Wednesday, December 31, 2014

தமிழ் தேசிய தொலைக்காட்சியில் முதல் தடவையாக ராஜபக்சேவின் பேட்டி!


தமிழ்நாட்டில் "ஈழ ஆதரவு அரசியல்" செய்யும், "தமிழ் தேசியவாதிகள்" பலருக்கு, இலங்கை அரசியல் நிலவரம் சுத்தமாகப் புரிவதில்லை. பிள்ளையார் பிடிப்பதாக நினைத்து, குரங்குப் பொம்மைகள் செய்து கொண்டிருப்பார்கள். "தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் தடவையாக..." என்று முன்பெல்லாம் சினிமாப் படத்திற்கு விளம்பரம் செய்வார்கள். "தமிழ் தேசியவாத தொலைக்காட்சியான" தந்தி டி.வி., முதல் தடவையாக மகிந்த ராஜபக்சவின் பேட்டியை ஒளிபரப்பி உள்ளது.

அது ஒன்றும் ஊடக தர்மத்திற்கு முரணான விடயம் அல்ல. தந்தி டி.வி. கூட விளம்பரதாரர்களின் வருமானத்தை நம்பி இருக்கும் வணிக ஊடகம் தான். (வணிக நலன் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானதும் அல்ல.) ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு நேர்காணல் ஒளிபரப்பப் பட்டது தான் எங்கோ உதைக்கிறது.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக திருப்பதி சென்றிருந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வைகோ குழுவினர், தற்போதும் தந்தி டி.வி.க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பல "தமிழ் உணர்வாளர்கள்" கொந்தளித்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைத் தான்... இதையே தான் ராஜபக்சவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. அதே மாதிரி, சிங்களப் பெரும்பான்மை கட்சிகள், புலிகள் இருந்த காலத்தில் அதைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தன. தற்போது புலிகள் அழிந்த பின்னாலும், தமது பிழைப்பு அரசியலை தொடர்கின்றன.

ராஜபக்ச அரசு புலிகளை வளர்த்து வருகின்றது என்று, மைத்திரிக்கு ஆதரவான எதிர்க்கட்சி அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கேபி, கருணா, நகுலன் போன்ற முன்னாள் புலித் தலைவர்கள் ராஜபக்ச அரசில் இருக்கிறார்கள். மைத்திரி ஆட்சி வந்த பின்னர் எல்லாப் புலிகளும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறி வருகின்றனர். 

நாடுகடந்த தமிழீழ அரசும் ராஜபக்ச ஆதரவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறதாம். மேலும் வெளிநாடுகளில் இருக்கும் புலிகளுக்கு நிதி வழங்குவது புலம்பெயர்ந்த தமிழர்கள் இல்லையாம். அவர்களுக்கும் ராஜபக்ச அரசு தான் நிதி வழங்கி வருகின்றதாம். மேற்படி தகவல்களை, எதிரணியில் இருக்கும் ஜாதிக சிஹல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

"ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள்." என்று தமிழகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதே மாதிரி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்வதாகவும், அவர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிப்பவர்கள்..." என்றும் பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

மைத்திரியை ஆதரிக்கும் எதிரணியினரின் ஊடகங்களில், ராஜபக்ச திருப்பதி சென்ற படம் அடிக்கடி பிரசுரமாகின்றது. தற்போது தந்தி டி.வி. நேர்காணலையும் எதிரணியினரே அதிகளவில் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், ராஜபக்ச, புலிகள் கூட்டணி பற்றிய கதைகளுக்கு "ஆதாரம்" காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விபரம் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா?


மேலதிக தகவல்களுக்கு:
Sirisena to arrest all LTTEers; http://www.ceylontoday.lk/51-81040-news-detail-sirisena-to-arrest-all-ltteers.html
I’ll get more votes from North at this election - Mahinda Rajapaksa in an interview with Tamil Nadu TV station Thanthi TV; http://www.dailymirror.lk/60015/video-i-ll-get-more-votes-from-north-at-this-election-mr
Last days of the Raj?; http://www.economist.com/news/leaders/21637389-encouragingly-mahinda-rajapaksa-faces-real-battle-win-re-election-president-better

Tuesday, December 30, 2014

ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி


ருமேனியா நாட்டின் கடைசி கம்யூனிஸ்ட் தலைவர் நிகோலா ஸௌசெஸ்கு, ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 december 1989) அவரது துணைவியார் எலேனாவுடன் படுகொலை செய்யப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே அது இடம்பெற்றது. அமெரிக்காவினால் ஆதரிக்கப் பட்ட சதிப்புரட்சியாளர்கள், வெளிப்படையான நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொன்றனர்.

ருமேனியாவில் நடந்த இராணுவ சதிப்புரட்சியானது, மேற்குலகில் "கம்யூனிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி" போன்று திரிபு படுத்தப் பட்டது. அன்றைய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சின் உயர் அதிகாரியாக பதவி வகித்து வந்த Mircea Răceanu, ஒரு CIA உளவாளி என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அவரைப் போன்று சில இராணுவ அதிகாரிகளும் CIA க்காக உளவு பார்த்துள்ளனர்.

நிகோலா ஸௌசெஸ்குவின் முடிவானது, லிபிய அதிபர் கடாபியின் முடிவை பெருமளவு ஒத்துள்ளது. கடாபி போன்று, நிகோலா ஸௌசெஸ்குவும் மேற்குலகுடன் நட்புறவு கொண்டதன் மூலம், சிறந்த இராஜதந்திரியாக தன்னைக் கருதிக் கொண்டார். பலர் நினைப்பதைப் போன்று, அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒரே மாதிரி இருக்கவில்லை. எல்லா ஆட்சியாளர்களும், சோவியத் யூனியனின் கைப் பொம்மையாக ஆடவில்லை. ருமேனியாவும், யூகோஸ்லேவியாவும் மிகவும் சுதந்திரமாக இயங்கின.

சோவியத் தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைகள், ஹங்கேரி கிளர்ச்சியை அடக்குவதற்காக படையெடுத்த நேரம், நிகோலா ஸௌசெஸ்கு அதனைக் கண்டித்திருந்தார். சோவியத் யூனியனுடன் மட்டுமல்லாது, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அனைத்து உலக வல்லரசுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தார்.

மேற்குலகம் நிகோலா ஸௌசெஸ்குவுக்கு எதிரான சதிப்புரட்சியை நடத்துவதற்கான காரணம் என்ன? முதலாவதாக, நிகோலா ஸௌசெஸ்கு மேற்குலக நாடுகளிடம் வாங்கியிருந்த அந்நிய கடன்கள் ஒரு காரணம். உலகில் எந்த நாட்டு தலைவரும் செய்யாத, செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவர் செய்தார். அந்நிய நாடுகளின் கடன்களை எல்லாம் திருப்பிக் கட்டினார். சதிப்புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ருமேனியா மேற்குலகிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் திருப்பிச் செலுத்தி விட்டிருந்தது.

இரண்டாவதாக, ருமேனியா இராணுவத்திற்குள் தேசியவெறி கொண்ட அதிகாரிகள் சிலர் தலைமையுடன் அதிருப்தி கொண்டிருந்தனர். அதற்கு காரணம், அயல்நாடான ஹங்கேரி தனது படைகளை ருமேனிய எல்லையோரம் நகர்த்தி இருந்தது. அன்றைய காலத்தில், ருமேனியாவும், ஹங்கேரியும் சோஷலிச நாடுகளாகத் தான் இருந்தன. ஆயினும், அவற்றிற்கு இடையில் தீர்த்து வைக்கப் படாத பிராந்தியப் பிரச்சினை ஒன்றிருந்தது.

முதலாம் உலகப்போரில், ஹங்கேரியும், ஆஸ்திரியாவும் ஒரே மன்னராட்சிக்கு கீழே இருந்தன. ருமேனியாவின் மேற்குப் பகுதி பிராந்தியமான Transylvania முதலாம் உலகப்போர் வரையில் ஹங்கேரிக்கு சொந்தமான மாநிலமாக இருந்தது. ஆஸ்திரிய - ஹங்கேரி போரில் தோல்வியடைந்த படியால், மேற்குலகம் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தம் ஒன்றின் பின்னர், Transylvania ருமேனியாவுக்கு தாரை வார்க்கப் பட்டது.

எண்பதுகளின் தொடக்கத்திலேயே ஹங்கேரியில் பல அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன. ஹங்கேரி எழுபதுகளிலேயே அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. மேற்குலக கடன்களை வாங்கி வந்தது. எண்பதுகளின் மத்தியில், சோவியத் அதிபர் கோர்பசேவ் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோவியத் துருப்புக்களை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். அது மேற்குலகிற்கு ஆதரவான ஹங்கேரியின் போலி கம்யூனிச ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

எண்பதுகளின் இறுதியில், ஹங்கேரி ஒரு "சோஷலிச நாடாக" இருந்த போதே, நேட்டோவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. கனடிய விமானப் படையினர், ஹங்கேரி வான் பரப்பில் சில பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும், முன்னைய மன்னராட்சியின் தொடர்ச்சியாக, ஆஸ்திரியாவுடன் இராஜதந்திர உறவுகள் புதுப்பிக்கப் பட்டன. எல்லைப் பாதுகாப்புக் கருவிகள் பழுதடைந்து விட்டதாக ஒரு சாட்டுக் கூறப் பட்டது. (எல்லையில் பொருத்தப்பட்ட சமிக்ஞை கொடுக்கும் மின்னணுக் கருவிகள் பழுதடைந்த நேரம், சோவியத் யூனியன் அவற்றை திருத்திக் கொடுக்கவில்லை.)

ஹங்கேரிய கடவுச் சீட்டுகள் ஆஸ்திரியாவினால் அங்கீகரிக்கப் பட்டன. அதன் மூலம், ஹங்கேரி பிரஜைகள் மேற்கு ஐரோப்பாவுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. "இரும்புத் திரை" அகற்றப் பட்டது. எதிர்பாராவிதமாக, பெருமளவு கிழக்கு ஜெர்மன் மக்கள் ஹங்கேரி ஊடாக மேற்கு ஜெர்மனிக்கு செல்ல அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பெர்லின் மதில் அப்போதே விழுந்து விட்டது.

இந்தப் பின்னணியிலேயே ருமேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது. ஹங்கேரி தனது படைகளை ருமேனிய எல்லை நோக்கி நகர்த்தியதும், அது Transylvania பகுதியை திரும்பவும் கைப்பற்றப் போகின்றது என்ற பதற்றம் ஏற்பட்டது. ஹங்கேரி வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும், ருமேனியாவில் பலர் அப்படி நினைத்துக் கொண்டார்கள். அதே நேரம், Timișoara நகரில் மேற்குலக தூண்டுதலினால் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. ருமேனியாவின் பாரம்பரிய ஜெர்மன் நகரங்களைப் போன்று Timișoara வும், பல்லின மக்களைக் கொண்டது. அங்கு நடந்த இனக்கலவரம் விரைவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக மாற்றப் பட்டது.

நிகோலா ஸௌசெஸ்கு தங்களை ஹங்கேரி இராணுவத்திற்கு எதிராக போரிட அனுப்புவார் என்று, தேசியவாத இராணுவ அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆயினும், Timișoara கலவரத்தை அடக்குவதற்காக படையினர் அனுப்பப் பட்டதும், அதைக் காரணமாகக் கொண்டு, இராணுவ அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டினார்கள். 

தலைநகர் புகாரெஸ்ட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்ட சதிகாரர்கள், மக்களோடு மக்களாக கலந்து நின்று குழப்பம் விளைவித்தனர். அந்த நேரம், அரச மாளிகையின் உப்பரிகையில் நின்றிருந்த நிகோலா ஸௌசெஸ்குவையும், அவரது துணைவி ஏலேனாவையும், மெய்க்காவலர்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை பலர் அறிந்திருப்பார்கள்.

இராணுவ சதிப்புரட்சியாளர்கள், நிகோலா ஸௌசெஸ்கு பயணம் செய்த ஹெலிகாப்டரை தடுத்து, தமது கட்டுபாட்டில் இருந்த முகாம் ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள். நிகோலா ஸௌசெஸ்குவுக்கு விசுவாசமான படையினர் வந்து மீட்டுச் செல்வதற்குள் கதையை முடித்து விட தீர்மானித்தார்கள். அதனால் தான், அவர்களை மக்கள் முன்னால் நீதிமன்றத்தில் நிறுத்தாமல், தாங்களாகவே ஒரு கண்துடைப்பு விசாரணை நடத்தி சுட்டுக் கொன்றார்கள்.

நிகோலா ஸௌசெஸ்கு படுகொலைக்குப் பின்னர் சில வருடங்கள், ருமேனியாவில் இராணுவ ஆட்சி நடந்தது. அப்போது கொலை சம்பந்தமான ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் அழிக்கப் பட்டு விட்டன. ருமேனியாவில் இன்றைக்கும், சோஷலிச கடந்த காலம் பற்றி யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதாவது, சோஷலிசத்தை எதிர்ப்பவர்கள் கூட, நிகோலா ஸௌசெஸ்கு அரசு இன்னென்ன குற்றங்களை செய்தது என்று விசாரணைகளை நடத்துவதை விரும்புவதில்லை. ஏனென்றால், அதை எல்லாம் விசாரிக்கப் போனால், கடைசியாக நடந்த இராணுவ சதிப்புரட்சி பற்றிய உண்மைகளும் வெளிவந்து விடும் என்ற அச்சம் காரணம்.

அன்றைய சதிபுரட்சியில் பங்கெடுத்த குற்றவாளிகள், இன்றைக்கும் அரசாங்கத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கிழக்கு ஐரோப்பாவில் மிகத் தீவிரமான அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இன்று ஹங்கேரி மட்டுமல்லாது, ருமேனியாவும் நேட்டோவில் அங்கத்தவராக சேர்ந்து விட்டது. ருமேனியாவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக, அந்த நாடு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. அதற்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

1.அது கருங்கடலை அண்டிய நாடு. கருங்கடலில் வட கிழக்கில் கிரீமியா உள்ளது. அண்மைய உக்ரைனிய நெருக்கடியின் போது, ரஷ்யா செய்த முதல் வேலை, கிரீமியாவை தன்னோடு சேர்த்துக் கொண்டது தான். இல்லாவிட்டால், அங்கு அமெரிக்கா பாய்ந்து தளம் அமைத்திருக்கும். 

 2. எண்ணை வளம் நிறைந்த அசர்பைஜானில் இருந்து வரும் குழாய் பாதை, ருமேனியா ஊடாகத் தான் ஐரோப்பாவை அடைய வேண்டும். 

 3. பனிப்போர் காலத்தில் ருமேனியாவின் வட கிழக்கு எல்லையில் சோவியத் ஒன்றியம் இருந்தது. இன்று மோல்டாவியா, உக்ரைனுக்கு அப்பால் ரஷ்ய வல்லரசு உள்ளது. ஆயினும், புதிய பனிப்போர் யுகத்தில், ரஷ்யா உக்ரைனிலும், மோல்டாவியாவிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளது. அதாவது, இது ஒரு சதுரங்க ஆட்டம். அமெரிக்கா வருவதற்குள் ரஷ்யா முந்தி விடப் பார்க்கிறது. ரஷ்யா வருவதற்குள், அமெரிக்கா கிழக்கே நேட்டோவை விஸ்தரிக்க பார்க்கின்றது. 

4. ருமேனியா மத்திய கிழக்கு நாடுகளிற்கு அருகில் உள்ளது. அமெரிக்கா மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ருமேனியாவில் உள்ள படைத் தளங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

5. ருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றது. ஆயினும், அமெரிக்காவுக்கு விசுவாசமான அரசாங்கத்தை கொண்டுள்ளது. அதிலென்ன பிரச்சினை? அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பாவுக்கும் (ஐரோப்பிய ஒன்றியம்) இடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வெளியில் யாரும் பேசுவதில்லை. ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளை நம்ப முடியாது. காலை வாரி விட்டு விடுவார்கள் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. அதனால், கிழக்கு ஐரோப்பாவில் சில அடிமை நாடுகளை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் சோஷலிச நாடுகளில், மக்கள் கிளர்ந்தெழுந்து கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்த்தார்கள் என்று தான் வெளியுலகில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அங்கே என்ன நடந்தது என்று யாரும் ஆய்வு செய்வதில்லை. மேற்குலக பிரச்சார சாதனங்கள் சொல்வதை உண்மை என்று நம்புகிறார்கள். உண்மையில், அதற்கு பல காரணங்கள் இருந்துள்ளன. 

அவற்றை சுருக்கமாக சொல்லலாம். மேற்குலகிடம் வாங்கிய கடன்கள் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கின. மேற்குலகுடனான இராஜந்தந்திர உறவுகள் உயர் மட்டத்தில் உளவாளிகளை உருவாக்க வழிவகுத்தன. ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட சர்வதேச அரசியலில் மாற்றங்களை உண்டாக்குவதன் மூலம் உள்நாட்டில் குழப்பங்கள் உருவாக்கப் பட்டன. மேற்குலகிற்கு ஆதரவாக அரசுக்குள் செயற்பட்ட துரோகிகள் இறுதிக்கட்ட திட்டங்களை நிறைவேற்றினார்கள்.


Monday, December 29, 2014

பிரான்ஸ் இனப்படுகொலை : "சுதந்திரம் - சர்வாதிகாரம் - சகோதரப் படுகொலை"

பிரெஞ்சுப் புரட்சியின்
இரத்த சரித்திரம்  (பகுதி - 2)
பிரெஞ்சுப் புரட்சியின் தலைநகரான பாரிசில் இருந்து கிளம்பிய படைகள், எதிர்ப் புரட்சியாளர்களை அடக்கச் சென்றன. புரட்சிக்கு முன்னர், மன்னருக்கு விசுவாசமாக இருந்த படையினரும், படையதிகாரிகளும், தற்போதும் மனம் மாறாமல் இருக்கலாம். ஆகையினால், புரட்சிக்கு விசுவாசமான தளபதிகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டி இருந்தது.
பாரிஸ் புரட்சிகர அரசு நியமித்த புதிய அதிகாரிகள் எல்லோரும், சித்தாந்த ரீதியாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிசப் புரட்சியிலும் அதே தான் நடந்தது. எந்த மாற்றமும் இல்லை. சித்தாந்தம் மட்டுமே வேறு வேறு. ஆனால், இரண்டு புரட்சிகளும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப் பட்டன.

சோவியத் ஒன்றியத்தில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக் கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதைக் "களையெடுப்பு" என்று கூறினார்கள். எதற்காக அவர்கள் கொல்லப் பட்டார்கள்? வர்க்கப் புரட்சியின் எதிரிகள், அல்லது அதற்கு விசுவாசமாக இல்லாதவர்கள். மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, மேல்தட்டு வர்க்க பழக்க வழக்கங்களை பின்பற்றியவர்கள். நிலப்பிரபுத்துவ, முதலாளிய பெருமை பாராட்டியவர்கள்....

இப்படிப் பல காரணங்களுக்காக கொல்லப் பட்டனர். அன்றைய சமூகத்தில், எல்லோரும் சந்தேகத்திற்கு உள்ளானார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டில், ஆயிரக் கணக்கானோருக்கு மரண தண்டனை வழங்கிய உளவுத்துறை அதிகாரிகள் கூட, பின்னர் ஒரு நேரம் அதே குற்றச்சாட்டில் கொல்லப் பட்டனர்.

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக எழுச்சி கொள்வது தான் புரட்சி ஆகும். சாதாரண பொது மக்களே, தங்கள் மத்தியில் இருந்த வர்க்க விரோதிகளை காட்டிக் கொடுத்தார்கள். தண்டனை கொடுத்தார்கள். பிரான்சில் என்ன நடந்ததோ, அதே தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது. எந்த வித்தியாசமும் கிடையாது.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன். ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் நீதிபதியாக வீற்றிருந்தவர், சர்வாதிகாரி ரொபெஸ்பியரின் உற்ற நண்பர். புரட்சிக்கு விசுவாசமானவர், சித்தாந்த தெளிவு பெற்றவர் என்றெல்லாம் நம்பப் பட்டவர். அந்த நகரில், அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களைக் கூட விட்டு வைக்காமல் களையெடுத்தார்கள். புரட்சியின் எதிரிகள் 30 பேருக்கு, கில்லெட்டின் எனும் கத்தியால் கழுத்து வெட்டி தண்டனை வழங்கப் பட்டது.

ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய நீதிபதிக்கும், பின்னர் அதே மரண தண்டனை கிடைத்தது. அவர் செய்த குற்றம் என்ன? நகரத் தெருக்களில், ஆறு குதிரைகள் பூட்டப் பட்ட வண்டியில், படையினர் புடைசூழ பவனி வந்தார். அதிலென்ன தவறு? அந்தக் காலத்தில் அப்படிச் செல்வது, அரச வம்சத்தினரும், பிரபுக்களும் தான்!

ஆகவே தன்னை ஒரு பிரபு மாதிரி பாவனை செய்து கொண்ட நீதிபதிக்கும், புரட்சியின் எதிரி (அல்லது வர்க்க எதிரி) குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை கிடைத்தது. தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? வேறு யாருமல்ல, அவரது உற்ற நண்பன் ரொபெஸ்பியர் தான்.

பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில், நண்பர்கள், குடும்ப உறவுகள் எதுவுமே, அன்றைய புரட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கவில்லை. ஒருவர் புரட்சிக்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா? பிரபுத்துவ வர்க்க சிந்தனை கொண்டவரா அல்லது குடி மக்கள் (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவரா? அது மட்டுமே முக்கியமாகக் கருதப் பட்டது. 

ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் அதே தான் நிலைமை. அந்த நாடுகளில், பூர்ஷுவா (முதலாளிய) வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அது மட்டுமே வித்தியாசம்.

புரட்சி நடக்கும் காலத்தில், ஒரே வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், வர்க்க சிந்தனை கொண்டிருப்பார்கள் என்றும்  எதிர்பார்க்க முடியாது. ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள், கொள்கை வேறுபாடு காரணமாக எதிரெதிர் அணியில் இருக்கலாம்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் நடந்த உள்நாட்டுப் போரில், சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படையில், சாதாரண போர்வீரர்களாக இருந்தவர்களும் விவசாயிகள் அல்லது பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசம், மதப் பற்று போன்றன முக்கியமாகப் பட்டன. அவர்களை ஆதரித்த மக்கள் பிரிவினரும் இருந்தார்கள். செம் படையினரும், வெண் படையினரும் கொள்கை வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும், இரண்டு தரப்பிலும் சாதாரண மக்கள் பெருமளவில் பலியானார்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த  படுகொலைகளை வெறுமனே படையினரின் மிலேச்சத் தனம் என்று ஒதுக்கி விட முடியாது. பலவற்றை திட்டமிட்ட இனப் படுகொலைக்குள் அடக்கலாம். அது தான் ஒரு பூர்ஷுவா புரட்சிக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான வித்தியாசம். அதாவது, பூர்ஷுவா புரட்சி அடிப்படையில் பேரினவாத தன்மை கொண்டது. பிற இன மக்களின் சுதந்திரத்தை  மட்டுமல்ல, உயிர் வாழும் உரிமையையும் மதிப்பதில்லை. அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியானது, எந்த இனமாக இருந்தாலும், குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டுமே எதிரிகளாக கருதியது. போர் முடிந்த பின்னர், எஞ்சிய வர்க்க எதிரிகளை கைது செய்து மனம் மாற்றும் முயற்சியில் இறங்கியது. 

பிரான்சின் மேற்குப் பகுதியில் வண்டே (Vendée) எனும் பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையானோர் சாதாரண விவசாயிகள் தான். உண்மையில் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய வர்க்கத்தினர். ஆனால், அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசமும், மத நம்பிக்கையும் முக்கியமாகப் பட்டது. கத்தோலிக்க மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் ஒரு பெரும் படையை தயார் படுத்தி வைத்திருந்தார்கள். குறைந்தது 65000 போர்வீரர்களை கொண்ட பலமான இராணுவமாக இருந்தது. அவர்கள் செய்த முதல் வேலை, வண்டே பகுதியில் புரட்சிக்கு விசுவாசமான 200 பேரைப் பிடித்துக் கொன்றது தான்.

வண்டே கிளர்ச்சியை அடக்குவதற்காக, பாரிஸ் ஒரு பெரும் படையை அனுப்பியது. புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட, போர்க்கள அனுபவம் அற்ற வீரர்கள், சென்றவுடனே தோல்வியை தழுவிக் கொண்டனர். மேலும், அந்தப் பிரதேசத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், காடுகளில் மறைந்திருந்து போரிட்டார்கள். அதனால் குடியரசுப் படையினர் முன்னேற முடியாமல் பின்வாங்க வேண்டி இருந்தது.

நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, பாரிசில் இருந்து ஒரு புதிய தளபதி வந்தார். அவரும் ரொபெஸ்பியர் மாதிரி, தொழில்முறை வழக்கறிஞர். மன்னரின் மரண சாசனத்தில் கையொப்பம் இட்டவர். அவர் பெயர் ஜான் பாப்டிஸ்ட் கரியேர் (Jean Baptiste Carrier). காடுகளை துப்பரவாக்குவது. கால்நடைகளை கவர்ந்து செல்வது, அறுவடை செய்யப் பட்ட தானியங்களை கொள்ளையடிப்பது. இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.

கரியேரின் வழிகாட்டலினால் உற்சாகமடைந்த குடியரசு படையினர், லெ மொன் எனும் இடத்தில் நடந்த போரில் 15000 கிளர்ச்சியாளர்களை கொன்றார்கள். அந்த வெற்றிக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை சுற்றி வளைத்து, கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பெண்கள், குழந்தைகள் கூட குடியரசு படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

ஆயினும், நிலைமை அத்துடன் சீரடையவில்லை. கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால், வண்டே பிரதேசத்தில் இருந்த அனைவரையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது. சொத்துக்களை கொள்ளையடிக்கவும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், படையினருக்கு அனுமதி வழங்கப் பட்டது.

போரில் அழியாமல் எஞ்சிருந்த கிராமங்களுக்குள் புகுந்து கிராமவாசிகளை படுகொலை செய்தார்கள். கால்நடைகளும் அழிக்கப் பட்டன. வீடுகளை எரித்தார்கள். வயல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. ஒரு கிராமத்தில் ஆண்களைப் பிடித்து வெட்டிக் கொன்று விட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து சிதையில் நெருப்பு மூட்டி எரித்தார்கள். அந்தக் கிராமங்களில் வாழ்ந்த சிலர், புரட்சிக்கு ஆதரவானவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களும் குடியரசுப் படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

கிளர்ச்சி நடந்த இடத்திற்கு அண்மையில் உள்ள நான்த் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில், கைது செய்யப் பட்டோர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அங்கிருந்த கைதிகள் பலதரப் பட்டவர்கள். பிரபுக்கள், மேட்டுக்குடி மக்கள், அவர்களுக்கு வேலை செய்த பணியாளர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் போன்ற "வர்க்க எதிரிகள்" மட்டுமல்லாது, படையினருக்கு உணவு கொடுக்க மறுத்த சாதாரண விவசாயிகள் கூட சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.

இட நெருக்கடி காரணமாக சிறைச்சாலைக்குள் கைதிகள் நிரம்பி வழிந்தனர். அதனால் தொற்று நோய்களும் பரவின. சிறைச்சாலைக்கு பொறுப்பான நீதிபதியாக கரியேர் இருந்தார். ஒவ்வொரு கைதியாக கொண்டு வந்து விசாரிப்பதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை. ஆகவே ஒரு யோசனை சொன்னார். கைதிகளை கொண்டு சென்று, அருகில் உள்ள ஆற்றில் தூக்கிப் போட்டு மூச்சுத் திணறி சாக வைக்க வேண்டும். 


பிரெஞ்சுப் புரட்சியானது மதத்திற்கு எதிராக இருந்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப் பட்டன. கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். கத்தோலிக்க மத விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நான்த் நகரில், கத்தோலிக்க மதகுருக்கள், மிக மோசமாக சித்திரவதை செய்யப் பட்டனர். பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் நிர்வாணமாக்கி, சோடி சோடியாக கட்டி, ஆற்றுக்குள் தூக்கி வீசினார்கள். படையினர் அதனை "குடியரசுத் திருமணம்" என்று கூறி பரிகசித்தார்கள்.

பிரான்சின் கிழக்கே உள்ள லியோன் நகரில் இன்னொரு கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. முன்னர் புரட்சியை ஆதரித்தவர்கள், தமது பிரதேசத்திற்கு கூடுதலான சமஷ்டி அதிகாரங்களை கோரி கிளர்ச்சி செய்தார்கள். பாரிஸ் அரசுக்கு விசுவாசமானவர்களை பிடித்துக் கொன்று விட்டு, தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பாரிஸில் இருந்த பொதுநல கமிட்டி பழிவாங்கப் புறப்பட்டது.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்கு விசுவாசமான கொல்லோத் து புவா (Collot d'Herbois) "துரோகிகளின் பிணங்களை கிழங்குகள் மாதிரி அடுக்கி வைக்கப் போவதாக..." சூளுரைத்தார். "அப்பாவிகளை பாதுகாத்துக் கொண்டிருந்தால், குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்" என்று இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்தார்.

கொல்லோத் து புவாவுடன் பூஷே (Fouché) எனும் இன்னொரு அதிகாரியும் சேர்ந்து கொண்டார். இருவருமாக சேர்ந்து. கிளர்ச்சியை முறியடித்தார்கள். லியோனில் அகப்பட்டவர்கள் எல்லோரையும் பிடித்துக் கொண்டு வந்து, பீரங்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

"அங்கே இரத்தம் ஆறாக ஓடியது. ஆனால் மனித குல விடுதலைக்காக அதைச் செய்தோம்...குற்றவாளிகளின் இரத்தம் எமது சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது." என்று பூஷே தனது செயலை நியாயப் படுத்தினார்.

பாரிஸ் நகரில் இருந்த ரொபெஸ்பியருக்கு, தனது தோழர்கள் அதிக தூரம் செல்வதாகப் பட்டது. ஆகவே, கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய அதிகாரிகளையும், மற்றவர்களையும் பாரிசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தாங்கள் பாரிஸ் சென்றால் என்ன நடக்கும் என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது. ரொபெஸ்பியர் கருணை காட்டாமல் கொன்று விடுவான் என்று அஞ்சினார்கள். அதனால் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள்.

பாரிஸ் நகரில் ஒரு சதிப்புரட்சி நடந்தது. பொதுநல கமிட்டி அங்கத்தவர்களும், ரொபெஸ்பியரும் கைது செய்யப் பட்டனர். புரட்சியின் ஒப்பற்ற தலைவனாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ரொபெஸ்பியர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். 28 ஜூலை, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் ரொபெஸ்பியரின் தலை துண்டிக்கப் பட்டது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்களை புரிந்த கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய மூன்று அதிகாரிகளும், எல்லாவற்றிற்கும் ரொபெஸ்பியர் மீது பழி சுமத்தினார்கள். தாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்று கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் நிம்மதி நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1794 செப்டம்பர், கரியேர் கைது செய்யப் பட்டு, சில மாதங்களுக்குப் பின்னர் சிரச்சேதம் செய்யப் பட்டார். அடுத்த வருடம், கொல்லோத் கயானாவுக்கு நாடுகடத்தப் பட்டார். பூஷே பதவியிறக்கப் பட்டு, சாமானிய மனிதனாக வாழ்ந்து மடிந்தார்.

ரொபெஸ்பியரின் மரணத்திற்குப் பின்னர், பிரான்சில் கொலைகள் பெருமளவு குறைந்து விட்டன. அடுத்து சில வருடங்களில், புரட்சிக்கு தலைமை தாங்க வந்த நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் சமாதானம் நிலவியது. ஆயினும், புரட்சியின் ஆரம்ப காலகட்டமான, 1793, 1794 ஆகிய இரு வருடங்களில் மட்டும், பிரான்சில் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர்.

(முற்றும்)

(பிற்குறிப்பு: பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த இனப்படுகொலை பற்றிய விபரங்கள், Historia (Nr.1/2015) சஞ்சிகையில் பிரசுரமான "Beulen van de revolutie" எனும் கட்டுரையில் இருந்து எடுக்கப் பட்டன.)

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை வாசிப்பதற்கு:

Sunday, December 28, 2014

"கம்யூனிசமும் கத்தரிக்காயும்" : காடு சினிமா ஓர் அறிமுகம்


கத்தி சினிமாப் படத்தில் கம்யூனிசமும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. ஆனால், சமூகவலைத் தளங்களில் அதைச் சுற்றி நடந்த விவாதங்கள், வியாக்கியானங்கள் ஏராளம். அதில் நூறில் ஒரு பங்கு கூட, "காடு" திரைப் படம் பற்றிப் பேசப் படவில்லை. காடு படத்தில், "கத்தரிக்காயை வைத்தே கம்யூனிச விளக்கம்" கொடுக்கப் படுகின்றது. அதைப் பற்றி பேசினால், "கத்தரிக்காய் சாப்பிடும் பொழுதெல்லாம் கம்யூனிசம் நினைப்பு வந்து தொலைக்கும்" என்ற எச்சரிக்கை உணர்வுடன் பலர் தவிர்த்திருக்கலாம்.

வேலு காட்டுக்குள் வாழும் எழுதப் படிக்கத் தெரியாத கதாநாயகன். அவனுக்கு ஒரு படித்த நண்பன் கருணா.வனத்துறை அதிகாரியாக வர விரும்பிய கருணா, வேலை கிடைக்காத காரணத்தினால் சந்தன மரம் கடத்தி அகப்படுகிறான். ஆனால், தனக்குப் பதிலாக வேலுவை பொலிசில் மாட்டி விடுகிறான். அதைத் தொடர்ந்து வேலு வெளியே வர முடியாதவாறு பொய்க் குற்றச்சாட்டுகளை சோடித்து சிறைக்கு அனுப்புகிறான். அதே நேரத்தில், கருணா எதிர்பார்த்த வனத்துறை அதிகாரி வேலை கிடைக்கிறது. சந்தன மரக் கடத்தல்காரர்களுடன் ஒத்துழைப்பதுடன், சூழ்ச்சி செய்து தனது ஊர் மக்களையே வெளியேற்றுகின்றான்.

இதற்கிடையே, செய்யாத குற்றத்திற்காக சிறைக்குள் அடைக்கப்பட்ட வேலுவுக்கு, அரசியல் ஞானோதயம் பிறக்கிறது. புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்காக, சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சமுத்திரக்கனி மூலம் அரசியல் உணர்வு பெறுகிறான். இறுதியில், காடும் காடு சார்ந்த மக்களினதும் அரசியல் உரிமைகள் பற்றிய தெளிவு பெற்ற கதாநாயகன் வேலு, விடுதலையான பின்னர் போராட்டம் நடத்துகிறார்.

இந்தப் படத்தில், கம்யூனிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? போன்ற விடயங்களை, மிகவும் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். உரிமைகளுக்காக சிறைக் கைதிகள் நடத்தும் ஒன்று பட்ட போராட்டம், சிறைச்சாலையும் புரட்சியின் கூடாராம் தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

சிறைக் கைதிகள் சேகுவேரா தனது மகளுக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கிறார்கள். உண்மையில், பல கைதிகள் சிறையில் தான் சேகுவேராவின் பெயரைக் கேள்விப் பட்டிருப்பார்கள். அவர்கள் சேகுவேராவின் புத்தகம் வாசிக்கும் அளவிற்கு அரசியல் அறிவு பெறுகிறார்கள் என்பதை படத்தில் பல காட்சிகளின் ஊடாக காட்டி இருக்கிறார்கள்.

சிறைக்குள் சென்ற கைதிகள் அரசியல் உணர்வு பெறுவது, நிஜத்தில் பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவில் நக்சல்பாரி போராட்டம் நடந்த காலத்தில், சிறைச் சாலைகள் புரட்சியை போதிக்கும் பள்ளிக்கூடங்களாக இருந்தன. இத்தாலியிலும் அதே காலகட்டத்தில் Brigate Rosse (செம்படை) இயக்கம், இதற்காகவே தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்திருந்தது.

காடு படத்தில் வரும் புரட்சியாளர் பற்றிய பின்னணி விபரங்கள் எதுவும் கொடுக்கப் படவில்லை. ஆனால், அவர் பேசும் வசனங்கள் மனதில் தைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சாக்ரடீஸ் மாதிரி, காவலர்களின் அழுத்தம் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் நேரத்திலும், "நீங்கள் வெறும் அம்புகள் தான்... எனது போராட்டம் உங்களுக்கும் சேர்த்து தான்..." என்று கூறும் காட்சி வருகின்றது.

நல்ல உணவு வேண்டுமென்பதற்காக, சிறைக் கைதிகள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுகிறார்கள். இதுவும் உண்மையில் பல நாடுகளில் நடந்துள்ளது. பெரு நாட்டில் நடந்த மாவோயிச ஒளிரும் பாதை கைதிகளின் சிறைச்சாலைப் போராட்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

கம்யூனிசம் பேசுவது, தமிழ் மண்ணுக்கு அந்நியமான விடயம், என்று நினைத்துக் கொண்டிருக்கும் மேட்டுக்குடியினர், காடு படத்தை பார்க்க வேண்டும். காட்டையும், அதன் வளத்தையும் பாதுகாப்பது கம்யூனிசம் என்றால், காட்டை அழிப்பது முதலாளித்துவம் என்று பொருளாகும். காட்டில் வாழும் மக்களின் போராட்டமும் மண் உரிமைப் போராட்டம் தான்.

காடு படத்தில் வரும் சில வசனங்கள்: 
  • “இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் வைச்சது.. உன்னோட குடும்பச் சொத்து.. அதை ஒருத்தன் வெட்டுனா அவனை நீ வெட்டு..”
  • “உலகத்தில் சமாதானம் முன் வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகாரம்தான் ஜெயிச்சிருக்கு.”
  • “உரிமைகளை முழுமையாக பெற ஒரே வழி போராடி பெறுவதுதான். அப்படி பெற்ற உரிமைகள்தான் நீடிச்சு நிலைச்சு நிக்கும்..”

Friday, December 26, 2014

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?

அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை "இனப்படுகொலை" என்ற வரையறைக்குள் அடக்கலாம். எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.

பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ - லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் "ஜனநாயகம்" என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.

பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.

ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.

பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, "கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்" என்று நியாயப் படுத்தினார்கள்.

சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய "சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்" அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

அது என்ன "சுதந்திரத்தின் சர்வாதிகாரம்"? இதைக் கேள்விப்படும் நீங்கள், "சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது" என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 

அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.

நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.

பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக "பொதுநல கமிட்டி" ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே "ஆளும் கட்சியாக" இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.

ஸ்டாலின் காலத்தில், "மக்கள் விரோதிகள்" என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் "துரோகிகள்" அல்லது "மக்கள் விரோதிகள்" என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.

"ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்..." என்பது ரொபெஸ்பியரின் வாதம். "நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்...." இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட "மக்களின் நண்பன்" (L' Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: "துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!"

(தொடரும்)

Thursday, December 25, 2014

தேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்


இன்று (25-12-2014) கிறிஸ்துமஸ் போர்நிறுத்தத்தின் நூறாவது ஆண்டு நினைவு தினம். ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1914 ம் ஆண்டு, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று போர்நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் எந்தளவு தூரம் ஒருவரையொருவர் வெறுக்கும் பகைவர்கள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நூறு வருடங்களுக்கு முந்திய ஐரோப்பியர்களும், அப்படித் தான் வாழ்ந்தார்கள். தேசியவெறி, இனவெறி காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பிய தேசிய இனங்கள், தமிழர்-சிங்களவர், இந்தியர்-பாகிஸ்தானிகளை விட மோசமான பகைவர்களாக இருந்தனர். ஐரோப்பியர்களின் தேசியவெறி, கோடிக் கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இனவெறியூட்டப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைகள், ஈவிரக்கமின்றி படுகொலைகளை செய்து கொண்டிருந்தன. அப்படியான ஒரு தருணத்தில் தான், கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் வந்தது.

பெல்ஜியத்தில், ஒரு பக்கம் ஜெர்மன் படைகளும், மறுபக்கம் பிரிட்டிஷ் படைகளும் போர்க் களத்தில் நின்று கொண்டிருந்தன. அன்றைய ஐரோப்பாவில், ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், தமிழர், சிங்களவர் மாதிரி ஜென்மப் பகைவர்கள் ஆவர். அப்படியான தேசியவெறி/இனவெறி ஊட்டப்பட்ட படைவீரர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டதும், ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.

காட்டுமிராண்டித் தனமான போருக்கு மத்தியில், போர்நிறுத்தம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. ஜெர்மன் படையினரும், பிரிட்டிஷ் படையினரும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து கால்பந்து விளையாடினார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த எதிரிகள், போர்நிறுத்த காலம் முழுவதும் நட்புடன் பழகினார்கள்.

படையினருக்கு இடையில் இது போன்ற நட்புறவு தொடர்ந்திருக்க ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா? மீண்டும் போர் வந்தது. ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள், மீண்டும் துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல இலட்சம் பேரைக் காவு கொண்ட போர், 1917 ம் ஆண்டு தான் ஓய்ந்தது.

ஈழப்போர் நடந்த காலத்திலும், இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று, யாழ்ப்பாண தமிழ்ப் பொது மக்களால் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசப் பட்டது.

பலாலி இராணுவ முகாமுக்கு அருகில், சிறிலங்கா படையினரும், புலிகளும் எதிரெதிரே காவலரண்களை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் உரிமை கோரப் படாத பிரதேசம் (No man's land) இருந்தது. அங்கே எப்போதும் சண்டை நடப்பதில்லை. சில நேரம் அமைதியாக இருக்கும். சிங்களப் படையினரும், புலிப் போராளிகளும், நட்பாகவும் பேசிக் கொள்வார்கள். அப்போது பழக்கமான புலிப் போராளியிடம், சிங்களப் படையினன் பின்வருமாறு கூறினானாம்: "என்னுடைய ஐயாவும், உன்னுடைய ஐயாவும் ஏ.சி. ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நானும், நீயும் தான் இந்த வெட்ட வெளியில் நின்று சண்டை பிடிக்கிறோம்..."

தேசியவெறி/இனவெறிக் கொள்கையால் ஆதாயம் அடையும் பிரிவினர், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று மறுக்கலாம். ஆனால், சாதாரண சிங்கள-தமிழ் மக்கள், சாதாரண சிங்களப் படையினர், தமிழ்ப் புலிப் போராளிகள் எல்லோரும், தேசியவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல. அப்படி கருதிக் கொள்வது ஒரு கற்பனாவாதம்.

Tuesday, December 23, 2014

திருமுருகன் காந்தி குறை கூறும் "புலி ஆதரவு இடதுசாரிகள்" என்ன செய்தார்கள்?பல வருட காலமாக, இடதுசாரியத்தை வசை பாடுவதும், மார்க்சியத்தின் மீது சேறு பூசுவதுமாக பலர் இயங்கி வருகிறார்கள். ஈழப் போரில் தமது விலை மதிக்க முடியாத உயிர்களை அர்ப்பணித்த, தமிழ் உழைக்கும் வர்க்க மக்களை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் இதன் மூலம், உழைக்கும் மக்களை ஒடுக்கும் முதலாளிய வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கிறார்கள் என்பது, இடது சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் போதே தெரிந்து விடுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் ட்ராஸ்கிஸ்ட் அமைப்புகள், தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ளும் அதே நேரம் "நாங்கள் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை" என்று கூறி அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வார்கள். அதே மாதிரி, தமிழ் நாட்டில் இயங்கும் மே 17 அமைப்பினரும் நடந்து கொள்கிறார்கள். தங்களையும் இடதுசாரிகளாக காட்டிக் கொள்ளும் அதே நேரம், "நாங்கள் மார்க்சிஸ்டுகளோ அல்லது மாவோயிஸ்டுகளோ அல்ல" என்று கூறுவதன் மூலம், இந்திய அரசுக்கு நல்ல பிள்ளைகளாக காட்டிக் கொள்கிறார்கள். 

 //உலக அளவில் இருக்கும் இடதுசாரிகளின் நிலைப்பாடுகள், எந்த அளவின் இன்றும் இருக்கிறது? ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை இதுவரை உலக இடதுசாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் ?// என்று மே பதினேழு இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கேட்கிறார்.

இந்தக் கேள்வியை அவர் யாரிடம் கேட்கிறார் என்று புரியவில்லை. இதைக் கேட்டு எமக்கெல்லாம் தலை முடியை பிய்த்துக் கொள்ளாத குறை.

எனது குழப்பத்திற்கு காரணம் இவை தான்:

  1. அவர் தன்னைத் தானே ஓர் இடதுசாரியாகவும் காட்டிக் கொள்பவர். தோழர் என்று அழைத்துக் கொள்வார். ஏகாதிபத்தியம் பற்றியும் பேசுவார். 
  2.  அவர் தன்னை ஒரு கடும்போக்கு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்பவர். புலிகளுக்காக விட்டுக் கொடுக்காமல் வாதாடி வருபவர்.

இப்போது நாங்கள் தான் அவரிடம் அதே கேள்விகளை தொடுக்க வேண்டும். ஏனென்றால், எனக்குத் தெரிந்த வரையில், உலக அளவில் செயற்படும் புலிகளின் முகவர்கள் பலர், தத்தமது நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் அங்கம் வகிக்கிறார்கள். அநேகமாக அவை எல்லாம், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சிகளாக இருக்கும்.

பிரிட்டனில் Labour Party, பிரான்சில் Parti Socialiste(PS), ஜெர்மனியில் Sozialdemokratische Partei Deutschlands (SDP), நோர்வேயில் Arbeiderspartiet, நெதர்லாந்தில் Partij van de Arbeid (PvdA), கனடாவில் New Democratic Party (NDP) ... இப்படி ஒவ்வொரு மேற்கத்திய நாட்டிலும் உள்ள இடதுசாரிக் கட்சியில், பெருமளவு புலி ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.

Labour Party, Arbeiderspartiet, Partij van de Arbeid ஆகிய கட்சிகளின் பெயரே அந்தந்த மொழிகளில் "தொழிற் கட்சி" என்றிருக்கிறது. Parti Socialiste, Sozialdemokratische Partei Deutschlands ஆகிய கட்சிகளின் பெயரில் "சோஷலிசம்" இருக்கிறது.    மேற்குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சிகள், பல தடவைகள் அரசாங்கம் அமைத்துள்ளன என்பதும், ஏகாதிபத்திய போர்களுக்கு தலைமை தாங்கியுள்ளன என்பதும் இரகசியம் அல்ல.

புலிகளை ஆதரிக்கும் தமிழ் இடதுசாரிகள், சாதாரண கட்சி உறுப்பினர்களாக மட்டுமல்லாமல், பாராளுமன்ற உறுப்பினராகக் கூட வந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கனடாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் "தமிழ் இடதுசாரி" ராதிகா சிற்சபேசன், NDP எனும் இடதுசாரிக் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவானார். அவர் கனடாவில் புலிகள் ஒழுங்கு படுத்தும், மாவீரர் தின நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்பவர். புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வருபவர். 

திருமுருகன் காந்தி குற்றஞ்சாட்டும் "உலக அளவில் இருக்கும் இடதுசாரிகள்", புலிகளாகவும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை, இப்போது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகி இருக்கும்.

அவரது அடுத்த கேள்வி: "ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை இதுவரை உலக இடதுசாரிகள் எவ்வாறு கையாண்டார்கள்?"

இது கட்டாயம், சம்பந்தப் பட்டவர்களினால் பதில் கூறப் பட வேண்டிய நியாயமான கேள்வி தான். ஒரு பக்கம் புலிகளை ஆதரித்துக் கொண்டே, மறுபக்கம் இனப்படுகொலைகளை நடத்திய ஏகாதிபத்திய அரசியல் கட்சிகளில் தொடர்ந்தும் உறுப்பினர்களாக இருப்பது எப்படி? இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாக இருந்த, புலிகளுக்கு பல விட்டுக்கொடுப்புகளை செய்த எரிக் சொல்ஹைம் ஒரு நோர்வீஜிய இடதுசாரி (Sosialistisk Venstreparti). அப்போது ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசாங்கத்தின்(Arbeiderspartiet, Sosialistisk Venstreparti கூட்டணி) சார்பாக, பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராக இருந்தார். பேச்சுவார்த்தை காலம் முழுவதும், அவருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதம் கிடைத்திருந்தது.

இறுதி யுத்தத்தின் பின்னர், முன்பு எரிக் சொல்ஹைம் புகழ் பாடிய புலி ஆதரவாளர்கள், இனப்படுகொலையை / போரினை தவறாகக் கையாண்டதாக அவரைத் திட்டினார்கள். அதற்குப் பிறகு, எத்தனை புலி ஆதரவாளர்கள், Arbeiderspartiet கட்சியில் இருந்து விலகினார்கள்? அல்லது அதற்கு வாக்களிக்காமல் விட்டார்கள்? இன்றைக்கும் நோர்வேயில் பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் Arbeiderspartiet க்கு தான் தேர்தலில் ஒட்டுப் போடுகின்றார்கள்.

பிரிட்டனில், டோனி பிளேரின் லேபர் பார்ட்டி ஆட்சியில் இருந்த காலத்தில் தான், புலிகள் இயக்கம் தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் போடப் பட்டது. லேபர் அரசு, இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்தது. இந்த உண்மைகள் எல்லாம் ஊடகங்களில் பகிரங்கமான பின்னர், எத்தனை புலி ஆதரவாளர்கள் லேபர் கட்சியை விட்டு விலகினார்கள்?

லேபர், கன்சர்வேட்டிவ் ஆகிய இரண்டு கட்சிகளும் தான் பிரிட்டனை மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிர்வகிப்பதும் அந்த இரண்டு கட்சிகள் தான். "இடதுசாரி" லேபர் கட்சியும் ஒரு ஏகாதிபத்தியக் கட்சி தான் என்பது, ஈராக் மீதான படையெடுப்புக்கு ஆதரவு கொடுத்த நேரமே வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். 2003 ம் ஆண்டு ஈராக்கில் நடந்த இனப்படுகொலை/போரில் நேரடியாகப் பங்கெடுத்திருந்தது.

அப்போது பிரதமராக இருந்த டோனி பிளேர், மகிந்த ராஜபக்சேவுக்கு நிகரான இனப்படுகொலையாளி/போர்க்குற்றவாளி என்று உலகம் முழுவதும் குற்றஞ்சாட்டப் பட்டவர். இந்த உண்மைகள் தெரிந்த பின்னர், எத்தனை தமிழர்கள் லேபர் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தார்கள்? அல்லது அதற்கு ஒட்டுப் போடாமல் விட்டார்கள்? அவர்களில் எத்தனை பேர் புலி ஆதரவாளர்கள்?

ஏகாதிபத்திய லேபர் கட்சியை நிராகரித்த, எத்தனை "இடதுசாரி" தமிழர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) அல்லது அது போன்ற வேறு சிறிய இடதுசாரிக் கட்சிகளில் சேர்ந்தார்கள்? பலருக்கு பிரிட்டனில் அப்படி ஒரு கட்சி இருப்பதே தெரிந்திருக்காது. தெரிந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஆர்வம் இருந்திருக்காது.

அமெரிக்காவில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியும் ஓர் "இடதுசாரிக்" கட்சி தான். இன்றைக்கும் வலதுசாரி குடியரசுக் கட்சியின் கடும்போக்காளர்கள், ஒபாமாவை "கம்யூனிஸ்ட்" என்றும் திட்டுவார்கள். அதற்குக் காரணம், ஒபாமா அனைவருக்குமான மருத்துவக் காப்புறுதி திட்டத்தை நடைமுறைப் படுத்த விரும்பியது தான்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் (புலி ஆதரவாளர்களும் தான்) ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு தான் ஒட்டுப் போடுவார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர், அதே ஜனநாயகக் கட்சி சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு, புலிகள் இலட்சக் கணக்கான டாலர்களை தேர்தல் நிதியாக வழங்கினார்கள்.

"இடதுசாரி" ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. பல நூறு அப்பாவி மக்கள் பலியானார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் ஏகாதிபத்திய சுயரூபம் தெரிந்த பின்னர் தான், 2008 ம் ஆண்டு "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" உருவாக்கப் பட்டது.

ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பினை ஸ்தாபித்தவர்களும், தற்போதும் அதை நடத்திக் கொண்டிருப்பவர்களும் அமெரிக்கப் புலி ஆதரவாளர்கள் தான்.  "நாடு கடந்த தமிழீழ அரசு", இன்றைக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை, "புலி ஆதரவு தமிழ் இடதுசாரிகள்" இவ்வாறு தான் கையாண்டார்கள்.

ஒரு பல்கலைக்கழக பட்டதாரியான திருமுருகன் காந்தி, இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் பேசுகிறார் என்று நாங்கள் கருத முடியாது. இடதுசாரிகள் என்பது, பல வகையான அரசியல் கோட்பாடு கொண்ட கட்சிகளை, அமைப்புகளை அல்லது தனி நபர்களை குறிக்கும். அது ஒருபோதும் ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களை குறிப்பிடாது.

மேற்கத்திய நாடுகளில், பொதுவாக சமூக ஜனநாயக கட்சிகளை, இடதுசாரிகள் என்று தான் அழைப்பார்கள். அவர்களும் நாட்டில் தாங்கள் மட்டுமே இடதுசாரிகள் என்று பாவனை செய்து கொள்வார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாகவே, இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகள், ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளனர். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அது நடந்தது.  அதனால் தான் அதிருப்தி கொண்ட பிரிவினர் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் பிரிந்து சென்றார்கள். அது வரலாறு.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இடது என்று சொல்லிக் கொள்ள விரும்பாத டோனி பிளேர், தனது கட்சிக்கு "New Labour" என்று பெயரிட்டுக் கொண்டார். ஏனென்றால், முதலாளித்துவ ஜனநாயகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அதற்கு ஏற்றவாறு மாற வேண்டுமாம்.

"ஆஹ்... நான்... வந்து... அந்த... மார்க்சிய - லெனினிச கட்சிகளை பற்றிக் குறிப்பிட்டேன் ..." என்று திருமுருகன் காந்தி மழுப்பலாம். அப்படியானால், அவருக்கு ஐரோப்பிய அல்லது உலக வரலாறு பற்றிய அறிவு மிகச் சொற்பம் என்று நினைக்க வேண்டியுள்ளது.

ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை இனப்படுகொலை செய்து முடித்திருந்தது. வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, குவாத்தமாலா, அங்கோலா, மொசாம்பிக்.... இந்த நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளில் கொல்லப் பட்டோர் எத்தனை?

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஈழப் புலிகள் மாதிரி ஆயுதப் போராட்டம் நடத்திய, நூற்றுக் கணக்கான கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கொன்று குவிக்கப் பட்ட வரலாறு தெரியுமா? மார்க்சிய - லெனினிசம் பேசிய குற்றத்திற்காக, எத்தனை பேர் பயங்கரவாதிகளாக சிறைகளில் அடைக்கப் பட்டனர் என்பது தெரியுமா? இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. சிலநேரம், இப்போது தான் வாழ்க்கையில் முதல் தடவையாக கேள்விப் படுவீர்கள்.

அநேகமாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான கருத்து ரீதியிலான அழித்தொழிப்பு நடந்துள்ளது. அதாவது, கொலை செய்வதில்லை, சித்திரவதை செய்வதில்லை, ஆனால் மனிதர்களை நடைப்பிணமாக அலைய விடுவார்கள். படிக்க விடாமல், வேலை வாய்ப்பை பறித்து, குடும்பங்களை சிதைத்தார்கள். அதுவும் ஒரு வன்முறை தான்.

அமெரிக்காவில் மக்கார்த்தி ஒடுக்குமுறைக்கு பலியான கம்யூனிஸ்டுகள் எத்தனை? ஏன் மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது? ஹங்கேரி மீதான சோவியத் படையெடுப்புக்கு பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கம்யூனிஸ்டுகளை விரட்டி விரட்டி கல்லெறிந்து தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன என்பது தெரியுமா?

பாடசாலைகளிலும், ஊடகங்களிலும் ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்ற இடையறாத பிரச்சாரத்தின் மூலம், மக்கள் மனதில் கம்யூனிச வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்தார்கள். ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைக்கு சந்தா கட்டினாலும், அவரது வேலை பறிபோகும். இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும், மார்க்சிய லெனினிஸ்டுகள் என்று சொல்லக் கூடிய யாராவது அரசியலில் நிலைத்து நிற்க முடிந்திருக்குமா?

ஏகாதிபத்தியத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டு, வசதியாக ஈழ அரசியல் பேசலாம். ஆனால், மார்க்சிய- லெனினிசம் பேச முடியாது. உலகமயமாக்கப் பட்ட உலகில், எங்கேயும் அதற்கு இடமில்லை. ஏனென்றால், உலகில் எல்லா நாடுகளிலும், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டு தானிருக்கும். நீங்கள் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், ஏகாதிபத்தியத்தின் பார்வையில் உழைக்கும் மக்களின் விடுதலை பற்றிப் பேசுவோர் எல்லோரும் எதிரிகள் தான்.

நிலவுக்கஞ்சி பரதேசம் போக முடியாது.இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Monday, December 22, 2014

இந்தியாவில் மாறி வரும் மாவோயிஸ்டுகளின் போரியல் தந்திரம்


கேரளாவில், காவல்துறையினருக்கும், கந்து வட்டி மாபியாவுக்கும் இடையில் நடந்த, இரகசிய தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ள மாவோயிஸ்டுகள், அதனை மக்கள் முன்னிலையில் பகிரங்கப் படுத்தியுள்ளனர். பொலிஸ் மாவோயிஸ்டுகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், மாவோயிஸ்டுகள் பொலிசின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது புதிய விடயம்!

கேரளாவில் தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட் குழு, மக்களிடம் விநியோகித்த "காட்டுத் தீ" எனும் பத்திரிகையில், அந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தமது தொழில்நுட்பப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப் பட்ட உரையாடல் எனக் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், வயநாட்டில் உள்ள வெள்ளமுண்டா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. அதே பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி தான் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளது.

பதிவு செய்யப் பட்ட உரையாடலில், நாசர் எனும் கந்துவட்டிக் காரனுடன் தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரி, அங்கு ரெய்டு நடக்க இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நாசர், மேலதிகாரிகளுடன் பேசிப் பார்க்குமாறு கூறுகின்றார். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறும் அதிகாரி, காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்.

இந்த தகவலை வெளியிட்ட மாவோயிஸ்டுகள், பொது மக்கள் கந்து வட்டிக் காரர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்றும், "பிளேடு மாபியா" என்று அழைக்கப் படும் கந்து வட்டிக் காரர்கள் பற்றி மாவோயிஸ்ட் தளத்தில், அல்லது ஒரு செயற்பாட்டாளரிடம் முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுள்ளனர். (Deccan Chronicle, 14 dec. 2014)

பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், காண்டிராக்டர்கள்,போன்றவர்களிடம் இருந்து, மாவோயிஸ்டுகள் பெருமளவு பணத்தை வரியாக அறவிடுவதாக, இந்திய அரசு கூறுகின்றது. சரியான தொகை தெரியா விட்டாலும், வருடாந்தம் குறைந்தது 140 கோடி ரூபாய்கள் மாவோயிஸ்டுகளுக்கு வருமானமாகக் கிடைப்பதாக, பாராளுமன்றத்திற்கு பதிலளித்த அமைச்சர் Kiren Rijiju தெரிவித்துள்ளார்.

இந்திய மாவோயிஸ்டுகள், தமது போரியல் தந்திரத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுவரை காலமும் நடத்தி வந்த கெரில்லா தாக்குதல்களில் இருந்து, நடமாடும் போர்முறைக்கு, தமது தாக்குதல்களை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். (The Asian Age, 14 dec. 2014)

தமது பிரதேசத்தில் உள்ள பாதுகாப்புப் படைகளை அகற்றும் வகையில், தமது நடமாடும் போர் முறை அமைந்திருக்கும் என்று, ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுத பலம் அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.

நடமாடும் போர் முறை கெரில்லாத் தாக்குதல்களையும் உள்ளடக்கியது. ஆனால் வித்தியாசமானது. கெரில்லாக்கள் தாக்கி விட்டு, பின்னர் தமது மறைவிடங்களில் பதுங்கிக் கொள்வார்கள். நீண்ட காலத்திற்கு வேறு தாக்குதல் எதுவும் நடக்காது. ஆனால், நடமாடும் படையணி தாக்கி விட்டு முன்னேறிச் செல்லும். 

பொதுவாக இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எங்கோ ஒருகாட்டுப் பகுதியில் இருக்கும். இடையில் உள்ள பகுதிகளில் படையினரின் கட்டுப்பாடு இருக்கும். அங்குள்ள படையினரின் காவலரண்கள், சிறுமுகாம்கள் போன்றவற்றை தகர்ப்பதன்மூலம், அவர்களைப் பின்வாங்கச் செய்ய வேண்டும். அதற்குத் தான் நடமாடும் படையணி தேவை.

கமாண்டோக்கள் மாதிரி சிறப்புப் பயிற்சி பெற்ற படையணி, ஓரிடத்தில் தாக்குதல் நடத்தி விட்டு, அதற்கு அருகில் உள்ள வேறொரு இடத்தில் தாக்குதல் நடத்தும். அப்படியே தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். சுருக்கமாக, போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதையை உருவாக்குவது. அங்கே அவர்கள் நிலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படையினரின் நடமாட்டம் குறையும். மேலதிக விளக்கத்திற்கு, சேகுவேராவின் கெரில்லா யுத்தம், மற்றும் மாவோவின் இராணுவப் படைப்புகளை வாசிக்கவும்.

இது ஏற்கனவே ஈழப் போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட தந்திரோபாயம் தான். 1985 ம் ஆண்டு, ஈழத்தில் ஆயுதப் போராட்டம் நடத்திய மார்க்சிய லெனினிச இயக்கமான ஈரோஸ், நடமாடும் போரியல் தந்திரோபாயத்தை பயன்படுத்தி இருந்தது. வடக்கே யாழ் குடாநாட்டில் இருந்து கிளம்பும் ஒரு படையணி, தெற்கே மட்டக்களப்புக்கு செல்ல வேண்டும். இடையில் சந்திக்கும் சிறிலங்கா படையினருடன் மோதல்கள் ஏற்படும். 

ஒரே கெரில்லா படையணி தான், அந்த மோதல்களுக்கு காரணமாக இருந்திருக்கும். அதன் மூலம் விநியோகப் பாதையை, களத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். பல வருடங்களுக்குப் பின்னர், புலிகளும் அந்த தந்திரோபாயத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். புலிகளின் இராணுவ தந்திரோபாயங்களை வகுத்தவர்களும், மாவோவின் இராணுவப் படைப்புகளை வாசித்திருந்தார்கள். ஆனால், அதை வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.

Sunday, December 21, 2014

இடதுசாரி ஆவிகளை எழுப்பும் திருமுருகன் காந்தியின் இடது சந்தர்ப்பவாதம்

இல்லாத எதிராளிகளுடன் காற்றில் கம்பு சுழற்றுவதைப் போல, மே பதினேழு தலைவர் திருமுருகன் காந்தி, "இடதுசாரிகள் அதைச் செய்யவில்லை... இதைச் செய்யவில்லை..." என்று குற்றப் பத்திரிகை வாசிக்கிறார். "2009 ம் ஆண்டு, ஏகாதிபத்தியம் புலிகளை அழித்த நேரம், உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகள், மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தவில்லையாம்." இது உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை.

ஏகாதிபத்தியம் என்பதே இடதுசாரிகளின் கொள்கை சார்ந்தது தான். புலிகள் இருந்த காலத்தில் "சிங்கள ஏகாதிபத்தியம்" பற்றி மட்டுமே பேசினார்கள். மேற்கத்திய நாடுகளை அவர்கள் ஏகாதிபத்தியமாக பார்க்கவில்லை. இன்றைக்கும், 95% ஈழப் புலி ஆதரவாளர்களின் கொள்கையும் அது தான். ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று மறுப்பார்கள்.

திருமுருகன் காந்தி, ஏகாதிபத்தியமே புலிகளை அழித்தது என்று கூறுவதன் மூலம் தன்னையும் ஓர் இடதுசாரி சிந்தனையாளராகக் காட்டிக் கொள்கிறார். அதற்குப் பிறகு, இடதுசாரிகளை குறை கூறும் முரண்பாட்டை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

"இடது சந்தர்ப்பவாத அரசியல்"  அவரது நலன்களுக்கு வசதியாக இருக்கிறது என்றால், அவர் குற்றஞ் சாட்டும் "இடதுசாரிகளும்" அதே இடது சந்தர்ப்பவாதிகளாகத் தான் இருப்பார்கள் என்ற உண்மையை அறியாதது ஏனோ?

திருமுருகன் காந்தி கூறும் அதே ஏகாதிபத்தியம், புலிகளை அழிப்பதற்கு 25 வருடங்களுக்கு முன்னரே, இடதுசாரிகள், அல்லது மார்க்சிய லெனினிஸ்டுகளை அழித்தொழித்து விட்டது என்ற உண்மை அவருக்குத் தெரியாதா? தொண்ணூறுகளில் நடந்த பெர்லின் மதில் வீழ்ச்சி, சோவியத் யூனியன் உடைவு, இவற்றிற்குப் பின்னர், "கம்யூனிசம் புதைகுழிக்குள் போன வரலாறு" தெரியாதா? 

"இடதுசாரிய கொள்கைகள் காலாவதியாகி விட்டன" என்று, பல "இடதுசாரிகளே" பாதை மாறிய கதை தெரியாதா? அதற்குப் பிறகு தேசியவாதமே நிரந்தரமான, நிலையான கொள்கை என்று, சில முன்னாள் இடதுசாரிகள் கூட நம்பத்தொடங்கினார்கள் என்பது தெரியாதா? தமிழ்நாட்டிலேயே அதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

25 வருடங்களுக்கு முன்னர், 1991 ல் அழிந்து போன இடதுசாரிகள், 2009 ல் புலிகளை காப்பாற்ற ஓடி வரவில்லை என்று, திருமுருகன் காந்தி குற்றஞ் சாட்டுவது, இந்த வருடத்தின் மிகச் சிறந்த காமெடி. அவர் இன்னமும் பனிப்போர் காலத்தில் வாழ்வதாகவே எனக்குப் படுகின்றது. ஏனெனில், இடதுசாரிகள், மார்க்சிய லெனினிஸ்டுகள் பற்றி அவர் கொடுக்கும் "ஓவர் பில்ட் அப் வியாக்கியானம்" சிரிப்பை வரவழைக்கிறது.

என்னவோ இடதுசாரிகள் தான், இப்போதும் உலகை நடுநடுங்க வைக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இடதுசாரிகள் அந்தளவு பலமாக இருந்தால், அமெரிக்கா தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை", முஸ்லிம்களுக்கு எதிராக அல்ல, இடதுசாரிகளுக்கு எதிராக நடத்தி இருந்திருக்கும்.

ஆயினும், திருமுருகன் காந்தி இங்கே மிகவும் தைரியமாக, ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார். உண்மையில் சர்வதேச இடதுசாரிகள் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள். புலிகள் ஒரு பக்கம், இலங்கை, இந்தியா, அல்லது சர்வதேசத்தில் இடதுசாரிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார்கள். ஆனால் மறு பக்கத்தில், உலக அரசியல் போக்குகளில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும் குறைவு என்று அலட்சியப் படுத்தினார்கள். 

குறிப்பிடத் தக்க சிங்கள இடதுசாரிகள் கூட, புலிகளின் நண்பர்களாக இருந்தார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற சிங்கள இடதுசாரிகள் புலிகளின் மேடைகளில் தோன்றி பேசினார்கள். ஒரு தலைமறைவு சிங்கள இடதுசாரிக் குழுவுக்கு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது. அவர்கள் கொழும்பில் புலிகளுக்காக குண்டுகளை வெடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதே நேரம், இந்தியாவில் ஆயுதப் புரட்சிக்கு போராடிய இடதுசாரிகளை புலிகள் புறக்கணித்ததும் வரலாறு. தமிழ் நாட்டின் பிரிவினைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ்நாடு விடுதலைப் படை, புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை குற்றஞ் சாட்டி வந்தது. பிற்காலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு புலிகள் பயிற்சி அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. "இந்திய அரசின் தலையீட்டை தடுக்கும் வகையில் இடதுசாரிகள் மக்களை அணிதிரட்டவில்லை." என்று, 2009 க்குப் பிறகு அரசியலுக்கு வந்த திருமுருகன் காந்தி கண்டுபிடிக்கிறார். 

உண்மையில், இந்திய மக்களை அணிதிரட்டக் கூடிய இடதுசாரிகளை புலிகள் ஆதரிக்காமல் புறக்கணித்து வந்தனர். அதற்குக் காரணம், இந்திய அரசின் எதிரிகளுடன் தொடர்பு வைத்தால், இந்திய மத்திய அரசை பகைக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வேயன்றி வேறொன்றுமில்லை. அதற்குப் பதிலாக, இந்திய அரசுக்கு முண்டு கொடுத்த வைகோ, ராமதாஸ், நெடுமாறன் வகையறாக்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அவர்களை மலை போல் நம்பி இருந்தார்கள்.

மேலும் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், புலிகள் ஒரு பலவீனமான அரசியல் சக்தியாக கருதிய இடதுசாரிகளை என்றைக்குமே பொருட்படுத்தவில்லை. இலங்கையில், இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்திலும், ஓர் அரசியல் அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு, இடதுசாரிகளுக்கு அரசியல் பலம் அல்லது செல்வாக்கு கிடையாது என்று புலிகள் நம்பினார்கள். 

மேற்கத்திய நாடுகளில் இயங்கிய, மிகச் சிறிய மார்க்சிய லெனினிச கட்சிகள், மாவோயிச கட்சிகள், அனார்க்கிஸ்ட் குழுக்கள், ட்ராஸ்கிச சோஷலிச கட்சிகள் இவற்றுடனும் புலம்பெயர்ந்த புலி செயற்பாட்டாளர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். 2009 ம் ஆண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அவர்களும் உதவி செய்திருக்கிறார்கள். அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு இடதுசாரிகள் வழமையாக சென்று வந்தனர். ஆனால், இடதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புலி ஆதரவாளர்களை விரல் விட்டு எண்ண முடியும். அநேகமாக இல்லையெனலாம்.

உண்மையில் புலிகள், திருமுருகன் காந்தி முதன்மைக் குற்றவாளிகளாக சுட்டிக் காட்டும், அதே மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியை நாடினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஒற்றைத் துருவ உலக அரசியலில், இடதுசாரிகளை  விட வலதுசாரிகள் பிரயோசனமாக இருப்பார்கள் என்று நம்பினார்கள். அதனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு தேர்தல் நிதி வழங்கினார்கள். 2008 ம் ஆண்டு தொடங்கப் பட்ட, "ஒபாமாவுக்கான தமிழர்  அமைப்பு" இன்னமும் இயங்குகின்றது.  (பார்க்க: http://www.prweb.com/releases/2008/10/prweb1426594.htm)

புலம்பெயர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர்கள் பலர், அந்தந்த நாடுகளில் உள்ள ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களாக கூட இருந்திருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கனடாவின் பிரபல தமிழ் அரசியல்வாதியான ராதிகா சிற்சபேசன் ஒரு புலி ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. ஆனால், அவர் உறுப்பினராக உள்ள NDP கட்சி, ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான கனடாவின் ஏகாதிபத்திய போர்களுக்கு ஆதரவாக இருந்தது.  (NDP: Part of the Imperialist System, http://www.pcr-rcp.ca/en/archives/741)

உண்மையில், திருமுருகன் காந்தியிடமும், ஏகாதிபத்தியம் பற்றிய தெளிவான விளக்கம் கிடையாது. புலிகள் அழியும் போது மட்டும் தானா, ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருப்பது அவர் கண்களுக்கு தெரிந்தது? அதற்கு  முன்னரும், பின்னரும் ஏகாதிபத்தியம் என்ன செய்தது என்று சொல்வாரா?  இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில், இனங்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதும், யுத்தங்களை உண்டாக்கி ஆயுதங்களை விற்பதும் ஏகாதிபத்தியம் தான். அதற்காக இரண்டு பக்கமும் நண்பனாக நடிப்பார்கள். இறுதியில் மறுகாலனியாதிக்கத்தில் கொண்டு வந்து முடிப்பார்கள்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, December 20, 2014

வேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்லை


சமூகவலைத் தளங்களில் எழுதும் என்னைப் போன்ற பலர், வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் வாரத்திற்கு நாற்பது மணிநேர வேலையும், குடும்பப் பொறுப்புகளும் இருக்கின்றன. ஏனென்றால், நாங்கள் எல்லோரும் உழைத்து வாழ வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்ட உழைக்கும் வர்க்க மக்கள். எங்களில் யாரும், வேலையே செய்யாமல் பணத்தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கும் சோம்பேறி முதலாளிகள் அல்ல.

 "உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில், சமூக வலைத் தளங்களில் எழுதுங்கள்" என்று, சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு சிலர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தனர்:
//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகிறோம்!//

இந்தக் கூற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்க விரும்புவது இது தான்:

//நாங்கள் அடிமைகள் தான். மறுக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் உழைப்பை விற்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, சுயகெளரவம் கிடையாது. சுதந்திரத்தை பற்றியும் அக்கறை இல்லை.//

"நீங்கள் யாருடைய ரொட்டியை சாப்பிடுகிறீர்கள்? அவருடைய வார்த்தைகளைப் பேசுகின்றீர்கள்." என்பது ஒரு பழமொழி. எங்களுக்கு காசு கொடுப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் சொல்வதை மட்டும் தான் எழுத முடியும். அதனால் தான், வணிக நோக்கில் இயங்கும் ஊடகங்கள் எல்லாம், குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. ஏனென்றால், அவர்களுக்கு காசு கொடுக்கும் விளம்பரதாரர்கள் விரும்புவதை மட்டுமே வெளியிட முடியும். மற்றவை சுயதணிக்கை செய்யப்படும்.

உதாரணத்திற்கு, ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் இனவாதமாக கூட இருக்கலாம். இனவாதம் கவர்ச்சிகரமாக இருப்பதால், அதற்கு சந்தையில் கேள்வி அதிகமாக இருக்கின்றது என்பதால் தான், முதலாளிகளும் விளம்பரம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இன்று இனவாதம் பேசுபொருளாக உள்ளதற்கு காரணம், அதற்கான சந்தை மதிப்பு அதிகம் என்பதால் தான். எப்படியான அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையும், மக்களது அரசியல் கருத்து எதுவாக இருக்க வேண்டும் என்பதையும், சந்தை தான் தீர்மானிக்கிறது.

"முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்கள் யாவும், முதலாளித்துவத்தின் இலாபவெறிக்காக உருவாக்கப் பட்டவை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மறுபக்கத்தில் அது ஜனநாயகத்திற்கான அசைவியக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

முதலாளிகள் விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டு வந்த வணிக ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளிலேயே, பல பிரபலமான பத்திரிகைகள் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளன. அந்த இடத்தை சமூக வலைத்தளங்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகின்றன.

இன்று பிரபலமான வணிக ஊடகங்களே, தமது தகவல்களை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன என்பது இரகசியம் அல்ல. இணையத் தொடர்பு வைத்திருக்கும் மக்கள், தமது சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், சுற்றாடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றியும் எழுதி வருகிறார்கள். அதன் மூலம், முன்னொருபோதும் இல்லாத சமூக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். சமூகவலைத் தளங்களில் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசும் யாரும் "வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள்" அல்ல. உழைத்துக் களைத்து வீடு வந்து, எமது சொந்த அரசியல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் உழைக்கும் வர்க்கம். இவ்வளவு காலமும் வணிக ஊடகங்களால் ஒதுக்கப்பட்டு வந்த குரலற்றவர்கள்.

தங்களது ஆன்மாவைத் தொலைத்த அடிமைகள், யாரோ ஒரு முதலாளி கொடுக்கும் பணத்திற்காக விபச்சாரம் செய்யலாம். ஆனால், நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என்ற தன்முனைப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் எழுதுகின்றோம். ஏனென்றால், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப் படும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை மக்களின் பெயரில், ஒரு சிறு மேட்டுக்குடியினர் தீர்மானிப்பது ஜனநாயகம் ஆகாது. அதை வேண்டுமானால் "பண நாயகம்" என்று அழைக்கலாம்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Thursday, December 18, 2014

"யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்


இது முற்போக்கு டச்சு இணையத் தளம் ஒன்றில் (http://onsfundament.nl/het-komt-allemaal-door-de-buitenlanders/) பிரசுரமான, மிகவும் அருமையான கட்டுரை.

ஐரோப்பாவில், குறிப்பாக நெதர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பரவிவருகின்றது. பூர்வீக வெள்ளையின மக்கள், தங்களது பொருளாதார பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இது.

நாம் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கியது. இதை வாசிக்கும் தமிழர்கள், நெதர்லாந்து அல்லது ஐரோப்பாவின் யதார்த்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். அங்கு வாழும் மக்களின் மனோநிலையை உணர்ந்து கொள்வார்கள்.

இந்தக் கட்டுரை பூர்வீக டச்சுக்காரர்களை நோக்கி எழுதப் பட்டாலும், வர்க்க உணர்வற்ற தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஆகையினால், தமிழ் பேசும் மக்களுக்காக அதனை மொழிபெயர்த்து தருகிறேன்:
________________________________________________________________________________


 எல்லாவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் தான் காரணம்! 

அடிக்கடி என்ன கேள்விப் படுகின்றீர்கள்? நெதர்லாந்தில் எல்லாமே பிழையாக நடக்கிறது. அதற்குக் காரணம் வெளிநாட்டவர்கள்.


  • அகதிகள்: "சொந்த மக்களுக்கு" உதவி செய்ய வேண்டிய அரசாங்கம், அகதிகளுக்காக பணத்தை செலவளிக்கின்றது. 
  • முஸ்லிம்கள் : அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள். எங்கள் மேல் இஸ்லாத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். 
  •  மொரோக்கோ குடியேறிகள்: திருட மட்டுமே தெரிந்த வேலை செய்யாத சோம்பேறிகள். 
  • கிழக்கு ஐரோப்பியர்கள்: எங்களது தொழில் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்.


சிலநேரம், இதை வாசிக்கும் நீங்களும் இப்படி எல்லாம் நினைத்திருப்பீர்கள். மிகவும் நன்றி. இப்படியான கதைகளை பரப்புவதன் மூலம், மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கு உதவுகின்றீர்கள்.

அகதிகளின் வருகையினால் தான், சுகாதாரப் பணியகங்கள் மூடப் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை இழுத்து மூடி விட்டால், சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப் படுமா? எதற்காக மக்கள் தங்கள் வீடு, வாசல்களை துறந்து வெளியேறுகின்றார்கள் என்று ஒரு நிமிடமேனும் நினைத்துப் பார்த்தீர்களா? சிலநேரம், அவர்கள் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், குண்டு வீச்சினால் பாதிக்கப் பட்டிருக்கலாம், அல்லது கைது செய்வதற்காக தேடப் படலாம். எமது அரசாங்கம் அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை விரும்புகின்றது.

நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?  மக்டொனால்ட்ஸ் முதல் சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வரை. ஏன் எங்கள் தேசத்தின் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து எந்தக் கவலையுமற்று இருக்கிறீர்கள்? அமெரிக்கா ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டான நாடு என்ற பிரச்சாரத்தை இன்னமும் நம்புகிறீர்களா? அந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மட்டுமல்லாது, நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக அதே பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்கின்றது.

எங்களது நாட்டில் குறைந்தளவு மொரோக்கோ குடியேறிகள் இருந்திருந்தால், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்புகள், இவை எல்லாம் மறைந்து விடுமா? தொழிலகங்களில் வழமைக்கு மாறாக அதிக வேலை வாங்கப் படுவதற்கும், அரசு கொடுக்கும் சமூகநல உதவித்தொகை போதாமல் இருப்பதற்கும், "அந்த" மொரோக்கோ காரர்கள் தான் காரணமா? உண்மையில் யார் யாரிடம் இருந்து திருடுகிறார்கள்? உங்களிடம் இருந்து திருடும் அதே மேட்டுக்குடி வர்க்கம் தான், மொரோக்கோ காரர்களிடமும் இருந்து திருடுகின்றது.

"அந்த" கிழக்கு ஐரோப்பியர்களினால் தான், உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை மூடி விட்டால், உங்களுக்கு ஒரு நிரந்தர வேலைக்கான ஒப்பந்தம் கிடைக்குமா? பார ஊர்திகளின் (லொறி) முதலாளிகளும், ஷெல் போன்ற நிறுவனங்களும், ஐரோப்பாவில் மலிவு விலை கூலிகளை தேடிப் போவது, கிழக்கு ஐரோப்பிய மக்களின் குற்றமா? ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றுவதற்கு கிழக்கு ஐரோப்பியர்கள் தான் காரணமா? நீங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க வழியில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிலநேரம், இந்த நாட்டில் எல்லாமே பிழையாக நடப்பதற்கு எங்கள் மேல் தவறு இருக்கலாம். எங்களது தவறு? ஆமாம், எங்களது தவறு தான். ஏனென்றால், இந்த நாட்டில் வாழும் நாங்கள் தெளிவாக சிந்திப்பதில்லை. இங்கே என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது என்று அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே வர்க்கத்தை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை அறியாமல் இருக்கிறோம்.

உலகம் முழுவதும் தங்கள் இருப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள், பணத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறோம். ஏனென்றால், தோல்நிறம், பூர்வீகம், மதம் போன்ற வித்தியாசங்களை பெரிதென எண்ணி, எங்களை நாங்களே பிரித்துக் கொள்கிறோம். எங்களுடைய பணம் எந்த வர்க்கத்திடம் போய்ச் சேருகின்றது என்ற உண்மையை அறியாதிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை பற்றி அறியாதிருக்கிறோம்.

எங்களை விட வித்தியாசமாக தோன்றும் மனிதர்கள் மேல் சீறிப் பாய்வது மிகவும் இலகுவானது. ஏனென்றால், முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி கொள்வதும், அவர்களது அரசியல் அமைப்பை எதிர்ப்பதும், "நெதர்லாந்து பண்பாடு" அல்ல! அப்படித் தானே? முன்னாள் லிபரல் கட்சிக்காரரும், இந்நாள் "கார்ப்பரேட்களுக்கான கட்சி"(PVV) நடத்துபவருமான ஒருவர், அமெரிக்க, இஸ்ரேலிய கோடீஸ்வரர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு நெதர்லாந்தை நாசமாக்குவதற்கு உதவுகிறார். அவர் சொல்லும் கதைகளை கேட்டு ஏமாறுகிறோம். 

இந்த பொம்மைகள், தொழிலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பக்கம் நிற்பதாக நினைக்கிறீர்களா? அவர்கள் தான் (பூர்வீக) நெதர்லாந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இனிப்பாகப் பேசுகிறவர்களை நம்புகிறீர்களா? வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்பு போன்ற திட்டங்களுக்கு, பாராளுமன்றத்தில் அவர்களும் தான் சம்மதிக்கிறார்கள். (உழைக்கும் வர்க்கம்) பிரிந்திருப்பதால் பலவீனமாகப் போகிறோம் என்பதை நீங்கள் உணரவில்லையா?

இன்னும் உணரவே இல்லை? அப்படியானால், தங்களது நிதி வழங்குநர்கள் முன்னேற வேண்டுமென்பதற்காக, இந்த சமூகத்தை இன்னும் விரைவாக உடைக்கும் நபர்களை பற்றியும் முறைப்பாடு செய்ய வராதீர்கள். ஏனென்றால், அவர்கள் அகதிகள், மொரோக்கோ காரர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோரை மட்டுமல்ல, வேலை செய்யும் எல்லோரையும் பிடித்து அடக்குவார்கள். அதனை நீங்கள் பொறுத்திருந்து பார்ப்பீர்கள். 

தொழிற்சங்கம் ஒன்றின் மூலம் நிறுவனமயமாகும் ஒவ்வொருவரும், நல்லதொரு எதிர்காலத்திற்காக கிளர்ந்து எழும் ஒவ்வொருவரும் அடக்கப் படுவார்கள். ஒன்றில் வன்முறை மூலம், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை மூலம் இது நடக்கும். அதனால், அந்த நேரம் உங்களைப் பிடிக்க வந்தால், சிலநேரம் நீங்களும் தப்பி ஓட வேண்டி இருக்கும். அந்த நேரம், உங்களை ஒரு நாட்டில் அகதியாக வரவேற்பார்கள் என்று நம்புவோமாக...


(இது ஒரு மொழிபெயர்ப்பு. மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: ‘Het komt allemaal door de buitenlanders’)

Wednesday, December 17, 2014

பபுவா நியூ கினியாவில் தமிழ் மொழி!


பபுவா நியூ கினி பற்றி கேள்விப் பட்ட தமிழர்கள் மிகக் குறைவு. பபுவா மக்களும் தமிழர்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்திற்கும், பபுவா நியூ கினிக்கும் நடுவில் எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம்! இத்தனை தொலைவில் வாழும் பழங்குடி மக்களின் மொழியில் ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்கள் புழங்கி வருகின்றன.

பல இடங்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் தமிழ் போன்று ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு: வா (Wau), கரிமுகம் (Karimui), பூ (Pua), இரவி (Erave), லிங்கம், நாகம் இன்னும் பல. ஒரு மலைக்குப் பெயர் "காவேரி ஹில்ஸ்". அங்கே நிலம் இன்றைக்கும் "பூமி" என்றே அழைக்கப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், பபுவா நியூ கினியா பற்றி வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆங்கிலேய, டச்சு காலனியாதிக்கவாதிகள் அந்தப் பிரதேசத்தை "கண்டுபிடித்த" போது, புராதன கால மனித சமுதாயம் இருப்பதை கண்டறிந்தார்கள்.

காலனிய ஆட்சி காரணமாக, பெரும்பான்மையான பபுவா மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள். அதனால், கிறிஸ்தவப் பெயரை சூட்டிக் கொண்டாலும், குடும்பப் பெயராக பபுவா மொழிப் பெயர் ஒன்றை வைத்துக் கொள்கின்றனர். அவையும் தமிழ் போன்றே ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு: Kuala (குள்ளன்), Muliah (மூலை), Koleala (கோழிக் காரன்)... இன்றைய பபுவா பாராளுமன்றம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர் Waigani (வாய்க் காரன்).

இதை கேட்ட உடனே, "பார்த்தீர்களா! கல் தோன்றா மண் தோன்றாக் காலத்திற்கு முந்திய தமிழ்..." என்று இனப் பெருமை பேசக் கிளம்பி விடாதீர்கள். "தமிழ்" என்ற பெயர்ச் சொல் நவீன காலத்திற்குரியது. அதற்கு முன்னர் எழுதப் படாத பல மொழிகளை முன் - தமிழ் (Proto - Tamil) என்று அழைக்கலாம்.

அது ஒரே மொழியாகவோ, அல்லது பல மொழிகளின் சேர்க்கையாகவோ இருந்திருக்கலாம். அதைப் பற்றி அதிகம் தெரியாத படியால் தான், தமிழ் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். மேலும் இந்தோனேசியாவில் பேசப்படும் மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

இன்றைக்கும் பபுவா நியூ கினியில் பல நூறு வித்தியாசமான மொழிகள் பேசப் படுகின்றன. (இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு பபுவாவிலும் அதே மொழிகள் பேசப் படுகின்றன.) ஏற்கனவே பல அழிந்து விட்டன. கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்றவர்கள், பெரும்பான்மை மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆங்கிலேய பேரினவாதிகள் (அல்லது அவுஸ்திரேலியர்கள்) அவுஸ்திரேலியாவின் பூர்வீகப் பெயர்களை அழித்து விட்டு, அவற்றை ஆங்கில மயப் படுத்தினார்கள். ஆனால், பபுவா நியூ கினியாவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் புகுத்தினார்கள்.

பபுவாவில் பூர்வீக இடப் பெயர்கள் அப்படியே இருந்தாலும், ஆங்கில மயமாக்கல் காரணமாக சில மாற்றங்களுக்குள்ளாகி இருக்கலாம். டச்சுக் காரர்களின் காலனிய மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பபுவா பிரதேசம், பிற்காலத்தில் இந்தோனேசிய ஆக்கிரமிப்பினால் மேலும் பாதிப்புக்குள்ளாகியது.

எழுத்து வடிவம் இல்லாதிருந்த பபுவா மக்களின் பூர்வீகம் குறித்து அறிந்து கொள்வது கடினம். ஆயினும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை, மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை எடுத்துக் காட்டுகின்றது. இவை எல்லாம், நாம் இது வரை காலமும் படித்து வந்த சரித்திரம் பொய்யானது என்பதை நிரூபிக்கின்றன. 

இராமாயணக் கதை கூட ஆதியில் வேறு விதமாக சொல்லப் பட்டிருக்கலாம். அது இந்தியாவில் நடந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பபுவாவில் சில இடங்களின் பெயர்கள், "ராம் - இராவண சகோதரர்கள்" என்று உள்ளன. இராமாயணக் கதை நடந்ததாக கருதப்பட்ட கால கட்டத்திற்கு முந்திய காலத்தில் இருந்தே,  பபுவாவில் மனித இனங்கள் இருந்து வருகின்றன.)

தமிழர்களின் பூர்வீகம் இந்தியா அல்லது "குமரி கண்டம்" என்பது, இனத் தூய்மைவாதம் சார்ந்த நவீன கால அரசியல் கோட்பாடு. தமிழர்களின் பூர்வீகம், ஆப்பிரிக்காவோ அல்லது பபுவா நியூ கினியாவாகவோ கூட இருக்கலாம். ஏன் அந்தத் திசையில் யாரும் ஆய்வு செய்வதில்லை? தற்கால பூகோள அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு தான், பபுவா கருப்பின மக்களோடு எங்களை இனங் காண விடாமல் தடுக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:

பபுவா பற்றிய முன்னைய பதிவுகள்: