Tuesday, August 20, 2013

இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறுஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் இரண்டறக் கலந்துள்ளனர். ஒருபுறம் சிங்கள இனவாதமும், மறுபுறம் தமிழ் இனவாதமும் உச்சத்தை அடைந்துள்ள இன்றைய காலத்தில், இந்தத் தகவல்கள் பலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதனை உறுதிப் படுத்தும் ஏராளமான சரித்திர, அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்துள்ளன.

புத்தளம், சிலாபம் பகுதியில் இன்றைக்கும் தமது ஆப்பிரிக்க வேர்களை இழக்காத சமூகம் ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களது உருவத் தோற்றம் மட்டுமல்ல, கலாச்சாரம், இசை கூட தனித்துவமானது. இது பற்றி, சில வருடங்களுக்கு முன்னர், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும், பிபிசி தமிழோசையும் ஆவணப் படங்களை தயாரித்திருந்தன. இவர்கள் இலங்கையை போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட மொசாம்பிக் நாட்டவரின் வம்சாவளியினராக இருக்கலாம். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், வேறிடத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களில் ஒரு சிறிய பிரிவினர் தான், தமது கலாச்சார வேர்களை இழப்பதில்லை. மிகுதிப்பேர் அந்த நாடுகளில் இருக்கும் பெரும்பான்மை சமூகங்களுடன் கலந்து விடுவார்கள். அது இயற்கை. ஆகவே, இந்த மொசாம்பிக் ஆப்பிரிக்க வம்சாவளியினரின் சகோதரர்களும், திருமண உறவு காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிங்களத்தை, அல்லது தமிழை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவர்களை நாங்கள் சிங்களவர் என்றோ, அல்லது தமிழர் என்றோ, பேசும் மொழியை வைத்து வகைப் படுத்துகின்றோம். 

500 வருடங்களுக்கு முன்னர், போர்த்துகேய காலனிய ஆட்சிக் காலத்தில் மட்டுமே ஆப்பிரிக்கர்கள் இலங்கையில் குடியேறி இருக்கிறார்கள் என்று கூற முடியாது. அதற்கு முன்னரே, சுமார் 2000 வருடங்களுக்கு முன்னரே வட இலங்கையில் ஆப்பிரிக்கர்கள் குடியேறி உள்ளனர். அதற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. யாழ் நகருக்கு அருகில் உள்ள வேலணை தீவில், அல்லைப்பிட்டி என்னும் ஊரில் கிணறு தோண்டும் நேரம், சில ஆப்பிரிக்க சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டன. சந்தேகத்திற்கிடமின்றி, அந்த சிற்பங்கள் ஆப்பிரிக்க கறுப்பினத்தவரின் முகத்தை ஒத்துள்ளன. இந்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், 2000 வருட கால பழமையானவை. இதன் மூலம், ஆப்பிரிக்கர்கள் அந்தப்  பிரதேசத்தில் வாழ்ந்துள்ளமை உறுதியாகின்றது. 

யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள், ஆப்பிரிக்கர்களை கூலிப் படையாக வைத்திருந்துள்ளனர். அந்தக் காலங்களில் தேசிய இராணுவம் கிடையாது. மன்னர்கள் பல்லின வீரர்களை கொண்ட கூலிப் படைகளை வைத்திருப்பது சர்வசாதாரணம். "யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் தமிழர்களாக இருந்தால், அவர்களின் கீழ் சேவை செய்த படையிலும், தமிழர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்" என்று நினைப்பது அறியாமை. எல்லாளனின் படையில் சிங்கள வீரர்களும், துட்ட கைமுனுவின் படையில் தமிழ் வீரர்களும் இருந்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் தேசியவாத, இனவாத எண்ணம் துளியும் இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்  படுத்தப் பட்ட அரசியல் கோட்பாடுகள் ஆகும்.

10 ம் அல்லது 14 ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட வையாபாடல் என்ற நூலில், ஆப்பிரிக்க கூலிப் படையினர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வையாபாடல் ஆப்பிரிக்கர்களை "பப்பராவர்" என்ற பெயரில் அழைக்கின்றது. ஆப்பிரிக்க கறுப்பர்களைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல்லான "பப்பராவர்" இருக்கும் பொழுது, நாங்கள் இன்றைக்கும் ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய "நீக்ரோக்கள், காப்பிலிகள், ஆப்பிரிக்கர்கள்" போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இது எமது ஐரோப்பிய மையவாத சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது. தீவிர தமிழ்தேசியவாதிகள் பலர் கூட, நடைமுறையில் ஐரோப்பிய மையவாதிகளாக உள்ளனர். 

வட இலங்கையில் சில ஊர்களுக்கு "பப்பரப் பிட்டி" என்ற பெயர் உள்ளது. அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்ட வேலணைத் தீவில் மட்டுமல்லாது, ஆணையிறவுக்கு அருகில், சுண்டிக்குளம் பகுதியில் ஒரு ஊருக்கு பப்பரப் பிட்டி என்ற பெயர் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளது. இதிலிருந்து, ஆப்பிரிக்கர்கள், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது,  முல்லைத்தீவு மாவட்டத்திலும் குடியேறி இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு காலத்தில், நயினா தீவுக்கு "பப்பரத் தீவு" என்ற பெயர் இருந்தது. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு மேற்கே உள்ள, ஊர்காவற்துறை துறைமுகம் ஊடாகவே ஆப்பிரிக்க குடியேற்றம் நடந்திருக்க வேண்டும். துறைமுகத்தை குறிக்கும் பழைய தமிழ்ச் சொல்லான "ஊருத்துறை" மருவி, ஊர்காவற்துறை ஆகியிருக்கிறது. போர்த்துக்கேயர்கள் துறைமுகத்தை தமது மொழியில் "Cais" என்று அழைத்தனர். டச்சுக்காரர்கள் அதனை Kayts என்று உச்சரித்தார்கள். அந்தப் பெயரே ஆங்கில மொழியிலும் நிலைத்து விட்டது. 

பாக்கு நீரிணைக்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை, பண்டைய காலத்தில் மிகவும் சுறுசுறுப்பான சர்வதேச துறைமுகமாக திகழ்ந்தது. அங்கே ஆப்பிரிக்காவில் இருந்தும் வணிகக் கப்பல்கள் வந்து சென்றுள்ளன. 14 ம்  நூற்றாண்டு வரையிலும் கூட, யாழ்ப்பாணத்திற்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. மொரோக்கோ நாட்டை சேர்ந்த பிரபல யாத்திரீகரான இபுன் பதூதா, இலங்கை வந்து யாழ்ப்பாண மன்னனின் விருந்தினராக தங்கி இருந்திருக்கிறார். அன்று இபுன் பதூதா எழுதிய பயணக் குறிப்புகளை இன்றைக்கும் வாசிக்கலாம். 

இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்களும், பண்டைய கால சர்வதேச வர்த்தகம் காரணமாக வந்திருக்கலாம். 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் காலனிப் படுத்தும் வரையில், "ஆப்பிரிக்கர்கள் நாகரீகமடையவில்லை" என்ற தவறான கருத்தை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் பரப்பி வந்தனர். இந்த ஐரோப்பிய மையவாத சிந்தனையை, யாழ்ப்பாணத்தில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் தகர்த்துள்ளனர். இன்றைக்குள்ள ஈழத் தமிழர்கள், ஆப்பிரிக்காவுடனான தமது பண்டைய தொடர்புகளை முற்றாக மறந்து விட்டார்கள். அவர்கள் ஆங்கிலேயர்கள் பரப்பிய கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பது மிகப் பெரிய வரலாற்று சோகம். 

ஆப்பிரிக்க வணிகக் கப்பல்கள், எத்தியோப்பியா போன்ற கிழக்காபிரிக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம். அதேநேரம், மொரோக்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்தும் வணிகக் கப்பல்கள் வந்துள்ளன. மொரோக்கர்களை, போர்த்துக்கேயர்கள் "மூர்கள்" என்று அழைத்தனர். இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு மூர்கள் என்ற பெயருமுண்டு. 2000 வருடங்களுக்கு முன்னரே, அதாவது இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, மொரோக்கோ நாட்டு கடலோடிகள் மாலை தீவுகள், கேரளா, இலங்கை ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். மறைந்த ஞானிகளின் சமாதிகளை தர்க்கா என்ற புனித ஸ்தலமாக வழிபடும் முறை மொரோக்கோவில் தோன்றியது. இன்றைக்கும் அந்த நாட்டில், பாரம்பரிய இஸ்லாமிய மத வழிபாடாக கருதப் படுகின்றது. இன்றைக்கும் இலங்கை, மாலை தீவுகள், தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் தர்கா வழிபாடு பிரசித்தமானது. 

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை தனியான தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழ் தேசியவாதிகள், அவர்களை "இஸ்லாமியத் தமிழர்" என்று கூறி வருகின்றனர். இது பெரும்பாலும் அறியாமை காரணமாக ஏற்படும் தவறான புரிதல். இலங்கை முஸ்லிம்களை குறிக்கும் "மூர்கள்" என்ற சொல் போர்த்துகேய காலனிய காலத்திலும், "சோனகர்கள்" என்ற சொல் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இன்று இவ்விரண்டு சொற்களும் முஸ்லிம்களை குறிக்கும் என்றாலும், எல்லா மூர்களும், எல்லா சோனகர்களும் முஸ்லிம்கள் என்று கருதுவது தவறாகும். எவ்வாறு தமிழர் என்பது ஒரு மொழியை பேசும் மக்களைக் குறிக்கின்றதோ, அதே மாதிரி முஸ்லிம்கள் என்பது இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுவோரைக் குறிக்கும். 

"சோனகர்கள்" என்பது, அரேபியரைக் குறிக்கும் பண்டைய தமிழ்ச் சொல் ஆகும். ஆனால், சோனகர்கள் எல்லோரும் அரேபியர்கள் அல்ல. அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, அரபு வணிகர்கள் வட இலங்கையில் குடியேறி உள்ளனர். அன்று அவர்கள் அரேபியர்களாக அறியப் படவில்லை. கிரேக்கர்களும் வணிகத் தொடர்பு காரணமாக இலங்கையில் குடியேறி உள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய தீபகற்பம் முழுவதும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரோமர்கள் என்ற பெயரில் கிரேக்கர்களே அரேபியாவை ஆண்டனர். தமிழர்கள் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இன்றைய கிரீஸ் நாட்டில் உள்ள இயோனியா மாநிலத்தில் இருந்து யவனர் என்ற பெயர் வந்திருக்கலாம். இலங்கையில் யவனர் என்ற சொல் மருவி சோனகர் ஆகியிருக்கின்றது. ஆகவே, சோனகர் என்ற சொல் இலங்கையில் குடியேறிய அரேபியர்களை மட்டுமல்லாது, கிரேக்கர்களையும் குறிக்கும். 

வட இலங்கையில் (அரபு-கிரேக்க) சோனகர்களும், (ஆப்பிரிக்க) பப்பராவர்களும், இரண்டு வேறுபட்ட சமூகங்களாக வாழ்ந்திருக்க வேண்டும். (வையாபாடலிலும் அவ்வாறு தான் குறிப்பிடப் பட்டுள்ளது.) சமஸ்கிருத மொழியில் ஆப்பிரிக்கர்களை குறிக்க பப்ரு (Babhroo) என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. பப்ரு என்பது சுருள் முடி கொண்டவர்கள் என்று அர்த்தம் ஆகும். சிங்கள மொழியில் அந்தச் சொல் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. பப்ரு என்ற சொல், கிரேக்க மொழியில் "Barbar" என்றும், அரபு மொழியில் "Berber" என்றும் பாவிக்கப் பட்டது. பண்டைய காலங்களில் தமிழ், சமஸ்கிருதம், அரபி, கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான கலாச்சார தொடர்பு இத்தால் துலக்கமாகின்றது. 

இந்தக் கட்டுரை கூறும் தகவல்கள் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். குறிப்பாக, "தமிழினம், ஆயிரமாயிரம் வருடங்களாக வேற்று இனங்களுடன் கலக்காமல் இனத் தூய்மை பேணி வருகின்றது." என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் இனவாதிகள், இதனை "அர்த்தமற்ற உளறல்கள்" என்று புறக்கணிக்கலாம். இங்கே எழுதி உள்ளவை பொய்யானவை என்றால், ஒரு காலத்தில் புலிகளின் ஆங்கில ஊடகமாக கருதப்பட்ட தமிழ்நெட் இணையத்தளமும் பொய் சொல்லுமா?  குறிப்பாக, பப்பராவர் பற்றிய தகவல்கள் யாவும் Tamilnet ல் இருந்து எடுத்தவை தான். Tamilnet இணையத் தளத்திற்கு எனது நன்றிகள். 

மேலதிக தகவல்களுக்கு:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34949

http://www.tamilnet.com/art.html?catid=98&artid=24730

Sunday, August 18, 2013

எகிப்து : இஸ்லாமிய மதவாதிகளுடன் கணக்குத் தீர்க்கும் காலம்எகிப்தில் நடக்கும் சம்பவங்கள் யாவும், அந்த நாடு ஒரு உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளப் படுவதை எடுத்துக் காட்டுகின்றன. எகிப்தின் புதிய இரும்பு மனிதரான ஜெனரல் அல் அசிசி, பதவி இறக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆதரவாளர்களின் கிளர்ச்சியை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகின்றார். அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இராணுவம் சுடுகின்றது. மசூதி ஒன்றில் அடைக்கலம் புகுந்தவர்களைக் கூட, ஆயுத வன்முறை பிரயோகித்து வெளியேற்றி உள்ளது. ஒரு வருடம் மட்டுமே ஜனாதிபதியாக இருந்து, பதவி கவிழ்க்கப் பட்ட மொர்சி ஆதரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறையில் குறைந்தது 800 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். அல்கைதா தலைவர் சவாஹிரியின் சகோதரரும் கைது செய்யப் பட்டுள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவரின் மகன் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகிறார். 

இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், அஹிம்சா வழியில் போராடுவதாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில், துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். அது இன்னும் முழுமையான அரச எதிர்ப்பு ஆயுதப் போராட்டமாக மாறவில்லை. ஆனால், சில நாட்களில் அதுவும் நடக்கலாம். முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினரை, வேறு வழியின்றி ஆயுதமேந்தப் பண்ணுவதே, இராணுவ அரசின் நோக்கமாக உள்ளது. இது அவர்களுக்கு வைக்கப் பட்டுள்ள மிகப் பெரிய பொறி. அதற்குள் மாட்டிக் கொள்ளும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை இலகுவாக அழித்தொழித்து விடலாம் என்று இராணுவ அரசு எதிர்பார்க்கின்றது. இதே மாதிரியான அரசியல் தந்திரோபாயம் தான், முப்பது வருடங்களுக்கு  முன்னர் தொடங்கிய ஈழப் போரில் பயன்படுத்தப் பட்டது. அதனை இன்றைக்கும் பலர் உணரவில்லை.  

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி, எகிப்தின் மிகவும் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். ஆங்கிலேய காலனிய காலத்திலேயே, பழமைவாதிகளையும், மதவாதிகளையும் ஒரே அரசியல் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேர்த்து, இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியாக உருவானது. இந்தியாவில் உள்ள இந்து மத அடிப்படைவாதிகளின் பா.ஜ.க. வுடன் ஒப்பிடத் தக்கது. இந்தியாவில் பாஜக வினருக்கு கிடைத்த சுதந்திரமும், சந்தர்ப்பங்களும், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சினருக்கு கிடைக்கவில்லை. எகிப்திய தேசியவாதியும், சோஷலிஸ்டுமான நாசரின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தடை செய்யப் பட்டது. பெரும்பாலான கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் சிறைகளை நிரப்பினார்கள். 

தற்போது வரலாறு திரும்புகின்றது. லிபரல் சர்வாதிகாரி முபாரக் வெளியேற்றப் பட்ட பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான மொர்சி, பொருளாதார தேவைகளுக்காக சீனாவுடனும், ஈரானுடனும் உறவு கொண்டாடினார். அது அமெரிக்காவின் கோபத்தை கிளறி இருக்கலாம். ஆதாரம் இல்லாவிடினும், முக்கியமான இரண்டு சம்பவங்களை குறிப்பிடலாம். 

1. மத்திய கிழக்கில், இஸ்ரேலுக்கு அடுத்த படியாக, அமெரிக்காவின் மிக அதிகமான ஆயுத தளபாட உதவி எகிப்திற்கு செல்கின்றது. இஸ்ரேலுடன் பொது எல்லையை பகிர்ந்து கொள்வதாலும், சுயஸ் கால்வாயை கொண்டிருப்பதாலும், எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். தற்போது நடக்கும் பிரச்சினையில், எகிப்திய பாதுகாப்பு படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக நூற்றுக் கணக்கானோர் கொல்லப் பட்ட பின்னரும், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் எகிப்திற்கான விநியோகம் நிறுத்தப் படவில்லை. அமெரிக்க தூதரகம் கண்டன அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருகின்றது. அது பெரிய தாக்கத்தை உண்டாக்கப் போவதில்லை. 

2. சவூதி அரேபியா, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மிக நீண்ட கால கொடையாளி நாடு ஆகும். முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த சிறிதளவு சுதந்திரத்தை பயன்படுத்தி, அந்தக் கட்சி வளர்ச்சி அடைவதற்கு சவூதிப் பணம் பெரிதும் உதவியது. மொர்சி பதவியிழந்த பின்னர், உற்ற நண்பனான சவூதி அரேபியா கட்சி மாறி விட்டது. எதிரிகளும் நண்பர்களும் ஆச்சரியப் படுமளவிற்கு, புதிய இராணுவ ஆட்சியாளர்கள் பக்கம் சேர்ந்து கொண்டது. இன்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தடை செய்யப் போவதாக இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சவூதி அரேபியா தனது பழைய நண்பர்களை முற்று முழுதாக கை கழுவி விடும் என்று தெரிகின்றது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு.

நாலாபுறமும் நசுக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எகிப்திய கிறிஸ்தவர்கள் மேல் பழிபோட்டு வருகின்றனர். அந்தக் கட்சியை சேர்ந்த தீவிரவாதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய பதினைந்து தேவாலயங்கள் எரிக்கப் பட்டுள்ளன அல்லது சேதப் படுத்தப் பட்டுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியானது, தனக்கு ஆதரவான இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட மக்களின் கோபாவேசத்தை, கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக திசை திருப்பி விடப் பார்க்கின்றது. இது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. என்ன தான் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதவாத/இனவாத உணர்வுகளை தூண்டி விடப் பார்த்தாலும், அது அந்தக் கட்சிக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. 

சிலர் எகிப்தில் நடக்கும் மாற்றங்களை, ஏற்கனவே சிரியாவில் நடந்த மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமைகளும், அதே நேரம் வேற்றுமைகளும் உள்ளன. சிரியாவில் நடக்கும் யுத்தம், இரண்டு வேறுபட்ட சமூகங்களில் தங்கியுள்ளது. எல்லோரும் அரபு மொழி பேசினாலும், சமூக, கலாச்சார முரண்பாடுகள் அவர்களை பிரிந்து வாழ வைத்துள்ளது. அங்குள்ள அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் அனேகமாக சுன்னி முஸ்லிம்கள். அலாவி முஸ்லிம் பிரிவினரும், கிறிஸ்தவர்களும் சிரிய அரசை ஆதரிக்கின்றனர். ஆனால், எகிப்தில் நிலைமை வேறு. அது ஓரளவு, முன்பு அல்ஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போருடன் ஒப்பிடத் தக்கது. அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில், இஸ்லாமிய மதவாத கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற போதிலும் அரசமைக்க முடியவில்லை. தேர்தல் இரத்து செய்யப் பட்டு, இராணுவம் அவர்களை தற்காப்புப் போர்  ஒன்றுக்குள் இழுத்து விட்டது. 

எகிப்திய இராணுவ அடக்குமுறைக்கு பின்னணியில் கிறிஸ்தவர்கள் இருப்பதாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மட்டுமே கூறி வருகின்றது. அது எந்த ஆதாரமுமற்ற பொய்ப் பிரச்சாரம். எகிப்திய முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். அவர்கள் மத்தியில் ஏராளமான லிபரல்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல நாஸ்திகர்கள் கூட இருக்கின்றனர். எகிப்திய முஸ்லிம் சமூகத்தில், மதச் சார்பற்றவர்கள் இராணுவ அரசை ஆதரிக்கின்றனர். சுருக்கமாக, இதனை மதவாத பழமைவாதிகளுக்கும், மதச்சார்பற்ற தாராளவாதிகளுக்கும் இடையிலான போராட்டமாக பார்க்கலாம். இன்றைய எகிப்து, கொள்கை அடிப்படையில் இரண்டாகப் பிளந்துள்ளது. இந்தப் போராட்டம் இந்தியாவிலும் நடக்கிறது, இலங்கையிலும் நடக்கிறது. மதவாதிகள், இனவாதிகள், தேசியவாதிகள் மட்டுமே அத்தகைய சமூக முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர். 

எகிப்து நாட்டில் ஒரு உள்நாட்டுப் போர் நடந்தால், அது குடும்பங்களை, உறவினர்களை, நண்பர்களைக் கூட நிரந்தரமாகப் பிரித்து விடும். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் கூட, ஒருவர் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளராகவும், இன்னொருவர் மதச்சார்பற்ற தாராளவாதியாகவும் இருப்பது சர்வ சாதாரணம். தற்போது அவர்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்து பேசாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் உயிரச்சம் காரணமாக, சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கே பயந்து ஒளிந்து வாழ வேண்டியிருக்கும். எகிப்து ஒரு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எகிப்தியர்கள் அதிலிருந்து தப்பி மீண்டு வந்தாலும், இனிமேல் கொள்கை முரண்பாடு கொண்ட இரண்டு சமூகங்களும் பிரிந்தே வாழப் போகின்றன. இன்று எகிப்தில் நடப்பது, நாளை இந்தியாவிலும் நடக்கலாம். எதற்கும் நரேந்திர மோடி பிரதமராகும் வரையில் காத்திருங்கள். 


எகிப்து பற்றிய முன்னைய பதிவுகள் :

எகிப்தின் எதிர்காலம் என்ன?

எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!

Thursday, August 15, 2013

ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா?

இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த காலம் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. யாரும் தனது நினைவுக் குறிப்புகளை எழுதி வைக்கவில்லை.

மூன்று காரணங்களுக்காக, இந்த வரலாற்றுத் தகவல்கள் மறைக்கப் படலாம். 

  1.  ஐரோப்பியர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள். உலகில் வேறெந்த இனத்திடமும் அடிமையாக இருந்திராதவர்கள் என்ற இனவாத மேலாண்மை குறித்த அரசியல். அது எப்போதும் ஆண்ட பரம்பரைக் கதைகளை மட்டுமே விரும்புகின்றது. அடிமையாக இருந்த கதைகளை மறைக்கின்றது.
  2.  ஒரு காலத்தில் வெள்ளையின-ஐரோப்பிய அடிமைகளை வைத்திருந்த வட ஆப்பிரிக்க பிரதேசம், பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாகியது. அதனால், வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். தமது அவமானகரமான கடந்த காலத்தை மறைத்து விட்டார்கள்.
  3.  அது ஒரு முற்றிலும் மாறுபட்ட காலகட்டம். கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு மதங்களுக்கு இடையிலான, மதப் போர் நடந்து கொண்டிருந்த காலம். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மதப் போர்களின் காலம் முடிந்து விட்டிருந்தது.

மூன்றாவதாக குறிப்பிட்ட காரணத்தில் இருந்து தான், இந்த மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை தேடத்  தொடங்க வேண்டும். சிலுவைப்போர் என்றதும், எல்லோரும் ஜெருசலேமை கைப்பற்றச் சென்ற படைகளை பற்றி மட்டுமே நினைக்கின்றனர். சிலுவைப்போர் ஒரே திசையில் மட்டுமே நடக்கவில்லை. ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளிலும் இன்னொரு சிலுவைப்போர் நடந்தது. அன்று அந்த நாடுகள், "முஸ்லிம் நாடுகளாக" அரேபிய சக்கரவர்த்தியினால் ஆளப்பட்டன. மொரோக்கோ நாட்டில் இருந்து படையெடுத்த மூர்கள் 500 வருடங்களுக்கு மேலாக அந்தப் பிரதேசத்தை ஆண்டு வந்தனர். உள்நாட்டு ஸ்பானிஷ், போர்த்துக்கேய மக்கள் பலர், முஸ்லிம்களாக மாறி இருந்தனர்.

மூர்களுடனான போரில் வென்று, ஸ்பெயின், போர்த்துக்கல்லினை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிறிஸ்தவ அரசர்கள், அந்தப் பிரதேசத்தை நூறு சதவீத கிறிஸ்தவ நாடாக மாற்ற விரும்பினர். அதற்கு முன்னரே, மூர்-அரேபிய ஆளும் வர்க்கத்தினரும், அவர்களின் நாட்டவரும்,பூர்வீகத் தாயகமான  மொரோக்கோவுக்கு பின்வாங்கிச் சென்று விட்டனர். ஸ்பானிஷ் முஸ்லிம்களும், யூதர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர். (அவர்களது பூர்வீகம் ஸ்பெயின் ஆகும்.) ஆனால், கிறிஸ்தவ மன்னனும், கத்தோலிக்க திருச் சபையும் அவர்களின் மதச் சுதந்திரத்தை பறித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான யூதர்களும், முஸ்லிம்களும் அவர்களது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாத குற்றத்திற்காக, சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப் பட்டனர். மரண தண்டனை விதித்து கொலை செய்யப் பட்டனர். 

கத்தோலிக்க சமயத்தை தழுவிக் கொண்ட, முன்னாள் யூதர்களும், முஸ்லிம்களும், அரசு அதிகாரிகளினால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் பட்டனர். அவர்களும் துன்புறுத்தப் பட்டனர். உண்மையில், அன்றைய ஸ்பெயினில் ஒரு இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவ அரசின் கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, இனிமேல் அங்கே வாழ முடியாது என்று தீர்மானித்த ஆயிரக் கணக்கான ஸ்பானிஷ்-முஸ்லிம் குடும்பங்கள், அகதிகளாக மொரோக்கோவுக்கு தப்பி ஓடின. அவர்கள் வட மொரோக்கோ, மற்றும் அல்ஜியர்ஸ், துனிஸ், திரிப்பொலி போன்ற நகரங்களிலும் சென்று குடியேறினார்கள். ஸ்பெயினில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகள், தமது தாயகத்தை ஆளும் கிறிஸ்தவ அரசுக்கு எதிராக, பழிவாங்கும் போர் ஒன்றை தொடங்கினார்கள். அது ஒரு சாதாரண போராக இருக்கவில்லை. 

ஸ்பானிஷ்-முஸ்லிம் அகதிகளுடன், சில மூர் கடற் கொள்ளையரும் சேர்ந்து, கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு எதிரான "ஜிகாத்" ஒன்றை நடத்தினார்கள். வெளியுலகிற்கு மட்டுமே, அது "கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் மதப் போர்". உண்மையில், அது ஸ்பானிஷ் முஸ்லிம் அகதிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தொடங்கியது. ஆனால், பின்னர் அது மதப் போராக மாறியது. இதனை முன் நின்று நடத்தியவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் கடற்கொள்ளையர் ஆவர். அன்றைய மொரோக்கோ மன்னராட்சி, மறைமுகமான ஆதரவு வழங்கினாலும், நேரடியாக படைகளை அனுப்பவில்லை. 

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள், மத்தியதரைக் கடலில் கிறிஸ்தவ கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தார்கள். கப்பலில் வந்த ஐரோப்பியர்களை பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார்கள். துனிஸ், அல்ஜியர்ஸ், மற்றும் சில நகரங்களில், ஐரோப்பிய அடிமைகள் நல்ல விலைக்கு விற்கப் பட்டனர். அடிமை வணிகம் சூடு பிடிக்கவே, கடற்கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுந்தும் அடிமைகளை பிடித்தார்கள். ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், என்றைக்கு அடிமைகளாவோமோ என்ற பயத்துடன் வாழ வேண்டியிருந்தது. அந்தளவுக்கு அந்தப் பகுதிகள், அடிக்கடி கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளாகின.  


வட ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப்பட்ட, குறிப்பிட்டளவு அடிமைகளை, தனியார் வாங்கிச் சென்றனர். எஞ்சியவர்களை அரசு வாங்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் இருந்த பாரிய கப்பல்களில் துடுப்பு வலிக்கும் வேலையில் இந்த அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும், பெரிய கட்டுமானப் பணி, துறைமுகங்கள் கட்டுவது போன்ற கடுமையான வேலைகளும் கொடுக்கப் பட்டன. தனியாரினால் வாங்கிச் செல்லப்பட்ட அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகவும், வயலில் வேலை செய்யவும் ஈடுபடுத்தப் பட்டனர். ஒப்பீட்டளவில், இந்த வேலைகள் கட்டுமானப் பணி, கப்பல் வேலை போன்று கஷ்டமாக இருக்கவில்லை.

கிறிஸ்தவ அடிமைகள் மதம் மாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டது. ஏராளமான ஐரோப்பிய அடிமைகள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் அவர்கள் அடிமைகாகவே இருந்தனர். ஆனால், கடினமான வேலைகளை செய்யப் பணிக்கப் படவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஆயினும், பெரும்பாலான அடிமைகள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்தனர். அவர்கள் மத்தியில் மதச் சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியார்களும் அதற்கு ஒரு காரணம். செத்தாலும் பரவாயில்லை, முஸ்லிமாக மதம் மாறக் கூடாது என்று தடுத்து விட்டனர். அதனால், பல்லாயிரம் அடிமைகள் கடினமான வேலை காரணமாக உடல் சோர்வுற்று, மூப்படையும் முன்னமே மாண்டு போயினர். 

வட ஆப்பிரிக்காவில் எத்தனை இலட்சம் கிறிஸ்தவ அடிமைகள் இருந்தனர் என்பதற்கான சரியான புள்ளிவிபரம் கிடைக்கவில்லை. யாரும் அவற்றை பதிவு செய்து வைக்கவில்லை என்று தெரிகின்றது. அண்ணளவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய அடிமைகள், வட ஆப்பிரிக்காவில் இருந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கறுப்பின அடிமைகளின் தலைமுறையினர் போன்று, வட ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய தலைமுறையினர் யாரும் இல்லை. வெள்ளையின அடிமைகளின் எண்ணிக்கை குறைந்து சென்று, காலப்போக்கில் இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.    

அடிமைகளில் 90% மானோர் ஆண்கள். அவர்கள் குடும்பம் அமைப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் தடுக்கப் பட்டிருந்தது. பலர் கடுமையான வேலை காரணமாக சோர்வடைந்து மரணமடைந்து விட்டனர். அதை விட, பெருந்தொகையான புதிய அடிமைகள், கொண்டு செல்லப் பட்ட பின்னர் பேரம் பேசி, பணம் கிடைத்தவுடன் விடுவிக்கப் பட்டனர். பணம் வைத்திருந்த உறவினர்கள், கேட்ட தொகையை கொடுத்து விடுதலை வாங்கி அழைத்துச் சென்றனர். அதே நேரம், வட்டிக்கு கடன் கொடுக்கும் ஐரோப்பியர்களுக்கு விற்கப் பட்டு, அவர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒப்பந்த அடிமைகளாக வேலை வாங்கப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

வரலாறு முழுவதும், எல்லா சம்பவங்களையும் முன் அனுமானங்களுடன் ஒரே மாதிரி கணித்து விட முடியாது. எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ஐரோப்பிய அடிமைகள் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப் படவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவர்கள், அரபு சமூகத்துடன் இரண்டறக் கலந்து விட்டனர். அது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர்களில் சிலர், கடற்கொள்ளையர்களாக மாறி இருந்தனர். அதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். இத்தாலியை சேர்ந்த முன்னாள் அடிமை ஒருவரின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

இத்தாலியில் நிலவுடமையாளர்களுக்கு கீழே வேலை செய்யும் பண்ணையடிமைகள், அங்கே ஏற்கனவே அடிமை வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தமது (கிறிஸ்தவ) நிலவுடமையாளரை வெகுவாக வெறுத்தார்கள். அப்படியான ஒருவர், முஸ்லிம் கடற்கொள்ளையரினால் அடிமையாக அல்ஜீரியாவுக்கு பிடித்துச் செல்லப் பட்டார். அந்த இத்தாலியர் அல்ஜீரியா சென்ற பின்னர் , இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டார். அது மட்டுமல்லாது, கடற்கொள்ளையரின் கப்பலிலேயே ஒரு  வேலை தேடிக் கொண்டார். 

குறுகிய காலத்திற்குள் மிகவும் விசுவாசமான கடற்கொள்ளைக்காரராக மாறி, ஒரு கப்பலின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அவர் கடற்கொள்ளையரின் கப்பலில், இத்தாலியில் தனது பிறந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கிருந்த தனது குடும்பத்தினரை கப்பலில் ஏற்றுக் கொண்டு அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடி விட்டார். குடும்ப உறுப்பினர்களும், தாமாகவே விரும்பித் தான் கப்பலில் ஏறினார்கள். ஏனெனில், நிலப்பிரபுவினால் சுரண்டப்பட்ட அவர்களுக்கு, இது விடுதலையாகப் பட்டது. அல்ஜீரியா சென்றதும், எல்லோரும் முஸ்லிமாக மாறி அந்த நாட்டிலேயே தங்கி விட்டனர். 

மேற்குறிப்பிட்ட இத்தாலியரின் கதையில் இருந்து, வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் எல்லோரும் அடிமைகள் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். ஐரோப்பாவில், இராணுவத்தை விட்டு தப்பியோடிய போர்வீரர்கள், நிலமற்ற விவசாயிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்ட பண்ணையடிமைகள் ஆகியோர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இஸ்லாமிய வட ஆப்பிரிக்காவில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். கிறிஸ்தவ அடிமைகளை விட, அத்தகைய "கிறிஸ்தவ குடியேறிகளுக்கு" அதிக வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அடிமைகளாகவும் இல்லாமல், முஸ்லிமாகவும் மாறாமல், வியாபாரக் கூட்டணி காரணமாக வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஒரு சிறு பிரிவினரும் உள்ளனர். அந்தக் காலத்தில், நெதர்லாந்தும், பெல்ஜியமும், ஸ்பெயின் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடியவர்கள், முஸ்லிம் கடற்கொள்ளைக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். டச்சுக் கடற்கொள்ளையரும், முஸ்லிம் கடற்கொள்ளையரும் இணைந்து, ஸ்பானிஷ் கப்பல்களை கொள்ளையடித்தார்கள். டச்சுக் கடற்கொள்ளையரும் மொரோக்கோவை தளமாக கொண்டு தான் செயற்பட்டனர்.

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள் ஸ்பெயினுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, ஐஸ்லாந்து வரை சென்று, அங்கேயும் நூற்றுக் கணக்கானோரை அடிமைகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இங்கே குறிப்பிடப் பட்டுள்ள சம்பவங்கள் யாவும், 16 ம் நூற்றாண்டுக்கும், 18 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடந்தவை. 19 ம் நூற்றாண்டில், இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. ஐரோப்பாவில் புதிய வல்லரசுகளாக உருவான பிரிட்டனும், பிரான்சும் வலிமையான கடற்படைகளை அனுப்பி, கடற்கொள்ளையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சுப் படைகள், அல்ஜீரியா, துனீசியாவை ஆக்கிரமித்தன. அன்றிலிருந்து அந்த நாடுகள் பிரெஞ்சுக் காலனிகளாகின. ஸ்பெயின் வட மொரோக்கோவின் சில பகுதிகளை கைப்பற்றியது. வட ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த இலட்சக் கணக்கான ஐரோப்பியர்களும், ஸ்பெயினுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை நடத்திய ஸ்பானிஷ்-முஸ்லிம்களும், வரலாற்றில் இருந்து எந்த சுவடும் இன்றி மறைந்து போனார்கள். யாருக்குத் தெரியும்? இன்று அந்த நாடுகளில் வாழும் பல அரேபியர்களின் உடலில் ஐரோப்பிய இரத்தம் ஓடலாம். 

*************

உசாத்துணை :

1.Rijstpap, tulpen & jihad (Lucas Catherine)
2.Morisco's (Lucas Catherine)
3. Christian Slaves, Muslim Masters: White Slavery in the Mediterranean, the Barbary Coast and Italy, 1500-1800 (Robert C. Davis)

Sunday, August 04, 2013

மாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்." இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தென்னிலங்கையில், வெலிவேரியா பகுதியில், ஒரு தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளால், குடிநீர் மாசடைந்ததால், அந்தப் பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள்.

போராட்டத்தை அடக்குவதற்காக, பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதால் இருவர் கொல்லப் பட்டனர். அமெரிக்க தூதுவராலய அறிக்கை, பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலையும், அவர்களை ஏவிவிட்ட இலங்கை அரசையும் கண்டிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. மாறாக, "வருத்தம்" மட்டும் தெரிவித்துள்ளது. மேலும், குடிநீர் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலை பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை.

ஏற்கனவே, கேரளாவில், பிளாச்சி மாடாவில், கொக்க கோலா நிறுவனம் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி இருந்தது. அதனால், அங்குள்ள மக்கள் கொக்க கோலா நிறுவனத்தை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டமும் பாதுகாப்புப் படையினரால் அடக்கப் பட்டது. அப்போதும் அமெரிக்கா வெறும் "கவலை" மட்டுமே தெரிவித்திருந்தது. அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடக்கும் என்று பல அறிஞர்கள் எதிர்வு கூறி இருந்தனர். தண்ணீருக்கான போர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

கம்பஹாவில் உள்ள தொழிற்சாலை ஒன்று  வெளியேற்றிய நச்சுக் கழிவுகள், கம்பஹா மாவட்ட நீர் நிலைகளில் கலந்துள்ளதால், தண்ணீர் மாசடைந்துள்ளது. ஏறக்குறைய 5000 கிணறுகள் பாவிக்க முடியாதளவு மாசடைந்துள்ளன. கிணற்று நீரை பரிசோதித்த உள்ளூர் சுகாதார ஆணையாளர், தொழிற்சாலைக் கழிவினால் தான் நீர் மாசடைந்துள்ளது என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இது குறித்து, அரச அதிகாரிகளிடம் செய்த முறைப்பாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதனால், சிறி தம்ம தேரோ என்ற பௌத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார்.

அவர் தமிழர்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், அனைத்து ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கும். சமூக வலைத்தளங்களிலும் இந்த நிமிடம் வரையில் ஆயிரக் கணக்கானோர் பகிர்ந்து கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், சிறி தம்ம தேரோ உண்ணாவிரதம் இருந்தது, அந்தப் பிராந்தியத்தில் சுற்றுச் சூழலை மாசு படுத்திய தனியார் வர்த்தக நிறுவனத்தை எதிர்த்து ஆகும்.

அதனால் தான், இந்த தகவல் எந்த ஊடகத்திலும் வரவில்லை. ஏனென்றால் அது தான் வர்க்க பாசம்.சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அவர்கள் எப்போதும் இனவாதத்தை நம்பித் தான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், முதலாளித்துவத்தினால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிய, இது போன்ற தகவல்களை வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றனர்.

ஆபத்தில் உதவுபவனே ஆருயிர் நண்பன். வெலிவேரியா மக்கள் போராட்டத்தை ஒடுக்கிய ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாக, சில வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் பேசி வருகின்றனர். பொதுவாகவே, அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், ஆர்வலர்களும், தென்னிலங்கையில் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் நடக்கும் காலங்களில், வாய் மூடி மௌனிகளாக இருப்பது வழக்கம். இது போன்ற இக்கட்டான தருணங்களில், தமது உற்ற தோழனான ஸ்ரீலங்கா அரசை எதிர்க்க கூடாது என்ற வர்க்க பாசம், அவர்களின் வாய்களை திறக்க விடாமல் செய்துள்ளது. சிலர் இதனை "சிங்களவர்களின் குடும்பப் பிரச்சினை" என்று பிரச்சாரம் செய்வது வேடிக்கையானது.

வெலிவேரியாவில், ஒரு தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகள் குடிநீரை மாசு படுத்தியதாலேயே, இந்தப் போராட்டம் வெடித்தது, என்ற உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். அதைச் சொன்னால், "ஸ்ரீலங்கா அரசு முதலாளித்துவ நலன்களை பேணுவதற்காக உள்ளது. முதலாளிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால், சிங்கள படைகள் தமது சொந்த இன மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்வார்கள்," என்பன போன்ற உண்மைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் என்பதால், அவர்களின் வேஷமும் கலைந்து விடும். தமிழ்க் குறுந்தேசியவாதிகளும், சிங்கள பேரினவாதிகளும் ஒன்று சேர்ந்து, உழைக்கும் வர்க்க மக்களை இன அடிப்படையில் பிரித்து வைத்திருக்கும் சூழ்ச்சி அம்பலப் பட்டு விடும்.

உலகில் எந்தத் தேசியவாதியும், தனது சொந்த தேசிய இனத்தின் வர்க்க அடிப்படையையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதில்லை. தமிழ் தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. பொருளியல் துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற தமிழ் தேசியவாதிகளும் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் கூட, தமது சொந்த தமிழ் இன மக்களின் போராட்டத்திற்கு, பொருளாதார பிரச்சினைகளும் காரணம் என்பதை கூறுவதில்லை. குறைந்த பட்சம், அது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் சேவகர்களா, அல்லது முதலாளித்துவ அடிமைகளா?

யாழ் குடாநாடு முழு இலங்கையிலும், மிகவும் வரட்சியான மாவட்டங்களில் ஒன்று. வரண்ட மண்ணைக் கொண்ட யாழ் குடாநாட்டில், மக்கள் தொகை அடர்த்தி அதிகம். குடிநீருக்கான தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி சாதிக் கலவரங்கள் நடக்கும் இடமாக இருந்தது. எழுபதுகளில் மழை வீழ்ச்சிக் குறைவு, முழு இலங்கையையும் பாதித்திருந்தது. இலங்கையின் மிக நீளமான ஆறான மகாவலி கங்கையை, யாழ்ப்பாணத்திற்கு திருப்பி விடும் அரசின் திட்டம், இறுதியில் திருகோணமலை வரையில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த உதவியது. அத்தகைய காலகட்டத்தில் தான், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?முப்பதாண்டுகளாக நடந்த ஈழப்போரின் இறுதிக் கட்டப் போர், தண்ணீர் பிரச்சினையால் தொடங்கியது என்ற உண்மையை இன்று பலர் மறந்து விட்டார்கள். கிழக்கு மாகாணத்தில், புலிகள் மாவிலாறு அணைக் கட்டை மூடியதால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, போர் வெடித்தது. கிழக்கு மாகாணத்தில், சிங்களவர் தமிழர்களுக்கு இடையிலான இனப் பிரச்சினைக்கு, தண்ணீர் ஒரு மூல காரணம். 

சிங்களக் குடியேற்றவாசிகள், தமிழர்களின் வயல் நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை திசை திருப்பி விடுவார்கள். தண்ணீரை பங்கு போடுவதில் தொடங்கும் தகராறு, இனக் கலவரம் வரையில் சென்று முடிவதுண்டு. புலிகள் மாவிலாறு அணைக்கட்டை மூடியதால், பெரும்பாலும் சிங்கள விவசாயிகளே பாதிக்கப் பட்டனர். ஸ்ரீலங்கா அரசும் அதைக் காரணமாக காட்டியே போரை தொடங்கியது. பின்னர் புலிகள் அணைக்கட்டை திறந்து விட சம்மதித்த போதிலும், ஸ்ரீலங்கா அரச படைகள் குண்டு வீசுவதை நிறுத்தவில்லை.

மாவிலாறில் தொடங்கிய குண்டு வீச்சுகள், முள்ளிவாய்க்காலில் தான் ஓய்ந்தன. அதற்குள் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் தமிழ் உயிர்கள் பலியாகி விட்டன. ஈழப்போரின் இறுதிக் கட்டப் போர் நடந்த மாவிலாறு, நந்திக் கடல், முள்ளிவாய்க்கால் எல்லாமே, நீர் நிலைகள் சம்பந்தப்பட்டுள்ளமை ஒரு துயரமான ஒற்றுமை. இலங்கையில் இரத்தத்தை விட தண்ணீர் கனமானது. அந்த நாட்டில், கடந்த பத்தாண்டுகளாக ஆறுகள், குளங்கள் வற்றி விட்டிருந்தன. அதற்குப் பதிலாக இரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

21 ம் நூற்றாண்டின் உலகப்போர், மண்ணுக்காக அல்லாது, தண்ணீருக்காக நடக்கும் என்று பல அறிஞர்கள் எதிர்வு கூறி இருந்தனர். இலங்கையின் விஷயத்தில் அது மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. இலங்கை மட்டுமல்ல, சிரியாவில் நடக்கும் யுத்தமும் தண்ணீருக்கானது தான். அந்த நாட்டில், ஆறு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வரட்சி காரணமாக, நாட்டுப்புறங்களில் வாழ்ந்த மக்கள், பெரிய நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அது இன்று வரையில் ஒரு இலட்சம் உயிர்களை பலி வாங்கிய மாபெரும் இரத்தக் களரியில் முடியும் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இலங்கையில் மாவிலாறில் தொடங்கிய தண்ணீருக்கான யுத்தம், முள்ளிவாய்க்காலில் முடியவில்லை. அது வெலிவேரியாவில் தொடர்ந்தது. வெலிவேரியாவில் தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளால், கிணற்று நீர் மாசடைந்ததால் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். வெலிவேரியா கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த ஊர். அங்கே பல கிராமங்களில், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன்னரே, பல கிராமங்களில், அரசு மக்களுக்கு தேவையான குடிநீரை பவுசர்கள் மூலம் விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. கம்பஹா மட்டுமல்ல, இலங்கையின் பல பாகங்களிலும் நீர் நிலைகள் வற்றி வருகின்றன. ஆயிரம் வருடங்களாக, விவசாயிகளுக்கு நீர்ப் பாசனம் செய்து வந்த குளங்களின் தண்ணீர் அளவு கூட குறைந்து வருகின்றது.

தென்னிலங்கையில் தோன்றியுள்ள தண்ணீருக்கான நெருக்கடி, வட இலங்கையை பாதிக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் அறியாமை வியக்க வைக்கின்றது. ஏற்கனவே வன்னிப் பகுதியில், தண்ணீருக்கான மக்களின் போராட்டம் ஆரம்பித்து விட்டது. வட மாகாணத்தில், வன்னியில் மட்டுமே நீர் வளம் அதிகமாக உள்ளது.

வட தமிழீழமாக கருதப்படும் அந்தப் பிரதேசத்தில் மட்டுமே ஆறுகளும், ஏரிகளும் காணப் படுகின்றன. வடக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவம், நிலங்களை மட்டும் அபகரிக்கவில்லை. நீர் நிலைகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக, அவற்றிற்கு அருகில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளன. மிகப் பெரிய இரணைமடு குளத்திற்கு அருகில், வன்னிக்கான விமான நிலையம் கட்டப் பட்டுள்ளது.

சிங்கள இராணுவம், வட இலங்கையை ஆக்கிரமித்திருப்பது பற்றியும், அதன் அத்துமீறல்கள் பற்றியும், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மேற்கத்திய நாடுகளில் முறையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில், வன்னியில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், இன்று வரையில் எந்தவொரு மேலைத்தேய நாடும், அவர்களது முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, சிங்களப் பேரினவாத அரசின் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. யாராவது ஏன் என்ற கேள்வியை கேட்டார்களா?

முள்ளிவாய்க்கால் பேரழிவு மட்டுமல்ல, ஈழத்தின் மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பும் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் தான் நடந்து வருகின்றன. மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் சிங்கள இனவாத சதியாக தோன்றும். ஆனால், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஏகாதிபத்தியத்தின் கரங்கள் யார் கண்களுக்கும் புலப் படுவதில்லை. 

ஏகாதிபத்தியத்திற்கு தமிழ் மக்கள் மேல் வெறுப்போ, சிங்கள மக்கள் மேல் பாசமோ கிடையாது. அதன் நோக்கம் இலங்கையின் வளங்களை மறுகாலனிய ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வருவது. ஏகாதிபத்தியம் சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான வளங்களை சுரண்டுவதற்கான வசதி செய்து கொடுப்பது தான், ஸ்ரீலங்கா அரசின் தலையாய கடமை ஆகும்.

Saturday, August 03, 2013

புலம்பெயர்ந்த மண்ணில் இன விடுதலைப் போராட்டம் நடத்தலாமா?

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]

(இறுதிப் பகுதி)


புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் ஆயுதப் போராட்டம், ஆறு தாக்குதல்களின் பின்னர் முடிவுற்றள்ளது. இறுதியாக 'அசன்' நகரில் உள்ள மாகாண சபை கட்டிடத்தை ஆக்கிரமித்தார்கள். அங்கே வேலை செய்த ஊழியர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்கள். அப்போது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அவசரத்தில் ஒரு கொலை நடந்தது. ஆனால், இந்த முறையும், நெதர்லாந்து அரசு விட்டுக் கொடுக்கவில்லை. பணய நாடகம் முடிவுக்கு வந்து, மொலுக்கர்களும் சிறைப் பிடிக்கப் பட்டார்கள்.

ஈழத் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக கூறிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும், அவர்களை நோக்கி மையப் படுத்தினார்கள். ஆனால், மொலுக்கர்கள் மத்தியில் அப்படியான மையவாத அமைப்பு எதுவும் இருக்கவில்லை. மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எந்த இயக்கமும் கட்டுப்படுத்தவில்லை.  

ஒவ்வொரு ஆயுதமேந்திய தாக்குதலையும், ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற சிறு சிறு குழுக்களே நிறைவேற்றின. அவர்களுக்கு இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒரே கொள்கை மட்டுமே அவர்களை ஒன்றிணைத்தது. ஒரே மாதிரி செயற்பட வைத்தது. இந்தக் காலத்தில் அவற்றை "சிலிப்பர் செல்" (Sleeper Cell) என்று அழைப்பார்கள். அதனால் தான், இதுவரையில் எந்தவொரு ஆயுதபாணி நடவடிக்கையையும், டச்சு புலனாய்வுத் துறையால் முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை.  

புலம்பெயர்ந்த மொலுக்கர்கள், நெதர்லாந்தில் ஒரு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு தூண்டுகோலாக இருந்த புறக் காரணிகளையும் கவனிக்க வேண்டும். எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும், அதற்கு ஆதரவான சர்வதேச கம்யூனிஸ்ட்களின் போராட்டமும் தீவிரமடைந்திருந்தது. PFLP போன்ற இடதுசாரி பாலஸ்தீன இயக்கத்துடன் தொடர்புடைய, ஐரோப்பிய இடதுசாரி இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக, ஐரோப்பிய நகரங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. விமானங்கள் கடத்தி பணயம் வைக்கப் பட்டன.

குறிப்பாக ஜப்பானிய தீவிரவாதிகளின் தாக்குதல் ஒன்று நெதர்லாந்தில் இடம்பெற்றது. பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான ஜப்பானியர் ஒருவர் பிரான்சில் பிடிபட்டார். போலி கடவுச் சீட்டுகள், ஆயுதங்கள் கடத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக, மூன்று ஜப்பானிய ஆயுதபாணிகள் நெதர்லாந்தில் உள்ள பிரெஞ்சு தூதுவராலயத்தினுள் நுழைந்தார்கள். தூதுவரையும் பிற ஊழியர்களையும் துப்பாக்கி முனையில் பணயம் வைத்தார்கள். இறுதியில் பிரெஞ்சு அரசு, அவர்களின் கோரிக்கைக்கு இணங்கியது. தான் பிடித்து வைத்திருந்த ஜப்பானியரை விடுதலை செய்து, ஒரு மில்லியன் டாலர் பணமும் கொடுத்து, தனியான ஜெட் விமானம் ஒன்றில் தப்பியோட உதவியது. 

ஜப்பானிய ஆயுதபாணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை தரையிறக்க, அன்றைய ஈராக்கிய அரசு ஒத்துக் கொண்டது. அதே போன்று, தம்மையும் ஒரு நாடு ஏற்றுக் கொள்ளும் என்று மொலுக்கு ஆயுதபாணிகள் எதிர்பார்த்தனர். ஜப்பானியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட காரணம் என்ன? அவர்கள் இடதுசாரி சிந்தனை கொண்ட ஆயுதபாணிகள் என்பதால், பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள், பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான அரபு நாடுகள், மற்றும் சோஷலிச நாடுகள் உதவ முன்வந்தன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையினால், ஆயுதபாணிகளின் கோரிக்கைகளை அரசு ஒரு தடவை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு இயக்கம் தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. 

மொலுக்கு இளைஞர்களின் போராட்டம், ஒரு தேசியவாதப் போராட்டம் ஆகும். அதற்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், இந்தோனேசியாவில் போரிட்டுக் கொண்டிருந்த மொலுக்கு விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள், ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டுடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் உலகில் பெனின் மட்டுமே, தென் மொலுக்கு குடியரசை ஒரு இறைமையுள்ள தனி நாடாக அங்கீகரிக்க முன்வந்தது.  

நெதர்லாந்தில் ஆயுதபாணித் தாக்குதல்களில் ஈடுபட்ட மொலுக்கு இளைஞர்கள், பெனின் தங்களை ஏற்றுக் கொள்ளும் என்று நம்பினார்கள். பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, நெதர்லாந்து அரசை வற்புறுத்தி ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு, பெனின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முடியும் என்று கனவு கண்டார்கள். ஆனால், அந்தக் கனவு இறுதி வரையில் நனவாகவில்லை. அவர்களை பணயக் கைதிகளுடன் தப்பியோட நெதர்லாந்து அரசு சம்மதித்திருக்குமா என்பது ஒரு புறமிருக்க, தீவிரவாத இளைஞர்களை பொறுப்பேற்க பெனின் அரசு தயாராக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஆயுதமேந்திய தாக்குதல்கள் நடந்த காலங்களில், மொலுக்கு குடிமக்கள் மீது குறிப்பிட்டளவு அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. மொலுக்கு குடியேறிகள் அடர்த்தியாக வாழும் நெதர்லாந்துக் கிராமங்கள் சுற்றி வளைக்கப் பட்டன. ஆயுதங்களை தேடி, வாகனங்கள், வீடுகள் சோதனையிடப் பட்டன. 1977 ம் ஆண்டு, ரயிலைக் கடத்தியவர்கள், சரணடைந்த பின்னரும் சுட்டுக் கொல்லப் பட்டமை தான், அரசின் உச்சக்கட்ட  அடக்குமுறை ஆகும். அந்தச் சம்பவங்கள், இப்போதும் மொலுக்கர்கள் மனதில் மாறாத வடுக்களாக மாறி விட்டன. அன்று நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்கு, விசாரணைக் குழு ஒன்று அமைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். நெதர்லாந்து அரசு, போர்க் குற்றத்திற்காக தனது சொந்தப் படையினரை தண்டிக்க முன் வருமா என்பது சந்தேகமே.

மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம், வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, அல்லது இனவாதப் போராட்டமாகவோ இருக்கவில்லை. அது ஒரு அரசியல் தத்துவார்த்த போராகவும் இருந்தது. ரயிலை பணயம் வைத்திருந்த காலத்தில், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பணயக்கைதிகளை சிறந்த முறையில் பராமரித்தார்கள். அவர்களுக்கு தமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத்தார்கள். பணயக் கைதிகள் வாசிப்பதற்காக, மொலுக்கு இனத்தவரின் பிரச்சினைகள் பற்றிய நூல்களை கொண்டு சென்று கொடுத்தார்கள். 

ஆயுதபாணிகள், தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்த தம்மாலான முயற்சிகளை செய்த போதிலும், அது பெரும்பான்மை டச்சு மக்களின் மனதை மாற்றவில்லை. பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருந்தவர்களும், பெரும்பான்மை டச்சுப் பிரஜைகளும், அந்த நடவடிக்கைகளை "அர்த்தமற்ற பயங்கரவாதமாக" கருதினார்கள். பலர் மனதில் மொலுக்கர்களுக்கு எதிரான துவேஷமும் மேலெழுந்து வந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. மொலுக்கு இளைஞர்களின் ஆயுதபாணி நடவடிக்கைகளின் பின்னரே, டச்சுப் பிரஜைகள் பலர், மொலுக்கர்களின் தேசிய இனப் பிரச்சினையை முதன் முதலாக அறிந்து கொண்டார்கள்.

ஒரு சிறுவர் பாடசாலையில் நடந்த பணய நாடகம், மொலுக்கு மக்களின் போராட்டத்திற்கு பாதகமாக அமைந்திருந்தது. அங்கே நிறைய மொலுக்கு பிள்ளைகளும் படித்ததால், ஆசிரியர், பெற்றோருக்கு மொலுக்கர்களை பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்தது. "சில பொறுப்பற்ற இளைஞர்களின் செயல்" அவர்களுக்கு சினத்தை ஏற்படுத்தியது. முதலாவது காரணம், அவர்கள் பணயம் வைத்தது ஒரு சிறுவர் பாடசாலை. இரண்டாவது காரணம், தீவிரவாத இளைஞர்கள் தாம் வாழ்ந்த அதே ஊரில் இருந்த பாடசாலை ஒன்றைத் தான் தேர்ந்தெடுத்திருந்தனர். 

நல்ல மனம் படைத்த டச்சு பிரஜைகள் சிலர், ரயில் பணய நாடகத்திற்கு பின்னர், மொலுக்கு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். சமூக முன்னேற்ற அமைப்புகளை உருவாக்க உதவினார்கள். ஆனால், அதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. அவர்களது உறவினர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. "எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்த துரோகிகள்" போன்று கருதி, ஒதுக்கி வைத்தார்கள். 

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, நெதர்லாந்தில் நடந்த மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மறு ஆய்வு செய்யப் பட்டது. தொலைக்காட்சி நிலையங்கள், நேரடி கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தின. தாக்குதலில் ஈடுபட்ட, தற்போது விடுதலையான முன்னாள் தீவிரவாதி, நிலைமையை கையாண்ட அரசாங்க மந்திரி, மற்றும் முன்னாள் பணயக் கைதி, ஆகியோர் பங்குபற்றிய நிகழ்ச்சிகளினால் எந்தத் தீர்வையும் காண முடியவில்லை.

நெதர்லாந்து அரசு, தனது அன்றைய நிலைப்பாட்டை இன்றைக்கும் மாற்றிக் கொள்ளவில்லை. அனைத்து மேற்கத்திய நாடுகளும், புலம்பெயர்ந்த சமூக மக்களின் பிரச்சினை தொடர்பாக பின்வரும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.: 
"இன விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் போன்ற விடயங்களை, உங்கள் தாயகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். புலம்பெயர்ந்த மண்ணில் அது வேண்டாம்."

(முற்றும்)

உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:
1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு
4.நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்
5.ரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையாளர்கள்