Sunday, June 11, 2023

ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!

 

அதிசயம் ஆனால் உண்மை! ENDLF ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!! 

ENDLF என்ற இயக்கம் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப் பட்டது. அதில் இணைக்கப் பட்ட இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தவர்கள். 

1986 ஆம் ஆண்டு ஈழத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்ட TELO, PLOTE, EPRLF ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்; இந்தியாவில் இருந்தவர்களும், இலங்கையில் இருந்து சென்றவர்களும் மண்டபம் முகாமில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு அகதி முகாம்களில் இருந்த இளைஞர்களை அணி திரட்டி இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் அல்ல. இதற்கு முன்னர் எந்த இயக்கத்திலும் இருந்திராத அகதி இளைஞர்களும் சேர்க்கப் பட்டனர். அவ்வாறு உருவானது தான் ENDLF. 

இந்திய இராணுவம் இலங்கை செல்லும் நேரம் இவர்கள் துணைப் படையாக இயங்க வேண்டும். நிலைமை சீரானவுடன் ஈழப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் கையளிக்கப் படும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்த அகதிகள் அத்தனை பேரும் மீள்குடியேற்றம் செய்யப் படுவார்கள். அன்று இது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 

ஆனால் வரலாறு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. போரின் முடிவில் இந்திய இராணுவத்துடன் ENDLF உம் வெளியேறியது. ஆயுதபாணிகள் மீண்டும் அகதிகள் ஆனார்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் முறிந்த படியால் ஒட்டுமொத்த அகதிகளும் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

Friday, June 09, 2023

கஜேந்திரகுமார் கைது தொடர்பாக...

7 June 2023, அன்று கொழும்பில் TNPF தலைவர் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கும் அப்பால், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் அவரது கருத்து சுதந்திரம் பறிக்க படுவது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக கஜேந்திரகுமாருடன் துணை நிற்போம். 

 அதே நேரம் கஜேந்திரகுமாரின் கட்சியினரும் தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ்த்தேசிய அரசியலில் தாங்கள் மட்டுமே புனிதர்கள் என்ற மிதப்பில், இன உயர்வுச் சிக்கல் மனப்பான்மை காரணமாகவும் மற்றவர்களிடமிருந்து தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டவர்கள். 

இவர்களே ஒரு நாளும் சொந்த இன மக்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கவில்லை. அதையே அரசு இவர்களுக்கு செய்யும் பொழுது மட்டுமே புரிகிறது. சொந்த இனத்தில் மாற்றுக் கருத்து வைப்பவர்களை எல்லாம் "துரோகிகள், ஒட்டுக்குழுக்கள்" என்று முத்திரை குத்தி, தாமும் சிங்கள பேரினவாத அரசுக்கு சளைக்காத தமிழ்ப் பேரினவாத கருத்தியல் அடக்குமுறையாளர்கள் என்பதை நிரூபித்தவர்கள். அரசும் அதே "துரோகி" முத்திரையை தான் இவர்களுக்கும் குத்துகின்றது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். 

ஒரு வருடத்திற்கு முன்னர் தெற்கில் நடந்த "அரகலய" என்ற மக்கள் எழுச்சியில் தமிழ் மக்கள் பங்குகொள்ள கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அது "சிங்களவர் போராட்டம்" என்று இனவாத அடிப்படையில் நிராகரித்தார்கள். போராட்டத்தை தொடர்ந்து தெற்கில் பல மாணவர் அமைப்பினரும், தொழிற்சங்கவாதிகளும் கைது செய்யப்பட்ட நேரம் இவர்கள் அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தார்கள். (வழமை போல "அது சிங்களவர் பிரச்சினை" என்ற புறக்கணிப்பு). 

பொலிசார் கைது செய்ய வந்த நேரம் கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு சிங்களத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் அரச அடக்குமுறை குறித்து சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தினார். நல்ல விடயம். இப்போதாவது இன ஐக்கியத்தின் மூலம் தான் அரச ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட முடியும் என்ற ஞானம் பிறந்திருக்கிறது. 

இனிமேலும் "இரு தேசம், புலிப் பாசம்" என்று கற்பனாவாத கதைகளை பேசிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும். ஒடுக்கப்படும் சிங்கள, முஸ்லிம் உழைக்கும் வர்க்க மக்களுடன் தமிழர்களையும் ஒன்றுசேர்த்து, IMF ஆணைப் படி நடக்கும் ஸ்ரீலங்கா அரச இயந்திரத்திற்கு எதிராக போராட முன்வருவீர்கள் என நம்புகிறேன்.

Tuesday, June 06, 2023

டிஸ்கோ நடனத்தை தடைசெய்த புலிகள் & தாலிபான்!

யாழ் குடாநாட்டில், எண்பதுகளின் தொடக்கத்தில், இளைஞர்கள் மத்தியில் டிஸ்கோ நடனக் கலாச்சாரம் பரவி இருந்தது. சிறிய கிராமங்களில் கூட இரவில் மின் விளக்கொளியில் நடனப் போட்டிகள் நடக்கும். 

பெரும்பாலும் தென்னிந்திய திரையிசைப் பாடலுக்கு தான் அபிநயம் பிடிப்பார்கள். தனியாகவும் குழுவாகவும் ஆடுவார்கள். போட்டியில் வெல்லும் இளைஞருக்கு அல்லது குழுவுக்கு பரிசில்கள் வழங்கப் படும். பேபி ஷாலினி என்ற ஒரு 8-9 வயது சிறுமி மிகப் பிரபலமான நடனத் தாரகையாக இருந்தார். அவரது நடனத்தை பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். அதை விட தனிப்பட்ட முறையில் சில இடங்களில் திருமண, பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் டிஸ்கோ நடன நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு இந்த டிஸ்கோ நடனம் ஈழத்தமிழ் மக்களது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 

அப்போது யாழ் குடாநாடு முழுவதும் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லா இயக்கங்களும் சமமான அதிகாரத்துடன் இருக்கையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. யாரும் மக்களின் கலாச்சார நிகழ்வுகளில் தலையிடவில்லை. ஒரு கட்டத்தில், 1986 ம் ஆண்டு, புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து விட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அதற்குப் பிறகு தான் கலாச்சாரக் காவலர் வேலையில் இறங்கினார்கள். "இந்திய சினிமாக்களால் ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரம் சீரழிவதாகவும்", குறிப்பாக டிஸ்கோ நடன நிகழ்வுகள் "சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என அறிவித்து விட்டு டிஸ்கோ நடன நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதித்தனர். அதற்குப் பிறகு, யுத்தம் முடியும் வரையில் அங்கே எந்தவொரு நடன நிகழ்வும் நடக்கவில்லை. பிரபல நடனத் தாரகை பேபி ஷாலினியும் அகதியாக வெளியேறி படகு மூலம் இந்தியாவுக்கு சென்று விட்டார். 

இது நடந்து ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்தனர். அவர்களும் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் டிஸ்கோ நடன நிகழ்வுகளை தடைசெய்தனர். அதற்கும் அவர்கள் "இந்திய சினிமாக்களால் ஆப்கான் கலாச்சாரம் சீரழிவதாக" ஒரு காரணம் சொல்லித் தான் தடையுத்தரவு போட்டார்கள். தாலிபான் மதத்தின் பெயரால் செய்ததை, புலிகள் இனத்தின் பெயரால் செய்தனர். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, பொதுவாக மக்கள் யாரும் நடனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இனத்தினதும், மதத்தினதும் பெயரால் நடக்கும் அரசியல் தான் மக்களின் கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கிறது.

Monday, June 05, 2023

"சோத்துக்கு திரண்ட கூட்டம்!"- சுகாஷுக்கு ஒரு திறந்த மடல்

சைக்கிள் கட்சி என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைமுன்னணி (TNPF) தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தும் போராட்டம் குறித்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் அந்த கட்சியின் பிரமுகர் சுகாஷ் இவ்வாறான கூற்றை வெளியிட்டிருந்தார்:

//இது சோத்துக்காகவோ போத்தலுக்காகவோ திரண்ட கூட்டமல்ல...// இந்தக் கூற்று ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே இதே சுகாஷ் தான் வட்டுகோட்டை சாதிய வன்முறையில், (பார்க்க:யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!  ) ஆதிக்க சாதியினர் பக்கம் நின்றார். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இவரது தேர்தல் வெற்றிக்காக உழைத்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் அந்த மக்களுக்காக வாதாட மறுத்தார். வாளால் வெட்டி வன்முறையாட்டம் போட்ட ஆதிக்க சாதி வெறியர்களுடன் சமரசமாக போகும் படி அறிவுரை கூறினார்.  தற்போது மறுபடியும் தனது "உயர்சாதி", மேட்டுக்குடி மனப்பான்மையை வெளியிட்டிருக்கிறார்.

அடித்தட்டு தமிழ் மக்களை இப்படி கேவலமாக சித்தரிக்கும் மேட்டுக்குடி கனவான்கள் தான் தமிழினத் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 😡😡😡 

இவர்கள் என்ன அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டதால், உண்ட களை தீர தினவெடுத்து வந்த கூட்டமோ? ஒருவேளை இந்த கூட்டம் சோத்துக்காக திரண்டால் அதில் என்ன பிரச்சினை? "சோத்துக்கு வழியில்லை" என்பதும் எம் மக்களது அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை தான். அந்த பிரச்சினை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு 3 நேரமும் தவறாமல் சோறு கிடைக்கிறது என்பதற்காக, அதற்கும் வழி இல்லாத மக்களை அவமானப் படுத்துவீர்களோ? நாவடக்கம் வேண்டும் கனவானே! 

Shame on you. 

உங்கள் மேட்டுக்குடித் திமிரை வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு நேர சோற்றுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சோத்துக்காக ஒன்று திரளக் கூடாதா? அது தப்பா? அதென்ன "போத்திலுக்காக"? உங்களிடம் பணமிருக்கிறது. வீட்டில் ஒரு முழுப் போத்தில் வெளிநாட்டு விஸ்கி வாங்கி வைத்து யாருக்கும் தெரியாமல் குடிப்பீர்கள். அவர்களிடம் கால் போத்தில் உள்நாட்டு சாராயம் கூட வாங்க காசில்லாமல் இருக்கலாம். அதற்காக வெட்கத்தை விட்டு "போத்திலுக்காக" வரலாம். இது கிண்டல் அடிக்கும் விடயமா? உங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மாதாந்த வருமானம் கிடைத்தால், அவர்கள் ஏன் சோத்துக்கும், போத்திலுக்கும் திரளப் போகிறார்கள்? முதலில் அதற்காக அல்லவா தாங்கள் போராட வேண்டும்?

Sunday, June 04, 2023

பெல்ஜியத்தை உலுக்கிய கொலை வழக்கு - வர்க்க நீதி

2018 ம் ஆண்டு பெல்ஜியத்தில் மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கொலை, அந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தற்போது பெல்ஜிய சமூகத்தை வர்க்க ரீதியில் பிளவு படுத்தும் விவகாரமாக உள்ளது. (பார்க்க: Escalatie in België na heksenjacht op daders fatale ontgroening: ‘Mensen spelen voor eigen rechter’

பொதுவாக பல மேட்டுக்குடியினரின் கல்லூரிகளில், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த திறைமைசாலி மாணவர்களுக்கும் இடம்கொடுப்பார்கள். அவ்வாறு தான் Sanda Dia என்ற ஆப்பிரிக்க பூர்வீகத்தை கொண்ட மாணவனுக்கும் இடம் கிடைத்தது. கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு பகிடி வதை அல்லது ரேங்கிங் நடப்பதுண்டு. அவ்வாறு சொல்லித் தான் குறிப்பிட்ட சில மாணவர்கள் Sanda Dia வை துன்புறுத்தியுள்ளனர். காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று குளிர் தண்ணீரில் மணித்தியால கணக்காக நிற்க வைத்து, ஒரு மீனை விழுங்கி, மீன் எண்ணெய் குடிக்க வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கங்கள் செயலிழந்து சுய நினைவற்று கிடந்தவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது. 

வருடக் கணக்காக இழுபட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கொலைக் குற்றம் தெளிவாக இருந்த போதிலும் குற்றவாளிகளுக்கு மென்மையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதாவது 400 யூரோ தண்டப்பணம், 300 மணிநேரம் கட்டாய வேலை. கொலைக் குற்றத்திற்கு இது தான் தண்டனை! அத்துடன் அவர்கள் பெயரில் குற்றப் பத்திரிகை பதிவுசெய்யப் பட மாட்டாது. ஆகவே எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கப் போகும் பதவிகளுக்கும் எந்த பிரச்சினையும் வராது. 

ஏனென்றால் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் மேட்டுக்குடி குடும்பங்களை சேர்ந்தவர்கள். நாளைக்கு இவர்கள் தான் அரசியல் தலைவர்களாக, மருத்துவர்களாக வலம்வரப் போகிறார்கள். இது தான் வர்க்க நீதி. வழக்கு முடிந்த பின்னரும் குற்றவாளிகளின் பெயர், விபரம் மறைக்கப்பட்டு வருகின்றது. இந்த அநீதி கண்டு கொதித்தெழுந்த ஒரு யூடியூப் குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட்டார். உடனே அந்த வீடியோ அகற்றப் பட்டது. சில காலம் எதுவும் வெளியிட தடைவிதிக்க பட்டது. 

ஆனால் பெல்ஜிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு குற்றவாளியின் பெற்றோர் நடத்தும் ஆடம்பர ரெஸ்டாரண்டில் போலியான முன்பதிவுகள் செய்து, எதிர்மறையான கருத்திட்டு நட்டமேற்படுத்தினார்கள். இன்னொரு குற்றவாளிக் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் சுவரில் கொலைகாரர்கள் என்ற வாசகம் எழுதப் பட்டது.