பிடத் தக்க வெற்றிகளை பெற்றுள்ளன. முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களை விடுவித்துள்ளன. தற்போது, சிரியாவில் ISIS அமைத்துள்ள இஸ்லாமிய அரசின் தலைநகரம் என்று கருதப்படும், ராக்கா நகரினை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன. ராக்கா மீது, சிரியப் படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி, ISIS பாதுகாப்பு அரண்களை நிலைகுலைய வைத்துள்ளது. 

ராக்கா நகருக்கு அருகாமையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானத் தளம், தற்போது சிரிய அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சிரியாவினுள் அமெரிக்கப் படை நடவடிக்கை எடுக்கப் படுமானால், அந்த விமானத் தளம் முக்கியமாக இருக்கும். ISIS பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தான், அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்றால், அதனை சிரிய அரசுடன் சேர்ந்து செய்யலாமே? சிரிய அரச படைகளுக்கு ஆயுதங்களை வழங்கலாமே?

ISIS என்பது யார்? அவர்களது கொள்கைகள் என்ன? குறிக்கோள் என்ன? இவை எல்லாம் அறியாமல், முன்னொரு காலத்தில் அமெரிக்கா அவர்களை ஆதரிக்கவில்லை. அமெரிக்கர்கள் அந்தளவு வெகுளிகளாக இருப்பார்கள் என்று நினைத்தால், நாங்கள் தான் அறிவிலிகள் ஆவோம். "அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் சுதந்திரமாக செயற்படுவதாக" நாங்கள் நம்பினாலும், அமெரிக்கர்களுக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை. சிரியாவை ஆக்கிரமிப்பதும், அதன் மூலம் ஈரானின் கழுத்தை இறுக்குவதும் தான், அமெரிக்காவின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ISIS ஒரு சாட்டாக பயன் படுகின்றது. தேவை முடிந்த பின்னர் ISIS இயக்கத்தை முற்றாக அழித்து விடலாம். 

இருபது வருடங்களுக்கு முன்னர், அல்கைதாவும், தாலிபானும் அமெரிக்காவால் உருவாக்கப் பட்டன. பிறகு அவற்றை எதிர்த்துப் போராடப் போவதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அதையெல்லாம் நாங்கள் இப்போது மறந்து விட்டோம்.

"எல்லாம் அவன் செயல்!" 
"அவனன்றி ஓர் அணுவும் அசையாது!"

Friday, August 22, 2014

அமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்


அமெரிக்கக் கண்டத்திற்கு ஆப்பிரிக்க கருப்பர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், "புதிய உலகம்" என அழைக்கப் பட்ட அமெரிக்கக் கண்டத்தில், வெள்ளையின அடிமைகளும் விற்கப் பட்டனர். இங்கிலாந்தின் முதலாவது காலனியான, அயர்லாந்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், அங்கு வாழ்ந்த ஐரிஷ் மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். ஐந்து இலட்சம் ஐரிஷ் பெண்கள், அமெரிக்காவில் பாலியல் அடிமைகளாக விற்கப் பட்டனர். 

உலகில் பல நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், இனச் சுத்திகரிப்புகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடுகளில் தான் அதிகளவில் நடந்துள்ளன. பாராளுமன்ற ஜனநாயகம் சுதந்திரமான தேர்தல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 19 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் சில நாடுகளில் இருந்த மன்னராட்சி முறைக்கு மாற்றாகத் தான் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டு வரப் பட்டது.

உலக வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்தில் தான் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்பட்டது. மன்னராட்சிக்கு எதிராக கலகம் செய்த, ஆங்கிலேய மேட்டுக் குடியினரின் பிரதிநிதியான ஒலிவர் குரொம்வெல், பேரழிவைத் தந்த உள்நாட்டுப் போரை வழிநடத்தினார். போரின் முடிவில், இங்கிலாந்து மன்னர் சிரச் சேதம் செய்யப் பட்டார். பாராளுமன்றம் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. உலகில் முதல் தடவையாக பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய குரொம்வெல், ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

குரொம்வெல் தலைமையிலான புரட்டஸ்தாந்து படையினர், புரட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மன்னருக்கு ஆதரவான நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை ஒழித்தார்கள். ஆனால், பழைய நிலப்பிரபுக்களின் நிலங்கள், குரொம்வெல்லின் போர்வீரர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பங்கிடப் பட்டது. இன்று பிரிட்டனில் உள்ள நிலவுடமையாளர்கள் பலர், குரொம்வெல் காலத்தில் நிலங்களை அபகரித்தவர்கள் தான். வட அயர்லாந்தில், அது இன்றைக்கும் எரியும் பிரச்சினையாக உள்ளது.

பிரிட்டிஷ் காரர்கள், அயர்லாந்தில் நடத்திய இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்புகளை, பிற்காலத்தில் அனைத்துக் காலனிகளிலும் அறிமுகப் படுத்தினார்கள். வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஐரோப்பிய காலனியவாதிகள், ஆரம்பத்தில் செவ்விந்திய பூர்வ குடிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். கனடா முதல் மெக்சிகோ வரையில், ஆயிரக் கணக்கான கலப்பின காலனிகள் உருவாகி இருந்தன.

அதாவது, ஐரோப்பிய குடியேறிகளும், செவ்விந்தியர்களும் அருகருகே அயல் கிராமங்களாக வாழ்ந்து வந்தனர். நிறைய கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. ஆனால், பிற்காலத்தில் அமெரிக்காவில் அரசு அதிகாரத்தை நிலைநாட்டிய அதிகார வர்க்கத்தினர், இனக் கலப்பை தடை செய்தார்கள். அதற்குப் பிறகு தான், காலனிய விஸ்தரிப்பு யுத்தங்கள் நடந்தன. செவ்விந்திய பூர்வ குடிகள் இனவழிப்பு செய்யப் பட்டனர்.

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மன்னராட்சியை தூக்கியெறிந்து புரட்சி செய்த ஒலிவர் குரொம்வெல், அயர்லாந்து புரட்சியை மிகக் கொடூரமாக ஒடுக்கினார். அயர்லாந்து தீவில், பெருமளவு விவசாய நிலங்கள் ஆங்கிலேய நிலப்பிரபுக்களின் கீழ் இருந்தன. நிலப்பிரபுக்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அந்த மக்கள் எழுச்சியின் போது சுமார் 4000 பேர் கொல்லப் பட்டனர். ஆங்கில நிலப்பிரபுக்கள், ஐரிஷ் தொழிலாளர்களினால் படுகொலை செய்யப் பட்டனர். அது ஒரு வர்க்கப் புரட்சியாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் (17 ஆம் நூற்றாண்டு)கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களுக்கு இடையிலான மதப் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது.

குரொம்வெல் அனுப்பிய ஆங்கிலேயப் படைகள், ஐரிஷ் மக்கள் எழுச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கிலிடப் பட்டனர். அவர்களை பின்பற்றியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால், இரண்டு நிபந்தனைகள். இங்கிலாந்துடன் போரில் ஈடுபட்டிருக்கும் எதிரி நாட்டிற்கு செல்லக் கூடாது. மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும். பெருமளவு ஐரிஷ் கிளர்ச்சியாளர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள். அதனால், அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களும் குழந்தைகளும் தனித்து விடப் பட்டனர்.

அயர்லாந்தின் நிலங்கள் மறு பங்கீடு செய்யப் பட்டன. கிளர்ச்சியை நசுக்குவதற்கு உதவிய பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு ஊதியமாக நிலங்கள் வழங்கப் பட்டன. எஞ்சிய ஐரிஷ் நிலவுடமையாளர்களுக்கு, பிரயோசனமற்ற தரிசு நிலங்கள் ஒதுக்கப் பட்டன. நாடுகடத்தப் பட்ட புரட்சியாளர்களின் குடும்பத்தினர், அந்த நிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1652 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றியது. "தன்னைத் தானே பராமரிக்க முடியாத, அதாவது போதிய வருமானம் இல்லாத ஐரிஷ் பெண்கள், அடிமை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப் படலாம்." அயர்லாந்தை ஆக்கிரமிக்கும் போர் முடிந்த பின்னர் வேலையற்று இருந்த முன்னாள் போர்வீரர்கள், ஐரிஷ் பெண்களையும், குழந்தைகளையும் சுற்றி வளைத்து பிடித்து விற்று விடத் தொடங்கினார்கள். மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து குறி சுடுவது போன்று, பிடிபட்ட ஐரிஷ் அடிமைகளுக்கும் செய்தார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலுடன், அடிமை வியாபாரிகள் ஐரிஷ் பெண்களை கப்பல்களில் கொண்டு சென்று, அமெரிக்காவில் விற்றார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறி இருந்த வசதி படைத்த ஆங்கிலேயர்கள், அழகான இளம் வயது ஐரிஷ் பெண்களை வாங்கி, தமது வீடுகளில் பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். அழகில்லாத பெண்கள், பெருந்தோட்ட முதலாளிகளின் வீடுகளில் பணிப் பெண்களாக விற்கப் பட்டனர். சிலர் சிறுமிகளைக் வாங்கிச் சென்று பாவித்து விட்டு விபச்சார விடுதிகளில் தள்ளி விட்டார்கள்.

பார்படோஸ் தீவுக்கு கொண்டு சென்று இறக்கப் பட்ட வெள்ளையின ஐரிஷ் அடிமைகள், அங்கிருந்த பெருந்தோட்ட முதலாளிகளினால் கால்நடைகளைப் போன்று நடத்தப் பட்டனர். ஐரிஷ் பெண் அடிமைகளுடன் உறவு கொள்ளும் முதலாளிகள், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை விபச்சார விடுதிகளுக்கு விற்றனர். தம்மிடம் இருந்த கறுப்பின அடிமைகளை உறவு கொள்ள வைத்து, ஐரிஷ் பெண்களை பிள்ளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக வைத்திருந்தார்கள். ஏனெனில், கறுப்பு - வெள்ளை கலப்பில் பிறந்த சிறுமிகளை, விபச்சார விடுதிகளில் நல்ல விலைக்கு விற்க முடிந்தது.

பார்படோசில் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஐரிஷ் பெண்களின் வழித்தோன்றல்கள் இன்றைக்கும் அங்கே வாழ்கின்றனர். சுமார் 400 பேரளவில், மிகவும் வறுமையான நிலையில் சேரிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மட்டுமே தமது முன்னோரின் அயர்லாந்து பூர்வீகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில் மிகச் சிறுபான்மையான இனம் என்பதால், பகை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக ஒதுங்கி வாழ்கின்றனர்.

குறைந்தது ஐந்து இலட்சம் ஐரிஷ் அடிமைகள், அமெரிக்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பப் பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப் படும் வரையில், இந்த அடிமை வாணிபம் தொடர்ந்திருக்கிறது. கூடவே இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது. அடிமை வாணிபத்தில் ருசி கண்ட முன்னாள் பிரிட்டிஷ் படையினர், ஏழை ஆங்கிலேய சிறுமிகளை பிடித்தும் அடிமைகளாக விற்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், வெள்ளையின அடிமைகள் தொடர்பாக இங்கிலாந்தில் பல பக்கங்களில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் நூல்களை வாசிக்கவும்: 
White Cargo: The forgotten history of Britain's white slaves in America 
To Hell or Barbados: The Ethnic Cleansing of Ireland

Tuesday, August 19, 2014

புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!


தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஈழப் போராட்டத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, அங்கு நடக்கும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார். புலிப்பார்வை, கத்தி போன்ற வணிகப் படங்களுக்கு சீமான் வழங்கிய ஆதரவு, அதற்கு எதிரான மாணவர் போராட்டம் என்பன, தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள், ஏற்கனவே ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்துள்ளன. ஈழப் போராட்ட வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால், இன்றைய தமிழக நெருக்கடியில் இருந்தும் மீள முடியாது. தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோரின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக கணிக்கத் தெரிந்த RAW, அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஈழப் போரின் முடிவில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழ் தேசிய எழுச்சி, ஈழத்தில் 1983 கலவரத்திற்குப் பின்னரான காலகட்டத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. ஒரேயொரு வேறுபாடு, ஈழத்தில் ஆயுதங்கள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப் பட்டன. தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை.

எழுபதுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் மிகச் சிறிய குழுக்களாக இயங்கிய இடதுசாரிகளினால் வழிநடத்தப் பட்டது. பிற்காலத்தில் தீவிர தமிழ் தேசியவாத இயக்கங்களாக கருதப் பட்ட விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியனவையும், அவற்றின் அரசியல் பிரிவுகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களினால் தலைமை தாங்கப் பட்டு வந்தன. 2009 க்கு முந்திய தமிழ் நாட்டிலும் அது தான் நிலைமை.

ராஜீவ் கொலைக்குப் பின்னர், தடா, பொடா சட்டங்களின் அடக்குமுறை காரணமாக, முந்திய ஈழ ஆதரவாளர்கள் அடக்கப் பட்டனர். பெரும்பான்மை தமிழர்களின் வாய்கள் அடைக்கப் பட்டன. அந்த தருணத்தில், மகஇக போன்ற கம்யூனிச அமைப்புகள் தான், ஈழ விடுதலைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தன. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களின் கட்சியும், தனது ஆதரவாளர்கள் சிலரை வன்னிக்கு அனுப்பும் அளவிற்கு ஆதரவளித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட இளைஞர்கள், வன்னி சென்று இராணுவப் பயிற்சி எடுத்து, போர்க் களத்திலும் நேரடியாக பங்காற்றி உள்ளனர். இந்தத் தகவல் இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. நக்சலைட் அமைப்புகள், தலித்திய அமைப்புகள் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது, ஒரு பெரிய திருப்புமுனை. இந்திய அரசுக்கு அவற்றை அடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றியது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகளை அடக்குவது, சில நேரம் எதிர்மறையான விளைவுகளை தரலாம். ஆந்திராக் காடுகளில், மாவோயிஸ்டுகளுக்கு முன்னாள் ஈழப் போராளிகள் சிலர் பயிற்சி அளித்தனர் என்ற தகவல் இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தப் பின்னணியில் தான், 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டனர். அதன் எதிர்வினையாக, தமிழ்நாட்டில் ஓர் மக்கள் எழுச்சி உண்டாகலாம் என்று RAW அஞ்சியது. அதனால், தீவிர தமிழ் தேசியம் பேசும், கம்யூனிசத்தை வெறுக்கும் வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகளை வளர்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டது. அதன் விளைவாக, நாம் தமிழர் கட்சியும், மே 17 இயக்கமும், குறுகிய காலத்திற்குள் அசுர வளர்ச்சி கண்டன.

இரண்டு தசாப்த காலமாக, ஈழ விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கம்யூனிச அமைப்புகள், இன்றைக்கும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படியான அமைப்புகள் இருப்பதே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. ஆனால், 2009 ஆம் ஆண்டு திடீரென முளைத்த தீவிர தமிழ் தேசியவாத அமைப்புகள், ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பெற்று வளர்ந்தது எப்படி? இடதுசாரி அமைப்புகள் நடத்திய எந்தவொரு ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் கண்டுகொள்ளாத தமிழக வெகுஜன ஊடகங்கள், நாம் தமிழர், மே 17 க்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?

ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே பெருமளவு ஆதரவை திரட்டிக் கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளும், டெலோவும் முன்னணியில் நின்றன. டெலோவுக்கு இந்திய மத்திய அரசு நேரடியாக நிதியுதவி வழங்கியது. புலிகளுக்கு அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நிதி வழங்கினார். எம்ஜிஆர் சுதந்திரமாக இயங்கவில்லை. அவரும் இந்திய அரசின் அனுசரணையின் பேரில் ஒரு முகவராக செயற்பட்டார்.

புலிகளையும், டெலோ வையும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த இயக்கங்களில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தது. மார்க்சிய- லெனினிசத்தை தமது சித்தாந்தமாக அறிவித்துக் கொண்ட பிற ஈழ விடுதலை இயக்கங்களை ஓரங் கட்ட வேண்டுமென்றால், இப்படியான தீவிர வலதுசாரி - தேசியவாத சக்திகளை வளர்த்து விட வேண்டும். இந்தியாவின் நோக்கம் எந்தளவு தூரம் நிதர்சனமாகி உள்ளது என்பதை, வரலாறு கூறுகின்றது.

1984 ஆம் ஆண்டு, ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில், LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்கள் தமக்குள் ஒன்று பட்டு, ஒரே அமைப்பாக இயங்க விரும்பின. தமிழர்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரே அமைப்பாக போராடுவது, இந்திய, இலங்கை அரசுக்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவு. எப்பாடு பட்டாவது அந்த ஒற்றுமையை குலைக்கவே முயற்சிப்பார்கள். ஈசாப்பின் நீதிக் கதைகளில் வருவதைப் போல, "ஒற்றுமையாக மேய்ந்த நான்கு மாடுகள், ஓநாயின் புத்திமதியை கேட்டு, பிரிந்து சென்று மேய்ந்த கதை" ஈழத்தில் நடந்தது. அதன் விளைவு என்னவென்று இன்று பலர் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக செயற்படுவதாக நடந்து கொண்டன. தமக்கிடையே எந்தவொரு கொள்கை முரண்பாடும் இல்லையென காட்டிக் கொண்டன. அன்று அவர்களின் பொது எதிரி மத்தியில் சோனியா அரசு, மாநிலத்தில் கருணாநிதி அரசாக இருந்தது. இதுவும் ஆரம்ப கால ஈழப் போராட்ட இயக்கங்களை நினைவுபடுத்துகின்றது. 

1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்றும், தமக்கிடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்றும் காட்டிக் கொண்டன. அவற்றின் பொது எதிரி, மத்தியில் ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யு.ஏன்.பி. கட்சி, வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளான அமிர்தலிங்கத்தின் த.வி.கூ. கட்சியாக இருந்தது. கருணாநிதியும் தி.மு.க.வும், தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது. அதே மாதிரி, அன்று ஈழத்தில் த.வி.கூ.வும், அமிர்தலிங்கமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது.

ஈழத்தில் புலிகளும், டெலோவும் தமக்கு இடையிலான முரண்பாட்டை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொண்டனர். அதனால், ஓர் இயக்கம் போராட்டத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அதனால், நாம் தமிழர், மே 17 க்கு இடையில் ஒரு "சகோதர யுத்தம்" நடப்பதற்கு, சில திரைப்படங்கள் குறித்த சர்ச்சை போதுமானதாக உள்ளது. மேலும், இலங்கை இறைமை கொண்ட இன்னொரு நாடு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அங்கே இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியாது. முதலில் ஈழ விடுதலையை ஆதரிப்பது போல நடிக்க வேண்டும். சிறிலங்கா அரசை அடிபணிய வைப்பதற்காக, போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படி எத்தனை கஷ்டங்கள்?

ஆனால், தமிழ்நாட்டில் அந்தளவு சிரமப் படத் தேவையில்லை. RAW நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். சிறிய சந்தேகம் தோன்றினாலே, சுட்டுக் கொன்று விடும் அளவிற்கு எச்சரிக்கையாக இருந்த, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயே RAW ஊடுருவ முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஊடுருவுவது ஒரு கடினமான விடயமா? 

அது சரி, உளவாளிகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? ஏனென்றால், அவர்களும் மிகத் தீவிரமான தமிழ் தேசியம் பேசுவார்கள். புலிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறுவார்கள். தமிழீழத்தை, புலிகளை விமர்சிக்கும் எல்லோரையும் பாய்ந்து குதறுவார்கள். இவர்களை கண்டுபிடிப்பது என்பது, நெல்லில் கல் பொறுக்குவது போன்றது.

புலிப்பார்வை திரைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நேரம் தான் இன்னொரு செய்தியும் வந்தது. அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்டுகள் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு, இந்திய மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது. தமிழ் நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் திரும்ப விடாமல் தடுக்க வேண்டுமானால், இன்னும் இன்னும் தமிழ் தேசிய உணர்வை தூண்டி விட வேண்டும். புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப் படங்கள், RAW தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன.

தமிழ் நாட்டில் "ரா"மையாவின் ஆட்டம் ஆரம்பம்.

*****

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்
ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

Sunday, August 17, 2014

ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம்.

மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சார கருத்தியல், பிற்காலத்தில் வலிந்து புகுத்தப் பட்டிருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் இருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள ஈராக்கில் வாழும், யேசிடி மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில், கிட்டத்தட்ட இதே மாதிரியான புராணக் கதை இருந்து வருகின்றது.

யேசிடி என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். 

தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது.

முருகனைப் பற்றிய கதைகளில் ஒன்று, முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கூறுகின்றது. முருகன் குழந்தையாக இருந்த நேரம், ஏழு அல்லது ஆறு கார்த்திகைக் கன்னியர்கள் அவனை சரவணப் பொய்கையில் நீராட்டினார்கள். அதனால் முருகனுக்கு ஆறு தலைகள் உண்டாகி, கார்த்திகேயன் (தமிழில் ஆறுமுகன்) என்று அழைக்கப் பட்டான். (ஆரம்பத்தில் ஏழு தலைகள் இருந்தன என்றும் சொல்லப் படுகின்றது.)

இந்துக்களுக்கு மேற்குறிப்பிட்ட புராணக் கதை நன்கு தெரிந்திருந்த போதிலும், அதற்குப் பின்னால் உள்ள வான சாஸ்திர அறிவியலை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலர் தான். விண்வெளியில் இருக்கும் ஏழு கார்த்திகை நட்சத்திரங்கள் தான், அந்த ஏழு கன்னிகைகளும். நமது பூமி உள்ள பால்வெளியில் அந்த நட்சத்திரங்களும் உள்ளன. (ஏழு பின்னர் ஆறாகி உள்ளது. அதற்கும் ஒரு காரணக் கதை இருக்கிறது.)

சரவணப் பொய்கை என்பது அண்டவெளியில் உள்ள பால் வெளியை குறிக்கும். ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், புராணக் கதையில் முருகனின் ஆறு முகங்களாக உருவகிக்கப் பட்டது. உண்மையில் இது மதம் சம்பந்தமான விடயம் அல்ல. ஆதி கால மனிதர்களின் வான சாஸ்திர அறிவியல், இப்படியான கதைகள் மூலமாகத் தான் பரப்பப் பட்டு வந்துள்ளது. யேசிடி மதத்தவர்கள், இதே மாதிரியான கதையை ஏழு வர்ணங்களாக உருவகித்து உள்ளனர். ஆனால், இரண்டுக்கும் இடையிலான அறிவியல் அடிப்படை ஒன்று தான்.

தென்னிந்திய முருகன் வழிபாட்டில் காணப்படும் சேவல், மயிலில் காலின் கீழ் மிதிபடும் பாம்பு ஆகியன, யேசிடி மதத்தவராலும் புனித சின்னங்களாக கருதப் படுகின்றன. இவற்றை நேரில் கண்டறிய விரும்புவோர், வட ஈராக்கில் உள்ள லாலிஷ் எனும் இடத்தில் உள்ள யேசிடி மதத்தவரின் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அல்கைதா, ISIS போன்ற முஸ்லிம் மதவெறி இயக்கங்கள், அந்தக் கோயிலை தகர்ப்பதற்கு பல தடவைகள் முயற்சித்துள்ளன.

“முருகன் வழிபாடு, தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமானது!” என்ற ஒரு பிழையான கட்டுக்கதை தமிழர்கள் மத்தியில் உள்ளது. அநேகமாக, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழினவாதிகளே இது போன்ற கட்டுக் கதைகளை பரப்பி வந்துள்ளனர். முருகன் வழிபாடு, தென்னிந்தியாவில் உள்ள பிற திராவிட இனங்கள் மற்றும் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. அநேகமாக, முருகன் வழிபாடு ஆரிய மயமாக்கலுக்கு முந்திய திராவிட இனங்களின் வழிபாடாக இருந்திருக்கலாம்.

ஒரு காலத்தில், இந்தியா முதல், அரேபியா வரையில், முருகன் வழிபாடு இருந்திருக்க வேண்டும். சில அரேபியர்கள் இஸ்லாமியராக மாறிய பின்னரும், முருகனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அரபு இஸ்லாமியர் மத்தியில் “அல் கதிர்” என்று அழைக்கப்படும் தெய்வம், முருகனை நினைவுபடுத்துகின்றது. முருகனுக்கு “கதிர் (காமன்)” என்ற இன்னொரு பெயர் இருப்பதை, நான் இங்கே சொல்லத் தேவையில்லை. இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இஸ்லாமியர் வழிபாடு நடத்தும் பகுதி ஒன்று இன்றைக்கும் உள்ளது.

யேசிடி மதத்தவரின் கோயில் பூசாரிகளை "பிர்" என்று அழைப்பார்கள். கதிர்காமத்தில் பூசை செய்பவர்களும் பிராமணர்கள் அல்லர். அதற்கென்று தனியான பூசாரிகள் உள்ளனர். அவர்கள் பூசை வழிபாடு நடத்தும் முறை, பிற இந்துக் கோயில்களில் இருந்து மாறுபட்டது. யேசிடி மதத்தில் உள்ள, பக்திப் பாடல்களை  "கவ்வல்" என்று அழைப்பார்கள். அவற்றைப் பாடுவோர் "கவ்வாலிகள்" ஆவர். 

இன்றைய பாகிஸ்தானில், கர்நாடக சங்கீதம் போன்று, கவ்வாலி இசை மரபு இருந்து வருகின்றது. தமிழில் "காவாலி" என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அது வேண்டுமென்றே எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. இந்து மத மேலாதிக்கவாதிகள், தமிழர்களின் மரபு வழி மத நம்பிக்கைகளை அழிப்பதற்காக, வேண்டுமென்றே அப்படியான தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். 

ஈராக்கில் வாழும் யேசிடி குர்தியர்கள் திராவிடர்கள் அல்ல, ஆரியர்கள். அவர்களுக்கும் முஸ்லிம் குர்தியர்களுக்கும் இடையில், உருவத் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இல்லை. குர்து மொழியானது, பார்சி, சமஸ்கிருதம் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு நெருக்கமானது. குர்து மக்களில் பெரும்பான்மையானோர் சன்னி முஸ்லிம்கள். ஆயினும், மிகக் குறைந்த அளவில், யூத மதத்தை பின்பற்றுவோரும், ஷியா முஸ்லிம்களும், குர்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் வாழ்கின்றனர். யேசிடி மதத்தை சேர்ந்த மூன்று இலட்சம் குர்தியர்கள், ஒரு புராதன கால மதத்தை பின்பற்றுவதால், பல்வேறு பக்கங்களாலும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.

அரேபியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். பண்டைய காலத்தில், அரேபியர் என்றால், அரபு மொழி பேசுவோர் என்று அர்த்தம். இனம் பற்றிய கற்பிதங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் தோன்றின. ஈராக்கில் வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானோர், அரபு மொழியை பேசியதால் அரேபியர் ஆனவர்கள். அவர்களின் பூர்வீகம் கிரேக்கமாக கூட இருக்கலாம். அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்கு பின்னர் ஏராளமான கிரேக்கர்கள் அங்கே குடியேற்றப் பட்டனர். 

அலெக்சாண்டரின் காலத்திலேயே,  ஈராக்கில் இருந்த பாபிலோனிய கலாச்சாரம் அழிந்து விட்டது. கூடவே பாபிலோனியரின் மத நம்பிக்கைகளும் காணாமல் போய் விட்டன. ஆயினும், வெளியுலக தொடர்பற்ற வட ஈராக்கிய மலைப் பிரதேசத்தில், அது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்திருக்கலாம். யேசிடிகள் அந்தத் தொடர்ச்சியை பேணி வருபவர்களாக இருக்கலாம்.

யேசிடிக்கள் ஒரு புராதன கால மதத்தை பின்பற்றினாலும், அது காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அது பிற மதங்களுடன் சமரசம் செய்து கொண்டு (syncretic), தன்னைத் தானே மறு வார்ப்புச் செய்து கொண்டுள்ளது. ஆதிகால பாரசீக மதமான, சரதூசரின் மதத்தின் சில கூறுகளை கொண்டுள்ளது. அதே நேரம், பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் போன்று ஞானஸ்நானம் எடுப்பது, இஸ்லாமியர்கள் போன்று ஐந்து வேளை தொழுவது.

உண்மையில் “யேசிடி” என்பது அந்த மதத்தின் பெயர் அல்ல. அது, பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். அந்த மதத்தின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதைப் பின்பற்றும் மக்களுக்கும் தெரியாது. கி.பி. 680 - 683 காலத்தில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபா "யாசிட்" இன் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். ஒருவேளை அந்தக் கால கட்டத்தில், மேற்கத்திய நாடுகளில் இருபதைப் போன்று, ஜனநாயக சமுதாயம் இருந்திருக்கும். பல கல்வியாளர்கள் மத்தியில், அழிந்து போன புராதன மதங்களை ஆராயும் ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். யாசிட் கலீபா அப்படியான அறிஞர்களை ஆதரித்திருக்கலாம்.

அந்தக் காலகட்டத்திற்கு பின்னர் தான், யேசிடி ஒரு மத நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் நமது நாட்டில் உள்ள சிறு தெய்வ வழிபாடு போன்று இருந்து வந்துள்ளது. இன்றைய லெபனானில் பிறந்த "அடி பின் முஸாபர்" (Adi bin Musafar) பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வி கற்பதற்காக வந்திருந்தார். அங்கே தான் யேசிடி மதம் பற்றி அறிந்து கொண்டார். அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, வட ஈராக்கில் உள்ள ஹக்கரி மலைகளுக்கு சென்றார். நமது காலத்தில் அப்படியானவர்களை Anthropologist என்று அழைப்பார்கள்.

ஹக்கரி மலைகளில் வாழ்ந்த குர்து மொழி பேசும் மக்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். அதனால், முஸாபர் அவர்களுக்கு ஒரு மீட்பர் போன்று தென்பட்டார். முஸாபர் அந்த மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார். அந்த மக்களை நிறுவன மயப் படுத்தினார். அவரின் விசுவாசிகள் அடவைஜா குழு என்று அறியப் பட்டனர். முஸாபர் இறந்த பின்னரும், மொசுல் நகருக்கு அருகில் இருந்த அவரது சமாதி, புனித யாத்திரை செல்லும் ஸ்தலமாகியது. பதினான்காம் நூற்றாண்டில், இஸ்லாமிய தூய்மைவாதிகள் அந்த சமாதியை உடைத்து விட்டனர்.

இஸ்லாமிய ஈராக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும், புனித நூலின் மக்களாக கருதப் பட்டனர். அதனால் அவர்கள் மேல் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் படவில்லை. ஆனால், யேசிடி மக்கள் “பிசாசை வழிபடுபவர்கள்” என்று தவறாக கணிக்கப் பட்டார்கள். அதிகார வர்க்கம் ஒடுக்குமுறைகளை பிரயோகித்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த எந்த மதத்தை சேர்ந்த மக்களும் உதவ முன் வரவில்லை. இன்று வரைக்கும் அது தான் நிலைமை. 

19 ம் நூற்றாண்டில் இருந்த துருக்கி ஆட்சியாளர்களும், குர்து முஸ்லிம் நிலப்பிரபுக்களும் கூட, யேசிடி மக்களை புறக்கணித்து ஒதுக்கி வந்துள்ளனர். சதாம் ஹுசைன் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் யேசிடி மக்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் மீளக் குடியேற்றப் பட்டனர். அதன் விளைவாக, யேசிடிகள் குறிப்பிட சில பிரதேசங்களில் நெருக்கமாக வாழும் சமூகமானார்கள். அவர்களின் பிரதேசங்களை சுற்றிலும் அரேபியர்கள் வாழ்ந்தனர். இது அரசினால் திட்டமிடப் பட்ட, ஒரு வகையான சமூக கண்காணிப்பு எனலாம்.

2003 ம் ஆண்டு, ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த நேரம், அடக்கப்பட்ட சிறுபான்மை இனமான யேசிடி குர்தியர்கள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர். சதாம் காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்த சன்னி அரேபியர்கள் அமெரிக்கப் படையினரின் கடுமையான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியருக்கும், யேசிடிகளுக்கும் இடையில் ஒரு பிளவை உண்டு பண்ணியது. அன்று அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய அல்கைதா பாணி இயக்கங்கள், யேசிடிகள் மீது இடைக்கிடையே வன்முறை பிரயோகித்து வந்தன.

அண்மைக் காலத்தில், ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ISIS இயக்கம், சன்னி - இஸ்லாமிய மதவாத இயக்கம் ஆகும். அதனால், ஈராக்கின் சன்னி முஸ்லிம் மக்களும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அண்மையில், சின்ஜார் பகுதியில் இடம்பெற்ற யேசிடி இனச் சுத்திகரிப்பின் போது, ISIS இயக்கத்திற்கு உள்ளூர் சன்னி முஸ்லிம் அரேபியரின் ஆதரவு கிடைத்தது. தம்மோடு ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்தவர்கள், அயலவர்கள் காட்டிக் கொடுத்ததாக, அகதிகளாக வெளியேறிய யேசிடி மக்கள் கூறுகின்றனர். 

யேசிடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. மதச் சின்னங்களை அணிவதில்லை. அரேபியர் போன்று நடந்து கொள்கின்றனர். அவர்கள் சரளமாக அரபு மொழி பேசினாலும், உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில், யேசிடிகளின் தாய் மொழி குர்து ஆகும்.

ISIS ஒரு பாசிஸ இயக்கம் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அவர்களது “இஸ்லாமியத் தாயகத்தில்” சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே “பிரஜாவுரிமை” கிடைக்கும். ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகின்றனர். யேசிடிகளுக்கு அந்த சலுகை கிடையாது. ஏனென்றால், அவர்கள் “பிசாசை வழிபடுபவர்கள். அதனால், அழிக்கப் பட வேண்டியவர்கள்.” என்பது ISIS முன்வைக்கும் வாதம்.

துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் உள்ள பிற அரேபியர்களும் அந்தக் கருத்தை மௌனமாக வழி மொழிகின்றனர். ஈராக்கில் யேசிடிகளுக்கு எதிரான இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மிகவும் கொடூரமாக நடந்துள்ளன. அதற்கு, உள்ளூர் மக்களின் மௌனமான அங்கீகாரமும் ஒரு காரணம். சில இடங்களில், சாதாரண அரபி மக்களே, இனச் சுத்திகரிப்புக்கு துணை போயுள்ளனர்.

வசதியான யேசிடி மக்கள் பிரிவினர், துருக்கி சென்று அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஜெர்மனியில் மிகப் பெரும் எண்ணிக்கையில், புலம்பெயர்ந்த யேசிடி மக்கள் வாழ்கின்றனர். தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் யேசிடி மதம் வளர முடியுமா? குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருகின்றது. அவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பழைய சடங்குகளை புறக்கணித்து வருகின்றனர். 

யேசிடி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்குட்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள் என்பன, யேசிடி மக்களை ஒரு சமூகமாக சேர்ந்திருக்க வைத்தது. நேற்று வரையில், ஈராக்கில் அது சாத்தியமானது. யேசிடி மதம் அழிந்து போகாமல், தொடர்ந்தும் நிலைத்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான்.


யேசிடி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

Saturday, August 16, 2014

உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது"பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினர், எம்முடன் இணங்கிப் போக முடியாத பகைவர்கள். அவர்களது செல்வமானது எமது வறுமையின் மேல் கட்டப் பட்டது. அவர்களது மகிழ்ச்சி எமது துயரங்களை அடித்தளமாகக் கொண்டது." - ஸ்டாலின்


ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவதாக காட்டிக் கொள்ளும், "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும், அதே ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதை, பல தடவைகள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் வாழும் பிரஜைகள் அனுபவிக்கும் அனைத்து சுதந்திரங்களையும், ஒரு ஈழத் தமிழர்களும் அடைய விரும்புவதில் என்ன தவறு? அவர்கள் கனவு காணும் தேசத்திற்கு கம்யூனிசம், சோஷலிசம், ஜனநாயகம், நலன்புரி அரசு, அல்லது தமிழீழம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்.

ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் உரிமைகளை கோருகிறார்கள். சுதந்திரம் என்றால் என்னவென்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். சிங்கள பேரினவாதத்தில் இருந்து மட்டுமல்ல, முதலாளித்துவ அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை அடைவதும் சுதந்திரம் தான்.

ஈழத் தமிழர்களும், மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களைப் போன்று அடிப்படை வசதி, வாய்ப்புகளை அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள் இல்லையா? கல்வி, தொழில், வீடு, சுகாதார வசதிகள் ஒரு மனிதனின் அடிப்படை மனித உரிமைகள் இல்லையா?

இந்த வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கும் நடுத்தர வர்க்க தமிழர்கள், அதனை உழைக்கும் வர்க்க தமிழர்கள் அடைய விடாமல் தடுப்பது என்ன நியாயம்?
தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதற்கு இவர்கள் யார்?
          அவர்கள் தான் உழைக்கும் வர்க்கத் தமிழர்களின் வர்க்க எதிரிகள். 

தற்போது யாழ் வைத்தியசாலையில் இளம் மருத்துவராக பணியாற்றும் நண்பர் ஒருவர், என்னுடனான முகநூல் விவாதம் ஒன்றின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டார்: 
//நீங்கள் ஏழை உழைக்கும் வர்க்க மக்களுக்காக பாடுபடுகிறீர்கள். ஆனால், சிங்கள உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஏழை மக்கள் தான், பெரும்பாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறியை காட்டுவோராக இருக்கின்றனர்.// 

ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் இனவாதிகளாக மட்டுமல்ல, மதவாதிகளாகவும், சாதிய வாதிகளாகவும் கூட இருக்கின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அது தான் நிலைமை. மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வெளிப்படையாக நிறவெறியை காட்டுவோர், பெரும்பாலும் வெள்ளையின ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் தான்.

சே குவேராவும் ஒரு மருத்துவர் தான். சுகபோக வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, பொலிவிய ஏழை உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, காடுகளுக்குள் மறைந்திருந்து போராடினார். மக்களின் ஆதரவின்றி, அவரது கெரில்லாப் போராட்டம் தோல்வியடைந்தது. இறுதியில், பொலிவியா படையினரிடம் அகப்பட்டு, கைதியாக வைக்கப் பட்டிருந்த சே இடம், ஒரு இராணுவ அதிகாரி கேட்டான்: 
//நீ எந்த ஏழை மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்டாயோ, அதே மக்கள் தான் உனக்கு எதிராகத் திரும்பினார்கள், பார்த்தாயா?// 

அதற்கு சே கூறிய பதில் : 
//அவர்கள் நீ சொன்ன பொய்களை நம்புகிறார்கள். அதனால் தான்.//

*******

கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த எமது குடும்பம், அனேகமாக தமிழர்களுக்கு விரோதமான எல்லாக் கலவரங்களையும் கண்டு அனுபவித்துள்ளது. 1977, 1983 கலவரங்களை நானே நேரில் கண்டு அனுபவித்துள்ளேன். அந்தக் காலங்களில், கொழும்பில் வாழும் தமிழர்கள் அரசுக்கு எதிரான தமது அதிருப்திகளை தெரிவித்த போதெல்லாம், தமிழீழத்தில் சென்று வாழுமாறு சிங்களவர்கள் மிரட்டல் விடுப்பார்கள்.

இதனால், 1983 கலவரம் தொடங்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்னரே, எமது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு, அதாவது தமிழீழத்திற்கு படிப்படியாக புலம்பெயர்ந்து கொண்டிருந்தோம். 83 படுகொலைகளுக்கு பின்னர், இனிமேல் தமிழர் யாரும் சிங்களப் பிரதேசங்களில் வாழ மாட்டார்கள் என்றும், எல்லோரும் தமிழீழம் சென்று விடுவார்கள் என்று அப்பாவித் தனமாக நம்பிக் கொண்டிருந்தோம்.

எமது நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம், ஜூலை மாதம் அகதிகளாக யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழர்களில் பெரும்பான்மையானோர், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் கொழும்புக்கு சென்று விட்டார்கள். அப்படித் திரும்பிச் சென்றவர்கள், தமது தொழில் வாய்ப்புகளை அதற்கு காரணமாக காட்டினார்கள். ஈழப் போர் தொடங்கிய பின்னர், இன்னும் புதிதாகப் பலர், ஆயிரக் கணக்கில் கொழும்பு சென்று குடியேறி விட்டார்கள். அதில் ஒரு தொகையினர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். நாங்கள் மட்டும் தமிழீழ தாயகப் பூமியில் நிரந்தரமாக தங்கி விட்டிருந்தோம்.

சில வருடங்களுக்குப் பின்னர், நானும் கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டிருந்தது. அப்போது யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. கொழும்பில் கூட குண்டுவெடிப்புகள் காரணமாக, நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் இறந்து விட்டிருந்தனர். ஆனால், கொழும்புத் தமிழர்கள் யார் மனதிலும் மீண்டும் ஓர் இனக் கலவரம் வருமென்ற கவலை இருக்கவில்லை. காரணம் கேட்டதற்கு, அரசாங்கம் இனிமேல் அப்படி எதுவும் நடக்க விடாது என்று உறுதியாகக் கூறினார்கள்.

இன்றைக்கும் கொழும்பில் வசதியாக வாழும் நடுத்தர வர்க்கத் தமிழர்கள் பலர், மிகத் தீவிரமான தமிழ் தேசியவாதிகளாக உள்ளனர். "இனிமேலும் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழீழம் என்பது முடிந்த முடிவு." என்று வாதாடினார்கள். அப்படிக் கூறும் பலர், சிங்கள அரசிடம் கை கட்டி, வாய் பொத்தி சேவகம் செய்கிறார்கள். சிங்கள அரசு நிர்வாகத்திற்கு தமது உழைப்பை செலுத்திக் கொண்டிருகிறார்கள்.

சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள், எவ்வாறு சிங்கள அரசுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.

******


இந்த வருடமும் (2014), ஆகஸ்ட் மாதம் லண்டனில் கோலாகலமாக நடந்த, ஈலிங் அம்மன் கோயில் தேர் திருவிழாவில், பல்லாயிரக் கணக்கான தமிழ் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். லண்டன் மாநகரில் வாழும், பல்லின மக்கள் ஒன்று சேர்ந்து காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த சாமி ஊர்வலமும் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

லண்டன் தேர்த் திருவிழாக்களில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நடந்த காலத்திலும் இந்த திருவிழாக்கள் நிறுத்தப் படவில்லை. லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும், "தமிழ் தேசிய" தொலைக்காட்சியான GTV, ஒவ்வொரு வருடமும் நேரடி ஒளிபரப்புச் செய்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் கூட, GTV யில் லண்டனில் நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

எந்தவொரு "மாற்றுக்" கருத்தாளரும், போலித் தமிழ் இன உணர்வாளரும், கோயில் திருவிழா கொண்டாடும் பக்தர்களின் சமூக அக்கறையின்மை குறித்து கேள்வி எழுப்ப மாட்டார். அம்மனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயம் போலும்.

ஊர், உலகத்தில், எவன் செத்தாலும் நாங்கள் அழ மாட்டோம். ஆனால், எங்கள் வீட்டில் நடக்கும் மரணத்திற்கு மட்டும் உலகம் முழுவதும் அழ வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

Thursday, August 14, 2014

அமெரிக்காவின் "மனிதாபிமான வான் தாக்குதல்" - அம்பலமாகும் பொய்கள்வட ஈராக்கில், யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதற்காக,அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியதாக மேற்குலக ஊடகங்களில் அறிவிக்கப் பட்டது. உண்மையில், இந்த "மனிதாபிமான நடவடிக்கை" காரணமாக அமெரிக்கா மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர், ஈராக்கில் குண்டு போடவில்லை. யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதை விட, எர்பில் நகரில் உள்ள எக்சன்-மொபில் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதே, அமெரிக்க வான் தாக்குதல்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

 "யேசிடி" என்பது இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் முந்திய புராதன கால மதம். அதற்கு சரதூசரின் மதத்துடன் சில தொடர்புகள் உள்ளன. ஆனால், யேசிடி அதிலிருந்து மாறுபட்ட வேறொரு மதம். யேசிடி மதத்திற்கும், முருக வழிபாட்டிற்கும் தொடர்பிருக்கலாம். இரண்டிலும் மயில் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் மக்களில் ஒரு பிரிவினர், இன்றைக்கும் யேசிடி மதத்தை பின்பற்றி வருகின்றனர். 

மதவாத இயக்கமான ISIS, அந்த மக்கள் "பிசாசை வழிபடுபவர்கள்" என்று கூறி வெளியேற்றியுள்ளது. ISIS கையில் அகப்பட்ட பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். குறைந்தது 500 யேசிடிக்கள் கொன்று புதைக்கப் பட்டனர். ISIS ஆக்கிரமிப்பாளர்களின் இனப்படுகொலைக்கு தப்பிய யேசிடி குர்தியர்கள், மலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

வட ஈராக்கில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இனமான, யேசிடி மதத்தை பின்பற்றும் குர்து மக்கள், ISIS மதவெறியர்களினால் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். இனப்படுகொலைக்கு தப்பிய பத்தாயிரம் யேசிடி குர்தியர்கள், சின்ஜார் மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தணலாகக் கொதிக்கும் வெயிலில், உணவின்றி, நீரின்றி, சிறு குழந்தைகளுடன் பல மைல் தூரம் நடந்து சென்ற மக்களைப் பற்றிய துயரக் கதைகளுக்கு, மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பியதாகவும், மலைகளில் அகப்பட்ட மக்களை காப்பாற்றி கொண்டு சென்றதாகவும் சொல்லப் பட்டது. இந்த மனிதாபிமான நெருக்கடியை காரணமாகக் காட்டி, அமெரிக்க போர் விமானங்கள் ISIS நிலைகளின் மீது குண்டு வீசித் தாக்குவதாகவும் அறிவிக்கப் பட்டது.

ஆனால், உண்மையில் அங்கே நடந்தது என்ன?

அமெரிக்க வான் தாக்குதல் நடப்பதற்கு முன்னரே, சிரியாவில் நிலைகொண்டிருந்த PKK இயக்கப் போராளிகள் சின்ஜார் பகுதிக்குள் ஊடுருவினார்கள். அவர்கள் ஏற்கனவே, வட சிரியாவில் குர்து மொழி பேசும் மக்களின் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள். ISIS மதவாத இயக்கத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருகிறார்கள். 

PKK போராளிகள், யேசிடி குர்தியர்களை, வட சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு தான், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த மக்களை தாமே மீட்டதாக ஊடகங்களுக்கு அறிவித்துக் கொண்டன. எத்தனை பெரிய பொய்? ஆனால், மேற்குலகம் எதைச் சொன்னாலும் உண்மை என்று நம்பும் மக்கள் உலகில் இருக்கும் வரையில், இந்தப் பொய்கள் அரங்கேறும்.

உண்மையில், பெரும்பான்மையான யேசிடி குர்திய மக்களை மீட்டவர்கள் PKK போராளிகளே! இன்று வரைக்கும் சின்ஜார் நகரம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு ஆதாரமாக, யேசிடி மதத்தவரின் புனித ஸ்தலத்தை, PKK போராளிகள் பாதுகாப்பதை இங்கேயுள்ள படத்தில் பார்க்கலாம்.

இந்தத் தகவலை, மீட்பு நடவடிக்கைக்காக ஈராக் குர்திஸ்தனுக்கு சென்று வந்த ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Ulla Jelpke உறுதிப் படுத்தி உள்ளார். குர்திஸ்தானில் நின்ற நெதர்லாந்து ஊடகவியலாளர் ஒருவரும், தொலைக்காட்சி கமெராவுக்கு முன்னால் ஒரு தகவலைக் கூறினார். "யேசிடி மக்கள் சிரியாவை நோக்கி அகதிகளாக செல்வதாகவும், அவர்கள் ஏன் ஈராக் குர்திஸ்தான் பக்கம் வரவில்லை என்ற காரணம் தெரியவில்லை" என்று கூறினார்.


யேசிடி குர்து மக்கள் பற்றிய முன்னைய பதிவு:
யேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்

Wednesday, August 13, 2014

இஸ்ரேலுக்கு எதிரான இடதுசாரி யூதர்கள்


காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது.

இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிக்கின்றன. இஸ்ரேலை நியாயப் படுத்தும் பெற்றோரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்க்கும் பிள்ளைகளும், அடிக்கடி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், இஸ்ரேல் குறித்த கருத்து முரண்பாடுகள், மாணவர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சியோனிச யூத மாணவர்களும், பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களும் ஓரணியில் நின்று இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். மறு பக்கத்தில், மதச் சார்பற்ற யூத மாணவர்களும், இடதுசாரி மாணவர்களும் எதிர் அணியில் நின்று, இஸ்ரேலை எதிர்க்கிறார்கள்.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அணியினரின் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்கள் அந்த அணியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் பக்க நியாயத்தை கூறும் தகவல்கள், அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருவதும் அதற்கு ஒரு காரணம். தமிழ் பேசும் இணைய சமூகத்திலும் அது போன்ற மாற்றங்களை உணர முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு வரையில் கூட, இஸ்ரேலின் சியோனிச கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வந்த, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர், அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளனர்.

பிரிட்டனில், பாலஸ்தீன நீதிக்கான யூதர்கள் (Jews For Justice For Palestinians) என்ற இடதுசாரிகளின் அமைப்பு, 2003 முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. லண்டனில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரி யூதர்களின் பிரிவு ஒன்று தவறாமல் கலந்து கொள்கின்றது. அமெரிக்க நகரங்களிலும், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களிலும், இடதுசாரி யூதர்களின் அணி ஒன்று, ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும் குழுவில் கலந்து கொள்கின்றது.

லண்டனில், டவுனிங் தெருவில், பட்டப்பகலில் ஓர் இஸ்ரேலிய பிரஜை தனது கடவுச் சீட்டை எரித்து பரபரப்பூட்டினார். அந்த சம்பவத்திற்குப் பின்னர், லண்டனில் வாழும் யூதர்கள் பலர், வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்து பேசும் துணிவைப் பெற்றுள்ளனர். (இவ்வளவு காலமும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள், யூத சமூகத்திற்குள் கடுமையாக அடக்கப் பட்டன.) மேலும், யூதர்களை வெறுக்காமல் இஸ்ரேலை விமர்சிப்பது எப்படி என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம், ஒவ்வொரு ஆரப்பாட்டங்களின் போதும் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகின்றது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து நின்றால் இலங்கை அரசுக்கு கொண்டாட்டம். அதனால், எத்தகைய இடதுசாரி அமைப்பிற்குப் பின்னாலும் மக்கள் சென்று விடாதவாறு, அரசு தனது கைக்கூலிகளைக் கொண்டு எதிர்ப் பிரச்சாரங்களை முடுக்கி விடும். அதே சூழ்ச்சியை, மேற்கத்திய நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

மேற்கத்திய நாடுகளில் வாழும், "ISIS ஆதரவு முஸ்லிம் மதவாதிகள்", பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் புகுந்து, யூதர்களுக்கு எதிரான கோஷம் எழுப்புவார்கள். அத்தகைய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள், "எமது நாட்டில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதால், யூத மக்கள் பயந்து போயிருக்கிறார்கள்" என்று வதந்திகளை பரப்பி விடுவார்கள். அந்த நாடுகளில் உள்ள வலதுசாரி சியோனிச அமைப்புகளும் தரவுகளை தொகுத்து அறிக்கையாக சமர்ப்பிக்கும். இவை எல்லாம், மேற்கத்திய உளவு நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன என்பது இரகசியம் அல்ல. உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும், குறிப்பிட்ட அளவு இனவாதிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை வளர விடாமல் தடுப்பது நாகரிகமடைந்த மக்களின் கடமை ஆகும்.

இஸ்ரேலிலும், இடதுசாரி யூதர்கள், காஸா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இஸ்ரேலில் அரச அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. இஸ்ரேலிய இடதுசாரி கட்சியொன்றை சேர்ந்த, பாலஸ்தீன பூர்வீகத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கினேசெட் எனும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது, "ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று குறிப்பிடவில்லையாம். அந்தக் குற்றத்திற்காக, அவருக்கு ஆறு மாத காலத்திற்கு பாராளுமன்ற பேச்சுரிமை மறுக்கப் பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்தளவு அடக்குமுறை என்றால், பிற சமூக ஆர்வலர்களின் நிலைமை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இஸ்ரேலை வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக கணித்தால், அங்கே தான் வறுமை அதிகமாக உள்ளது. 2011 டெல் அவிவ் நகரில், அரசுக்கு எதிராக Occupy பாணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போர் நடக்கும் காலத்தில் வழமையாகவே தேசியவெறி அதிகரிக்கும். ஹமாசின் ஏவுகணைகளை காட்டி, இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியம் என்று செய்யப் படும் பிரச்சாரங்கள், அப்பாவி மக்களை இலகுவில் கவரக் கூடியவை. "மதம் மக்களின் அபின்" என்றார் கார்ல் மார்க்ஸ். (அவரும் ஒரு யூதர் தான்.) மதம் மட்டுமல்ல, தேசிய வெறியும் மக்களின் அபின் தான் என்று, நூறு வருடங்களுக்கு முன்னரே, தன்னை ஒரு சியோனிச எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டார், மாமேதை ஐன்ஸ்டைன். (அவரும் ஒரு யூதர் தான்.)

(இந்தக் கட்டுரை சில பத்திரிகை செய்திகளை தழுவி எழுதப் பட்டது.)

தகவல்களுக்கு நன்றி :
NRC Handelsblad (நெதர்லாந்து) 
Haaretz (இஸ்ரேல்)

Tuesday, August 12, 2014

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் பொருளாதாரத் தடை


இவ்வளவு காலமும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகள் விதித்து வந்தன. இன்று, ரஷ்யா ஐரோப்பாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஒன்றை அறிவித்துள்ளது. இன்று முதல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. இந்தத் தடை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இதனால், பல ஐரோப்பிய நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன.

அதை விட, ஏற்கனவே, உக்ரைனுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், 5 மில்லியன் மக்கள் வாழும் கீவ் நகரில், சுடு தண்ணீர் கிடைப்பதில்லை. வசதியான கீவ் நகரவாசிகள், மின்சார கொதிகலன் வாங்கி தண்ணீர் கொதிக்க வைத்து குளிக்கிறார்கள். எல்லோரும் அதைப் பாவிக்கத் தொடங்கினால், குளிர்காலத்தில் மின்சாரத் தடை எற்படும். இந்த வருடம் வரப் போகும் குளிர்காலத்தில், எரிவாயு, மின்சாரம் இன்றி வாழ வேண்டிய நிலைமை வரலாம்.

"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது!" பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப் படப் போகும் ரஷ்ய மக்களுக்காக, மேற்கு ஐரோப்பியர்கள் கவலைப் படுகிறார்கள். அதற்கு காரணம் இது தான். மேற்கத்திய நாடுகளின் விவசாயப் விளைபொருட்கள், உணவுப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் பிரச்சினை காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வந்ததற்கு, பதிலடியாக இது நடந்துள்ளது.

இதனால், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப் படவுள்ளன. நெதர்லாந்தில் இருந்து பாலாடைக் கட்டி (சீஸ்), கறிமிளகாய், தக்காளி போன்ற உணவுப் பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகின்றன. சுமார் ஒன்றரை பில்லியன் பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப் படவுள்ளது. அவை பழுதடையக் கூடிய பொருட்கள் என்பதால் களஞ்சியப் படுத்தி வைக்கவும் முடியாது.

"தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்" என்று வாதாடி வரும், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" இந்தப் பிரச்சினையிலும் ரஷ்யா தான் அதிகளவு பாதிக்கப் படப் போகின்றது என்று ஆரூடம் கூறி வருகின்றனர். ரஷ்யா ஏற்கனவே ஈரானுடனும், லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், மேற்கு ஐரோப்பியர்கள் தான் தமது பொருட்களை விற்பதற்கு புதிய சந்தைகளை தேட வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு, உலகில் எத்தனை நாடுகள் தயாராக இருக்கின்றன என்பதும் கேள்விக் குறி தான்.

ரஷ்யர்களும், எமது மக்களைப் போன்றவர்கள் தான். வெளிநாட்டுப் பொருட்கள், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். எமது நாட்டில் நடப்பதைப் போன்று, ரஷ்யாவிலும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே, மேற்கத்திய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் பாவிக்கிறார்கள். ஏழைகளும், கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், மலிவாகக் கிடைக்கும் உள்நாட்டுப் பொருட்களுடன் திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். ஆகவே, மேற்கத்திய உணவுப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப் பட்டால், சிறுபான்மையினரான மேட்டுக்குடி மக்கள் மட்டும் தான் பாதிக்கப் படுவார்கள்.

அதே நேரம், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். ரஷ்யாவுக்கான ஏற்றுமதி தடைப் பட்டால், உள்நாட்டில் அந்தப் பொருட்களின் விலை சரியும். இதனால், மேற்கத்திய நாடுகளில் வாழும் பண வசதியற்ற, ஏழை மக்கள், குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்கக் கூடியதாக இருக்கும். தீமையிலும் ஒரு நன்மை என்று இதனைக் குறிப்பிடலாம்.

மேற்கத்திய நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை குறையும் "அபாயத்தை" தடுப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்கிறார்கள். அதாவது, "ஏற்றுமதியாகாமல் தேங்கிக் கிடக்கும் உணவுப் பொருட்களை கடலில் கொட்டினாலும் கொட்டுவார்களே தவிர," உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வர மாட்டார்களாம். ஏனென்றால், ஒரு பொருள் சந்தையில் தாராளமாக கிடைத்தால், அதன் விலை குறைந்து விடும் என்பது அடிப்படை முதலாளித்துவ நியதி. "மலிந்தால் சந்தைக்கு வரும்" என்பது ஒரு தமிழ்ப் பழமொழி.

பாலாடைக் கட்டி (சீஸ்) ஏற்றுமதியில் நெதர்லாந்து முன்னணி வகிக்கின்றது. அது உலகம் முழுவதும் ஏற்றுமதியாகின்றது. சீஸ் உற்பத்தி செய்யும் நாடென்பதால், நெதர்லாந்தில் அதன் விலை மலிவாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். (அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பலர் அவ்வாறு நினைத்து ஏமாந்து போகிறார்கள்.) உண்மையில், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் சீஸ், சந்தையில் தாராளமாகக் கிடைத்தாலும் அதன் விலை மிக அதிகம். ஆனால், அதே டச்சு சீஸ் கட்டியை, உதாரணத்திற்கு, அயல் நாடான ஜெர்மனியில் உள்ள ஒரு கடையில் மலிவாக வாங்கலாம்.

அதே மாதிரித் தான், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் கறிமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளின் விலைகளும் மிகவும் அதிகம். இலங்கையில், இந்தியாவில் தக்காளியை, "ஏழைகளின் ஆப்பிள்" என்று சொல்வார்கள். ஆனால், நெதர்லாந்தில் அந்த நிலைமை மாறி உள்ளது. இங்கே ஆப்பிளின் விலை குறைவு, தக்காளியின் விலை அதிகம். ஏன் இந்த நிலைமை என்று கேட்டால், அந்நிய நாடுகளுக்கான ஏற்றுமதி தான் முக்கிய காரணம்.

இங்கே நான் நெதர்லாந்தை ஓர் உதாரணமாகத் தான் குறிப்பிட்டுள்ளேன். மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களும், இதே கதைகளை தான் கூறுகின்றனர். அதாவது, எந்தப் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றதோ, அதன் விலை உள்நாட்டில் அதிகமாக உள்ளது. உள்நாட்டு நுகர்வை கட்டுப்படுத்தி, அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக, வர்த்தகர்கள் செயற்கையாக விலையை தீர்மானிக்கிறார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதித்த நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ரஷ்யா ஊடாக பறப்பதற்கு தடை கொண்டு வரப் படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. அமெரிக்க, ஐரோப்பிய விமான சேவைகள், இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப் படும். ஏனென்றால், ஜப்பான, சீனாவுக்கு செல்லும் மேற்கத்திய விமானங்கள் யாவும் ரஷ்யாவின் சைபீரியா வான் பரப்பில் பயணம் செய்கின்றன. இதனால், பயண நேரம் குறைகின்றது.

சைபீரியா வான் பரப்பில் பறப்பதற்கு, ரஷ்யா தடை விதித்தால், மாற்று வழிகளை தேட வேண்டும். ரஷ்யாவுக்கு மேலே வட துருவத்திற்கு அண்மையாக பறப்பது ஒரு வழி. மேற்கு ஐரோப்பாவில் இருந்து, அலாஸ்காவில் சிறிது நேரம் தரித்து நின்று விட்டு, மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டும். மற்றது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலாக பறப்பது. இந்த இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பயண நேரம் அதிகமாகும். மேலதிக எரிபொருள் செலவாகும். அதனால் பயணச் செலவும் அதிகரிக்கும்.

மேற்கத்திய விமான சேவைகள், அதிகரிக்கப் போகும் செலவை, விமானப் பயணிகளின் தலைகளில் கட்டி விட முடியாத அளவிற்கு, இன்னொரு பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத் தடையானது, மேற்கத்திய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆசிய நாடுகளில் இருந்து, மேற்கு ஐரோப்பாவுக்கு பறக்கும் ஆசிய விமான நிறுவனங்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குறைந்த செலவில் பயணம் செய்யலாம் என்று கூறி, மேற்கத்திய பயணிகளை தம் பக்கம் இழுக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட விமானத் தடை விவகாரம், ஏற்கனவே சோவியத் யூனியன் காலத்தில் வழமையாக இருந்து வந்தது. ஆயினும் அந்தக் காலகட்டம் வேறு. அன்று குறைந்தளவு வசதி படைத்த பயணிகள் மட்டுமே தூரப் பிரயாணம் செய்வதுண்டு. இன்று விமான டிக்கட் விலைகள் குறைந்து விட்டதால், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், எமிரேட்ஸ், எதிஹாட் போன்ற மத்திய கிழக்கை சேர்ந்த விமானங்கள், ஏற்கனவே குறைந்த விலையில் டிக்கட் விற்று பயணிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு, மேற்கத்திய விமானக் கம்பனிகள் தமது நாடுகளின் அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. நிலைமை அந்தளவு மோசமடையாது என்று, மேற்குலகில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யார் கண்டது? எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? 

Sunday, August 10, 2014

"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்

கடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், "ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்!" என்று கூறிப் பெருமைப் பட்ட போலித் தமிழ் இன உணர்வாளர்கள், இன்று அதே லைக்காவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள். இது அவர்களது வழமையான இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் Niche market என்று அழைக்கப் படக் கூடிய, மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத வெளிநாட்டு குடியேறிகளை குறி வைத்து தான், லைக்கா தனது வியாபாரத்தை ஆரம்பித்தது. செய்மதி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மிகக் குறைந்த செலவில் உலக நாடுகளுக்கு இடையில், தொலைபேசி அழைப்புகள் சாத்தியமாகி உள்ளன. மேற்கத்திய பன்னாட்டு கம்பனிகள், தமது உலகமயமாக்கலை இலகுவாக்கும் நோக்குடன் அது கொண்டு வரப் பட்டது. லைக்கா, லெபரா, அவற்றின் தாய் நிறுவனமான ஞானம் என்பன, அந்த சேவையை வெளிநாட்டு குடியேறிகளுக்கு வழங்கி பிரபலமடைந்தன.

ஞானம், லைக்கா, லெபரா தொலைபேசி அட்டைகள், குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு தொடர்பு படுத்தி தருவதாக விளம்பரம் செய்கின்றன. அது எப்படி சாத்தியமாகின்றது? உலக நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்புக்கு, ஒரு செய்மதி நிறுவனத்திற்கு வாடகை கட்ட வேண்டும். அதே மாதிரி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில், உள்நாட்டு தொடர்புகளுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கு வாடகைப் பணம் செலுத்த வேண்டும். (புலம்பெயர்ந்த நாடொன்றில் வாழும் ஒருவரின் தொலைபேசியில் இருந்து செல்லும் அழைப்பிற்கு, அந்த தேச எல்லை வரையிலான கட்டணம்.) 

மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால், லைக்கா நிறுவனமும் அவற்றில் தங்கி உள்ளது. ஒரு தடவை, லைக்கா பெருந்தொகை வாடகைப் பணம் கட்டவில்லை என்று, சம்பந்தப் பட்ட நிறுவனம் சேவையை துண்டித்து விட்டது.

மலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை. ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றும் படி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

லைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம். நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்!

நிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப் பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும். 

லைக்கா நிறுவனத்தின் அலுவலகங்கள், இலகுவில் கண்டுபிடிக்க முடியாத மர்ம தேசத்தில் இருக்கும், அல்லது அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அனேகமாக, இடைத் தரகர்களும், சில்லறை வணிகர்களும் தான், பாவனையாளர்களின் கோபாவேசத்திற்கு பலியாகின்றனர். எனக்குத் தெரிந்த எத்தனையோ பேர், மக்களிடம் தர்ம அடி வாங்கி இருக்கிறார்கள்.

லைக்கா நிறுவனம் பாவனையாளர்களை மட்டும் சுரண்டவில்லை. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையாக சுரண்டப் படுகின்றனர். பெருமளவு தொழிலாளர்கள், லைக்கா சிம் அட்டைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 8 - 10 மணிநேரம், தெருவில் நின்று போவோர் வருவோரிடம் கூவிக் கூவி விற்க வேண்டும். ஏற்கனவே லைக்காவின் திருட்டுக்களை தெரிந்து கொண்டவர்கள், காது கூசும் வண்ணம் நாலு திட்டு திட்டி விட்டு செல்வார்கள். "லைக்கா, லெபரா... இவை எல்லாம் கொள்ளைக் கோஷ்டிகள்...மாபியா குழுக்கள்..." என்று பலர் சொல்வதை என் காதாரக் கேட்டிருக்கிறேன்.

விற்பனைப் பிரதிநிதிகளும் பாவப் பட்ட ஜென்மங்கள் தான். பன்மொழிச் சமூகங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, லைக்கா பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அந்தந்த நாட்டில், எது குறைந்த பட்ச ஊதியமோ, அதைத் தான் சம்பளமாகக் கொடுப்பார்கள். அதற்கு மேலே ஒரு சதம் கூட்ட மாட்டார்கள். விற்பனைப் பிரதிநிதிகள், ஒவ்வொரு நாளும், குறைந்தது பத்து சிம் அட்டைகளை "அக்டிவேட்" செய்ய வேண்டும். அதாவது, தெருவில் போகும் அப்பாவிகளை கையைப் பிடித்து இழுத்தாவது, சிம் கார்ட் அக்டிவேட் செய்து கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால், அன்றைக்கான போக்குவரத்து செலவு கிடைக்காது! ஒரு சில பிரதிநிதிகள், ஐம்பது கி.மி. தூரத்தில் உள்ள நகரங்களுக்கும் பயணம் செய்து, அங்கே வேலை செய்து விட்டு திரும்புகின்றனர். அவர்களது நிலைமையை எண்ணிப் பாருங்கள்.

விற்பனைப் பிரதிநிதிகளான தொழிலாளர்களை, லைக்கா நேரடியாக பணிக்கு அமர்த்துவதில்லை. அதற்கென்று, "முகவர் நிறுவனங்கள்" இருக்கின்றன. அனேகமாக, லைக்கா மனேஜர் ஒருவரே, தனது பெயரில் ஒரு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வைத்திருப்பார். குறிப்பிட்ட அளவு தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தி இருப்பார். இந்த முகவர் நிறுவனங்களின் ஆயுட்காலம், அதிக பட்சம் ஒரு வருடம் தான். அதற்குள் வரி ஏய்ப்பு மற்றும் பல திருட்டுக்களை செய்து விட்டு, நிறுவனத்தை திவாலாக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, வேறொரு இடத்தில், இன்னொருவர் வேலை வாய்ப்பு நிறுவனத்தை திறப்பார்.

லைக்கா நிறுவனத்தின் வண்டவாளங்கள் இவ்வளவு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னும் பல "தொழில் இரகசியங்கள்" உள்ளன. இல்லாவிட்டால், எப்படி கோடிக் கணக்கில் இலாபம் சம்பாதிக்க முடியும்? பாவனையாளர்களையும், தொழிலாளர்களையும் சுரண்டி சேர்த்த பணத்தை, மென்மேலும் பெருக்குவதற்காக, லைக்கா நிறுவனம் தமிழ்ப் படம் தயாரிக்கிறது. ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் முதலிடுகின்றது. முதலாளித்துவ உலகில் இதெல்லாம் சகஜம். இப்போது தான் லைக்காவின் சுயரூபம் தெரிந்தது மாதிரி பலர் நடந்து கொள்கின்றனர்.

உலகில் எந்த முதலாளிக்கும் இன உணர்வு கிடையாது. அவர்களிடம் உள்ளதெல்லாம் பண உணர்வு மட்டுமே. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யார் காலிலும் விழுவார்கள். நமது நாடுகளில் அரசியலும் முதலாளித்துவத்திற்கு சார்பானது தானே? சிங்கள இனவாதம் பேசும் மகிந்த ராஜபக்சவும், தமிழ் இனவாதம் பேசும் சீமானும், முதலாளிகளின் நண்பர்கள் தானே? அவர்களுக்கும் லைக்காவுக்கும் தொடர்பு ஏற்பட்டதில் என்ன அதிசயம் இருக்கிறது?

இன்று ராஜபக்சவை, லைக்காவை எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் அப்படித் தான். இனம் இனத்தோடு தானே சேரும்? போலித் தமிழ் இன உணர்வாளர்களும் முதலாளிய ஆதரவாளர்கள் தான். அதில் என்ன சந்தேகம்? அவர்களே பல தடவைகள் நேரடியாகக் கூறி இருக்கிறார்கள். 

லைக்கா முதலாளி, ராஜபக்ச, சீமான், விஜய், போலித் தமிழ் இன உணர்வாளர்கள்.... இவர்கள் யாருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. மாறாக, வர்த்தகப் போட்டியாளர்கள். நிதி மூலதனத்தில் யாருக்கு எந்தளவு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான போட்டி நடக்கிறது. முதலாளியத்தை ஆதரிப்பவர்கள், தங்களது வர்க்க நலன் சார்ந்து தான் அரசியலை நடத்திக் கொண்டிருப்பார்கள். அது இயற்கையானது. அவர்கள் என்றைக்குமே சரியாகத் தான் நடந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் மட்டும் தான், இவர்களது சுயரூபம் தெரியாமல் நம்பி ஏமாறுகிறார்கள்.

Saturday, August 09, 2014

சாரு நிவேதிதாவும் கம்யூனிசத்தை வெறுக்கும் சாரைப் பாம்புகளும்

இலங்கையில், இந்தியாவில் இருந்து புதிதாக மேற்கு ஐரோப்பிய நாடொன்றுக்கு வந்து தங்கி விடும் குடியேறிகள், தாயகத்தில் இருக்கும் தமது உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. சில நேரம், தவிர்க்க முடியாமல், அவர்களது உரையாடல்கள் எனது காதுகளை எட்டுவதுண்டு. 

பெரும்பாலானவர்கள் மறுமுனையில் இருப்பவருக்கு எரிச்சல், பொறாமையை கிளப்பும் நோக்குடன், வேண்டுமென்றே பலதையும் மிகைப் படுத்திக் கூறுவார்கள். தாங்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கிறோம் என்று, இலங்கை/இந்திய ரூபாய் கணக்கில் சொல்வார்கள். தாயகத்தில் அதனை கேட்டுக் கொண்டிருக்கும் சொந்தங்கள், நண்பர்களுக்கு, கனவில் மிதப்பது போன்றிருக்கும்.

 “அதிர்ஷ்டம் உள்ளவன்… கொடுத்து வைச்சவன்…” என்று நினைத்துக் கொண்டே, தாங்களும் எப்போது அந்த “சொர்க்க லோகத்திற்கு” போகப் போகிறோம் என்று கனவு காண்பார்கள். ஆனால், அவர்கள் மறு பக்க உண்மையை உணர்வதில்லை. எரிச்சலை கிளப்பி விடும் நண்பரும், ஒரு நாளும் கூற மாட்டார். அதாவது, ஐரோப்பாவில் சம்பாதிப்பதில் அரைவாசி வீட்டு வாடகைக்கு போகின்றது. தாயகத்துடன் ஒப்பிடும் பொழுது பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகம் என்பன போன்ற உண்மைகளை அவர்கள் என்றைக்கும் கூறப் போவதில்லை.

இந்த நண்பர்கள், தாம் “அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, ஒரு குறிப்பிட்ட அரசியலை பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். தமிழகத்தின் பிரபல பின் நவீனத்துவ எழுத்தாளர் சாருநிவேதிதா, அந்த அரசியல் என்னவென்று வெளிப்படையாக ஒரு பதிவில் எழுதியுள்ளார். 

சாருநிவேதிதாவின் பதிவு, சில புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கடுமையாக கண்டிக்கப் பட்டாலும், யாரும் சாருநிவேதிதாவின் அரசியலை ஆராயும் அளவிற்கு ஆழமாக செல்லவில்லை என்று நினைக்கிறேன். 

முதலில் சாருநிவேதிதா தனது இணையத் தளத்தில் எழுதி இருக்கும், அந்த சர்ச்சைக்கு உரிய பந்தியை பார்ப்போம்:

//ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம். ”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.//
- சாருநிவேதிதா (http://charuonline.com/blog/?p=1437)

சாருநிவேதிதா பல தடவைகள் மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று வந்துள்ளார். அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து இருக்கிறார். அதை விட, ஸ்பானிஷ் மொழி கற்றிருக்கிறார். லத்தீன் அமெரிக்க முற்போக்கு இலக்கியங்களில் பரிச்சயம் கொண்டவர். ஆனால், எந்தளவு நேரடி அனுபவமும், இலக்கிய அறிவும் இருந்த போதிலும், கம்யூனிச எதிர்ப்புவாதம் எனும் சகதிக்குள் மூழ்கியவர்களின் எண்ணங்கள் மாறப் போவதில்லை.

கம்யூனிச எதிர்ப்பு சகதிக்குள் மூழ்கிய ஒருவர், சேறடிப்பதைத் தவிர வேறெதுவும் அறிந்திருக்க மாட்டார். அதற்கு சாருநிவேதிதா ஓர் உதாரணம் மட்டுமே. இந்த எதிர்வினை சாருநிவேதிதாவுக்கு மட்டுமானதல்ல. அவரைப் போன்று, சதா சர்வ காலமும் கம்யூனிச எதிர்ப்பு நச்சுக் கருத்துக்களை கக்கிக் கொண்டிருக்கும் சாரைப் பாம்புகளுக்கும் சேர்த்து தான்.

//ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள்.//

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள “நலன்புரி அரசு” (Welfare state) எனும் அரசின் கொள்கையை தான் அவ்வாறு கூறுகின்றார். (சாருநிவேதிதா "மக்கள் நல அரசு" என்று குறிப்பிடுகிறார். ஆனால், ஐரோப்பிய அரசுக்களின் கொள்கைகளில் "மக்கள் நலன்" என்ற சொற்பதம் பயன்பாட்டில் இல்லை.) அது ஏன் உருவானது என்ற வரலாற்றை யாரும் படிப்பதில்லை.

2 ம் உலகப் போர் வரையில், “கம்யூனிசம் இல்லாமல் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்தும்” எண்ணம், எந்தவொரு ஐரோப்பிய நாட்டு அரசிடமும் இருக்கவில்லை. 1ம் உலகப் போருக்கும், 2 ம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த மக்கள், ஒன்றில் பாசிசக் கட்சிக்கு, அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளித்தனர். அதற்குக் காரணம், அன்றைய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வு, இன்றைக்கு இந்தியாவில் இருப்பதை விட மிகவும் மோசமாக இருந்தது. வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் உழைப்புச் சுரண்டல், சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது.

ஏற்கனவே, முதலாம் உலகப் போரின் முடிவில், ரஷ்யாவில் சோவியத் யூனியன் எனும் உலகின் முதலாவது சோஷலிச நாடு உருவாகி இருந்தது. அதனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் உழைப்பாளர் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப் பட்டது. ஜெர்மனியில் மூன்று நகரங்களில் கம்யூனிசப் புரட்சி வெடித்தது. 

குறைந்தது ஒரு மாத காலமாவது, பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய மாநகரங்களில், சோவியத் அமைப்பு நடைமுறையில் இருந்தது. அதே நேரம், ஹங்கேரியிலும் கம்யூனிஸ்டுகள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஸ்பெயினில், குடியரசு அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கியிருந்ததால், அங்கே ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு ஐரோப்பா இருந்த சூழ்நிலையில், எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் புரட்சிகள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக, முதலாளிய வர்க்கம் உண்மையிலேயே பயந்திருந்தது. அதனால் தான், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப் பற்றுவதை தடுக்கும் நோக்கில், இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிஸ்டுகளை ஆதரித்தார்கள். பிற ஐரோப்பிய நாடுகளிலும் அது தான் நிலைமை.

2 ம் உலகப்போரின் முடிவில், நாஸிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, முதலாளிய வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்தது. அது மட்டுமல்ல, “ஐரோப்பாவில் கம்யூனிசப் புரட்சி ஏற்படும் அபாயம்” முன்னரை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. போரினால் ஏற்பட்ட பேரழிவுகள் ஐரோப்பிய மக்களை தலை நிமிர முடியாமல் செய்திருந்தது. பசி, பஞ்சம், பிணி எங்கும் தலைவிரித்தாடியது. அது மட்டுமல்லாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், போருக்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்தது பத்து சதவீத வாக்குகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்தன.

வெகு விரைவில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிச நாடுகளாகி விடும் என்ற அச்சம் காரணமாக, முதலாளிய வர்க்கம் பல விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது தான், நலன் புரி அரசுக்களின் தோற்றம்.

//அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. //

முப்பது வருடங்களுக்கு முன்னர், இதைச் சொல்லி இருந்தால், ஓரளவு நம்பக் கூடியதாக இருந்திருக்கும். அப்போது, ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் இருந்தது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை. பணக்காரர்கள் என்றைக்குமே அதிகளவு சொத்துக்களை வைத்திருந்தனர். ஆயினும், அவர்கள் தமது ஆடம்பரங்களை வெளியே காட்டிக் கொள்ள வெட்கப் பட்டார்கள்.

அதிகம் சம்பாதிப்பவர்களிடம், அரசு அதிக வரி அறவிட்டது. அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு நலன்புரி அரசுக்கான செலவினத்தை ஈடுகட்டி வந்தது. இன்று அவை எல்லாம் பழைய கதைகள். கடந்த இருபது வருடங்களில், பெருமளவு அரசு மானியங்கள், சலுகைகள் குறைக்கப் பட்டு விட்டன. அதனால் அடித்தட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்து ஏழைகள் அதிகரித்து வருகின்றனர். மறு பக்கத்தில் பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்கின்றது. தொழில்நுட்பப் புரட்சி, கணணிமயமாக்கலும் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கு பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. 

 //ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய்.//

ஜெர்மனியில், என்றைக்குமே குறைந்த பட்ச ஊதிய சட்டம் இருக்கவில்லை. ஆனால், அதைச் சுற்றியுள்ள பல ஐரோப்பிய நாடுகளில், ஏற்கனவே பல தசாப்த காலமாக பின்பற்றப் படுகின்றது. உழைக்கும் மக்கள் எல்லோரும் அதன் பலன்களை அனுபவிக்க முடியும் என்று தோன்றவில்லை. இன்னமும், நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப் படவில்லை. 

கடந்த பத்தாண்டுகளில் (குறிப்பாக, யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர்) விலைவாசி இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரித்து வந்த போதிலும், அதற்கு சமமமாக சம்பளம் உயரவில்லை. உண்மையில், ஜெர்மன் அரசு நிர்ணயிக்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியம், இன்னும் அதிகமாகும். குறைந்தது பத்து யூரோ இருந்தால் தான், செலவுகளை சமாளிக்க முடியும்.

முன்னாள் சோஷலிச நாடுகளில், "ஒரு வேலையை பத்து பேருக்கு பங்கிட்டுக் கொடுப்பார்கள்..." என்று முதலாளிய ஆதரவாளர்கள் கிண்டலடிப்பார்கள்.  அந்த சமுதாயத்தில், ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தை விட, ஊரில் இருக்கும் எல்லோருக்கும் வேலை போட்டுக் கொடுப்பது முக்கியமாகக் கருதப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் என்ன நடக்கிறது? அவர்களுக்கு வேலை செய்யும் மக்களை விட, நிறுவனத்தின் இலாபம் பெரிதாகத் தெரிகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலாபத்தை அதிகரிக்க விரும்புகின்றது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கணணிமயமாக்கல் காரணமாக, பல தொழில்கள் காணாமல் போய் விட்டன. அந்த நிலைமை இன்றைக்கும் தொடர்கின்றது. ஏற்கனவே வேலையிழந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், வேலை கிடைக்காமல் கஷ்டப் படுகிறார்கள். புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கோ, அல்லது வேலையிழந்த தொழிலாளர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவதற்கோ, அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது. முதலாளிகளிடம் கேட்டால், அது தங்களது பொறுப்பு அல்ல என்று தட்டிக் கழிக்கிறார்கள். 

இந்த இலட்சணத்தில், ஐரோப்பாவில் கம்யூனிசம் இல்லாமலே கம்யூனிசம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று சாருநிவேதிதா உளறுவது அருவருக்கத்தக்கது. சாருநிவேதிதா பாரிசுக்கு சென்றிருந்த போது, உயிரற்ற சிற்பங்களை பார்த்து இரசித்திருக்கலாம். ஆனால், நடைப்பிணங்களாக வாழும் வேலையற்ற தொழிலாளர்கள் யாரும் அவர் கண்களுக்கு தட்டுப் படவில்லைப் போலும்.

//கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம்.//

ஐரோப்பிய வரலாறு பற்றி எதுவும் தெரியாத, மேட்டுக்குடியினரின் வழமையான உளறல் இது. இன்று ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், ஏதாவதொரு சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கும். (பிரிட்டனில் உள்ள தொழிற்கட்சி போன்றன) மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக - ஜனநாயகக் கட்சிகள், இன்று முதலாளித்துவ கட்சிகளாக மாறிவிட்டாலும், அவை தொடங்கப் பட்ட ஆரம்ப காலங்களில் மார்க்சியக் கட்சிகளாகத் தான் இருந்துள்ளன. 

சமூக ஜனநாயகக் கட்சிகள், மார்க்ஸையும், ஏங்கல்சையும் பின்பற்றி வந்தன. தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டன. முன்னொரு காலத்தில், லெனினின் ரஷ்ய சோஷலிச கட்சியுடன், இரண்டாம் அகிலத்தில் அங்கம் வகித்தன. கொள்கை முரண்பாடு காரணமாக, சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின. அவை பின்னர் மூன்றாம் அகிலம் என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பாட்டாளிவர்க்கப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ அரசுக்களை தூக்கி எறிவதில் ஆர்வம் காட்டின. அதற்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராக இருந்தன. அதற்கு மாறாக, பாராளுமன்ற தேர்தல்கள் மூலம் சோஷலிசத்தை கொண்டு வரலாம் என்று நம்பிய சமூக - ஜனநாயகக் கட்சிகள், இறுதியில் முதலாளியக் கட்சிகளாக சீரழிந்து போயின. 

சமூக ஜனநாயகவாதிகள், ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ், முதலாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டார்கள். முதலாளிகளும் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்றார்கள். ஏனெனில், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு பின்னால், கணிசமான அளவு தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். உண்மையில், சமூக ஜனநாயகக் கட்சிகள் தமது கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டன. தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்தன. துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் துரோகிகள் தான் நாயகர்களாக போற்றப் படுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு பின்னால் அணிதிரண்ட மக்கள், தமக்கு சோஷலிசம் வேண்டும் என்று மனதார விரும்பினார்கள். கட்சி உறுப்பினர்கள் மார்க்ஸையும், எங்கல்ஸ்ஸையும் படித்தார்கள். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக தொழிற்சங்க போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்களின் விளைவு தான், பிற்காலத்தில் நலன்புரி அரசு என்ற பெயரில் கொண்டு வரப் பட்ட திட்டங்கள் ஆகும். 

சுருக்கமாக, சாருநிவேதிதா போற்றும் "மக்கள் நல அரசு"க்களின் ஆதாரமே மார்க்சிய தத்துவப் பாரம்பரியம் தான். அதை இன்றைக்குப் பலர் மறந்து விட்டார்கள். தம்மை பெற்றெடுத்து, கஷ்டப் பட்டு வளர்த்து ஆளாக்கிய, பெற்றோரை மறந்து விட்ட பிள்ளைகள் போன்று நடந்து கொள்கின்றனர். சாருநிவேதிதா முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.

//”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.//

சாருநிவேதிதாவின் உச்சகட்ட உளறல் இது தான். கருத்துரிமை பேசும் ஐரோப்பிய சிந்தனை மரபுக்குள் கம்யூனிச சித்தாந்தம் அடங்காதா? அது என்ன அண்டார்ட்டிக்கா சிந்தனை மரபா? கம்யூனிச சித்தாந்தத்தின் கரு உருவான, “உத்தொப்பியா” என்ற, பூவுலகில் சொர்க்கம் அமைப்பது பற்றிய நாவலை எழுதியவரும் ஓர் ஐரோப்பியர் தான். மார்க்ஸ், எங்கெல்ஸ் , லெனின் எல்லோரும் ஐரோப்பியர்கள் தான். ஐரோப்பிய தத்துவஞானிகளின், குறிப்பாக ஹெகலின் சிந்தனை மரபினை அடிப்படையாகக் கொண்டு தான், கார்ல் மார்க்ஸ் தனது நூல்களை எழுதினார்.

”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்று இன்றைய முதலாளித்துவ - ஜனநாயக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அந்தக் கருத்துரிமை நூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய மக்களுக்கு மறுக்கப் பட்டு வந்தது.

கார்ல் மார்க்ஸ் மட்டுமல்லாது, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பிற சோஷலிசவாதிகளும், தம்மை கருத்துரிமைப் போராளிகளாக அறிவித்துக் கொண்டார்கள். அந்தளவுக்கு, அன்றைய ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், இடதுசாரிகள் தான், ஐரோப்பிய வரலாற்றில் முதன் முதலாக கருத்துரிமைக்காக போராடினார்கள். அந்த வரலாறு இன்று இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

Thursday, August 07, 2014

தமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு

யாழ்ப்பாணத்தில் டச்சு காலனிய படையினர் வந்திறங்கிய காட்சி 

ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. 

இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  

தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை.

ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.

தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும். 

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று.

பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர்.

ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.

ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள்.

காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.

இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை. 

யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை.

இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது.

இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது. 

யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன. 

தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது.

இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.

சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர்.

இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர்.

புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும்.

புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர்.

இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.

அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.

உசாத்துணை: 
1.Het VOC-bedrijf op Ceylon, Albert van den Belt
2.Zwartboek van Nederland overzee, Ewald van Vugt


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்
2.யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு
3.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்