Saturday, January 31, 2015

மைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுங்களேன்!


இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, பல அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலர் இதனை "பொருட்களின் விலைகுறைப்பு" (விற்பனை விலை) என்று தான் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இவ்வளவு காலமும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும், அரசு அறவிட்டு வந்த வரிகள் தான் குறைக்கப் பட்டுள்ளன!

இதனால், இந்த வருடம் அரசுக்கு வர வேண்டிய, 92.4 பில்லியன் வருமானம் இழக்கப் படும். அதன் காரணமாக, பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையை ஈடுகட்டுவதற்காக, வேறொரு இடத்தில் இருந்து வருமானத்தை எடுக்க வேண்டி இருக்கும். அது எந்த இடம் என்பதையும் மைத்திரி அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

பணக்காரர்களின் சூதாட்டவிடுதிகளான, காசினோக்கள் பெருந்தொகை ஒன்றை, அதாவது ஒரு பில்லியன் ரூபாய்கள் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் ஒரு தடவை தானாம். இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, விளையாட்டு சேனல்கள் கூட ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும். இதனால், மகிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு சொந்தமான சேனல் ஒன்றும் பாதிக்கப் படும். 

அதே மாதிரி, சாட்டலைட் தொலைக்காட்சிகளும் ஒரு தடவை ஒரு பில்லியன் ரூபாய் கட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில், இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் தான் சாட்டலைட் தொலைக்காட்சி சேனல்களை அதிகம் பார்வையிடுகின்றனர். மேலும், மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும்.

இது ஒரு வகையில் "ராபின் ஹூட் வரி" என்று முதலாளித்துவ ஊடகங்களே தெரிவிக்கின்றன. அதாவது, மைத்திரி அரசு பணக்காரர்களிடம் வரி அறவிட்டு, ஏழைகளுக்கு உதவுகிறது. உள்ளூர் கமக்காரர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து வாங்கும் பாலுக்கான விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளும் ஊக்குவிக்கப் படுவர் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், இந்த "ராபின் ஹூட் வரி" இன்னும் எத்தனை வருடங்களுக்கு நடைமுறைப் படுத்தப் படும்? காஸினோக்கள், சாட்டலைட், மொபைல் நிறுவனங்கள் மீதான ஒரு பில்லியன் வரி, ஒரு தடவை மாத்திரமே அறவிடப்படும் என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஆகையினால், அடுத்த வருடத்தில் இருந்து, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக, பொருட்களின் விலைகள் மீண்டும் ஏற்றப் படலாம்.

பிரேசில் நாட்டில் வரிகளற்ற சமுதாயம் ஒன்றிற்காக, அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும், குறைந்தளவு வருமானம் ஈட்டுவோர் தான், அதிகளவு வரி கட்டி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசு இனிமேல் உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து வரியே அறவிடக் கூடாது என்று கோரிக்கை வைக்க வேண்டும்.

பாவனைப் பொருட்கள் மீதான வரிகள், அநேகமாக இடைக்காலத்தில் வந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆக இருக்க வேண்டும். பொதுவாக, வர்த்தகர்கள் தான் அதனை பாவனையாளர்களிடம் அறவிட்டு, அரசாங்கத்திற்கு கட்டி வருகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக, வரிப் பணம் ஒழுங்காக அரசுக்கு போய்ச் சேர்வதில்லை.

இடையில் உள்ள வர்த்தகர்கள் விழுங்கி ஏப்பம் விடும் வரியை இரத்து செய்வதால், அரசுக்கு என்ன குறை வந்து விடப் போகின்றது? இதனால், பொது மக்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். பாவனைப் பொருட்களின் விலை நிரந்தரமாக குறையும்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வோட்டுப் போட்ட தமிழ் வாக்காளர்கள், மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியவாத தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் "இது நமது அரசாங்கம்" என்று கூறியுள்ளார். "நமது அரசாங்கம்" என்றால், நமது மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா?

**********

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த அதே காலத்தில் தான் கிரீசிலும் பொதுத் தேர்தல் நடந்தது. கிரேக்க நாட்டில் பதவியேற்றுள்ள, சீரிசா எனும் இடதுசாரிக் கட்சி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பின்வரும் திட்டங்களை செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் மைத்திரி அரசும், மக்களின் நன்மை கருதி அதே மாதிரியான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று, அவரை ஆதரித்து ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக. 

Friday, January 30, 2015

கிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்! அதிர்ச்சியில் ஐரோப்பா!!


2015 ஜனவரி 25, கிரேக்க பொதுத் தேர்தலில் வென்ற சீரிசா (Syriza) பற்றி சில குறிப்புகள்:

Syriza என்ற பெயர் எப்படி வந்தது? SYnaspismós RIZospastikís Aristerás: தீவிர இடதுசாரிகளின் கூட்டணி என்ற பெயர் சுருங்கி சீரிசா ஆனது.

மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஒரு "தீவிர" இடதுசாரிக் கட்சி என்று அழைக்கின்றன. ஏனென்றால், மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளை தான், இவ்வளவு காலமும் "இடதுசாரி" கட்சிகள் என்று கூறி வந்தனர். நம்மைப் பொறுத்தவரையில் அவை வழமையான முதலாளித்துவ கட்சிகள். அதனால், மேற்குலக ஊடகங்கள் படம் காட்டுவதற்கு மாறாக, சீரிசா ஒரு மிதவாத இடதுசாரிக் கட்சி என்று அழைப்பதே பொருத்தம்.

அதனை நாங்கள், புரட்சிகர கட்சி அல்லது திரிபுவாத கட்சி போன்ற வரையறைக்குள் அடக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனை ஒரு ஜனநாயகக் கட்சி என்று கூறலாம். பெரும்பான்மை கிரேக்க மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கி இருந்தன. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்பது போல, ஜனநாயகம் பேசும் மேற்கத்திய நாடுகளை (குறிப்பாக: ஜெர்மனி போன்றநாடுகள்) அவர்களின் வழியில் சென்று கோரிக்கைகளை வைப்பது தான் நோக்கம்.

Syriza பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதற்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டுமே? புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? Syriza தனது கடமையை செய்ய தவறினால், அல்லது தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தால், அதில் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) பதவியேற்றவுடன் முதல் வேலையாக, கிரேக்க புரட்சிக்காக போராடி மறைந்த கம்யூனிசப் போராளிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் சாத்தினார். அலெக்சிஸ் சிப்ராஸ், முன்பு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், கிரீஸ் நாஸி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கெரில்லாப் போர் ஒன்றை நடத்தியது. கம்யூனிச கெரில்லாப் படைகள், பல இடங்களில் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இருந்தன.

போரின் முடிவில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான, முன்னாள் நாஸி ஆதரவு கிரேக்க ஒட்டுக் குழுக்களுக்கு உதவினார்கள். 1946–49 காலப் பகுதியில், மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்டுகள் தோற்கடிக்கப் பட்டனர். அன்று நடந்த போரில், வீர மரணத்தை தழுவிக் கொண்ட, பல்லாயிரக் கணக்கான போராளிகளின் நினைவு ஸ்தூபி, ஏதென்ஸ் நகரில் வைக்கப் பட்டுள்ளது.

ஒரு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் கட்சியை, பொதுத் தேர்தலில் வெல்ல வைத்த, கிரேக்க வாக்காளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்:


GREECE: THE END OF AUSTERITY? from Theopi Skarlatos on Vimeo.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !
கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்

Monday, January 26, 2015

பாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்


பிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
பிரெஞ்சு மொழியில் "banlieue" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.

தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.

குறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக "முஸ்லிம்கள்" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த "முஸ்லிம்களும்", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல.   தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு. 

பாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: "அடையார்"! அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.

பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.

பாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற "பயங்கரவாதி" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

Clichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.

கைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.

Clichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் "முஸ்லிம்கள்" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் "முஸ்லிம்கள்" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் "முஸ்லிம்கள்" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. 

பத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். "பணக்காரர்களின் சொத்துக்களான" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான "முஸ்லிம்களின்" கார்களும் எரிக்கப் பட்டன.

பாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி: 
//"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்!" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)

வீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.

பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. "அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை." என்று கூறுகின்றனர். மேலும், இதனை "யூதர்களின் சதி" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.

இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள்? பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.

கிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.

எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.

வட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.

நான் "பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். "நான் எழுதுவதெல்லாம் பொய்" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459 ) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.

பெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு: 

2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

Sunday, January 25, 2015

அந்த தீய சக்தியின் பெயர் "இலுமினாட்டி" இல்லை! அவர்கள் தான் முதலாளிகள்!


"இலுமினாட்டி" என்று யாரும் இல்லை. தெரிஞ்சுக்கோங்க மக்களே! முதலாளித்துவம் எனும் மக்கள் விரோத அமைப்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான், இலுமினாட்டி எனும் கட்டுக்கதைகளை பரப்பி விடுகிறார்கள். "இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகள்" என்று அவர்கள் கூறுவன எல்லாம், முதலாளிகளின் வழமையான அராஜகங்கள் தான்.

இந்த சிக்கலான முதலாளித்துவ சமுதாயத்தில், உச்சியில் இருக்கும் ஆளும் வர்க்கம் எவ்வாறு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை பயன்படுத்தி சொத்துக்களை குவித்து வருகின்றது என்ற உண்மை பலர் கண்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, இலுமினாட்டி கதைகளை பரப்புவோரிடம், முதலாளித்துவம் பற்றிய எந்த ஆய்வும் கிடையாது.

ஏனென்றால், முதலாளித்துவம் ஒரு நல்ல விடயம் என்று அவர்கள் நம்புகிறார்கள். (முதலாளித்துவ அமைப்பில் தனது வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.) அதனால், தாம் சிறந்தது எனக் கருதும் ஓர் அமைப்பு தீமைகளுக்கு காரணியாக இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. அதற்காக உருவாக்கப் பட்ட கற்பனைப் பாத்திரம் தான் "இலுமினாட்டி".

உலகில் நடக்கும் தீமைகளுக்கு எல்லாம், சில தனி நபர்களே காரணம் என்று நம்புகிறார்கள். ஆட்சியில் இருக்கும் சில கருப்பாடுகளை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள். தற்போதுள்ள அரசு மற்றும் பொருளாதார கட்டமைப்பு முழுவதும் தவறானது என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது. இலங்கை தேர்தலில் ராஜபக்சவுக்கு பதிலாக மைத்திரியை, இந்திய தேர்தலில், காங்கிரசுக்கு பதிலாக பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்பும் அப்பாவிகள் அவர்கள்.

அதே மாதிரி, இலுமினாட்டி சதிகாரர்களை இனங்கண்டு நீக்கி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக வரும் ஆட்சியாளர்கள், அந்தப் பதவியில் இருந்த முந்திய ஆட்சியாளர்களைப் போன்றே நடந்து கொள்வதை வரலாறு முழுவதும் கண்டு வந்துள்ளோம். முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதின் ஊடாகத் தான், அவர்கள் எல்லோரையும் அப்புறப் படுத்தலாம்.

ஏனென்றால், முதலாளித்துவம் என்பது ஒரு பொருளாதார உற்பத்தி முறை. அது தானாகவே சமூக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகின்றது. ஒரு சில தனி நபர்கள், அல்லது குழுக்கள் இங்கே பிரச்சினை அல்ல. இந்த உற்பத்தி முறையானது, சொத்துடமையாளர்களையும் உழைப்பாளிகளையும் பிரித்து வைக்கின்றது. இந்த சமூக உறவானது, ஒவ்வொரு நாளும் நடக்கும் பொருள் உற்பத்தியில், பல ஆயிரம் தடவைகள் மறு வார்ப்புச் செய்யப் படுகின்றது. 

அநேகமாக எல்லா வர்த்தகத் துறைகளிலும், ஒன்று திரட்டப்படும் மூலதனமானது ஒரு சிறிய சமூகப் பிரிவினரின் கைகளில் செல்வமாக சேர்கின்றது. அதுவே அதிகாரமாகவும் இருக்கின்றது. கணிதத்தில் நமக்குத் தெரியாத ஒன்றை "x" என்று குறிப்பிடுவோம். அதே மாதிரி, முதலாளித்துவ உற்பத்தி முறை, மூலதன திரட்சி பற்றி அறியாதவர்கள்; செல்வமும், அதிகாரமும் படைத்த அந்த சிறு பிரிவினரை "இலுமினாட்டிகள்" என்று அழைக்கிறார்கள்.

Saturday, January 24, 2015

தாமஸ் பிக்கெட்டி, யார் இவர்?


தாமஸ் பிக்கெட்டி. யார் இவர்? பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி அறவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி? இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.

அதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.

வேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான். 

நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.

"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்: 
"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன? சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்திருப்பது தான் முக்கியமானது.

"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்..." என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், "முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.

அதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

Trickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை? உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.



இது தொடர்பான முன்னைய பதிவு:

Wednesday, January 21, 2015

அப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...


 பிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, "21 ம் நூற்றாண்டு மூலதனம்" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை. 

நெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்தில் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. 

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.
 -------------------------------------------------------------

தாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.

அவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.

அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.

1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.

இதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.

சொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு செய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.

பெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன. 

1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.

1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.

19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : "மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்."

இதற்கொரு தீர்வு இருக்கிறதா? உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி முன் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.

(நன்றி: Mug Magazine, Januari 2015)

Monday, January 19, 2015

ஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை


"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 

"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. "சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.


மேலதிக தகவல்களுக்கு:

Sunday, January 18, 2015

"கருத்துச் சுதந்திரவாதிகள்" உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள்


இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன?

பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது.

சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது.
French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy jibe 

தற்போது கருத்துச் சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் போராளிகள், இது போன்ற சுதந்திர மறுப்புகளை கண்டுகொள்ளாத மர்மம் என்னவோ?

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை மூளைச் சலைவை செய்கின்றன என்பது, சில அடிமை விசுவாசிகளின் கருத்துக்களை வாசிக்கும் பொழுது தெரிகின்றது.

Charlie Hebdo தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தை வெறுப்பவர்களின் பயங்கரவாதம் என்ற கருத்தியலே அபத்தமானது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னர், "அவர்கள் எமது சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்..." என்று புஷ் சொன்னதைப் பிரதிபலிக்கின்றது.

இதனை வெறுமனே மதம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பது, "கலாச்சாரங்களின் மோதல்" என்ற காலாவதியான மேலைத்தேய கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்கின்றது. கலாச்சாரங்களின் மோதல் குறித்து கோட்பாட்டு விளக்கம் கொடுத்த அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா கூட, தான் அன்று தப்புக் கணக்கு போட்டு விட்டதாக ஒப்புக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பு தனது கண்களை திறந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்செயலாக மேற்குலகில் கிறிஸ்தவ கலாச்சாரமும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய கலாச்சாரமும் இருப்பதால், அது அடிப்படையில் கலாச்சாரங்களின் மோதல் ஆகாது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல பிரச்சினைகள், ஐரோப்பிய காலனிய கால கட்டத்தின் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள், ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்பதை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சார்லி எப்டோ விவகாரம் தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகள் யாவும், "கிறிஸ்தவ - முஸ்லிம் பிரச்சினை" என்று தவறாக புரிந்து கொள்ளப் படுகின்றன. அந்த அபத்தமான கருத்தை பல தமிழர்களும் எதிரொலிக்கின்றனர். உண்மையில், இவற்றை மதப் பிரச்சினையாக கருதிய மதத் தலைவர்கள், இரண்டு மதங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி இருந்தனர். போப்பாண்டவரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தாங்கள் பிரச்சினையை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், இங்குள்ள அடிப்படை பிரச்சினை மதம் அல்ல. நவ காலனித்துவம், வெள்ளையர்களின் நிறவெறி, ஐரோப்பிய இனத் துவேஷம், பொருளாதார மேலாண்மை, குடியேறிகளின் பிரச்சினை... இன்ன பிற ஆகும்.

தமிழீழம் கோரிப் போராட்டம் நடத்திய புலிகளும், அவர்களை ஆதரித்த மக்களும், இலங்கையின் இனப் பிரச்சினையானது சிங்கள - தமிழ் முரண்பாடு என்று தான் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நவ காலனித்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியான தமிழ் தேசியம் ஊடாக எதிர்ப்புக் காட்டத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், முன்னாள் காலனிய அடிமை நாடுகளில் வாழும் மக்கள் முஸ்லிம்கள் என்பதால், மதத்தின் ஊடாக தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அடிப்படைப் பிரச்சினை நவ காலனித்துவம். நைஜர் நாட்டில் நடந்த, சார்லி எப்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பிரெஞ்சு கலாச்சார நிலையம் எரித்து நாசமாக்கப் பட்டது. (French centre in Niger set ablaze in Charlie Hebdo protests http://www.france24.com/en/20150116-niger-zinder-french-cultural-centre-set-ablaze-charlie-hebdo-protest-prophet-mohammed-cartoon/)

நைஜர் நாட்டில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சு படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு காலனியாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. ஆனால், உள்ளூர் ஆட்சியாளர்கள், காலனியாதிக்கத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகின்றனர். (Why Charlie Hebdo attack is not about Islam http://www.aljazeera.com/indepth/opinion/2015/01/charlie-hebdo-islam-cartoon-terr-20151106726681265.html)

கருத்துச் சுதந்திர அடிப்படைவாதிகள், நிச்சயமாக இந்த உண்மைகளை உங்களுக்கு சொல்லப் போவதில்லை. பிரான்ஸ் நாட்டு பிரஜைகளில், அண்ணளவாக அரைவாசிப் பேர், "முஸ்லிம்களின் இறைதூதர் முகமதுவை கேலி செய்யும் கார்ட்டூன்கள் தவிர்க்கப் பட வேண்டியவை" என்று கருத்துக் கூறியுள்ளனர். அதாவது, அரைவாசி பிரெஞ்சு மக்கள், சீண்டிப் பார்க்கும் வக்கிரமான கேலிச் சித்திரங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்று நம்புகிறார்கள். (Caricatures de Charlie Hebdo : Plus de 4 Français sur 10 estiment qu'il faut éviter les dessins de Mahomet; http://www.huffingtonpost.fr/2015/01/18/caricatures-charlie-hebdo-francais-eviter-dessins-mahomet_n_6495204.html?ncid=fcbklnkfrhpmg00000001

மேலும், Charlie Hebdo பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் ஆசிரியர், பத்திரிகை நிர்வாகம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாக குற்றஞ் சாட்டியுள்ளார். ஒரு கேலிச்சித்திரத்தை ஒரு தடவை போட்டால் அது அந்தப் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஒரே மாதிரியான கார்ட்டூன்களை திரும்பத் திரும்ப போடுவதும், உச்ச கட்ட வக்கிர புத்தியுடன் வரைவதும், குறிப்பட்ட சிலரை வேண்டுமென்றே ஆத்திரமுற வைக்கும் நோக்குடன் நடந்துள்ளது. இதையும் அந்த முன்னாள் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

அநேகமாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன், அல்லது வர்த்தக நோக்கில் செயற்பட்ட யாரோ சிலரின் சதியாலும் இந்தத் தூண்டுதல்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்கு ஊடகவியலாளர்கள் பலியாகி உள்ளனர். தாக்குதலில் கொல்லப் பட்ட, Charlie Hebdo பத்திரிகை ஆசிரியர் உட்பட சில ஊடகவியலாளர்கள், போலிக் கம்யூனிசக் கட்சியான PCF அனுதாபிகள். (l'Humanité, 14 ஜனவரி 2015) தாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுப்பதாக அப்பாவித்தனமாக நம்பி உள்ளனர். (படுகொலைகள் பிரெஞ்சு சமுதாயத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைத்தன் காரணம் புரிந்து கொள்ளத் தக்கதே.)

இந்தத் தாக்குதலை அல்கைதா நடத்தி இருக்கிறது என்று பிரெஞ்சு அரசு கூறுகின்றது. ஆனால், அல்கைதாவுக்கும் சிஐஏ க்கும் இடையிலான தொடர்புகள் ஊர் அறிந்த இரகசியம். பொலிஸ் நடவடிக்கையில் கொல்லப் பட்ட பயங்கரவாதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறான். அதில், 2009 ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தில், பாதணிக்குள் குண்டு வைத்துக் கொண்டு சென்ற நபருடன், யேமனில் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறியுள்ளான். அந்த நபர் சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

2006 ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த வலதுசாரி UMP கட்சி, மத நிந்தனை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர விரும்பியது. ஆனால், கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த யோசனை பின்போடப் பட்டது. (l'Humanité, 15 ஜனவரி 2015) தற்போது நடந்து முடிந்துள்ள, பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

மத நிந்தனை தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டால், அதனால் பலனடையப் போவது முஸ்லிம்கள் அல்ல. மாறாக, கிறிஸ்தவ - வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்

Thursday, January 15, 2015

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,

இலங்கை அரசும், பிரெஞ்சு அரசும் ஒன்றா? இந்தக் கேள்வியே சிறுபிள்ளைத் தனமானது. அரசு என்பதே அடிப்படையில் ஓர் அடக்குமுறைக் கருவி தான். இலங்கையிலும், பிரான்சிலும் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படும். இரண்டு நாடுகளிலும், அரசுக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினரால் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது.

பிரான்ஸ் போன்ற மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள் உருவாக்கியது தான், இலங்கை அரச நிர்வாகம். இன்றைக்கும் ஆங்கிலேயர் எழுதிய அதே யாப்பு சில மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. அரசு நிர்வாகம், இராணுவம், பொருளாதாரக் கட்டமைப்புகள் யாவும் பிரிட்டனை பின்பற்றித் தான் அமைந்துள்ளன. 

1978 ம் ஆண்டு உருவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்த சட்டத் திருத்தம், பிரான்ஸ் நாட்டை பின்பற்றித் தான் எழுதப் பட்டது. பத்தாண்டுகள் ஈழப்போருக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாரிஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரான்சில் இன்றைக்கும் அது ஒரு மேட்டுக்குடியினரின் பல்கலைக்கழகம் என்றே அறியப் படுகின்றது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடப்பதால் அவை ஜனநாயக நாடுகள் என்று தான் மேற்கத்திய அரசுக்கள் கூறிக் கொள்கின்றன. இடையிடையே மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் வைப்பதும், அந்த நாடுகளின் அரசுத் தலைவர்களை மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருவதற்காகத் தான். 

எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நாடுகள் கடைசியில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து விடும். அதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த புலி ஆதரவாளரிடம் விசாரித்துப் பாருங்கள். "ஈழப்போரின் இறுதியில், பிரான்ஸ் உட்பட, பத்து உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன...." என்று அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியில் விளங்கப் படுத்துவார்கள்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சில் வாழும் இஸ்லாமிய அல்ஜீரியர்களுக்கு எதிரான இனக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதுவே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அங்கே ஒரு கலவரம் இடம்பெற்றிருக்கும். ஆகையினால், பிரெஞ்சு ஐரோப்பியர்கள் "நாகரிகமைந்து விட்டனர்" என்று கூற முடியாது. உண்மையில், முஸ்லிம் எதிர்ப்பு இனக்கலவரம், உலகத்தின் முன்னிலையில் பிரான்சை தலைகுனிய வைத்திருக்கும். 

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், சுமார்  நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால், நிச்சயமாக அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் ஒன்று நடந்திருக்கும். இரண்டாம் உலகப்போர் வரையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடந்துள்ளன. யூதர்கள் அதனை "Pogrom" என்று அழைக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டில் வாழும் பிரெஞ்சுக் காரர்கள், தாங்கள் நாகரிகமடைந்து விட்டதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த நிலைமை விரைவில் மாறலாம். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு இனவெறியர் மாரி லெ பென் தலைமையிலான FN கட்சியின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிரான்சில் ஒரு இனக்கலவரம் நடந்தால், அது அல்ஜீரியர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கப் போவதில்லை. பிரான்சில் வாழும் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்.

பிரான்ஸ் ஏற்கனவே அல்ஜீரிய சிறுபான்மை இனத்தவரை படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அல்ஜீரியாவை காலனிப் படுத்திய பிரான்ஸ், அதனை தனது நாட்டின் மாகாணமாக ஆக்கியிருந்தது. பாரிஸ் நகரில் உள்ள பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு, அல்ஜீரியாவில் இருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டனர். மேலும், அல்ஜீரியாவில் பத்து இலட்சத்திற்கும் குறையாத பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றப் பட்டிருந்தனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வடக்கு இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள், சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் குடியேறி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி, அல்ஜீரியர்கள் பாரிஸ் நகரில் குடியேறி இருந்தனர். 1961 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் வாழ்ந்த அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த பிரெஞ்சுப் போலீசார் தாக்கியதில், குறைந்தது 600 அல்ஜீரிய பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இனவெறிப் போலீசார் பலரை செயின் நதிக்குள் வீசிக் கொன்றார்கள். அவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

பாரிஸ் நகரில் நடந்த அல்ஜீரிய இனப் படுகொலை, 1977 ம் ஆண்டு கொழும்பு நகரில் நடந்த தமிழ் இனப் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. இலங்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977 ம் ஆண்டு, "தமிழீழம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து" வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. "உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா?" என்று கேட்டுத் தான், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் தமிழர்களை கொன்றார்கள்.

அதே மாதிரி, அல்ஜீரியாவில் FLN கட்சி, 1961 ம் ஆண்டு, அல்ஜீரியா தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை நிறைவேற்றி இருந்தது. 1961 ம் ஆண்டு, பாரிஸ் இனப்படுகொலையின் போதும், "உங்களுக்கு அல்ஜீரியா என்ற தனி நாடு வேண்டுமா?" என்று கேட்டுத் தான், பிரெஞ்சு இனவெறியர்கள் அல்ஜீரியர்களை கொன்றார்கள்.

இலங்கையிலும், பிரான்சிலும் நடந்த சம்பவங்கள் ஒன்று தான், இனப் பிரச்சினையும் ஒன்று தான். பிரெஞ்சு அரசும், இலங்கை அரசும் ஒரே மாதிரித் தான் சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளன. ஆயினும், ஒடுக்கப்பட்ட இனங்களான அல்ஜீரியர்களும், ஈழத் தமிழர்களும் தமக்குள் ஒன்று சேராத காரணம் என்ன? ஏன் பிரான்ஸ், சிறிலங்கா அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகிறீர்கள்?

யாழ்பாணத்தில் புலிகள் 13 சிங்களப் படையினரைக் கொன்ற பின்னர் தான், அரச அடக்குமுறைகள் அதிகரித்தன. இலங்கையில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் வரையில், அங்கேயும் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

எழுபதுகளில் மெல்ல மெல்ல பத்திரிகை தணிக்கைகளை அமுல் படுத்தி வந்த அரசு, எண்பதுகளில் ஒரேயடியாக சட்டம் போட்டு தடை செய்தது. கொடுங்கோல் ஆட்சி வந்தது. பிரிவினை கோருவதும், அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமாக்கப் பட்டது. 

பிரான்சிலும் அதே கதை தான் நடக்கிறது. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டத்தை காரணமாகக் காட்டி, மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டு வருகின்றது. உலகிலேயே முதல் நாடாக, பிரான்சில் தான் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டன.

இலங்கையில் பிரிவினை கோருவதும், ஆதரிப்பதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டதைப் போன்று, பிரான்சில் யூதர்களுக்கு, யூத மதத்திற்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இலங்கையை மாதிரி, பிரான்சிலும் "பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்" சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

எது பயங்கரவாத ஆதரவுக் கருத்து என்பதை, இரண்டு நாடுகளிலும் சட்டம் சரியாக வரையறுக்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது பயங்கரவாதம் ஆகலாம். அதே மாதிரி, பிரான்சில் தற்போது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது பயங்கரவாதமாக கருதப் படலாம். அது பின்னர் விரிவுபடுத்தப் பட்டு, எதிர்காலத்தில் பிரான்சில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதே பயங்கரவாதம் என்று கூறும் நிலை வரலாம்.

எதற்காக, பிரான்சில் வாழும் தமிழர்கள் பலர், அரச அடக்குமுறைகள் குறித்து எந்த உணர்வுமற்று இருக்கிறார்கள்? எந்த அரசும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் ஒரே நேரத்தில் அடக்குவதில்லை. இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மை இனம் அடக்கப் பட்ட நேரம், சிறிலங்கா அரசு முஸ்லிம் சிறுபான்மை இனத்துடன் இணக்கமாக நடந்து கொண்டது. முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, நன்மதிப்பை சம்பாதித்து இருந்தது.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், "தமிழீழம் கேட்கும் தமிழர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே...?" என்று திருப்திப் பட்டனர். அதே தான் பிரான்சிலும் நடக்கிறது.

பிரான்சில் வாழும் இந்து- தமிழர்கள், இலங்கை முஸ்லிம்களின் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். "இஸ்லாமிய கடும்போக்கு ஷரியா சட்டம் கேட்பவர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே...?" என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.

மேலும், இந்தக் காலத்தில், இன, மத உணர்வுகளுக்கு அப்பால் மக்களிடையே வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் இருப்பதும், ஒடுக்கும் அரசுக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இலங்கையில், குறிப்பாக கொழும்பில் ஏராளமான மாலைதீவு அகதிகள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு ஆதரவான எந்தக் கருத்தும் கிடையாது. ஏனென்றால், தமிழர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எதுவும் கிடையாது.

மாலைதீவு அகதிகள், பொதுவாக, தமிழ் இனப்பிரச்சினையில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தான் பேசுவார்கள். அதே நேரம், தமது மாலைதீவு அரசின் ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசுவதுடன், அதையும் இதையும் ஒப்பிட மாட்டார்கள். "இலங்கை அரசும், மாலைதீவு அரசும் ஒன்றா?" என்று நமது தமிழ் கருத்துச் சுதந்திரக் கண்மணிகள் மாதிரிக் கேட்பார்கள்.

இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர், காஷ்மீர் நிலவரம் குறித்து எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீர் பயங்கரவாதத்தை குறை கூறுவதுடன், இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். மறுபக்கத்தில், பெரும்பாலான காஷ்மீரிகள் தமிழ்ப் பயங்கரவாதத்தை குறை கூறி, சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். ஏனென்றால், காஷ்மீரிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது.

இதே நிலைமை தான் பிரான்சிலும் நிலவுகின்றது. பிரான்சில் வாழும் தமிழர்களுக்கும், அல்ஜீரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது. அல்ஜீரியர்களைப் பொருத்தவரையில், இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை தான். தமிழர்களைப் பொறுத்தவரையில், பிரான்சில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான்.

அல்ஜீரியர்கள், தமிழர்கள், இரண்டு இனங்களும், ஊடகங்களினால் தவறாக கையாளப் படுகின்றனர். தவறான தகவல்கள் கொடுத்து மூளைச்சலைவை செய்யப் படுகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அல்ஜீரியர்களும், தமிழர்களும் விழிப்படைந்து தமக்குள் ஒன்று பட்டால், அது ஒடுக்கும் அரசுக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும். ஆகவே, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை குலைப்பதற்கு, அரசு இயந்திரம் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும்.

ஆகவே, பிரான்சில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மட்டும் தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அதன் கைக்கூலியான சிறிலங்கா அரசின் எதேச்சாதிகாரத்தை முறியடிக்கும். இந்த அறைகூவலை வாசித்த பிறகாவது, அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரான்சில் அல்ஜீரியர் - தமிழர்களுக்கு இடையிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
ஓர் ஈழத் தமிழன்

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, January 14, 2015

இனவாத சார்லிக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள்


பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில், அந்த தடைகளினால் பிரெஞ்சுப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் கீழ், ஐரோப்பிய கூட்டாளிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதன் மூலம் தான், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது பிடியை வலுவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, Charlie Hebdo பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள், GLADIO பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புண்டு.

GLADIO என்பது, நேட்டோவின் தலைமையின் கீழ் இயங்கும் ஐரோப்பிய பயங்கரவாத அமைப்பு ஆகும். நாற்பது நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றிய, பயங்கரவாதத்திற்கு எதிரான பாரிஸ் அணிவகுப்பில் அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சார்லி எப்டோ (Charlie Hebdo), ஒரு "இடதுசாரிப்" பத்திரிகை என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். போலி இடதுசாரிகள் இலங்கை, இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பிரான்சிலும், ஐரோப்பாவிலும் கூட, போலி இடதுசாரிகள் மலிந்து போயிருக்கிறார்கள்.

அந்தப் பத்திரிகையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள் சிலர் இடதுசாரிகளாக, அல்லது கம்யூனிஸ்டுகளாக கூட இருக்கலாம். அது ஐரோப்பாவில் ஒன்றும் புதுமை அல்ல. ஏனெனில், ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள், தனிப்பட்ட கொள்கை அளவில் இடதுசாரிகள் தான். ஆயினும், அவர்கள் தமது கொள்கையை வீட்டில் கழற்றி வைத்து விட்டு வேலைக்குப் போகிறார்கள். இது புள்ளிவிபரம் மூலம் நிரூபிக்கப் பட்ட உண்மை.

சார்லி எப்டோ, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் ஒரு வகையில் நாஸ்திக - இடதுசாரிப் பாரம்பரியத்தின் விளைவாக தோன்றிய பத்திரிகை தான். அது ஏற்கனவே கத்தோலிக்க போப்பாண்டவரையும், இயேசு கிறிஸ்துவையும் கேலிச்சித்திரம் போட்டிருக்கிறது. ஆனால், மதச்சார்பற்ற அல்லது நாஸ்திக பிரெஞ்சு சமுதாயத்தில் அது பெருமளவு தாக்கத்தை உண்டு பண்ணுவதில்லை.

அதே நேரம், யூத மதத்தையும் கேலி செய்துள்ளது தான். ஆனால், சட்டச் சிக்கல்கள் வராமல் மிகவும் அவதானமாக அதைச் செய்துள்ளது. ஏனெனில், பிரான்சிலும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்று, யூத மதத்தை அல்லது யூதர்களைப் பற்றி கேலிச்சித்திரம் போடுவது, Antisemitism எனும் தண்டனைக்குரிய குற்றம் ஆகலாம்.

அண்மைக் காலமாக, தனது விற்பனையை அதிகரிப்பதற்காக, சார்லி எப்டோ பத்திரிகை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் உள்ள இனவாதக் கருத்துக்களை பிரதிபலித்து வந்துள்ளது. அது இஸ்லாமியருக்கு எதிராக மட்டும் துவேஷத்தைக் காட்டவில்லை. பிரான்சில் குடியேறியுள்ள, தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் இனத் துவேஷத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.

"போகோ ஹராம் பாலியல் அடிமைகள் 
கோபமாக இருக்கிறார்கள்" 
"எமது சமூகக் கொடுப்பனவுகளில் 
கை வைக்காதே!"

இங்கேயுள்ள சார்லி எப்டோ அட்டைப் படத்தில், என்ன எழுதி இருக்கிறது என்று, பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கேலிச்சித்திர விளக்கம்:

"போகோ ஹராம் பாலியல் அடிமைகள் கோபமாக இருக்கிறார்கள்" 
"எமது சமூகக் கொடுப்பனவுகளில் கை வைக்காதே!"

ஆப்பிரிக்க கருப்பின கர்ப்பிணிப் பெண்கள், பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு கிடைக்கவிருக்கும் பிரெஞ்சு அரசின் சமூக கொடுப்பனவுகளை குறி வைக்கிறார்களாம். இந்த இனவாத கேலிச்சித்திரம் மறைமுகமாக தமிழர்களையும் கிண்டல் செய்கின்றது. பிரான்சில் வாழும் தமிழ்க் குடும்பங்களில், பலருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும். ஏனென்றால், மூன்று பிள்ளைகளுக்கு மேலே இருந்தால், அரசு அதிகமான பணம் கொடுக்கிறது.

ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் அரச கொடுப்பனவுகளை எதிர்பார்த்து, அதிகளவு பிள்ளைகளை பெறுவதாக பிரெஞ்சு இனவாதிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. சார்லி எப்டோ பத்திரிகையும் பிரெஞ்சு பெரும்பான்மை சமூகத்தின் இனவாதக் கருத்துக்களை கேலிச்சித்திரமாக வரைந்து காசு சம்பாதித்து வருகின்றது.

தாக்குதலின் பின்பு, தன் வெளியீட்டைக் கண்ட இப் பத்திரிகை முப்பது லட்சம்  (3 மில்லியன்) பிரதிகள் விற்றது! அது மட்டுமல்ல, இனிமேல் ஆங்கிலம், அரபி, துருக்கி, இத்தாலி ஆகிய பிறமொழிகளிலும் பத்திரிகை வெளியாகவுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு சிறந்த வழி. உலகை நாகரிகப் படுத்தும் வெள்ளையனின் காலனிய கால கடமை நிறைவேறியுள்ளது.


பிற்குறிப்பு:
ஏற்கனவே, ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சுப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்திருந்தனர். அவை யாவும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. 
Claims of French Complicity in Rwanda’s Genocide Rekindle Mutual Resentment 

Sarkozy admits France's role in Rwandan genocide 

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், பிரான்ஸ் அரசு, "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு ஆயுத விநியோகம் செய்து, தமிழினப் படுகொலையில் பங்கெடுத்திருந்தது. 
While condemning Sri Lanka violence, EU still sells arms to government 

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த பிரான்சுக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள். ‪
#‎IAmNotCharlie‬ – ‪#‎JeNeSuisPasCharlie‬ 


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, January 12, 2015

தமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பாரிஸ் பேரணி




சர்வதேச சமூகத்தின் இரட்டை வேடம்! 
முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்த நேரம், கண்களை மூடிக் கொண்டிருந்த உலக நாடுகளின் தலைவர்கள், பாரிஸ் படுகொலைக்காக அணிவகுத்துச் செல்கிறார்கள்.

Dear Mahinda Rajapakse, hope you were in Paris. 
We miss you in the march against Terrorism!

பாரிஸ் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணியில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகித்த கொடுங்கோலர்கள். இவர்களுடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் பிரகீத், லசந்த போன்றோரை கொலை செய்த மகிந்த ராஜபக்சவும் சேர்ந்திருந்தால், அந்தப் பேரணி முழுமை அடைந்திருக்கும்.


  • 1) இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு. கடந்த வருடம் காஸாவில் 7 ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர். 
  • 2) ஜோர்டான் மன்னர் அப்துல்லா. கடந்த வருடம் ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்தார். 
  • 3) துருக்கி பிரதமர் Davutoglu. உலகிலேயே பெருமளவு ஊடகவியலாளர்களை சிறைக்கு அனுப்பிய பெருமைக்குரியவர். 
  • 4) அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் Lamamra. அவரது நாட்டில், சில வருடங்களுக்கு முன்னர் கூட, ஊடகம் ஒன்றில் எழுதுவது தற்கொலைக்கு சமமானதாக இருந்தது. இப்போதும் சிலர் விசாரணை இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். 
  • 5) ஜோர்ஜியா, பல்கேரியா பிரதமர்கள். ஊடகவியலாளர்களை அடிப்பதற்கு பேர் போனவர்கள். 
  • 6) கிரேக்க பிரதமர் Samaras. அவரது நாட்டில், ஊர்வலங்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்களை, கலவரத் தடுப்பு பொலிஸ் அடித்து நொறுக்குவது வழமையான சம்பவங்கள். 
  •  7) பாஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர். குறைந்த சனத்தொகை கொண்ட சிறிய நாட்டிற்குள் அதிகளவு ஊடகவியலாளர்களை துன்புறுத்திய சாதனைக்குரியவர். 
  • 8) கட்டார் ஷேக் Mohamed Ben Hamad Ben Khalifa Al Thani. மல்லிகைப் பூவைப் பற்றி கவிதை எழுதிய குற்றத்திற்காக ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கிய புண்ணியவான்.
  • 9) பாலஸ்தீன அதிபர் அப்பாஸ். தன்னை அவமதித்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர்களை தடுத்து வைத்து துன்புறுத்தியவர். 
  • 10) பிரான்சுக்கான சவூதி தூதுவர். அவரது நாட்டில் ஒரு நாஸ்திக இளைஞர், தனது வலைப்பூவில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தினார் என்ற குற்றச் சாட்டில் பொது இடத்தில் கசையடித் தண்டனை வழங்கப் பட்டது.


இன்னும் பலர்... 

அநேகமாக பேரணியில் கலந்து கொண்ட 90% உலக நாடுகளின் தலைவர்கள், தமது நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஊடக சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர்கள். இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகத்திற்கு எதிரான தாக்குதலை கண்டிக்கிறார்கள். நம்புங்கள், இவர்கள் தானாம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் மனித உரிமைக் காவலர்கள்!


பாரிஸ் நகரில், 2013 ஜூன் 5 அன்று, கிளேமோ மேரிக் (Clément Méric) என்ற 19 வயது இளைஞன், பிரெஞ்சு இனவெறிக் காடையர்களினால் தெருவில் அடித்துக் கொலை செய்யப் பட்டான். பலியான இளைஞனும் ஒரு வெள்ளையின பிரெஞ்சுக்காரன் தான். அவன் செய்த குற்றம் என்ன? குண்டு வைத்தானா அல்லது சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டானா? இல்லை. பிரெஞ்சு நிறவெறிக்கு எதிராக, இடதுசாரி சிறு பத்திரிகை ஒன்றில் கட்டுரைகள் எழுதியது மட்டும் தான் அவன் செய்த குற்றம்!

சார்லி எப்டோ அலுவலகத்தில் 12 பத்திரிகையாளர்களை கொன்ற தாக்குதல் பயங்கரவாதம் என்றால், Clément Méric என்ற 19 வயது பத்திரிகையாளனை கொன்றதும் பயங்கரவாதம் தான். "Je suis Charlie" என்று கிளர்ந்தெழுந்தவர்கள், அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் ஆயிரக் கணக்கானோர், அன்று நிறவெறிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக "je suis Clément Méric" என்ற பதாகை தாங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை?

இதைத் தான் "Media Manipulation" என்று சொல்வார்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. அரசுக்கு ஆதரவான வெகுஜன ஊடகங்கள், குறிப்பிட்ட அரசியலுக்கு ஆதரவாக அல்லது எதிராக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்டுள்ளன.

அன்று பிரெஞ்சு ஊடகங்கள் நினைத்திருந்தால், Clément Méric கொலைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, ஆயிரக்கணக்கான மக்களை நிறவெறிப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வைத்திருக்க முடியும். ஒவ்வொருவரையும் "Je suis Clément Méric" என்று சொல்ல வைத்திருக்க முடியும். ஆனால், செய்ய மாட்டார்கள். குறைந்த பட்சம், அந்தக் கொலைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி கூட தெரிவிக்கவில்லை.

பிரெஞ்சு அரசும், வெகுஜன ஊடகங்களும், நிறவெறிப் பயங்கரவாதிகளும், ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் "முஸ்லிம் பயங்கரவாதிகள்" மட்டுமல்ல. பிரான்சில் வாழும் மூன்றமுலக நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுக் குடியேறிகளும் தான். அத்துடன், பிரெஞ்சு பேரினவாத வெறியை அல்லது நிறவெறியை எதிர்க்கும், வெள்ளையின இடதுசாரி ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிரிகள் தான்.

பிரெஞ்சு அரசு லிபியாவிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்களுக்கு ஏராளமான நிதி, ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்து வந்தது. இதனை பிரஞ்சு அரசு பகிரங்கமாகவே அறிவித்து இருந்தது. அப்போதெல்லாம், லிபியா, சிரியா தீவிரவாதிகளையும், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களையும் ஆதரித்து வந்தவர்கள் பலர்.

அப்படியான கபட வேடதாரிகள், பாரிஸ் பத்திரிகை அலுவக தாக்குதலை கண்டிக்கிறார்களாம். அதாவது, பிரெஞ்சு அரசு ஆதரித்த அதே பயங்கரவாதிகள், பிரான்ஸில் தாக்குதல் நடத்தினால் மட்டும் விழித்தெழுந்து, குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைப்பார்கள். தங்களது தகிடுதத்தங்களை, அயோக்கியத்தனத்தை மக்கள் அறிய மாட்டார்கள் என்ற தைரியத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக வீராவேச உரையாற்றுகின்றார்கள்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை விதைத்தவன், தனது நாட்டிலும் அதே பயங்கரவாதத்தை அறுவடை செய்வான். அது பிரெஞ்சு அரசுக்கு நன்றாகப் பொருந்தும்.

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்குப் பின்னர், ஐயோ... பயங்கரவாதம் என்று அலறுபவர்கள், அந்த நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக, பிரான்சில் தான் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நாடுகளில் பிரான்சும் ஒன்று.

எங்கேயாவது வேலை வாய்ப்பு தென்பட்டால், அதனை பூர்வீக வெள்ளையின பிரெஞ்சு மக்களுக்கே முதலில் கொடுப்பார்கள். இதனால், பன்னாட்டுக் குடியேறிகளின் சமூகங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, ஐந்து மில்லியன் இஸ்லாமிய அல்ஜீரியர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். ஏழைகள், வேலையில்லாதோர் எண்ணிக்கை, அந்த சமூகத்தில் அதிகம்.

இந்த உண்மைகளை ஏற்க மறுப்போர், பாரிஸ், மார்செய் புறநகர்ப் பகுதிகளை சென்று பார்வையிட வேண்டும். அவை இன்று மும்பை சேரிகள் போன்று மாறிக் கொண்டிருக்கின்றன. ஏழைகள் மத்தியில் இருந்து தான் திருடர்கள் தோன்றுவார்கள். அது உலக நியதி. ஒரு சில அல்ஜீரியர்கள் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிப் பரம்பரை ஆக்குவது இனவாத உள்நோக்கம் கொண்டது.

சாதாரண வழிப்பறித் திருடர்களை குறைகூறும் பலர், கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? பிரெஞ்சு அரசாங்கத்தில் ஊழல் வாதிகள் மலிந்து போயிருப்பதை, பிரெஞ்சு ஊடகங்களே வெளிப்படுத்தி உள்ளன. இலங்கை மாதிரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதிகள் பலர் அடித்த கொள்ளை ஊரறிந்த இரகசியம்.

காலஞ் சென்ற பிரான்சுவா மித்தரோன் அடித்த கொள்ளை எவ்வளவு? அவருக்கு பின்னர் வந்த ஜாக் சிராக், சார்கோசி தமது பதவிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்த கதைகள் அனைவருக்கும் தெரியும். இனவாதி லெ பென்னுக்கு எதிராக, ஜாக் சிராக் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நேரம், "இனவாதியை தோற்கடிப்பதற்கு, ஒரு திருடனை தேர்ந்தெடுப்போம்" என்று பிரெஞ்சு மக்கள் பகிரங்கமாகவே பேசிக் கொண்டனர். ஏன் இன்று அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

ஏனென்றால், இங்கே பயங்கரவாதத்திற்கு எதிராக கொடி பிடிக்கும் அநேகமானோர் கபட வேடதாரிகள். நேர்மையற்ற அயோக்கியர்கள்.

Nous sommes hypocrites! We are hypocrites!


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:
பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்

Thursday, January 08, 2015

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்





பிரான்சில், பாரிஸ் நகரின் மையப் பகுதியில் உள்ள, சார்லி எப்டோ பத்திரிகை காரியாலயம், மூன்று தீவிரவாதிகளினால் தாக்கப் பட்டது. நடந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இன்றி, எழுந்தமானமாக கருத்துக் கூறுவது, சமூகத்தில் பல எதிர்விளைவுகளை உண்டாக்கும்.

முகமூடி அணிந்த மூன்று ஆயுதபாணிகள், ரைபிள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்து, பத்திரிகை ஆசிரியரையும், மூன்று கார்ட்டூன் ஓவியர்கள், மற்றும் சில ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அத்துடன், வெளியே காவலுக்கு நின்ற இரண்டு பொலிஸ்காரர்களையும் பக்கத்தில் சென்று தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே அந்தப் பத்திரிகை இஸ்லாமிய விரோத கார்ட்டூன் படங்களை பிரசுரித்து வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப் பட்டது. அதனால் பொலிஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. அதனால், கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், அல்லது அல்கைதா போன்ற இயக்கத்தினர் செய்திருக்கலாம் என பொதுவாக சந்தேகிக்கப் படுகின்றது.

ஆயினும், தாக்குதல் நடைபெற்ற முறையைப் பார்க்கும் பொழுது பல கேள்விகள் எழுகின்றன. அது ஒரு கமாண்டோ பாணியிலான தாக்குதல். நன்கு பயிற்சி பெற்ற ஆயுதபாணிகள், அமைதியாக பதற்றப் படாமல் கொலைகளை செய்துள்ளனர். பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் மட்டத்திலான ஊழியர்களின் கூட்டம் நடைபெறுகின்றது என்ற துல்லியமான தகவல் தெரிந்திருக்கிறது. அந்த இலக்கை நோக்கி சென்று கொலைகளை செய்தவுடன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வெளியேறி உள்ளனர்.

கொலையாளிகள் நன்றாக பயிற்சி அளிக்கப் பட்ட இராணுவ வீரர்கள் போன்று செயற்பட்டுள்ளனர். ரைபிள் துப்பாக்கிகளை கையாண்ட விதம், இலக்கை மட்டும் குறி வைத்து தாக்கியுள்ளமை, காரியமே கண்ணாக எந்தப் பதற்றமும் இன்றி அமைதியாக நடந்து கொண்டமை, இவை எல்லாம் சாதாரண தீவிரவாதிகளின் செயற்பாடுகளாக தெரியவில்லை.

Charlie Hebdo பத்திரிகை மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதன் அர்த்தம், சார்லி எப்டோ வின் இனவாத கார்ட்டூன்களை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல. 

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், ஒரு மதத்திற்கு, சமூகத்திற்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்திய கார்ட்டூன்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பத்திரிகையின் சமூகப் பொறுப்பற்ற தன்மையை அலட்சியப் படுத்த முடியாது.

இலங்கையில் சிங்களப் பத்திரிகைகள், பல தடவைகள் தமிழர்களை மோசமாக சித்தரித்து கார்டூன்களை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றை நாங்கள் இனவாதம் என்றே ஒதுக்கி வந்துள்ளோம். சிங்களப் பத்திரிகையாக இருந்தாலும், பிரெஞ்சுப் பத்திரிகையாக இருந்தாலும், இனவாதக் கார்ட்டூன்கள் பிரசுரிப்பதை கருத்துச் சுதந்திரத்திற்குள் அடக்க முடியாது.

மூன்று வருடங்களுக்கு முன்னர், சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஒருவர், ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் பலர் கிளர்ந்தெழுந்தனர். ஜெயலலிதாவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப் பத்திரகையின் கார்ட்டூன் இனவாதம் என்றால், சார்லி எப்டோ பத்திரிகை முகமதுவை ஆபாசமாக சித்தரித்து, பல கார்ட்டூன் படங்களை வெளியிட்டதும் இனவாதம் தான்.

வெறுமனே மதத் துவேஷம் மட்டுமல்ல, இனத் துவேஷமும் அந்தக் கார்ட்டூன்களுக்கு பின்னால் மறைந்திருந்தன. ஐரோப்பாவில் எந்த நாட்டிலும், யூத மதத்தவரை புண்படுத்தும் கார்ட்டூன்கள் வெளியிட முடியாது. அது சட்டப் படி தடை செய்யப் பட்டுள்ளது.

Charlie Hebdo பத்திரிகை, ஏற்கனவே சில நிறவெறிக் கார்ட்டூன்களையும் பிரசுரித்திருந்தது. பிரான்ஸ் நாட்டில் நீதி அமைச்சராக இருக்கும் கருப்பின பெண்மணியை குரங்கு மாதிரி வரைந்திருந்தது. சார்லி எப்டோ என்ற ஊடகம் மீதான தாக்குதலுக்கு எதிராக, தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்த, ஐரோப்பிய மக்களின் தார்மீக கோபம், நியாயமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளை இஸ்லாமியருக்கு எதிரான துவேஷமாக திசைதிருப்பி விடும் வேலைகள் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்றன.

அது மத்திய கிழக்கில் வல்லாதிக்கப் போர்களுக்கு ஆதரவு திரட்டுவதாகவும் அமையக் கூடும். சிலநேரம், உள்நாட்டில் இனக் கலவரங்களை தூண்டி விடவும் உதவக் கூடும். இஸ்லாமிய வெறுப்புணர்வு "முஸ்லிம்களுக்கு மட்டுமே" எதிரானதல்ல. அது பிற மதங்களை பின்பற்றும் குடியேறிகள், அகதிகள் அனைவருக்கும் எதிரானது.

ஆகவே, ஊடகங்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டிப்போம். பாரிஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். அதற்கும் அப்பால், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையின் கீழ், இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்.

ஆகையினால்... எல்லோரும் சார்லி எப்டோவுக்கு பின்னால் அணிதிரளவில்லை என்பதை அறியத் தருவோம்.

#‎JeNeSuisPasCharlie‬

பாரிசில், Charlie Hebdo பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் பலியான 12 பேரில், காவல் கடமையில் இருந்த அஹ்மட் என்ற முஸ்லிம் பொலிஸ்காரரும் ஒருவர் என்பதையும் மறந்து விடக் கூடாது.