Thursday, December 31, 2020

மதம் ஒரு "போதைப்பொருள்" எனும் வறட்டு நாத்திகர்களின் பிரச்சாரம் குறித்து...

"மதம் மக்களின் அபின்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன கூற்று திரிபுபடுத்தப் பட்டு, பலரால் பிழையான முறையில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அந்தக் கூற்றில் கார்ல் மார்க்ஸ் மதத்தை போதைப்பொருளுடன் ஒப்பிட்டு சொன்னதாக வறட்டு நாத்திகர்களும் வாதாடுகிறார்கள். அது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான பொய்ப் பிரச்சாரம்.

கார்ல் மார்க்ஸ் எழுதிய "ஹேகலின் வலது தத்துவம்" என்ற நூலுக்கான முன்னுரையில் தான் அந்தக் கூற்று இடம்பெறுகின்றது. அதற்கு முன்னுக்கும் பின்னுக்கும் என்ன எழுதி இருக்கிறது என்பதை வறட்டு நாத்திகர்கள் வாசிக்க விரும்புவதில்லை.

நூலில் இருந்து: (இலகுபடுத்தப் பட்ட மொழிபெயர்ப்பு)

//மதச்சார்பற்ற விமர்சனத்தின் அடிப்படையானது " மனிதர் மதத்தை உருவாக்குகிறார்கள். மதம் மனிதரை உருவாக்கவில்லை" என்கிறார்கள்.  குறிப்பாக, மதம் என்பது, மனிதர்கள் தாம் இன்னும் தம்மிடம் கண்டுகொள்ளாத அல்லது திரும்பவும் தொலைத்து விட்ட சுய உணர்வு அல்லது சுய மதிப்பீடு எனலாம். ஆனால் மனிதர்கள் என்போர் புலன்களால் அறிய முடியாத, உலகிற்கு வெளியே அலையும் ஜீவன்கள் அல்ல.

மனிதர்களின் உலகானது, அரசு, சமூகம், இவற்றின் அங்ககமாக மனிதர்கள் உள்ளனர். இந்த அரசும், இந்த சமூகமும் மதத்தை உற்பத்தி செய்கின்றன. (இன்று நாம் வாழும் உலகம்) ஒரு தலைகீழாக மாற்றப் பட்ட உலகாக இருப்பதால், அதுவும் உலகின் மறுவளமான சுய உணர்வாக உள்ளது.

மதம் என்பது, 

இந்த உலகின்... 

 •  பொதுவான கோட்பாடு. - பல்பொருள் களஞ்சியத்தின் சாராம்சம்.
 • அதன் வெகுஜன வடிவிலான தர்க்கீகம்.
 •  அதன் ஆத்மார்த்தமான கௌரவ உணர்வு.
 • அதன் பேரார்வம்.
 • அதன் அறம் சார்ந்த உறுதிப்படுத்தல்.
 • சம்பிரதாயபூர்வமான பூரணப் படுத்தல்
 • ஆற்றுப்படுத்தலுக்கும், நியாயப்படுத்தலுக்குமான உலகளாவிய அடிப்படை.

அது மனிதப்பிறவியின்  கற்பனையான மெய்யுணர்வு, ஏனென்றால் மனிதப்பிறவி உண்மையான மெய்யுணர்வை கண்டதில்லை. ஆகவே, மதத்திற்கு எதிரான போராட்டமானது, மறைமுகமாக அந்த உலகிற்கும் எதிரான போராட்டமாகும். மதம் அந்த உலகின் உணர்வுபூர்வமான வாசனைத் திரவியம் போன்றுள்ளது. மதரீதியான வருந்துதல் என்பது, நிஜமான வருந்துதலின் வெளிப்பாடாக இருக்கும் அதே நேரத்தில் அந்த நிஜமான வருந்துதலுக்கு எதிரான எதிர்வினையாகவும் உள்ளது. மதம் என்பது சபிக்கப் பட்ட படைப்புகளின் பெருமூச்சு.

மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு, அத்துடன் ஆன்மா இல்லாத நிலைமையில் ஆன்மாவாக உள்ளது. அது மக்களின் ஓப்பியம்(அபின்).// 

(கார்ல் மார்க்ஸ்)சிலர் இங்கே கடைசியாக சொல்லப் பட்ட ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். அதை மட்டும் வைத்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ் மதம் ஒரு போதைப்பொருள் என்று சொல்லி விட்டார் என்று திரிக்கிறார்கள். உண்மையில் ஓப்பியம் என்பது என்ன?

கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஓப்பியம் மருந்துக் கடைகளில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப் பட்டது. அது மருத்துவர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. குறிப்பாக நோயின் கடுமை காரணமாக, அதிக வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்களே ஓப்பியம் கொடுத்து அமைதிப் படுத்துவார்கள்.

அன்றைய ஐரோப்பிய நாடுகளில் வறுமையில் வாழ்ந்த ஏழை மக்கள், பசியை மறப்பதற்கு சிறிதளவு ஓப்பியம் எடுப்பது வழமை. ஓப்பியம் உட்கொண்ட ஏழை உழைப்பாளிகள் பசியை மறந்து வேலை  செய்வதுடன், தாம் மகிழச்சியாக வாழ்வதாகவும் உணர்ந்தார்கள்.  பசியால் அழும் குழந்தைகளை தாய்மார் ஓப்பியம் கொடுத்து தூங்க வைத்தனர்.

இரக்கமற்ற உலகில் வாழும் மனிதர்கள்  தமது கவலைகளை மறப்பதற்காக, மதம் என்றார் ஒன்றை கருத்து நிலை சார்ந்த ஒப்பியமாக உருவாக்கிக் கொள்கின்றனர் என்பது தான் மார்க்ஸ் சொல்ல வந்தது. இங்கே மார்க்ஸ் மதத்தை ஓப்பியத்துடன் மட்டும் ஒப்பிடவில்லை. இதயம், வாசனைத்திரவியம், போன்றவற்றோடும் ஒப்பிடுகின்றார்.

அத்துடன் மதம் என்பது தலைகீழாக உள்ள உலகின் உள்ளுணர்வு, மனிதர்களின் கற்பனையான மெய்யுணர்வு, வருத்தத்தை தணிப்பதற்கான ஆற்றுப் படுத்தல்... என்றெல்லாம் விபரிக்கின்றார். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவோர் உள்நோக்கம் கொண்டவர்கள். 


வறட்டு நாத்திகர்கள், மதம் ஒரு போதைப்பொருள்(அபின்) என்று மார்க்ஸ் சொன்னதாக ஒரு தீய நோக்கோடு பரப்புரை செய்து வருகின்றனர்.  இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்க நினைக்கிறார்கள். ஒன்று, மத நம்பிக்கையாளர்களை மார்க்சியத்தில் இருந்து அந்நியப் படுத்தி விரிசலை உண்டாக்குவது. இரண்டு, சபல புத்தி கொண்ட மார்க்சியவாதிகளை தமது இனவாத நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு வருவது.

மனிதர்கள் தாம் இன்னமும் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பதை அறிய முடியாமல் போடப்பட்டுள்ள திரையாக மதம் உள்ளது என்பது தான் மார்க்ஸ் சொல்ல வருவது. அதை நாம் இங்கே மார்க்சின் எழுத்துக்களில் இருந்து அறிந்து கொள்வோம்.

நூலில் இருந்து: 

//மாயத்தன்மை கொண்ட மகிழ்ச்சி தரும் மதத்தின் பங்களிப்பை இல்லாதொழிப்பதானது, அதே நேரத்தில் மக்களின் உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான கோரிக்கையாகவும் உள்ளது. அந்த நிலைமையின் மாயையை இல்லாதொழிப்பது என்பது, அதே நேரத்தில் இந்த மாயைகள் தேவைப்படும் நிலைமையை இல்லாதொழிப்பது என்றும் அர்த்தம் ஆகும். மதத்தின் மீதான விமர்சனம் என்பது, துன்பக் கேணி பற்றிய விமர்சனத்தை கருவாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் மதம் (மனிதர்களின்) துன்பக் கேணியை மறைக்கும் ஒளிவட்டமாக உள்ளது. 

இந்த விமர்சனம் (அடிமைச்) சங்கிலியை சுற்றிப் படர்ந்திருந்த கற்பனைப் பூக்களை அகற்றியுள்ளது. அதன் அர்த்தம் மனிதர்கள் கற்பனையற்ற, ஆற்றுதல் அற்ற சங்கிலியை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, சங்கிலியை வீசியெறிந்து விட்டு உயிர்ப்புள்ள மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது தான். மதத்தின் மீதான விமர்சனம் மனிதனை மாயையில் இருந்து விடுவிக்கிறது. ஆகவே, அவன் தனது மாயையில் இருந்து விடுபட்டவனாக, உள்ளுணர்வை மீட்டெடுத்தவனாக சிந்தித்து, செயலாற்றி தனது உண்மைத்தன்மையை அமைத்துக் கொள்ள முடியும். ஆகவே, தானே உண்மையாக சூரியனாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பான். அது வரைக்கும், மதம் ஒரு மாயச் சூரியனாக மனிதனையே சுற்றிக் கொண்டிருக்கும்.

அதனால் இன்னொரு உலகின் உண்மை மறைந்த பின்னர், இவ்வுலகின் உண்மையை நிலைநாட்டுவதற்கான கடமை வரலாற்றுக்கு உள்ளது. வரலாற்றுக்கு சேவை செய்ய வேண்டிய முதன்மையான கடமை தத்துவத்திற்கு உள்ளது. மனிதகுல சுய அந்நியப்படுத்தலான புனித உருக்கள்  எனும் முகமூடி கழற்றப் பட்ட பின்னர், புனிதமற்ற உருக்களை காவித்திரிந்த வரலாற்றின் சுய அந்நியப் படுத்தலும் அம்பலப் படுத்தப் படும். ஆகவே, சொர்க்கத்தின் மீதான விமர்சனம், பூமியின் மீதான விமர்சனமாக மாறுகிறது. மதத்தின் மீதான விமர்சனம் சட்டத்தின் மீதான விமர்சனமாக மாறுகிறது. இறையியல் மீதான விமர்சனம் அரசியல் மீதான விமர்சனமாக மாறுகிறது.// (கார்ல் மார்க்ஸ்)


கடைசிப் பந்தி கிறிஸ்தவ மதம் போதிக்கும் மறு உலகக் கோட்பாட்டை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் துன்பப்படும் ஏழைகள் கடவுளிடம் முறையிடும் போதெல்லாம், மத போதகர்கள் அவர்களுக்கு சொர்க்கத்தில் மகிழ்ச்சிகரமான நித்திய வாழ்வு காத்திருக்கிறது என்று ஆறுதல் சொல்வார்கள். இங்கே "இன்னொரு உலகம்" என்பது சொர்க்கத்தை குறிக்கும். மன்னர்களும், பிரபுக்களும், பணக்காரர்களும் செல்வத்தில் திளைக்கையில், பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். இன்றைக்கும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை. ஏழை- பணக்காரர் என்ற வர்க்க வேற்றுமையை மறைக்கும் மாயத் திரையாக மதம் உள்ளது.

ஆகவே மதத்தின் மீதான விமர்சனமானது, கூடவே மதம் பாதுகாக்கும் பணக்கார வர்க்க அரசியல், சட்டங்கள் மீதான விமர்சனமாகவும் இருக்க வேண்டும். மதம் மட்டுமல்லாது, வரலாறும் இந்த வேற்றுமைகளை மூடி மறைத்து வந்துள்ளது. ஆகவே, வரலாற்றின் போர்வையை களைய வேண்டிய கடமைப்பாடு தத்துவத்திற்கு உள்ளது. அதையே மார்க்சிய தத்துவமும் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றது. அதாவது மனிதர்களின் துன்பங்களை ஆற்றுப் படுத்தும் வலி நிவாரணியாக இருந்து வரும் மதத்தின் இருப்பை இல்லாதொழிப்பதென்பது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வைக்கும் பொதுவுடைமைக் காலத்தில் தானாக நடக்கும்.  

இந்த இடத்தில் தான் வறட்டு நாத்திகர்கள், மார்க்சியத்துடன் முரண்படுகிறார்கள். அவர்கள் கண்மூடித்தனமாக மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்களே அல்லாமல், மதம் எனும் மாயத்திரைக்கு பின்னால் உள்ள வர்க்க அரசியலை கண்டுகொள்வதில்லை. காரணம், வறட்டு நாத்திகர்களும் ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தில் நன்மை அடைந்த குட்டி பூர்ஷுவா பிரிவினராக உள்ளனர். இந்த முதலாளித்துவ சமூகமானது மதங்களை மட்டுமல்லாது, வறட்டு நாத்திகத்தையும்  உணவூட்டி வளர்த்து வருகின்றது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் நோக்கில் ஆதிக்க சக்திகளால் அனுப்பப்படும் மதவாத, வறட்டு நாத்திக அயோக்கியர்களை இனங் கண்டு புறம் ஒதுக்குவதும் மார்க்சியர்களின் கடமையாக உள்ளது.

- கலையரசன்

 29. 12. 2020  

Sunday, December 27, 2020

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம். 


இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப் படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப் பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப் பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப் படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் கமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப் படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப் படும் ஆதாரங்களிலும், சொல்லப் படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு "நம்பத் தகுந்தது" எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும் படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர். அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Thursday, December 24, 2020

தேடல் 2020: கத்தோலிக்க "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில் (மார்கழி 2020), "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல் (பகுதி - இரண்டு):


 

 • 1) இந்தவருடம் ஆரம்பத்தில் தொடங்கிய அமைதியின்மை இன்னும் முடிவடையவே இல்லை இதனை பற்றிய தங்களின் பார்வை என்ன ? 

அமைதியின்மை என்பதன் மூலம், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக நாடுகள் எல்லாம் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பாக உள்ளன. சர்வதேச விமான, கப்பல் போக்குவரத்து முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுவே உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுவதற்கான அடிப்படைக் காரணம். அதனால் தான் வைரஸ் தொற்றியவரை தனிமைப் படுத்தல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், சாதாரண மக்களுக்கு இந்த விடயங்கள் தெரிய வருவதில்லை. அதனால் யாரோ ஒருவருக்கு நோய் தொற்றி விட்டால் அவரைக் கண்டு மிரளும் போக்கு அதிகமாக உள்ளது. இது சாதாரண மனித இயல்பு எனலாம். ஒருவருக்கு நோய் வந்தால் உறவினர்களே ஓடி விடுவார்கள். இது மனித உறவுகளில் விரிசல்களையும் உண்டுபண்ணுகிறது.  


 • 2) கொரோனா என்னும் ஒரு தொற்று நோய் உலகத்தையே மிகவும் பயபீதியில் வைத்திருக்கின்றது இதன் பின்னணி எப்படியானது என்பதைப்பற்றிய தங்கள் பார்வை என்ன? 

ஐரோப்பாவில் நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்பானிஷ் காய்ச்சல் எனும் தொற்று நோய் பல கோடி மக்களை பலி கொண்டது. அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பிளேக் நோய் காரணமாக ஐரோப்பிய மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது! ஆகவே அவற்றுடன் ஒப்பிட்டால் கொரொனோ தொற்று நோய் ஓரளவு கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் எபோலா வைரஸ் பல ஆப்பிரிக்க நாடுகளை தாக்கியது. அதன் இன்னொரு வடிவம் தான் கோவிட் எனும் கொரோனா வைரஸ். இன்றுள்ள மனித இனத்தில் எவருக்குமே இதை தடுப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் முக்கியமான விடயம். நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்பு சாதாரண சளிக்காய்ச்சல் வந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது யாரும் அதைக் கண்டு அச்சமடைவதில்லை. அதற்குக் காரணம், சாதாரண சளிக்காய்ச்சல் கொண்டு வரும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்புச் சக்தி எமது உடல்களில் வந்து விட்டது. அது போன்றதொரு நிலைமை கொரோனா வைரஸ் விவகாரத்திலும் ஏற்படும். இங்கே நான் இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்கள் யாவும் ஒரே மனித இனம் என்பதை கொரோனா நிரூபித்துள்ளது.  


 • 3) உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை குறைக்க குறிவைத்த நோய் எனவும் குறை கூறுகின்றனர் இது நியாயமா ? 

இரண்டாவது கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நோயெதிர்ப்புச் சக்தி இல்லாத நிலையில் மக்கள் பலியாவதும் நடந்து கொண்டிருக்கும். இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சின்னம்மை நோய் வந்து யாரும் சாவதில்லை. ஆனால், அந்தமான் போன்ற தீவுகளில், வெளியுலகில் இருந்து முற்றிலும் தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சின்னம்மை நோய்க் கிருமி தொற்றினால் மரணிக்கும் வாய்ப்பு அதிகம். காரணம், அவர்களது உடலில் அதற்கான நோயெதிர்ப்புச் சக்தி இல்லை.  


 • 4) ஒரு சில நாடுகளில் இந்த நோய் தாக்கம் மிகவும் குறைவு ஒரு சில நாடுகளில் மிகவும் அதிகம் ஏன் இவ்வாறு ஒரு சில நாடுகளில் மனிதர் சாப்பிடும் உணவில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதா அல்லது மனித நிறங்களில் தொற்று மாறுபடுகின்றதா? 

இது எதுவுமே காரணம் அல்ல. முதலாவது கேள்விக்கு அளித்த பதிலை மீண்டும் ஒரு தடவை வாசித்து பார்க்கவும். இன்றைய உலகம் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்து விட்டது. நாடுகளுக்கு இடையிலான மனிதர்களினதும், பொருட்களினதும் போக்குவரத்துகள் அதிகரித்து விட்டன. அதைப் பாவித்து வைரஸ் பரவுவதையும் தடுக்க முடியாது. அதனால் தான், ஒவ்வொரு நாடும் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்ளத் தொடங்கியது. குறிப்பிட்ட காலம் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப் பட்டன. Lock down என்று ஊரடங்கு சட்டம் போட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்கள். இருப்பினும் சில நாடுகளில் பெருமளவில் தொற்றி, மரணங்கள் சம்பவித்தமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு, வைரஸ் பரவிய ஆரம்ப காலங்களில் விமான நிலையங்களில் எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. மேலும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பணக்கார நாடுகளில் கூட மருத்துவ மனைகளில் பெரும் வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன. இத்தாலியில் மருத்துவ சேவை முற்றாக சீர்குலைந்தது. அதற்கு மாறாக, முன்கூட்டியே அவதானமாக பல விதமான கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் வைரஸ் தொற்று குறைந்து காணப்பட்டது. உதாரணத்திற்கு வியட்நாமில் ஒருவர் கூட சாகவில்லை! சுறுசுறுப்பான நாகரிக உலகில் இருந்து ஒதுங்கி இருந்த, தொலைதூரத்தில் இருந்த பிரதேசங்களிலும் வைரஸ் தொற்றவில்லை. உதாரணத்திற்கு பசுபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள தீவுகளை குறிப்படலாம். 


 • 5) யுத்தம் குறைவடைந்தாலும் அமைதியான யுத்தம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இதன் பொருளாதார தாக்கம் எப்படியானது? 

அமைதியான யுத்தம் என்பதை பனிப்போர் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஒரு கெடுபிடியான, பதற்றமான நிலைமை. சிலநேரம் ஒரு தசாப்த காலமாக, ஒரு துப்பாக்கி வேட்டு கூட தீர்க்கப் பட்டிருக்காது. ஆனால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்காத அமைதியான காலத்தில் பொருளாதார பிரச்சினைகள் வெளித் தெரிய வருகின்றது. யுத்தம் நடந்த காலத்திலும் பொருளாதார பிரச்சினைகள் இருந்திருக்கும். ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லோருடைய கவனமும் யுத்தத்தின் மேல் குவிந்திருக்கும். சிலநேரம், யுத்தகால பொருளாதாரம் இதை விடக் கொடூரமான தாக்கத்தை உண்டுபண்ணி இருக்கலாம். ஆனால், அது தற்காலிகமானது என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு மாறாக அமைதிக் கால பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கம் எமது வாழ்க்கையை நிரந்தரமாகப் பாதிக்கப் போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. சில நேரம் அரசுகள், நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை மறைப்பதற்காக மக்கள் மீது யுத்தத்தை திணிப்பதுண்டு. ஆனால், ஒரு தடவை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால், மீண்டும் ஒரு யுத்த நிலைக்கு செல்வதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் பொருளாதார தாக்கம் மக்களால் அதிகமாக உணரப்படும். 

 

 *****

பகுதி ஒன்று - நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்  

Sunday, December 20, 2020

தமிழ்நாடு புரட்சிக்கு வித்திட்ட விசைத்தறி தொழிலாளர் போராட்டம்


தறியுடன் நாவல் விமர்சனம்...

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும் ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம். இரா. பாரதிநாதன் எழுதிய தறியுடன் நாவல் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ளது. தமிழ்நாட்டின் வட மேல் மாவட்டங்களான திருப்பூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் எண்பதுகளில் நக்சலைட் புரட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் இந்த நாவலின் கதைக்கரு. இதை எழுதிய இரா. பாரதிநாதன் ஒரு விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்தவர் என்பது மட்டுமல்லாது, அங்கு நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்காக போலீசில் பிடிபட்டு சித்திரவதைப் பட்டு வருடக் கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். இந்த நாவலில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனை அல்ல.

உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, சில புனைவுகளுடன் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடந்துள்ளதா என்ற பிரமிப்பு ஏற்பட்டுகிறது. சமூகப்புரட்சி சம்பந்தப்பட்ட நாவல் என்றால், அது ரஷ்யாவை, அல்லது வியட்நாமை கதைக் களனாக கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த நாவலை வாசிக்க வேண்டும். இதில் சாதி, மத பேதமின்றி, வர்க்க உணர்வுடன் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரும் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் காரர்கள். வர்க்கப் போராட்டத்தில் மொழி முரண்பாட்டுக்கும் இடமில்லை. தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த கத்தார், அங்கு சென்று புரட்சிகர இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நாவலின் இறுதியில் வருகிறது.

திருப்பூர் பகுதிகளில் பரவலாகக் காணப்படும், விசைத்தறி இயந்திரங்கள் பாவித்து, நெசவு செய்யும் தொழிற்சாலைகள் தான் இந்த நாவலின் அச்சாணி. உள்நாட்டு ஆடைத் தேவைக்காக மட்டுமல்லாது, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் சிறிதும் பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திப்பதில்லை. கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை சுரண்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகின்றன. இயந்திரங்களின் பேரிரைச்சல் காரணமாக காதுகள் செவிடாகலாம். ஆனால் எந்த முதலாளியும் காதுகளுக்கு கவசம் வாங்கிக் கொடுப்பதில்லை. இதைவிட பஞ்சுத் துகள்களை சுவாசித்து காலப்போக்கில் காச நோய் வந்து செத்தவர்கள் பலருண்டு. இருப்பினும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களை வாங்கினால் தனது இலாபத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டி வருமே என்பது தான் முதலாளிகளின் கவலை.

பெரும்பாலான விசைத்தறிகளை சொந்தமாக வைத்திருக்கும் சிறு முதலாளிகள், பெரும் மூலதன முதலாளிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. காலப்போக்கில் அவர்களும் பெரும் மூலதன திமிங்கிலங்களால் விழுங்கப் படுவார்கள். அது குறித்து எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாத, குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை சேர்ந்த சிறு முதலாளிகள், ஈவிரக்கமின்றி தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் தாமும் ஒரு நாள் பெரிய முதலாளியாக வரலாம் எனக் கனவு காண்கிறார்கள். இந்த உண்மையும் நாவலில் ஓரிடத்தில் பேசப் படுகின்றது.

இருப்பினும் இந்த நாவலின் கதை சிறு முதலாளிகளுக்கு எதிரான போராட்டக் களமாக விரிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தொழிற்புரட்சிக்கு பின்னரான லண்டன், மான்செஸ்டர் நகரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அறியாதவர்கள் இந்த நாவலை வாசிக்கவும். அப்போதும் இதே மாதிரித் தான் சிறிதும், பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தன. அன்றிருந்த லண்டன், மான்செஸ்டர் தொழிலகங்களில் இதே நிலைமை தான் காணப்பட்டது. அங்கும் அப்போது தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இயந்திரங்களில் அகப்பட்டு கைகளை இழந்து முடமானவர்கள் பலருண்டு.

அவ்வாறு இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப் பட்ட ஒரு பெண் தொழிலாளியின் துயரச் சம்பவத்தில் இருந்து தான் தறியுடன் நாவலின் கதை ஆரம்பமாகிறது. சம்பந்தப்பட்ட முதலாளி விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மருத்துவ செலவுகளை பொறுப்பேற்க மறுப்பதுடன், சிறு தொகையை கொடுத்து ஏமாற்ற முனைகிறான். இந்த அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் மார்க்சிய நூல்களை கண்டாலே ஓட்டமெடுத்த ரங்கன் என்ற தொழிலாளி, தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக அரசியலுக்குள் இழுக்கப் படுகிறான். அன்றிலிருந்து ஒரு தீவிர இளம் புரட்சியானாக மாறுகிறான். அந்த ரங்கன் தான் இந்த நாவலின் கதாநாயகன்.

அரசியல் உணர்வற்ற சாதாரண மக்கள் எவ்வாறு அரசியல்மயப் படுகிறார்கள் என்பதை, இந்த நாவல் விரிவாகக் கூறுகின்றது. அதைக் கதாசிரியர் சாதாரண மனிதர்களின் பேச்சு மொழியில் எழுதிச் செல்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளராக அந்த மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை விபரிக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மரமேறும் தொழிலாளியின் உதவியை நாடிச் செல்லும் ரங்கனை, அரசியலை வெறுக்கும் அவனது மனைவி கண்டபடி திட்டி விரட்டும் காட்சி ஒன்று வருகின்றது. பிற்காலத்தில் அதே பெண் அரசியலை புரிந்து கொள்வதுடன் புரட்சிப் பாடல்கள் பாடும் பெண்கள் குழுவிலும் பங்கெடுக்கிறார்.

அன்றைய காலத்தில் தலைமறைவாக இயங்கி வந்த நக்சலைட் இயக்கம், விசைத்தறித் தொழிலாளர் சங்கம் அமைப்பதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றது. உண்மையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் இயக்கம் தலைமறைவாக மட்டுமல்லாது, இது போன்று வெளிப்படையாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை நாவல் உணர்த்துகிறது. தலைமறைவாக மட்டும் இயங்கும் கெரில்லா இயக்கம், சிலநேரம் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டுப் போகலாம். அதைத் தடுப்பதற்கு தொழிற்சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகள் ஊடாக செயற்படுவதும் அவசியமானது. 
 
மேலும் வெளிப்படையாக இயங்குவோர் அரசு வழங்கும் ஜனநாயக வெளியை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. கைது செய்யப் பட்டவர்களை விடுவிப்பதற்காக வழக்காடுவது, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது, பிணையில் விடுவிப்பது என்பனவும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி தான். சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப் பட்டிருந்த போதிலும், அதற்குள்ளும் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். நாவலின் சில அத்தியாயங்கள் சிறைச்சாலைக்குள் நடக்கும் உரிமைப் போராட்டங்களை விளக்குகின்றன.

தறியுடன் நாவலின் கதை, எண்பதுகளில் நக்சலைட்டுகள் தலைமறைவாக இயங்கிய காலத்தில் நடக்கிறது. நக்சலைட் இயக்கத்தின் முழுநேரப் பணியாளர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, தொழிலாளர் போராட்டங்களுக்கு தத்துவார்த்த வழி காட்டுகின்றனர். அவர்களில் தகுதியான செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அரசியல் வகுப்புகள் நடத்துகின்றனர். பொதுவாக எல்லா தலைமறைவு இயக்கங்களும், தமது உறுப்பினர்கள் ஒன்று கூடும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களை மிக இரகசியமாக வைத்திருப்பார்கள். உறுப்பினர்களின் உண்மைப் பெயர் மறைக்கப் பட்டு புனைபெயர் பாவிக்கப் படும். இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் பற்றி இந்த நாவல் விரிவாகப் பேசுகின்றது.

அதை வாசிக்கும் பொழுது, எனக்கு ஈழப் போராட்டம் தொடங்கிய காலகட்டம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக எண்பதுகளின் தொடக்கப் பகுதிகளில் ஈழ விடுதலை அமைப்புகளும் இதே மாதிரித் தான் இயங்கின. கூட்டம் நடக்கும் இடம் குறித்து சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் வாய் வழியாக அறிவிக்கப் படும். சிலநேரம் வேறொரு கிராமத்திற்கு சென்று தங்க வேண்டியும் இருக்கலாம். அனேகமாக ஊருக்கு வெளியே அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியாக இருக்கும். திடீரென ரோந்து சுற்றும் போலிஸ் வாகனம் வந்தால், எந்தப் பக்கத்தால் தப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, அந்த மறைவிடம் தெரிவு செய்யப் பட்டிருக்கும். தமிழ்நாட்டில் நக்சலைட் புரட்சி இயக்கமும், ஈழத்தில் ஈழ விடுதலை இயக்கமும் வெவ்வேறு குறிக்கோள்களுக்காக போராடினாலும், இரகசிய நடவடிக்கை குறித்த செயற்பாடுகளில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றது.

தறியுடன் நாவலை வாசிக்கும் பொழுது, கிளாசிக்கல் நாவலாக புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலை வாசித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகளை கொண்டவை. அதாவது அரசியல் என்னவென்றே அறியாத கதாபாத்திரங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் சுரண்டலை எதிர்த்து தமது உரிமைகளுக்காக போராடுவதன் ஊடாக அரசியலை கற்றுக் கொள்கின்றன. எழுநூறு பக்கங்களுக்கு அதிகமாக விரியும் தறியுடன் நாவல், பிற நாவல்களைப் போன்று சாதாரண மக்களின் இன்பம், துன்பம், காதல், சோகம், கோபம் போன்ற உணர்வுகளை மட்டும் பேசவில்லை. இடையிடையே அரசியல் குறிப்புகளும் வருகின்றன. உதாரணத்திற்கு நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளான சாதிமறுப்புத் திருமணம், பெண்களின் சமத்துவம் போன்ற விடயங்களில் அரசியல் விளக்கவுரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.

இந்த நாவலை வாசிக்கும் வாசகர்கள், வழமை போல வாசித்து முடிந்த பின், ஒரு மூலையில் போட்டு விட்டு சென்று விட முடியாது. இந்த நாவல் சொல்ல வரும் அரசியல் கருத்துக்கள் மூலம் தெளிவான உலகறிவைப் பெற்றுக் கொள்வார்கள். அதனால் எல்லா வகையான தரத்தை உடையவர்களுக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் எழுதப் பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, கதை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. இதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் தறியுடன் குறிப்பிடத் தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாவல் ஒரு நடந்து முடிந்த கதையை பற்றி மட்டுமல்லாது, இனிமேல் நடக்கப் போகும் கதைகளை பற்றியும் கூறுகின்றது.

- கலையரசன் 
20-12-2020

 
நூலின் பெயர்: தறியுடன் 
ஆசிரியர்: இரா. பாரதிநாதன்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம் 
4/413, 3வது வீதி பாரதி நகர், பிச்சம்பாளையம் 
திருப்பூர் 641 603 
94866 41586 
gunarpf@gmail.com 
விலை இந்திய ரூபா: 650.00

Friday, December 18, 2020

பொருளாதார நெருக்கடி குறித்த "க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள்", பகுதி - 3

 (எங்கெல்ஸ் எழுதிய‌ க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள், தொட‌ர்ச்சி...) 


கேள்வி  12: தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட மேலதிக விளைவுகள் என்ன?

பதில்: 
பெருந் தொழிற்துறை நீராவி இயந்திரம் மற்றும் பிற இயந்திரங்களை சாதனங்களாக்கி, குறுகிய காலத்திற்குள், சொற்ப வளங்களைக் கொண்டு,  பன்மடங்கு பெருகிய, முடிவில்லாத பொருள் உற்பத்தியை சாத்தியமாக்கியது. 

இந்த பெருந் தொழிற்துறையில் இருந்து உருவான சுதந்திரமான போட்டியானது, இலகுபடுத்தப் பட்ட பொருளுற்பத்தி காரணமாக ஒரு பயங்கரமான குணவியல்பை  பெற்றுக் கொண்டது. பெருமளவிலான முதலாளிகள் பெருந் தொழிற்துறையில் ஈடுபட்டு மிகக் குறுகிய காலத்திற்குள் பாவனைக்குள்ளாக்கியதை விட அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்தனர். அதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்க முடியவில்லை. அதனால் வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் விடயம் உருவானது. தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டன. தொழிலதிபர்கள் திவாலானார்கள். தொழிலாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடினார்கள். எல்லா இடங்களிலும் பேரவலம் தோன்றியது. 

சில காலங்களுக்குப் பின்னர் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்கப் பட்டன. தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. சம்பளம் உயர்ந்தது. அதனால் வர்த்தகம் படிப்படியாக முன்பை விட நல்ல நிலைக்கு வந்தது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பெருமளவு பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டன. புதிய நெருக்கடி உருவானது. அது மீண்டும் மிகச் சரியாக முந்திய நெருக்கடி போன்றே நடந்தது. அதனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொழிற்துறை நிலைமையானது நல்ல காலத்திற்கும் நெருக்கடி காலத்திற்கும் இடையில் ஊசலாடியது. ஐந்து அல்லது ஏழு வருடங்களுக்கொரு தடவை பெரும்பாலும் ஒழுங்காக இந்த நெருக்கடி வந்து கொண்டிருந்தது. அது மீண்டும் ஒவ்வொரு தடவையும் தொழிலாளர்களின் பேரவலத்துடன் பிணைக்கப் பட்டிருந்தது.  அது பொதுவான புரட்சிகர தூண்டுதலாகவும், நிலைத்திருக்கும் அமைப்பு முழுவதற்குமான பெரும் அபாயமாகவும் இருந்தது. 

கேள்வி 13: மீண்டும் மீண்டும் நிக‌ழும் பொருளாதார‌ நெருக்க‌டிக‌ளை டொட‌ர்ந்து என்ன‌ ந‌ட‌க்கும்?

ப‌தில்: 

முத‌லாவ‌தாக‌; 

- பெரும் தொழிற்துறை த‌ன‌து வ‌ள‌ர்ச்சிக் க‌ட்ட‌த்தின் ஆர‌ம்ப‌ கால‌ங்களில் சுத‌ந்திர‌மான‌ போட்டியை கொண்டு வ‌ந்திருந்த‌ போதிலும், த‌ற்போது அதைக் க‌ட‌ந்து வ‌ந்து விட்ட‌து. 

- சுத‌ந்திர‌மான‌ போட்டியும், ஒரு சில‌ தனி ந‌ப‌ர்களால் நிர்வ‌கிக்க‌ப் ப‌டுவ‌தும் தொழிற்துறை உற்ப‌த்தியை பொறுத்த‌வ‌ரையில் ஒரு சிறைக்கூட‌மாக‌ மாறி விட்ட‌து. இதை அவர்க‌ள் உடைக்க‌ வேண்டும் அல்ல‌து உடைப்பார்க‌ள். 

- பெரும் தொழிற்துறை இதே நிலைமையில் சென்று கொண்டிருந்தால், ஏழு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை மீண்டு வ‌ரும் பொதுக் குழ‌ப்ப‌ம் மூல‌ம் ம‌ட்டுமே த‌ன்னை நிலைநிறுத்திக் கொள்ள‌ முடியும். 

- இது மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த‌ நாக‌ரிக‌த்தையும் அச்சுறுத்துவ‌துட‌ன், பாட்டாளிக‌ளை துன்ப‌த்தில் த‌ள்ளுவ‌து ம‌ட்டும‌ல்லாது பெரும‌ள‌வு முத‌லாளிக‌ள‌யும் அழிக்கிற‌து. 

- அத‌னால் பெரும் தொழிற்துறை முற்றாக‌ கைவிட‌ப் ப‌ட‌ வேண்டும். ஆனால் இது சாத்திய‌ம‌ற்ற‌ விட‌ய‌ம். - அத‌னால் அவர்க‌ள் ஒரு புதிய‌ ச‌முதாய‌க் க‌ட்ட‌மைப்பை அவசிய‌மாக்குகிறார்க‌ள். இத‌ன் மூல‌ம் ஒன்றுட‌ன் ஒன்று போட்டியிடும் த‌னிப்ப‌ட்ட‌ தொழிற்சாலைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ச‌முதாயம் முழுவ‌தும் ஒரு நிர‌ந்த‌ர‌மான திட்ட‌த்தின் கீழ் அனைவ‌ருக்குமான‌ தேவைக‌ளை பூர்த்தி செய்யும் வ‌கையில் தொழிற்துறை உற்ப‌த்தியை வ‌ழி ந‌ட‌த்தும். 

இர‌ண்டாவ‌தாக‌; 

- பெரும் தொழிற்துறையும் அத‌னால் சாத்திய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ உற்ப‌த்தியின் முடிவுறாத‌ விரிவாக்க‌மும், வாழ்வாதார‌த்திற்கு அவசிய‌மான‌ அனைத்து பொருட்க‌ளையும் உற்ப‌த்தி செய்யும் சமுதாய‌த்தை உருவாக்கி உள்ள‌து. 

- அத‌னால் ஒவ்வொரு ச‌மூக‌ உறுப்பின‌ரும் த‌ன‌து ச‌க்தியை ஆற்ற‌லையும் பூர‌ண‌ சுத‌ந்திர‌த்துட‌ன் ப‌ய‌ன்ப‌டுத்த முடியும். 

- இன்றைய‌ ச‌மூக‌த்தில் துன்ப‌ங்க‌ள‌யும், வ‌ர்த்தக நெருக்க‌டிக‌ளையும் உருவாக்கிய‌ அதே பெரும் தொழிற்துறை, இன்னொரு ச‌முதாய‌க் க‌ட்ட‌மைப்பையும் உருவாக்கி துன்ப‌ங்க‌ளையும் நெருக்க‌டிக‌ள‌யும் அழித்தொழிக்கும். 

இத‌னால் தெளிவாக‌ நிரூபிக்க‌ப் ப‌டுவ‌தான‌து: 

1. இன்று முத‌ல் இந்த‌த் தீமைக‌ள் அனைத்தையும், இனிமேலும் சாத்தியமில்லாத‌ ஒரு ச‌மூக‌ அமைப்பின் த‌ன்மைக‌ள் என்று குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டும். 

2. இந்த‌ தீமைக‌ளை முற்றாக‌ அக‌ற்றுவ‌த‌ற்கான‌, ஒரு புதிய‌ சமுதாய‌ அமைப்பை உருவாக்குவ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளும் இங்கே உள்ள‌ன‌. 


கேள்வி 14: இந்த‌ புதிய‌ ச‌முதாய‌ம் எத்த‌கைய‌ அடிப்ப‌டையைக் கொண்டிருக்க‌ வேண்டும்?

ப‌தில்: 

- அவர்க‌ள் அனைத்து தொழிற்துறை நிர்வாக‌த்தையும், உற்ப‌த்திப் பிரிவுக‌ளையும் த‌ம‌து கைக‌ளில் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். 

- த‌னிப்ப‌ட்ட‌ முறையில், ஒருவ‌ரோடொருவ‌ர் போட்டியிடும் த‌னிந‌ப‌ர்க‌ளுக்கு ப‌திலாக‌, ஒரு பொதுச் ச‌மூக‌ம் உற்ப‌த்திப் பிரிவுக‌ளை பொறுப்பெடுக்க‌ வேண்டும். 

- அத‌ன் அர்த்த‌ம், பொதுச் ச‌மூக‌த்தின் க‌ண‌க்கில், ஒரு ச‌மூக‌த் திட்ட‌த்தின் கீழ் அனைத்து ச‌மூக‌ உறுப்பின‌ர்களும் ப‌ங்கெடுக்கும் வ‌கையில் இருக்க‌ வேண்டும். 

- அதாவது தனி நபர் போட்டியை இல்லாதொழித்து விட்டு, அத‌ற்குப் ப‌திலாக‌ அனைவரதும் கூட்டு ஒத்துழைப்பை வேண்டி நிற்கும். 

- இன்று நாம் நேரில் காண‌க் கூடிய‌வாறு, தொழிற்துறை நிர்வாக‌ம் தனி ந‌ப‌ர்களின் கைக‌ளில் இருப்ப‌தால் அத‌ன் விளைவாக‌  தனியுடைமையும் உள்ள‌து.

- போட்டி என்ப‌து,  த‌னிப்ப‌ட்ட‌ த‌னியார் உரிமையாள‌ர்கள் த‌ம‌து தொழிற்துறையை நிர்வ‌கிக்கும் முறையாகிற‌து. 

- அத‌னால் தொழிற்துறையின் த‌னி ந‌ப‌ர் நிர்வாக‌ம், போட்டிக‌ளில் இருந்து, தனியார் சொத்துடைமையை பிரிக்க‌ முடியாது. 

- த‌னியார் சொத்துடைமை இல்லாதொழிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். 

- அந்த‌ இட‌த்தில் அனைத்து உற்ப‌த்திக் க‌ருவிக‌ளையும் பொதுச் ச‌மூக‌த்தின் ப‌ய‌ன்பாட்டுக்கு விட‌ வேண்டும். 

- எல்லா உற்ப‌த்திப் பொருட்க‌ளையும் பொதுச் ச‌மூக‌ உட‌ன்பாட்டின் அடிப்ப‌டையில் பிரித்துக் கொடுக்க‌ வேண்டும்.

- இன்னொரு வித‌மாக‌ சொன்னால் "பொது உடைமைச் ச‌முதாய‌ம்"* வ‌ர‌ வேண்டும். 

(*எனது குறிப்பு: மூல‌ நூலில் "பொருட்க‌ளின் ச‌மூக‌ம்" என்று உள்ள‌து. இது பொது உடைமை என்ற அர்த்த‌தில் எழுத‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும். எங்கெல்ஸ் இந்த‌ நூலை வெளியிட‌ முன்ன‌ர் த‌யாரித்து வைத்த‌ "க‌ம்யூனிச‌ வாக்குமூல‌த் திட்ட‌ம்" என்ற‌ பிர‌தியிலும் அந்த‌ச் சொல் அடிக்க‌டி ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து. அத்துட‌ன், க‌ம்யூனிச‌ம் என்ப‌து ஒரு பிரெஞ்சு சொல் ஆகும்.)

- த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு என்ப‌து, ஒரு ச‌மூக‌ப் புர‌ட்சிக்கான‌ மிக‌வும் சுருக்க‌மான‌ குறிப்பிட‌த் த‌க்க‌ தொகுப்புரை ஆகும். 

- இது தொழிற்துறை வ‌ள‌ர்ச்சியில் இருந்து தோன்றும் அவ‌சிய‌மான‌ கோரிக்கை என்ப‌தால்,  க‌ம்யூனிஸ்டுக‌ளின் முன்நிப‌ந்த‌னையாக‌ உள்ள‌து. 

இன்று நாம் காணும், "தனியார் சொத்துடைமை" வரலாற்றில் முன் எப்போதும் இருக்கவில்லை. அது முதலாளித்துவத்தின் விளைவு.

 

கேள்வி 15: அப்ப‌டியானால் த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு கட‌ந்த‌ காலங்க‌ளில் சாத்திய‌ம‌ற்ற‌தாக‌ இருந்த‌தா?

ப‌தில்:

ஆம். ச‌மூக‌ ஒழுங்க‌மைப்பின் ஒவ்வொரு மாற்ற‌மும், சொத்துடைமை உற‌வுகளின் ஒவ்வொரு புர‌ட்சியும், புதிய‌ உற்ப‌த்திச் ச‌க்திக‌ளை கொண்டு வ‌ருவ‌தற்கு தேவைப் ப‌ட்ட‌ன‌. இவை ப‌ழைய‌ சொத்துடைமை உற‌வுக‌ளுட‌ன் பொருந்த‌ விரும்ப‌வில்லை. த‌னியார் சொத்துடைமை அவ்வாறு தான் பிற‌ந்த‌து. ஏனென்றால் த‌னியார் சொத்துடைமை எல்லாக் கால‌ங்க‌ளிலும் இருந்திருக்க‌வில்லை.

ம‌த்திய‌ கால‌த்தின் இறுதிக் கால‌த்தில் ப‌ட்ட‌றைத் தொழில் மூல‌ம் புதிய‌ உற்ப‌த்திமுறைக‌ள் உருவாக்கப் ப‌ட்ட‌ போது, அது முன்பிருந்த‌ நில‌ப்பிர‌புத்துவ, கைவினைஞ‌ர் உரிம‌த்தின் கீழ் அடிப‌ணிய‌ விரும்ப‌வில்லை. பழைய‌ சொத்துடைமை உற‌வுக‌ளில் இருந்து உற்ப‌த்தித் துறையான‌து புதிய‌ சொத்துடைமை வ‌டிவ‌த்தை கொண்டு வ‌ந்த‌து. அதுவே த‌னியார் சொத்துடைமை ஆகும். உற்ப‌த்தி துறைக்கும், பெரும் தொழிற்துறையின் ஆர‌ம்ப‌கால‌ வ‌ள‌ர்சிக் க‌ட்ட‌த்திலும், த‌னியார் சொத்துடைமை த‌விர்ந்த‌ வேறெந்த‌ சொத்துரிமை முறையும் சாத்திய‌மாக‌ இருக்க‌வில்லை. இந்த‌ ச‌மூக‌ அமைப்பை த‌விர வேறெதுவும் த‌னியார் சொத்துரிமையில் த‌ங்கி இருக்க‌வில்லை. 

(என‌து விள‌க்க‌வுரை: நில‌ப்பிர‌புத்துவ‌ கால‌த்தில் சொத்துக்க‌ள் வாரிசுரிமை அடிப்ப‌டையில் கிடைத்த‌ன‌. அவற்றை பெரும்பாலும் வாங்குவ‌தும் விற்ப‌தும் சாத்திய‌ம‌ற்ற‌து. முத‌லாளித்துவ‌ கால‌த்தில் தான் காசுள்ள‌ யாரும் வாங்கலாம் என்ற உரிமை கிடைத்த‌து. எங்கெல்ஸ் இதைத் தான் த‌னியார் சொத்துரிமை என்கிறார்.)


- போதுமான‌ அள‌வு உற்ப‌த்தி செய்ய‌ப் படாத‌ கால‌ம் வரையில்...

 - அதாவ‌து எல்லோருக்கும் போதுமான‌ அளவு இருக்க‌வில்லை என்றால்...

- அதே நேர‌ம் ச‌மூக‌ மூல‌த‌ன‌த்தை பெருக்க‌வும் உற்பத்தி ச‌க்தியை அதிக‌ரிக்க‌வும் போதுமான‌ அள‌வுக்கு 

மித‌மிஞ்சிய‌ பொருட்க‌ள் எஞ்சி இருக்குமானால்...

- இவை கால‌ம் முழுவ‌தும் ச‌மூக‌ உற்பத்திக‌ளில்  மேலாதிக்க‌ம் செலுத்தும் என்றால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ வறுமையான‌ வ‌ர்க்க‌மும் இருக்க‌வே செய்யும். 

இந்த‌ வர்க்க‌ங்கள் எவ்வாறு காட்சிய‌ளிக்கும் என்ப‌தை உற்ப‌த்தியின் வள‌ர்ச்சிக் க‌ட்ட‌ம் தான் தீர்மானிக்கும். 

விவ‌சாய‌த்தை ந‌ம்பி இருந்த‌ ம‌த்திய‌கால‌ க‌ட்ட‌ம் எம‌க்கு பிர‌புக்க‌ளையும், ப‌ண்ணைய‌டிமைக‌ளையும் கொடுத்த‌து. 

பிந்திய‌ ம‌த்திய‌ கால‌க‌ட்ட‌ம் எம‌க்கு கைவினைத் தொழில‌திப‌ர்களையும், கூலியாட்க‌ள‌யும் காட்டியது.

17ம் நூற்றாண்டு எம‌க்கு உற்ப‌த்தி தொழில் முனைவோரையும், அது சார்ந்த‌ தொழிலாள‌ர்களையும் காட்டியது. 

19ம் நூற்றாண்டு பெரும் தொழில் அதிப‌ர்க‌ளையும், பாட்டாளிக‌ள‌யும் காட்டிய‌து. 

இதில் தெளிவான‌ விட‌ய‌ம் என்ன‌வெனில்,  எல்லோருக்கும் போதுமான‌ அள‌வு உற்ப‌த்தி செய்ய‌ப் ப‌ட்டிருந்தால், உற்ப‌த்திச் ச‌க்திக‌ள் அந்த‌ள‌வு தூர‌ம் வ‌ள‌ர்ச்சி அடைந்திருக்க‌ முடியாது.

அத‌னால், த‌னியார் சொத்துரிமை இந்த‌ உற்ப‌த்தி ச‌க்திக‌ளுக்கு ஒரு கூண்டாக‌வும், த‌டையர‌ணாக‌வும்  இருந்திருக்கும். 

த‌ற்போது பெரும் தொழிற்துறை வ‌ள‌ர்ச்சி கார‌ண‌மாக‌;

1. மூல‌த‌ன‌மும், உற்ப‌த்தி ச‌க்தியும் முன்னொருபோதும் அறிந்திராத‌ அள‌வுக்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்டுள்ள‌துட‌ன், குறுகிய‌ கால‌த்தில் இவ‌ற்றை முடிவுறாத‌ அள‌வு பெருக்குவ‌த‌ற்கு தேவையான‌ வ‌ள‌ங்க‌ளும் உள்ள‌ன‌. 

2. இந்த‌ உற்ப‌த்தி ச‌க்திக‌ள் குறைந்த‌ள‌வு முத‌லாளிக‌ளின் கைக‌ளில் குவிந்துள்ள‌ன‌. அதே நேர‌ம் பெரும்பான்மை ம‌க்க‌ள் பாட்டாளிக‌ள் ஆகிறார்க‌ள். முத‌லாளிக‌ளின் செல்வ‌ம் பெரிதாகும் பொழுது, பாட்டாளிக‌ளின் நிலைமை அதே அள‌வுக்கு துன்ப‌க‌ர‌மான‌தாக‌வும், ச‌கிக்க‌ முடியாத‌தாக‌வும் மாறுகிற‌து. 

3. சிற‌ப்பாகவும், இல‌குவாக‌வும் பெருக்க முடிந்த‌ த‌னியார் உடைமைக‌ளும், முத‌லாளித்துவ‌மும் தலைக்கு மேலே வ‌ள‌ர்ந்து விட்ட‌ன‌. 

ஒவ்வொரு த‌ட‌வையும் ச‌மூக‌ ஒழுங்கில் விய‌க்க‌த் த‌க்க‌ த‌ட‌ங்க‌ல்க‌ளை உண்டாக்குகின்ற‌ன‌.

அத‌னால் இப்போது த‌னியார் உடைமையை ஒழிப்ப‌தை சாத்திய‌மாக்குவ‌து ம‌ட்டும‌ல்லாது, அதை முற்றுமுழுதான‌ தேவையாக‌வும் மாற்றியுள்ள‌து.


****

முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

புலம்பெயர்ந்த தமிழருக்கு பொருந்தும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (பகுதி - 2) 

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1  

Sunday, December 13, 2020

இதுவரை தமிழில் வெளிவராத எங்கெல்சின் எழுத்துகள்

எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூல் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை தரலாம் என நினைக்கிறேன்.

இதனை தமிழில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் அந்த மொழி பெயர்த்து இருந்தாலும் இதன் சரியான மொழி பெயர்ப்பு "கம்யூனிசத்தின் அடிப்படைகள்" (ஜெர்மன் மொழியில்: Grundsaetze des Kommunismus) என்று இருக்க வேண்டும். 

இந்த நூல் தோன்றக் காரணமாக இருந்த வரலாற்று சம்பவங்கள் குறித்த விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தகவல்கள் தமிழில் மிக மிக அரிதாகவே காணக் கிடைக்கின்றன.

1836 ஆம் ஆண்டு, போர்க்குணாம்சம் மிக்க ஜெர்மன் தொழிலாளர்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி நியாய வாதிகளின் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அது பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் சங்கம் என்று அழைக்கப்படலாயிற்று. சில வருடங்களுக்குப் பின்னர் லண்டனை தளமாகக் கொண்டு அந்த அமைப்பு இயங்கி வந்தது. 
 
அன்று அவர்கள் தமது அமைப்புக்கு ஒரு பொதுவான செயல் திட்டம் தேவை என்பதை உணர்ந்தார்கள். அது பிற்காலத்தில் கம்யூனிசத்தின் அடிப்படை நூலாக பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்பினார்கள். அந்த அடிப்படை நூலானது கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தால் அதை விவாதத்திற்கு விடுவதுடன், சுருக்கமாகவும் தெளிவாகவும் செழுமைப் படுத்த முடியும் என நம்பினார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தம்மை கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், என்று அழைத்துக் கொண்டவர்கள் பெரும்பாலும் ஒரு கற்பனாவாத சோசலிச கொள்கையைத் தான் பின்பற்றினார்கள். விஞ்ஞான ரீதியான அணுகுமுறை மிகக்குறைவாக இருந்தது. ஆகவே அன்றைய நியாயவாதிகளின் சங்கத்திலும் கற்பனாவாத சோசலிஸ்ட்களின் தாக்கம் பெருமளவு இருந்தமை தெரியவருகின்றது.

1846 ஆண்டளவில் இதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் விஞ்ஞானபூர்வமான சோசலிச கோட்பாடுகளை எழுதி வெளியிட்டு வந்தனர். அவர்கள் கம்யூனிச தொடர்பு கமிட்டி என்ற பெயரில் தமது எழுத்துப் பிரதிகளை வெளியிட்டு பாட்டாளிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முயன்றனர். இந்த கமிட்டியின் சார்பாக நியாயவாதிகளின் சங்கத்துடன் விவாதங்களில் ஈடுபட்டனர். மறுபக்கத்தில் அந்த நியாயவாதிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கற்பனாவாத சோசலிசத்தின் தாக்கத்திலிருந்து விடுபட விரும்பினார்கள்.

1847, தீர்மானகரமான முடிவுகளை எடுக்கும் ஆண்டாக அமைந்திருந்தது. லண்டன் நியாயவாதிகள் சங்க செயற் குழுவை சேர்ந்த ஜோசப் மோல், சங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக பாரிஸ், பிரசல்ஸ் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தார். அவர் அப்போது அங்கிருந்த மார்க்சையும், எங்கெல்சையும் சந்தித்து, தமது சங்கத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அடுத்து நடக்கவுள்ள மகாநாட்டில் அவர்கள் தமது கோட்பாட்டு விளக்கங்களை செயல்திட்டம் ஆக்குவதற்கான வரைபுகளை முன்வைக்கலாம் என்று கூறினார். மார்க்சும் எங்கெல்சும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிறு கிளைக் குழுக்களாக பல நாடுகளிலும் நகரங்களிலும் வாழ்ந்தனர். இதனால் இரண்டு மகாநாடுகள் நடத்தி மார்க்ஸ், எங்கெல்சின் முன்மொழிவுகள் மீது விவாதங்கள் நடத்தி, இறுதியான செயற்திட்டம் அல்லது புதிய யாப்பு எழுதப் பட வேண்டும் என தீர்மானித்தனர்.

1847 ஆம் ஆண்டு ஜூன் இரண்டு முதல் ஒன்பதாம் தேதி வரையிலான காலப்பகுதியில் லண்டனில் முதலாவது மாநாடு நடந்தது. இந்த மகாநாட்டின் போது இன்னமும் பலர் கற்பனாவாத சோஷலிச கொள்கைகளை கைவிடவில்லை என்பது தெரியவந்தது.

இந்த மகாநாட்டில் கம்யூனிஸ்ட் வாக்குமூலத்திற்கான வரைபு என்ற ஒரு நகல் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலாகவும் உருவானது. அந்த வரைபில் உள்ள பல கேள்வி பதில்கள் இந்த நூலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடலாம். தற்போது பாவனையில் உள்ள கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில், கேள்வி 22 கேள்வி 23 ஆகியவற்றுக்கு பதில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக "இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் அந்த மகாநாட்டின் முன்மொழியப்பட்ட "கம்யூனிச வாக்குமூலத்தின் வரைபு" என்ற பிரதியில் எழுதப்பட்டுள்ளது. (அதை நான் ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். பின்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூல் பற்றிய எனது விளக்கவுரையில் அந்தக் கேள்வி வரும் போது அதற்கான பதிலை சொல்லி விடுகிறேன்.)

உண்மையில் அன்று நடந்த விவாதங்கள் தான் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, கம்யூனிசத்தின் அடிப்படைகள் ஆகிய இரண்டு சிறிய நூல்கள் வெளிவரக் காரணமாக அமைந்திருந்தன.

கம்யூனிச வாக்குமூலத்தின் வரைபு என்ற கையெழுத்துப் பிரதி தொலைந்து போயிருந்தது. நீண்ட காலமாக யாராலும் கவனிக்காமல் படாமல் கைவிடப் பட்டிருந்தது. அது கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் தொகுப்பு நூல்களில் இடம் பெறவில்லை. அது பிற்காலத்தில் அந்த சங்கத்தின் ஜேர்மன், ஹம்பூர்க் கிளையை சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. உறுப்பினரின் மறைவுக்குப் பின்னர் அவரது உறவினர்கள் அந்தப் பிரதியைத் ஹம்பூர்க் நூலகத்திற்கு கொடுத்து விட்டனர்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக யார் கண்ணிலும் படாமல் இருந்த அந்த பிரதி, தற்செயலாக நூலக வேலையாட்கள் ஆவணப்படுத்தும் போது கண்டெடுக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் வெளியிடப்பட்ட அந்த பிரதி உடனடியாக பெர்லினில் புதிதாக தொகுக்கப் பட்ட கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூலிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1847 ஜூன் மாதம் நடந்த நியாயவாதிகள் சங்க மகாநாட்டில் எங்கெல்ஸ் முன்மொழிந்த விஞ்ஞானபூர்வமான சோசலிச கோட்பாடுகளை அந்த சங்கத்தின் செயலதிபர் வில்லெம் வோல்ஃப் ஆதரித்தார்.

அந்த மாநாட்டில் தான் "அனைத்துலக பாட்டாளிகளை ஒன்று சேருங்கள்" என்ற கோஷம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அந்த சங்கத்தின் பெயரும் "கம்யூனிஸ்டுகளின் சங்கம்" என மாற்றப்பட்டது.

எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ வாக்குமூலத்தின் வரைபு விவாதத்திற்கு விடப்பட்ட நேரம் கற்பனாவாத சோசலிசம் பற்றிய சில கருத்துகளும் இருந்தன. அதனால் மேற்படி வரைபிலிருந்த சில பகுதிகள் பின்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில் இல்லாதிருப்பதை அவதானிக்கலாம்.

நியாயவாதிகள் சங்கத்தின் கிளைக் குழுக்களில் நடந்த தொடர்ச்சியான விவாதங்களின் பின்னரும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முன்வைத்த திருத்தங்களின் பின்னரும், 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி லண்டனில் இரண்டாவது மாநாடு ஒன்று கூடியது. விஞ்ஞானபூர்வமான சோசலிசம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அதைச் ஏற்படுத்தப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய இரண்டு நூல்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வெறுமனே மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துக்கள் மாத்திரமல்ல, அது ஒரு கட்சிகள் நீண்ட காலமாக நடந்த விவாதங்களின் விளைவு ஆகும். விவாதங்கள் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தன. இவற்றின் விளைவாகத்தான் கம்யூனிஸ்டுகளின் சங்கம் என்ற முதலாவது புரட்சிகர பாட்டாளிகளின் அமைப்பு தோற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுரை குரல் பதிவாக You Tube பில் உள்ளது.

Saturday, December 12, 2020

புலம்பெயர்ந்த தமிழருக்கு பொருந்தும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (பகுதி - 2)

 

(எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், தொடர்ச்சி...) 

கேள்வி 6: தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த தொழிலாளர் வர்க்கங்கள் எவை? 

பதில்: ஆளும் வர்க்கம் அல்லது சொத்துடைமை வர்க்கத்தை சார்ந்து நின்ற தொழிலாளர் வர்க்கங்கள், சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், வெவ்வேறான நிலைமைகளிலும், வெவ்வேறான உறவுகளுடனும் இருந்துள்ளன. பண்டைய காலங்களில் தொழிலாளர்கள் சொத்துடைமையாளர்களின் அடிமைகளாக இருந்தனர். அவர்கள் இப்போதும் அதே நிலைமையில் சில பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்காவின் தென் பகுதியிலும் வாழ்கின்றனர்.

மத்திய காலங்களில் அவர்கள் நிலவுடைமை பிரபுக்களுக்கு பண்ணையடிமையாக இருந்தார்கள். இப்போதும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யாவில் அந்த நிலைமை உள்ளது. மத்திய காலத்திலும், தொழிற்புரட்சி நடக்கும் வரையிலும் நகரங்களில் கைவினைத் தொழில் செய்த குட்டி முதலாளிய சிறு தொழிலதிபர்கள் கீழ் வேலை செய்த பணியாளர்கள் இருந்தனர். பெரும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியினால், மிகப் பெரிய முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப் பட்ட ஆலைத் தொழிலாளர்கள் மெல்ல மெல்ல உருவானார்கள்.

கேள்வி 7: எவ்வாறு ஒரு பாட்டாளி தன்னை அடிமையிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்கிறான்?

பதில்: ஓர் அடிமை ஒரே தடவையில் நிரந்தரமாக விற்கப் பட்டு விடுகிறான். ஆனால் ஒரு பாட்டாளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தன்னைத் தானே விற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தனிப்பட்ட அடிமை ஒரேயொரு எஜமானின் சொத்து ஆவான். அந்த எஜமானின் நலைனை ஒட்டியே, அது எவ்வளவு இன்னல் மிக்கதாக இருந்த போதிலும், அவனால் உத்தரவாதம் அளிக்கப் பட்ட இருப்பைக் கொண்டிருக்கிறான். அதற்கு மாறாக, ஒரு தனிப்பட்ட பாட்டாளி, ஒட்டு மொத்த முதலாளிய வர்க்கத்தினதும் சொத்தாக இருப்பதால், யாருக்காவது தேவைப் படும் போது மட்டுமே அவனது உழைப்பு வாங்கப் படுகிறது. அதனால் ஒரு பாட்டாளிக்கு இருப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. இந்த இருப்புக்கான உத்தரவாதமானது ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தினால் மட்டுமே வழங்கப் பட முடியும்.

ஓர் அடிமை போட்டிகளுக்கு வெளியே நிற்கிறான். ஆனால் ஒரு பாட்டாளி போட்டிக்கு உள்ளே நிற்பதுடன், அதன் ஏற்ற இறக்கங்களையும் உணர்கிறான். ஓர் அடிமை பொருளாகவே கருதப் படுவானே தவிர, (ஒரு தேசத்தின்) குடியுரிமை கொண்ட சமூகத்தின் உறுப்பினராக கருதப் படுவதில்லை. அதற்கு மாறாக ஒரு பாட்டாளி குடியுரிமைச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப் படுகிறான். இதன் மூலம் ஓர் அடிமை பாட்டாளியை விட நல்ல நிலையில் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பாட்டாளி ஒரு வளர்ச்சி அடைந்த சமுதாயத்திற்கு உரியவன். அதனால் அடிமையை விட மேலான படி நிலையில் நிற்கிறான். அடிமையானவன், குறிப்பாக அடிமை முறை சார்ந்த தனியார் சொத்துடைமையை மட்டும் உடைப்பதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதன் மூலம் தானாகவே பாட்டாளியாக மாறுகிறான். தனியார் சொத்துடைமையை முற்று முழுதாக இல்லாதொழிப்பதன் மூலமே ஒரு பாட்டாளி தன்னை விடுதலை செய்து கொள்ள முடியும்.

கேள்வி 8: ஒரு பாட்டாளி பண்ணை அடிமையிடமிருந்து எவ்வாறு தன்னை வேறு படுத்திக் கொள்கிறான்? 

ப‌தில்: 

1. ஒரு ப‌ண்ணை அடிமை சிறு துண்டு நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறான். அதில் வேலை செய்வதுடன், அதனால் கிடைக்கும் விளைச்சலில் ஒரு பகுதியை கொடுத்து விடுகிறான். அதற்கு மாறாக பாட்டாளி இன்னொருவனுக்கு சொந்தமான உற்பத்தி சாதனங்களை கொண்டு வேலை செய்து, அதனால் கிடைக்கும் வருமான‌த்தில் ஒரு ப‌குதியை பெற்றுக் கொள்கிறான். 

2. ஒரு ப‌ண்ணை அடிமை கொடுக்கிறான். பாட்டாளி கொடுக்க‌ப் ப‌டுகிறான். 

3. ஒரு ப‌ண்ணை அடிமைக்கு உத்த‌ர‌வாத‌மான‌ இருப்பு உள்ள‌து. பாட்டாளிக்கு அது இல்லை. 

4. பண்ணை அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளி அதற்குள் நிற்கிறான். 

5. ஒரு பண்ணை அடிமை நகரத்திற்கு சென்று கைவினைத் தொழில் செய்வதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். ஒரு பண்ணை அடிமை நிலப்பிரபுவுக்கு தனது உழைப்பையும், பொருட்களையும் கொடுப்பதற்கு பதிலாக பணத்தை கொடுத்து சுதந்திரமான குத்தகைக் காரராக மாற முடியும். நிலப்பிரபுவை விரட்டி விட்டு நிலத்தை தானே சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம், அல்லது வேறெந்த வழியிலாவது சொத்துடைமை வர்க்கமாகி போட்டியில் பங்கெடுக்க முடியும். ஒரு பாட்டாளி தனியுடைமையையும், வர்க்க முரண்பாடுகளையும் ஒழிப்பதன் மூலம் தன்னைத் தானே விடுவித்துக் கொள்கிறான்.

(அடுத்த கேள்வி பற்றிய சிறு குறிப்பு: புலம்பெயர்ந்த நாடுகளில் பாட்டாளிவர்க்கமாக வாழும் தமிழர்கள், ஊரில் தமக்கிருந்த பரம்பரை சொத்துக்களை எண்ணி எங்குவதைக் கண்டிருக்கிறேன். 150 வருடங்களுக்கு முன்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில் எங்கெல்ஸ் அதற்கான தத்துவார்த்த விளக்கம் கொடுத்துள்ளார்:)


கேள்வி 10: ஒரு பாட்டாளி பட்டறைத் தொழிலாளியிடம் இருந்து எவ்வாறு தன்னை வேறுபடுத்திக் கொள்கிறான்?

பதில்: பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பட்டறைத் தொழிலாளி குடும்பக் கைத்தறி போன்ற உற்பத்திக் கருவிகளை சொந்தமாக வைத்திருந்தான். அத்துடன் ஓய்வு நேரத்தில் வேலை செய்வதற்கான சிறு துண்டு விவசாய நிலமும் சொந்தமாக இருந்தது. ஒரு பாட்டாளியிடம் இது எதுவுமே கிடையாது. 

- ஒரு பட்டறைத் தொழிலாளி எப்போதும் நாட்டுப் புறத்தில் வாழ்வதுடன் தனது நிலப்பிரபு அல்லது தொழில் வழங்குனருடன் ஏறத்தாழ ஒரு தந்தை வழி சமூக உறவுகளை பேணி வருகிறான். 

- அதற்கு மாறாக ஒரு பாட்டாளி பெரும்பாலும் பெரிய நகரங்களில் வாழ்வதுடன் தனது தொழில் வழங்குனருடன் ஒரு தூய பண உறவை மட்டுமே பேணி வருகிறான். 

- பட்டறைத் தொழிலாளி பெரும் தொழிற்துறையால் அவனது தந்தை வழி உறவுகளில் இருந்து துண்டிக்கப் படுகிறான். அவன் தனது சொத்துக்களை இழந்து அதனூடாக தானாகவே ஒரு பாட்டாளியாக மாறி விடுகிறான்.*

(எனது குறிப்பு: *கடைசி வரி அப்படியே இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பொருந்துவதை அவதானிக்கலாம்.)


(அடுத்த கேள்வி பற்றிய சிறு குறிப்பு: இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல், வளர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை வசதிகள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் தோற்றம் குறித்து எங்கெல்ஸ்.)


கேள்வி 11: தொழிற்புரட்சியாலும், சமுதாயத்தை முதலாளிகள், பாட்டாளிகள் என்று பிரித்தமையாலும் ஏற்பட்ட நேரடி விளைவுகள் என்ன?


பதில்: 

1. முதலாவதாக;

- எல்லா உலக நாடுகளிலும் பழைய முறை பட்டறைத் தொழில், அல்லது கைவினைஞர்களின் தொழிற்துறை யாவும் எந்திரங்களினாலும், தொடர்ச்சியாக குறைந்து வரும் தொழிற்துறைப் பொருட்களின் விலைகளினாலும் அழித்தொழிக்கப் பட்டன. 

- இந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இருந்து முடிந்த அளவுக்கு தனிமைப் பட்டிருந்த குறை விருத்தி நாடுகளும், அவற்றின் தனிமை நிலையில் இருந்து பலவந்தமாக இழுத்தெடுக்கப் பட்டன. அவை ஆங்கிலேயரின் மலிவான பொருட்களை வாங்கியதுடன், தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்கள் அழிந்து போக இடமளித்தன. 

- ஆயிரமாயிரம் வருடங்களாக எந்த முன்னேற்றமும் கண்டிராத இந்தியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டன. சீனாவும் கூட ஒரு புரட்சியை நோக்கிச் செல்கிறது. 

- அது எந்தளவு தூரம் வந்துள்ளது என்றால், இன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு புதிய இயந்திரம், ஒரு வருடத்திற்குள் சீனாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அன்றாட உணவைப் பறிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

- இந்த வகையில் பெரும் தொழிற்துறையானது இந்தப் பூமியின் அனைத்து மக்களையும் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள வைத்துள்ளது. 

- சிறிய உள்ளூர் சந்தைகளை ஓர் உலகச் சந்தையுடன் ஒன்றாகப் பிணைத்துள்ளது. எல்லா இடங்களிலும் நடக்கும் நாகரிகம், முன்னேற்றம் எந்தளவு தூரம் வந்திருக்கிறது என்றால், வளர்ந்த நாடுகளில் நடப்பன யாவும் பிற நாடுகளிலும் நடைமுறைக்கு வர வேண்டும். 

- ஆகையினால் இங்கிலாந்து, பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் தம்மைத் தாமே விடுதலை செய்து கொண்டால், அதற்கு முந்தியோ பிந்தியோ சம காலத்திலும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள்.

2. இரண்டாவதாக;

- எல்லா இடங்களிலும், பெரும் தொழிற்துறை பட்டறைத் தொழிலுக்கு பதிலாக வந்த இடத்தில், முதலாளித்துவம் தனது செல்வத்தையும், அதிகாரத்தையும் அதி உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், தன்னை அந்த நாட்டில் முதலாவது வர்க்கமாக மாற்றிக் கொண்டுள்ளது. 

 - இதன் விளைவாக, இது எங்கெல்லாம் நடந்ததோ, அங்கெல்லாம் முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. நிலப்பிரபுக்கள், கைவினைஞர்களை பிரதிநிதித்துவப் படுத்திய எல்லாம் வல்ல முடியாட்சியையும் தூக்கி எறிந்தது. நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அழித்தொழித்த முதலாளித்துவம், அன்னியமாக்க முடியாத சொத்துக்களையும், பிரபுக்களின் முன்னுரிமைகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 

- கைவினைஞர் சங்கங்களின் சிறப்புரிமைகளை இரத்து செய்ததன் மூலம் கைவினைஞர்களின் அதிகாரத்தை இல்லாதொழித்தது. - அந்த இடத்தில் சுதந்திரமான போட்டியை கொண்டு வந்தது. அதாவது ஒவ்வொருவரும் தான் விரும்பிய தொழிற் துறைப் பிரிவை தெரிவு செய்து செயற்படும் சமூக நிலைமையை உருவாக்கியது. போதுமான நிதி மூலதனத்தை தவிர வேறெதுவும் அவரைத் தடைசெய்யாது. 

- சுதந்திரமான போட்டியை அறிமுகப் படுத்தியதன் மூலம், இன்று முதல் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அவர் வைத்திருக்கும் மூலதன அளவில் மட்டுமே சமமற்ற தன்மையில் இருப்பார்கள் என்று பிரகடனப் படுத்தியது. - மூலதனம் தான் தீர்மானகரமான சக்தி. முதலாளிகளே சமுதாயத்தில் முதலாவது வர்க்கமாகி விட்டனர். 

 - சுதந்திரமான போட்டி பெரும் தொழிற்துறைக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் அத்தகைய சமுதாய சூழ்நிலையில் மட்டுமே பெரும் தொழிற்துறை உருவாக முடியும். - முதலாளித்துவமானது நிலப்பிரபுக்களின், கைவினைஞர்களின் அதிகாரத்தை அழித்த பின்னர், அது அரசியல் அதிகாரத்தையும் அழித்தது. 

- அது தன்னை சமுதாயத்தின் முதலாவது வர்க்கமாக உயர்த்திக் கொண்டதும், அரசியல் ரீதியாகவும் தான் ஒரு முதலாவது வர்க்கம் என்று அறிவித்துக் கொண்டது. - சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றும், சுதந்திரமான போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியும், ஒரு பிரதிநிதித்துவ அமைப்பின் ஊடாக முதலாளித்துவம் இதை சாதித்துக் கொண்டது. 

- அது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சியை கொண்டு வந்தது. இந்த முறையின் கீழ் குறிப்பிட்டளவு மூலதனம் வைத்திருந்த ஒரு சிலர் மட்டுமே வாக்குரிமை பெற்றுக் கொண்டனர். அதாவது முதலாளித்துவ வாக்காளர்கள் மட்டுமே பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் அவர்கள் தமக்கு வரிச் சலுகை கொடுக்கும் ஒரு முதலாளித்துவ அரசை ஏற்றுக் கொண்டனர்.

3. மூன்றாவதாக;

 - எல்லா இடங்களிலும் அது எவ்வாறு முதலாளிகளை உருவாக்கியதோ, அதே மாதிரி பாட்டாளிகளையும் உருவாக்கியது. 

- இந்த உறவின் மூலம், முதலாளிகள் எந்தளவு பணக்காரர்கள் ஆனார்களோ, அதே மாதிரி பாட்டாளிகளும் பெருகினார்கள். ஏனென்றால் மூலதனம் மட்டுமே பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்த முடியும் என்பதாலும், உழைப்பை பயன்படுத்தும் போது தான் மூலதனம் பெருகும் என்பதாலும், மூலதனம் பெருகும் போதெல்லாம் பாட்டாளிகளும் பெருகுகின்றனர். 

- அதே நேரம், இது தொழிற்துறை இலாபகரமான முறையில் வளரக் கூடிய நகரங்களை நோக்கி முதலாளிகளையும், பாட்டாளிகளையும் ஒன்றாக நகர்த்துகிறது. இவ்வாறு பெருமளவு மக்களை ஒரே இடத்தில் குவிப்பதால், பாட்டாளிகள் தமது பலத்தை உணர்ந்து கொள்கின்றனர். 

- மேலும், அது எந்தளவு அதிகமாக விருத்தி அடைகின்றதோ, அந்தளவுக்கு புதுப்புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு குடிசைக் கைத்தொழில்கள் அழிக்கப் பட்டு விடும். ஏற்கனவே கூறிய படி, அது கூலியை குறைந்த அளவிலிருந்து கீழ் நோக்கித் தள்ளுவதால் பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமை மென்மேலும் சகிக்க முடியாததாக மாறுகிறது. 

- இவ்வாறாக, அது ஒரு பக்கம் பாட்டாளிகளின் அதிருப்தியை உருவாக்கிய போதிலும், மறுபக்கம் பாட்டாளிகளின் வல்லமையை வளர்ப்பதுடன், ஒரு சமுதாயப் புரட்சிக்கும் வழிவகுக்கிறது.


Wednesday, December 02, 2020

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1

கேள்வி 1: கம்யூனிசம் என்றால் என்ன?

பதில்: கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் பற்றிய படிப்பு.(எங்கெல்ஸ்)

விளக்கவுரை: இதை ஜேர்மன் மூல மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறேன். (ஏற்கனவே தமிழில் உள்ள நூலில் "விமோசனத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை" என்றுள்ளது.) பாட்டாளி வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் (இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 3வது கேள்வியில் உள்ளது) இன்றைய முதலாளித்துவ காலகட்டத்திலும் அடிமைப் பட்டே கிடக்கிறது. அதன் விடுதலையை நோக்கிய படிமுறைகள் பற்றிய படிப்பு கம்யூனிசம் எனப்படும். சுருக்கமாக: உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாடு.

கேள்வி 2: பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பதில்: பாட்டாளி வர்க்கம் என்பது தனது உழைப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் மட்டுமே வாழ்க்கை நடாத்தும் ஒரு சமூகப் பிரிவாகும். இலாபத்தில் இருந்தோ அல்லது வேறெந்த மூலதனத்திலும் இருந்தோ அதற்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. அதன் இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், உழைப்புக்கான கேள்வியில் தங்கியுள்ளது. எனவே அது வியாபாரத்தின் நல்ல காலம், கெட்ட காலம், கடிவாளமற்ற போட்டியின் விளைவான ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் தங்கியுள்ளது. பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகளின் வர்க்கம் என்னவென்று ஒரே சொல்லில் சொன்னால், அது 19ம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கமாகும்.(எங்கெல்ஸ்)

எனது விளக்கவுரை: 

இன்று நாம் காணும் உழைப்பாளிகளின் வர்க்கமானது 19ம் நூற்றாண்டில் உருவான தோற்றப்பாடு ஆகும். (இது தொடர்பான வசனம் தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை.) சொத்துடைமை வர்க்கமான முதலாளிகள் உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருப்பதால், பாட்டாளிகள் தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலைமை உள்ளது. தொழிற் சந்தையில் அவர்களது உழைப்புக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையானது வியாபாரத்தின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு கூடிக் குறையலாம். பாட்டாளிகளின் வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும் தொழிற் சந்தையில் தங்கியுள்ளன.

கேள்வி 3: பாட்டாளிகள் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள் அல்லவா? 

 பதில்: இல்லை. ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினர் பெரும்பாலும் ஏழைகளாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது குறிப்பிடப் பட்ட நிலைமைகளின் கீழ் முன்னொருபோதும் கட்டற்ற சுதந்திரமான போட்டி இருக்கவில்லை. அதே மாதிரி தொழிலாளர்கள், ஏழைகளான பாட்டாளிகளும் இதற்கு முன்பு வாழ்ந்திருக்கவில்லை.

எனது விளக்கவுரை: பாட்டாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்கெல்ஸ் இங்கே விளக்குகிறார். தொழிலாளர்கள், உழைப்பாளிகள் வரலாறு முழுவதும் இருந்து வந்துள்ளனர். அவர்கள் எழைகளாகவும் இருந்தனர். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் முதலாளித்துவ காலகட்டத்திற்குரிய கட்டற்ற சுதந்திரமும் போட்டியும் முன்னொருபோதும் இருக்கவில்லை. ஆகவே பாட்டாளிகளும் இருந்திருக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் சமூக அந்தஸ்து, முந்திய வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து மாறுபட்டது. இந்த விசேட தன்மை காரணமாக பாட்டாளிகள் என அழைக்கப் படுகின்றனர்.

கேள்வி 4: பாட்டாளி வர்க்கம் எவ்வாறு உருவானது?

பதில்: 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்திலும், பிற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உருவானது. நீராவி இயந்திரம், விசைத்தறி போன்ற கண்டுபிடிப்புகளின் பின்னர் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதிக விலை கொண்ட இந்த இயந்திரங்களை பெரிய முதலாளிகள் மட்டுமே வாங்க முடிந்தது. இது இதற்கு முன்பிருந்த உற்பத்தி முறையை மாற்றி அமைத்தது.இயந்திரங்கள் தொழிலாளர்களை விட மலிவாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்த படியால் பெருமளவு தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். 

இந்த இயந்திரங்கள் தொழிற்துறை முழுவதையும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டன. முன்பு தொழிலாளர்கள் சொந்தமாக தொழில் நடத்த உதவிய கருவிகள், கைத்தறிகள் பயனற்றவை ஆகின. இவ்வாறாக முதலாளிகளிடம் எல்லாம் இருந்தன. தொழிலாளர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. துணி நெய்வதில் ஆலை உற்பத்தி முறை புகுத்தப் பட்டதும். அது பின்னர் அச்சகம், மட்பாண்டத் தொழில், உலோகத் தொழில் என்று அனைத்தையும் இயந்திரமயமாக்கியது. தனித்தனியான தொழிலாளர்களுக்கு இடையில் தொழிற் பிரிவினை செய்யப் பட்டது. இதனால் முன்பு ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்த தொழிலாளி இன்று அந்தப் பொருளின் ஒரு பகுதியை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உருவானது. இந்த வேலைப் பிரிவினையானது ஒரு பொருளை விரைவாக உற்பத்தி செய்யவும், மலிவாகக் கொடுக்கவும் உதவியது.

ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பையும் மிக இலகுவான, திரும்பத் திரும்ப செய்யும் இயந்திரத்தனமான பணியாக மாற்றியது. இதை ஓர் இயந்திரம் மிகச் சிறப்பாக செய்ய முடியும். இந்த முறையில் நெசவு, நூற்பாலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீராவி இயந்திரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இவ்வாறு அனைத்தும் பெரிய முதலாளிகளின் கைகளில் வந்தன. இதனால் இங்கும் தொழிலாளர்கள் தமது எஞ்சியிருந்த சுதந்திரத்தையும் இழந்தனர். பட்டறைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாவும் ஆலைத் தொழிற்துறையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் மூலம் பெரிய முதலாளிகள் பெரிய பட்டறைகள் அமைத்து, உற்பத்தி செலவைக் குறைத்து, வேலைப் பிரிவினை செய்ய முடிந்தது. இதனால் சிறிய முதலாளிகள் அழிந்து போயினர்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் அனைத்து சிறு கைத்தொழில் உற்பத்தியும் பெரிய ஆலைத் தொழிற்துறையின் கீழ் வந்தது. இதன் மூலம் இதுவரை காலமும் இருந்த நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக சொன்னால் சிறு கைத்தொழில் முதலாளிகள் மென்மேலும் அழிக்கப் பட்டனர்.

முன்பிருந்த தொழிலாளர்களின் நிலைமை முற்றாக மாற்றமடைந்து இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின. அவை ஏனைய வர்க்கங்களை உள்வாங்கின. அவையாவன:

1. பெரிய முதலாளிகளின் வர்க்கம். எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் அனைத்து வாழ்வாதாரங்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் கருவிகளையும் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இந்த வர்க்கமானது மேட்டுக்குடியினர் வர்க்கம் அல்லது பூர்ஷுவா என்றும் அழைக்கப் படுகிறது.

2. எந்த சொத்தையும் வைத்திராத, அத்தியாவசிய வாழ்வதாரங்களை பெற்றுக் கொள்வதற்காக, முதலாளிகளுக்கு தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள். இந்த வர்க்கமானது பாட்டாளிகளின் வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் என அழைக்கப் படுகின்றது.

கேள்வி 5: எந்த நிபந்தனைகளின் கீழ் முதலாளிகளுக்கான பாட்டாளிகளின் உழைப்பு விற்பனை இடம்பெறுகிறது?

பதில்: உழைப்பும் ஒரு பண்டம் தான். ஏனைய பண்டங்களின் விலை எந்த விதிகளின் படி தீர்மானிக்கப் படுகிறதோ, சரியாக அதே மாதிரித் தான் உழைப்பின் விலையும் தீர்மானிக்கப் படுகிறது. பெரிய தொழிற்துறை அல்லது சுதந்திரமான போட்டி என்பனவற்றின் மேலாதிக்கத்தின் கீழ், ஒரு பண்டத்தின் விலை சராசரியாக அதன் உற்பத்தி செலவுக்கு சமமாக இருக்கும். அதாவது உழைப்பின் உற்பத்தி செலவுக்கு சமமாகத் தான் அந்த உழைப்பின் விலையும் இருக்கும்.

உழைப்பின் உற்பத்தி செலவானது, அந்தத் தொழிலாளி உழைப்பதற்கு தேவையான உணவாதாரங்களை பெற்றுக் கொள்ளும் அளவிற்கும், தொழிலாளர் வர்க்கம் அழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவிலும் தான் இருக்கும். அதாவது இந்த நோக்கத்தை நிறைவேற்ற தேவையான அளவை விட அதிகமாக ஒரு தொழிலாளியின் உழைப்புக்கு கிடைக்க மாட்டாது. ஆகவே உழைப்பின் விலை அல்லது கூலி என்பது, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கான மிகக் குறைந்த அளவு தொகையாகவே இருக்கும்.

வியாபாரம் சில நேரம் நன்றாகவும், சில நேரம் மோசமாகவும் நடக்கலாம். அப்படியான நிலையில் தொழிலதிபர் தனது பண்டத்திற்கு சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைவாகவும் பெறுவதைப் போன்று தான், தொழிலாளிக்கும் அதிகமாகவும் குறைவாகவும் கிடைக்கும். ஆனால் ஆலை முதலாளியின் பண்டத்திற்கு கூடவும் இல்லாமல், குறையவும் இல்லாமல் சராசரியாக கிடைத்து வந்தால், தொழிலாளிக்கும் அவரது அடிப்படை கூலிக்கு கூடாமல் குறையாமல் சராசரி தான் கிடைக்கும். பெருந் தொழிற்துறை அனைத்து தொழில்களையும் ஆதிக்கம் செலுத்தும் போது, கூலி தொடர்பான பொருளாதார விதியும் கடுமையாக அமுல்படுத்தப் படும்.(பிற்குறிப்பு: ஏற்கனவே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பை ஜேர்மன் மொழி மூல நூலுடன் ஒப்பிட்டு இந்த விளக்கவுரையை எழுதி உள்ளேன். புரிதலுக்காக சில இடங்களில் எளிமைப் படுத்தி இருக்கிறேன்.)

Thursday, November 26, 2020

மாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்!

 

கம்யூனிசம் என்பது கார்ல் மார்க்சின் கண்டுபிடிப்பு அல்ல. உலகம் முழுவதும் முன்னொரு காலத்தில் இருந்த, ஆதிகால கம்யூனிச சமுதாயங்கள் குறித்து ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அவை சிலநேரம் ஏதாவதொரு மதம் சார்ந்தும் இருந்திருக்கலாம்.

 பொதுவாக உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் எதோ ஒரு கட்டத்தில் வர்க்கப் பிரிவினைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கு மாறாக, வர்க்க பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை போதித்த ஒரு மதம் வரலாற்றில் இருந்துள்ளது. ஈரானில் தோன்றிய மாஸ்டாயிசம் என்ற கம்யூனிச மதம் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். ஆதி கால கிறிஸ்தவர்கள் ஒரு கம்யூனிச சமுதாயத்தில் வாழ்ந்தனர். இருப்பினும் கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதும், அது அரச மதமாகியது. அதனால் கிறிஸ்தவம் போதித்த சமத்துவ கொள்கைகள் கைவிடப் பட்டு, கிறிஸ்தவ மதமும் ஒரு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாக மாறியது. 

பண்டைய ஈரானில் நிலவிய சொராஸ்டிரிய மதத்தின் பல தத்துவங்கள் இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஈரானிய சாம்ராஜ்யத்தின் அரச மதமாகவும் சொராஸ்டர் மதம் இருந்து வந்தது.


ஈரானில் இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்புகள் நடக்கும் வரையில், அங்கு சசானிய அரச வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களும் சொராஸ்திரிய மதத்தை தான் பின்பற்றி வந்தனர். கி.பி. 473 முதல் 531 வரை ஈரானை ஆண்ட சசானிய பரம்பரையை சேர்ந்த காவாத் மன்னனின் காலத்தில் ஒரு புதிய கம்யூனிச மதம் தோன்றியது. அதை தோற்றுவித்த மாஸ்டாக் என்ற மதகுருவின் பெயரால் அது மாஸ்டாகிசம் என்று அழைக்கப் பட்டது. 


உண்மையில் மாஸ்டாக் கூட ஒரு சொராஸ்திரி மதகுரு தான். அவரது போதனைகள் வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன. "ஆதி கால கம்யூனிசம்" என்று சொல்லத்தக்க பொதுவுடைமைக் கோட்பாடுகளை மதக் கருத்துக்களாக போதித்து வந்தார். அவரது போதனைகளால் பெருமளவு மக்கள் கவரப் பட்டனர். 


மாஸ்டாக் போதனைகளின் படி, கடவுள் இந்தப் பூமியை அனைத்து மனிதர்களுக்கும் படைத்துள்ளார். பூமியில் உள்ள செல்வங்களை அனைவரும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். இருப்பினும் வலிமை படைத்த தீயவர்கள், வலிமை குறைந்த நல்லவர்களை அடக்கி ஒடுக்கி அனைத்து செல்வங்களையும் தாமே அனுபவிக்கத் தொடங்கினார்கள். இதனை மாஸ்டாக் இருமைவாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். 

இத்தகைய இருமைக் கோட்பாடு (Dualism) இன்றும் பல மதங்களில் உள்ளது. உதாரணத்திற்கு கிறிஸ்தவ மதத்தில் அது ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையிலான போராட்டம் என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய மதத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போராட்டம், அதாவது ஜிகாத் என்று இன்னொரு விதமாக விரிவான விளக்கம் கொடுக்கிறது. 


இருமைக் கோட்பாடு, ஏற்கனவே ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு மாஸ்டாக் சோஷலிச விளக்கம் கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. உலகில் தீமைகள் நடப்பதற்கான ஐந்து காரணிகள் என்று மாஸ்டாக் குறிப்பிடுவதும் சோஷலிச கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. அவர்கள் அதை நல்லதுக்கும் கெட்டதுக்கும், அல்லது வெளிச்சத்திற்கும் இருட்டுக்கும் இடையிலான போராட்டம் என்பார்கள். 


மாஸ்டாக் முக்கியமாக ஒரு வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை போதித்தார். அனைவருக்கும் சமமான உரிமைகள், மற்றும் சமமான நீதி வழங்கப் பட வேண்டும் என்றார். மேலும் சொத்துக்கள் அனைவருக்கும் பொதுவாக்கப் பட வேண்டும், தனியுடைமை ஒழிக்கப் பட வேண்டும் என்பது பிரதானமான போதனையாக இருந்தது. கடவுள் வளங்களை அனைவருக்கும் சமமமாக பங்கிட்டுக் கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கைத் தவிர மேலதிகமாக எடுத்துக் கொள்ள ஆசைப் படக் கூடாது. இருப்பினும் பலமுள்ளவர்கள், பலவீனமானவர்களிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுத்து தமக்கென சொந்தமாக்கி உள்ளனர். பணக்காரர்கள் தமது பங்கிற்கு மேற்பட்ட செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 


இந்த இடத்தில் பெண்கள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போதனையை காண முடிகிறது. மாஸ்டாக்கிய மதத்தில் சுதந்திரமான காதல் திருமணங்கள் அனுமதிக்கப் பட்டிருந்தன. அத்துடன் பலதார மண முறை கடுமையாக எதிர்க்கப் பட்டது. அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் பலதார மணம் சர்வசாதாரணமான விடயமாக இருந்தது. ஈரானும் அதற்கு விதிவிலக்கல்ல. மாஸ்டாக் அதையும் ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதாவது செல்வந்தர்கள் மட்டுமே பல பெண்களை மணம் முடிக்கிறார்கள். அன்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பெண்களும் சொத்துக்களாக கருதப் பட்டனர். ஒரு வர்க்க ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயத்தில் பணக்காரர்கள் பெண்களையும் தமக்குள் பகிர்ந்து கொள்வதால், ஏழைகள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையை போதித்தது. இஸ்லாம் நான்கு மனைவியர் மட்டுமே என்று சட்டம் போட்டு கட்டுப் படுத்தியது. ஆனால் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ பலதார மணத்தை வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறி விட்டன. 


சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு ஐந்து பிசாசுகள் காரணம் என்பது ஒரு மாஸ்டாக் போதனை. பொறாமை, கெட்ட எண்ணம், பழிவாங்கும் உணர்வு, தேவை, பேராசை ஆகிய ஐந்து பிசாசுகள் மனிதனை தீய வழியில் கொண்டு செல்கின்றன. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சமூகப் புரட்சி (சோஷலிசப் புரட்சி) அவசியம். அந்த வகையில் கார்ல் மார்க்ஸ் போன்ற சோஷலிச அறிஞர்கள் உலகில் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாஸ்டாக் ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அன்று பல இலட்சக் கணக்கான ஈரானியர்கள் மாஸ்டாக்கின் சமத்துவ கொள்கைகளால் கவரப் பட்டு புதிய மதத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தமது சொத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு கம்யூனிச சமுதாயமாக வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மன்னன் காவாத் புதிய மதத்தை தழுவிக் கொள்ளும் அளவிற்கு பெரும்பான்மை மக்கள் மாஸ்டாகிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


இருப்பினும் அந்நாட்டில் பிற மதங்களை, குறிப்பாக அரச மதமான சொராஸ்திரிய மதத்தை பின்பற்றுவோரும் வாழ்ந்தனர். குறிப்பாக மேட்டுக்குடியினர் தனியுடைமையை ஏற்றுக் கொண்ட சொராஸ்திரிய மதத்திற்கு விசுவாசமாக இருந்தனர். இந்த சொத்துடைமை வர்க்கத்தினர், சொராஸ்திரிய மதகுருக்களுடன் சேர்ந்து புதிய கம்யூனிச மதத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தனர். அவர்களுடன் முடிக்குரிய இளவரசன் கொஸ்ரோவ் அனுஷீர்வனும் சேர்ந்து கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனையில் நடக்கவிருக்கும் விருந்துக்கு வருமாறு மாஸ்டாக் மதகுருக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அது தமக்கு வைக்கப் பட்ட பொறி என்பதை அறியாமல் சென்ற மாஸ்டாக் மதகுருக்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர்.
 

அந்த சம்பவத்திற்கு பின்னர், நாடு முழுவதும் மாஸ்டாக் மத நம்பிக்கையாளர்கள் வேட்டையாடப் பட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். பலர் உயிரோடு புதைக்கப் பட்டனர். முன்பு மாஸ்டாக்கிய மதத்தை தழுவியிருந்த மன்னன் காவாத், அன்று நடந்த சதிப்புரட்சி காரணமாக வெளியேற்றப் பட்டான். மூன்று வருடங்களுக்கு பின்னர் திரும்பி வந்த மன்னன் மாஸ்டாக் மதத்தை கைவிட்டு விட்டு, மறுபடியும் சொராஸ்திரிய மதத்தை பின்பற்றினான். அத்துடன் அவனே மாஸ்டாக் இனப்படுகொலையை முன்னின்று நடத்தினான். 


மாஸ்டாக் மதம் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து நூல்களும் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டு விட்டன. அதனால் இன்று வரை மாஸ்டாக் மதம் பற்றிய முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியாது. உண்மையில் மாஸ்டாக் மதத்தின் எதிரிகள் எதிர்மறையாக எழுதி வைத்த தகவல்களில் இருந்தே, அது சம்பந்தமான விபரங்களை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு, மாஸ்டாக்கிய அழித்தொழிப்புக்கு பிறகு அந்நாட்டில் மீண்டும் தனியுடைமை வைத்திருக்கும் உரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. 


இருப்பினும் மாஸ்டாகிய மதம் முற்றாக அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஈரான் இஸ்லாமியமயமாகிய பின்னரும் அவர்கள் பல்வேறு பெயர்களில் சிறு குழுக்களாக மாஸ்டாக் மதத்தை பின்பற்றினார்கள். மசாக்கியே, கொராமியே, கொராம் டினியே, சொர்க் ஜமேகான், செபித் ஜமேகன் என்று பல பெயர்களில் அழைக்கப் பட்டனர். காலப்போக்கில் அவர்களும் இஸ்லாமியராக மாறி விட்டாலும், சமத்துவ கொள்கைகளை கைவிடவில்லை. ஷியா- இஸ்லாத்தில் சில பிரிவுகள் சமத்துவ சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளன. அத்துடன், இன்றைக்கும் ஈரானில் ஏராளமான தீவிர மார்க்சிய- லெனினிசவாதிகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இது ஒரு வகையில் மாஸ்டாக் கம்யூனிசத்தின் பாரம்பரியமாகவும் கருதலாம். 


இன்றும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் அரேபியர்கள் மத்தியில் சோஷலிச அல்லது கம்யூனிச கொள்கைகளை பின்பற்றுவோரை "மாஸ்டாக் பெர்சியர்கள்" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது குறித்து எல்லோருக்கும் தெரியாது என்றாலும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பிரச்சாரங்ககளில் அவ்வாறு குறிப்பிடப் படுவதுண்டு. 

 

- கலையரசன்

25-11-2020

 

இதே கட்டுரை யூடியூப் காணொளியாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Tuesday, November 24, 2020

கம்யூனிச சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த புரட்சிக் கதை!

முன்னொரு காலத்தில் வைகையாறு பெருக்கெடுத்து ஓடியதால் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அதுவரை காலமும் குடிமக்களின் துன்பங்களை கண்டுகொள்ளாத கொடுங்கோலனான மன்னன் அரிமர்த்தனபாண்டியன் தனது அரண்மனைக்கே ஆபத்து என்றவுடன் அதை முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பேரழிவாக கருதினான்.  ஏற்கெனவே வெள்ளம் பல கிராமங்ளை அழித்து பல இலட்சம் மக்கள் பலியானார்கள்.

வெள்ளம் மன்னரின் மாளிகைக்கு வருமுன் தடுப்பதற்காக, அரிமர்த்தன பாண்டியன் வைகை நதிக்கரைகளில் மண் அணை கட்ட உத்தரவிட்டான். அதற்காக பாண்டிய நாட்டின் அத்தனை குடி மக்களையும் கட்டாய வேலை வாங்கினான். நோயாளிகள், முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோருக்கும் கரையை செப்பனிட்டு மண் அணை கட்டுவதற்காக ஆளுக்கொரு பகுதி ஒதுக்கப் பட்டது. 


வறுமை காரணமாக பிட்டு விற்று பிழைத்து வந்த வந்தியம்மை என்ற மூதாட்டிக்கும் வைகை நதிக்கரையில் மண் அணை கட்டும் வேலை கொடுக்கப் பட்டது. எழுபது வயதை தாண்டிய போதிலும், நோயுற்ற நிலையிலும், தளராமல் பிட்டு செய்து விற்று அந்தக் காசில் வாழ்ந்து வந்தாள். மன்னனின் காவலர்கள் அவளது முதுமையை மதிக்காமல், நோயாளி என்றும் பாராமல், இரக்கமில்லாமல் கடின வேலை வாங்கினார்கள். 

அந்த ஊரில் சிவபெருமான் என்ற ஒரு கம்யூனிச புரட்சியாளர் இருந்தார். அவர் வந்தியம்மை பாட்டியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டு நட்புடன் பழகி வந்தார். தனது அன்புக்குரிய பாட்டியும் கட்டாய வேலை வாங்கப் படுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சிவபெருமான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னனின் பாசிச கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினான். 


மண் அணை கட்டும் இடத்திற்கு வந்த புரட்சிக்காரன் சிவபெருமான், வந்தியம்மை பாட்டியை வேலை செய்ய வேண்டாம் என்றும், அவரை ஓய்வெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது அணை கட்டும் வேலையை தான் செய்து தருவதாக கூறினார். வந்தியம்மை அதைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள். 

ஏற்கனவே உற்றார், உறவினர்களால் கைவிடப் பட்டிருந்த வந்தியம்மை பாட்டி, சிவபெருமானின் பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவள். அறுபது வயதைக் கடந்த முதியவர்களை வீட்டில் வைத்திருந்து ஓய்வூதியம் கொடுத்து பராமரிக்க வேண்டிய மன்னராட்சி, அவர்களை சாகும் வரை வேலை வாங்கும் கொடுமையை வெறுத்தாள். அத்துடன் மன்னரின் அரண்மனைக்கு ஆபத்து வந்தவுடன் அனைத்து மக்களையும் ஊதியம் கொடுக்காமல் அடிமை வேலை வாங்கும் கொடுமை ஒழிய வேண்டும் என விரும்பினாள். பாண்டிய நாட்டில் ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியை உண்டாக்கி, மன்னராட்சியை கவிழ்க்க நினைத்த சிவபெருமானின் திட்டத்திற்கு உடன்பட்டாள்.


கூலித் தொழிலாளியாக மண் அணை கட்டுமிடத்திற்கு சென்ற சிவபெருமான், அங்கு வேலை செய்யாது பிற தொழிலாளர்களுடன் பேச்சுக் கொடுத்து, கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக போராட வருமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். அத்துடன், காவலர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, கொஞ்ச நேரம் வேலை செய்வதாக போக்கு காட்டி விட்டு, பின்னர் ஒரு மர நிழலில் படுத்துறங்குவது போன்று பாசாங்கு செய்தான். பிற தொழிலாளர்களும் சிவபெருமான் செய்தது போன்ற அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதாவது வேலையை குறைத்துக் கொள்வது, சோம்பேறித்தனமாக இருப்பது என்பது அதிகார வர்க்கத்தினரால் ஒரு நாசகார செயலாக கருதப் படும்.

அடிக்கடி காவலர்கள் அங்கு வந்து  எச்சரித்து விட்டு சென்றனர். எல்லோரும் தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் கடுமையாக செய்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி இவன் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் படுத்திருக்கிறான் என்று எரிச்சலுற்றனர். அங்கு நடக்கும் "நாசகார செயல்கள்" பற்றிய விடயத்தை மன்னனிடம் அறிவித்தனர். 


அரசனின் ஆணையை மதிக்காத, வேலை செய்யாமல் படுத்திருக்கும் சோம்பேறிக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்று பாண்டிய மன்னன் கருவிக் கொண்டான். வீரர்களுடன் அந்த இடத்திற்கு வந்த மன்னன் படுத்திருந்த சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடித்து எழுப்பினான். வேலை செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக காவலர்கள் சிவபெருமானை கசையால் அடித்து துன்புறுத்தினார்கள். 


பாண்டிய மன்னனின் அடக்குமுறைக்கு அஞ்சாத புரட்சியாளர் சிவபெருமான், அங்கிருந்த தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறு அறைகூவல் விடுத்தான். முதியவர்கள், நோயாளிகள் என்றும் பாராது, அனைவரையும் கட்டாய வேலை வாங்கும் பாண்டிய மன்னனின் கொடுமைக்கு எதிராக, பாட்டாளி மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று உரையாற்றினான். சிவபெருமானின் எழுச்சி உரை கேட்டு அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தனர். மன்னனின் ஏவல் படையான காவலர்களை தாக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்தெடுத்தனர். மன்னனனையும் விட்டு வைக்கவில்லை. அவனுக்கும் அடி விழுந்தது. அங்கு ஒரு மக்கள் புரட்சியை எதிர்பார்த்திராத பாண்டிய மன்னன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நாட்டை விட்டே ஓடினான். 


பாண்டிய நாட்டு பாட்டாளி மக்கள் மதுரை நகரத்தின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆவணி மாதம் நடைபெற்ற மதுரைப் புரட்சி பற்றிய கதை, உழைக்கும் மக்கள் மத்தியில் செவி வழிக் கதையாக கடத்தப் பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக, பிற்காலத்தில் வந்த மதவாதிகள் அதை ஒரு மதம் சம்பந்தப் பட்ட புராணக் கதையாக மாற்றி விட்டனர். அன்றைய புரட்சியாளரின் உண்மையான பெயரை மறைத்து, கடவுளான சிவபெருமானே கூலியாளாக வந்ததாக கதையை திரித்து எழுதினார்கள். அத்துடன் மதுரை வரலாற்றில் முதல் தடவையாக மன்னராட்சி கவிழ்க்கப் பட்ட சம்பவத்தை மறைப்பதற்காக, இறுதியில் பாண்டிய மன்னனே மனம் திருந்தி சிவபெருமானின் திருவிளையாடலை கண்டுகொண்டதாக பொய்யான தகவல்களும் சேர்க்கப் பட்டன.

Saturday, November 21, 2020

பாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான வரலாறு

இன்று தமிழர்களால் "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும், பாரிஸ் வடக்கை சேர்ந்த லா ஷாப்பல் பகுதி முன்னொரு காலத்தில் "பாரிஸ் மெதீனா" என்று அழைக்கப் பட்டது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அது அல்ஜீரிய- அரேபியர்களின் கோட்டையாக கருதப் பட்டது. அந்தப் பகுதிகளில் பெருமளவு அல்ஜீரிய குடியேறிகள் வசித்தனர். 

அடித்தட்டு மக்களின் வாழிடமான பாரிஸ் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களுக்கும் குறைவில்லை. பிரெஞ்சுப் பொலிஸ் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லை. ஐரோப்பியர்கள் அங்கு செல்ல அஞ்சினார்கள். குறிப்பாக rue de la Charbonniere, rue de la Chartres, rue Myrha ஆகிய தெருக்களும், Berbes மெட்ரோ ரயில் நிலையத்தை அண்டிய பகுதிகளும் மிகவும் ஆபத்தானவை. 

ஐம்பதுகளில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பாரிஸ் நகரில் வாழ்ந்த புலம்பெயர்ந்த அல்ஜீரியர்களும் பெருமளவில் ஆதரித்தனர். அதனால் அல்ஜீரிய விடுதலை இயக்கங்கள் அவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. அவர்களது கைகளில் ஆயுதங்களும் இருந்தன. உண்மையில் அன்று இதையெல்லாம் பிரெஞ்சு அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு சக்தி, அதாவது சோவியத் யூனியன் உதவி இல்லாமல் அல்ஜீரிய விடுதலைப் போர் நடக்க சாத்தியம் இல்லை என்று தப்புக்கணக்கு போட்டது. 

1957 ம் ஆண்டளவில், லா சாப்பல் பகுதியை அண்டிய பிரதேசம், அல்ஜீரியா ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பட்டப் பகலில் கூட சில அல்ஜீரிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதைக் காணலாம். அடிக்கடி போட்டிக் குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சமர் நடக்கும். "அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும்" என்று பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்ளாமல் விடும். 

இந்த ஆயுத மோதல்களுக்கு காரணமானவர்கள், அல்ஜீரிய விடுதலைக்கு போராடிய தேசியவாத இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள். குறிப்பாக FLN, MTLD, PPA ஆகிய இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி. இறுதியில் FLN மட்டும் "அல்ஜீரியர்களின் ஏக பிரதிநிதியாக" வெற்றி வாகை சூடிக் கொண்டது. ஏனைய இயக்கங்கள் காலப்போக்கில் அழிந்து போயின. 

சுருக்கமாக, தமிழர்களுக்கு LTTE மாதிரி, அல்ஜீரியர்களுக்கு FLN இருந்தது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இயங்கிய LTTE, PLOTE ஆகிய தேசியவாத இயக்க இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உதாரணத்திற்கு சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் சுடு பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இந்த புலி - புளொட் மோதல் மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்களிலும் இடம்பெற்றது. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கும் தானே? அரேபிய இயக்கங்கள் மோதிக் கொள்ளலாம் என்றால், தமிழ் இயக்கங்கள் அவற்றிற்கு குறைந்தனவா? அரபு அண்ணன் எப்படியோ, தமிழ் தம்பியும் அப்படியே இருப்பதில் ஆச்சரியம் என்ன? 

அத்தகைய வன்முறை வரலாற்றைக் கொண்ட லா சாப்பல் அல்லது பாரிஸ் மெதினா, இன்று குட்டி யாழ்ப்பாணமாக காட்சியளிக்கிறது. இப்போதும் அது குழு மோதல்களுக்கு பெயர் போன இடம். அதற்குக் காரணம் ஒரு சில தமிழ் ஆயுதபாணிக் குழுக்கள். அதாவது Gang என்று சொல்லப் படும் கிரிமினல் குழுக்கள், போட்டிக் குழு உறுப்பினர்களை தெருவில் கண்டால் துப்பாக்கியால் சுடுபட்டுக் கொள்வார்கள். சில நேரம் இந்த சண்டைக்குள் அகப்படும் தமிழ்ப் பொது மக்களும் காயமடைவதுண்டு. 

என்ன நடந்தாலும், பொலிஸ் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்காது. இப்போதும் அங்கே ஒரு கொலை நடந்தால் கூட, பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும் என்று விட்டு விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புலிகள் இயக்க முக்கியஸ்தர், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். (போர் முடிந்த பின்னரான நிதி அபகரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.) ஆனால், இன்று வரையில் பொலிஸ் அது குறித்த விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. 

பிரெஞ்சுப் போலிஸை பொருத்தவரையில் பாரிஸ் நகரில் சுடுபட்டு சாவது அல்ஜீரியர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான். பிரான்சில் அரேபியரும், தமிழரும் "விரும்பத் தகாத வெளிநாட்டு குடியேறிகள்" தான். எது எப்படி இருப்பினும், முன்பிருந்த அல்ஜீரிய- அரேபியரின் வன்முறை மரபு, இன்று ஈழத் தமிழர்களால் சற்றும் குறையேதும் இல்லாது பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. 

அல்ஜீரிய- தமிழர் சகோதரத்துவம் நீடூழி வாழ்க!

Friday, November 20, 2020

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமிய சம்பிரதாயம்!

 

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரும் சடங்கு, ஷியா- இஸ்லாமிய மத பாரம்பரியத்தில் இருந்து வந்தது! சிலர் தவறாக சித்தரிப்பது மாதிரி, மாவீரர் நாளுக்கும் சைவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! 

அதற்கான விளக்கத்தை சுருக்கமாக ஆதாரங்களுடன் தருகிறேன்:

1.
 புலிகளின் மாவீரர் வாரம் என்பது போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதுடன், அவர்களது தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையும் உள்ளடக்கியது. அதே மாதிரி ஷியா முஸ்லீம்கள் மாவீரர் மாதம் என்று நினைவுகூர்வார்கள். அது சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர்(10 அக்டோபர் 680) ஈராக்கில் நடந்த போரில் மரணமடைந்த ஹுசைன் தலைமையை பின்பற்றிய போராளிகளை நினைவுகூரும் சடங்கு ஆகும். ஷியாக்களை பொறுத்த வரையில் அது ஒரு விடுதலைப் போர். அந்த மாவீரர் மாதம் ஷியாக்களின் தலைவர் ஹுசைனின் பிறந்தநாளை உள்ளடக்கியது. மாவீரர் மாதத்தின் இறுதி நாள் அஷுரா என்று அழைக்கப் படுகிறது. அஷுரா அன்று, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஷியா முஸ்லீம்களும், ஹுசைனின் விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்வார்கள். (இந்த விடயத்தில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் வித்தியாசம் உள்ளது. சன்னி முஸ்லிம்களை பொறுத்தவரையில், இது மோசேஸ் தனது மக்களை இஸ்ரேல் என்ற வாக்களிக்கப் பட்ட பூமிக்கு அழைத்துச் சென்ற நாள்.)


2.
 புலிகளைப் பொறுத்தவரையில் மாவீரர் வாரத்தின் இறுதியில் வரும் நவம்பர் 27 ஒரு விசேட தினம். அதே மாதிரி ஷியாக்களுக்கு முஹரம் மாதத்தின் பத்தாவது நாளான அஷூரா ஒரு விசேட தினம். முஹரம் மாதம் அனைத்து இஸ்லாமியருக்கும் புனிதமானது. முஹரம் என்ற சொல் ஹராம் என்ற அரபிச் சொல்லில் இருந்து வந்த படியால், அந்த புனித மாதத்தில் பல விடயங்கள் தடுக்கப் பட்டுள்ளன. புலி ஆதரவாளர்களும் இன்று வரை அதே சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

3.
இந்து/சைவ மத சம்பிரதாயத்திற்கு முரணாக புலிகள் தமது இறந்த போராளிகளை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றினார்கள். அந்த இடம் "மாவீரர் துயிலும் இல்லம்" என அழைக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் மாவீரர் துயிலும் இல்லம் புலிக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள் உணர்வு பொங்க நினைவுகூர்வார்கள். இந்த வழக்கம் ஈரான் அல்லது லெபனானில் இருந்து வந்திருக்க வேண்டும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் ஈராக்குடன் போர் நடந்தது. அப்போது போரில் கொல்லப் பட்ட வீரர்கள் தனியாக ஓரிடத்தில் புதைக்கப் பட்டனர். அது பார்சி மொழியில் "மாவீரர் துயிலும் இல்லம்" என்றே அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் அந்த நடைமுறையை பின்பற்றியது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் லெபனானுக்கு சென்று பார்க்கலாம். முன்பு புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் என்னென்ன சடங்குகள் நடந்தனவோ அதெல்லாம் ஹிஸ்புல்லாவின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பதை நேரில் காணலாம். மாவீரர்களின் உருவப் படங்கள் கட் அவுட்களாக பொது இடங்களில் வைக்கும் வழக்கமும் பொதுவானது.

4.
புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் அதன் முக்கிய உறுப்பினர்கள் லெபனானில் பயிற்சி பெற்றனர். ஆகவே புலிகளுக்கு லெபனான் பற்றியோ, ஷியா முஸ்லிம்களின் சடங்கு பற்றியோ எதுவும் தெரியாது என்று வாதிட முடியாது. இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப் படவும் தேவையில்லை. உலகில் ஒருவர் இன்னொருவரை பார்த்து பின்பற்றுவது வழமையானது. 

5.
மாவீரர்களை புனிதர்களாக வழிபடும் நடைமுறை கிறிஸ்தவ மதத்திலும் உள்ளது. (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஒரே பாரம்பரியத்தை பின்பற்றும் சகோதர மதங்கள்.) இன்றைக்கும் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் புனித பிரான்சிஸ், புனித மார்ட்டின், புனித நிக்கொலாஸ் ஆகிய தினங்களை பின்பற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக, ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக தம்முயுரை அர்ப்பணித்த புனிதர்கள். கிறிஸ்தவ மத வரலாற்றில் இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாவீரர்கள் இருந்துள்ளனர். அவர்களது நினைவாக, நவம்பர் 1 அன்று, "அனைத்து புனிதர்களின் தினம்" நினைவுகூரப் படுகிறது.

Saturday, November 14, 2020

தீபாவளி - ஒரு சொல்லப் படாத வரலாற்றுக் கதை!

 

3000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிந்திய அசாம் மாநிலம் தனியான ராஜ்ஜியமாக  அசுரர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்டது. அனேகமாக அந்நாட்டு மக்களும் அரச வம்சத்தின் பெயரால் அசுரர்கள் என அழைக்கப் படலாயினர். உண்மையில் அவர்கள் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருக்கும் மொங்கோலொயிட் இன மக்கள். சில நேரம் அவர்கள் ஆதிக்க சமூகமாக இருந்திருக்கலாம். அவர்களது ஆட்சியின் கீழ்  கறுப்பின- திராவிட மக்கள் பழங்குடி இனத்தவராக இருந்திருக்கலாம். அனேகமாக நரகாசுரன் அந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். 

இந்த அசுர அரச பரம்பரையில் குறிப்பிடத் தக்க மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு:

ஹதகாசுரன், சம்பராசுரன், ரத்னாசுரன், கதகாசுரன். கி.மு. 14ம் நூற்றாண்டு அளவில் நடந்த போரில் கதகாசுரனை கொன்று  நரகாசுரன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவனது பெயரால் நரக அரச பரம்பரை உருவான போதிலும், அது பிற்காலத்தில் தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. 

யார் இந்த தேவர்கள்?

தோற்றத்தில் ஐரோப்பியர் போன்றிருக்கும் இந்தோ- ஆரிய இன மக்கள். எல்லா ஆரியரும் வெள்ளை தோல் கொண்டவர்கள் அல்ல. உள்நாட்டு இந்திய பூர்வ குடிகளுடன் ஒன்று கலந்த கலப்பினமாகவும் இருந்தனர். அதனால் தான் ஆரியமயப் பட்ட கருமை நிற கிருஷ்ணன் ஒரு மன்னனாக வர முடிந்தது. 

அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிறம், இனம், மொழி ஓர் அடையாளமாக இருக்கவில்லை. ஆட்சியாளர்களிடமும் அப்படி ஓர் உணர்வு இருக்கவில்லை. 

ஆகவே கிருஷ்ணன்- நரகாசுரன் போர் இன/மொழி அடிப்படையில் நடந்த போர் அல்ல. இருப்பினும், அந்தக் காலத்து மக்கள், தம்மை நாகரீக அடிப்படையில் வேறு படுத்தி பார்த்தார்கள். தேவர்கள் என்றால் நாகரிகத்தில் சிறந்தவர்கள். அசுரர்கள் என்றால் நாகரிகமடையாத காட்டுவாசிகள் என்ற எண்ணம் பொதுப் புத்தியில் இருந்தது. அந்த வகையில், கிழக்கிந்திய பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய நரகாசுரன், தேவர்களின் எதிரியாக மட்டுமல்லாமல் தீமையின் வடிவமாகவும் கருதப்பட்டான். 

அநேகமாக இந்த நரகாசுரன் ஒடுக்கப் பட்ட  பழங்குடி இனத்தை சேர்ந்த புரட்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவனால் தான் அசுரர்கள் என பெயர் சூட்டிக் கொண்ட 'டனவா' அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. அந்த வம்சத்தில் கடைசியாக வந்த கதகாசுரனை போரில் கொன்ற நரகன், மன்னனாக முடி சூட்டிக் கொண்டதும் தனது பெயரை நரகாசுரன் என்று மாற்றிக் கொண்டான். இருப்பினும் அவன் உருவாக்கிய அரச பரம்பரை நரகர் வம்சம் என்றே அழைக்கப் படலாயிற்று. 

கிருஷ்ணன் - நரகாசுரன் போருக்கு காரணமாக நாகரிக முரண்பாடு மட்டுமல்லாது, மத முரண்பாடும் இருந்திருக்கலாம். கிருஷ்ணனும், அவனது நாட்டு மக்களும் விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள். அதற்கு மாறாக நரகாசுரனும் அவனது நாட்டவரும் தாந்திரிக சைவர்கள். அவர்கள் சிவனை வழிபட்டாலும், மந்திரம், மாயம், சூனியம் போன்ற நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இதுவும் தேவர்கள் கண்களுக்கு காட்டுமிராண்டித்தனமாக தெரிந்திருக்கலாம். 

அன்று நடந்த போரில் நரகாசுரன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டான். அதற்குப் பிறகு அவனது நாடு தேவர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. நரக வம்சத்தில் வந்தவர்கள் கிருஷ்ணனின் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர்.  இருப்பினும் நரகாசுரன் மரணத்துடன் இந்திய பழங்குடியின மக்களின் கடைசி ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து விட்டது. அதற்குப் பிறகு தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு  சவாலான நாடு எதுவும் இருக்கவில்லை. பிற்காலத்தில் தேவர்கள் தமக்குள் பிளவு பட்டு மோதிக் கொண்டனர். அது தான் மகாபாரதப் போர். 

இந்திய பூர்வ குடியின மக்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வந்த, பழங்குடியின மன்னன் நரகாசுரன் தோற்கடிக்கப் பட்ட நாள், இப்றைக்கும் தீபாவளி என்ற பெயரில் ஒரு வெற்றித் திருநாளாக கொண்டாடப் பட்டு வருகின்றது.