Saturday, October 27, 2018

இலங்கையில் திடீர் சதிப்புரட்சி! மைத்திரி- மகிந்த அரசின் "பொல்லாட்சி" ஆரம்பம்!!


26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், நாட்டிலும் பெரும் குழப்பங்களை உண்டாக்கி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரையில், தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல நாடுகளின் அரசுகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் தற்போது இலங்கையில் இரண்டு பிரதமர்கள் உள்ளனர். விரைவில் பன்முக அழுத்தம் காரணமாக ரணில் பதவியை விட்டு விலகிச் செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2) கீழ், ஜனாதிபதி திடீரென பிரதமரை பதவி விலக்குவதற்கான காரணம் எதுவுமில்லை. பிரதமர் தானாக பதவியை துறந்தால், அல்லது அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போனால் மட்டுமே, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் செயலானது அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதானது, இலங்கையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதை சுட்டிக் காட்டுகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை வைத்து, ரணிலுக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைகீழாக நின்றாலும் மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்காது என்று தமிழர் தரப்பில் சொல்லப் படுகின்றது.

இந்த விடயம், மைத்திரி, மகிந்தவுக்கும் தெரியாமல் இருக்காது. ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்பார்க்காமல், மகிந்த பிரதமராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்கப் படவில்லை. ஒரு வேளை, பாராளுமன்ற பெரும்பான்மை மகிந்தவுக்கு கிடைக்காவிட்டால், பெரும் நெருக்கடி ஏற்படும். அதற்குப் பிறகு நாட்டில் ஏற்படப் போகும் குழப்பங்கள் பாராளுமன்றத்தை கலைக்கும் அளவுக்கும் போகலாம். அதனால், நவம்பர் பதினாறு வரையில் பாராளுமன்றம் கூடுவது ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை இரவு வெளியானதையும் அவதானிக்க வேண்டும். எவராவது அரசியமைப்பு சட்டத்தை காரணம் காட்டி, நீதிமன்றத்தை நாடுவதென்றாலும், திங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி, மைத்திரியும், மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி விடுவார்கள். ரணிலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஏற்கனவே இருபது பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். 

காவல்துறையில் பணியாற்றுவோரின் லீவுகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டுள்ளன. இலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. இராணுவம், காவல்துறையில் மகிந்த ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். ஏற்கனவே, அரச ஊடகம் உட்பட, பெரும்பாலான சிங்கள/ஆங்கில வெகுஜன ஊடகங்கள் அவர்களது கைகளுக்குள் விழுந்து விட்டன.

இதற்குள் சிலர் இந்தியா, சீனாவை இழுத்து முடிச்சுப் போடுவது வேடிக்கையானது. இலங்கையில் வர்த்தகம் தவிர்ந்த, அரசியல் நிலவரம் தொடர்பாக, சீனா, இந்தியாவுக்கு இடையில் எந்த பகை முரண்பாடும் இல்லை. 

சில தினங்களுக்கு முன்னர், RAW தன்னைக் கொல்ல சதிசெய்வதாக ஜனாதிபதி அறிவித்து இருந்தார். அந்தக் காரணத்தை காட்டி ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப் பட்டார். இருப்பினும் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த விடயத்தை யாரும் பெரிது படுத்தவில்லை.

அனேகமாக, தற்போது நடக்கும் சதிப்புரட்சி திட்டங்களை மறைப்பதற்காக, "இந்தியா - சீனா முரண்பாடு" எனும் கதையை மைத்திரியே உருவாக்கி பரப்பி விட்டிருக்கலாம். மகிந்த ராஜபக்சே பிரதமராக வருவதால், அல்லது மீண்டும் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மைத்திரி - மகிந்த சதிப்புரட்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகர் சுப்பிரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசி உள்ளார். ஆகவே, இதற்கு மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்ப இடமுண்டு. 

இதற்கிடையே, வட இலங்கையில், இந்துத்துவா சார்பான, தமிழ்த்தேசிய பழமைவாதியான விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்ததற்கு பின்னணியிலும் இந்தியாவின் கை இருக்கலாம். இந்திய தூதுவராலயத்தின் அனுசரணையில் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்து மத அடிப்படைவாத சக்திகளின் ஊடுருவலும் நடந்துள்ளது. இதுவரை காலமும் போலியாக  தமிழ்த்தேசியம் பேசியவர்களை, அசல் இந்து மத அடிப்படைவாதிகளாக மாற்றி உள்ளமை இந்தியாவின் வெற்றி எனலாம். 

இந்தியாவில் அரச இயந்திரம் பாசிச மயப்பட்டு வருவதைப் போன்ற அதே பாணியில் இலங்கை அரசியலும் பாசிசமயமாக்கப் படுகின்றது. மகிந்தவின் பிரதமர் பதவியேற்பு குறித்து, அவரது சகோதரர் கோத்தபாய வரவேற்றுப் பேசிய நேரம், பக்கத்தில் 'ராவண பலய' தலைவரும் இருந்தார். சிங்கள-பௌத்த பாசிச இயக்கமான 'ராவண பலய', கடந்த காலங்களில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்சே பிரதமரான விடயம், "அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு உவப்பானதல்ல" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. இதற்குப் பின்னணியில் இந்தியாவின் ஆசீர்வாதம் இருந்தது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்திருக்க வேண்டும்.

பத்தாண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே சர்வாதிகார ஆட்சி நடத்தியதால், 2015 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, மைத்திரி - ரணில் தலைமையிலான "நல்லாட்சி" அரசாங்கம் வந்தது. ஆனால், காலப்போக்கில் "நல்லாட்சி" அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

மைத்திரி- ரணிலின் நல்லாட்சி அரசு, தம்மால் ஜனநாயகம் மீட்கப்பட்டதாக சொல்லிக் கொண்டாலும், பழைய பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப் படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்புணர்வும் அதிகரித்தது. இதற்கிடையே, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரம் காரணமாக, முஸ்லிம் மக்களின் ஆதரவும் வெகுவாக குறைந்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு இருப்பதால், சிங்கள மக்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. சிங்கள மக்கள் மத்தியிலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு குறைந்து வருகின்றது. 

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் புதிய கட்சிக்கு பெருமளவு வாக்குகள் விழுந்ததில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம். மகிந்த ராஜபகச்வுக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் இனவாத ஓட்டுகள் அல்ல. பல வாக்காளர்கள் ஆளும் கட்சி மீதான அதிருப்தி காரணமாகவும் மகிந்தவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

எரிபொருள், உணவுப்பொருட்களின் விலையேற்றம், இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் இன வேறுபாடின்றி பாதித்து வருகின்றது. இலங்கையில் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய தரத்திலும், தனிநபர் வருமானம் ஆப்பிரிக்கத் தரத்திலும் உள்ளன. இதனால் மைத்திரியின் "நல்லாட்சி" அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழமையானது. இது மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தின் படி, ரணில் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களில் இறங்கலாம் என்று சர்வதேச சமூகம் (அதாவது: மேற்குலம்) எதிர்பார்க்கின்றது. மகிந்த ஆதரவாளர்கள், ரணில் ஆதரவாளர்கள் என்ற பிரிவினை, இலங்கையின் தற்கால அரசியலில் பிரதானமான முரண்பாடாக காட்டப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் ஏற்படும் குழப்பகரமான சூழ்நிலை விரைவில் பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறலாம். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு மகிந்த ராஜபக்சே சரியானவர் என்பதை கணித்து வைத்துள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் இதை சதிப்புரட்சி என்று அழைக்க வேண்டியுள்ளது.

இது போன்ற நிலைமைகளில், அதாவது சதிப்புரட்சிகளில் எப்போதும் இராணுவம் சம்பந்தப் பட வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் அரச மாளிகைக்குள் சதிப்புரட்சி நடந்து ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்னர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில், அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டில் இப்படியான சதிப்புரட்சி நடந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம்.

அப்படியான நாடுகளை "வாழைப்பழக் குடியரசு" என்று அழைப்பார்கள். அதாவது, ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் நேரத்தில், திடீரென ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒரு பாசிச நிர்வாகக் கட்டமைப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கும். மனித உரிமை பற்றிப் பேசினால் சிறையில் அடைத்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள். தேர்தல் ஜனநாயகம் மூலம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாவிட்டால், பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது, உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுக்களின் வாடிக்கை. இலங்கை அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல.