Friday, April 26, 2013

போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]

(பாகம் : இரண்டு)


கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.

(தொடரும்)இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் 

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Thursday, April 25, 2013

ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!


"இலங்கையில் சீனா முதலிட்டு வருகின்றது, ஆழமாக கால் பதித்து விட்டது, அது இந்தியாவுக்கு ஆபத்து..." என்று சிலர், இந்திய அரசுக்கு கோள் மூட்டிக் கொடுத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இன்னமும் 1962 ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

1962 ம் ஆண்டு, இந்திய - சீன எல்லைப் போர் நடந்ததும், அன்றில் இருந்து இரண்டு நாடுகளும் பகைவர்களாக நடந்து கொண்டதும் கடந்த கால வரலாறு. ஆனால், 21 ம் நூற்றாண்டில் உலகம் தலைகீழாக மாறி விட்டது. இன்றைக்கு இந்தியாவின் முதன்மையான வர்த்தகக் கூட்டாளி யார் தெரியுமா? நம்பினால் நம்புங்கள், அது சீனா தான்! இதனை நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்பது தெரியும். வேறு யார் சொல்ல வேண்டும்?  CIA யின் வருடாந்த அறிக்கையில், சீனா இந்தியாவின் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

இந்தியப் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பின்னர் தாராள மயப் படுத்தப் பட்டது. அப்போது அது, மேற்கத்திய நாடுகளின் முதலீட்டை எதிர்பார்த்திருந்தது.  குறிப்பாக, இயந்திரங்கள் போன்ற பெரும் மூலதனத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தருவிக்க வேண்டியிருந்தது. ஆனால், காலப்போக்கில் சீனா உலகில் பெரிய பொருளாதார வல்லரசாக மாறி வருகையில், இந்தியாவினால் அதனை தவிர்க்க முடியவில்லை. மேற்கத்திய நாடுகளிடம் வாங்க வேண்டிய அதே பொருட்களை, சீனாவிடம் குறைந்த விலைக்கு வாங்க முடிகின்றது. இன்று சீன உற்பத்தி சாதனங்கள், அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.  இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவில், சீனாவே ஆதிக்கம் செலுத்துகின்றது. ஏனென்றால், இன்று பெரும்பான்மையான இந்திய இறக்குமதிப் பொருட்கள் சீனாவில் வாங்கப் படுகின்றன. கடந்த வருடம் அது 12% மாக இருந்தது. அதே நேரம், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 6.3% மட்டுமே. (ஆதாரம்: CIA  World Fact Book) இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுக்கு காரணம், சீனாவுக்கு அவசியமான பொருட்கள் பல பொருட்கள் இந்தியாவிடம் கிடையாது. குறிப்பாக, பருத்தி, மற்றும் கனிமப் பொருட்கள் போன்ற மூலப் பொருட்கள் தான் முக்கியமான ஏற்றுமதியாக இருக்கின்றன. இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு நிரப்பப் பட வேண்டும் என்பது இந்தியாவின் கவலையாக உள்ளது. சீன தரப்பிலும் அதன் முக்கியத்துவம் உணரப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலிட்டு தொழில் நடத்த வேண்டும் என இந்திய அரசு விரும்புகின்றது.

"தமிழினக் காவலர்" வைகோ, இந்திய அரசுக்கு (அல்லது தமிழர்களுக்கு) சீனப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரம், அவரது மதிமுக கூட்டணி அமைத்துள்ள பாஜக, இந்தியாவில் சீனா முதலிட வேண்டுமென வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது.  "வருங்கால பிரதமராக" கருதப்படும், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, 2011 ல் சீனாவுக்கு விஜயம் செய்த நேரம், தனது மாநிலத்தில் சீனா முதலீடு செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்.   

சீன அரசின் முதலீட்டு வங்கி, இந்தியாவில் கிளையை திறந்துள்ளது. இதன் மூலம், தற்போது இலங்கைக்கு கிடைப்பதைப் போன்று, சீனக் கடன்கள் இந்தியாவுக்கு கிடைக்கலாம். இலகுவான சீனக் கடன்கள், சீன முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நிபந்தனைகளும் குறைவாக இருக்கும் என்பதால், இந்தியா விரும்பி ஏற்றுக் கொள்ள இடமுண்டு. அதற்கு மாறாக, IMF இடம் கடன் வாங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் பாடம் படிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவில் நுழைய விசா மறுக்கப்பட்ட, "குஜராத் இனப் படுகொலையாளி" நரேந்திர மோடி, எதற்காக சீனாவுக்கு சென்றார் என்பது இப்போது புரிந்திருக்கும். 

முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில், சீன நிறுவனம் ஒன்று, இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி உள்ளது. 70 மில்லியன் டாலரில் ஆரம்பிக்கப்பட தொழிற்சாலை, எல்லாம் நல்ல படியாக நடந்தால், முதலீட்டை இரட்டிப்பாக்கப் போவதாக அதன் நிர்வாகி தெரிவிக்கின்றார். இதை விட, குறைந்தது 10 சீன நிறுவனங்கள் ஏற்கனவே தொழிலகங்களை நிறுவத் தொடங்கி உள்ளன. 100 நிறுவனங்கள் தமது அலுவலகங்களை திறந்துள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, இந்திய சந்தைக்கான பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளது. உலகில் பிரபலமான கைத் தொலைபேசி தயாரிப்பாளரான Huawei பெங்களூரில் ஒரு ஆய்வு மையத்தை கட்டி வருகின்றது. 

இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளன. ஆனால், சீனாவின் வளர்ச்சி இந்தியாவினுடையதை விட பன்மடங்கு அதிகமானது என்ற உண்மையையும் மறுக்க முடியாது. இருபது வருடங்களுக்கு முன்னர் சீனா  இருந்த நிலையில், இன்று இந்தியா இருப்பதாக இந்திய பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, அந்த இருபது வருட காலங்களும் இந்திய சந்தை திறந்து விடப் பட்டிருந்தது. "இந்தியாவை வளப்படுத்தி வல்லரசாக்கும்", என பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட மேற்குலக நாடுகள், இந்தியாவை ஏமாற்றி விட்டதாக உணரும் காலம் வந்துள்ளது. அதே நேரம், இன்று மேற்குலக நாடுகள் கூட சீனாவில் தங்கியுள்ளன, என்ற யதார்த்தத்தையும் இந்தியா புரியாமல் இல்லை. 

மேலதிக தகவல்களுக்கு: 
Exploring India's Trade Deficit with China
China–India relations
China-India Bilateral Trade: Strong Fundamentals, Bright Future

Tuesday, April 23, 2013

சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்


(பாகம் -1)

சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி

15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவியல். முழங்கால் அளவு இரத்த ஆற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த பிணங்களை அகற்றி விட்டு போவது சிரமமான காரியமாக இருந்தது."

அன்று பிணக்காடாக மாறிய அல் அக்சா மசூதி இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் உள்ளது. அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற அன்று, வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அன்று மதியமே ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேம் நகரை கைப்பற்றி விட்டதால், பிற நகரவாசிகளும் மசூதிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஜெருசலேமில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல் அக்சா மசூதியை பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். மசூதிக்குள் இருந்த ஜெருசலேம்வாசிகள் ஐரோப்பியப் படைகளின் முன்னால் உயிர்ப்பிச்சை கேட்டு மண்டியிட்டார்கள். 

அவர்கள் கேட்ட பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு, விடுதலைக்காக காத்திருந்தார்கள். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கிக் கொண்ட கிறிஸ்தவப் படைகள், அதற்காகவேனும் மனம் இரங்கி அப்பாவிகளை வாழ விடவில்லை. பொழுது சாய்ந்ததும் மசூதியின் கதவுகளை மூடி விட்டு, அனைவரையும் கொன்று குவித்தார்கள். ஒரு மனிதப் பேரவலம் நடந்து முடிந்த அடுத்த கணமே, "லத்தீன் ஜெருசலேம் ராஜ்ஜியம்" பிரகடனம் செய்யப்பட்டது. இந்த "மகிழ்ச்சிகரமான செய்தியை" பாப்பரசருக்கு அறிவிக்க ஒரு தூதுவர் ரோமாபுரி நோக்கி பயணமானார். (The Damascus Chronicle of the Crusades: Extracted and Translated from the Chronicle of Ibn Al-Qalanisi. Dover Publications, 2003 )

சிலுவைப்போர் என்ற சொல், இன்றைக்கும் உணர்ச்சிகளை கிளறி விடுகின்றது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு தடவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை சிலுவைப்போர்" என்று வர்ணிக்க, உலகம் முழுவதும் கண்டனங்களை எதிர்கொண்டது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியதால், சிலுவைப்போர் என்று வாய்தவறி சொல்லி விட்டதாக, புஷ் வாபஸ் வாங்க வேண்டி நேரிட்டது. மேற்குலகில் சிலுவைப்போர் வெறும் மதம் சார்ந்த போராக மட்டுமே கருதப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கில் அது பழைய ரணங்களை கிளறி விடுகின்றது. 

நீண்டகாலமாக, சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை மேற்குலகம் வீர புருஷர்களாக மதித்தது. ஆனால் மத்திய கிழக்கின் அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டது. "காட்டுமிராண்டிகள், கொடியவர்கள், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள், பெண்களின் கற்பை சூறையாடியவர்கள்."   இவ்வாறு தான், அரேபியர்கள் எழுதி வைத்துள்ள சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஜெருசலேமை மீட்பது என்ற பெயரில், பாப்பரசர் அனுப்பிய படைகள் கிறிஸ்தவ மதம் என்ற உன்னத குறிக்கோளுடன் சென்றதாக மேற்குலகில் பலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியெங்கும் படுகொலைகளும், கொள்ளயிடலும் தாராளமாக இடம்பெற்றன. இன்றைக்கும் கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரையிலான பிரதேச மக்கள் இந்தக் கதைகளை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நான் இங்கே கூறப்போகும் தகவல்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். "ஆதாரம் உண்டா?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்ய வருவார்கள். ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் வாழ்பவர்கள், "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று அவதூறு செய்யலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம், சிலுவைப்போர் பற்றிய ஆழமான பக்கச்சார்பற்ற ஆய்வு தமிழில் கிடைப்பது அரிது. கிறிஸ்தவ மதத்தின் இருண்ட பக்கமாக கருதப்படும் சிலுவைப்போர் பற்றிய எதிர்மறையான தகவல்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

சிலுவைப்போரின் பின் விளைவாகத் தான் இந்திய உப கண்டத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. காலனிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மதத்துடன், மேற்குலக அரசியல் கொள்கைகளை புகுத்தினார்கள். அந்த அரசியலின் பின்னணியில் இருந்து தான் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றனவே அன்றி, கிறிஸ்தவ மத நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், சிலுவைப்போர்களினால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட  பாதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், சிலுவைப் போர்வீரர்கள், முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு முன்னர், (கிரேக்க) கிறிஸ்தவர்களை  படுகொலை செய்தார்கள்! அதற்கு முன்னர், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தார்கள்!! ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற, முதலாவது யூத இனப்படுகொலையை நடத்தியது ஹிட்லர் அல்ல! மாறாக, போப்பாண்டவருக்கும், சிலுவைப்போர்வீரர்களுக்கும், அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது!!!

சைப்ரஸ் தீவின் கேந்திர முக்கியத்துவம் சிலுவைப்போர் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது. வெனிஸ் நாட்டில் (இன்று இத்தாலியில் ஒரு நகரம்) இருந்து சென்ற சிலுவைப் படைகள் அந்த தீவை கைப்பற்றி கோட்டைகளை அமைத்திருந்தன. சைப்ரஸ் தீவில் இருந்து லெபனான், அல்லது இஸ்ரேல் கூப்பிடு தொலைவில் உள்ளன. இதனால் அங்கிருந்து தான் கடல்மார்க்கமாக சிலுவைப் படைகள் ஜெருசலேம் மீது படையெடுத்தன. சைப்ரசில், லிமாசொல் நகருக்கு அருகில் கொலோசி என்ற இடத்தில் சிறிய கோட்டை உள்ளது. இன்றைக்கும் நல்ல நிலையில் காணப்படும் அந்த பாதுகாப்பு அரணில் சிலுவைப்படைகள் தங்கியிருந்தன. 

நான் சைப்பிரசில் தங்கியிருந்த காலத்தில், கொலோசி கோட்டைக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருக்கிறேன். போகும் வழியில் சந்திக்கும் சைப்ரஸ்காரர்கள், அந்த இடத்தை பற்றிய சரித்திரக் கதைகளை கூறத் தொடங்கி விடுவார்கள். சாதாரண டாக்சி சாரதி முதல், கடைச் சிப்பந்தி வரை சிலுவைப்போர் கதைகளை வெளிநாட்டவர்களுக்கு கூறுவதற்கு விரும்புகின்றனர். லிமசோல் மாவட்டத்தில், அதாவது தென் சைப்ரசில் வாழும் மக்கள் அனைவரும் நூறு வீதம் (கிரேக்க) கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த யாருமே சிலுவைப்போர் குறித்து நல்ல வார்த்தை கூறவில்லை. "சிலுவைப் போர்வீரர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மொத்தத்தில் காட்டுமிராண்டிகள்!" இது தான் அங்கு நிலவும் பொதுவான கருத்து.

சிலுவைப்போர் குறித்து இன்றைக்கும் போதுமான அளவு தகவல்கள் மக்களை போய்ச் சேரவில்லை. மேற்கு ஐரோப்பாவில் அறுபதுகளில் வீசிய மதச்சார்பற்ற அலை, கடந்த காலத்தை மீள் ஆய்வுக்குட்படுத்தியது. இரண்டாயிரம் வருட வரலாற்றில் ஐரோப்பியர்கள் தமது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து விலகிச் சென்றனர். சுதந்திரமான தகவல் பரிமாற்றமே உண்மையை கண்டுபிடிக்க எதுவாக இருக்கும். ஆகவே மேற்கத்திய அறிஞர்கள் சிலுவைப்போர் குறித்த மத்திய கிழக்கு மக்களின் கருத்துகளை கேட்க ஆரம்பித்தார்கள். அது பற்றி எழுதப்பட்ட அரபி சரித்திர நூல்களை மொழிபெயர்த்தார்கள். 

தற்போது, மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் திருத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரம் போதிக்கப்படுகின்றது. சிலுவைபோரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், வன்கொடுமைகளை பற்றி புதிய தலைமுறை படிக்கின்றது. இவற்றைப் படிப்பதாலோ, பேசுவதாலோ, இங்கே யாரும் "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று முத்திரை குத்தப்படுவதில்லை. மாறாக 2000 ம் ஆண்டு, சிலுவைப்போர் கால குற்றங்களுக்காக வத்திக்கான் பொறுப்பேற்றுக் கொண்டது. Mea Culpa (எனது குற்றம்) என்ற பெயரில் பாப்பரசர் பகிரங்கமாக பாவமன்னிப்புக் கேட்டார். ஆகவே இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதை எல்லாம் உண்மை என்று வத்திகானே ஒப்புக் கொண்ட பிறகு, "ஆதாரம் உண்டா?" என்று என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

(தொடரும்)


*********************************************

சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Saturday, April 20, 2013

இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்


"ஆயுதப்போராட்டம் அல்லது அரசியல் வன்முறை" என்பது மூன்றாமுலக நாடுகளின் தோற்றப்பாடு என்றும், முதலாம் உலக நாடுகளில் அதற்கு இடமில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகப் பெருமை வாய்ந்த அமைதிப்பூங்காவான மேற்கத்திய நாடுகளில், பல ஆயுதப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இயங்கிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்கள் பற்றி, இன்று பலருக்குத் தெரியாது.

எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால், அது "இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று, உடனேயே பலர் முடிவு கட்டி விடுகின்றனர். எழுபதுகளில், எண்பதுகளில் இருந்த உலகம் வேறு. அன்று எங்காவது ஒரு குண்டுவெடிப்பு நடந்தால், அது "இடதுசாரி தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று முடிவெடுத்து விடுவார்கள். இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இஸ்லாமிய தீவிரவாதத்தை வெளிநாட்டுக் குடியேறிகளுடன் முடிச்சுப் போடுவார்கள். ஆனால், இடதுசாரி தீவிரவாதத்துடன், உள்நாட்டு பூர்வீக வெள்ளையின மக்கள் சம்பந்தப் பட்டிருப்பார்கள். "இஸ்லாமிய தீவிரவாதம்" ஒரு மதம் சார்ந்தது. அதே நேரம், "இடதுசாரி தீவிரவாதம்" ஒரு கொள்கை சார்ந்தது. இருப்பினும், அரசு இரண்டு தரப்பினரையும் ஈவிரக்கமின்றி அடக்கி வந்துள்ளது. சந்தேகப்பட்டால், சுட்டுக் கொல்லவும் தயங்கவில்லை. மேற்கத்திய நாடுகளில், அரசின் மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், எழுபதுகளிலேயே தொடங்கி விட்டன.

ஜெர்மனியில் இயங்கிய RAF என்ற ஆயுதமேந்திய இடதுசாரி இயக்கத்தின் போராட்டம், ஏற்கனவே வெளியுலத்திற்கு தெரிந்திருந்தது. எழுபதுகளில், எண்பதுகளில், ஆயுதப்போராட்டம் நடைபெறாத மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகக் குறைவு எனலாம். ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகளும், அரசியல் படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன. சிறிய அளவிலான இடதுசாரி ஆயுதக்குழுக்கள் அதற்கு காரணமாக இருந்தன. அதே காலகட்டத்தில், நெதர்லாந்திலும் ஒரு இடதுசாரி ஆயுதக்குழு இயங்கி வந்தது. அந்தக் குழு பல அரசியல் வன்முறைகளில் ஈடுபட்ட போதிலும், அவர்களின் தாக்குதல்களில் யாரும் கொல்லப்படவுமில்லை, காயமடையவுமில்லை.

17 செப்டம்பர் 1987, ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள, மாக்ரோ (MAKRO) பல்பொருள் அங்காடி தீப்பிடித்து எரிந்தது. நெதர்லாந்தின் மிகப்பெரிய வர்த்தக நிலையம், முற்றாக எரிந்து நாசமாகியது. தீப்பிடிக்கக் கூடிய குண்டு ஒன்றை வெடிக்க வைத்து அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. குண்டு இரவில் வெடித்ததால், அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை. யாரும் காயமடையவில்லை. இதனால், MAKRO நிறுவனத்திற்கு, 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. பங்குச் சந்தையில், அதன் பங்குகள் சரிந்ததால், மேலதிக நஷ்டம் ஏற்பட்டது. MAKRO பல்பொருள் அங்காடி தாக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகள், எண்பதுகளின் இறுதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு, அந்த நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணம் என்று எல்லோராலும் நம்பப் படுகின்றது. உண்மையில், அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சோஷலிச நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளையும் பெரிதும் பாதித்திருந்தது. உண்மையில், ஐரோப்பா அன்றிருந்த நிலையில், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் வீழ்ச்சி அடைந்திருக்கா விட்டால், மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் வீழ்ச்சி அடைந்திருக்கும்! நிலைமை அந்தளவு மோசமாக இருந்தது. நெதர்லாந்தும் நெருக்கடியில் இருந்து தப்பவில்லை. வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. மாணவர்கள், இளைஞர்கள் இடதுசாரி தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப் பட்டனர்.

நாடு முழுவதும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மக்களின் கோபத்தை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்புவதில், இடதுசாரி இயக்கங்கள் வெற்றி கண்டன எனலாம். அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதில் இருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். அன்றிருந்த இடதுசாரி அலை, வெளிநாட்டு குடியேறிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இன்றைக்கு, பொருளாதார நெருக்கடியை  பயன்படுத்திக் கொண்டு, வலதுசாரி தீவிரவாதிகள் வெளிநாட்டவர் எதிர்ப்பு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். என்பதுகளுக்கும், தொண்ணூறுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை பார்க்கும் பொழுது, அரசே திட்டமிட்டு வலதுசாரி தீவிரவாதிகளை ஊக்குவித்திருக்கலாம் என்ற ஐயம் எழுகின்றது.

ஏற்கனவே, "ஸ்டாலினிச ஒழிப்பு" என்ற பெயரில், கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பு பலவீனப் படுத்தப் பட்டு விட்டது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்யவில்லை. ஆனால், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டதால், கட்சி பலவீனப் படுத்தப் பட்டது.  சமூகத்தில் இருந்து ஒதுக்கப் பட்டது. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை, அனார்கிஸ்டுகள் (அரச மறுப்பாளர்கள்) எனப்படும், புரட்சிகர இடதுசாரிகள் நிரப்பினார்கள். அரச கட்டமைப்பிற்கு இடமற்ற கம்யூனிச சமுதாயத்தை இலக்காக கொண்ட அனார்க்கிஸ்டுகள், உலகில் எந்த நாட்டிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க மாட்டார்கள். (ஆட்சி  என்ற சொல்லே அவர்களது கொள்கைக்கு முரணானது.) ஒரு பக்கம் முதலாளித்துவ நாடுகளையும், மறுபக்கம் சோஷலிச நாடுகளையும் கடுமையாக விமர்சிப்பார்கள். ஆகையினால், இவ்விரண்டு முகாம்களிலும் சேர விரும்பாத, இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்கள், அனார்க்கிச கொள்கைகளால் கவரப்பட்டனர்.

ஆம்ஸ்டர்டாம் மாநகரில், குறைந்த வாடகைக்கு வீடுகள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகும். இதனால், மாணவர்களும், இளைஞர்களும் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்பட்டனர். அதேநேரம்,   பல பழைய  கட்டிடங்கள்,  ஒருவருக்கும் பிரயோசனமில்லாமல் கைவிடப்பட்டிருக்கும். அப்படியான கட்டிடங்களின் கதவுகளை  உடைத்து உள்சென்று , அவற்றை வீடற்ற மக்களின்  வதிவிடமாக மாற்றிக் கொள்ளும் போக்கு தோன்றியது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களில், புரட்சியாளர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கிருந்து போராட்டங்களுக்கான திட்டங்களை வகுப்பார்கள்.

புரட்சிகர இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு, வீட்டுமனை முதலாளிகள் உரிமை கோருவார்கள். அவ்வாறு ஒரு தடவை, எண்பதுகளின் தொடக்கத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களை கைப்பற்றி முதலாளிகளுக்கு கொடுப்பதற்கான போலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, "அமைதிப்பூங்காவான சுதந்திர தேசத்தில்" வாழ்ந்த மக்கள், அரச அடக்குமுறைக்கு முகம் கொடுத்தார்கள். "அடடா, அரசு என்பது இது தானா? வாருங்கள்...நாங்களும் தயாராக இருக்கிறோம். எம் மீது தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்..." நெதர்லாந்து அரசை நோக்கி பகிரங்க சவால் விடுக்கப் பட்டது. 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் தடவையாக, ஆம்ஸ்டர்டாம் நகர தெருக்களில் யுத்த தாங்கிகள் உருண்டோடின. பொலிசை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்த, இந்த  பொலிஸ் அடக்குமுறையானது, பல இளைஞர்களை ஆயுதப்போராட்டம் குறித்து சிந்திக்க வைத்தது. போர்க் குணாம்சம் கொண்ட இளைஞர்கள் "இயக்கம்" ஒன்றை உருவாக்கினார்கள். தலைமறைவாக இயங்கிய படியால், அது "இயக்கம்" (De Beweging) என்ற பெயரிலேயே  குறிப்பிடப்பட்டது. இயக்கம், பல்வேறு குழுக்களையும், பலதரப்பட்ட போராட்ட வழிமுறைகளையும் உருவாக்கியது. அதில் ஒன்று தான், "இனவெறிக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கை" எனும் அமைப்பு. டச்சு மொழியில், "Revolutionaire Anti Racistiese Aktie". சுருக்கமாக "RaRa" (ராறா).

அந்தக் காலத்தில், தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு ஆட்சி நடத்தியது. அது, Apartheid என்ற பெயரில், இன ஒதுக்கல் கொள்கை மூலம், கறுப்பின பெரும்பான்மையினரின் உரிமைகளை பறித்தது. தென்னாப்பிரிக்கவில் குடியேறிய வெள்ளையினமான, "ஆப்பிரிக்கானர்கள்" என்றழைக்கப் படுவோர், டச்சுக்காரர்களின் வம்சாவளியினர் ஆவர். அவர்கள் பேசும் "ஆப்பிரிக்கான் மொழி", கிட்டத்தட்ட டச்சு மொழி போன்றிருக்கும். இந்த தொடர்பு காரணமாக, பல நெதர்லாந்து நிறுவனங்கள் தென்னாபிரிக்காவில் முதலிட்டு வந்தன. இந்த வர்த்தக தொடர்பு, எண்பதுகளிலும் தொடர்ந்தது. உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்க இன ஒதுக்கல் கொள்கையை கண்டித்து பொருளாதாரத் தடை கொண்டு வந்திருந்தன. அப்போது கூட, நெதர்லாந்து கம்பனிகள் வழமை போல வர்த்தகம் செய்து வந்தன. தென்னாபிரிக்காவில் சில முதலீடுகளில், நெதர்லாந்து அரச குடும்பத்திற்கும் பங்கிருந்தது.

MAKRO  பல்பொருள் அங்காடி தாக்குதலுக்கு, RaRa  உரிமை கோரியது. MAKRO  வின் தலைமை நிறுவனத்தின் பெயர்: Steenkolen Handelsvereniging (SHV). SHV, தென்னாபிரிக்காவில் முதலிட்டு, வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. "நிறவெறி கொள்கையை கடைப்பிடிக்கும் தென்னாபிரிக்காவில் இருந்து வெளியேறுமாறு, நாம் பல தடவைகள் எச்சரித்தும் கேட்காததால், இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறோம்." என்று RaRa  வெளியிட்ட உரிமைகோரும் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. உண்மையில், ஆரம்பத்தில் MAKRO நிர்வாகம் இந்த பயமுறுத்தலை பொருட்படுத்தவில்லை. மீண்டும் கடையை திறந்து, வழக்கம் போல வியாபாரம் செய்து வந்தது. 18 டிசம்பர் 1986 அன்று, மீண்டுமொருமுறை மாக்ரோ தீப்பிடித்து எரிந்தது. இம்முறையும், பல கோடி சேதம். அரசு இந்தத் தாக்குதல்களை "பயங்கரவாதம்" என்று கூறியது. ஆனால், "பயங்கரவாதத்தினால் பலன் கிடைத்தது." SHV தனது முதலீடு முழுவதையும், தென்னாபிரிக்காவில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. அந்த விடயத்தில், RaRa வுக்கு வெற்றி கிட்டினாலும், போராட்டம் ஓயவில்லை.

"ஒரு சில தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களால், ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை மண்டியிட வைக்க முடியும்," என்ற உண்மை, அரசிற்கு சங்கடத்தை உண்டாக்கியது. நாலா பக்கமும் இருந்து பறந்து வந்த கண்டனக் கணைகளில் இருந்து தப்புவதற்காக, அரசு ஒரு சிறப்புப் படையணியை உருவாக்கியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு இரகசியமான இடத்தில் இயங்கிய, 26 பேர் கொண்ட ஆய்வாளர் குழுவிற்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சாதாரண கிரிமினல்களை விட, மிகவும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் இயங்கிய RaRa  வை பிடிக்க முடியவில்லை.

முதலில், "Bluf" என்ற இடதுசாரி சஞ்சிகை ஆசிரியர், வைனண்ட் டைவன்டாக்  (Wijnand Duyvendak) மீது சந்தேகம் எழுந்தது. வைனன்ட் பின்னர் சில வருடங்கள், Groen Links  என்ற பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவர் மீது சந்தேகப்பட வைத்த ஒரே காரணம்: "RaRa  உரிமை கோரும் பிரசுரம் அவரின் சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது தான்!" பகிரங்கமாக இயங்கிய வைனண்ட், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக சாத்வீக வழியில் போராடி வந்தார். தான் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறி வந்தார். ஆயினும், அவரை பிடித்து விசாரித்த போலிஸ், ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விட்டு விட்டது.

புலனாய்வுத்துறைக்கு தகவல் கொடுக்கும் ஒரு உளவாளி, "வைனன்ட் RaRa அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்" என்று கூறியுள்ளார். ஆயினும் என்ன? அதனை உறுதிப் படுத்தும் ஆதாரம் எதுவும் கிடையாது. RaRa தலைவர்கள் யார் என்பது, இன்று வரைக்கும் மர்மமாகவே உள்ளது. RaRa இயக்கத்தில், மொத்தம் எத்தனை பேர் இயங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும், இன்று வரையும் யாருக்கும் தெரியாது. இரகசியம் பேணல் மட்டுமல்ல, உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்புகள் இல்லாமையினாலும், புலனாய்வுப் பிரிவின் கழுகுக் கண்களுக்கு தப்ப முடிந்தது.

RaRa, தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் நின்று விடவில்லை. நெதர்லாந்து அரசு, அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தை எதிர்த்து வந்தது. அகதிகள், வெளிநாட்டவரை நாட்டுக்குள் அனுமதிப்பதில் இறுக்கத்தை கடைப்பிடிக்கும் நெதர்லாந்து அரச கொள்கைக்கு எதிராக போராட முடிவெடுத்தது. ஜனவரி 1988, Schiedam எனுமிடத்தில் உள்ள கடவுச்சீட்டு அச்சிடும் தொழிற்சாலைக்கு குண்டு வைக்கப் பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அலாரம் அடித்ததால், குண்டு வெடிக்காமலே, வைத்தவர்கள் ஓடி விட்டார்கள். வெடிக்காத குண்டில் இருந்த கைரேகை அடையாளத்தை வைத்து, ரேனே ரூமெர்ஸ்மா (René Roemersma) என்ற நபர் பிடிபட்டார்.

BVD  என்ற புலனாய்வுத்துறையும், பொலிசின் சிறப்புப் பிரிவும் இணைந்து, தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இடதுசாரி இயக்கங்களினுள் ஊடுருவியிருந்த உளவாளிகளிடம் இருந்து சில தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 150 பேரைக் கொண்ட பொலிஸ் படை, ஆம்ஸ்டர்டாம் நகரில் பல வீடுகளில் சோதனை நடத்தி, ஒன்பது பேரைக் கைது செய்தது. குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடையாததால், கைது செய்யப்பட்ட பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ரேனே க்கு மட்டும், ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இருப்பினும், தேடுதல் வேட்டையின் போது, ஆதாரங்களை திரட்டுவதில் பொலிஸ் சில தவறுகளை விட்டமை தெரிய வந்ததால், அந்த தண்டனையும் குறைக்கப் பட்டு, 18 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

RaRa அமைப்பில், மொத்தம் ஐந்து பேர் மட்டுமே இருந்திருப்பார்கள் என்று பொலிஸ் நம்பியது. அவர்கள் அனைவரையும் பிடித்து விட்டதால், அந்த இயக்கம் அழிந்து விட்டது என்று நினைத்திருந்தது. அதாவது, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டு விட்டாலும், தொடர்ந்தும் பொலிஸ் கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்களால் வன்முறைகளில் ஈடுபட முடியாது. ஆனால், சில மாதங்களில் வெடித்த குண்டு ஒன்று, பொலிசின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாகியது.

ஹில்வெர்சும் (Hilversum) நகரில், Shell Thermo Centrum மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. அதனை அடுத்து, ஆர்னெம் (Arnhem), ஒல்டென்சால் (Oldenzaal) நகரங்களில் அமைந்திருக்கும், மிலிட்டரி - போலிஸ் முகாம்களுக்கு அருகில் குண்டுகள் வெடித்தன. இறுதியாக, 1991 ம் ஆண்டு, உள்துறை அமைச்சகம் சக்தி வாய்ந்த குண்டினால் தாக்கப்பட்டது. கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், அமைச்சு உயர் அதிகாரி  ஆட் கோஸ்டோ (Aad Kosto) வீட்டிலும் குண்டொன்று வெடித்து, வீடு கடுமையாக சேதமுற்றது. இந்த தாக்குதல்களுக்கு எல்லாம், RaRa உரிமை கோரியது.

நெதர்லாந்து அரசு, பொலிஸ், புலனாய்வுத் துறை எல்லாவற்றிற்கும் பெரியதொரு தலையிடி வந்தது. யார் இந்த RaRa? இன்னமும் பிடிபடாத பழைய உறுப்பினர்களா? அல்லது புதிதாக யாராவது அந்தப் பெயரில் இன்னொரு இயக்கம் தொடங்கி இருக்கிறார்களா? பொலிஸ் அதனை, "இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்களின் இயக்கம்" என்று சந்தேகிக்கின்றது. விடுதலையான ரேனே ரூமெர்ஸ்மா அது குறித்து கருத்து தெரிவிக்கையில்: "RaRa என்பது ஒரு புரட்சிகர சித்தாந்தம். அதற்கு காப்புரிமை எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்தப் பெயரில் இயங்கலாம்." என்று தெரிவித்தார். நம்பினால் நம்புங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடாக இருந்த நெதர்லாந்தில், இரண்டாம் தலைமுறையை சேர்ந்த RaRa உறுப்பினர்கள் இன்னமும் பிடிபடவில்லை! அது மட்டுமல்ல, அவர்கள் யார், என்ன பெயர் என்ற விபரம் எதுவும் தெரியாது. உலகில் இன்று வரையும் துலக்கப்படாத மர்மங்களில் அதுவும் ஒன்று.

************

RaRa பற்றிய ஆவணப்படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டு பாகங்களை கொண்ட ஆவணப்படத்தின் இணைப்புகளை இங்கே தருகிறேன்.

De explosieve idealen van RaRa 

Wednesday, April 17, 2013

அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு

[இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை] 
(இரண்டாம் பாகம்)இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் "இந்தியர்களின் நாடு" உருவாகி இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.

நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு" நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.

ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI)  சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது "கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்..." என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், "கத்தியின்றி, இரத்தமின்றி" புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை.  ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன.  இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.

1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இஸ்லாமிய மதகுருக்கள், வெளிப்படையாகவே நிலப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.  "கடவுள் மறுப்பாளர்களான கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்கு, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரலாம்." இஸ்லாமிய மதவாதிகளின் நாஸ்திக எதிர்ப்பு பிரச்சாரம், கடவுள்  நம்பிக்கையுள்ள ஏழை விவசாயிகளை மனம் திரும்ப வைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.

30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.

வான்படையில் சில  முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக,  PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.

உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.

சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.  கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும்  நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.

ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும்  தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.

உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென,  சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், "கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு" என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் இரகசிய தொடர்பிருந்திருக்கலாம்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 5000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலினை, அமெரிக்க தூதரகம் சுஹார்ட்டோவுக்கு விசுவாசமான படைகளிடம் கொடுத்திருந்தது. இந்த தகவலை ஜகார்த்தாவில் பணியாற்றிய CIA அதிகாரியான Clyde McAvoy  உறுதிப் படுத்தி உள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA  வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.  (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசிய இனப்படுகொலையில், அமெரிக்க அரசும் சம்பந்தப் பட்டிருந்தமை, இத்தால் உறுதிப் படுத்தப் படுகின்றது.

"கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?"  என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம்.  அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி  படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)

அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், "கம்யூனிஸ்டுகளை கொன்றது இனப்படுகொலை ஆகாது" என்று வாதாடுபவர்கள், எதனை  அடிப்படையாக கொண்டு கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறுகின்றார்கள்? பொல்பொட் ஆட்சிக் காலத்தில் நடந்த, "கம்போடிய இனப்படுகொலையை" விசாரிப்பதற்கு ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஏன் இந்தோனேசியாவில் அத்தகைய நீதிமன்றம் ஒன்று செயற்படவில்லை? ஏன் சர்வதேச சமூகம் அது குறித்து பாராமுகமாக இருக்கிறது?

(முற்றும்)

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை


உசாத்துணை:
1. De Stille Genocide, Lambert J.Giebels
2. De Groene Amsterdammer 28.02.2013
3. De Indonesische coup van 1965 (Historisch Nieuwsblad)
4. De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski
5. Legacy of Ashes: The History of the CIA, Tim Weiner

1965 ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் நடந்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ:

Monday, April 15, 2013

ஈழத் தமிழரின் தாகம் "தமிழீழ சோஷலிசக் குடியரசு"!முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், "இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும், ஈழத் தமிழரின் வரலாறு" இது.  1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு  "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் பாகுபாடும் ஒழித்துக் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சிப் பிரதேசம். சிங்களவர்களுக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை. சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடனும், சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் நட்புறவு பேணப்படும். 

" 1977 ம் ஆண்டு, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு தமிழீழம் வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்து விட்டார்கள்..."  இவ்வாறு இன்றைக்கு பல தமிழீழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.  தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட, தமிழர் விடுதலைக் கூட்டணி, அந்தத் தேர்தலில் மொத்தம் 18 ஆசனங்களை வென்றிருந்தது. அதனால், இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறி, எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது. அந்தளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், தமிழ் மக்கள் எத்தகைய தமிழீழத்திற்காக வாக்களித்து இருந்தார்கள்? வெறும் தமிழீழத்திற்கா? முதலாளித்துவ தமிழீழத்திற்கா? அல்லது சோஷலிசத் தமிழீழத்திற்கா? இன்றைய தமிழ் தேசியவாதிகளிடம் கேட்கப்படும், அந்த ஒரேயொரு கேள்விக்கு மட்டும், எந்தப் பதிலும் கூறாமல் ஓடி ஒளிக்கின்றனர்.

நிச்சயமாக, முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை ஆதரிக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்தக் கேள்வி கசக்கவே செய்யும். ஏனென்றால், அவர்கள் ஒரு வரலாற்றுத் திரிபை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது முதலாளிய கொள்கைகளை, தமிழ் மக்கள் மேல் திணிப்பதற்காக, அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்மொழிந்த "சோஷலிசத் தமிழீழம்" என்ற கருத்தியலை மறுத்தும், மறைத்தும் பேசி வருகின்றனர். 1977 க்குப் பின்னர் பிறந்த தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு, அந்த வரலாறு தெரிந்திருக்கப் போவதில்லை. அதனால், அவர்களின் மூளைக்குள் "தமிழரின் தாகம் முதலாளித்துவ தமிழீழம்" என்ற கருத்தியலை இலகுவாக திணிக்க முடிகின்றது. 

1977 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அன்று மக்களுக்கு விநியோகித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கே தருகிறேன். அதில் தமிழீழம் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதை, மிகவும் கவனமாக வாசிக்கவும். "1977 இலேயே,  ஈழத் தமிழர்கள், தமிழீழம் வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள்," என்ற கூறுபவர்கள்; அந்தத் தீர்மானம் சோஷலிசத் தமிழீழத்திற்கானது என்ற உண்மையையும் தெரிந்து கொள்ள  வேண்டும். அதாவது, வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மகாநாட்டில், தமிழீழமே முடிந்த முடிவு என்று தீர்மானிக்கப் பட்டிருந்தாலும், அதனை தமிழ் மக்கள் முன்னால் எடுத்துச் செல்லும் பொழுது, தமது இலட்சியம் ஒரு "சோஷலிசத் தமிழீழம்" என்று கூறினார்கள். ஏனெனில், சோஷலிசத்திற்கு மாற்றான எந்த அரசியல்-பொருளாதார கட்டமைப்பையும், தமிழ் மக்கள் அன்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. 

*********

1977 ம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து சில பகுதிகள்:

தமிழீழம் - ஒரு மதச்சார்பற்ற சோஷலிச நாடு 

முற்று முழுதான முடிவுடன் அறிவிக்கக் கூடிய, ஒரேயொரு மாற்று மட்டுமே உண்டு. எமது முன்னோரின் மண்ணை, நாம் மட்டுமே ஆள வேண்டும். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியானது, 1977 பொதுத் தேர்தலை, சிங்கள அரசுக்கு தமிழ் தேசத்தை அறிவிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக பார்க்கின்றது. நீங்கள் கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும், சிங்கள மேலாதிக்கத்தில் இருந்து தமிழர் தேசத்தை விடுதலை செய்வதற்கானது என கருதப்படும். 

அதிலிருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தத் தேர்தலில், தமிழர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றது. ஒரு சுதந்திரமான, மதச் சார்பற்ற, சோஷலிசத் தமிழீழம், பூகோளரீதியாக தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணை உள்ளடக்கி இருக்கும். 

அதே நேரத்தில், தமிழீழத்தின் பின்வரும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிக்கின்றது. தமிழரின் தேசமான ஈழம் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அமைக்கப்படும். 

1. தமிழீழத்தின் பிரஜைகளாக அங்கீகரிக்கப் படுவோர்: 
  • (அ) தமிழீழப் பிரதேசத்திற்குள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்          அனைத்து மக்களும்.
  • (ஆ) இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழ் பேசும் நபர், தமிழீழத்தின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 
  • (இ) இலங்கை வம்சாவளியினரான தமிழ் பேசும் மக்கள், உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், தமிழீழத்திற்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 

2. அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும். ஆகவே, எந்தவொரு பிரதேசமும் அல்லது மதமும், இன்னொரு பிரதேசம், அல்லது மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப் பட மாட்டாது. சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி அமைப்பு போல, பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, பிராந்திய தன்னாட்சி அதிகாரம் உறுதிப் படுத்தப்படும். விசேடமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழீழத்தின் பகுதியில், ஒரு தன்னாட்சிப் பிரதேசம் அமைக்கப்படும். அவர்களது சுயநிர்ணய உரிமையும், பிரிந்து செல்லும் உரிமையும் மதிக்கப்படும். 

3. ஒன்றில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, ஒன்றை மற்றது காலனிப் படுத்தவோ, அந்தப் பிரதேச மக்களை சிறுபான்மையினர் ஆக்கவோ  அனுமதிக்கப் பட மாட்டாது. 

4. தீண்டாமைக் கொடுமை, சமூக அந்தஸ்து அல்லது பிறப்பால் தாழ்ந்தவராக கருதப்படும் அநீதி முற்றாக ஒழிக்கப் படும். அந்தக் குற்றங்களை புரிவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். 

5. தமிழீழ அரசு மதச் சார்பற்றது. அதே நேரத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சமமான அரச பாதுகாப்பும், உதவியும் வழங்கப்படும். 

6. தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ மொழியாக, தமிழ் மொழி இருக்கும். அதே நேரம், நாட்டில் வாழும்  சிங்களவர்கள் தமது மொழியில் கல்வி கற்பதற்கும், தமது சொந்த மொழியிலேயே அரசுடன் தொடர்பு கொள்ளவும் சுதந்திரம் வழங்கப்படும். சிங்கள நாட்டினுள் வசிக்கும் தமிழர்களின் மொழி உரிமையை மதிக்க வேண்டுமென சிங்கள அரசிடம் வேண்டப் படும்.

7. தமிழீழம் ஒரு விஞ்ஞான சோஷலிச நாடாக இருக்கும்.
  • (அ) மனிதனை மனிதன் சுரண்டுவது சட்டத்தால் தடை செய்யப்படும்.  
  • (ஆ) உழைப்பின் மேன்மை பாதுகாக்கப்படும். 
  • (இ) தனியார் துறை சட்ட வரையறைக்குள் அனுமதிக்கப்பட்டாலும், உற்பத்தி சாதனங்களும், விநியோகங்களும்  அரச உடைமைகளாக இருக்கும் அல்லது அரசினால் கட்டுப்படுத்தப் படும். 
  • (ஈ)குத்தகை விவசாயிகளுக்கும், தனியார் காணிகளில் குடியிருப்போருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். 
  • (உ)தமிழ் தேசமான ஈழத்தின் பொருளாதார அபிவிருத்தி, சோஷலிச திட்டமிடல் அடிப்படையில் இருக்கும்.
  • (ஊ) ஒரு தனிநபரோ, அல்லது குடும்பமோ சேர்க்கக் கூடிய அளவு செல்வத்தின் உச்ச வரம்பு தீர்மானிக்கப்படும். 

8. தமிழீழ சோஷலிசக் குடியரசானது அணி சேராக் கொள்கையை பின்பற்றும்.  அதே நேரத்தில், சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுக்கும், ஜனநாயக விடுதலை இயக்கங்களுக்கும் தனது ஆதரவை வழங்கும். 

9. தமிழீழ அரசானது, சிங்கள நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும்.  இரண்டு தேசங்களும் எதிர்நோக்கும் பரஸ்பர பிரச்சினைகள், சகோதரதத்துவ அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும். 

விடுதலை - எவ்வாறு அடையப்படும்? 

சுயநிர்ணய அடிப்படையின் கீழ், இறைமையுள்ள தாயகத்தை அமைக்கும் பணியை தமிழ் தேசம் பொறுப்பெடுத்துக் கொள்ளும். இதனை சிங்கள அரசுக்கும், உலகிற்கும் அறிவிப்பதற்கான ஒரே வழி, தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஆகும். இந்த வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், இலங்கை தேசிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதே நேரம், "தமிழீழ தேசிய பேரவை" ஒன்றையும் அமைத்துக் கொள்வார்கள். அந்த அமைப்பு, தமிழீழ அரசமைப்பு சட்டத்தை எழுதுவதுடன், அதனை நடைமுறைப் படுத்துவதன் மூலம் தமிழீழத்தின் சுதந்திரத்தை உருவாக்கிக் கொள்ளும். அதனை சாத்வீகமான வழியிலோ, அல்லது போராட்டம் ஒன்றின் மூலமோ அமைத்துக் கொள்ளும். தமிழீழ தேசியப் பேரவையானது, பொருளாதார அபிவிருத்தி, சமூக நலன், பிரதேச பாதுகாப்பு, கல்வி போன்றவற்றை எழுதி அமுல் படுத்தும். தமிழீழத்தின் சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

-Tamil United Liberation Front
General Election Manifesto (July 1977)

முழுமையான ஆவணத்தை வாசிப்பதற்கு:
Tamil United Liberation Front General Election Manifesto 1977

Thursday, April 11, 2013

"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!


மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம் 
(பாகம் : இரண்டு)
********
"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் 
(1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.)

மார்கரெட் தாட்சர் தனது பிரதமர் பதவிக் காலம் முழுவதும், செல்வந்தர்களின் மீட்பராகவே இருந்தார். ஆனால், பொது மக்களுக்கு முன்னால், மிகவும் எளிமையானவராக காட்டிக் கொண்டார்.  தொலைக்காட்சி காமெராவுக்கு முன்னால், பொது இடங்களில் குப்பை பொறுக்கிப் போட்டார்.  அவர் தன்னை, ஒரு மளிகைக் கடைக் காரனின் மகளாக காட்டிக் கொள்வதில் பெருமைப் பட்டார். அதே நேரம், அவர் ஒரு இலட்சாதிபதியை கணவராக பெற்ற பாக்கியத்தையும், பணக்கார நண்பர்களையும் பற்றிய விபரங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தா வண்ணம் பார்த்துக் கொண்டார். இந்த இரட்டை வேடம் காரணமாக, அவரால் பலரை ஏமாற்ற முடிந்தது.

இன்றைக்கும், தமிழ் முதலாளித்துவ ஊடகங்கள், மார்க்கரட் தாட்சரின் மரணத்தை, ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்பதைப் போல, மக்களுக்கு புளுகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டே, தமிழர்களின் எதிரியை மகிமைப் படுத்துகின்றனர். இந்த இரட்டை வேடம், அவர்களுக்கு புதிதல்ல. உலகம் முழுவதும், தென்னாபிரிக்க நிறவெறி அரசை கண்டித்து, அதன் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. மார்க்கரட் தாட்சர் நிறவெறியர்களுடன் சொந்தம் கொண்டாடினார். அப்போது சிறையில் இருந்த, கறுப்பின விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலாவை, பயங்கரவாதி என்று குறிப்பிட்டு பேசி வந்தார்.

தாட்சர் ஒரு இனவாதி என்ற ஐயம் பலருக்கு ஏற்படுவது இயல்பு. அவரைப் பொறுத்தவரையில், ஆங்கிலம் பேசும் மக்கள் மட்டுமே "நல்லவர்கள்", "நம்பகத் தன்மை" வாய்ந்தவர்கள். இதனால், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற ஆங்கிலேயர்கள் ஆளும் நாடுகள் மட்டுமே, பிரிட்டனின் நட்பு சக்திகள் என்று நம்பினார். அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான சகோதர பாசம், ஒரு அமெரிக்க நிறுவனம் ஒன்றின் "ஹெலிகாப்டர் விற்பனை ஊழலில்" விரிசல் கண்டது. இரண்டாம் உலகப்போரில், பிரிட்டன் (அமெரிக்காவுடன் சேர்ந்து) "அரைவாசி ஐரோப்பிய நாடுகளை விடுதலை செய்த கதைகளை" கூறி இனப்பெருமை பேசி வந்தார். இன மேலாண்மை எண்ணம் காரணமாக, மிகத் தீவிரமான ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பாளராக இருந்தார். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களாலும், தாட்சரின் நம்பிக்கைக்கு  இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அதுவே தாட்சரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

1984 ம் ஆண்டு, பிறைட்டன் நகரில, கன்சர்வேட்டிவ் கட்சி மகாநாடு நடைபெற்ற நட்சத்திர விடுதி, IRA யினால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அதுவரையும் சிறியளவு தாக்குதல்களில் ஈடுபட்ட IRA, மிகப் பெருமெடுப்பில் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது. அந்தத் தாக்குதலில், தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். பிரிட்டன் இன்னமும் வட அயர்லாந்து என்ற பகுதியை காலனிப் படுத்தி வைத்திருப்பதையும், IRA யின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக வளர்ந்து விட்டதையும் அந்த குண்டுவெடிப்பு உலகிற்கு எடுத்துக் காட்டியது. வட அயர்லாந்து பிரச்சினையில், மார்க்கரெட்  தாட்சர் ஆக்கிரமிப்பாளர்களான ஆங்கிலேய குடியேறிகளை ஆதரித்தார்.  விடுதலைக்காக போராடிய ஐரிஷ் மக்களை அடக்குவதில் குறியாக இருந்தார்.இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து, ஈழத்தில் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நிகழ்வை, தமிழர்கள் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு முன்னரே, 1981 ம் ஆண்டு, வட அயர்லாந்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பத்து அரசியல் கைதிகள் மரணத்தை தழுவிக் கொண்டனர். அதில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார். விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை  ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது.

வட அயர்லாந்து சிறைச்சாலைகளில், பத்து அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த போதிலும், அவர்கள் பக்கம் திரும்பியும் பாராத கல்நெஞ்சக்காரியாக தாட்சர் விளங்கினார். பொபி சான்ட்ஸ் என்ற அரசியல் கைதி, சிறையில் இருந்த படியே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார். உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சாண்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

பிரிட்டனில் ஐரிஷ் சிறுபான்மை இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய மார்கரெட் தாட்சர், பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் எந்தப் பக்கத்தை ஆதரித்திருப்பார்? இதனை புரிந்து கொள்வது ஒன்றும் சிக்கலான விடயமல்ல. தாட்சர் பிரிட்டனை ஆண்ட காலத்தில் தான், இலங்கையில் தமிழீழப் போராட்டம் வீறு கொண்டெழுந்தது. அது பனிப்போர் காலகட்டம் ஆகையினால், பிரிட்டன் உலகம் முழுவதும் மார்க்சியத்தை வேரோடு அழிக்கும் புனிதப்போரில் ஈடுபட்டது. அன்றிருந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனே, மார்க்சிய எதிர்ப்பு புனிதப்போரில், பிரிட்டனின் கூட்டாளியாக காட்டிக் கொள்ள விரும்பினார். அந்தக் காலத்தில், புலிகள் உட்பட ஐந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு, இந்தியா நிதியும், ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கி வந்தது. இந்தியாவுக்கு சோவியத் யூனியன் ஆதரவளித்தது.

அன்று இலங்கையில் இருந்த ஜெயவர்த்தனே அரசு, தீவிரமான அமெரிக்க சார்பு அரசாக காட்டிக் கொண்டது. "வொயிஸ் ஒப் அமெரிக்கா"(VOA) வுக்கு, திருகோணமலையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கினார். இன்று, இலங்கையில் சீனா கால்பதித்து விட்டது என்றும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போடப்படுவது உங்களுக்கு தெரியும். அன்றைய நிலைமை வேறு. இலங்கையில் அமெரிக்கா கால் பதித்து விட்டது என்றும், இந்தியாவை உளவு பார்ப்பதற்கே VOA தொலைத்தொடர்பு கோபுரம் கட்டப்படுவதாகவும் சந்தேகிக்கப் பட்டது. ஜெயவர்த்தன அரசுக்கு தலையிடி கொடுக்கும் நோக்குடன், தமிழீழ போராளிக் குழுக்களுக்கான இந்திய உதவியும் அதிகரிக்கப் பட்டது.

அன்றைய காலகட்டத்தில், ஈழப்போர் பற்றி செய்தி சேகரிக்க சென்ற மேற்கத்திய ஊடகங்கள், ஜெயவர்த்தனேயிடம் பேட்டி எடுத்தன. அந்தப் பேட்டிகளில், "புலிகள் போன்ற தமிழீழ போராளிக் குழுக்களை மார்க்சியவாதிகள் என்றும், அவர்கள் இலங்கை முழுவதையும் மார்க்சிய நாடாக்குவதற்காக போராடி வருவதாகவும்..." ஜெயவர்த்தனே குறிப்பிட்டுப் பேசி வந்தார். வெகுஜன ஊடகங்களில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன என்பதால் தான், அவை எமக்குத் தெரிய வருகின்றன.  வெளிநாடுகளுடனான, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப் பட்டன என்பது எமக்குத் தெரியாது. எது எப்படி இருந்தாலும்,  இலங்கை அரசு "மார்க்சிய விடுதலைப் புலிகளை" எதிர்த்துப் போராடி வருவதாக, மார்க்கரெட் தாட்சர் நினைத்திருப்பார்.

"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்காக, தாட்சர் அரசு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. உண்மையில், தக்க தருணத்தில் பிரிட்டனின் உதவி கிட்டியிராவிட்டால், சிலநேரம் அப்போதே "தமிழீழம் உருவாகி இருக்கும்." ஏனெனில், தரைவழிச் சண்டையில் போராளிக் குழுக்களின் கை ஓங்கியிருந்தது. சிங்கள இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. சிறிய இராணுவ முகாம்களை கைவிட்டு விட்டு, பெரிய இராணுவ முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தது. வான்படையினரின் தாக்குதல்கள் காரணமாகத் தான், போராளிகளை எட்டத்தில் வைத்திருக்க முடிந்தது. விமானங்களை, ஹெலிகாப்டர்களை தாக்குவதற்கு ஏவுகணைகளோ, விமான எதிர்ப்பு பீரங்கியோ இல்லாத போராளிக் குழுக்களால், விமானத் தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. பல தடவை, அதுவே களத்தில் பின்னடைவை கொடுத்தது. 

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தாக்குதிறனை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாது, அவர்களை நிலைகுலையச் செய்த,   விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் ஒட்டியது யார்? ஈழப்போர் தொடங்கும் வரையில், வெறும் சம்பிரதாயபூர்வமான பணிகளிலேயே ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபட்டு வந்தது. படையினர் எந்தப் போரிலும் ஈடுபட்டு கள அனுபவம் கண்டவர்கள் அல்லர். அதனால், தமிழீழப் போராளிகளின் திடீர் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பயந்து ஓடினார்கள். அன்று வெறும் பத்தாயிரம் பேரை மட்டுமே கொண்டிருந்த, யுத்த அனுபவமற்ற ஸ்ரீலங்கா இராணுவத்தை வெல்வது இலகு என்று தான், ஈழ விடுதலை இயக்கங்கள் கணக்குப் போட்டன. ஆனால், அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. 

காரணம், இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்காக பிரிட்டிஷ் கூலிப்படையான SAS  தருவிக்கப் பட்டது. விமானப் படையின் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் ஓட்டுவதற்கு ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் வந்திறங்கினார்கள். பிரிட்டிஷ் விமானிகள் ஓட்டிய ஹெலிகாப்டர்கள், விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது தாக்குதல்களை நடத்தின. அன்றைய காலத்தில், பல நூறு போராளிகளின் மரணத்திற்கும், பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கும், சொத்து அழிவுக்கும், பிரிட்டிஷ் கூலிப்படையினர் காரணமாக இருந்துள்ளனர். அதற்கெல்லாம், மார்க்கரெட் தாட்சர் அனுமதி வழங்கி இருந்தார். 

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து, மார்க்கரெட் தாட்சர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.)

இவர் தான் மார்க்கரெட் தாட்சர். இவருக்காக தமிழர்கள் அழ முடியுமா?  

(முற்றும்)

*******************************************

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்

விடுதலைப் புலிகள் பற்றியும், ஈழப்போரில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன BBC க்கு வழங்கிய நேர்காணல். இதில் அவர் புலிகளை ஒரு மார்க்சிய இயக்கம் என்றும், இலங்கை முழுவதும் மார்க்சிய அரசை உருவாக்குவதே அவர்களின் இலட்சியம் என்றும் கூறுகின்றார்.

Wednesday, April 10, 2013

மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்


பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமரான மார்கரெட் தாட்சர், தனது 87 வது வயதில் காலமானார். அவரது மரணச் செய்தியை கேள்விப் பட்ட மக்கள், பிரிக்ஸ்டன், லிவர்பூல், வேல்ஸ் போன்ற இடங்களில் குதூகலத்துடன் கொண்டாடினார்கள். 

1979 ல் இருந்து 1990 வரையில், பிரிட்டனை 11 வருடங்கள் ஆண்ட, முதல் பெண் பிரதமரான   மார்கரெட் தாட்சரை,  பிரிட்டிஷ் உழைக்கும் மக்கள்  வெறுக்கக் காரணம் என்ன? அவர் ஒரு சர்வாதிகாரி போன்று கொடுங்கோல் ஆட்சி நடத்தினாரா? பிரிட்டிஷ் மக்கள், எந்தளவு வர்க்க ரீதியாக பிளவு பட்டுள்ளனர் என்பதையும், பிரிட்டனில் வர்க்கப் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதையும், மார்கரெட் தாட்சரின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

ஒரு ஆணாதிக்க கலாச்சாரம் நிலவும் பிரிட்டிஷ் அரசியலில், ஒரு பெண் பிரதமராக வருவது நினைத்துப் பார்க்க முடியாதது. அதுவும் பழமைவாதம் பேணும் வலதுசாரிக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில், யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மார்க்கரெட்டின் தந்தையார் சிறு வணிகராக இருந்தாலும், மெதடிஸ்ட் பாதிரியாராகவும் கடமையாற்றினார். மார்க்கரெட் சிறுமியாக வாழ்ந்த காலத்தில், அவரது வீட்டில் சுடுநீர் வசதி கிடையாது. மலசல கூடம் வீட்டுக்கு வெளியே அமைந்திருந்தது. அவ்வாறான எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் தான், பிரதமரானதும் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையை கூட்டினார். தொழிலகங்களை மூடி, பலரை வேலையில்லாதவர் ஆக்கினார். 

மார்க்கரெட் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி, லண்டன் மாநகரின் ஒரு வட்டாரமான பிஞ்ச்லி (Finchley) ஆகும். வட லண்டனில் உள்ள, பணக்காரர்கள் வாழும் தேர்தல் தொகுதி அது. முதலாம் உலகத்தையும், மூன்றாம் உலகத்தையும் ஒரே நாளில் பார்க்க விரும்பினால், அதற்கு லண்டன் மாநகரம் அருமையான இடம். ஒரு காலத்தில் பாட்டாளி மக்களின் சேரிப் பகுதிகளாக இருந்த ஈஸ்ட்ஹம், டூட்டிங் பகுதிகளில் தான், இன்றைக்கு பெருமளவு இந்தியர்களும், இலங்கையர்களும் வாழ்கிறார்கள். அந்த நகர்ப் பகுதிகளுக்கும், பிஞ்ச்லி பகுதிக்கும் இடையில், மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை இன்றைக்கும் நேரில் பார்க்கலாம். 

பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் படித்த காலத்திலும், அரசியலில் நுழைவதையே இலக்காக கொண்டிருந்த மார்க்கரெட்டுக்கு, பெண் என்ற சிறப்புரிமை பெரிதும் உதவியது. உலகப்போரின் பின்னரான லேபர் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த சமூக நலன்புரி அரசை உடைப்பதற்கு, மார்க்கிரட் தச்சர் போன்ற "இரும்புப் பெண்மணி" தேவைப் பட்டார். ஒரு "கறுப்பரான" ஒபாமாவை ஜனாதிபதியாக்கி, அதிரடி அரசியல் நடத்திய அமெரிக்க ஆளும் வர்க்கம் போன்று தான், அன்றைய பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கும். ஒரு பெண்ணை பிரதமராக்கி விட்டு, மக்களின் வயிற்றில் அடிக்கப் போகிறார்கள் என்று அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

"தாட்சரிசம்" என்ற நவ- தாராளவாத தாக்குதல்கள், பிரிட்டிஷ் மக்கள் மேல் நடத்தப் படுவதற்கு முன்னர், பிரிட்டனின் நிலைமை எவ்வாறு இருந்தது? வலதுசாரிக் கருத்தாளர்களைக் கேட்டால், "சாதாரண மக்களுக்கும் நியாயமாகப் படும்" உதாரணம் ஒன்றைக் கூறுவார்கள். "ஒரு வீடு வாங்குவதற்கு மோர்ட்கேஜ் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த காலத்தை" பற்றிக் கூறி அங்கலாய்ப்பார்கள்.  ஆமாம், மார்கரெட் தாட்சர் பிரதமரானதும், வீட்டுக் கடன் கிடைப்பதை இலகுவாக்கினார். ஆனால், அதுவே 2007 ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை மறந்து விடலாமா? லண்டனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர், மாதம் ஆயிரம் பவுன்கள் மோர்ட்கேஜ் கட்டி வந்தார். இத்தனைக்கும் அவரது மாத வருமானம், எண்ணூறு பவுன்கள் தான். அவருக்கு எப்படி வீட்டுக் கடன் கொடுத்தார்கள்? அது தான் "தாட்சரிசம்"! "முதலாளித்துவ அதிசயம்". அதாவது பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை ஏற்றுவதற்காக, வங்கிகள் தகுதியில்லாதவர்களுக்கும் கடன் கொடுத்தன. அதன் விளைவு தான், அண்மைய பொருளாதார நெருக்கடி. அதற்கான அத்திவாரம், தச்சரின் காலத்திலேயே எழுப்பப் பட்டு விட்டது.

அன்றைய காலங்களில், மக்களுக்கு சொந்த வீடு இல்லா விட்டாலும், அரசு மானியம் வழங்கும் மலிவான வாடகை வீடுகள் கிடைத்து வந்தன. மக்களுக்கு அத்தியாவசியமான துறைகள் தேசியமயமாக்கப் பட்டதால், மக்களுக்கு பணிப் பாதுகாப்பு இருந்தது. எந்தப் பிரச்சினை என்றாலும், அரசும், தொழிற்சங்கமும் பேச வேண்டும் என்ற சட்டம் இருந்ததால், தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப் பட்டு வந்தன. தாட்சர் பிரதமரானதும், அந்த சட்டத்தை இரத்து செய்தார்.  அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கினார். இதனால் மேட்டுக்குடியினரும், முதலாளிகளும் இலாபமடைந்தனர். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. ஒரு பக்கம் பணக்காரர்கள் அதிகரித்தனர். மறுபக்கம் ஏழைகள் அதிகரித்தனர்.பிரிட்டனின் தொழிற்புரட்சிக்கு உந்துசக்தியாக இருந்த நிலக்கரிச் சுரங்கங்கள், தாட்சரின் காலத்தில் இழுத்து மூடப் பட்டன. இதனால் அவற்றை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வேலையிழக்கவும், அவர்களது குடும்பங்கள் பட்டினி கிடக்கவும் வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  சுரங்கங்களை மூடும் திட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்தப் போராட்டம் மாதக் கணக்காக தொடர்ந்தது. பிற உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு இருந்ததால், தாட்சர் அரசினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1984 ம் ஆண்டு தொடங்கிய வேலைநிறுத்தம் சுமார் ஒரு வருடத்திற்கு நீடித்தது. சுரங்கத் தொழிலாளர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்சங்கத் தலைவர்  Arthur Scargill,  "ஒரு பிரிட்டிஷ் லெனின்" போன்று கருதப்பட்டார்.  மார்கரெட் தாட்சரின் கம்யூனிச வெறுப்பு உலகப் புகழ் பெற்றது.

எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம்கொடுத்து பழக்கமில்லாத மார்க்கிரட் தச்சர், போலிஸ் படையை அனுப்பி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்க முயற்சித்தார். பிரிட்டனில் நடந்த தொழிலாளர் போராட்ட செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்த சோவியத் யூனியனின் TAS  செய்தி நிறுவனம், மார்கரெட் தாட்சருக்கு "இரும்புப் பெண்மணி" என்ற பட்டப் பெயரை சூட்டியது. அவரும் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டார். அந்தக் காலங்களில், சோவியத் ஊடகங்களில் மார்கரெட் தாட்சர்  ஒரு வில்லியாக சித்தரிக்கப் படுவது வழக்கம். இன்று தமிழ் ஊடகங்கள் ராஜபக்சவை சித்தரிக்கும் பாணியில், அன்றைய சோவியத் ஊடகங்கள் தாட்சரை பற்றிய பிம்பத்தை வளர்த்து விட்டிருந்தன.

போராட்டம் நீண்ட காலம் இழுத்துச் சென்றதால் களைப்படைந்த, அல்லது குடும்பத்தினரின் வறுமை காரணமாக, குறிப்பிட்டளவு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப சம்மதித்தனர். ஒற்றுமையாக போராடிய தொழிலாளர்கள் இடையே, பிளவு தோன்றியது. இதனால், வேலை நிறுத்தப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டது. ஆயினும், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. அன்று நடந்த பிரச்சினைகள், வேலையிழந்த தொழிலாளர்களின் பிள்ளைகளையும் பாதித்தது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் தான், மார்கரெட் தாட்சரின்  மரணத்தை குதூகலத்துடன் கொண்டினார்கள். பிரிட்டனில் வர்க்கப் போராட்டம், இன்றைக்கும் உயிர்ப்புடன் இருப்பதை, இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஐ.நா. சபை உருவாக்கப் பட்ட பொழுது, அதன் பிரதானமான கோஷமாக, "முழுமையான காலனிய விடுதலை" இருந்தது. ஆனால், இன்றைக்கும் முன்னாள் காலனியாதிக்க நாடுகள், உலகம் முழுவதும் சிறு சிறு தீவுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. ஆர்ஜன்தீனாவுக்கு அருகில் உள்ள போல்க்லாந்து தீவுகள் இன்றைக்கும் ஒரு பிரிட்டிஷ் காலனி தான். பூகோள அடிப்படையில், அந்த தீவு தனக்கே சொந்தம் என்று ஆர்ஜெந்தீனா உரிமை கோரியது. அதிரடியாக வந்திறங்கிய ஆர்ஜெந்தீன படைகள், போல்க்லாந்து தீவுகளை ஆக்கிரமித்தன. ஆர்ஜன்தீனாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் மூண்ட போரானது, மார்கரெட் தாட்சரின் புகழை உயர்த்த பயன்பட்டது. ஆர்ஜன்தீனாவை விட பல மடங்கு ஆயுத பலம் கொண்ட பிரிட்டிஷ் படைகள், போல்க்லாந்து தீவுகளை மீண்டும் கைப்பற்றின. பிரிட்டனில் தாட்சர்  வெற்றிவிழா கொண்டாடினார். "முன்னாள் சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று", பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஆங்கிலேய மக்களின் மனதில், பிரிட்டிஷ் பேரினவாதத்தை விதைப்பதற்கு, அந்த வெற்றி விழா பயன்பட்டது.

தாட்சரைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் "நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டமாக" கருதினார். அவரது பேச்சுகளில் தொனித்த, "நாங்கள், அவர்கள்" என்ற சொல்லாடல்கள் உலகை இரண்டாகப் பிரித்தன. மார்கரெட் தாட்சர்  ஆண்ட காலத்தில், ஆர்ஜெந்தீனா மட்டுமே பிரிட்டனின் எதிரியாக  இருக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிரிகள் இருந்தார்கள். உள்நாட்டில் வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. IRA யின் பல வெற்றிகரமான தாக்குதல்கள், தாட்சர் காலத்தில் தான் இடம்பெற்றன. தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக போராடிய, கறுப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா, தாட்சரின் கண்களுக்கு  "பயங்கரவாதியாக" தோன்றினார். இலங்கையில் அப்போது தான் தோன்றியிருந்த ஈழப் போராட்டத்தையும், "மார்க்சியப்" புலிகளையும் அடக்குவதற்கு, சிங்கள பேரினவாத அரசுக்கு உறுதுணையாக நின்றார்.

(மிகுதி இரண்டாம் பாகத்தில் வரும்...)