Sunday, October 03, 2021

யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!

 

செப்டம்பர் 19, இரவு, யாழ். வட்டுக்கோட்டையில் 20 - 30 பேர்களைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதுவரை காவல்துறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒருவரை தவிர மற்றவர்களை கைது செய்ய படவில்லை. இத்தனைக்கும் அனைத்து குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது நடந்து 12 நாட்கள் ஆகியும், இன்று வரையில் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து 4 தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன.

இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராத காரணம் என்ன? அரசின் செய்தித் தணிக்கையா? பின்னணியில் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை இருக்கிறதா? ஏன் இதைப் பற்றி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாய் திறக்கவில்லை? எந்தவொரு தமிழ்தேசிய கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

காரணம்: அந்த வன்முறைக் கும்பல் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். அங்கு நடந்தது ஒரு சாதிவெறித் தாக்குதல்.




**********

இந்த சம்பவம் குறித்து விதை குழுமம் தொகுத்து வழங்கிய அறிக்கை:
 
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை
https://vithaikulumam.com/2021/09/30/30092021/?fbclid=IwAR1KfIljdzXfQ7uY0QDBKJYKLMbnqnYbhx_E5i_dtlJeGxAfSelwfuUlSU8

வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார்.

முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்காலம் போக துவக்காலை சுடுவாங்கள், அப்பவும் சுள்ளித்தடியோடதான் நிக்கப்போறம்’. வெட்டப்பட்ட கையும் விரல்களும் மஞ்சள் நிற துணியில் ஏணைக்குள் கிடக்குமாறு அசைய இன்பநாதன் பேசிக்கொண்டிருந்தார். கிழிக்கப்பட்ட கையும் விரலுமாக அதன் வலியோடு அதே நேரம் உணர்ச்சிவசப்படாத உரத்த குரலோடு அவருடைய வார்த்தைகளிருந்தன. “பிள்ளையளை வேலைக்கு விட்டிட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு. சும்மா வாற பெடியளை மறிச்சு, காடுகளுக்கை கூட்டிக்கொண்டுபோய் வச்சு அடிப்பாங்கள். பந்தடிக்கப்போற பெடியள், பட்டம் விடப்போன பெடியள் எண்டு எல்லாரையும் மறிச்சு ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள். நாங்கள் சண்டைக்குப் போகேலாதுதானே, அவங்கள் வெளிநாட்டுக்காசு; வேலைக்கு போகத் தேவையில்லை. குடிச்சிட்டு என்னவும் செய்யலாம். நாங்கள் அப்பிடியில்லை, நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகோனும். எங்களாலை சண்டை பிடிச்சுக்கொண்டே இருக்கேலாது.

அவங்களுக்கு நளவரைக் கொல்லோனும். இஞ்சை எங்களுக்கு மட்டுமில்லை செம்பாட்டன் தோட்டமெண்டால் அப்பிடி, மூளாயெண்டால் அப்பிடி, தொல்புரமெண்டால் அப்படி, சுழிபுரம் எண்டால் அப்பிடி, எல்லா இடமும் அப்பிடித்தான். தொடந்து இது நடந்துகொண்டிருக்கு, இண்டைக்கு நேற்றில்லை பல வருசமா இது நடந்துகொண்டுதானிருக்கு. எனக்குத் தனிய எண்டால் என்ர பிரச்சினைய நான் பாப்பன், இஞ்ச வா எனக்கடியப்பா எண்டு சொல்லுவன், ஆனால் எனக்கு மட்டுமில்லைத்தானே இஞ்ச நடக்கிறது. உந்த வேலித் தகரத்தப் பாருங்கோ. அந்தப்பக்கம் வேளாமாக்களின்ர வேலி, இது எங்கடை வேலி, வெறியிலை அடிக்கிறவன் அந்தப்பக்கம் இருக்கிறதையுமெல்லோ சேர்த்து அடிச்சுப்பிரிச்சிருப்பான். பாருங்கோ, அவங்கட ஆக்களின்ர தகரத்திலை ஒரு காயமிருக்கோ?

நாங்கள் இஞ்ச கிடங்குக்க இருக்கிற எலி மாதிரி. அவங்கள் எங்களைச்சுத்தி இருக்கிறாங்கள், வெக்கத்தை விட்டுச்சொல்லுறன் போற வாற எண்டாலே பயம். எங்கடையள் வேலைக்குபோய் பின்னேரம் ஆத்துப்பறந்து, செத்துப்பிழைச்சுத்தானுங்கோ வரும் வேலையாலை. அப்ப அதிலை மறிச்சு அடிப்பாங்கள், நொட்டைக் காரணங்கள் சொல்லுவாங்கள், வேலிலை குளை முறிச்சனியோ, மாங்காய் ஆஞ்சனியோ எண்டு அடிப்பாங்கள், பிள்ளையள் மூஞ்சை முகரை எல்லாம் வீங்கிப்போய் வருங்கள். ஏன் அடிச்சனி எண்டு போய்க் கேட்டால், பெட்டையளுக்கு விசில் அடிச்சவங்கள் எண்டு சொல்லுவாங்கள். வேலிக்குள்ளால எட்டிப் பார்த்தவங்கள், களை முறிச்சவங்கள் எண்டுவாங்கள். அவங்களுக்கு எங்கடை ’சாவுக்குச்சாட்டு வேணும்’ அவ்வளவுதான். கோயில், குளம், திருவிழாக்கள் எண்டால் நல்லா நடக்கும். அங்கையும் அடிபிடிதான். அங்கையும் எங்கடை பெடியளுக்குத்தான் அடிப்பாங்கள், குடிச்சிட்டு மட்டும் அடிபடுறவங்கள் தங்கடை பெடியளுக்கும் சேர்த்துத்தானே அடிப்பாங்கள், இவங்கள் தேடிவந்து ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள் எண்டால், உது என்ன?

என்ர மருமோன் அண்டைக்கு ஒருநாள் சும்மா வந்தவன், அண்டைக்கு அவனை கத்தியாலை குத்தக் கலைச்சுக்கொண்டு வந்தாங்கள், மனிசி ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடிக்காட்டி குத்தியிருப்பாங்கள். தங்கடை வெறிக்கு டேஸ்ட் நாங்கள்தான், ஒரு சவாரிக்குப்போனால் சண்டை, திருவிழாக்குப் போனால் சண்டை. அம்பது வயசு எனக்கு, கோட்சும் தெரியா பொலிசும் தெரியாது, ஆனால் உவங்களுக்கு நூறு கேஸ் கிடக்கு பொலிசிலை, உவங்கள் கொல்லுவாங்கள், எல்லாத்தையும் காசாலை உச்சிப்போடலாம் எண்டு தைரியம் உவங்களுக்கு”

இளைஞர் ஒருவர் அன்றைக்கு சம்பவத்தை விளக்கத்தொடங்கினார்.

அண்டைக்கு நானும் இவனும் வேலைக்குப்போய்ட்டு சைக்கிள்ளை வந்து கொண்டிருந்தனாங்கள், பேபிகடை முடக்கிலை திரும்பும்போது அவங்கள் நிண்டு பாத்தவங்கள், நாங்கள் போக மோட்டபைக்கில பின்னாலை வந்து தள்ளிவிட்டாங்கள். நாங்கள் தடுமாறி கிழுவம் வேலிக்கும் போஸ்ட்டுக்கும் நடுவில போய் விழுந்திட்டம், எழும்பி ஏன் அண்ணை தள்ளின்னீங்கள் எண்டு கேட்டம். அதுக்கு ‘எங்கையடா பம்மிப்பம்மிப் போறீங்கள், நீங்களோ வேலிலை கள்ளக் குளை முறிச்ச’ எண்டு கேட்டாங்கள். நாங்கள் ஏன் முறிக்கிறம், நீங்கள் கண்டனீங்களோ நாங்கள் முறிச்சதை எண்டு கேட்டம். குளை முறிக்கிறது நீங்கள் எண்டு நினைச்சுத் தள்ளின்னாங்கள் எண்டிச்சினம். அதுக்கேன் தள்ளுவான் கேட்டிருக்கலாம்தானே, நாங்களேன் குளை முறிக்கிறம் நாங்கள் என்ன விசரோ எண்டு கேட்டம். சரி விடுங்கோ நாங்கள் போறம் எண்டு வெளிக்கிட சைக்கிளை மறிச்சு முன் சில்லைத் தூக்கித் தூக்கிக் குத்திக்கொண்டு நிக்கிறார். ஆளுக்கு வெறி. நிக்கேலாத வெறி, நான் அப்பாட்டை அடிச்சுச் சொன்னன் இப்பிடி மறிக்கிறாங்கள் எண்டு.”

மகன்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு இன்பநாதன் விரைந்து போயிருக்கிறார்.

‘’பிள்ளையள விடுங்கோ, உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள்தானே எண்டு நாயிலும் கேவலமாக் கெஞ்சின்னான். ஒருமாதிரிப் பிள்ளையளைக் கொண்டு வாறதுக்குள்ள அவங்கடை ஆக்கள் நிறையப்பேர் வந்திட்டாங்கள். நான் கெஞ்சிக் கூத்தாடிச் சமாளிச்சுக் கொண்டிருக்க, அவங்கள்ள ஒருத்தன் கெல்மெட்ட களட்டி அடிக்க வந்திட்டான். நான் குறுக்க விழுந்து மறிச்சு சமாளிச்சு பிள்ளையளைக் கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ள, மோட்டச் சைக்கிளாலை கொண்டுவந்து சைக்கிள்ளை ஏத்திப்போட்டான். மகன் என்னை பிடிச்சு அங்காலை எறியாட்டி நான் துலஞ்சிருப்பன்.

என்னத்துக்காக இடிச்சனியள் எண்டு நாங்கள் கேக்கப் போக, ரெண்டு பேர் ஆட்டோவிலை வந்து ‘என்னதுக்கடா நளவா, பீனாண்டியள் இஞ்சாலை வாறியள்’ எண்டு கேட்டுக்கொண்டு பெரிய கல்லாலை எறிய வெளிக்கிட நாங்கள் ஓடி வந்திட்டம். அவங்கள் ரோட்டிலை லைட்ட நிப்பாட்டிட்டு எங்கட பக்கம் வாறாங்கள்.” என்றார் இளைஞர். அப்போதுதான் இன்பநாதன் அந்த இருளில் பளபளப்பாகத் தூக்கிக் காட்டிய வாளைப் பார்த்த சம்பவத்தைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார்.

“எனக்கு விளங்கீட்டு இவங்கள் வாளோடதான் வாறாங்கள் எண்டு, நான் வாளைக் கண்டிட்டன். அவன் வாளைத் தூக்கிக் காட்டுறான். டேய் பு…. யில் நளமே இந்தா பத்துத்தலை உறுளுமடா எண்டுகொண்டு வாறான். வாள் பளிச் பளிச்செண்டு மின்னுது. கதைச்சு சமாளிக்கத்தானே வேணும் எண்டு, முன்னாலை போனன், அண்ணை இஞ்ச வாவண்ணை கதைப்பம் எண்டு நான் கேட்டு முடிக்க முதல் கையுக்கு வெட்டிப் போட்டான், விரலும் பறந்து இந்த வெட்டும் விழுந்திட்டு. நான் பைப்ப எடுத்து விசுக்காட்டி அண்டைக்கு என்ர தலை போயிருக்கும். பெடியனுக்கு வெட்ட ஓங்கப் பெடியன் தகரத்தாலை விழுந்து அங்காலை ஓடிட்டான். அதுக்குப் பிறகு அடி நடக்குது, சும்மா சறாம் புறாமெண்டு தகரங்களை உந்த நீட்டுக்கு வேலியளை வெட்டி விழுத்திக்கொண்டு போறாங்கள். வேலியைக் கொழுத்தடா, வீட்டை கொழுத்தடா எண்டு கத்துறாங்கள்.

திருவிழா, சவாரி போன்ற நிகழ்வுகளிலும், வீதிகளில் போகும் போதும் இளைஞர்களுக்கு அடிப்பது துன்புறுத்துவது முதலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கிராம மக்கள், தீடீரென இன்பநாதன் வாளால் வெட்டப்பட்டு, ‘நளவருடைய’ தகர வேலிகளும், கதவுகளும் நொறுக்கப்படுமென்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருட்டுக்குள் அவர்கள் பதுங்க, இருபது நிமிடங்களுக்கு மேல், ஆமியும் இயக்கமும் சண்டையில் ஒரு இடத்தைக் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருப்பது போல் அவ்விடத்தை வைத்துக்கொண்டு ஆதிக்க வெள்ளாளர்கள் ஆடிய சதிரை இன்பநாதன் அவர்கள் விபரிக்க விபரிக்க குரல் நடுங்கியது.

“அவங்களுக்கு சண்டை செய்து பழக்கம் தானே, அவங்களிட்ட வாள் இருக்கு எங்களிட்டப் பாளைக்கத்தி கிடக்கு, அது எங்கடை தொழில் செய்யிற ஆயுதம், அதுக்கு உவங்கள் பயம், ஆனால் நாங்கள் தொழிற்செய்யிற ஆய்தத்தால குத்துவெட்டுக்குப் போமாட்டம். அதோட எங்கள் எல்லாரிட்டையும் ஆயுதம் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு தொழிற் செய்யிறம்தானே. அவங்களுக்கு நாங்கள் அடங்கி இருக்கோணும் எண்டு நினைக்கிறாங்கள். ஆனா எங்களுக்குச் சண்டைக்கு விருப்பமில்லை. எங்களை எல்லாருக்கும் நல்லாவே தெரியும். பழக்கமான முகங்கள்தான். அடிக்கிறவங்கள்தான். ஆனால் இப்பிடி வெட்டிற அளவுக்கு போவாங்கள் எண்டு நாங்கள் நினைக்கேல்லை. பிள்ளைத்தாச்சி பிள்ளையள் ஒருபக்கம், குழந்தைப்பிள்ளையள் ஒருபக்கம், குமர் பிள்ளையள் ஒருபக்கம் ஓடிப் பதுங்குதுகள், கத்துதுகள், பிள்ளைத் தாச்சிப் பிள்ளைய வேலிக்காலை தள்ளி ஓட விட்டம்.

கல்லுமழை. அப்பிடியே ஒரு பத்து நிமிசம் கடகத்துக்க கல்லுக் கொண்டு வந்து எறிஞ்சாங்கள். மழை மாதிரிக் கல்லு வருது. இந்தக் கொட்டிலெல்லாம் சரி. எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடிட்டம். அவங்கள் சண்டேலை நல்லா ஊறினவங்கள் எல்லாரும் கெல்மெட் போட்டுத்தான் வருவாங்கள். அண்டைக்கு ஓடேல்ல எண்டா பெடியளை வெட்டி இருப்பாங்கள். அந்தக் கதவு, வேலிகளை என்ன செய்திருக்கிறாங்கள் பாருங்கோ. எங்களுக்குச் சண்டேலை விருப்பமில்லை. அவங்களுக்கு அதுதான் வேணும். நாங்கள் ஒரு வழக்கெடுக்கேலா, எங்களுக்கு ஒரு பிரச்சினையெண்டு ஒரு இடத்த போகேலா, ஜனநாயகம், ஜனநாயகம் எண்டுறாங்களே, ஜனநாயகம் எண்டால் என்ன?”

இன்பநாதனின் நினைவு என்பது அவருக்கு விபரம் தெரிந்த இருபத்தைந்து வருடங்களில் இருந்து பின்னிக்கொண்டு மேலெழுந்து வெட்டப்பட்ட அவருடைய கைவரை ஏறுகின்றது. ஒவ்வொரு முறையும் தாக்கப்பட்ட அவருடைய முன்னோர்களை அவர் நேரடியாக நினைவுகூரவில்லை. அவருக்கு அவர்களை ஞாபகம் இருக்குமோ தெரியாது, ஆனால் அடிகளும், கொடுமைகளும் ஞாபகத்தில் இறுகிப்போயிருந்தது. முன்னோரைக்காட்டிலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே பெரிய ஞாபகமாகவிருந்தது.

இரண்டு தாய்மார்கள்

சம்பவம் நடந்து பத்து நாட்களாகிவிட்டது. ஒரு கெட்டித்து இறுகிய கோவமும், இழந்து விட்ட நிம்மதியின் நடுக்கமும் அவர்களுக்குள் பரவியிருந்தது. பொருமி வெடித்த கோபமும், கெலித்த உடலுமாக அவர்கள் பேசினார்கள். அவை அங்கிருந்த ஆண்களைக் காட்டிலும் செறிந்து, உறுதி பெற்றிருந்தன. ’இதேமாரி எங்கடையாக்கள் அங்க போய் செய்திருந்தால் இண்டைக்கு பொலிஸ் வந்து எங்கடை வீட்டை நிண்டு எங்களைப் பிடிச்சு உலுப்பி இருக்கும். எங்க புரிசனக் கொண்டா, பிள்ளையைக் கொண்டா எண்டு. இதெல்லாம் இவ்வளவு காலமும் இப்பிடியே நடந்துகொண்டு இருக்கு, இண்டைக்கு நேற்றே இது நடக்குது? நீதி நியாயத்துக்கு இந்த நாட்டிலை இடமே இல்லை. இப்ப லொக்டவுன் எடுக்க பள்ளிகூடம் தொடங்கப் போகுது, பிள்ளையளை எப்பிடித் தனிய விடுறது. வேலையள் தொடங்கப்போகுது, ஆனால் எங்கட பிள்ளையளுக்கு ஆர் உத்தரவாதம், இது இதோட முடிஞ்சிடும் எண்டு விட்டிட்டு இருக்கேலுமோ? பாதுகாப்பிருக்குமோ? இதுகென்ன முடிவு? ஆரிட்டக் கேக்கிறது?

சும்மா நிண்ட எங்கட அம்பைய்யா பாவம், அண்டைக்கு நடந்த சம்பவத்திலை அடிச்சுப்போட்டாங்கள், நெத்திலை குத்தி இருக்கு, ஏலாத மனிசன், இப்ப புத்தி மாறி நிக்குது. வயசு போன ஆள் என்ன கேட்டது. அண்டைக்கு பொம்பிளையள ஓடியிருக்காட்டி துண்டு விழுந்திருக்கும், நிண்டிருந்தால் கட்டாயம் வெட்டி இருப்பாங்கள். நாங்கள் ரெண்டுபேரும் போய்க் கதைச்சனாங்கள் அவையளோடை, சின்னப் பெடியங்கள் வந்த இடத்தை ஏதோ தெரியாமச் செய்திருப்பாங்கள். நீங்கள் மன்னிச்சுக் கொள்ளுங்கோ தம்பியவை இந்தப்பிரச்சினை வேண்டாம், பேசாம விடுங்கோ அவையளும் போகட்டும் நீங்களும் போங்கோ எண்டு கெஞ்சிப் பாத்தனாங்கள். எங்களை உங்களுக்குத் தெரியும்தானே, எண்டு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கெஞ்சிப்போட்டு வந்தனாங்கள். வந்தால் பிறகுதான் உது நடந்தது.

எனக்கு நல்லாத் தெரியும் அவங்கள் எங்கடை பொம்பிளையளை மதிக்கிறேல்ல, எங்கடையாக்கள் எண்டாலே அவைக்கு இழக்காரம் இருக்கிது. எனக்கு உதுகள் பிடியாது. என்ர வீட்டு மனிசனும் என்னை எடி எண்டு கதைக்கிறேல்ல, மரியாதையாத்தான் கதைக்கிறது, ஆனால் அவை எங்கள கேவலமா வாங்கடி போங்கடி எண்டு கதைக்கிறாங்கள். இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாததெல்லாம் சொன்னாங்கள். நீங்கள் ஆர்? தமிழர் தானே. நீங்களே இப்பிடிக்கேட்டால், அடுத்தவன் நாளைக்கு வந்து எங்களை என்ன செய்திட்டு போவான். நீங்கள் இப்பிடிச் செய்தால். சிங்களவன் செய்வான். அவன் அந்நியன். ஆனா இவங்கள் நிக்கிறாங்கள் பத்து கழுத்த விழுத்துவம், வீடெல்லாம் கொழுத்துவம் எண்டு. அப்ப நாங்கள் எல்லாம் ஆர்?

கேற்றை உடைக்கிறாங்கள், வெளியிலை கத்துறாங்கள் நாங்கள் பொம்பிள்ளைப் பிள்ளையள், குழந்தையள வச்சுக்கொண்டு இருக்கிறம், லைட்ட அணைச்சுப்போட்டு அறைக்க வச்சுப்பூட்டிக் கொண்டு கிடக்கிறம். ‘நான் ஆண்டவரைத்தான் மண்டாடின்னான். ஐய்யோ உள்ளுக்க வந்திடக்கூடாதெண்டு’ எங்கடை கதவென்ன இரும்போ ஐயா, இதைக் கொத்திட்டுவரக் கனநேரமோ எடுக்கும்? நான் பின்வேலியைக் காலாலை உதஞ்சு, விழுத்தி என்ர பிள்ளையளைக் காப்பாற்றின்னான். குமர்ப் பிள்ளையள் என்ர பிள்ளையள், அண்டைக்கு என்ன பாடுபட்டிருக்கிங்கள் சொல்லுங்கோ?

என்ர மனிசன் ஒரு சோலிக்கும் போமாட்டுது, ஏன் சும்மா பிரச்சினையெண்டு இரவிலை அம்மா வீட்டிலை போய்தான் எல்லாரும் படுக்கிற. இப்ப கூட்டம் கூட்டமாத் தான் எல்லாரும் படுக்கிறது. அண்டைக்கு எங்கட ஆக்களிட்ட ஒருத்தரிட்டையும் ஆயுதமில்லை, வெறுங்கையோட நிண்டவை. இவங்கள் இப்பிடிச்செய்வாங்கள் எண்டு ஆர் எதிர்பார்த்த? தம்பி நாங்கள் என்னெண்டாலும் செய்யிறம் இதுக்கொரு தீர்க்கமான முடிவு எடுத்துத்தாங்கோ, வாறனியள் வந்து சும்மா கதைச்சுப்போட்டுப் போற மாதிரி இருக்கக்கூடாது. திரும்பவும் இதுக்க இதுமாதிரி ஒரு பிரச்சினை வருமெண்டால் அதுக்குப்பிறகு இஞ்ச ஒருத்தரும் வரக்கூடாது, சொல்லிப்போட்டன். பொம்பிளையள் விடவும் மாட்டம் வர.

இரண்டு இளைஞர்கள்

அடிகளையும், சாதிவசைகளையும், சமாளித்துச் சமாளித்துச் சோர்ந்துபோன அவர்களுடைய அன்றாடம் முகங்களை விடியவிடாமல் செய்திருந்தது. “பொலிஸ் கோட், கேஸ் வழக்கு ஒண்டும் நிக்காது. இப்ப கூடக் கோட்டுக்குப் போயிருக்குத்தான், ஆனால் என்ன நடக்குமோ எப்பிடி முடியுமோ எண்டு எங்களுக்கு நம்பிக்கையில்லை. சடஞ்சு போடுவாங்கள் எண்டுதான் பயமாக் கிடக்கு. எங்கடை பெடியள் அடிச்சா திருப்பி அடிக்கோணும் தடுக்கோணும் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர உண்மையா சண்டைக்கு போற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

நிறையப்பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். ஆனால் நாங்கள் சமாளிச்சுத்தான் போக வேணும். இல்லாட்டி நாங்கள் நாளைக்கு வேலைக்குப் போகேலா. அந்தக் காலத்திலை இருந்து அவங்களுக்கு நாங்கள்தான் வேலைக்குப் போறனாங்கள். நாங்கள் குடும்பத்தைப் பாக்க உழைக்கோணும், ஆனால் அவங்களுக்கு அப்பிடியில்லை. வெளிநாட்டுக்காசு கிடக்கு. அவைக்கு ஜெயிலுக்கு போறதும் வெளியிலை வாறதும் ஒரு பிரச்சினையில்லை. அவங்கள் நிறையப் பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். பைக்கிலை போகேக்க கலைச்சுக்கொண்டு வருவாங்கள், திருவிழா, சவாரி எண்டால் சண்டை, அடி. எங்கடையாக்கள் கொஞ்சம் படிச்சு உத்தியோகம் அது இது எண்டு போனால் ஒரு இழக்காரம், எரிச்சல் ‘கொம்மா எங்கட வீட்டிலைதான் வேலை செஞ்சவா’ எண்டு நக்கல்.

பள்ளிக்கூடங்களிலை எங்கடை பிள்ளையள் படிக்கிறேல்ல எண்டு கொம்பிளைண்ட். ஏனெண்டு போய்ப் பாத்தால், எங்கடை பிள்ளையள் ஒழுங்கா வாறேல்ல எண்டினம். நாங்கள் ஏன் பிள்ளையள் போறேல்ல எண்டு பாத்தால், பிள்ளையள் ஐஞ்சு நிமிசம் பிந்திப்போனாலும் வீட்ட போய் தாய் தேப்பனைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டுவாங்கள், பிள்ளையள் வீட்ட வந்தால் தாய் தேப்பன் கூலி வேலை, வயல் வேலை எண்டு போய்டும், பிள்ளையள் அவை இல்லாம எப்பிடிப்போறதெண்டு பள்ளிக்கூடம் போகாம நிண்டிடும். இதுதான் நடக்கும். இஞ்ச மட்டுமில்லை சுத்தி இருக்கிற துணைவி, மூளாய், செம்பரட்டை, பொன்னாலை எல்லா இடத்திலையும் இதே கோலம் தான். கம்பசுக்கு போய், அரசாங்க வேலையள் கிடைக்கிற பெடியள், பிள்ளையள் கொஞ்ச நாளிலையே இஞ்சாலை இருக்கேலா எண்டு ஊரை விட்டு போயிடுவினம். அதனால ஊர் அப்பிடியேதான் கிடக்கு.”

இவ் உரையாடலின் போது அந்த இரவின் சூட்டை உணர முடிந்தது. யாரை யார் காப்பாற்றுவது என்று திணறியபடி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இரவில் ஏதாவது நடந்தாலும் என்று உறவினர்கள் சேர்ந்து தங்குகிறார்கள். இவ்வளவு கொடூரமான ஒரு சாதி வெறித் தாக்குதல் எமது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லை. இது சும்மா குழுச் சண்டை என்பதாகச் சித்தரித்துக் கடந்து கொண்டிருக்கிறோம். வெள்ளாள சாதியைச் சேர்ந்த சிலர் குடிப்பதற்கும் கொண்டாட்டங்களுக்குமாக அரசடியில் ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடித்திருக்கும் போது கிடைக்கும் நளவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களையும் வேறு வெளியாட்களையும் அடிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு. எந்தக் காரணங்களும் இன்றித் தாக்குவார்கள். வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினரே இத்தகைய செயல்களினாலும் வன்முறைகளாலும் அந்தக் கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். அத்தகைய மோசமான குழுவினரை அவ்விடத்தை விட்டு அகற்றும் வல்லமையோ அல்லது அம்மக்கள் மீதான அக்கறையோ பெரிதாக யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெரும்பாலன ஊடகங்கள் பயங்கரமான ஒரு சாதி வெறித் தாக்குதலை, குடி வெறித் தாக்குதலாகச் சுருக்கியிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தின் கவனத்தை சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை நோக்கித் திருப்புவதில் அரசியற் தரப்பினருக்கும் பெரும்பாலான ஊடகங்களிற்கும் அக்கறையிருப்பதில்லை. அது அவர்களின் நலன்களைப் பாதிக்கும். ஆகவே சமூக நீதியின் மேலும் மக்களின் சுயமரியாதை மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அம்மக்களின் துயரையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். காலந்தோறும் தங்கள் பிள்ளைகளுக்கு அடித்தவர்களிடம் சென்று, தவறு செய்யாத மகன்களைக் காப்பாற்ற அப்பாக்களும் அம்மாக்களும் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். நாம் அவர்களையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையையும் அகற்ற முன்வரவேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களிற்கான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகநீதியின் பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரும் உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகள் தொழிற்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் அதற்கெதிராக உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைவதே அம்மக்களுக்கான சமூகநீதிக்கான முதற்படியாகும். நாம் கண்ணை மூடிக் கொண்டு இங்கு சாதியில்லை, சாதியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் சாதி ஒருபோதும் ஒழிந்துவிடாது. சாதி ஒழிப்பென்பதே சமூக விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் முதற்படி. சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்ததோர் சமூகம் என்பதே சமூகநீதி. அதற்கான போராட்டமே சமூக விடுதலைக்கான செயற்பாடு. இவற்றை உணர்ந்து சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை அவற்றின் வேர்களில் இருந்து நுட்பமாக அறிவதே அரசியல்மயப்படுதலின் முதற்படி. நம் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளை இனங்கண்டு, அந்த ஒடுக்குமுறைக் களைவது பற்றிய அறிதலும் செயலாற்றலுமே அரசியல்மயப்படுதல். சாதியால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் சாதி எப்படி அவர்களை ஒடுக்குகின்றது என்பதை அறிவு பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும் அவர்களுடைய கல்வியில் அதிக கவனம் செலுத்துவதுடன் அக்கல்வியை அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சுயமரியாதையையும் சமூக நீதியையும் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகக் கையாளவேண்டும்.

ஆதிக்க சாதியில் பிறந்தவர்களும் தங்களது சொந்த சாதி நலன்களிலே மட்டும் மூழ்கிக் கிடக்காமல் சாதி ஒடுக்குமுறையையும், தாம் எப்படி ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கற்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலைக்கு தமது முன்னோர்களும் தாமும் எப்படிக் காரணங்களாய் இருக்கிறோம் என்பதை அறிந்து அவற்றை மாற்ற முன்வர வேண்டும். இங்கு ஒவ்வொரு சாதியிலும் தனக்கு மேல் கீழென்று சாதிகள் இருக்கிறது என்று மூட நம்பிக்கை கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நம் குழந்தைகளை அறிவூட்டிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு வருடத்தில் நாம் இந்தச் சாதி வெறித் தாக்குதலை நம் கண் முன்னே காண்கிறோம். நமது சமூகம் சாதிய இழிவுகளிலிருந்து மீண்டெழ அறிவார்ந்து சிந்திக்கவும் ஒடுக்கப்படும் மக்களைக் காக்கவும் அவர்களுக்கான சமூக நீதியும் சுயமரியாதையும் மீட்கப்படவும் நம்மாலான ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டும். நமது சமூகத்திலிருந்து சாதி ஒழிக்கப்பட வேண்டும். சமூக நீதி வென்றெடுக்கப்பட வேண்டும்.

தோழமையுடன்

விதை குழுமம்