Friday, April 30, 2010

பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்


பத்து வருடங்களுக்கு முன் உலக மக்களனைவரது கவனத்தையும் ஈர்த்த நாடு பொஸ்னியா. மூன்றாம் உலக யுத்தம் ஆசியாவைக் கடித்து, ஆபிரிக்காவைக் கடித்து கடைசியாக ஐரோப்பியாவையே கடிக்க வந்ததை அறிவித்த காலம் அது. மூன்றாம் உலக நாடுகளை வெற்றிகரமாகப் பிரித்தாண்ட மேற்கு ஐரோப்பியர்கள் கடைசியில் அயல்நாடான பல்லின மக்களைக் கொண்ட யூகோஸ்லாவியாவையும் பிரித்தாள வருவார்கள் என யார் நினைத்திருப்பார்கள் ? ஆனால் அது நடந்துவிடடது.

காலஞ்சென்ற டிட்டோ காலத்தில் யூகோஸ்லாவிய சோசலிசக் குடியரசு பல்லின மக்கள் சமாதானமாக சகோதரர்களாக வாழ்வதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் தேசியவாதச் சக்திகளுக்கெல்லாம் இடமிருக்கவில்லை. அல்லது அடக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே சோவியத் யூனியனுடன் உறவுகளை முறித்துக்கொண்ட யூகோஸ்லாவியா தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளுடன் நடபுறவு பூண்டு கடனுதவிகளைப் பெற்று வந்தது. அதிகம் விளம்பரம் செய்யப்படாத ஒரு சோசலிச நாட்டுக்கான முதலாளித்துவ நாடுகளின் உதவிபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. டிட்டோவின் மரணத்தின் பின்பு, சோவியத் யூனியனும் வீழ்ச்சியடைய யூகோஸ்லாவியாவிற்கான மேற்குலக நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டது.

புதிய ஜனாதிபதி மிலோசவிச் தலைமையிலான யூகோஸ்லாவிய மத்திய அரசாங்கம் பலவீனமடைந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நவதேசியவாதிகள் தம்மை மீள்கட்டமைப்புச் செய்துகொண்டனர். ஸ்லோவேனியா, குரோவேசியா, பொஸ்னியா ஆகிய குடியரசுகள் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதில் பொஸ்னியா மிகவும் சிக்கலான பிரச்சினையை எதிர் நோக்கியது. சேர்பியர், பொஸ்னிய முஸ்லீம்கள், குரோவாசியர் ஆகிய மூன்று இனங்கள் (இனம் என்ற வரையறை சரியா?) அங்கே வாழ்கின்றனர். 

உண்மையில் இவர்கள் அனைவரும் ஒரே மொழி பேசும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பிரிப்பது மதம் மட்டும்தான். கிழக்கைரோப்பிய மரபைக்கொண்ட ஓர்த்தோடொக்ஸ் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் சேர்பியர்கள், கத்தோலிக்கரான குரோவாசியர்கள், துருக்கிய ஒட்டோமான் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களாக மாறிய சேர்பியர்கள் அல்லது பொஸ்னிய முஸ்லீம்கள். இவர்களனைவரும் பேசும் மொழி , சிறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும், சேர்போ-குரொவாசியா என்ற பொது மொழிதான்.

இருப்பினும், 1990 க்குப் பின்பு இம் மூன்று சமுகங்களிலும் தோன்றிய தேசியவாதச் சக்திகள் தனித்தன்மையை வலியுறுத்தின. பொஸ்னியா தனியரசாக அமையும்போது அங்கு பெரும்பான்மையாக வாழும் முஸலீம்களின் கைகளில் ஆடசியதிகாரமும், இராணுவமும் போய்விடும் என்ற அச்ச உணர்வு, அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த சேர்பியரையும், குரோவாசியரையும் ஆயுதக்குழுக்களாக மாற்றியது. தேசிய இராணுவம் பொஸ்னிய முஸ்லிம்கள் வசம் வந்தது. 

புதிதாகச் சுதந்திரமடைந்த குரோவேசியாவின் உதவியோடு பொஸ்னிய எல்லைக்குள் வாழ்ந்த குரோவேசியரின் ஆயுதபாணிக்குழுக்கள் உருவாகின. போர் நிச்சயமாகியது. யுத்தம் ஈவிரக்கமின்றி நடந்தது. மூன்று சமுகங்களின் ஆயுதக்குழுக்களும் இயன்ற அளவு மனித உரிமைகளை மீறின. சேர்பியப் படைகள் முஸ்லீம், குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், முஸ்லீம் படைகள் சேர்பிய குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், குரோவேசியப் படைகள் சேர்பிய முஸ்லீம் பொதுமக்களைக் கொன்றதுமென போர்க்குற்றங்கள் அனைவராலும் இழைக்கப்பட்டன.

சேர்பியக் கிறிஸ்தவர்கள் தாம் முஸ்லீம்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் புனிதக் கடமையைச் செய்வதாக நம்பினர். அப்படியே சொல்லியும் கொண்டனர். "கிறிஸ்தவ" மேற்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் யாருடைய பக்கம் நின்றார்கள் ? சிலர் புருவத்தை நெரிக்கலாம். ஆனால் அவர்கள் முஸ்லீம்களின் பக்கம் தானிருந்தார்கள். நேட்டோவின் விமானப்படைகள் சேர்பிய நிலைகள் மீது குண்டுகள் போட்டன. அமெரிக்கா முஸ்லீம் படைகளுக்கு ஆயுதம் வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், பின் லாடனின் அல்கைதா உறுப்பினர்களைப் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்ட நான்கு வருடப்போர் இறுதியில் அமெரிக்கத் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. பொஸ்னியா ஒரு தலைமையின் கீழ் இரண்டு குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டது. அதாவது, சமாதானமுறையிலான இனப்பிரிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. சேர்பியக் குடியரசில் சேர்பியர் மட்டும், பொஸ்னிய சமஸ்டிக் குடியரசில் முஸ்லீம்களும், குரோவாசியர்களும் மட்டும் என இனஅடிப்படையிலான பிரிவுகள் உருவாக்கப்பட்டன. சேர்பியர்கள் அங்கே, முஸ்லீம்கள் இங்கே எனத்தான் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

போர் முடிவுக்கு வந்தாலும், அந்நிய நாட்டுச் சமாதானப் படைகளின் கீழ் சமாதானம் கொண்டுவரப்பட்டாலும், நிரந்தர அரசாங்கம் அமைத்துவிடாலும் பொஸ்னியர்கள் இன்னமும் பதில் கிடைக்காத கேள்விகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள். அவற்றில் முக்கியமானவை சிரபிரெனிச்சா படுகொலைகள் சம்பந்தமானவை. அங்கே உண்மையில் என்ன நடந்தது ?

1995ம் ஆண்டு போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம். ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு பிரச்சினைக்குள் சிக்குப்பட்டுக் கொண்டது. சேர்பிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்ற என்று கூறி குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டன. 

அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையமான சிரபிரெனிச்சா ஐ.நா சமாதானப்படையின் ஓர் அங்கமாக இயங்கிய "டச்பட்" என்ற ஒல்லாந்து நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியது. மிகவும் பாதுகாப்பான பிரதேசம் என நினத்தவர்களுக்கு ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் காத்திருந்தன. ஐ.நா சமாதானப்படை வீரர்கள் சிலர் சேர்பியர்களால் பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோது, ஐ.நா சபை இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகள் என பணிந்து போகும் நிலைக்குள் தள்ளப்பட்டது. அந்தத தருணத்தில் சேர்பியப் படைத்தளபதியும் ஒல்லாந்து "டச்பட்" கொமாண்டரும் சந்தித்துப்பேசினர். என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

சில நாட்களுக்குப் பின்னர் சேர்பிய இராணுவம் சிரபிரெனிச்சா பாதுகாப்பு வலயம் நோக்கி முன்னேறியது. பலரும் அதிர்ச்சியடையும் அளவிற்கு பாதுகாப்பிற்கு நின்ற ஒல்லாந்துப் படையினர் பின் வாங்கினர். எவ்வித எதிர்ப்புமின்றி சிரபிரெனிச்சாவைக் கைப்பற்றிய சேர்பியப் படைகள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லீம்களை ஆண்,பெண் எனப் பிரித்து பெண்களையும் குழந்தைகளையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு, ஆண்களனைவரையும் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்திற்கும் அதிகம். இந்தப் படுகொலைகளை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா ஒல்லாந்துப் படையினரும் குற்றவாளிகள் என்பதைச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன நடந்தது ?

நீண்ட காலம் இழுத்த விசாரணைக் கமிசன் தனது தீர்ப்பில் ஒல்லாந்து சமாதானப் படையினரையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையையோ பெரிதாகக் குறைகூறவில்லை. சமாதானப்படை அனுப்பப்படும்போது சரியாக ஆராயப்படவில்லை. அவ்வாறு அனுப்பியது நெதர்லாந்தின் தவறு என அறிக்கை கூறியது. ஒல்லாந்து அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்று, தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாகப் பதவி விலகியது. இதனால் பல விடயங்கள் வெளிக்கொணரப் படாமலே மூடிமறைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்திறகுப் பின்னால் இருந்த பிற சக்திகள் எவை? இத்துயர நாடகம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் என்ன ?

அலியா இசபெகோவிச், சிறுவயதிலிருந்தே "இளம் முஸ்லீம்கள்" என்ற அமைப்பின் உறுப்பினர். முன்னாள் யூகோஸ்லாவியாவில் அவர் பிரசுரித்த ";இஸ்லாமிய அறிக்கை" நூலுக்காகச் சிறையிலிடப்பட்டவர். 1990 ம் ஆண்டு பொஸ்னியக் குடியரசுத் தேர்தலில், தனியே பொஸ்னிய முஸ்லீம்களைக் கொண்ட கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

பெரும்பான்மை (45 வீதம்) முஸ்லீம்களைக் கொண்ட பொஸ்னியாவை உலக இஸ்லாமிய நாடுகளின் கட்டமைப்பில் சேர்க்க விரும்பியவர். அலியா இசபெகோவிச் பின் லாடனைச் சந்தித்ததாக வதந்திகள் இன்றும் கூட வலம்வருகின்றன. முன் குறிப்பிட்டது போல, அல்கைதா உறுப்பினர்களும் பொஸ்னியாவில் போரிட்டார்கள். அவர்கள் இப்போது பொஸ்னியக் குடியுரிமை பெற்று , உள்நாட்டுப் பெண்களையும் மணந்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

இருப்பினும்.... இனிவரும் தகவல்கள் குழப்பத்தையூட்டுவன. அலியா இசபெகோவிச் இன்றுவரை மேற்குநாடுகளின் மனதுக்கினிய நண்பர். நம்பிக்கையான பொஸ்னிய அரசியல்வாதி என்றெல்லாம் புகழப்படுபவர். அவ்வளவு தூரம் மேற்கத்தைய நாடுகளின் திட்டங்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவும் மேற்கைரோப்பாவும் புனர்நிர்மாணத் திட்டங்களில் ஒரு பகுதியாக புதிய மசூதிகளைக் கட்டிக் கொடுக்கின்றன. போருக்குப் பின்னர் மதத்தை நாடுவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெரும்பாலான முஸ்லீம் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது.

பிற யூகோஸ்லாவியப் பிரச்சினைகளின் போது நடந்ததைப்போல மேற்குலக நாடுகள் பொஸ்னியப் பிரச்சினையிலும் சேர்பிய விரோத நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக சேர்பியர்கள் குமுறுகிறார்கள். (மேற்குலகக் கட்டுப்பாட்டில் உள்ள) சர்வதேசத் தொடர்பூடகங்கள் யாவும் சேர்பியர்களைக் கெட்டவர்களாகவும், முஸ்லீம்களை நல்லவர்களாகவும் சித்தரித்தன. ஆனால், திரைமறைவில் நடந்தவைகளோ வேறு விடயங்கள். அமெரிக்க ஐரோப்பிய அரசுகளில் கொள்கை வகுக்கும் அதிமேதாவிகளினால் ஓரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. யூகோஸ்லாவியாவிற்கான வெளிநாட்டுக் கடனுதவிகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இந்த நாடகம் தொடங்குகின்றது. இதன் முதலாம் கட்டம்: ஸ்லோவேனிய, குரோவேசிய யுத்தங்கள். இரண்டாம் கட்டம்: பொஸ்னிய யுத்தம்.

ஆனால், பொஸ்னியப் பிரச்சினை சிக்கலானது. ஐரோப்பாவில் பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட நாடான பொஸ்னியா இஸ்லாமிய அடிப்படைவாதப் பாதையில் போகவிருந்தது. இத்தகைய காரணங்களால் பொஸ்னியாவில் முஸ்லீம்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காக போர் நீண்ட காலம் தொடரவிடப்பட்டு, சிரபிரெனிச்சாப் படுகொலைகள் போன்ற இன அழிப்புக் கொலைகள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என ஊகங்களும் உண்டு. இதுதவிர, பெரும்பாலும் முஸ்லீம் அகதிகளுக்கு மட்டும் மேற்கு ஐரோப்பாவில் அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளையினத்தவரான , பெயரால் மட்டும் முஸ்லீமான, இவர்களின் பிள்ளைகள் காலப்போக்கில் மேற்கைரோப்பியராக உள்வாங்கப்பட்டு விடுவார்கள்.

இதேவேளை பொஸ்னிய முஸ்லீம்களின் தலைவர் அலியா இசபெகோவிச் கூட மேற்குலகச் சார்பாளர் தான். சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தள்ளிய, "நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்த, மோட்டார் ஷெல் தாக்குதற் சம்பவங்கள்," இவர் தலைமையிலான படைகளின் வேலை என்று ஐ.நா. வட்டாரங்களிலேயே நம்பப்படுகின்றது. (செய்திகள் இவ்வசம்பாவிதத்தை சேர்பியர்கள தலையில் சுமத்தியிருந்தன.) சமாதான ஒப்பந்தம் கொண்டுவர ஒத்துழைத்த யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசெவிச் அந்தக் காலங்களில் பலர் நினைப்பதற்கு மாறாக சேர்பியப் படைகளை ஆதரிக்கவில்லை. ஆனால், இவருக்கும் முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. நெறியாள்கை செய்தோரின் விருப்பப்படியேதான் நாடகமும் முடிந்தது.

சமாதானப்படை என்ற பேரில் அமெரிக்க மேற்கைரோப்பிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கிவிட, பொஸ்னியா மேற்குலகக் காலனியாகியது. சமாதானப் படையின் உயரதிகாரிகள் கடத்தல் தொழில், விபச்சார விடுதி நடத்துதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் கூட ஈடுபட்டமை அம்பலமாகியிருக்கிறதென்றால் அங்குள்ள நிலைமை எவ்வளவு மோசமானதென ஊகிக்கமுடியும். அப்படியானால் யூகோஸ்லாவியாவில் நிறைவேற்றப்பட்ட நாடக அரங்கேற்றத்தின் பின்ணணி என்ன? ரஷ்ய, மத்திய ஆசிய எண்ணையை ஐரோப்பாவிற்குக் கொண்டுவருதல், மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத்தளம் அமைத்தல் போன்றவையேயாகும். நாடகத்தின் இறுதிக்கட்டம்தான் கொசோவாவில் அரங்கேறியது.

Thursday, April 29, 2010

கிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை!

20 ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான புதிய சுதந்திர நாடு கிழக்குத் திமோர். முன்னாள் போரத்துக்கீச காலனியான இந்தத் தீவு 1975 ல் இந்தோனேசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுஹார்த்தோவின் பதவி விலகலுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்குப் பின்னாலிருந்த அந்நிய நாடுகளின் தலையீடு மே 2002 ல் கிழக்குத் திமோரக்கான சுதந்திரத்தில் போய் முடிவடைந்தது. சுதந்திர விழாக் கொண்டாடி ஆறு மாதங்களான நிலையில் டிசம்பர் மாதம் தலைநகர் டிலியில் ஏற்பட்ட கலவரம் அந்த தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டிலி பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சகமாணவனை சுதந்திரத் திமோர் போலிஸ் கைது செய்ததையெதிர்த்து நடந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமுற்ற மாணவர்கள் நகரின் வியாபார ஸ்தாபனங்கள், ஹோட்டல்கள், ஆகியவற்றைத் தாக்கிக் தீயிட்டனர். சுதந்தித்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இந்தக் கலவரத்திற்கு நாட்டின் வறுமை நிலையும் , வேலையில்லாப் பிரச்சினையும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இக்கலவரத்தில் சில முக்கிய இடங்கள் தேர்ந்தெடுத்துத் தாக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவிற்குச் சொந்தமான சுப்பர் மாக்கட், கிழக்குத் திமோர் பிரதமரின் இல்லம் என்பன கலவரத்தில் பாதிக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை.

கிழக்குத் திமோர் ஆசியாவின் மிகவறுமையான நாடாகத் திகழ்கிறது. 40 வீதத்திறகுமதிகமான சனத்தொகை வேலையற்றிருக்கின்றனர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வேலைதேடும், வறுமைநிலையைப் போக்கும் ஏக்கம் தெரிகிறது. மதப்பிரச்சாரம் செய்யப்போகும் கிறிஸ்தவப் பிரச்சார அமைப்புகள் எதிர் கொள்ளும் முதற் கேள்வி உணவைப் பற்றியதாகவே இருக்கின்றது.

கிழக்குத் திமோர் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்வகிக்கப்பட்ட காலத்திலேயே இந்தப் பிரச்சினைகள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன. அப்போது ஒரு நாள் நம்பிக்கையிழந்த வேலையற்ற மக்கள் ஐ.நா உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஐ.நா சபையில் தொழில் புரிந்த உத்தியோகத்தர்கள் வேறு உள்ளூர் மக்கள் மத்தியில் பொறாமையை கிளப்பியிருந்தனர். சராசரித் திமோர் தொழிலாளியின் மாத வருமானம் சில பத்து டொலர்களாக இருக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐ.நா உத்தியோகத்தர்கள் ஆடம்பரம் காட்டி எரிச்சலைக் கிளப்பிவிட்டிருந்தனர். இதற்கிடையே அந்நிய நாட்டு அவுஸ்ரேலிய இராணுவம் நாட்டாண்மை காட்டிக்கொண்டிருந்தது.

தற்போது பொதுத்தேர்தல்கள் நடாத்தப்பட்டு திமோரியர்கள் கையில் ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலையியக்க வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மந்திரிகளாகப் பவனிவருகின்றனர். நாட்டில் நிலவும் குழப்ப நிலைக்கு ஜனநாயகத்தில் அனுபவமற்ற அரசியல்வாதிகள், கஜானாவிலான நிதிப்பற்றாக்குறை கொண்ட அரசாங்கம் என்பன காரணமாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் வர்த்தகத்திற்கு எதிர்காலம் இல்லையென்று அவுஸ்திரேலிய சூப்பர் மாக்கட் முதலாளியொருவர் அவநம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

திமோர் தீவில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடியினர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமக்குரிய ஊர்களில், பண்டைய சம்பிரதாயங்களுடன் வாழ்ந்து வந்தவர்கள். காலனியக் காலகட்டத்தில் அந்த நிலை மாறியது. மேற்குத் திமோரை ஒல்லாந்து கைப்பற்ற கிழக்குத் திமோரைப் போர்த்துக்கல் கைப்பற்றி தமது காலனி ஆட்சியை நிறுவினர். அதனால், போர்த்துக்கேயர் விடடுச்சென்ற பின்பு, போரத்துக்கீச மொழி பேசிய கிழக்குத் திமோரிப் படித்த வர்க்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தற்போது புதிய அரசாங்கத்தில் இருப்பவர்களும் இதே பிரிவினர்தான். ஆயினும் இந்தோனிஷிய ஆட்சியின் கீழ் இருந்த இடைப்பட்ட காலத்தில் பாடசாலைகளில் இந்தோனிசிய மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இதனால், இந்தோனிஷிய மொழிபேசும் இளஞ் சமூகம் போர்துக்கீச மொழி பேசும் ஆளும் வர்க்கத்துடன் பல விடயங்களில் முரண்படுகின்றது. போர்த்துக்கீச மொழி பேசுபவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் , இதனால் பின்தங்கி நிற்கும் இளைஞர்களும் இதற்கு ஒரு எடுத்தக்காட்டு.

பெரும்பான்மைத் திமோரிய மக்கள் தெட்டுன் என்ற மொழி பேசுபவர்கள். போர்த்துக்கிச மொழிக்குப் பதிலாக, உள்ளூர் மக்களின் தெட்டுன் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கினால், பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு மாறாக போர்த்துக்கீச மொழியைத் தமது தொண்டைக்குள் திணிப்பதாக பலர் வெறுப்புற்றுள்ளனர். அதிகமானோர் வேலையற்றிருப்பதற்கு மொழிப்பிரச்சினையும் ஒரு காரணமாகும். உலகின் மிகவறிய நாடுகளில் ஒன்றாக கிழக்குத் திமோர் கணிக்கப்பட்டாலும் அந்நாட்டில் இயற்கை வளத்திற்குக் குறைவில்லை. மிக முக்கியமாக அபரிதமான எண்ணைவளம் திமோரைச் சுற்றியுள்ள கடலில் இருப்பதால் தான், திமோரின் சுதந்திரத்தை அந்நிய நாடுகள் தலையிட்டுப் பெற்றுக் கொடுத்தனர்.

ஐ.நா சபையின் பெயரில் வந்திறங்கிய "பன்னாட்டுப்" படைகளுக்கு அவுஸ்ரேலியா காரணமில்லாமல் தலைதாங்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கும், திமோரிற்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் இருக்கும் எண்ணையை அன்றுமுதல் இன்றுவரை அவுஸ்திரேலியப் பெற்றோலிய நிறுவனங்கள்தான் அகழ்ந்தெடுத்து வருகின்றன. ஏற்கெனவே முன்னாள் இந்தோனேசிய சர்வாதிகாரி சுகார்த்தோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியா இந்த உரிமையைப் பெற்றது. சர்வதேசச் சட்டத்தின் படி இரு நாடுகளுக்குமிடையிலான கடலெல்லை சம தூரத்தில் பிரிக்கப்படவேண்டும். ஆனால், இதற்கு மாறாக அவுஸ்திரேலியா தனது பக்க எல்லையை விரிவாக்கி 85 வீதக் கடற்பரப்பை பெற்றுக்கொண்டது.

தற்போது சுதந்திரத் திமோர் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் 80 கோடி டொலர்கள் உரிமைத் தொகையாகவும், எண்ணை உற்பத்தியில் 90 வீத பங்கையும் கொடுக்க அவுஸ்திரேலியா சம்மதித்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான எண்ணை வயல்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்காத கடற்பரப்பில் இருக்கின்றன, என்பது பலரறியாத விடயம். சில இடங்களில் அவுஸ்ரேலியா நூறுவீத உரிமையைக் கொண்டுள்ளது. ஆகவே சுதந்திரம் கிடைத்த பின்பும் அவுஸ்திரேலியாவின் எண்ணைக் களவு தொடர் கதை தான். எல்லையைச் சரியாக வரையறுக்குமாறு திமோர் அரசு கேட்டபோதும் அவுஸ்திரேலியா ஏதாவது சாட்டுச்சொல்லி 30 வருடங்களுக்கு அதைப்பின்போடும் உள்நோக்கோடு செயற்பட்டுவருகிறது. அதற்குள் இருக்கும் எண்ணை முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிடும் திட்டமிருக்கலாம். கிழக்குத் திமோர் ஒரு வறியநாடு. அந்நிய நாடுகள் தமது பொருளாதார நலன்களைக் கருதாமல், வறிய மக்களின் வாழ்க்கைத்தரமுயற்றும் முயற்சிகளை முன்னெடுக்காவிடில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

Wednesday, April 28, 2010

ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்

"அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் சூடுபிடித்திருந்தது. வரவிருக்கும் ஆண்டுகளில் தமது திட்டங்களை ஆளும் கட்சி அறிவித்துக்கொண்டிருந்தது. திடீரென பாராளுமன்றத்தினுள் சில இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் உள் நுழைந்தனர். அவர்களில் அதிகாரி போலிருந்தவர் சபாநாயகரின் ஒலிவாங்கியைப் பறித்து அரசாங்கத்தை திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பல கூக்குரல்கள், அதைத் தொடர்ந்து சடசடவென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகளின் கீழ் ஒழிந்து கொண்டனர்.

வானொலியில் பாராளுமன்ற நடப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வதந்திகள் காட்டுத்தீபோல் நாடு முழுவதும் பரவின. தலைநகரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இராணுவமும் பொலிஸ{ம் ஆக்கிரமித்துக்கொண்டன. ஆழும் கட்சியான சோஷலிசக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்பு கவச வாகனத்தின் பீரங்கி குறிபார்த்தது . பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் பதுங்கினர். "

மேற்படி சம்பவம் நடந்தது எங்கோ ஒரு "அபிவிருத்தியடையாத" மூன்றாம் உலக நாட்டில்அல்ல. "அபிவிருத்தியடைந்த" மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1981 ம் ஆண்டு பெப்ரவரி 23 ம்திகதி இது நடைபெற்றது. ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி, கிறீஸ் போன்று ஸ்பெயினிலும் உண்மையான ஆட்சியதிகாரம் திரைமறைவில் இராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்னதான் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இராணுவத்தை பகைக்காத வகையில் ஆட்சியில் நிலைக்கலாம். 1981 ம்ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சதிப்புரட்சிக்கான சந்தர்ப்பம் இருந்த போதும் அது வெறும் எச்சரிக்கையுடன் நின்று விட்டது.

ஸபெயினில் இராணுவத்தின் ஆதிக்கம் உள்நாட்டுப் போரில் இருந்தே நிலைத்து வருகின்றது. ஸ்பெயின் உள்நாட்டுப்போர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்றும், பல சரித்திரவாசிரியர்களால் கூறப்படுகின்றது. ஒருபுறம் வலதுசாரிப் பாஸிச இராணுவமும், மறுபுறம் இடதுசாரி ஆயுதக் குழுக்களும் கோடிக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போரில் ஈடுபட்டிருந்தன. 1936 ம் ஆண்டு யூலையில் ஆரம்பமாகியது இப் போர். நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மன்னர் அல்போன்சோ, அந்த வருடம் பொதுத் தேர்தலை அறிவித்தார். அந்தத் தேர்தலில் லிபரல்களும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மாபெரும் வெற்றியீட்டினர். வெற்றியீட்டிய கடசிகள் "மக்கள் முன்ணணி" அல்லது "குடியரசுவாதிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முடியாட்சியை ரத்ததுச் செய்துவிட்டு குடியரைப் பிரகடனம் செய்தனர். கத்தோலிக்க மதத்தின் பிடியில், நிலவுடைமைச் சமுதாயம் நிலவிய ஸ்பெயினில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அறிவித்தனர். வரவிருக்கும்ஆபத்தையுணர்ந்துகொண்ட மன்னர் குடும்பத்தோடு நாட்டை விட்டோடினார்.

புதிய இடதுசாரி அரசாங்கத்தின் முடிவுகளில் அதிருப்தியுற்ற கத்தோலிக்கத் தேவாலயங்கள், முடியாட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் ஸ்பானியப் பாசிசக்கட்சியான ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையில் ஒன்று திரண்டனர். வலது சாரிப் பிற்போக்குவாதிகள் நிறைந்திருந்த ஸ்பானிய இராணுவம் அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்ததது. ஃபலாங்கிஸ்டுக்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தினர். ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஸ்பெயினிலும், மொறோக்கோவிலும் (ஸ்பெயின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள்) இராணுவ முகாம்களை தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஸ்பெயினின் (மறக்கப்பட்ட) உள்நாட்டுப்போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதே காலத்தில் இத்தாலியில் முசோலினியின் பாஸிசக்கட்சியும், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிக்கட்சியும் ஆட்சி நடாத்தின. இவர்கள் ஸபெயினில் தமது தோழர்களான ஃபலாங்கிஸ்டுக்களுக்கு மனமுவந்து உதவி செய்தனர். இத்தாலியின் காலாட்படையினரினதும், ஜேர்மன் விமானப் படையினரினதும் உதவியோடு ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையிலான இராணுவம் விரைவிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஸ்பெயினின் பல இடங்களைக் கைப்பற்றினர். தலைநகரமான மட்றிட் இரண்டாவது பெரிய நகரமான பார்சலோனா உட்பட கிழக்கு ஸ்பெயினில் குடியரசுவாதிகளும், இடதுசாரிக்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினர். லிபரல்கள் தலைமை தாங்கிய குடியரசுவாதிகளின் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்து வந்தது. ஆனால், "நடுநிலைமை" வகித்த இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் வற்புறுத்தலால் பிரான்ஸ் தனது ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. "சர்வதேச சமூகத்தால்" கைவிடப்பட்ட நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கினாலும் அரசாங்கம் சோவியத் யூனியனின் உதவியை நாடவேண்டியேற்பட்டது.

இதேவேளை மொஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பான "கொமின்தேர்ன்" ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் தலையிடுவதென முடிவு செய்தது. அன்றைய சோவியத் யூனியன் அதிபரான ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆயுதத் தளபாடங்கள் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன. உள்நாட்டுப் போரின் வரலாற்றில் ஸ்பெயின் குடியரசு அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வெளிநாட்டு உதவி சோவியத் யூனியனிலிருந்துதான் வந்தது.

இதைவிட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த கம்யூனிஸ்ட்கட்சிகள் தத்தமது நாடுகளில் தொண்டர்படைக்கு ஆட்களைத் திரட்டினர். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து "ஆபிரகாம் லிங்கன் படைப்பிரிவு" ஒரு கறுப்பினக் கொமாண்டரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். பன்னாட்டுத்தொண்டர் படைகள் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் போரிட்டனர். இதே நேரம் காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட குடியரசு அரசாங்கம் மக்கள் ஆயுதக் குழுக்களை அமைக்க அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுத்தினர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அரச ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்போதிருந்த பிற இடதுசாரிச் சக்திகளான அனார்கிஸ்டுகளும், ட்ரொட்கிஸ்டுகளும் தத்தமது மக்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கினார்கள்.

ஆரம்பத்தில் சகல இடதுசாரிக் குழுக்களும் குடியரசு அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கின. இருப்பினும் தத்தமது ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் "கொம்யூன்" என அழைக்கப்படும் மக்களாட்சியை நிறுவினர். கிராமிய நகர மட்டங்களில் சாதாரண மக்கள் நேரடியாகப் பங்குபற்றும் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு ஸ்பானிய உள்நாட்டுப் போர் பாஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாகவும் கலாச்சாரப் புரட்சியாகவும் அமைந்தது. மறுபக்கத்தில் பாஸிஸ்டுகள் தம்மைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள இந்தச் சம்பவங்கள் வழிசமைத்தன. "கம்யூனிச அபாயத்திலிருந்து தாய் நாட்டைக் காக்க போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும் அரசியல் அதிகாரத்தை இழந்த கத்தோலிக்கத் திருச்சபை அவர்களின் பக்கம் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் பிரஞ்சு எல்லையோரமாக பாஸ்க் மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாகவே ஸ்பெயினின் ஒற்றையாட்சிக்கெதிராக சுதந்திரம் கோரிப் போராடி வருகின்றனர். ஸ்பானிய உள்நாட்டுப்போர் அவர்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கவே "எயுஸ்கடி" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்தனர். ஸ்பெயின் குடியரசு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் இந்தத் தனியரசு ஓரிரு வருடங்களே நிலைத்து நிற்க முடிந்தது. ஃபலாங்கிஸ்டுக்களின் உதவிக்கு வந்த ஜேர்மனியப் போர் விமானங்கள் பாஸ்க் மக்களின் பிரதான நகரமான குவேர்னிக்கா மீது குண்டு மழை பொழிந்தன. இந்நகரின் அழிவைப்பற்றிக் கேள்வியுற்ற பிரபல ஓவியரான பிக்காஸோ உலகப்பிரசித்தி பெற்ற குவேர்னிக்கா ஓவியத்தை வரைந்தார்.

அதிக ஆயுத பலமற்ற, மேலும் வெளியிடத்திலிருந்து ஆதரவு கிடைக்காத ("அவர்களுக்குத் தனி நாடு வேண்டமானால், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்" என்பது குடியரசுப்படைகளின் கருத்தாக இருந்தது) பாஸ்க் தனியரசு முன்னேறிய வலது சாரிப்படைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அகப்பட விரும்பாத பாஸ்க் மக்கள் துறைமுகத்தில் புறப்படவிருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டனர். இவ்வாறு கப்பலொன்றில் அளவுக்கதிகமான ஆட்கள் தப்பினால் போதுமென்ற நோக்கில் ஏறிக்கொள்ளவே, பாரந்தாங்காமல் நடுக்கடலில் போன கப்பல் அப்படியே தாழ்ந்து போனது. கப்பலில் போன அனைவரும் ஜலசமாதியாகினர். உலகப்பிரசித்தி பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையை விடத் துயரமான இந்தச் சம்பவத்தை இதுவரை யாரும் திரைப்படமாக்க முன்வரவில்லை. டைட்டானிக்கில் பயணித்தவர்கள் பணக்கார உல்லாசப் பயணிகள், பாஸ்க் கப்பலில் போனவர்கள் சபிக்கப்பட்ட சாதாரண அகதிகள் என்ற பாகுபாடுதான் காரணமா ?

1939 ல் முடிவுக்கு வந்த ஸ்பானிய உள்நாட்டுப்போரின் இறுதியில் பாஸிச இராணுவம் வெற்றிவாகை சூடியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இடதுசாரிக் குழுக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணம். (சோவியத் சார்பு) கம்யூனிஸ்டுகள், ஸ்ரொட்கிஸ்டகள், அனார்கிஸ்டுகள் எனப்பிரிந்திருந்த இவர்களால் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்தை கொண்டவர முடியவில்லை. சில இடங்களில் முரண்பாடுகள் காரணமாக இந்தக் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டன. பாஸிச இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்ததாக ஒருவரையொரவர் இவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வாக்குவாதம் இன்றுவரை தொடர்கிறது. இன்னொரு காரணம் ஃபலாங்கிஸ்டுக்களுக்கு நாஸி ஜேர்மனியும், பாஸிச இத்தாலியும் பகிரங்கமாக உதவி செய்தமை தெரிந்த போதும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் "நடுநிலைமை" என்ற பெயரில் பாராமுகமாக இருந்தனர். மேலும் அதேகாலகட்டத்தில் ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் அணி உருவாகியது. இதில் அங்கம் வதித்த சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கான உதவியை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இதைவிட சர்வதேசத் தொண்டர் படையை திருப்பியனுப்புமாறு குடியரசு அரசாங்கத்தை இணங்க வைத்தனர்.

எது எப்படியிருப்பினும், மூன்றுவருடப்போரின் முடிவில் ஃபலாங்கிஸ்டுக்களின் இராணுவம் ஸ்பெயினின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் பிரான்ஸிற்கும் பிற நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோடினர். 7 ம்திகதி ஏப்பிரல் மாதம் 1939 ம் ஆண்டு ஜெனரல் ஃபிராங்கோவினால் போரின் முடிவு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பாஸிஸ இராணுவ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகியது. ஸ்பானிய சமூகத்தை இரண்டாகப் பிளவு படுத்திய உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரெதிர் முகாங்களில் நின்று போரிட்டனர். அன்று பிரிந்த சகோதரர்களில் பலர் இன்று ஜனநாயகச் சூழல் வந்த நிலையிலும் ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசாத நிலையிலுள்ளனர்.

1939 லிருந்து 1975 வரை சமார் நாற்பது ஆண்டு காலம் நீடித்த பாஸிசச் சர்வாதிகார ஆட்சியின்போது குடியரசு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல்போனார்கள். இவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு இரகசியப் புதைகுழிகளினுள் புதைக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இவ்வாறு நூற்றுக்கணக்கான இரகசியப் புதைகுழிகள் உள்ளன. சில இடங்களில் 5000 த்திற்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மையில் ஓரிடத்தில் அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் நடந்தபோது அங்கே மனிதப் புதைகுழி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நாடளாவிய சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீரகள். இவற்றிற்குக் கிடைக்கும் சர்வதேச முக்கியத்துவம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளைப் பற்றி மட்டுமே உலக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், 1975 ம் ஆண்டு ஃபிராங்கோவின் மரணத்திற்குப்பின்பு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் ஸ்பெயினில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றி யாருமே அக்கறை காட்டவில்லை. ஒரு சில மனித உரிமை நிறுவனங்கள் இரகசிய மனிதப்புதைகுழிகளை தோண்ட உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்போட்டும், எந்தவொரு நீதிபதியும் அதைப்போய்ப் பார்க்கவில்லை.

இந்த அக்கறையின்மைக்கு என்ன காரணம் ? ஃபிராங்கோ காலத்தில் கொலை, சித்திரவதைகளில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரியும் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை ? பலமான இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவதுதான் அதற்குரிய காரணம். மன்னர் ஹுவான் கார்லோஸ் கூட இன்றும் ஃபிராங்கோ பற்றி உயர்வாகப் பேசுவார். ஸ்பெயினை ஜனநாயகப்படுத்தியதில் மன்னரின் பங்கு பிரதானமானது. கடந்தகால சர்வாதிகார ஆட்சியை மன்னித்து மறந்து விடுமாறு சத்தியம் வாங்கிய பின்னர்தான் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன. மீண்டும் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால்தான் பழசையெல்லாம் மறந்து விடுவோம் என்று பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

ஸ்பானிய இராணுவத்தில் இன்றும் கூட பாஸிஸ பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோஷலிச அல்லது குடியரசுக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில், அமெரிக்கா ஸ்பெயினை நேட்டோ அமைப்பில் சேர்த்து அங்கீகரித்தது. ஸ்பானிய இராணுவம் நீண்ட காலமாகவே தன்னை நவீனமயப்படுத்திக் கொள்ள ஆதரவாகவிருந்தது. அதற்கு நேட்டோ உறுப்புரிமை வழிவகுத்துக் கொடுத்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத் தளபாடங்கள் வாங்குவதற்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கித் தருகிறது. ஈராக் போரின் போது காரணமில்லாமல் ஸ்பெயின் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கவில்லை.

Tuesday, April 27, 2010

கொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை

சுவிட்சர்லாந்தில் அரசியல் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த ஹாசிம் தாச்சிக்கு யூகோஸ்லாவியாவில் தனது பிரதேசத்தில் ஒரு விடுதலை இராணுவம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தபோது, இது வெகு விரைவில் சர்வதேசக் கவனத்தை ஈர்க்குமென அவர் எண்ணியிருக்கமாட்டார். பல்லின மக்கள் வாழ்ந்த யூக்கோஸ்லாவியா, எண்பதுகளின் இறுதியில் தனது சோசலிசக் கூட்டாளிகளை கிழக்கு ஐரோப்பாவில் இழந்ததால் வேறு வழியின்றி உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்த வேண்டிய நிலையுருவாகியது. இந்நிலை காரணமாக உள்நாட்டடில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள் பின்னர் ஒவ்வொரு இனமும் தமக்கென தேசம் கோரும் போர்களில் ஈடுபட வழி சமைத்தன.

ஸ்லோவனியா, க்றோவேசியா, பொஸ்னியா எனத் தனி அலகுகளாக இந்நாடு உடைந்ததையடுத்து, எஞ்சியிருந்த சேர்பியாவும் மொண்டி நீக்ரோவும் குட்டி யூக்கோஸ்லாவியாவாகச் சுருங்கிப் போயின. தொடர்ந்து இடம்பெற்ற யுத்தங்களுக்கு யூகோஸ்லாவியாவில் பெரும்பான்மையினத்தை கொண்டிருக்கும் சேர்பியாவே பொறுப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டு, இந்நாட்டின் மீது பொருளாதார, ஆயுத விற்பனைத்தடை கொண்டு வரப்பட்டது. இதனால் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவே, யூகோஸ்லாவிய அரசு தற்பாதுகாப்புப் பொருளாதாரத்தில் இறங்கியது. சேர்பியாவில் அல்பானிய சிறுபான்மையினத்தவர் வாழ்ந்த கொசோவோ மாகாணம் கவனிக்கப்படாது கைவிடப்பட்டது. இதன்காரணமாக கொசோவோ அல்பேனிய இனத்தவர் மோசமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதாரப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது.

தேர்தல்-ஜனநாயகம் மூலம் ஆட்சிக்கு வந்த சோஷலிசக் கட்சியின் ஜனாதிபதி மிலோசெவிச் பெரும்பான்மைச் சேர்பிய வாக்காளர்களைக் குறிவைத்து அரசியல் நடாத்துவதில் ஈடுபட்டார். அவர்களைத் திருப்திப்படுத்த கொசேவாவின் சுய நிர்ணய உரிமை பறிக்கப்பட்டது. இவ்வாரம்பத் தவறினையடுத்து, கொசோவோ அல்பானியர்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்தது. மிதவாதக் கட்சி சமாதான வழிப்போராட்ங்களை ஆதரித்த போதிலும், இளைஞர்கள் தீவிர ஆயுதப்போராட்டங்களை முன்னெடுத்தனர். சேர்பிய அரசுக்கு ஊழியம் செய்தவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர், சுட்டுக்கொல்லப்பட்டர். சேர்பியப் பொலிசும் வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை. தீவிரவாத இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். கைதுகளும் கொலைகளும் தொடர்ந்த வண்ணமாய் இருந்தன.

இந்நிலையில்தான், கொசோவோவில் ஹாசிம் தாச்சியின் வரவு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. ஹாசிம் தாச்சியின் தலைமையின் கீழ் திரண்ட இளைஞர்கள் தமது இயக்கத்திற்கு "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA) எனப் பெயரிட்டு, சேர்பியப் பொலிசாரோடு மோதினர். இவர்களைப் பயங்கரவாதிகளென அறிவித்த யூகோஸ்லாவியா தனது பலத்தைக் காட்டி அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. ஆயினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு கொசோவோவிற்குச் சில அரசியலுரிமைகளை வழங்க முன்வந்தது. நடாத்தப்பட்ட தேர்தலில் மிதவாதக் கட்சியே ஆட்சிக்கு வந்தது.

யுத்தம் ஐரோப்பாவின் வாசற்படிக்கு வந்துவிட்ட காலத்திலிருந்து மேற்கு ஐரோப்பா யூகோஸ்லாவிய அரசியல் மாற்றங்களை வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தது. குறிப்பாக ஜேர்மனி இவ்விடயத்தில் அதிகளவு அக்கறை காட்டியது. பலங் குன்றிப் போயிருந்த கொசோவாவின் KLA க்கு ஜேர்மனி உதவிக்கரம் நீட்டியது. ஆயுத தளபாடங்கள் அனுப்பப்பட்டன. சண்டை மீண்டும் உக்கிரமடைந்தது. ஆரம்பத்தில் கொசோவோ அல்பானியர் மீதான அடக்குமுறையை கண்டும் காணாதிருந்த மேற்கத்தைய பத்திரிகையாளர்கள் திடீரென விழித்துக் கொண்டனர். அல்பானிய மக்களின் துயரங்களை, போர்முனைச் செய்திகளை அறிவிக்க காத்திருக்கும் அபாயங்களையும் பொருட்படுத்தாது கொசோவோ சென்றனர். அமெரிக்காவும் சும்மாயிருந்து விடவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை "கொசோவோ பயங்கரவாதிகள்" வர்ணித்த அமெரிக்கப் பத்திரிகைகள் இப்போது அவர்களை விடுதலைப் போராளிகளென அழைத்தன. அமெரிக்க அரசு KLA க்கு நிதியுதவியும் வழங்கியது. அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ இராணுவம் KLA ன் புகழ்பாடியது. இதே நேட்டோவில் உறுப்பு நாடுகளாகவிருக்கும் இங்கிலாந்து, துருக்கி, ஸ்பெயின் ஆகியன தத்தமது நாடுகளில் பிரிவினைப் போராட்டங்களை பயங்கரவாதம் எனக்கூறி அடக்கி வருவதைப் பற்றி யாரும் நினைத்துப் கூடப் பார்க்கவில்லை.

இடையில் ஒரு கட்டத்தில் நேட்டோ நாடுகள் யூகோஸ்லாவிய அரசைப் பேச்சுவார்தைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நேட்டோப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் இல்லாத பட்சத்தில் குண்டுமழை பொழியப்படுமெனவும் யூகோஸ்லாவியா பயமுறுத்தப்பட்டது. யூக்கோஸ்லாவியா மசியாத நிலையில் நேட்டோ விமானங்கள் இந்நாட்டு இராணுவ, பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது குண்டு வீசின. ஆத்திரமடைந்த சேர்பிய இராணுவம் கொசோவோவின் அல்பானியர்களின் மீதான அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தியது.

மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டன. கொசோவோவில் இனப்படுகொலை நடப்பதாக அலறின. மாபெரும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கதைகதையாகச் சொல்லின. KLA போராளிகளை வீரர்களாகவும் சேர்பிய இராணுவத்தினரை வில்லன்களாகவும் சித்தரித்தன. கோசோவோ அல்பானியர்கள் மீது பொழிந்த இந்தப்பாச மழையில் மேற்கத்தைய நாட்டு மக்களும் நனைந்து போயினர். இதில் வேடிக்கை என்னவெனில், சாதாரணமாகவே அகதிகளை வெறுக்கும் மேற்கு ஐரோப்பிய மக்களில் சிலர் கொசோவோ அகதிகளை வரவேற்று உபசரித்தனர். செய்தி ஊடகங்கள் எந்தளவு மக்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பத்றகு இதுவும் ஒரு சான்று.

நேட்டோ நாடுகளின் குண்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத யூகோஸ்லாவிய அரசு இறுதியல் விட்டுக்கொடுத்தது. நேட்டோ இராணுவம் கொசோவோவுள் நுளைய அனுமதித்தது. கொசோவோவை ஆளுக்கொரு துண்டாகப் பிரித்தெடுத்துக் கொண்டன அமெரிக்க, ஜேர்மனிய, பிரித்தானியப் படைகள். அவர்களை அல்பானிய மக்கள் தமக்கு விடுதலை பெற்றுத் தந்த இரட்சகர்களாகப் பார்த்தனர். அவர்களோடு சேர்ந்து வந்த KLA யின் கையில் கொசோவோவின் (தற்காலிக) ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டது. ஆனால் உண்மையான அதிகாரம் நேட்டோ, ஐ.நா சபையின் பிரதிநிதி (மேற்கத்தைய நாடுகளின் உத்தரவுகளை நிறைவேற்றுபவர்) ஆகியோரிடம் தங்கிவிட்டது. கொசோவோ மக்கள் KLA , நேட்டோ இரண்டையும் ஒன்றாகவே பார்த்தனர். இவர்கள் பின்பலத்துடன் தாம் எதையும் செய்யலாம் என நினைத்த சிலர் பழிவாங்கல் வன்முறையில் ஈடுபட்டனர். இம்முறை சேர்பிய மக்கள் திடீர்த் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். செய்தவர்களைத் தம்மால் பிடிக்க முடியவில்லையென நேட்டோ இராணுவம் கையைப் பிசைந்தது.

கொசோவோவில் நேட்டோவுடனான தேனிலவுக்காலம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்தது. சேர்பியாவிலும் ஆட்சிபீடம் மாறியது. முன்னாள் அதிபர் மிலோசவிச் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியிழந்தார். மேற்குலகு சார்பான கட்சிகள் ஆட்சியைப்பிடித்தன. சேர்பியாவில் கொசோவோவின் எல்லையோரப் பகுதியிலும் அல்பானியச் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். இந்தப்பகுதியையும் சுதந்திரக் கொசோவோவுடன் இணைக்கும் நீண்ட கால அவா KLA க்கு இருந்துவந்தது. அதனால் அங்கேயும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்பகுதி முன்னர் சமாதான வலயமாப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததால் சேர்பிய இராணுவம் ஐந்து மைல்களுக்கப்பால் நின்றது. ஆனால், இப்போதுதான் தலைநகர் பெல்கிரேட்டில் ஆட்சி மாறிவிட்டதே. நேட்டோவின் ஆதரவுடன் சேர்பியப் படைகள் சமாதான வலையத்தினுள் நுளைந்து KLA போராளிகளை விரட்டியடித்தது. எதிரிகள் நண்பர்களானார்கள். நண்பர்கள் எதிரிகளானார்கள்.

சேர்பியக் கிளர்ச்சி முறியடிக்கப்படவே KLA அயல்நாடான மசிடோனியா பக்கம் பார்வையைத் திருப்பியது. முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான மசிடோனியாவில் அதே பெயருடைய மொழி பேசும் பெரும்பான்மை ஸ்லாவிய மக்களும், கொசோவோ எல்லையோரமாக சிறுபான்மை அல்பானியர்களும் வாழ்ந்து வருகின்றனர். தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதாய் இச்சிறுபான்மையினர் நீண்டகாலமாகக் குறைப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள். இந்த இன முரண்பாடுகள் கடைசியில் வன்முறையாக வெடித்தன. அரசுக்கெதிரான ஊர்வலம் பொலிசாரினால் கலைக்கப்படவே, அது திடீரென ஆயுதப்போராட்டமாக மாறியது.

அல்பேனியச் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பிரதேசங்களை ஆயுதந்தாங்கிய போராளிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மசிடோனிய அரசு இராணுவத்தை அனுப்பியது. சண்டையில் ஈடுபடும் போராளிகளுக்கு உதவ கோசோவோவிலிருந்து மேலும் KLA உறுப்பிர்கள் வரலாம் என அஞ்சிய மசிடோனிய அரசு நேட்டோவிடம் விண்ணப்பித்தது. இம்முறை "அல்பானியப் பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக" அறிவித்த நேட்டோ எல்லைக் காவலை அதிகரித்தது. எல்லைகடக்க முயன்ற KLA உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றுவரை நண்பர்களாகவிருந்தவர்கள் திடீரென எதிரிகளாகிவிட்டதையுணர்ந்து கொண்ட KLA, நேட்டோ படையினருக்கெதிராகத் துப்பாக்கிகளைத் திருப்பியது. மசிடோனியாவில் கிளர்ச்சி ஒரு சில நாட்களிலேயே அடக்கப்பட்ட பின்பு இப்போது அந்தப் பிராந்தியம் அமைதியாகக் காணப்படுகின்றது.

அல்பேனியத் தீவிரவாதிகள் "அகன்ற அல்பேனியா" கனவு காண்பது ஒன்றும் இரகசியமானதல்ல. கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணையுமானால், அல்பானிய மொழி பேசும் மக்கள் ஏன் ஒன்றிணையக்கூடாது ? என KLA தலைவர்கள் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். KLA கொசோவோவை விடுதலை செய்ய விரும்பியபோது உதவிய நேட்டோப் படைகள், மசிடோனிய இராணுவம் அல்பானியரின் போராட்டத்தை அடக்க ஏன் உதவின ? எல்லாமே சுயநல நோக்கில்தான் என்கிறார் யூகோஸலாவிய யுத்தங்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியிருக்கும் பெல்ஜிய எழுத்தாளர் ஒருவர்.

90 களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவில் யுத்தம் வெடித்தபோதே சமாதானமாகப் பிரிந்த மசிடோனியக் குடியரசில்தான் நேட்டோ படைகள் தமது முதலாவது தளத்தை அமைத்தன என்ற முரண்நகையான உண்மையை அதற்கு நிரூபணமாகக் குறிப்பிடுகின்றார். காரணம்: எண்ணை வள அஸர்பைஜான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து மேற்கு ஐரோப்பா நோக்கிய எண்ணைக் குழாய்களை நிர்மாணிக்கும் வருங்காலத்திட்டங்களை மனதில் வைத்தே கொசோவோ பிரச்சினையில் அமெரிக்க-மேற்கைரோப்பிய நாடுகள் தலையிட்டன. பல்லின மக்கள் வாழும் முன்னாள் யூகோஸ்லாவியா உள்ளடங்கிய பால்கன் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பின. இராணுவத்த தலையீடுகளின் பின்னால் பொருளாhர நலன்கள் மறைந்திருப்பதாக அந்த எழுத்தாளர் மேலும் கூறுகிறார்.

கொசோவோவில் நேட்டோப்படைகள் தங்கியிருப்பதன்உண்மையான நோக்கம் அங்குள்ள மக்களுக்கு நாளை தெரியவரும்போது அவர்களின் எதிர்விளைவு என்னவாகவிருக்கும் ? நேற்று நேட்டோப் படையினரை விடுதலை செய்ய வந்ததாகப் பார்த்தவர்கள் நாளை ஆக்கிரமிப்பாளர்களாகப் பார்ப்பார்களா ? இன்று சுதந்திர நாடாகியிருக்கும் கொசோவோவிலிருந்து நேட்டோப் படைகள் விலத்திக் கொள்ளப் பட்டால் என்ன ஆகும்? இன்றை வரையில் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாத செர்பியா, கொசோவோ மீது படையெடுக்குமா?

இதைவிட சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் சில தொக்கி நிற்கின்றன. கொசோவோவின் உதாரணத்தை பின்பற்றி ரஷ்யா அப்காசியா, ஒசேத்தியா போன்ற புதிய தேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. ஈழத்தேசியவாதிகள் கொசோவோ வழியில் தமிழீழத்தை அங்கீகரிக்க கோரினார்கள். அவற்றை எல்லாம் ஏன் நேட்டோ நாடுகள் புறக்கணித்தன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்று தான். மேற்கத்திய நாடுகளின் தன்னலம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை. கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டு, மேற்கத்திய நாடுகள் தலையிடவில்லை.

ஐரோப்பாக் கண்டத்தில் யாருடைய தலைவிதியையும் தீர்மானிக்கும் வல்லமை தமக்கு உண்டு என, ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய பழைய வல்லரசுகள் நிரூபித்துக் காட்டின. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இயற்கை வளம் மிக மிகக் குறைவு. ஆனால் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதற்கு மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை அன்னை தாராளமாகவே அள்ளிக் கொடுக்கிறாள். ஆனால் அவர்களிடம் பண பலமோ, படை பலமோ கிடையாது. அந்த நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களை கைக்கூலிகளாக்கிக் கொண்டால் போதும். மேற்கத்திய தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், எரிபொருள் என்பனவற்றை குறைந்த விலை கொடுத்து சுரண்டிக் கொண்டிருக்கலாம்.

Monday, April 26, 2010

நெதர்லாந்தில் அணுவாயுத அபாயம்!

இன்று சர்வதேச கவனம் முழுவதும் ஈரானின் அணுவாயுதங்கள் மீது திரும்பியிருக்கிறது. அதே நேரம் சமாதானம் பேசும் மேற்குலக நாடுகள் சில அணுவாயுதங்களை நிறுத்தி வைத்துள்ளன. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நெதர்லாந்தில் Volkel என்னும் இடத்தில் அணுவாயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. அங்கே எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன, அவற்றின் தாக்குதிறன் என்ன, என்பன எல்லாம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப் படுகின்றன. சில நூறு சமாதான ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டத்தால், இந்த விவகாரம் நெதர்லாந்தின் வெகுஜன ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இங்கே நான் இரண்டு வீடியோக்களை இணைத்துள்ளேன். முதலாவது, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினது. இரண்டாவது நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
On the 3rd of April, European action day to ban the bomb, 200 people protested against the nuclear weapons at the military base in Volkel, the Netherlands. With shopping trolleys they came to dismantle the base. Dutch spoken with english subtitles.


sitestat

வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசராக ஒரு பெண் தெரிவாவது இன்று வரை நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் யோஹானா என்ற பெண் பாப்பரசி வத்திக்கானின் தலைவியாக பதவி வகித்துள்ளார். கி.பி. 855 ம் ஆண்டளவில், பாப்பரசரர் லியோ IV ன் மறைவுக்குப் பின்னர் ஒரு பெண் தெரிவானாரா? வரலாற்று ஆவணங்களில் காணப்படாத இந்த மர்மக்கதை பற்றி இதுவரை பல ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மையில் அது திரைப்படமாகவும் (ஜெர்மன் மொழியில்) தயாரிக்கப் பட்டது. தற்போது ஐரோப்பிய திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.பெண் பாப்பரசர் கருதுகோளை ஆதரிப்பவர்கள், அதற்கான சான்றுகளை வத்திக்கான் அழித்து விட்டதாக வாதிடுகின்றனர். டேன் பிரவுன் போல பலர் வத்திகானை வைத்து விறுவிறுப்பான புனைகதைகளை எழுதி வருவதாக வேறு சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதே வேளை, இந்தக் கதை வேறொரு தளத்தில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. "வத்திக்கான் தனது இரண்டாயிரம் ஆண்டு கால, பழமைவாத கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள வேண்டும். இப்போதாவது ஒரு பெண்ணை பாப்பரசராக தெரிவு செய்ய முன்வர வேண்டும்."

பெண் பாப்பரசர் பற்றிய நூலை இணையத்திலும் வாசிக்கலாம்:
THE FEMALE POPE: THE MYSTERY OF POPE JOAN

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் குறித்த அலசல்:
sitestat

தற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்?

லையகம் வாசகர்களின் கேள்விக்கு எனது பதில்கள் கீழே. இந்தப் பகுதி வழக்கமான கேள்வி - பதில் போலன்றி விவாத மேடையாக மாறியுள்ளதை அவதானிக்கலாம். வாசகர்கள் தொடர்ந்து கேள்விகளை அனுப்பி வைக்கலாம். மீண்டும் வானத்தின் கீழே உள்ள அனைத்தையும் பற்றி விவாதிப்போம். நன்றி. - கலையரசன்
************************************************************

கேள்வி : வணக்கம் கலைஅரசன்!
உணமையில் தற்கொலை தாக்குதல் முறையை உலகிற்கு முதன்முதலில அறிமுகப்படுத்தியவர்கள் யார்?. இஸ்புல்லா தேசம் கட்டுரையை படித்தவுடன் சிறு சந்தேகம். தெளிவுபடுத்தவும். (பிரகாஷ்)

பதில்: தற்கொலைத் தாக்குதல்களை இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "இஸ்மாயில்" என்ற இஸ்லாமிய மதப்பிரிவினர் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் தற்கொலைக் கொலையாளி, பொது இடத்தில் காத்திருந்து அரசியல் தலைவரை கொலை செய்வான். அந்த இடத்திலேயே அகப்பட்டு மடிவான். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானிய, ரஷ்ய படைவீரர்கள் எதிரியின் நிலைக்குள் சென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். நவீன பாணி(எமக்கு அறிமுகமான) தற்கொலைத் தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் படையினர். ஈரான்-இராக் போரின் போது ஒரு தற்கொலைப் படையே களமிறக்கப்பட்டது. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து புலிகளும் நவீன தற்கொலைத் தாக்குதல் உத்திகளை கற்றுக் கொண்டார்கள்.

கேள்வி: நிராஜ் டேவிட் தயாரித்து வழங்கும் ஜிடிவியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளீர்களா? இந்தியாவின் இலங்கை தமிழர்கள் பால் உள்ள கரிசனத்தை பற்றி விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. கேட்கும் போதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவின் கொடூர அணுகுமுறை பற்றி யுடியூப் தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். (பிரகாஷ்)

பதில்: நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை அறிந்திருக்கவில்லை. நேபாளம் முதல் ஈழத்தமிழர் வரை இந்தியாவின் கரிசனமும், அணுகுமுறையும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன. தமிழ் தேசியத்தின் அபிலாஷைகள் இந்திய சாம்ராஜ்யத்தின் வழியை தடை செய்கின்றன. இந்தியா எழுபதுகளில் லட்சக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசுக்கு உதவியதைப் பற்றி அறிந்திருக்கவில்லையா?
மேலாதிக்க எண்ணம் கொண்ட பிராந்திய வல்லரசின் சுயரூபம் தமிழருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தி தான் தெரிய வந்ததா? இந்தியா தாய்நாடு என்று நம்பியிருந்த தமிழர் சிலருக்கு கிடைத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது.

கேள்வி:
கடந்தகால,நிகழ்கால அரசியல் நகர்வுகள் பற்றி அறியும் பொழுது இயல்பாகவே சில சந்தேகங்கள் தோன்றுவதுண்டு. அந்த வகையில் இலங்கையில் இந்திய தலையீடுகள் பற்றி அறிந்துகொண்டிருந்த பொழுதுகளில்! பொதுவாகவே இந்தியாவின் இலங்கை தலையீடு என்பது அதன் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்ததாகவே இருந்துள்ளது. தமிழர் பிரச்சினை அதற்கு ஓர் துருப்புச்சீட்டு என்பது தெளிவான உண்மை. அப்படி இருக்கையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் தான் இந்திய புலிகள் முரண்பாடு தோன்றியதாக கூறப்படுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கமுடியும். ராஜீவை படுகொலை செய்திருக்காவிட்டலுமே ஏதேனும் ஒரு வழியில் இந்திய புலிகள் முரண்பாடு தொடரத்தான் செய்திருக்குமே என நான் சந்தேகப்படுகின்றேன். உங்களுடைய விளக்கமும் வேண்டுகின்றேன். ஒரு பக்கம் போராளி குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கிக்கொண்டே மறுபக்கம தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தமிழர் பிரதேசங்களில் இந்திய படை கஞ்சா பயிரிட்ட கதையொன்றை அறிந்திருந்தேன். (பிரகாஷ்)

பதில்: எல்லோரும் தனது நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர். அதிலே இந்திய மத்திய அரசு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கொலையை இந்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னர், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அரசியல் அடக்குமுறையாக மாற்றியது. இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது, தனது நன்மை கருதியே. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே அதன் நோக்கம். இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அந்த தேவை இருக்கவில்லை. இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. பங்களாதேஷை சேர்ந்த முக்திவாகினி, திபெத்தை சேர்ந்த தலாய்லாமா கோஷ்டி, பாகிஸ்தானை சேர்ந்த பலுசிஸ்தான் விடுதலைப் படை, இவை எல்லாவற்றுக்கும் இந்தியா ஆயுதமும், பயிற்சியும் வழங்கியது. கிழக்கு மாகான காட்டுப்பகுதிகளில் கஞ்சா பயிர்செய்கை இருந்தது மட்டும் உண்மை. இதற்கும் இந்தியப் படைக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இல்லை.

கேள்வி :இலங்கை அரசியலில் ஆரம்பமாகியுள்ள புதிய நாடகத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான சரத்தை மகிந்த உள்ளே தள்ளியிருக்கிறார். பதிலுக்கு உலகத்தமிழர் பேரவையினரை பிரித்தானிய அமைச்சரும் பிரதமரும் சந்திக்கின்றார்கள். இந்த நாடகங்களின் முடிவுகள் எப்படி முடியும்? இதன் அலைகள் இந்திய சீன உபகண்டத்தில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துமா? (பிரகாஷ்)

பதில்: சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது என நம்பினார். ஆனால் மகிந்தா வென்ற உடனேயே அமெரிக்கா கட்சி மாறி விட்டது. மேற்குலகம் விதிக்கும் நிபந்தனைகளை மகிந்தா ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா என்பதை மட்டுமே அவதானிக்கிறார்கள். (தற்போது மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரம் உதட்டளவில் மட்டுமே உள்ளது.) அமெரிக்கா எப்போதும் தனது நலன்களை பற்றி மட்டுமே சிந்திப்பது வழக்கம். கடந்த காலங்களில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர்களை செல்லப் பிள்ளைகளாக வைத்திருந்து விட்டு பின்னர் தேவை முடிந்தவுடன் கைகழுவி விட்டிருக்கிறது. உலகத் தமிழ்ப் பேரவையுடனான சந்திப்பும் பிரிட்டனின் சொந்த அரசியல் நலன் சார்ந்தது தான். அனைத்து வல்லரசுகளும் இலங்கையில் தமது செல்வாக்கை தக்க வைக்க பார்க்கின்றன. இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பது ஒரு காரணம். அதற்கப்பால், எரிபொருள் இல்லாத படியால் மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நடுவில் பொருளாதார போட்டி நிலவுகின்றது. ஆனால் அது இன்னும் பகை முரணாக மாறவில்லை.

கேள்வி : plz list out most dominate ten companys in this world & what about their future activity to sustained their positioned.how its going to affect upcoming countries?(like india,brazil,africa ...)
(Ganesh muthuerullapan.)

பதில் : பல தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது உலகை ஆளுகின்றன. ஷெல், யூனிலேவர், கொக்கோ கோலா, மக்டொனால்ட்ஸ், பிலிப்ஸ், நோக்கியா, சீமன்ஸ், சோனி, மைக்ரோசொப்ட், மான்சாண்டோ போன்றன சில உதாரணங்கள். இவை எமது அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. காலையில் எழுந்தவுடன் சிக்னல் கொண்டு பல் துலக்குகிறோம். நெஸ்கபே குடிக்கிறோம். இவ்வாறு ஆரம்பிக்கும் நமது வாழ்வு பன்னாட்டு கம்பனிகள் விற்கும் பொருட்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எந்தவொரு வளர்ந்து வரும் நாடும் அவை தொடுக்கும் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் ஆண்டு வருமானம், இந்தியாவின் பட்ஜெட்டை விட அதிகம். இதிலிருந்தே அவற்றின் பலத்தை தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி :அன்பு நண்பர் கலையரசன் அவர்களே! நான் ஸ்பெயின் நாட்டில் படித்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக கூற முடியுமா? (செங்கதிரோன்)

பதில் : ஸ்பெயின் ஒரு காலத்தில் ஐரோப்பாவின் பின் தங்கிய நாடாக இருந்தது. மாட்ரிட் நகருக்கு மேலே வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்டிருந்த அதே சமயம், தென் பகுதி புறக்கணிக்கப்பட்டது. ஸ்பெயினின் தென்னக மாகாணங்களை சேர்ந்த மக்கள் வேலை தேடி புலம்பெயர்ந்தார்கள். தொழிற்துறை அபிவிருத்தி எல்லாம் வட பகுதியிலேயே காணப்பட்டன. ஐரோப்பிய யூனியனில் இணைந்த பின்னர் தென் பகுதிக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. குளிர் வலைய வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை சுற்றுலாப் பயணிகளாக செல்ல ஊக்குவிக்கப்பட்டது. இதன் பிறகு தான் அங்கே செல்வச் செழிப்பு ஏற்பட்டது. ஸ்பெயின் மக்களின் கலாச்சாரத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு அதிகம். (இது அண்மையில் தான் மாற்றமடைந்தது.) மத்தியதரைக் கடல் பகுதி மக்களுக்கே உரிய பொதுவான கலாச்சாரமும் காணப்படுகிறது. குறிப்பாக உறவினர், நண்பர்களுடன் நெருக்கம் அதிகம். பண்டிகைக் காலங்களில் தாராளமாக பணம் செலவழிப்பார்கள். இது வட ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

கேள்வி :மூன்றுலக் கோட்பாடு குறித்த தங்கள் கருத்துக்கள் என்ன? மாவோ முன்வைத்தாரா, இல்லையா எனும் சர்ச்சை, அதன் இன்றையப் பொருத்தப்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க நூல்கள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். (போராட்டம்)

பதில் : பனிப்போர் காலத்தில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டமைப்பு இருந்தது. மறு பக்கம் ரஷ்யா தலைமையிலான ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பு இருந்தது. இவற்றிற்கு மாற்றீடாக மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பு பற்றி வலியுறுத்தப் பட்டது. இதற்கு மாவோ சித்தாந்த விளக்கங்கள் கொடுத்திருந்தார். அவை பின்னர் காலாவதியாகி விட்டன. நேரு, டிட்டோ போன்றவர்களும் அணிசேராக் கொள்கையை வலியுறுத்தினார்கள். அந்தக் கூட்டமைப்பில் இருந்த நாடுகளும் மறைமுகமாக ஏதோ ஒரு அணியில் இருந்தன. மூன்றாம் உலக நாடுகளின் ஐக்கியம் பற்றி சேகுவேரா கூட பல மேடைகளில் பேசியுள்ளார். இன்று வெனிசுவேலா, ஈரான் ஆகிய நாடுகளும் கிட்டத்தட்ட அது போன்ற தெரிவைக் கொண்டுள்ளன. வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபடுவது அவர்களின் முதன்மையான நோக்கம். இன்று அமெரிக்காவின் பிடி தளர்ந்து வரும் நிலையில் அவர்களது கனவு பலிக்கலாம். என்றைக்கு டாலர் இல்லாமற் போகின்றதோ, அன்றைக்கு மூன்றல்ல, நான்கைந்து உலகங்கள் தோன்றலாம்.

கேள்வி : தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் அமர்க்களப்படுகின்றதே தாய்லாந்து? அங்கு என்ன தான் நடக்கின்றது ? (பிரகாஷ்)

பதில் : தாய்லாந்தில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முன்னெப்போதையும் விட சமூகம் பிளவு பட்டுக் கிடக்கிறது. வசதி படைத்த நடுத்தர வர்க்க மக்கள் ஆளும் (ஆளுவதற்கு நியமிக்கப்பட்ட) கட்சியையும், வசதியற்ற ஏழைகள் முன்னாள் பிரதமரின் கட்சியையும் ஆதரிக்கின்றனர். நாட்டை விட்டு விரட்டப்பட்ட முன்னால் பிரதமர் ஒரு சோஷலிஸ்ட் அல்ல. ஆனால் அவர் கொண்டு வர விரும்பிய மிதமான பொருளாதார சீர்திருத்தங்களே அவர் பதவி இழக்க காரணங்கள். பொதுவாக நாட்டுப்புற ஏழை மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கிறது. தாய்லாந்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருவதன் அடையாளம்.

Sunday, April 25, 2010

கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்

தற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்கும் போது கண் கலங்குகிறார். ஐம்பதுகளின் பிற்பகுதி, நெதர்லாந்தில் Eindhoven என்னுமிடத்தில் அமைத்துள்ளது "எமதருமை மாதா" மருத்துவமனை. அங்கு தாதி பயிற்சிக்காக தங்கியிருந்த பெட்ராவுக்கு அந்த இடம் நரகமாகப் பட்டது.

பருவ வயது சிறுமியாக இருந்த காலங்களில், சகோதரி யோஹனேட்டி என்ற தலைமைக் கன்னியாஸ்திரியை பார்த்து அதிகம் அஞ்சி நடுங்கினார். "நடுச் சாமம், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து, அந்த கன்னியாஸ்திரி எமது படுக்கையறைக்குள் நுழைவார். ஆண்களின் பூட்ஸ் போன்ற பாதணியின் சத்தத்தில் இருந்தே அவர் வருவதை அறிந்து கொள்வோம். கையில் வைத்திருக்கும் டார்ச் லைட் வெளிச்சத்தில் எனது படுக்கையை கண்டுபிடித்த பின்னர், திரைச் சீலைகளை இழுத்து விடுவார். அதன் பிறகு எனது அந்தரங்க உறுப்புகளை காம இச்சையுடன் தடவிக் கொடுத்து விட்டு செல்வார்."

தற்போது ஒரு பத்திரிகையாளராக பணிபுரியும் பெட்ரா, அந்தக் கன்னியாஸ்திரியின் அத்துமீறல்களுக்காக நஷ்டஈடு கோரவில்லை. குறைந்த பட்சம் தனது வாழ்க்கையை பாழ்படுத்தவில்லை என்பதில் திருப்தி கொள்கிறார். ஐம்பதுகளில் பெட்ரா தங்கியிருந்த மருத்துவமனை, "கருணைச் சகோதரிகள்" என்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குழுவினால் நிர்வகிக்கப்பட்டது. இந்த அமைப்பு நெதர்லாந்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ஒரு டசினுக்கும் அதிகமான மருத்துவமனைகளையும், அநாதை மடங்களையும் நடத்தி வந்தது.

பெட்ராவின் கதைக்கு மாறாக, (பெயர் குறிப்பிடாத) இன்னொரு யுவதிக்கு நேர்ந்த கொடுமை, அவரது எதிர்கால வாழ்வையே பாதித்தது. Heerlen என்னுமிடத்தில் உள்ள தாதியர் பாடசாலையில் கல்வி கற்ற 16 வயது நங்கை ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இது. ஆசியையான கன்னியாஸ்திரி ஒருவர், அந்த அழகான யுவதியை தன்னுடன் ஓரினச் சேர்க்கை பாலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். எட்டு மாதங்களாக தொடர்ந்த ரகசிய பாலுறவு விவகாரம் இறுதியில் அனைவருக்கும் தெரிய வந்தது. பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுமியை உடனடியாக வெளியேற்றியது. "நன்னடத்தை" காரணமாக பாதியில் கல்வியை இழந்த சிறுமியின், எதிர்காலமே அதனால் பாதிக்கப்பட்டது. அதே நேரம் அவரை துஷ்பிரயோகம் செய்த காமவெறி கொண்ட கன்னியாஸ்திரி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.

கத்தோலிக்க மடங்களில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, இதுவரையும் ஆண் பாதிரியார்களே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தனர். நெதர்லாந்தின் முன்னணி பத்திரிகையான "NRC Handelsblad " செய்த ஆய்வின் பிரகாரம், கன்னியாஸ்திரிகளும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உண்மைகள் வெளிவந்துள்ளன. 29 பெண்களின் வாக்குமூலங்களை அந்த நாளேடு பதிவு செய்து வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் 19 பேர் கன்னியாஸ்திரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். கன்னியர் மடங்களால் நிர்வகிக்கப்பட்ட பெரும்பாலான சிறுவர் இல்லங்களில், கிறிஸ்தவ மதம் போதிக்கும் கருணையும், அன்பும் காணாமல் போயிருந்தன. கொடுமையான அடக்குமுறைகளும், இரக்கமற்ற தண்டனைகளும் சிறுவர்களை பயந்து ஒடுங்கி வாழ வைத்தன. சிறுவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்வுறும் கன்னியாஸ்திரிகளுக்கும் குறைவில்லை.

1940 லிருந்து 1945 வரை, நெதர்லாந்து நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. Sittard எனுமிடத்தில் இருந்த "Kollenberg அனாதைகள் மடம்" நாசிச ஆதரவு கன்னியாஸ்திரிகளால் நிர்வகிக்கப்பட்டது. மடத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் நாசிச கொள்கையை பிரதிபலித்தன. குறிப்பாக படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அன்று பாதிக்கப்பட்ட பென் யாஸ்பரின் வாக்குமூலத்தில் இருந்து சில வரிகள். "நித்திரையில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவர்களின் காதுகளை பலமாக முறுக்குவார்கள். சதையை பிய்ப்பது போல கிள்ளுவார்கள். மைதானத்தில் நிர்வாணமாக நிறுத்தி வைத்து, ஈரமான உள்ளங்கியை தலையில் போட்டு விடுவார்கள். அங்கே நாம் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறுநீர் கழித்து விடுவேனோ என்ற அச்சத்தில் நான் சில நாட்கள் உறங்கவேயில்லை."

பென் யாஸ்பர், அநாதை மடத்தில் தன்னோடு தங்கியிருந்த ஐந்து வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகளையும் விவரித்தார். மதிய உணவுக்கு கொடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு களியை உண்ணாமல் அந்த சிறுவன் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு கன்னியாஸ்திரி அந்த சிறுவனின் தலையை அமுக்கிப் பிடித்திருந்தார். இன்னொரு கன்னியாஸ்திரி பலவந்தமாக உணவை வாய்க்குள் திணித்தார். விழுங்க முடியாத சிறுவன் வாந்தியெடுத்தான். அப்படியிருந்தும் வெளியே வந்த வாந்தியையும் எடுத்து சாப்பிட வைத்தார்கள். அந்த சம்பவத்தை நினைத்து பல நாட்கள் அழுதிருப்பதாகவும், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகள், ஐம்பது நாட்களுக்கு முன்பு கண்டது போல நினைவில் இருப்பதாகவும், பென் யாஸ்பர் தெரிவித்தார்.

(நன்றி: NRC Handelsblad , 23 April 2010)

மேலதிக தகவல்களுக்கு இதையும் வாசிக்கவும்: Nuns abused hundreds of children
**************************
இது தொடர்பான முன்னைய பதிவு:
கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!

Thursday, April 22, 2010

புரட்சியாளர் கட்டுப்பாட்டில் கிரேக்க தொலைக்காட்சி நிலையம்

(April 14, 2010) கிரீஸ், கிரேட்டா (ஆங்கிலத்தில்: Crete) தீவின் தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றிய இடதுசாரி புரட்சியாளர்கள், சில மணிநேரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். "Creta TV " கலையகத்தில் மாலைச் செய்தி வாசித்துக் கொண்டிருந்த அறிவிப்பாளர், அழையா விருந்தாளிகளின் வரவால் திகைப்புற்றார். திடுதிப்பென உள்ளே நுழைந்த சுமார் 70 "அனார்கிஸ்ட்கள்" (இடதுசாரிப் பிரிவொன்றை சேர்ந்தவர்கள்) தொலைக்காட்சி நிலையத்தை சில மணி நேரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். அவர்கள் எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை அறிவிப்பாளர் வாசிக்க நேர்ந்தது. நாடு முழுவதும் பல்லாயிரம் மக்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரடி ஒளிபரப்பில், முதலாளித்துவ அரசை கண்டிக்கும் புரட்சியாளர்களின் அறிக்கை வானலைகளில் தவழ்ந்து சென்றது. இங்குள்ள வீடியோவில் அந்த புரட்சிகர செய்தியறிக்கையை பார்வையிடலாம். கிரேக்க மொழியில் அமைந்திருந்தாலும், ஆங்கில உப தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


அதே தினம், கிரேக்க நாட்டின் பல பாகங்களிலும் ஒருங்கிணைந்த போராட்டம் தொடர்ந்தது. பெருமளவு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிரேட்டா தீவின் தலைநகரமான ஹெராக்ளியோனில், ஆளும் கட்சி (PASOK ) அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்டது. அலுவலக மதில் சுவரில் தொங்க விடப்பட்ட ஆளுயர பதாகையில்: "அரசு, மூலதனம், ஊடகம் ஆகியனவையே பயங்கரவாதிகள். புரட்சியாளர்கள் அல்ல." என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருந்தது. மத்திய கிரீசின் பிராந்திய பத்திரிக்கை அலுவலகம் ஒன்று புரட்சியாளர்களினால் கைப்பற்றப் பட்டது. வெளியே தொங்க விடப்பட்ட பதாகையில்: "ஊடகங்களின் ஊடாக போலிஸ் உங்களுடன் பேசுகின்றது." என்று எழுதப் பட்டிருந்தது.

Wednesday, April 21, 2010

மனிதப் பேரழிவில் லாபம் காணும் முதலாளித்துவம்

பொது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவிக்கும் இயற்கைப் பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல்களை, எவ்வாறு முதலாளித்துவம் தனது லாபவெறிக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றது? பிரபல சமூக ஆர்வலர் Naomi Klein எழுதிய The Shock Doctrine நூலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட விவரணச் சித்திரம். உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் காண்பிக்கப்படவுள்ளது.
The Shock Doctrine is the gripping story of how America’s “free market” policies have come to dominate the world-- through the exploitation of disaster-shocked people and countries.The Shock Doctrine
Geüpload door moviestune. - Het hele seizoen en gehele afleveringen online.

Monday, April 12, 2010

வேலை பறிபோகிறதா? முதலாளியை கடத்துங்கள்!

தொழிலகத்தை மூட நினைக்கும் முதலாளியைக் கடத்தி பணயக் கைதியாக வைத்திருப்பது, அண்மைக் காலமாக பிரான்ஸ் நாட்டின் புதிய நாகரீகமாகி விட்டது. "உலக பொருளாதார நெருக்கடி காரணமாக திவாலாகிறது," என்று காரணம் கூறி பல தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு நடுத்தெருவுக்கு வருகின்றனர். அவ்வாறு மூடப்படும் நிறுவனங்கள், தொழிலாளருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு போதுமான நஷ்டஈட்டுத் தொகை தர வேண்டும். ஆனால் நிர்வாகம் அதைக் கூட தராமல் ஓடி விட நினைக்கின்றது. வேலை பறிபோனதால் சீற்றமடைந்த தொழிலாளர்கள், தமக்கான நஷ்டஈட்டை போராடித் தான் பெற வேண்டியுள்ளது.

பிரான்சில் திவாலான சில நிறுவனங்களின் தொழிலாளர்கள், முதலாளிகளை கடத்தி தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றனர். பிரான்சின் முன்னணி நிறுவனங்களான Molex, Sony, 3M, Hewlett-Packard தொழிலகங்களில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பல நாட்களாக பணயக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அடுத்து வரும் வேலையில்லாத வருடத்திற்கு கொடுப்பனவு வழங்குவதாக உறுதி அளித்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். ஜெர்மனியை சேர்ந்த வளர்ந்து வரும் இடதுசாரிக் கட்சித் தலைவர் Oskar Lafontaine, ஜேர்மனிய தொழிலாளர்கள் பிரெஞ்சுத் தொழிலாளரின் உதாரணத்தை பின்பற்றுமாறு கூறியிருந்தார். (WDR வானொலியில் நேர்காணல்) "தொழிலாளர் பிரச்சினைக்கு அரசு தீர்வொன்றைக் காணா விட்டால், அது தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்." என்று அவர் மேலும் எச்சரித்தார். 'Kidnap the boss,' says German left-wing politician

கடந்த ஏப்ரல் 9 ம் திகதி, ஏதென்ஸ் நகரில் உள்ள கூரியர் நிறுவனமான INTERATTICA வின் தொழிலாளர்கள் தமது பிரெஞ்சு தோழர்களின் உதாரணத்தை பின்பற்றி, தமது உரிமைகளை பெற்றுக் கொண்டனர். அன்று தொழிலாளர்களை கூட்டிய நிர்வாகம், நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், வேலை செய்து கொண்டிருந்த 205 தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விட்டதாக அறிவித்தது. உடனடியாக தொழிலாளர்கள் கம்பனி கட்டிடங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். தொழிலகத்தின் வெளியேறும் வழிகள் யாவும் அடைக்கப்பட்டன. தலைமை நிர்வாக அதிகாரிகள் யாவரும் கைதிகளாக அலுவலகத்தினுள் அடைத்து வைக்கப்பட்டனர்.

சிறிய போலிஸ் படை ஒன்று வருவிக்கப் பட்ட போதிலும், அவர்கள் பின்னர் பின்வாங்கி விட்டனர். இரவு ஏழு மணியளவில், தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்க நிர்வாகம் சம்மதித்தது. ஒரு திவாலான கம்பெனி, குறைந்த நேரத்திற்குள் மில்லியன் யூரோ நஷ்டஈட்டுக்கான நிதியை பெற்றுக் கொள்ள முடிந்தது ஆச்சரியமே. நம்புங்கள், அந்த அதிசயம் நடந்தது. அடுத்த மாதம் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பட்ட அளவு தொகைப் பணம் நஷ்டஈடாக கிடைக்கும், என்று நிர்வாகம் எழுத்து மூலம் அறிவித்தது. அனைவருக்கும் ஈட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரையில், தொழிலாளர்கள் தொழிலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

Sunday, April 11, 2010

லண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - தொடரின் இறுதிப் பகுதி)
லண்டன் நகரின் வாகன நெரிசல் அதிகமுள்ள வீதிகளில் ஒன்று. சிக்னல் தரிப்பிடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதற்கெனவே காத்து நின்றது போல, நடைபாதை ஓரமாக இருபது வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் ஓடி வருகின்றனர். அவர்களின் கைகளில் கூர்மையான ஆயுதங்கள். வெறியுடன் பாய்ந்து கார் கதவை திறந்து, உள்ளே இருந்தவனை வெளியே இழுத்துப் போட்டு... "சதக், சதக்"... மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கிடையில் காரில் வந்த இளைஞனின் உயிர் பிரிகிறது. பட்டப் பகலில் நடந்த அந்த கொலைச் சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப்பட்டவனும் தமிழர்கள். லண்டனில் வழக்கமாகிப் போன குழுச் சண்டையின் கோரக் காட்சி அது.

லண்டனில் பிறந்த வெள்ளையர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவர்களின் "மண் பற்று" நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. லண்டன் மாநகரில் தமிழர் அதிகமாக வசிக்கும் பிரதேசமெங்கும் குழுக்கள் காணப்படுகின்றன. "டூட்டிங் குரூப்", "ஈஸ்ட்ஹாம் குரூப்" என்று பல்வேறு ஊர்காவல் படைகள் ரோந்து சுற்றுகின்றன. அந்தந்த ஏரியாக்கள் அவர்கள் கட்டுப்பாட்டில். வேறொரு ஏரியாவை சேர்ந்த குழு வந்து வாலாட்டினால், அவ்வளவுதான். சிறு பொறியே பெரும் மோதலுக்கு வழிவகுத்து விடும். காரணம் எதுவாகவும் இருக்கலாம். "....... நம்மூர் பொண்ணு மேலே கை வைச்சுட்டான், டோய்...?"

பிரிட்டன் எதிர்நோக்கும் முக்கியமான சமூக பிரச்சினைகளில் ஒன்று, இள வயது கிரிமினல் கும்பல்கள், அவர்களுக்கிடையே நடக்கும் கோஷ்டி மோதல்கள். முன்பு வெள்ளையின உழைக்கும் வர்க்க பிள்ளைகளிடையே காணப்பட்ட 'Gang ' கலாச்சாரம், தற்போது பிற இனத்தவர்கள் மத்தியில் பரவியுள்ளது. பெருமளவு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் குடிபெயரத் தொடங்கிய அண்மைய இருபதாண்டுகள் குறிப்பிடத் தக்கவை. இவர்களது முதலாவது தலைமுறை கடின உழைப்பின் மூலம் பணக்காரராகலாம் என நம்பியிருந்தார்கள். வருடக்கணக்காக தினசரி 16 மணிநேரம் உழைத்து, சேமித்து; எதிர்கால வாழ்க்கைக்காக, நிகழ்காலத்தை அழித்துக் கொண்டார்கள். இரண்டாவது தலைமுறையிடம் அந்தளவு பொறுமை இல்லை. வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இன்றே அனுபவிக்க வேண்டும். வருடக்கணக்காக காத்திருக்க முடியாது. அதற்கான குறுக்கு வழிகளை தேடியவர்கள், "Gang கலாச்சாரத்தை" கண்டுபிடித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் லண்டனில் பாகிஸ்தான், சீக்கிய இளைஞர்களின் குழுக்களுக்கு எதிர்வினையாக, தமிழ் குழுக்கள் உருவானதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதாவது தாம் தமிழ் சமூகத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரிதும் அவர்களுக்கு பயப்படுகிறார்கள். அதற்கு பின்வரும் சம்பவம் ஒன்றே போதும். ஒரு தமிழரின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு கார் பெட்ரோல் போட்டுக் கொண்டது. வாகன சாரதியான தமிழ் இளைஞர், கட்டணத்தை செலுத்த கொடுத்த கிரெடிட் கார்ட் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. உடனே பெட்ரோல் நிலைய உரிமையாளர் போலிசுக்கு அறிவிக்க தொலைபேசியை தூக்கினார். அதற்கு சற்றும் பதற்றப்படாமல் அந்த இளைஞர்: "தாராளமாக போலிசுக்கு அறிவிக்கலாம். மாலை வீடு திரும்பும் போது மனைவி, பிள்ளைகள் உயிரோடு இருக்க மாட்டார்கள்!"

லண்டனில் பல அந்நிய நாட்டவர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள், இந்தியர், பாகிஸ்தானியர், வங்காளிகள், துருக்கியர், ஜமைக்கர் இவ்வாறு பல்லின சமூகங்கள் லண்டனை வதிவிடமாக கொண்டுள்ளன. இந்த சமூகங்கள் அனைத்தும் தமக்குள்ளேயே நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றன. இதனால் பல்வேறு குற்றச் செயல்களும் அந்தந்த சமூகங்களுக்குள்ளேயே நடக்கின்றன. அப்படியான தருணங்களில் பெரும்பாலும் வெள்ளயினத்தவரைக் கொண்ட பிரிட்டிஷ் போலிஸ் தலையிடுவதில்லை.

தமிழ் சினிமாவில் வருவது போல, எல்லாம் முடிந்த பிறகு போலிஸ் வந்து குற்றப்பத்திரிகை பதிவு செய்து கொண்டு செல்லும். போலீசைப் பொறுத்த வரை, "இந்த அந்நியர்களே இப்படித்தான். தமக்குள் அடித்துக் கொள்வார்கள்..." என்று பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டவர்களுக்கு போலிஸ் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. அண்மைக்காலமாக பல குற்றவாளிகள் கைது செய்யப் பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது கூட, (கிரெடிட் கார்ட் மோசடியில்) பல வெள்ளையினத்தவர்கள் பாதிக்கப்பட்டதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

வெளிநாட்டவர் செய்யும் குற்றச் செயல்கள் மீதான ஊடகங்களின் பார்வையானது இனவெறியை வளர்க்கப் பயன்படுகின்றது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது. இதனால் பல வெள்ளையினத்தவர்கள் லண்டனை வெளிநாட்டு குற்றவாளிகளின் கூடாரமாக இனங்காணுகின்றனர். ஆங்கிலேய வெள்ளையர்கள், மொத்த லண்டன் சனத்தொகையில் அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளனர். அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் நகரை விட்டு வெளியேறி வருவதால், அவர்களின் விகிதாசாரம் குறைந்து வருகின்றது. வசதியற்ற வெள்ளையர்கள் கூட, ஓய்வூதியம் பெறும் வயதிலாவது, சைப்ரஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வீடு வாங்கிக் குடியேறுகின்றனர். எங்காவது "கருப்பன் இல்லாத நாட்டில்" சென்று வாழ்வது அவர்களது குறிகோளாக உள்ளது.

இங்கிலாந்தில் 19 ம் நூற்றாண்டிலேயே சில கறுப்பினத்தவர்கள் வந்து குடியேறியுள்ளனர். பிரிட்டனின் காலனியாக இருந்த கரிபியன் தீவுகளில் இருந்தே அவர்கள் வந்திருந்தனர். காலனிகளுக்கான கப்பல் போக்குவரத்து இடம்பெற்ற லிவர்பூல் போன்ற துறைமுக நகரங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெருமளவு கறுப்பினத்தவர்கள் லண்டனை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுப்பது கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில், வீடு வாடைக்கு விடுவதாக விளம்பரம் செய்தவர்கள், "கறுப்பர்களுக்கு கிடையாது" என்று குறிப்பிடத் தவறவில்லை.

சரித்திர காலம் தொட்டு இங்கிலாந்து ஒரு குடியேற்ற நாடாக திகழ்ந்துள்ளது. ஆங்கிலேயரின் முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்தும், நோர்வேயில் இருந்தும் வந்து குடியேறியவர்கள். அரச குடும்பத்தினர் பிரான்சில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனால் ஆங்கில மொழியும், இம் மூன்று மொழிகளினதும் கூட்டுக் கலவையாக உள்ளது. அப்படி இருக்கையில் தாமே பிரிட்டனுக்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடுவதும், குறிப்பிட்ட சமூகங்களை அந்நியர்கள் என்று வகைப் படுத்துவதும் விசித்திரமானது. ஐரோப்பிய நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை பிரிட்டனையும் வாட்டுகின்றது. நிற அடிப்படையிலான, இனவிகிதாசாரம் மாறுபடுமே என்ற அச்சம் ஒரு காரணம். கணிசமான வரியை செலுத்திக் கொண்டிருக்கும் (வெளிநாட்டு) உழைக்கும் வர்க்கத்தின் விழிப்புணர்வை மழுங்கடிப்பது இன்னொரு காரணம். இதனால் அரசு ஒரு பக்கம் அவர்களை நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறது. மறுபக்கம் அவர்களின் மீது "குற்றப் பரம்பரை" முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கிறது.

(முற்றும்)