Wednesday, August 31, 2011

யூகோஸ்லேவியா படுகொலைகள், மேற்குலகின் பொம்மலாட்டம்

பொஸ்னியாவில் இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்த நேரம், சிரபெனிச்சா நகரில், 8000 முஸ்லிம் பொதுமக்களை சேர்பியப் படைகள் இனப்படுகொலை செய்தன. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் நடந்த போர்க்குற்றங்களுக்காக, சேர்பியப் படைகளின் தளபதி மிலாடிச் கைது செய்யப்பட்டவுடன், நீதி வென்றது என்பது போன்ற பிரமை தோற்றுவிக்கப் பட்டது.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள், மிலாடிச் கைதானதை, மாபெரும் சாதனையாக குறிப்பிட்டு எழுதியிருந்தன. எமது தமிழ் தேசிய வணிக ஊடகங்களும், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. மிலாடிச் கைது செய்யப்பட்டதைப் போல, தமிழ் இனப்படுகொலைகளுக்காக ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று நம்பிக்கை துளிர் விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. "இலங்கை அரசு கொஞ்ச காலம் மேற்கத்திய கனவான்களை ஏமாற்றினாலும், நீதிமான்கள் இறுதியில் உண்மையை உணர்ந்து நீதி வழங்குவார்கள்...." என்று தமிழர்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.

யூகோஸ்லேவிய போர்களின் போது மேற்குலகம் காட்டிய அக்கறை, அதன் அரசியல் பின்னணி, உள்நோக்கம் என்பன போன்ற கேள்விகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். அங்கே நடந்த இனப்படுகொலைகளில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு எவ்வளவு? எதிரி இனத்தை படுகொலை செய்வதற்கு கருவியாக பயன்படுத்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப் பட்டது. இந்தக் கருவிகளை ஏவிய குற்றவாளிகள் நீதிபதிகளாக வீற்றிருக்கின்றனர். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

மேற்கத்திய நாடுகளின் தலையீடானது, யூகோஸ்லேவியாவில் இருந்து புதிய குடியரசுகள் பிரிந்த பின்னர் ஆரம்பிக்கவில்லை. டிட்டோவின் சோஷலிச யூகோஸ்லேவியா, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்பை பேணி வந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், டிட்டோ, ஸ்டாலினுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யூகோஸ்லேவியா "COMINTERN" அமைப்பில் இருந்து விலகியது. இதனால் சோவியத் யூனியனின் கடன்கள் வருவது நின்று போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா IMF கடன்களை பெற்றுக் கொடுத்தது.

ஒரு கம்யூனிச கட்சி ஆண்ட நாட்டில், சோஷலிசப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐ.எம்.எப். உதவியது என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கும். ஆனால் வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகள் இட்டுச் சென்ற பொருளாதார சீர்கேடுகள் கண்ணுக்கு புலனாக பல தசாப்தங்கள் எடுத்தன. டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, மிலோசொவிச் பதவி ஏற்றதும், குறைபாடுகள் மெல்ல மெல்ல வெளித் தெரிய ஆரம்பித்தன. ஒவ்வொரு இனத்திலும், தீவிரவாதிகள் உருவெடுத்தனர். மொழி அடிப்படையிலான குருந்தேசியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. மிலோசொவிச் கூட, அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்த, ஐ.எம்.எப். உத்தரவுகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்ட ஒருவர் தான்.

தற்போது மீண்டும் பொஸ்னியா வருவோம். சிரபெனிச்ச இனப்படுகொலை பற்றிய பின்னணியை முதலில் ஆராய்வோம். போஸ்னியாவில் செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் இனத்தவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் எந்தவித இனக்குரோதங்களும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தனர். சிரபெனிச்சா நகரம் மத்திய காலத்தில் இருந்து முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டது.

டிட்டோ காலத்தில், சிரபெனிச்சா நகரத்திலும் தொழிற்புரட்சி நடந்தது. ஆலைகளில் வேலை செய்வதற்காக, பெருமளவு செர்பிய தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களுக்கென நவீன அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட புற நகரங்கள் உருவாகின. இதனால் சிரபெனிச்சா நகரம் விரிவடைந்தாலும், அதற்குள்ளே செர்பிய வட்டாரங்களும் உருவாகின.

யுத்தம் வெடித்தவுடன், செர்பிய பகுதிகள் யாவும், செர்பிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அதே போன்று, முஸ்லிம் பகுதிகள் முஸ்லிம் படைகளினால் கட்டுப்படுத்தப் பட்டன. இரண்டு இராணுவங்களும், மற்ற இனத்தவர் வாழ்ந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு பக்கமும், செர்பிய, முஸ்லிம் பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆனால், மேற்குலக ஊடகங்கள், நமக்கு அந்த உண்மைகளை கூறவில்லை. "முஸ்லிம் மக்களின் சிரபெனிச்சா நகரை சேர்பியப் படைகள் முற்றுகையிட்டு தாக்கிக் கொண்டிருக்கின்றன. சேர்பியரின் வெறித்தனமான தாக்குதல்களில் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்...." இவ்வாறு தான் செய்திகள் வாசிக்கப் பட்டன.

இலங்கையில், வன்னியில் நடந்த இறுதிப்போரில், ஐ.நா. அமைதிப் படை தலையிட்டிருந்தால், தமிழ் இனப்படுகொலை நடந்திருக்காது என்று, இன்றைக்கும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொஸ்னிய யுத்தத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, சிரபெனிச்சாவில் கூட இனப்படுகொலை நடக்கப் போகின்றது என்று ஐ.நா.வுக்கு முன்பே தெரிந்திருந்தது. இன்னும் சொன்னால், அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 

பொஸ்னிய யுத்தம் பற்றிய செய்திகள், மேற்கத்திய நாடுகளில் பெரும் உணர்வலைகளை உருவாக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து ஐ.நா. சமாதானப் படைகளை அனுப்பி வைத்தன. சிரபெனிச்சா நகரம் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த அமைதிப் படையினர் பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்றிருந்தனர். ஐ.நா. அமைதிப் படை வந்து விட்டதால், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் முஸ்லிம்களும் நம்பினார்கள். ஐ.நா. ஆணையின் பிரகாரம், முஸ்லிம் படைகள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தன. அதற்குப் பிறகு அந்தப் பிரளயம் அரங்கேறியது.

பொஸ்னிய போர் ஒரு இனப்படுகொலையுடன் முடிய வேண்டும் என்பது, மேற்குலகின் விருப்பம் போலும். தருணம் பார்த்து பாதுகாப்பு வலையங்கள் திறந்து விடப்பட்டன. சிரபெனிச்சா நகரை கைப்பற்றுவதற்காக, சேர்பியப் படைகள் தாக்குதல் தொடுத்த நேரம்.... ஐ.நா. அமைதிப்படை ஒன்றுமே செய்யவில்லை. ஐ.நா. டச்பட் படையணிக்கு பொறுப்பான Thomas Karremans சேர்பியப் படைகளிடம் சரணடைந்தார். 

தமது சொந்தப் படையினரைக் காப்பாற்றக் கூட, ஐ.நா. தயாராக இருக்கவில்லை. மேலிடத்து உத்தரவு காரணமாக, விமானத் தாக்குதல்கள் நடைபெறவில்லை. பிறகென்ன? மிலாடிச் தலைமையிலான சேர்பியப் படைகள், தமது விருப்பம் போல நடந்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. நிராயுதபாணிகளான எண்ணாயிரம் முஸ்லிம்களை, சேர்பியப் படைகள் கொன்று குவித்தன. "சிரபெனிச்சா மீது படையெடுக்கும் எண்ணம் மிலாடிச்சுக்கு இருக்கவில்லை." என்று கரமேன்ஸ் ஒரு விசாரணையில் தெரிவித்தார்.

போஸ்னியப் போரில், ஊடகங்கள் எப்போதும் செர்பியர்களை வெறித்தனமான வில்லன்களாகவும், முஸ்லிம்களை ஒடுக்கப் பட்டோராகவும் காட்டி வந்துள்ளன. சிரபெனிச்சா முஸ்லிம் படைகள், அயலில் இருந்த செர்பியக் கிராமங்களை எரித்து தரைமட்டமாக்கிய செய்திகள் எதுவும் சொல்லப்படவில்லை. இனக்குரோதங்கள் உச்சத்தில் இருந்த போரில், பழிவாங்கும் கொலைகள் நடக்கும் என்று "பரலோகத்தில் இருக்கும் தேவர்கள்" கணித்திருப்பார்கள்.

செர்பிய தலைவர்களான மிலாடிச், கராசிச், மிலோசெவிச்; குரோவாசிய தலைவர் துஜ்மான்; முஸ்லிம் தலைவர் இசபெகொவிச், இவர்கள் எல்லோரும் போர்க்குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களை பொம்மைகள் போல பின்னால் இருந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த கரங்கள் யாருடையவை? ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட வைக்க நடந்த சூழ்ச்சிகள் எத்தனை? Jaques Monsieur என்ற பெல்ஜிய ஆயுத வியாபாரி, துஜ்மானின் குரோவாசியப் படைகளுக்கும், இசபெகொவிச்சின் முஸ்லிம் படைகளுக்கும் ஆயுத விநியோகம் செய்துள்ளார்.

இதே காலகட்டத்தில் தான், கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. முன்னாள் சோஷலிச ஜெர்மனியை பொறுப்பேற்ற மேற்கு ஜெர்மனி, அந் நாட்டின் ஆயுதக் களஞ்சியங்களை பொறுப்பேற்றது. அங்கிருந்த ஆயுதங்கள் எல்லாம் வண்டி வண்டியாக குரோவேசியா நோக்கி அனுப்பப் பட்டன.

அந்த நாட்களில், யூகோஸ்லேவிய போரை நிறுத்த முயற்சித்த இராஜதந்திரிகளின் கைகள் கட்டப் பட்டிருந்தன. அன்றைய பெல்ஜிய வெளிவிவகார அமைச்சர் Mark Eyskens, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் Hans Dietrich Genscher இனால் அடக்கி வைக்கப் பட்டார். "ஜெர்மனி, யூகோஸ்லேவியாவில் போர் நடக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும்..." என்று விரக்தியுடன் தெரிவித்தார் Mark Eyskens .

யூகோஸ்லேவியப் போரில் நடந்த இன்னொரு இனப்படுகொலை, சர்வதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை. "கிராயினா", குரோவாசிய குடியரசில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம். குரோவாசிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளை, குரோவாசியப் படைகள் துஜ்மானின் ஆணையின் பேரில் இனச் சுத்திகரிப்பில் இறங்கின.

ஆயிரக்கணக்கான செர்பிய பொதுமக்களை கொன்று குவித்தனர். அங்கே ஒரு செர்பியரைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அடித்தார்கள். அசையும், அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்தார்கள். குரோவாசிய படைகளை நடத்திச் சென்ற Ante Gotovina என்ற தளபதி, பிற்காலத்தில் போர்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நெதர்லாந்தில், யூகோஸ்லேவியா போர்க்குற்ற நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட முக்கியமான குரோவாசியர், அவர் மட்டும் தான்.

Ante Gotovina, பிரான்சின் கூலிப்படையான வெளிநாட்டவர் படையணியை (French Foreign Legion) சேர்ந்த சிப்பாய். அவருடனான பிரெஞ்சு அரசின் தொடர்புகள் யாவும், புலனாய்வுப் பிரிவான DGSE மூலமாக நடைபெற்றன. ஆனால், அன்று குரோவாசியப் படைகளுக்கு தலைமை தாங்கிய இன்னொருவர், அமெரிக்கரான Peter Galbraith என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவர் தான் பிற்காலத்தில் குரோவாசியாவுக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகித்தார்.

இந்த அமெரிக்கர், போர்க்களத்தில் நேரடியாக நின்று கட்டளைகளை பிறப்பித்ததுடன், இனப்படுகொலையை மேற்பார்வை செய்துள்ளார். Peter Galbraith தின் சேவையை பாராட்டி, அவரது நண்பர், அன்றைய துணை ஜனாதிபதி Joe Biden ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக் குர்திஸ்தானில், அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்குமாறு, பீட்டர் பார்த்துக் கொண்டார்.

இங்கே கூறப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அடியாட்களுக்கு தண்டனை கொடுக்கப் படுவதை பார்த்து விட்டு, நீதி பிழைத்தது என்று திருப்திப் படலாம். ஆனால், எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. முதன்மைக் குற்றவாளிகளை நீதிபதி ஸ்தானத்தில் ஏற்றி வைத்து விட்டு, அடியாட்களை பிடித்து தண்டனை கொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

Monday, August 29, 2011

தூக்குத் தண்டனை : அரச அங்கீகாரம் பெற்ற கொலைக் கலாச்சாரம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலே போடுவதற்கான தேதி குறிக்கப் பட்டமை, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டன. தூக்குத் தண்டனை என்பது அரச அங்கீகாரம் பெற்ற கொலை என்பதில் ஐயமில்லை. இந்த நேரத்தில், இனத்துவ அடையாளங்களை கடந்து, மனித நேயத்திற்காக குரல் எழுப்புவது எமது கடமை. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், நேரடித் தொடர்பற்றவர்களை தூக்கில் போடும் அட்டூழியத்தை கண்டிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக இருபது வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, இப்போது தூக்கிலே போடுவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என நம்பப் படுகின்றது. இதனை அரசியல் கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத வேண்டியுள்ளது. இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் காட்டிய தீவிரத்தை, ஈழத்தில் இந்தியப் படைகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிப்பதிலும் காட்ட வேண்டும். படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு காலந் தாழ்த்தியாவது தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

தூக்குத் தண்டனை எதிர்த்துப் போராடுவதற்கு, சர்வதேச ஒற்றுமை இயக்கத்தை கட்டி எழுப்புவது அவசியம். குறுகிய இன மான உணர்வுகளை தூண்டி விடுவது, இந்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றவே வழி வகுக்கும். ஏற்கனவே அப்சல் குரு, தேவேந்தர் பால் சிங் ஆகியோருக்கு இந்திய நடுவண் அரசால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்த போராட்டத்தின் தொடர்ச்சி இது. வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயாராக உள்ள மூவருக்காக மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென போராடுவோம். ஜனநாயக நாடென்று கூறிக் கொள்ளும் தகமையை இந்தியா இழந்து விட்டது. நாகரீக உலகம் நிராகரிக்கும் தூக்குத் தண்டனை முறையை, இந்தியா இன்னமும் பின்பற்றுவதற்காக, இந்திய மக்கள் அனைவரும் வெட்கப் பட வேண்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அரசு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென, சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாத இந்திய அரசு, மீண்டும் மூன்று கைதிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை என்ற பெயரில் அரசு புரியும் கொலைகளுக்கு, நாகரீக உலகின் எதிர்ப்பை தெரிவிப்போம்.

உலகில் இன்னமும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கே முமியா அபு ஜமால் என்ற கறுப்பின உரிமைப் போராளி மரண தண்டனைக்காக காத்திருக்கிறார். அமெரிக்க கறுப்பினத்தவர்களின் பாதுகாப்பு கவசமாக திகழ்ந்த கருஞ் சிறுத்தைகள் அமைப்பின் உறுப்பினர். வன்முறையில் ஈடுபடாத, பேனாவின் வலிமையை நம்பிய ஊடகவியலாளர். சாட்சியங்கள் இல்லாத போதிலும், "ஒரு வெள்ளையின பொலிஸ்காரரின் கொலை" தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. நிரபராதியான முமியா அபு ஜமாலின் மரண தண்டனயை இரத்து செய்யக் கோரி,கடந்த பதினைந்து வருடங்களாக உலகளாவிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில், முமியா அபுஜமால் விடுதலைக்காக, தமிழ் உழைக்கும் மக்களும் குரல் கொடுத்துள்ளனர். சர்வதேச உழைக்கும் மக்களுடன் இணைந்து, அமெரிக்காவின் மனித நேயமற்ற மரண தண்டனைகளை ஒழிப்பதற்காக போராடுவதும் அவசியமானது.

ஈரானின் மதவாத கொடுங்கோல் அரசு, மக்களுக்காக போராடும் போராளிகளை அடக்குவதற்காக தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. வருடந்தோறும் அரசியல் கைதிகளை தூக்கில் போடுவதன் மூலம், உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கப் பார்க்கின்றது. சமதர்ம கொள்கையை நம்பிய குற்றத்திற்காக தூக்கில் தொங்கிய அப்பாவி இளைஞர்கள் ஏராளம். அவர்களது தோழர்கள், புலம்பெயர் நாடுகளில் தூக்குத் தண்டனையை எதிர்த்து போராடி வருகின்றனர். கடந்த காலங்களில், ஈரானிய அரசியல் கைதிகளின் மனித உரிமைக்காக, தமிழர்களின் ஆதரவும் பதிவு செய்யப் பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில், அனைத்துலக உழைக்கும் மக்களுடன் கை கோர்ப்போம். சர்வதேச மட்டத்தில் தூக்குத் தண்டனையை ஒழிப்பதற்காக போராடுவோம்.

Sunday, August 28, 2011

பாக்தாத் பேரழகிகள் விற்பனைக்கு!

பாக்தாத் நகரின், அல்ஜிஹாத் வட்டாரத்தில் அமைந்துள்ள விபச்சார விடுதி. அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள விலைமகளிரின் ஆகக் குறைந்த வயது 16. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள, மிகப் பெரிய அமெரிக்க இராணுவ முகாமில் தான், அவர்கள் பாலியல் தொழில் செய்கின்றனர். அழகிய ஈராக்கிய நங்கைகளை முகாமுக்கு அழைத்து சென்று கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க படைவீரர்களின் காமப்பசியை தீர்ப்பதற்கு மட்டும் ஈராக்கிய பெண்கள் விநியோகிக்கப் படுவதில்லை. கன்னிப் பெண்களை நுகரத் துடிக்கும், அயல்நாட்டு பணக்கார அரபுக்களின் இச்சைக்கும் பலியாகிறார்கள். வளைகுடா நாடொன்றில், ஈராக்கிய சிறுமிகளின் கன்னித் தன்மையை கழிப்பதற்கு, ஓரிரவுக்கு 4000 டாலர் கொடுக்கிறார்கள்.

ஈராக்கில் தற்போது பெண்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கன்னிப் பெண் 5000 டாலர்களுக்கு விலை போகின்றார். கன்னித்தன்மை இல்லாத பெண்ணின் விலை, அதிலும் அரைவாசி. சில இடங்களில்,வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் பெண் பிள்ளைகளை விபச்சார தரகரிடம் விற்று விடுகின்றனர். செய்னா எனும் 13 வயது சிறுமி, அவரது தாத்தாவால் விற்கப்பட்டாள். அரபு எமிரேட்சில் நான்காண்டுகள் பாலியல் தொழில் செய்த பிறகு, ஊருக்கு திரும்பி வந்தாள். தன்னை பண்டமாக விற்ற தாத்தா மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாள். எப்படியோ, சில நாட்களின் பின்னர், செய்னாவை காணவில்லை. இம்முறை பெற்ற தாயே, அவளை வட ஈராக்கை சேர்ந்த தரகர் ஒருவருக்கு விற்று விட்டாள். ஈராக்கில் பாலியல் தொழிலில் சுரண்டப்படும் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் Organisation of Women’s Freedom in Iraq (OWFI) என்ற தொண்டு நிறுவனம் இந்த தகவல்களை வழங்கியுள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவனமான OWFI , பாக்காத்தின் மிகப்பெரிய விபச்சார விடுதி ஒன்றின் உரிமையாளரை அம்பலப்படுத்தியதால், ஊடகங்களில் பிரபலமானது. அந்த விடுதியின் உரிமையாளருக்கு உள்துறை அமைச்சில் செல்வாக்கு இருப்பது தெரிய வந்தது. ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும், அந்த விடுதி இன்று வரை எந்த வித பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச குடிவரவுகளை கண்காணிக்கும் அமைப்பான International Organisation of Migration (IOM), வருடந்தோறும் எண்ணாயிரம் ஈராக்கிய பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப் படுவதாக தெரிவித்துள்ளது. ஈராக்கிய அரசு, பெண்கள் கடத்தப்படுவதை சட்டம் மூலம் தடை செய்துள்ளது. இருப்பினும் நடைமுறையில் எதுவும் நடப்பதில்லை. சில சமயம், பொலிஸ் ரெய்டுகளில் அகப்படும் பெண்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகின்றது. ஒரு தடவை, அமெரிக்க படையினரின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஒரு விபச்சார விடுதி மூடப்பட்டது. அந்த விடுதி நிர்வாகத்தில் வேலை செய்த ராணியா என்ற பெண், சிறைத் தண்டனைக்குப் பிறகு, தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் அறவிடும் வேலையை ராணியா செய்து வந்தார். அங்கே பெண்கள் எவ்வளவு மோசமாக சுரண்டப் பட்டனர் என்பதை இவ்வாறு விளக்குகின்றார். "தினசரி ஐம்பது ஆண்களை, ஒரு பெண் திருப்திப் படுத்த வேண்டும்." ராணியா 16 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தார். சதாமின் வீழ்ச்சிக்கு பிறகு, யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், அரச படையினர் ராணியாவின் சகோதரர்களை கைது செய்திருந்தனர். சகோதரர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், ராணியாவின் உடலை விலையாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். கற்பிழந்த பின்னர் ஊருக்கு சென்றால், அவமானம் காரணமாக கொலை செய்யப்படலாம் என்ற காரணத்தால், பாக்தாத் வந்து விலைமாதானார். கட்டாயக் கலியாணம் காரணமாக, குடும்ப வன்முறை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்கள், வேறு கதியின்றி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகின்றனர். இவர்களுக்கு "தொழில் வாய்ப்பு" பெற்றுக் கொடுப்பதற்கென்றே, பல தரகர்கள் பஸ் நிலையங்களிலும், சந்தைகளிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

2003 ம் ஆண்டுக்குப் பிறகே, ஈராக்கில் பாலியல் சுரண்டல் பிரச்சினை எழுந்துள்ளதாக Human Rights Watch (HRW) தெரிவிக்கின்றது. "2003 ம் ஆண்டு, சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரியிடம் இருந்து ஈராக் மக்களுக்கு விடுதலை கிடைத்தது." மத்திய கிழக்கு நாடுகளில், "அடக்கப்படும் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதற்காக" படையெடுத்ததாக அமெரிக்கா பீற்றிக் கொண்டது. அமெரிக்கா வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தின் பின்னர் தான், அங்கே பெண்களின் நிலைமை முன்னர் எப்போதும் இல்லாதவாறு மோசமடைந்தது. சதாம் காலத்தில் இல்லாத, இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு வந்தது. பெண்கள் அனுபவித்து வந்த சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப் பட்டது. தற்போது சட்டத்திற்குப் புறம்பான விவாகரத்துகளும், கௌரவக் கொலைகளும் மலிந்து விட்டன.

வறுமை, பெண்கள் மீதான வன்முறைகள், ஆட்சியாளரின் ஊழல் என்பன காரணமாக, பாலியல் தொழிலில் பெண்கள் சுரண்டப் படுவது அதிகரித்து வருகின்றது. 1991 வளைகுடா யுத்தத்திற்கு முன்னர், சதாம் ஆட்சிக் காலம், ஈராக் பெண்களின் பொற்காலம் ஆகும். ஈராக்கிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்ததால், எந்தப் பெண்ணும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகவில்லை. அனைத்து அரபு நாடுகளிலும், ஈராக் நாட்டுப் பெண்களே அதிகளவு கல்வியறிவு பெற்றிருந்தனர். மருத்துவர்களாகவும், வேறு உத்தியோகங்களிலும் பெண்கள் சிறந்து விளங்கினர். இன்று இதையெல்லாம் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அமெரிக்க படையெடுப்பு எல்லாவற்றையும் அடியோடு மாற்றி விட்டது.

மேலதிக விபரங்களுக்கு:
Organisation of Women’s Freedom in Iraq (OWFI)
Will Iraq Crack Down on Sex Trafficking?

Saturday, August 20, 2011

தமிழரை மிரட்டும் கிறீஸ் பூதங்கள்

இலங்கையின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பூதங்கள் உலவுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள், தனியாக செல்லும் இளம்பெண்களை கண்டால் விடுவதில்லை. விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான நகங்களால், மார்பகங்களை கீறிக் கிழிக்கின்றன. இந்த சம்பவங்களின் விளைவாக பல்வேறு வதந்திகள் உலாவின. "துட்டகைமுனுவின் வாளை தேடுவதற்காக, கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," சிங்களப் பகுதிகளில் வதந்தி பரவியது. தமிழ்ப் பகுதிகளில் அந்தக் கதை, "ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக, ஒரு மந்திரவாதியின் பூஜைக்காக கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," மாற்றப்பட்டது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வதந்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் தான் அதிகளவு வதந்திகள் செய்திகளாகின.

சிங்கள மக்கள் மத்தியில் "கிறீஸ் மனிதன்" என்ற கதை பிரசித்தம். ஆவிகள், பூதங்களை நம்பும் கிராம மக்கள் கிறீஸ் பூதங்கள் உலவுவதை நம்புகின்றனர். உண்மையில் உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்ட திருடர்கள் தான் கிறீஸ் பூதங்கள். திருடும் போது யாராவது பிடித்தால் வழுக்கும் என்பதற்காக கிறீஸ் பூசிக் கொண்டு செல்வார்கள். இவ் வருடம் ஜூலை 5 ம் தேதி, "கிறீஸ் பூதத்தின் முதலாவது தாக்குதல்" இடம்பெற்றது. இரத்தினபுரிக்கு அருகில் உள்ள, கஹவத்த என்னும் ஊரில் ஏழு பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலைகளுக்கு காரணம் கிறீஸ் பூதம் என்ற வதந்தி பரவியது. பொலிஸ் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சில நாட்களின் பின்னர், கொலைகாரன் கைது செய்யப் பட்டதாக தகவல் வந்தது. இராணுவத்தில் இருந்து தப்பியோடிய ஒருவனே, அந்த கொலைகளை செய்தவன் என்று கூறினார்கள். போர் நடந்த காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள், வீடு புகுந்து கொள்ளையடிப்பதும், தனித்திருக்கும் பெண்களிடம் பாலியல் சேஷ்டைகள் செய்வதும் வழக்கமாக நடப்பது தான். ஆனால், இம்முறை அடுத்தடுத்த பல இடங்களிலும் நடைபெற்ற சம்பவங்கள் யாவும், யாரோ திட்டமிட்டு செய்வதை உறுதிப்படுத்தின.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்கள் அடுத்து இலக்கு வைக்கப் பட்டன. இந்தக் கிராமங்களை சேர்ந்த ஆண்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கின்றனர். அதனால் பெண்கள் தனியாகவே குடும்பத்தை கவனிக்கின்றனர். அவ்வாறு ஆண் துணையின்றி வாழும் பெண்களிடம், மர்ம மனிதர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். பொதுவாக மர்ம ஆசாமிகள் முகம் தெரியாதவாறு கறுப்பு வர்ணம் பூசியிருந்தனர். பெண்களின் கூக்குரலைக் கேட்ட அக்கம் பக்க ஆட்கள் ஓடி வந்து, மர்ம மனிதர்களை பிடித்துள்ளனர். போலீசில் அவர்களை ஒப்படைத்த பின்னர், பொலிஸ் அவர்களை விடுதலை செய்துள்ளது. ஒரு தடவை, பிடிபட்ட மர்ம மனிதன், பொலிசாரிடம் ஏதோ ஒன்றை காட்டியதாகவும், அதன் பிறகு பொலிஸ் சல்யூட் அடித்து விடுவித்ததாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். பொத்துவிலில், படையினரிடம் தஞ்சமடைந்த மர்ம மனிதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். படைமுகாம் மீது கற்களை வீசியுள்ளனர். படையினர் சுட்டதில் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதி இறந்துள்ளார். கிண்ணியாவிலும், மக்கள் விரட்டிச் சென்ற மர்ம மனிதன், கடற்படை முகாமில் புகுந்துள்ளான். அதனால், அங்கே மக்களுக்கும் படையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கிறீஸ் பூதங்கள் என்ற மர்ம மனிதர்களை, இராணுவத்தினர் ஏவி விடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சந்தேகபடுவது போல பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொது மக்கள் விரட்டிய மர்ம மனிதர்கள், படையினர் முகாம்களுக்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தாலும், போலீசார் விடுதலை செய்துள்ளனர். வவுணதீவில் சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த படையினர், மர்ம மனிதர்களை இறக்கி விட்டுச் சென்றதை மக்கள் கண்டுள்ளனர். இவையெல்லாம், இராணுவ புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்கள், மர்ம மனிதர்களாக நடமாடுவதாக நிரூபிக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் கிராமங்களில் முன்னர் அரசு வழங்கிய துப்பாக்கிகளை வழங்கியிருந்தது. போர் நடந்த காலங்களில் புலிகளின் தாக்குதல்களை தடுப்பதற்காக, அந்த முஸ்லிம் கிராமவாசிகளுக்கு துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிறீஸ் பூதங்கள் தாக்குவதற்கு, சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டன. கிழக்கு மாகாணம் முழுவதும், தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் முழுவதும், அரச படைகள் மேலான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுடன் ஏற்பட்ட விரிசலை அடைப்பதற்கு, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், சிறிலங்கா அரசே கிறீஸ் பூதங்களை நடமாட விட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கவே செய்கின்றது.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், "கிறீஸ் பூதங்கள் பற்றிய செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி" என்று கூறுகின்றது. "அரசுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காக, வெளிநாடுகளில் இருந்து டாலர்களை பெற்றுக் கொண்டவர்களது வேலை," என்று மறைமுகமாக அரசுசாரா நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துகின்றது. கிறீஸ் பூதம் பற்றிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியிலும், "இவன் தான் கிறீஸ் பூதம்" என்று, வெள்ளை நிற கிறீஸ் பூசிய, டிராகுலா போன்று வாயில் இரத்தம் வழியும் ஒருவனின் முகத்தை காட்டினார்கள். கிறீஸ் பூதம் என்ற பீதியை கிளப்பி விட்டு கள்வர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவதாக அரசு கூறி வருகின்றது. ஆனால், அந்தக் கள்வர்களை பிடிக்க முடியாத நிலையில் தான் பொலிஸ் இருக்கின்றது. சில நேரம் பொது மக்கள் பிடித்துக் கொடுத்த மர்ம மனிதர்களை, பொலிஸ் பாதுகாத்து விட்டதற்கு என்ன காரணம் கூறுகின்றது? பொது மக்கள் ஒப்படைத்த மர்ம நபர்கள் மனநோயாளிகள் என்றும், வெளியில் விட்டால் அடித்து கொன்று விடுவார்கள் என்பதால், தாம் அடைக்கலம் கொடுத்தாக பொலிஸ் கூறுகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் மர்மமான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருந்தன. தலைநகரில் இருந்த பிச்சைக்காரர்கள் பலர், மர்மமான முறையில் பாறாங்கல்லைப் தூக்கிப் போட்டு கொலை செய்யப் பட்டுக் கிடந்தனர். பிச்சைக்காரர்களை அகற்றி விட்டு, தலைநகரை அழகு படுத்துவதற்கான அரசின் திட்டம் என்று பரவலாக சந்தேகிக்கப்பட்டது. இன்று வரை கொலைகாரர்கள் பிடிபடாததால், போலீஸ்காரர்களே அந்தக் கொலைகளை செய்திருக்க வேண்டும். அது போன்று, கிறீஸ் பூதம் என்ற பீதியைக் கிளப்பி, பொது மக்களைக் கொண்டே மன நோயாளிகளை அகற்றும் திட்டம் அரசுக்கு இருக்கலாம். இதை விட, இனி வருங்காலங்களில் புலிகள் போன்ற தலைமறைவு இயக்கங்களின் இருப்பை சாத்தியமற்றதாக்கும் நோக்கமும் இருக்கலாம். "வெளிநாடுகளில் தங்கியுள்ள புலிகள், இலங்கைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக" கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளமை நினைவுகூரத் தக்கது.

இவற்றை நிரூபிப்பது போல, மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தேகப் படுகின்றனர். சந்தேகப் படும் படியாக எவராவது நடந்து கொண்டால், கிறீஸ் பூதம் என்று பிடித்து அடிக்கிறார்கள். அது சில நேரம் பக்கத்து வீட்டுக்காரனாகவும் இருக்கலாம். முன்பெல்லாம் அரசு மக்களை பயமுறுத்தி அடக்கி வைப்பதற்கு, புலிகள் என்ற இயக்கம் இருந்தது. தற்போது புலிகள் அழிந்து விட்ட நிலையில், கிறீஸ் பூதங்கள் இறக்கி விடப் பட்டுள்ளன. "மக்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தினால் ஆள்வது இலகு." என்ற அமெரிக்காவின் பிரபலமான "அதிர்ச்சி கோட்பாடு" (The Shock Doctrine) இங்கே நடைமுறைப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளும், முன்பெல்லாம் கம்யூனிச பூதத்தையும், பனிப்போருக்கு பின்னர் அல்கைதா பூதத்தையும் காட்டித் தானே மக்களை பயமுறுத்தி வைத்துள்ளன? நோயாளிகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பது போல, முழு சமுதாயத்தையும் அதிர்ச்சி வைத்தியம் செய்து வசியப் படுத்தி வைக்க முடியும். அதன் மூலம், ஆட்சியாளரின் நோக்கங்கள் இலகுவில் ஈடேறும். அறுபதுகளில் சிஐஏ கண்டுபிடித்த அதிர்ச்சி கோட்பாடு பற்றிய விரிவான தகவல்களுக்கு, Naomi Klein எழுதிய
The Shock Doctrine என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

கிறீஸ் பூதம் கிளப்பி விட்ட பீதியின் பின்னணியில், பல அரசியல் மாற்றங்கள் நடைபெறலாம் என்று பலர் எதிர்வு கூறுகின்றனர். அவற்றை மறுக்கவும் முடியாது. போர் முடித்த பின்னர், அவசர கால சட்டத்தை எடுக்க வேண்டிய நெருக்குவாரத்தில் அரசு உள்ளது. அவசர கால சட்டத்தை நீக்கினால், வடக்கு-கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். இராணுவத்திற்கான செலவினத்தை குறைக்க வேண்டும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தீர்வு ஒன்றை கொண்டு வர வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது. "யுத்தம் முடிந்து விட்டது. இனி என்ன தீர்வு?" என்று கோத்தபாய தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதியான மகிந்தவே இதுபற்றி கருத்து தெரிவிக்காத வேளை, பாதுகாப்பு அமைச்சர் தீர்வுத் திட்டம் குறித்து பேசுவது விசித்திரமானது. அதே போன்று, ஜெயலலிதாவின் கோரிக்கைகளுக்கு பதிலடி கொடுத்த கோத்தபாயவின் நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளானது. அயல் நாட்டு விவகாரங்களை கவனிக்க, ஒரு வெளிநாட்டு அமைச்சர் இருக்கிறார். அவர் வாயை மூடிக் கொண்டிருக்கிறார். இத்தகைய போக்குகளை, எந்தவொரு அரசியல் அவதானியும் கோர்த்துப் பார்த்ததாக தெரியவில்லை.

இன்றைய இலங்கை அரசியலில், முன்னெப்போதும் இல்லாதவாறு எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது. தேசத்தின் மீது இரும்புப் பிடியை வைத்துள்ள சுதந்திரக் கட்சி அரசாங்கம் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்கின்றது. எந்தவொரு இறுக்கமான அரசென்றாலும், அங்கே இரு வேறு பட்ட போக்குகள் தோன்றலாம். இலங்கையில், கோத்தபாய தலைமையில் இராணுவ ஆட்சியை நிலைநாட்டும் பிரிவினர் பலமடைந்து வருவதாக தெரிகின்றது. இராணுவம் என்ற பூதத்தை ஊட்டி வளர்ப்பது ஆட்சியாளர்களுக்கு அவசியமானதாக உள்ளது. கிறிஸ் பூதம் என்ற ஹிஸ்டீரியா மக்களை ஆட்கொண்டுள்ள தருணத்தில், படைகளை குவிப்பதற்கு காரணம் கிடைத்துள்ளது. தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களில், கிறீஸ் பூதம் பிரச்சினையில், இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளன. அவை ஒரு மக்கள் எழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசிய தலைமைகள், கிறீஸ் பூதம் பற்றிய பீதியை பரப்புவதில் மட்டுமே குறியாகவுள்ளன. இதன் மூலம், இலங்கை அரசின் Shock Doctrine திட்டத்திற்கு உடந்தையாகவுள்ளன. அரசும், தமிழ் தேசியவாதிகளும், கூட்டாக சேர்ந்து பிரயோகிக்கும் "அதிர்ச்சி வைத்தியம்", மக்களை பலவீனப்படுத்தி, நடைப் பினங்களாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படாது. மாறாக, அவர்களின் சொந்த பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக அரசிடம் தான் தஞ்சம் அடைவார்கள். அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பது கடினமான காரியம் தான்.

மேலதிக தகவல்களுக்கு:
The Shock Doctrine
மர்ம மனிதன், பீதியில் உறையும் கிராமங்கள்
The Beast of Badulla–Copy Cats and Mass Hysteria?

Friday, August 19, 2011

சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்

எமது ஊரை சுற்றி, நான்கு திசைகளிலும் நான்கு சைவக் கோயில்கள் இருந்தன. கோயில்களால் சூழப்பட்ட கிராமம் என்பதால், "கடவுள்களால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம்" என்று இளம் வட்டத்தில் சற்று கிண்டலாகவே பேசிக் கொள்வதுண்டு. ஊருக்குள்ளே கோயில்கள் இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரை அந்தக் கோயில்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. அவர்கள் வேண்டுமானால், சற்றுத் தள்ளியுள்ள சிவன் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். நகரம் சார்ந்த பகுதிகளில் இருந்த அத்தகைய கோயில்கள் கூட, எழுபதுகளில் தான் அனைத்து சாதியினருக்குமாக கதவுகளை திறந்து விட்டன. அதுவும் "ஈழத்தில் நடைபெற்ற முதலாவது ஆயுதப்போராட்டத்திற்கு" பின்னர் தான். அம்மன் கோயிலில், பொங்கல் பானைக்குள் நாட்டு வெடிகுண்டு கொண்டு சென்று வீசிய, ஈழத்தின் முதலாவது பெண் போராளியும் எமது ஊரைச் சேர்ந்தவர் தான்.

எமது ஊரின் கோயில்களை உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடியததற்கு பின்புலத்தில் முக்கியமான பொருளாதாரக் காரணி ஒன்றிருந்தது. வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டில், குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நிலத்தடியில் ஓடும் நல்ல தண்ணீர், கோயில் கட்டப்பட்டுள்ள இடங்களில் தான் காணப்படுகின்றது. கோயிலில் மட்டுமல்ல, கோயிலை சுற்றி அமைந்துள்ள சில உயர்சாதி வெள்ளாளரின் குடியிருப்புகளிலும் நன்னீர்க் கிணறுகள் உள்ளன. மற்ற இடங்களில் கிணறு எவ்வளவு ஆழத்திற்கு தோண்டினாலும், குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் தான் கிடைக்கும். அந்த வீடுகளில் குடியிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள், "பொது இடமான" கோயில் கிணற்றுக்கு சென்று குடிநீர் அள்ளி வருவது வழக்கம். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களுக்கு மட்டும் கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அல்ல உரிமையுண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அந்த உரிமை கிடையாது. யாராவது ஒரு வெள்ளாளர் தண்ணீர் அள்ளி அவர்களின் குடங்களில் ஊற்ற வேண்டும். அப்போது வாளியும், கையும் குடத்தில் படாதவாறு எட்டத்தில் நின்று தண்ணீர் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர் போகும் நேரத்தில், அந்த இடத்தில் வெள்ளாளர் யாராவது காணப்படா விட்டால், காத்திருக்க வேண்டுமே தவிர, தாமாகவே தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொள்ள முடியாது. காலங்காலமாக தொடர்ந்த மரபு, 1982 ம் ஆண்டு உடைக்கப்பட்டது.

ஆமாம், யாழ் மாவட்டத்தில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்திருந்த எண்பதுகளிலும் தீண்டாமை தொடர்ந்தது. தமிழீழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இயக்கங்கள், பொலிஸ் நிலையங்களை தாக்கி, காவலர்களை கொன்று, ஆயுதங்களை அபகரித்து சென்றார்கள். துணிச்சலுடன் வங்கிகளை கொள்ளையடித்தார்கள். சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆனால்.... ஆனால்...தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை. இதுவரை எந்தவொரு சாதிவெறியன் கூட "மரண தண்டனை" விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், தமக்குத் தெரிந்த வழிகளில் அவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். இயக்கங்களிடம் உதவி கேட்டால், "சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் பாரிய பொறுப்பு இருப்பதால், சாதிப்பிரச்சினையை கவனிக்க நேரமில்லை." என்றார்கள். "தமிழீழம் கிடைத்தால் போதும், சாதி தானாகவே மறைந்து விடும்." என்று சிலர் சித்தாந்த விளக்கம் அளித்தார்கள். தமிழ் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, ஆயுதபாணி இயக்கங்களும் ஆதிக்க சாதியினரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு சில அரசுசாரா அமைப்புகள் மட்டுமே, தலித் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றன.

கோயிலில் குடிநீர்த் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் சிலர் இறங்கினார்கள். திடீரென ஒரு நாள், ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அள்ளிச் சென்றனர். ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், சமூகத்தில் பதற்றம் நிலவியது. உயர்சாதியினர் கோயில் கிணற்றை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். கோயிலுக்கு அருகில் இருந்த "வெள்ளாளக் கிணறுகளில்" தண்ணீர் அள்ளினார்கள். இதனால், கோயில் கிணறு தாழ்த்தப்பட்டோர் வசம் சென்று விட்டது. "தலித் மக்கள் ஆக்கிரமித்த" கோயில் கிணற்றினுள், சாதிவெறியர்கள் உமி கொட்டி, நீரை மாசு படுத்தினார்கள். நஞ்சூட்டப் பட்டிருக்கலாம் என்றும் வதந்தி பரவியது. இதற்கெல்லாம் அஞ்சாத தாழ்த்தப்பட்ட மக்கள், தாமாகவே கிணற்றை சுத்தப் படுத்தும் வேலையில் இறங்கினார்கள். கிணற்றை தூர் வாரி, நீரிறைத்து பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றினார்கள். அதற்குப் பிறகும் இரண்டொரு தடவை நீரை மாசுபடுத்தும் ஈனச்செயலில் இறங்கிய உயர்சாதியினர், பின்னர் தாமாகவே விட்டுக் கொடுத்தனர். தற்போது அந்தக் கோயில் கிணறு, நிரந்தரமாக தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தாகி விட்டது.

தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்ப் போராட்டத்திற்கு, எந்தவொரு தமிழ் தேசிய அரசியல் கட்சியோ, அல்லது இயக்கமோ ஆதரவு வழங்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளிலும், மனித உரிமை நிறுவனங்களிலும் அங்கம் வகித்த ஆர்வலர்கள் போராட்டக் காலத்தில் முன் நின்றார்கள். அன்றைய காலங்களில், அரசு சாராத அல்லது கட்சி சாராத நிறுவனங்கள் மிகக் குறைவு. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் "சிறுபான்மைத் தமிழர்" என்று பெயரிடப்பட்ட அமைப்பில், தாராளமயத்தை ஆதரிக்கும் பலர் அங்கம் வகித்தனர். "அறவழிப் போராட்டக் குழு" என்றொரு மனித உரிமை நிறுவனமும் அப்போது தான் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், "சர்வதேச மன்னிப்புச் சபையுடன்" நெருங்கிய உறவைப் பேணியது. இத்தகைய அமைப்புகள், அன்று யாழ் மாவட்டம் முழுவதும் நடந்த தலித் விடுதலைப் போராட்டத்தை, வெறும் மனித உரிமைப் பிரச்சினையாக கருதித் தான் ஆதவளித்தன. சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மேலும் எழுபதுகளில் "ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம்" நடத்திய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் குறிக்கோளுடன் இயங்கி வந்துள்ளது.

1983 , ஆடிக் கலவரமும், அதைத் தொடர்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாண சமூக அமைப்பை தலைகீழாக மாற்றி விட்டது. ஈழத்தமிழரில் பெரும்பான்மையானோர் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அதிலும் உயர்சாதி வெள்ளாளர்களே பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் தமிழ் மேட்டுக்குடியை பிரதிநிதித்துவப் படுத்தினர். அரசியலில், பொருளாதாரத்தில், அரச உத்தியோகங்களில் அவர்களின் பங்களிப்பு அதிகம். அதனால், ஈழப்போர் தொடங்கியவுடன், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது. வசதி படைத்தவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர், அல்லது பாதுகாப்பாக கொழும்பு சென்று தங்கினார்கள். ஊரில் எஞ்சியது வசதியற்ற ஏழைகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் தான். ஈழப்போரில் அவர்களது அர்ப்பணிப்பும், தியாகமும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. அடித்தட்டு மக்களின் பங்களிப்பு புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. புலிகளும் அதற்குப் பிரதிபலனாக, வெளிநாடு சென்ற உயர்சாதியினரின் வீடுகளை அபகரித்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கியிருந்தனர். அந்த நடைமுறை, புலிகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

2002 ல் ஏற்பட்ட போர்நிறுத்தமும், சமாதான காலகட்டமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, தமது ஊருக்கு திரும்பிய உயர்சாதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது வீடுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், காணி உறுதியை காட்டி உரிமை கொண்டாடினார்கள். ஆனால், உள்நாட்டில் வாழ்ந்தவர்களோ ஈழப்போரில் பங்கெடுத்த உரிமையில் பேசினார்கள். ஈழப்போருக்கு நிதி வழங்கியதால், தமக்கே உரிமை அதிகம் என்று, மேலைத்தேய குடியுரிமை பெற்றவர்கள் வாதிட்டார்கள். உயர்சாதியினர் வெளிநாடு சென்ற சமயம், சொத்துக்களை பாதுகாக்குமாறு விட்டு விட்டு வந்த உறவினர்கள், கையறு நிலையில் இருந்தனர். அவர்களால் புலிகளினதும், சிறிலங்கா படையினரதும் அதிகாரத்தை எதிர்க்க முடியவில்லை. இரண்டு எதிரெதிரான ஆயுதமேந்திய சக்திகள், தாழ்த்தப்பட்ட மக்களை யாழ்ப்பாணத்தின் நிரந்தர பிரஜைகளாக அங்கீகரித்து விட்டிருந்தன.

யாழ் குடாநாட்டில், அல்லது வட மாகாணத்தில், உயர்சாதி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று கருதப்படுவோரின் விகிதாசாரம் அதிகம். இலங்கையில், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. அதனால், சரியான எண்ணிக்கை தெரியாது. இருப்பினும், கடந்த முப்பதாண்டுகளாக பெருவாரியான மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழரில், உயர்சாதியினரின் விகிதாசாரம் குறைந்தது என்பது சதவீதமாகிலும் இருக்கலாம். அதிலும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. இந்த சமூகத்தை சேர்ந்த பலர், ஈழப்போரினால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூகத்தில் மேன் நிலைக்கு வந்துள்ளனர். ஈழப்போருக்கு முன்னர், 95% பதவிகள் உயர்சாதியினருக்கு கிடைத்து வந்தன. தற்போது அந்த நிலைமை பெருமளவு மாறிவிட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் இருந்து, பணபலமுள்ள நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தின் சமநிலையில் மாற்றம் வரலாம் என்ற அச்சம், உயர்சாதியினர் மத்தியில் நிலவுகின்றது. இன்றைக்கும், யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாக இருப்பது தாமே என்பதை நிறுவ பெரும் பிரயத்தனப் படுகின்றனர். போரினால் கவனிக்கப்படாது விடப்பட்ட கோயில்களை புனரமைப்பதும், கோலாகலமாக திருவிழாக்கள் நடத்துவதும் அத்தகைய மனோபாவத்தில் இருந்தே எழுகின்றது. கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள் கூட, வெளிநாட்டுப் பணத்தில் பெரிதாக கட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுடன் சிதைவடைந்த கோயில்கள் கூட திருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கின்றது. (அதே நேரம், பொது மக்களின் இடிந்த வீடுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.) கோயில்களை புனரமைக்கவும், திருவிழா செலவுகளுக்கும் நிதி சேகரிக்கும் படலம், வெளிநாடுகளில் முடுக்கி விடப்படுகின்றது. குறிப்பாக ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக்காரர்கள் வாழும் இடங்களில் அத்தகைய நிதி சேகரிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிதி கோரும் போது, அவர்கள் தமது பங்கை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், அந்த நாட்டு சூழலுக்கேற்றவாறு வாழப் பழகியுள்ளனர். அவர்களது பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் திரும்பிச் சென்று வாழ வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. அதனால், கோயில் திருவிழாக்களுக்கு நிதி வழங்க பலர் தயங்கி வருகின்றனர். அவ்வாறு அலட்சியமாக இருக்கும் நபர்கள் மீது, "சாதி அபிமானம்" என்ற இறுதி அஸ்திரம் பிரயோகிக்கப் படுகின்றது. "இப்போதே கோயில் நிர்வாகத்திற்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். திருவிழா நடத்துவதற்கு தாங்கள் பணம் தருவதாக கூறுகின்றனர். அவர்களின் பணத்தில் திருவிழா நடந்தால், எதிர்காலத்தில் கோயில் நிர்வாகம் முழுவதையும் கைப்பற்றி விடுவார்கள். அதன் பிறகு, நாங்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான் சாமி கும்பிட வேண்டும்." என்றெல்லாம் கூறி மனதை மாற்றுகின்றனர். நிச்சயமாக, "முன்னர் தீண்டாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கோயிலின் உள்ளேயும், ஆதிக்கம் செலுத்தியவர்கள் கோயிலின் வெளியேயும் நின்று வழிபடும் நிலைமை," அவர்களைப் பொறுத்தவரை கெட்ட கனவு தான். அதனால், யாழ்ப்பாணத்துடன் பிணைப்பற்றவர்கள் கூட, சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிதி கொடுக்கின்றனர்.

சிறிலங்கா அரசு, "இந்து அறநிலையத் துறை அமைச்சு" மூலம் சைவக் கோயில்களுக்கு நிதி வழங்கி வருகின்றது. சிறிலங்காவின் அரசியல் சாசனம், "பௌத்த மதத்தை அரசு மதமாக" பிரகடனப் படுத்தியுள்ளது என்பதும், அந்த மதத்திற்கு அரச கருவூலத்தில் இருந்து அதிகளவு நிதி வழங்கப்படுகின்றது என்பதும் தெரிந்த விடயங்கள் தான். அதே சிங்கள- பௌத்த பேரினவாத அரசு, இந்துக் கோயில்களுக்கும் நிதி அள்ளிக் கொடுக்கின்றது என்பது பலருக்கு தெரியாது. (மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து, பிற்போக்குத்தனங்களை வளர்ப்பதற்காக அரசு அவ்வாறு நடந்து கொள்கின்றது. கோயில்கள் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிறுவனங்களாக இன்றும் உள்ளதால், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும் அதனை எதிர்க்க மாட்டார்கள்.) அநேகமாக, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக் கோயில்கள் எல்லாமே அரசு நிதியைப் பெறுவது இரகசியமல்ல. வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதற்கும், தனியார் நடத்துவதற்கும் இடையிலான வித்தியாசம் கோயில் என்ற நிறுவனத்திலும் பிரதிபலிக்கின்றது. ஒரு கோயில் முழுவதும் அரச நிதியில் இயங்கினால், அங்கே நிர்வாகத்தினுள் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஊடுருவதை தடுக்க முடியாது. அதற்கு மாறாக, சுயசாதியை சேர்ந்தவர்களின் நிதியில் கோயிலை இயக்கினால், அந்தக் கோயில் தொடர்ந்தும் ஒரே சாதியின் ஆதிக்கத்தின் கீழே இருக்கும். உயர்சாதியினரைப் பொறுத்த வரையில், கோயில் என்பது வெறும் மத வழிபாட்டு ஸ்தலமல்ல. சமுதாயத்தில் சாதிய கட்டமைப்பை வளர்க்கும் நிறுவனமும் அது தான். தமிழ் சமூகம், சாதி, மதம் போன்ற பிற்போக்கு அம்சங்களுக்கு எதிராக போராடாத வரையில், விடுதலை என்பது வெறும் கனவாகவே இருக்கும்.

Tuesday, August 16, 2011

லண்டன் எரியும் போது திருவிழா கொண்டாடிய தமிழர்கள்

முகநூலில் நான் இட்ட நிலைச் செய்தி ஒன்று, பல "தமிழர்களின்" மனச்சாட்சியை தொட்டுள்ளது. சில நண்பர்களும் அந்த செய்தியை தமது பக்கத்தில் மீள்பதிவிட்டனர். அந்த செய்திக்கு கிடைத்த எதிர்வினைகளையும், அதற்கு நான் அளித்த பதில்களையும் கீழே தருகிறேன்.

நிலைச்செய்தி:
லண்டன் நகரம் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், லண்டன் தமிழர்கள் கோயிலில் கோலாகலமாக திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒஸ்லோ நகரத்தில் குண்டு வெடித்து, 80 பேரின் படுகொலையை நினைவுகூர்ந்த துக்க நாளன்று, ஒஸ்லோ தமிழர்கள் தேரிழுத்து திருவிழா கொண்டாடிக் களித்தனர். உலக மக்களின் துயரத்தில் பங்கெடுக்காதவர்கள், தன் வீட்டு துக்கத்தை மட்டும் உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

.............................................................
எதிர்வினை: ‎// மேற்குலகில் ஏதாவது நடந்தால் உடனே தூக்கிப்பிடிப்பதே இப்போதைய வழக்கமாகிவிட்டது.//

பதில்: இல்லை ஐயா, மேற்குலகில் வாழும் தமிழர்களின் அலட்சிய மனப்பான்மையை எடுத்துக் காட்டினேன். ஒஸ்லோவில் நடந்த படுகொலைகளை நினைவுகூருவதற்காக பல இனங்கள் ஒன்று சேர்ந்து துக்கம் அனுஷ்டித்தன. அன்று பல நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழர்கள் மட்டும் அதே தினத்தில், அதே ஒஸ்லோவில் தேர்த் திருவிழா கொண்டாடுவது பண்பான செயலாக தெரியவில்லை. இதைக் காணும் நோர்வீஜியர்கள் தமிழர்கள் பற்றி என்ன நினைப்பார்கள்?
லண்டன் நகரம் முழுவதும் கடைகள் சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. இல்லாதவன் இருப்பவனிடம் பறித்தெடுத்துக் கொண்டிருக்கிறான். இத்தகைய கலவரச் சூழலில் கோயில் திருவிழா நடத்துவது புத்திசாலித் தனமானதா?

எதிர்வினை: பல இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து துக்கத்தை அனுட்டிக்கும்போது ஒன்று சேர்ந்து கடைப்பிடிப்பது வரவேற்கத்தக்தே. திருவிழா ஒருநாள் என்றிருந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமாக இருக்கலாம் ஆயினும் பலநாட் திருவிழாவில் இடைநடுவே நிறுத்துவத்து நல்லதல்ல. லண்டனின் கடைகள் சூறையாட்பட்டன ஆனால் இந்தப் பிரச்சினை வரமுன்னரே அங்குள்ள பிரச்சினைகள் தெளிவாக வெளியே தெரியவந்தவைதானே. எடுத்துக்காட்டாக அங்கேயுள்ள வேலையில்லாப் பிரச்சினை. பல்கலைக் கழகங்களுக்கான மானியங்கள் நிப்பாட்டப்பட்மை. பல்கலைக்கழகப் பிரச்சினை அல் ஜசீராவில் ஒளிபரப்பட்டது. தவிர இலங்கையில் அழிவுகள் இதைவிட மோசமானவை. எடுத்துக்காட்டக கிளிநொச்சி நகரம். இதில் செய்மதிப்படங்களில் அழிவுகள் மிகவும் மோசமானவை என்பதைக் காட்டுகிறது. உலகின் பலபகுதிகளில் அழிவுகள் நடைபெறுகிறது ஆனால் மேற்குலகில் நடைபெறுபவை உடனடியாக பெருப்பிக்கப்பட்டுக் காண்பிக்கபடுகின்றது.

பதில்: ஜூலை 29 ஒஸ்லோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. ஊரில் நடப்பதைப் போல வெளிநாடுகளில் தொடர்ச்சியான திருவிழா நடப்பதில்லை. ஜூலை 22 அன்று ஒஸ்லோவுக்கு அருகில் உத்தேயா தீவில் 90 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நோர்வேயின் பல பாகங்களை சேர்ந்த இளம்பராயத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். கோயில் திருவிழா நடைபெற்ற அன்று தான் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.அன்று ஒஸ்லோவில் தேவாலயங்களில் மட்டுமல்ல, பள்ளிவாசல்களிலும் மரித்தவர்களுக்காக விசேட பிரார்த்தனை/தொழுகை நடைபெற்றது. நோர்வே பிரதமர் ஒஸ்லோ மசூதியில் நடந்த நினைவுகூறலில் கலந்து கொண்டார். ஒஸ்லோவில் நடைபெற இருந்த தமிழ் இலக்கிய நிகழ்வு ஒன்றும் இரத்து செய்யப்பட்டது. தேர்த்திருவிழாவை நிறுத்துமாறு யாரும் கூற மாட்டார்கள். ஆனால் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மனச்சாட்சி இருக்க வேண்டாமா? அன்றைய தினம் கோயில் தர்மகர்த்தா ஒருவர் பக்தர்கள் முன்னிலையில் பிறந்தநாள் கொண்டாடியதாக அறிகிறேன். இதெல்லாம் யாருக்குமே உறுத்தவில்லை.

லண்டன் கலவரத்தின் மத்தியில் நடந்த திருவிழா வித்தியாசமானது. கோயில் இருந்த பிரதேசம் (லண்டனின் புறநகர்ப் பகுதி) கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது உடமைகளை பாதுகாக்க அல்லாடுகிறார்கள். கடைகள் உடைத்து சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன. சில வீடுகளில் கூட திருட்டு போனது. போலிசை அந்தப் பக்கம் காணவில்லை. லண்டன் பொலிஸ் பெரிய வர்த்தக நிறுவனங்களை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடுகின்றனர். வீதியில் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. அத்தகைய சூழலில் கோயில் திருவிழா நடத்துவதும், திருவிழாவுக்கு செல்லும் "பக்தர்கள்" நகைகள் அணிந்து செல்வதும் எவ்வளவு மடத்தனமானது?

உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எனது சுயநலத்தை கவனிக்கிறேன், என்ற தமிழரின் மனப்பான்மை தானே இதற்கெல்லாம் காரணம்? தமிழர்கள் என்றைக்கும் மற்ற இனத்தவரின் துக்கத்தை கணக்கெடுப்பதில்லை. பிறகெப்படி எங்களின் துயரத்தை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? நீங்கள் கொடுத்த உதாரணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 2009 வன்னிப் படுகொலையில் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நாளன்று, வவுனியாவில் வாழும் பௌத்தர்கள் திருவிழா கொண்டாடினால் என்ன நினைப்பீர்கள்? கொழும்பு நகரில் நடந்த கலவரத்தில் தமிழரின் உயிர்கள் பறிக்கப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில், ஒரு பௌத்த கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்? எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் நடைபெற்ற படுகொலை, கலவரத்தைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. வெளிநாடுகளில் தமிழர்கள் வாழும் அதே ஊரில் நடந்த படுகொலைகள், கலவரம் பற்றித் தான் குறிப்பிட்டேன்.

எதிர்வினை: ‎// 50 ஆண்டுகளாக அடித்து நொருக்கப்பட்டவர்கள் ஒரு சின்ன சந்தோசத்தை அனுபவித்தால் கசக்கிறது போலும்.//

பதில்: உங்களுக்கு ஒன்று தெரியுமா? யுத்தம் முடிந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அவர்களை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திட்டித் தீர்த்தார்கள். முகநூலில் கூட யாழ்ப்பாண தமிழர்களை எதிரியுடன் ஒத்துழைக்கும் துரோகிகள் என்ற லெவலுக்கு தூற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இதே புலம்பெயர்ந்த தமிழர்கள், ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம் தவறாமல் சந்தோசம் அனுபவித்தவர்கள் தான். ஒரு காலத்தில், தமிழக சினிமா நடிகைகள், பாடகர்களை கூப்பிட்டு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளில் நடிகைகளை நோக்கி தங்கச் சங்கிலி வீசிய தமிழர்களை எனக்குத் தெரியும். இன்னொரு தருணம், இத்தகைய நபர்கள் தம்மை தமிழீழ தேசிய காவலர்களாக காட்டிக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, கோயில் திருவிழாக்களும் வருடாவருடம் விமர்சையாக நடப்பது தான். அப்போதும் ஈழத்தில் மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அதையிட்டு எந்தக் கவலையுமின்றி சந்தோசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இன்றைக்கும் தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்கப் பிரிவினை என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? இதற்குள்ளே சாதியப் பாகுபாடுகளும் கலந்துள்ளதை நம்புவீர்களா? வசதியுடையவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பி விட, வசதியற்றவர்கள் போருக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இது ஈழத்தில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் யுத்தம் நடக்கும் நாடுகளில் நடக்கும் விடயம் தான். தனது இனத்தின் ஒரு பகுதி போரினால் பாதிக்கப்பட்டு உயிரை இழந்தும், முடமாகியும், சொத்துகளை இழந்தும் அல்லல் படுவதை உணர முடியாதவர்கள் இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள். உண்மையில் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை விற்று காசாக்கியும், அதைக் காட்டி வதிவிட விசா எடுத்தும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் அதிகம். இப்படிப்பட்ட மனிதர்கள், பிற இனத்தவரின் நன்மை, தீமைகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா? ஐரோப்பிய நகரங்களில் பாலஸ்தீன பிரச்சினைக்காகவோ, அல்லது ஈராக் போரை எதிர்த்தோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காலங்களில் ஒரு தமிழன் கூட கலந்து கொள்ளவில்லை. (விதிவிலக்காக என்னைப் போன்ற சிலர் கலந்து கொள்வது வேறு விடயம்). "ஏன் ஊர்வலங்களில் கலந்து கொள்ளவில்லை?" என்று கேட்டால், "முஸ்லிம்களை அழிப்பது வரவேற்கத்தக்க விடயம்." என்று பதிலளிப்பார்கள். பிற இனம் அழியும் பொழுது நாம் அலட்சியப்படுத்தினால், மற்றவர்கள் எம்மீது இரங்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
எதிர்வினை: // உணர்வோடு போராடுகிறவன் அனைத்து சமூகத்திலும் சொற்பமே...
ஈழத்தில் முள்வேலி முகாமுக்குள் தமிழர்கள் அடைப்பட்டு கிடந்து பொழுது....யாழ்ப்பாணத்திலும் திருவிழா கொண்டாடிக் கொண்டுதான் இருந்தார்கள்..
நம் மொழி பேசுகிறார்கள் என்ற காரணத்தினாலேயே நாம் அனைத்து விடயங்களிலும், அவர்களுக்கு ஆதரவான மனநிலையில் நிற்க கூடாது..//
பதில்: நான் சுட்டிக் காட்டியது அரசியல் அறிவுக் குறைபாடல்ல. அவர்களுக்கு அரசியல் தெரியாதென்று நான் கருதவில்லை. குறுகிய மனப்பான்மை கொண்ட குறுந்தேசியவாத அரசியல் தான், இத்தகைய தமிழர்களின் அடிப்படை அரசியல். அது சில இடங்களில் இனவாதமாகவும்,மதவாதமாகவும் காணப்படும். அவர்களுக்கு பிற இனத்தவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. மரபுவழி இனக்குழு அரசியலின் தொடர்ச்சியாகவே இவர்களது எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், ஒரு காலத்தில் சாதியும், மதமும் அவர்களது அடையாளத்தை தீர்மானித்தது. தற்போது இனவாதம் சார்ந்த குறுந்தேசியவாதம் அவர்களது அடையாளத்தை தீர்மானிக்கின்றது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து, முதலாளித்துவத்திற்கு மாறும் போது ஏற்பட்ட சமூக மாற்றம் இது. ஒஸ்லோவில் நடந்த படுகொலைகளுக்கு பின்னர், ஒஸ்லோ முருகன் கோயிலில் கலந்து கொண்ட "பக்தர்கள்" பலரது கருத்தைக் கேட்டேன். அவர்கள் அன்டெர்ஸ் பிறேவிக் என்ற நோர்வீஜிய கொலைகாரனை ஆதரித்து பேசினார்கள். அவனது செயலை நியாயப் படுத்தினார்கள். காரணம், "ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்." என்ற வெள்ளை நிறவெறியர்களின் கொள்கையை ஆதரிக்கின்றார்கள். நிற்க, அன்றைய தினம் ஒஸ்லோ தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இறந்தவர்களை நினைவுகூர்ந்து வழிபாடு நடைபெற்றது. தமிழ்க் கோயிலிலும் அதற்காக பூஜை நடத்தி இருந்தால் வரவேற்றிருக்கலாம். அனால் அன்றைய தினம் உள்வீதி, வெளிவீதி என்றெல்லாம் தேரிழுத்து அயலில் உள்ள நோர்வீஜிய மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது புத்திசாதுர்யமானதா? இந்த சம்பவத்தால், நோர்வீஜியர்கள் மனதில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி வளராதா?

எதிர்வினை: //லண்டன் நகரம் தீப்பற்றி எரியும் போது அருகிலேயே கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பார்கள், அது தவறில்லை அதை ரசித்து பார்த்து கொண்டிருப்பீர்கள் அது தவறில்லை, நாங்கள் மத அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் கொண்டாடும் விழா மட்டும் உங்களை உறுத்துகிறது போலும்.//

பதில்: ஆமாம், கலவரம் நடந்து கொண்டிருக்கையில், லண்டன் நகரில் கிரிக்கட் விளையாடினார்கள். அது எங்கே தெரியுமா? மேட்டுக்குடி வசிக்கும் லண்டன் நகர்ப்பகுதியில், பொலிஸ் படைகள் முழுவதும் செல்வந்தர்களது வசிப்பிடத்தை பாதுகாத்து நின்று கொண்டிருந்தது. ஆனால், லண்டன் நகரின் வறுமையான புறநகர்ப் பகுதிகள் தான் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டன. தமிழ்க் கோயிலும் அங்கே தான் உள்ளது. (தமிழ்க் கோயில் என்று அழைக்க காரணம், அந்தக் கோயிலுக்கு தமிழர்கள் மட்டுமே செல்வதுண்டு.) உங்கள் பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் வீட்டில் அமைதியாக விழா கொண்டாட முடியுமா? லண்டனில் நடந்த கோயில் திருவிழாவும் அவ்வாறான சூழ்நிலையில் தான் நடந்தது.

Saturday, August 13, 2011

இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

"இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்கள் எழுச்சி கொள்கின்றனர். எல்லோரும் பொறுமை இழந்து விட்டார்கள். யாரிடமும் இழப்பதற்கு எதுவும் இல்லை." - லண்டன் கலவரத்தை நேரில் பார்த்த சிலரின் கருத்துக்கள்.

லண்டன் நகருக்கு வெளியே டோட்டன்ஹம் பகுதியில், பொலிஸ் ஒரு இளைஞனை சந்தேகித்திற்கிடமான வகையில் சுட்டுக் கொன்றது. வழக்கம் போலவே, "போலிசை தாக்குவதற்கு எத்தனித்த நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக" பிரிட்டிஷ் பொலிஸ் தெரிவித்ததை யாரும் நம்பவில்லை. பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் அராஜகம் வெடித்துக் கிளம்பியது. கும்பல் கும்பலாக கிளம்பிய இளைஞர்கள், வர்த்தக ஸ்தாபனங்களை அடித்து நொறுக்கினார்கள். கடைகளை சூறையாடினார்கள். லண்டன் நகரில் மட்டும் நின்று விடாது, பேர்மிங்ஹாம் போன்ற பல நகரங்களுக்கு கலவரத்தீ பரவியது. கலவரத்தில் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர் எல்லோரும் ஈடுபட்டனர். ஏழ்மை மட்டுமே இனவேற்றுமை கடந்து அவர்களை ஒன்று சேர்த்தது. "லண்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், போலீசுடன் மோதுவதை விட, கொள்ளையடிப்பது இலகுவானது என்று கருதுகிறார்கள் ...." இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஊடகவியலாளர். அவர் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கலவரம் பற்றி தமக்குத் தெரிந்த காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசும், வலதுசாரி ஊடகங்களும் கலவரத்தில் ஈடுபடுவோர் குறித்து ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. "சமூகவிரோதிகள்!". "கொள்ளையடிப்பது, திருடுவது சமூகவிரோதிகளின் செயல். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்." என்று அரசு கூறி வருகின்றது. பொதுமக்களில் ஒரு பகுதி இதனை ஆதரிக்கின்றது.

அரசியல் மயப்படுத்தப் படாத மக்கள் எழுச்சி எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு லண்டன் கலவரம் ஒரு உதாரணம். கலகக்காரரின் அறியாமையை பூர்ஷுவா வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. கலவரத்தில் ஈடுபட்டோர், காப்பரேட் நிறுவனங்களின் சூப்பர் மார்க்கெட்டுகள், ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள், போன்றவற்றை உடைத்து சூறையாடினார்கள். பெரும் முதலாளிகளை பாதித்த கலவரம் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. பெரும் வணிக நிறுவனங்களின் காட்சியறைகள் நிறைந்திருக்கும் லண்டன் மத்தி, விரைவிலேயே பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆரம்பத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரின் தார்மீகக் கோபம், பெரும் வணிக நிறுவனங்கள் மேல் தான் குவிந்திருந்தது. நாள் தோறும் கண்கவர் விளம்பரங்கள் மூலம், பாவனையாளர்களை சுண்டி இழுக்கும் நிறுவனங்கள், தமது பொருட்களை வாங்குவதற்கு வசதியற்ற மக்கள் இருப்பதை மறந்து விடுகின்றனர். "பணமிருப்பவனுக்கு விற்கிறோம். இல்லாதவன் மூடிக் கொண்டு படுக்க வேண்டியது தானே..." என்று திமிராக பதிலளிப்பார்கள்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை, ஒரு ஊடகவியலாளர் எகத்தாளமாக குறிப்பிட்டார்: "முன்பு மக்களிடம் பணம் இருந்தது. கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்போது கடைகளில் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆனால் மக்களிடம் வாங்குவதற்கு பணமில்லை." ஆனால்.... இங்கிலாந்து, "பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத கிழக்கு ஐரோப்பிய நாடு அல்லவே?" பணக்கார மேற்குலகை சேர்ந்த இங்கிலாந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்? இந்தியா போன்ற வறிய நாடுகளில் இருந்தெல்லாம், கையிலே பணமில்லாமல் வந்து குடியேறும் தற்குறியைக் கூட பணக்காரனாக்கும் நாடல்லவா? அத்தகைய சொர்க்கபுரியில் கலவரமென்றால் நம்பக் கூடியதாகவா இருக்கின்றது? இங்கிலாந்தில் கணிசமான ஏழை மக்கள், சேரிகள் போன்ற குடியிருப்புகளில் விளிம்புநிலையில் வாழ்வதாக கூறினால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். நான் முன்னர் கூறிய படி, ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த அரசியலைப் பேசுவார்கள். உங்களுக்குத் தெரிந்த, இங்கிலாந்தில் வாழும் தமிழ் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். வெள்ளையின வறிய மக்கள் குறித்த பொதுவான கருத்து இவ்வாறு இருக்கும். "இங்கிலாந்தின் வெள்ளையின குடிமக்கள் பலர் உழைத்து வாழ விரும்பாத சோம்பேறிகள். அரசு வழங்கும் உபகாரச் சம்பளத்தில், இலவச சலுகைகளை பெற்றுக் கொண்டு சொகுசாக வாழ்கின்றவர்கள்."

பூர்வீக ஆங்கிலேயர்களையும், பன்னாட்டுக் குடிவரவாளர்களையும் பிரித்து வைப்பதில், அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்களை நெருங்க முடியாத கலவரக்காரர்கள், தமது பிரதேசத்தில் உள்ள சிறு வணிகர்களின் வியாபார நிலையங்களை தாக்குகின்றனர். அநேகமாக, இங்கிலாந்தின் சிறுவணிகர் குழாம் பன்னாட்டுக் குடியேறிகளைக் கொண்டது. அவர்கள், தமது சமூகத்தினருக்கான பலசரக்குக் கடைகள், உணவுச்சாலைகள் மட்டுமல்லாது, நடைபாதையோர பெட்டிக்கடைகள் கூட வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள், இலங்கையர்கள் சிறு வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பேர்மிங்ஹாம் பகுதியில் சீக்கியர்கள் தமது வியாபார நிறுவனங்களையும், குருத்வாராக்களையும் தாமே பாதுகாக்கின்றனர். ஹாக்கி, கிரிக்கெட் பேட், வாள்கள் சகிதம் சீக்கிய தொண்டர் படைகள் காவலுக்கு நிற்கின்றன. இந்த தொண்டர் படை, கலவரக்காரர்களை அண்ட விடாமல் விரட்டி அடிப்பதை, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. "பிரிட்டன் எமது தாயகம். நாங்கள் எங்கள் ஏரியாக்களை பாதுகாக்கிறோம்..." என்று கூறும் சீக்கியரின் "நாட்டுப் பற்றை" ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன.

துருக்கியரும் தமது வியாபார நிறுவனங்களை தாமே பாதுகாக்கின்றனர். "நாங்கள் துருக்கியர்கள். எங்களிடம் வாலாட்ட முடியாது..." என்று தேசியவாதப் பெருமிதத்துடன் கூறுகின்றனர். போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தோரும், கொள்ளையடிக்க வருவோரை தாமே அடித்து விரட்டுகின்றனர். "எங்களுக்கு அடைக்கலமளித்து முன்னேற வைத்த பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்போம்" என்கின்றனர். தமிழ் சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் மட்டும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். நகைக்கடை உட்பட பல தமிழ்க்கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. "மத்திய லண்டனையும், பெரிய வணிக நிறுவனங்களையும் பாதுகாக்கும் பொலிஸ், இந்தப்பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை..." என்று குறைப்படுகின்றனர். சீக்கியரைப் போல, துருக்கியரைப் போல, அடியாட்களை வைத்து வர்த்தகத்தை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் தமிழ் சமூகம் உள்ளது. "ரோம் நகரம் பற்றியெரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக..." வரலாறு கூறுகின்றது. லண்டன் நகரம் பற்றியெரியும் பொழுது, தமிழர்கள் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதை, லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

லண்டனில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பிற நகரங்களிலும் வேலையற்ற ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகள் பெரும்பான்மையாக இருப்பதாக தோன்றினாலும், வெளிநாட்டுக் குடிவரவாளர்கள் மத்தியிலும் ஏழைகள் பெருகி வருகின்றனர். என்ன வித்தியாசம் என்றால், வெள்ளையின ஏழைகள், வேலை கிடைக்காத பட்சத்தில், சமூகநலக் கொடுப்பனவுகளில் வாழ்வதை தமது உரிமையாக கருதுகின்றனர். மாறாக, குடிவரவாளர்கள் சூழ்நிலை காரணமாக கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை சம்பளத்தை விட குறைவாக கொடுத்தாலும், தினசரி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டாலும், சலிக்காமல் சம்மதிக்கின்றனர். அநேகமாக அவர்களின் சொந்த இனத்தை சேர்ந்த முதலாளிகள் தான் அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். வெள்ளயினத்தவர்களை அவ்வாறு சுரண்டுவதற்கு வாய்ப்பில்லை. அரசும், தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இயலாவிட்டால், சமூகநலக் கொடுப்பனவுகளை வழங்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். முன்பெல்லாம் இது அரசின் கடமையாக கருதப்பட்டது.

சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகம் மாறிவிட்டது. மித மிஞ்சிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், வேலையற்றோரின் அடிப்படை தேவைகளை புறக்கணிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இரு வருடங்களுக்கு முந்திய பொருளாதார நெருக்கடி, பிரிட்டனை வெகுவாக பாதித்துள்ளது. அரசும், பெரும் முதலாளிகளும் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தாலும், நாட்டில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசின் திட்டங்கள், பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப் படாமையை சுட்டிக் காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் தான், உயர்கல்விக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இனி பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள், அரசின் கொள்கையை எதிர்த்து கலகம் செய்தனர். அதிகார மையத்திற்கு எதிரான மாணவர்களின் கலகக்குரல்கள், வெளி உலகத்தை எட்டவில்லை. அவர்களும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி, நாசம் விளைவித்திருந்தால், சர்வதேச ஊடகங்களின் கவனம் அங்கே குவிந்திருக்கும்.

பிரிட்டிஷ் அரசின் உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதல் அண்மைய கலவரத்தை தூண்டி விட்டது. இது வரை காலமும், விளிம்பு நிலை மக்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. "சும்மா இருக்க பணம் கிடைப்பதால், மக்கள் வேலைக்கு போக மறுக்கிறார்கள்..." என்று தீவிர வலதுசாரிகள் செய்து வந்த பிரச்சாரத்தை அரசு கொள்கையாக வரித்துக் கொண்டது. முந்தைய சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. (கவனிக்கவும்: சோஷலிச நாடுகளில் மக்களுக்கு சிறந்த வசதிகள் செய்யப்பட்டிருந்ததை முதலாளித்துவவாதிகள் இந்த இடத்தில் ஒத்துக் கொள்கின்றனர்.) ஆனால், சோஷலிச நாடுகளில் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில், வேலை வாய்ப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை. முதலாளிகள் தமக்குத் தேவையான அளவு தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். எஞ்சியவர்களை "வேலையற்றோர் படையில்" சேர்த்து விடுகின்றனர். வேலையற்றோர் படைக்கு வேதனம் வழங்குவது மட்டுமே அரசின் கடமையாகின்றது.

அரசோ பட்ஜெட்டில் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், சலுகைகளை குறைத்து வருகின்றது. வேலையில்லாமல் உதவித்தொகை பெறுவோர், கிடைக்கும் வேலையை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் படலாம். ஒருவர் முன்பு பொறியியலாளராக வேலை செய்திருந்தாலும், இப்போது தெருக்கூட்டும் வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும். "விபச்சாரத்தை தவிர எல்லாவிதமான தொழிலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் படலாம்..." என்று சட்டம் கூறுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளா விட்டால், உதவித் தொகை நிறுத்தப்படும். இவ்வாறு எத்தனையோ காரணங்களை காட்டி, உதவித் தொகை நிறுத்தப் படுகின்றது. அரசு பணம் கொடுக்கா விட்டால், மக்கள் எவ்வாறு வாழுவது? அது அரசின் கவலை அல்ல. இதனால் அரசு மறைமுகமாக தெரிவிப்பது: "வேலயில்லா விட்டால், பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ வாழப் பழகிக் கொள்ளுங்கள்." இங்கிலாந்தில் கலவரத்தில் ஈடுபட்டோரும் அதைத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமேயில்லை. தாங்கள் வறுமையில் வாழ்கையில், இன்னொரு கூட்டம் வசதியாக வாழ்வதை கண்கூடாகக் காண்கின்றனர்.

இல்லாதவன் இருக்கிறவனிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுக்கிறான். இதிலே வேதனை என்னவென்றால், தமது எதிரி யாரென்று தெளிவற்ற கலகக்காரர்கள், தம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் சொத்துகளையும் கொள்ளையடிக்கின்றனர். சிறு வணிகர்கள் தாக்கப்படுவதும் இவ்வாறு தான். சில இடங்களில் சாதாரண உழைக்கும் மக்களின் வீடுகளில் கூட திருடி இருக்கிறார்கள். அவர்களின் கார்களை கொளுத்தி இருக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் கூட எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு பெற்றோர், சரியான இலக்குகளை காண்பிப்பது அவசியம். அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளின், தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் எதிரிக்கே சாதகமாக அமைந்து விடுகின்றது. உழைக்கும் மக்களை கூறு போட வழி வகுத்து விடுகின்றது. சில நேரம், உழைக்கும் வர்க்கத்தை இனரீதியாக பிரித்து வைக்கவும், அரசியலற்ற அராஜக செயல்கள் உதவுகின்றன.

பிரித்தானியாவின் இடதுசாரிகள் இங்கிலாந்தின் கலவரங்களை ஆதரித்தாலும், அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம், இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? தனது வீட்டின், கடையின் உடமைகளை பறிகொடுத்த சாமானியர்கள் கூட, அரசு கலவரத்தை அடக்க வேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள். இடதுசாரிகள் தமது எதிர்ப்பியக்கத்தை வளர்க்காமல், பிற சக்திகளின் போராட்டங்களின் நிழலில் தங்கியிருந்த தவறை உணர்கின்றனர். உதாரணத்திற்கு, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும், தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர். வர்க்கப்போராட்டத்திற்கு முற்றிலும் மாறான கொள்கைகளைக் கொண்ட இது போன்ற சக்திகளின் போராட்டம், எந்தளவு இடதுசாரிகளுக்கு உதவியுள்ளது? ஏகாதிபத்தியத்தின் பலமும் குறையவில்லை. இடதுசாரிகளுக்கான ஆதரவும் அதிகரிக்கவில்லை.

இங்கிலாந்தில் வெடித்துள்ள கலவரம், பிற நாடுகளிலும் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது முழுவதும் பாட்டாளி மக்களின் எழுச்சியாக கருத முடியாது. சில சமூகவிரோத சக்திகளும் கலவரத்தின் பின்னணியில் இருப்பதை மறுக்க முடியாது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் மக்கள் புரட்சிக்கு தயாராகத் தான் இருக்கிறார்கள். அதனை சரியாக இனங் கண்டு வளர்த்தெடுப்பதில் இடதுசாரிகள் காட்டும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய சிறுவணிகர்களின் வியாபாரங்களை பொலிஸ் பாதுகாக்க தவறியதும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். வெளிநாட்டு குடிவரவாளர்களின் நிறுவனங்களை தானே கொள்ளையடிக்கிறார்கள், என்று அலட்சிய மனப்பான்மை ஒரு காரணம். அவர்கள் தமது வியாபாரத்தை பாதுகாப்பது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தால், சூறையாட வருவோர் அவர்களையும் தாக்குவார்கள். (அவ்வாறான சம்பவம் ஒன்றில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.) பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வெள்ளையின ஏழைகளின் கோபம், வெளிநாட்டவர் மீதும் திரும்பலாம். இது ஏற்கனவே வெள்ளையின உதிரிப்பாட்டாளிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தீவிர வலதுசாரிகளின் கரத்தை பலப்படுத்தும். அதைத் தான் அரசும் எதிர்பார்க்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதும், பல்வேறு இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைப்பதும், இடதுசாரிகள் முன்னால் உள்ள இமாலயப் பணியாகும்.மேலதிக தகவல்களுக்கு:

இங்கிலாந்து கலவரம் தொடர்பாக சின்னக்குட்டியின் பதிவு:
இங்கிலாந்து ;கலவரமா ? கிளர்ச்சியா?

Monday, August 08, 2011

சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்

தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து "நாம் தமிழர்" அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.

இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் . மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.

இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு, இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.

இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.

சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.

தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு தருணத்தும் தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின் அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும் கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம்.

Thursday, August 04, 2011

தேர்தலில் வென்றால் தமிழீழம் மலரலாம்

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில், ஜூலை மாதம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழ் வாக்காளர்கள் பெருமளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமை, தமிழ் தேசிய முகாமில் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக, "தமிழ் தேசியத்திற்கு, அல்லது தமிழீழ தனியாட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக" பலர் பொழிப்புரை வழங்கி வருகின்றனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் தேசியவாதிகள் இது போன்ற பரப்புரைகளை, தம் வசம் உள்ள ஊடகங்களில் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிறிலங்கா அரசானது கூட்டமைப்பின் வெற்றியை சிறுமைப்படுத்தியுள்ளது. பாஸிச ஜாதிக ஹெல உறுமய ஒரு படி மேலே சென்று, "இந்த தேர்தல் வெற்றியைக் காட்டி, சமஷ்டி என்றெதுவும் கேட்டுக் கொண்டு வரக் கூடாது..." என்று மிரட்டியுள்ளது. தமிழர்களின் பிரச்சினை ஒருபுறம் இருக்கையில், தீவிர தமிழ் தேசியவாதிகளும், தீவிர சிங்கள தேசியவாதிகளும், ஒரே புள்ளியில் நின்று கொண்டு பேசுகின்றமை இங்கே புலனாகும். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், வட- கிழக்கு மாகாணங்களில், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பிராந்தியக் கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது. மறு பக்கம், சிங்கள இனவாதக் கட்சிகளும், "தமிழர்கள் நாட்டை பிரிக்கப் போகும் அபாயத்திற்கு ஆதாரமாக" தமிழ் தேசியக் கட்சிகளின் வெற்றியை சுட்டிக் காட்டி ஓட்டு சேகரிப்பார்கள்.

1976 ம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில், தமிழரின் குறிக்கோள் தமிழீழம் என்ற தீர்மானம் எடுக்கப் பட்டது. 1977 நடந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, போட்டியிட்ட அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றியது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான், வட-கிழக்கு மாகாணங்களில் எதிரும் புதிருமாக போட்டியிட்டு வந்த இரண்டு தமிழ்க் கட்சிகள் "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்ற பெயரில் ஒன்று சேர்ந்தன. அன்றைய நாட்களில், தமிழர்கள் அடைந்த உற்சாகத்தை சொல்லி மாளாது. "தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். விரைவில் தமிழீழம் கிடைத்து விடும்." என்று நம்பினார்கள். தமிழ் தேசிய அரசியவாதிகளும், "அடுத்த வருடம் தமிழீழத்தில் தைப் பொங்கல் கொண்டாடுவோம்" என்று நம்பிக்கையை விதைத்து வந்தனர்.

பாராளுமன்றத்திற்கு தெரிவானதும், சிங்கள அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, பதவி தந்த சுகத்தை அனுபவிப்பது, தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. கொழும்பு நகரில் அரசு கொடுத்த பங்களாவில் குடியிருந்து கொண்டு, தொகுதிப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளைக் கூட "தமிழீழத்தில்" கல்வி கற்க விடாமல், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அன்றைய தமிழரசுக் கட்சி முதல், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையில், இந்த நிலையில் மாற்றமெதுவும் வந்து விடவில்லை. 1977 தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தமிழீழம் வராததைக் கண்ட இளைஞர்கள் பொறுமை இழந்தார்கள். அதற்குப் பிறகு நடந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில், பிரச்சாரம் செய்ய சென்ற வேட்பாளர்களை கேள்வி கேட்டார்கள். "தம்பி மாருக்கு இதெல்லாம் புரியாது. கத்தி முனையில் நடப்பதைப் போன்று அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்..." என்று தமிழ் தேசிய அரசியல்வாதிகள் சமாளிப்பார்கள். உண்மையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கம், அரசுடன் பேரம் பேசி அதிக சலுகைகளை பெற்றுக் கொள்வது. பேரம்பேசல்களில் கிடைக்கும் ஆதாயங்கள், சிறு தொகையினரான தமிழ் மேட்டுக்குடிக்கு போய்ச் சேரும், என்ற விடயம் அப்பாவி வாக்காளர்களுக்கு தெரியாது. அவர்களைப் பொறுத்த வரையில், "தமிழீழம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக" கருதப் பட்டது.

தமிழரின் அதிக பட்ச கோரிக்கையாக தமிழீழத்தை முன்மொழிந்த செயற்பாடானது, எதிர்காலத்தில் அவர்களுக்கே எமனாக அமைந்து விட்டது. தமிழ் தேசிய முகாமில், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகள் தோன்றின. தேர்தல்களில் போட்டியிட்ட வயதான அரசியல்வாதிகள் மிதவாதிகளாகவும், அடிமட்ட தொண்டர்களான இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் மாறினார்கள். தமிழ் தேசிய தீவிரவாதிகள், பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்திருந்தனர். ஆயுதப் போராட்டத்தை நாடினார்கள். அதற்கு மாறாக, காந்தீய வழியை கைவிடாத தமிழ் தேசிய மிதவாதிகள், இன்னமும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். இவ்வாறு இரு வேறுபட்ட திசைகளில் சென்ற தமிழ் தேசியவாதிகள், பிற்காலத்தில் ஒருவரை மற்றவர் எதிரியாக கருதும் சூழ்நிலை உருவாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கென சொந்தமாக ஆயுதக்குழுவை உருவாக்கும் முயற்சி தோல்வியுற்றது. அதனால், அவர்களின் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்த தமிழீழ ஆயுதபாணி இயக்கங்களின் வன்முறைக்கு இலக்காகினர். வளர்த்த கடா மார்பில் முட்டியது போல, தமிழ் அரசியல் தலைவர்கள், தாம் வளர்த்து விட்ட தமிழ்த் தேசியத்திற்கு பலியானார்கள்.

ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பு தீர்மானகரமான சக்தியாக வளர்ந்து விட்ட காலங்களை, தமிழர் விடுதலைக் கூட்டணி கொழும்பில் இருந்து அரசியல் நடத்தியது. சிங்கள அரசு நடத்தும் தேர்தல்களை பகிஷ்கரிக்குமாறு, புலிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகளை எதிர்த்துக் கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டது. அந்த தேர்தல்களிலும் பெருமளவு தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றனர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பலர், அன்று புலிகளின் நிலைப்பாட்டை ஆமோதித்திருந்தனர். தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் துரோகிகள் என்று கூறினார்கள்.

இன்று இரு தசாப்தங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, தமிழ் தேசியவாதிகள் மத்தியில் மிதவாதிகளின் கை ஓங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
அதாவது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளோம். உண்மையில், சிங்கள அரசும், இந்திய அரசும், மற்றும் சர்வதேச நாடுகளும் இது போன்ற மாற்றத்தை விரும்பியிருக்கலாம். முன்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில், புலிகள் அமைப்பை அரசியல் கட்சியாக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், புலிகள் அமைப்பினர் அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால் அழிக்கப்பட்டனர். பல இந்திய, மேற்கத்திய இராஜதந்திரிகள் அதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

தொன்னூறுகளில் இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பின்னர், இலங்கை அரசுடன் பேசிய புலிகள், "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்திருந்தனர். பிற்காலத்தில் பிரபாகரன்- மாத்தையா உள்முரண்பாடுகளால் கட்சி கலைக்கப்பட்டு விட்டது. நோர்வேயின் அனுசரணையுடன், இறுதியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்தக் கட்சியை ஸ்தாபன மயப்படுத்துமாறு மத்தியஸ்தர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், புலிகளின் நோக்கம் வேறாக இருந்தது. ஒரு காலத்தில் "புலி எதிர்ப்பாளர்களாக" கருதப்பட்ட, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்ப், டெலோ போன்ற கட்சிகளில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது.

அன்றிருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு போன்று செயற்பட்டு வந்தது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், "புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்," என்று பகிரங்கமாக அறிவித்திருந்தனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. உண்மையில், தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல்களில், ஏற்கனவே போட்டியிட்டு வந்த மிதவாத தமிழ் அரசியல் தலைமையை, புலிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். கடந்த முப்பதாண்டு ஆயுதப்போராட்ட கால வரலாற்றில், புலிகள் தமக்கென அரசியல் கட்சியை உருவாக்காதது ஏன்? தேர்தல் என்று வந்து விட்டால், தமிழ் மக்கள் எப்போதும் மிதவாதிகளுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற புரிதலால் இருக்கலாம்.

வடக்கு- கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தேர்தல் என்று வந்து விட்டால், ஏதோ ஒரு வகையில் தமது எதிர்ப்பை பதிவு செய்யத் தயங்குவதில்லை. எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவத்தின் வருகையுடன் அந்தப் போக்கு ஆரம்பமாகியது. அதற்கு முன்னர் சுமார் ஐந்து வருடங்களாக நடந்த முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் நடந்த முதலாவது பாராளுமன்ற தேர்தலில் அது வெளிப்பட்டது. வடக்கு- கிழக்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள், ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப் போன்ற கட்சிகளை ஆதரித்தன. அந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் அடாவடித்தனம் செய்து திரிந்ததால், தமிழ் மக்கள் அதிருப்தியடைந்திருன்தனர். இதனால், அன்றைய காலத்தில் ஆயுத வன்முறையில் ஈடுபடாதிருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு வாக்களித்தனர். அநேகமாக, வட- கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பாராளுமன்றத்திற்கு தேர்வானார்கள். தேர்தல்களுக்கு முந்திய காலங்களில், ஈரோஸ் தமிழ் தேசியத்தில் அதிக ஆர்வமற்ற மார்க்சிய இயக்கமாக அறியப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அன்று தலைமறைவு இயக்கமாக இருந்த புலிகளும், ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்திருந்தனர்.

இன்று, வட- கிழக்கு மாகாணங்களில் இராணுவமும், அரசுக்கு ஆதரவான கட்சிகளை சேர்ந்தவர்களும் தான், உண்மையான அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றனர். வடக்கில் ஈபிடிபி, கிழக்கில் கருணா, பிள்ளையான் அணி என்பன தமிழ் மக்கள் மேல் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அதிகார துஷ்பிரயோகம் குறித்து யாராலும் கேள்வி எழுப்ப முடியாத சூழ்நிலை அங்கு நிலவுகின்றது. தமிழ் மக்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே தமது அதிருப்தியை காட்ட முடியும். மக்கள் தினசரி நிஜத்தில் சந்திக்கும் அதிகாரத்தை அசைக்க முடியாததால், அரசு விரும்பாத எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர். சுருக்கமாக, இது எதிர் வாக்குகள். தமிழகத்தில் திமுக வுக்கு எதிராக அதிமுக வுக்கு வாக்களிப்பது போன்றது. இது போன்ற தேர்தல் முடிவுகள் இதற்கு முன்னமும் கிடைத்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வென்றாலும், அவர்கள் தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்கப் போவதில்லை. அது அங்குள்ள மக்களுக்கும் தெரியும்.

தமிழ்ப் பிரதேசங்களில் நடந்த தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு உண்மை புலனாகின்றது. இன்று வரை, தமிழ்த் தேசிய அரசியல் மக்களை பார்வையாளர்களாக வைத்திருக்கவே விரும்புகின்றது. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் மக்கள் எல்லோரும் உணர்ந்துள்ளனர். இருப்பினும், தீர்வை நோக்கிய பாதையில் மக்களை அணிதிரட்டி செல்லாத வரையில், அவர்களால் முடிந்ததெல்லாம் தேர்தலில் ஓட்டுப் போட்டு எதிர்ப்பை தெரிவிப்பது தான்.

பொருளாதார வளங்களை பங்கிடுவதில் காட்டப்படும் இனரீதியான பாரபட்சம் இன்னமும் தொடர்கின்றது. தனியார் நிறுவனங்களும், சந்தைப் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் கூட, சிங்களவர்களுக்கே அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதில்லை. இனப்பாகுபாட்டிற்கு எதிரான வெகுஜன அமைப்பை கட்டவில்லை. மாறாக இந்திய அரசியல்வாதிகள் போன்று, அறிக்கைப் போர்களில் ஈடுபடுகின்றது. ஓரிரு தடவை பாராளுமன்றத்தில் பேசி விட்டால், அல்லது ஊடகத்திற்கு அறிவித்து விட்டால் போதும் என நினைத்துக் கொள்கின்றது. இந்த விடயம் தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல, அவர்களைப் பொறுத்த வரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான வேறு கட்சி எதையும் காணவில்லை.

Monday, August 01, 2011

இனப்படுகொலையால் புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியம்


தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் தெரு ஒன்றுக்கு, "அரண்மனைக் காரர் தெரு" என்று பெயர். ஆங்கிலேயர் காலனி ஆட்சிக் காலத்தில் அங்கே ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்ததனர். ஆர்மேனியர் தெரு என்ற பெயர் காலப்போக்கில் மருவி அரண்மனைக்காரர் தெருவாகி விட்டதாக கருதப்படுகின்றது.

"புலம்பெயர்ந்த யூதர்கள், யூத இனப்படுகொலை" பற்றி அளவுக்கதிகமாகவே அறிந்து வைத்திருக்கும் எமக்கு, கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாற்றைக் கொண்ட ஆர்மேனியர்களைப் பற்றித் தெரியாது. இப்போதும் வலதுசாரி- தேசியவாத தமிழர்கள் யூதர்களை உதாரணமாகக் காட்டி அரசியல் நடத்துகின்றனர்.

உலகில் இன்னும் பல இனங்கள் யூதர்களின் தலைவிதியை பகிர்ந்து கொண்டுள்ளன. போதுமான பொருளாதார வளங்கள் இல்லாததால், அந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியுலகம் அறியவில்லை.

ஆர்மேனியர்களின் நிலை வேறு. இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அமெரிக்க அரச மட்டத்தில் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்து லட்சம் ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்த துருக்கி மீது, குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.

துருக்கி அரசோ, ஆர்மேனிய இனப்படுகொலை நடக்கவில்லை என்று, இன்று வரை சாதித்து வருகின்றது. அண்மையில், புலம்பெயர்ந்த ஆர்மேனியர்களின் எரிச்சலைக் கிளப்பும் வகையில், ஆர்மேனியா குடியரசு, துருக்கியுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில், முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்த, ஆர்மேனிய இனத்தின் கதை இது.

ஆர்மேனிய இனம் பெருமளவு யூதர்களுடன் ஒப்பிடத் தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகின் முதலாவது கிறிஸ்தவ நாடு, என்று அவர்கள் தம்மை பெருமையாக அழைத்துக் கொள்கின்றனர். ஆர்மேனியர்களின் பாரம்பரியப் பிரதேசம், முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான, ஆர்மேனியா மட்டுமன்று. அந்த நாட்டில் வாழும் மக்களை விட, இரு மடங்கு ஆர்மேனியர்கள் பல உலக நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், "துருக்கிய ஆர்மேனியரின்" வம்சாவளியினர்.

உண்மையில், இன்றைய துருக்கியின் வட- கிழக்குப் பகுதி, ஆர்மேனியரின் பாரம்பரியப் பிரதேசமாகும். "முதலாவது கிறிஸ்தவ ஆர்மேனியா", காலப்போக்கில் அந்நிய படையெடுப்புகளினால் மறைந்து விட்டது. மத்திய காலத்தில், மேற்கே இருந்து வந்த சிலுவைப் போர்வீரர்களின் உதவியுடன், இரண்டாவது ஆர்மேனிய இராச்சியம் அமைக்கப் பட்டது. துருக்கியின் கிழக்கு எல்லையோரம், சிரியாவுக்கு அருகில் அந்த இராச்சியம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் மொங்கோலியப் படையெடுப்புகளால், அந்த இராச்சியமும் பறி போனது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தை ஆண்ட சார் மன்னனின் இறுதிக் காலம் வரையில், ஆர்மேனியர்களுக்கு தனியான நாடு இருக்கவில்லை. அநேகமாக, ஆர்மேனியரின் புலம்பெயர் படலம் அப்போதே ஆரம்பித்து விட்டது. யூதர்களைப் போன்று, ஆர்மேனியர்களும் சர்வதேச வணிகத்தில் நாட்டம் காட்டினார்கள்.

ஓட்டோமான் துருக்கிய அரச பரம்பரையினரின் இஸ்லாமிய சாம்ராஜ்ய காலத்தில், கிறிஸ்தவ ஆர்மேனியர்களுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை. மாறாக, ஆர்மேனிய கைவினைஞர்களும்,தொழிலதிபர்களும், வணிகர்களும், சுல்த்தானின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். சாம்ராஜ்ய விஸ்தரிப்பு போர்களில் ஈடுபட்ட, ஓட்டோமான் படையினருக்கு தேவையான வெடிமருந்துகளை தயாரிக்கும் முக்கிய பொறுப்பில் ஆர்மேனியர்கள் இருந்துள்ளனர். ஆர்மேனிய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சிறப்பு சலுகைகளும் கிடைத்து வந்தன.

முதலாம் உலகப்போருக்கு முந்திய நிலைமை, ஐரோப்பிய தேசிய இனங்களின் தலைவிதியை தீர்மானித்தது. புதிய தேசிய அரசுகள் தோன்றின. வேறு சில தேசிய இனங்கள் அடக்கியாளப் பட்டன. இதற்கிடையே ஓட்டோமான் துருக்கி சாம்ராஜ்யம் பலமிழந்து கொண்டிருந்தது. பிற ஐரோப்பிய வல்லரசுகள் அதனை "ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைத்தன. வடக்கே ரஷ்யப் படைகளும், மேற்கே ஆஸ்திரிய-ஹங்கேரியப் படைகளும், ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதிகளை கைப்பற்றி விட்டன. அங்கே வாழ்ந்த முஸ்லிம் மக்கள், துருக்கிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் துருக்கியரல்லாத வேற்று மொழிக்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது பொஸ்னியர்கள், செச்னியர்கள் போன்றோர். இந்த முஸ்லிம் அகதிகள், கிழக்கு துருக்கியில் தான் குடியேற்றப்பட்டனர்.

இன்றைய ஐரோப்பிய நாடுகள், துருக்கியை ஐரோப்பிய நாடாக ஏற்க விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, ஐரோப்பிய மாற்றங்கள் துருக்கியையும் பாதிக்கின்றன. முதலாம் உலகப்போரில் துருக்கி ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டு தோற்றது. அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவெங்கும் பரவிய தேசியவாத கருத்தியல்கள் துருக்கியரையும் ஈர்த்தன.

துருக்கிய அரசில் அமைச்சர்களாக, இராணுவத் தளபதிகளாக பதவி வகித்தவர்கள் சுல்த்தானை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றினார்கள். துருக்கி இன மக்களுக்கான தேசிய அரசை ஸ்தாபித்தார்கள். அதன் அர்த்தம், துருக்கியினுள் வாழ்ந்த சிறுபான்மையின மக்கள் துருக்கிமயப் படுத்தப் பட வேண்டும், அல்லது வெளியேற்றப்பட வேண்டும். அவர்களது முதலாவது இலக்கு ஆர்மேனியர்கள்.

மொழியால், மதத்தால் வேறுபட்டவர்கள் என்பது மட்டுமே காரணமாக இருக்கவில்லை. துருக்கி பேரினவாதிகள், கிழக்கே உள்ள அசர்பைஜான் போன்ற துருக்கி மொழி பேசும் நாடுகளை இணைக்க விரும்பினார்கள். அதற்கான போர் நடவடிக்கைகள், ரஷ்ய- ஆர்மேனிய கூட்டுப் படைகளால் முறியடிக்கப் பட்டன. அந்தத் தோல்விக்கு பழி தீர்ப்பதற்காக, துருக்கிய ஆர்மேனியர்கள் இனவழிப்புச் செய்யப்பட்டனர்.


இஸ்தான்புல் நகரில் ஆர்மேனியப் புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். கிழக்கு துருக்கியில் இருந்த அனைத்து ஆர்மேனியக் கிராமங்களும் சுற்றிவளைக்கப் பட்டன. சொத்துக்கள் சூறையாடப் பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கண்ணில் பட்டோர் கொலை செய்யப் பட்டனர். குறிப்பிட்ட அளவு பெண்களும், குழந்தைகளும், பலவந்தமாக முஸ்லிம்களாக மாற்றப்பட்டதனால் மட்டுமே தப்பிப் பிழைக்க முடிந்தது. மிகுதி மக்கள் அனைவரும் வெளியேறி, சிரியாவை நோக்கி செல்லுமாறு பணிக்கப் பட்டனர். அகதிகள் சென்ற பாதையிலும் பாதுகாப்பில்லை.

குர்திய கொள்ளையர்கள், அகதிகளைக் கொன்று, அவர்களிடமிருந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள். அந்த சோதனையையும் தாண்டி வந்தவர்கள், சிரியா நாட்டு எல்லையோரம் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அந்த முகாம்கள் கூட, வதை முகாம்களாக காணப்பட்டன. குறைந்தது பத்தாயிரம் பேராவது முகாமில் மட்டும் இறந்துள்ளனர். இனவழிப்பில் தப்பிய ஆர்மேனியர்கள் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இந்தப் பிரிவினருக்கு மட்டுமே நிம்மதியான வாழ்வு கிடைத்தது.

இன்னொரு பிரிவினர், ரஷ்யாவிடம் இருந்து புதிதாக சுதந்திரமடைந்த ஆர்மேனியக் குடியரசுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஆர்மேனியாவில், அகதிகளை வரவேற்க யாரும் இருக்கவில்லை. வசதியற்ற முகாம்களில், பட்டினி கிடந்தது மாண்டனர் பலர். குறைந்தது பத்தாயிரம் பேராவது "ஆர்மேனியரின் தாயகத்தில்" மரணத்தை எதிர்கொண்டனர்.


1915 ம் ஆண்டு நடந்த ஆர்மேனிய இனப்படுகொலையில், "ஒன்றரை மில்லியன் பேர் இறந்ததாக ஆர்மேனிய தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது. இது குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள், குறைந்தது எட்டு இலட்சம் பேராவது இறந்திருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். இனவழிப்பை நேரில் கண்ட, கேள்விப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளினது வாக்குமூலமும் பெறப்பட்டது. இருப்பினும், துருக்கி அரசும், பெரும்பான்மை துருக்கியரும், அங்கே அப்படி ஒரு இனப்படுகொலையும் நடக்கவில்லை என்று மறுத்து வருகின்றனர். அதே நேரம், ஆர்மேனியத் தேசியவாதிகள், இன்றும் "ஆர்மேனிய இனப்படுகொலையை" நினைவுகூருகின்றனர்.

அன்று இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகள் எல்லோரும் தண்டிக்கப்படாமலே, இயற்கை மரணம் அடைந்து விட்டனர். இருப்பினும், குறைந்த பட்சம், துருக்கியை மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், புலம்பெயர்ந்த ஆர்மேனியர்கள் சளைக்காமல் போராடுகின்றனர். ஒரு சில சமயங்களில், அமெரிக்க, பிரெஞ்சு அரசுகள் கண்டனம் தெரிவித்தன. இருந்தாலும், துருக்கி அரசை பகைக்க விரும்பாத வெளிவிவகார கொள்கை காரணமாக, வெறும் கண்டனத்திற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை.

அட்டா துர்க் ("துருக்கியின் தந்தை") அறிமுகப்படுத்திய, துருக்கி இன மேலாண்மை பெரும்பான்மை துருக்கியரின் அரசியல் நிலைப்பாடாகவுள்ளது. சைப்பிரசில் துருக்கிய சிறுபான்மையினம் அடக்கப்பட்ட பொழுது நியாயமான எதிர்ப்பைக் காட்டியவர்கள், துருக்கியில் ஆர்மேனிய, குர்திய சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப் படுவதை நியாயப்படுத்துவார்கள்.

உலகில் உள்ள அத்தனை தேசியவாதிகளிடமும் காணப்படும் முக்கிய குறைபாடு இது. தமது இனம் அடக்கப்படும் பொழுது உலகம் முழுவதும் ஆதரவை எதிர்பார்ப்பார்கள். அதே நேரம், தாம் இன்னொரு இனத்தை அடக்குவதை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். துருக்கியர்கள், நூறு வருடங்கள் கடந்த பின்னரும், ஆர்மேனிய இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு, அவர்கள் மனதில் வேரோடியுள்ள தேசியவெறி காரணம்.

அண்மையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற துருக்கிய எழுத்தாளர், ஒர்ஹன் பாமுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவர் செய்த ஒரேயொரு தவறு, ஆர்மேனிய இனப்படுகொலை நடந்ததென்ற உண்மையை அங்கீகரித்தது. "ஆர்மேனிய இனப்படுகொலை நடக்கவில்லை" என்று வாதாடும் வலதுசாரி- தேசியவாத துருக்கியர்கள், ஆர்மேனியர்கள் துருக்கி முஸ்லிம்களை படுகொலை செய்ததை எதிர்வாதமாக முன்வைக்கின்றனர்.

வடக்கே இருந்து படையெடுத்து வந்த ரஷ்ய இராணுவத்துடன் ஆர்மேனியர்கள் சேர்ந்து கொண்டு, துருக்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மை தான். ஆனால், ஆர்மேனிய இனச்சுத்திகரிப்புக்கு பின்னர் நடந்த ரஷ்யப் படையெடுப்பின் பொழுது தான் பெருமளவு துருக்கி- முஸ்லிம் படுகொலைகள் நடந்துள்ளன. ஆர்மேனிய இனப்படுகொலைக்கு எதிர்வினையாக அந்தப் படுகொலைகள் நடந்திருக்கலாம். ஆர்மேனியர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் இனமாக, உலகின் அனுதாபத்தைப் பெறுவதற்காக பேசுவது வழமை. ஆனால், அவர்களும் பிற இனங்களை ஒடுக்கி வந்துள்ளனர்.

முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான கிறிஸ்தவ ஆர்மேனியாவும், இஸ்லாமிய அசர்பைஜானும் அயலவர்கள். ஆனால் தீராப் பகையாளிகள். கடந்த நூறு வருடங்களாக, அவர்களுக்கிடையில் இனக்கலவரங்களும், ஆயுதமேந்திய மோதல்களும் சகஜம். சோவியத் யூனியனின் உடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

சோவியத் யூனியன் வீழ்வதற்கு முன்னரே, "ஆர்மேனியா-அசர்பைஜான் யுத்தம்" ஆரம்பமாகி விட்டது. "கிறிஸ்தவ சகோதரனான" ரஷ்யாவின் உதவியால், சிறந்த இராணுவ வளங்களைக் கொண்டிருந்த ஆர்மேனியா போரில் வென்றது. அசர்பைஜானில் ஆர்மேனிய சிறுபான்மையினர் வாழும் நாகார்னோ- கரபாக் பகுதியை இணைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த அசர்பைஜான் துருக்கியரை இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றினார்கள்.

உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், இனப்படுகொலையை மையப்படுத்திய அரசியல் கொள்கைகள் அமைதிக்கும், சமாதானத்திற்கும் இட்டுச் செல்வதில்லை. நவீன அரசியல்வாதிகள் யாரும், "அசோகச் சக்கரவர்த்தி போன்று, இனப்படுகொலையால் விரக்தியடைந்து" உலக சமாதானத்தை போதிப்பதில்லை. யூதர்களும், ஆர்மேனியர்களும் தமது இனத்திற்கு ஏற்பட்ட பேரழிவை நினைவுகூருவதை, புனிதக் கடமையாகக் கொண்டுள்ளனர். அது மீண்டும் அந்த இனத்தின் தேசியவெறியை வலுப்படுத்தவே உதவுகின்றது. தம்மினத்திற்கு நேர்ந்த அதே அவலத்தை, இன்னொரு வலிமை குன்றிய இனத்திற்கு கொடுப்பதற்கு தயங்குவதில்லை.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனம் என்பதற்காக, யூதர்கள் பாலஸ்தீனரை ஒடுக்குவதோ, அல்லது ஆர்மேனியர் அசர்பைஜான்- துருக்கியரை ஒடுக்குவதோ சரியாகி விடாது. துருக்கியில் நடந்த ஆர்மேனிய இனப்படுகொலை கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, துருக்கியர் அதற்காக மனம் வருந்துவதும், அவர்களின் அரசு மன்னிப்பு கேட்பதும் அவசியம். ஆனால், அத்தகைய நிலைமைக்கு இறங்கி வரக் கூடியவர்கள் இடதுசாரி துருக்கியர் மட்டுமே. வலதுசாரி துருக்கியர் பிடிவாதமாக தொடர்ந்தும் நியாயப் படுத்துவார்கள். இஸ்தான்புல் நகரில் வாழ்ந்த ஆர்மேனிய பத்திரிகையாளர் Hrant Dink, இந்த உண்மையைப் புரிந்து கொண்டார்.

இன்னமும் துருக்கியில் (பெரும்பாலும் இஸ்தான்புல் நகர்) வாழும் சிறு தொகை ஆர்மேனியருக்கும், முற்போக்கு எண்ணம் கொண்ட துருக்கியருக்கும் இடையில், Hrant Dink நல்லுறவுப் பாலத்தை கட்டினார். அவரது நல்லெண்ணம் கொண்ட நடவடிக்கைகள், பெரும்பான்மை துருக்கியரின் எதிர்ப்புக்குள்ளாகின. நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியவாதிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இறுதியில் அந்த பத்திரிகையாளர், துருக்கி பாசிஸ்ட் ஒருவனின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

Hrant Dink இன் மரணச் சடங்கில், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். ஆர்மேனியர்கள் மட்டுமல்லாது, பெருமளவு துருக்கியரும் இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றி கொலைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஒரு ஊடகவியலாளரின் மரணமானது, துருக்கி அரசியலில் பேசாப் பொருளான ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த விவாதங்களை தூண்டி விட்டன. பல தசாப்தங்களாக, புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியவாதிகளால் நிறைவேற்ற முடியாத காரியத்தை, ஒரு எழுத்தாளரின் பேனா சாதித்துக் காட்டியது. "1915 ல் துருக்கிய- ஆர்மேனியர்களுக்கு ஏற்பட்ட பேரழிவை மறுப்பதற்கு எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை." என்ற மனுவில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான துருக்கியர்கள் கையெழுத்திட்டனர்.